கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 2003, செப்டம்பர் 21 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக மாவட்டக் கழக மாநாட்டில் ஆற்றிய எழுச்சிப் பேருரை, இந்த உரை, திமுகவின் அன்றைய அரசியல் நிலைப்பாடு, மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்கள், மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு ஒரு செயல்திட்டத்தை வகுத்துக் கொடுக்கும் விதமாக அமைந்திருந்தது. தமிழகத்தின் உரிமைகள், சமூக நீதி சார்ந்த பிரச்சினைகள், மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் மீதான அதிருப்தி ஆகியவை கலைஞரின் உரையின் மையக் கருத்துகளாக அமைந்தன.
அணிவகுப்போம் அறப்போருக்கு
கலைஞர் உரை
இந்த மாநாட்டைப் பாராட்டிப் பேசிய நம்முடைய கழக முன்னணித் தோழர்கள் எல்லாம் இது மாவட்ட மாநாடல்ல, மாநில மாநாடு என்றார்கள். நான் என்ன சொல்லப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் என்று எனக்குப் புரிகிறது. இது மாநில மாநாடும் அல்ல. மாவட்ட மாநாடும் அல்ல. சொல்லப் போனால் இது மாநாடே அல்ல. இது நாடு.
பேராசிரியருக்குத் தெரியும். இலக்கணப்படி மாநாடு என்றால், அளவைப் பெரிதாக குறிப்பிடுவது “மா” என்பதற்கு, “பெரிய” என்று பொருள். நான் இப்பொழுது அதற்கு நேர் மாறாக “மாநாடு” என்பதற்கு பதிலாக “நாடு” என்று குறிப்பிட்டதற்குக் காரணம், நாட்டுக்குள்ளேதான் மாநாடு நடைபெறும், இங்கே நாடே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்காக நான் அவ்வாறு குறிப்பிட்டேன்.
இந்த நாடு எனப்படும் மாநாட்டில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்ற எழுச்சிமிக்க நிகழ்ச்சிகளைப் பார்த்து நாமெல்லாம் பூரித்துப் போகிறோம். ஏனென்றால், இந்த எழுச்சிக்கு காரணகர்த்தாக்களாக நாமே இருக்கிறோம். எனவே, பூரித்துப் போகின்ற உரிமையும், உணர்வும் இயல்பானது நமக்கு. அந்த நமக்கு. அந்த இயல்பின் அடிப்படையில் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருக்கிறோம். இந்த மாநாட்டு வளாகத்திற்கு “பேரறிஞர் அண்ணா நகர்” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
கொலை வெறியர்களால் மறைந்த என்னுடைய அருமைத் தம்பி பசும்பொன் தா.கிருட்டினன் பெயரால் பந்தல் அமைக்கப்பட்டிருக்கின்றது. தியாக மறவர்களில் ஒருவரான தம்பி பண்ருட்டி மணி பெயரால் அமைக்கப்பட்ட அரங்கத்திலேதான் நாங்களெல்லாம் அமர்ந்திருக்கிறோம். எந்த நேரத்திலும் கழகத் தலைமைக்கு பணிந்து போகிற, எதிரிகளுக்கு இடம் தராமல், கட்டுப்பாட்டை காப்பாற்றுகின்ற விருத்தாசலம் செல்வராஜ் அவர்களுடைய பெயரால் அமைக்கப்பட்டது கொடிமேடை.
காலையிலே பேராசிரியர் குறிப்பிட்டதைப் போல், என்னுடைய அருமைத் தோழரும் எனக்குச் சொந்தக்காரர் என்று சொல்லிக்கொள்வதிலே பெருமை அடைபவருமான, ‘அத்தான், அத்தான்’ என்றே என்னை அழைத்து, இளமைப்பருவத்திலேயே நரிக்குறவர் வேடம் பூண்டு, சிதம்பரம் தெருக்களில் ஆடிப்பாடி, கொள்கை வளர்த்த தங்கம் பொன். சொக்கலிங்கத்தினுடைய பெயரால் நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது. எளியவராய், இனியவராய், ஏழைகளின் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட வானூர் முத்துவேல் பெயரால் முகப்பு.
எந்தத் தியாகிகளையும், தீரர்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் மறக்கவில்லை, நன்றி மறவாத இயக்கம் இந்த இயக்கம் என்பதற்கு அடையாளமாக சின்னசேலம் வாசுதேவன், கச்சிராப்பாளையம் மாரியப்பன், வடக்கனந்தல் நெடுமாறன், அரசம்பட்டு முத்தையன், விழுப்புரம் கோபால், திண்டிவனம் மிசா துரை, மேல்மலையனூர் பவுணன், சிதம்பரம் துரை.கிருஷ்ணமூர்த்தி, கெடார் பாண்டுரங்கன் ஆகியோரது பெயர்களால் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இன்னும் சிலருடைய பெயர்கள் ஒருவேளை விட்டுப்போயிருக்கலாம். ஒன்றாக இருந்த தென்னார்க்காடு மாவட்டத்தில் திராவிட இயக்கம் வளர்த்த, திராவிட முன்னேற்றக் கழகம் வளர்த்த இரண்டு மாவீரர்களுடைய பெயர்கள் தோரண வாயிலுக்கோ, முகப்புக்கோ வைக்கப்படாவிட்டாலும்கூட, அவைகள் எல்லாம் ஏற்கனவே பல மாநாடுகளுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் என்ற காரணத்தால், அவைகள் தோரண வாயில்களாக நம்முடைய இதயத்துக்குள்ளேயே விளங்குகின்றன என்ற வகையில் கடலூர் இளம்வழுதி அவர்களுடைய பெயரையும், ஏ.கோவிந்தசாமி அவர்களுடைய பெயரையும் நான் இந்த நிறைவுரையாற்றுகின்ற நேரத்திலே நினைவுகூர்வது எனக்குப் பெருமை என்று கருதுகின்றேன்.
இந்த மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெற உழைத்த வரவேற்புக்குழுத் தலைவர் தம்பி பொன்முடி, உள்ளபடியே இன்றைக்குத்தான் பொன்முடி ஆகியிருக்கிறார். ஒரு தேர்தல் நேரத்திலே, அவரை என்னிடமும், பொதுச்செயலாளரிடமும் அறிமுகப்படுத்தியபோது, “இவர் திராவிட இயக்கத்திலே மிகவும் ஈடுபாடு கொண்டவர். ஆசிரியர் போராட்டத்திலே கலந்துகொண்டு, 4 மாதமோ, 6 மாதமோ சிறைச்சாலைக்குச் சென்றவர் என்று சொல்லி, இவரை விழுப்புரத்திலே நிறுத்தினால் வெற்றி நிச்சயம்” என்றார்கள். பெயர் என்ன என்று கேட்டேன். தெய்வசிகாமணி என்றார்கள். தெய்வசிகாமணியாக திராவிட முன்னேற்றக் கழகத்திலே நுழைந்தவர், பொன்முடியாக புனைபெயர் கொண்டு உழைத்தவர், இந்த மாநாட்டை இவ்வளவு வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் இன்றுதான் பொன்முடி என்ற பெயருக்கு பொருத்தமானவர் என்று ஆகியிருக்கிறார்.
மாநாட்டுச் செயலாளர்களாக எஸ்.எஸ்.பன்னீர் செல்வம், உதயசூரியன், இராதாமணி, துணைச் செயலாளர்களாக நடராசன், மூக்கப்பன், சேதுநாதன், அழகுவேலு, பஞ்சாட்சரம், பச்சையப்பன், நிதிக்குழுத் தலைவராக ஆதிசங்கர் எம்.பி., – அவர் நிதிக்குழுத் தலைவர் மாத்திரமல்ல; அவர் இந்த மாநாட்டுப் பந்தலிலும், அணிவகுப்பிலும் ஆடி ஓடியதையெல்லாம் பார்த்தபோது, நிதிக்குழு தொண்டராக பணியாற்றுகிறாரோ என்று கருதினேன். செயலாளராக மணிக்கண்ணன், துணைச் செயலாளர்களாக திருக்காமு, பெருமாள், சதா. மகாலிங்கம், கண்ணன், குமுதம் அம்மாள், பந்தல் குழுத் தலைவராக விஜயகுமார், செயலாளராக நந்தகோபால், மேடைக்குழுத் தலைவராக என்னுடைய நல்லுபசாரத்திலே நன்கு பழக்கப்பட்ட தம்பி ஏ.ஜி.சம்பத், செயலாளர்களாக பொன்.இராதாகிருஷ்ணன், துரை. பெரியசாமி, உபசரிப்புக் குழுத் தலைவராக ஆர்.ஜனகராஜ், செயலாளர்களாக புதுவை சிவக்குமார், புதுவை சிவா, கே.வி.சிட்டிபாபு, தீர்மானக்குழுத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஜி.வெங்கட்ராமன், செயலாளராக க.வேங்கடபதி, அணிவகுப்புக் குழுவின் தலைவராக புஷ்பராஜ், செயலாளர்களாக வசந்தவேல், அன்னியூர் ஏ.சிவா, டி.என்.ஜே.சம்பத், தங்க ஆனந்தன், டி.கே.கிருஷ்ணன், விளம்பரக் குழுத் தலைவராக கே.எஸ்.மஸ்தான் (அவரது உருவத்தைப் போலவே பல பதாகைகள் விழுப்புரம் முழுவதும் நிறைந்திருப்பதை நான் கண்டேன்) செயலாளர்களாக டி.ஆர்.ரவி, வளவனூர் வைத்தியலிங்கம், வானூர் சங்கர், மாநாட்டு மலர்க் குழுத் தலைவராக புலவர் கண்ணப்பன், செயலாளராக புலவர் சீத்தா, தொண்டரணித் தலைவராக கோ.பார்த்தீபன் தொண்டரணித் தலைவர் என்றதும் கைதட்டுகிறீர்கள் மகிழ்ச்சி. தொண்டரணித் துணைத் தலைவர்களாக ரவிதுரை, இளமதி, ராஜாத்தி, எஸ்.எஸ்.கணேசன், பிர்லா செல்வம், செழியன் இப்படி மாநாட்டு அலுவலகப் பொறுப்பு, நகர அலங்காரக் குழு, மகளிர் தொண்டர் அணி, மகளிர் குழு இவைகளையெல்லாம் மிகச் சிறப்பாக நடத்திய கழகத்தினுடைய உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை, வாழ்த்துக்களை, பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநாடு போல, இனிமேல் யாரும் ஒரு மாநாடு நடத்த முடியாது என்று சொன்னதிலே என்னுடைய தம்பி வீரபாண்டி ஆறுமுகத்திற்கு கோபம். ஏன் என்றால் அவர் மாநாடு நடத்தப் போகிறார். இதைவிட ஒரு சிறப்பான மாநாடு நடத்தக்கூடிய ஆற்றல் பெற்றவர் அவர். நடத்திக் காட்டியவர் அவர். இப்படி ஒரு போட்டி தி.மு.கழகத்திலே மாநாடு நடத்துவதிலே, தேர்தல் நிதி திரட்டுவதிலே ஏற்பட்டால், அதிலே கிடைக்கும் இலாபமெல்லாம் எனக்குத்தான். எனக்குத்தான் என்றால் தலைமைக் கழகத்திற்குத்தான். அந்த ஆதாயம் எனக்கும், பொதுச் செயலாளருக்கும், பொருளாளருக்கும், தலைமைக்கழகத்திற்கும் கிடைக்கின்ற ஆதாயமாகும். இருந்தாலும்கூட, இந்த மாநாட்டு விவகாரத்திலே பொன்முடியும், வீரபாண்டி ஆறுமுகமும் போட்டி போட்டுக் கொள்ளும்போது, எனக்கு இரண்டு பொண்டாட்டிக்காரன் நினைவுதான் வந்தது. அனுபவத்தின் காரணமாக!
ஒருவரைப் பாராட்டினால், ஒருவருக்கு கோபம் வருவது இயல்பு. ஆனால், கணவனைப் பொறுத்தவரையில் அவனுக்கு இரண்டு பேரும் சமம்தான். அவனது மனைவி களுக்குள் வேண்டுமானால் போட்டி மனப்பான்மை இருக்கலாம். அதை நான் பொறாமை மனப்பான்மை என்று சொல்லமாட்டேன்.
“இன்றைக்கு சமையல் பிரமாதம்” என்று சொல்லிவிட்டு, “சமைத்தது யார்” என்று கேட்டால், சமைத்தது இரண்டு பேரில் ஒருவர் என்றால், சமையல் பிரமாதம் என்று சொன்னால், இன்னொருவரை சமாதானப்படுத்துவதற்கு, “நாளைக்குப் பார். இதைவிட பிரமாதமாக அவள் சமைப்பாள், சாம்பாரும், ரசமும்” என்று சொன்னால் தான் அவன் தப்புவான். அதைப்போல, இன்றைக்கு பிரமாதம் என்று சொல்லப்படுகிற சமையல், நாளைக்கு இவர்களாலே இதைவிட பிரமாதமாக ஆக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த மாநாட்டிற்கு இன்னொரு சிறப்பு – வீரபாண்டி ஆறுமுகம் இங்கு குறிப்பிட்டதைப் போல், ஏறத்தாழ 45 பேருக்கு தலைப்புகளில் உரையாற்ற வாய்ப்பு தரப்பட்டது. அதில் நிர்மலா சுரேஷ் ஒருவர்தான் அவசர வேலை காரணமாக வெளிநாடு சென்ற காரணத்தால் கலந்துகொள்ள இயலவில்லை. 44 தலைப்புகளில் நம்முடைய கழக மாமணிகள், முன்னணியினர், ஆற்றல்மிகு பேச்சாளர்கள் பேசியிருக்கிறார்கள். கழகத்தினுடைய கலைஞர்கள் 5 பேர் சிறப்புரையாற்றியிருக்கிறார்கள். காலையிலே பேசிய தம்பி நெப்போலியனுடைய பேச்சைப் பற்றி, மாலையிலே சரத்குமார் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார். இவர்களுக்கெல்லாம் இயக்கத்திலே முந்தியவர் தம்பி சந்திரசேகர். அதற்குப் பிறகு இயக்கத்திலே இணைந்த சிரிப்பு நடிகர் குமரிமுத்து – இவர்கள் அனைவரும் ஆற்றிய உரைகள் – ஏதோ நடிகர்கள் ஆற்றிய உரைகள் என்று இல்லாமல், இயக்கத்திலே பண்பட்டவர்கள், இயக்கக் கொள்கைகளை புரிந்துகொண்டவர்கள் என்ற நிலையிலே அந்த உரைகள் எல்லாம் அமைந்தன.
மாநாட்டுத் தலைவரை வழிமொழிந்து ஆறு பேர் பேசியிருக்கிறார்கள். அந்த ஆறு பேருடைய பேச்சும், மாநாட்டுத் தலைவர் தம்பி ஸ்டாலினுடைய பேச்சுக்கு ஊக்கமாக அமைந்தது என்று நான் சொல்வேன். அந்த ஆறு பேரும் ஆற்றிய உரைதான், ஸ்டாலினுடைய பேச்சு சிறப்பாக இருந்தது என்று பத்திரிகைகளெல்லாம் எழுதுவதற்கு காரணமாக அமைந்தது.
தந்தைக்கு நேராகவே மகனைப் பாராட்டினார்கள் என்று நான் கருதமாட்டேன். தலைவனுக்கு நேராக ஒரு தொண்டனைப் பாராட்டினார்கள் என்று நான் கருதிக் கொள்கிறேன்.
நான் அந்தத் தொண்டன் தம்பி ஸ்டாலினுக்கு சொல்லிக்கொள்வேன். நான் எனது 26வது வயதிலே ஒரு மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் வாய்ப்புப் பெற்றேன். நான் பிறந்த ஆண்டு 1924. கோவில்பட்டியில் 1950-ல் நடைபெற்ற திருநெல்வேலி மாவட்ட மாநாட்டிற்கு தலைமை வகிக்க அறிஞர் அண்ணா அவர்கள் என்னுடைய 26ஆவது வயதிலே வாய்ப்பு வழங்கினார்கள். உனக்கு அந்த வாய்ப்பு 50வது வயதிலேதான் கிடைத்திருக்கிறது. இவ்வளவு தாமதமாக கிடைத்ததற்கு காரணம், எதுவும் அவசரமாக, விரைவாக கிடைப்பதைவிட, தாமதமாக கிடைத்தால் அதற்கு வலு அதிகம். அந்த வலு உனக்குச் சேர்ந்திருக்கிறது. அந்த வலுவை மேடையிலே வீற்றிருக்கின்ற நம்முடைய கழக முன்னணித் தலைவர்களும், எதிரே வீற்றிருக்கின்ற என்னுடைய உடன்பிறப்புக்களும் உனக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எதையும் ஜனநாயக ரீதியிலேதான் இந்தக் கழகம் சந்திக்கும். அதையும் நீ மறந்துவிட மாட்டாய்.
காலையிலே பேராசிரியர் அவர்கள் பேசியதை கவனித்திருப்பாய் என்று கருதுகிறேன். அவர் இன்று மாத்திரமல்ல; இதற்கு முன்பு ஒருமுறை அவ்வாறு பேசினார். பேராசிரியர் எனக்கு ஒரு வயது மூத்தவர். என்னைப் பொறுத்தவரையில் அறிஞர் அண்ணா இல்லாத குறையை நீக்கிக் கொண்டிருப்பவர். அவர் காலையில் பேசும்போது, “அண்ணா மறைந்த பிறகு கலைஞர்தான் இந்தக் கழகத்தை நடத்திச் செல்வார் என்று எல்லோரும் முடிவெடுத்தபோது, நான் அதிலே கொஞ்சம் அபிப்பிராய பேதம் கொண்டேன். நான் நம்பிக்கை கொள்ளவில்லை. ஏனென்றால் கலைஞர் கொஞ்சம் கோபக்காரர், அவரால் இந்த இயக்கத்தை நடத்தமுடியுமா ? என்று சந்தேகப்பட்டதுண்டு. அப்படி சந்தேகப்பட்ட நான், அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால், அவரைத் தவிர இந்த இயக்கத்தை நடத்துவதற்கு நாதியில்லை என்பது மாத்திரமல்ல; அவர் ஆற்றல் வாய்ந்தவர் என்பதை இப்பொழுது ஒப்புக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். அதைப் போல உன் விஷயத்திலும் எல்லோரும் உன்னை அங்கீகரித்ததாக நீ கருதிக் கொண்டு, நடைபோட்டுவிடக் கூடாது. எங்கெங்கேயிருந்து உனக்கு அங்கீகாரம் கிடைக்க வில்லை என்பது வெளியே தெரியாமலே கூட இருக்கலாம். அது உனக்கு புலப்படாமலேகூட இருக்கலாம். அந்த அங்கீகாரத்தையும் பெறுகின்ற அளவிற்கு – எப்படி நான் பேராசிரியருடைய அங்கீகாரத்தைப் பெற்று, அவராலேயே தலைவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிற அளவிற்கு வளர்ந்தேனோ, அந்த அணுகுமுறையை நீ கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இந்த மாவட்ட மாநாட்டில் உனக்கு கிடைத்த தலைமைப் பதவி நிலைக்கும் என்பதை மாத்திரம் உனக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநாடு ஒரு மாதத்திலே ஏற்பாடு செய்யப்பட்டது. நான் இடையிலே ஒருமுறை வந்து பார்த்தேன். நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் எல்லாம் வந்து பார்த்திருக்கிறார்கள். தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வந்து பார்த்துவிட்டுப் போனார். இன்றைய மாவட்ட மாநாட்டினுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து பார்த்துவிட்டுப் போனார். வீரபாண்டி ஆறுமுகமே வந்து பார்த்துவிட்டு, நிதிஉதவி கூட செய்துவிட்டுப் போனார் என்று கேள்விப்பட்டேன். பேச்சிலேதான் போட்டி; செயலிலே போட்டி கிடையாது அதைப்போல பக்கத்து மாவட்டத்திலே உள்ள திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு பார்த்தது மாத்திரமல்ல; இந்த மாநாடு சிறப்புற பங்கும் ஏற்றார் என்று கேள்விப்பட்டேன். பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி அவர்கள் வந்து பார்த்துவிட்டுச் சென்றார். முதலிலே குறிப்பிட்டதைப் போல, நானும் வந்து பார்த்துவிட்டுத்தான் போனேன்.
ஆனால், பொன்முடி! இந்த மாநாடு இவ்வளவு , சிறப்பாக, வெற்றிகரமாக உனக்கு பெருமை தேடித் தருகின்ற அளவிற்கு அமைந்ததற்குக் காரணம் – நீ நன்றி சொல்ல வேண்டியது எனக்கல்ல, உன்னோடு சேர்ந்து பணியாற்றிய கழக உடன்பிறப்புக்களுக்கு அல்ல, நான் குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு அல்ல, தலைமைக் கழகத்திற்கு அல்ல, நீ நன்றி சொல்லவேண்டியது இப்போது இருக்கிற அரசாங்கத்திற்கு, போலீஸ் இலாகாவிற்கு!
நான் கேட்கிறேன். எவ்வளவு பெரிய கூட்டம் இது. தம்பி துரைமுருகன் குறிப்பிட்டதைப் போல, நான் தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களுக்கு செல்லும்போது, ஒவ்வொரு கூட்டத்தையும் மகா சமுத்திரம் என்று சொல்வேன். வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் கீழே விழுந்து தேனீக்களாக உருவெடுத்து அவைகள் எல்லாம் கட்டிய தேனடை போன்றது இக்கூட்டம் என்று சொல்வேன். அவ்வளவு பெரிய கூட்டம் இந்தக் கூட்டம். பரமக்குடியா, திருநெல்வேலியா, திருச்சியா, மதுரையா எல்லாவற்றையும் விஞ்சுகின்ற அளவிற்கு நடந்து கொண்டிருக்கிற இந்தக் கூட்டத்தில் நான் தேடித் தேடிப் பார்க்கிறேன். நல்லவேளை மாசிலாமணி தலைமையில், பொன்முடியினுடைய ஆற்றலால் ஒருபெரிய எண்ணிக்கை கொண்ட தொண்டர் படை அமைக்கப்பட்டிருக்கிறது. தொண்டர்படைத் தோழர்களையெல்லாம் நான் காவல்துறை நண்பர்களைப் போல கருதுகிறேன்.
காவல்துறை நண்பர்களுக்கு, அதிகாரிகளுக்கு ஒரு நம்பிக்கை. திராவிட முன்னேற்றக் கழகம் கண்ணியம் வாய்ந்த கழகம், கட்டுப்பாடுமிக்க இயக்கம். அங்கே நாம் போய் செய்யவேண்டிய வேலை என்ன இருக்கிறது, என்ன கிழிக்கப் போகிறோம். கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் அவர்களே காப்பாற்றுவார்கள். அப்படி பயிற்றுவிக்கப்பட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற நம்பிக்கை காவல்துறை நண்பர்களுக்கு இருக்கின்ற காரணத்தினால்தான், அவர்கள் யாரும் இங்கே வரவில்லை போலும்.
அவர்கள் எங்கேயோ காவல்புரிகிறார்கள் என்று சொன்னார்கள். அது எங்கே, எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகளை நான் மிகுந்த கனிவோடு கேட்டுக்கொள்கிறேன். நியாயமா இது ? நான் சுயநலமாகப் பேசவில்லை. என்னைப்பற்றி தற்பெருமையாக கருதவில்லை.
ஆபத்துக்கள் விளையக்கூடியவர்கள் என்ற பட்டியலில் ‘இசட்’ பிரிவின் கீழ் நான் இருக்கிறேன். நான் கலந்து கொள்கின்ற ஒரு கூட்டத்தில், நீங்கள் தருகின்ற பாதுகாப்புக்கு என்ன பெயர் ? நல்லவேளையாக மத்திய சர்க்கார் தம்பிகள் டி.ஆர்.பாலு, ராஜா போன்றவர்கள், அன்றைக்கு எடுத்த முயற்சியின் காரணமாக ஏழெட்டு கறுப்புப் பூனைப்படையினர் என்னுடன் வந்து கொண்டிருக்கிறார்கள். அது இசட் பிரிவு பாதுகாப்பு என்பதற்காக. நான் அந்தப் பூனைப்படை இல்லாமல்கூட எங்கும் தாராளமாக செல்லக்கூடிய மன இயல்பு படைத்தவன். 1945 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியிலே அடித்துப் போட்டார்களே, அதைவிடவா எனக்கு ஆபத்து வந்து விடப்போகிறது? இந்த ஆட்சியில் போலீஸ்காரர்களே என்னை அடித்தார்களே, அதைவிடவா நடந்து விடப்போகிறது. நான் கவலைப்படவில்லை.
ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரு போலீஸ்கூட இல்லை என்றால் யாருக்குக் கேவலம் ? எனக்குக் கேவலமா? இல்லை. அல்லது நாடாளுகின்ற மகாராணி ஜெயலலிதாவுக்கு கேவலமா என்றால் இல்லை. அவர்களுக்கும் கேவலம் இல்லை. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து, நாளைக்கு உங்களை மேலிடத்திலிருந்து மனித உரிமைக் கழகத்திலிருந்து உங்களை கேள்வி கேட்கும்போது, யார் இதற்கு பொறுப்பு என்று பதில் சொல்ல வேண்டிய போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்களே – டி.ஜி.பி., டி.ஐ.ஜி., எஸ்.பி., டி.எஸ்.பி. என்றெல்லாம் இருக்கிறார்களே, அவர்களுக்கல்லவா இந்தப் பொறுப்பு இருக்கிறது.
அதனால் நான் இப்படியல்லவா கேட்க வேண்டியிருக்கிறது. கண்ணகி மதுரைத் தெருவிலே கேட்டாளாம், “தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்?” என்று. தெய்வமும் இருக்கிறதா என்று கேட்டாளாம். அதைப் போல, நான் விழுப்புரம் மாநாட்டைப் பார்த்து “போலீசும் உண்டு, கொல்? போலீசும் உண்டு கொல்? என்றல்லவா கேட்க வேண்டியிருக்கிறது. பதில் வரும் எனக்கு. ‘போலீசும் உண்டு. கொல்’ என்று. இதுதான் இன்றைய ஆளுங்கட்சியினுடைய இலக்கணம். போலீஸ் உண்டு, ஆகவே கொல் என்று கொல்லக்கூடியவர்கள் இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். இதை எந்த வகையிலே நாம் எதிர்க்கப் போகிறோம்.
என்னுடைய தம்பிமார்கள் பலபேர் இங்கே வீராவேசமாகப் பேசினார்கள். வீராவேசமாகப் பேசினார்கள் என்று நான் சொல்வது கிண்டலுக்காக, கேலிக்காக சொல்வது அல்ல. அவர்களுடைய உள் உணர்வை நான் அறிவேன். நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த உணர்ச்சிகள் வெளிப்பட்டன, புகைந்து கொண்டே இருந்த எரிமலை ஒரு நாள் பொங்கியதைப் போல. இந்த மாநாட்டிலே பொங்கி வழிந்திருக்கிறார்கள். புரிகிறது எனக்கு.
ஆனால், நானும் சென்ற இடமெல்லாம் சந்தித்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் எல்லாம், ஒரு புரட்சிக்கு இந்த நாடு தயாராகட்டும், மக்கள் தயாராகட்டும் என்று சொல்லி வந்திருக்கின்றேன். அது எத்தகைய புரட்சி ? நான் ஜெயப் பிரகாஷ் நாராயண் அல்ல. ஆனால், அவரிடத்திலே பாடம் கற்றுக் கொண்டவன். அவர் நடத்திய முழுப் புரட்சி அமைதியான புரட்சி, அறவழிப் புரட்சி. சர்க்காரை எதிர்க்கின்ற புரட்சிதான். ஆனால், சாத்வீகமான புரட்சி. அந்தப் புரட்சிக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி வந்திருக்கிறேன். இன்றைக்கும் இந்த மாநாட்டிலே அதைத்தான் நினைவூட்ட விரும்புகிறேன். அந்தப் புரட்சியை ஆயுதத்தால் நடத்தப் போகிறோமா, இல்லை. தீவிரவாத முறையா, இல்லை. ஜனநாயக முறையில் செய்ய வேண்டிய புரட்சி அது. மக்களை ஒன்று திரட்ட வேண்டிய புரட்சி. அந்தப் புரட்சி ஜனநாயகப் புரட்சி என்ற காரணத்தால், தேர்தலிலே நாம் பெறுகின்ற வெற்றியின் மூலமாக அந்தப் புரட்சியிலே நாம் வெற்றிபெற வேண்டும். அந்த வெற்றியைப் பெற வேண்டுமேயானால், நாம் எதிர்ப்பது யாரை என்பதை ஒருகணம் சிந்தித்து செயல்பட வேண்டுமென்று, நானும் பேராசிரியரும், பொதுக்குழு உறுப்பினர்களை யெல்லாம் அழைத்துப் பேசிய நேரத்தில், குறைந்த பட்சம் ஒரு 25 கோடி ரூபாயாவது தேர்தல் நிதியாக நாம் சேர்க்கவேண்டும் என்ற கருத்தை நான் வெளியிட்டேன்.
அதைத் தொடர்ந்து மாவட்டக் கழகச் செயலாளர்களுடைய கூட்டத்தைக் கூட்டி மாவட்டங்களுக்கு, இவ்வளவு ரூபாய் என்று வரையறுத்துக் கொடுத்து நிதி திரட்டித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதன்படி எல்லா மாவட்டங்களும் நிதி தந்து முடித்து விழுப்புரம் மாநாட்டிலே அது அறிவிக்கப்படும் என்று சொன்னேன். அறிவிக்கப்பட்டு அதிலே எந்த மாவட்டம் முதல் நிலையிலே இருக்கிறதோ அந்த மாவட்டத்திற்கும், அதற்குப் பிறகு அடுத்த நிலை, மூன்றாவது நிலை என்ற மாவட்டங்களுக்கு, அய்யா, அண்ணா, கழகம் பிறந்தநாள் கொண்டாடப்படுகிற முப்பெரும் விழாவில், தலைமைக் கழகத்தின் சார்பில் பரிசளிக்கப்படும் என்றும் முரசொலி கடிதத்திலே எழுதியிருந்தேன். அதன்படி மாவட்ட ரீதியாக வந்த தொகையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
தேனி மாவட்டத்திற்கு 50 லட்ச ரூபாய் என்று நிர்ணயித்தோம். அங்கே தேனீக்கள் சரியாக பறக்கவில்லை. தேனீக்கள் பறக்கவில்லையோ, பூக்கள் கிடைக்கவில்லையோ தெரியவில்லை. அங்கே இதுவரையில் வந்திருக்கிற ரூபாய் 28 லட்சம்தான்.
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு நிர்ணயித்த தொகை 50 லட்சம். நல்ல திறமையான தேனீக்கள்தான். ஆனால் 45 லட்சம்தான் சேகரித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை 50 லட்சம். 50 லட்சத்தையும் கொடுத்துவிட்டார்கள்.
கன்னியாகுமரி சின்னஞ்சிறு மாவட்டம். 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. 50 லட்சமும் வழங்கிவிட்டார்கள்.
நீலகிரி மாவட்டம் சின்னஞ்சிறு மாவட்டம். ஏற்கனவே தேயிலைப் பிரச்சினையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற மாவட்டம். நிர்ணயிக்கப்பட்ட தொகை 50 லட்சம். 50 லட்சமும் வழங்கப்பட்டுவிட்டது.
சிவகங்கை மாவட்டம். அதுவும் சிறிய மாவட்டம்தான். நிர்ணயிக்கப்பட்ட தொகை 50 லட்சம். அந்த 50 லட்சமும் வழங்கிவிட்டார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம். நான் பிறந்த மாவட்டம். அங்குதான் நான் பிறந்த திருக்குவளை இருக்கிறது. அந்த மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை 50 லட்சம் ரூபாய். அவர்கள் வழங்கியது 51 லட்சம் ரூபாய்.
திருவாரூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை 50 லட்சம் ரூபாய். அவர்கள் வழங்கியது 51 லட்சம் ரூபாய்.
கரூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டது 50 லட்சம். சிறிய மாவட்டம்தான். வழங்கியது 54 லட்சம்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டது 50 லட்சம். வழங்கியது 55 லட்சம்.
நாமக்கல் மாவட்டம் ஒரு சிறிய மாவட்டம். சேலத்தோடு ஒட்டியிருக்கிற மாவட்டம். அந்த நாமக்கல் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை 50 லட்சம். அவர்கள் வழங்கியது ஒரு கோடியே ஒரு லட்சம். எனக்கு முதலில் ஒரு பயம் இருந்தது. நாமக்கல் என்று பெயர் இருப்பதால் நாமம் போட்டுவிடுவார்களோ என்று. (சிரிப்பு) ஆனால், நாமம் போடவில்லை, வேறு சில மாவட்டங்களைப் போல! 50 லட்சம் ரூபாய் கேட்டோம். ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார்கள்.
விருதுநகர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி. கொடுத்தது என்னவோ 70 லட்சம்தான்.
நெல்லை மாவட்டம் பெரிய மாவட்டம். பல முன்னணியினர் எல்லாம் இருக்கிற மாவட்டம். தலைவர்கள் ஏராளமாக இருக்கிற மாவட்டம். அதனாலேயே குறைந்து விட்டதோ என்னவோ. நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். 65 லட்சம் தான் வழங்கப்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டம் ஒரு கோடி நிர்ணயிக்கப்பட்டது. 81 லட்சத்து 50ஆயிரம் ரூபாய்தான் வந்திருக்கிறது. பாக்கி வரவில்லை.
திருச்சி மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். கொடுத்தது ஒரு கோடி ரூபாய்.
வடசென்னை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். கொடுத்தது ஒரு கோடி ரூபாய்.
தூத்துக்குடி ஒரு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு கோடியே ஒரு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். கொடுத்தது ஒரு கோடி ஐந்து லட்ச ரூபாய்.
தருமபுரி மாவட்டம் ஒரு கோடி நிர்ணயிக்கப்பட்டது ஒரு கோடியே ஆறு லட்சம் கொடுத்து விட்டார்கள்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். கொடுத்தது ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய். அதிலே தான் மாவட்டக்கழக அலுவலகம் கட்ட 50 லட்சம் ரூபாய் கேட்கிறார் பொன்முடி. பொதுச்செயலாளருடன் கலந்துபேசி பரிசீலிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். (மேடையிலேயே பொதுச் செயலாளரிடம் – கொடுக்கலாமா? என வினவுகிறார் தலைவர் கலைஞர்).
தஞ்சை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். பஞ்சத்தால் பரிதவிக்கிற அந்த மாவட்டத்தில் ஒரு கோடியே பதினோரு லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். ஒரு கோடியே 19 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் – வறட்சியான மாவட்டம்தான். ஒரு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு கோடியே 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள்.
வேலூர் மாவட்டத்திற்கு ஒரு கோடி நிர்ணயிக்கப் பட்டது. ஒரு கோடியே 25 லட்சம் கொடுத்திருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் ஒரு கோடி அவர்களுக்கு நிர்ணயித்தது. முதலிலேயே ஒரு கோடி ரூபாயை பன்னீர்செல்வம், ஸ்டாலினிடம் வழங்கியிருக்கிறார். இன்றைக்கு 56 லட்சம் கொடுத்திருக்கிறார். மொத்தம் 1 கோடியே 56 லட்சம்.
தென்சென்னை மாவட்டத்திற்கு ஒரு கோடி நிர்ணயிக்கப்பட்டது. இன்று கொடுத்ததோடு சேர்த்து ஒரு கோடியே 61 லட்சம் கொடுத்திருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிர்ணயிக்கப் பட்டது. கொடுத்தது ஒரு கோடியே 52 லட்சம்.
கோவை மாவட்டத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. கொடுத்தது ஒரு கோடியே 80 லட்சம்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. கொடுத்தது இரண்டு கோடியே இரண்டு லட்சம் ரூபாய்.
சேலம் மாவட்டம் – ஒரு கோடி ரூபாய் நிர்ணயிக்கப் பட்டது. அவர்கள்தான் அதிகத் தொகையாக இரண்டு கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.
புதுவை மாநிலம் 11 லட்ச ரூபாய்.
சில்லறையாக என்னிடத்திலும், துணைப் பொதுச்செயலாளர் தம்பி ஸ்டாலினிடத்திலும் கொடுத்த தொகை 15 லட்சம் ரூபாய்.
எல்லாவற்றையும் சேர்த்தால், இதுவரையில் மொத்தம் சேர்ந்த நிதி 30 கோடியே ஐம்பதாயிரம் ரூபாய்.
இந்த கணக்கு விபரத்தை நான் படித்ததற்கு காரணம் பாக்கி வைத்திருப்பவர்கள், பாக்கியை வழங்கி விடவேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தானே தவிர, வேறல்ல.
நான் முதலிலே காவல்துறையைப் பற்றி குறைபட்டுக் கொண்டேன். அவர்களுக்கு என்ன கோபமோ தி.மு.கழகத்தின் மீது தெரியவில்லை. இன்றைக்கு நான் இருக்கின்ற காவல்துறை அதிகாரிகள், நண்பர்கள் எல்லாம் தி.மு.கழக ஆட்சியிலே காவல்துறைக்கு என்னென்ன நன்மைகள் செய்யப்பட்டன என்பதை அறியாதவர்கள். ஏனென்றால், தி.மு.க. 67ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலே ஆட்சிக்கு வந்து 69ஆம் ஆண்டு நான் முதலமைச்சராகி போலீஸ் அமைச்சராகவும் இருந்தபோதுதான், முதன்முதலாக காவல்துறை நண்பர்களுடைய கவலையைப் போக்க என்ன செய்யலாம் என்று எண்ணிப் பார்த்து, அவர்களுடைய குறைகளை, கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு குழு கோபாலசாமி ஐ.சி.எஸ். (ஓய்வு) தலைமையில் முதல் போலீஸ் கமிஷனை அமைத்தேன். இந்தியாவிலேயே போலீஸ்காரர்களுடைய குறை தீர்க்க முதன்முதலாக போலீஸ் கமிஷன் அமைத்தது தமிழ்நாடுதான். தி.மு.கழக ஆட்சிதான். அவர் ஐ.சி.எஸ். அதிகாரி. ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ல. ஐ.ஏ.எஸ். என்றால் இப்பொழுது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஐ.ஏ.எஸ். என்றால் இந்தியன் அட்மினிஸ்டிரேட்டிவ் சர்விஸ் என்பார்கள். ஆனால், இப்போது ஐ.ஏ.எஸ். என்றால், “இந்தியன் அம்மா சர்விஸ்” என்று அர்த்தம். அப்படியும் சில பேர் அந்த சர்விசில் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த மாநாட்டில் உட்காருவதற்கு மணல் போட எண்ணி, நூறு வண்டி மணல் போட வேண்டுமென்று பொன்முடி மாவட்ட அதிகாரிகளை பார்த்துக் கேட்டார்; மறுப்பு. மாநாட்டுப் பேரணிக்கு அனுமதி கேட்டார்; அனுமதி மறுப்பு. கேடுகள் எல்லாம் நல்லவைகளாக மாறும் என்பதற்கேற்ப மணல் கிடைக்காத காரணத்தால், பிளாஸ்டிக் துணிகளை ஆங்காங்கு பரப்பி, அதிலே நீங்கள் அமர்ந்திருக்கும் காட்சியை காணுகிறேன். கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அப்படிப்பட்ட அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தி.மு.கழக ஆட்சிக்கு ஏன் தங்களை விரோதிகளாக கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
69-ஆம் ஆண்டு போலீஸ்காரர்களுக்காக போலீஸ் கமிஷன் அமைத்த ஆட்சி தி.மு.கழக ஆட்சி. அந்தக் கமிஷன் உறுப்பினர்கள் 133 பரிந்துரைகளைச் செய்தார்கள். பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக அதனுடைய 115 ஆட்சி. அதுவரையிலே போலீஸ்காரர்களுக்கு ஒரு கான்ஸ்டபிளுக்கு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா ? 90 ரூபாய்.
“90 ரூபாயை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன பண்ணுவது ?” என்று கண்ணீர்விட்டார்கள். அந்தக் கண்ணீரைத் துடைக்கத்தான் இந்தக் கமிஷன் போடப்பட்டது. 90 ரூபாயாக இருந்த மாத சம்பளத்தை, முதன்முதலாக 275 ரூபாய் என்று ஆக்கியவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை இந்தியாவிலே இருக்கின்ற எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.
275 ரூபாயாக உயர்த்தப்பட்ட கான்ஸ்டபிள்களின் சம்பளம் இன்றைக்கு வளர்ந்து வளர்ந்து 2000, 3000 ரூபாய் என்ற அளவிற்குப் போய் நிற்கிறது என்பதை, அன்றைக்கு கான்ஸ்டபிளாக இருந்தவர்கள் இன்றைக்கு ஓய்வு பெற்றிருப்பார்கள். இன்றைக்கு வந்திருக்கின்ற எல்லாம் புதியவர்கள். அவர்களுக்குத் தெரியாது.
அதனால்தான் நம்மை அடிக்க கம்பை ஓங்குகிறார்கள், அடிக்கிறார்கள். அடிக்கட்டும். வன்முறையைத் தடுக்க கம்பைப் பயன்படுத்துங்கள். பலாத்காரத்தை நிறுத்த தீவிரவாதத்தைத் தடுக்க, திருட்டை, கொலையைத் தடுக்க ஆயுதங்களைப் பயன்படுத்துங்கள். ஆனால் இதுபோன்ற பொது நலப் பாதுகாப்பு விஷயங்களில், தி.மு. கழகக் கூட்டங்களை நடத்தவும் விடமாட்டோம், அப்படித் தப்பித்தவறி நடத்த அனுமதித்தாலும் அதைச் சரியாக நடத்த விடமாட்டோம், பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்றால், நாளைக்கு வரப்போகின்ற கேள்விக்கு யார் பதில் சொல்லப் போகிறீர்கள்?
இப்போது கேள்வி வருகிறதே; நீதிமன்றங்களையே எங்களால் மடக்க முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்த உங்களுக்கு, இப்போது நீதி மன்றங்களே உங்கள் தலையிலே அடிக்கிறதே! இந்த ஆட்சியாளர்களின் தலையிலே இப்போது நீதிமன்றங்கள் அடிக்கின்றன. எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.
இப்படி 90 ரூபாய் சம்பளத்திலே இருந்த கான்ஸ்டபிளுக்கு முதன்முதலாக 275 ரூபாய் சம்பளம். 91-96 ஜெயலலிதா ஆட்சியில் காவல்துறைக்கு மொத்த நிதி ஒதுக்கீடு 1714 கோடி ரூபாய். நான் இந்தக் கமிஷன் போட்ட பிறகும்கூட, பரிணாம வளர்ச்சியில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் 91 – 96 வரையில் ஐந்து வருஷத்திற்கு 1714 கோடி ரூபாய்தான் ஜெயலலிதா ஆட்சியிலே காவல்துறை மானியமாக ஒதுக்கப்பட்டது.
ஆனால், 96 முதல் 2001 கழக ஆட்சியில், காவல்துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகை 3,988 கோடி ரூபாய் என்பதை காவல்துறை நண்பர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் கமிஷன் போட்ட பிறகு, வளர்ந்த சம்பளத்தினுடைய விகிதாச்சாரத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இரண்டாம் நிலைக் காவலருக்கு 825 ரூபாய் சம்பளம். தி.மு.க. ஆட்சியில் அதே காவலருக்கு 2,750 ரூபாய்.
முதல் நிலைக் காவலருக்கு ஜெயலலிதா ஆட்சியில் 950 ரூபாய்.தி.மு.க. ஆட்சியில் 3,200 ரூபாய்.
தலைமைக்காவலருக்கு ஜெயலலிதா ஆட்சியில் 1,200 ரூபாய். தி.மு.க ஆட்சியில் 4,000 ரூபாய்.
சப்-இன்ஸ்பெக்டருக்கு ஜெயலலிதா ஆட்சியில் 1,600 ரூபாய். தி.மு.க. ஆட்சியில் 5,300 ரூபாய். இதனால் சில சப்-இன்ஸ்பெக்டருக்கு எங்கள் மேல் கோபம் இருக்கலாம்.
“5,000 ரூபாயோடு நிறுத்தியிருக்கலாம். இப்போது எங்களுக்கு ரேஷன் கார்டு இல்லாமல் போய்விட்டது. நீங்கள் 5,300 ரூபாய் கொடுத்தது தப்பாகிவிட்டது” என்று அந்தக் கோபம் இருந்தால் சொல்லுங்கள், ஒத்துக்கொள்கிறேன். ஆக, சப்-இன்ஸ்பெக்டருக்கு 1,600 ரூபாயாக இருந்ததை 5,300 ரூபாயாக ஆக்கினோமே, அதற்காக கோபமா?
எஸ்.பி.க்கு 3,700 ரூபாயாக இருந்ததை 12,000 ரூபாயாக ஆக்கியவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். போலீஸ் நண்பர்களே! நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். சிறப்புப்படி 20 ரூபாய் என்று இருந்ததை 40 ரூபாயாக மாற்றினோம். சீருடைப்படி 25 ரூபாயாக இருந்ததை 50 ரூபாயாக மாற்றினோம். ரிஸ்க் படி 20 ரூபாயாக இருந்ததை 60 ரூபாயாக மாற்றினோம். போலீஸ்காரர்களுக்கு வீடு கட்ட 48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதை 190 கோடியாக அதிகப்படுத்தி ஒதுக்கியது தி.மு.கழக ஆட்சி.
அதைப்போலவே அரசு அலுவலருக்கு 1998-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு தருகின்ற சம்பளத்தை, முன்தேதியிட்டுத் தருவதாக 1998-ல் அறிவித்து 96 முதல் முன்தேதியிட்டு 98-ஆம் ஆண்டு அலுவலக உதவியாளருக்கு 2,500 ரூபாய் என்றிருந்ததை 3,222 ரூபாய் என்று ஆக்கியது தி.மு.கழக ஆட்சி.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், டெலிபோன் ஆபரேட்டர், ஓட்டுநர் இவர்களுக்கு 3,245 ரூபாய் சம்பளம். அதை 4,201 என்று ஆக்கியது. தி.மு.கழக ஆட்சி.
தலைமை உதவியாளருக்கு 3,617 ரூபாய் என்றிருந்ததை 4,501 ரூபாய் என்று ஆக்கியது திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி. இன்னும் சில பேர் கூட சொல்கிறார்கள்.
ஜெயலலிதா ஆட்சியிலே காவல் துறையினரும், அரசு அலுவலர்களும் பெற்று வந்த ஊதியத்தைவிட பல மடங்கு அதிகமாக தி.மு.கழக ஆட்சியிலே உயர்த்தினோம். மத்திய அரசு அலுவலர்களின் ஊதியத்திற்கு சமமாக கழக ஆட்சியிலே உயர்த்தித் தரப்பட்டது. இதன் காரணமாக சில பேர், “ஏங்க, இந்த அரசாங்க அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறீங்க, அவர்களெல்லாம் சும்மாவா வேலை பார்க்கிறார்கள் ? ஆபீசுக்குச் சென்றால் மேஜை டிராயரைத் திறந்து எங்களிடம் காட்டுகிறார்கள். அதிலே போட வேண்டியதைப் போடுங்கள் என்கிறார்கள். எதற்காக சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும்?” என்று கேட்கின்ற பொதுமக்களில் சில பேரை நான் அறிவேன்.
பொறுப்பாளி அல்ல.
யாரோ ஒருவர் இருவர் ஒருசில துறைகளிலே செய்கின்ற தவறுகளுக்காக மொத்த சமுதாயமும் அரசு அலுவலர்கள் அத்தனை பேரும் தவறானவர்கள் அல்ல. ஆசிரியர்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல. எனவே நான்கு பேர் தவறு செய்வதை 4000 பேர் செய்வதாக தவறான பிரச்சாரத்தை இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவைகளை எல்லாம் மனதிலே வைத்துக்கொண்டு நாட்டில் நடைபெறுகின்ற நாசகார செயல்களுக்கெல்லாம், அந்தச் செயல்களிலிருந்து மக்களை விடுவிக்க நாம் ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றி கவனியுங்கள்.
இங்கே பேசிய கழக முன்னோடிகள் எல்லாம் போராட்டம் வேண்டுமென்றார்கள். மாநாட்டுத் தலைவர் தம்பி ஸ்டாலின், நேற்றையதினம் பேசும்போது, போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் பொறுப்பு தனக்கு வேண்டுமென்றார். அப்படிப்பட்ட சுயநலங்கள் போராட்டத்தில் வருவதை நான் விரும்புகிறவன். பொருளாளர் ஆர்க்காடு வீராசாமியும் இங்கே பேசும்போது போராட்டம் வேண்டுமென்றார். அதைப் போலவே தம்பிகள் சிவா, விடுதலை விரும்பி, ராஜா, டி.ஆர். பாலு இப்படி பலரும் ஒரு போராட்டத்திற்கு தி.மு.க. தயாராக வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.
நான் இங்கே சில தீர்மானங்களை உங்கள் முன்னால் வைக்க விருக்கிறேன். பொதுவாக மாநாட்டில் பல தீர்மானங்களை பலரும் முன்மொழிந்தும், வழி மொழிந்தும் பேசுவது வழக்கம். தனித்தனி தலைப்புகளில் பேசியவர்களில் இன்னும் கூட பல பேருக்கு தங்களைப் பட்டியலில் சேர்க்கவில்லையே என்ற கோபம் இருக்கிறது, அடுத்த மாநாட்டில் இவர்களில் சிலபேர் விட்டுப் போய் அவர்கள் எல்லாம் சேர்க்கப் படுவார்கள்.
எனவே இந்த மாநாட்டில் தீர்மானக் குழுவின் தலைவர் பொன். முத்துராமலிங்கமும், செயலாளர் வெற்றி கொண்டானும் மற்றும் தீர்மானக் குழு உறுப்பினர்களும் கலந்து பேசி சில தீர்மானங்களை வடித்தெடுத்துக் கொடுத்து அதைப்பற்றி நேற்று முன்தினம் நடை பெற்ற தலைமைக்கழக செயல்திட்டக் குழுவில் விவாதித்து முடிவெடுத்திருக்கிறோம். இந்தத் தீர்மானங்களின் முடிவாக இவைகளையெல்லாம் வலியுறுத்த ஒரு போராட்டத்தையும் நான் அறிவிக்க விருக்கிறேன். அதற்கு முன்பு தீர்மானங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.
காவேரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் இறுதி முடிவு அறிவிக்கப்படுவதற்கிடையே ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்க்க, பிரதமர் தலைமையில் உள்ள காவேரி ஆணையத்தைத் தேவைப்படும்போதெல்லாம் கூட்டி, உரிய முடிவெடுத்து, தமிழக விவசாயிகளை வாழவைக்க வேண்டுமென்று வலியுறுத்தியும், என்பது முதல் அறிவிப்பு. காவேரி பிரச்சினை பற்றி பிரதமரிடத்தில் ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று நான் நேரடியாகவே கேட்டுக் கொண்டேன். முரசொலி மாறனை மருத்துவ மனையிலே அவர் பார்க்க வந்த போது, மாறனின் உடல்நிலை பற்றி பேசியதை விட அதிகமாக தஞ்சை, திருச்சி பகுதியிலே வாழ்கின்ற டெல்டா பகுதி உட்பட வாழ்கின்ற விவசாயிகளின் வேதனைகளைப் பற்றித் தான் பேசினேன். பேசியது மாத்திரமல்ல, காவேரி ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். கூட்டுகிறேன், எல்லா முதல் அமைச்சர்களும் வரவேண்டுமே என்று ஆதங்கப்பட்டார். கூட்டுங்கள், வருவார்கள் என்றேன். ஆனால் அப்போது தமிழக முதல் அமைச்சர் சென்னையிலே இல்லை, ஊட்டியிலே இருந்தார்கள். நான் வாஜ்பய் அவர்களிடம் சொன்னேன் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், மறுநாள் காவேரி ஆணையத்தைக் கூட்டுங்கள் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் அதை கேலி செய்யவில்லை, நான் சொன்னதால் தான் அவர் கடிதம் எழுதினார் என்றெல்லாம் சொல்லவில்லை. நல்லது நடந்தால், நம்முடைய விவசாயிகளுக்கு நன்மை கிடைக்குமேயானால், அவர்களுடைய வாட்டம் போக்கப்படுமேயானால் என்னைவிட மகிழ்ச்சி அடையக் கூடிய ஒருவன் தமிழ் நாட்டிலே இருக்க முடியாது.
அடுத்த தீர்மானம்:- செம்மொழியாக அறிவிக்கப் படுவதற்கும், மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக இடம் பெறுவதற்கும் அனைத்து தகுதிகளும் தமிழ் மொழிக்கு இருந்தும், பலமுறை மத்திய அரசிடமும், நாடாளுமன்றத்திலும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டும், இதுவரை அதனையேற்று அறிவிக்காமல் இருக்கும் மத்திய அரசின் மெத்தனப் போக்கைச் சுட்டிக்காட்டுவதுடன் உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தியும்;
பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த போதே அங்கே பேசியிருக்கிறார். “உயர் தனிச் செம்மொழியாகிய தமிழ் என் தாய் மொழி என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. நீண்ட வரலாற்றையும், புகழ் மிக்கப் பொற்காலங்களையும் உடைய மொழி – கவிஞர் யாத்த மொழி – கவிதைகள் கொஞ்சும் மொழி – கருத்தாலும், கவின் வளத்தாலும் கடலெனப் பரந்து கிடக்கும் மொழி எங்கள் உயிரோடு, வாழ்வோடு கலந்த மொழி – அந்தத் தமிழ் மொழி மற்றெதற்கும் தாழாத வகையில் ஆட்சி மொழி என்ற தகுதி தரப்படும் வரை நான் அமைதி பெறமாட்டேன்” என்று அண்ணா அங்கே பேசினார்.
ஒரு மொழி செம்மொழி ஆவதற்கும், மத்திய ஆட்சிமொழி ஆவதற்கும் என்னென்ன தகுதிகள் வேண்டுமோ அந்தத் தகுதிகளையெல்லாம் பெற்ற மொழி தான் நம்முடைய தமிழ் மொழி. 11 தகுதிப்பாடுகள் குறிக்கப்படுகிறது. அந்த 11 தகுதிப்பாடுகளுக்கும் தமிழ் மொழி பொருந்தும். உலகத்திலே உள்ள முக்கியமான மொழிகள் 600. அதிலே இலக்கிய இலக்கணம் உடைய மொழிகள் 300. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை உடைய மொழிகள் ஆறு. தமிழ், சீனம், சமஸ்கிருதம், லத்தீன், ஹிப்ரூ, கிரீக் ஆகிய இந்த ஆறும் தான் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுக்குரிய மொழிகள். இதில் லத்தீனும், ஹிப்ரூவும் செத்துப் போன மொழிகள். இஸ்ரேல் அரசாங்கம் ஹிப்ரூவுக்கு உயிரூட்டும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்றது. கிரீக் மொழி தற்போது புது வாழ்வு பெற்று வருகிறது. சமஸ்கிருதத்துக்கு என்றுமே பேச்சு வழக்கு இருந்ததில்லை. எழுத்து வழக்கு மட்டுமே.
இந்திய மொழிகள் எதற்கும் இல்லாத தனிச் சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. அது தான் பன்னாட்டு மொழி என்ற தகுதி. தமிழ், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய இரு நாடுகளிலும் ஆட்சி மொழியாக இருக்கின்றது. அதைப் போல இந்தியாவிலும் தமிழ் மத்திய ஆட்சி மொழிகளிலே ஒன்றாக இருக்க வேண்டும். நான் சொன்ன தகுதிகள் எல்லாம் இருக்கின்ற காரணத்தால் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற செம்மொழியாகவும் தீர்மானத்தை வலியுறுத்துகிறேன்.
அடுத்த தீர்மானம், இந்தியப் பிரதமரால் நாடாளு மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஒப்புக் கொள்ளப்பட்டு நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும் சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்தியும்;
இந்தத் தீர்மானம் தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமேயானானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டு 700 கிலோ மீட்டருக்கு மேல் போக வேண்டிய தேவையற்ற பயணம் இருக்காது. சுலபமாக செல்லவும், அதன் காரணமாக வர்த்தகம் பெருகவும், தமிழகத்தின் பொருளாதார வளம் செழிக்கவும் இது மூல காரணமாக விளங்கும். எனவே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவது இந்தத் தீர்மானம்.
நான்காவது தீர்மானம், மத்திய அரசு நாடாளுமன்றத்திலே அளித்துள்ள வாக்குறுதிக்கு மதிப்பளிக்காமல், மாநில அ.தி.மு.க. அரசு தனது பழிவாங்கும் அரசியலுக்கு பொடா சட்டத்தைப் பயன்படுத்தும் போக்கை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அந்தச் சட்டத்தையே மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இந்தத் தீர்மானத்திற்கு உங்கள் கையொலி மூலமாக ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.(பலத்த கையொலி) அடுத்து, அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாக சிறையிலே வாடும் வைகோ, பழ.நெடுமாறன், நக்கீரன் கோபால் உள்ளிட்ட பலரையும் உடனடியாக அ.தி.மு.க. அரசு விடுதலை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியும்;
‘பொடா’ சட்டத்தைக் கொண்டு வரும்போதே, இது தவறாகப் பயன்படுத்தப்படும் என்று நான் அறிவித்தேன். அப்போது அதற்கு பெரும்பான்மையான வாக்குகள் நாடாளுமன்றத்தில் கிடைத்த போது வாஜ்பய் அவர்கள் பொடா சட்டம் பற்றி ராய்ப்பூர் கூட்டத்தில் பேசினார். “பொடா சட்டத்தை சில மாநில அரசுகள் தவறாகப் பயன் படுத்துவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அப்படி தவறாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால், பொடா சட்டத்தை மத்திய அரசு கண்டிப்பாக மறு பரிசீலனை செய்யும்” என்று பிரதமர் வாக்களித்திருக்கிறார். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று என்று நான் கேட்க விரும்புகிறேன்.
அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வில்லையா ? பயன் படுத்துகிறார்கள். நக்கீரன் கோபாலை கைது செய்த ஒரு விஷயம் போதுமே! அதிலே எவ்வளவு குளறுபடிகள். ஒரு போலீஸ் அதிகாரி கோபாலிடம் கைப்பற்றியது ரிவால்வர் என்கிறார், இன்னொரு அதிகாரி பிஸ்டல் என்கிறார், ஒருவர் கன் என்கிறார். கைப்பற்றப்பட்டது ஒரே கருவிதான். அதற்கு மூன்று விதமாக மூன்று அதிகாரிகள் அதற்கு மூன்று பெயர் சொல்லி யிருக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? எனவே நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன் தருகிறேன், வெளியே போகலாம் என்று உயர்நீதிமன்றம் சொல்கிறது. அதற்குப் பிறகாவது இந்த அரசுக்கு புத்தி வர வேண்டாமா ? இவர்களுடைய கேரக்டர், இவர்களுடைய குணாதிசயம் என்ன என்பதை நாடு புரிந்து கொள்ளட்டும்.
பழி வாங்குவது தான் இவர்களுக்கு வேலை. ஏறத்தாழ ஓராண்டுக்கு மேலாகிறது தம்பி வைகோவை கைது செய்து சிறையிலே அடைத்து. அவரோடு மேலும் ஏழெட்டு பேர் கைது. அதைப் போலவே ஒல்லிய உருவம், உடல் நலம் இல்லாதவர், பழ. நெடுமாறன். என்ன குற்றம் செய்தார்கள். எப்போதோ ஒரு நாள் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்பதை விட வேறென்ன செய்தார்கள். ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லையா? பொடா சட்டத்தை முன்கூட்டியே அமுலாக்குவதாக தெரிவித்து, பிரகடனம் செய்தால் அந்தச் சட்டப்படி முதலிலே கைது செய்யப்பட வேண்டியவர் ஜெயலலிதா அல்லவா? 1991ஆம் ஆண்டு இந்துப் பத்திரிகைக்கும், எக்ஸ்பிரஸ் ‘ பத்திரிகைக்கும் கொடுத்த தனிப் பேட்டியிலே ஜெயலலிதா என்ன சொல்லியிருக்கிறார். பிரபாகரனைப் போன்ற ஒரு மாவீரன் உலகத்திலே இல்லை என்று சொல்லவில்லையா? பிரபாகரனுக்கு இலங்கையிலே ஒரு தீங்கு ஏற்பட்டால் தமிழ்நாடு பற்றி எரியும் என்று ஜெயலலிதா சொல்லவில்லையா? பங்களாதேஷ் பிரச்சினையிலே இந்திரா காந்தி படையெடுத்துச் சென்றதைப் போல இப்போதும் படை எடுத்துச் சென்று தமிழீழத்தைப் பெற்றுத் தரவேண்டுமென்று பேட்டி கொடுக்கவில்லையா ஜெயலலிதா ? இவர்கள் இன்றைக்கு பொடா சட்டத்தைப் போட்டு மற்றவர்களை வாட்டுகிறார்கள்.
அப்போதே சொன்னோம். இந்தச் சட்டத்தை மாநில அரசுகள் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்றோம். கேட்கவில்லை. நமக்கு உறுதியளித்தார்கள், அத்வானி அவர்களும், வாஜ்பய் அவர்களும். எங்கள் உறுதிமொழியை நம்பமாட்டீர்களா என்றார்கள். நம்பினோம், நம்பிக் கெட்டோம் அய்யா இன்றைக்கு என்று சொல்கிற அளவிற்கு நிலைமை ஆகியிருக்கின்றது. எனவே அரசியலில் பழி வாங்க அந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
அடுத்து ஒரு பொருளாதார தீர்மானம் தொழிலாளர்களுக்காக! அரசுக்குச் சொந்தமான தொழில்களையும் அரசுச் சார்புடைய தொழில்களையும் தனியார் வசம் ஒப்படைப்பதையோ தனியாருக்கு விற்பனை செய்வதையோ மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தியும்;
அரசாங்கத் தொழிற்சாலை, அரசு சார்புடைய தொழிற் சாலை ஆகியவற்றை தனியாருக்கு விற்பதால், ஒப்படைப்பதால் தொழிலாளர் நலம் பாதிக்கப்படுகிறது. தேசிய மயக் கொள்கைக்கு இழுக்கு ஏற்படுகிறது. புதிதாக ஆரம்பிக்கப்படுகின்ற தொழில்கள் வேண்டுமென்றால் தனியார் ஆரம்பிக்கட்டும், நாங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. தி.மு.க. அதற்கு எதிரியல்ல. ஆனால் ஏற்கனவே அரசு சார்புடைய தொழிற்சாலைகளை, நாளைக்கு திடீரென்று நெய்வேலி தொழிற்சாலையை எடுத்துக் கொண்டு போய், தொழிலாளர்களுக்கு விரோதமாக தனியாருக்குக் கொடுத்துவிட்டால் அதை யார் பொறுத்துக் கொள்ள முடியும் ? எனவே இந்தத் தீர்மானம் மூலமாக அதைக் கட்டுப்படுத்துகிறோம்.
அடுத்த தீர்மானம், அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் உரிமைகளைப் பறிக்கும் “எஸ்மா” சட்டத்தையும், எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் நிலையில் தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளையும் மாநில அ.தி.மு.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்;
என் மீதும், நல்லக்கண்ணு, வரதராஜன், இளங்கோவன் ஆகியோர் மீதெல்லாம் ஒரு வழக்கு எஸ்மா சட்டத்தின் கீழ். எதற்கு எஸ்மா தெரியுமா ? நாங்கள் இந்த அம்மா பண்ணுகின்ற அக்கிரமங்களுக்கெல்லாம் எஸ் மா – எஸ் மா என்று சொல்லவில்லையாம். அதனால் இவர்களையெல்லாம் தூண்டி விட்டோம் என்று வழக்கு. அவர்களை தூண்டிவிட்டது யார்? அவர்கள் வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற்ற பிறகுங்கூட, அவர்களை பொருட்படுத்தாமல், அவர்களுடைய கோரிக்கைகள் பற்றிப் பேச முன்வராமல், அவர்கள் தான் வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற்று விட்டார்களே, தொலைந்து போகிறார்கள் என்ற பெருந் தன்மையோடு கூட விட்டுவிடாமல், பழி வாங்கியே தீருவேன் என்று வேலைக்கு வந்தாலும் வேலை செய்ய விடமாட்டோம் என்று சொன்னவர்கள் தூண்டிவிட்டவர்களா? அவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்த நாங்கள் தூண்டிவிட்டவர்களா ?
தூண்டி விடுவதென்றால் என்ன ? வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். அவர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது எப்படி தூண்டிவிடுவதாகும்? அவர்கள் என்ன கேட்டார்கள் ? தாங்கள் முன்பே பெற்று வந்த போனசை கேட்டார்கள். தொழிலாளி போனஸ் கேட்பது பெரிய பாவமா? தொழிலாளி அகவிலைப் படியைக் கொடு என்று கேட்பது பாவமா ? முடிந்தால் கொடுங்கள், இல்லையென்றால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள்.
ஓய்வு பெறுகின்ற அரசு அலுவலர்களின் மாத சம்பளம் 3000 ரூபாய் என்றால், அவர் ஓய்வு பெறும்போது தி.மு.க. ஆட்சியில் கிடைத்த பணிக்கொடை ரூபாய் 2 லட்சத்து 3 ஆயிரத்து 462. ஜெயலலிதா ஆட்சியிலே அந்தத் தொகை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 945 ரூபாய் அவர்களுக்கு இதிலே வருத்தம் இருக்காதா? கேட்க மாட்டார்களா ? மாதச் சம்பளம் 5000 வாங்கியவருக்கு தி.மு.க. ஆட்சியில் ஓய்வு பெறும்போது கிடைத்த பணிக்கொடை தொகை 3 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய். அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது இந்தத் தொகை 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் தான். அவர்களுக்கு இழப்பு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என்றால் கேட்க மாட்டார்களா ? கேட்டால், தி.மு.க. ஆட்சியிலே உயர்த்திக் கொடுத்து விட்டோம் என்று எங்கள் மீது வழக்கா ? வழக்கு போடட்டும். நாங்கள் வழக்குகளுக்காகப் பயப்படுபவர்கள் அல்ல. எத்தனை வழக்குகளைப் போட்டாலும் அவற்றைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
திடீரென்று இலவச மின்சாரம் ரத்து. தி.மு.க. ஆட்சியிலே கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எல்லாம் ரத்து. அதைப் பற்றிய தீர்மானம் வருமாறு:
தி.மு.க. ஆட்சியில் தொடங்கி 13 ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ள விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் மற்றும் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம், உழவர் சந்தை, பெரியார் நினைவு சமத்துவபுரம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம் போன்ற தி.மு.க. ஆட்சியின் நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்து வரும் ஜெயலலிதா அரசைக் கண்டிப்பதுடன் மீண்டும் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும்;
தற்போது தேர்தல் வரப்போகிறது என்பதற்காக மீண்டும் இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என்று அறிவிக்கிறார்கள். இலவச வேட்டி சேலை இனிமேல் கிடையாது, நிதிப் பற்றாக்குறை என்று சொல்லி அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு, இப்போது மீண்டும் இலவச வேட்டி சேலை வழங்கப் போவதாகச் சொல்கிறார்கள். திடீரென்று இந்த அம்மையார் சத்துணவில் முட்டை போட்டாலும் போடுவார்கள். தி.மு.கழக ஆட்சியில் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டது. அந்த முட்டைகள் வழங்குவதை நிறுத்தி விட்டு, நிதி பற்றாக்குறை, பணம் இல்லை என்று கைவிரித்தார்கள்.
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. அதையும் அதிமுக ஆட்சியில் நிறுத்தி விட்டார்கள்.
ஏழைப் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் திருமண உதவித் திட்டத்தின் பெயரால் தி.மு.க. ஆட்சியில் தரப்பட்டது. 2 லட்சத்து 90 ஆயிரம் ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தின்கீழ் பணம் வழங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் ஆகியோரின் வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்ற அளவிற்கு இப்போது தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்டு, 13 ஆண்டு காலமாக அவர்கள் அனுபவித்து வந்த இலவச மின்சாரத் திட்டத்தையும் ரத்து செய்ய ஏற்பாடு செய்து, இப்போது ரத்து செய்யப்படுகின்ற சூழ்நிலை வந்துவிட்டது.
இதை இந்த மாநாட்டில் இந்தத் தீர்மானத்தின் மூலமாகக் கண்டிப்பதோடு மீண்டும் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகிறோம்.
அடுத்த தீர்மானம் – கௌரவ ரேஷன் கார்டு என்னும் பெயரால் 40 லட்சம் நடுத்தர மக்களை அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் பெற முடியாதபடி அவல நிலைக்கு ஆளாக்கியிருக்கும் அ.தி.மு.க. அரசின் அநியாய ஆணையை ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியும்;
நேற்றைக்கு தம்பி வெற்றி கொண்டான் பேசும்போது, அது என்னப்பா கௌரவ ரேஷன் கார்டு! அதை வாங்கினால் தான் கௌரவமா? வாங்காவிட்டால் கௌரவம் இல்லையா? என்று வேடிக்கையாகக் கேட்டார். இது வேடிக்கையல்ல. வேதனையான விஷயம். 40 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு இல்லை. ரேஷன் கடைக்குச் சென்று எதுவும் வாங்க முடியாது. பிறகு எதற்காக அவர்களுக்கு ரேஷன் கார்டு ? அதை வாங்கியே தீர வேண்டும் என்று எதற்காக மிரட்டல் செய்ய வேண்டும் ?
வணிகர்களைப் பொறுத்தவரையில் ஒரு தீர்மானம். வணிகர்களைப் பொறுத்தவரையில் தி.மு.கழக ஆட்சியில் ஏற்கனவே இருந்த பல முனை வரிகளையெல்லாம் ரத்து செய்துவிட்டு, ஒரு முனை வரியாக்கி வணிகப்பெருமக்கள் நம்மை வானளாவப் புகழ்ந்தார்கள். கொண்டாடினார்கள். தோளிலே தூக்கி வைத்துக் கொண்டார்கள். பிறகு தேர்தல் வந்தது. திடீரென்று இறக்கி விட்டு விட்டார்கள். என்ன வென்று கேட்டோம். நாங்கள் நடு நிலைமை, அதனால் நீங்கள் தோளிலும் இல்லை, காலிலும் இல்லை, இடுப்பில் தான் இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். என்ன ஆயிற்று? இந்த ஆட்சி வந்தவுடன் மீண்டும் பல முனை வரி. அது மாத்திர மல்ல. இந்த அதிகார வர்க்கத்தினரிடம் வணிகர்கள் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்களே, அது வணிகர்களுக்கு பெரும் வேதனை. இது பற்றிய தீர்மானம் ‘ஒருமுனை வரிக்குப் பதிலாக வணிகர்களை வாட்டும் பல முனை வரியை விதித்துள்ள அ.தி.மு.க. அரசின் ஆணைகளை உடனடியாக ரத்து செய்யவேண்டுமென்று வலியுறுத்தியும்;
இப்படி வரிகள் உயர்ந்த காரணத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துவிட்டன. நேற்றும் இன்றும் தாய்மார்கள் ஏராளமாக வந்திருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியும். தி.மு.கழக ஆட்சியில் 2001இல் துவரம்பருப்பு ஒரு கிலோ 27 ரூபாய். ஜெயலலிதா ஆட்சியில் இப்போது விலை குறைந்துவிட்டது. அதாவது ஒரு கிலோ 34 ரூபாய். நல்லெண்ணெய் தி.மு.க. ஆட்சியிலே 45 ரூபாய். இன்றைக்கு 75 ரூபாய். கடலெண்ணெய் தி.மு.க. ஆட்சியிலே 36 ரூபாய். ஜெயலலிதா ஆட்சியிலே 56 ரூபாய். தேங்காய் எண்ணெய் தி.மு.க. ஆட்சியில் 48 ரூபாய். இன்றைக்கு மிகவும் குறைந்துவிட்டது, 85 ரூபாய். பாமாயில் தி.மு.க. ஆட்சியிலே 21 ரூபாய். இன்றைக்கு 40 ரூபாய். தி.மு.க. ஆட்சியில் மிளகாய் 30 ரூபாய். இன்றைக்கு 53 ரூபாய்.
அடுத்த தீர்மானம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து பழிவாங்கப்படுவதையும், தி.மு.க. ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், கூட்டுறவு பணியாளர்கள் என 40 ஆயிரம் பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டிருப்பதையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்களை மீண்டும் பணியமர்த்த அ.தி.மு.க. அரசை வலியுறுத்தியும்;
அரசியல் சட்டத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியும் – அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் சட்டத்திற்கு ஆதரவாக அறிவிப்பு செய்தும், சிறுபான்மை மக்களின் மத உணர்வுகளில் அ.தி.மு.க. அரசு தலையிடுவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்தப் போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியும்;
இது முக்கியமான தீர்மானம். அயோத்தியிலே ராமர் கோவிலை கட்டியே ஆக வேண்டுமென்று சட்டம் கொண்டு வருவோம் என்று ஒரு நாள் சொல்கிறார்கள். இன்னொரு நாளைக்கு இல்லை என்கிறார்கள். ஒருநாளைக்கு அகழ் வாராய்ச்சி என்கிறார்கள். இப்படியும் அப்படியுமாக குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரையில் நான் உறுதியாகக் கூறுகிறேன். அயோத்தியிலே ராமர் கோவில் கட்டுவதை தி.மு.க. எதிர்க்கும், எதிர்க்கும். அது ராமர் மீது எங்களுக்கு உள்ள வெறுப்பின் காரணமாக அல்ல. ராமாயணத்தின் மீது எங்களுக்கு உள்ள கருத்து மாறுபாடு காரணமாக அல்ல. அது தேவையில்லாமல் இந்தியத் திருநாட்டில் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் ஒரு மோதுதலை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடும், ரத்தம் பெருக்கெடுக்கும், அதைத் தடுக்கத் தான் சொல்கிறோம். ராமர் கோவிலை நாங்கள் ஏற்க மாட்டோம். ராமர் கோவில் இந்தியாவிலே கட்டாமல் வேறெங்கே கட்டுவது என்று ஜெயலலிதா கேட்கிறார். ஏன் வேறு நாடா இல்லை ? ராமர் கோவிலை அமெரிக்காவிலே கூடத் தான் கட்டலாம். இங்கிலாந்திலே கூடக் கட்டலாம். ராமர் கோவில் கட்டலாம், முருகன் கோவில் கட்டலாம்.
பாபர் மசூதி இடித்த இடத்திலே தான் ராமர் கோவிலைக் கட்டுவேன் என்றால் அது வேண்டுமென்றே மூக்கிலே விரலை வைத்து நீ கோழை என்று சொல்லி வம்பு வளர்ப்பார்களே, அதைப் போல பாபர் மசூதி இருந்த இடத்திலே தான் நாங்கள் முஸ்லீம்களின் இதயத்தைப் புண்ணாக்கி அவர்களோடு மோதிக் கொண்டு இந்தியாவை அமளிக் காடாக்கி ராமருக்கு கோவில் கட்டுவோம் என்று சொன்னால் அதை தி.மு.க. ஏற்காது, ஏற்காது, ஏற்காது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதே அதை இடிக்கலாம், கர சேவை செய்யலாம் என்று சொன்னவர் ஜெயலலிதா. அதை அன்றைக்கே கூடாது என்று சொன்னவர்கள் நாங்கள். நேற்று எனக்கு ஒரு காங்கிரஸ் நண்பர் போன் செய்தார். அப்போது அவர், “நான் காங்கிரஸ்காரன்தான், அய்யர் தான், ஆனால் நான் பூணூல் போடுவதில்லை, நான் சீர்திருத்தக்காரன், ஆனால் ராமர் கோவில் விஷயத்திலே உங்கள் கொள்கை எனக்குப் பிடிக்கவில்லை” என்றார். நான் அவரிடம், என்ன சார், காங்கிரஸ் என்று சொல்லிக் கொண்டு, பா.ஜ.க.விற்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே, ஆர்.எஸ்.எஸ்.க்கு, இந்து முன்னணிக்கு ஆதரவாகப் பேசுகிறீர்களே, என்ன என்று கேட்டேன். அவர் சொன்னார். ஒரு பத்து ஏக்கர் நிலம் தான் சார் அது. பத்து ஏக்கர் நிலம் பெரும்பான்மையினருக்கு சொந்தம் என்று சொன்னால் அதைக் பெரும்பான்மையை மதிக்க வேண்டாமா; கொடுக்கவேண்டாமா? என்று கேட்டார்.
எனக்கு அப்போது ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது. கதை என்றால் அண்ணா சட்டப் பேரவையிலே கூறிய கதை. பேராசிரியருக்கு நினைவிருக்குமென்று கருதுகிறேன். சட்டப் பேரவையில் நாங்கள் 15 பேர் எதிர்க்கட்சியிலே அமர்ந்திருக்கிறோம். அப்போது பெரும்பான்மை, சிறுபான்மை பற்றி பேச்சு வந்தது. பெரும்பான்மைக்குத் தான் கட்டுப்பட வேண்டுமென்று அங்கேயிருந்த காங்கிரஸ்காரர்கள் பேசினார்கள். அண்ணா பேசும்போது, கேரளாவில் ஒரு நிகழ்ச்சி நடந்ததாக பத்திரிகைகளிலே பார்த்தேன். அங்கே ஒரு கோவிலில் கொடி மரம் நடுவதற்காக அவர்கள் பழக்கப் படி, அந்தக் கொடி மரத்தை யானையின் துதிக்கையிலே வைத்து, அதற்கான குழியில் நடச்சொன்னார்கள். மேளதாள முழக்கத்துடன் அந்த யானை கொடி மரத்தை நடுவதற்காக வந்தது. ஆனால் அருகே வந்தபிறகு கொடி மரத்தை குழியிலே புதைக்க மறுத்தது. மேள தாளத்திற்கு யானை பயப்படுகிறதோ என்று நினைத்து, அதை நிறுத்தி விட்டு, மீண்டும் மரத்தை நடச் சொன்னார்கள். அப்போதும் யானை மறுத்துவிட்டது. ஏன் யானை மறுக்கிறது, சாமி குற்றமா, என்று பயந்து போய் ஒருவன் கொடி மரம் நட வேண்டிய குழிக்கு அருகே சென்று பார்த்தான். அந்தக் குழியிலே ஒரு சிறு பூனைக்குட்டி உட்கார்ந்திருந்தது. அந்தப் பூனைக் குட்டிக்கு நம்மால் ஆபத்து வரக்கூடாது என்றல்லவா யானை தன்னுடைய பெரிய காலை அதன் மீது வைக்காமல் தயங்கி இருக்கிறது என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
இதைத் தான் அண்ணா சொல்லி, யானை பெரிது தான், இருந்தாலும் அது சிறுபான்மைக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பு, பெரும்பான்மை என்ற யானை, சிறுபான்மையை அழிக்கக் கூடாது, அதைப் போலவே சட்டசபையிலே சிறுபான்மையாக இருக்கின்ற எங்களை யானை, பூனையைக் காப்பாற்றியதைப் போலக் காப்பாற்றுங்கள் என்று அண்ணா அவருக்கேயுரிய அழகுத் தமிழில் அந்த உவமையைச் சொன்னார். அதைத் தான் நான் அந்தக் காங்கிரஸ் நண்பருக்குச் சொன்னேன்.
பெரும்பான்மை என்பதற்காக எதையும் செய்து விடுவதா? பெரும்பான்மையின் பெருமையே, சிறுபான்மையைக் காப்பாற்றுவது தான். பாபர் மசூதி கட்டப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆயிற்று என்றால் அதை இடித்துவிட்டு, அதே இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டுமா ? ஆகவே அவர்களுடைய நோக்கம் என்ன? ராமர் கோவில் கட்டுவதல்ல. பாபர் மசூதியை இடிப்பது. அவர்களின் நோக்கத்தை நாங்கள் எதிர்க்கிறோம். எனவே என்றைக்கு அந்தச் சட்டம் வந்தாலும் தி.மு.கழக உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் சரி, சட்ட மன்றத்திலும் சரி, பொதுவாகவும் சரி, கட்சி ரீதியாகவும் சரி அதை எதிர்த்தே தீருவோம் என்பதை இன்றல்ல, அன்றைக்கே சிங்கண்ணச் செட்டித் தெருவிலே சென்னையிலே நடைபெற்ற கூட்டத்தில் நானும் பேராசிரியரும் பேசிக் கண்டித்திருக்கிறோம்.
பாபர் மசூதியை இடிக்கக் கூடாது, கர சேவை கூடாது என்று. மீண்டும் ஒரு முறை அது இடிக்கப்பட்ட மறுநாள், அதே சிந்தாதிரிப் பேட்டையில் கூட்டம் நடத்தி அதைக் கண்டித்திருக்கிறோம். அந்த உணர்விலிருந்து நாங்கள் என்றைக்கும் மாற மாட்டோம் என்பதைத் தெரிவித்து இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
அடுத்த தீர்மானம் – ஆடு, மாடு, கோழி போன்ற பிராணிகளை உண்பதற்கு பயன்படுத்தலாம் எனும் நிலை இருக்கும் போது அவற்றை நேர்த்திக்கடனுக்கு பயன்படுத்தக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தொன்மையான கலாச்சாரத்தின் மீது படையெடுப்பு நடத்தி இம்மக்களுக்கு தொடர்பில்லாத ஆகமக் கலாச்சாரத்தை நிறுவ முயற்சிக்கும் ஜெயலலிதா அரசின் முயற்சியினை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தகைய அறிவிப்புகளையும் தடை நடவடிக்கைகளை விலக்கிக்கொள்ள வலியுறுத்தியும்;
ஆடு, மாடு, கோழி தின்காமலா இருக்கிறோம் ? பிரியாணி சாப்பிடாமலா இருக்கிறோம். சாப்பிடுகிறவன் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால், அவர்களுக்குள்ள சமுதாயக் கடமை, மத உரிமைகளைப் பயன்படுத்தி சிறிய சிறிய குட்டித் தேவதை கோவில்களில் அவைகளைப் பலியிடுவது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகின்ற ஒன்று. இன்றைக்கு ஏன் அதற்காக ஒரு சட்டம் ? அந்தக் கோவில் பூசாரிகள் சொல்கிறார்கள். இதெல்லாம் அய்யர்மார் கோவில்களுக்கு வருமானத்தைத் தேடுவதற்காகவும் இந்தக் குட்டித் தேவதைகளை யெல்லாம் ஒழிப்பதற்காகவும் நடத்தப்படுகின்ற சூழ்ச்சி என்று சொல்கிறார்கள். நான் அதை விட ஒரு படி மேலே போய், நீண்ட காலமாக இந்தியாவில் இரண்டு கலாச்சார மோதல் இருக்கின்றது. திராவிடக் கலாச்சார, ஆரியக் கலாச்சார மோதல் இருக்கிறது. ஆரியக் கலாச்சாரம் படிப்படியாக ஆதிக்கம் செலுத்துகின்ற கலாச்சாரமாக மீண்டும் மறுமலர்ச்சி பெறுகின்ற நிலைமையிலே ஆட்சிகள் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட ஆட்சி தான் தமிழ் நாட்டிலே அமைந்திருக்கின்றது. அதனால் தான் யாக குண்டங்கள், ஓம குண்டங்கள், சங்கராச்சாரியார்கள் அன்றாடம் பத்திரிகைகளிலே அடிபடுகின்ற பெயர்களாக இருக்கின்றன. எனவே நம்முடைய திராவிடக் கலாச்சாரத்தை வீழ்த்த நடைபெறுகின்ற சூழ்ச்சிகளிலே ஒன்று தான் இந்த ஆடு, கோழிகள் வெட்டக் கூடாது என்பதற்காகப் போடப்பட்டிருக்கின்ற சட்டம் என்பதை நான் தெரிவித்துக் கொண்டு, அதை நீக்க வேண்டுமென்று இந்தத் தீர்மானத்தின் மூலம் வலியுறுத்துகிறோம்.
அடுத்த தீர்மானம் – அரசு நிர்வாகத்தின் எல்லா மட்டத்திலும் ஊழல், லஞ்சம் அன்றாட நிகழ்வாகி விட்டதற்கு எடுத்துக்காட்டாக மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை வழங்கும் நிதி ஒதுக்கீட்டுப் பணிகள் உட்பட அனைத்துத் துறை பணிகளிலும் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்குவதில் ‘பேக்கேஜ் டெண்டர்’ (Package Tender) என்ற பெயரால் கமிஷன்; ஆளுங்கட்சிக்காரர்களால் பகிரங்கமாக நடத்தப் படும் மணல் திருட்டு; வறட்சி நிவாரணம் எனும் பெயரால் அரசு பணத்தை ஆளுங்கட்சியினர் பங்கிட்டுக் கொள்ளும் பகல் கொள்ளை போன்ற ஊழல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தியும்;
அடுத்த தீர்மானம் – பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் ஆரம்பக் கல்வியில் தொடங்கி தலைவர் கலைஞர் காலத்தில் கல்லூரி கல்வி வரை வழங்கப்பட்டு வந்த கல்விச் சலுகைகளை ஒழித்துக் கட்டி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்கள் கல்வி பெற முடியாத அளவிற்கு கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்வு, இலவச பஸ் பாஸ் சலுகை ஒழிப்பு போன்ற அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டிப்பதோடு இவ்வறிவிப்புகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வற்புறுத்துகிறோம்.
உதாரணமாக மருத்துவ படிப்பிற்கு எம்.பி.பி.எஸ். படிக்க தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆண்டு ஒன்றுக்கு கட்டணம் 10 ஆயிரம் ரூபாய். இப்போது அது 95 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. நம்ப வீட்டுப் பிள்ளைகள் படிக்க முடியுமா? பல் டாக்டர் படிக்க தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆண்டுக் கட்டணம் 7500 ரூபாய். இப்போது 55 ஆயிரம் ரூபாய். பி.பார்ம். படிக்க தி.மு.க. ஆட்சியில் 5000 ரூபாய். இப்போது 22 ஆயிரம் ரூபாய். பி.எஸ்ஸி., நர்சிங் படிக்க தி.மு.க. ஆட்சியில் 6000 ரூபாய். இப்போது 25 ஆயிரம் ரூபாய். இதையெல்லாம் மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்பது தான் இந்தத் தீர்மானத்தின் நோக்கம்.
அடுத்த தீர்மானம். மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் சிறிதும் அக்கறை கொள்ளாமல் நெல் பயிரிடும் விவசாயிகள், கரும்பு பயிரிடும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகள் அரசுக்கு முன் குவிந்து கிடக்கும்போது, முதல் அமைச்சர் ஜெயலலிதா அரசு நிகழ்ச்சி என்ற பெயரால் சுயவிளம்பரத்திற்காகவும் எதிர்க்கட்சிகளின் மீது பொய்ப் பிரச்சாரம் செய்யவும், ஊதாரித்தனமாக மக்களின் வரிப்பணத்தை செலவிடுவதைக் கண்டிப்பதுடன், எந்தவித முகாந்திரமும் இன்றி ஏதோ முக்கியமான அத்யாவசிய காரியம் போல கண்ணகி சிலை, சீரணி அரங்கம் ஆகியவற்றை இரவோடு இரவாக அகற்றியதோடு நிதிப் பற்றாக்குறை எனக்கூறிக் கொண்டே பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகத்தை பொருத்தமற்ற இடத்தில் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் நிலையில் அமைத்திட எத்தனிக்கும் ஜெயலலிதா அரசின் தான்தோன்றி தர்பாரைக் கண்டிப்பதோடு அந்த முயற்சியை கைவிடுமாறு வலியுறுத்தியும்;
மத்திய அரசு கரும்புக்கு கட்டாய குறைந்த பட்ச அடிப்படை விலையாக டன் ஒன்றுக்கு 695 ரூபாய் என்று நிர்ணயம் செய்துவிட்டது. கழக ஆட்சியாக இருந்தால். உடனடியாக அந்த விலையை விட மேலும் நாற்பது ரூபாயோ. ஐம்பது ரூபாயோ உயர்த்தி விலை நிர்ணயித்துக் கொடுப்போம். இப்போது அந்த விலையும் கொடுக்கவில்லை. வாஜ்பய் அரசு நிர்ணயித்த தொகையையே கொடுக்க வில்லை. எனவே கரும்புக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் கரும்புக்கான விலை, வட்டியோடு கிடைக்க வழி வகை செய்ய வேண்டுமென்று இந்தத் தீர்மானத்தின் மூலமாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடைசியாக 16வது தீர்மானம் நூறாண்டுகளுக்கு மேலாக பொதுக் கூட்டங்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதிக்கப்பட்ட, சென்னை கடற்கரை மணல் பரப்பில், அண்மையில் கூட விமான சாகசம், விநாயக சதுர்த்தி பிள்ளையார் சிலைகள் கடலிலே கரைப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல்லாயிரக்கணக் கானவர்கள் கடற்கரையிலே கூடுவதற்கு அனுமதித்து விட்டு; தேசியக் கவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி கூட்டம் நடத்த முன் வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அனுமதிதராத போக்கினைக் கண்டிப்பதோடு, பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றின் குரல்வளையை நெரிப்பதுடன் எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகளைத் தொடருகின்ற அ.தி.மு.க. அரசின் போக்கைக் கண்டிப்பதோடு, இந்த எதேச்சாதிகார அடக்குமுறையை உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்தியும்;
வருகின்ற டிசம்பர் திங்கள் 1ஆம் நாள் திங்கள் கிழமை மத்திய மாநில அரசு அலுவலகங்களின் முன்னால் சிறைச்சாலைகளை நிரப்பும் மறியல் போராட்டத்தை நடத்துவதென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த மாநாடு தீர்மானிக்கின்றது. இந்தப் போராட்டத்திற்கு முன்பு இடைக் காலத்தில் அக்டோபர், நவம்பர் ஆகிய இரு மாதங்களில் போராட்ட விளக்கக் கூட்டங்களை நடத்தி அந்தக் கூட்டங்களில் இந்த மாநாட்டின் தீர்மானங்களை மக்களுக்கு விளக்கி மக்கள் சக்தியைத் திரட்டுவது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
தொடர் நடவடிக்கைகளை நானும் பொதுச் செயலாளரும் கலந்து பேசி விவாதித்து அவைகளை யெல்லாம் நிறைவேற்றி, இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு நீங்கள் அத்தனை பேரும் ஒத்துழைக்க வேண்டும். போராட்டம் எப்போது, எப்போது என்று கேட்டீர்கள். எப்போது என்று சொல்லிவிட்டேன். அப்போது நீங்கள் வர வேண்டுமென்று உங்களையெல்லாம் அழைத்து இந்த மாநாட்டை சிறப்புற நடத்திய தம்பி பொன்முடியை மீண்டும் மீண்டும் வாழ்த்தி, பாராட்டி விடைபெறுகிறேன்.
இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் பேருரையாற்றினார்.