“அகிம்சா மூர்த்திகள்” என்ற நூலை கலைஞர் கருணாநிதி அவர்கள், காங்கிரஸ்காரர்களின் அரசியல் செயல்பாடுகளை, குறிப்பாக அகிம்சை என்ற பெயரில் அவர்கள் செய்த சில சமரசங்களை அல்லது போலித்தனங்களை பகடி செய்யும் விதமாகவே எழுதினார்.
அகிம்சை என்ற கோட்பாட்டை மகாத்மா காந்தி உண்மையாகப் பின்பற்றினாலும், அதை அரசியலில் தங்களின் சுயநலத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் பயன்படுத்திய காங்கிரஸ்காரர்களை விமர்சித்து எழுதப்பட்ட நூல் இது.
அகிம்சா மூர்த்திகள்!
பசியை வளர்த்தனர்!
பதைபதைக்க உயிர் வாங்கினர் !
தூக்கு மரம் நாட்டினர் !
தொல்லைகள் படைத்தனர் !
பிணமலை குவித்தனர் !
பிள்ளைக்கடை வைத்தனர் !
எல்லாம் காமராசர் தலைமையில் தான் !
காங்கிரஸ் தர்பாரில்தான் !
சர்க்கார் சாதித்ததைவிட நம்மை சோதித்தது மிக மிக அதிகம் ! வெள்ளையரை குறைகூறிய காங்கிரஸ்காரர்கள்தான் தங்கள் ஆட்சி காலத்தில் அவனையும் மிஞ்சி விட்டார்களே ! எதிர்க்கட்சி என்று. ஒன்று இருக்கவே கூடாது என்ற நோக்கத்துடன் நம்மீது ஏவிய அடக்குமுறைகள் கொஞ்சமா, நஞ்சமா? நான்காண்டு முடிய இந்த அகிம்சா சர்க்கார் 1982 தடவை துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறதே ! இது வெள்ளையன் காலத்தில் கூட நடக்காத அக்ரமம் ! வெள்ளையன் ஆட்சியிலே மட்டுமல்ல; வேறெந்த நாட்டிலும் நடந்ததாகத் தெரியவில்லையே ! இத்துடனாவது நின்றுவிட்டார்களா இந்த காந்தி பக்தர்கள் ! இல்லை ! துப்பாக்கிப் பிரயோகத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றா, இரண்டா ? இல்லை தோழர்களே ! 3784 பேர்கள் பதைபதைக்க உயிரிழந்தனர். பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஐம்பதினாயிரம் மக்கள் சிறையில் வைக்கப்பட்டனர். சிறைப்பட்டவர்களைப் பற்றி விசாரணையாவது உண்டா? இல்லை! சிறையிலும் அவர்களை சிப்பாய்கள் சும்மா விட்டார்களா? தடியடிதர்பார் நடத்தினார்கள்! தனி கொட்டடியில் இட்டு இம்சித்தார்கள் ! போதாக்குறைக்கு சுட்டும் பார்த்தார்கள். பரிதாபத்திற்குரிய நம்மவர்கள் அங்கேயும் எண்பத்திரண்டு பேர் உயிரிழந் தார்கள்! பாருங்கள் தோழர்களே, நமது ஆட்சி என்று சொல்லிக் கொள்ளுகிறோமே, அதன் லட்சணத்தை! மஞ்சள் பெட்டிக்கு நாம் அளித்த ஓட்டு, நம்மை அடிக்கவும் சுட்டுத் தள்ளவும் தான் உதவியது. மக்கள் பசியைத் தீர்க்கவில்லை ! இந்தக் கொடுமைகள் வேறெந்த நாட்டிலாவது நடக்குமா? – நடக்கத்தான் விட்டு வைப்பார்களா அந்நாட்டு மக்கள் !
எனக்கு முன் பேசிய நண்பர் ஒருவர் குறிப்பிட்டார், திருவாங்கூர் காங்கிரஸ் ஆட்சியில் மகனைக் கொண்டு மாதாவைப் புணர வைத்தார்களென்று! ஆம், நானும் படித்தும் கேட்டும் இருக்கிறேன் அந்த அக்கிரம அநியாயச் செய்தியை ! அதிலும் நமது காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததாக அவர் கூறியதைக் கேட்ட உங்கள் மனம் என்ன பாடு பட்டது! இன்னும் விவரமாகச் சொல்லுகிறேன், கேளுங்கள். கேட்டு இந்த அகிம்சா மூர்த்திகளின் காலத்தில் எந்தெந்த விதமான இம்சைகள் நடந்திருக்கின்றன என்று எண்ணிப் பாருங்கள். பிறகு கூறுங்கள் உங்கள் தீர்ப்பை, யாருக்கு ஓட்டுப் போடுவது என்று!
பொதுவுடமைவாதி என்ற சந்தேகத்தின் மீது பிடிக்கப்பட்ட ஒருவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார்களாம்! அழைத்து வந்தவனை அவன் சுருண்டு சுருண்டு விழும் வரையில் அடித்தார்களாம். அடி தாளாமல் விழுந்த அவன், ” தண்ணீர், தண்ணீர்” என்று கத்தினானாம் ! அதைக் கேட்ட அவர்கள் தண்ணீர் வேண்டுமா ? இதோ தருகிறேன் !” என்று கூறி, மறைவாகப் போய் சிறுநீரைக் கொண்டு வந்து அவன் வாயில் ஊற்றினார்களாம். தண்ணீர் கேட்ட உங்கள் தோழன் சிறுநீராக இருப்பதைக் கண்டு,“அடப் பாவிகளே ! நான் தண்ணீர் கேட்டால் மூத்திரத்தைக் கொடுக்கிறீர்களே!” என்று பரிதாபக்குரலில் அலறினான். அவ்வார்த்தையைக் கேட்ட அப்புலிகள், மறுபடியும் அவனை அடித்து, அதையே குடிக்கும்படிச் செய்தார்களாம்! இச் செய்கையால் களைப்புற்ற அவன் “அம்மா, அம்மா ” என்று கூச்சலிட்டான். கூச்சலைக் கேட்டதும் அவர்கள் அவனைப் பார்த்து, “அம்மாவா வேண்டும்? இதோ அழைத்து வருகிறோம்” என்று ஓடோடியும் சென்று, வீட்டில் படுத்திருந்த அவன் தாயை நடுநிசியில் எழுப்பி, அழைத்து வந்து, மகன் எதிரில் நிறுத்தினார்களாம். எப்படி? பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பாலகன் முன் நிர்வாணமாக! பாலூட்டி சீராட்டி வளர்த்த மகனைப் பார்க்கிறாள் தாய் நிர்வாணமாக! ஆசை மொழிகளைக் கூறி ஆலோலோ பாடிய அம்மா மட்டுமா நிர்வாணமாக நிற்கிறாள்? இல்லை தோழர்களே ! சொல்ல வெட்கமாக இருக்கிறது. அவனையும் அம்மணமாக்கி அம்மா எதிரிலே நிற்க வைத்தார்கள் பாவிகள். அதோடு விட்டார்களா? தாயும் சேயும் நிர்பந்த புணர்ச்சியில் ஈடுபட இம்சித்தார்களாம். என்ன கொடுமை ! யாரால் இந்த அக்கிரமங்கள் ?’ அயல் நாட்டினர்கள் ஆட்சியிலா ? இல்லை. காந்தியின் சீடர்கள்- அகிம்சாவாதிகளின் ஆட்சி காலத்திலே ! மாதர்க்கு மதிப்புக் கொடுக் கிறோம் என்று கூறும் மகாத்மா காந்தியின் பக்தர்கள் ஆளும் காலத்தில் தான் தோழர்களே !
ஜஸ்டிஸ் கட்சி ஆண்ட காலத்தில் உப்பு சத்தியா கிரகத்தின் போது அபராதம் விதிக்கப்பட்டதாம் ஒரு பெண்ணுக்கு. அபராதம் கட்ட கையில் காசில்லை என்று அந்த மாது கூறினாள். அவளுக்குத் தண்டனை விதித்த மாஜிஸ்டிரேட், தாலியிலுள்ள பொன்னை விற்று அபராதம் செலுத்தும்படிக் கூறினாராம். இதைக் கேட்ட தேச பக்தர்களுக்கு உடனே கோபம் வந்து விட்டது. அந்தக் காலத்தில் சட்ட மந்திரியாக இருந்த ஆற்காட்டு ராமசாமி “தாலியை அறுத்தார் ! பெண்ணின் கற்புக்குப் பங்கம் வந்து விட்டது என்று ஊர் முழுதும் கூச்சலிட்டார். தேசீய ஏடுகள் அதைக் கொட்டை கொட்டையாகப் போட்டு தங்களுடைய தேர்தலுக்காகப் பயன்படுத்திக் கொண்டன.
ஆதாரமற்ற பேச்சுக்கு அர்ததமற்ற கூச்சல் போட்ட இந்த அகிம்சாவாதிகள் இந்த அக்ரமத்துக்கு வாய்திறந்து ஏதாவது கூறியிருப்பார்களா? அவர்களது தேசீய ஏடுகள் ஒப்புக்காவது இதைக் கண்டித்திருக்க வேண்டாமா, தோழர்களே ! பாருங்கள், நம் பரமாத்மாக்கள் பாராளும் லட்சணத்தை! இப்படிப் பட்டவர்கள் தான் மாட்டுப் பெட்டியைக் காட்டி ஓட்டு கேட்கிறார்கள் !
நெசவாளர் துயர் நீங்க வில்லை. வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாகி விட்டது. எங்கும் பட்டினிப் பட்டாளம் பவனி வரத் தலைப்பட்டுவிட்டன. பசிக் கொடுமை தாளாது மக்கள் மாண்டு மடிவது மட்டு மல்ல; தற்கொலையும் செய்து கொள்ளும் நிலைக்கு நாடு வந்து விட்டது, இந்த நல்லவர்களின் ஆட்சி காலத்தில்.
சமீபத்தில் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு வந்தது. அதை நீங்கள் பார்த்தீர்களோ, இல்லையோ ! ஒரு நெசவாளி நூல் கிடைக்காத கஷ்டத்தால் பல நாள் பட்டினி இருந்தான். அவன் மனைவி தனது இரண்டு குழந்தைகள் பசியால் வாடி வதங்குவது காண சகியாமல் கணவன் வெளிச் சென்றிருந்தபோது, தூக்கிலே தொங்க ஆரம்பித்து விட்டாள். வீட்டுக்குத் திரும்பி வந்த கணவன் இக் கோரக் காட்சியைக் கண்டு மனம் வெதும்பி, மக்கள் இருவரையும் கொன்றுவிட்டு தானும் தூக்குக் கயிற்றில் தொங்க ஆரம்பித்தான். தூக்கில் தொங்கும் பாட்டாளியின் சரீரம் படபடவென அடித்துக் கொண்ட சப்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத் தார் ஓடி வந்து அவனைக் காப்பாற்றினர். என்ன நடந்தது பிறகு தெரியுமா தோழர்களே ! மனைவி, மக்களைக் கொன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தான் என்று தண்டிக்கப்பட்டான். ஐகோர்ட்டுக்கு மனு செய்து கொண்டான், “பசியால் வாடிய நான் இந்த பாருலகைப் பிரிய விருப்பப்பட்டேன். பிடித்தார்கள்; தண்டித்தார்கள் !” என்று! வழக்கைப் பரிசீலனை செய்த நீதிபதிகள் அவனை விடுதலை செய்தார்கள், அவன் குற்றவாளி அல்லவென்று. அவன் அந்த நிலைக்கு வரக் காரணமாக இருந்தது அரசாங்கத்தின் கவனக் குறைவேயாகும் என்று கூறிவிட்டார்கள். இப்படி நீங்களோ, நானோ, ஆல்பர்ட் ஜேசுதாசனோ கூற வில்லை, தோழர்களே! இந்த ஆட்சியில் அமர்ந்திருக்கும் நீதிபதிகள் கூறுகிறார்கள், அவனது மனைவி மக்கள் மடியக் காரணம் ஆளத்தெரியாதவர்களால் ‘வந்த வம்பு என்று !
மற்றொரு அதிசயத்தைப் பாருங்கள். பசியால் வாடி ஒருவன் வேறு வழியின்றி ஓடினான், சுடுகாட்டை நோக்கி. தவம்புரிவதற்கல்ல. வெந்து கொண்டிருந்த பிணத்தை ருசிபார்க்க! பிணத்தின் மீதிருந்த நெருப்பைத் தள்ளினான். துடைக்கறி வெந்து இளகி இருந்தது, சூடாக. பிய்த்தான், தின்றான், பசி தீர,- பசியின் கோரம்தணிய. ஆனந்தம் அவனையும் அறியாமல் வந்து விட்டது. ஆடினான்; ஆனந்தத் தாண்டவம் அல்ல – அப்போதைய பசி தீர்ந்துவிட்டதே என்று. ஊரார் பார்த்தனர்; போலீஸாருக்குத் தெரிவித்தனர். போலீசார் ஓடோடியும் வந்தனர்; பிடித்துக் கொண்டனர். பைத்தியமா ?” என்று கேட்டனர். இல்லை! நான் பைத்தியக்காரன் இல்லை. பசியால் பாதிக்கப்பட்ட பரம ஏழை ! பசி தீர பிணக்கறியைத் தின்றேன் என்றான். “இல்லை! நீ பைத்தியக்காரன்தான்” என்று கூறினர் போலீசார். அவன் இல்லவே இல்லை யெனக்கூறினான். ஒப்புக்கொள்ளுவார்களா அரசாங்கத்தினர் ? ஒப்புக்கொண்டால் மறுநாளே பத்திரிகையில் வெளிவரும் செய்தியைக் கண்டு வெளிநாட்டார் எள்ளி நகையாடுவார்களே என்று கூறி, அவன் பைத்தியக் காரன்தான் என்று பதிவு செய்து கொண்டு அவனைப் பைத்தியக்காரர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டார்கள்.
என்னைக் கேட்டால் அவன் உண்மையில் பைத்தியக்காரன்தான் என்று கூறுவேன். பசித்தால் வேகும் பிணத்தை பிடுங்கித் தின்னுவதைவிடத் தெருவில் திரியும் மந்திரிகளையல்லவா பிடுங்கித் தின்றிருக்க வேண்டும்?
பசிக்கொடுமையால் மக்கள் புளியங் கொட்டையை சாப்பிட விடுகிறது நமது அரசாங்கம். ஏன், நமது ஆச்சாரியார் புல்லைத் தின்னுங்கள் என்றுகூட வாய் கூசாமல் சொல்லியிருக்கிறாரே ! இதையும் கேட்டுக் கொண்டு தானே நாம் சும்மாயிருக்கிறோம். அகிம்சையில் நமக்கு நம்பிக்கை இருந்தால் திண்டிவனத்திற்கருகே கத்தாழை தின்று ஆறுபேர் மாண்டதாகப் பத்திரிகையில் படித்தோமே, அதைப் பார்த்து நம் மந்திரிகள் மனம் பதைபதைத்ததா? இல்லையே ! அவர்கள் தான் உணவுக்கு உலகத்தையும், அளவுக்கு டில்லியையும் நோக்கி ஆரூடம் பார்க்கிறார்கள் அறிவு கெட்டத் தன்மையில் !
நமது உணவு மந்திரியார் ஒருமுறை டில்லிக்குச் சென்று தென்னாட்டார் உணவுப் பற்றாக்குறையால் கஷ்டப்படுவதாகக் கூறினார். உடனே முன்ஷி அதற்கு பிறகு “நான் காரணம் கண்டுபிடித்திருக்கிறேன். எல்லாம் தீர்ந்துவிடும்” என்றார். உடனே நமது மந்திரி ரோச் விக்டோரியாவுக்கு ஆனந்தம் பொங்கி விட்டது. காரணம் கேட்டார். உணவு மந்திரி கூறுகிறார் : “உணவு உற்பத்தி குறைந்து விட்டது தான் காரணம். உற்பத்தி குறைவதற்குக் காரணம் விவசாயம் குறைந்து விட்டது. விவசாயம் குறைந்ததற்குக் காரணம் நெல் விளைச்சல் அதிகமில்லை. அதிகம் இல்லாததால் அரிசி குறைந்து விட்டது. அரிசி குறைந்ததற்குக் காரணம் மழையில்லை. மழையில்லாத தற்குக்காரணம் ஆகாயத்தில் மேகமில்லை. மேக மில்லாததற்குக் காரணம் மரங்கள் அதிகமில்லை. அதனால் மரம் நடுவிழா ஆரம்பமாகட்டும். சரியாகிவிடும். ஆகவே, நீங்கள் உங்கள் மாகாணத்தில் மரம் நடும் வேலையைத் துவக்க ஏற்பாடுசெய்யுங்கள், நான் வந்து விழாவை நடத்தி வைக்கிறேன் !” என்றார். எஜமானர் உத்திரவுப்படி இந்த மானங்கெட்ட மந்திரிகள் ஊர் ஊராக மரம் நட ஆரம்பித்தார்கள். ஒன்றாவது பிழைத்ததா ? இல்லையே! இதற்காக வரிப்பணம் எத்தனை லட்சம் வீணாகியது! மரம் இல்லாத இடத்தில் மரம் நடுவது கூட நியாயம் என்று ஒப்புக் கொள்வோம். அந்தக் காரியத்துக்காக இருக்கும் மரங்களைக் கூடவா வெட்டி விடுவது? கேளுங்கள், ஓர் அதிசயத்தை ! வடநாட்டில் ஒரு திறந்த வெளியில் மரம் நடும் விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள். திறந்த வெளிக்கு சுற்றுப்புறமும் அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்தன. மைதானத்தில் நடக்கும் விழாவைக் காண அவைகள் மறைத்துக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி, ஒரு சிறு கொடியை நட்டார்களாம். எத்தகைய மேதாவித்தன்மை! என்ன இவர்கள் மூளை! இருப்பதை ஒழித்துவிட்டு மரம் நடும் மடத்தனம் நிறைந்த மகான்கள்தான் மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து ஓட்டுக் கேட்கிறார்கள். இந்த மாடுகளைச் சட்டசபைக்கு அனுப்பினால் அது சட்டசபையாகவா இருக்கும். மாட்டுப் பட்டியாக அல்லவா இருக்கும் !
தோழர் ஆல்பர்ட் ஜேசுதாசனைப் பற்றி பலர் பேசினார்கள். அவர் செய்த சேவையின் பட்டியலும் உங்களுக்குப் படித்துக் காட்டப்பட்டது. நான் அவரது சேவையைக் கூறி உங்கள் ஓட்டுக்களைப் போடும்படிக் கேட்கப் போவதில்லை. அவர் வெற்றி பெறுவது காங்கிரசைத் தோற்கடிப்பதில் இருக்கிறது. காங்கிரஸ் மந்திரிகளைப் பற்றி நாம் கூறுவதைக் கண்டு யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள். அவர்களைத் தினமும் துதி பாடும் தேசீய ஏடு கூறுகிறது சோம்பேறி மந்திரிகள், சொரணை கெட்ட எம்.எல்.ஏ.க்கள் என்று! இப்படிப்பட்டவர்கள் சட்ட சபையிலிருந்து பொதுமக்களுக்காக என்ன பணியாற்ற முடியும்! ஆகவே தான் அவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் நமது ஆல்பர்ட் ஜேசுதாசன் அவர்கள் இருப்பதே நல்லதென்று நமது கழகம் நினைத்தது.
நமது கழகம் சர்வாதிகாரப் போக்குடையது அல்ல. நூற்றுநாற்பது பேர்களைக் கொண்ட ஒரு பொதுக் குழுவிற்கு கட்டுப்பட்டு நடப்பது! அதன் முடிவுப்படி கழகத்தவர் நடப்பதுதான் கடமை!
நாம் தேர்தலில் நிற்பதில்லை என்று சேலத்தில் முடிவு கட்டினோம்! அதன்படியே நடந்து வருகிறோம். நம்மைக் கேட்கிறார்கள் பொதுமக்கள், ‘நீங்கள் ஏன் தேர்தலில் நிற்கவில்லை’ என்று. நான் அவர்களுக்குக் கூற ஆசைப்படுகிறேன், நமக்கு நிற்பதற்கு தகுதியோ திறமையோ இல்லை என்ற காரணத்தாலல்ல அம்முடிவு. இன்றைய சூழ்நிலையில் நாம் சட்டசபைக்குச் செல்வது நல்லதல்ல என்று பட்டதால்தான். சபைக்குப் போகாததால் நமக்கு அரசியல் ஞானம் இல்லை என்று கூறிவிட முடியாது. அண்ணா கூறுவது போல் இந்த ஆட்சி பீடம் நமக்கு இடங்கொடுத்தால், அடுத்த மூன்று நாட்களுக்குள் ஆச்சரியப்படும்படி ஆட்சியை நடத்திக் காண்பிப்போம். அப்படிப்பட்ட அறிவாளிகளும், அரசியல் ஞானம் படைத்த வாலிபர்களும் நம்மிடையே இருந்து வருகிறார்கள்.
இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடாத போது, நாம் யாரை ஆதரிப்பது, யாருக்கு நமது ஓட்டுக்களைப் போடுவது என்ற சந்தேகம் நம்மைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டபடி இருந்தன.
இந்தத் தொகுதியில் தோழர் ஜீவானந்தம் தேர்தலுக்கு நிற்பது உங்களுக்குத் தெரியும். அவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். நமது பழைய நண்பர். சுயமரியாதைக்காரர். அவர் அண்ணாவைப் பல முறை சந்தித்து தேர்தலில் கலந்து கொள்ளும்படிக் கேட்டார். அண்ணா சந்தோஷப்பட்டார் அவரது ஆர்வத்தைக் கண்டு. தேர்தலில் தம் கட்சி கம்யூனிஸ்டுகளுக்கு நண்பராக இருந்து, தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்யும், அதுவே எனது ஆசையும் என்று கூறினார். ஆனால், ஐக்கிய முன்னணியில் சேர்ந்து காங்கிரசைத் தோற்கடிக்க அழைத்தார் ஜீவா. ஐக்கிய முன்னணி என்பது யார் யாரைக் கொண்டது என்ற கேள்வியை எழுப்பினார் அண்ணா ! “நீங்களும் நானும் பெரியாரும் சேர்ந்துள்ள கட்சிகள் தான் என்றாராம் ஜீவா. ” மிகவும் சந்தோஷம். ஆனால் நீங்கள் முதலில் பெரியாரின் சம்மதம் பெற்று வாருங்கள் ” என்றார் அண்ணா. பிறகு வந்த ஜீவா, “ஐயா உங்களை ஒரு கட்சியாக ஒப்புக்கொள்ள முடியாதென்று கூறுகிறார்”. ஆகவே, நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் ” என்றார்.
தோழர் ஜீவானந்தம் மிகவும் நல்லவர் மட்டுமல்ல; அரசியல் ஞானம் படைத்த அறிவுடமையை பேச்சாளியுமாகும். அவருக்குத் தெரியும் ஐக்கிய முன்னணி என்பது சரிசமத்துவம் கொண்ட கட்சிகள் ஒன்றோடொன்று உயர்வு தாழ்வற்ற முறையில் பாவிக்க வேண்டுமென்பது. ஒரு தனிப்பட்ட வியாபாரக் கம் பெனியை எடுத்துக் கொண்டாலும், அக் கம்பெனியிலுள்ள பாகஸ்தர்கள் ஒருவரை ஒருவர் சரிசமானமாக நடத்தினால்தான் அந்தக் கம்பெனியும் வேலை செய்ய முடியும். அப்படிக்கின்றி, நம்மை கட்சி என்றே ஒப்புக் கொள்ள முடியாத ஒருவனுடன் கூடி எப்படி பணியாற்ற, ஐக்கிய முன்னணி அமைக்க முடியும்? ஆகவே அண்ணா தனது கட்சியின் பொதுக் குழுவின் சம்மதம் பெற்று தெரிவிப்பதாகக் கூறினார்.
பொதுக்குழு மதுரையில் கூடியது. சுமார் 45 பேர்கள் விவாதித்து கடைசியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நமது உதவியைத் தருவது என்று முடிவு செய்தது. திராவிடநாட்டுப் பிரிவினைக்கு ஆதரவு தேட, சட்டசபையிலும் பாடுபடுவதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட கம்யூனிஸ்டுகளுக்கு நிபந்தனை போட்டது. அதை உத்யோகப் பூர்வமாகவும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தெரிவித்தது. அவர்கள் தங்கள் முடிவை “ஜனசக்தி” தாள் மூலமாக சூசகமாகத் தெரிவித்தனர். மதுரைக் கூட்டத்திற்கு முன்பு பல கூட்டங்களில் நாங்கள் திராவிடநாட்டுப் பிரிவினையை ஆதரிக்கிறோம் என்று பேசிவந்ததுடன், அக்கட்சியின் தலைவர் டாங்கேயும் திராவிடநாடு பிரிவினை நியாயமான கோரிக்கைதான் என்று கூறி வந்தவர்கள், நம்முடைய மதுரை தீர்மானத்திற்குப் பிறகு “திராவிடநாடு பிரிவினை அர்த்தமற்றது. திராவிட, ஆரிய கலாசாரம் என்பது ஒன்றுமில்லை.” என்று கூறிவிட்டார்கள். காரணம்? நமது ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டுமென்ற நிபந்தனை கண்டு.
மேடையில் பேசி வந்தவர்கள், அந்தக் குறுகிய காலத்திற்குள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளும் சக்திவாய்ந்தவர்களை நாம் எப்படி நம்ப முடியும்? கஷ்ட நஷ்டங்களைத் தாங்கி, ஏச்சல் பேச்சுகளை ஏற்று, தடியடிபட்டு, சிறை சென்று, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு ஆளாகி, கட்டிக் காப்பாற்றிய நமது இலட்சியத்தை- நமது ஜீவதார உரிமையாகிய திராவிடநாடு பிரிவினையை மறந்து நாம் எப்படி உதவி செய்ய முடியும்? நமக்கு கம்யூனிஸ்டுகளிடம் அளவற்ற மதிப்பு உண்டு. அதற்காக லட்சியத்தை விட்டுக் கொடுக்க முடியுமா? முடியாது! ஆகவே நிபந்தனை காட்டினோம். நமது நேசக்கரத்தை நீட்டினோம். கம்யூனிஸ்டுகள் நமது நட்பைப் பெற இசையவில்லை. ஆகவே நாம் நமது லட்சியத்தை ஒப்புக் கொள்ளுபவர்கள் யார் யார் என்று பார்த்தோம். மாவட்ட கமிட்டி சிபாரிசு செய்தவர்களுக்கு தேர்தலில் உதவி செய்வது என்ற முடிவுக்கு வந்தோம். இதில் தப்பிதம் என்ன இருக்கிறது! நாம் ஏதும் முடியாத ஒன்றைக் கேட்கவில்லையே ! இதுவரை மேடையில் திராவிடநாடு பிரிவினையை ஆதரித்தவர்களைத்தானே கேட்டோம் ஒப்பந்தத்தில் ‘கையெழுத்து போடு’ என்று. ‘முடியாது’ என்றார்கள். சந்தோஷம்! தேர்தல் வரை ஒதுங்கி நிற்பது அல்லவா நாணயமுள்ளவர்களுக்கு அழகு. அதைவிட்டு தியாகிகளின் பெயரைச் சொல்லி நம்மைத் திட்டுவது நியாயமா? அதிலும் நமது ஜீவானந்தமா நம்மோடு பல நாட்கள் பழகி, நமது கொள்கைக்காகப் போராடியவரா, நம்மையே திட்டுவது?
தோழர் ஜீவா கூட்டமொன்றில் குறிப்பிட்டாராம், தி.மு.கழகம் தனது முடிவைத் தேடி நடந்துகொண்டிருக்கிறது என்று. ஜார் மன்னரை அழித்து-ஹிட்லரின் இருப்பிடம் தெரியாமல் செய்து-முசோலினியைச் சென்ற இடம் தெரியாமல் ஓடச்செய்த கம்யூனிஸ்ட் கட்சியுடன் நாம் மோதிக்கொள்ளுகிறோமாம். இவர்களுக்கு ஏற்பட்ட கதியே தி.மு. கழகத்துக்கு ஏற்படுமாம்! யார் கூறுவது? நமது மதிப்பிற்குரிய ஜீவா.
நமக்கு கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியும் அவர்களைவிட நாம் கம்யூனிஸ்டுகளின் விரோதிகளல்ல. அவர்கள் நம்மை விரோதிகளாகப் பாவிக்கின்றார்கள். நாம் கம்யூனிசம் வேண்டாம் என்று கூறவில்லை. பாகிஸ்தான் பிரிந்த பிறகு அங்கே கம்யூனிஸ்ட் கட்சி இல்லையா? இருக்கிறதே, பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை வைத்துக்கொண்டு அதைப் போலவே திராவிடநாட்டுப் பிரிவினைக்குப் பிறகு திராவிடநாட்டு கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்துக் கொள்ளலாமே! அதைவிட்டு எங்களை ஏன் தூற்ற வேண்டும்? குறைகூற வேண்டியது வேறிடத்தைப் பார்த்தல்லவா! எங்கள் நேசத்தால் அவர்களுக்கு நஷ்டமேற்பட்டிருக்காதே!
உண்மையிலேயே கம்யூனிஸ்ட் கட்சி பூட்சுவாக்களின் விரோதி என்றால் சாமியப்பாவை அல்லவா எதிர்த்திருக்க வேண்டும் ? தஞ்சை மண்ணிலே குருதி கொட்ட காரணமாக இருந்த சாமியப்பாவை அல்லவா தோற்கடிக்கப் பாடுபடவேண்டும்? அதைவிட்டு தி.மு.கழகத்தைப் பழித்து கூறுவது கூடாதென்று ஜீவாவுக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஜீவா நல்ல உழைப்பாளி. பேச்சாளி. அவரது உழைப்பும் பேச்சும் நமக்கு மிகமிக அவசியம். அவரை சட்டசபையில் போட்டு அடைத்துவைப்பதைவிட வெளியில் இருப்பதுதான் மக்களுடைய நன்மைக்கு மிகவும் நல்லது. ஆல்பர்ட்டைப் போன்ற சட்ட அறிவாளிகள் அங்கு சென்று, ஜீவா நம்முடன் இருந்தால், நாட்டில் இன்னும் நல்லகாரியத்தைச் செய்யலாம். ஆகவே, ஆல்பர்ட் ஜேசுதாசனுக்கு உங்கள் வாக்குகளை அளித்து அவரை அங்கு அனுப்புங்கள்.
“கம்யூனிஸ்ட் கட்சி தியாகிகள். அவர்களுடனா போட்டி போடுவது?” என்று கேட்கிறது பெரியார் ஏடு. நாங்கள் மட்டுமென்ன, தியாகம் செய்யாதவர்களா ? தியாகம் என்ற பொருளுக்கு அர்த்தம் அவர்களுக்குத் தெரியவில்லை என்றுதான் கூறுவேன். தியாகம் என்பது உயிர் துறப்பது, என்பது மட்டுமல்ல தியாகத்திற்குப் பலன் தெரிய வேண்டுமே !
ஆச்சாரியார் சென்னை வந்தபோது 150 பேர் அடிபட்டு படுக்கையில் கிடந்தார்கள். தங்கசாலைத் தெரு கழகக் கட்டிடத்தில் அவர்களைக் கண்டு அண்ணா கண்ணீர் விட, அவர்கள் அண்ணாவைக் கண்டு கண்ணீர் விட்ட காட்சியை ஜீவா கண்டிருந்தால் அவரும் கண்ணீர் விட்டிருப்பாரே! பெண்களின் ரவிக்கை கிழியும்படி அடிக்கவில்லையா ஆச்சாரியாருக்கு கருப்புக் கொடி காட்டியபோது! சிறைக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்! குன்றத்தூரில் எட்டு தடவை துப்பாக்கி சுட்டதே, யாரை? எங்களையல்லவா? ஆரியமாயை எழுதியதற்காக 6 மாதம் சிறை சென்றவரை 10 நாட்களில் வெளியே அனுப்பிவிட்டதே, இதனால் தெரிய வில்லையா எங்கள் தியாகத்தின் பலன் ! கம்யூனிஸ்டுகளால் முடியவில்லையே, சிறையில் கிடப்பவர்களை விடுதலை செய்ய!
நாம் இதுவரைக் கட்டிக் காப்பாற்றிய இலட்சியம் திராவிடநாடு. அதை அடைய எல்லா வகையிலும் பாடுபடுவோம் – என்று ஆல்பர்ட் ஜேசுதாஸ் கூறினார். அதைக் கேட்டபோது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. நமது இலட்சியத்தை அலட்சியம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் நமக்கு அக்கரை இல்லை. நாடு பிரிவதற்குப் பாடுபடுவதாக உறுதி அளித்த ஜேசுதாசனுக்கே ஓட்டுக் கொடுத்து ஆதரியுங்கள். அவர் வெற்றிபெற்றால் நாட்டுப் பிரிவினைக்கு நாம் முதல் வழி வகுத்தவர்களாவோம்.
ஆல்பர்டுடைய சின்னம் ஒட்டகம். ஒட்டகம் – பாலைவனங்களைக் கடக்கக் கூடியது. மிகவும் சாதுவானது – அது போய்ச் சேரும் இடத்திற்கு தனக்கு வேண்டிய உணவைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் சக்தி பெற்றது! அதைப்போலவே ஒட்டகச் சின்ன முடைய ஆல்பர்டும் நமக்கு வேண்டியவைகளைச் சேகரித்துக்கொண்டு சட்ட சபையில் போராடுவார். “திராவிடம்” என்ற பாதுகாப்பு இல்லாவிட்டால் தானியக் கதிர்களை சட்ட சபையில் மாடுகள் மேய்ந்து விடும். ஜாக்கிரதை ! ஒட்டகப் பெட்டியில் ஓட்டு போடுவதை ஒவ்வொருவரும் மறக்க வேண்டாம். வாழ்க திராவிடம் !
“மாலை மணி” (6-12-1951)
நம்ம மந்திரிகள்!
‘நம்ம சர்க்காரில்’ மந்திரிகளின் ‘குட்’டை வெளிப்படுத்திவிட்டால் வெளி நாட்டான் நம்மைப் பற்றி நகைக்க மாட்டானா?
நம்ம மந்திரிகளின் யோக்கியதைகளை அம்பலப் படுத்துவோரைப் பார்த்து “நமது சர்க்கார் அனுதாபிகள் ” கூறும் சமாதான வார்த்தைகள் இப்படித்தான் இருக்கும்.
இப்படியே நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொண்டு ஆட்சிபீட மகான்கள் செய்யும் காரிய மனைத்தும் மகோன்னதச் செயல் என்றே கூறிக்கொண்டு இருந்ததின் விளைவே, இந்த நாடு வறுமையால் அவதிப் பட நேரிட்டுவிட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஆட்சி பீடத்திலமர்ந்தோர் செய்யும் தகாத செயல்களையும் கண்டிக்க இந்த நாட்டில் எதிர்க்கட்சி இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது. அதனாலேயே எதேச்சாதிகாரம் தலைதூக்கி நிற்க ஆரம்பித்து விட்டது.
மக்களின் ஆதரவிலே ஆட்சிக்கு வந்து, மக்களின் நலத்திலேயே நாட்டம் செலுத்தாது, தங்கள் சுகபோக வாழ்விலேயே கண்ணும் கருத்துமாக கொலு வீற்றிருக்கும் நம் காங்கிரஸ் மந்திரிகளுக்கு, பாடம் கற்பிக்கும் வகையிலே வெளி நாட்டுச் செய்திகள் பல வந்த வண்ணம் இருக்கின்றன.
அண்மையில் பதவிக்கு வந்த இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில், தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்ட தோடு, தன் சக மந்திரிகளின் சம்பளத்தையும் தகுதிக் கேற்றவாறு குறைத்திருக்கிறார். ஆண்டொன்றுக்கு 10,000 பவுன் சம்பளமாக இருந்ததை 7,000 பவுனாகத் தன் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்.
சிவப்புச் சீனாவின் தலைவர் மாசே துங் மாதம் 800 ரூபாய்கள் தான் சம்பளம் பெறுகிறாராம்.
பாரசீகப் பிரதமர் முசாதிக் மிகக் குறைந்த அளவு சம்பளம் பெறுவதோடு, தனக்காக உள்ள சர்க்காரின் கார்களைக்கூடப் பயன்படுத்திக் கொள்வதில்லையாம்.
அதே நேரத்தில் நம் மந்திரிகளைக் கவனிப்போம். இவர்கள் மாதம் ஒன்றுக்கு பல்லாயிரக் கணக்கிலே சம்பளம் பெறுவதோடு, எதற்கெடுத்தாலும் தனி அலவன்ஸ் பெற்றுக் கொள்வதில் தவறுவதில்லை.
சென்னை மந்திரிகள் ஓராண்டுக்கு முன்பு தங்கள் சம்பளம், அலவன்ஸ் போதாமல், தங்கள் குடும்ப மருத்துவச் செலவிற்கும் அரசாங்கச் செலவில் பணம் பெறும் சலுகையைத் தீர்மானமாக்கி, நிறைவேற்றிக் கொண்டது நினைவிருக்கலாம். தேர்தல் பிரசாரத்திற்கு வேறு சர்க்காரின் பணத்தை பாழ்படுத்தினார்கள்.
நம் மந்திரிகளின் கோலாகல வாழ்வு, அவர்கள். நடத்தும் அட்டகாசம், மக்கள் சர்க்காரிலே நடப்பதாகவா இருக்கிறது?
தேர்தலிலே வாக்குறுதி கொடுத்தவைகளில் ஒன்றான சம்பளக் குறைப்பை தாம் பதவிக்கு வந்த ஒரு சில தினங்களிலேயே நிறைவேற்றி இருக்கிறார் சர்ச்சில் !
சர்ச்சிலைக் கிண்டல் செய்த இந்நாட்டு ஆளுங்கட்சியார், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் எவ்வளவு நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது!
நம் நாட்டு மந்திரிகள் நடன விழாவிற்குத் தலைமை தாங்கி நளின நடையில் பேசத்தான் கற்றுக் கொண்டிருக்கிறார்களே தவிர, வேறு எதைச் செய்தார்கள்? தினந்தினம் திறப்பு விழாக்கள் ! ஆரம்ப வைபவங்கள்! அஸ்திவாரக் கல்நாட்டுகள் ! – இவைகளைத்தானே செய்து கொண்டு வருகிறார்கள் இவர்கள்.
மக்களின் பகுத்தறிவுக்கு ஒவ்வாதப் பழக்க வழக்கங்களுக்குப் பாதுகாவலராக இருந்து வரும் இவர்கள் ஆட்சியில் உணவுப் பஞ்சத்தைவிட அறிவுப் பஞ்சம் தானே வளர வழி ஏற்படுகிறது.
மதச்சார்பற்ற இவர்கள் ஆட்சியிலே மதச்சடங்குகளுக்கு மந்திரிகளே சூத்ரதாரிகளாக விளங்கினால் எப்படி ஆட்சி உயர்வடைய முடியும்? மக்கள் பகுத்தறிவு பெறமுடியும்?
வருஷப் பிறப்புக்குப் பஞ்சாங்கம் படிக்கிற மந்திரிகள் – ‘இராம லீலா’வைக் கண்டு களித்துப் பரவசப்படும் மந்திரிகள் -சோமநாதர் கோவில் திருப்பணியில் ஈடுபடும் மந்திரிகள்-தீபாவளியைத் தேசியத் திருநாள் போன்று கொண்டாடும் அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாடு எப்படி உருப்பட முடியும்?
ஆரிய மதப் பண்டிகையான தீபாவளிப் பண்டி கையை நமது மாஜி பஞ்ச மந்திரி முன்ஷியார் வெகு சிறப்பாகக் கொண்டாடினார். இந்தியக் குடியரசு தலைவர் இராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு உட்பட பல உயர்தர உத்யோகஸ்தர்கள்கூட அம்மாதிரி பண்டிகையில் கலந்து கொண்டிருக்கிறார்கள் பலமுறை!
இதன் அர்த்தமென்ன? தென்னாட்டு – திராவிட மக்கள் பகிஷ்கரிக்கும் தீபாவளியை வட நாட்டுத் தலைவர்கள் வெகுவாக வரவேற்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்குத்தானே பயன்படுகிறது!
நாட்டிலே பஞ்சம் தலைதூக்கி நிற்கும் நேரங்களிலே, பொறுப்பும் கடமையும் உணர்ந்த மந்திரிகளால் பண்டிகை கொண்டாடவா நேரமிருக்கும்? அதற்கு மனம்தான் துணியுமா?
துயரக் கடலில் தத்தளித்து நிற்கும் நாட்டு மக்களின் இன்னல் களைய இலாயக்கற்ற – சிறிதும் தகுதியோ திறமையோ இல்லாத வெறும் சுயநல அரசியல் சூதாட்டக்காரர்களெல்லாம், ஆட்சிக்கு வந்ததினால் ஏற்பட்ட பலன்தானே நாடு இன்று இக்கதிக்கு உள்ளாகி இருக்கிறது? இதைத்தானே உண்மையான தேசபக்தர்கள் உள்பட எல்லா எதிர்கட்சித் தலைவர்களும் எடுத்துக் கூறி வருகின்றனர் ! இதை எடுத்துச்சொன்னால் அடக்குமுறை பாணத்தைக் காட்டி, சிறையிலே தள்ளி, சித்ரவதை செய்து, ‘ஜார்’ ஆட்சி நடத்தினால் இவர்களை எந்த நாட்டுக்காரர்கள் தான் மதிப்பார்கள்?
எனவே இந்தக் கொடுங்கோலர்களின் ஆட்சியை உபதேசத்தையும் சகித்து, இந்த ‘நம்ம சர்க்கார்’ மக்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதை இந் நாட்டு ஒரு சிறு குழந்தைகூட ஒப்புக்கொள்ளாது!
மாலை மணி (1-1-1951)
அமைச்சரின் ஆலோலம்
பொதுவாக ராஜ்யத்தில் தற்போது
குற்றங்கள் ஓரளவு அதிகரித்துள்ளன ”
சொல்வது நாமல்ல. சென்னை முதன்மந்திரியாரே பத்திரிகை நிருபர்கள் மாநாட்டில் கூறியிருக்கிறார். கள்ள மார்க்கெட், பதுக்கல், திருட்டுச் சாராயம் காய்ச்சல், தெருவிலே அடிபிடி சண்டை, கொலை, களவு, இன்னோரன்ன குற்றங்கள் நாட்டிலே மலிந்து கிடக்கின்றன கவனிக்க நாதியற்று.
சென்னை மந்திரிகள் தங்கள் தவறுகளை எப்போதுமே தாமதமாகத்தான் உணருகிறார்கள். அப்படி தாமதித்து வந்த உண்மையைத்தான் பிரதமர் வெளியிட்டிருக்கிறார்.
போலீஸ் படைக்காக சென்னை செலவிடும் தொகை வெள்ளையர் காலத்தைவிட பல மடங்கு அதிகம். புதிய புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் வேறு திறக்கிறார்கள். ஆனால் பிரதமரே வேதனையோடு வெளியிடுகிறார். ராஜ்யத்தில் குற்றங்கள் அதிகமாகிவிட்டன என்று !
ராமராஜ்யம் கிடைத்தவுடனே பஜனை மடங்கள் அதிகமாகுமென எண்ணினோம். அவர்களும் அந்த ‘சத’ காரியத்தில்தான் ஈடுபட்டிருந்தார்கள். நாடாளும் பொறுப்பு கிடைக்கும் வரையில் நிர்வாகம் என்றால் ‘ராம்தூன்’ பாட்டைப்போல சுலபமானது என்றுதான் நினைத்திருந்தார்கள். இப்போது நிர்வாகம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது தெரிந்திருக்கிறதே தவிர, நிர்வாகத்தை நடத்திச்செல்லும் பாதை தெரியாமல் தவிக்கிறார்கள். ஜார், ரஸ்புடீன் பாதைகளிலே பார்வையைச் செலுத்துவதால் இன்பப் பயணத்தை இழந்து துன்பச் சிந்து இசைத்திடுகிற இளித்த வாய்த்தனத்துக்கு ஆளாகிறார்கள்.
புதிய புதிய பள்ளிக்கூடங்கள் திறக்கிறார்கள் என்று கேள்விப்படவில்லை. புதிய புதிய ஆலைகள் அமைக்கிறார்கள் என்று கேள்விப்படவில்லை. புதிய புதிய தொழில்களை ஏற்பாடு செய்தார்கள் என்று கேள்விப்படவில்லை. புதிய புதிய போலீஸ் ஸ்டேஷனை அமைக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. அதோடு குற்றங்களும் பெருகுகின்றன என்று மந்திரியாரே தகவல் தருகிறார்.
போலீஸார் திறமை அற்றவர்களா? பலசாலிகள் அல்லவா? கொலையைக் கண்டால் குலை நடுக்கமெடுத்து கொலைகாரனை விட்டுவிட்டு ஓடக்கூடிய கோழைகளா? திருடனைத் தீண்டுவது பாபம் என்று கூறுகிற குறை மதியாளர்களா? இல்லை; கெட்டிக்காரர்கள். ஆனாலும் குற்றங்கள் குறையவில்லை. அதிகமாகின்றன. காரணம் என்ன?
மந்திரியார் சொல்லுகிறார், ‘பொருளாதார நிலைதான் முக்கிய காரணமென்று. பொருளாதார நிலையில் தாழ்ந்திருப்பவர்கள் மட்டும் குற்றம் பொருள்மீது பொருள் குவிக்கும் பேராசைக்காரர்களும் குற்றம் செய்கிறார்கள். கள்ளமார்க்கெட், ஏழைகளா நடத்துகிறார்கள் ? காரைக்கால், புதுச்சேரி சாமான்களை ஏழைகள் மட்டுமா கொண்டுவருகிறார்கள்? பொருளாதார நிலை ஒன்றுதான் குற்றங்களுக்குக் காரணம் என்பது பிரதமரின் போலிச் சமாதானமே தவிர வேறில்லை. சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் சஞ்சலப் படுகிற வழக்கம் ‘நம்ம சர்க்காரு’க்குப் பழக்கமான விஷயம்.
போலீஸ்காரர்களைப் பயன் படுத்தத் தெரியாத மந்திரியார் குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்று புலம்புவதால் பயனில்லை. வீட்டுக்கு சமையலுக்காக வைத்த ஆளை, அவனுக்குப் படிக்கத் தெரியும் என்பதற்காகக் குமாஸ்தாவாகவும் ஆக்கிக் கொண்டால் சமையல் வேலை ஒழுங்காகவா நடக்கும்? அதே போலத்தான் போலீசைப் பயன்படுத்திக் குற்றங்களை வளர வீடுகிறார்கள் ஆட்சியாளர்கள்.
எதிர்க்கட்சியை அடக்க; அடக்குமுறை பிரயோகிக்க-தடையை மீறினால் கைது செய்ய-கூட்டங்களுக்குச் சென்று என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க -துப்பாக்கிப் பிரயோகம் செய்ய – தடியடி தர்பார் நடத்த – பாதுகாப்புக் கைதிகளைப் பிடிக்க-இப்படிப் பயன் படுத்தப்படுகிறது போலீஸ். நாட்டைக் காப்பாற்றுவது – நாசத்தைத் தடுப்பது என்கிற லட்சியத்திலிருந்து போலீசார் பிரிக்கப்பட்டு, காங்கிரசையும், காங்கிரஸ் ஆட்சியையும் கரையாமல் கண்காணிக்க உபயோகப் படுத்தப்படுகிறார்கள். எந்த மந்திரி எங்கே போகிறார்; யார் கருப்புக்கொடி பிடிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு குதிரைப் பட்டாளத்தை விடலாமா? ‘குன்றத்தூர்’ நடத்தலாமா? – என்று யோசனை செய்யும் நிலைமையை போலீசுக்கு ஏற்படுத்தி விட்டு குற்றங்கள் மலிந்து விட்டன என்றால் ஏன் மலியாது? குற்றங்களைக் கண்டுபிடிக்க போலீசுக்கு நேரமேது? ஒரு எம்.எல்.ஏ. பேசுகிறார் என்றால் பாதுகாப்புக்கு எண்பது போலீஸ் தேவைப்படுகிறதே! எப்படி குற்றங்களைக் கண்டுபிடிக்க முடியும் அவர்களால்! மாதத்துக்கு முப்பது நாள் மந்திரிகள் சுற்றுப் பயணம் நடத்துகிறார்கள். ஊருக்கு ஊர் போலீஸார் மந்திரிக்கு ‘பராக்கு’ கூறும் பணியிலே ஈடுபடவேண்டியிருக்கிறது. குற்றங்களைக் குறைப்பது ஆகிற காரியமா?
கூட்டம் நடத்த அனுமதி, ஒலிபெருக்கி வைக்க உத்தரவு – இப்படி எல்லாம் எதிர்க்கட்சிகளை மடக்கும் புதுப் புதுச் சுமைகளை போலீஸார் தலையில் சுமத்திவிட்டுப் புலம்புகிறது, சர்க்கார்!
பூனையின் தலையில் யானை அளவு பாரத்தைத் தூக்கி வைத்துவிட்டு, எலித்தொந்திரவு அதிகமாகிறது, என்று சொல்வது கேலிக்குரியது மட்டுமல்ல; கடைந்தெடுத்த முட்டாள் தனம் !
நிர்வாகங்கள், ‘இவர்கள்’ ஆட்சியிலே நிலையில்லா குணங்களாகிவிட்டன. அடிக்கடி, அதிகாரக் கற்களை வீசி, அலைக்கழிப்பதே இவர்கள் ஆட்சி முறையாகி விட்டது. ஆனாலும் ஆலோலம் பாடத் தவறுவதில்லை அடிக்கடி கொலையும், களவும் சமுதாயத்துக்கு தீங்கூட்டும் காரியங்கள். அவைகள் தடுக்கப்பட ‘ஆலோலம்’ பாடினால் மட்டும் போதாது. அடக்குமுறைப் பாதையும் பயன் தந்துவிடாது. இதை அறிய வேண்டும் – குற்றம் மலிந்துவிட்டதெனக் கூறும் மந்திரியார் !
“மாலை மணி” (8-6-1951)
காட்கில் காம்போதி
“காங்கிரஸ் ஆட்சியின் தவறுதல்களையும் திறமையின்மையையும் மக்கள் மறந்துவிட வேண்டும். காங்கிரஸ் சர்க்கார் சில தவறான காரியங்களை செய்திருக்கக் கூடும்.”
மந்திரி காட்கில் பூனாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இதுபோல பேசியிருக்கிறார்.
இதோடு மட்டுமல்ல; காங்கிரஸையே ஆதரிக்கவேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.
தவறுதல் செய்த காங்கிரஸ்! திறமையில்லாத ஆட்சி! ஆனால் மீண்டும் பதவிக்கு வரவேண்டும். தவறுதல்களின் பட்டியலைத் தரவில்லை காட்கில்! ஆயிரத்து தொளாயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி பிரயோகம் செய்தது. மூவாயிரத்துக்கு மேற்பட்டவரின் மூச்சை நிறுத்தியது. பதினாயிரம் பேர்களை காயப்படுத்தியது. ஐம்பதாயிரம் பேர்களை சிறையில் தள்ளியது-எண்பதுக்கு மேற்பட்டவர்களை சிறைப் பிணமாக்கியது. குன்றத்தூர் – கூச்பீகார் நடத்தியது. நெசவாளர் குடும்பங்களை சுடுகாடாக்கியது. பிள்ளை வியாபாரம் செய்யும் மனித மார்க்கெட்டை திறப்புவிழா செய்தது – சமுதாய நல்லீதங்காள்களை உலவ விட்டது, புளியங்கொட்டை பருத்திக்கொட்டைகளை சாப்பிடச் சொன்னது-மிருகங்களையல்ல மனிதர்களை! பிணங்களை சாப்பிடும் அளவுக்கு நடைபிணங்களை நடமாடச் செய்தது. பட்டினி போட்டு-பதைக்க உயிர்வாங்கிய இதைப்போன்ற ஆயிரக்கணக்கான கொடுமை சூழ்ந்த பல வேதனைகளைத்தான் விளக்கமாக வெளியிட வெட்கப்பட்டு மந்திரி காட்கில் மறைமுகமாக ஒரே வார்த்தையில் தவறு என்று கூறியிருக்கிறார்.
அடுத்தபடியாக அமைச்சர் வெளியிடுகிற அழகான மதிப்புரை, திறமையின்மை நிறைந்த ஆட்சி என்பது.
சுயதேவைப் பூர்த்தியென்று பேசித் திரிந்து, வெளிநாடுகள் தருவதாகச் சொன்ன தான்யங்களை வாங்க மறுத்து, வீண் வீராப்பும் விவேகமற்ற செயல்களும் புரிந்து மக்களை பிணங்களாக்கியதும், பஞ்சத்திற்குக் காரணம் மழையில்லாததுதான் என்று கண்டுபிடித்து, மழை வருவிக்க, வனமகோற்சவம் என்ற வீண் விழாவிலே ஈடுபட்டதும், ஆக்க வேலைகள் பல இருக்க அறிவுக் கருத்துக்களை அடக்கும் வேலையில் அனாவசியமாக ஈடுபட்டதும், சட்டத்தால் மதுவை ஒழிப்பதாகச் சொல்லி, மது காய்ச்சுவது குடிசைத்தொழிலாக ஆகிவிடுகிற அளவுக்குக் கோணல் ஆட்சி நடத்தியதும், ஓடாத அனுமார் விமானத்திற்கு ஓயாத செலவு செய்து அலுத்ததும், அழுகிப்போன உணவுப் பொருளுக்கு பணத்தைக் கொட்டி அழுததும், இதுபோன்ற அறிவீனச் செயல்களைத்தான் சுருக்கமாகச் சொல்கிறார் மந்திரியார், “திறமையற்ற ஆட்சி” யென்று!
தவறு செய்த ஆட்சி! திறமையற்ற நிர்வாகம்! பதவியிலிருக்கும் மந்திரியார் ஆட்சிபீடத்திற்கு தரும் ‘சர்டிபிகேட்!’”
இரண்டையும் குறிப்பிட்டவர் இறுதியாக என்ன சொல்லுகிறார்!
கொலைகாரன்…. குற்றவாளி- என்ற பதங்களை உபயோகித்துவிட்டு, இவனில்லாவிட்டால் நீங்கள் வாழ முடியாது என்று கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தாரிடம் சொன்னால் எப்படியிருக்கும் !
அதைப் போலவே மந்திரி காட்கில், தவறு செய்தவர்கள், திறமையற்றவர்கள் என்று கூறிவிட்டு, ஆனால் இவர்களில்லாவிட்டால் நாடு உருப்படாது என்றும் கூறியிருக்கிறார்.
இங்கேதான் காட்கில் தவறு செய்கிறார். திறமையின்றியும் பேசுகிறார்.
திறமையின்மையையும் மறந்துவிடச் சொல்கிறார். மறந்துவிடுவது மட்டுமல்ல – மன்னித்துவிடவும் தயாராகயிருக்கிறார்கள் மக்கள். ஆனால் அந்தமறதிக்குப் பிறகு, மன்னிப்புக்குப் பிறகு மறுபடியும் திறமையற்றவர்களை மந்திரி நாற்காலிகளில் தூக்கிவைப்பதுதான் முடியாதென மறுக்கிறார்கள்.
காட்கில் காம்போதியின் நயம் நன்றாகத்தானிருக்கிறது; சாரீரம் இனிமையாகத்தானிருக்கிறது.
ஆனால் அதைக் கேட்பவர்கள் அந்த சங்கீதத்தில் மயங்கிவிடுகிற அளவுக்கு அவ்வளவு சாதாரணமானவர்களாயில்லை! சங்கடப் புயல்! சஞ்சலச் சூறாவளி ! ஏழ்மை எரிமலை ! வேதனை பூகம்பம் !-இதற்கிடையில் இருப்பவர்கள், காட்கிலின் காம்போதியிலா கருத்தை செலுத்தப்போகிறார்கள்!
நமக்குக்கூட ஆசைதான், காங்கிரசே மீண்டும் வெற்றி பெற வேண்டுமென்று !
ஏன்? அப்போதுதானே அடுத்த பொதுத்தேர்தலில் காங்கிரசின் பெயரால் ஒரு ஆள் – ஒரே ஒரு ஆள் கூட, நேரு உட்பட – அபேட்சா பத்திரம் தாக்கல்செய்ய முயன்று முன் வரமாட்டார்கள் ! அந்த நல்ல முடிவைத் தான் காட்கிலின் காம்போதி எதிரொலிக்கப்போகிறது!
“மாலை மணி’ (22-11-1951)
ஊர்வலம்
“காங்கிரஸின் செல்வாக்கு அழிந்து விட்டது. அதற்கு தேர்தலில் சந்தர்ப்பமில்லை என்று மக்கள் சொல்லுவதாக கேள்விப்படுகிறேன்.”
காமராஜரின் பேச்சிலே சிந்தியவைதான் மேலே காண்பது. காங்கிரசை யாரும் கவிழ்க்க முடியாது என்று கனல் கக்க கர்ஜித்திருக்கிற காமராஜரால் உண்மையை மறைக்க முடியவில்லை. அவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ மக்கள் மன்றத்தின் அபிப்பிராயத்தைக் கொட்டிவிட்டார். பின் உணர்ந்திருக்கிறார் தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்பதை ! உடனே திரையை இழுத்துவிட்டு மக்கள் மன்றத்தை மறைத்துவிட முயன்றிருக்கிறார். காங்கிரஸின் செல்வாக்கு போய்விட்டதென்று மக்கள் சொல்லுகிறார்கள் என ஆரம்பித்த காமராசர், அந்த மாதிரி மக்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள் என்று ஆரூடம் கணித்துக் காட்டுகிறார்.
தேர்தல் கமிட்டியின் துவக்கத்தில் இம்மாதிரி ஒரு தேறுதல் இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், விருதுநகராருக்கு விண் வீராப்புத் தேவையில்லை என்று தான் கருதுகிறோம். ‘அந்த மாதிரி மக்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள்’ என்பதிலே என்ன தொனிக்கிறது! தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற உறுதிதான் ஒலிக்கிறதே தவிர, காங்கிரஸ் செல்வாக்கு இழந்து விட்டதென்பதை மறுப்பதற்கான பதில்கள் பளிச்சிடவில்லை. செல்வாக்குப் போய்விட்டதென மக்கள் கூறுவதாக செவியில் விழுகிறது என்று புலம் பிய ராஷ்டிரபதியார் செல்வாக்குச் சீரழியவில்லை என்பதற்கான ஆதாரங்களையல்லவா அள்ளி வீசியிருக்க வேண்டும்! சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் வரும் !
“காங்கிரஸ்காரர்களுக்குள்ளேயே காங்கிரசின் பலத்தைப் பற்றி சந்தேகங்கள் இருக்கின்றன. அவைகள் ஒழிய வேண்டும்.”
உடைந்துபோன தேர் – ஓட்டையாகிக் கிடக்கும் கேடயம் – உபயோகமற்ற வாள்- ஒலிக் கிளம்பாத முரசு – உணர்ச்சியில்லாத வீரர்கள் – ஒற்றைக்கால் குதிரைகள் – இவைகளை வைத்துக்கொண்டு இந்தப் போரில் குதிக்கமுடியாது என பயப்படுகிறார்கள் சேனைத் தலைவர்கள். அரசனோ, அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம் என்று வீர உரை கூறுகிறான்.
அதைப் போலத்தான் இருக்கிறது தேர்தல் கமிட்டியில் நடத்திய பிரசங்கம். பயம் சேனாதிபதிக்கே சந்தேகமிருக்கிறது போரின் முடிவைப்பற்றி! சிங்காசனமேறியோ “ஜெயித்து விடலாம்” என்று வீரம் பேசுகிறார். காங்கிரஸ்காரர்களுக்குள்ளேயே காங்கிரசின் பலத்தைப் பற்றிய சந்தேகத்தை ஒழிக்கும் படி காமராசர் சண்டமாருத பிரசங்கம் செய்கிறார்.
“காங்கிரஸ் சர்க்கார் முட்டாள்தனமான பல தவறுகளைச் செய்துள்ளனர். ஆயினும் காங்கிரஸ் கட்சிக்குப் பதிலாக ஆட்சி நடத்த யோக்கிதை உள்ள வேறு கட்சி கிடையாது. ஆகவே காங் கிரஸ் கட்சியை சகித்துக்கொள்ள வேண்டும்”
இதைச் சொல்லியிருப்பவர் காங்கிரஸின் பல நாளையத் தொண்டராய்- தலைவராய்- பணியாற்றிய கிருபளானி.
“மந்திரிகளைத் திருத்தமுடியாத மகாத்மா காந்தி என்னை காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொன்னார். அவர் அனுமதி பெற்று தலைமைப் பதவியை உதறித் தள்ளினேன்”.
இதுவும் கிருபளானிதான். காங்கிரஸ் ஆளும் யோக்கிதையைப் பார்த்து காந்தியாரே மனம் புண்ணாகிப் போனார் என்ற செய்தி கிடைக்கிறது; காமராசரோ வெத்து வேட்டுகள் கிளப்புகிறார்.
வெத்து வேட்டுகளோடு நிற்கவில்லை. விசாரத்தை மறைத்துக் கொண்டு- விம்மிடும் குரலை வெளிக் காட் டிக் கொள்ளாமல்- விவேக மொழிகள் வேறு கூறியிருக்கிறார். என்ன விவேகமொழி? தேர்தலில் வெற்றி பெற, இழந்த செல்வாக்கை மீண்டும் பெற, நாணயமாக நடந்துகொள்ளுங்கள் என்றா? அதுவுமில்லை.
இழந்துபோன பெருமையை மீண்டும் அடைய முயற்சிப்பவன் பெருமை பாழ்பட்டதற்குக் காரணங்களை அறிந்துகொண்டு, தவறுகளைத் திருத்திக் கொள்ள முயல்வது அறிவுடமை. செத்துப்போன செல்வாக்கை புதுப்பிக்க புதுப்புது ஸ்டண்டுகள் நடத்துவதும் – எதிர்க்கட்சி மீது எரிந்து விழுவதும்- அழிந்த கௌரவத்தை ஆழக் குழிதோண்டி புதைத்து விடும் புன்மைச் செயல்கள். இதைக் காமராசர் உணர மறுக்கிறார். வேடிக்கை காட்டி மக்களை மயக்கி விடலாமென்று எண்ணுகிறார்.
“நகரங்களிலும், கிராமங்களிலும் கூட்டங்களும், ஊர்வலங்களும் நடத்துங்கள் ” என்று உபதேசிக்கிறார். ஊர்வலங்களையும், கூட்டங்களையும்தான் மக்கள் நடத்துகிறார்களே, கண்டிருப்பாரே காமராசர் ! நெசவாளர் ஊர்வலம்- வேலையற்றவர் ஊர்வலம்- அரிசி இல்லாதவர் ஊர்வலம் – இப்படி எத்தனை கண்ணீர்த்துளிகளின் பவனிகள் நடைபெறுகின்றன, கவனிக்கவில்லையா காமராசர் ! “காங்கிரசுக்கு ஜே!” போட்டு ஒழித்து விடக்கூடிய பிரச்னைகளா இவை எல்லாம் ! காமராசரின் தேர்தல் ஊர்வலம் கண்ணுக்கு ரம்யமாக இருக்கும். கருத்தைக் கவரும் ஊர்வலங்கள் அல்லவா நாட்டில் நடைபெறுகின்றன. ஊர்வலம் மட்டுமா ? ஊர்வலத்திலே உறுமுகிற போலீசார் எவ்வளவு ! உதிரம் குடிக்கிற துப்பாக்கிகள் எத்தனை ! தலை பிளக்கும் தடிகள் எவ்வளவு !
மானையும் மயிலையும் வேட்டையாடக் கூடாதென்று சர்க்கார் அறிவித்திருக்கிறது, காட்டுக்காகப் போடப்பட்ட சட்டம். ஆனால் நாட்டில் நடமாடும் அதிகார வெறி, எத்தனையோ தோகை மயில்களைத் துவளச் செய்திருக்கிறது. எத்தனையோ மான்விழியர்களின் மல்லிகை மேனியில் இரத்தக் கறை உண்டு பண்ணியிருக்கிறது. காட்டிலே உள்ள மானும் மயிலும் காப்பாற்றப் படுகின்றன. நாட்டிலே உள்ள மானும் மயிலும் மடிந்து போக விடப்படுகின்றன.
இந்தக் கொடுமைகள் எல்லாம் ஊர்வலமாக வருகிற நேரத்திலே, காமராசர் கோலாகல ஊர்வலம் நடத்த யோசனை கூறுகிறார். அதுவும் தேம்பும் மக்களுக்கு தேர்தல் ஊர்வலமல்ல; ‘தில்லு மல்லு ‘க் கட்சியில் தேர்தல் ஊர்வலம்!
“மாலை மணி ” (1-12-1951)
மாடோட்டிகள்!
அன்றொரு நாள் திராவிடத்தைச் சுரண்ட வந்தவர்கள் மாடோட்டித்தான் வந்தார்கள் இமாலயத்தின் கணவாய்களின் வழியாக!
இப்போதும் நம்மிடம் மாடோட்டி வந்தவர்கள் திராவிடத்தை வடவரின் வலையில் சிக்கிடும் மானாக ஆக்கத்தான் பாடுபடுகிறார்கள்.
வடவரின் அடிமைகள் இவர்கள் ! இவர்கள் ஓட்டி வரும் மாடுகள் நம்மையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு வடவரிடம் அடிமையாக்க முயற்சிப்பவை. வடகாட்டு நாகரீகத்தை, வடநாட்டு மொழியை, வடநாட்டு கலாச்சாரத்தை திராவிடத்திலே புகுத்துவது மட்டுமல்ல; வடநாட்டாரின் நிரந்தர எடுபிடியாக திராவிடத்தை மாற்றிவிட வேண்டுமென்ற தீவிர முயற்சி மாடோட்டிகளால் நடைபெறுகிறது.
காங்கிரஸ்தான் விடுதலை வாங்கித் தந்தது; சுதந்திரம் பெற்றுத் தந்தது – என்ற காரணங்களைக் காட்டி மக்களை மயக்கிவிடலாமென்ற துணிவு ஏற்பட்டிருக்கிறது அவர்களுக்கு!
சுதந்திரம் வாங்கித் தந்தமைக்காக நம் சுகவாழ்வை எல்லாம் இழக்க வேண்டுமென்று அர்த்தமல்ல! சுதந்திரம் இவர்களின் திறமையால், தியாகத்தால் மட்டும் கிடைத்து விட்டதல்ல.
சுதந்திரம் பெற்றோம்; நாமும்தான் மகிழ்ந்தோம். அந்த நேரத்திலும் வெள்ளையனுக்கு ஏற்பட்ட நெருக்கடி, உலகப் போர் முடிந்து அவனுக்கு ஏற்பட்ட சூழ்நிலை, இந்தியாவைக் கட்டிக்காக்க முடியாத நிலைமை, இவைகளும் முக்கிய காரணமாக இருந்தன விடுதலைக்கு என்பதை நாம் எடுத்துக் காட்ட தவறவில்லை.
சுதந்திர பூமிதான் ! ஆனால் இங்கேதானே பிண மலைகள் ! பிள்ளைச் சந்தைகள்! தற்கொலைகள்! தான்தோன்றி தர்பார்கள் !
வடவரின் கையிலே இருக்கும் கொடுங்கோலுக்குப் பெயரா சுதந்திரம் !
அடக்குமுறை தர்பாருக்குப் பெயரா சுதந்திரம்!
திராவிடம் தனியாட்சி பெற்றிருந்தால் பிணங்கள் விழுந்திருக்குமா, இங்கே ?
திராவிடம் தனியரசு செலுத்தியிருந்தால் மலேயாவுக்கும், இலங்கைக்கும் ஓடுவார்களா, திராவிடர்கள்?
இலங்கையிலே இடர் பல ஏற்றுக்கிடக்கும் திராவிடரை எல்லாம் திருப்பி அழைத்து தித்திப்பான வாழ்வைத் தந்திருக்காதா, சுதந்திர திராவிடம்!
மலேயாவிலே கணபதி கயிற்றிலே தொங்க நேர்ந்தது. சாம்பசிவம் தப்புவது பெரிதாகி விட்டது.
மீண்டும் லோகநாதனை விழுங்கி ஏப்பமிட்டுவிட்டது மலேயாவின் மரண மேடை !
காமன்வெல்த்திலே அங்கம் வகிக்கிறது நம்மை ஆளும் சர்க்கார்.
மலேயா கொடுமை பற்றி எடுத்துரைத்து ஏற்றது செய்ய மனத் துணிவு இல்லை. காமன்வெல்த்திலிருந்து வெளியேற வேண்டுமென்ற உணர்ச்சி ஏற்படவும் இல்லை. திராவிடம் தனி நாடாக இருந்திருந்தால் கண பதியை, லோகநாதனை சாகவிடுவோமா ? ஏன், மலேயா சென்று வாழவேண்டிய நிலைதான் அவர்களுக்கு இருந்திருக்குமா?
வெளிநாடுகளில் வீசப்பட்ட கேடுகளை கண்டிக்க மறந்தனர்! மாடுகளை மீண்டும் ஓட்டிக்கொண்டு ஓட்டுக்கு வந்தனர்.
வடநாட்டுப் பிடியிலே இருப்பதால்தானே, திராவிடம் லோகநாதனுக்காக வாதாட வில்லை !
வடநாட்டுப் பிடியிலே இருப்பதால்தானே, கோயங்கா தென்னாட்டு அபேட்சகராக முடிந்தது! வடநாட்டுப் பிடியிலே இருப்பதால்தானே, பிர்லாவின் ஏஜண்டுகள் சிலர், பிர்லாவின் பணத்தை வாரி இறைத்து தேர்தலிலே போட்டியிட்டார்கள் திராவிடத்திலே!
இத்தகைய கொடுமையான ஏகாதிபத்தியத்திலிருந்து திராவிடம் விடுபட வேண்டும் என்பதற்காகத்தான், திராவிடம் சுதந்திர பூமியாக மாற வேண்டும் என்பதற்காகத்தான், திராவிடத்திலே உண்மையான சமத்துவம் நிலைக்க வேண்டும் என்பதற்காகத்தான், பொதுவுடமைப் பூங்காவாக, புதுமை மாளிகையாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்று முழங்குகிறோம்.
இந்த முழக்கம் மாடோட்டிகளுக்குப் பிடிக்க வில்லை; பிடிக்காதது மட்டுமல்ல; மறுக்கிறார்கள்!
“வடவரின் அடிமைகள்” என்றால் கோபத்தால் குதிக்கிறார்கள். வடநாட்டின் மொழி, கலாச்சாரம், அந்த நாட்டுக்குத் தகுந்தவாறுள்ள பிரச்னை, இவைகளை எல்லாம் திராவிடத்திலே அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டுமென்று கூறுபவர்களை வடநாட்டு அடிமைகள் என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது? கோயங்காவைக் கொண்டு வந்து திராவிடத்திலே போட்டியிடச் சொன்னவர்களை வடநாட்டு அடிமை என்று கூறுவதிலே தவறு இருப்பதாகத் தெரியவில்லையே !
“திராவிடம் ஒரு தனிநாடு. இதை வேறு நாட்டு பிரச்னைகள், அமைப்புகள், அவைகளை மட்டும் வைத் துக் கொண்டு ஒரே கண்ணால், ஒரே கோணத்தில் பார்க் கக் கூடாது” என்றுதான் பலமுறை விளக்கங்கள் தந்து திராவிட நாட்டுப் பிரச்னையை மக்கள் முன்னே வைத்திருக்கிறோம்.
ஆனால் சிலர், தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால் ‘ என்ற தன்மையில் ஆகாதது, முடியாதது, குறுகிய நோக்கம், என்றெல்லாம் ஆரூடம் கணித்தார்களே தவிர, இன்னொரு நாட்டை உதாரணத்துக்கழைத்து நம் இதய கீதத்தை மறைக்க எண்ணினார்களே தவிர, தத்துவங்களுக்கு அடிமையாகி, நடைமுறைக்கு எதிரியாகிவிட்டார்களே தவிர, நம் பிரச்னையின் உட்கருத்தை அறியாதவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
எதிரிகளாகவே காட்டிக் கொண்டவர்கள் நேரடியாக எதிர்த்தார்கள் நம் பிரச்னையை! காட்டிக் கொள்ளாதவர்கள் மறைமுகமாக எதிர்த்தார்கள்! இத்தகைய எதிர்ப்புகளுக்கெல்லாம் முடிவு காணத்தான் தேர்தலிலே திராவிட நாடு பிரச்னையை ஏற்றவர்களை ஆதரித்தோம்!
தி.மு.க. ஒப்பந்த ஏட்டிலே கையெழுத்திட்டவர்களின் வெற்றி, திராவிடநாட்டுப் பிரச்னையின் முதல் வெற்றி ! மாடு ஓட்டி வந்தவர் மீண்டும் சிம்மாசனம் ஏறிவிட்டதால் நம் பிரச்னை சிறிது காலம் தள்ளப்பட்டிருக்கிறது என்று பொருள் ! சட்டசபையில், மக்கள் சபையில் நம் குரல் எழும்புகிறது. மாடோட்டி வந்தவர்கள் மிரண்டு போகிறார்கள் ! அது நமது வெற்றி !
“மாலை மணி” (30-12-1951)
கன்னையா-நம் கண்மணி
அன்றொரு நாள் மலேயா தூக்குமேடையிலே பெரியதொரு கொடுமையான ஏப்ப சப்தம் கேட்டது. ஆம், மலேயா சர்க்காரின் கோர வயிற்றுப் பசிக்கு இரையானான் தீரத் திராவிடன் கணபதி. தமிழகத்திலே- தஞ்சைத் தரணியிலே தவழ்ந்து விளையாடிய தங்கமணியை, மலேயா சுக்கல்சுக்கலாக உடைத்தெறிந்தது. திராவிடம் கதறியது. ‘தடுத்திடுக’ என்று தவித்தது. ஆளவந்தவர் கேளாக்காதினராயினர்.
கணபதி தீர்ந்தான். தீர்த்துக்கட்டியது மலேயா! சில வாரங்களுக்கு முன் லோகநாதன் என்ற திராவிடன் உலகத்தை விட்டு விரட்டப்பட்டான்.
இதோ இன்னொரு தீனி ! கன்னையா ! திராவிடத் திருவிளக்கு! அந்த ஜோதியை அணைத்துவிட தீர்மானித்து விட்டது மலேயா சர்க்கார்.
அந்த அடக்கு முறை தர்பாரின் முன்னே- ஆர்ப்பாட்ட அழிவு வேலைக்கு முன்னே- வெறியேறிய மரண மேடைக்கு முன்னே- இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறான் இந்நாட்டு இளைஞன் !
கன்னையா தமிழகத்திலிருந்து வறுமையால் விரட்டப்பட்ட பரம்பரை !
திருவரங்கத்தானுக்கு வெள்ளிப் படுக்கை- திருப்பதியானுக்கு வைரமுடி- தில்லை நடராசனுக்கு தங்க வீடு- இப்படி கல் முதலாளிகள் வாழ்ந்திடும் நாட்டில், வாழ முடியாத மனிதர்கள் வாட்டத்தைத் தோழனாகவும், வருத்தத்தை உறவாகவும் கொண்டு வேறுநாட்டுக்குப் பிழைப்பு தேடி ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது !
வடவர் இங்கு வந்து வளம் பெருக்கிக்கொள்கின்றனர். இங்கு வாடிடுபவர் பிறநாடு ஓடுகின்றனர் .
திராவிடம் பிரிந்திருந்தால், இந்தத் தேய்ந்த நிலை இருந்திடாது! !
கன்னையாவுக்காக உரத்தகுரல் எழுப்பியிருக்கும் தனியரசு!
ஏன், கன்னையாக்களை கதியற்றவர்களாக ஆக்கி யிருக்க தேவையில்லாத, திருப்தியான சூழ்நிலை அமைந்திருக்கும். ஆனால்…! அந்த ஆனால் தான் பெருமூச்சோடு கலந்து வருகிறது. அந்தப் பெருமூச்சைக் கவனிக்க வேண்டும், பிரியக் கூடாது என்போரின் பின்னிருந்து கலகம் மூட்டுபவர்கள் ! எல்லோருமே !
கன்னையா, தாயைக் காண சில தினங்களில் தமிழகம் வருவதாக எழுதியிருந்தாராம். அந்தக் கண் மணியின் கடிதத்தைக் கண்களிலே தாய் ஒத்திக்கொள்ளும் போதே, கன்னையா சாக வேண்டும் என்ற செய்தியும் தாயின் கரங்களில் குதித்து விட்டதாம்.
மாதாவின் மனோநிலை எப்படி இருக்கும் ! மைந்தன் ஒருவன்- தாயே என்பான்- தனலான நெஞ்சிலே குளிர் கொட்டுவான் – தங்க மொழி பேசுவான்- அங்க மெல்லாம் பூரிக்கும் என்றெல்லாம் ஆசைக் கனவுகள் எழுப்பிக் கொண்டிருந்த அன்னையின் கண்களிலே வழிவது வெறும் கண்ணீராக இருக்காதே! ரத்தக் கண்ணீராக அல்லவா இருக்கும் !
கன்னையாவின் தாய்- ஆம், நமது தாய்- அந்தத் தாயின் நெஞ்சத்திலே தீ ! தீ ! தீ !
அந்தத் தீயை அணைக்கப் படை திரளவேண்டும்.
இதைத் தீர்மானமாக்கி இருக்கிறோம் சென்னை மாநாட்டிலே!
அந்தத் தீர்மானம் திராவிடரின் ஆசையின் பிரதி பலிப்பு! திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆவலின் படப்பிடிப்பு!
மதிப்பிற்குரிய ‘ஜனசக்தி’ பத்திரிகையிலே கன்னையாவை விடுவிக்கும் முயற்சியில் நம்மையும் ஈடுபட வேண்டுமென்று கம்யூனிஸ்டுகள் அழைத்திருக்கிறார்கள்.
இது போன்ற காரியங்களிலே அழைக்காமலேயே ஈடுபடக்கூடிய அக்கரை கொண்டவர்கள் நாம்!
கன்னையாவை விடுவிப்பதற்கான நியாயமான போராட்டம் எதிலும் இறங்கக்கூடிய இலட்சிய உணர்ச்சி கொண்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
இப்போது மட்டுமல்ல; கணபதி தூக்கிலேற்றப் பட்ட போது, கயிற்றில் தொங்கிய கணபதிக்காக கண்ணீர் விட்டுக் கதறினோம். அதற்கு உடந்தையானவர்களைக் கண்டித்தோம்!
சாம்பசிவம் உயிரை மீட்கும் போரிலே நம் உரத்த குரலும் கலந்திருந்தது!
லோகநாதன் அழிக்கப்பட்டது பற்றி தென்னாட்டில் நடைபெறும் நமது பவனிகளிலே கண்டனக்குரல் எழுப்பி வருகிறோம்.
தேர்தல் உறவு ஏற்படவில்லையே என்ற காரணம் காட்டி, தி.மு. கழகத்தார், இம்மாதிரி கூட்டு முயற்சி களில் ஈடுபட மாட்டார்களோ என்ற சந்தேகம் தேவை இல்லை.
தேர்தல் உறவு – அடிப்படையற்ற உறவு- ஒப்பந்தமற்ற உறவு- திடீரென மறைந்து விடக்கூடிய, மாறிவிடக் கூடிய உறவு !
இது போன்ற அறப் போராட்ட உறவுகள் அழியாதவை ! அழுக்கில்லாதவை ! அசூசையின் பாற்படாதவை !.
ஆகவேதான், ‘ஜனசக்தி’யின் குரலோடு, கம்யூனிஸ்டுகளின் குரலோடு, சேர்ந்து குரல் எழுப்புவதற்கு முன்பே, நமது மாநில மாநாட்டில், கன்னையாவின் விடுதலையை விரும்பி குரல் எழுப்பினோம்.
இப்போது ‘ஜனசக்தி’யும் கூப்பிடுகிறது குரல் எழுப்ப!
கம்யூனிஸ்டு நண்பர்களுடன் கலந்து கன்னையாவின் உயிரை மீட்பதற்காக நடத்திடும் நியாயப் போர் முனைகளிலே தி. மு. கழகத்தின் அணி வகுப்பு முதலிடம் பெறும்.
அங்கே அண்ணாவின் பெரு முழக்கம் இருக்கும்.
கண்ணீர்த் துளிகளின் கர்ஜனை இருக்கும்.
“கன்னையா- நம் கண்மணி ” என்ற உரிமை முரசத்தோடு ” அறப்போர்ப் பிரகடனம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் தயங்காது! தயங்காது !! ” என்பதுதான் நமது குரல்! ”
மாலை மணி ” (4-1-1952)
சிங்கங்கள் தோற்று விட்ட களத்தில் சிறு நரிகளா !
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வளர்ந்து வரும் ஆதரவு கண்டு, எதிரிகள்- எலக்ஷன் வேட்டைக் காரர்கள் – ஏந்திப் பிழைப்பவர்கள்- மக்களை ஏமாளிகளாக ஆக்கி வைத்திருந்தோர்- மாறுவேடங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளனர். மனம் போனபடி வசைமாறி பொழிகின்றனர். ஆனால், நமது கொள்கைகள் யாராலும் தோற்கடிக்கப்பட முடியாதவை. சேதுப்பிள்ளைகள் நிற்கமுடியாத இடத்திலே இந்தச் செல்லாக்காசுகள் நடனமாட முயற்சிக்கின்றன. பாரதியார்கள் நிற்க முடியாத இடத்திலே இந்த பணவேட்டைக்காரர்கள் மச்சுவீடு கட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால், அந்த இடத்தை இம்மாதிரியான சில்லரைகளால் நெருங்கக் கூட முடியாதென்பதை கழகத்தின் வளர்ச்சி காட்டி நிற்கிறது. சீற்றம் பிறக்கவில்லை நண்பர்களே, சிரிப்புதான் வருகிறது! சிங்கங்களே தோற்றுவிட்ட களத்திலே சிறு நரிகள் வால்முறுக்குவதா? புலிகள் போரிட்டுப் பின்னடைந்த முனையிலே புழுக்கள் நெளிந்து காட்டுவதா?
சாதாரணமானவர்களல்ல – சங்கத் தமிழ் கற்றவர்கள்- ஆராய்ச்சிப் பெருமக்கள்- அறிவு நிறைந்த அண்ணல்கள்- அவர்களே எதிர்த்து நிற்கமுடியாத அளவுக்கு கொள்கை பலம் உள்ளவர்கள் நாம். குறைமதியினர் குறைகூறுகிறார்கள்- கூறட்டும்- அது அவர்களின் தொழில்!
பலாத்காரத்தில் ஒழித்துவிடலாம் இந்தப் படையை எனப் பகற்கனவு காணுகிறவர்களுக்கு அறிவிக்க ஆசைப்படுகிறோம். மதுரை மாநாடு இவர்களால் எரிக்கப்பட்ட நேரத்திலே மனம்கலங்கவில்லை நாம்! தூக்கிலே மாட்டிவிட்ட நேரத்திலும் துவக்கிய பணியை நீக்கி துவண்டுவிட மாட்டேன் என்று உறுதி கூறி பிணமாக ஊசலாட விடப்பட்ட உடையார்பாளையம் வேலாயுதத்தைக் கண்டும் உள்ளம் உடைந்து ஓடிவிடவில்லை நாம்! சேலத்தில் கண்ணையும் காலையும் பெயர்த்தார்கள், காந்தி பக்தர்கள். கலங்கிடவில்லை நாம்! தாலமுத்து நடராசனைப் பிணமாகத் திருப்பித் தந்தார்கள். தைரியமிழந்து விடவில்லை நாம்! ஆச்சாரியார் வந்த நேரம் – அதிகார வர்க்கம் அடக்கு முறை அம்புகளை வாரி இறைத்தது. அயரவில்லை நாம்! குன்றத்தூர் கொடுமை நடந்தது. கட்சி குப்பைமேடாகவில்லை; கோபுரமாகத்தான் உயர்ந்தது !
பரிகசிப்போர்— பலாத்காரத்தில் இறங்குவோர்- எங்கள் பழைய வரலாற்றை- நாங்கள் வளர்ந்த வரலாற்றை ஒரு முறை எண்ணிப்பார்க்கட்டும். முதல் இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர் பெரும்படை அழகிரிசாமி தலைமையில் புறப்பட்டு சென்னை நோக்கிச் செல் கிறது. செல்லும் வழியிலே ஒரு சிறு கிராமம். அகிம்சா வாதிகள் நிறைந்த இடம். செருப்புத் தோரணம் கட்டினார்கள் நமதியக்கத் தொண்டர்களை கேலிசெய்யும் முறையில்- அறப்போரை அவமதிக்கும் வகையில், ஆனால் தொண்டர்கள் தோரணத்தைக் கடந்து செல்லவில்லை. அழகிரி பேச ஆரம்பித்தார். மணிக் கணக்கிலே மாவீரனின் முழக்கம் நடைபெற்றது. தோரணம் கட்டிய தோழர்கள் துவண்டு போனார்கள். மன்னிப்புக் கேட்டார்கள். தோரணத்தை அவிழ்த்தார்கள். மாலை அணிவித்தார்கள். வழி அனுப்பி வைத்தார்கள். இது நடந்த நிகழ்ச்சி— கற்பனைச் சம்பவமல்ல !
ஆகவே, தூற்றுவோர் துதிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் தொண்டாற்றுகிறோம். சிறுமதியினர்தான் சீறுகிறார்கள் என்றால், கண்ணியமிக்க காமராஜர்களும் கனல் கக்குகிறார்களே என்றுதான் பரிதாபப்பட வேண்டியிருக்கிறது. மந்த மதியினர் சிலர் தான் பேசுகிறார்களே என்றால், மதிப்புமிக்க மந்திரிமார்களும் கச்சைக் கட்டுகிறார்களே என்றுதான் வருந்த வேண்டி யிருக்கிறது. மந்திரிமார்களின் பேச்சிலே எவ்வளவு மட்டரகமான வார்த்தைகள் ! வரலாமா? மதிப்பிற்குரியவர்கள் அல்லவா? மாகாணத்தை ஆளுகிறவர்கள் அல்லவா ?
“திராவிடர் இயக்கம் காங்கிரசின் விரோதி! காங்கிரஸ் எது செய்தாலும் எதிர்க்கும் துரோகக் கும்பல்!” என்று எங்களுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. வாதத்திற்காக அக்கூற்றை உண்மையென ஒப்புக் கொண்டாலும், அப்போதும் நாங்கள் கட்சிப் பெயரை ‘காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணி’ என்று வைத்துக் கொண்டிருக்க வில்லையே! உணரட்டும் உண்மை உணராத உதவாக்கரையினர், எங்களது உயர்ந்த பண்புகளை, என்று இதைக் கூறுகிறேன்
ஒரு புறத்திலே உண்மை அறியாதவர் – ஒரு புறத் திலே ஊர் கெடுப்போர்- இன்னொரு புறத்திலே எகத்தாளம் பேசுவோர்- வேறொரு புறத்திலே வேதனை தரும் சர்க்கார்— இதற்கிடையே திராவிட முன்னேற்றக் கழகம் வளர்கிறது. ஆனால், இந்த எதிர்ப்பு உணர்ச்சி கழகத்துடன் இறுதிப் போர் நடத்த முன்வந்துள்ளது. அதன் விளைவுதான் ஆங்காங்கு எழுப்பப் படும் சிறு பூசல்கள். அண்ணாவை சிறைக்கு அனுப்பியது. ஆசைத்தம்பியை வாட்டியது. ஆச்சாரியார் வந்தபோது அடிதடி நடத்தியது. குன்றத்தூர் செய்து காட்டியது. நாடெல்லாம் 144 போடுவது, நாரண மங்கலம் நடத்திக் காட்டுவது என்ற விதத்தில் பலப் பல :-
சட்டத்தை மீறும் அளவுக்குக் கொண்டு வரப்பட்டோம். எந்த சட்டத்தை ? பேச்சுரிமை பறிக்கும் சட்டத்தை! எழுத்துரிமை பறிக்கும் சட்டத்தை !
144-களை மீறினோம்; இன்னும் மீறுவோம். புத்தகத் தடையை மீறினோம்; இன்னும் மீறுவோம். நாடகத்தை மீறினோம்; இன்னும் மீறுவோம். தடை மீறுவதிலேகூட வீரப்போர் ஒரு புறம்–நகைச்சுவைப்போர் ஒரு புறம் நடைபெறும்!
கற்பனை செய்து பாருங்கள், 144 போடுகிற ஊரிலே கல்யாண ஊர்வலமும், பிரேத ஊர்வலமும் மட்டும் செல்லலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்படும்போது, என்று நமது நண்பர் நடராசனையும், அவரது மனைவியையும் காரிலே உட்காரவைத்து, ஊர்வலம் நடத்தி-“நடராசன் வாழ்க! திராவிடநாடு திராவிடருக்கே!” முழக்கமிட்டுச் சென்றால் – போலீஸ் அதிகாரி குறுக்கிட்டால்-‘நடராசனுக்குத் திருமணம் ! அல்லது சஷ்டியப்தப் பூர்த்தி!’ என்று சொன்னால் எப்படி இருக்கும் ! நகைச் சுவைப்போர் ‘நம்பர்’ ஒன்று இது!
இன்னுமொரு கற்பனை-ஒரு பிரேத ஊர்வலம். கருப்புக் கொடிகள் ஆயிரம். “வட நாட்டு ஏகாதிபத்யம் ஒழிக!” என்ற முழக்கம் ! ஸ்ரீமான் தேசீய அய்யங்கார் மாண்டுவிட்டார் என்ற செய்தி ! எப்படி இருக்கும் இந்த நகைச்சுவை! இப்படி நகைச்சுவைப் போர்கள் நாடெங்கிலும் நடைபெறலாம்.
நாட்டுக்குழைக்கும் வீரர்களே! நகைச்சுவைப் போர் மட்டுமல்ல – நாடாள வந்தவர்களின் ஈட்டி முனைகளையும் – துப்பாக்கிகளையும் – குதிரையடிகளையும் தாங்கிக்கொள்ளும் இதயத்துடன் அறப்போர் அணிவகுப்பில் வந்துசேர அழைக்கிறேன், தாலமுத்து, நடராசனின் கல்லறைகளின் சாட்சியாக! – அழகிரிசாமிக்கு தஞ்சையிலே எழுந்துள்ள கற்றூணின் சாட்சியாக! வருக, வருக, வாலிபவீரர்களே ! தொங்கும் நரம்பின் தூள்களை – பொட்டுப்பூச்சிகளை-புன்மைத் தேரைகளை ‘அழு! இளி! அஞ்சு! குனி! பிதற்று!’ என்று எச்சரித்திட எந்நாட்டுத் தோழர்களே! எழுக, வருக!
“மாலை மணி” (12–2–1950)
பூம்புகார் மாநாடு
கம்பராமாயணம் மட்டும் கவிதைத் தேனாறு, கம்பன் ஒருவன்தான் கவிச்சக்கரவர்த்தி என்றெல்லாம் பேசப்பட்ட நிலைமை கரைய ஆரம்பித்திருக்கிறது, இப்போது. கம்பனுக்கு மட்டுமே மாலை அணிவித்து மகிழ்ந்தவர்கள், இளங்கோவடிகளுக்கும் மதிப்புத்தர முன்வந்திருக்கிறார்கள். கம்பன் மாநாடுதான் கவிதை மாநாடு என்று கருதிக் கிடந்தவர்கள் சிலப்பதிகார மாநாடு நடத்துகிற அளவுக்கு பெருநோக்கம் பெற்றிருக்கிறார்கள்.
திராவிடத்திலே அரசியலில் மட்டுமின்றி, சமுதாயத்தில் மட்டுமின்றி, இலக்கியத் துறையிலும் புரட்சி செய்தவர்கள் அறிவியக்கத்தாராகிய நாம் என்பதை யாரும் மறுக்க முடியாது. கம்பனுக்கு கோவில் கட்டி அவனைக் கடவுளாக வணங்குகிற அளவுக்கு முதிர்ந்து போன கம்பராமாயண மூடநம்பிக்கையை எதிர்ப்புக் கருத்துகள் முறியடித்தன. கம்பனை நாம் குறைகூறிய நேரத்திலே நம்மீது வீசப்பட்ட கணைகள் கொஞ்சமல்ல. கொடுஞ் சொற்களால் அர்ச்சிக்கப் பட்டோம். “செவிச் சுவை உணரா வாயுணர்வின் மாக்கள்” என்று சுடு சொல்லால் தாக்கப்பட்டோம். ஆயினும் வெற்றி நமக்குத்தான் கிடைத்தது. நம் நோக்கம் கம்பராமாயண நூலே நாட்டில் கிடைக்கமுடியாது செய்யவேண்டும் என்பதல்ல. கம்பன் செய்த தவறை நாட்டிலே எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதுதான் நம் குறிக்கோள் கம்பராமாயணம் திராவிடரை அரக்கர்கள், குரங்குகள் என்று சித் தரிக்கும் சிலந்திக்கூடு. ஆகவே அதை வெறுக்க வேண்டு மென்கிறோம்.அடிப்படையான வெறுப்பே அதுதான். ஆரிய ராமனை கம்பன் கடவுள் என்று கூறிவைத்தான்.
அந்தக் கயமைத் தனத்தைக் கண்டித்தோம். அப்படிப்பட்ட ஒரு நூல் திராவிடரின் பூஜைக்குரிய நூலா யிருப்பது தன்மானமற்ற செயல் என்று விளக்கினோம். காலத்துக் கேற்றவாறு கம்பராமாயணத்திலே உள்ள கருத்துக்களை அனுமதிக்கத்தான் வேண்டுமென்றார்கள், கம்பதாசர்கள் ! நாமோ அவைகளை ஆட்சேபிக்கவில்லை. ஒரு இனத்தையே இழிவுபடுத்தும் முறையில் கம்பன் திராவிடரைக் காட்டிக் கொடுத்து இருக்கிறான் என்பதே நமது தலையாயக் குற்றச்சாட்டு. அதைத்தான் எதிர்த்துப் போராடினர் புலவர் பலர். அந்த நேரத்திலேகூட நாம் கூறினோம் – நாங்கள் இலக்கிய விரோதிகள் அல்ல, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் அக்காலக் கருத்துகள் பல கொண்டனவாயினும் திராவிடரை உயர்த்திக் காட்டியிருக்கின்றன, அவைகளை நாங்கள் வெறுப்பதில்லை என்று விளக்கியிருக்கிறோம். சிலப்பதிகாரம் போன்ற தமிழரின் செல்வங்கள் புதைபட்டுக்கிடக்கும்போது தமிழனை அரக்கன் எனக்கூறும் கம்பராமாயணத்துக்கேன் விழா நடத்துகிறார்கள் வீணர்கள் என்று வினவியதுண்டு. நாம் அப்படி வினவியது சிலப்பதிகாரத்தின் மீது நமக்கேற்பட்ட பக்தியல்ல; பகவத் உணர்ச்சியு மல்ல; அல்லது அதிலே காணப்படும் அளவுக்கு மீறிய கற்பனைச் செய்திகளல்ல; தமிழர்களுடைய வாழ்க்கை முறை சிலப்பதிகார காலத்தில் எப்படி இருந்தது என்பதை விளக்கும் நூலாக சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறது என்பதற்காகவும், வடநாட்டாரின் முடி நெறித்த திராவிட வீரர்களின் சிறப்பு காணப்படுகிறது அதிலே என்கிற காரணத்தாலும், நீதிக்காக வாழ்ந்த திராவிட மன்னர்களின் பெருமை கூறப்படுகிறது அதிலே என்கிற ஆர்வத்தாலும், கண்ணகி என்கிற பாத்திரம் கற்பனைக்கு எட்டாத செயல்களை செய்தாள் என்பதை நம்பாவிட்டாலும், அக்காலப் பெண்களின் துணிவு சித்தரிக்கப்பட்டுள்ள தன்மையை அறிந்து கொள்ளுகிற வாய்ப்பு அதிலே இருப்பதாலும், சேர, சோழ, பாண்டியன் – மூவருடைய ஆட்சி பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் அரியநூல் என்ற காரணத்தாலும் சிலப்பதிகாரத்தை நாம் ஆதரிக்கிறோமே தவிர வேறில்லை.
திருக்குறளை ஏன் போற்றுகிறோம்? தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்பதற்காகவா ? இல்லை… அக்காலத் தமிழகத்தைப் பற்றிய நல்லதொரு படப்பிடிப்பு திருக்குறள் என்பதாலும், திராவிடர் நீதிமுறைகள் குறிக்கப்பட்டிருப்பதாலுமே குறளுக்கு விழாஎடுக்கிறோம். குறைகளே இல்லாதது அல்ல குறள். அந்தக் குறைகள் அக்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்கிற ஒரே காரணத்தில் அடிப்பட்டுப் போகின்றன. வரப்போகும் காலங்களிலே இன்றைக்கு எழுதப்படுகிற புரட்சிக் கருத்துகள் கூட பழமை என்று கூறப்படலாம்.
பொதுவாக குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலே திராவிடரின் பெருமை ஒளிவிடுகிறது. ஆகவே பாராட்டுகிறோம்! கம்பன் திராவிடரை இழிமக்களாக்கி வைத்தான். ஆகவே எதிர்த்தோம்!
நம்முடைய பேச்சுகளுக்கு சக்தி உண்டு என்பதைத் தான் கம்பனையே கட்டியணைத்திருந்தவர்கள் சிலப்பதிகாரத்துக்கும் மாநாடு நடத்த முன்வந்திருப்பது காட்டுகிறது.
ஆனால் ஒன்று, கம்பனைப்போல ஆக்கிவிடக்கூடாது! காவிரிப்பூம்பட்டிணத்திலே கூடிய மகாநாட்டில் இந்திர விழாகொண்டாடும்படியாக உபதேசம் செய்தார் ஆர். கே. சண்முகனார். அந்த மூடநம்பிக்கைகளை வளர்ப்பதற்காக இருக்கக்கூடாது சிலப்பதிகார மாகாநாடு.
“கொங்கணர் கலிங்கர் கொடுங்கருநாடர்
பங்களர் கங்கர் பல்வேற்கட்டியர்
வடவாரியரோடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கை பேரியாற்றுக் கடும் புனனீத்தம்
எங்கோ மகளை வாட்டிய வந்நாள்
ஆரியமன்ன ரீரைஞ் ஞூற்றுவர்க்கும்
ஒரு நீயாகிய செருவெங்கள் விழித்துக்
கண்டது ஒடுங்கட் கூற்றம்… ‘
என்பன போன்ற செய்யுட்களை விளக்கி திராவிடரின் பண்டைய வீரத்தை-நீதியை-நினைவுபடுத்துவதற்கு பயன்பட வேண்டும். பூம்புகாரில் கூடி மாநாடு நடத்தியவர்கள் மட்டுமே சிலப்பதிகாரத்துக்கு உரியவர்களல்ல. சிலப்பதிகார மாநாட்டைப் பற்றி அவர்களை சிந்திக்கத் தூண்டியதே நாம்தான். பூம்புகார் மாநாடு பூரிப்பு தந்தது என்றாலும் சண்முகம் போன்றவர்கள் ‘இந்திரவிழா’ போன்ற புது மூடத்தனங்களை வளர்த்துவிடக்கூடாதே என்று அஞ்சுகிறோம்.
மாலை மணி” (20-6-1951)
ஐக்ய மாகாணம் அருமையான பாடம்
“திராவிடநாடு திராவிடருக்கே !” இந்த முழக்கம் காதிலே விழுந்ததோ இல்லையோ- துடித்தெழுந்து “யாரடா பாவி! பிரிவினைப் பேயனே! இது ஒரே நாடு – ஒரே மக்கள்!” என்று உரத்தக்குரலில் பேசிடுவார்கள் பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் புரிகிறவர்கள். திராவிடம் தனித்து வாழ்வதற்கான சூழ்நிலைகளையும் நாம் பலமுறை சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். சென்னை மாகாணம் சீரழிக்கப்படுகிறது – வடக்கு மாகாணங்கள் வளம்பெறுகின்றன என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.மற்ற மாகாணங்களின் எடுபிடியால் ஏங்கித் தவிக்கிறது சென்னை என்பதை எத்தனையோ நிகழ்ச்சிகள் காட்டியிருக்கின்றன. அவைகளை உணர்ந்தும்கூட உண்மையை மறைக்கும் உத்தமர்கள் உதைத்த காலுக்கு முத்தமிடும் வீரர்களாகவே காட்சி தருகிறார்கள். நாம் தரும் செய்திகள் அவர்களால் அலட்சியப் படுத்தப் பட்டாலும்கூட அவர்களுடைய ஏமாற்று மொழிகளுக்கு இறையானவர்களின் கண்களையாவது கட்டாயம்திறக்குமென்று நம்புகிறோம்.
தென்னாட்டுக்குத் தேவையான உளுந்து போன்ற உணவு தானியங்கள் கிழக்கு பஞ்சாப், ஐக்கிய மாகாணம், ராஜஸ்தான் முதலிய இடங்களிலிருந்துதான் கிடைக்கின்றன. அதில் குறிப்பிடக்கூடியது ஐக்கிய மாகாணம்தான். அது, மேற்சொன்ன பொருள்களை வெளிமாகாணங்களுக்குச் செல்வதை தடைசெய்திருக் கிறது. கட்டுப்பாடு, விலை நிர்ணயம் ஆகிய புது உத்தரவுகளின் மூலம்!
ஐக்கிய மாகாணம் இந்திய யூனியனைச் சேர்ந்தது தான்; நேரு பிறந்த மாகாணம் கூட. ஆனால், அது பிற மாகாணங்களைக் கேவலப்படுத்தும் நிலையில் – குறிப்பா கச் சென்னையை மட்டமாக மதித்து இம்மாதிரி ஒரு உத்தரவை வீசியிருக்கிறது. முன்பொரு தடவை இதே மாகாணம் சென்னைக்கு செய்த பெரும் பிழையை யாரும் மறந்திருக்க முடியாது. அரிசி கேட்டது ஐக்கிய மாகாணத்தை சென்னை சர்க்கார். அந்த மாகாணம் சென்னைக்கு அரிசி அனுப்பியது. எப்படி? நியாயமாகத் தரவேண்டிய விலைக்கு அதிகமாக ஒரு கோடி ரூபாய் சென்னையிடமிருந்து வாங்கிக்கொண்டது. அதிக விலை ஒரு கோடி ரூபாயை அளிப்பதற்கு முடியாமல் அவதிப்பட்ட சென்னை அரசாங்கம் ரேஷன் கடைகளில் விற்கப் படும் அரிசிக்கு படி ஒன்றுக்கு ஒரு பைசா உயர்த்தி மக்களிடமிருந்து கிடைத்த ஒரு கோடி ரூபாயை ஐக்கிய மாகாணத்தின் திருவடிகளிலே வைத்து தெண்டனிட் டது. சென்னையிடம் ஒரு கோடி கொள்ளையடித்த கொடுமைபற்றி ஐக்கிய மாகாணத்தை டில்லி சர்க்கார் எதுவும் கேட்கவில்லை. இதேபோல சர்க்கரையிலும் ஒரு சங்கடத்தை உண்டுபண்ணி சென்னையைத் தவிக்கவிட்டது அந்த மாகாணம்தான்.
மாகாணங்கள் சகோதர பாசம் கொண்டவை! மாகாண உணர்ச்சிகள் கூடாது. ஒரே நாடு – ஒரே மக்கள்’ என்று கூறுகிறவர்கள் ஐக்கிய மாகாணத்தின் இந்த அகம்பாவ உணர்ச்சிக்கு என்ன அர்த்தம் சொல்லப் போகிறார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. நேருவின் மாகாணம் – நேர்மையாளர் பிறந்த மாகாணம் – இப்படி நெறிதவறி வெறிபிடித்து அலைகிறது. ஆனால் நேருவும், அவர் நிழல்களும் ‘ஒரே நாடு – ஒரே மக்கள் என்ற உபதேசத்தை மறக்கவில்லை. .
ஐக்கிய மாகாணத்திற்கிருக்கிற மாகாணப் பற்றை நாம் மறுக்கவில்லை. ஆனால் சென்னைக்கு அந்த மாகாண உணர்ச்சி கூடாது, அது மகாபாவம் என்கிறார்களே, அந்த மட்டரகக் கருத்தைத்தான் மண்டையிலடிக்க வேண்டு மென்கிறோம்.
ஒருகோடி கொள்ளை போயிற்று; டில்லி கேட்க வில்லை. தானியங்களுக்குத் தடைபோட்டது; டில்லி பேசாமடந்தையாக இருக்கிறது. இன்னும் ‘ஒரே நாடு’ என்ற “கூச்சல் மட்டும் மறையவில்லை. வடநாட்டுத் தலைவர்களிலிருந்து அவர்களுக்கு வால்பிடிக்கும் தென்னாட்டுத் தவளைகள், குட்டிச் சுவற்றுக் குயில்கள், சந்து முனை சிந்து நடைக்காரர்கள் வரையிலே திராவிடநாட்டுப் பிரிவினையை எதிர்க்கிறார்கள். திராவிட இயக்கத்தின் மீது எதிர்ப் பாய்ச்சல் நடத்துகிறார்கள். ஐக்கிய மாகாணம் தரும் பாடத்தை அவர்கள் உணர மறுக்கலாம். ஆனால் திராவிட மக்கள் அந்தப் பாடம் தரும் பாதையிலே பயணம் நடத்தவேண்டும். திராவிடப் பிரிவினை எவ்வளவு தேவையானது என்பதை இடித்துச் சொல்வதுதான் ஐக்கிய மாகாணத்து இந்தப் புது உத்தரவு.
“ மாலை மணி ” (6-6-1951)
கொந்தளிக்கும் கடல்
நாட்டிலே குமுறிக் கொண்டிருந்த தேர்தல் புயல் அனேகமாக ஓய்ந்து விட்டது. புது நிலைக்கான முயற்சிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கின்றன. ஐந்தாண்டு காலம் அடக்குமுறை பாசீச ஆட்சிநடத்தி வந்தவர்கள் பொதுமக்களின் தீர்ப்பைப் பரிசாகப் பெற்று தலைதாழ்ந்திருக்கிறார்கள் !
திராவிட முன்னேற்றக் கழகத்தார் துணிவிருந்தால் தேர்தலில் நின்று பார்க்கட்டுமே என்று தோள்தட்டினார் காமராசர். நேரடியாகத் தேர் தலில் கலந்து கொள்ளாமலேயே, குறுகிய காலத்தில் ஆதரவை மட்டும் அளித்து, காங்கிரசை முறியடித்து வெற்றிக்கொடி பிடிக்கும் வகையில் ஐம்பது தோழர்களை திராவிட முன்னேற்றக் கழகம் உலவவிட்டிருப்பது கண்டு “தோற்றேன், தோற்றேன்” என்று முகாரி பாடுகிறார் இப்போது!
சிறையிலே கொலைச் சிந்தும், வீதியிலே பிணமும், வேடிக்கை விருத்தங்களாக ஆகிவிட்டகாங்கிரஸ் கொலுமண்டபத்திலே இடி விழுந்துவிட்டது. அதுவும் பேரிடி!
சர்வாதிகாரிகள் பலர், காலடியில் மக்களைத் துவைத்து வாழ்ந்த நேரத்தில் அவர்களை வீழ்த்திட புரட்சிகள் உருவாயின. சர்வாதிகாரிகளின் தலைகள் உருட்டப்பட்டன.
அரசியலிலே நாகரீகம் நல்ல அளவுக்கு அமையாத நேரமது!
கொடியவர்க்குத் தண்டனை கொலை – குடும்பத்தோடு கொலை – கூட்டோடு கொலை – என்ற விதத்திலே தரப்பட்ட காலம்.
பழிவாங்கும் உணர்ச்சி பலாத்காரத்தோடு இணைந்திருந்த நேரம். ஆகவே இத்தகைய தண்டனைகள் குற்றமாகக்கூட கருதப்படாத காலமது.
இன்றோ அரசியலிலே நாகரீகம் தேவைப்படுகிறது. காட்டுமிராண்டித்தனம் -பேய்க் கூத்து – இவைபோன்ற தாண்டவங்கள் கூடாது என்கின்ற நிலை வளர்ந்திருக் கிறது. இப்போதே காந்தியாரும், லியாகத்தும், அங்சானும் மற்றும் சிலரும் கொலை செய்யப்படுகிற அளவுக்கு அரசியல் நேர்மை இருந்திருக்கிறதென்றால், அரசியல் நாகரீகம் அற்ற அந்த நாட்களிலே நடைபெற்ற புரட்சிகளிலே எதிரிகள் – அதுவும் கொடியவர்கள் கொல்லப் படுவதிலே ஆச்சரியம் என்ன இருக்க முடியும்!
அந்நாள் கொடுங்கோலர் கொலையை வெகுமதியாக அடைந்தனர்.
இந்நாள் கொடுங்கோலர் தோல்வியை வெகுமானமாகப் பெறுகின்றனர்; யெற்றனர்.
அந்நாள் கொடுங்கோலனுக்கு எதிரே வேட்டுமுழக்கம்!
இந்நாள் ஓட்டுச் சீட்டு !
இப்படி மாறியிருக்கிறது மக்களின் தீர்ப்பு முறை !
அந்தத் தீர்ப்பு முறையிலேதான் மக்கள் மன்றத்திலே குற்றவாளியாக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தவர்கள் பலர் வீழ்த்தப்பட்டனர்; வெற்றிகரமாக வீழ்த்தப் பட்டனர்.
நமது இதய தாகம் ஓரளவு அடங்கிவிட்டது, நாட்டைக் காடாக்கியவர்கள் நலிவுற்றது கண்டு !
கள்ளிக் காட்டை அழித்து விடுவது மட்டும் நமது வேலையல்லவே! கள்ளி இருந்த இடத்திலே பள்ளி அமைப்பது அல்லவா நமது லட்சியம்; இதயகீதம்; எல்லாம்!
காங்கிரசை ஒழித்துக் கட்டுவதை மட்டும் லட்சியமாகக் கொண்டிருந்தால் தேர்தலின்போது ஆதரவு கேட்டவர்களிடம் திராவிட நாட்டுப் பிரச்னையை முக்கியமாக வைத்திருக்காது, தி. மு. கழகம்!
தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் கொள்கை தி.மு.கழகத்திடம் இல்லாத காரணத்தால்தான் திராவிடநாட்டுப் பிரச்னையை உயிர்ப் பிரச்னையாக – அடிப்படைப் பிரச்னையாக தேர்தல் காலத்திலும் அனுஷ் டித்து வந்தது தி.மு. கழகம் !
ஏசல் – ஏளனம்-கிண்டல்-கேலி-கண்டனம் இவைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் லட்சியம் ஒன்றையே முன்னிருத்தி தேர்தலில் தன் பிரசாரத்தைச் செய்தது தி.மு. கழகம் !
கிராமங்களிலே-பட்டி தொட்டிகளிலே-இதுவரை கேள்விப்பட்டிராத குப்பங்களிலே-தேர்தல் பிரசாரத் திற்காக தி.மு.க. வீரர்கள் சென்றபோது திராவிடப் பிரிவினை முழக்கத்தை மக்கள் மனதிலே பதியவைத்திடத் தவறவில்லை.
தன் இலட்சியத்தைப் பரப்பிடத் தேர்தலையும் ஒரு சந்தர்ப்பமாக தி.மு.க. கருதியது. அப்படிக் கருதியதிலே வெற்றியும் பெற்றது.
ஆதரவு பெற்றவர்கள்- தி.மு.க. ஒப்பந்த ஏட்டிலே கையெழுத்திட்டவர்கள்- திராவிட நாட்டை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கைக் கொண்டு அலையவில்லை நாம். நமது போராட்டத்திற்கான பல ஆயுதங்களிலே சட்டசபை, மக்கள் சபையிலே எழும் குரலையும் ஒரு ஆயுதமாகக் கருதுகிறோம். லட்சியம் என்பது கல்லால் அடித்தவுடன் கீழே விழுகிற மாங்காய் அல்ல! மாங்காய் கூட குறிதவறினால் கீழே விழாது.
எந்த நாட்டு அரசியல் சரித்திரத்தை எடுத்தாலும், லட்சியப் போராட்டத்திலே முதல் மோதுதலிலேயே வெற்றி பெற்றுவிடவில்லை. ரஷ்ய நாட்டுப் புரட்சி ஒரே நாளிலே முடிந்துவிடவில்லை. சீனாவின் புதுவாழ்வு நினைத்தவுடன் கிடைத்துவிடவில்லை. இந்தியத் துணைக் கண்டம் சுதந்திரப் போராட்டத்தை ஐம்பது வருடங்கள் நடத்தியிருக்கிறது.
அதுமட்டுமல்ல; வெள்ளையன் ஆட்சி நடைபெறும் போது அமைந்த காங்கிரஸ் மந்திரிசபைகள் விடுதலைக்கான குரலை எழுப்பியதே தவிர, அப்போதே சுதந்திரத்தை மூட்டைக் கட்டிக்கொண்டு எடுத்து வந்து மக்கள் கையிலே கொடுத்துவிடவில்லை. இவை எல்லாம் அரசியலிலே அப்பாவிகளாய் இருப்பவர்கள்கூட அறிந்து கொள்ளக்கூடிய விஷயம்தான்.
வெளியிலே நாம் நடத்த இருக்கும் திராவிடப் பிரிவினைப் போராட்டத்திற்கு சட்டசபைகளிலும் – மக்கள் சபைகளிலும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும் என்று நிபந்தனை கேட்டோம். அப்படி நிபந்தனை தந்தவர்களை மட்டும் திராவிட நாட்டுப் பிரச்னை நம்பியிருக்கிறது என்று அர்த்தமல்ல; நிபந்தனை கேட்கிற அளவுக்கு கழகம் வளர்ந்திருக்கிறது என்றுதான் அர்த்தம்!
இதைப் புரிந்துகொண்டுதான் விஷமிகள் விஷத்தை வாரி இறைக்கிறார்கள்; புரியாதவர் போலவும் நடிக்கிறார்கள்.
பொறாமையின் விளைவுதான் அவைகள் என்பதை உணர்ந்துகொண்டு செயலாற்றிடப் புறப்பட வேண்டும் திராவிடக் காளையர்.
நாடெங்கும் திராவிட நாதம் பரப்பிட நல்லதோர் வாய்ப்பாக அமைந்தது கடந்துபோன தேர்தல். தேர்தல் முடிந்துவிட்டது; தேர்தலுடன் நம் பிரச்னைகள் முடிந்துவிடவில்லை. திராவிடநாடு கிடைக்கும்வரையில், அப்படிக் கிடைத்த திராவிடத்திலே சமத்துவம் கொழிக்கும் வழி இருக்கும்வரையில், வகுக்கப்பட்ட சமத்துவம் வகையோடு வாழ்ந்திட பாதுகாத்திடும் பணியிருக்கும் வரையில் நம் பிரச்னைகள் முடிந்துவிடாது. நம் இலட்சியக் குரல் முடிந்துவிடாது.
அடுத்து அமையப் போகும் மந்திரிசபை யாருடை யதாக இருந்தாலும், எந்தக் கட்சியுடையதாக இருந்தாலும், திராவிடத்தை டெல்லியிலிருந்து வெட்டி எடுக்கும் வீரப் போராட்டத்திலே தி. மு. கழகத்தார் குதிக்கத்தான் போகிறார்கள்.
டில்லியின் கொடுமைகளை, டில்லியின் ஏகாதிபத்தியத்தை, திராவிடம் இனியும் வளரவிட எண்ணவில்லை.
ஆகவேதான், திராவிடர், நாட்டுப் பிரிவினைப் போரிலே இன்னும் தீவிரமாக ஈடுபட இருக்கிறார்கள். அதற்கு சட்டசபையிலே யிருந்தும் நமக்கு ஆதரவுக் குரல் எழும்பும். அது டில்லியிலேதான் எதிரொலிக்கும். அப்படிக் கிளம்புகிற குரலை அடக்கிடும் போக்கினர் ஆட்சிபீடத்திலே இருந்தால் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை திராவிடர் எழுச்சிக் கடல்!
அந்தக் கடலின் கொந்தளிப்பு, டில்லி மூலவர்களை மூழ்கடிக்கும்! டில்லி தாசர்களை விரட்டி அடிக்கும் !
பலரை பலி கொடுத்து வளர்த்த சொல் திராவிடம்! வேலாயுதம், தாளமுத்து, நடராசன், அழகிரி, செல்வம், நெல்லிக்குப்பம் மஜீத், சென்னை பாண்டியன் இப்படி பலப் பலர் கடைசி மூச்சை ‘திராவிடம்’ என்ற மூச்சாக மாற்றிவிட்டு மறைந்திருக்கிறார்கள் !
அந்த வீரர்பெருந்தகைகளின் திருவுருவத்தை நெஞ்சிலே ஏந்தி-“திராவிடநாடு திராவிடருக்கே !” என்ற முழக்கத்தை விண்ணதிர – மண்ணதிர – வீண ரின் விழி அதிர எழுப்பி, “அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் இடுகாடு!” என்ற உறுதியுடன் நடந்திடுவோம்!
திராவிட நாடு
திராவிடருக்கே!
“மாலை மணி” (4-1-1951)
“கலை”
கலை என்பது இயல், இசை, நாடகம் மட்டுமல்ல; எல்லா துறைகளிலும் கலையைக் காணலாம்.
கலை என்பது இன்னதென்றே மக்களுக்கு விளங்காதிருந்த காலமும் உண்டு. சுமார் 15 ஆண்டுகளாகத் தான் கலையைப் பற்றி நாட்டில் பேசப்பட்டுவருகிறது. இதற்குக் காரணம் நமது அறிஞர் அண்ணா அவர்களே யாகும்.
ஒரு நாடோ, மக்களோ, மக்களின் சுகபோகங்களோ நன்றாக வளர வேண்டுமானால், வளர்ந்திருக்கிறது என்று கூற வேண்டுமானால், அது கலையினால் தான் என்று நிச்சயமாகக் கூறலாம். அண்ணா அவர்கள் மேடையில் தோன்றி பேச ஆரம்பித்த பிறகு தான் பேச்சின் இனிமையை மக்கள் சுவைக்க முற்பட்டார்கள்.
அதன் பிறகுதான் பேச்சும் ஒரு கலை என்பது எல்லோருக்கும் தெள்ளத்தெளிய தெரியலாயிற்று. அது மட்டுமல்ல; “கலை” என்ற சொல்லுக்கே ஒரு பெருமையும் ஏற்பட்டது. இப்போது மூலை முடுக்குகளிலும், பட்டிதொட்டிகளிலும் கலை விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆக, நாட்டின் நலன் கருதிய நாங்கள், கலைக்கு ஒரு தனிச்சிறப்பைத் தேடிக்கொடுத்த பிறகு சில்லுண்டிகளும், சில்லரைகளும், சின்னது பெரியதுகளும் எங்களை கலை விரோதிகள் என்று கூறுகிறார்கள். எப்படி நாங்கள் கலைக்கு விரோதிகளாவோம்?
பேச்சிலே ஒரு புதுமையை உண்டாக்கினோம்; நாடகத்திலே ஒரு புரட்சியைக் கண்டோம்; இசையிலே ஒரு இயற்கை இன்பத்தைப் புகுத்தினோம்; இதற்காகவா நாங்கள் கலை விரோதிகள் ? பழமையை ஒழித்து, அறிவிலே ஒரு புதுமை காண்பது தவறா? இல்லையே! அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு என்பதை மக்கள் நன்றாகத் தெரிந்து கொண்டனரே! மக்கள் காண்பதும் கேட்பதும் பகுத்தறிவுப் புரட்சியாயிற்றே! கிருஷ்ணலீலா, ஹரிச்சந்திரா, சம்பூர்ண ராமாயணம் போன்ற நாடகங்களுக்குத்தான் அந்த நாட்களில் கூட்டம் வரும் அது ஒழிந்து, அறிவு வளர்ச்சிக்கான பகுத்தறிவு நாடகங்களை அல்லவா மக்கள் இன்று விரும்புகின்றார்கள். அன்று ஹரிச்சந்திரா நாடகம் என்றால், இன்று அதற்குப் பதில் அண்ணா ‘சந்திரமோகன்’ நாடகம் நடத்திக் காண்பிக் கிறார். அன்று மகாபாரதம் மிகமிக நன்றாக இருக்கிறது என்றால், இன்று ராமசாமியின் நாடகம் மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு இழுத்துச் செல்கிறது. அந்தப் புரட்சியைக் கண்ட நாங்களா கலைவிரோதிகள்? “ராமாயணம் இழிவைக் கற்பிக்கிறது. வேண்டாம்” என்கிறோம். சிலப்பதிகாரமும் ராமாயணத்தைப் போல் பழைமையானதுதான். அதை ஏன் நாங்கள் வெறுக்கவில்லை ? அதுமட்டுமல்ல; சங்ககால நூல் சிலவற்றையும் நாங்கள் வெறுப்பதற்குக் காரணம் உண்டு. உதாரணத்திற்கு ஒன்று கூறுகிறேன். சங்க நூலில் உள்ளது; நான் கற்பனை செய்ததல்ல. ஒரு வேடன் வேட்டைக்குச் செல்கிறான். அங்கு ஒரு சிறுத்தையைக் கண்டான். உடனே வில்லில் நாணேற்றி அம்பை எய்கிறான். அம்பு சிறுத்தையின் மார்பில் பாய்ந்து, மறுபக்கமாக வந்து, அடுத்துள்ள வாழை மரத்தில் பாய்ந்து சாயாமல் நின்று விடுகிறதாம். இது சங்க காலத்துக் கவி. இதில் எவ்வளவு உண்மையிருக்கிறது பாருங்கள் ! அம்பு வில்லிலிருந்து. புறப்பட்ட வேகம் சிறுத்தையின் விலாவுக்குள் பாயும் சக்தியைப் பெற்றிருந்தது. விலாவின் மறு\பக்கமாக வெளிவரும்போது, அதற்குள்ள இயற்கையான வேகம் குறைகிறது. அடுத்துள்ள வாழை மரத்தில் கொத்தி நிற்க முடிகிறதே தவிர, அதையும் துளைக்கமுடியவில்லை. இந்தச் செய்தி இயற்கையானது – உண்மையுங் கூட, பகுத்தறிவுக்கு எட்டியவரையில். ஆனால், ராமாயணம் – கம்பன் பாடியது – கவியின் திறமைக்கு ஓர் எடுத்துக் காட்டு என்று சொல்லுகிறார்கள். அந்த ராமாயணத்திலே, உண்மைக்கு மாறான பல விஷயங்கள் மட்டுமல்ல; ‘நடக்குமா ? நடக்க முடியுமா? நடந்திருக்க முடியுமா?’ என்று சந்தேகப்படக் கூடியவை அநேகம். ஒன்று மட்டும் காட்டுகிறேன். இலங்காபுரி மன்னன் இராவணனைக் கொல்ல, இராமருடைய அம்புராத் துளியிலிருந்து ராமபாணம் புறப்படுகிறது. அது இராவணனைக் கொன்றதோடல்லாமல், அவனுடைய பத்து தலைகளையும் வெட்டி வீழ்த்துகிறது. அத்துடனின்றி, சீதையைப் பற்றின நினைவு அவன் மனதிலே இருக்குமென்று, அவன் உடலுக்குள் பாய்ந்து இரத்தத்தையும் சுவைத்து, நரம்புகளின் உள்ளும் புகுந்தோடி, இராவணன் உடலை சல்லடைக் கண்களாகச் செய்து, தன்மீதுள்ள இரத்தத்தைக் கழுவ, ஏழு கடல்களிலும் சென்று குளித்து, மறுபடியும் இராமனின் அம்புராத்துணியில் வந்து படுத்துக் கொண்டதாம். இது எத்தனை பச்சைப் பொய் பாருங்கள். அறிவுக்குப் பொருத்தமாக, ஆராய்ச்சிக்குட்பட்டதாக இருக்கிறதா? இந்தக் கவி கம்பன் பாடியது! யார்தான் பாடினால் என்ன? தவறைத் தவறென்று கூறுகிறோம். இப்படி கூறியதற்காக நாங்கள் கலைவிரோதிகளா? நாங்கள் என்றும் கலையை வளர்க்க அல்லவா பாடுபடச் செய்வோம்.
எங்களைப் பழமைக்கு விரோதி என்று கூறுகிறார்கள். நாங்கள் பழமையிலும் நல்லது இருந்தால் எடுத்துக் கொண்டு அறிவுக்கு ஒவ்வாததைத் தள்ளி விடுகிறோம். குரங்கு பேசுமென்கிறார்கள்; பேசாது என்கிறோம். இன்னும் எத்தனையோ கற்பனைக்கும் கட்டுப்படாத ஆபாசங்கள் பல இருக்கின்றனவே இராமாயணத்தில்! சில்லுண்டுகளுக்கு சவால் விடுகிறேன், தைரியமிருந்தால் கொண்டு வரட்டும் இராமாயணத்தை மேடைக்கு. பொதுமக்கள் தீர்ப்புக்கு விடட்டும். இல்லையேல் அண்ணா எழுதிய கம்பரசத்தை 4 டோஸ் சாப்பிட்டுவிட்டு சும்மா கிடக்கட்டும் மூலையில்.
இந்தக்காலத்து இராமன் சீதையைக் காணாவிட்டால் கிஷ்கிந்தைக்கு ஓடமாட்டான். ஜனகருக்கு டிரங்க் போடுவான், ‘சீதை வந்தாளா?’ என்று. அல்லது அயோத்திக்கு தந்தி அடிப்பான், ‘பரதா, அண்ணி வந்தாளா?’ என்று. இல்லை என்று தெரிந்தால், ‘சுதேசமித்திர’னில் சீதையின் புகைப்படம் போட்டு, விளம்பரம் செய்வான். கண்டுபிடித்தாலும் இராவணனும் இராமனும் கோர்ட்டுக்குச் சென்று வாதாடுவார்கள் கூண்டில் நின்று கொண்டு. இது நடக்கக் கூடியது! இந்தக் காலத்தில் சகோதர வாஞ்சையே கிடையாது என்கிறார்களே, இராமாயணத்தில் மட்டுமென்ன வாழுகிறது? வாலி, சுக்ரீவன் கதை தெரியாதா எங்களுக்கு ? இராவணனை விபீஷணன் துரோகம் செய்ய வில்லையா ? இதைக் கவியாகப் பாடிவிட்டார் கம்பர்; விளக்கம் தருகிறார் டி.கே.சி !
சிதம்பரம் பிள்ளையவர்களை ஒருவன் கேட்டானாம், “அய்யா! நீங்கள் சுதேசியை ஆதரிக்கிறீர்கள். ரொம்ப சரி! பரதேசச் சாமான்களை வாங்காதே என்றும் சொல்லி பிறர் மனதை நோக வைக்கலாமா ?” என்று. உடனே சிதம்பரம் பிள்ளை அவனைப் பார்த்து, “நீ எப்போதும் உண்மையே பேசுகிறாய். அது நியாயம். ஆனால், அதற்காகப் பொய்யைக் கண்டு வெறுக்காதே என்பது போலிருக்கிறது உன் கேள்வி” என்று பளிச்சென்று பதில் சொன்னாராம். அதைப் போல இருக் கிறது இந்த சில்லரைகள் நம்மைப் பார்த்து கலைக்கு விரோதி என்று கூறுவது.
ஒரு மேதாவி கூறுகிறார், எங்களால்தான் இந்த நாட்டில் மழை பெய்யவில்லை என்று. பஞ்சத்திற்குக் கூட நாங்கள்தான் காரணமாம். நாங்கள் ஒழிந்துவிட வேண்டுமாம். அப்படியே ஒப்புக்கொள்கிறேன். இந்தக் காலத்தில் எங்களால்தான் மழையின்மையும், பஞ்சமும் வந்ததாக இருக்கட்டுமே; ஆனால், அந்தக் காலத்தில் நல்லதங்காள் தன் நாட்டில், ஒன்றிரண்டல்ல – 12 வருஷங்கள் மழையில்லாத பஞ்சத்தால் மூளி வீட்டுக்கு வந்ததாக எழுதிவைத்திருக்கிறாயே, அது யாரால் வந்த பஞ்சம் என்று சொல்லட்டுமே பார்க்கலாம். முடியுமா இந்த சில்லுண்டிகளால்! சொல்ல முடியாதே! இன்னும் எத்தனையோ காரணங்கள் காட்டலாம், இதைப் போலவும், இன்னும் மதங்களின் பெயரால் மக்களை மாக்களாக்கி வைத்திருப்பதற்கும். அறிவு வளர்ந்துள்ள இந்த விஞ்ஞான காலத்திலும், கல்லையும் மண்ணையும் காட்டித்தானே மக்களை ஏமாற்றுகிறார்கள் – வயிற்றை வளர்க்கிறார்கள். அம்மாதிரி இழிச்செயல்களா எங்களுடையவை?
எங்களுடைய லட்சியம் நாடு விடுதலையடைந்து யாவரும் சுகமாக வாழ்வு நடத்த வேண்டும் என்பது தான். இதற்காகப் பேசுகிறோம்; நாடகம் நடத்துகிறோம்: இசைக் கலை மூலம் அறிவுப் பிரச்சாரம் செய்கிறோம். நாங்கள் இல்லாமல் எந்தத் துறையிலும் புதுமையைக் காணமுடியாதே ! நாடகமா?- கே.ஆர். இராமசாமி, இராதா ! பாட்டா? – அனிபா ! பேச்சா? – அண்ணாதுரை! இப்படியல்லவா இருந்து வருகிறது இன்றைய நாட்டின் நிலை! இதைக் கண்டாவது புத்தி வரவேண்டாமா, உண்மைக் கலைக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் உளறுவாயர்களுக்கு! ஆகவே, இனியாவது எங்களை “கலை விரோதிகள் ” என்று திட்டுவதில் பலனேதும் கிடையாது. அந்த நேரத்தை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் நல்லது செய்யப் பாடுபடு என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.
“மாலை மணி” (30-7-1951)
பிரிவினை கீதம்
‘தென்னிந்திய உணவுப் பஞ்சம் ராமபாதசாகர் திட்டத்தை நிறைவேற்றினால்தான் தீரும். இத் திட்டத்தை ஆராய்ந்து வேண்டியன செய்வதற்காக மத்திய அரசாங்கம் என்னை நியமித்தது. நானும் வெகு ஆவலுடன் ஒப்புக்கொண்டேன். திட்டம் சம்மந்தமான வேலைகளை ஆரம்பித்தேன். ஆனால், மத்திய அரசாங்கமோ வடஇந்தியாவில் ஏற்படுத்துவதற்கான பல திட்டங்களில் பணத்தை விரயம் செய்துவிட்டு, தென்னிந்தியாவிலுள்ள ராமபாதசாகர் திட்டத்திற்கு இப்போது பணமில்லை என்று கூறிவிட்டது.
– எஸ்.வி. ராமமூர்த்தி, ஐ.சி.எஸ்.
சுதந்திரா “, 8-6-1951
இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்று கூறும் தோழர்களுக்கு இந்தச் செய்தியை சமர்ப்பிக்கின்றோம்.
மத்திய அரசாங்கம் தென்னிந்தியாவைப் பல வகையிலும் துரோகம் செய்கிறது என்பதும், தென்னிந்தியாவைச் சுரண்டி, வட இந்தியாவின் வாழ்வைப் பரிமளிக்க வைக்கிறதென்பதும், மத்திய அரசாங்கத்தின் போக்கிலிருந்து நன்கு அறியக்கிடக்கிறது.
உலக நிதியிலிருந்து இந்தியா வாங்கிய கடன்தொகையில் தென்னிந்தியாவுக்கு நியாயமான பங்களிக்கப்பட்டதா ? இல்லை. வட இந்திய மாகாணங்களில் தொழிற்சாலைகள் தொடங்கவும், அவற்றை அபிவிருத்தி செய்யவுமே அத்தொகையில் பெரும் பகுதி பயன்பட்டது.
சர்க்கரை ஆலைகள் உத்திரப் பிரதேசத்திலும், பீஹாரிலுமாக அமைக்கப்பட லைசென்ஸ் அளிக்கப் பட்டதே தவிர, தென்னிந்தியா கவனிக்கப்படவில்லை.
பம்பாய் மாகாணத்தில் பருத்தி விளைவிக்க அனுமதி தரப்பட்டதே ஒழிய, அதே போன்ற நிலமுள்ள அனந்தபூர் ஜில்லாவில் பருத்தி விளைவிக்க அனுமதி தரப்படவில்லை.
மத்திய அரசாங்கம் இங்கு உற்பத்தியாகும் நூல்களை எல்லாம் வாரிக் கொண்டு போய் வட இந்திய மாகாணங்களுக்கு விநியோகித்து விட்டு, தென்னிந்திய நெசவாளர்கள் வேலையற்றுப் பட்டினிகிடந்து சாகச் செய்து விட்டது.
பீஹார் மாகாணத்தில் தினசரி 1,12,000 பேருக்கு இலவசமாக உணவு அளிக்க எப்போதோ ஏற்பாடு செய்து, அதற்கேற்ற உணவுப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டிருக்க, தென்னிந்தியாவில் மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தும், கஞ்சியூற்றும் திறமை கூட இந்த நாட்டு அரசாங்கத்துக்கு ஏற்படவுமில்லை. மத்திய அரசாங்கம் கவனிக்கவுமில்லை.
மாஜி யூனியன் உணவு மந்திரி முன்ஷி சென்னைக்கு வந்திருந்த போது, ” இந்த நாட்டில் எப்பகுதியிலும், எவரும் பட்டினியால் சாகுமாறு அரசாங்கம் விட்டு விடாது” என்று இங்குள்ளோர் மெச்சிக் கொள்ளுமாறு பேசினார்.
ஆனால் இன்றோ, இங்குமங்குமாகச் சில தனிப் பட்டவர்கள் பட்டினியால் சாவதைத் தடுத்து நிறுத்தி விடமுடியும் என்று நான் உறுதி செய்ய முடியாது என்று பண்டித நேரு புதுடில்லியில் கூறிவிட்டார். பட்டினியால் சாகும் நிலை ஏற்பட்டிருப்பது தென்னிந்தியாவில்தான். இதைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில் மத்திய அரசாங்க முதல்வர் கூறுகிறார்.
சென்னை மாகாணத்திற்கு ஆண்டுக்கு 10 லட்சம் டன் தானியம் வேண்டுமென்று கேட்டதற்கு மத்திய அரசாங்கம் லட்சம் டன் தானியமே கொடுத்தது. ஆனால், சென்னையைப் போலவே 10 லட்சம் டன் தானியம் கேட்ட பம்பாய் மாகாணத்திற்கு 8 லட்சம் டன் தானியத்தை மத்திய அரசாங்கம் ஒதுக்கியது.
இவ்வாறே இன்னும் பல நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டிக் கொண்டே போக முடியும். தென்னிந்தியாவில் இன்றியமையாத இனங்களில் செலவு செய்யப் பணமில்லை என்று கூறிய மத்திய அரசாங்கம், எத்தனையோ பயனில்லாத திட்டங்களில் பணம் செலவிட்டு ஏமாந்திருக்கிறது. ஜீப் வாங்கும் திட்டம், வார்ப்பில்லங்கள் அமைக்கும் திட்டம் போன்ற எத்தனையோ திட்டங்களில் கோடிக் கணக்கான ரூபாய்களை இழந்து விட்டிருக்கிறது.
ஆனால், அதே சமயத்தில் தென்னிந்தியாவில் ராமபாதசாகர் திட்டத்தை நிறைவேற்றப் பணமில்லை என்று மத்திய அரசாங்கம். கூறிவிட்டதை அரசாங்க அதிகாரியே எடுத்துக் கூறுகிறார். தென்னிந்தியாவில் மணிமுத்தாறு திட்டம் போன்றவைகள்கூட மக்கள் பணம் போட்டு முடித்துக் கொள்ளும் நிலையில் தென்னிந்தியா கைவிடப்பட்டது.
இவ்வாறு மத்திய அரசாங்கம் தென்னிந்தியாவை மாற்றாந்தாயன்புடன் நடத்தி, வெளிப்படையாகத் துரோகம் செய்து, வஞ்சனையாக நடந்து கொள்ளுகிறது என்பது மிகமிகத் தெளிவாக விளங்குகிறது. வட இந்தியரின் மனப்போக்கையும், மத்திய அரசாங்கம் எப்படி நடந்து கொள்ளும் என்பதையும் முன்கூட்டியே நன்கறிந்துதான் திராவிட இயக்கத்தவராகிய நாம், திராவிட நாட்டைத் தனியே பிரிக்க வேண்டுமென்று கோறுகிறோம். திராவிட நாடு தனியே பிரிந்தால்தான் வடநாட்டு சுரண்டலிலிருந்து, வஞ்சகத்திலிருந்து தென்னாடாகிய திராவிடம் தப்பமுடியும் எனக் கருதுகிறோம். திராவிடம் தனியே பிரிந்தால்தான் திராவிட மக்கள் பசியின்றி வாழ முடியும் என்கிறோம்.
“ மாலை மணி ” (12-6-1951)
வெற்றி நமக்கே!
ஜாதி வெறியர்கள் – வகுப்புவாதிகள் – நாட்டைக் கெடுக்கும் நாசகாரர்கள்- சமுதாயப் புல்லுருவிகள் – அராஜகவாதிகள் – அக்கிரமக்காரர்கள்- என்றெல்லாம் அர்ச்சனைகள் நடைபெற்றன. பார்ப்பனர் – பார்ப் பனரல்லாதார் என்ற பேதம் கற்பிப்பது குறுகிய நோக்கம், குருட்டுத்தனம், கொடுஞ் செயல் எனக் கூறப் பட்டது. அப்படிக் கூறியவர்களின் வரிசையிலே முன்னணித் தலைவராக இருந்தவர் பண்டிதநேரு. அவருடைய இன்றைய நிலைபற்றி ‘மெயில் ‘ பத்திரிகை தலையங்கம் தீட்டுகிறது, “ ஜாதி வெறியர், வகுப்புவாதிகள் என்று பத்து வருடங்களுக்கு முன்பு யாரை பண்டித நேரு ஏசினாரோ, அப்படிக் குற்றம் சாட்டப் பட்டவர்கள் பக்கத்திலேயே நின்று இன்று பேசுகிறார்” என்பதாக!
வகுப்புவாரி உரிமை கேட்பதை வகுப்பு வாதம் என்று பிரசாரம் செய்கின்றன ஆரிய ஏடுகள். ஜாதியின் பெயரால் உரிமை கேட்பது ஜாதியை வளர்ப்பதாகாதா என்று கிண்டல்கள் வாரி இறைக்கப்படுகின்றன. அதற்கெல்லாம் நேரு பதில் கூறியிருக்கிறார். நம்முடைய குரலிலேயே பேசியிருக்கிறார், உள்ளம் எப்படியோ தெரியாது. குரல் நம்முடையதுதான். கருத்து நாம் சொன்னதுதான். ஜாதி உணர்ச்சிகள் ஒழிக்கப்பட வேண்டியதும்.- ஜாதிப் பிரிவினைகள் அழிக்கப்பட வேண்டியதும் நம்முடைய முக்கிய லட்சியம். அந்த லட்சியம் அழிந்து விட்டது என்று அர்த்தமல்ல. காலைக் கதிரவனைக் காண – உதயத்தின் எழிலை ரசிக்க கடற்கரைக்குப் போகிறோம். கடற்கரை நம் இருப்பிடத்திலிருந்து பத்து மைல் தொலைவில் இருந்தால் இருட்டிலேயே ஊரை விட்டுப் புறப்பட்டு விடுகிறோம். கதிரவனைத்தான் காணப்போகிறோமே என்று இருட்டு நேரத்தில் கையில் விளக்கில்லாமல் போகமுடியுமா? கதிரவனைக் கண்ட பிறகு வேண்டு மானால் விளக்குத் தேவையில்லை. இதேதான் வகுப்பு வாரி உரிமையிலும் நாம் சொன்னது. ஜாதிகள் ஒழிய வேண்டுமென்ற நோக்கத்திலே போய்க் கொண்டிருக் கிறோம். தற்போதைய சூழ்நிலையில் பிற்படுத்தப் பட்டுள்ள சமூகத்தினருக்கு சில தனி வசதிகள் தேவை என்கிறோம், இருட்டிலே விளக்குத் தேவை என்பதைப் போல! இப்படித் தனி வசதிகள் கேட்பதால் ஜாதியை ஒழிப்பது என்ற கதிரவனைக் காண்பது போன்ற கொள்கையிலிருந்து நாம் நழுவி விட்டதாக அர்த்தமல்ல! இதைத்தான் பண்டித நேரு பேசியிருக்கிறார்.
சமூக நீதி சாய்க்கப்படுகிறது என்பது கண்ட திராவிடப் பெருங்குடிமக்கள் நடத்திய கிளர்ச்சியால் – வழங்கிய எச்சரிக்கையால்- இந்தத் திருத்தம் தோன்றியது என்பதும், நேரு நம் கருத்துக்கள் சிலவற்றைப் பேசினார் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். முதலிலே வந்த திருத்தங்கள் கூட நமக்குத் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லை. திருத்தம் தித்திக்குமா என்று சந்தேகமுற்றோம். 16-வது ஷரத்தும் 29-வது ஷரத்தும் நம் எண்ணத்துக்கு தடையாயிருக்குமென்று கருதினோம். இப்போது செலக்ட் கமிட்டி அந்த இரண்டு ஷரத்துக்களும் சமூகத்துறையில் அல்லது கல்வி வழியில் பிற்பட்ட நிலையிலுள்ள வகுப்புகளுக்கும் சர்க்கார் தனி வசதி அளிக்க தடையாயிருக்கக் கூடாதென்று குறிப்பிட்டிருக்கிறது. இதை நோக்கும் போது ‘நம்பிக்கை நட்சத்திரம்’ உதயமாவதாக, விடிவெள்ளி முளைப்பதாக நமக்குத் தோன்றுகிறது. இழந்த நமது உரிமை புத்துயிர் பெறுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. பொறுத்திருந்ததற்குப் பயன் ஏற்படுவது போன்ற ஒளி தோன்றுகிறது. வெத்து வேட்டுகள் வேதனை தீர்க்க உதவாது – விளைவுகளை அமைதியோடு கவனிப்போம் என்று நாம் சொல்லி வந்த விளக்கங்களுக்கு வெற்றி மலர்வது போலத் தெரிகிறது. நமது சக்தி மதிப்புவாய்ந்தது என்பதை உணர்த்துகிறது திருத்தமும், திருத்தம் பற்றிய நேருவின் பேச்சும். திராவிடஸ்தான் பிரச்னை நேருவை இப்படிப் பேச வைத்திருக்கிறது.
இன்னும் சிறிது நாளில் திராவிடஸ்தானைப் பற்றிய பேச்சையே நேரு பேசவேண்டிய நிலை வரத்தான் போகிறது. வீரர்களே! திராவிடக் காளையரே! வீணுக்கு அழிவதல்ல நம் வீரம் ! விவேக வழி சென்றிடுவோம்! வெற்றி மாலை சூடிடுவோம்! எட்டுத் திக்கும் இலட்சி யக் குரல் எழுப்பிடுவோம் ! இறுதி வெற்றி நமக்கே !
” மாலை மணி” (1-6-1951)
“யார் காட்டுமிராண்டிகள்?”
சென்னை நகர மக்களாகிய நீங்கள் சிறைசென்று மீண்ட எனக்கு அளித்திருக்கும் இந்த மகத்தான வரவேற்பைக் கண்டு – இங்குக் கூடியிருக்கும் இந்த மாபெரும் மக்கள் பெரு வெள்ளத்தைக் கண்டு நான் பெருமைப் படுகிறேன். உங்களுடைய இந்த உபசரிப்பும், பாராட்டும் என்னை “ இன்னும் தொண்டு செய்யச் செல்வாய் என்று கட்டளை யிடுவதாகவே நான் கருதுகிறேன்.
ஐந்து மாத கடுங்காவல் சிறை வாழ்வைக் கடந்து – சிறைக்கோட்டம் தந்த வேதனைகளை அனுபவித்து நான் இப்போது வெளிவந்திருக்கிறேன். நீங்கள் எல்லோரும் நினைப்பீர்கள், நான் இப்போது மன மகிழ்ச்சியோடு, எல்லையற்ற பூரிப்போடு நடமாடுவதாக. ஆனால், நான் உண்மையைச் சொல்கிறேன்- செந்தமிழ் பூஞ்சோலையிலே ‘டால்மியாபுரம்’ என்ற கள்ளிக்காடு இருப்பதை வெறுத்து, அதன் பெயரை ‘கல்லக்குடி’யாக மாற்ற “சென்றுவா தம்பி போர்க்களம்! ” என்று யார் என்னை வாழ்த்து கூறி வழியனுப்பினாரோ – அக் கட்டளைப்படி களத்திலே குதித்து, நான் கண்ட வெற்றியைக் குறித்து யார் பெருமைப் படவேண்டுமோ-“ தம்பி செப்பிய காரியத்தை செவ்வனே செய்து முடித்தான் என்று எண்ணி எந்த உத்தமன் உவகை எய்தவேண்டுமோ – அந்த உத்தமன் – அறிஞன்-நமது அண்ணா இல்லாத திராவிடத்திலே நான் ஒரு வார காலமாக வாடுவது, ஐந்து மாத காலம் நான் சிறையிலே அனுபவித்த வேதனையை விட பலமடங்கு சகிக்க முடியாத வேதனையைத்தருகிறது. ஆனாலும், காராக்கிரகத்திற்குள் சிக்கிக் கிடக்கும் அந்த அண்ணாவை, மற்ற தம்பிமார்களை, நாளைக் காலை காணப்போவதை நினைத்தால் என் உடல் பூரிக்கிறது; உள்ளம் புளகாங்கித மடைகிறது!
நான் கடைசியாக உங்களை சென்ற ஜூலை மாதம் 15-ம் தேதி காலை சந்தித்தேன். விடை பெற்றுச் சென்றேன். இன்று திரும்பி வருகிறேன். அன்று நான் உள் ளே சென்றபோது இருந்த அதே ஆட்சிதான் இன்றும் இருக்கிறது. ஆனால் இந்த ஐந்து மாத காலமாக இந்த ஆட்சியார் நடத்திய அலங்கோலங்களை, நாட்டிலே கிளப்பிவிட்ட கொந்தளிப்பை, உண்டாக்கிவிட்ட குமுறலை, திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு இழைத்த சித்ரவதைக் கொடுமைகளை நினைத்தால் இந்த நாடும் ஒரு சிறைச்சாலையாக தோன்றுகிறது என் கண்முன்னே! நான் ஐந்து மாத தண்டனை அனுபவித்த சிறைச்சாலையிலே கஷ்டங்கள் பல உண்டு – கவலை மிக அதிகம்! அதேபோல இந்த சிறைச்சாலையிலும் கஷ் டங்களுக்குப் பஞ்சமில்லை – அது துப்பாக்கிக் குண்டு, தடியடி, கண்ணீர்ப்புகை ரூபத்திலே வந்து கோர நர்த்தனம் ஆடியிருக்கிறது! அந்த சிறைச்சாலைக்கு ஓர் அதிகாரி – சூப்பரிண்டெண்டு—அவர் கொஞ்சம் நல்லவர். அதேபோல் இந்த சிறைச்சாலைக்கும் ஓர் ஆதிகாரி – ஆச்சாரியார்! ஆனால், இவரோ மேலே கண்டவரைப் போல நல்லவரல்ல; அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்! ஆகவேதான் நான் சிறிய சிறைச்சாலையிலிருந்து பெரிய சிறைச்சாலைக்கு வந்திருப்பதாகக் கூறுகிறேன்.
எனக்கு ஆறு மாதம் தண்டனை விதிக்கப்பட்டது. அதிலே அபராதத் தொகையை கட்டாயமாக வசூலித்த காரணத்தால் ஐந்து மாத தண்டனையோடு வெளியேற் றப்பட்டேன். இதற்கு நான் செய்த குற்றமென்ன? ஐந்து மாத கடுங்காவல் தண்டனை அனுபவிக்கக் கூடிய அளவுக்கு நான் பயங்கரக் குற்றவாளியா? இப்படித் தான் கேட்டார்கள் நான் தண்டனை ஏற்று வழக்கு மன்றத்தைவிட்டு வெளியேறியபோது, சில பத்திரிகை நிருபர்கள். “என்ன ஆறுமாதமா?” என்று அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்டார்கள். ஆனால் நானோ மௌனமானேன். ஆறுமாதம் மிக அதிகம்தான் என்று தோன்றியிருக்கலாம் அவர்களுக்கு. ஆனால் நான் நினைத்தேன் – தண்டனை இன்னும் அதிகமாகக்கூட இருந்திருக்கும். ஆனால், அரியலுர் சப்-மாஜிஸ்டிரேட்டுக்கு அதற்கு மேல் அதிகாரமில்லை தண்டனை வழங்க. இந்த எண்ணம் தான் என் மனதிலே தோன்றியது அப்போது.
இந்த தண்டனைக்குத்தான் நாங்கள் செய்த குற்றமென்ன? தண்டவாளத்தில் படுத்தோமாம்; தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தோமாம் – இப்படி விளக்கம் தருகிறது குற்றப் பத்திரிகை வழக்கு மன்றத்தில். நாம் டால்மியாபுரத்தில் நடத்திய போராட்டத்தை, தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக திரித்தது வழக்கு மன்றம்!
நாம் போராடினோம் ! எப்படிப் போராடினோம்? கல்லக்குடி என்று கண்கவர அச்சிட்ட கன்னித் தமிழ் எழுத்துக்களை ஒட்டினோம், டால்மியாபுரத்தின் மீது! தண்டவாளத்திலே படுத்தோம் – தற்கொலைக்காக அல்ல; தன்மானத் தமிழர் கூட்டம் எமது என்பதை அறியாத நேருவுக்கு உணர்த்த! “பொது மக்களுக்குத் தொல்லை தராதீர். எழுந்து செல்லுங்கள்” என்று போலீஸ் அதிகாரிகள் சொன்னார்கள். நான் சொன்னேன், “இது எங்கள் திடீர் முடிவல்ல; பல கால யோசனைக்குப்பிறகு, பல திறப்பட்ட அறிவிப்புகளுக்குப் பிறகு, நடத்தப்படும் போராட்டம். மாற்ற முடியாத முடிவு.” என்று!
அதைக் கேட்ட அதிகாரிகள் – கலைக்டர் உட்பட, எங்களுக்கு பத்தடி தூரத்திலே நின்றுகொண்டிருந்த என்ஜினிடம் சென்றனர். டிரைவரிடம் ஏதோ முண முணத்தனர். உடனே என்ஜின் ஊதியது. பத்தடி தூரத்திலே நின்றுகொண்டிருந்த ரயில் புறப்பட்டது. அதன் சக்கரங்கள் சுழன்றன. எங்களை நோக்கி நகர்ந்தன, நானும், என்னுடன் படுத்திருந்த நான்கு தொண்டர்களும் கடைசியாக ஒரு முறை திரா விடத்தை எண்ணினோம்; அண்ணாவை நினைத்துக் கொண்டோம்; உலகத்தை ஒரு தடவை பார்த்தோம்; கண்களை மூடிக் கொண்டோம்; கடைசி மூச்சுக்காகக் காத்துக்\கொண்டிருந்தோம்.
அந்தப் பயங்கரச் சூழ்நிலையை உண்டு பண்ணி விட்டு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் வண்டி மறுபடியும் நின்றுவிட்டது, எங்களுக்கு நான்கைந்து அடித்தொலைவிலேயே. நாங்கள் கைதுசெய்யப்பட்டோம்; அரியலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டோம்.
அங்கே நாங்கள் ஒரு நாள் முழுதும் பூட்டி வைக்கப்பட்டிருந்தோம். வெளியே கட்டளைக்குக் கீழ்ப்படிந்து காரியமாற்றத் துடிதுடித்துக் கிடக்கும் திராவிடக் காளைகள் – அடுத்தடுத்த படைவரிசைகள்- ஆனால், நாங்கள் உள்ளே, குகைக்குள்ளே, காராக்கிரகத்துக்குள்ளே! கொலைக்களம் என்று சொல்லுவார்களே, அதைவிடக் கொடூரமான அந்த இருட்டுக் குகையில் – அந்த குகையில் – அந்த அற்புதமான சிறையில் – இருபதே பேர் இருக்க வேண்டிய இடத்திலே அறுபத்து நான்கு பேர் அடைத்து வைக்கப் பட்டிருந்தோம். நண்பர்கள் உட்கார்ந்தபடியே தூங்கினார்கள்; நான் நின்றபடியே, பிடித்தபடியே தூங்கினேன். சிறைக் கம்பிகளைப் இன்னும் எங்களது சிறை வாழ்வைப் பற்றி விளக்கிக் கொண்டே போவதென்றால், அதற்கென ஒரு புத்தகமே எழுதி விடலாம்.
நாங்கள் தண்டவாளத்திலே படுத்தோம் – தற்கொலைக்காக என்றால், பட்டப்பகலிலே பலர் அறியவா படுப்போம்? எங்கள் இலட்சியத்தை எடுத்துச் சொல்ல – எத்தனையோ முறைகள் எடுத்துச் சொல்லியும், அநேக கூட்டங்கள் நடத்திய பிறகும், தீர்மானங்கள் பல! தீட்டிய பிறகும் செவிமடுக்காத காரணத்தால்,
அதற்காகத் தண்டனை ?- இதைக் கேட்டு உலகம் கேள்விக்குறி போடுகிறது!
பெயர் மாற்றத்திற்கென்று ஒரு போராட்டம் நடைபெற்றது சென்னையிலே” என்று எழுதுகிறது அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’.
பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா? – இப்படி கேட்கின்றனர் காங்கிரசார்!
பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா?- இப்படி கேலிமொழி உதிர்க்கின்றனர் கம்யூனிஸ்டுகள் !
பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா?- இப்படித்தான் கேட்கிறது செழித்திருக்கும் சிவப்பு சீனா இந்த செருக்கு படிந்த அரசாங்கத்தை !
பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா? – இப்படித்தான் கேட்கிறது தூய்மை கொழிக்கும் ரஷ்ய நாடு இந்த துப்புகெட்ட துரோக ஆட்சியை !
நாங்களும் அப்படியேதான் கேட்கிறோம், பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா? சாதாரணமாக ஒரு ஊரின் பெயரை மாற்றுவதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டியது அவசியம்தானா? அந்த அவசியம் ஏன் வந்தது? ‘பெயரை மாற்று’ என்று மக்கள் தெரிவித்தால் பெயரை மாற்றிவிட வேண்டியது ஆட்சியாளர் கடமை! ஆனால், இந்த ஆச்சாரியார் ஆட்சி அதைச் செய்ய மறுத்தது-ஆகவே போராட்டம் மலர்ந்தது – நம் தோழர்கள் சாவுக்கிடங்கிலே தள்ளப்பட்டனர்— இன்னும் ஆச்சாரியார் ‘ஜனநாயகம்’ பேசுகிறார்! விந்தை! விந்தை !! விந்தை !!!
இங்கு ஜனநாயகம் காணவில்லை. என்ன ஆயிற்று அந்த ஜனநாயகம் ? ஜனநாயகம் என்ற அந்தப் பச்சிளம் சிசு இங்கே துடிக்கத் துடிக்க வெட்டப்படுகிறது. ஆனாலும் ஆச்சாரியார் ஜனநாயகம் பேசத்தான் செய்கிறார். வெள்ளாடுகளைக் கொன்ற வேங்கை, ரத்த நாக்குடன் வேதாந்தம் பேசுவது போல. ஆச்சாரியார் கயிலே செங்கோல் இல்லை; ‘கொடுங்கோல்’ மின்னுகிறது ! ஆகவே அவர் நம்மீது பாய்கிறார்.
இப்போது நாம் நடத்திய போராட்டம் இறுதியானப் போராட்டம் அல்ல; வருங்கால சோதனை காலம் நம்மை எதிர்நோக்கி இருக்கும் பலப்பல போராட்டங்களுக்கு இது ஒத்திகையே யாகும். என்றைக்கு திராவிடநாட்டை அடைந்தே தீருவோம் என்ற உறுதி எடுத்துக் கொண்டோமோ அன்றைக்கே நமது போராட்டம் துவங்கிவிட்டது. இன்று தியாகப்பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது; கல்லறைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நான் சிறை செல்லுவதற்கு முன் பார்த்த உங்களை இன்றும் பார்க்கிறேன்; சிறை செல்லுவதற்கு முன் பார்த்த மலர்மாலைகளை இன்றும் பார்க்கிறேன்; ஆனால், என் நெஞ்சு வேகிறது – என் உடல் துடிக்கிறது – சிறை செல்லுவதற்கு முன் நான் பார்த்த ஆறு தோழர்களை இன்று காணமுடியாத காரணத்தால். அந்த திராவிட மாணிக்கங்களுக்கு – ஜுலை 15ம் தேதியன்று கல்லக்குடியிலும், தூத்துக்குடியிலும் உயிர்கள் பறிக்கப்பட்டு, படுகுழியிலே பிணங்களாகத் தள்ளப்பட்டு, கல்லறைகளாகக் காட்சியளிக்கும் தியாக ரத்தினங்களுக்கு என் வீர வணக்கத்தை செலுத்துகிறேன்,வேதனையும் வாதனையும் நெஞ்சத்திலே போட்டியிட.
அந்தக் கல்லறைகள் கட்டிய கருப்புக் கண்ணாடியார் களிக்கிறார் இன்று. அந்தக் களிப்பிலே மறைந்திருக்கும் கடுமை…நம்மை நசுக்க எண்ணும் நப்பாசையே! அந்த நப்பாசையின், நல்லபாம்பு விஷத்தின் பலனால்தான் நாம் செத்து மடிந்தோம். ஐயாயிரம் பேர் சிறை புகுந்தோம். லால்குடி நடராசன் என்ற வாலிபன் – கல்லக்குடி அறப்போரிலே கலந்துகொள்ள வந்த ஆர்வச் சிங்கம் செத்து மடிந்தான் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து. அவனுக்கு மணநாள் குறித்துவைத்திருந்த தாய் தன் மகனின் பிணக்கோலத்தைக் கண்டு “ஓ’வென்று அலறினாராம்! அந்தத் தாய் கதறியழுத காட்சி மறைந்து போகுமா? அவர் விட்ட கண்ணீர் தான் வீண் போகுமா? மற்றொரு தோழர் – கேசவன் என்பார் மூளை சொட்டச் சொட்ட “ஆவ், ஆவ்” என்று அலறி அழுதபடியே ஆவி விட்டார். மற்றொரு அபாக்கியவான் – செபஸ்டின் ராஜு என்ற வாலிபன்தான் ரொம்பவும் பரிதாபத்திற்குள்ளாகி விட்டார். குண்டு குலைத்து விட்டது அவரது ஜீவிய பீடத்தை – ஆண் குறியை! அந்தத் திராவிட இளைஞனின் வாழ்வை – வாழ்விலே அவன் அனுபவித்து ஆனந்தப்பட வேண்டிய பேரின்ப சுகத்தை அழித்து விட்டனர். அந்த சோகக்குன்றை சிறையிலே விட்டுவிட்டுத்தான் நான் வெளியே வந்திருக்கிறேன். நாங்கள் உரிமை கேட்டோம்; ஆச்சாரியார் தோட்டாக்களினால் பதில் சொல்லிவிட்டார், பயங்கரமான முறையிலே !
இந்தப் பயங்கரங்களுக்குக் காரண பூதங்களாக இருந்த போலீசார். தைரியமாக செப்புகிறார்கள் உயிரைக் கொல்லுவதற்காகத்தான் சுட்டோம் என்று !
விரட்டுவதற்குச் சுட்டான் வெள்ளையன் – ஆனால் இவர்கள் வேட்டையாடவே சுட்டோம் என்று வீராப்பு மொழிகிறார்கள். உயிரைக் கொல்லுவதற்காக 64 முறை சுட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ‘64′ வழக்குமன்றத்திலே கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ‘16’ ஆகிவிட்டது. போகட்டும். அந்த 16 தடவை சுட்டதும் அவசியம்தானா? சமாளிக்க முடியாத கூட்டத்தைக் கலைக்கவேண்டிய அவசியத்திற்காக, உயிரைக் கொல்லச் சுட்டாய் – உன் எண்ணம் ஈடேறியதா? 16 முறை சுட்டதற்கு 16 உயிர்களா மாண்டது ? இல்லையே, இரண்டுதானே! 14 தோட்டாக்கள் வீணாகத்தானே ஆகிவிட்டன, உன் எண்ணப்படி நடவாமல்? அந்த 14 முறைகளை கூட்டத்தை நோக்கிச் சுடுவதற்குப் பதிலாக, ஆகாயத்தை நோக்கிச் சுட்டு வீணாக்கியிருந்தால், மீதமுள்ள அந்த 2 தோட்டாக்களுக்கு அவசியம் இருந்திருக்காதல்லவா? திராவிடர்கள் உயிர்நீத்த கோரமும் நிகழ்ந்திருக்காதல்லவா?
கல்லக்குடியிலே 2-தூத்துக்குடியிலே 4 என்ற கணக்கிலே ஆச்சாரியார் பிணக் குழிகளைத் தோண்டிய பிறகும் நம் மேலேயே பாய்கிறார் – ‘எறும்பு’ என்று எகத்தாளம் பேசுகிறார்-‘பலாத்காரவாதிகள்’ என்று பழி சுமத்துகிறார்!
ஆச்சாரியார் ஒரு லட்சம் இலட்சியக் காளைகளைக் கொண்டுள்ள கழகத்தை அழைக்கும் வீதம் அறிவுக்குப் பொறுத்தமற்ற முறையிலே இருக்கிறது. எறும்புகள் என்கிறார் – சிந்தனைக்குரிய சொல்தான்; இருந்தாலும் சிரித்தபடியேதான் செப்பியிருக்கிறார் சேலத்து சக்ரவர்த்தியார். ‘எறும்புகள்’ என்று துச்சமாகக் கூறியவர்தான் வேறொரு இடத்திலே “திராவிடமுன்னேற்றக் கழகம்தான் எனது முதல் நம்பர் எதிரி ! என்றும் கூறியிருக்கிறார். இதிலேயே புரிந்திருக்கலாம் தோழர்களுக்கு ஆச்சாரியாரின் தரம் எத்தகையது என்பது! எறும்பைப் போய் முதல் எதிரி என்று கூறுபவரை நாம் எப்படி எடைபோடுவது! எறும்பிலும் கேவலமான பலமுடையதுதானே எறும்பைப்போய் ‘முதல் விரோதி’ என்று சொல்லிக் கொள்ளும்! அதே சமயத்தில் ஆச்சாரியாருக்கு இன்னுமொன்றும் சொல்ல ஆசைப்படுகிறேன், எறும்பின் செயல்கள் எப்படியிருக்கும் என்ப தைக் குறித்து!
விளக்கைச் சுற்றிச்சுற்றி வட்டமிடும் விட்டில்பூச்சியை தெரிந்திருக்கலாம் எல்லோருக்கும். விளக் கோடு மோதுவதால் மோசமே விளையும் என்பதை அது உணராததல்ல; உணர்ந்தும் மோதுகிறது. உயிர் ஊசலாடும் சமயத்தில் தரையிலே விழுந்து துடிக்கவும் செய்கிறது. அந்த நேரத்திலே, உயிருக்கு மன்றாடும் அந்தப் பூச்சியை, இழுத்துச் செல்லும் எறும்புகள் ! அப்படித்தான் பலமிழந்து, பதவி ஜன்னியால் துடிதுடிக்கும் ஆச்சாரியாரை அப்புறப்படுத்தும் நல்லகாரியத்தில் இறங்கக்கூடும் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் எறும்புகள் என்பதை அவருக்கு உணர்த்து கிறேன்.
சமீபத்தில் ஆச்சாரியார் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார், தன்நெஞ்சு கல்நெஞ்சு என்று! இது எல்லோரும் அறிந்த விஷயமே தவிர புதிது ஒன்றுமில்லை, அவரே அதை ஒப்புக்கொள்ளும் புதுமையைத் தவிர! அவர் கல்நெஞ்சர்தான்! அதைச் சொல்லிக் காட்டிய ஆச்சாரியாருக்கு, அந்த சமயத்திலே, அவருக்கு ரொம்பவும் பிடித்தமான பழமொழிகளில் ஒன்று நினைவுக்கு வந்திருக்காது. ஆனால், நான் நினைவுபடுத்த விரும்புகிறேன் – “எறும்பு ஊரக் கல்லும் தேயும்”- தெரிந்திருக்கலாம் அவருக்கு! ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆச்சாரியாரின் நெஞ்சு என்ற கல், திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற எறும்பு ஊர ஊரத் தேயாது ! உடைந்தே தீரும் !
ஆச்சாரியார் நம்மை பலாத்காரவாதிகள் என்று சொல்லுகிறார்! அதைக் கேட்டபோது, படித்தபோது நம் நெஞ்சு குமுறவில்லையா?
நீதி வேண்டிய நேர்மையாளர்கள் மீது தடியடி பாணம் தொடுத்த பக்திமான்தான்- கண்ணீர்ப் புகை பாய்ச்சிய கண்ணிய புருஷர்தான் – துப்பாக்கியின் துணை கொண்டு காலை, கையை, ஆண் குறியை, ஏன் – உயிரையே உறிஞ்சிய ஆச்சாரியார் தான் நம்மை பலாத்காரவாதிகள் என்கிறார்! அந்த வார்த்தையை நம்மை நோக்கி உபயோகிக்க என்ன யோக்கிதையை அவர் பெற்றிருக்கிறார் என்றுதான் நான் வியக்கிறேன்.
இதைவிட என்னை மேலும் வியக்கச் செய்த செய்திகளையும் நான் சிறைக்குள் இருந்தபோது அறிந்தேன். நமது போராட்டங்களை கம்யூனிஸ்ட் நண்பர்கள் கேலி செய்தார்களாம்! அவர்களது அறியாமைக்காக நான் வருந்துகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இப்போதையப் போராட்டங்களினால் என்ன பலன்? அதனால் வாடும் ஏழைகளுக்கு ஏதாவது வகை தோன்றிற்றா?- இப்படி கேட்கிறது கம்யூனிஸ்ட் கட்சி.
ஆனால் நான் கேட்கிறேன் உரத்தக் குரலோடு, கழகத்தின் போராட்டங்களினால் ஏழைகளுக்கு ஏது பலன் என்று கேட்கிறாயே, கழகம் ஏழைகளுக்காக- நலிந்தோர்களுக்காக – நடைபாதை வாசிகளுக்காக – அவர்களது நலனுக்காக நடத்தப்பட்ட எந்த இயக்கங்களிலே இதுவரைக் கலந்து கொண்டதில்லை, கொடு அந்தக் கணக்கை முதலில் !
சமுதாயத்தின் ஓர் அங்கமாம் கைத்தறியாளர்களின் பட்டினிப்படை புறப்பட்ட நேரத்திலே-பிள்ளை வியாபாரம் நடத்திய நேரத்திலே – தற்கொலை செய்து கொள்ளத் தயங்காத நேரத்திலே-யாருடைய கண்கள் கலங்கின? யாருடைய நெஞ்சு துடித்தது? யார் வியாபாரியாக மாறினார்கள்? நினைத்துப்பார் நன்றாக, ஜனவரி 4-ந் தேதியை! கழகத்தின் முன்னணி வீரர்கள் அன்று வியாபாரிகளாக நடமாடியதை மறந்திருக்க மாட்டாய்! தேங்கிக்கிடந்த கைத்தறித் துணிகளிலே ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ளவை அன்றே விலையானதை மறந்திருக்க மாட்டாய்! ஆனால், அதனால் கைத்தறியாளர்களின் கண்ணீர் ஓரளவாவது துடைக்கப்பட்டதை மட்டும் மறந்து விட்டாயா?
போகட்டும்! தஞ்சையிலே, திருச்சியிலே புயல், பெருமழை என்ற உருவிலே இயற்கை அன்னை வெறியாட்டம் ஆடி மறைந்தாளே, அப்போது யாருடைய கரங்கள் துடிதுடித்தன ரூ 25,000 சேர்க்க வேண்டுமென்று யாருடைய கரங்கள் புத்தம் புது கைத்தறித் துணிகளைக் கட்டுக் கட்டாகத் தந்தன?
நன்றாக சிந்தித்துப் பார் சீற்றத்துணியும் மதியால். மாநாடு அந்த நேரங்களிலே நீங்களல்லவா சமாதானகங்ளுக்குப் பறந்து கொண்டும், காஷ்மீர்ப் பிரச்னையை அலசிக் கொண்டும், எங்கிருந்தோ வந்த அமெரிக்க மந்திரி டல்லஸ்ஸுக்குக் கருப்புக்கொடி பிடித்துக் கொண்டும் இருந்தீர்கள்! அம்மாதிரி நடவடிக்கைகளினால் மட்டும் இங்கு வாழும் நலிந்தோர் மாளிகை வாசிகளாக ஆகிவிட்டார்களா?
கம்யூனிஸ்டுகள் நம்மைத் தூற்றுவதில் அர்த்தமே. கிடையாது. மதுரையிலே கருப்பையா பாரதி மாண்டுபோனாராம் – அதனால் நாம் பலாத்காரவாதிகளாம்- இப்படி அறிக்கை விடுகிறார்கள். இதுதானா நன்றி ! நாங்கள் என்ன தஞ்சையிலே நெற்போருக்குத் தீயிட் டோமோ? சப்-இன்ஸ்பெக்டரை சாக்காட்டுக்கு அனுப்பத் வீட்டின் அணிந்தோமா? மிராசுதார் மீது தீ வீசினோமா? யார் பலாத்காரவாதிகள்?
22 பேர்களைச் சேலம் சிறையிலே உங்களில் சுட்டுக் கொன்றார்களே, அந்த அநியாயத்தை இந்த நாட்டிலே எடுத்துச் சொல்ல-உங்களுக்காக அனுதாபச் சொல் உதிர்க்க -எங்களைத் தவிர வேறு யார் நாதியிருந்தார்கள் உங்களுக்கு? ஒவ்வொரு மேடையிலும் நானல்லவா அந்த 32 பிணங்களையும் எழுப்பி எழுப்பிப் பேசவைத்தேன்! அதை எல்லாம் மறந்து எங்களைப் பற்றிக் கீழ்த்தரமாகவா பேசுவது?
கம்யூனிஸ்ட் நண்பர்கள் ஒரு புறமிருக்க, கண்ணிய மிக்க நமது டில்லிப் பிரதமரோ அவர்களை எல்லாம் ஒரு படி மிஞ்சிவிட்டார். அவர் நம்மைப் பார்த்து ‘காட்டுமிராண்டிகள், என்று கூறுகிறார் ! யாரைப் பார்த்து? நாம் யார்? நமது வரலாறு என்ன? எதிரியை அழித்து வெற்றிச் சங்கு ஊதும்வரை வாளை உறையிலிடாத வீரப் பரம்பரையினர் நாம்! திரும்பிப்பார்க்கிறோம் – தமிழர்களை இகழ்ந்து விட்டனர் என்ற ஒரே காரணத்துக்காக, கனக விசயன் தலைகளிலே கல் ஏற்றிய சேரன் செங்குட்டுவனின் வாள் ஜொலிக்கிறது! அத்தகைய நம்மைப் பார்த்துத்தான் “நான்சென்ஸ்” என்று ஒரு முறை சொன்னார் பண்டித நேரு. அண்ணா மறந்தார் – மன்னித்தார்.
ஆனால் நேருவோ மீண்டும் தி.மு.க. வினர் கலந்து கொண்ட திருத்தணி ரயில் நிறுத்தப் போராட்டத்தை “நான்சென்ஸ் என்றார். நான்சென்ஸ் என்று கூறாதே! வாபஸ் வாங்கு ” என்பதற்காகத்தான் மீண்டும் ரயிலை நிறுத்தினோம்!
மீண்டும் நேரு வந்தார் – வந்தவர் நம்மை ‘காட்டு மிராண்டிகள்’ என்று பகர்ந்தார்.
பாவம், நேரு எப்போதுமே நிலைக் கண்ணாடியின் முன் நின்று சொல்ல வேண்டியதை நம்மைப் பார்த்துச் சொல்லி விடுகிறார் துடுக்குத்தனமாக!
அது ஒருபுறமிருக்க, திராவிட முன்னேற்றக் கழகம் ஜஸ்டிஸ் (நீதிக்) கட்சியின் வாரிசு என்று ஆச்சாரியார் ஓரிடத்தில் சொல்லியிருப்பது இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது.
ஜஸ்டிஸ் கட்சி வெள்ளையனுக்கு வால் பிடித்தது என்று சொன்னார்களே, அந்தக் குற்றச்சாட்டு ஒரு புறமிருக்கட்டும். இன்று கழகத்தின் தீவிரவாதிகளில் பலர் முன்பு நீதிக் கட்சியில் இருந்ததே இல்லை. ஏன், நானே, நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறும் நேரத்திலேதான் கட்சியில் சேர்ந்தேன்.
வெள்ளையன் திரு.வி.க.வை நாடுகடத்தினான்; அப்போது பதவி வகித்த நீதிக்கட்சியினர் “திரு.வி.க.வை நாடு கடத்தினால் ராஜினாமா செய்து விடுவோம்” என்றார்கள். நாடு கடத்துவதும் நிறுத்தப் பட்டது. திரு.வி.க. தேசீய வாதிதான்; இருந்தும் நீதிக்கட்சியினர் அவரைப் பற்றி ஏன் கவலைப் பட்டார்கள் என்பதை குற்றம் சாட்டுவோர் உணர வேண்டும்! .
1885-ம் ஆண்டில், பம்பாயில், ஹ்யூம் ” என்ற வெள்ளையரால் ஆரம்பிக்கப் பட்டு, சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் நடந்த முதல் காங்கிரஸ் மாநாட்டிலே என்ன தீர்மானம் தீட்டினார்கள்?-“வெள்ளையனே, வெளியேறப்பா! என்றா? இல்லையே! “சலுகை தரவேண்டும்; ஜமீன்தார்களுக்கு உதவ வேண்டும்; இந்தியர்கட்கு வேலை தரவேண்டும் ” என்று வெள்ளையனைக் கேட்கும் ‘குலாம்’களாகத்தானே இருந் தார்கள்? இதையும் நேரு எழுதி வைத்திருக்கிறார், நமக்கு உதவியாக!
ஜஸ்டிஸ் கட்சியில் சரிகைத் தலைப்பாக்களும், பட்டுப் பட்டாடைகளும், மிட்டா மிராசுகளும் நிறைய இடம் வகித்ததால், வெள்ளையனின் தாசர்களாக இருந்திருக்கலாம். அதனால்தானே ‘சேலம்’ செய்தோம்! அதனால்தானே பி.டி. ராசன் போன்றவர்கள் வெளியேறவும் செய்தார்கள்.
அது எந்தக் காலம் ? இது எந்தக் காலம்? அதற்கிடையே என்ன சம்மந்தம்?
இக்காலத்திலே இந்நாட்டின் நிலை என்ன? ஆரியம் இதை அழுத்திக் கொண்டிருக்கிறது; ஆட்டிப் படைக்கிறது.
சிற்றோடை ஒன்றிலே நீர் குடித்துக் கொண்டிருந்த ஒரு ஓநாய், தனக்கு சற்றுதூரம் தள்ளி நின்று நீர்குடிக்கும் ஆட்டுக் குட்டியைப் பார்த்து, “நீ ஏன் தண்ணீரைக் கலக்குகிறாய்?” என்றதாம். “தண்ணிர் உன் பக்க மிருந்துதானே என் பக்கம் ஓடி வருகிறது. நான் எப்படித் தண்ணீரைக் கலக்க முடியும்? ” என்று பதில் சொல்லியதாம் ஆட்டுக்குட்டி உடனே ஓநாய், “நீ கலக்கா விட்டாலும் உன் முன்னோர் கலக்கியிருப் பார்கள்!” என்றதாம்!
எப்படியாவது ஆட்டுக்குட்டியைக் கொன்றுவிட வேண்டு மென்பது ஓநாயின் நோக்கம்! அதே போலத் தான் ஆச்சாரியார் என்னும் ஓநாய், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆட்டுக்குட்டியைக் கொன்றுவிட எண்ணுகிறார் என்பதைத்தவிர அவரது பேச்சுக்கும் செயலுக்கும் வேறென்ன விளக்கம் தரமுடியும்?
நான் முடிவாகச் சொல்லுகிறேன் – திராவிட முன்னேற்றக் கழகத்தினரை ‘எறும்புகள்’ ‘காட்டுமிராண்டி கள்’ என்றெல்லாம் ஏசினாலும், ‘ஒழித்துக்கட்டி விடுகிறேன்’ என்று விஷச்சபதம் எடுத்துக்கொண்டாலும் அவை எல்லாம் அழிவுப்பாதையை நோக்கி முன்னேறுவதேயாகும்.
ஏனெனில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாவீரர் அமைத்த மாளிகை அசையாது ! அழியாது ! வளரும் !
முற்றும்