இந்தத் தொகுப்பு அண்ணா அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு களஞ்சியமாக விளங்குகிறது. அவரது தலைமைப் பண்பு, தொலைநோக்குப் பார்வை, ஆழமான பகுத்தறிவுச் சிந்தனைகள், தமிழ் மொழி மற்றும் தமிழினத்தின் மீது கொண்ட பற்று ஆகியவை இந்த உரைகளில் தெளிவாகப் பிரதிபலிக்கும்.
அண்ணாவின் தலைமை உரைகள், அவரது “திராவிடச் சிந்தனைப் பள்ளியின்” பாடப்புத்தகங்களாகத் திகழ்கின்றன. அவை இன்றும் அரசியல் தலைவர்களுக்கும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உத்வேகம் அளித்து வருகின்றன.
அண்ணாவின்
தலைமை உரைகள்
பதிப்பாசிரியர், அ. கி. மூர்த்தி
அணிந்துரை
அண்ணன் அ. கி. மூர்த்தி அவர்களை நான் நெடுங்காலமாக அறிவேன். என் தந்தை பேரறிஞர் அண்ணா அவர்களின் எழுத்துகளையும், பேச்சுகளையும் முறையாகத் தொகுத்து வெளியிடுந் திட்டத்தில் தம்மை முழுதுமாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். அண்ணா அடிச்சுவட்டில் வழுவாது நிற்பவர் அண்ணாவின் அருமைத் தொண்டர். அவர் ஆங்கிலத்தில் ஆறு தொகுதிகளாக வெளியிட்ட அண்ணாவின் பேச்சு வரிசை ஆராய்ச்சி நூல்கள் சாகா இலக்கியங்கள். அவை அண்ணாவின் அருமை பெருமைகளை உலகிற்கு என்றும் பறைசாற்றுபவை.
அண்ணன் அவர்கள் தஞ்சை மாவட்ட அண்ணா இலக்கியப் பேரவையின் செயலருமாவார். அப்பேரவை எடுத்த முடிவிற்கேற்ப 25–9–91 அன்று தஞ்சையில் அண்ணா பேரவை துவக்க விழாவில் அண்ணாவின் ஆங்கிலப் பட்டமளிப்பு விழா உரைகள் நான்காம் பதிப்பு, பேரவைச் சார்பாக வெளியிடப் பெற்றது. அதைத் தொடர்ந்து, இப்பொழுது இது வரை கோவையாக வெளி வராத அண்ணாவின் தலைமைஉரைகள் 28 வெளி வருகின்றன.
இந்நூலை அரிதின் முயன்று வெளியிட்ட அண்ணன் அவர்கட்கும், அவர்தம் பேரவை நண்பர்களுக்கும் எனது உளங்கனிந்த பாராட்டுகள். இது போன்று, பல நூல்கள் வெளி வர அண்ணா பால் ஈடுபாடு கொண்ட அனைவரும் ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறேன். சிறப்பாக அண்ணா பேரவை அன்பர்களும், நண்பர்களும் இதில் தனி நாட்டம் செலுத்தவும் அன்புடன் வேண்டுகிறேன்.
தொலைபேசி : 478570 7-ஆவது நிழல் சாலை, அண்ணா இல்லம், சென்னை-34 1–7–95. |
சி. என். ஏ. பரிமளம், மாநிலத் தலைவர், பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரவை. |
முன்னுரை
தமிழ்ப் பேச்சுலகில் விடிவெள்ளியாகத் திகழ்ந்தது மட்டுமன்றி, அனைத்து வகையினரையும் ஈர்க்கும். வகையில் பேசிய ஒரே பேச்சாளர் பேரறிஞர் அண்ணா. கவின்மிகு கருத்துச் செறிவும், ஒன்றையொன்று விஞ்சும் பல வகை நயங்களும் கொண்டவை அவர்தம் பேச்சுகள். அவை தொகைவகை செய்து வெளியிடப் பெறச் சீரிய திட்டமிடப் பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அண்ணாவின் தலைமை உரைகள் என்னுந் தலைப்பில் இரண்டாம் நூல் இப்பொழுது வெளியிடப் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து, பல நூல்கள் விரைவில் வெளிவரும்.
அண்ணா முதலமைச்சராகப் பணியாற்றிய காலை, 26-2-67 முதல் 7-12-68 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய தலைமை உரைகள் 27. இவற்றுடன் 6-6-54 அன்று ‘இன்பக் கனவு’ நாடக நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை ஆக, 28 இவ்வரிசையில் இடம் பெறுகின்றன. இக்கால எல்லைக்கு முன், அண்ணா ஆற்றிய தலைமை உரைகள் அனைத்தும் திரட்டப் பெற்று, உரிய காலத்தில் வெளியிடப் பெறும். இன்பக் கனவு தவிர, ஈராண்டுக் காலத் தலைமை உரைகள் இவற்றோடு முடிவடைகின்றன. ஒவ்வொரு பேச்சுக்கும், பொருளுக்கேற்பத் தகுந்த தலைப்பு அளிக்கப் பெற்றுள்ளது.
இறுதியாக. இத்தமிழ் வெளியீட்டுத் திட்டம் வெற்றி பெற, அண்ணாவின் அன்பர்களும், வாசகர்களும் தங்கள் நல்லாதரவினை நல்கப் பணிவன்புடன் வேண்டுகிறேன். இது, தஞ்சை அண்ணா பேரவைச் சார்பாக வெளி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. அரிய அணிந்துரை வழங்கிய எங்கள் அன்புக்குரிய மருத்துவர் சி.என்.ஏ. பரிமளம் அவர்களுக்கும் உளங்கனிந்த நன்றி.
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”.
தஞ்சாவூர், 1–8–95. |
அ. கி. மூர்த்தி. |
PREFACE
Anna is a morning. star in the oratorical world He was the only orator who attracted all kinds of audience. His speeches abound in beautiful ideas and the literary devices that he employs surpass one another. … It has been seriously planned to publish all his speeches under perfect classification so as to be useful to three categories of people, namely, research scholars, critics and readers.
Under this programme, now, the second Tamil publication, Anna’s Presidential Addresses, has been brought out. Of course many titles will follow this venture soon.
When Anna served as Chief Minister, the presidential addresses he had delivered on various occasions from 26–2–67 to 7–12–68 are 27 in number. In addition to these addresses, the address that he gave while presiding over the drama Inbakkanavu (Dream of Pleasure) is also included in the book. Thus the presidential addresses of Anna are 28 in number. This publication is over with these addresses for a period of two years, except Inbakkanavu. The addresses delivered before this time limit, will be collected and published in due course. Each and every address has been given an appropriate title.
In fine, I request with all humility the readers of Anna and others to extend solid support to make this Tamil publication venture a success. It is a matter for gratification that this publication is sponsored by Anna Elakkiya Peravai, Thanjavur District. In this connection, I thank wholeheartedly beloved Dr. C.N.A. Parimalam, for his fitting foreword.
A favour done in time, though small, is much
larger than the world.
- K. Moorthy, Thanjavur,
1–8–95.
அண்ணாவின் பேச்சு – ஓர் ஆய்வு
1. பொருள்
இந்நூலின்கண் உள்ள தலைமை உரைகள் 28-இல் முதல் பேச்சு இன்பக்கனவு. இறுதிப் பேச்சு திறமைமிகு தமிழ்நாடு காவல் படை. இவற்றில் கலை, அரசியல், ஜனநாயகம், பொருளாதாரம், வரலாறு, தன் வரலாறு, வாழ்க்கை வரலாறு, கல்வி, நாட்டுப் பிரச்சனைகள் முதலிய பொருள்கள் பற்றிப் பரவலாகப் பேசப்படுகின்றன,
அண்ணா கருத்துப்படிக் கலையும் அரசியலும் கைகோத்து செல்பவை, சமூகத்தை உயர்த்துபவை.
தி. மு. க. ஆட்சிக்கு வந்த நிலையில், அதிகப் பொறுப்புணர்ச்சி அதற்குத் தேவை. எதிர்க் கட்சியின் ஒத்துழைப்போடு மக்கள் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் கட்சி வேறு அரசு வேறு என்ற நிலையில், அது பாடுபடவேண்டும். என்பது அண்ணா துணிவு.
மொழிப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, மது விலக்குப் பிரச்சினை எனப் பல பிரச்சினைகள் உள்ளன. பிரச்சனைகளை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். தீர்வு காண்பதைத் தலைவர்களிடமும் அரசிடமும் விட்டுவிட வேண்டும். கலந்துரையாடலே பிரச்சினைக்கு ஏன்றும் நிலையான தீர்வு காணும் முறை என்பதையும் அண்ணா வற்புறுத்திச் சொல்கின்றார். ஏனெனில், அவர் சிறந்த ஜனநாயகவாதி. ஆசிரியர்கள் அளிக்கும் செல்வம் அறிவுச் செல்வம். ஆகவே, அவர்கள் சிறப்புடையவர்கள், அனைத்திந்திய அடிப்படை எங்கும் எதிலும் இருக்கத் தேவை இல்லை, இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை உயர்த்தி நாட்டின் பொருள் வளத்தைப் பெருக்கவேண்டும் என்பவை
அண்ணாவின் உயர்ந்த கருத்துக்கள்.
மனித சமுதாயத்திற்குச் சிறந்த தொண்டாற்றியவர். மாமனிதர் மகாவீரர். மக்கள் தலைவர் காமராசர் தமிழ் மக்களுக்குச் சீரிய தொண்டாற்றியுள்ளார். பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் சிறந்த தமிழறிஞர். மாநில அரசு உறவுகள் நாட்டின் வளர்ச்சியை மையமாகக்கொண்டு அமைய வேண்டும். இந்தியாவில் அனைத்திலும் ஏற்றத் தாழ்வு இல்லாத நிலையே உண்மையான ஒருமைப்பாடு. ஜனநாயகம் இந்தியாவில் நிலைத்துவிட்ட ஒன்று. அதற்கு மக்களை விடத் தலைவர்களாலேயே அதிக ஆபத்து. அண்ணா தம்மைப்பற்றி ஆறு இடங்களில் தன் வரலாறாகக் கூறு கின்றார். அவற்றில் ஒன்று நகைச்சுவையானது (பக்கம் 45) மற்றொன்று உள்ளத்தை நெகிழச்செய்வது. ( பக்கம் 65) மது விலக்கிலும், ஆறுகளைப் பயன்படுத்துவதிலும் தேசியக் கொள்கை உருவாகவேண்டும், உழைக்கும் தொழிலாளிக்கு உரிய பங்கு அளிக்கவேண்டும், தமிழ் உலகலாவிய தன்மை உடையது. ஒரு நாட்டின் பெருமை, அடிப்படை என்றும் அது அளிக்கும் கல்வியிலேயே உள்ளன. பெண் கல்வி மிகமிக வேண்டப்படுவது. தமிழ்நாடு காவல்படை திறமை மிகுந்தது, சவாலைச் சமாளிப்பது. இவ்வாறு முத்தான கருத்துகள் தலைமை உரைகளில் மிளிர்கின்றன,
2. பண்புகள்
எல்லா உயுரிய பண்புகளையும் அண்ணாவின் தலைமை உரைகள் கொண்டுள்ளன. கூட்டப்பேச்சுகளின் பிழிவையும், அவைபற்றிய தம் கருத்துக்களையும் அண்ணா தருகின்றார். இனிய முன்னுரை, தங்குதடையிலா வளர்ச்சி, அரிய முடிவுரை ஆகியவற்றை அவை கொண்டுள்ளன. மேதகு மேற்கோள் மொழிகள், உலகளாவிய செய்தி, நாட்டுச்சிக்கல்களுக்குரிய நல்ல தீர்வுகள் முதலியவை அவற்றில் பளிச்சிடுகின்றன. அறிவார்ந்த அணுகுமுறை, முதிர்ந்த பகுப்பாய்வு ஆகியவை அவற்றில் இழையோடுகின்றன. ஆற்றொழுக்கு, ஆன்ற சொல் விரைவு ஆகியவையும் குறிப்பிடத் தக்கவை. உயரிய வழக்காறுகளும் பண்பாடுகளும் நன்கு மதிக்கப்படு கின்றன, பரந்த நோக்கு, விரிந்த பார்வை ஆகியவை அவற்றில் எடுப்பாக உள்ளன.
3. நடை
பேச்சுக் கலையில் ஈடு இணையற்றவர் அண்ணா. தம் தலைமையுரைகள் விழுப்பம் பெறுவதற்குரிய எல்லா நுட்பங்களையும் அவர் கையாளுகின்றார். உவமை, சொல் திறம், மேற்கோள் மொழிகள் முதலியவை அந்நுட்பங்கள்.
பொதுவாக அண்ணாவின் மொழி வனப்பும் வண்ணமும் வியப்பும் வீறும் உடையது. தம் நுணுகியறிந்த படிப்பால் வியத்தகு முறையில் அவர் மொழியினைக் கையாளுகின்றார். உரைகள் முழுவதும் கருத்து வளம் நிரம்பியுள்ளது, வேறுபட்ட அவையினருக்குப் பேசுவதால், ஆற்றொழுக்குள்ள எளிய நடையை அவர் பயன்படுத்துகின்றார், அவர் தம் நடையில் ஆழ்ந்த அறிவாண்மையும் பெருமித உணர்வுப் பெருக்கும் வெளிப்படுகின்றன. –
பழுத்த அறிவு, உயரிய அறிவு நுட்பம், அகன்ற காட்சி அறிவு ஆகியவை அவர் தம் நடையினை அணிசெய்கின்றன. அதில் அவர் தம் ஆளுமையும் முனைப்பாகப் புலப்படுகிறது. கருத்து முதன்மையும் முழுமையும், கருத்து வெளிப்பாட்டு விழுப்பமும் அவர்தம் நடையின் தலைசிறந்த பண்புகள் ஆகும். சுருக்கம், தெளிவு, இனிமை, ஓசை, இன்பம், அறிவாழம் முதலியவை அவர்தம் நடையின் ஏனைய பண்புகள். முடிவாகக் கூறுமிடத்து, அவர் தம் நடை ஒரு தனி வீேறும் தனியாண்மையும் கொண்டது எனலாம்,
அஃதே அண்ணாவின் நடை
அ. கி. மூர்த்தி.
1. இன்பக்கனவு
“பெரிய இடமாம், பெரிய இடம்! அலங்காரமான மாளிகையல்ல அய்யா, ஆடம்பரங்கள் நிரம்பிய இடங்களல்ல, உழைத்து வாழ்கிறானே ஏழைப் பாட்டாளி, அவனுடைய இதயம்தான் பெரிய இடம்! பயன் காணாது பாடுபட்டுப் பார் வாழப் பணி புரிகிறானே விவசாயி, அவனுடைய களங்கமற்ற உள்ளம்தான் பெரிய இடம்”, என்று நண்பர் எம்.ஜி. இராமச்சந்திரன் கூறுகிற பொழுது, மக்கள் மத்தியில் எழுந்த அலையோசை போன்ற கையொலி இருக்கிறதே அது, அறிவியக்கத் தோழருடைய உள்ளத்தையெல்லாம் மகிழ்வித்திருக்கும்.
நண்பர் எம். ஜி. ஆர். நடிகமணிகளிலே வீரம், விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புள்ள அறிவியக்கவாதி. வாள் ஏந்தித் திரைப்பட உலகிலே, அவர் வந்து விட்டாலே, மக்களின் ஆரவாரத்தைக் கேட்க வேண்டாம்? அத்தகையவர், ஏழையாகக் கந்தலாடையும், நொந்த உள்ளமும் தாங்கி, இன்பக்கனவு’ நாடகத்திலே சிந்தை குளிரும் சொற்களைப் பெய்து, நாட்டு மக்களின் நல்லாசியைப் பெற்று வருகிறார்.
நாடக நடிகர்கள், இன்று அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய் மூட்டையைப் போல, ஆங்காங்கேச் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களைப் பற்றி அறிந்த நம் போன்றோர்க்கு, வீதியில் விழியில் விசாரத்தோடு நிற்கும் அவர்களைக் காணும்போது, உள்ளத்திலே எழும் உணர்ச்சிப் போராட்டங்கள் ஏராளம். என்ன செய்வது ? அவர்கள் குறைகளைச் சுமக்கும் சுமை தாங்கியாகவே நாம் இருக்க முடியும். தவிர, நாமென்ன கற்பக விருட்சங்களுமல்ல; மணிமேகலை ஏந்தியிருந்தாளாமே அட்சயப்பாத்திரம் அது பெற்றவர்களுமல்ல. அதனால். ஆயாசம் அடைவோம் அவர்களைப்போல. இந்த ஆயாசத்தைத் துடைக்கும் நல் உள்ளத்துடன், அதே நேரத்தில் அந்த நடிகமணிகளின் மூலம் நல்ல கருத்துகளைப் பரப்ப வேண்டுமென்கிற ஆசையுடன் நண்பர் எம்.ஜி.ஆர். தமது அண்ணன் எம். ஜி. சக்ரபாணி அவர்களின் ஒத்துழைப்போடு, நடிகர் மன்றம் ஒன்றை நிறுவி, நாடகங்களை நடத்த முன்வந்திருக்கிறார். நற்பணியின் முதல் சித்திரம் ” இன்பக்கனவு “.
நண்பர் இராமச்சந்திரன் அவர்களுக்கும் எனக்கும் இருக்கிற தொடர்பை நாடு அறியும். அவருடைய நடிப்பையும் நாடகத்தையும் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகவே கருதப்படும். உண்மைதானே எம். ஜி. ஆர். என்றால் அவர் தாங்கியிருக்கும் கொள்கை எதுவென்பதை நாடு அறியும். முல்லைக்கு மணம் உண்டென்பதைக் கூறவா வேண்டும் ?
கடந்த சில ஆண்டுகளாக முன்னேற்றக் கொள்கைகளை முரசொலிக்கும் ஆவல் எங்கும் பரவியிருக்கிறது ! இதனை நாடகங்கள் மூலமாகக் செய்ய வேண்டும் என்கிற ஆவல் சிறு குக்கிராமங்களில் கூடப் பரவியிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு யார் காரணமென்பதை மற்றாரும் அறிவர். நாடகக்கலை தமிழ்நாட்டில் இந்த அளவாவது முக்கியத்துவம் பெறச் செய்தது திராவிட இயக்கத்தாருடைய பணி என்றுதான் சொல்ல வேண்டும். அதனை அவர்கள் கட்சிப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், தங்கள் கொள்கைகளை எடுத்துக்காட்டுவதற்கு நாடகமும் ஒரு சிறந்த சாதனமென்பதைஉணர்த்திய பெருமை, அதன்மூலம் அதிகமான மக்களிடம் கொள்கையைப் பிரச்சாரம் செய்த பெருமை அவர்களுக்குரியதாகும் என்று அண்மையில் ஒர் ஏடு தீட்டியிருக்கிறது. ஏட்டின் பெயர் சோவியலிஸ்டு. உண்மைதான் !
சீன் ஜோடனையையும், வேட்டுமுழக்கங்களேயும் வெள்ளிச் சாமான்களையும் நம்பாமல், நடிப்பையும் கருத்தையும் முதலீடாக வைத்து, நாம் நாடகக் கலைக்குப் பணியாற்றி வருகிறோம். அதனால்தான், நமது நாடகங்கள் மணமுள்ள மலர்களாக இருக்கின்றன. இந்துவின் ஆதரவும், கல்கியின் படவிளக்கமும் விகடன் விமர்சனமும், மந்திரிகளின் ஒத்துழைப்பும் சச்சிவோத்தமர்களின் ஆதரவுமிருந்தும், அந்த வட்டாரத்து நாடகங்கள் மணம்வீசவில்லை. காரணம் அவைகள் காகிதப் பூக்கள். நம்முடையவை கொள்கை மணம் கொண்ட ரோஜா மலர்கள்.
நாம் நாடகம் நடத்துவதை ஓர் அடிப்படையான கொள்கைக்கு ஆக்கம் தேடவே செய்கிறோம். உண்மை இது. மறுக்கவில்லை, மறைக்கவுமில்லை. அதனால்தான், நமது நாடகங்களிலே, நமது கொள்கைகள் கோலோச்சுகின்றன. இதனைக் கூடாது என்போரும், “கலை வேறு; அரசியல் வேறு;” எனக் கதைப்போரும், காதை மூடிக் கொள்வோரும், துவேஷப் பிரச்சாரம் செய்வோரும், தோள் தட்டுவோரும் இருக்கிறார்கள் நாட்டில். அவர்களுக்குத் தெண்டனிட்டுப் புன்சிரிப்பைப் பெற அல்ல, நாம் இந்தப் பாதை சென்றது. ஆகவே, அவர்களது எரிச்சலே நமக்கு எரு, ஆத்திரமே ஆனந்தம்.
இன்பக் கனவிலே அந்த நற்பணியைக் காண முடிகிறது. நடித்தோர் அனைவரும் நம்முடையவர்கள். எனவே, நறுமணமும், அருங்கொள்கையும் அரசோச்சுகின்றன. இந்த அரிய முயற்சியிலே, வெற்றி கண்டு வரும் எம்.ஜி.ஆரின் தீவிர எண்ணங்கள், இன்னும் பல நாடகங்களாக எழிலுருக் கொண்டு மக்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன். இன்பக் கனவு தரும் எல்லாருக்கும்—இசையமைப்பாளர் உட்பட—கண்டு மகிழ்ந்த மக்களைப் போல், நானும் வாழ்த்துகிறேன்.
வளர்க கலை!வாழ்க நற்பணி !!
வகைப்பாடு: கலை—நாடகம்.
(6-6-64 அன்று வேலூரில் நடைபெற்ற இன்பக் கனவு நாடகத்திற்குத் தலைமையேற்று ஆற்றிய உரை.
நன்றி : தென்னகம்)
2. ஆட்சிப் பொறுப்புக்கு
ஆளாகும் நேரமிது!
1
இம்முறை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அறிமுகம் செய்து கொண்டோம். இப்படி நாம் அறிமுகம் செய்து கொள்வதால், நாம் புதிதாக இப்போதுதான் சந்திக்கிறோம் என்று பொருளல்ல.
“தி. மு. க. நகர்ப்புறத்திலேதான் இருக்கிறது கிராமப் பகுதியிலே இல்லை”, என்றார்கள்.
இந்தத் தேர்தலில் கிராமப்புறத்திலேயிருந்து, ஏராளமானவர்கள் வெற்றி பெற்று வந்திருக்கிறோம். ஏராளமான உழவர் பெருங்குடி மக்கள், தேர்தலிலே வெற்றி பெற்றுள்ளார்கள். எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்களும், தி. மு. க. வெற்றிக்குப் பாடுபட்டு உள்ளனர்.
எல்லா மக்களும் பரிபூரண நம்பிக்கையுடன், நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். இந்தப் புனிதமான நேரத்தில் நாம் அதிகப் பொறுப்புக்களுக்கு ஆளாகி இருக்கிறோம். நாம் அதிகமாகப் பக்குவப்பட வேண்டிய நேரமிது.
மக்கள் நம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பல காரணங்கள் சொல்லலாம். இஃது அக மகிழ்ச்சிக்குரிய நேரமட்டுமன்று. அடக்கத்திற்குரிய நேரமுமாகும்.
தமிழக மக்களின் பரிபூசண நம்பிக்கைக்கு ஆளாகி இருக்கிறோம் நாம். சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரசுக் கட்சியை மக்கள் எப்படி நம்பினார்களோ, அப்படியே நம்மை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சிலரைத் தவிர, மற்ற அனைவரும் இளைஞர்கள். புதிய தலைமுறையினர் பொறுப்பு ஏற்பதையே இஃது எடுத்துக்காட்டுகிறது.
இங்கே அறிமுகப்படுத்திக் கொண்ட நண்பர்கள், தங்கள் படிப்பு என்ன என்பதைச் சொல்லவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பட்டதாரிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆசிரியராக இருந்தவர்கள் இருக்கிறார்கள். பஞ்சாயத்துத் தலைவர்களாக இருந்தவர்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவர்களாக இருந்தவர்கள் இருக்கிறார்கள். நிர்வாகத் துறையில் நன்கு அனுபவப்பட்டவர்கள் இருக்கிறார்கள். பொதுவாகத் தி. மு. க. வைப் பற்றிச் சமுதாயத்தில் ஒரு நிலையில் உள்ளவர்களிடம் தவறாண எண்ணம் இருக்கிறது. தி. மு. க. என்பது வெறிபிடித்து அலையும் படிக்காதவர் கூட்டம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
தி.மு.க. படித்தவர்களின் பாசறை. தி. மு. க. -படிக்காதவர்களுக்கும் அது பாசறை. தி.மு.த.அது பாமரர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் இடம். கற்றறிவாளர்களும் தி. மு. க. வில் உண்டு. சமுதாயத்தின் எல்லாப் பகுதியினரும் இங்குண்டு. நம்முடைய ஏழ்மைத் தோற்றத்தைக் கண்டு, படிக்காதவர்கள் என்று சிலர் எண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாம் மற்றவர்கள் ஒத்துழைப்புடன் ஆளுவோம். எந்தவிதமான தனிப் பட்ட விரோதமும் யாரிடமும் கிடையாது. மற்றவர்களுடன் தோழமையுடன் நடந்து கொள்வோம்.
காங்கிரசு நண்பர்களிடமிருந்தும் நான் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். அதிகாரத்தில் அவர்கள் இல்லாவிட்டாலும் தங்களுடைய ஆலோசனைகளை அளித்தால் ஏற்றுக்கொள்வோம்.
2
1957-ம் ஆண்டில் நான் காஞ்சிபுரம்தொகுதில் தேர்தலில் நின்றபோது, என்னை இராஜாஜி சந்திக்க விரும்பினார். ஒரு நண்பர் வீட்டில் நாங்கள் சந்தித்தோம். “நீங்கள் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒரே ஒரு காரியம் செய்ய வேண்டும். எந்த வகுப்பார் மீதும் எனக்குத் துவேஷம் கிடையாது என்றோர் அறிக்கை வெளியிட வேண்டும் ” என்று இராஜாஜி என்னைக் கேட்டுக் கொண்டார்.
அதற்கு நான், ” என்னால் முடியாது, ” என்றேன். என்னை ஆச்சரியத்தோடு இராஜாஜி பார்த்தார். “நான் இப்படி ஓர் அறிக்கையை இப்பொழுது விடுத்தால், இதுவரை நான் வகுப்புத் துவேஷம் பாராட்டியதாகப் பொருள்படும். நான் எப்போதுமே வகுப்புத் துவேஷத்தோடு இருந்ததில்லை”, என்று சொன்னேன்.
நான் சொல்லியதைக் கேட்டு, இராஜாஜி மகிழ்ச்சியடைந்தார். அப்படியானால், “நீங்கள் இந்த நாட்டை ஆளுவீர்கள்,” என்று அப்போதே வாழ்த்தினார்.
நானும் நெடுஞ்செழியனும், நடராசனும் மதியழகனும் திராவிடர் கழகத்தில் இருந்தபோது, அங்கே நாங்கள் வகுப்பு வேற்றுமையை எந்தத் தனிப்பட்டவரிடமும் காட்டவில்லை.
சுயமரியாதை இயக்கத்தின் பழைய இரசீது புத்தகம் யாரிடமாவது இருந்தால், அதைப் பாருங்கள். அதன் பின்பக்கத்தில் உறுப்பினருக்கான விதி முறைகள் என் கையால் எழுதப்பட்டவையாகும்.
“ வகுப்பு வேறுபாடு இல்லாமல், பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரும் உறுப்பினராகலாம், ” என்றுதான் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நாம் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய பிறகுதான், அந்த அமைப்புக்கூடத் தனிப்பட்ட முறையில் ஒரு குறிப்பிட்ட வகுப்பாரைத் தாக்குவதாக அமைந்தது. அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தி. மு. க. வுக்கு எதிர்முகாமில் இருப்பவர்களாக இருந்தால், அவர்களிடம் திராவிடர் கழகத்தினர் பரிவும் காட்டினார்கள்.
தி. மு. க. எந்த வகுப்பாரிடமும் வேற்றுமை காட்டியதில்லை என்பது மட்டுமல்ல தி. மு. க. சமுதாய ஒருமைப்பாட்டை உருவாக்கப் பாடுபடும். ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவராக இருந்த ஆதித்தனார் தி. மு. கவிலே சேர்ந்திருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பே தம் விருப்பத்தை அவர் எனக்குத் தெரிவித்தபோது, தேர்தல் நேரத்தில் வெளியிட்டால், “ஒட்டு வாங்குவதற்காகச் சேருகிறார்.” என்று சொல்வார்கள் என்று நினைத்துத் தான் நான் அப்பொழுது தெரிவிக்கவில்லை.
ஆதித்தனரும் நாம் அனைவரும் தமிழர்கள் என்று நினைத்து நம்முடன் சேர்ந்துவிட்டார்.
3
நான் அனைவரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். நிர்வாகத்தில் இல்லாவிட்டாலும் காங்கிரசுக்காரர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்வோம். அவர்களுடைய அனுபவங்கள் நமக்குப் பயன்படும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற போது, மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த நேரம். என்னைச் சந்தித்த பி. பி. சி. வானொலி நிலையத்தைச் சேர்ந்த நிருபர், வெளிநாட்டு நிருபர்களுக்கே உரிய வாக்குச் சாதுரியத்துடன், “காமராசர் பிரதமர் மந்திரியாகத் தகுதி உண்டா? அதை விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
“நிச்சயம் தகுதியுண்டு. நான் அதை விரும்புகிறேன்”, என்று பதில் சொன்னேன்.
தில்லியில் நான் பேசும்பொழுதுகூடத், “தென்னாட்டுத்தலைவர்களுக்கு வடநாட்டில்மதிப்புத் தருவதில்லை,” என்று குறிப்பிட்டதைக் கேட்டுத், ” தியாகராசர் பேரால் மன்றம் வைத்திருக்கிருேம்,” என்றார்கள். –
தென்னகத் தலைவர்கள் மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை நாம் உணருகிறோம்.
மாற்றுக் கட்சியினராக இருந்தாலும், அவர்களுடைய அனுபவங்கள் நமக்குப் பயன்பட வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம்.
இந்த நேரத்தில் கழகத் தோழர்களுக்கு மிக முக்கியமானதைக் குறிப்பி ட விரும்புகிறேன். ஆட்சிப் பொறுப்புக்கு நாம் செல்லும் இந்த நேரத்தில் சர்க்கார் வேறு, கட்சி வேறு என்பதை உணர வேண்டும். இதனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறவர்கள் கட்சி வேலையில் ஈடுபடமாட்டார்கள் என்பது பொருளல்ல. ஆட்சிப் பொறுப்பில் அவர்கள் பணியாற்றும்பொழுது, எல்லோருக்கும் பொதுவானவர்கள். கட்சிப் பணியாற்றும்பொழுது அவர்கள் முழுக்க முழுக்கக் கட்சிக்காக வேலை செய்வார்கள்,
சர்க்கார் என்பது வேறு, கட்சி என்பது வேறு. நாடு என்பது நிரந்தரமானது. சர்க்கார் என்பதும் நிரந்தரமானது. ஆளுங்கட்சி மாறிக் கொண்டிருக்கலாம். நாம் கட்சி வேலை செய்ய வேண்டிய இடம் தி.மு.க. தலைமை நிலையங்களான அறிவகம், அன்பகம் ஆகும். சர்க்கார் அலுவலகம் அறிவகமல்ல, அன்பகமுமல்ல. அது அறிவு அகமாகவும் அன்பு அகமாகவும் இருக்கலாம். இந்தியாவிலேயே சிறந்த அதிகாரிகள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய முழு ஒத்துழைப்புடன், தி.மு.க. நல்ல முறையில் ஆட்சியை நடத்திச் செல்லப் பாடுபடும். மத்திய அரசாங்கத்தின் நல்ல ஒத்துழைப்புடன், பணியாற்றத் தி.மு.க. விழையும்.
நாம் ஏற்றிருக்கும் பொறுப்பு மிகப் பெரியது. நாம் அடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்
வகைப்பாடு: ஆட்சி – அறிவுரை.
(26-2-67-இல் சென்னையில் நடந்த சட்டமன்றத் தி.மு.க. உறுப்பினர் கூட்டத்தில் ஆற்றிய தலைமை உரை)
பண்பாடு
கருத்து வேறுபாடு இருந்தாலும், பாராட்ட
வேண்டியதைப் பாராட்டுவது என்பது தமிழ்ப்
பண்பாடு
— பேரறிஞர் அண்ணா
3. பின்னிப் பிணைந்துள்ள
பிரச்சினைகள்
1
வழக்கமாகத் தமிழில் பேசும் நான், அறக்குழுத் தலைவர் வேண்டுகோளுக்கிணங்க ஆங்கிலத்தில் பேசுகிறேன். கல்வியமைச்சர் நெடுஞ்செழியன் அவர்கள் தமிழில் பேசிய பிறகுதான், நான் பேசுகிறேன். எனவே, தமிழுக்கு முதலிடம் தந்த பிறகு, ஆங்கிலத்திற்கு இடமளிக்கிறேன்.
இங்கே மாணவர்கள் பரிசு வாங்கிச் சென்றதைப் பார்க்கும் பொழுது, நான் படித்த பொழுது பரிசு வாங்கிய காட்சிகள் என் நினைவுக்கு வந்தன.
காஞ்சிபுரம் பச்சையப்பரின் அறநிலையப் பணி, வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து, எல்லாருக்கும் பொதுவாக அமைந்துள்ளது. அந்தத் தூய பணி, சமுதாயம் முழுவதுக்கும் நன்மை பயப்பதாக அமைந்துள்ளது.
இப்பொழுதுள்ள மாணவர்களின் மனோபாவம், பழைய மாணவர்களின் மனோபாவம் போல இல்லை என்று சொல்லப்படுகிறது. இன்று, நேற்றாக இருக்க முடியாது. எனவே, இப்போதுள்ள மாணவர்கள், பழைய மாணவர்களாக இருக்க முடியாது. எப்படி ஒப்பிட்டுப் பார்த்தாலும், நம்முடைய மாணவர்கள், மற்ற மாநில மாணவர்களை விடச் சிறந்தவர்கள்.
இப்பொழுதுள்ள மாணவர்களைப் பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்புள்ள மாணவர்களோடு ஒப்பிட்டுப் பேசும்போது, ‘அந்த மாணவர்கள் சிறந்தவர்கள்’ என்று சொல்வார்கள். ஆனால், அந்த மாணவர்கள் காலத்தில், அவர்களுக்கு முந்திய காலத்தில் இருந்தவர்கள்தான் சிறந்தவர்கள் என்று சொன்னர்கள்.
“கல்வியின் தரங் குறைந்து விட்டது” என்று கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. தரத்தில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். ஆனால், முன்பு இருந்த நிலையைவிட, இப்போது கல்வியின் தரம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. எங்கள் பதவிக் காலத்தில் மேலும் கல்வியின் தரத்தை நிச்சயம் உயர்த்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாடு கல்வியில் முன்நிற்கிறது என்னும் நற்பெயரை நாட்டப் பாடுபடுவோம்.
2
எல்லோரும் கல்லூரிப் படிப்பு வாய்ப்பு பெறும் பொருட்டு, இலவசப் புகுமுக வகுப்புப்படிப்பை அமுலாக்க வேண்டும் என்னும் எண்ணம் உலவுகிறது. ஆனால், போதுமான கல்லூரிகளைத் துவக்குவதும் அவற்றைத் துவக்க நிதி வசதிகளைக் காண்பதும் இடர்ப்பாடான சிக்கலாகும். இத்தகைய சிக்கல்களில் மாணவர்கள் சிந்தனையைச் செலுத்த வேண்டும். அவற்றை அலசி ஆராய வேண்டும். அப்போதுதான், தக்க சமயத்தில் தீர்வுகாண முடியும். மாணவர்கள் மாலை நேரங்களில் இத்தகைய பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பழைய தலைமுறையினரை மாணவர்கள் அனுசரித்துச் செல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானதாகும். ‘ஜெட்’ கால மாணவர்களே மிகவும் மந்தமாகச் செல்லும் காலத்துக்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை என்று குறைகூறக் கூடாது.
பிரச்சினைகளில் மாணவர்கள் ஆர்வங் காட்டுவதை நான் வரவேற்கிறேன். ஆனால், பிரச்சினைகளில் ஆர்வங்காட்டுவது வேறு; பங்கு பெறுவது வேறு.
இப்பொழுது பல்வேறு துறைகளில் மாணவர் கள் வளர்ச்சியடைந்துள்ளனர். இப்பொழுதுள்ள பிரச்சனைகள் வேறு. இன்று எந்தப் பிரச்சினையும் ஒன்றோடு மற்றொன்று இணைந்தாகவே இலங்குகிறது.
என்னுடைய வயதான நண்பர் ஒருவர், ”உணவுப் பிரச்சினையைத் தீர்க்கச் சுலபமான வழி இருக்கிறது ” என்றார், நல்லெண்ணத்தோடு அந்த வழியையும் என்னிடஞ் சொன்னார்
“பர்மாவிலிருந்து 4 அல்லது 5 கப்பல் நிறைய அரிசி கொண்டுவந்தால் போதும். அரிசிப் பிரச்சினை தீர்ந்துவிடும்” என்பதாகும் அது. சுலபமானது தான் அவருடைய யோசனை. உண்மையில் அது பலனளிக்ககூடியதுதான். ஆனால், பர்மாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய நாம் நினைத்தால் முடியாது. அதற்கு அதிகாரம் டில்லியில் இருக்கிறது. இப்படிப் பிரச்சினைகள் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, பிரச்சினைகள் பற்றித் தெரிந்து கொள்வதும் அதுபற்றி மற்ற மாணவர்களிடம் கலந்தாலோசிப்பதும் தவறாகாது. அறிவு முதிர்ச்சியும் வலிமையும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுந் திறனும் மாணவர்கள் பெற ஆசிரியர்கள் உதவ வேண்டும். பேராசிரியர்கள்கூடச் சில பிரச்சினைகளைப் பற்றிக் கலந்து ஆலோசிக்கலாம். இப்படிப் பிரச்சினைகளைக் கலந்தாலோசிப்பது நாட்டுக்கு நன்மை பயப்பதாகவே அமையும்.
மிகப் பெரிய ஜனநாயக நாடு இது. ஆனால், மிகவும் ஏழ்மையான நாடு. நமது ஏழ்மையுடன் ஜனநாயகத்தைச் சரிகட்டுவது எப்படி?
ஜனநாயகத்தில் ஒரு நபருக்கு ஓர் ஒட்டு என்று நிலை உள்ளது. ஆனால், ஒரு நபரின் அதிகார வரம்பிற்குள் அநேக ஒட்டுகள் உள்ளன. இதற்குப் பண பலம். சாதி இதர அம்சங்கள் முதலியவை காரணங்களாகும்.
5
தமிழக அரசு உடனடியாக உணவுப் பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டிய நிலையிலுள்ளது. அடுத்து விலைவாசிப் பிரச்சினை. விலைவாசியைக் கட்டுப்படுத்தும்போது, உருவாகும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டும். தொழில் வளர்ச்சியைக் கவனிக்க வேண்டுமானால், வரிப்பளுவைக் குறைக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு மொழிப் பிரச்சினையைக் கவனிப்பதா, மொழிப் பிரச்சினையைத் தீர்த்த பிறகு இப்பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுப்பதா என்பதை மாணவர்களே சொல்லட்டும்.
இங்கே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மட்டும் இருந்தாலும், மாணவர் சமுதாயம் முழுவதையும் கேட்டுக் கொள்கிறேன். எந்தப் பிரச்சினைக்கு முதலில் முடிவுகாண வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள். நேரிலே சொல்ல முடியா விட்டால் கடிதத்தின் வாயிலாகவாவது எழுதுங்கள்.
மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாவிட்டால் இந்த அரசு, பதவி விலகத் தயங்காது. இப்பொழுதுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்ட பின்னரே, மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சூழ்நிலை உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்திப் பிரச்சினையில் மிகப் பிடிவாதமாக இருக்கும் ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட, இப்பொழுது ஒரளவு மாறி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
முன்னாலே ஆட்சியில் இருந்தவர்களுக்கும் இப்பொழுது ஆட்சியில் இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். முன்பு இருந்தவர்கள் யார் எதைச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். “எல்லாம் எங்களுக்குத் தெரியும். யாரும் எங்களுக்குச் சொல்ல வேண்டாம்” என்பார்கள் ஆனால், நாங்கள் அப்படியல்ல. எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டுக் கொள்வோம். மாணவர்கள் தோழமையை மட்டுமல்ல, துணையையும் தமிழக ஆட்சி விரும்புகிறது. உங்களுடைய ஆலோசனைகளையும் அவற்றை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்னுங் கருத்துக்களையும் தாருங்கள். எங்களால் முடியாவிட்டால்”முடியவில்லை, முடியாததற்கு இன்னன்ன காரணங்கள்” என்று சொல்லவும் கூச்சப்படமாட்டோம்.
மாணவர்களே மட்டும் ஆலோசனை கேட்க வில்லை. எல்லாத் தரப்பிலும் கேட்கிறோம். முடிந்தால் சில பிரச்சினைகளில் ஐரோப்பியநாடுகளில் கையாளப்படும் பொது வாக்கெடுப்பு முறையை அமுல் நடத்த முயலுவோம்.
முன்பு தமிழக மக்கள் மட்டுமே இந்தியை எதிர்த்தார்கள். இப்பொழுது தமிழக அரசும் இந்தியை எதிர்க்கிறது. மக்களின் உணர்ச்சிகள் மெய்ப்பிக்கப் பட்டுவிட்டன. இந்தநிலையில் மைய அரசு நம் பக்கம் வரும் என்னும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. தலைமை அமைச்சராகி இருக்கும் திருமதி இந்திரா காந்தி அவர்களிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மொழிப் பிரச்சினையில் அவர் அவ்வளவு பிடிவாதமாக இருக்கமாட்டார் என்று நான் எண்ணுகிறேன்
கடந்த காலத்தில் மாணவர்கள் அவர்களது அரசியல் அல்லது மொழி உணர்ச்சிக்காகப் பழி வாங்கப்பட்டதற்கு வருந்துகிறேன்.
இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய பிறகுதான், கோட்டைக்குச் சென்று பதவியை ஏற்றுக் கொண்டோம். அந்தத் தியாகிகள் இட்ட பிச்சையே தி.மு.க. அமைச்சரவை என்று நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய அறிவால் மட்டும் அடைந்தது அஃது என்று நினைக்க வில்லை.
வகைப்பாடு : ஜனநாயகம்—பிரச்சினைகள்
(26-2-67 அன்று சென்னைப் பச்சையப்பன் கல்லூரி அறநிலையக் காப்புக்குழுவின் 124-வது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை)
மாணவர்
வயலுக்கு நாற்றங்காலில் பயிரை வளர்ப்பார்கள்.
அது போல், எதிர்கால வயலுக்கேற்ற நாற்றங்கால்
பயிராகப் பள்ளிப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
— பேரறிஞர் அண்ணா
4. சமுதாயம் ஆசிரியர்களுக்குப் பட்டிருக்கும் கடமை
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இங்கு விருது வழங்கப்பட்டது, ‘அவர்களுக்குச் சமுதாயம் கடமைப் பட்டிருக்கிறது’ என்பதையே காட்டுகிறது. இங்கு 70 பேர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர்களை நான் பாராட்டுகிறேன்
கல்விச் செல்வத்தை அளித்தவர்களை, நாட்டின் எதிர்கால மக்களை உருவாக்கித் தருபவர்களை, ஆசிரியப் பெருமக்களைத் தமிழகம் பாராட்டுகிறது என்பதை இவ்விழா காட்டுகிறது, ஏழ்மையை ஏற்றாலும், நாட்டுக்குக் கல்விச் செல்வத்தை வழங்கி, அறிவுள்ள மக்களை உருவாக்கித் தரும் ஆசிரியர்களைத் தமிழக அரசு பாராட்டுகிறது. எத்தனையோ தொல்லைகள், சலிப்புகள், ஏக்கங்களுடன் வாழ்க்கை நடத்தும் ஆசிரியர்களின் பணி தூய்மையானது.
“நமக்குப் போதுமான ஊதியம் அளிக்கா விட்டாலும், வீடுகளைக் கட்டிக் கொடுக்கா விட்டாலும், நம்முடைய பண்பாட்டைப் போற்றி மதிக்கின்ற அரசு” என்று ஆசிரியர்கள் நினைப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இப்படிச் சொல்வதால், ஆசிரியர்களின் ஏழ்மை நிலை நீடிக்க வேண்டுமென்று தமிழக அரசு நினைக்கவில்லை. ஆசிரியர்களின் வாழ்க்கை செம்மையாக அமைய வேண்டும் என்றே தமிழக அரசு எண்ணுகிறது.
ஆசிரியர்கள் ஏற்றிருக்கும் பொறுப்பு, தமிழ்ச் சமுதாயம் சீரிய பண்பாட்டுடன் வளர வழி வகுப்பதாகும். இலட்சியச் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
தொடக்கம் தூய்மையாக இருந்தால்தான் தொடுப்பும் முடிப்பும் சரியாக அமையும். கல்விகளுக் கெல்லாம் அடிப்படையானது தொடக்கக் கல்வி. எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையாக அகரம் இருப்பதுபோல், கல்வித் துறைக்கு அடிப்படையானது தொடக்கக் கல்வி! சமுதாயத்தை மகிழ்ச்சி உள்ளதாக ஆக்கும் பொறுப்பில் ஆசிரியர்களுக்கும் பங்குண்டு.
நம்முடைய மாநிலத்தின் ஆளுநர் அவர்கள் கல்விச் செல்வத்தை வழங்கும் ஆசிரியர்களைப் பாராட்டினார்கள். ஆளுநரின் வாழ்த்துக்களுடன் விருதுகளைப்பெற்றிருக்கும் ஆசிரியர்கள், அழிவிலாச் செல்வத்தைப் பெற்றவர்கள் ஆவார்கள்.
மூன்றடுக்கு மாடியில் வாழ்பவன் மேல்மாடியில் உலவிக் கொண்டிருக்கும் பொழுது, வழியில் செல்பவன், ‘இவன் எப்படிப் பணம் சேர்த்தான்?’ என்று எனக்குத் தெரியும் என்று சொல்லுவான். ஆனல், ஆசிரியர்கள் பெற்றிருக்கும் செல்வங்களை யாராவது குறைகூற முடியுமா?
ஆளுநரின் திருக்கரத்தால் ஆசிரியர்கள் பெற்றிருக்கும் விருதுகளைப் பார்க்குந்தோறும், எண்ணுந் தோறும் மகிழ்ச்சிதரத்தக்க கடமையின் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக இருக்கும். ஏனெனில், ஆசிரியர்கள் பெற்றிருக்கும் செல்வம் இழிவும், பழியுமில்லாதது! எங்கள் தகப்பனர், பாட்டனர், தமையன், மாமா, உறவினர், விருது பெற்றோர் என்று பாராட்டப்பப்படும் அளவில் ‘விருது பெற்ற குடும்பம்’ என வழி வழியாக உங்களுக்குப் போற்றுதல் கிடைக்கும். அப்படிப்பட்ட போற்றுதலுக்கு ஆளான ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டு, அந்தத் தூய பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வகைப்பாடு : கல்வி—ஆசிரியர்கள்.
(27-8-67 அன்று சென்னையில் தொடக்கப் பள்ளி ஆசிரிகளுக்கான ஏழாவது விருதளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை)
சமூக மேம்பாடு
ஒரு நேரமாயிலும், நாட்டின் பொது நன்மைக்காகச்
செலவிடுவேன் என்று உறுதி கொண்ட, சில ஆயிரவர்
தமது உழைப்பினைத் தந்திடின் சமூக மேம்பாடு வளரும்.
— பேரறிஞர் அண்ணா
5. அனைத்திந்திய அடிப்படை
தமிழுக்கு உரிய இடத்தை நாம் அளித்து வருகிறோம். தமிழகத்தின் எதிர்காலம், ஒளி நிரம்பியதாக இருக்கும்.
வழக்கு மன்றங்களிலே தமிழைப் பயன்படுத்திச் சட்ட நுணுக்கச் சொற்களைத் தமிழில் ஆக்கித் தந்த குழுவினருக்கு, எனது பாராட்டுதலையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். “அனைத்திந்திய அடிப்படையில் சட்டச் சொற்கள் அமைக்கப்பட வேண்டும்” என்று மத்திய அரசாங்கம் வலியுறுத்தி வருவதையும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் இங்குக் குறிப்பிட்டார்கள். கல்வியமைச்சர் அவர்கள் கூட, அதனை எடுத்துரைத்தார்.
அந்தந்த மாநிலங்களின் தனித் தன்மையைக் கெடுக்கும் வகையில் அனைத்திந்திய அடிப்படை அமைந்தால், கெடுதல்தான் ஏற்படும். பொதுவாக, இதைப் பற்றி எல்லோரும் எடுத்துப் பேச மாட்டார்கள். ஒரு வகையான அச்சம் அவர்களுக்கு ஏற்படும்.
என்னைப் பற்றி இதை விடப் பெரிய அச்சம் வெளியே எழுப்பப்பட்டிருப்பதால், நான் ஒளிவு மறைவின்றிச் சொல்கிறேன். இங்கே தமிழ் மொழியில் சட்டச்செல்லாக்கம் செய்வது போல், அனைத்திந்திய அடிப்படையில் சொற்களை அமைக்க ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். நமது மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு” அந்தக் குழுக் கூட்டத்தில் ‘ பெடரேஷன்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லைக் கண்டுபிடிப்பதில் மூன்று நாட்கள் செலவிட்டார்கள். கண்டுபிடிக்குஞ் சொல் அகில இந்திய அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதில்தான் சிக்கல் இருந்தது.
தமிழ்நாட்டுப் பிரதிநிதி தமிழில் ‘சங்கம்’ என்னுஞ் சொல் இருக்கிறது அதைப் பயன்படுத்தலாம் என்றார்.
இதைக்கேட்ட வங்காளப் பிரதிநிதி “வங்கத்தில் சங்கம் என்பதற்கு வேறுபொருள் உண்டு. இதைக் கேட்டவுடன் எங்கள் மாநிலத்தில் வேறு பொருள் கொள்வார்கள். வேண்டாம்”, என்றார்.
உடனே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ‘கழகம்’ என்னுஞ் சொல் தமிழில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தலாம் ” என்றார்கள்,
” என்ன? கழகமா ?” என்று ஒரு சேர எல்லோரும்.கேட்டார்கள்.
நமது பிரதிநிதிகள், “கழகம்” என்பது 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சொல் அல்ல. தமிழ்ப் புராணங்களில் உள்ள சொல்லாகும்.’’ என்று தெரிவித்தார்கள்.
இவர்கள் எதைச் சொல்லியும் அங்குள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் சங்கம்’ என்னுஞ் சொல்லையே ஏற்றுக் கொண்டார்கள். இப்பொழுது அனைத்திந்திய அகராதியில் பெடரேஷன், என்னுஞ் சொல்லுக்குச் சங்கம் என்னுஞ் சொல் தான் தரப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பில்கூட ஒரு விதமான மனப்பான்மை காட்டப்படுகிறது. ‘அனைத்திந்தியா’ என்பதை நாம் அடிக்கடி எல்லாவற்றிலும் பயன்படுத்தி வருவதில் கூடப் பல ‘இந்தியாக்கள்’ இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்ளும் வகையில்தான் ‘அனைத்திந்தியா’ என்று சொல்லி வருகிறோம். எந்த நிலையிலும் ‘ஆல் பிரிட்டன், ஆல் ஜெர்மன்’ என்று சொல்லுவதில்லை
அனைத்திந்திய அடிப்படையில் பேசப்படும் பிரச்சினைகள், மொழி விஷயத்தில் மட்டுமல்ல. தொடர்புகள் விஷயத்திலும் பேசப்படுகின்றன. அனைத்திந்தியாவும், ஏற்றுக் கொள்ளும் வகையில் அவைகள் இருக்க வேண்டும்.
அனைத்திந்திய அடிப்படையில் பேசப்படுபவைகள், அந்தந்த மாநிலத்தின் தனித் தன்மைகளை அழிக்கக் கூடியவைகளாக இருந்தால், அனைத்திந்தியா வலுவுள்ளதாக இருக்க முடியாது. அனைத்திந்திய அடிப்படையில் பேசப்படுபவைகள் எல்லாம் இணைந்து, இழைந்து இருக்கும் வரையில்தான், எல்லாம் நன்றாக இருக்க முடியும். கொஞ்சம் அந்த அனைத்திந்திய அடிப்படை உராய்ந்தால், ஆபத்துத்தான் ஏற்படும்.
எதற்கு அனைத்திந்திய அடிப்படை தேவையோ, அதற்கு மட்டும் அனைத்திந்திய அடிப்படை இருந்தால் போதும். சொற்களில் கூட அனைத்திந்திய அடிப்படையைப் புகுத்துவது தேவையில்லாததாகும். இந்த நிலையில், நாம் எல்லாவற்றிலும் அனைத்திந்திய அடிப்படையைக் கொண்டு வருவது நல்லதல்ல:
வகைப்பாடு : ஆட்சி—மொழி
(14-4-67 அன்று சென்னையில் நடைபெற்ற சட்டச் சொற்பொருட் களஞ்சிய முதற்பகுதி வெளியீட்டு விழாவில் ஆற்றிய தலைமை உரை.)
6. ஆசியப் பொதுச் சந்தை
இந்தியாவில் ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, வெளிநாடுகளுக்குச் செய்யும் ஏற்றுமதியும் குறைந்து விட்டது. ரூபாய் மதிப்பு குறைப்பின் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், அதன் மூலம் ஏற்றுமதியை அதிகப்படுத்த முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். மாறாக, இதனால் ஏற்றுமதி குறைந்தது. இதை அரசியலுக்காகக் கூறுவதாக யாரும் நினைக்கத் தேவையில்லை; ஏற்பட்ட நிலைமையினைத்தான் எடுத்துக் கூறுகிறேன்.
நமது நண்பர்கள் மூவரும் நிறைய நல்ல முறையில், நமது நாட்டில் தயாரித்த பொருட்களை ஏற்றுமதி செய்ததற்காகப் பரிசுகள் வழங்கினோம். இது பற்றி மெத்த மகிழ்ச்சி அடைகின்றேன், பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இருந்தாலும், நமது ஏற்றுமதியாளர்கள் இன்னும் ஏற்றுமதியை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். அதற்கான ஆக்கப் பணிகளில் ஊக்கம் காட்ட வேண்டும். ஆசிய நாடுகளில், வணிகர்கள் யாவரும் ஒன்று கூடி. ‘ஆசியப் பொதுச் சந்தை’ அமைத்து, ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தை, நாட்டின் வளத்தைப் பெருக்கிட வேண்டும்; முன்னேற்றமடையச் செய்திட வேண்டும்!
ஏற்றுமதியைப் பெருக்கிட அயல் நாடுகளில் நாம், நமது உற்பத்திப் பொருள்களைப் பற்றிச் சிறந்த முறையில், பலவழிகளில் நிறைய விளம்பரம் செய்துவரவேண்டும். அப்போதுதான் நம் நாட்டு ஏற்றுமதிப்பொருட்களுக்கு அயல் நாடுகளில் நல்ல மதிப்பிருக்கும், நல்ல விலை போகும், நிறையத் தேவையும் ஏற்படும். வெளிநாட்டவர், நமது ஏற்றுமதிப் பொருட்களுக்கு நல்ல விளம்பரம் இல்லை என்று குறைபட்டுக்கொள்கின்றனர்.
நாம் நமது பொருட்களின் ஏற்றுமதிகளை விரிவு படுத்த நினைக்கும் இதே நேரத்தில் நாம், நமது இறக்குமதிகளையும் குறைத்திட எல்லா வழிகளையும் கையாளவேண்டும். அதற்கான முயற்சிகளை, இத்துறையில் ஈடுபட்டவர்கள் கையாளவேண்டும். நாம் நமது ஏற்றுமதியைப் பெருக்கிட மூலகாரணமாயுள்ள தொழிலாளர்களின் ஊதியத்தைக் காலத்திற்கேற்றார்போல் உயர்த்தித்தந்து, அவர்களையும் ஆதரிக்கவேண்டும்.
பட்டு மற்றும் கைத்தறித் துணிகளை எந்த அளவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யமுடியுமோ அந்த அளவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப் பாடுபட வேண்டும். இறக்குமதிகளை அடியோடுகுறைத்திட்ட ஒரு நாடுதான் உண்மையில் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கமுடியும். படிப்படியாக நாம் இறக்குமதிகளைக் குறைத்துக்கொண்டே வந்திருக்கிருேம்.
உரங்கள், மருந்துப்பொருள்கள், இயந்திரங்கள் முதலியன தவிர, மற்ற இறக்குமதிகளும் குறைக்கப் பட்டு வருகின்றன. ஏற்றுமதியை அதிகப்படுத்த வெளிநாட்டில் அதிக அளவுக்கு நமது பொருள்களுக்கு விளம்பரங்கள் செய்ய வேண்டும். மத்திய அரசு விளம்பரத் துறை இதைக் கவனிக்க வேண்டும். ஏற்றுமதியை அதிக அளவில் செய்து வெற்றி பெற்றவர்கள், மீண்டும் அடுத்த ஆண்டும் பரிசுகளைப் பெற வேண்டும். அதே போல, மற்றவர்களும் பரிசுகளைப் பெற முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாணய மதிப்புக் குறைப்பினால், நமது ஏற்றுமதியின் அளவு உயரவில்லை. ஏற்றுமதி மதிப்பு குறைந்ததுதான் மிச்சம்.
இந்தியாவுக்கும், முற்போக்குள்ள நாடுகளுக்குமிடையே ஏற்றுமதித் தொடர்பான நிலைகள் நல்ல வாய்ப்பாக உருவாகவில்லை. ஆகையால், ஆசியாவில் பொதுச் சந்தையை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகள் வரியையும், மற்றக் கட்டுப்பாடுகளையும் குறைத்து, இந்தியா போன்ற நாடுகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்,
வகைப்பாடு :பொருளாதாரம்: ஏற்றுமதி இறக்குமதி
{19-4-67 அன்று சென்னையில் அதிக ஏற்றுமதி, இறக்குமதி செய்தவர்களுக்கு அளித்த கேடய வழங்கு விழாவில் ஆற்றிய தலைமை உரை.)
7. மாமனிதர் மகாவீரர்
வேலூரில் 35 ஆண்டுகள் பணி புரிந்த ஒரு வெள்ளைக்காரர் ஓய்வு பெற்ற காலத்தில், தாயகம் செல்லவிருந்த பொழுது. வழியனுப்பு விழாவிற்கு என்னையும் அழைந்திருந்தார்கள். எவ்வளவோ மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து—வேற்று நாட்டுக்காராக இருந்தாலும்—விழுமிய தொண்டராகப் பிறர் பயனடைய, மருத்துவ நிலையங்களையும், கல்விக்கூடங்களையும், அறமனைகளையுங் கட்டித் தந்து பணி புரிந்தவராயிற்றே என்னுங் கருத்தில், அமெரிக்காவிற்குச் செல்லவிருந்த அந்தக் கிறித்துவரை வழியனுப்பச் சென்றேன். அப்போது, வேலூரிலிருந்து இந்து மதத்தைச் சார்ந்த ஒருவரிடமிருந்து எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது. “கிறித்துவரை வழியனுப்பும் விழாவில் கலந்து கொள்ள வந்தால், நாங்கள் கறுப்புக் கொடி காட்டுவோம்” என்று அந்தக் கடிதத்திலே எழுதி இருந்தது. எங்கள் கட்சிக் கொடியிலே கறுப்புத்தான் இருக்கிறது என்று அப்போது வேடிக்கையாகச் சொன்னேன்.
எவ்வளவோ தொலைவிற்கு அப்பாலிருந்து வந்தவர்கள் என்றாலும், அயலவர்கள் என்றாலும், அவர்கள் செய்த நல்ல செயலைத் தமிழக மக்கள் வரவேற்க வேண்டும். அது போன்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜைனமதத்தைச் சேர்ந்தவர்களும் மருத்துவ மனைகளையும் கல்லூரிகளையும் ஏற்படுத்தித் தாங்கள் ஈட்டிய பொருளை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் பிறந்த காஞ்சிபுரத்திலும் அதைச் சுற்றிய சிற்றுார்களிலும் ஜைன மதத்தைச் சார்ந்த மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன் எனக்குத் தொடர்பும் உண்டு.
“ இந்து மார்க்கம் தமிழர்களுக்கே உரிய மார்க்கம்” என்று தமிழாய்ந்த வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர். ஆகவே, இந்த மார்க்கத்தில் எனக்குத் தொடர்பும் ஈடுபாடும் உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறன்.
உலகத்திலேயே நம்முடைய நாட்டில்தான் பெரும் பெரும் மகான்கள் வழிகாட்டிகள் தோன்றி இருக்கிறார்கள். நான்கூடச் சில சமயம் நினைத்துப் பார்ப்பேன். ‘இப்படிப்பட்ட பெரியவர்கள் தோன்றாமல் இருந்திருக்கலாம். அவர்கள் தந்த அந்த நல்ல சிந்தனைகள் தோன்றாமல் இருந்திருக்கலாம் என்று. பெருமைக்குரிய வழிகாட்டிகள் பலர் இருந்துங்கூட, ” நாம் இந்த அளவுக்குக் கெட்டுப் போயிருக்கிறோம் உயர்ந்த நிலையில் இல்லையே”. என்பதால்தான், அப்படிக் கருதத் தோன்றியது.
இதுபேன்ற வழிகாட்டிகளே தோன்றாத நாடுகளில் எவ்வளவோ முன்னேறி இருக்கின்றார்கள். வளர்ச்சி அடைந்திருக்கின்றார்கள். ஆனால் வழி காட்டிகள் இருந்தும், அவர்கள் வழிநடத்திச் செல் பவர்களாக இருந்தும் நாம் முன்னுக்கு வரவில்லை. காரணம் நாம் சொல்பவர்களாகவே இருந்தோம். செய்யத் தவறி விட்டோம். ஆகவே, இனிமேல் சொல்வதுடன் செய்து காட்டவும் வேண்டும்.
“புத்தர் சொன்னார், சித்தர் கூறினார் மகாவீரரும் முகமது நபியும், காந்தியடிகளும் இராமலிங்க அடிகளும் சொன்னார்கள் ” என்றுதான் சொல்கிறோமே தவிர, அவற்றைச் செய்து காட்டுகின்றோமா ?
” அவர் அப்படிச் சொன்னார், இவர் இப்படிச் சொன்னார்” என்று கூறிவிட்டு, “நீ என்ன செய்யப் போகிறாய்?” என்றால் விழித்து நிற்போரைத்தான் நாம் பார்க்கிறோம், ஆகவே, சொல்வதோடு மட்டும் நில்லாமல், செய்தும் காட்டவேண்டும். அப்போதுதான் அந்த நன்னெறிகளை உணர்ந்தவர்கள் ஆவோம்.
மகாவீரர் போன்ற உயர்ந்த மேதைகளை நாம் பின்பற்றிச் செல்லவேண்டும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஜைன விதியை நல்லமுறையில் பாதுகாத்து, அந்த நெறியிலே நடப்பது மட்டுமல்லாமல், மற்றச் சமுதாயத்தினரும் அந்த நெறியிலே நடந்து வாழ்ந்து சிறக்கவேண்டுமென்பதிலே அக்கறை காட்டுகின்ற உங்களைப் பாராட்டக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
மகாவீரர் போதித்த தத்துவங்கள் நல்ல மார்க்கங்களாகும். நல்ல நெறிகளாகும். “ஐம்புலன்களை அடக்கு பொருள்களின்மீது மிகுதியாக ஆசை வைக்காதே”. என்றெல்லாம் இங்கு எழுதியிருப்பதைக் காண்கின்றேன். இந்த உண்மைகளை எல்லாம் உண்மையிலேயே உலகில் உள்ளோர் அறிந்து உணர்ந்திருப்பாரேயானால் சண்டை ஏற்பட்டிருக்காது. ஐக்கிய நாடுகள் மன்றமும் தேவைப்பட்டிருக்காது.
மனித சமுதாயத்தை வழிநடத்தும் மார்க்கங்கள் எல்லாம் நான்கு மாடிக்கட்டிடங்களாக உள்ளன என்றாலும், இரண்டு மூன்று மாடிகளுக்குத் தான் ஒழுங்கான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது மாடியிலிருந்து அடுத்த மாடியைப் பார்த்தால்: தொங்குகிற நூல் ஏணியில் ஏறிச்செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.
ஜைன மதத்தை அறிந்த அறிஞர்களிடமும், பெரியவர்களிடமும் எனக்கு நெருங்கிய தொடர்பும் பழக்கமும் உண்டு. ஜைன சமயம் பற்றிப் பல தடவை நாங்கள் விவாதித்து இருக்கிறோம். அப்போது நான் வகுத்தப்பட்டதுண்டு. நெறிகள் சரியில்லை என்பதால் அல்ல. இந்த நெறிகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் வளர்ந்துகொள்ள வில்லையே என்பதுதான் அதற்குக் காரணம். அந்த அறநெறிகளுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லையே என்னுங் குறை இருப்பதால், அந்த நெறிகளே எல்லாம் மறந்துவிடவேண்டும் என்று நான் கூறமாட்டேன்.
ஆண்ட அரசர்களையும், அண்டி உயிர் வாழ்ந்த ஆண்டிகளையும், பெரும் பணக்காரர்களையும், சிரமப் பட்டுப் பிழைத்த ஏழைகளையும், உயர்ந்தோர் எனச் சொல்லிக் கொண்டோரையும், தாழ்ந்தவர் எனக் கூறப்பட்டோரையும், தமக்குப் பின்னே வழி நடத்திய மாமனிதர் மகாவீரர். அவர் பின் செல்லவும், அவர் விட்டுச் சென்ற நல்ல செயல்களை நாமும் கடைப்பிடித்து ஒழுகி, அதன் மூலம் நல்ல வாழ்க்கை வாழவும் வேண்டும்.
நான் நல்ல வாழ்க்கை என்று கூறுவது, “நாம் மட்டுமல்லாது, பிறரும் உலகத்தில் மகிழ்ச்சியடையக் கூடிய அளவில் வாழ வேண்டும்” என்பதைத்தான் நல்ல வாழ்வு எனக் கருதி, மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்.
வகைப்பாடு : சமயம்: சைன மதம்—மகாவீரர்.
(22-4-67 அன்று சென்னை ஜைன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மகாவீரர் பிறந்த நாள் விழாவில் ஆற்றிய தலைமை உரை)
தலையாய பணி
பல்கலைக் கழகத்தின் தலையாய பணி அறிவாற்றலைப்
பெற விரும்புவோர்க்கு, அதனை அதன் உண்மையான
அளவிலும், நோக்கத்திலும் அளிப்பதும், உலகின்
கருத்துக்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றின்
தனியாண்மையினைக் காப்பதும் ஆகும்.
— பேரறிஞர் அண்ணா
8. ரிசர்வ் வங்கியின் சிந்தனைக்கு
இந்த நாட்டில் நாணயத்தின் மதிப்பைக் குறைத்த போது, யாரிடமும் அரசினர் கலந்து பேசவில்லை. அவசர, அவசரமாக அந்தத் திட்டத்தை நிறைவேற்றினார்கள். அவசியம் இல்லாமல், அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். ‘அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?’ என்றால், ‘நான் இல்லை’, ‘நீ இல்லை’ என்று சொல்லுகின்றார்கள்.
நாணயக் குறைப்புத் திட்டம், செயல் முறைக்கு உகந்ததும் அல்ல, விரும்பத்தக்கதுமல்ல. எனது குரலுக்கு மத்திய அரசு வட்டாரத்தில் வலுவு இருக்கிறது என்றார்கள்; உங்களின் ஆதரவும், பக்கபலமும் இருந்தால்தான், என் குரலுக்கு மதிப்பும், வலிவும் என்று சொல்லிக் கொள்கிறேன்.
தொழிலின் அடிப்படையில் தரப்படும் திட்டங்களை ஆய்ந்து பார்த்து, இத்தனைக் கோடி ரூபாய் கொடுக்கின்றோமே, இதைப் பயன்படுத்தினால், தொழில் வளர்ச்சிக்குப் பயன் ஏற்படுமா? கொடுத்த பணம் திரும்பக் கிடைக்குமா? என்று சிந்தித்துப் பார்த்து, ரிசர்வ் வங்கி கடன் தருவதில்லை; கடன் கேட்பவரின் முகத்தைப் பார்க்கின்றார்கள். உடையைப் பார்க்கின்றார்கள், கடன் கேட்பவரின் இதழ்களில் உள்ள புன்னகையின் மதிப்பைப் பார்க்கின்றார்கள்!
தமிழகத்தைப் பொறுத்த மட்டில், நாம் எதிர்பார்த்ததை ரிசர்வ் வங்கி கொடுப்பதில்லை, நமக்குச் சாதகமாக அது இல்லை!
வகைப்பாடு: பொருளாதாரம்—தொழில் திட்டங்கள்.
(24-4-67 அன்று சென்னைத் தேசிய வணிகக் கழகத்தில் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)
9. மாநில மைய அரசு உறவுகள்
மாநில, மத்திய அரசுகZன் தொடர்பு பற்றி இங்கே விவாதிக்கப்பட இருக்கிறது. “தொடர்பு” என்பதே ‘நீக்கப்பட முடியாதது, இருந்து தீர வேண்டியது’ என்றுதான் பொருள் தரும். இல்லையென்றால், இருவருடைய தொடர்பு ஒருவருக்கு மட்டுஞ் சொந்தமாக மாறி விடும், ஆகையால், மாநில—மத்திய அரசுகளின் தொடர்பு பற்றிய சிந்தனை, விரிவாகப் பரந்து காணத் தெளிவான கண்ணோட்டத்தைப் பெற வேண்டும்.
35 நான் முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால், திரு. சந்தானம் அவர்கள் கூறிய கருத்துக்களை விமர்சனம் செய்ய முடியவில்லை. நான் கூறுகிற கருத்து தமிழக அரசினர் கருத்து என்று கருதப்படுகிறது என்பதால்தான் விமர்சிக்க முடியவில்லை, இதுபோன்ற கழகங்களும் சங்கங்களும் இக்கருத்து உரையை விவரமாக விவாதிக்க வேண்டும், தம்முடைய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். திரு. சந்தானம் அவர்கள் சொன்ன கருத்துக்களில் எனக்குக் கவர்ச்சிக் கருத்தாகத் தோன்றியது. ‘மாநில அரசுகளின் பிரதிநிதிக்குழு’ பற்றியதாகும். மாநிலச் சட்டமன்றங்களின் இரு அவைகளிலுமுள்ள உறுப்பினர்களைக் கொண்டு மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகள் பற்றி அரசுக்கு ஆலோசனை கூறக்கூடிய அரசியல் சட்டப் பரிசீலனைக் குழுவைப் பற்றிச் சந்தானம் எடுத்துரைத்தார். இது கவர்ச்சியான யோசனை ஆகும். ஒரு மாநில அரசாங்கத்திற்கும். மற்ற மாநில அரசாங்கத்திற்கும், மத்திய அரசாங்கத்திற்கும் ஏற்படுஞ் சிக்கல்களைத் தீர்க்க இக்குழு அமைந்தால் பெரிதும் பயன்படும். மாநில அரசாங்கங்களுக்கு மதிப்பில்லாமல் போனதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டுமென்னுங் கருத்து ஒரு கசப்பான உண்மையாகும். ஆனால், அதை நான் தயக்கமின்றி ஒப்புக் கொள்கிறேன். 36 மாநில அரசுகளிடமிருந்து வரி வசூலிப்பதை மத்திய அரசு பிடுங்கிக் கொள்ளும் போக்கு ஒரே அரசியல் கட்சி எல்லா இடங்களிலும் ஆண்டபோது சரியானதாக இருக்கலாம். இப்பொழுது பல கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களில் ஆளுவதால், அக்கருத்துச் சரியானதாக இருக்காது. சிலர் “யார் வரி வசூலித்தால் என்ன? அந்தப் பணம் இந்தியாவுக்குள்தானே இருக்கிறது?” என்று விசித்திர வாதம் புரிகிறார்கள். அப்படிப்பட்ட வாதத்திற்கு முன்பு கைத்தட்டல் கிடைத்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்திற்குச் சொல்லி வைத்துத்தான் கைதட்டல் பெற முடியும். இன்னுஞ் சில ஆண்டுகள் சென்ற பிறகு, சொல்லி வைத்தாலும் கைத்தட்ட மாட்டார்கள். அதன் பின்னும் மேலுஞ் சில ஆண்டுகள் சென்றால் கைத்தட்டுபவர்களையே சந்தேகிப்பார்கள். “திருநெல்வேலியில் களவாடியது திருச்செந்தூரில் இருக்கலாம். திருச்செந்தூரில் களவாடியது திருவல்லிக்கேணியில் இருக்கலாம். களவாடப் பட்ட பொருள்கூட, இந்த நாட்டிலேதான் இருக்கிறது. ஆகவே, களவாடப்பட்டது பற்றிக்கவலைப்படவேண்டாம்” என்று எவரும் கூறத் துணியமாட்டார்கள். ஒருவருக்குரிய பொருளை எடுத்தாலும் ஒருவருக்குரிய உரிமையை எடுத்துக் கொண்டாலும், திருட்டு திருட்டுதான். ஆகையால், உரிமைகளை மதித்து மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டும். ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டுமே தவிர, ஒன்றாக்கப்பட்டு விடக் கூடாது.
கலந்துரையாடியே பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண வேண்டும். அடிமை மனப்பான்மை வந்து விடக் கூடாது. சொல்பவர் ஒருவர்; கேட்பவர் பலர் என்னும் நிலை அமையக் கூடாது. இந்த முறையில்தான் இனி மேல், இந்திய அரசியல் முறை அமைய வேண்டும்.
“மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் வேண்டும்” என்று நான் கூறினால், பிரிவினைக் கொள்கையை முன்பு வலியுறுத்தியவன் என்பதால், பழைய கோரிக்கைகளுக்கு இப்படி வடிவம் தந்து பேசுகிறேன் என்பார்கள். ஆனால், திரு. கே.எஸ். சந்தானம் போன்றவர்கள் பேசினால், அப்படிப்பட்ட கருத்துத் தோன்றுவதற்கு இடமில்லை.
மத்திய, மாநில அரசாங்கங்களின் தொடர்பு பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது. அந்தச் சிந்தனை இல்லாவிட்டால், ஆபத்து வந்து சேரும் என்னும் அச்சமும் தோன்றியிருக்கிறது,
வகைப்பாடு : ஜனநாயகம்—கருத்தரங்கு.
(24-4-67 அன்று திருவல்லிக்கேணிப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆற்றிய தலைமை உரை.)
10. தொழில் வளச்சியும்
ஒருமைப்பாடும்
இந்தப் பிளாஸ்டிக் தொழிற்சாலை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய தொழிற்சாலைத் திறப்பு விழாவில் முதலமைச்சர் என்னும் முறையில் பங்கு கொள்ளும் நான் மகிழ்ச்சி அடைந்தாலும், நிதியமைச்சர் என்னும் முறையில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
தமிழகத்தின் நிதி நிலைமை என்னைப் போல உயரக் குறைவாக இருந்தாலும், தொழில் துறை வளர்ச்சி, நம்முடைய தொழிலமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களைப் போல உயரமாக இருக்கிறது.
தமிழகத்தின் தொழில், வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றாலும், அது மேலும் வளர்ச்சியடைய வேண்டும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சியடையத் தொழில்கள் பெருக, நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில், தமிழகத்தில் என்னென்ன திட்டங்கள் வகுக்கப்படும் என்பதை இங்கே வந்திருக்கும் திட்ட அமைச்சர் அசோக் மேத்தா அவர்கள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நம் நாட்டின் மக்களின் வருமானத்தில் பெரும் பகுதி, உணவுக்காகவே செலவாகிறது. தொழில்கள் பெருக வேண்டுமானல், ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் அளவில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும், தொழில் துறையில் அக்கறையுள்ளவர்கள் முன்வர வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் தயாராகும் பொருட்களை உருவாக்க வேண்டும்.
குடிசைப் பகுதிகள் அடிக்கடி தீப்பிடித்துக் கொள்கின்றன. அதனால், பிளாஸ்டிக்கிலான கூரைகளே வீடுகளுக்குப் பயன்படுத்தலாம்.
புது தில்லிக்கு நான் சென்றிருந்தபொழுது, முழுவதும் பிளாஸ்டிக்கிலான வீட்டைப் பார்த் தேன். அந்த வீட்டின் எல்லாப் பகுதிகளும் – அலமாரியில் இருந்து ஒவ்வொரு பகுதியும் – பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டிருந்தன. கடையில் அந்த வீட்டின் விலை என்னவென்றபொழுது, 47,000 ரூபாய் என்று சொன்னர்கள். அது மிகவும் அதிக மாகும். ஏழை மக்கள் பயன்படுத்தும் அளவுக்குப் பிளாஸ்டிக் வீடுகள் கட்டப்பட வேண்டும்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைகள் முழுவதும் மாறிவிட்டன. நாட்டின் தொழில் வளர்ச்சியில் நல்ல அக்கறை ஏற்பட்டு உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆல்ககாலை “எதற்கோ பயன்படும்” என்று நினைத்தோம். ஆனால் ஆல்காலையும் குளோரினையும் பயன்படுத்தி இப்போது பிளாஸ்டிக் தயார் செய்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளில் புதிய தலைமுறையினரின் கடின உழைப்பு, நாட்டின் பொருளாதார, வளர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. நாட்டின் ஒருமைப்பாட்டைப் பற்றிய பேச்சு அடிபடுவதற்கு முன்பே, மறைந்த டாக்டர் சி. பி. இராமசாமி அவர்கள், “வடக்கே ஓடும் ஆறுகளான கங்கை, யமுனை ஆகியவற்றைத் தெற்கே உள்ள ஆறுகளுடன் இணைக்க வேண்டும்” என்று வற்புறுத்தி, ஆறுகளின் இணைப்பு ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார்கள். ஆனால், அந்தக் கருத்து நிறைவேற்றப்படவில்லை. அதை ஏற்றுக் கொண்டிருந்தால், இப்பொழுது வடக்கே உள்ள ஆறுகளில், அங்கே ஏற்படும் வெள்ளங்கள் தடுக்கப்பட்டிருக்கும்.
நாட்டின் ஒரு பகுதி வெள்ளத்துக்கு ஆளாகியும், இன்னுமொரு பகுதி தாழ்ந்தும் இருப்பது ஒருமைப்பாட்டை உருவாக்கி விடாது. புராண காலத்திலே கூட, மத அடிப்படையில் காசியிலிருந்து காஞ்சி வரை ஒருமைப்பாடு பற்றிப் பேசப்பட்டது. நாட்டில் உள்ள நிதி நிலைமை, மூலப் பொருள், தொழில் நுட்ப அறிவு முதலியன ஒருங்கிணைந்து ஏற்படும் ஒருமைப்பாடே உண்மையானதாக இருக்க முடியும். இல்லாவிடில், ஒருமைப் பாடு ஏட்டளவில் உள்ளதாகவே அமையும்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை, அமெரிக்காவின் கூட்டுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொழில் மேலும் வளர்ச்சி பெற வேண்டும். இதன் சேய்த் தொழில்கள் பல உருவாக வேண்டுமென்னும் நல்லெண்ணத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
வேளாண்மைத் துறையில் முழுமையான வளர்ச்சியை நாம் பெற வேண்டும். விவசாயத்தில் ஈடுபட்டு இருப்போரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால்தான், வாங்கும் சக்தி அதிகரிக்கும். அப்பொழுதுதான், அதிக அளவில் தொழிற்சாலைகள் உருவாக முடியும். அனைவரும் பொருட்களை வாங்கும் அளவில், தொழிற்சாலைகளில் நவீன முறைகளைப் புகுத்திப் பொருள்களின் விலைகளைக் குறைக்கவேண்டும்.
வகைப்பாடு : பொருளாதாரம்—தொழில் வளர்ச்சி
(4-5-67 அன்று மேட்டூர்ப் பிளாஸ்டிக் தொழிற்சாலைத் திறப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை.)
11. நிலை இதுவே
கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்று கோரினீர்கள். தமிழக அரசுக்குக் கிடைக்கும் ஒரு சில பெரிய வருவாய்களில் அதுவும் ஒன்றாகும். அந்த வரி இல்லையென்றால், மாநில அரசு இயங்க முடியாது.
நான் திரைப்படத் தொழிலை நசுக்க மாட்டேன். அந்தத் தொழிலுக்கு இப்போது செய்ய எண்ணி இருக்கும் நல்ல காரியங்களைக் கொஞ்சம் தள்ளிப் போடுகின்றேன். தமிழக அரசுக்கு இருக்கும் தொல்லைகள் அகன்றதும், திரைப்படத் தொழிலை வாட்டும் வரிகளைக் குறைப்போம். திரைப்படத் தொழிலின் குறைகளை நான் மிகவும் நன்றாக அறிந்தவன்.
தமிழ்த் திரைப்படங்களுக்கு மாநில அரசு பரிசு கொடுத்துப் பாராட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதைச் சுணக்கம் இல்லாமல் செய்வோம். ஆனால், அப்படிப் பரிசு பெற்ற படங்களுக்கு இப்போது வரி விலக்கு அளிக்க முடியாது.
மகாபலிபுரத்தில் படம் எடுக்க ஏராளமான பணம் வசூலிக்கப்படுகிறது. அந்த உரிமை மைய அரசிடம் உள்ளது. அது தமிழக அரசுக்குக் கிடைத்தால், கட்டணத்தை திண்ணமாகக் குறைப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
தணிக்கைக் குழுவிற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வெட்ட வேண்டியதை, வெட்டாமல் விடுகிறார்கள். வெட்டக் கூடாததை வெட்டித் தள்ளுகிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.
வரியைக் குறைப்பதால் மட்டும், திரைப்படத் தொழில் வளர்ந்து விடாது. பதினைந்தாயிரம், இருபதாயிரம் என்று படப்பிடிப்புக்குச் செலவழித்து விட்டு, நடிகர்களுக்காகக் காத்திருக்கிறார்கள். நடிகர்கள் வரவில்லை என்றால், செலவழித்த பணம் வீணாகிறது. இது போன்ற செலவுகளை எல்லாம் குறைக்க வேண்டும்,
அமெரிக்கா, தென் அமெரிக்கா, மையக் கிழக்கு நாடுகள் ஆகியவற்றிற்கு இந்தியத் திரைப்படங்களை அனுப்புவதன் மூலம், வெளிநாட்டுச் செலவாணியை ஈட்ட மைய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
திரைப்படத் தொழிலுக்கு இன்றியமையாப் பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை கொஞ்சம் மைய அரசு தளர்த்தலாம்.
பெரிய தொழிற்சாலைகளின் வருமானங்கள் எல்லாம் மைய அரசுக்குப் போய் விடுகின்றன. இந்த நிலையில், தமிழக அரசு பற்றாக்குறை வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
நெய்வேலி நிலக்கரித் தொழிற்சாலை, திருச்சிக் கொதிகலத் தொழிற்சாலை, பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை போன்ற பெரிய தொழில்கள் எல்லாம் மைய அரசிடம் உள்ளன. அந்த வருமானம் மைய அரசுக்கே போகிறது.
தமிழக அரசிடம் இருப்பது பேருந்துப் போக்குவரத்தும், கதர்த் தொழிலும்தான். இந்த இலட்சணத்தில், நிதி நிலைத் திட்டத்தில் துண்டு விழாமல் இருக்க முடியுமா? இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் ரூ. 8 கோடி துண்டு விழுந்திருக்கிறது. நிலை இதுவே. இருந்தாலும், இயன்ற வரை தமிழக அரசு உதவும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வகைப்பாடு : பொருளாதாரம்— திரைப்படத் தொழில் முன்னேற்றம்.
(9-5-67 அன்று சென்னைத் திரைப்பட உற்பத்தியாளர் சங்க விழாவில் ஆற்றிய தலைமை உரை.)
12. தமிழாலும் இயலும்
தமிழ் மொழியைப் பயிற்சி மொழியாக்கும் பணியில், வளர்ச்சி அடைந்து வரும் கட்டமாக இன்று ஆசிரியர் கல்லூரியில் தமிழ்ப் பயிற்று மொழித் தொடக்க விழா தொடங்குகிறது. என்னுடைய நண்பரும், கல்லூரி முதல்வருமான பெருமாள் அவர்களுக்கு இந்த விழாவில், தமிழ்ப் பெரும் புலவர் என்று பட்டம் வழங்கியது பாராட்டுக்குரியதாகும்.
நாம் எல்லாம் தமிழ் ஆர்வத்தைப் பெறத் தக்க விதத்தில், என்னுடைய நண்பர்கள் இருவரும் நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். நாம் எண்ணியதைச் செயல்படுத்த, முதலில் ஆர்வம் வேண்டும். ஆர்வம் இருந்தால்தான், நம்பிக்கை பிறக்கும். பிறகு, அதற்கான வழி வகைகளை ஆராய வேண்டும். அதைச் செயற்படுத்த ஆற்றல் வேண்டும். நாம் மட்டும் ஆற்றல் பெற்றால் போதாது. அந்த ஆற்றல், மற்றவர்களுக்கும் வரும்படிச் செய்ய வேண்டும். இத்தனக்கும் பிறகுதான், நாம் எண்ணியதைச் செயல்படுத்த முடியும்.
தமிழில் பாட மொழி இருக்க வேண்டும் என்பது-என்று சொல்வது இந்த நாட்டில்தான் தேவைப் படுகிறது. ஆங்கில நாட்டில் ஆங்கிலந்தான் பாட மொழி என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. எந்த நாட்டிலும் இல்லாத விந்தை இங்கேதான் இருக்கிறது.
“தமிழில் கற்பிக்கலாமா?” என்னுங் கேள்வியும், ” முடியுமா?’ என்னும் எதிர்ப்பும், பார்க்கலாம்” என்னும் சந்தேகமும், தமிழ்மொழிப் பயிற்சி பெறு பவர்கள் என்ன ஆவார்கள் ? இதுவரைப் பெற்ற வர்கள் என்ன ஆனார்கள்?’ என்று இந்தநாட்டிலே தான் பேசப்படுகிறது.
இதற்குக் காரணம் அந்நிய ஆட்சியில் இந்த நாடு இருந்தது. அ ப் போது தமிழ் நாட்டங் கொண்டவர்களைப் பார்க்க முடியாது. நாட்டங் கொண்டிருந்தவர்களும் புலவர் என்னும் பட்டத் தோடு சரி.
இப்போது நிலை அப்படியல்ல. தமிழ்மொழி மீது நாளுக்குநாள் அக்கறை ஏற்பட்டுவருகிறது. இது தேவைதானு என்று பேசப்பட்ட காலத்தில் நான் படித்தவன். தமிழை எங்கே பார்க்கலாம் என்று தேடித் தேடிப் பார்த்தால் அங்காடியில் பார்க்கலாம். அதை விட்டுவிட்டு ஆவலோடு வீட்டுக்குப்போல்ை பார்க்கலாம். வீட்டிலே போய்த் தமிழில் பேசில்ை பெற்றேர்கள், இதற்குத்தான் இவ்வளவு பணங் கொடுத்துப் படிக்க வைத்தேனு ?” என்று சொல் வார்கள்.
“ என்னுடைய வீட்டில் என் சி ன் ன ம் மா ஆங்கிலத்தில் பேசு ’ என்று சொல்வார்கள். ” பேசில்ை உனக்குப் புரியுமா ?” என்று கேட் டால், புரிகிறதோ இல்லையோ, பேசு” என்பார்கள்.
பேசில்ை அண்டை வீட்டுக்காரர்களை அழைத்து வந்து காட்டிப் பெருமைபட்டுக் கொள்வார்கள்.
தமிழால் முடியும் என்னும்நிலை ஏற்படுவதற்குக் காரணம் தம்பி கருணநிதி சொல்லியதைக் கேட்டீர்கள். நாம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட்டோம் ; முன்னேறி வருகிறோம். த மி ழ ல் முடியும் என்று காட்டுவோம், அதற்குரிய நம்பிக்கை நிரம்ப ஏற்பட்டிருக்கிறது. இதிலே வெற்றி பெறுவதற்கு இப்போது இல்லாத அளவிற்கு நமக்கு ஆங்கில மொழியில் தொடர்பு வேண்டும். இரும்பு இல்லாமல் கருவிகள் இல்லை. தமிழ் இருப்பதால் மட்டும் காரியம் முடிந்து விடாது.
இன்று மா லே என்னிடத்தில் அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த சிலர் வந்து நாற்பத்தேழு ஆங்கிலப் புத்தகங்களைக் கொடுத்தார்கள். அவற் றில் பொருளாதாரத்தில் மட்டும் பத்துப் புத்தங்கள் இருந்தன. பொதுப் .பொருளாதாரம், தனிப் பொருளாதாரம், விலைவாசி என்று பல கூறுகளாகப் பிரித்து ஒவ்வொன்றைப் பற்றியும் ஓராயிரம் ஏடுகள் எழுதி இருக்கிறார்கள்.
நீங்கள் நூலகத்திற்குச் சென்று பார்த்தால் சரித்திரம் பூகோளம் என்று தனித்தனியாக ஏராள மான புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருப்பதைப் பார்க்கலாம். இவையெல்லாம் தமிழ் மொழியில் வர வேண்டும். பல்வேறு மொழியின் கருத்துக்களைத் திரட்டித் தரவேண்டும்.
அவர்கள் அறிவை விரிவாக்கி, வகைப்படுத்தி வரிசைப்படுத்தி இருக்கிருர்கள். நாம் பொருளா தாரத் துறையில் அடையும் முன்னேற்றத்தைப் பொறுத்து இவை அமைய இருக்கின்றன. மொழி பெயர்க்கும் பொழுது கருத்துக்களைத் திரட்டித் தர வேண்டும். அப்படியே மொழி பெயர்த்த ல் இது தானு தமிழ் ?” என்னும் கசப்பு ஏற்படும்.
நூல்கள் ஏற்பட நிரம்பப் பொருளாதாரம் தேவை. அதற்கு இந்தியப் பேரரசு உதவி செய்ய உறுதியளித்திருப்பாகக் கல்வியமைச்சர் கூறினுலும், அதற்கும் த மி ழ க அர சு துணை நின்ருலும் அது மட்டும் போதாது. கருத்தாழமிக்க நூல்கள் வளரப் பொதுமக்கள் ஆதரவு வேண்டும். புத்தகம் வாங்குகிற பழக்கம் வேண்டும். வாங்குகிற பழக்கம் என்ருல் இரவல் வாங்கிப் படிப்பதை தான் சொல்ல வில்லை. அது நிரம்ப இருக்கிறது. புத்தகம் வாங்கு கின்ற பழக்கம் வளர்ந்தால்தான் புதிய புதிய புத்தகங்கள் வெளிவரும்.
தப்பித் தவறி ஒருவர் எழுத ஆரம்பித்தால், ஆறு மாதத்திற்கு ஒரு வீடு பார்க்கவேண்டியது தான், ஏனென்ருல் பழையபாக்கிக்காரன் தேடு வான். ஓராண்டுக்கு ஓர் அச்சகக்காரர் துணை நிற்க வேண்டும். இங்கே அதிகமாக விற்பனையாபவை அந்தந்த ஆண்டு பஞ்சாங்கமும், இரயில்வே கைடுந் தான். மற்றவை அதிகமாக விற்பதில்லை. ஆதாயம் இல்லை என்று சோர்வு அடைந்து விடுகிருச்கள்,
நம்முடைய ஆசிரியர்களுக்கு நல்ல கற்பனைத் திறன் உண்டு. அவர்களுக்குச் சிந்தனை, துணை ஏடாக இருக்கவேண்டும்.
நான் கல்லூரியில் படிக்கும்பொழுது ஒரு பேராசிரியர் வந்ததும், பாடத்துக்குக் குறிப்புகளேக் கொடுப்பார். அதை அப்படியே எழுதி மனப்பாடம் சேய்து தேர்வு எழுதுவார்கள். நான் எழுதாமல் உட்காட்ந்திருந்தேன். ஆசிரியர் ஏன் எழுதவில்லை ?’ என்று கேட்டதும், நீங்கள் எழுதியதை படித்தால் 40 மதிப்பெண் கிடைக்குமென்றால் நானாக எழுதினால் அதைவிட அதிகமாகக் கிடைக்கும்’ என்று பதில் சொன்னேன். அதைப் போலவே அந்த ஆண்டு நம்முடைய மாநிலத்தில் நான் முதல் மாணவன் என்னும் பரிசைப் பெற்றேன்.
பரிசு பெற்றதும் அந்த ஆசிரியரிடத்திலே போய்ப் “பார்த்தீர்களா ? நானாகப் படித்ததன் விளைவு ” என்று கூறினேன். அதை அப்படியே எல்லோரும் கையாள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆசிரியர்கள் உற்சாகமாகப் பணியாற்ற வேண்டும். சோர்வடையக் கூடாது. இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை நாம் பார்க்க முடியும்.
தமிழில்தானே கண்ணகி வாதாடினாள். அவள் கூறிய வாதங்களே ஆங்கில மொழியாலும் அளிக்க முடியாது. அரசர் ஆணைகளைத் தமிழில்தானே பிறப்பித்தார்கள்.
நாம் புதியதாக எதையும் செய்ய வேண்டியதுமில்லை. இழந்ததைப் பெற்றால் போதும். ஆப்பிரிக் கண்டத்தில் விடுதலை பெற்ற நாடுகள் புதிய நாடுகள் தமக்கென்று புதிதாய் மொழிகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. நாம் அவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். எல்லாக் கல்லூரிகளிலும், தமிழே பயிற்று மொழியாக வேண்டும்.
வகைப்பாடு : கல்வி—பயிற்றுமொழி.
(27-7-67 அன்று சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் வாயில் வகுப்புகளைத் தொடங்கி வைத்து, ஆற்றிய தலைமை உரை.)
13. மக்கள் தலைவர் காமராசர்
இந்தப் படத்தைத் திறந்து வைப்பவர் ஒரு காங்கிரசுக்காரராக இருந்தால், அவர் பாராட்டுவது கடமைக்காக இருக்கலாம்; அல்லது பெற்றதற்காக இருக்கலாம் ; ஒரு வேளை இனி மேல், ஏதாவது பெறலாம் என்ற ஆசையாலும் இருக்கலாம். காமராசர், கட்சி அளவில் கருத்து வேறுபாடு உடையவர் என்றாலும், நான் மதிக்கத்தக்க அளவுக்குப் பெருமை படைத்தவர் என்பதை இவ்விழா எடுத்துக் காட்டும் என்னும் நம்பிக்கையில், காமராசரின் படத்தைத் திறந்து வைக்கிறேன்.
மாணவர்களுக்குப் பரிசுப் பொருட்களை அளித்தேன்; தமிழ்ச் சமுதாயத்திற்கு, என்னால் இங்கே திறந்துவைக்கப்பட்ட காமராசர் உருவப்படத்தையே பரிசாக அளிக்கிறேன். தமிழ் நாட்டின் தரத்தை உயர்த்தப்பாடுபட்டவர், தமிழர்களின் முன்னேற்றத் திற்காக முயற்சி செய்தவர் என்னும் வகையில் அவரைப் பாராட்டக் கடமை பட்டிருக்கிறேன். பண்பாடு உடைய ஒருவரைப் பாராட்டுவது, பாராட்டுதலுக்குரிய ஒருவரைப் பாராட்டிப் புகழ்வது தமிழ்ப் பண்பாடாகும்; அப்படிப் பாராட்டுவது, மக்களாட்சி நாட்டில் முறையாகும்.
மக்களாட்சி நாட்டில், ஒரு கட்சித் தலைவரை இன்னொரு கட்சித் தலைவர் பாராட்டுவார். அவருடைய படத்தைத் திறந்து வைப்பார். ஆனால், சர்வாதிகார நாட்டில், ஒரு தலைவரின் சமாதியை இன்னொரு தலைவர் கட்டிமுடிப்பார் ! காமராசர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்; நான் வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவன் ; இந்தப் படத்தைத் திறப்பதாலோ, காமராசரைப் புகழ்ந்து பேசுவதாலோ அவரது வழியிலே நான் நடக்கவேண்டும்; அவர் கொள்கையை நான் பின்பற்றவேண்டும் என்பதல்ல !
அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், கசப்புணர்ச்சியை வளர்க்கக் கூடாது ! கருத்து வேறுபாடு எழலாம், அது கத்திக்குத்துகளில் வந்து நிற்கக்கூடாது ! கருத்து வேறுபாடு தேவை என்பதாலே சந்துகளில் நின்று கத்திக்கொண்டு திரிய வேண்டும் என்பதல்ல ! அரசியலில் கட்சி வேறுபாடு கருதிப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுப் பாராட்டுதற்குரிய தொண்டாற்றிய ஒருவரைச் சமுதாயம் பாராட்டத் தவறக் கூடாது என்பதைக் காமராசர் படத் திறப்பு விழா உணர்த்தும் என்று நம்புகிறேன்.
வகைப்பாடு: வாழ்க்கை வரலாறு—நல்லறிஞர்
(22-4-67 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளி ஆண்டு விழாவில், காமராசர் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய தலைமை உரை.)
14. பொன்னியின் செல்வி
சந்திரகாந்தாவின் இரண்டாவது நாட்டிய நாடகமான இந்தப் பொன்னியின் செல்வி அளித்துள்ள இலக்கிய விருந்து மிகச் சிறப்பாக உள்ளது. இலக்கிய நாட்டிய நாடகத்திற்குச் சிறப்பாகப் பயிற்சி தந்த திரு. இராலால் அவர்களைப் பாராட்டுகிறேன். அதே போன்று, இக்கலை வளர்ச்சியில் ஆர்வம் காட்டிய அத்தனைப் பேருக்கும் எனது வாழ்த்துதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பழைய இலக்கியக் கருத்துக் கருவூலத்தை மனத்தில் கொண்டு, கற்பனையில் தோன்றியவைகளையும் ஒன்றாகச் சேர்த்துத்தான் ‘பொன்னியின் செல்வி’ என்று நாட்டிய நாடகமாக அமைத்திருக்கிறார்கள். இப்படி எல்லோரும் கண்டு பாராட்ட வகை செய்யாமல், ஏட்டளவிலே எழுதி-வீட்டிலேயே உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தால், அது அத்தனைச் சிறப்பாக யாருக்கும் தெரியாது.
இந்த நாட்டிய நாடகம் நல்ல உயிர்ப்புச் சக்தி கொடுத்துத் தயாரிக்கப் பட்டிருக்கிறது. இலக்கிய காலத்தில் வாழ்வது போன்றதோர் உணர்வு இத்தனை நேரம் இங்கே நிலவி இருந்தது. இந்த நாட்டிய நாடகம் சிறந்த கருத்துக்களைக் கருவூலமாகக் கொண்டு அமைந்திருக்கிறது. மேனாட்டுக் கலை விற்பன்னர்கள் கண்டு மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்து இருக்கிறது.
சந்திரகாந்தாவைச் சிறுவயது முதலே, சிறுகுழந்தையாக இருந்தபோதிருந்தே எனக்குத் தெரியும். இன்றைக்கு இந்த அளவிற்குக் கலை ஆர்வத்தால் நல்ல முறையில் வளர்ந்திருப்பதைக் காணும்போது மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தின் பல்வேறு நாட்டவர்களும், நமது தமிழகக் கலையை அன்று முதலே பாராட்டியிருக்கிறார்கள். அந்த வகையிலே, இந்த நாட்டிய நாடகமும் அயல் நாட்டவர்களால் பாராட்டத்தக்க அளவில் மிக நன்றாக அமைந்து இருக்கிறது.
எனவே, சந்திரகாந்தா திறம்பட இலக்கியக் கலை ஆர்வத்தைக் காட்டியிருக்கும் இந்த நாட்டிய நாடகத்தைச் சென்னையில் விரைவில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் இடம் பெறச் செய்வேன். தமிழக அரசு அதற்கான வாய்ப்புக்களையும், வசதிகளையும் செய்து தரும் என்று உறுதி கூறுகிறேன். சென்னையில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் இயல், இசை, நாடகம் ஆன முத்தமிழும் இடம் பெறும்.
அதில் உலகத்தவரே கண்டு வியக்கும் வகையில், பாராட்டும் வகையில் இந்த நாடகத்திற்கு மெருகு ஏற்றிப் பண்பு பாழ்படாமல், கருத்துடன் அமைந்திருப்பதால் வெற்றி பெறத் தக்கதாக அமையும் என்று நம்புகிறேன்.
தமிழக அரசினுடைய எல்லா வளமுமே, இன்று காவிரி ஆற்றில்தான் இருக்கிறது. உள்ளபடியே, காவிரி ஆற்றின் அழிக்கும் சக்தியை விட, ஆக்கும் சக்திதான் அதிகம். எங்கே கணவனுக்காகக் கதறி அழும் காரிகையின் வாழ்வையும் பறிக்கின்ற வகையிலே, காவிரியும் ஆட்டனத்தின் உயிரைக் காப்பாற்றித் தராமல், அழித்து விடுவது போல் கதை அமைந்து விடுகிறதோ என்று யோசித்திருந்தேன். நல்ல காலம்; காவிரி ஆறு அனைவரையும் காப்பாற்றி விட்டிருக்கிறது, இலக்கிய வரலாற்றிலேயே! எனவே, நம் தமிழக மக்களையும் காவிரி காப்பாற்றும் !
வகைப்பாடு : கலை—நாட்டியம்.
(15-5-67 அன்று சென்னையில் பொன்னியின் செல்வி நாட்டிய நாடக அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)
15. நேரிய நிதி உதவி
இந்த நிதியை வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு என் நன்றி. இன்னலை உணரக் கூடியவர்கள் நீங்கள். அதனால், பழுத்த மரத்திடம் பழம் தேடிச் செல்வது போல், உங்களிடம் வந்திருக்கிறேன்.
தமிழகத்தில் நல்ல திருப்பம் ஏற்பட்டுள்ளது. நான் ஏதோ அரசியல் திருப்பத்தைக் குறிப்பிடுவதாக நண்பர் செங்கல்வராயன்[1] எண்ணத் தேவையில்லை. நிதியுதவி ரூ. 5 இலட்சம் அளவுக்கு எட்டியுள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி அளவுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நிதி சேர்த்துச் சென்னை நகரக் குடிசை வாழ் மக்களுக்குப் புதிய குடியிருப்புக்களைக் கட்டித் தர நாம் வகை செய்வோம்.
மக்கள் எத்தனை ஆண்டுகள் எங்களை ஆட்சியில் அமர்த்துகிறார்களோ, அத்தனை ஆண்டுகளும், இவ்வாறு நிதி திரட்டி இத்தொண்டைச் செய்வோம்.
ஔவையாரால் பாடப்பட்ட பாரி மன்னன் போன்ற வள்ளல்கள் வாழ்ந்த நாடு இது. ஆட்சி இழந்த பின், பாரியின் பெண்டிர் இருவர் மலையொன்றில் வாழ்ந்தனர். ஔவையார் அவர்களைக் காணச் சென்ற போது, அவருக்குக் கொடுக்க அவர்களிடம் புதுச் சேலைகள் இல்லை. தாங்கள் அணிகிற நீலச் சிற்றாடையை எடுத்து, ஒளவையாருக்கு வழங்கினர். நீங்கள் அளித்துள்ள நன்கொடை அந்த நீலச் சிற்றாடைக்கு ஒப்பானதாகும்
சிங்காரச் சென்னை நகரிலே, 600க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும், 800 குடிசைகள் என்னும் அளவுக்கு உள்ளன. புதிதாகக் குடிசைகள் தோன்றாதிருக்க, அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கண்ணியமான ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். புதிய குடிசைப் பகுதிகள் ஏற்படாதிருக்க, ஆட்சியிலுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் போது, ஆட்சியில் இல்லாத கட்சியினர் அதற்கெதிராக வாதாடுகிற நிலைமை இருக்கக் கூடாது. எனவே, கட்சிகள் கூடித் தங்களுக்குள் இது குறித்து ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.
வகைப்பாடு:: சமுதாயத் தொண்டு—வள்ளன்மை
(5-9-67 அன்று சென்னையில் நடந்த தீ விபத்துத் துயர் துடைப்புச் சீரமைப்பு நிதியளிப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை.)
- ↑ அண்ணாவின் நெடுங்காலக் காங்கிரஸ் நண்பர்.
16. பன்மொழிப் புலவர்
பன்மொழிப் புலவர் அப்பாதுரை அவர்களன் மணிவிழாவிலே கலந்து கொள்வதிலே நான் மிகுந்த உற்சாகமடைவதற்கும், இதனை ஒரு நல்வாய்ப்பாகக் கருதுவதற்கும் காரணம், பல ஆண்டுகளாக அப்பாதுரையார் அவர்களுடன் நெருங்கிப் பழகி அறிந்தவன், அவருடைய தமிழ்த் தொண்டால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நற்பயனை உணர்ந்தவன், அவர்கள் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதுதான். ஒருவரை நாம் மதிக்கும் நேரத்தில் மாற்றுக் கருத்துக்கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படும் இனிமையைவிட, வேறு ஓர் இனிமை இருக்கமுடியாது.
அப்பாதுரையாரை நாம் எந்தக்கோணத்திலிருந்து பாராட்டுகிறோமோ, அதையல்லாமல் அவருடைய தனித் திறமையை அறிந்தவர்களும், அவருடைய தொண்டின் மேன்மையை அறிந்து பல்வேறு கோணங்களில் இருப்பவர்களும் பாராட்டிப் பேசுவதைக் கேட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
நம்முடைய அப்பாதுரையார் அவர்கள் ஆசிரியராகத் தம் பணியைத் துவக்கிய காலத்திலிருந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்ட கட்டம் வரை அவருடைய தனித்திறமையை அறிந்திருக்கிறோம். அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம், தமிழனத்திற்கும் மற்ற இனத்துக்குமிடையே, பகை மூட்ட அல்ல, தோழமையை ஏற்படுத்த அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால், அவை இந்த மண்டபமே நிறையும் அளவுக்கு இருக்கும்.
நமது அப்பாதுரையார் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்தாலும் சிந்தனை, படிப்பு, எழுத்து என்று இப்படியே தம் வாழ்நாளை மிகச் சிறப்பாகக் கழித்திருக்கிறார். இந்த நாட்டில் அறிவாளன் என்று அறிந்தாலே ஆபத்து. அவன் என்ன பெரிய அறிவாளியா? என்று கேட்பதன் மூலம் தன்னிடம் அறிவு இருக்கிறது எனக் காட்டிக் கொள்ளச் சிலர் முனைவார்கள். இத்தகைய அறிவுப் பணி செய்வதே மிகச் சிக்கல். ஆனால், சிக்கலிலேதான் சுவை இருக்கும். மேனாடுகளில் எந்த அளவு இப்பணியில் ஈடுபடுகிறார்களோ, அந்த அளவுக்கு இங்கே ஈடுபடிவது என்பது மிகக் கடினம்.
பன்மொழிப் புலவர் அவர்கள் தம் வாழ்க்கையைக் கரடுமுரடான பாதையில் நடத்தி மிகத் தெளிவான தமிழறிவைத் தமிழகம் ஏற்குமளவுக்குப் பணி புரிந்திருக்கிறார். இவரது வாழ்க்கை பூந்தோட்டமாக அமைந்துவிடவில்லை. எனினும், வாலிப உள்ளத்தோடு மாற்றாரின் இழிமொழிகளையும் ஏசல் களையும் தாங்கிக் கொண்டு தம் பணிகளைச் செய்திருக்கிறார். நண்பர் கி. ஆ. பெ. விசுவநாதம் சொன்னதுபோல், இவர் விரும்பியிருந்தால் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகி இருக்க முடியும்.
ஒவ்வொன்றையும் பற்றி, “ இப்படிச் செய்வது சரியா ? ” என்னும் எண்ணம் அவருடைய உள்ளத்தில் ஊடுருவிக் கொண்டிருக்கும். சிறிது காலம் பள்ளி ஆசிரியராக இருப்பார். பிறகு அது பிடிக்காமல் இதழாசிரியராவார். அதன் பிறகு, தமிழ்ப்
F–8 பாதுகாப்புப் பணியில் குதிப்பார். பின்னர்ப் போராட்டத்தினால் பயனில்லை எனக் கருதி ஏடுகளை எழுதியளிக்க எண்ணுவார். அந்தந்த நேரத்தில் தோன்றுவதில் ஈடுபடுவார்.
பாடுபவர், பல்வேறு இசை நுணுக்கங்களையும் எப்படி ஒரு குறிப்பிட்ட சுதிக்குள்ளாகவே நிறுத்துகிறாரோ, அதேபோல் இவரும் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டாலும் தம் வாழ்நாளை ஒரு சுதிக்குள்ளாகவே, தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும் என்னுங் கட்டத்திற்குள் ஒரு குறிப்பிட்ட கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார். இது மிகப் பெரிய விரும்பத்தக்க இலட்சியமாகும்.
மாறுபட்ட கருத்துடையவர்களும் தமிழ்மொழிப் பிரச்சினையில் இன்று ஒன்றுபடுகிறார்கள். நானும் குன்றக்குடி அடிகளாரும் தோற்றம், பேச்சு, நட வடிக்கைகள், இருக்குமிடம் ஆகியவற்றால் மாறு பட்டவர்கள் என்றாலும் எங்கள் இருவரையும் தமிழ் ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுதான் நாம் கையாள வேண்டிய சுதி. இதற்குள் எல்லாவற்றையும் நாம் காட்டலாம். இது ஏற்படத் தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகள் பாடுபட வேண்டியிருந்தது. இதற்கு அடங்கி நடப்பவர் எத்தனைபேர் என்பதை நாம் கணக்கெடுத்துப் பார்த்தால் பயனின் அளவைக் காணலாம். இந்தச் சுதியை நமக்குத் தந்தவர்களில் அப்பாதுரையாரும் ஒருவர். அ ப் ப டி ப் ப ட் ட மு ைற யி ல் அமைவதுதான் அடிப்படையான தொண்டு. மேலைநாடுகளில் ஒரே ஒரு புத்தகம் எழுதினாலே, ஒருவர் தம் வாழ்நாளைக் கழித்துவிட முடியும். அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு. இங்கோ ஒர் ஆசிரியர் ஒரு புத்தகத்தை வெளியிட்டார் என்றாலே வீடு மாற்றுவதைப் பார்க்கிறோம். அந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கு அவர் பட்டகடனை அடைக்க முடியாமல், கடன்காரர்களுக்கு அஞ்சித் தென் சென்னையில் வீடு இருந்தால், வடசென்னைக்கும் வடசென்னையில் வீடுஇருந்தால் தென்சென்னைக்கும் குடிபோவார். அப்படிப்பட்ட நிலை இங்கிருக்கிறது. இங்குப் புத்தம் எழுதுவதும் அதன்மூலம் வருவாய் தேடுவதும் அவ்வளவு கடினம்.
புலமைக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்பினை அருள் துறையில் தேர்ச்சி பெற்ற குன்றக்குடி அடிகளாரே சொன்னது எனக்கு மெத்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர் சொன்னபடி நாட்டில் நிலைமை ஏற்பட்டிருந்தால், நாம் இன்னும் பயனைச் சற்று அதிகமாகப் பெற்றிருக்க முடியும்.
புத்தகம் வாங்கும் பழக்கம் எல்லோருக்கும் ஏற்படவேண்டும். அப்பாத்துரையாரின் நூல்களை ஏடுகளை வீடுதோறும் வாங்கி வைக்க வேண்டும். அப்பாத்துரையார் எழுதிய நூல்களில், தென்னாட்டுப் போர்க் களங்கள் என்னும் நூல் என்னை மிகவும், கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஒரு ஏட்டை எழுத அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்கவேண்டும், எத்தனை ஆயிரம் கவிதைகளை, புத்தகங்களைச் சேகரித்துப் பார்த்திருக்க வேண்டும். என்பதை எண்ணியெண்ணி வியந்தேன்.
புத்தகம் எழுதுவோரை ஏனைய நாடுகளில் எல்லாம் வித்தகர்களாகப் போற்றுகிறார்கள். இந் நாட்டிலோ, “ புத்தகம் எழுதி, இருந்த பணத்தைப் பாழாக்கிக் கொண்டவர்கள் ” என்னும் பழிச் சொல் தான் கிடைக்கும். இந்த நிலையிலும் நமது அப்பாதுரையார் அவர்கள் தமிழ் மொழிக்கு ஏற்றந்தரும் பல அரியநூல்களை எழுதி இருக்கிறார்.
நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை. திரு. வி. க. போன்றவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து ஏடாக்கி நூலாக்கித் தருவதில் இன்றைய புலவர் பெருமக்கள் ஈடுபடவேண்டும். மறைமலையடிகளைப் பற்றியோ தியாகராய செட்டியார் பற்றியோ வாழ்க்கைக் குறிப்புகள் இல்லை. தமிழ்ப் பெரும் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகள் நம்மிடத்திலே இல்லை. அப்படிப்பட்ட பெரியார்களின் வரலாற்றை மறந்துவிட்டால் நம்முடைய மரபு பிறகு மறையும். மரபு என்பது இப்போது மறதி என்றாகி விட்டது.
3
பண்டைத் தமிழ் மன்னர்களைப் பற்றிச் சரியாக எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. நமது பள்ளிச் சிறுவர்களின் பாடநூலைப் பார்த்தால், இராச இராச சோழனுக்கு, இராஜேந்திர சோழன் மகன்’ என்று சொல்வாருமுண்டு. ‘தம்பி’ என்பாரும் உண்டு என்றிருக்கும்.
“கரிகால் வளவன் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டான் என்பது உண்மை” என்பாரும் உண்டு. “இல்லை” என்பாரும் உண்டு என்று இப்படித்தான் எழுதப்பட்டிருக்கும். இத்தகைய பணியில் ஈடுபட்டு, ஆராய்ச்சி நடத்திடப் பல்வேறு அலுவல்களைக் கொண்டுள்ள என்னால் முடியாது. வரலாற்று ஆசிரியர்கள்தாம், இந்தப் பணியை மேற்கொண்டு உண்மையான தமிழ் வரலாற்றை உருவாக்க வேண்டும்.
கல்வெட்டுக்களில் காணப் படுவதையும், இலக்கிய ஏடுகளில் உள்ளதையும், இன்ன பிற சான்றுகளைக் கொண்டும், தமிழக வரலாற்றைத் தொகுத்துக் கொடுக்கும் பணியைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சில திங்கள்களில் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற விருக்கிறது, அதற்குள், இந்தப் பணியைச் செய்து முடித்தால், வெளி நாடுகளிலிருந்து வருபவர்க்கு, ‘இதுதான்’ எங்கள் நாட்டு வரலாறு என்று எடுத்துக் காட்ட முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள ஊர்களைப் பற்றியும், ஆறுகளைப் பற்றியும் வரலாறு இல்லை. இந்த வரலாற்றை எல்லாம் தொகுக்கின்ற பணியில், திரு.ஆர்.பி. சேதுப் பிள்ளை ஆர்வங் காட்டினார். ‘அவருடைய பணி ஆகாது’ என்று கருதியோ, என்னவோ காலம் அவரை அழைத்துக் கொண்டு விட்டது.
இத்தகைய பணியைச் செய்து முடிக்கக்கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டால், அதற்குத் தலைமை தாங்கிப் பணியாற்றுவதற்கு, முழுத் திறமை பெற்றவர் பன்மொழிப் புலவர் அப்பாதுரையாரேயாவார் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய ஒரு நல்ல செயலில், குழு அமைத்துப் பணியாற்றுஞ் செயலில், நண்பர் மகாலிங்கமும், குன்றக்குடி அடிகளாரும் ஈடுபடுவது நல்ல பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு—நல்லறிஞர்கள்.
(20-9-67 அன்று சென்னையில் நடந்த பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் மணிவிழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)
17. கொடிய மதுவை ஒழிப்போம்
1
மதுப்பழக்கம் வாழ்க்கை முறைகளை மட்டுமல்ல வாழ்க்கை நெறிகளையும் கெடுக்கிறது. காலங்காலமாக நாம் குடிப் பழக்கத்தை ஒரு தீமையாகவே கருதி வந்திருக்கிறோமே தவிரச் சிக்கலாக மட்டும் எண்ணியதில்லை.
யாராவது தாறுமாறாக நடந்தால், வழக்கத்திற்கு மாறாக நடந்தால் கூட, ‘என்ன குடித்திருக்கிறாயா?’ என்று கேட்பதுதான் நம் வழக்கம்.
நம் திரைப்படங்களில் கூட, ஏன் நாடகங்களில் கூட நீங்கள் கவனித்திருக்கலாம். கதாநாயகர்கள் குடிக்க மாட்டார்கள். கயவனாக வருபவன்தான் குடிப்பதாகக் காட்டப்படுவான். இவ்வகையில், நம் கதை ஆசிரியர்கள் கூடப் பாராட்டப்பட வேண்டியவர்கள். கதைகளில், குடிப்பது தகாத செயலாகவே காட்டப்படுகிறது.
நல்லவர்கள் குடிப்பதில்லை. குடிப்பவர்கள் நல்லவர்கள் அல்லர். நல்லவர்களும் குடிக்கும் போது கெடுகிறார்கள். இந்த உண்மையை அனைவரும் உணர்கிறார்கள். ஆனால், நடைமுறையில்தான் சிலர் தவறுகிறார்கள், உண்மை உணரப்படுகிறது. ஆனால், நடைமுறைக்கு அது வரக் கடினமாக இருக்கிறது.
மனிதருள் பெரியவராக இருந்த காந்தியடிகளே ‘உண்மையிடம் வெற்றி கண்டதாக’க் கூறவில்லை. உண்மையிடம் வாய்மை ஆய்வு நடத்தியதாகத்தான் சொல்லி இருக்கிறார். அந்த மேதைக்கே அப்படி என்றால், சாதாரண மனிதர்களைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. எனவேதான், ‘மதுப் பழக்கம் தீது’ என்ற உண்மை தெரிந்திருந்தால் கூட, அதனை நடைமுறைக்குக் கொண்டு வரச் சட்டம் தேவைப்படுகிறது.
இன்று காலையில் கூட, எனக்கு வந்த கடிதங்களில் ஒன்று, இச்சிக்கல் பற்றி என் நண்பர் ஒருவரால் எழுதப்பட்டதாகும். அவர் குடித்தவர் அல்லர். குடிப்பவரும் அல்லர். இனியும் குடிக்க மாட்டார். ஆனாலும் அவர், “ஏன் ஒவ்வொரு முறையும் நிதி வசதி வேண்டித் தில்லியின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? கள்ளுக் கடைகளைத் திறந்து விடுங்கள். கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்கும்” என்று எழுதி இருந்தார். மதுவிலக்குக்காக வாதாடுங் குணம் படைத்த அவர், பொருளாதார நிலைமை காரணமாக, எனக்கு இந்தக் கருத்தேற்றத்தை எழுதியிருந்தார். ஆனால், அவரும், அவரைப் போன்றவர்களும் இப்போது வளர்ந்து வரும் இளைய பரம்பரையினரை மறந்து விடுகிறார்கள்.
“மது என்றால் என்ன? மதுக்கடை எப்படி இருக்கும்?” என்று தெரியாமல் இருந்து வருபவர்கள் அவர்கள். அவர்களுக்கு இவை இரண்டும் மீண்டுந் தெரியத்தான் வேண்டுமா? மீண்டும் நம் இல்லங்களில் அழுகுரல் கேட்கத்தான் வேண்டுமா? தாய்மார்கள் வேதனையால் தவிக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்லுங்கள்.
மதுவிலக்கினைச் செயல்படுத்துதில் சில குறைபாடுகள், இயலாமைகள் இருக்கலாம். “தேவாலயத்தினுள் நுழைந்து வருபவர்கள் எல்லாம் பத்து கட்டளைகளின்படி நடப்பவர்கள் அல்லர். அவர்களையும் அறியாமல், வழுவல்கள் இருக்கலாம். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் பத்துக் கட்டளைகளின் படி நடப்பேன்” என்று உறுதி மொழி கூறத் தவறுவதில்லை.
நண்பர் செங்கல்வராயன் சொன்னது போல, ஆங்காங்கே சில தவறுகள், குறைகள் உண்டென்றால், அது மது விலக்கின் தோல்வியல்ல. மது விலக்கில், மனிதன் அடைந்த தோல்வியாகும்.
நான் சிறுவனாக இருந்த போது, நடந்தது இது. இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. என் உறவினர் இருவர் குடிப்பழக்கங் கொண்டவர்கள். ஒருவர் நன்றாகக் குடித்து விட்டுத் தெருவையே அதிர வைப்பார். அடிபடுவார், அடி கொடுப்பார். இன்னொருவர் குடிப்பழக்கங் கொண்டவர்தான். ஆனால், இவரோ வேறு வகையானவர். குடித்தவுடன் வீட்டுக்குள் வருவார். வீட்டில் மனைவியை அதிர வைப்பார், அடிப்பார், அழ வைப்பார். அவர் வெளியே நடத்துவதை இவர் உள்ளே நடத்துவார். இதில் உச்ச கட்டம் என்னவென்றால், இவர் அவரை அழைத்து அறிவுரை கூறுவதுதான், “என்னப்பா! குடித்து விட்டு வெளியே போய்ச் சண்டை போடுகிறாய். சமர் கட்டுகிறாய்? வீடு இல்லையா அதற்கு? உள்ளே வா,” என்று அதட்டுவார்.
இங்கே வீற்றிருக்கும் உங்கள் முன், உங்கள் மூலமாக அனைவருக்குஞ் சொல்லிக் கொள்வேன்.
“இந்தச் சம்பவம் என் மனத்திரையிலிருந்து மறையாது இருக்கும் வரை, நான் கேட்ட ஒலி என் காதுகளில் அலை மோதிக் கொண்டு இருக்கும் வரையில், இங்கே ஒரு மதுபானக் கடைகூடத் திறக்கப்பட மாட்டது என்று.
என்னை நீதிக்கட்சியைச் சார்ந்தவன் என்று சொல்லித் தாக்குவதில், காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. ஆம்! நான் நீதிக்கட்சிதான். காங்கிரசுக்கு முந்திக் கொண்டு, முதன் முதலில் அது மது விலக்குக் கொள்கை அவசியம் என முடிவு செய்தது. இங்கே இருக்கும் நண்பர் செங்கல்வராயனுக்குச் சொல்லிக் கொள்வேன். “அந்த மதுவிலக்குக் கொள்கையை மேலுந் தீவிரப் படுத்தத்தான் ஆயிரக்கணக்கான எல்லைக் கற்களைக் கடந்து இங்கே வத்திருக்கிறார் அமெரிக்க நண்பர் ஸ்டீட்” என்று.
சிக்கல்களைத் தீர்த்து வைக்காததனால்தான், ஹேம்லட், தோல்வியுற்றான் என்று சேக்குவீயர் கூறுகின்றார். நாட்டின் முன்னோடியான முதல் பெரும் அமைப்பான காங்கிரசுக் கட்சிக்குச் சொல்லிக் கொள்வேன், சேக்குவீயரின் ஹேம்லட் இருப்பதா, இறப்பதா என்று இருந்ததைப் போல், மது விலக்குச் சிக்கலிலும் இப்படியா, அப்படியா என மயங்கி நிற்க வேண்டாம். ஹேம்லட்டுக்கு நேர்ந்த கதி காங்கிரசுக்கு வேண்டாம் என்று.
மதுவிலக்கு பற்றி ஒரு மொத்தமான முடிவுக்கு வாருங்கள். அப்போதுதான் இங்கே அமர்ந்திருக்கும் நண்பர் ஸ்டீட் அடுத்த முறை அமெரிக்காவிலிருந்து வரும் போது, ‘“நாங்கள் எல்லோருமே மது விலக்கினை ஆதரிப்பவர்கள்” என்று பெருமையுடன் கூறிக் கொள்ள முடியும்.
இப்போதும் மதுபான வகைகளுக்கு அனுமதி கேட்டு, எங்களிடம் வரும் வெளிநாட்டுக்காரர்கள் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துக் குறும்புடன் சிரித்து, வேடிக்கையும் விஷமும் கலந்து கேட்கிறார்கள். “மதுவிலக்கா—சென்னையிலா? ஆந்திரத்தில் இல்லையே. மராட்டியத்தில் கிடையாதே, ஏன் இங்கே மட்டும்” எனக் கேட்கிறார்கள்.’
உண்மையாகச் சொல்லுகிறேன். இந்த இடத்தில், என்னால் பதில் அளிக்க முடியவில்லை. எனவேதான், சொல்லுகிறேன். இங்கே மது விலக்கு பற்றி ஆணித்தரமாக, அழகாகப் பேசிய நண்பர் செங்கல்வராயன் தனிப்பட்ட மனிதர் என்ற முறையில் அல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கூட அல்ல, ஒரு காங்கிரசுக்காரர் என்ற அடிப்படையில் இச்சிக்கலை அந்த மன்றத்திற்கு எடுத்துச் செல்லட்டும். கிடைக்காத அடுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டு காங்கிரசு செயற்குழுக் கூட்டத்தில், “காங்கிரசல்லாத ஒரு மாநில முதலமைச்சர், மது விலக்கில் இப்படிப் பிடியாக இருக்கும் பொழுது, காந்தியவாதிகளாகவும் இருக்கும் காங்கிரசுக்காரர்கள், ஏன் மதுவிலக்கைச் செயற்படுத்தவில்லை” என்று கேட்டுத் தீர்மானங் கொண்டு வந்து கலந்துரையாடட்டும்.
அதில் அவர் வெற்றி பெற்றால், அவரை நாடே பாராட்டும். அவர் அதில் தோல்வியுற்றால் கூட, அவர் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பு ஆயிரம் மடங்கு அதிகமாகும். வேறு எந்தக் காங்கிரசுக் காரரையும் இதைப் பற்றி அணுகிச் சொல்வதற்கு எனக்கு நெஞ்சுரம் இல்லை. ஏனெனில், அவர்கள் ஒன்று மிகப் பெரியவர்களாக இருக்கிறார்கள் அல்லது மிகச் சிறியவர்களாக இருக்கிறார்கள். எனவேதான், என்னைப் போல் சாதாரணமாக இருக்குஞ் செங்கல்வராயனை இத்துறையில் அணுகுகிறேன். எங்கள் நெடுநாளைய நட்பு அத்தகையது.
எந்தெந்தச் சிக்கல்களிலோ தேசியம் பேசுகிறீர்கள், காங்கிரஸ் நண்பர்களே. மது ஒழிப்பை ஒரு தேசியச் சிக்கலாக முதலில் மேற்கொள்ளுங்கள். உங்கள் கட்சியைத் தாக்குவதாகத் தயவு செய்து எண்ண வேண்டாம். என் இதயத்திலிருந்து வருஞ்சொல் அது. வீணான வெறும் பேச்சு என்று நினைக்க வேண்டாம். உள்ளத்து ஆசை அது.
வகைப்பாடு : சமூகவியல்—மதுவிலக்கு
(21-9-67 அன்று சென்னை இராஜாஜி மண்டபத்தில் அனைத்துலக மனக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் நடந்த கூட்டத்தில் தலைமை தாங்கித் துவக்கவுரை முடிவுரை ஆகிய இரண்டையும் ஆங்கிலத்தில் நிகழ்த்தியது. இங்கு அளிக்கப் பெற்றிருப்பது மொழி பெயர்ப்பு.)
18. மொழித் திணிப்பைக்
கை விடுக
ஆங்கிலோ—இந்தியர்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்த போதிலும், அன்றாட நாட்டு நடப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தித் திணிப்புக்குக் காணப்படும் எதிர்ப்பு, மொழி ஏகாதிபத்தியத்தின் திமிரைப் பெருமளவுக்கு ஆட்டங்காண வைத்திருக்கிறது.
ஆங்கிலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மொழி என்றல்லாமல், உலக மொழியாயிருப்பதாலேயே, அதை நான் ஆதரிக்கிறேன்.
ஆங்கிலத்தைத் தீவிரமாக எதிர்த்து வந்தவர்கள் கூட, இப்போது அதனைப் புறக்கணித்து விட முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
நாட்டின் ஒற்றுமை ஒரு குறிப்பிட்ட மொழியையோ, “எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தாக வேண்டும்” என்னும் நிலையையோ பொறுத்ததல்ல. மாறாக, உணர்ச்சியைப் பொறுத்ததாகும்.
ஆங்கில மொழி எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமானதாக இன்றில்லை. இரண்டாவது உலகப் போரின் போது, மாவீரர் சர்ச்சில், “ஆங்கிலம் பேசுகிற மக்களே ஒன்று படுங்கள்!” என்று அறைகூவல் விடுத்தார்.
அமெரிக்கா நாடு அப்போதுதான் போரில் இறங்கியது. அப்படி ஒன்று படுத்தும் ஆற்றல் ஆங்கிலத்துக்கு உண்டு.
உலகின் பல நாடுகளிலும், இன்று ஆங்கிலம் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வேறு பல நாடுகளில் இரண்டாவது மொழியாக அது கற்றுத் தரப்படுகிறது.
சோவியத்து இரஷ்யாவில் கூட, ஆங்கிலம் சிறப்பு மொழியாகக் கற்பிக்கப்படுகிறது.
நம்முடைய நாட்டிலே கூட, அந்நிய நாட்டினுடையவை என்பதற்காக எல்லாவற்றையும் வெறுப்பவர்கள் அல்லர், இங்குள்ள தலைவர்கள். அந்நியக் கடன்கள் அவர்களுக்குப் பிடிக்கும்; அந்நியத் தொழில் நுணுக்க அறிவு பிடிக்கும்; அந்நிய நடையுடை பாவனைகள் பிடிக்கும். மொழியைப் பற்றி வரும் பொழுது மட்டுந்தான் அவர்கள் மாறி விடுகிறார்கள்.
இங்கே பல்வேறு நாகரிகங்களின் சுவடுகள் பதிந்துள்ளதைக் காணலாம். ஆங்கில நாகரிகம் உட்படப் பல நாகரிகங்களும் சேர்ந்து, இன்றைய இந்திய நாகரிகத்தை உருவாக்கியுள்ளன.
ஒருமைப்பாடு என்பது உளப்பூர்வமாக உருவாக வேண்டும்; மொழியால் அல்ல.
இந்நாட்டை ஒன்றுபடுத்த, இந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக் கதையாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்னால், இந்தி எதிர்ப்பு இயக்கம் துவக்கப்பட்ட போது, தேசியத்தையும் ஏன், இந்தியா முழுவதையுமே எதிர்ப்பதற்குச் சமமாக அது கருதப்பட்டது. ஆனால், இப்போது இந்தி பேசும் பகுதிகளுக்குக் கூடச் சென்று இந்தியைத் தாராளமாக எதிர்க்க முடியும்.
நாட்டிற்குள் பல்வேறு பகுதிகளுக்கிடையே தொடர்பு கொள்வதற்கு ஒரு மொழியும், வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்வதற்கு வேறொரு மொழியும் வேண்டும் என்று சொல்வது அரசியல் அதிகப் பிரசங்கித்தனமாகும்.
பிற மொழியினர் மீது இந்தி திணிக்கப்படுவதை உறுதியோடு எதிர்த்து வருகிறோம்; தொடர்ந்து எதிர்ப்போம். இந்தித் திணிப்பு கை விடப்படும் வரை எதிர்ப்போம்.
வகைப்பாடு : அரசியல்—மொழிக் கொள்கை
(25-10-67 அன்று சென்னையில் ஆங்கிலோ—இந்தியர் சங்கத்தின் 88 ஆவது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)
19. கலையும் அரசியலும்
இங்குப் பேசிய ஜெமினி வாசன் அவர்கள் இரண்டு கருத்துக்கள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவை சிந்தித்துப் பார்க்கத் தக்கவை. முதல் கருத்து, நமது நாட்டு ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு, அனைவரும் குறிப்பாகத் தலைவர்கள் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது. இரண்டாவது கருத்து, திரைப்படத்தின் மூலம் நாட்டு மக்களிடம் நல்ல கருத்துக்களைப் பரப்ப இப்போது இருப்பதை விட, நல்ல முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது.
திரைப்படத்தின் மூலம் இன்னும் எவ்வளவோ நல்ல கருத்துக்களைப் புகுத்த முடியும். ஆனால், நினைக்கிறபடிப் புகுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த நிலையை மாற்றிட நாம் அனைவரும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். காலமும் அதற்கேற்றபடி கனிந்து வருகிறது. ஜனநாயகத்தைப் பொறுத்த வரை, இந்த நாட்டில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
ஏதோ ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டு விட்டதாக, ஒரு சில நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அப்படிப்பட்ட பேராபத்து ஏதுமில்லை. இவ்வளவு பெரிய நாட்டில், மூன்று பொதுத் தேர்தல்களை மிக்க அமைதியுடனும், வெற்றியுடனும் நடத்தி இருக்கிறோம். இத்தனைக்கும் நமது நாட்டு மக்கள் பல்கலைக் கழகம் சென்று படித்தவர்கள் அல்ல! பிற நாடுகளில் தேர்தலின் போது ஏற்படும் இரத்தக் களரிகள் இல்லாமல், மூன்று தேர்தல்களை முடித்து இருக்கிறோம்!
அமைதி குலையாமல், சட்டம் சீர்கேடு அடையாமல், ஆட்சி மாற்றத்தையே செய்யும் அளவிற்கு மக்களின் மனத்தில் ஜனநாயகப் பண்பு படிந்து விட்டது. ஜனநாயகத்திற்கு, மக்களால் எந்த விதமான ஆபத்துமில்லை. வாசன் அவர்கள் குறிப்பிட்டது போலத் தலைவர்கள் அதைக் கட்டிக் காக்க வேண்டும். ஆகவே, இருக்கிற குறையே அங்கே (தலைவர்களிடம்) தான் இருக்கிறது. மக்களிடம் எந்தவிதமான குறையும் இல்லை,
அப்படி மக்களிடம் ஏதாவது குறையிருந்தால், திருத்தி விடலாம். ஆனால், தலைவர்கள் தாங்களாகத் திருந்தினாலொழிய, அவர்களைத் திருத்துவதற்கு வழியில்லை! அந்தத் தலைவர்களைத் திருத்துவதற்குத்தான், மக்கள் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை முயற்சி எடுக்கிறார்கள், தேர்தலின் மூலம்! ஆனால், அந்தத் தலைவர்கள், ஒரு முறை மக்கள் தந்த பாடத்தின் மூலம் திருந்துவார்களா அல்லது இரண்டு முறை பாடம் புகட்டினால்தான் திருந்துவார்களா என்பது தெரியவில்லை.
மக்களிடம் பாடம் பெற்றும் திருந்தாத தலைவர்கள் யார் என்று நாம் கூறத் தேவையில்லை. ஜனநாயகத் திறனுள்ள தலைவர்கள். அவ்வளவுதான்! அந்தத் தலைவர்கள் மக்களின் தீர்ப்பை உணர்ந்து நடக்கத் தொடங்கினால், ஜனநாயகம் இன்னும் ஒளியுடன் விளங்கும்! நண்பர் வாசன் அவர்கள் தென் சென்னைத் தேர்தலில் தமது ஓட்டைக் காங்கிரஸ் வேட்பாளருக்குப் போட்டதாகக் கூறினார். இதை வெளிப்படையாகக் கூறி விட்டு, வெற்றி பெற்ற மாறனையும் பாராட்டினார்.
இது, ஜனநாயத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதே நேரத்தில், கனிவுக்கும் இடமுண்டு என்பதை நிலை நாட்டும் பேச்சாகும். நண்பர் வாசன் அவர்கள் இப்படிக் கூறியதன் மூலம், காங்கிரஸ் வேட்பாளர் சி.ஆர்.இராமசாமி ஆறுதல் அடைவார் என்று நம்புகிறேன். ஒரே சமயத்தில்
இராமசாமிக்கு ஆறுதலும், மாறனுக்குப் பாராட்டும் தெரிவித்த வாசன் அவர்களின் திறமை பாராட்டத் தக்கது.
மாறன் வெற்றி பெறுவார் எனத் தெரிந்தும் கூட, இராமசாமிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று அவர் துணிவாகக் கூறியதைக் கண்டு மகிழ்கிறேன். மாறனுக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று இப்போது கூறுகின்ற சிலரது கூற்றை ஆராயாமல், அப்படியே ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நாங்கள் அரசியல் அனுபவம் பெறாமலில்லை! அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கவனிக்காமல், மாறன் முன்னேற வேண்டும் என்று உளப்பூர்வமாக வாழ்த்தியவர்களுக்கு என் நன்றி.
இங்கே சில நண்பர்கள் “கலை உலகத்தில் உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாமா?” என்னும் வாதம் பற்றிக் கூறினார்கள். “அரசியல் என்பதே ஒரு கலைதான்” என்பது அறிஞர்கள் கண்ட முடிவு. “அரசியல் ஒரு கலையா? அல்லது வெறும் கருத்துக் குவியலா?” என்று ஆராய்ந்த பேரறிஞர்கள், “அரசியல் என்பது கருத்துக் குவியல்களின் வழி மக்களைத் திருப்பி, அவர்களைத் திருத்தும் ஒரு கலை,” என்றே முடிவு கட்டியிருக்கிறார்கள்.
கலை என்பது மக்களைக் கட்டியாள்வது; அரசியல் என்பது மக்களைக் கட்டியாண்டு திருத்துவது. கலை என்பது நிழல் உருவில் இருப்பது; அரசியல் நிஜ உருவத்தில் இருப்பது. கலை என்பது உடனடித் தேவைகளுக்காக இயங்குவது. அரசியல் என்பது நீண்ட காலத் தேவைகளுக்காக இயங்குவது. ஆகவே, கலையும், அரசியலும் பின்னிப் பிணைந்தவை. இதை உணர்ந்த பிறகும், “கலையில் அரசியல் வரலாமா? அரசியலில் கலை புகலாமா?” என்று கேட்பது, 18 வது நூற்றாண்டின் கருத்தாகத்தான் இருக்க முடியும்.
நாம் அறிந்த அரசியல் தலைவர்களின் கலை ஈடுபாடு கண்டு நாம் தெளிய வேண்டும். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற வேளையிலும் கூட, ஓய்வு கிடைக்கும் போது, வின்ஸ்டன் சர்ச்சில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறார். மேலும், உலகத்தின் மிகச் சிறந்த அரசியல்வாதியான ஆப்ரகாம் லிங்கன் நாடகம், பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பண்டித நேரு இங்கிலாந்து செல்கிற போது, அங்கு நடக்கும் புகழ் மிக்க நாடகங்களைப் பார்ப்பது வழக்கம்!
தமிழகத்தில் அரசியல் உணர்வை ஊட்டிய சத்தியமூர்த்தி அவர்களுக்குச் சங்கீதம், நடனம் ஆகியவற்றில் பெருவிருப்பம் இருந்ததோடு, நாடகத்தில் அக்கறை கொண்டதோடு, சில நாடகங்களில் பங்கேற்று, வேடமும் தாங்கி இருக்கிறார். ஆகவே,. கலையும், அரசியலும் இணையக் கூடாது என்பது சரியல்ல. கலையிலும், அரசியலும் சரியானபடி இருக்க இயலாதவர்கள்தான் அப்படிக் கூறுவார்கள்.
ஆனந்த விகடனில் கல்கி எழுதியதாக நினைவு. ஒரு முறை, அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, தம் பையிலிருந்த பொரிவிளாங்காய் உருண்டை ஒன்றை எடுத்துச் சாப்பிட்டாராம். உடனே எதிரில் இருந்தவர், கல்கியைப் பார்த்து “நீங்கள் காங்கிரஸ்காரரா?” என்று கேட்டாராம், “ஆம்’” என்றார் கல்கி. அதற்கு அவர் “பொரிவிளாங்காயை காங்கிரஸ்காரன் சாப்பிடலாமா?” என்று கேட்டார். “ஏன், சாப்பிடக் கூடாதா?” என்று கல்கி வினவினார். அதற்கு அவர், “பொரிவிளங்காயை நீங்கள் விரும்பிச் சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள இனிப்பில் நாட்டம் இருக்கிறது என்பது தெரிகிறது. இனிப்பில் நாட்டம் செலுத்தினால், தேசபக்தி வருமா?” என்று கேட்டார்.
இதிலிருந்து தெரிவது அரசியலில் அடிப்படைக் கருத்து விவாதங்களுக்குப் பதில், மனிதனைப் பற்றிய விவாதங்கள் வளருவதைத்தான். கல்கி அவர்கள் வேடிக்கையாகக் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சி நடந்தது 30 வருடங்களுக்கு முன்! இப்போது கூட அடிப்படை அரசியல் கருத்துக்களை விவாதிப்பதை விட்டு விட்டுத் தனிப்பட்டவர்களை விமர்சிப்பது எதைக் காட்டுகிறது? கல்கி, இரயிலில் கண்ட மனிதர்கள் 30 வருடங்களுக்குப் பிறகும், வயதான நிலையில் உலவிக் கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது.
கலை என்பது மக்களின் மனத்தில் நெகிழ்ச்சி ஏற்படுத்துவதாகும். எந்த நாட்டிலுமில்லாத முறையில் தமிழகத்தில் நெகிழ்ச்சியை உருவாக்க எடுத்துக் கொள்ளும் முயற்சி குறைவானது. அதிக முயற்சி இல்லாமல், தமிழக மாந்தர் நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திட முடியும். அதற்குக் காரணம், நெகிழ்ச்சி என்னுஞ் சொல்லில் சிறப்பு ‘ழ’ கரம் இருக்கிறது.
தமிழிழிலிருந்து இருந்து பல நாட்டவர்கள் எதை, எதையோ எடுத்துக் கொண்டனர். பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டனர். ஆனால், அந்த ‘ழ’ வை மட்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அத்தகைய சிறப்பு ‘ழ’ கரம் இருக்கிற காரணத்தால், தமிழகத்துக் கலை மிக விரைவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.
மனம் நெகிழச் செய்வது கலை. நெகிழ்ந்த மனம் நெகிழ்ந்து கொண்டே போனாலும் பயனில்லை, நெகிழாமல் இருந்தாலும் தவறு! ஆகவே, மனம் நெகிழ வேண்டும் கலையால்! அப்படி நெகிழ்ந்ததை வழிப்படுத்துவது, பயன் பெறச் செய்வது அரசியல்! உள்ளத்தை நெகிழச் செய்யும் திறன் படைத்த கலைஞர்களிடமே, நெகிழ்ந்த உள்ளத்தை வழிப் படுத்தும் அரசியலும் இருந்தால், தவறு இல்லை தவறு இல்லை என்பது மட்டுமல்ல; பொருத்தமிருக்கிறது; பொருளுமிருக்கிறது! இந்தக் கருத்துக்களை உலகம் உணர்ந்து நடக்கும் காலம் கனிந்து வருகிறது.
வகைப்பாடு : ஜனநாயகம்—மக்களும் கலையும்.
(20-11-67 அன்று சென்னையில் திரை உலகப் பெருமக்கள் அளித்த பாராட்டு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)
20. தேவை தொழிலமைதி
விவசாயத் தொழிலுக்கு முக்கியமான சாதனை ஒன்றைச் செய்து முடித்த கிர்லோஸ்கர் நிறுவனத்தார், அந்தச் சாதனையைப் பதிய வைத்திட நடத்தும் இவ்விழாவுக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். இதில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கிர்லோஸ்கர் நீண்ட பல ஆண்டுகளாக, மிகுந்த சகிப்புத் தன்மையோடும் ,அயரா உழைப்புடனும் இந்த நாட்டின் விவசாயத்தை ஒரு முற்போக்கான தொழிலாக ஆக்கிடப் பாடுபட்டிருக்கிறார்கள்.
வேளாண்மைத் துறை அமைச்சர் இங்குப் பேசுகையில், அயல்நாடுகளில் தயாரான எந்திரங்களையே நம்மவர்கள் விரும்புகிறார்கள் என்று சொன்னார். இதற்குக் காரணம் வழக்கமோ அல்லது மக்களிடையே வளர்ந்து விட்ட மனப்போக்கோ அல்ல. அந்த அந்நிய எந்திரங்கள் நன்றாகவே பணியாற்றும் என்று அவற்றினிடத்தில் ஏற்பட்டு விட்ட நம்பிக்கையாகும். உள்நாட்டுப் பொருள்கள் நூற்றுக்கு நூறு தரமானவை. நன்றாக வேலை செய்பவை என்று மக்கள் நம்பும்படிச் செய்வதே சிறந்த வழி.
உள்நாட்டில் நம்மவர் பெற்றுள்ள தொழில் நுணுக்க, நிர்வாக, விஞ்ஞான அறிவும், திறனும் எந்நாட்டாருடனும் போட்டியிடக் கூடிய அளவுக்கு உயர்ந்துள்ளன. இங்கு உற்பத்தியான இந்த எந்திரங்களில், 99 சதம் இந்தியப் பொருள்களே என்பதையும் ,அதில் 70 சதம் தென்னகத்துச் சிறு தொழில்களால் தயாரிக்கப்பட்டவை என்பதையும் அறிந்து, நான் மகிழ்ச்சியடைகின்றேன். இம்மாதிரி உள்நாட்டுப் பொருள்களுக்கு மதிப்பளித்து, அவற்றைப் பயன்படுத்தினால் நாட்டில் சிறு தொழில்கள் பெருகி, நாட்டின் உருவையே மேம்பாடுறச் செய்திடலாம்.
தமிழ் நாட்டின் இன்றைய விவசாயி, புதிய முறைகளைக் கையாண்டு விவசாயத்தில் வளங் காணத் துடிக்கிறான். எந்த முறையானாலும், முதலில் மற்றவர் செய்து பார்க்கட்டும். அப்புறம் நாம் செய்யலாம் என்னும் அளவில்தான் அவனது பழமைப் போக்கு உள்ளது.
ஜீவ நதிகள் இல்லாத தமிழ் நாட்டில் நாம் பயிர்ப் பாசனத்துக்கு, நிலத்தின் அடியில் உள்ள நீரையே பயன்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். நிலத்தடி நீரைப் பொறுத்த மட்டில், நாம் நல்ல நிலையில் வளமுடன் இருக்கிறோம். இந்த வளத்தைப் பயன்படுத்த இதற்கு வலுவும், உறுதியும், பாதுகாப்பும், விலை மலிவாகவுமுள்ள இறைவைப் பொறிகள் நிறையத் தேவை.
நாட்டுப் புறங்களிலே நிலவும் வறுமையை உணர்ந்தவன் என்கின்ற முறையில் இறைவைப் பொறிகளை உற்பத்தி செய்வோருக்கு நான் இவ்விழாவில் முக்கிய வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் தயாரிப்புகளின் விலைகளைக் குறைத்திடுங்கள். சில ஆண்டுகளாயினும், இலாபத்தின் ஒரு பகுதியை இழந்தாயினும், விலை குறைக்க உற்பத்தியாளர்கள் தயங்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். உற்பத்தி செய்து விட்டு, விலையைக் கூட்டி விட்டால், அவை வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கும். அப்படி இல்லாமல், இத்தகைய தொழில் உற்பத்திப் பொருள்கள் பட்டிகள் தோறும் பரவி, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு அவர்கள் ஆற்றும் உணவு உற்பத்திப் பணியில் பயனளித்திட வேண்டும்.
இவ்வாறான நிலைமை உருவாகிடவும், தமிழ் நாட்டில் தொழில் முன்னேற்றம் தங்குதடையின்றி ஏற்படவும் உற்பத்தி அதிகரித்திடவும், தொழில் துறையில் குறைந்தது பத்தாண்டுக் காலத்துக்கேனும் சச்சரவுகள் இல்லாது, தொழில் அமைதி நிலவ வேண்டும். தொழில் சச்சரவுகள் கதவடைப்பு என்னும் பெயரிலோ, எந்த வடிவத்தில் தொழில் சச்சரவு ஏற்பட்டாலும், அது தொழிலுக்குக் குந்தகத்தையே ஏற்படுத்தும் என்பதால், தொழில் சச்சரவுகள் பத்தாண்டுக்காயினும் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.
வகைப்பாடு : பொருளாதாரம்—தொழில் பெருக்கம்.
(13-12-67 அன்று எண்ணூரில் கிரிலோஸ்கர் நிறுவன விழாவில் ஆற்றிய நலைமை உரை.)
21 தமிழின் உலகளாவிய தன்மை
நாளை முதல், உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் தமிழ் பற்றி உலகத் தமிழ் மாநாட்டில் ஆராய்ச்சி நடத்தவிருக்கிறார்கள்.
மிகுந்த பண்பாளரும், சமநிலை நோக்குள்ளவரும், வித்தகரும், கல்வித் துறையில் புதுமை கண்டவருமான குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்கள் இந்த மாநாட்டைத் துவக்கி வைக்க வந்துள்ளார்கள். நல்ல வேளையாக, நமது குடியரசுத் தலைவர்களாகத் தொடர்ந்து கற்றறிவாளர்களும், கலாச்சாரத் துறையில் தொடர்பு கொண்டவர்களும் இருந்து வருகிறார்கள்.
கற்றறிந்த மேதையான டாக்டர் இராதா கிருஷ்ணன் முதலில் குடியரசுத் தலைவராய் இருந்தார். அவரைப் போன்ற கல்விமானான ஜாகீர் உசேன் இப்பொழுது குடியரசுத் தலைவராகியிருக்கிறார். அத்தகையவர், உலகத் தமிழ் மாநாட்டைத் துவக்குவது நமக்குப்பெருமை தரத் தக்கது.
இந்த உலகத் தமிழ் மாநாடு முதலில், மலேசியாவில் நடைபெற்றது. இப்போது சென்னைத் திருநகரில் நடைபெறுகிறது. இங்குப் பேசிய காமராசர், முதல் மாநாட்டையே நாம் நடத்தியிருக்க வேண்டும், ஆனால், என்ன காரணத்தினாலோ, அவர்கள் முந்திக் கொண்டார்கள் என்றார்கள்.
எப்போதுமே அண்ணன் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும், தம்பி மிக அக்கறையாயிருந்து காரியமாற்றுவான். அது போல, முதல் மாநாட்டை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இம்மாநாடு அதன் தொடர்ச்சியே தவிரப் புதிது அல்ல.
அந்த மாநாட்டிற்கு 20 நாட்டுப் பேராளர்கள் வந்திருந்தனர். இப்போது நடக்கும் மாநாட்டிற்கு உருசியா போன்ற 30 நாடுகளிலிருந்து பேராளர்கள் வந்திருக்கின்றனர். இந்த நாடுகளுக்கெல்லாம் தமிழ் மொழி அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் இந்தியாவுக்குள் அது சரி வர அறிமுகமாகவில்லை.
தமிழ் மொழியின் அருமையினை, உருசிய நாட்டினரும், செக்கோஸ்லாவிய நாட்டினரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், இங்கே அது சரி வர உணரப் படுவதில்லை. இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராயப்படுகிறது என்று அறியும் நேரத்தில், அத்தகைய தமிழுக்கு நாம் சொந்தக்காரர்கள் என்கிற போது, நமது நினைவு எங்கோ செல்கிறது. ஆனால், நாம் இன்றுள்ள நிலையை நினைக்கும் போது, இன்றிருக்கும் நிலைக்கு நமது நினைவு வருகிறது.
எங்கோ நம் நினைவு செல்கிறது என்று கூறினேனே, அந்தத் திருவிடத்திற்கு நாம் உறுதியாகச் செல்வோம் எப்போதும் தமிழர்கள் தமது தமிழ் பண்பாட்டைப் போற்றித் தமது வரலாற்றை உணர்ந்து, தமது ஆற்றலை அறிந்து, ஒன்று பட்டுப் பணியாற்றி, அந்த இடத்தைத் திண்ணமாக அடையலாம்.
தமிழ் மொழி பற்றி நடக்கும் ஆராய்ச்சிகளையும், முடிவுகளையும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வோம் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப் பண்பாடு, உலகத்தில் எல்லா மனிதர்களையும் சகோதரர்களாகவும், தோழர்களாகவும் ஏற்றுக் கொள்ளும். தன்னிடம் வருபவர்களை வாழ்த்தி வரவேற்கும். எந்த மொழியையும், உரிய முறையில் மதிக்கும். அறிவுச் செல்வம் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும், தேடிச் சென்று எடுத்து வரும். ஆனால், தமிழர்கள் தமக்கென்று உள்ளதை ஒருக்காலும் இழக்க உடன்பட மாட்டார்கள்.
இங்கிலாந்திலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் வரும் நிபுணர்கள் தமிழ்மொழி இத்தகைய அருமையான மொழி என்று கூறுகிற நேரத்தில், அந்த மொழிக்குச் சொந்தக்காரர் என்று நினைக்கும் பொழுது, அந்த மொழி மீது பற்றும், பாசமும் ஏற்படாமலா இருக்கும்.
அத்தகைய மொழிக்கு எந்தக் காலத்திலாவது, எந்த நோக்குடனாவது, எப்படிப்பட்டவர்களிடமிருந்தாயினும் தனி மரியாதை கிடைக்கவில்லை என்றால், அதைத் தமிழகம் பொறுத்துக் கொள்ளாது.
ஆழ்கடல் கொந்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. பக்குவமாகக் கடக்க வேண்டுமானால், நல்ல நாவாயின் மூலம் கடக்கலாம். அது போலத் தமிழர்களை அணைத்துக் கொண்டு சென்றால், அவர்களை விடச் சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.
ஐக்கிய நாடுகள் அவையில், ஒற்றுமையைக் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினாலும், அனைத்து நாட்டுக் கொடிகளும் வெளியே பறக்க, உள்ளே பேசி விட்டு வெளியே வந்தாலும், எந்த நாட்டின் மீது யார் படையெடுப்பார்களோ என்னும் பேச்சு இருக்கும். ஆனால், உண்மையான ஒற்றுமை உணர்வினை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பொன்மொழியில் வடித்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தந்த தமிழரின் பெருந்தன்மையை எண்ணி, எண்ணி நெஞ்சம் விம்முகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிய புலவர் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றும் ,அடுத்த அடியில் பாடி இருக்கிறார். நல்லது வர வேண்டுமா; அது நாம்தான் செய்து கொள்ள வேண்டும். கெட்டது வர வேண்டுமா; நாம்தான் வரவழைத்துக் கொள்ள வேண்டும். எனவே, தீது வருமோ என்று ஐயப்பாடு கொள்ள வேண்டாம். அது நாமாகத் தேடிக் கொண்டால்தான் வரும். பிறர் தருவதல்ல தீதும், நன்றும். நாம் வேண்டாம் என்றால், அது வராது.
தமிழர்க்குத் தீது பிறர் தருவதால் அல்ல, நாமே தீது தேடிக்கொண்டாலொழியத் தமிழர்களுக்குத் தீது ஒரு போதும் வராது.
தமிழ் மொழியின் அருமை பெருமையை நாம் உணர்வதோடு, பிறரும் உணர்ந்து தமிழர்களாகிய நம்மை அவர்கள் நோக்கி, “இந்தத் தமிழ் மொழி உங்களுக்கு மட்டும் உரிய மொழி அல்ல. எங்களுக்கும் அதுதான் மொழி. அதுதான் இணைப்பு மொழி. அதுதான் பொது மொழி, அதுதான் ஆட்சி மொழி என்று கூறும் காலம் வரும். அந்தக் காலம் அவசர நடையால் வருவதல்ல. அவசரக் கோலத்தால் கிட்டுவதல்ல.
தூண்டில் போடுபவன், முள் அருகில் மீன் வரும் வரை எப்படிப் பொறுமையுடன் இருப்பானோ, அத்தகைய பொறுமையை நாம் கைக்கொள்ள வேண்டும்; கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ் மறையிலும், தமிழ் நெறியிலும் காலம், இடம், வகை, பொருள் ஆகியவை அறிந்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அவ்வழி நடந்து, தமிழ்மொழியை அரியாசனத்தில் அமர்த்தக் கூடிய நன்னாளை நாம் உருவாக்குவோம்
வகைப்பாடு : மொழி—பண்பாடு
(3-1-68 அன்று சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுத் துவக்க விழாவில் ஆற்றிய தலைமை உரை.)
22. உழைக்கும் தொழிலாளிக்கு
உரிய பங்கு
இத்தகைய மகத்தான தொழிற் பொருட்காட்சியின் திறப்பு விழாவிற்குத் தலைமை ஏற்றுச் சிறப்பு மிகுந்த இந்நிகழ்ச்சியினை நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் தொழில்களை நிறுவி நடத்தும் பெருமக்கள் பலர் ஆயிரக்கணக்கில் குழுமியுள்ள இக்காட்சி போல், இதற்கு முன் நாம் கண்டதில்லை. இனி ஒரு நாள் பார்ப்போமா என்பதும் ஐயமே!
இம்மாதம் சென்னை மாநகரில் அடுத்தடுத்துச் சிறப்புக்குரிய மாநாடுகள் நடந்துள்ளன. உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அதை அடுத்துத் தேசிய ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, இம்மகத்தான பொருட்காட்சி ஏற்பாடாகியுள்ளது. இதன் பொலிவை முமுமையாக்கிடத் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. மனித குலமே இன்னும் முழு நிறைவை நாடித்தான் பாடு பட்டு வருகிறது. உலகம் முழுவதையும் எடுத்துக் கொண்டாலும், இன்னும் அது நிறைவை எட்டாமல்தான் உள்ளது.
இப்பொருட்காட்சியின் அமைப்பாளர்கள் எத்தனை வசதிக் குறைவுகளிடையே இம்மாபெரும் முயற்சியில் செயலாற்ற வேண்டியிருந்தது என்பதை நான் நேரில் அறிவேன். இப் பொருட்காட்சி நம் சாதனைகளின் ஒரு தொகுப்பென்றே சொல்லலாம். நம் ஆவலின் அளவு, சாதனைகளின் அளவை மீறியதாகும்.
நாம் காணுகிற இந்த வளமையும், செழிப்பும் கோடிக்கணக்கான நம் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமேயல்லாமல், இச்செல்வச் செழிப்பெல்லாம் ஒரு சிலரின் தன்னல மேம்பாட்டிற்குத்தானென்றால், அதனால் ஒரு பயனுமேற்படாது.
இந்த வளமை, மக்கள் வாழ்வை உரிமை வாழ்வாகப் புதுமை வாழ்வாக, முழுமை வாழ்வாக, ஆக்கிட வேண்டும்.
செயலாற்றல் மிக்கவர்கள் நம் தொழிலதிபர்கள். இவர்களைச் செங்கற்கள் என்றால், இவர்களைக் கொண்டு கட்டிடம் உருவாக்கப் பயன்படுகிற சிமிண்டாக உலக நாட்டார் விளங்கிடவேண்டும். சிமிண்ட் என்றுதான் சொன்னேன். உதவி, கடன் என்றெல்லாம் அதை நான் அழைக்கவில்லை.
உலகில் எல்லோரும் வளமை பெற உதவிட வேண்டியது மேம்பாடு அடைந்த நாடுகளின் கடமையாகும். நாடுகள் பல வளர்ச்சியடையாத ஒரு நிலையில், பொருள்களை ஏராளமாக மேம்பாடு அடைந்த நாடுகள் உற்பத்தி செய்து குவிக்குமானால், அவற்றை வாங்கிடுவார் யார்?
இந்தியா போன்ற நாடுகள் வளம் பெற கை கொடுத்து உதவ வேண்டும். வெண்டல் வில்கி என்னும் அமெரிக்கப் பெருமகன் ஓருலகம் என்று சிந்தித்துக் கருத்தை எடுத்துரைக்கிறார். இதை மனத்தில் கொள்ள வேண்டும். உலகில் உள்ள இயற்கை வளம் அனைத்தும், மனித இன முழுமையில் பயனளிக்கும் வகையில் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும்.
செல்வமோ செழிப்போ மக்களால் உணரப்பட வேண்டும். உழைக்குத் தொழிலாளிக்கு உரிய பங்கினை அளித்திட வேண்டும். இவை மறுக்கப்படுகிற எந்த ஓர் அமைப்பையும் முறையையும் உலகம் வரவேற்காது என்பதோடு பொறுத்துக் கொள்ளவும் மாட்டாது. அத்தோடு அம்மாதிரி ஒரு முறையை இன்று நம்மால் தாங்கிடவும் முடியாது. அத்தகைய முறை நிலவுமானால், தொழில் உலகம் துருப்பிடித்து கேட்பாரற்று ஒதுக்கப்படும். உழைக்குத் தொழிலாளிக்கு உரியதை வழங்கிடுங்கள். அவ்வாறு செய்வதன் வாயிலாக எம்போன்ற எளியாருக்கு ஏற்படுகிற சங்கடத்திலிருந்து விடுதலை கொடுங்கள்.
இந்நாட்டைத் தொழில் வளமுடையதாக ஆக்கும் முயற்சியில் தவறுகளைச் செய்திருக்கிறோம். அவற்றைத் திருத்திக்கொண்டு செயல்படுவோம். “கட்டை வண்டி நிலையிலிருந்து ஜீப் நிலைக்கு நாம் முன்னேற வேண்டும்” என்று ஒரு முறை நேரு சொன்னார் மக்கள் அந்தநிலையை அடைந்தார்களோ இல்லையோ அதிகாரிகள் ஜீப்புகளைப் பிடித்துக் கொண்டார்கள்.
வேளாண்மைத் துறையை வலிவடையச்செய்வதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். தளராது உழைத்து, அதை வலிவுடையதாக ஆக்கி விட்டோமானால், நம் தொழில்களுக்குத் தேவையான மூல தனத்துக்கு எவரிடமும் உதவி நாடி நிற்கத் தேவையில்லை. வேளாண்மை மக்களே உதவிட முன்வருவார்கள். தொழில் முயற்சிகளில் பங்கு தாரர்களாகச் சேர்ந்து ஊக்குவிப்பார்கள். இதற்குத் துணை செய்யும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வேளாண்மை மக்கள் மீது வரி எதுவும் விதிக்காது விடவேண்டும். ஏனெனில், கிராமப் புறங்களில் விவசாயிகள் கைகளில் காசு புழங்கத் துவங்கியுள்ளது. பணத்தின் ஒசை கேட்கத்துவங்கியுள்ளது.
இப்பொருட் காட்சியைத் தொடர்ந்து உலக வேளாண்மைப் பொருட்காட்சியை நடத்திட வேண்டும். தொழிலும் வேளாண்மையும் கைகோத்து முன்னேறச் செய்வோம். அதற்கு உலக வேளாண்மைப் பொருட்காட்சியை நடத்துவது உதவும். ஏனைய நாட்டவரெல்லாம் கையாண்ட முறைகளென்ன ? எப்படி முன்னேறி வேளாண்மைத் துறையில் வெற்றிகளை ஈட்டினார்கள் என்பதை யெல்லாம் நம்மவர்கள் உணர்ந்திடச் செய்வோம்.
இதேபோல நீண்ட கடற்கரையைக் கொண்டது இந்நாடு. டில்லியில் இருப்பவர்கள் ஆயிரம் மைல் பயணஞ் சென்றால்தான் முடியும். இங்கே அப்படியல்ல. எப்பக்கம் சென்றாலும், கடல் அலைகள் உங்கள் கால்களைக் கழுவும். இத்தகைய கடல் வளமுண்டு. எனவே, மீன்பிடிதொழிலும் வளர்ச்சியடைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால், உலகில் பல நாடுகளுக்கு மீன் பதப்படுத்தி அனுப்பும் வாய்ப்பு நமக்குண்டு இங்கே முன்னாள் அமைச்சர் ஆர். வேங்கடராமன் இருக்கிறார். சேலம் இரும்பைப் பற்றி அவருஞ் சொல்லுவார். ஆனால், வருத்தத்தோடு சொல்வார். நாங்கள் இந்தச் சேலம் இரும்பைக் குறித்து ஆராய்ந்து அனுப்பினோம். சேலத்துக்கு ஓர் உருக்காலையை வழங்க, அவர்கள் ஏன் மறுக்கிறார்கள் என்பது பற்றி, உங்கள் கருத்தைக் கூறுமாறு நான் கேட்க மாட்டேன். ஏனெனில் அது, அரசியல், உங்களுக்கானதல்ல. தொழில் உற்பத்தியில் ஈடுபாடுடைய நீங்கள் சேலம் இரும்பைப் பற்றிய எங்களது அறிக்கையை ஆராய்ந்து நல்லது, கெட்டதை அதன் தொழில் -அறிவியல் பலன்களைத் தயங்காது விருப்பு, வெறுப்புக்கிடமளிக்காது சொல்லுங்கள். இதுவே என் வேண்டுகோள்.
வகைப்பாடு : கல்வி—தொழிற் கண்காட்சி.
(21-1-68 அன்று சென்னையில் நடைபெற்ற உலவத் தொழில் வணிகக் கண்காட்சித் திறப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை.
23. நாட்டுக்கு நலந்தரும்
பெண் கல்வி
காலஞ்சென்ற பெரியார் எத்திராஜ் அவர்களின் திருவுருவப் படத்தை இந்த மண்டபத்தில் திறந்து வைப்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் திரட்டிய பெருஞ்செல்வத்தை மகளிர் கல்லூரிக்காகக் கொடுத்து உதவியது எல்லோராலும் பாராட்டத்தக்கதாகும். அவருடைய சட்ட நுணுக்க ஆராய்ச்சியும் தெளிவும் கனிவும் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மிகநல்ல முறையில் விளங்கும். கல்வித் துறையின் வளர்ச்சிக்காக அரசினர் காட்டிவரும் அக்கறையோடு எத்திராஜ் போன்றவர்களும் கொடுத்து உதவிய பெருநிதியால்தான் தமிழகத்தில் இது போன்ற பல அறிவாலயங்கள் உருவாக முடிந்தது.
ஆடவர்களைவிட ஆரணங்குகள் கல்விபெறுவதால், ஒரு குடும்பத்தையே சிறப்பாக்கும் பணியை ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள். ஒரு கல்லூரிக்குக்கிடைக்கும் நல்ல பெயர், அந்தக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் திறமையைப் பொறுத்துத் தான் இருக்கிறது.
கல்வியில் முன்னேற்றமடையாவிட்டால், நாடு முற்போக்கை அடைய முடியாது. மாணவிகள் கல்வியில் தேர்ச்சிப் பெற்று நாட்டுக்கும் ஏற்றத்தைப் பெற்றுத்தருகிறார்கள். இங்கே பயிற்சி பெற்ற மாணவிகள் தனித்திறமையோடு விளங்குகிருர்கள் என்பதைக் கல்லூரி முதல்வர் எடுத்துக் கூறினார். மகளிர் குலத்திற்குத் தெளிவும் கனிவும் ஆகிய இரண்டும் இயல்பாக அமைந்திருக்கின்றன. அதை இன்னும் சற்று வளர்த்துக்கொள்வதற்குக் கல்வித் துறையில் மகளிர் ஈடுபடுவது இன்றியமையாதது ஆகும். அப்போதுதான் அவர்கள் பெற்ற தெளிவும் கனிவும் சமூகத்திற்கு மிகுந்த பயன்தரும். ஆகையால் தான் ஒவ்வொரு பெற்றோரும் பெண் குழந்தை பிறக்கின்ற நேரத்தில் தனி இன்பம் அடைகின்றார்கள். அண்மையில், எனது இரு புதல்வர்களுக்கும் குழந்தை பிறக்கப் போகிறது என்ற செய்தி கேட்டு, யாருக்குப் பெண் குழந்தை பிறக்கப் போகிறதோ, அந்தக் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு கொடுப்பதாக அறிவித்தேன். ஆனால், அந்தப் பரிசை இன்னுங் கொடுக்கவில்லை. அவர்கள் பெரியவர்களான பிறகு கொடுக்கலாம் என இருக்கிறேன்.[1]
பெண் குழந்தையாக இருந்தால், அந்தக் குழந்தை வளர்ந்ததும், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு உதவியாக இருக்கிறது. பெண் குழந்தையை விட, ஆண் குழந்தைக்குப் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டி இருக்கிறது. பெண்களுக்குக் கல்வி தேவை இல்லை என்று ஒரு காலம் இருந்தது. இதை இப்போது சிறுகதையில் எழுதினால் கூட, யாரும் நம்ப மாட்டார்கள். பெண்கள் படிக்காமல் இருக்கும் பொழுதே, இவ்வளவு திறமையுடன் இருக்கிறார்களே, படித்து விட்டால் என்ன ஆகுமோ என்பதால்தான் போலும், முன்பு அவர்களைப் படிக்க வைக்கவில்லை. இப்போது பெண்கள் படிக்கத் தொடங்கியவுடன், பலனைக் காண்கிறோம். கல்வித் துறையில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் எந்தத்துறையில் ஈடுபட்டாலும் திறமையோடு விளங்குகிறார்கள். ஆடவர்களை காட்டிலும் அதிக வெற்றியைப் பெறுகிறார்கள். மருத்துவத் துறையிலும் ஆசிரியத் துறையிலும் பெண்கள் முழுவதுமாக ஈடுபட்டால் மிகுந்த பயன் உண்டாகும்.
மருந்தைவிடக் கனிவுதான் நோய்க்கு மருத்தாகும். அப்படிப்பட்ட கனிவு இயற்கையாக பெண்ககளிடம் அமைந்திருப்பதை பார்க்கலாம்.
“மற்றத் துறைகளில் ஈடுபட்டால் வெற்றியைப் பெற மாட்டார்களா?” என்னும் ஐயப்பாடிருக்கும். அது தேவையில்லை. அதிலும் வெற்றிபெறுவார்கள். என்றாலும் மகளிர் ஆசிரியத்துறையிலும் மருத்துவத் துறையிலும் ஈடுபடுவது தனிச்சிறப்பாகும்.
திருவள்ளுவரை எந்த அளவுக்குப் பாராட்டுகிறோமோ, அதற்கு ஒப்பாக ஒளவையாரையும் தமிழகம் கருதி இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தில் எந்த நாட்டிலும் பெண்பாற் புலவர்கள் இருந்ததில்லை. அப்போது தமிழகத்தில் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு நாட்டின் தனிச்சிறப்பு, நிலைாயன பெருமை அந்த நாட்டிலுள்ள இலக்கியக் கர்த்தாக்களையும் கற்றறிவாளர்களையும் பொறுத்திருக்கிறது. அதை வெறும் அரசியல் வாதிகளால் மட்டும் பெற்றுவிட முடியாது.
வெளிநாடுகளுக்குச் செல்கிற நேரத்தில், உங்கள் நாட்டில் எத்தனை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்று யாரும் கேட்பதில்லை. எத்தனை மந்திரிகள் அதிகமாக இருக்கிறார்களோ, அந்த நாட்டில் திறமை அதிகமாக இருக்கும் என்று யாரும் கணக்கிடுவதில்லை. அப்படிக் கணக்கு எடுக்கப்படுமானால். பீகார் மாநிலத்திற்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்.
ஒரு நாட்டின் நிலையான பெருமைக்கும் செல்வத்துக்கும் ஊன்றுகோலாக இருப்பது கல்வியே. எத்தனை மருத்துவர்கள் இருக்கிறார்கள்? எத்தனைப் பொறியியல் வல்லுநர்கள் இருக்கிறார்கள்? எத்தனைப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் ? என்று தான் எந்த நாட்டிலும் கேட்பார்கள். அவர்கள் ஈட்டித் தருகிற வெற்றிதான் நாட்டின் பெருமையை உயர்த்த முடியும்.
இந்த நாடு ஏழ்மை நிரம்பிய நாடாக இருந்தாலும், வள்ளல் தன்மை உள்ள நாடாகும். தன்னுடைய நலத்தைக் குறைத்துக் கொண்டு. மற்றவர்களுக்கு உதவுவதில் அக்கறை கொண்டவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் தங்களைத்தாங்களே தியாகம் செய்கிறார்கள்.
என்னுடைய அனுபவத்தில் நான் படித்தபோது இப்படிப்பட்ட கட்டம் இருந்ததில்லை. என்னுடைய வரலாற்றுப் பேராசிரியர் உலகத்திலுள்ள பெருவீரர்களைப் பற்றி எல்லாம் சொல்லும்போது, வெளியே எட்டணா, ஆறணா என்று பண்டங்களின் விலையைக் கூறுவதும் காதில் விழும். இவ்விரண்டுக்கும் இடை யில், நான் கல்வி கற்றேன். இன்று அந்த நிலை இல்லை,
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று சொல்வார்கள். ஆனால், இன்று யாம் பெறாததை எம்முடைய மக்கள் பெறட்டும் என்று, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தத் தலைமுறை தியாகஞ் செய்து வருகிறது. ஒரு தலைமுறை தன்னைத் தியாகம் செய்து கொண்டால்தான், இன்னொரு தலைமுறைக்குப் பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு நோய் வந்தால், தானே மருந்து சாப்பிடுவார்கள் தாய்மார்கள். இத்தகைய உண்மைத் தியாக உள்ளம் தாய் குலத்திற்கு உள்ளதைப் போல், வேறு யாருக்கும் இருக்க முடியாது.
ஆண்டுக்காண்டு மகளிர் கல்வி பெரு எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. கல்வித் துறையில், இந்த அரசாங்கம் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. மகளிர் நல்ல முறையில், கல்வியில் தேர்ச்சி பெற்று, இந்த நாட்டின் பெருமையை உயர்த்தித் தர வேண்டுமென்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
வகைப்பாடு : பெண் கல்வி
(26-2-68 அன்று சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி, கல்லூரிநாள் விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)
24. யாழ் நங்கை
செல்வி மல்லிகாவின்[1] இந்த நடனத்தைக் காண வாய்ப்பு கிடைத்தது, உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி தருவது ஆகும். ஏற்கனவே ஒரு நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். இரண்டாவது முயற்சியாக, யாழ் நங்கை என்னும் இந்த நாடகம் முதல் முறையாக இங்கு நடைபெறுகிறது.
அன்னைக் கலைக் குழுவினரைப் போல், சில கலைக் குழுவினர் சில ஆண்டுகளாக நாட்டிய நாடகங்களைத் தமிழகத்தின் கலையரங்குகள் தோறும் நடத்தி வருகின்றனர். நடனம் தனியாகவும், நாடகம் தனியாகவும் இருந்தன. இப்போது அது நடன நாடகமாகச் சேர்ந்து நடைபெறுகிறது.
நாடகத்தின் மூலம் மட்டுமே எடுத்துச் சொல்ல முடியாத கருத்துக்களை, நடனத்தின் மூலம் மட்டுமே எடுத்துச் சொல்ல முடியாத கருத்துக்களை, நாட்டிய நாடகத்தின் மூலம் சேர்த்துச் சொல்கின்றனர்,
நடனம் ஆடுவது என்றாலே, மிகச் சிரமம். அதற்கு ஆர்வமும், பயிற்சியும் உழைப்பும் தேவை. நாட்டிய நாடகத்தின் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்வது மட்டுமல்லால், தமிழகத்தின் பண்டைய பெருமையையும், இன்றுள்ளவர்கள் மறந்து விட்ட நமது முன்னோர்களின் கலைத் திறத்தையும், உலகுக்கு உணர்த்தும் வகையில் முயற்சி செய்ய வேண்டும்.
நம் நாட்டில் அஜந்தா ஒவியத்திற்கும், சித்தன்ன வாசல் ஒவியத்திற்கும் அழியாப் புகழுண்டு. இதைப் பின்னணியாக வைத்துக் கதை பின்னியிருப்பது தமிழ் நாட்டின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
கலைத் துறையில், தமிழ்நாடு மேலும் பல முன்னேற்றங்களைப் பெற்றுத் தமிழகத்தின் பெருமையைத் தரணி வியந்து பாராட்டத்தக்க அளவில், தமிழ் நாட்டின் வருங்காலம் இருக்க விழைகிறேன்.
வகைப்பாடு : கலை—நாட்டிய நாடகம்
(10-6-68-இல் சென்னையில் நடைபெற்ற யாழ் நங்கை நாட்டிய நாடகத்திற்குத் தலைமையேற்று ஆற்றிய உரை.)
- ↑ பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் அவர்கள் மகளார்
25. நாட்டின் மீன் வளம்
இந்தியப் பேரசின் உணவுத் துறை அமைச்சர் திரு. ஜகஜீவன்ராம் மீண்டும் தமிழகத்திற்கு வந்துள்ளது கண்டு நான் பெருமகிழ்வடைகிறேன். இங்குத் துவங்க இருக்கும் புதிய அமைப்பு, நமது நெடுநாளைய குறையைத் தீர்த்து வைக்கிறது.
நம் நாட்டில் ஏராளமான மீன் வளம் இருந்தும், அதனைத் தக்க முறையில் பயன்படுத்தவில்லை என்னுங் குறை இருந்து வருகிறது. மீன் வளத்தைப் பயன்படுத்த, இருக்கின்ற வசதிகளை விரிவுபடுத்தி விஞ்ஞானமுறையில் வளர்ச்சி காணவேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.
உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் நம் நாட்டுச் செல்வத்தைப் பெருக்குவதற்கும் ஜகஜீவன் ராம் மேற்கொண்ட முயற்சிகள் மிகப்பல. தமிழக அரசு அவரை அணுகிய நேரத்திலெல்லாம், அவர் ஆதரவான வாக்குறுதிகளை அளித்தார்.
தமிழகத்தில் ஓரளவு உணவு உற்பத்தி பெருகி நிலைமையை நாம் சமாளிக்க முடிந்ததென்றால், உழவர்களின் உழைப்பும் அதிகாரிகளின் அக்கறையும், அமைச்சர் ஜகஜீவன்ராம் தந்த ஒத்துழைப்பும் காட்டிய ஆர்வமும் மிகமுக்கியமான காரணங்களாகும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்ற ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் புதியமுறைகளை வேளாண்மைத் துறையில் புகுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டோம். அப்போது அவற்றைத் துவக்கிவைக்க, ஜகஜீவன்ராம் சென்ற ஆண்டு வந்தார். தஞ்சைத் தரணியில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். பச்சைப் பசேல் என்றிருக்கும் வயல்களையும் சூழ்ந்துள்ள தென்னஞ் சோலைகளையும் பார்த்தார். இவ்வளவு இருந்தும் பஞ்சம் இருக்கலாமா எனச்சிந்தித்தார்.
தகுந்த நேரத்தில் தகுந்த அளவு வசதி செய்திருந்தால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக மட்டுமன்றி, இந்தியாவின் நெற்களஞ்சியமாகவும் தஞ்சை விளங்கிடும் என்று அவரிடத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது. அவரும் உறுதுணையாக இருந்து, நமது நோக்கங்கள் நிறைவேறப் பேராதரவு தந்தார்.
இப்போது இங்கே 5 இலட்சம் செலவில் இந்த நிலையம் அமைக்கப்படுகிறது. இத்தகைய நிலையங்கள் நிரம்ப ஏற்பட வேண்டும். இது வரை, நம்மிடமுள்ள மீன் வளத்தில் 100-க்கு ஒரு பங்கைக் கூட நாம் பயன்படுத்தவில்லை.
நான் ஜப்பான் நாட்டிற்குச் சென்றிருந்த போது, “உங்கள் நாட்டுக் கடற்கரை அருகே கூட நாங்கள் மீன் பிடிக்க வருகிறோம்.” என்று அவர்கள் சொன்னார்கள்.
முப்புறமும் கடல், கடல் எல்லாம் அலை. அலையெல்லாம் எண்ணிய மீன் வளம் உள்ளது. இதைத் தக்க முறையில் பயன்படுத்தினால், உணவுப் பஞ்சத்தைத் தீர்க்க நாம் வழி காணலாம்.
வகைப்பாடு : உணவு—மீன்
(11-6-68-இல் சென்னை எண்ணூர் மீன் உறைய வைப்பு நிலையத் திறப்பு விழாத் தலைமை உரை<)
26. மீன் வருவாய் பெருகிட
மீன் வளத்தைப் பெருக்குவதில், நாம் புதிய கட்டத்தை அடைந்துள்ளோம். இத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் தேவை. கப்பலைச் செலுத்த, வானொலி, தொலைபேசி முதலிய கருவிகளை இயக்கத் தேர்ந்தவர்கள வேண்டும்.
பிற நாடுகளில் மீன்பிடிதொழிலில் ஈடுபடுகிறவர்கள் இலாபமடைகிறார்கள். நம்நாட்டில் இத்தொழில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஆனாலும், இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் வருமானமின்றித் தாழ்ந்து ஒதுக்கப்பட்டுச் சலிப்படிைந்து இருக்கிறார்கள்.
அவர்களுக்குக் கிடைக்கிற வருவாய் அதிகரித்து ஆதாயம் கிடைக்கச் செய்ய இந்திய அரசும் தமிழக அரசும் முன்வந்துள்ளன.
மீன் பிடிப்பதைப் பாதுகாக்கவும், எங்கே மீன் அதிகம் கிடைக்கும் என்பதைக் கண்டறியவும் தக்க கருவிகள் உள்ளன. இந்தக் கருவிகளை இயக்க இங்கே பயிற்சி அளிக்கப்படும்.
இந்த நிலையம் முழு அளவும் வடிவம் பெறும் போது, 60 இலட்சம் மூலதனம் கொண்டதாக இருக்கும். ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு டிராலர் என்னுங் கப்பல் தேவை. அந்தக் கப்பலை நிறுத்த மீன்பிடி துறைமுகங்கள் தேவை.
நிலவளம் போலவே கடல் வளமும் முக்கியமானது. நிலவளத்வைப் பெருக்குவது கடினமானது. கடல் விதைக்காமலே பயன்தருவது.
அதிலுங்கூட ஒன்றைக் கவனிக்கவேண்டும். 4 மைல் 5 மைல் தொலைவுக்குள்ளேயே மீன் பிடித்துவிட்டால், சிறிய மீன்கள் வெகுவாகப் பிடிக்கப்பட்டு வளர்ச்சி குறைந்து வருகிறது. இதற்கு ஆழ்கடலுக்குச் செல்ல டிராலர் தேவை. டிராலர் தருவிப்பதில், அந்நியச் செலவாணிக் கஷ்டம் குறுக்கிடுகிறது. அமைச்சர் ஜகஜீவன்ராம் கூட, நேற்று அந்நியச் செலவாணிச் சிக்கலைச் சமாளித்து 20 டிராலர்களைத் தருவிப்பதாகச் சொன்னார்கள். அதில், சென்னைக்குக் கணிசமான பங்கை ஒதுக்கித் தர வேண்டும்.
இந்தப் பயிற்சி நிலையத்திற்குத் தேவையான இடத்தைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மீதியுள்ள நிலத்தையும், தமிழக அரசு ஒதுக்கித் தரும். அதில் சில பேர் குடியிருப்பதால், ஒதுக்கித் தருவதில் தயக்கம் ஏற்படலாம். அந்தத் தயக்கத்தை அதிகம் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும். இப்படி ஒரு முக்கிய காரியத்திற்கு உதவவில்லை என்றால், நிலம் வேறு எதற்குத்தான் பயன்படப் போகிறது?
வகைப்பாடு : வாணிபம் தொழில்—மீன் பிடித்தல்
(11-6-68 அன்று சென்னையில் மைய அரசு மீன் பிடி பயிற்சி நிலையத் திறப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை)
27. ஜனநாயகப் பயிற்சிக் கூடங்கள்
ஆடவரும், பெண்டிரும், வாலிபர்களும், வயோதிகர்களும் செங்கற்பட்டு மாவட்டத் தலைநகராகக் காஞ்சிபுரம் ஆக்கப்படுகிற இந்த விழாவில் பங்கு கொண்டிருப்பது—இந்த முடிவு எந்த அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாக்கியுள்ளது. “ஒரு சர்க்கார் அலுவலகம் எங்கிருந்தால் என்ன? எங்கே மாற்றப்பட்டால் என்ன?” என்றில்லாமல் நாட்டு மக்கள் அக்கறை காட்டுவது நீண்டநாள் விருப்பம் நிறை வேறுகிறது என்பதற்கு அரிய எடுத்துக்காட்டு.
சொந்தக் கட்டிடத்தில் தலைமையகம் இன்று இல்லாமலிருந்தாலும் முறையே பொதுப்பணி அமைச்சரும், வருவாய்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சரும் கட்டிடம் எழும் என்னும் உறுதியை அளித்திருக்கிறார்கள். அலுவலக மாளிகை, எழில் மிக்க கட்டிடங்கள், அலுவலர் குடியிருப்புகளும் எழ இருக்கின்றன. காஞ்சி தலைநகர் ஆவதற்கு எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் அமைச்சர்கள் கருணாநிதியும், மதியழகனும் எடுத்துக் கூறினார்கள்.
இப்படிக் காஞ்சிபுரம் தலைநகர் ஆக்கப் படுவதை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. முன்னுள் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களும் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். முன்னுலிருந்தவர்கள் செய்ய நினைத்த நல்ல காரியங்களை நிறைவேற்றுவது எனது கடமை. முன்பிருந்தவர்கள் தேவையில்லை என்று விட்டு விட்டாலும், அது நன்மை தரத்தக்கதாயிருந்தால், அப்படிபட்ட நல்லவை நடைபெற ஒட்டாமல் குந்தகம் செய்யமாட்டேன் என்பதனை எடுத்துக்காட்ட இந்த தலைநகர் மாற்றம் செய்யப்படுகிறது என்பதை அவர்கள் அறியவேண்டும். இந்த விழாவை ஒட்டிய சிறப்புமலர் ஒ ன் றி ல் பக்தவத்சலம் “செங்கற்பட்டு மாவட்டத்தின் தலைநகரம் மாவட்டத்துக்கு வெளியிடத்தில் இருப்பது அவ்வளவாகத் திருப்தியளிக்கவில்லை” என்று எழுதியிருக்கிறார்.
மாவாட்டத் தலைநகராகக் காஞ்சிபுரம் ஆனாலும் வழக்கு மன்றத் தலைநகராகச் செங்கற்பட்டே விளங்கும் என்னுஞ் செய்தியை வழக்கறிஞர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு தலைநகரிலேயே எல்லா அதிகாரங்களும் குவியும் நிலை நீடிக்கக் கூடாது, அது ஏற்றதல்ல. சோழ மண்டலத்தின் தலைமை ஒரு காலத்தில் தொண்டை மண்டலம் இருந்தாலும் துறைமுகப் பட்டிணங்களாக மாமல்லபுரமும், சதுரங்கப் பட்டிணமும் விளங்கின. அது போலக் காஞ்சிபுரமும் தலைநகராக இருப்பினும், வழக்கு மன்றத் தலைநகராகச் செங்கற்பட்டு நீடிக்க வேண்டும். காஞ்சிபுரம் தலைநகர் ஆகவேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. என்னிச்சையாக இந்தக் காரியத்தைச் செய்துவிட்டேன் என்று யாரும் குறைசொல்லாமல் இருக்க, இந்தப் பந்தோபஸ்தைத் தேடிக்கொள்கிறேன்.
முன்பே கூறிஇருக்கிறேன் என்னிடமிருப்பதாகச் சொல்லப்படும் திறமைகளுக் கெல்லாம் காஞ்சிபுரம்தான் காரணம் என்று. குறைகள் ஏதாவது இருப்பின் இங்கே பிறந்தும் இப்படிப்பட்ட குறைகள் இருக்கிறதே என்று வருத்தப்பட வேண்டாம். காஞ்சிபுரம் தலைநகர் ஆவதால், மக்கள் பொறுப்பும் அதிகமாகிறது. இங்கே தொழில்வளம் பெருக, வாணிபம் கல்வி வசதி வளர அதிக வாய்ப்புகள் ஏற்படவேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் சென்னையில் இருந்ததால் காரியங்கள் தாமதமாக நடந்ததென்று மக்கள் கருதலாம். இனி அவர் காஞ்சிக்கே வந்திருப்பதால், வேண்டிய வளர்ச்சிகளை தேவைகளை, விரைவாகவும், விரிவாகவும் அறிந்து செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிற்றுார்களுக்கெல்லாம் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சியில் இன்று வறுமை தாண்டவமாடுகிறது. நோய்வாய்ப்பட்ட வன் முன்னால் உண்டவிருந்தை நினைப்பதுபோல, வறுமை வாய்ப்பட்டவர்கள் பழைய நினைப்பை நினைக்கத்தோன்றுகிறது. அப்படிபட்ட வறுமையை ஒட்டக் கைத்தறி நெசவாளர்களும் விவசாயிகளும் தங்கள் தங்கள் தொழில்களை நிலைநிறுத்திக்கொள்ள வளமான வாழ்வை அவர்களுக்குப் பெற்றுத் தர மாவட்ட ஆட்சித் தலைவரும் பிற அதிகாரிகளும் கடமை ஆற்றவேண்டும். மக்களுடன் பழகி குறைகளை அறிந்து அவற்றைத் தீர்க்கும் வகையில் சர்க்கார் அதிகாரிகள் பணியாற்றினால், மாநிலத்தில் ஆளுகின்ற சர்க்காருக்கும் சிறப்புவரும். கிராம மக்கள் வரும்போது, அவர்களே அன்புடன் வரவேற்றுக் காரியங்கள் செய்யக் கூடியதாக இருந்தால், வாக்களித்து இயலாததாக இருந்தால் இதமாக எடுத்துக் கூறி விளக்கி அனுப்பவேண்டும். தாமத நிலையைத் தவிர்த்திடும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டால் உண்மையான ஜனநாயகத்தின் பலனை மக்கள் அனுபவிக்க முடியும்.
ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும் ஜனநாயகத்தின் பயிற்சிக் கூடமாக ஆகவேண்டும். அப்போது தான் ஜனநாயகம் வளரும். பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் ஆப்ரகாம்லிங்கன், காந்தியடிகள், கென்னடி ஆகியோர் ஜனநாயகத்தைப் பற்றிக் கூறியதை மேற்கோள் காட்டி விடுவதால் மட்டும் ஜனநாயகம் வளர்ந்துவிடாது. ஒவ்வொரு சர்க்கார் துறை அதிகாரியும் ஜனநாயகத்தை வளர்க்கும் முறையில் பணியாற்ற வேண்டும். ஜனநாயகத்தை வளர்க்கும் துறையில் சர்க்கார் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செவ்வனே ஆற்றவேண்டும்.
சிங்காரச் சென்னையிலிருந்து, கடற்கரை காற்று வீசும் சென்னையிலிருந்து பதிவுபெறாத ஊழியர்களைக் கதகதப்பான இந்த இடத்திற்கு மாற்றியது பற்றிச் சிலர் கவலைப்படலாம். கடற்கரைகாற்று இங்கு இல்லை. ஒரு புறம் வேகவதியும் மறுபுறம் பாலாறும் இருக்கின்றன. அவற்றை நீரோட்டம் உள்ளதாக ஆக்கினால் சென்னையை விடக் குளிர்ந்த காற்றை இங்கே அனுபவிக்கலாம்.
வேகவதித்திட்டம் ஒன்று தீட்டப்பட்டு என்ன காரணத்தாலோ நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் அத்திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால்,கடல் காற்றை விட, நல்ல காற்றை உண்டு மகிழலாம். சென்னைக் கடற்கரைக் காற்றை, மன்னர்கள் உண்டதில்லை. வேகவதி, பாலாறு, ஆகியவற்றின் காற்றை மன்னர்கள் உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அரசு ஊழியர்களை அப்படிப்பட்ட இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறேன். அரசு ஊழியர்களிடையே கவலையைப் போக்கத் தக்க வகையில், வசதியுள்ள வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும் என்றும் உத்திரவிட்டிருக்கிறேன்.
வகைப்பாடு : அரசியல்—ஆட்சி
(6-7-68 அன்று காஞ்சித் தலைநகர் துவக்க விழாவில் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)
28. திறமைமிகு தமிழ் நாடு
காவல் படை
இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி ஐ. ஜி.அவர்கள் வந்தழைத்த பொழுது, இங்கு வந்து சில மணி நேரம் இருந்து செல்ல, என் உடல் நிலை[1] அனுமதிக்குமா என்று அஞ்சினேன். ஆனால், இங்கு வந்து இந்த நேர்த்தி மிக்க விளையாட்டுப் பந்தய நிகழ்ச்சிகளைக் கண்டதில், நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு வராமல் தவிர்ப்பதைக் காட்டிலும், இத்தகைய நிகழ்ச்சிகளில் சில மணி நேரங்கள் வந்திருந்து செல்வதால் உடல் நலம் பெறுவதாகவே நான் உணருகிறேன்.
விளையாட்டுப் பந்தய நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றோரையும் இவற்றில் பங்கேற்றோரையும் நான் பாராட்டுகிறேன். விளையாட்டுப் பந்தயங்களில் போலீஸ் படையினர் இத்தனை ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளது மிகுந்த மனநிறைவை அளிப்பதாக உள்ளது.
இந்நேரத்தில் நான் ஒரு கருத்தேற்றத்தைக் கூறலாமென்று நினைக்கிறேன். போலீஸ் படையினருக்கென்று ஏற்கனவே உள்ள விதிமுறைகளோடு மற்றோரு விதிமுறையைச் சேர்த்துக் கொள்ளுமாறு நான் ஐ. ஜி. அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அப்படிச் சேர்த்துப் போலீஸ் படையினரிடையே நாடகக் கலைப்போட்டி நடத்தி, அவர்களில் நடிப்பு – கலைத்தேர்ச்சி உள்ளவர்கள் எவெரெவர் என்று நாம் அறியலாம். போலீஸ் படையில் இந்தத் திறமை படைத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன.
எந்தச் சமுதாயத்திலிருந்து போலீஸ் படையினர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்களோ, அந்தச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கின்ற நிலைக்கண்ணாடிகளாக அப்படையினர் விளங்குவார்கள். அந்தச் சமுதாயத்திலிருந்து வெகுதூரம் அவர்கள் விலகி இருப்பதில்லை. போலீஸ்படை நன்றாக நேர்த்தியாகச் செயல்படுகிறது என்றால், அது சமுதாயத்தின் தன்மையைக் காட்டும். அதே போலப் போலீஸ் படையினர் எங்கேனும் செயலாற்றுவதில் தவறிழைத்தால், சமுதாயத்தில் நிலவும் குறை பாடுகளையே அவை காட்டுகின்றன.
தங்களால் உருவாக்கப்படாத பிரச்சனை களுக்குத் தீர்வு காண வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். முரண்பாடு ஏற்படுகிற இடங்களில் எல்லாம் அவர்கள் இருந்தாக வேண்டி இருக்கிறது. சகல விதத்திலும் சகிப்புத்தன்மையோடு அவர்கள் நடந்துகொள்ள வேண்டியுள்ளது. உள்ளக் கொந்தளிப்பு அடையாமல், பற்றற்ற அமைதியுடன் நடந்து கொள்ளவேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பெற்ற சிறந்த பயிற்சிக் கொப்பக் கடமை உணர்ச்சி மிக்கவர்களாக அவர்கள் நடந்து கொள்ளவேண்டியுள்ளது.
தமிழ் நாட்டுப் போலீஸ் படையினைக் குறித்து இம்மாநிலத்துக்கு வெளியே நான் சென்ற இடங் களில் வெகு உயர்வாகக் கூறக் கேட்டிருக்கிறேன். குறிப்பாகக் குற்றங்களுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதில் தமிழ்நாட்டுப் போலீசாருக்குள்ள ஆற்றலை அவர்கள் மெச்சியுரைத்திடக் கேட்டிருக்கிறேன்.
அண்மைக் காலத்தில் சென்னை மாநகரில் தொடர்ச்சியாக முகமூடிக் கொள்ளைகள் நடந்த போது, இம்மாநிலத்துக்கு வெளியே பலர் என்னைக் கேட்டனர். இவற்றை எப்படிச் சமாளிப்பார்கள் உங்கள் போலீஸ் படையினர் என்று என்னிடம் தங்கள் ஐயப்பாட்டைத் தெரிவித்தார்கள். அத் தகைய நேரத்தில் அந்தக் கொள்ளைகளின் பின்னால் இருந்த மர்மத்தைக் கண்டுபிடித்ததோடு இந்தியா, முழுவதும் சுற்றி அ8லந்த அந்தக் கொள்ளைக் கும்பலின் தலைமையகம் எது? கிளைகள் எங்கெங்கு இருக்கின்றன? என்பதை எல்லாம் தமிழ் நாட்டுப போலீசார் கண்டுபிடித்தனர். இது அவர்களது சாதனை மகுடத்திற்குக் கிடைத்த மற்றொரு முத்தாகும்.
சென்னை நகரில் தொடர் தீ விபத்துக்கள் நடைபெற்றபோது, கண் இமை மூடாது இராப் பகலாகத் தொண்டாற்றினர் நம் போலீஸ் படையினர். அவர்களும் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதால், ஏழை எளியோரது துயரத் துடிப்பை அவர்களும் அறிந்திருப்பவர்களே. அதனால்தான் அவர்களும் தீயணைப்புப் படையினரும் அத்தனைப் பாடுபட்டார்கள்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சனை பொறுத்துக் குறைகளைக் கூறிப் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவோர் இருக்கக்கூடும். ஆயினும், எவரும் போலீஸ் படையினரைக் குறை சொல்வதில்லை. படையின் தலைவர்களையே குறை சொல்கின்றனர். இவ்வகையிலும் தீவிரமாகச் செயல்பட்டு முதல் நிலையைப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.
ஜன நாயகமானது பல்வேறு பிரச்சினைகளைக் கிளறிவிடுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அவைகளில் ஒன்று, இந்தப் புதிய சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்துரைக்கும் அறிவுரையே சிறந்தது. நீங்கள் கூறுவதே நல்வழி என்று மக்கள் நம்பும்படிச் செய்ய வேண்டும்.
அது ஒரு கலை. அந்தக் கலையில் போலீஸ் படையினர் தங்களைப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். இது மிகக் கடினமானது. ஆனால், மிக அவசியமானது. அண்மைக் கால நிகழ்ச்சிகளில், இந்தக் கலையை நீங்கள் பயின்று விட்டீர்கள் என்னும் நம்பிக்கையே ஏற்பட்டுள்ளது. பெரிய மோதல்களைத் தவிர்த்திருக்கிறீர்கள். இந்த ஆற்றலை, இந்தப் போக்கை நீடித்துக் கடைப்பிடித்து வரும்படி உங்களை நான் வேண்டுகிறேன். கல்லூரி மாணவர்களானாலும் அல்லது வேறு பல துறைகளில் பணியாற்றியவர்களானாலும், அவர்களிடையேயும் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் இருப்பார்கள் அல்லவா?
தங்களில் ஓர் அங்கமாகவே போலீஸ் படையினர் இயங்குகிறார்கள் என்பதை மக்களும் உணர்ந்து, அவர்களை உயர்ந்த மதிப்பில் வைத்திருக்க வேண்டும். இந்த நிலை இருந்தால்தான். போலீசார் திறம்படச் செயலாற்றவும் மக்களின் ஒத்துழைப்பைப் பெறவும் முடியும்.
வகைப்பாடு : ஆட்சி—காவல் துறை
(7-12-68 அன்று சென்னையில் நடைபெற்ற மாநிலக் காவல் துறை விளையாட்டுப் பந்தய விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)
(முற்றும்)