புலவர் என்.வி. கலைமணி ஒரு தமிழறிஞர், கவிஞர் மற்றும் எழுத்தாளர். அவர் திராவிட இயக்கச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டவர். அவர் எழுதிய நூலே “அறிஞர் அண்ணா நினைவஞ்சலி”
இந்த நினைவஞ்சலி நூல், அறிஞர் அண்ணா அவர்களின் வாழ்வையும், பணியையும் பல கோணங்களில் போற்றுகிறது. அண்ணாவின் பேச்சுத் திறன், எழுத்தாற்றல், தொலைநோக்குப் பார்வை, ஜனநாயகப் பண்புகள், மற்றும் எதிரிகளையும் மதிக்கும் அவரது நற்பண்புகளை புகழ்ந்து பேசுகிறது.
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
புலவர். என்.வி. கலைமணி, எம்.ஏ.,
பதிப்புரை
பக்தியால் பரவசப்பட்டுப் பாடிய சைவ அடியார்களைப் போல, வைணவ ஆழ்வார்களைப் போல, புலவர் என்.வி. கலைமணி அவர்கள், தமிழ்த் தாயின் அமிழ்த மகன், அறிஞர் அண்ணா அவர்களைத் தமிழால் நினைவஞ்சலி செய்திருக்கின்றார்.
ஏதாவதொரு புதிய திருப்பத்தைத் தமிழ் பெற்றிருக்கின்றதா இந்த நூலில் என்பதை, எதிர்காலம்தான் பதில் கூறவேண்டும்.
செஞ்சொற் கவிநயம் கலந்த இந்த நூலின் உரைநடை, அதன் நடைச் சித்திரம், படிப்போர் உள்ளத்தையும் கேட்போர் நெஞ்சத்தையும் எளிதில் ஈர்க்கவல்லக் காந்தக் கல்லாகத் திகழ்கின்றதெனலாம்.
பேரறிஞர் அண்ணா அவர்களை, இயற்கைச் சக்திகளோடு ஒப்பிட்டு, அதனதன் பணிகளை அவருக்குள் ஆழ்த்தி, அடக்கி, இந்நூல் பேசுவதால், இதனைப் படிக்கின்ற தமிழன்பர்கள், புத்தம் பதிய ஓர் இலக்கியக் கொத்தின் புகழ் மணத்தை நுகர்பவர்களாகக் காட்சியளிப்பார்கள் என்பது திண்ணம்.
அறிவுலக அணியில் ஒரு சகலகலா வல்லமை படைத்தத் தலைவரைப் பற்றிய தத்துவ வித்தக விளக்கங்களோடு “நினைவஞ்சலி” அமைந்துள்ளது.
அதனால்தான், இந்த நூலுக்கு அணிந்துரை அளித்த ‘தினமணி கதிர்’ ஆசிரியராகப் பணியாற்றி, மறைந்த திரு.விந்தன் அவர்கள், மனம் திறந்து விருப்பு வெறுப்பின்றிப் பாராட்டி மகிழ்ந்துள்ளார்.
‘அறிஞர் அண்ணா நினைவஞ்சலி’ என்ற இந்த நூல் வள்ளலார் நூலகம் சார்பாக, வெளிவருகிறது.
இந்த நூலைத் தமிழுலகம் வரவேற்கும் என்று நம்புகிறோம்.
அன்புடன்
வா.அறிஞர் அண்ணா
கடல் விழுங்கிக் கபாடபுரத்தைக் கபளீகரம் செய்தது.
கவின் புகாரின் உடலை விழுங்கி, தென் மதுரை உயிரை மாய்த்து, அதனதன் வரலாற்றுப் புகழுக்குக் கல்லறை கட்டியது;
இந்த உலகத்தில் இன்று வரை, எண்ணற்ற எரிமலைகள், கடற்கோள்கள், பூகம்பங்கள் தோன்றின; மேதினியின் மேனியை ஆங்காங்கே திட்டுத் திட்டாக அழித்தன!
ஆனால், இந்த அவனிமட்டும் ஏன் முழுமையாக அழியவில்லை!
இந்த வினாவிற்கு எந்த ஞானியாலும், விஞ்ஞானியாலும், பகுத்தறிவாளனாலும், அறிவுலக மேதையாலும் இன்று வரை நேரிடையான பதிலைக் கூற முடியவில்லை!
மனித வாழ்வியல் இலக்கியத்திற்கு, இலக்கண வரம்பமைத்த திருவள்ளுவப் பெருமான் ஒருவர்தான், சரியான – நேரிடையான விடையை அளித்துள்ளார்.
“நெருதல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உண்டத்திவ் உலகு” என்றார்.
நேற்றிருந்தார், இன்று இல்லை. என்றாலும், நிலையாமை மிகுதியினை உடைய அவரது ஞானத்தை, அதனால் உருவாகும் புகழை, பெருமையை, இந்த உலகம் தாங்கிக் கொண்டிருக்கிறது என்றார்.
நாளை வரும் எதிர்காலத்திற்கு அந்த ஞானத்தை அறிவித்திட, அவற்றை நிலையாக நிறுத்திகொண்டு இந்த ஞாலம் இயங்குகின்றதாம், அதனால் உலகமும் பெருமையை அடைகிறதாம்! அழிந்து விட்டால் இந்தப் பெருமை, புகழ், உலகுக்கு ஏற்படாதல்லவா?
அதனால்தான் இந்த உலகம், அறிவுக்கொடைகளாக ஒவ்வொரு துறையிலும் ஞானிகளை உருவாக்குகின்றது என்பதற்கு, அறிஞர் அண்ணா அவர்கள் ஓர் எடுத்துக்காட்டாக – அவரது ஞானத்திற்கு, பண்புக்கு, தொண்டுக்கு, புகழுக்கு, நிலையாமை மிகுதியினை வென்று, அழியாத ஞான சக்தியாக நிற்கின்றார்.
“சாம்போது அண்ணா புகழ்பாடிச் சாகவேண்டும் – என்
சாம்பலும் அவர் புகழ் மணந்து வேக வேண்டும்”
என்பதே எனது எண்ணமாகும். அதன் சிறு அணுவே இந்த எனது ‘அறிஞர் அண்ணா நினைவஞ்சலி’ யாகும்.
என்.வி. கலைமணி
1. அண்ணா ஒரு காலம்!
அண்ணா, ஒரு காலமென்று மகுடம் சூட்டி விட்டேன்.
அந்த மகுடத்தில் பதிந்திருக்கும் மணிகளை, உங்கள் முன்னால் வைக்கின்றேன்.
ஒர் எல்லையற்ற மனிதனை, எல்லையற்றக் காலத்தோடு இணைக்கின்றேன்.
எனது இணைப்பைச் சரியாகச் செய்கின்றேனா என்று, என்னை நானே, எண்ணிப் பார்க்கின்றேன் – அஞ்சுகின்றேன்.
காலம் தோன்றியதுமில்லை. முடிந்ததுமில்லை.
அதன் சிறகுகளில், வினாடிகள் இறகுகளாக அமைந்திருக்கின்றன.
காலம் எங்கே தோன்றியது என்று, இடத்தையும் குறிப்பிட முடியவில்லை.
அது எப்பொழுது பிறந்தது என்று, முளையாகத் தன்னைக் எண்ணி கொள்கிறான்.
சக்தியுள்ளவன், காலத்தின் முதல் முளையாகத் தன்னை எண்ணி கொள்கிறான்.
சக்தியற்றவன், முளைத்து முடிந்தவனாக நினைத்துக் கொள்கிறான்.
சக்தியின் துவக்கத்திற்கும் முடிவுக்கும்; எந்தக் காலத்திலும் கட்டுப்படாதது ‘காலம்’.
தோன்றி முடிந்த அண்ணாவுக்குப் பண்புத் தொடராக பண்புத் தொகையாக அது எப்படி அமைகிறது?
இது எனது புலமையின் திறன் என்றே நினைத்து எழுதுகின்றேன்.
விதியின் விரிசலில் வைதிகத்தால் தவறி விழுந்தவன் நல்லகாலம் கெட்டகாலம் என்று, காலத்திற்கு எல்லை கட்டுகிறான்.
வாழ்க்கையைப் பகுத்தறிவின், நாத்திகக் கட்டுக் கோப்பில் வளர்த்துக் கொண்டவன், காலத்தை அறிஞரோடு இணைத்து – உலகத்தைக் கணக்கிடுகிறான்.
கிறித்துவை முன்வைத்துத் – தன்னை ஒளியூட்டிக் கொள்கிற காலமும் உண்டு.
புத்தனை விதையாக வைத்து, வளர்ந்து-விருட்சமான காலமும் உண்டு.
நபிகள் நாயகத்தை மூலமாக வைத்து – முளைத்தக் காலமும் உண்டு.
வள்ளுவப் பெருமானை வைத்து, வாழ்ந்து, வளர்ந்து-மென் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கின்ற காலமும் உண்டு.
விவேகம் விளைந்தவர்கள், மேற்குறிப்பிட்ட மேதைகளை விழுங்கிய காலத்தை, வாழ்த்தியதில்லை.
அப்படிப்பட்ட ஊழிப் பெருமக்களை விழுங்கிய அதே காலம் – அவர்களை எருவாக வைத்தே-எப்படி இன்றைய தினம் வரை வளர்ந்து கொண்டே வருகிறது?
தர்க்கரீதியான வினா இதுவென்றால், இதே கேள்வி அண்ணா விஷயத்திலும் எட்டிப் போய்விடவில்லை.
எழுதி முடித்த ஒரு கட்டுரையை, இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் படித்தால், அது பழையதாகத் தோன்றும்.
உண்மையில் அது பழையதன்று புதிய அறிவு வளர்ந்திருக்கிறது என்றே பொருள்.
ஆனால்; இயேசு புத்தர்-நபி.வள்ளுவர் இவர்களுடைய கருத்து, நாள்தோறும் புதிது புதிதாகத் தெரிவானேன்?
இந்த இடத்தில்தான், காலம்.இவ்வளவு நோஞ்சானாக இருக்கிறதே, என்ற கேள்வி எழுகிறது.
அந்தக் காலத்திற்குத் தீனியிட்டு வளர்க்க வேண்டிய பொறுப்பு, அறிஞர் பெருமக்களிடம் இருப்பதாகத் தெரிகிறது.
காலத்திற்குத் தேவையான உணவை-அறிஞர் அண்ணாவைப் போல் அளிப்பவர்கள் இனி இல்லை.
கட்சிக் காதல் அல்ல இது அறிவின் மீது நம்பிக்கை வைத்து, வாழ்க்கை நடத்துகின்றவன் செய்கின்ற சரியான விமர்சனம்.
அண்ணா பிறந்தது 1909ல்! அவர் அறிவு தோன்றியது எப்போது?
அண்ணா இறந்தது 1969ல்! அவர் நினைவு முடிவது எப்போது?
இந்த இரு வினாக்களுக்கும் இன்றைய தினமிருக்கும் வேதாந்திகளாலேயே பதில்கூற முடியவில்லை.
எனவே, அறிஞர் அண்ணாவைத் தாக்கி எழுதுகின்ற சித்தாந்திகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
எந்த விதையால், அண்ணா தன்னை மனிதத் தோட்டத்தின் நடுவில், நிழல் தரும் தருவாக, ஆக்கிக் கொண்டார்?
அந்த விதையை, முதன் முதலில் போட்டக் காலத்தை நான் கையெடுத்துக் கும்பிடுகின்றேன்.
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ரக விதையால் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.
கலை, ஓவியம், இசை, பேச்சு, எழுத்து, இவை அத்தனையும், மனிதத் தோட்டத்திற்கு நடுவில் விழுகின்ற விதைகளாகும்.
எழுத்தை நினைக்கும்போது ஓர் அறிஞனுடைய நினைவு வருகிறது.
பேச்சு, ஓவியம், இசை இவற்றை நினைக்கும்போது ஒவ்வொருவருடைய நினைவும் நமக்குத் தோன்றுகிறது.
ஞாபகம் என்பது காலத்தின் வேராகும். அன்னாவை நினைக்கும்போது எது நினைவிற்கு வருகிறது?
பேச்சா? எழுத்தா? நாடகமா? உரையாடலா? அன்பா? பண்பா? அரசியலா? அவரது அழகான தமிழா? அற்புதமான ஆங்கிலமா?
எல்லாத் துறையிலும் ஒரு மனிதனை நினைக்கிற நேரத்தில், நமக்கு இப்படி ஞாபகம் வருகிறதென்றால் இதற்கு பெயர்தான் என்ன?
சர்வ வல்லமையா?
சர்வ வல்லமை என்பது இறைவனுக்குத்தான் பொருந்தும் என்று, “எண்குண ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்களே என்று கேட்டால், முழு மனிதன் இறைவனை விட்டுக் குறையனாகவா பிறந்தான்?
இறைந்து இருப்பவன் இறைவனென்றால், எல்லா வல்லமையிலும் இறவாது இறைந்திருப்பவன் அறிஞன் என்று, வேதாகமம் கூறுகிறதே!
இந்த இடத்தில்தான், காலம் எப்படி அண்ணாவால் தன்னை, மகுடம் சூட்டிக் கொண்டிருக்கிறது என்றும்,
அண்ணாவும், காலத்தால் எப்படிக் கவனிக்கப்படுகிறார் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
செத்துப்போகும் -நினைவாற்றல், மனித சமுதாயத்திற்கு இருக்கும் வரையில் அவர் என்றும் வாழ்கின்றார்.
“கரைந்து வருகின்ற நிலவுக்கொரு கவிஞன்” என்று ஓர் அறிஞன் கூறுகிறான்.
கறையற்ற அறிஞனுக்குக் “காலம்” என்று, நான் பெயர் சூட்டுகிறேன்.
யாரையும் உற்பத்தி செய்து பாரின்மீது உலவ விட்டு; ‘நடத்து உன் நாடகத்தை’ என்று காலம் கூறுகிறது.
அதைக் கடவுள் பக்தன் அனாதி என்கிறான்.
‘இதற்காகவே பிறந்தேன்’ என்று அறுதியிட்டு உறுதியாக வாழ்ந்து வந்த அறிஞனை, காலகாலத்தின் சுழி-காலத்தின் வேகம் என்று, ஏன் கூறக்கூடாது?
பிறக்கப்போகும் கருவுக்குள், அறிஞர் அண்ணாவினுடைய நினைவு; கொப்பூழ் கொடி வழியாக, உணவோடு உணவாகச் செல்கிறதென்றால்,
இது, பத்து மாதத்தில் நடைபெறுகின்ற தெய்வீக விசித்திரம் என்பதன்றி, வேறென்னவென்று கூறுவது?
விதியென்பது, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றென்று வேதாந்தி கூறுகிறான்.
அவ்வப்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்புடையதை-மதி என்று சித்தாந்தி கூறுகிறான்.
மதிக்கும் விதிக்கும் பொதுவாக இருக்கின்ற காலம்; அண்ணாவை – இரு சாராருக்கும் அளிக்கிறது.
சிற்பியினிடம் கிடைத்த கல், உளியின் போராட்டத்தில் துவண்டும் – இளைத்தும், பிறகு உருவம் பெறுகிறது.
விதியின் இடது கைக்கும், மதியின் வலது கைக்கும் கிடைக்கப்பெற்ற அண்ணா, சிற்பியின் கல்பெறும் உருவம் போல வரலாற்றுக்குரிய மையப் புள்ளியாக மாறுகிறார்.
விதி விமர்சனம் செய்கிறது – மதியும் விளக்கம் கூறுகிறது.
முடிவில், அண்ணா – அண்ணாவாகவே இருக்கிறார்.
அவர் ஒரு காலமாக இருப்பதால்தான், குளிரில் பூத்துக் கோடையில் கருகாத, வாசனைப் பூண்டாக; மலராமல் இருக்கிறார்.
சரித்திரம் சடங்கு செய்து பூஜிக்கும் தெய்வீகமாக அண்ணா நிற்கிறார்.
தெய்வீகம் என்ற சொல்லை, நான் வைதிக நினைவோடு கையாளவில்லை.
உலக நெறியின் மூத்த முதல் தந்தையான வள்ளுவப் பெருமான் குறிப்பிட்ட, ‘மாறா இயற்கை’ என்ற பொருளிலே தான், கையாள்கிறேன்.
அறிஞர் அண்ணாவின் தலைமையால், நாடும் – மொழியும் உறக்கம் தெளிந்தன என்பதைக் கட்சிக்குப் பிறந்தவனைத் தவிர – தாய்மைக்குப் பிறந்தவன் ஒப்புக் கொள்கிறான்.
நாடும் – மொழியும், ஒரு சமுதாயத்தின் ஆத்மா என்று – மொழி நூல் வல்லுநர்கள் மொழிகிறார்கள்.
அதனை உறக்கம் தெளிவிக்க வேண்டியது அறிஞனுடைய சுபாவம் – என்றுகூடச் சொல்லாம்.
அப்படிப்பட்டவனைவிட, அண்ணா என்ன செய்தார் என்றால், ஈவு ~ இரக்கம் – கருணை – அருளை – தன்நெஞ்சில் பாத்திக்கட்டி வளர்த்தார்.
அதுமட்டுமல்ல, பொட்டல் காட்டிலே புதையலை எடுத்தார்.
குப்பை மேட்டைக் கோபுரமாக்கினார். சப்பைகளை சாம்சன் என்ற நிலைக்குக் கொண்டு வந்தார்.
அண்ணா எல்லாருடைய நரம்புகளிலும் ஓடும் சிவப்பு அணுக்களுக்காக நிற்கிறார்.
ஒரு மனிதனை சாவு விழுங்கும். அதைக் கண்டு சுற்றம் அழும் – சந்ததி தேம்பும்.
இறந்தது பிழைப்பதில்லை என்று தெரிந்த பிறகும், கண்கள் அழுகின்ற புத்தியை விடுவதில்லை.
மனித குணங்கள் சூழ்நிலையில் சாகும்போது – அண்ணா அழுதார்.
பாசத்திற்கும் அவருக்குமுள்ள பந்தம் – பாலுக்கும் அதன் வெள்ளைக்கும் உள்ள தொடர்பாகும் – அவ்வளவு நெருக்கம்.
கூடு கட்டத் தெரியாத குயிலுக்கு – காக்கையின் கூடு வாழ்விடத்தைத் தருகிறது.
நாடு ஆக்கத் தெரியாத தமிழனுக்கு – அண்ணாவின் நாக்கு; தென்னம் நரம்புகளைத் தேடித் தேடித் தந்தது.
அண்ணா இதயம், வானம் விரிவதற்கு முன்பே விரிந்திருக்க வேண்டும்.
ஏனென்றால்,
கொதிக்கும் கனலியையும்,
குளிரும் புனலியையும்,
உதிரும் விண்மீனையும்,
ஒழுகும் மேகத்தையும்,
சீறும் மின்னலையும்,
கீறும் இடியையும் தாங்கி,
‘எதையும் தாங்கும் இதயத்தை’ அவர் பெற்றிருந்தது அதனால்தானே.
ஏன் இதைக் குறிப்பிடுகிறேன், தெரியுமா?
பழம் விழுந்தவுடன் பிஞ்சு பூரிப்பதுபோல, சிலர் அண்ணா வீழ்ந்தவுடன் பூரிக்க ஆரம்பித்தார்கள்.
பாவம் அவர்கள்!
எந்தக் காம்பிலே இருந்து அண்ணா விழுந்தாரோ, அந்தக் காம்பிலே இருந்து அவர்களால் முளைக்க முடியவில்லை.
காலம் ஒன்றுதான்; எந்தக் காம்பிலே முளைக்கிறதோஅந்தக் காம்பிலே; இதுவரை முளைத்துக் கொண்டிருப்பதாகும்.
காலம்; தாயின் மார்ப்பைப் போல ஓர் அமுதக் குடம்.
முதல் பிள்ளை வளரும்வரை, அது உழைத்து, இரண்டாவது பிள்ளை வருகிறவரை, அது சுருங்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.
அண்ணா இருந்தார் என்பதற்கும் – இறந்தார் என்பதற்கும் – பலருக்கு வித்தியாசமே தெரியவில்லை.
இருந்தாரும் – இறந்தாரும் ஒன்றுபோலத் தெரிந்தாலும் – இருந்தார் என்றால், ஒரு காலத்தில் இருந்தவர் என்றும், இறந்தார் என்றால் – இப்போது இல்லாதவர் என்றும் பொருளாகும்.
இன்னும் நூறாண்டுகட்குப் பிறகு, இறந்தார் என்றாலும் – அப்போதும், இல்லாதவர் என்பதுதான் பொருளாகும்.
அப்படியானால், அண்ணா எல்லா ஊழிக் காலத்திற்கும் இருக்கிறார் என்றுதான் பொருளே தவிர, ஊழியைவிட்டே ஒதுங்கிவிட்டார் என்பதல்ல.
அண்ணா, ஒரு வியப்பான கலவை. அதைக் கலந்தவன் எங்கும் கலந்தவன்.
அவனை நோக்கி ஓடுகின்ற ஆத்மாக்கள் – அண்ணாவிடம் தங்கி, இளைப்பாறிவிட்டே செல்ல வேண்டும்.
காலத்தின் கட்டளை இது.
இதைக் கூற நீ யார்? என்று, என்னைக் கேட்டால்; அவர்கட்கு இதே ஓர் உவமை.
கண்ணுக்கு முன்னால் காட்சியிருக்கிறது.
கண்ணுக்கும் காட்சிக்கும் இடையே இருப்பது தூரம் மட்டுமல்ல – காற்றும் இருக்கிறது.
காற்றின் அனுமதியின்றிக் கண்ணொளி காட்சியைத் தீண்ட முடியாது
எனவே, காலத்தின் கட்டளைப்படி, அறிவை நோக்கி ஓடுபவன்; அண்ணாவிடம் இளைப்பாறவே வேண்டும்.
உருண்டு இரைச்சலிடும் அலையொத்த கடல் போன்றது – காலம்.
அதனுடைய இரைச்சலில்; அர்த்தமற்ற மொழிகளின் சஞ்சாரம்; கோடைக் காலத்தில் வைக்கப்பட்ட விருந்தைப் போல; விரைவில் ஜீரணமாகி விடுகிறது.
உண்மையிலேயே நொந்து – வறுமையின் வெடவெடப்பால்; கொடுமையின் குளிரால் – இறுகி; வெளியே வரும் வார்த்தைகள் – காலத்தின் தொண்டை வழியே சென்றாலும் ஜீரணமாக முடியவில்லை.
நொந்து போனவனுடைய சப்தம் – இரக்கமுடையவனுடைய இரைச்சல் – கருணை கொண்டவனுடைய விம்மல் – கதியற்றவனுடைய கூச்சல் –
அழுகையின் தினமான குரல்; மனித சமுதாயத்திற்காகக் கதறி அழுத குரல.
காலத்தால் அது விழுங்கப்படுவதில்லை.
காலத்திற்கே அது, கதை கூறும் அசரீரி.
நரகத்தோடு தொடர்பு கொண்டவன் – கோவிலில் படிக்கட்டாக மிதிக்கப்படுகிறான்.
மோட்சத்துக்கு முந்தானை போட்டவள் – என்றைக்கும் வாலிபக் கன்னியாகவே இருக்கிறாள்.
அவளைக் கிழவியாக்கும் சக்தி, காலத்திற்கு இல்லை. அண்ணா மோட்சத்திற்கு முந்தானை போட்ட கன்னி.
அவருடைய வாலிபத்தைக் காலம் காதலிக்கிறது.
கடவுளிடத்தில் தண்டனை பெற்றவன் – உண்மையான மனிதனாக மாறுகிறான்.
அரசாங்கத்திடம் தண்டனை பெற்றவன் – மீண்டும் கைதியாகவே வெளியே வருகிறான்.
அரசாங்கக் கைதியைப் பார்த்து; ஆண்டவன் கைதி – பூரணத்தை நோக்கி’ஓடிவா’ என்றழைக்கிறான்.
அரசாங்கக் கைதி; இறுதியில் கல்லறைக் கைதியாகவே மாறுகிறான்.
ஆண்டவன் கைதி; அவனுக்காகக் கண்ணிர் விடுகிறான்.
இந்தத் தத்துவ முப்பட்டை கண்ணாடி வழியில் தெறித்து விழுந்த வண்ணச் சிதறல், அண்ணாவில் புதைந்திருக்கின்ற ஆற்றொழுக்கான பண்புகளை; நமக்கு விளக்கிக் கொண்டிருக்கின்றன.
இப்போது; அவர் ஆண்டவன் கைதி, அரசாங்க கைதிகளுக்காக வருந்திக் கொண்டிருக்கிறார்.
காலத்தைப் பறக்கும் மீன் என்றுகூடக் கூறலாம்.
அது ஊழிக் கடலில் துள்ளியெழுந்து – அங்கேயே மறுபடியும் விழுகிறது.
நிலத்திற்கு அது வருவதில்லை.
அண்ணாவும் ஊழியில் தோன்றி அங்கேயே ஒடுங்கினார்.
நிலத்திற்கு இனி திரும்பவே மாட்டார்.
நான் என் உடைகளைக் களைந்து எறிந்துவிட்டேன்.
நான் இப்போது நிர்வாணி.
உடையில் குற்றமிருந்தால் என் பொறுப்பு.
நிர்வாணத்தில் குற்றமிருந்தால் நித்தியன் பொறுப்பு.
இது அண்ணாவின் கடைசி தத்துவ விளக்கம்.
அவர் போட்டிருந்த உலகச் சட்டையை, உரிந்து போட்டுவிட்டார்.
அவருக்காகப் பாடிவந்த பறவைகள், ஆளில்லாத காரணத்தால் – தத்தம் குஞ்சுகட்கே பாடுகின்றன.
அவருக்காகப் பூத்த மலர்; யாருடைய சட்டைக்கோ செல்கிறது.
அவர் போன பாதையில் மாரிக்கால இருட்டு தவழ்கிறது.
காலத்தின் மடியில் அவர்! ஏன், தானே – ஒரு காலமாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரைப் பிறப்பித்தவன் – அவரை இறப்பித்தான்,
அவரைச் சிறப்பித்தவன் – அவரைச் சிறை பிடித்தான்.
அவரை வரப்படுத்தியவன், மீண்டும் வரவேற்றுக் கொண்டான்.
அவரைக் கறைபடுத்தியவர்கள் – கரைந்து கொண்டே செல்கிறார்கள்.
ஆண்டுக்காண்டு நம்முடைய கண்கள், அவரை நினைத்துக் குடம் குடமாகக் கண்ணிரைக் கறந்தாலும்,
காலமாகிவிட்ட அண்ணா –
நெஞ்சில் நீங்காக் கோலமாகிவிட்ட அண்ணா –
மனிதர்க்கும் மனிதத்திற்கும் பாலமாகிவிட்ட அண்ணா
மனத்திற்கும் மனசாட்சிக்கும் சீலமாகிவிட்ட அண்ணா
ஒரு முடியாத கதை,
விடியாத இன்பம்,
நொடியாத வாழ்க்கை,
‘இந்த இதய எழுச்சி எழுத்துக்களின்’ மையப் புள்ளியே, காலத்தின் நீண்ட கரங்களால் செதுக்கப்பட்ட மனிதத் தேர், நல்ல வாழ்க்கை என்ற சுற்றுலா முடிந்த பிறகு,
மூல விக்ரகத்தின் முன்னால் நிற்கிறது என்றே பொருள்.
அண்ணா இறந்த காலமுமல்லர் – நிகழ்காலமுமல்லர் – எதிர்காலமுமல்லர்!
அழகிய காற்று, பொருள் புரியவில்லையா?
‘கால்’ என்றால் காற்று ‘அம்’ என்றால் அழகியது,
2. அண்ணா ஒரு நீர்வீழ்ச்சி!
நீங்கள் அவனைப் பார்த்தீரோ,
அவன் ஒரு நீர்வீழ்ச்சி,
அது ஒரு நீர்த்துளி,
தெய்வத்தின் ஈரத்தால் நெய்யப்பட்டது,
அதன் இழைகள், காலத்தை வெல்லும் பண்பாடுடையன,
நீர்வீழ்ச்சிக்கு மறுபெயர் அண்ணா.
அதோ அது; தாயகத்தின் மடிமீது விழுகிறது,
அதனுடைய சிதறலில், ஒளி போர் செய்கிறது!
இப்போது துளிகள் அத்தனையும் – வண்ணச் சொட்டுகள்,
நீருக்கு வேரில்லை! அது நகர்ந்து வந்த திக்கு, யாருக்கும் தெரியாது!
ஞானி, அதன் முடிவை சிந்திக்கிறான்!
அது மேலே இருக்கும்போது – பலத்தோடு வழிகிறது.
நில இதயத்தில் அது விழும்போது, பூ போல மென்மையாகிறது.
அதற்கு விரோதமாக எந்தப் பூக்களும் பூத்ததில்லை,
நீர்வீழ்ச்சி ஜீவராசிகளின் தாய்,
அது ஊறிய மண்ணில் எத்துணை குளுமை,
ஏழையின் கண்ணிலிருக்கின்ற இரக்கத்தையும் – தமிழ் மொழியிலிருக்கின்ற ஈரத்தையும் – நீர்வீழ்ச்சி; வென்று விடுகிறது,
பள்ளத்தாக்கில் அது விழுந்தாலும் – கடலுக்குக் குழந்தையாகி விடுகிறது,
கயவர்களும் அதைக் குடித்துத் தாகம் தீர்த்துக் கொண்டனர் – ஆனால், வென்றதில்லை.
மன ஊருக்குப் பக்கத்தில் – அது நீண்ட காலமாக விழுந்து கொண்டிருக்கிறது.
அது வற்றிவிடாதோ என்று, கோடைக்கால நெஞ்சங்கள் எதிர்ப்பார்த்தன.
அதுவா வற்றும்? எப்போது வானம் கண்ணைத் திறந்ததோ – அப்போதே அது மண்ணைத் தொட்டது.
தீர்த்தமென்று அதைத் தெய்வீகன் கூறுகிறான்.
திருத்தும் என்று பகுத்தறிவுவாதி கூறுகிறான்.
அறிவு மலையிலிருந்து விழுவது நீர்வீழ்ச்சி,
அதனுடைய இரைச்சல், எல்லா தேசத்தையும் செவிமடுக்கச் செய்தது.
வெட்கப்பட்ட நாடு வணங்கிக் கேட்டது.
ரோஷமற்றவன் காலைக் கழுவினான்.
அதோ அது; அவன் காலிலே நெருப்பாக இல்லை.
– நிலவாகக் குளிர்கிறது.
***
கர்வியை ஒரு நாள் -சந்தித்தது நீர்வீழ்ச்சி,
நீ, நீர்தானே என்று, கர்வி கேட்டான்.
ஆம், என்றது நீர்வீழ்ச்சி,
கீழே விழுத்தவுடன் சிதறுகின்ற உனக்கு – மனிதன் மரியாதை கொடுத்தது தப்பு: என்று கேட்டான்.
நீர்வீழ்ச்சி பேசுகிறது:
நான் விழுந்தாலும் சிதறுகிறேன் – ஆனால் பதறவில்லை.
எவ்வளவு சிதறினாலும் மறுபடியும் மண்ணிலேயே ஒட்டிக் கொள்கிறேன்.
மண்ணுக்கும் எனக்கும் நீங்காத தொடர்பு.
எனது தலை பாரமாக இல்லை – அதனால், எனக்கு எப்போதும் மண்டை உடைவதில்லை.
கர்வியும் என்னை நீர் என்று, மரியாதையோடுதான் கூறுகிறான்.
காரணம் தெரியுமா? அவன் பினத்தைக் கடைசியில் கழுவுகிறவன் நான்.
கேள்வி கேட்ட கர்விக்குத் தாகம் எடுத்தது.
குறிப்பால் உணர்ந்த நீர்வீழ்ச்சி, ‘என்னை’க் குடி என்றது.
அண்ணாவைக் குடித்தவன் தாகம் தணிக்கப்படுகிறான்.
அவனது களைப்பு தீர்க்கப்படுகிறது.
கரைகளற்ற நீர்வீழ்ச்சி கறைகளற்ற நீர்வீழ்ச்சி!
அது ஒரு நீர்த் தொங்கல்! தண்ணிர் விழுதுகள்! ஜலத்திரை!
விழும்போது அதற்கு அலைச் சுருக்கங்கள் இல்லை.
மனிதன் விழுந்தால்;எவ்வளவு சுருக்கங்கள் – முகத்தில்!
அதோ, நீர்வீழ்ச்சியின் பக்கம் – மந்தைகள் மேய்கின்றன,
அந்த சின்ன ஆட்டுக் குட்டிக்குக் கத்தக் கூடத் தெரியவில்லை.
பெரிய கடாவுக்கு அதனுடைய மழலை புரியவில்லை.
கத்தாதே என்று வளர்ந்த கடா கேட்கிறது.
ஜீவன் மழலைமொழி பேசும்போது, சப்தம் இப்படித்தான் வருமென்று நீர்வீழ்ச்சி சொல்கிறது.
இலக்கண அமைதியே இல்லையென்று கடா கேட்கிறது.
குழந்தை இலக்கியத்திற்கு என்னைப்போன்ற தாய்தான் இலக்கணம் – என்று நீர்விழ்ச்சி கூறுகிறது.
நீர்வீழ்ச்சியின் இந்த நேர்த்தியான உரையைக் கேட்ட முதல் கவிஞன் – வளரும் கவிஞனை வாழ்த்த ஆரம்பித்தான்.
அதோ முட்டையைப் பிளந்த பறவைப் பிஞ்சு ஒன்று, முதன் முதலாக நீர்வீழ்ச்சியைப் பார்க்கிறது.
அதன் மொழியில் தாயைப் பார்த்து; இது என்ன?’ என்று கேட்கிறது.
அது ஒரு பாய்: என்று தாய் சொல்கிறது.
பாயவில்லையே என்று குஞ்சு கேட்கிறது.
கீழே பாய்கிறது என்று கூறியது தாய்!
கீழே பாய்வது, ஏன் மேலே பாயவில்லை என்று கேட்டது குஞ்சு!
கீழே இருக்கும் போது பாயலாம்,
வளர்ந்து மேலே போகும் போது பாயக்கூடாது.
அன்பின் மடியில் விழவேண்டும்.
இதுதான் நீர்வீழ்ச்சியின் இலக்கணம் என்றது தாய்.
அண்ணாவும் அப்படித்தான்! பெரியாரோடு இருக்கும் போது சிங்கமெனப் பாய்ந்தார்.
வளர்ந்து அவர் மேலே போனபோது, எல்லாருடைய மடியிலும் வீழ்ந்தார்.
நீர்வீழ்ச்சிக்கு நடுவிலே புகுந்தாலென்ன என்று கேட்டது குஞ்சு.
‘மரணம் உன்னை விழுங்கும் ‘ என்றது தாய்.
அண்ணாவின் பேச்சு வீழ்ச்சிக்கு நடுவில் புகுந்தவர்கள் – மரணம்பட்ட வாய்போல மூடிக்கிடந்தார்கள்.
நீர்வீழ்ச்சியின் தண்ணீரை; என் அலகில் – கொஞ்சம் தானே எடுக்க முடிகிறது; என்றது குஞ்சு.
அதையே உன்னால் ஜீரணம் செய்ய முடியுமா? என்றது தாய். மொத்தத்தையும் குடித்தால்தான் ஜீரணம் செய்ததாகப் பொருளா?
கொஞ்சம் குடித்தால் போதாதா என்றது குஞ்சு, அண்ணாவைக் கொஞ்சம் குடித்தவன் – அதிகம் குடித்தவனாக நினைக்கிறான்.
அதிகம் குடிக்க நினைத்தவன் – குடிக்காமலேயே வியந்து நின்றான்.
நீர்வீழ்ச்சி எங்கே இருந்து வருகிறது அம்மா; என்று குஞ்சு கேட்டது.
தெய்வத்தின் கையில் அன்பு என்ற செம்பு இருக்கிறது, அந்த செம்புக்குள் எட்டு குணங்கள் சேர்ந்த பரிமளங்கள் இருக்கின்றன.
தெய்வம் குழந்தையாக இருக்கும்போது, செம்பைப் போட்டு உடைத்தது.
உள்ளே இருந்த பரிமளங்கள் வழிந்தனவே, அவைதான் நீர்வீழ்ச்சி!
அப்படியானால், அந்தத் தெய்வத்தை எங்கே காணலாம்?
அன்பகத்திலும் அறிவகத்திலும் அதைப் பார்க்கலாம்.
நீர்வீழ்ச்சியை எப்போதாவது நீ பார்த்திருக்கிறாயா? என்று குஞ்சு கேட்டது.
கண்மூடிக் கடைசியாகப் போகும் போது நான் அதைப பார்த்தேன் – என்றது தாய்.
விழி திறந்து அது உலா வரும் போது பார்க்கவில்லையா? என்றது குஞ்சு.
அதன் பேச்சிலே மயங்கியதால், நான் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை, பார்க்கவில்லை என்றது தாய்.
கரடு முரடான பாறை, வழவழப்பான பிறகு நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கேட்டது.
நீர்வீழ்ச்சியே, எப்படி என்னை வழவழப்பாக ஆக்கினாய்?
முரட்டுத்தனத்தை மிருதுவாக்குவாதும், மீறி வருவதைத் தாக்காமல் தாவுவதும் – எனது வழக்கம் என்றது.
அறிஞர் அண்ணாவும் அரசியலில் முரடர்களை மிருதுவாக்கி, வழவழப்பாக்கிப் பக்குவப்படுத்தினார்.
குறுக்கே வந்த தடைகளைத் தாவிக் குதித்தார்!
நீர்வீழ்ச்சி இப்போது ஆழமான இடத்தில் விழுந்ததால் – தண்ணீர்ப் பூவை அங்கே மலர வைத்தது.
எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கின்ற நீர்ப்பள்ளம் – அங்கே ஆடிச் சிரிக்கும் மேடு தெறிக்கும். இது உண்மை!
அண்ணா மிகவும் ஆழமானவர் அதனால் சிரித்தார்:
வண்ணக் கதிர்களை – எண்ணச் சிதறல்கள் என்பார்கள்!
இப்போது வண்ணக் கதிர்கள் நீர்த்துளிகளின் நெருக்கத்தில் பாய்கின்றன.
நீர்த்துளி பறக்க ஆரம்பிக்கிறது.
நுணுகியச் சிதறல்கள், அருகிலிருக்கும் புற்கள் மீது படிகின்றன.
அத்தனையும் வைரத் தூசுகள்!
அவை தண்ணீர்ப் பிஞ்சுகள்!
பிஞ்சு, தாய் வீழ்ச்சியைப் பார்த்துச் சிரிக்கிறது!
ஓய்வெடுக்கவா சென்று விட்டாய்? என்று நீர்வீழ்ச்சி கேட்கிறது.
வண்ணப்பற்களைக் காட்டித் தண்ணீர்ப் பிஞ்சு தலையாட்டுகிறது!
பிரவாகத்தில் கலந்துவிடு – இல்லையென்றால்; உனது சிறிய உடலை எறும்பு கூடச் சிதைத்து விடும் – என்றது நீர்வீழ்ச்சி!
அண்ணா கூடத் தம்பிகளை-அறிவுப் பிரவாகத்தில் கலக்கச் சொன்னார்.
கிடைத்த ஒளியில் பிரகாசிப்பதைவிட – கிடைக்கப் போகும் ஒளிக்காக வாழ்க்கையை அமைப்பதே; அண்ணாவின் கொள்கை.
விழுந்து விட்டோமே என்று; நீர்வீழ்ச்சி, மலையுச்சியைப் பார்க்கிறது.
நீ, இன்னும் விழுந்து விடவில்லை! வழிந்து கொண்டிருக்கிறாய் – என்று; உச்சி உரைத்தது:
நான் அவ்வளவு நெடியவனா? நீர்வீழ்ச்சி கேட்கிறது!
இறவாது வடிபவன் நீ; என்று உச்சி கூறியது
என்னுடைய முடிவு எப்போது? நீர்வீழ்ச்சி கேட்கிறது!
உன்னுடைய தொடக்கமே எனக்குத் தெரியாதே – மலையுச்சி சொல்லிற்று.
தொடங்கியது முடியத்தானே வேண்டும்! நீர்வீழ்ச்சி கேட்கிறது.
எது முடிகிறதோ அது தொடங்கும் என்றது உச்சி!
ஆகவே, நீ முடியவில்லை – உனக்குத் தொடக்கமில்லை.
அப்படியானால் நான் யார்? நீர்வீழ்ச்சி கேட்டது.
அருள் முளைக்கும் வேருக்கும் ஆணிவேர் நீ!
பொருள்புரிய வைக்கின்ற புதியதோர் தத்துவம் நீ!
ஒளியிருந்த முட்டைக்குள்,
உருவாகி நின்ற கருவுக்குள்
நித்தியத் தீனியாகி,
நிர்மல வெளியாகி,
நின்ற சக்திக்கு
நீ தானே முதல்வித்து!
புரியவில்லையே! கேட்டது நீர்வீழ்ச்சி!
நிமிர்ந்த பொருளிலெல்லாம் நீயாகி இருக்கின்றாய்.
நின்ற பொருளுக்கும் நீயாகி நிற்கின்றாய்!
நிற்காத பொருளுக்கும் நீ ஆகி நிற்கின்றாய்.
உன்னைப் படைத்தவன் நீ! உன்னில் இருப்பவன் நீ!
புரியவில்லையே! மீண்டும் நீர்வீழ்ச்சி கேட்டது.
இன்னுமா புரியவில்லை!
அறிவு ஒரு குளுமையான அந்தி!
இரவுக்கும் – பகலுக்கும் இடையிலே இருக்கின்ற குழந்தை அது!
அந்தியைப் போல, குளிர்கின்ற அறிவு நீ! ஒளியில் அந்தி!
ஒலியில் யாழ்!
காற்றில் தென்றல்!
ஆகாயத்தில் அண்டம்!
நெருப்பில் இளஞ் சூடு!
நிலத்தில் மருதம்:
நீரில் நீர்வீழ்ச்சி!
சந்தேகம் தீர்ந்ததா?
மலை கூறி முடித்தது!
அதோ நீர்வீழ்ச்சி!
எல்லையற்ற கடலை நோக்கிக் கலந்தது!
கடல் தன் உப்புக் கண்ணிரால் – அதனை; ஏந்திக் கொண்டது.
நீர்வீழ்ச்சி தொடங்கியது தெரியாமல் தவிக்கின்றேன்!
அது முடிந்ததையும் தெரியாமல் முடிக்கின்றேன்.
***
3. அண்ணா ஒரு வானவில்
நீலவான் நிர்மலமாக இருந்தது! முகிற் கூட்டங்கள் திடீரென்று அதை மூடிக்கொண்டன!
மின்னல் கீற்றுகள் மேகத்தின் முதுகில் வரி வரியாகச் சூடுகள் போட்டன!
மேகங்கள் துடித்து அலறின! கண்ணீர்த் துளிகளை உகுத்து உகுத்து; அவை கருத்து விட்டன!
நடுவானத்திலே நடைபெறும் – இந்த ரணகளப் போரைக் கண்டு, சூரியன் அச்சப்பட்டது!
ஒருவனை மற்றொருவன் உலகத்தில் அடித்துக் கொண்டு சாவதைச் சுயநலவாதி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல; அருணனும் இதை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.
மனிதக் கூட்டத்தினிடையே நடந்தது கொண்டிருக்கும் சண்டையில் – நான்கு பேர் புகுந்து அமைதியை நிலைநாட்டுவதைப் போல – மழையும்; ஒரு கணம் அமைதியை நிலை நாட்டியது!
மழைத் தோளால் நெய்யப்பட்ட பனித்திரையைக் கதிரவனுடைய கூரீட்டிகள் ஊடுருவின!
அதன் விளைவு, வானவில் வண்ணங்காட்டி மேற்கில் சிரித்தது!
போருக்குப் பின்னே எழும் அமைதி போல; வான மண்டலப் போருக்குப் பின், வில் மட்டும்தான் தனியே நின்றது!
பயங்கரக் காட்டிலே வழி தவறி வந்துவிட்ட குழந்தை எவற்றைப் பார்த்தாலும் தனது பிஞ்சு விழிகளை உருட்டி உருட்டிப் பார்த்து மிரள்வதைப் போல, வானவில்லும் நீண்ட நெடு வானத்திலே காட்சியளித்து, உலகைக் கண்டு மிரண்டு நின்றது!
பசுமையான செடிகொடிகளையும், இதழ் விரித்த பூக்களின் அழகையும் பார்த்துச் சிரிக்கும் கள்ளங் கபடமற்ற குழவியைப் போல; வானவில்லும் உலகிலே நடைபெறும் மக்கட் கூட்டத்தின் திருவிளையாடல்களைக் கண்டு; தனது வண்ணத்தைக் காட்டிச் சிரித்தது!
அந்த வில் அமைதிக்காக வளைந்ததா? மற்றொரு அம்பைக் காற்றிலே மிதக்கவிட வளைந்ததா?
வினாக் குறியாக வில் விளங்கியது. இருப்பினும்; வானவில் வானவில்தானே!
மனிதன் மழலையினின்று வளர்ந்தவனன்றோ குழவி புத்தி, வாலிபத்தில் வடிவம் காட்டுவதும் இயல்புதான்!
வானவில்லைக் கண்டேன்! கைகொட்டி நகைக்கும் சிறுபிள்ளையானேன்!
எனது எண்ணங்கட்கு இறக்கைகள் முளைத்தன!
வானவில்லின் விளிம்புகளில் நின்றவாறே உலாவர ஆரம்பித்தேன்!
என்னுடைய ஒருமுனை வழியாக ஏறினேன்! அதன் உச்சியை அடைந்தேன்!
என்னுடைய எண்ணங்கள் எதையோ ஒன்றை அறிவதைப் போல எண்ணித் துடித்தன!
ஏதோ ஒன்றை நான் பெறுவதும், அதை இழக்கத் தயாராக இல்லாததும் போன்ற உள்ளுணர்வு எனக்கு ஏற்பட்டது!
தன்னம்பிக்கையை நான் தழுவிக் கொண்டேன். சோர்வோ – தளர்வோ என்னை நாட அச்சப்பட்டன!
வானவில்லின் விளிம்புகளில் நின்றவாறே, நான் வையத்தை நோக்கினேன்!
நான் உயரமானவன்! மிகமிக உயரமானவன்! உலகத்தை விட உயர்ந்தவன் – என்ற தற்பெருமை கொண்டேன்!
பூமியின் கரடுமுரடான முகத்தை கண்டேன், கிண்டல் செய்தேன்!
இவ்வாறு ஒரு நொடியில் நான் நினைத்தேன்! ஆனால் மறுநொடியில் …!
வில் உடைந்தது! எந்தப் பூமியை நான் ஏளனம் செய்தேனோ, அதே பூமியிடம் நான் சரணாகதியடைந்தேன்
தலை குப்புற வீழ்ந்தேன்! கீழிருந்தவாறே வானை நோக்கினேன்!
வெற்றி பெற்றவனிடம், தோற்றவன் தனது தோல்வியை மறந்து; எரிச்சலால் ஏசுவதைப் போல, நானும் வானை ஏசினேன்!
என்னைச் சூழ்ந்து நின்றவர்கள், எனது அறியாமையைக் கண்டு இரங்கினார்கள்.
நான் மட்டும் என் குற்றத்தை மறந்தேன்.
ஆனாலும், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற குறள் – எனக்கு மீண்டும் புதுவலிவை ஊட்டியது!
ஏறிய தகுதி இறங்கிய பிறகு – ஒருவன் மனம் போனவாறு பேசுவது – மனித இயற்கை என்பதை; ஒருவாறு உணர்ந்தேன்.
வானவில்லை; மீண்டும் நான் அடைய முடியாதுதான். அதனால் – அதன் பெருமையை உணர்ந்தபடியே சிந்தித்தேன்!
தத்துவங்கள் பலவற்றைக் கொண்ட வானவில், என் அறிவின் தலைவனுக்கு ஈடாகுமோ என்று எண்ணினேன்!
என் எண்ணத்திற்கு வந்த கருத்து அலைகளிடையே நான் சிக்கித் தத்தளித்தேன்.
அவா ஒரு கானல் நீர்!
மாயம்!
நிலையற்றது!
தேவையில்லாதது!
கூடாதது!
நினைத்தாலே பாபமானது!
“உயரே போன ஒருவன்; என்றாவதோர் நாள் – கீழே இறங்கத்தானே வேண்டும்!”
“கீழே இறங்குபவன்; மேலே ஏன் ஏற வேண்டும்?”
“வானவில்லே அப்படித்தான்! நம்பக் கூடாது – அதை! நம்பி நலிந்தவர்களிலே நானும் ஒருவன்!”
தலைகீழாக விழுந்து அடிபட்ட பிறகு, நான் கொடுத்த தத்துவங்கள் அவை.
அவ்வாறெனில்; எனக்கு மட்டும் அவாவென்பதே அறவேயிலையோ?
ஆசை வெட்கமறியாதது; கவலை நேரத்தில் தலை காட்டாதது.
இன்பம் வருகிற நேரத்தில் – இரவுக்கும் பகலுக்கும்; வித்தியாசம் தெரியாதது.
இது வேறு விஷயம்தான் இருப்பினும், இப்போது நான் இவ்விஷயத்தில் துறவி.
இதயக் குமுறலை இவ்வாறு இயம்பி முடித்தேன்!
ஊதா மலர்!
தூரத்தில் ஊதாமலர் ஒன்று ‘களுக்’கென்று என்னைப் பார்த்துச் சிரித்தது.
நகை வந்த திக்கை நோக்கினேன்
மனிதனில்லை அங்கே மலர் இருந்தது. மலரே! நகைத்தது நீயா? என்றேன்.
ஆம்! என்றது அந்த மலர். எதற்காகச் சிரித்தாய்? கேட்டேன்.
‘இங்கே வா’ என்றது; அந்த ஊதா மலர்.
நிலையிழந்த மனிதா! இயற்கைக்கு வாயில்லை பேச. ஆனால், அந்த இயற்கையை மாயமெனக் கூறுகிறாயே.
உன் நினைவுகளுக்குப் பதிலளிக்காததால், அவ்வாறு கூறுகிறாயா? இதை இயம்ப எத்தனை ஏடுகளைப் படித்தாய்?
அவாவின் சிறகுகள் அளவிலாத் தொலைவுவரை சிறகடித்துச் சேர்ந்து தொங்கும்போது, அவனியே மாயம் என்கிறாய்.
வானை நோக்கிக் கையேந்தி நிற்குமாறு உன்னைக் கூறியது யார்?
வானம் வழங்காவிட்டால்; அதை மாயமென்று உன்னைச் சொல்லச் சொன்னது யார்?
இட்டதைப் பெரிதென்பான் மனிதன்! இடாததை இழிவென்பான்? அஃது உனக்கும் உரிய நியதியோ!
சிறிது நேரத்திற்கு முன்பு வானவில்லை மாயம் என்று சீறினாயல்லவா?
வானவில்லில் இருக்கின்ற வண்ணங்களிலே ஒரு நிறம் நான்.
என் ஊதா மேனியைப் பார்! நான் மாயையா? தொட்டுப் பார்த்துக் கூறு.
அவாவைப் பற்றிக் கதைகளை அளந்தவனே, ஒழித்தாயா நீ – அவாவை?
அவாவை அழித்தான் சித்தார்த்தன். அவன் ‘புத்த”னான கதை தெரியுமா உனக்கு?
காலையில் ஒருநாள்; கபிலவாஸ்துச் சோலையிலே; அவன் மன்னனாக இருந்தபோது வந்தான்.
மாலையிலே நான் காம்பொடிந்து செடிக்குக் கீழே விழுந்து கிடந்தேன்.
கண்டான் காவலன்! மருண்டான் எனைப் பார்த்து. சிந்தனை வளையம் சுழன்றது அவனுக்கு.
வாடிய மலருக்கு வாழ்வென்பது எது? வதங்குமா மலர்?
சிந்தித்தான் சித்தார்த்தன். முடிவு காண முனைந்தான்.
‘போதி’யின் கீழே அமர்ந்தான். ‘புத்தொளி’ பிறந்தது. ஞானம் படர்ந்தது.
ஆசையின் அழுக்கு – இழுக்குகள்; அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தன.
சித்தார்த்தன் புத்தனானான்!
நான் மலர்! உயிரில் மிகச் சிறிய உயிர்!
கபிலவாஸ்துவின் காவல்னெங்கே? கருகிய மலரான நானெங்கே?
முடிவென்ன தெரியுமா? ஒரு மலர் மன்னன் மனதையே மாற்றிவிட்டது.
மாயை, மனதை மாற்றுமா? தெளிவைக் கொடுக்குமா? சித்தார்த்தனிடம் செல்வானேன்.
தென்னகத்தின் பேரறிஞரைக் கவனி. அமைதிக்கு அடைக்கலம் தந்து – அரசியலுக்குப் புத்துருவம் அளித்தவர்.
பொன்னாகப் பொதுவாழ்வைப் பொலிவுபடுத்தியவர்:
தன்னகத்தே கொண்டிருக்கிறார்; தன்னாலாக்கப்பட்ட எழிற்கொள்கைகளை.
அறிஞர் அண்ணாவின் தம்பிகளிடையே சென்று, உனது அண்ணன் ஒரு மாயை என்று அறைந்து பார்.
அறிவு வாதத்தில் அடியற்ற மரம் போல நீ வீழ்கிறாயா இல்லையா என்று பார்; என்றது அந்த ஊதா மலர்.
ஊரறிய உரைத்த ஊதா மலரின் தத்துவச் சிந்தனைகளை; தூர இருந்து மற்றொரு மலர் உற்றுக் கேட்டது.
செந்தூர மலர்தான் அது. விடுமா அவனை? ‘என்னே தம்பி’ என்று பேசிடத் துவங்கியது.
ஊதா மலரைக் கண்டு – செந்தார மலர் – விலா நோகச் சிரித்தது! என்னே! தம்பி, “உலகே மாயம்! ஊதாவின் உரை கேட்டே இவ்வாறு ஒடிந்து விட்டாயே!”
நான் நவிலவிருக்கின்றவற்றைக் கேட்டால் என்னாவாய்,என்று அது நயமுடன் இடித்துரைத்தது!
செந்தூர மலர்!
சிரித்துக் கொண்டே செந்தூர மலர் தன் சிந்தனை வளையத்தைச் சுழல விட்டது!
முத்துக்கடல் தொட்டு மிளிரும் தொடு வானம்!
அதில் செக்கச் செவேலென்ற செந்தூர வடிவம்!
அப்போது திக்கை வெளுப்பாக்கத் தோன்றுகின்றக் கதிரவனைக் காணும் போது, அவ் வடிவத்தால் ஊற்றி மெழுகியிருக்கும் என் பெயர் தான் செந்தூர வண்ணம்.
அருணனை மாயமென்றறையும் நீ, அண்ணாவின் புறப்படையின் முன்பு உதயசூரியனை மாயை என்று உரைப்பாயோ!
இஃதே போல இனியும் வெளியே இயம்பாதே; என்று செந்துர மலர் செப்பக் கேட்டேன்!
என்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வர, நான்பட்ட பாடு எனக்கன்றோ தெரியும்!
<> <> <>
நீலக் குவளை மலர்!
ஓடை ஓரத்தில் ஓங்காரச் சிரிப்பொலியை; நொடியில் நான் கேட்டேன்!
மலர் சிரிப்பா இது! என்று வியப்பால் நிமிர்ந்து பார்த்தேன்!
மேடைப் பூங்காற்று மோதியந்த மலர் மீது; தாதை உலுக்கி விட்டுத் தாண்டிச் சென்றது.
அம் மலருக்குப் பெயர் அழகுத் தமிழ்ப்பாவை வந்து கொஞ்சுகின்ற நீலக்குவளை!
அழைத்தாயா குவளையே? என்று நான் அருகில் சென்றேன்!
எட்டாத தொலைவிலிருக்கும் இந்த வானத்தின்கண் ஒளிரும் நிறம் கருநீலம்.
ஆழ்கடலின் நிறமும் அதுவே!
வானத்தை மாயமெனில், வாரியினை மாயமெனில் ஞாலத்தில் எது உண்மை; நவில்வீர்!
கருநீலம் உள்ளதெல்லாம் கண்ணுக்குத் தெரிந்தாலும்: தொட்டுப் பார்த்தவரோ தொல்லுலகில் யாருமில்லை!
விசும்பை அளந்தறியோம்! ஆழியை அளந்தறியோம்!
அளவுக் கடங்காது! அள்ளவள்ளக் குறையாது!
களவதனை எவரும் செய்யார்! இந்தக் காட்சிக்குக் கருப்பொருளாய் வந்த கரு நீலம்; ஆழத்தின் இலக்கணமாகும்!
சிரம் பழுத்த தென்னாட்டுப் பேரறிஞன் அறிவாழத்தை; மரம் மட்டைகள் கணக்கிட்டு அறிந்திடுமோ!
உரமுள்ளோர் எத்தனை பேர் – அவரை நெருங்கினார்!
நின்றெரியும் அவரின் அறிவை உண்டு எத்தனையோ பேர் ஊர் போனார் என்று உனக்குத் தெரியாது?
கத்தும் கடல் குடித்தான் குறுமுனிவன் கன்னித் தமிழ் குடித்தார் – இந்தப் பேரறிஞர்!
குறள் படித்த இந்த மூதறிஞன் விரல்; தொட்ட இடமெல்லாம் இலக்கியத்தின் விளக்கங்கள்!
அன்னோன் அறிவாழம் கண்டார் – யார்?
ஆழத்தின் நிறங்கண்டார், மவுனத்தில் தான் ஆழ்ந்தார்!
அன்னவரை நோக்கி ஓடிவிட்ட எதிரியின் உயிரெல்லாம்;
மீண்டும் திரும்பாமல்
‘மீளவழி தேறாமல்,
பூண்ட அன்புச் சிறைக்குள்ளே
பூட்டப்பட்டிருக்கும் வரலாற்றைக் கண்டாயா?
இத்துணையும் அறியாத நீ. கருநீலம் மாயை என்றால், கை கொட்டி நகையாதோ தரணி!
அறிவை மாயம் என்போன் – ‘அது’ இலான் தம்பி ; அது இலான்!
ஆழத்தின் நிறங்காட்டும் கருநீலம் மாயமில்லை என்பதை நீ உணர்ந்து, உன்னைத் தெளிவாக்கி நட என்று கூறி முடித்தது குவளை மலர்.
பைங் கூழ்!
இச்சித்தப் பொருள் யாவும் எட்டிச் சென்று விட்டதால் அவற்றை மாயை என்கிறான் மானிடன்!
பச்சைப் பைங்கூழ்கள் பார்த்த பின் கூட, இச் சரக்கை எப்படித்தான் நீ அவிழ்த்தாய்? இவ்வாறு வினாவெழுப்பிக் கிண்டல் குறும்பவிழ்த்து நகைத்தது நல்கூழ்!
இக்கரைக்கு அக்கரைப் பச்சையென்று, அறிவு திக்கற்ற மூளையெல்லாம் இயம்பிற்று.
அதைக் கேட்டு விட்டு, பச்சை நிறம் அழியும் என்கின்ற பசப்பு வார்த்தையினால், இச் செகத்தை ஏய்ப்பவர்கள் இருக்கின்றனர்!
அஃதே போல் நீயும் நினைத்து விட்டாயோ, தம்பி!
கடலிலே காய கல்பமுண்டு – கருமேகம், பெருநிலத்தால் காதலித்துப் பொழிகின்ற காதல் மழை; பருவமழை!
மேகத்திற்கும் – பூபாகத்திற்கும் ஏற்பட்ட திருமணத்தின் பயனாகக் கழனி கருவுற்றாள்.
நாற்று தவழ்ந்தது! நெல்லாய் வளர்ந்தது.
பச்சை நிறத்தோடு, பாயும் தென்றலுடன், கை கொட்டிச் சிரிப்பதைக் கண்டான் – ஏராளன்!
அன்னைத் தமிழ் நிலத்தில் – அழகுப் பழனத்தில் ஆடும் நெற்கதிர்களைப் பார்!
அவை அணிந்துள்ள ஆடை வண்ணத்தின் நிறம் பச்சை!
நெஞ்சிலே கை வைத்துச் சிந்தித்துப் பார்! வருடம் முழுவதும் வியர்வையைப் பிழிந்து விட்டு,களை பிடுங்கி, கண் விழித்துக் காத்துக் கழனியெல்லாம் பச்சை நிறங் கொண்டு, பரிணமிப்ப தொன்றாலே, அதை மாயை என்று சொல்வது அறிவாமோ!
அதை மடமையென நான் கூறல் வேண்டுமோ! என்றது பச்சைப் புல்வெளி!
ஆண்ட தமிழகத்திலே அளப்பரிய இலக்கியங்கள்!
பூண்ட தமிழ்க் கோலம் பூரிப்போம்!
காண்டல் கண்ணுக்கு இனிதென்றார். அதன் தொனியைக் கேட்டால் காதுக்குத் தேன் என்றார்.
இஃது உனதன்னை இருந்து ஆண்ட நிலம். அஃது இஞ்ஞான்று அவள் கையில் இல்லையடா!
வளத்தோடும் – வனப்போடும் வந்தோர் வாழ்கின்றனர்
செங்களத்தில் செந்நீர் மடை திறந்த இந்நாட்டு மறவரெலாம்; அடிமைத் தளை பூட்டி; ஆங்காங்கு கிடக்கின்றார்.
இந்த வளமிருந்தும்; ஈடற்றத் தமிழ் மகனே! நீ நொந்து நலிகின்றாய்!
ஏனப்பா, நிலை கெட்டாய்? என்று தெருதோறும் முழக்கம் செய்கின்ற அண்ணன் மனத்திரையில் கருகாதிருப்பது; கன்னித் தமிழ் வளமன்றோ!
அந்த வளத்தின் வண்ணங்காட்டல்; இந்தப் பச்சை நிறமன்றோ!
அந்நிலத்தின் சாயலினை; அனைவரின் அழகு தமிழ் உரையாடலிலே; தென்னகத்தின் வீதி தேறும், மன்றத்தின் முழுமை உள்ளங்கள் – இல்லங்கள்; பட்டி தொட்டிகளில் எல்லாம் பார்க்காமல் வந்து விட்டாயா!
அந்தக் குறைபாட்டில் அழகு பச்சையை, அழியும் மாயை என்று நீ அறைந்தாயல்லவா என்றது? பச்சை!
மேலும் விளக்கம் தேவையோ என்று பச்சை நிறம் பரிவோடு கேட்டது!
ஆம். என்றான் அந்தத் தஞ்சாவூர் பொம்மை! அறிவுப் பசியால் அலைபவனல்லவா அவன்.
பச்சை மேலும் பேசிற்று! தம்பி, பாதை சரியாக இருக்குமானால், அந்தப் பாதையிலே போகின்ற வாகனங்களை, அறிவுறுத்தக் காட்டுகின்ற நிறம் கூட பச்சையல்லவா என்றது?
அது மட்டுமா? கற்களிலே மிகச் சிறந்த கல்லெனக் கூறுவது எது?
மண்ணகம் வாழ்த்துவது – மக்களெலாம் போற்றுவது -எது?
மரகதப் பச்சையன்றோ! அது பற்றிய விளக்கத்தை மேலும் கூறட்டுமா? கேள்!
மாதவி!
குறிஞ்சிப் பாட்டெனும் இலக்கியத்தில் பெரும் புலவர் கபிலர் “பைங்குருக்கத்தி’ என்ற ஓர் கொடியைக் குறிப்பிட்டார்.
அக் குறுக்கத்தி, ஒரு கொடி அழகு தவழ, நெடிது நீண்டு வளரும்!
பற்றுக் கொம்பின்றி, அது தானே பற்றிப் படராத பான்மையது!
வேறு கோல் கொண்டு பந்தரிட்டு; அதன் மேல் குருக்கத்தியை ஊன்றி, ஆறு காட்ட வேண்டும்.
அப்போது தான்; அது நன்கு வளரும்! படரும்! தப்பாது தழைக்கும்!
இக் கொடி படரும் பந்தருக்கு;’சங்க காலத்தில் மாதவி’பந்தர், என்ற பெயருமுண்டு!
மாதவிக் கொடியின் நிறம்; கண்ணைக் கவரும் நல்ல பச்சை நிறமுடையது தம்பி!
நுணா என்றவோர் இலையை: நீ நுணுகிப் பார்த்திருக்கிறாயா?
அது போன்ற பச்சையாகவே இருக்கும் குருக்கத்தி இலை!
அந்தப் பச்சை இலையிலே பூக்கும் பூ; வெண்மை நிறம்!
மாதவிப் பூங்கொத்து என்பர் அதனை! அம்மலருக்குப் புறவிதழ்கள் ஐந்துண்டு!
இவ்வைந்து இதழ்களும் பசுமை நிறமாக இருப்பதால்: கபிலரெனும் கன்னித் தமிழ்ப் புலவர்; அதனை, “பைங்குருக் கத்தி” என்ற பெயரைச் சூட்டினார் போலும்!
அம் மலருக்கு ஐந்து அகவிதழ்களும் உண்டு.
அவ் விதழ்களில் ஒன்றே ஒன்று மட்டும் மஞ்சள் நிறமுடையதாம்!
மாதவிக் கொடியைக் கன்னட மொழியிலும் மாதவி என்றே அழைப்பர்!
ஒரிய மொழியில் அதனை ‘மாதபி’ என்றும், ‘மாதபிளாதோ’ என்றும் கூறுவர்!
தாவர நூலறிஞர்கள் அதனை ஆங்கிலத்தில் (MADA-BILOTA) ‘மாட பிளோட்டா’ என்று அழைக்கின்றனர்!
நல்ல பச்சை நிறங்கொண்ட அந்தத் தமிழ்க்கொடியின் பெயரைத்தான் ஆங்கிலத்திலும் வைத்துக் கொண்டனர்!
பச்சை நிறத்தின் பெருமையைப் பார்! பார் – அதனைப் பாராட்டி ஆராய்ச்சி புரியும் தகுதியைப் பெற்றுவிட்டது!
மாதவிப் பூங்கொத்துகள், அவை பூத்த சின்னாட்களில் உதிரும்! பொலிவிழந்து வாடும்!
இவ்வாறு பொலிவிழந்து நின்ற ஒரு மாதவிக்கொடியை: சிலப்பதிகாரக் கதாநாயகன் கோவலன் கண்டானாம்!
மாதவியைப் பிரிந்து, அவன் மனமுடைந்து நிற்கும் போது, அந்த மாதவிக் கொடியைப் பார்த்து, “நீயும் மாதவியைப் போல இருக்கிறாயே” என்று மனமுருகினானாம்!
சாதாரண மாதவிக்கொடி, தனது நிறத்தால், சாகாவரம் பெற்ற தமிழ் இலக்கியமாகி, உலக இலக்கியமாக உருவடைந்தது!
மாதவிக் கொடியின் இலையைப் போல்; மக்கள் மன்றத்திலே பச்சை நிறமாகிவிட்டார் பேரறிஞர் அண்ணா.
மக்கள் மனதை, நல்ல நிறமாக்கிட, வளத்தை ஊட்டுகிறார் – தனது அறிவுத்திறனால்,
அந்த மலரின் பசுமையான புறவிதழ்கள் ஐந்தைப் போல, அவரது புறத் தோற்றப் பண்புகள் காணப்படுகின்றன.
அதன் அகவிதழ்கள் ஐந்தை ஒப்ப அவரது ஐம்புலன்கள் பணியாற்றுகின்றன.
அவற்றுள் ஒரிதழ் மட்டும் மஞ்சள் நிறம்! இயற்கையின் படைப்பே படைப்பு அழகைப் படைக்க இயற்கை கலைஞனுக்கு ஈடு எவருளர்? தம்பி.
அதனாலன்றோ அம்மலர் கண்கவர் வனப்பு பெறுகிறது! மஞ்சள் நிற இதழைப் போல. அவர் சமுதாயச் சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார்!
அதனால்; அவர் பசுமையான சீர்திருத்தவாதியாக விளங்குகிறார்:
மாதவிப் பூ வெண்மை நிறமானதன்றோ! அந்தத் தமிழ் மகனின் உள்ளமும் மாதவிப் பூவைப்போன்றதே, என்பதனை மக்களறிந்து கொண்டனர்!
மனம் திறந்த மக்கள், மடைதிறந்த வெள்ளம் போல அவரைப் பின்பற்றி ஓடி வந்தனர்.
அப் பூவின் பத்து கேசரங்களும் பொன்னிறத் தாதை உகுத்து நிற்குமாம்!
அறிஞருள் அறிஞராக விளங்கும் அண்ணாவும் ; பொன்னிறத் தாதையொத்த தனது அறிவினை நமக்கு வழங்கினார்!
அம் மலரின் வண்ண தொசி எண் (chromo some Number) க்ரோமோசம் நம்பர் இன்றுவரை கண்டு கூறப்படவில்லை.
அது போலவே, அவரின் இதயபூர்வமான – உண்மையான – மக்கட்தொண்டு – இன்னும் சிலரால் உணர்ந்து உலகுக்கு உரைக்கப்படவில்லை!
காலம் அந்தச் சிலரது விழிகளைக் கட்டளையிட்டுத் திறந்தே தீரும் என்பது உறுதி!
தமிழகத்திலே தோன்றிய மாதவிக் கொடி, ஆங்கிலமறிந்த உலக ஆய்வாளர்களால்; ஆராயப்படுகிறது! போற்றப்படுகிறது!
அதுபோலவே, உலகம் ஆராய்ந்து போற்றும் நிலையை அவர் ஒர் நாள் பெறுவார்!
சாதாரண ஒரு மாதவிக் கொடி; இலக்கியத்தில் இடம் பெற்றுவிட்டதைப் போல; அவரும் உலக இலக்கியமாகத்தான் திகழப் போகிறார்!
பச்சை நிறம், வளத்தைக் காட்டும் வண்ணம்! அது, அவரது பண்பாட்டு வளத்தை அவனிக்கு அறிவித்தே தீரும்:
ஞாலம் அவர் புகழ் பின்னே ஓடிவரும் காலம், மிகத் தொலைவில் இல்லை தம்பி!
பச்சையை நீ மாயை என்றால்; பார் நம்புமா? பேதை மானிடனே! அது மட்டுமா?
வெற்றிலை போட்டறியாது! ஆனால், வாய் சிவந்திருக்கும்! கொவ்வைக் கனியருந்தும், கொஞ்சு மொழிகள் பேசிடும்! அந்த அஞ்சுகத்தின் நிறமும் கூடப் பச்சையன்றோ!
கண்ணின் கருமணிகள் குளிர – காட்சி பல வழங்கி; மண்ணில் தெரிகின்ற முதல் நிறமும் பச்சைதானே…!
பச்சைத் தழைகட்டி, பந்தலை உருவாக்கி, இருமனமும் ஒருமனமாய் இணைந்து பிணைகின்ற இன்பத் திருமணத்தில் காட்சி நல்குவதும் கவின் பச்சை!
இந்த இன்ப நிறத்தைப் போய் எத்திற மனங்கொண்டு மாயை என்கிறாய்?
தேர்ந்த அறிவாளன், தென்னவர் மன்னன் பார்க்கும் கற்பனை!
அவர் வழங்கிய அறிவாழமிக்கக் கருத்து மணம்; வாயுதிர்த்த வளமான பேச்சுக் கலை;
இவையனைத்தும் கொடுக்கும் அறிவொளியில் தமிழ் மக்கள் குடியிருக்கின்றனர்.
அந்த எண்ணச் சுடரனைத்தும் அறிவின் தொகுப்புகள்;
காலத்தை மீறி நிற்கும் சாகாவரம் பெற்றவை!
ஞாலத்தைத் தன் பக்கம் இழுக்கும் வளமான தத்துவங்கள்!
பச்சை என்றாலே வளத்தைச் சுட்டும் நிறமன்றோ!
சமுதாயம் சரிநிகர் சமமாக ஒழுகும் சரியானப் பாதைகளன்றோ அவை:
முற்றும் நீ அறிவாயே! பின் ஏன்; முனையொடிந்தக் கருத்தாலே, பச்சையை மாயை என்றாய்!
வெற்றுக்கு நீயுரைத்தாய்; விளக்கம் நான் தந்துள்ளேன்.
விளங்கி நீ செல்வாய் என்று, முற்றிற்று, கூறிற்று, பச்சை,
மஞ்சள் சாமந்தி:
அஞ்சனந்தோய் விழியுடையாள்; மஞ்சள் நீராடி, அந்தி வேளையிலே
கொஞ்சும் தென்றலோடு; குழையும் கடையினை திருத்தி அமைத்தவாறு;
தளிர்நடை போடுதலொப்ப, செடியின் முடிமீது சிரித்து நின்ற மஞ்சள் சாமந்தி, கேலிச் சிரிப்பு சிரித்தது!
சிரிப்பொலி கேட்டுச் சிலிர்த்து நெருங்கினேன்!
மஞ்சள் சாமந்தியின் கவின்மிகு வண்ணத்தைக் கண்டேன்!
எனக்கு முன்னே எண்ணற்ற மலர்கள் விரவிய அறிவுரை மணங்களை நுகர்ந்தனையோ! என்றது!
தேவைத் திணிப்பாலே ஏங்கி நின்று, அவா பூர்த்தியாக முடியாமல்; அவதிப்படும் மானிடனே!
தேங்கி நிற்கும்போது தெளிவற்றோர் கூறும் வாசகங்களைக் கூறிவிட்டாய் நீ!
வாழையடி வாழையாக வந்து போகும் கோழை மனம் உனக்கும்!
அறிவின்மை ஏழைக்கு அதிகமன்றோ!
தேவை முறியும் போது தெளிந்த அறிவுடையோரும்; ஆவலுக்கு அருள் தாரா அனைத்தையும் மாயை என்பர்!
அஃதைப் பின்பற்றி நீயும் அலறுகிறாய்!
மஞ்சள்; மங்கலத்தின் சின்னம்!
அவ் வண்ணமின்றிப் பொங்கும் இன்பத்தைத் தொடங்கியவர் எவருமில்லை!
முகடு மலையிடுக்கில் போய் மறையும் பகலவனின் ராஜ உடையின் பெயர் அந்தி!
அந்த நிறத்தைக் கூர்ந்து அறிந்தனையோ அஃதும் மஞ்சளே! நாகரிக உலகில், பிணியிருக்கும் இடத்தை நல்லோர்க்குக் காட்டுதற்கு, மருத்துவத் துறையினர் மஞ்சள் கொடி கட்டி, மருளைக் காட்டிடுவர்.
அஃதுமட்டுமா? முக்கடல் உடை உடுத்தி, முப்பால் குறளேந்தி,
திக்கெலாம் புகழ் மணம் பரப்பித் திருக்கோலம் பூண்டிருப்பது தென்னகத்து மண்!
அம் மண்ணின் தானைத் தலைவனாக – தனிப்பெரும் மன்னனாக – சூழ வலம் வந்த சுந்தர அறிவாளன்!
பைந்தமிழறிஞர்! பார்புகழும் பசுந்தமிழ் முதற்செல்வர்!
நைந்த மக்கட்கு நிம்மதி வழங்கியவர்!
கைதேர்ந்த அரசியல் பெரும் ஞானி!
அறிஞர் குல திலகம் அண்ணாவின் சமுதாயச் சீர்திருத்தம் துவஙுகு முன்பு காட்டிய நிறமும் – மஞ்சள் தானே!
எற்றுக்கு அவ்வண்ணமே தேர்ந்தெடுத்தார்?
பற்றியிருக்கும் இந்நாட்டு மூடநம்பிக்கைப் பிணியை சுட்டுதற்கு?
‘மஞ்சள் பெட்டிக்கே மகத்துவம் மணக்குது மகாத்மா வாக்கியம்’ என்று காங்கிரசார் தேர்தல் ஆலாபனை பாடியது, ஏன்?
அடிமை நோயைக் காட்டிட – அதனை அகற்றிட!
தேர்தல் வாயிலாக மக்களது வாக்குகளப் பெற்றிட! சுதந்திர தீயத்தை ஏற்றிடவன்றோ!
பிணியுள்ள இடத்திலேதான் மருத்துவப் பேரறிஞர்கள் தத்தமது பணியை தொடங்குவது வழக்கம்!
அண்ணனுடைய மஞ்சள் கொடியும் அது போன்றதன்றோ!
பண்புள்ளோர்; அன்னோனின் சேவையைத் தொழுது வனங்கினர்!
அஃதற்றோர்; நரம்பிலா நாவிற்கு வந்தவாறு பேசி ஆர்ப்பரித்தனர்.
நோயைத் தீர்ப்பது மட்டுமே கடனன்று அவருக்கு – உணர்ந்தார். இஃதை.
வாய்மைப் பொன்மொழியாலே; வடித்த மூலிகையின் சாரம்; பிழிந்தெடுத்தார்.
‘சாகக் கிடக்கும் சமுதாயமே – சற்றே பிழைத்தெழு!’
என்று மருத்துவம் புரிந்தார்.
அன்னவரின் எச்சரிக்கை பதாகையென ஏற்றிய கொடியின் நிறம்; மஞ்சள் தம்பி – மஞ்சள்!”
இன்னல் இடர்பட்டு, இருந்த பொருள் இழந்தனர் மக்கள்.
கன்னல் வாழ்க்கையிலே கசப்பைத் தான் கண்டனர்.
மின்னல் வாழ்வென உன்னைப் போல, மக்களும் நினைத்து எண்ணிக் கிடந்தனர்! நைந்தனர் வாழ வழியின்றி!
அந் நிலை அகற்றிட மங்கல தொணி எழுப்பி; மஞ்சள் கொடி காட்டினார் ஒருவர்.
‘பொங்கிடும் இன்பம் எங்கும் தங்குக’ என்று சங்கே முழங்கு என்று சாற்றினார்.
விழி பெற்றனர் மக்கள்; அவர் தம் அறிவுரைகளைக் கேட்டு!
வழி பற்றி நடந்தனர். ‘நல்ல சமயமடா இதை நழுவ விடுவாயோ!’ என்று!
குழி விழுந்த கன்னத்தில் சிரிப்புக் குமிழுடைத்துச் சிரிக்கத் தொடங்கினர் மக்கள்.
வாழ்க்கை சிரித்தது! மனிதன் சிரித்தான்! தமிழகம் சிரித்தது! தலை நிமிர்ந்தது! தன்மானம் பெற்றது தமிழ் நாடெனப் பெயர் பெற்றது:
இத்துணைக்கும் காரணமாய் இருக்கும் மஞ்சளினை மாயையெனப் புகன்றாயே சிறுவனே!
மறுமுறையும் இவ்வாறு ஆய்ந்துரைக்காதே; என்று மங்கலமாய் கூறியது மஞ்சள் சாமந்தி மலர் !
சாமந்தி மலர் இவ்வாறு சாற்றிய உரை கேட்டேன். தெளிவடைந்த நான்; சிறிது தூரத்திற்கப்பால் சென்றேன்.
மற்றொரு மலர், ‘விடுவேனோ மாயை மனிதனே உன்னை’ – என்றது.
மீண்டும் மாயைப் பற்றிய மயக்கமா என்று மிரண்டேன்.
‘எனது பெயர் என்ன தெரியுமா மனிதா?’ என்றது .
என்ன உன் பெயரென்று வெட்கம் தவழ்ந்த முகத்துடன் கேட்டேன்.
‘வேங்கைப் பூ’ என்றது.
வேங்கைப் பூவா? என்றேன் திகைப்போடு.
ஆம், வேங்கைப் பூதான் என்று கூறியது.
வேங்கைப் பூ!
என்ன தம்பி வேங்கைப் பூ என்றதும் வெலவெலத்துப் போய் விட்டாயா?
வேங்கை என்ற வார்த்தை என்னோடு சேர்ந்திருப்பதால், நான் – புலி போலப் பாய்வேனோ? என்று அஞ்சுகிறாயா?
என் பெயரைக் கேட்டதும்; பின் ஏன், உன் உடலெலாம் உதறுகிறது?
அட மாயை மனிதா! என் பெயரைக் கண்டே புத்தி பேதலித்து விட்டாயே.
என் பெயர் வேங்கைப் பூ’தான். எனது வரலாறு தெரியுமா உனக்கு?
கூறுகிறேன் கேள் என்றது. வேங்கை பூ. என்னடா ஒவ்வொரு பூவும் நமது ‘அறிவைச் சோதிக்கின்றனவே என்று வியந்தான் மாயையை நம்பிய மனிதன் .
உனது வரலாறு என்ன? அதை உரை, கேட்கிறேன் என்றான் அவன்.
வேங்கைப் பூ தனது மேதா விலாசத்தைப் பூரிப்போடு புகன்றது.
தம்பி, தமிழ் இலக்கியங்கள் நீ படித்திருக்கிறாயா? அவற்றை நீ நாடியிருந்தால்; நான் உனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பேனே!
கன்னித் தமிழ் இலக்கியப் புலவர்கள், வேங்கை மரத்தைப் பற்றிப் பெருமையாகப் பாடியிருக்கின்றனர்.
நான் எங்கே விளைகிறேன் தெரியுமா? அது ஒரு பெரிய வரலாற்றுக்குரிய இடமாகும்.
மலைக் குன்றுகளின் சரிவுகளிலேயுள்ள கற்களைக் காட்டாறுகள் கூழாங்கற்களாய் கரைத்து வருவதைக் கண்டிருப்பாயே.
அந்த ஆறுகள்; அடவிகளின் இடுக்கிலே வளைந்து வளைந்து; பாம்புகளைப் போல சீறிப் பாய்ந்து வருவன:
பலவகை மர இனங்களை, அவ்வாறுகள் சந்திக்கும்! அவற்றின் மணங்களோடு அவை ஒடி வரும்.
சந்தன மரத்தின் மணவாழ்வைக் கூட, தன் தண்தோளிலே பல்லக்கெனச் சுமந்துவரும்.
அந்த ஆறுகளுக்கு முகத்துவாரமெனும் சாவுகள் உண்டு. அதையும் துச்சமென மதித்து; மரணத்தை மஞ்சமாக ஏற்று; காற்றைவிடக் கடுகி ஓடி வரும்.
அவை ஏன் அவ்வாறு ஓங்காரமிட்டும்; ஒசையற்றும்; ஒடி ஆடி – பாடியும் – அன்னமென வருகின்றன.
கதிர்களின் ஆணவ ஊடுருவல்கட்கு அடிமையாகிவிட்ட பூமியைக் குளுமைப் படுத்தவே வருகின்றன.
வெப்பமெனும் பகையை விரட்டுகிறேன் பார் என்று,
வானமெனும் அடலேறு மழையாக முழக்கமிடுகிறான்.
அந்த வான் முழக்கத்தை ஏற்று, மலைச்சரிவுகளிலே கூடுகின்றன.
கானகம் என்ற பகுதிகளிலே அவை பரந்த விரிந்து நதியாக உருப் பெறுகின்றன.
ஆணவக் குரல் கொடுத்து, பூமியில் அண்டும் கதிர்ப் பகைவனுக்குள் எரியும் உயிர் விளக்கை, ஊதியணைப்பவை இந்த ஆறுகள்தாம்.
பொங்கும் வளத்தை அங்கே வலிவுபடுத்திட, அவைப் பொலிவோடு பாய்கின்றன.
அந்த அடவியிலே, மலைச்சரிவுகளிலேதான்; வேங்கை மரங்கள். விளைகின்றன தம்பி; என்றது வேங்கை பூ.
அடேயப்பா, மரத்தின் கதையே இவ்வளவு சிறப்புப் பெற்றதா? மயக்கமாக இருக்கிறது. பூவே, உன் வரலாறு.
அடடே! இதற்குள்ளாகவா மயக்கமடித்து விழப் பார்க்கிறாய்? இன்னும் கேள்.
அந்தக் காடுகளிலே, மலைச் சரிவுகளிலே எத்தனையோ எழிலான மர வகைகள் விளைகின்றன.
அவைகட்கெல்லாம் என் போன்ற அருமையோ பெருமையோ ஏற்பட்டு விடுமா?
வெல்ல நினைத்து வேடிக்கைக் காட்டுகின்ற கழுகுக் கூட்டத்தின் கண்டத்தைக் கத்திரித்தால் எப்படியிருக்கும்?
இதுபோல; எண்ணற்ற எழில் மரங்களிடையே நான்தான் மிகமிக உயரமாக – மிகமிகப் பருமனாகக் காட்சியளிப்பேன்.
எல்லா மரங்களையும் வென்று, வெற்றிக்கொடியை நாட்டி; விண்மூட்ட விளங்கி நிற்பேன்.
எந்த மரமும் எனக்கு நிகராக இருக்க முடியாது – ஏன்? என் பெயர் வேங்கை மரமல்லவா? வேங்கை என்றால் – சாமான்யமான மிருகமா?
வீரத்தின் விளக்கமல்லவா நான்? – அதனால்தான் தோற்றத்திலேயே மற்ற மரங்களை வீழ்த்துகிறேன்.
என்னருகே உள்ள மரங்களெல்லாம், கண்டம் கத்தரிக்கப்பட்ட கழுகுகளைப் போலக் காட்சியளிக்கும்.
எனக்கு மட்டுமேன் அந்தச் சிறப்பு? பெருமை! வீரம்! தோற்றம்! பண்பு!
வீரத்தின் விளைநிலம் தமிழகம்! விவேகத்தின் பிறப்பிடம்! அமைதிக்கு வித்தகம்!
உலகச் சிறப்புக்கு உள்ள காரணங்கள் அனைத்தும் – உருவான இடமே தமிழ் நிலம்தானே!
அந்த நிலத்திலே தோன்றிய மரம் நானல்லவா? எனக்குரிய பெயரும் வேங்கைதானே!
எதிரியின் எலும்பைப் பொடியாக்கி, மாவாக்கி, வீரத் தாய் நிலத்திற்கு வீசும் தமிழர்களைப் போல – வியந்து நிற்கிறேன்.
மானம் என்ற பண்பைப் பெற்ற தமிழகத்தில்தானே, மானத்தால் பிறந்து மானத்தால் வளர்ந்து மானத்தால் சாகிறார்கள் தமிழர்கள்.
மோன நிலையிலே, முகிழ்த்த தத்துவத்தால் முளைத்த இனம் – தமிழ் இனம்.
ஞான ஒளியால்; ஞாலத்தில் உருவான வீர இனம்! தொல்புகழ் பூண்ட மரபு – தமிழர் திருக்குலம்.
அந்த மண்ணிலே பிறந்த மரமல்லவா நான்? எனக்கும் எங்கே போகும் அவை?
எனக்குப் பெயர் வேங்கையாற்றே. நானா கோழை போல் குனிந்து கிடப்பேன்?
அந்தத் தண்ணிரைப் பருகித் தானே என் உயிரணுக்கள் மூச்சு விடுகின்றன. எங்கே ஏகும் அந்த வீரப் பெரு மூச்சுக்கள்?
மறத்திற்கு இலக்கணமான புலியின் பெயரை, ஒரு மரத்திற்குச் சூட்டி, மறத்தின் மாண்பை, மேதினிக்குப் பரப்பிய நாடு; தமிழ்நாடு தானே, தம்பி!
அத்தகைய மரத்திற்கு ஒர் ஆதி வரலாறு பெருமையோடு இருப்பதுதானே நியதி.
தமிழ்ப் புலவர்களும் – தமிழ் மக்களும்; காரணமில்லாமல் அதையும் புகழ்ந்து பாட – பேசமாட்டார்கள் அல்லவா? என்று கேட்டது வேங்கைப் பூ
பூவே, உனது பூர்வாங்கத்தைப் பூர்த்தி செய்து விட்டாயா? என்றான் – மாயையை நம்பிக் கொண்டிருந்தவன்.
தம்பி; தம்பி! நான் எங்கே கூறினேன்? என் வரலாற்றில் ஒரு பகுதி இது. மேலும் கேள் என்று பேசிற்று பூ!
வேங்கை மரத்தை வெள்ளையர்கள் டிரோகார்பஸ் மார்சூப்லுயம் (Pterocarpus Marsuplum) என்றழைக்கின்றனர். தமிழ் மக்கள்; எனது வளர்ச்சிக்கு ஏற்ப; பல பெயரிட்டு அழைக்கின்றனர்.
தமிழிலே சொற்பஞ்சமில்லை என்பதைத்தானே இது தரணிக்குக் காட்டுகிறது என்று நினைக்கிறாயா? அது உண்மைதான்.
‘கருங்கால் வேங்கை , பாராரை வேங்கை, நெடுந்தாள் வேங்கை’என்ற பல பெயர்களுண்டு.
அந்த வேங்கை மரத்திலே பூக்கும் எனக்குத்தான் வேங்கைப் பூ’ என்ற பெயர்.
நான் மஞ்சள் வண்ணமாக இருப்பேன். கொத்துக் கொத்தாக மலர்வேன்.
அழகிலே சிறந்த பூ வேங்கைப் பூ. காணக் காணக் கவர்ச்சி மிக்கப் பக.
வேங்கைப் பூவின் தாது; பொன் பொடியன்ன மின்னும்.
பூ, பூக்கத் தொடங்கும்போது, பெரும்பாலான அரும்புகள் ஒருங்கே மலரும்.
‘அரும் பல மலர்ந்த கருங்கால் வேங்கை’ என்று; அதன் மலர்ச்சியை ஒரு புலவர் பாடினார்.
வேங்கைப் பூ மஞ்சள் நிறம்தான் என்று நான் கூறினால் – நீ நம்புவாயா?
அதற்கும் சில இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன தம்பி.
“பொன்னினர் வேங்கை தாய ஓங்குமலை அடுக்கத்து’’ என்று நற்றினை’யில் வரும் 28ம் பாடல் நவில்கிறது.
“பொன்னினர் வேங்கைப் பூஞ்சிலைச் செலி இயர்” என்று, அதே இலக்கியத்தின் 151ம் பாடலில் காணப்படுகிறது.
“பெருவரை வேங்கைப் பொன்மருள் நறுவி” என்று ‘ஐங்குறுநூறு அறைகிறது.
“கருங்கால் வேங்கை மலரின் நாளும் பொன்னென விசுமந்து” என்று புறநானூறு புகல்கிறது.
பொன்நிறமான வேங்கைப்பூ நறுமணமிக்கது. பெண்கள் அதனைப் பெரிதும் விரும்பிக் கொய்யச் செல்வர்.
பறிக்கச் சென்ற பூவையர் அப்போது ‘புலி புலி’ என்று பூசல் புரிவர்!
வேங்கையெனும் சொல் ‘புலி’ என்ற மிருகத்தையும் குறிக்குமல்லவா?
அதனாலே, அம்மங்கையர் அவ்வாறு பூசல் செய்வர். ஆனால், அதற்கும் காரணமுண்டு.
பூ மலர்ந்த வேங்கை மரம் புலியை ஒத்திருக்கும். அதனால் வேங்கை மரம் பூவினைப் ‘புலிப்பூ என்பர் பாவையர்.
வேங்கை மரத்தில் புலி போன்ற வண்ணப் புள்ளிகளோடு பூ மலர்கின்றன.
‘புலிப்பொறி வேங்கைப் பொன்னினர் கொய்து’ ‘ஐங்குறுநூறு’ என்று இலக்கியம் கூறுகிறது.
‘புலி உரி இரி அதற்கடுப்பக் கலி சிறந்த நாட்பூ வேங்கை நாள் மலர் உதிர்’ என்று அகநானூறு செய்யுள் அறிவிக்கிறது.
‘கருங்கால் வேங்கை வீயுகு துறுகள், இரும்புலிக் குருளையிற்றோன்றும்’ குறுந்தொகையில் காணப்படுகிறது.
வேங்கைப் பூ, புலியை ஒத்திருப்பதனையறிந்த வேல்விழியர், பூ பறிக்கும்போது, ‘புலிபுலி’யென ஆரவாரிப்பர்.
இதனைத் தமிழ் இலக்கியங்கள் அழகாக இயம்புகின்றன.
“மன்ற வேங்கை மலர்தம் நோக்கி, ஏறாதிட்ட ஏமப்பூசல்” என்று ‘குறுந்தொகை’ நூலும்.
“தலைநாள் பூத்த பொன்னினர் வேங்கை, மலைமார் இடுஉம் ஏமப்பூசல்” என்று ‘மலைபடுகடாம்’ எனும் நூலும் கூறுகிறதே.
பாவையர் மட்டுமே வேங்கைப் பூவைக் கண்டு ஆரவாரமிடவில்லை. வேழமே அஞ்சி மருண்டுள்ளது.
வேழம் ஒன்று, ஒரு நாள் ஒரு வரிப்புலியோடு பொருதிற்றாம்.
அந்தப் புலியின் உகிரால் விளைந்த வடுக்களை எண்ணி, கரி வீர வருத்தம் கொண்டதாம்.
அதே அத்தி, பிறகு அதே நினைவுடன் துயில் கொண்டதாம்.
அப்போது கனவு ஒன்று கண்டது வாரணம். புலியின் தோற்றம் அக் கனவிலே வந்ததாம்.
உடனே வேழம் துயிலை நீக்கியது.அதே சினத்தோடு பொங்கி எழுந்தது.
கனவிலே வந்த புலியைக் காணவில்லை. எதிரே புதிதாய் பூத்து மலர்ந்த வேங்கை மரத்தை அந்த வேழம் கண்டதாம்.
அந்த மதத்தை வரிப் புலியென மயங்கி; அதன் ள்ழில் தோற்றத்தைக் “கை” யால் முறுக்கியது.
எழிலை வீழ்த்தியது. கழலால் துவைத்தது.
அம் மரம் போல் பிறிதோர் மரம் காணுங்கால்; களிறு நல்நோக்கு பாராது வெறுத்தே விலகிற்றாம்.
‘கலித்தொகை’யிலே வரும் “கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு” என்ற 49-வது பாடல் இந்தக் கருத்தைக் கூறுகிறது.
களிறே வேங்கைப் பூ மலர்ச்சியைக் கண்டு புலியென நம்பிற்றென்றால், காரிகையர் ஏன் ஏமப் பூசலிடார் என்றது வேங்கைப் பூ.
முடிந்ததா பூவே, உன் முழு வரலாறு, என்று மாயை மனிதன் கேட்டான்.
இல்லை தம்பி, பூவின் சில பாகங்களைக் கூறினேன். பிற பகுதிகளையும் கூறுகிறேன் கேள் – என்றது. பூ
மாயை நிரம்பிய மனிதன், வேங்கைப் பூ புகன்ற, வரலாற்றைக் கேட்டு மயக்கமடைந்தான்.
என்னே! மானிடர் கூட்டத்தின் பிரதிநிதியே. பூ உரைப்பது புனைந்துரையோ என்று மயங்குகிறாயா?
தெளிவில்லாத நெஞ்சமே! நீ தெளிவடையத்தான் தெள்ளு தமிழிலக்கிய வரலாற்றின் ஆதாரங்களைக் கூறுகின்றேன்.
பிறகு, ஏன், உன் பிஞ்சு நெஞ்சு பேதலிக்கிறது? பிறவும் சொல்கிறேன் கேள், என்று மேலும் பேச ஆரம்பித்தது.
நான் வேங்கை மரத்தில் மலர்ந்ததை அறிந்த சுரும்பினங்கள், வேங்கை மலர்ந்ததாக எண்ணிப் புலியைச் சூழ்ந்து, அதன் முகத்தையும் உடலையும், சுற்றிச் சுற்றி வலம்வர ஆரம்பித்தன. “கலித்தொகை என்ற இலக்கியத்தின் 46-வது பாடலைப் படித்துப் பார். உண்மையை உணருவாய்!
அது மட்டுமா? சில புலவர்கள், வேங்கைப் பூவாகிய என்னை – நெருப்புத் துண்டிற்கும் உவமையாக்கிக் கூறியுள்ளனர்.
‘எரிமருள் வேங்கை இருந்த தோகை’ என்று ‘ஐங்குறு நூறு’ அதை விளக்கி நிற்கின்றன.
‘எருவை நந்தொடு எரிஇணர் வேங்கை’ என்ற ‘பரிபாடலு’ம் கூறுகின்றது.
‘நான் வேங்கை மரத்திலிருந்து உதிரும்போது என் காட்சி எப்படி இருக்குமென்று நீ பார்த்திருக்கிறாயா?’
எவ்வாறு நீ நோக்கியிருப்பாய் என் எழிற் காட்சிதனை? ‘அகநானூற்றி’ல் வரும் 202ம் பாடலைப் படி உனக்கு அவகாசமிருந்தால்!
கொல்லன் – இரும்பைப் பழுக்கக் காய்ச்சித் தனது உலைக் களத்தில் அடிக்கிறான்.
இரும்புத் துகள்கள் ஒளிர்ந்து, சிதறிப் பறந்து, அவ்வமயம் விழுகின்றன.
இவ் விரும்புத் துகள்கள் உதிர்வது, வேங்கைப் பூ உதிர்வதைப் போல, இருக்கிறதாம்.
வண்ணவுவமையும் தொழிலுமையும் எப்படி கூறப்பட்டிருக்கிறது பார்த்தாயா? “கொல்லன், எரி பொன் பிதிரின் சிறுபல, தாஅய்,
வேங்கை விபுகும் ஒங்கு மலைக்காட்சி” என்று வரும் ‘நற்றிணை’ப் பாடல் கூறுகிறது.
காந்தட் பூவைக் காட்டிலும் என்னிடத்தில் இருபது மகரந்தப் பைகள் (Arters) உண்டு.
எனவே, என்னிடத்தில் (Poller) தாது அதிகம் இருக்கும். இப் பூந்தாது பொன் போன்ற நிறமுடையது.
இந்தத் தாதைக் கண்டதும்; வண்டினம் கூட்டம் கூட்டமாக என்னைச் சூழும்; வட்டமிடும். ஏன்? – உண்ண – உவகையுற! சில நேரங்களில் வண்டுகள் என் மீது தங்களுடைய வாயை வைத்ததும். நான் அகமலர மலர்வதுமுண்டு.
வேங்கைப் பூ அதிகம் மலர்ந்த மரத்தில் மஞ்ஞைகள் வந்து கூடி மகிழும். ஏன் தெரியும்?
மயில்கள், வேங்கை மரத்தில் வந்தமர்ந்து, தங்களது தோகைகளை விரித்து ஆடிக் கொண்டிருக்குமாம்.
அவ் வமயம் எனது பூந் தாதுக்கள் – அம்மஞ்ஞைகளின் தோகைகளில் சொட்டும்.
அதனால் மயில்களது அழகுத் தோகைகள், அழகுக்கு அழகு பெறும் காட்சியாக இருக்குமாம்.
‘பொன்னின் அன்ன பூஞ்சினை தழிஇ தமழ்தாது ஆடிய கவின் பெறு தோகை’ என்று நற்றிணை 598 வது பாடல் கூறகிறது.
இத்துணைச் சிறப்பு பெற்ற வேங்கை மரம், தமிழகத்தில் மட்டுமே தனிச் சிறப்புடன் வளர்கிறது.
மாயையை நம்பும் மனிதா இஃதுதான் எனது வரலாறு – போதுமா விளக்கம்?
வேங்கைப் பூவே, உனது வரலாறு வேடிக்கை வேடிக்கை: என்றான் – மாயை மனிதன்! நீ கூறியதைக் கேட்டேன். ஆனால், அஃது ஒரு கதையாகவே இருக்கிறது!
ஆனால், நேரில் உன்னைப் பார்க்க முடியவில்லையே என்றான்!
கானகமும்; மலையையும் நோக்கி ஓடிவந்து என்னை நீ காண முடியாது தான்!
அந்தோ பரிதாபம்! பரிதாபம்! ஆனால், உன் அருகிலேயே ஒர் அறிஞர் இருந்தார்!
நீ இருக்கும் இடத்திலேயே அவரும் உன்னுடன் நீக்கமற வாழ்ந்தார்!
அவரிடத்தே நான் கலந்திருக்கிறேன்! அதையும் கூறட்டுமா உனக்கு!
அப்படியா யார் அவர்? எங்கே கூறு என்று கேட்டான் அவன் பூ, கூற முற்பட்டு பேச ஆரம்பித்தது!
வேங்கை மரத்தின் வீரக் கதையை கேட்டாயல்லவா?
அந்த மரம், வீரம் விளைந்த தமிழ் நிலத்திலே தோன்றிய மரம்!
வேங்கை மரத்தைப் போல நீண்டு வளர்ந்து, விண்முட்டும் வியப்போடு விளங்கும் திராவிடரியக்கத்தை, தென்னவர் கோமான் அறிஞர் அண்ணா வளர்த்துள்ளார்.
வேங்கை வளரும் இடம் கானகமும், மலைச்சரிவுகளும் தானே! ஆனால், அண்ணாவின் தலைமையிலே துவங்கிய இயக்கம்: வீரம் விளைந்த தமிழ் நிலத்திலே தோன்றியது என்பதை மட்டும் மறந்து விடாதே! தம்பி!
அவரது கட்சி ஒன்றுதானே “வேங்கை”யைப் போல வீரம் பொருந்தியப் பாசறையாக விளங்கியது!
அந்தக் கட்சியின் விரத் திருவுருவமாக – தன்னேரிலாத வழிகாட்டியாக – அண்ணா காட்சியளித்தார்….! வேங்கை மரத்திலே காட்சிதரும் பூவைப் போல!
வேங்கை பூ உதிர்ந்து, இதழ்களிழந்து, மடிந்து மண்ணோடு மண்ணாகி விடுமே என்று கருதுகிறாயா?
மனித வாழ்க்கையின் தத்துவமே அது தானே! அதற்கு அண்ணா மட்டும் விதி விலக்காகிட முடியுமா?
அல்லது அமிழ்தம் உண்டு விட்ட அமரர் குலமா அவர்? இல்லையயே! சாதாரண மனித இனம் தானே!”
எனவே, பிறப்பன – இறப்பன உலகத்தின் பழக்க வழக்கங்களிலே, ஒன்றாகவிட்டத் தத்துவம்! அதற்காக கவலைப்படாதே!
***
4. எண்ணச் சிதறல்கள்!
சந்தனக் கலவையில் சமைத்த உருவம்!
வைரக் கல்லில் வடித்த விழி!
சிந்தனை வளத்தால் செழித்த முகம்!
தொடுவானுக் கிடையிலே இவ்வித அமைப்புடன் நின்றிருந்தான் ஒருவன்!
பொங்கும் கடலலையின் கரங்கள்; அவன் தாள்களைப் போய் வருடின!
வருடித் திரும்பிய அலைகளது சிரித்த சிரிப்புக்குக் கூற உவமையில்லை!
அந்தியின் திரைக்கு முன்னால் அந்த அழகு வடிவத்தானை, புள்ளினங்கள் வாழ்த்திப் பாடிய வண்ணமிருந்தன!
மரகதப் பச்சை இலைகள் தழைத்திருந்தன!
முப்பழக் கனிகள் கிளைகளில் பழுத்திருந்தன.
சித்திரப் பூந்தோட்டத்து இரத்தின மலர்கள் தேனை வடித்து நின்று சிரித்தன!
அந்த அழகுமிகு அற்புதச் சோலைக்குள் – அவன் பொற் காலமெனப் புகுந்தான்!
அவன் வருகையால் – அகமகிழ்ந்தனள் இயற்கை!
மணக்கோலம் பூண்ட பாவையைப்போலகளுக்கென்று சிரித்தது!
சிரிப்புகள் அனைத்தும் தெறித்தோடி – கடலின் சிப்பிக்குள் முத்தாய் உறங்கின.
அழகு புறப்பட்டு அறிவை வரவேற்றது! பழக நினைத்த ஞானம், அவர் பாதத்திலே விழுந்து பணிந்தது!
அந்த மனிதன், கல்லாமையின் எதிரி! கயமையின் பகைவன் குணக்குன்றில் ஏற்றிய விளக்கு! என்றெண்ணி வணங்கத் தலைப்பட்ட வாரணங்கள் எத்தனை? முகிலின் தோரணங்கள் எத்தனை?
ஒளியால் நிழல் தடுக்க மாட்டாத திங்கள், குடைபிடிக்க ஒடி வந்தான்.
இத்துணைச் சிறப்புக்கும் உருவாகி – தெளிவாகி – பொருளாகி, மருள் நீக்கும் மருந்தாகி – அருளாகி, நிற்கின்றான் அந்த மாமேதை!
பல்லோர் போற்றும் அவனை, அவனி நல்லோனென வாழ்த்துப் பாடிற்று!
உடன் பிறந்த பாசத்தால் உந்தப்பட்டோர் – அவரை அண்ணனென்றனர்!
கல்விப் பசிகொண்ட ஏழைகள், அறிஞர் என்று கழறினர்! கற்பனைக்குப் பொருள் தேடிக் காலமெலாம் காத்திருந்து, சொற்பல கிடைத்தாலும், சொர்ணச் சுரங்கமாய் – கவிதை யாக்கத் தலை குத்திக் கொள்ளும் சீத்தலைகள் – இல்லை யென்றால் கவிஞர்கள் – அவரைக் கவிதைக்கு மூலமென்றனர்!
அத்தகைய அண்ணனை நானென்ன நவின்று! அழைப்பது?
அன்னையின் அணைப்பறியேன். தந்தையின் இரக்கத்தை நான் என்றோ இற்றொழித்தேன்.
நீறொர்ந்த மீனென நிலச் சூட்டால் தவிக்கின்றேன்!
காரொர்ந்த கூழெனப் பார்த்திருந்தேன் – ககனத்தை!
வேரறுந்த பாட்டாக விளங்குகின்ற எனக்கெல்லாம்.
தாயாய் – தந்தையாய் – தனிப்பெரும் தெய்வமாய் – அவர் இருக்கின்றார்:
அவரின் தாயுள்ளம் எனக்காகி, இந்த சேயுள்ளம் விளங்குதற்கு – நாளெலாம் வேண்டுகின்றேன்.
நல்லுறக்க நாட்டினிலும், அவிழும் கனவெலாம், அவரே விளக்கானார்!
அந் நல்லோன் உளம் நினைந்து, நான் இவ்வாறு பாடிக் களிக்கின்றேன்.
மலர்
தாயே!
கலைஞர்களது கற்பனைத் திறனால், யானைத் தந்தத்தில் பொற் சிற்பமானவளே!
உன்னை மூன்றாம் பிறையினிலே நான் காண்கிறேன்.
முழு நிலவில் – உன்னிடத்தில் களங்கம் இருப்பதாக என் உபதேசம் இயம்புகிறது.
எனவே, உவாவில் உன் இளஞ் சிரிப்பைக் காண்கின்றேன்.
அன்னாய், என்னை மலராகப் படைக்கும்போது, எதைக் கொண்டு செய்தாய்?
தோட்டத்திற்குள்ளே, எங்கே நீ என்னை ஒளித்து வைத்திருந்தாய்?
பூமியிலே போட்டுப் புழுதியிலே மூடினாயல்லவா என்னை? எனக்கு அப்போது நீ கொடுத்த ஆகாரம்தான் என்ன?
துறல் ஒரு நாள் துாறிற்று!
நிலத்தின் பிடிப்பிலிருந்து கொஞ்சம் நழுவினேன்!
நான் முளைத்து விட்டேன்! செடியாகி, நீண்ட காலமிருந்தேன்.
வைகறை கிழக்கில் முகிழ்த்தது!
இலைக்கு நடுவில் நான் சிறு துளியாக இருந்தேன்!
வேர் வழி எனக்கு உணவு தந்தாய்!
கார்வழி வளி தந்தாய்!
மொட்டானேன் நான் பட்டப் பகல் பறந்தது:
தட்ட நடு நிசியில் நீ வந்தாய்!
தொட்டாய்! தொட்ட இடத்தில் மணம் தந்தாய்!
கட்டுக் குலைந்தன இதழ்ச் சுருக்கம்!
பட்டுத் தெரித்தது சிரிப்பு: சிரித்துக் கொண்டே இருந்தேன்!
தென்றலாய் நீ என்னை முத்தமிட்டாய்!
சூறையால் பிறகு சுருண்டு விழுந்தேன்!
விழுந்த இடம் எது தெரியுமா? உன் மடிதானே மாதா!
இதிலிருந்து, களங்கமற்ற உள்ளங்கள் – உன் மடியில்தான் விழுந்து உறங்க முடிகிறதென்று, அறிய முடிகிறதல்லவா அம்மா?
வானவில்
தேனின் இனியவளே!
வானில் ஏன் என்னை வானவில்லாய் வரைந்தாய்?
வண்ணங்களை இந்த ஏழை வாங்கியது எங்கே?
எண்ணத்தின் விளைவா அவை! உன் எழுத்தின் திறமையா?
வளர்ந்த வானத்தில் கோட வைத்தாயே!
வாடிய பயிருக்கும் வாடுபவள் நீ, என்றார் வள்ளலார்!
சிரித்த வலியால் நான் வாடி வருந்தினேனம்மா!
முகிழ்த்த என் அழகை, நிலமிருந்த சிறார்க் குழு, கலையாதே வில்லே என்று கூறி – கையொலித்துச் சிரித்தது.
விலையில்லா அந்த விழாவிலே நீ கலந்து கொண்டாய்!
இடும்பையில் நானோ வானத்தில்! இன்பத்தில் நீயோ ஞாலத்தில்!
தாயே! உன் கைத்திறன் எனக்குப் புரிகிறது!
சீந்துவாரற்றுக் கிடந்த நீர்த்துளிகளை வான வில்லாய் விழாக்கோலம் காட்ட முடியும் என்ற தத்துவத்தை, என் வாயிலாக அறிவிக்கின்றாயா?
ஆம்பல்
பெற்றவளே!
நீரற்ற குளத்தில் ஆம்பலாக ஆக்கினாய் – என்னை:
நீண்ட நாள் வேர் செத்துக் கிடந்தேன்!
விண்கண் திறவாதோ! எழினி உடைந்து பொழியாதோ
என்றெலாம் ஏங்கியிருந்தேன்!
பெயல் துளியோடு இறங்கினாய்!
பேரின்பப் பூரிப்பால், அயலே நிற்காமல், அருகில் நின்றேன்.
உருகி நின்ற என் வேருக்கு உயிர்ப் பிச்சையளித்தாய்!
கேணி நிரம்பிற்று! நானும் தழைத்தேன்!
அம்மா! இல்லாதார் இருக்கின்ற இடமெலாம், துல்லிய இத்யத்தோடு துவானமாகி, கல்லியெறிந்தாய் இன்னலை!
வாழ வகையற்றோர் வாழ்கின்ற இடமெலாம், ஒய்வின்றி நீயே ஒடுகின்றாய் என்பதை – இதிலிருந்து அறிந்தேன் நான்!
இறகு
அன்பின் உருவே!
அழகின் ஆரம்பம் எனக்குத் தெரியாது.
உன்னைப் பார்த்தபோது முடிவு இப்படித்தான் இருக்குமென்று புரிகிறது.
உன்னாலானவைகள் ஆயிரங்கள் இருக்கலாம்! அதிலே நானும் ஒன்று:
என்னையேன் பறவைகளின் சிறகுகளிலே இறகாக்கினாய்?
மயிலின் இறகாக இருந்திருந்தால், புள்ளி நிறக் கொண்டு தெ-ன்றலுக்குக் கவரி வீசி, மகிழ்ந்திருப்பேன்!
கொக்கின் இறகாக என்னை ஆக்கி விட்டாயே! தாயே! அந்த கொக்கு ஒருநாள் வானத்தில் பறந்தது.
அது எவ்வாறெலாம் போனதோ, அவ்வாறெலாம் அதனைத் துக்கிக் கொண்டு நான் செல்ல வேண்டும்.
கொக்கு என்னைத் தன் விருப்பத்திற்கேற்ப ஆட்டி வைக்க எண்ணுகிறது!
அதற்கு நான் அடிமையா அம்மா?
இறகில்லா விட்டால் – சிறகு இல்லை!
சிறகு இல்லாவிட்டால் – கொக்கே இல்லையே!
ஆயிரம் இறகாலானது சிறகு!
இரண்டு சிறகாலானது கொக்கு!
சிறகைத்தான் கொக்கும் கவனிக்கிறது! இறகைப் பற்றி
இறகு ஒன்று உதிர்ந்தாலும் பரவாயில்லை, என்று – சிறகு நினைக்கிறது!
உதிர்ந்த இறகோ, சகதியில் அழுகிறது!
இறகு இருந்த இடத்தை, இன்னொன்று நிரப்ப முடியாதல்லவா?
இறகுகள் இவ்வாறு உதிர்ந்தால், பிறகு கொக்கு பறக்க முடியுமா அம்மா!
கர்வம் கூடாது தாயே, கொக்குக்கு!
நான் ஆட்டுவதாலேயே இறகாய் இருக்கின்றாய் என்றால், இழிந்த இடத்துக்கு என்னை அனுப்பாதே அம்மா!
ஒரு நாள் கொக்கு உயரே பறந்தது என் பக்கத்திலே இருந்த இறகு ஒன்று உதிர்ந்துவிட்டது:
அளவுக்கு மீறிய உயரத்தில் சென்றது கொக்கு!
உதிர்ந்த இறகை அது உதாசீனம் செய்துவிட்டது!
தருணம் பார்த்துக் கொண்டிருந்த புயல், உதிர்ந்த இறகு இருந்த இடத்திலே – நுழைய ஆரம்பித்து விட்டது.
இறகுகள் மேலும் சில உதிர ஆரம்பித்தன!
பறக்க முடியாமல் கொக்கு வானத்தில் தள்ளாடியது:
நான் அப்போது அந்தக் கொக்கைப் பார்த்து நவின்றேன் –
கொக்கே! உன்னை உயர ஏற்ற இறகுகள்தானே காரணம் – என்றேன்!
ஆமாம், என்று தலையசைத்தது கொக்கு!
அதற்கு நிலை தடுமாறும் போதுதான், என் நினைப்பே வருகிறது!
அதுபோல, ஒர் அமைப்புக்கே தொண்டர்கள்தாம் காரணமென்று என் மூலம் அறிவிக்கின்றாயா அம்மா?
கொக்கின் ஆரம்ப காலத்தில் முளைத்தது இறகு!
ஒர் அமைப்பின் ஆரம்ப காலத்திலிருப்போரும் தொண்டர்கள் தாமே!
கொக்கு, இறகின்றி பறக்காது! முடியாது!
ஒரமைப்பும் தொண்டர்களின்றி விளங்காது! செயல் படமுடியாது!
விசித்திரமானவள் நீ! என்னைக் கொண்டே அரசியலை விளக்குகின்றாயே!
அதனால்தான், நான் இறகுகளை அடக்கமாக கவனமாக, சிறகுக்குள் மடக்கி ஒற்றுமையாக வைத்திருக்கிறேன் என்றது கொக்கு:
தாயே! அது உன் படைப்பல்லவா? அதற்குரிய தகுதி! திறன்! அறிவு! அத்தனையும் உன்னைவிட்டால் வேறு யாருக்கம்மா உண்டு? இருக்கிறது?
பூண்டு
இனியவளே! இன்பத்தின் அகராதியே!
ஒரு முறைதான் நான் உன்னைப் பார்த்தேன்!
எங்கே என்று கேட்கிறாயா; என்னை!
இருபாறைகட்கு இடையே, நான் பூண்டாக முளைத்து இருந்தபோது!
என்னைச் சுற்றிக் கூழாங்கற்கள் இருந்தன!
தினந்தோறும் ஒரு தவளை, நானிருக்கும் பக்கத்தில் வந்து அனலுக்கு ஒண்டும்.
அதை நீயும் தானே பார்த்தாய்!
பாறையிலே தேங்கியிருக்கும் நீரில் ஒரு நாள் – அது முட்டைகளை இட்டது!
தவளையை அதற்குப் பிறகு காணவில்லை!
வெயில் காய்ந்தது! பாறை நீர் வற்றியது!
எப்படியோ முட்டைகள் பாறையில் இடுக்கில் சென்றன! வசந்தமும் – கோடையும் மாறி மாறி வந்தன!
ஒருநாள் பாறை திடீரென்று வெடித்தது!
செத்துவிட்டேனோ, என்று அஞ்சினேன்.
காரணம்; என்மேல் சரிந்து அது வேறுபக்கம் விழுந்தது.
தாயே! இது என்ன சோதனை:
இறுகிய பாறை எப்படி இளகி வெடித்தது?
இப்போதுதான் புரிகிறதம்மா எனக்கு: தவளையைப் போல் நீரிலும் இல்லாமல், நிலத்திலும் இல்லாமல், நிலையற்றவர்கள் – கட்டுக் குலையாத ஒர் அமைப்பில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன்!
மன உறுதி படைத்தவராக மக்கள் இருக்க வேண்டும்! என்ற கருத்தையும் பெற்றேன்!
நிலையற்ற உள்ளம் படைத்தோர், தன்னல முட்டைகளை இடுவரேயானால், அன்பால் இறுகிய பாறை – தேரையின் உயிர்ப்பால் பிளக்கும்!
அப்பெரிய அமைப்பின் கீழ் பூண்டாக இருக்கும் பாமரர், நசுங்கி நலிய ஏற்படும் என்பதை, என் மூலம் உணர்த்துகிறாயா?
தாயே! நீ இருக்கும்போது நாங்கள் ஏன் நலியப் போகிறோம்!
உன் பார்வைதான் எம்மை அடிக்கடி மனிதனாக்கி வர அறிவுரையாக உதவுகிறதே!
எங்களுக்கு நீ எவ்வித குறை நிறைகளையும் வைக்கவில்லையே!
ஒன்றுபட்டு வாழ – உனது பாசமெனும் உணர்ச்சியை வேறு, ஊட்டி விட்டாயே அம்மா தாயே! எனது வாழ்நாளில் என்னை எத்தனை உருவங்களாக அமைத்தாலும்; உனது எண்ணத்தையே நான் எங்கும் எதிரொலிப்பேன்!
பாலைவனத்தில் சிறு மணலாக என்னை ஆக்கு! கோடியில் ஒருவனாகச் செய். உன் கை வண்ணத்தின் சிறு உருவம் நான்!
கடலோரத்தில் கிளிஞ்சலாக என்னை உலவ விடு.
உன் கலைத்திறனின் உருவமாகக் காட்சியளிப்பேன்.
மலையென என்னை ஆக்கு. உன் வான்புகழை ஏந்திக் கொண்டே இருப்பேன்.
நீ இயற்கையில் இளமையோடிருப்பவள்.
நான் உன் அமைதியில் பிறந்தவன்! மோனத்தில் கருவானவன்!
உன்னைப் பிரதிபலிக்க நான் எப்போதும் காத்திருக்கிறேன்.
தனிப்பட்டவனல்ல நான்; உனது ரத்தம் தாயே – ரத்தம்?
என்னைப் புகழ்வோரெல்லாம், உன்னைப் புகழ்கிறார்கள்?
நான் பெறும் வாழ்த்துக்கள் அத்தனையும்; உனக்களிக்கும் வாழ்த்துக்கள்!
***
5. அண்ணா ஒரு ஜனநாயகம்!
உயிர் அடங்கிய உடல்போல, சவக்களை தட்டிய முகத்தோடு, இரவு, உலகத்தின் மேல் மொய்த்துக் கொண்டிருந்தது.
இருளில் ஒடிக்கொண்டிருக்கும் ஆற்றின் மீது அடிவானம் தோய்ந்து கொண்டிருந்தது.
அடிவானத்தின் விளிம்பெல்லாம், தூக்கத்தில் சிரிக்கின்ற குழந்தையின் புன்முறுவலைப்போல – ஊமை மின்னல்கள் இங்குமங்கும் ஒடிக்கொண்டிருந்தன.
செறிந்த தென்னங் கீற்றின் வழியாகத் தென்றலின் பவனி வருகிற பொழுதெல்லாம் கீற்றுகள் சந்தம் பாடின!
அந்தி சாய்கிற வரையில், கவலையேற்றத்தின் வாயிலாக, கழனிக்கு நீர்ப்பாய்ச்சிய உழவர்கள் சென்றுவிட்டபிறகு ஏற்ற வாய்க்காலில் இருந்து கழனிக்கு ஓடிவரும் தேங்கிய நீர், சிறிய மடிப்பலைகளோடு அங்கங்கு சிலிர்த்துக் கொண்டிருந்தது.
நிலவற்ற அந்த நீல வானத்தில், நித்திலங்கள் கூட்டம் கூட்டமாக இருந்து பூமியை உற்று நோக்கிக் கொண்டிருந்தன!
‘இம்மென்ற ஓசையோடு திக்குகள் எட்டும் அமைதியோடு கூடி, மோன விரதத்தில் ஆழ்ந்திருந்த நேரம்:
அதோ ஒரு கல் தொலைவில், வாழ்க்கையின் வடிவத்தைச் சரியாகக் காணமுடியாதவர்கள் – மரண வேக்காட்டில் நொந்து
போனவர்கள் – உடலங்களைச் சுடுகாட்டுத் தீப்பிழம்பு சாம்பலாக்கிக் கொண்டிருந்தது!
ஒய்ந்துபோன ஜீவன், வன்னிக் கொடிக்குத் தன்னுடைய கூட்டை இரையாக்கி – அது எரிகின்ற விதத்தைக் கலையுணர்ச்சியோடு கண்டுகொண்டிருந்தது.
மேலே நிர்மலமான வானம் அதனைத் தாவிப்பிடித்துக் கொண்டிருந்தது – இறந்தவனின் ஆசைப் புகை:
மனிதனுடைய பிறப்பைப் பற்றி மகிழ்ச்சிக் கொள்ளுகின்ற இந்த உலகம் – அவன் இறந்த பிறகு ஏன் மௌனம் சாதிக்கிறதென்று தத்துவங்களைக் கேட்டால், அது தனக்குரிய விக்ரகங்களைக் காட்டுகிறது.
என்னுடைய சிந்தனை வளையங்கள், இந்த சூழ்நிலைக் கிடையில், மிக அமைதியான நிலையில் சுற்றிக் கொண்டிருந்தன.
ஆனால், அதிலுள்ள ஒர் அழுத்தமான வளையம் மட்டும், வானை நோக்கி அறுந்து போகின்ற பட்டத்தைப் போல – வேகமாக ஒடிக்கொண்டிருந்தது.
இப்போது – இரண்டு மேகக் குவியல்கள், எதிரும் புதிருமாகத் தெற்கிலிருந்தும் – வடக்கிலிருந்தும், குவிந்து கொண்டிருக்கின்றன.
அதோ, அவை ஒன்றை ஒன்று கவ்விக் கொள்கின்றன.
தப்பித்துப்போன எனது சிந்தனை வளையம், அவை பிணைப்பை வெட்டி வீழ்த்திக் கொண்டே, மேல் நோக்கிச் செல்கின்றது.
இப்போது என் எண்ணம், மேகத்தைத் தாண்டி – பூமியின் ஈர்ப்புப் பிரதேசத்தைத் தாண்டி – இறகுகூட நகர முடியா காற்றில்லா பகுதியைத் தாண்டி – கோள் மண்டலத்தைத் தாண்டிச், சென்ற வண்ணமாகவே இருக்கின்றது.
அந்த வான் வெளியின், நெஞ்சத்திலிருந்து கீழ்நோக்கி ஏதோ ஒன்று வருவதுபோல் நான் உணர்கிறேன்.
அந்த உருவத்தின் முழுமையும் எனக்குத் தென்படாவிட்டாலும் – ஒரு வெண்மையானப் புள்ளி, நிலப்பரப்பை நோக்கி வருவதை என்னால் உணர முடிகிறது.
நான் இருக்கின்ற பிரதேசத்தில் மின்னல் இல்லை விண்மீன்களது ஒளியில்லை – எங்கும் இருள் மயம்!
இப்போது நிலம் நோக்கி வருகின்ற உருவத்திற்கு நீண்டு விரித்த சிறகுகள் இருந்தன.
அதனுடை இறக்கைகள், பகுத்தறிந்த அறிஞன் ஒருவன் வாழ்க்கையில், வாழயியலாத மக்களுக்கு அறிவுரைக் கூறிவிட்டு வாழ்த்தும்போது இருக்கின்ற கை அசைவைப் போல் அதனுடைய இறக்கைகள் மென்மையாக ஆடிக் கொண்டிருந்தன. அந்தப் பறவை, வான சாம்ராச்சியத்தின் தூதுவனாகவே இருந்தது:
இரக்கப்பட்டு அருள் வழங்கும் ஒருவனின் தூய்மையான உள்ளமும் அதன் உடல் நிறமும் ஒன்றாக இருந்தது.
வைரத்தின் ஒளியும் – பொன்னின் கதிர்த் தெறிப்பும் அதன் கண்ணிலே ஒளிர்ந்து கொண்டிருந்தன!
இப்போது அந்தப் பறவையை என்னால் சரியாகக் காணமுடியும்.
செதில் செதிலாக அணிவகுத்து எழில் பரப்பிக் கொண்டிருக்கும் இறகுகள் – அதன் சிறகுகள் மீது படர்ந்திருந்தன.
உடனே எனக்கு தலை கிறுகிறுத்தது. ஏனென்றால், அந்தப் பறவையைச் சுற்றியிருக்கும் பிழம்பொளி என் கண்மணியைக் கூசவைத்தது.
தங்கமே எரிந்து பூவானம் பூவானமாகிக் கொட்டுகின்ற பூவெல்லாம், நவரத்தின வண்ணத்தோடு சிதறுமானால் – தாங்க முடியாத அவ்வொளி வெள்ளத்தை, எந்தக் கண்ணாலும் ஆட்கொள்ள முடியாதல்லவா?
இப்போது நான் இந்த நிகழ்ச்சியின் விளைவால், கீழ்நோக்கித் தள்ளப்பட்டு விட்டேன்.
எனக்கு முன்னால் நெடிய மலை என்னைச் சுற்றிலும் ஒரே பள்ளத்தாக்குகள்!
காற்றின் பேரிரைச்சலால் உளறிக் கொண்டிருக்கும் குகையின் எதிரொலிகள்!
பேரிரைச்சலோடு கீழே விழும் நீர் வீழ்ச்சி!
கீச்சான் பூச்சிகளின் தொடரொலிகள்!
காட்டு விலங்குகளின் உறுமல்!
ஆனாலும், என் கண்கள் மட்டும் அறிஞன் ஒருவனின் கபாலத்தைப்போல் வளைந்திருக்கும், வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தன!
வான் மண்டலத்தில் நான் பார்த்த பறவை – என் கண்களுக்கு இன்னும் தெரியவில்லை.
நான் இருக்கும் பகுதி, மலைப் பகுதியாக இருப்பினும் – பக்கத்திலே மக்கள் வாழும் பகுதியும் இருக்கவேண்டும்.
இரவு உணவை முடித்துவிட்ட கிராம மக்கள், பறை பொலியால் ஒரு கூத்து நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது.
அவர்களும் விழித்திருக்கிறார்கள் – நானும் விழித்திருக்கிறேன்.
அவர்களது எண்ணங்கள் கலையுலகத்தில் சஞ்சரிக்கின்றன!
என்னுடைய எண்ணங்கள் வான மண்டலத்தையே வியப்பாக கவனித்துக் கொண்டிருந்தன.
அந்த மக்கள், பகலெல்லாம் உழைத்து உழைத்து உருக்குலைந்தவர்கள்.
அந்திக்குப் பின்னால் களைப்பைப் போக்கிக் கொண்டனர் – இரவில் கலையைக் காண்கிறார்கள்!
நான் பகலெல்லாம், இம்மனிதச் சமுதாயத்தின் துன்பங்கள் எப்படி முளைக்கின்றன – தழைக்கின்றன இதற்கு மூலம் யார்? அந்தம் உண்டா? என்று உள்ளார்ந்த தியாக உணர்ச்சியோடு எண்ணியதால் – இடை இடையே களைத்து – இடையிடையே நெப்போலியனைப் போல நொடித் துக்கம் தூங்கி, இரவு நேரத்தில் இரைக்காக அலையும் காட்டு மிருகங்களைப் போலத் – தத்துவங்களுக்காக அலைந்து கொண்டிருப்பவன்!
அந்த கிராம மக்கள் கிடைத்ததை வைத்து வாழ நினைப்பவர்கள்!
நான், கிடைக்க வேண்டியது ஏன் கிடைக்கவில்லை என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவன்.
அவர்கள் வருத்தம் வருகிற நேரத்தில், முகத்திலடித்துக் கொண்டு கோயில் முன்பு அழுவார்கள்.
வருத்தம் வருகின்ற வழியை அடைத்துவிடத் துடித்துக் கொண்டிருப்பவன் நான்!
துன்பம் வரும்போது அவர்கள் அழுவார்கள் – இன்பம் சிரிக்கும் போது சிரிப்பார்கள்!
துன்பம் துளிர்க்கும் இடத்தையும், இன்பம் அரும்பும் இடத்தையும் – மனிதனுக்கென்றே படைத்தவர்கள் யார்? என்று, நான் கேட்டுக்கொண்டிருப்பவன்!
இந்தச் சமுதாயம், அந்த மக்களைப்போல் கபடு சூது அற்ற நிலையில் இருக்கிறது.
ஆத்மா, என்னைப்போல ஒர் உண்மைப்பொருளைத் தேடிக் கொண்டிருக்கிறது.
அவர்கள், ஐம்புலனுக்கும் ஆறறிவுக்கும் நடுவில் இருக்கின்ற உயிரைப்போல் – உற்றார் உறவினர்கட்கு மத்தியில் இருக்கிறார்கள்!
உடற்கூட்டைவிட்டு வெளியே வந்த உயிர், தங்க இடமி ல்லாமல் தவிப்பதுபோல் – நான் மலைகளுக்கு இடையில் ஆதரவற்றிருக்கிறேன்.
எனது சிந்தனையே! நீ எங்கு சென்றாலும் சரி, திரும்பி வருகிற நேரத்தில், கடைக்குச் சென்ற தாய், குழந்தைகட்குத் தின்பண்டம் வாங்கி வருவதைப்போல, இந்த உலகை விடுதலைக்கு ஒர் உண்மையைக் கொண்டு வந்து கொடு!
எனது படுக்கை, திடீரென்று மரணத்தால் சுருட்டப்பட்டு விட்டால், என்னுடைய ஆசை, உறவுகளத்தனையும் வெறுங்கையோடு தெருவில் நிற்கக்கூடாது.
கொஞ்ச நேரத்திற்கு முன்னால் பார்த்த அந்த வான் பறவையின் வரலாற்றை எனக்கும் அறிவித்துவிட வேண்டும்.
பாம்பாட்டி தன் கூடையில் போட்ட பாம்பை, கூடையின் மூடியைத் திறக்கும் போதெல்லாம், அந்த அரவம் தலையை நீட்டுவதைப்போல, எனதுள்ளம், திறக்கப்படும் போதெல்லாம் – என்னுடைய ஆசைகள் தலை நீட்டுகின்றன.
துங்கு மூஞ்சி மரத்தின் இலைகள் அந்தி சாய்ந்துவிட்ட பிறகு தலையைத் தொங்க விட்டுக் கொள்வதைப் போல; என்னுடைய அந்திமக் காலத்தில், உண்மையைக் கண்டுபிடிக்கும் எனது ஆர்வங்கள் தொங்கப் போட்டுக் கொள்ளக் கூடாது.
நல்ல பகல் நேரத்தில், சவுக்குத் தோப்பில் கேட்கின்ற பேரிரைச்சல் போல – என்னுடைய இதயம், எப்போதும் இரைந்து கொண்டே இருக்கிறது.
திருவிழா முடிந்த பிறகு, விழா முடிந்தப் பெருமையில் ஊர் திரும்பும் பக்தர்களின் முகத்திலே இருக்கின்ற அமைதி -அந்தப் பறவையின் வரலாற்றை அறிந்த பிறகுதான்; எனக்கும் இருக்குமென்று நம்புகிறேன்.
இவ்வளவு பேராசை எனக்கு இருப்பதற்குக் காரணம் – நான் சிறு வயதிலேயே – தாயின் ஒரு மார்பகத்தில் பால் குடித்துக் கொண்டிருக்கிற போதே மற்றொரு மார்பகத்தை – யாரும் சுவைத்துவிடக் கூடாதே என்று எண்ணியப் பழக்கந்தான்.
இதை மனிதப் பேராசை என்று எண்ணிவிடாதே! குழந்தை ஒரு தெய்வம் இது தெய்வீக ஆசை!!
நீண்ட நாட்களுக்குப் பிறகு, என் நெஞ்சே! உன்னோடு நான் உறவாடுகிறேன்.
மனசாட்சியையும் -உன்னையும், சூழ்நிலைச் சந்தையில் – சொற்ப விலைக்கு விற்று – நெடிய நாட்களாக, மேற்கூறிய இரண்டுமற்றவனாக இருந்து கொண்டிருந்தவன்.
அறிவாளர் பனுவலாலும் – அறிந்தோர் மொழியாலும் – செறிந்தோர் அமைதியில் செழித்த அடக்கத்தாலும் இழந்த இரண்டையும் நான் திரும்பப் பெற்றேன்.
கடலுக்கு அடியில் இருக்கின்ற மணல், எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதாக எந்த கந்தகப் பூமியும் ஒத்துக் கொள்வதில்லை.
அதைப்போல, எனது இதயத்தின் அடித்தளத்தின் சூட்டை ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசைகள் – குளிர்ச்சியோடில்லை.
எண்ணமே! அதோ அந்தப் பறவை வருவதாகத் தெரிகிறது.
எனது கனவுகள் உருவம் பெற, அந்தப் பறவையிடமிருந்து ஒரு செய்தி கொண்டு வா!
நிலவுக்கு அருகில் இப்போது அப்பறவை என் கண்களுக்குத் தெரிகிறது.
அதன் வருகையால் அந்த நிலவு மேலும் குளிர்ந்து விட்டது: இல்லையெனில், கடல் பொங்குவதைப்போல் – பக்கத்திலே உள்ள நீர்வீழ்ச்சியின் தேக்கம், அலைகரம் நீட்டுமா?
திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவில், சந்தனத் தென்றல் நுழையும் போது – தொழுநோய்ப் பிடித்தவன் – தன்னுடைய வேதனையை மறந்து – அந்தத் தென்றலின் குளுமையையும் இரசிக்கிறான்!
அதுபோல, இழுக்கு அழுக்கால்; இன்னல் துன்பத்தால் வழக்காய் வாடிக்கொண்டிருக்கும் இந்த வியனுலகம் – ஆனந்தக் கூத்தாடுவதைக் கண்டேன்!
அந்த கிராம மக்களது கூச்சல், இப்போது சிறிது அடங்கியது!
நாடகம் முடிந்த அரங்கமும் ஆட்டம் முடிந்த இடுகாடும், அமைதியைத்தான் வைத்துக் கொண்டிருக்கும்!
பறவை, மலையின் உச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது!
பறப்பன ஊர்வன எல்லாம், இப்போது தலை தூக்கிப் பார்த்தன!
பூமியிலிருக்கும் எல்லா தாதுப் பொருட்களும் உயிரினங்கள் அனைத்தும், பூரித்து வெளியில் வந்தன!
இப்போது பறவை, உச்சியின் மீது தத்துவம் கூறும் ஞானியைப் போல, மிக அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தது!
தன்னுடைய அலகால், இறகுக்கிடையில் இருக்கின்ற தினவைப் போக்கிக் கொண்டது!
சிலிர்த்த இறகுகளை மேல் நோக்கி நிறுத்தி, ஜீவக் காற்றால் – தன் களைப்பைப் போக்கிக் கொண்டது.
கிராமத்து மக்கள் ஒடிவந்தார்கள். தன்னந் தனியனாய், நானும் அமைதியாய், நின்று கொண்டிருக்கும் என்னைச் கழ்ந்து கொண்டார்கள்.
எங்கள் கூத்தையும் – ஆட்டத்தையும் பார்க்காமல், இந்தப் பறவையையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே! இதனால் யாது பயன், என்று கேட்டனர்!
அதோ, அந்தப் பறவையின் வடிவத்தால் – வரவால் -தோற்றத்தால் – எல்லா உயிரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றன!
அந்தப் பறவையின் பொலிவிலே, உங்கள் கண்கள் மயங்கவில்லையானால், அது உங்களுடைய விழிகளது குற்றமென்றேன்!
‘அது ஒரு சோம்பல் பிடித்த பறவை’ என்று அவர்கள் கூறினார்கள்.
‘அது வான் வழியாக வந்த அறிவுத் தூதன், என்று நினைக்கிறாயா?’ என்று என்னைக் கேட்டார்கள்!
எனது எண்சாண் உடம்பும் அப்போது வணக்கத்துடன் – ‘ஆம்’ என்றது!
‘உண்மையை நீ உரைக்கமாட்டாய். ஒரு கிச்சிலிப் பழத்தோலை நசுக்கினாலும் கண் எரியக்கூடிய ரசமாவது கிடைக்கும்’!
‘உன்னைக் கசக்கிப் பிழிந்தாலும், நீ பொய்யைத் தவிர, உண்மையைப் பேசமாட்டாய்’ என்று உதாசினம் ஆடினர்:
என்னுடைய வார்த்தைகள்; உங்கள் தலைகட்கு மேலே ஒளிர்ந்து கொண்டிருக்கும் விண்மீனைப்போல் – இல்லை யென்றால், உங்களுடைய உடம்பில் ஒடிக்கொண்டிருக்கும் உயிரைப் போல உண்மையானது தான்.
உங்களுடைய கிராமத்திலிருக்கின்ற ஒரு கலைஞன், யாழை மீட்டுகின்றபோது வரும் உண்மையான சுவர ஜாலங்களைப் போல; அப்பழுக்கற்றவை.
கட்டாந்தரையைக் கழனியாக்க, நிலத்திலே தோய்ந்து பளபளக்கும் கார் முனையைப்போல – என்னுடைய உண்மைகள் ஒளிர்கின்றன என்று கூறுகிறேன்.
அந்தப் பறவை, அப்போது தன்னுடைய கம்பீரமானத் தோற்றத்தால் , கிராம மக்களைத் திரும்பிப் பார்த்தது! ஒரு குரல் எழுப்பியது! ஒரே ஒரு வினாடிதான்!
மனிதன் இறப்பை வென்றுவிட்டான்! அவனுடைய உடலிலிருக்கும் உயிரணுக்கள், இனி மரணத்திற்கு அஞ்சவேண்டியதில்லை!
இந்த உலகம்; என்று மனிதனுக்குப் பிறப்பைக் கொடுத்ததோ – அன்றே, இறப்பையும் கொடுத்தது!
ஆனால், அந்தப் பறவை, சாகா வரத்தைத் தந்துவிட்டு – விடிவதற்கு முன், சென்றுவிட்டது!
அறிஞர் அண்ணா அவர்கள், அந்த வான் பறவையைப் போல் உலகுக்கு வந்தவர்.
நாட்கள் தோறும் செத்துக் கொண்டிருக்கின்ற ஜனநாயகம், அறிஞர் அண்ணாவால் சாகாவரம் பெற்றது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற அந்தக் கிராம மக்களைப்போல – அரசியலில் கூத்தடித்துக் கொண்டிருப்பவர்கள், அறிஞர் அண்ணாவால் தெளிவு பெற்றார்கள்.
உலகத்திலுள்ள 96 மூலப் பொருள்களைப்போல், தத்துவத்திலுள்ள 95 அம்சங்களும், அண்ணாவால் பொலிவு பெற்றன.
அந்த வான் பறவை, என்று குன்றேறி நின்று குரல் கொடுத்ததோ – அன்றே அறிஞர் அண்ணாவைப் பற்றி அகிலம் அறிய ஆரம்பித்தது! –
என்னைப்போல், இனப் துன்பங்களைக் கவனியாமல், அண்ணாவை நெருங்கிப் பார்த்தாலொழிய, இந்தப் பேருண்மைகளைக் காணமுடியாது!
காணாதவர்கள், அந்த கிராம மக்களைப்போல் அறிவிருந்தும் அறியாதார், கண்டவர்கள், அப்பேருண்மையை மற்றவர்கட்கு விண்டிடும் ஆற்றலுடையவர்கள்!
குறிப்பு : விஞ்ஞான உலகத்தில் ஒரு பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பிறகு, இப்பொழுது ஒரு பேருண்மையைக் கண்டுபிடித் திருக்கிறார்கள்.
உலகம் தோன்றியது முதல், இதுவரையில், ஒரு விண்மீனின் ஒளி, நிலத்தை நோக்கி இன்னும் வரவில்லை.
ஒரு நொடிக்கு ஒரு லட்சத்து 36 ஆயிரம் மைல் வேகத்தில், அதன் ஒளியலைகள் பாய்ந்து வந்தாலும் – அக்குறிப்பிட்ட விண்மீனின் ஒளி, இன்னும் நிலத்தை அடையவில்லை.
அது மட்டும் நிலத்தை வந்தடைந்தால், மனிதனின் உயிரணுக்கள் சாகா என்றும், அதனால் மரணம் தவிர்க்கப்படும் என்றும், அந்த விஞ்ஞானிகள் ஒர் அறிக்கையில் கூறியிருக்கின்றனர். இந்த விஞ்ஞானப் பேருண்மையில் உருவானதே பேரறிஞர் அண்ணாவுக்கு பொருந்திய ‘நினைவஞ்சலி’யாகும்.
***
6. அண்ணா ஒரு கடல்!
வானத்தின் பிரதிபலிப்பால் அது நீல நிறமாகி இருந்தது!
சிரித்துக்கொண்டு அதன் மீது விளையாடும் அலைகளால், அதனைக் கடலென்றே மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
தேங்கியிருக்கும் குட்டையும் – கடலும், பூமியில்தான் இருக்கின்றன. குட்டைக்கு அலைகள் இல்லை; கடலுக்கு அலைகளுண்டு. இதற்குக் காரணமென்ன?
நாட்டைத் திருத்துவதற்காக நல்லவர்களிலே சிலர், கசப்பான உண்மைகளை, அவ்வப்போது வெளியிடுவார்கள்.
வானம் போன்ற உயர்வு, அத்தகைய மனித மேதைகளைக் காதலிக்கும். கடலையொத்த ஆழமான உணர்ச்சி, அந்த வானத்தைத் தாவித் தாவிக் குதிக்கும்.
இவை விஞ்ஞான அடிப்படையிலே எழுந்த உண்மைகளாகும். இந்த உலகம், இளகி – இறுகும்போது – முன்பு, தேக்கி வைத்துக் கொண்ட முதல் சொத்து கடல்.
தரணி, இடைக்காலத்திலே யாரோ ஒரு மனிதனாலே, கண்டுபிடிக்கப்பட்ட ஜனநாயகத் தத்துவமல்ல; இயற்கையின் அடிப்படைத் தத்துவமாகும்.
இன்றைய ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட ஒரு கட்சி; நாட்டை ஆட்சி செய்கிறது.
சிறுபான்மைக் கட்சிகள்; எதிர்க்கட்சிகளாக இயங்கிச் சித்ரவதைக்கும் ஆளாகின்றன. இவை ஜனநாயகத்தின் பெயரால் நடக்கின்றன.
இயற்கையின் ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட கடல், உலகத்தை அடக்கி, ஆண்டு, ஆட்சிபுரியவில்லை.
எதிர்க்கட்சியைப் போலுள்ள பூமிதான், மக்களை ஆட்சி புரிகிறது. வளமாக வாழ வைக்கிறது.
சிறுபான்மைக்கு சிறப்பான தகுதியை வழங்கியதோடு – பெரும்பான்மை நின்றுவிடவில்லை.
‘பூமியே!, நீ கொடுங்ககோலை ஏந்தினால், புரண்டுவரும் கடலலைக் கோள்களால், உன்னைப் புதைகுழிக்கு அனுப்புவேன், ஜாக்கிரதை’
கடல், தனது அலையோசையெனும் அபாய முழக்கங்களால், தலைவர்களைப் போல, அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றது.
இன்றைய ஜனநாயகமானாலும் – இயற்கையின் தத்துவ முறையானாலும் – இரண்டிலும், ஜனநாயக உள்ளம் தவழ்வதைப் பார்க்கின்றோம்.
அறிஞர் அண்ணாவின் உள்ளமும் – கடல் போன்றது!
இன்றைய ஜனநாயகத் தத்துவத்தை, அடிப்படையாகக் கொண்டதாகும்.
ஜனநாயகத் தத்துவத்திற்கும் ஆபத்தை உண்டாக்குவோர், அவர்கள் – எவரானாலும் சரி, தனது கடல்கோள் போன்ற எதிர்ப்பால், அவர் அந்த அபாயத்தை அழித்துவிடும் ஆற்றல் பெற்றவராவார்.
பெரும்பகுதி தண்ணீரை வைத்திருக்கும் கடல் நீரில், அறிஞர் அண்ணாவின் சீதளத் திரன் செறிந்த அறிவில், இயற்கையாகவே வெதவெப்பு இருக்கிறது.
அதன் விளைவுதான்; அண்ணா அவர்களால் குளுமையாகவும் பேசமுடிகிறது – அந்தக் குளிர்ச்சியிலே மெய்மறந்து போவார்களேயானால், செயல் தடைபடும் அல்லவா? அப்போது, வெதவெப்பால் அவர்களை எழுப்பியாக வேண்டிய கட்டத்திலும் அறிஞர் அண்ணா இருக்கிறார்:
கரையிட்டுத் தடுத்தால் கடல் உள்ளே வராது என்று – நல்லவர்களைச் சிறையிட்டுப் பழக்கப்பட்டவர்கள் – கடலுக்கு அருகாமையிலேயே, கரையாக இருக்கிறார்கள்!
கால வெள்ளத்தால், இதுவரை சக்தியிழக்காத கடலின் பயம், கரைகளுக்கு இருந்தே வருகிறது.
அறிஞர் அண்ணா ஒரு பெருங்கடல், அந்த ஊழி வெள்ளத்தை உப்புச் சிறையிட்டு ஒடுக்க, முனைந்தால் நீரின் நெருக்கத்தால் – கரையின் அணுக்கள் விலகியே நிற்கும். அதனைத்தான் கடற்கோள் என்கின்றோம்!
திராவிடரியக்கம், என்ற அலைக் கரங்களை வைத்திருக்கின்ற அண்ணா அவர்கள் – காங்கிரசின் பலமான கரையைத், தமிழகத்தில் விழுங்கியிருக்கின்றார்.
ஐந்தாண்டுத் திட்டங்களால், ஆழியை அடக்க முயல்பவன், வீறிட்டெழும் அலையின் வளைக் கரத்தால் எப்போதும் விழுங்கப்படுவான்.
உலகத்தின் பேரறிஞர்கள் – எப்போதும் இயற்கையின் திரட்சியாவார்கள். அவர்களின் மனோபல சக்தி, இயற்கையைச் சிறை பிடித்திருக்கிறது.
அறிஞர்கள் இயற்கையின் பகுதி என்று அறிந்த பிறகு, வெறும் பிரச்சினைகளால், உருவான அரசியல் கட்சிகளின் சட்டங்கள், அதனை ஒன்றும் செய்துவிட முடியாது.
கொந்தளிக்கும் கடலிலிருந்து மின்சாரத்தை எடுத்துக் கொள்ள முயற்சித்துக் கொள்ள வேண்டுமே தவிர, கரிக்கிறதே கடலென்று கருதி – கடல் மீது போர் தொடுக்கக் கூடாது!
அண்ணாவின் அறிவுரைகளிலிருந்து நாட்டுக்குரிய நல்லனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி, அவர் கட்சித் தலைவர் என்பதற்காகப் – புறக்கணிக்கக் கூடாது; அது புத்திசாலித்தனமுமன்று!
கடலைக் கூர்ந்து கவனித்தால், அதனுடைய ஆழம் அளப்பரிய தூரத்திலிருந்தாலும் – நீர்மட்டும், மக்கள் வாழும் நிலப்பகுதியோடு ஒன்றியிருப்பது தெரியும்.
ஆழ்ந்த அறிவுடையோர், எப்போதும் மக்களுடன் சரி சமமாகவே இருப்பார்கள். அந்தஸ்து – பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதைத் தவறாகக் கணக்கிட்டுக் கொண்டு, ஆழத்தை மேடென்று நினைத்து ஏறினால், அவர்களுடைய பயணம் பாதாளத்தை நோக்கித்தான் நடக்கும்!
அதோ அந்தக் கடல், அடிவானத்தின் உதட்டை, அனாதிக் காலந்தொட்டுச் சுவைத்துக் கொண்டிருக்கிறது.
எங்கு நோக்கினும் பரந்த விரிந்த நீர்த் தகடு, அமைதியோடு; தொடு வானத்தை தழுவிக் கொண்டிருக்கிறது.
இந்த மயக்கக் காட்சியிலிருந்து பாடம் பெற வேண்டியவர்கள், அதை மாயை’ என்று கூறி, பதம் குலைந்து விடுகிறார்கள்.
எவ்வளவுதான் உயரமான நிலையிலே ஒருவன் இருந்தாலும் – அவன் கடலைப் போன்ற ஆழ்ந்த அறிவாளர்களிடத்தில் அடிவணங்கித்தான் ஆக வேண்டும் என்பது – அடிவானத்தின் தத்துவமாகும்.
கரையிலிருப்பவர்கள், தங்களுடைய செங்கோலை வைத்துக் கொண்டு, அடிவானுக்கும் – ஆழிக்கும், ஏற்பட்டத் தொடர்பை அலட்சியமாக நினைக்கும்பொழுது – அடுக்கடுக்காக வருகின்ற அலைப் புரட்சியை, சாதாரணமாக நினைக்கும்பொழுது – எத்தனையோ கோல்கள், அந்த அகண்ட அறிவுக் கடலின் ஆழத்தில் விழுந்து, முழுகிவிட்டிருப்பதையும் காண முடிகிறது.
எதேச்சாதிகாரிகள், தங்கள் ஆணவக் கோலைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள் – கிடைக்கவில்லை.
நான் கற்பனை செய்யவில்லை. இப்போது கடலின் அடிபாகத்தில் இருக்கிறேன். அங்கே அலைகள் இல்லை.
நீரின் அமைதி – அழுத்தமானப் பாறைகளைப் போல, மவுனம் சாதித்துக் கொண்டிருக்கின்றது.
நான் கடலின் உள்ளிருந்து, வானோக்கி, அண்ணாந்துப் பார்த்தேன். ஒரே ஒளிமயம், நீர் மட்டத்தில் இருந்தது. இப்போது நான் வியப்படைகிறேன்.
ஒரு முழுநிலவு, எனது காலடியில் இருந்தது: நான் வெளி உலகத்தில் பார்த்த நிலவைவிட இந்த நிலவு ஒழுங்காக வரையப்பட்டிருந்தது.
ஒரு தடவை, அறிஞர் அண்ணா அவர்களிடம் இந்தக் காட்சியைக் காண முடிந்தது.
தூய அன்போடு இருக்கும் அவரை, “என்னை உங்களது அறி வாழத்திற்கு அழைத்துப் போங்கள்’ என்று வேண்டி நின்றேன்.
தம்பி! நீ ஓர் எஃகு தோளன் – புரட்சிமனோபாவம் கொண்டவன். ஆழத்திற்கு வந்து என்னைப் போல ஒடுங்கி விடாதே’ என்றார்.
நான் இனிப்புக்காக அழும் குழந்தைகளைப் போல அழ ஆரம்பித்தேன். எனது அன்புப் பிடிவாதத்தை அவரால் மீற முடியவில்லை. இதயத்தின் தாள் திறந்தார். நான் அதனுள்ளே வேகமாக ஓடிவிட்டேன்.
அங்கே, நான் பார்த்த காட்சி, கற்றக் கல்வியனைத்தும் ஒரு முழுமை பெற்றிருந்தது. அவற்றை உணர ஆரம்பித்தேன். அதன் மென்மை, நிலவின் நிழலைவிட அழகாக இருந்தது!
வெளியிலே அவர் சீறும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந் தார் – கடலின் வேகமான அலைகளைப் போல. ஆனால் கடலடியில், மோன உருவோடு, சலனமற்றிருந்தார்!
அறிவின் மேற்பகுதி, எப்போதும் விடுதலைத் தலைவர்களுக்கு அலையாகவும் – தொண்டர்களுக்கு நிலவாக இருப்பதையும் – என்னால் அறுதியிட்டுக் கூற முடிந்தது.
நான், தலைதூக்கி வான்முகட்டை நோக்கினேன். அப்போது ஒரு சிப்பி, வான் துளியைக் கவர்ந்து கொண்டு – மூடிய வாயைத் திறக்காமல் – கடலின் அடிவயிற்றை நோக்கி வந்து கொண்டிருந்தது.
‘சிப்பியே!’ என்றேன்.
‘ஆக்க வேலை அதிகமிருக்கிறது – பயணத்தைத் தடுக்காதே’ என்று, அது கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
இதனை வாயால் கூறிற்று என்று நினைக்காதீர்கள் மவுனத்தால் கூறியபடியே போய்க் கொண்டிருந்தது.
அறுந்தப் பட்டத்தை நோக்கிச் சிறுவர்கள்’துரத்திக் கொண்டு போவதைப் போல – நீரில் அலைபாய்ந்து செல்லும், நான்; சிப்பியை நோக்கி, ஒட ஆரம்பித்தேன்.
சிப்பி, கடல் பஞ்சின் குகையில் வந்து அடங்கியது. நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன்.
‘என்ன செய்து கொண்டிருக்கிறாய் சிப்பியே!’ என்று கேட்டேன்.
‘புதிய நீர்த்துளி விசும்பைவிட்டு நழுவிற்று; அதனைப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்துவிட்டேன்’ என்றது.
‘இதற்கு மேலே என்ன செய்யப் போகிறாய்? என்றேன். நான் குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்து, இதனை நல்முத்தாக்கி வெளியே விடப் போகிறேன்’ என்றது.
அறிஞர் அண்ணா அவர்களும், வானத்திலிருந்து நீர் விழுவதைப் போல – புதிய பிரச்னைகள் கீழ் நோக்கி விழுகிற நேரத்திலெல்லாம், சிப்பியாக நின்று – அதைக் கவர்ந்து விடுகிறார்.
மலரில் விழுந்த நீர்த்துளி, பனித்துளியின் உருவோடு தேனாகிறது. முத்துச் சிப்பியில் விழுந்த நீர்த்துளி, நீரைப்போல இளகி இல்லாமல், இறுகியிருக்கிறது. அதனைத்தான் நாம், முத்து என்கிறோம்.
இதழில் விழுந்தால் தேன் – சிப்பியில் விழுந்தால் முத்து.
சில அரசியல் தலைவர்கள், பிரச்சினைகளைத் தேனைப் போல ஆக்கி, எறும்பைப் போலுள்ள சாதாரண மனிதர்களிடம் கூடத் தெரிவித்து விடுகிறார்கள்.
அறிஞர் அண்ணா போன்றவர்கள்தான், சிப்பியை போல அந்தப் பிரச்னையை, அமைதியான இடத்தில் வைத்து – சிந்தித்து – அதே பிரச்னையைப் போல, திட்டத்தையும் தீட்டுகிறார்கள்.
வான், நீர்த்துளியாக இருந்தால், சிப்பியில் ஒரு முத்து தான் இருக்கும். அதாவது, தெளிவானப் பிரச்னைகளுக்கே, முத்தான திட்டங்களாகும்.
வயிற்றெரிச்சல் காரணமாகப் பிரச்னைகளைச் சிதறுகின்ற தன்மையில் பேசுகின்றவர்களுக்கு, அறிஞர் அண்ணாவின் சிப்பித் தன்மை அமைவதில்லை.
அவரை நோக்கி வருகின்ற பிரச்னைகளை அவர் தள்ளி விடுவதுமில்லை.
பக்கத்திலிருந்த சிப்பி, ஏற்கனவே அடிவயிற்றில் சுமந்திருந்த நீரை முத்தாக்கி, உலகுக்குப் பரிசளிக்கத் தன் கொடை உள்ளத்தைத் திறந்து கொண்டிருந்தது.
அப்பொழுது பொற்றுகளை – மணிக் குலத்தைக் கடல் முத்தைப், போயெடுக்க அடக்கிய மூச்செவரின் மூச்சு?, என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பாட்டைப் பாடிக் கொண்டே, இருவர் கீழே இறங்கி வந்தார்கள்.
முத்துக் குளிக்கும் அந்தத் தென்பாண்டி வீரர்கள் – சிப்பியை வரவேற்றனர். ‘சென்று வருகிறேன் தோழா’ என்று கூறி, அவனின் உழைப்பால் பொலிவான, ஆண்டாண்டுக்காலம் தமிழ் மன்னன் தடந்தோளில் சிப்பி சென்று – சிரித்தபடியே குந்தியது.
என்னுடைய எண்ணங்கள்; அறிஞர் அண்ணாவை – முத்து ஈனும் சிப்பியாக – முத்துக் குளிப்போர் கையில் தவழும் – சிப்பியாக எண்ணின.
எவனொருவன், தலைவனின் இதயத்தில் உருவானத் திட்டங்களைக் காலம் பார்த்து – உனர்ந்து – அதனை ஏற்றுச் செயல்படுத்த நெருங்குகிறானோ – அவனே, நல்முத்தை அடைகிறான்.
மிகவும் துன்பத்தை ஏற்று நாட்டின் வளத்தை உயர்த்த மூச்சடக்கி முத்துக் குளித்தாலொழிய – சிப்பி கிட்டாது.
அதனைப்போல, ஆளும் கட்சிக்காரர்கள் அறிஞர்களைத் தேடிச் சென்றாலொழிய நாட்டின் எதிர்காலம் நன்கு அமையாது.
நாட்டின் பெருந்தலைவர்கள், தங்களின் உண்மையான கீர்த்தியை, நெருங்கி வருபவர்களுக்கே வழங்குகின்றனர்.
எவ்வளவுக்கெவ்வளவு, பொருள்களை அதனதன் தகுதிகளைப் பார்த்து நாம் நெருங்குகிறோமோ – அவ்வளவுக்கவ்வளவு, அப்பொருள்களின் பயன், நமக்கு மட்டுமல்ல, மனித சமுதாயத்திற்கே கிட்டுகின்றது.
நான், கொஞ்ச துரம் அப்படியே கடலடியில் நடந்து சென்றேன். அங்கே கடற்செடிகள் இருந்தன. சங்குகள் பல வண்ணத்தில் காட்சியளித்தன.
கடல் செடி ஒன்றைப் பிடுங்கிக் கிள்ளிப் பார்த்தேன். அது மிகச் சுலபமாக என் கைக்கு வந்துவிட்டது. அதன் பசுமை, கடலின் கரிய நிறத்தைவிடக் கரும்பச்சையாக இருந்தது.
அதன் இலைகளின் மேலே, பஞ்சு போன்ற மென்மைச் சுணைகள் இருந்தன. இந்த இடத்தில் இது தழைப்பதற்கு அவசியம்தானா? என்று, எனது சராசரி மூளை கேட்க ஆரம்பித்தது.
அப்போது அந்தச் செடி, “நான் மீன்களின் இரையாகவே இங்கு இருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டது.
‘மீன் குஞ்சு’கள், என்னுடைய தழையால் வளர்ந்து, அதன் பிறகுதான், அவை புலால் உண்ண ஆரம்பிக்கின்றன.
‘இப்போது, என்னுடைய தண்டை உடைத்துப் பார், உனக்கொரு வியப்பான உணர்ச்சி தோன்றும்’ என்றது.
நான் அதன் தண்டை இரண்டாகப் பிளந்தேன். அதனுள்ளே அளவிடமுடியாத வெதவெதப்பு இருந்தது.
‘இந்தச் சூடு, அந்தத் தண்டுக்குள் எப்படி வந்தது? உனக்குத் தெரியுமா?’ என்று, பேசிற்று,
‘வைதீகனாக இருந்தால் எல்லாம் கடவுள் செயல்’ என்பாய். உன்னைப் பார்த்தால் பகுத்தறிவுவாதி போல இருக்கிறாயே!” என்றது.
நான் விழித்தேன். ‘ஒரு கரு வளர்வதற்கும் – அது வளர்ந்து உரு பெறுவதற்கும் – சூடும் குளுமையும் தேவை.
இப்போது நான் வளர்ந்திருக்கிறேன் என்றால், இந்தச் சூட்டாலும் – குளுமையாலும்தான்.
‘இந்தச் சூடு எனக்கு எப்படி வந்தது என்றால், என் உடல் பூராவும் இருக்கின்ற செல் என்ற உயிர்ப்புச்சக்தி – சூரிய ஒளியால், சூடான நீரில் இருக்கின்ற, வெதவெதப்பை உறிஞ்சிவிடுகிறது.
அதன் விளைவுதான், நான் நீரால், சூழப்பட்டிருந்தாலும், எனது உடல் – எப்போதும், வெதவெதப்பாகவே இருக்கிறது’ என்றது.
அறிஞர் அண்ணா அவர்கள், நீரால் சூழப்பட்ட கடற் செடியைப் போல, பாதகம் விளைவிக்கின்றவர்களுக்கு மத்தியில் இருக்கின்றார்.
உதயசூரியன் – மதிய சூரியனின் அருள் கேட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் பல கோடி ஏழை மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.
அவர்களின் துன்பச் சூட்டை நன்குணர்ந்த அறிஞர் அண்ணா அவர்கள்; அந்தத் துன்பத்தை மட்டும் – தான் – உறிஞ்சி வைத்துக் கொண்டிருக்கிறார். காரணம், அவரும் அந்தக் குடும்பத்திலே பிறந்த ஒருவரல்லவா?
பல கோடி மக்களின் நலனுக்காகப் பாடுபட உலகில் தோன்றிய எந்தத் தலைவனும், துன்பச் சூட்டைத் தானே உறிஞ்சி, எப்படி – கடல் செடி, தனது குளுமையான இலைகளை மீன் குஞ்சுகளுக்கு இரையாக்கி விடுகின்றதோ, அப்படித் தன்னைப் பொதுமக்களுக்கு இரையாக்கிக் கொள்கின்றான்.
கடல் செடி, நீரின் சூட்டை உறிஞ்சுவதற்கும் – தன்னையே மீனுக்குத் தீனியாக மாற்றிக் கொள்வதற்கும் உருவானதைப் போல, அறிஞர் அண்ணா அவர்கள், தன்னைப் பொது மக்களுக்கு அர்ப்பணித்தும்- அவர்களது துன்ப வேக்காட்டைத் தானுறிஞ்சிக் கொண்டும் வாழ்கிறார்.
கடலடியில் இருந்த எனது கண்கள், கொஞ்சம் தொலைவில் தங்க மூலாம் பூசியத் தகடாக மின்னிக் கொண்டிருந்த ஒரு பனி மலையின் மீது பதிந்தன.
கடலின் மேற்பரப்பில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் திங்கள் – அந்தப் பனிமலை மீது தனது கவனத்தை, தன் கதிரை செலுத்திய காரணத்தால் – அந்தப் பனிமலை, தங்கக் குவியலாக எனக்குத் தெரிந்தது.
அதனின் உச்சி, கடலின் மேற்பரப்பில் இருக்கிறது. அடிவாரத்தில்தான் நான் இருக்கிறேன்.
அந்த மலை – உலகம் தோன்றியதற்குப் பிறகு – பல கோடி நூற்றாண்டு இடையறாது பெய்த மழையின் காரணத்தால் உருவான கடலில், எப்படி வந்திருக்க முடியும்?
அந்த மலை, கடல் தோன்றுவதற்கு முன்பே உருவானதா? அல்லது கணக்கிட முடியாத அளவிற்கு வெப்பத்தைக் குறைத்துக் கொண்ட குளிர் காலத்தால் – நீர் இறுகிப் போனதால், ஆனதா? என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பனிமலையின் தோற்றம், அந்த அமைதியான கடலில் –
சூட்சமத்தால் தொங்கும் மணியைப் போல, ஆடிக் கொண்டிருக்கிறது.
அந்த மலையின் அருகே, “அக்டோபஸ்”, போன்ற கடல் மிருகங்களும் – திமிங்கலம் – சுறா போன்ற கடல் வாழ் பிராணிகளும், சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தன.
கடல் குதிரை போன்ற மிருகங்கள், அம்மலையின் மீது ஏறுவதும் – இறங்குவதுமாக இருக்கின்றன. அப்போது, நீர் மட்டத்தில் போய்க்கொண்டிருந்த கடல் கொள்ளைக்காரனுடைய கப்பல், அந்த மலை மீது மோதிச் சுக்கல் சுக்கலாக உடைந்து கொண்டிருந்தது.
நடுக்கடலில் இதுபோன்ற ஒரு பயங்கர நிகழ்ச்சி நடந்திருந்தாலும் – ஒன்றும் நடக்காதது போலவே, கடல் அமைதி யோடும் – அடக்கத்தோடும் ஆடிக் கொண்டிருந்தது.
அறிஞர் அண்ணா அவர்கள் பனிமலையைப் போன்றவர். அவர், ஆழமான கடலில், ஒரு கண்டாமணியைப் போல இருந்தார்.
ஆனால், ஊர் உடைமைகளைப் பொதுமக்களுக்கு விரோதமான சக்தியும் – கொடுங்கோலும் அபகரித்துக் கொண்டு வரும் அந்தக் கப்பல் கட்சிகளை; தனது புயல் வேகச் சக்தியால் மோதி, அவர் பொடி பொடியாக்கி வந்தார்.
இதிலிருந்து நான் பெற்ற பாடம் என்னவென்றால் – நிலம் தோன்றுவதற்கு முன்னாலேயே இருக்குமானால், அதை எதிர்க்கும் ஒரு பொய்ச் சக்தியும் இருக்குமானால், இவைகளின் போராட்டத்தை, நீதி எப்படி நியாயக் கண்கொண்டு பார்க்கிறதோ.
அதனைப்போல, பொதுமக்களது வாழ்க்கைக் கடலின் மத்தியில் – அவ்வாழ்க்கையின் மீதே ஊர்ந்து வருகின்ற கயவர்களை – உறுதியாக உடைத்தெறியும் ஆற்றல் பெற்றவர் அண்ணா அவர்கள் என்பதேயாகும்.
அறிஞர் அண்ணா அவர்களின் ஆழமான உள்ளத்தில், நீதியை – நேர்மையை – இழந்தவர்களைத் தட்டிக் கேட்கும் ஒரு நியாய புத்தியைப் பனிமலையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.
பனிமலைக்கு அடுத்து, வெகு தூரத்தில் கடலின் மேல் மட்டத்திற்கு வந்தேன். அங்கே பவழ மலைகள் காணப்பட்டதைக் கண்டேன்.
அத் தீவுகள், மிகக் குறுகிய அளவிலிருந்தாலும், அது – இந்த விரிந்த உலகத்திலிருக்கின்ற மக்கள் மதிக்கின்ற பவழத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறது.
பவழப் பூச்சிகள் உருவாக்கிய கூடுகள், இயற்கையின் பஞ்சபூதக் கட்டளையால் இறுகிவிடும்போதுதான், அவை நமக்குப் பவழங்களாக ஆகின்றன.
அந்தப் பவழங்களுக்கு மத்தியில், துளைகளை இட்டு, ஆரமாக்கிக் கொள்வதுதான் கலையறிந்தோர் செய்ய வேண்டிய பணியாகும்.
அறிஞர் அண்ணா அவர்கள் பவழப் பூச்சிகளின் கூண்டுகளைப் போல மிக விலையுயர்ந்தவராக இருந்தார்.
மிகச் சுலபமான இடக் கட்டத்திலும் – காலக் கட்டத்திலும் கிடைக்கக் கூடிய பொருளாக, அவர் இல்லை.
இயற்கையின் நெசவு வேலையால் ஆக்கப்பட்டவர், அவரை துன்பத்திற்கிடையில் கண்டுபிடிப்போருக்குத் தன்னுடைய பவழக் கூட்டையே ஒப்படைத்து விடுகிறார்.
பொதுவாகப் பவழக் கூடுகளைப் பெற விரும்புவோர்கள் – உயிரைப் பணயம் வைத்துக், கடற்பயணம் செல்ல வேண்டும்.
அண்ணாவின் அன்பு என்ற பவழத்தை அடைய விரும்புவோர்களும், தங்களுடைய உடைமைகளை இழந்து – சமுதாய நெரிச்சலினால் நொந்து போயிருக்கிறார்கள்.
தமிழர் தொடுத்த மொழிப் போராட்டத்தில், அண்ணாவின், திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தவர்கள், பவழக் கூட்டைத் தேடிச் சென்ற கடற்பயண வீரர்களைப் போல, தங்களது உயிரையே காணிக்கையாக்கி இருக்கிறார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள், உலக மக்கட்கு கடலைப் போன்று காட்சியளித்துக் கொண்டிருப்பதை எனது கடற்பயணத்தால் கண்டேன்.
நாள்தோறும், நான் கடற்காற்று வாங்கக் கடற்கரைக்குப் போகும் போது, கடலைக் காண்கின்றேன். அப்போது அறிஞர் அண்ணா எனது இதயத் திரை அரங்கிலே கல்லறையாகத் தோன்றுவதையும் காண்கின்றேன்.
***
7. நீ
அண்ணலே! பேரறிஞர் பெருந்தகையே! தென்னாட்டுக் காந்தி நீ!
அன்பு நீ! அறிவு நீ! பண்பு நீ! பைந்தமிழின் சீரிளமைத் திறம் நீ!
பருகா அமுதம் நீ! பாலின் நெய் நீ! பழத்தின் ரசம் நீ! பாட்டின் பண் நீ!
பரிதி நீ! கொள்ளும் கிழமை நீ!
உவமை ஒன்றுக்குள் அடங்கா உருவம் நீ!
உள்நின்ற நாவிற்குள் உரையாடி, நீ! பாகன் நீ!
கருவாய் உலகுக்கு முன்தோன்றி, கண்ணறிவு ஒளிகாண கருவும் நீ!
திருவே! என் செல்வமே! என் புகழே, நீ!
செழுஞ்சுடரே செழுஞ்சுடரின் சோதியே நீ!
உருவே! என் உறவே! ஊனே! ஊனின் உள்ளமே!
உள்ளத்தின் உள்ளே உரைகின்ற உயிரணுவே! என் அறிவே! கண்ணே!
கண்ணின் கருமணியே! மணியாடு பாவாய், நீயே!
பகைவர்க்குத் தீ, நீ! தகிப்போர்க்கு நீர், நீ!
எளியோர்க்குத் திண்மை, நீ! வழி பிறழ்ந்தார்க்குத் திசை, நீ
அந்தத் திசையில் திகழும் இயற்கை, நீ! இயற்கையின் எழில் நீ
விண் நீ! விண்ணில் ஒளிரும் மின், நீ! ஞாயிறும் திங்களும், நீ
காய் நீ! கனியின் நின்ற சுவை நீ!
மணம் விரவும் நுகர்ச்சி நீ! நிலை குலையா அரசியலும் நீ!
நான் – நீயாகி, நேர்மையாகி, நெடுஞ்சுடராகி, நிமிர்ந்து நிற்பதற்கும் வேண்டும் – நீயே!
நாட்டினர் விரும்புகின்ற சோசலிச வித்தும் நீ!
அமைதியான அரசியலுக்குரிய, ஜனநாயகத் தாய் நீ!
வறியவர்கட்கும், உழைப்பவர்கட்கும், சுற்றம் நீ!
பொன் செயும் பொருளாதாரத் தத்துவம் நீ!
மன்பதைக்குத் துணையாகும், அமைதி நீ!
தன்னலத்தை மறுத்த, தாய்மை நீ!
தழைப்பதற்கே நிலைத்து நின்ற, தத்துவச் சுரங்கம் நீ!’
உற்றிருந்த உணர்வுக்கு உருவம் நீ!
உற்றவர்க்கு சுற்றமாய், நின்றாய் நீ!
கற்றறிந்த கலைஞானம், முழுமையும் நீ!
பெற்றிருந்த தாய், அவளின் அன்பும் நீ!
பின்னியெனைப் பிணைக்கின்ற, பிணைப்பும் நீ!
வற்றாத அறிவுக்கு மூலமாகத் திகழ்பவர் நீ!
வண்டமிழாள் ஈன்றளித்த தலைமகன் நீ!
உதயத்தின் உச்சியே! உலகத்தின் உண்மையே நீ!
பனிமலரே! பன்னூல் பயனே! பாசத்தின் குருதியே நீ!
திருமணியே தீந்தமிழே! தித்திக்கும் தேன்பாகே நீ!
தீங்கரும்பின் இன்சுவையே! திகழும் சோதியே நீ!
அருளே! அருட்கருவே! அன்பின் இலக்கணமே நீ!
ஒருவனாய் உலகுக்கு வந்துதித்த ஒழுக்கமே நீ!
ஓருருவில் மூவுருவம் ஆனாய் நீ!
கருவறுத்து இந்தியினைக் காய்த்தோன் நீ!
கனித்தமிழின் கனிச்சாற்றால் சுவை தந்தோன் நீ!
மருவற்ற சொல்லாட்சி செய்பவனே, நீதான்!
மான் அமைதி நெஞ்சம் கொண்ட மாமேதை நீ!
அறிவொளியால் எமை ஆட்கொண்ட அருட்செல்வன், நீ!
‘வசவாளர் வாழ்கவென, வைதாரை வாழ்த்தியவன் நீ!
திருவிடத்தின் முழு உருவம் தந்தாய் நீ!
ஒசை ஒலியெலாம் ஆனாய் நீ!
ஒண்டா உள்ளங்களில் ஒடுங்கினாய் நீ!
மலைமுகடு மாருதத்தின் மென்மையெலாம் நீ!
பிழைத்தாரைப் பொறுத்தருளும் நீதான்
தேசப்பற்றெலாம் தேக்கமாய் நின்ற ஒளி நீ!
கல்லாதார் மனக் கண்ணைத் திறப்பவன் நீ!
பொல்லாத நெறிமுறைக்கு வெல்லாத வைரி நீ!
பொல்லாங்கை வீழ்த்துகின்ற பகையும் நீ!
நில்லாத ஆணவத்தின் கடும் வலிவைத் தகர்த்த மாறன் நீ!
செல்லாத அரசியலைச் சரிய வைத்த தந்திரி நீ!
செந்தமிழின் காவலனாய் நின்றவனும் நீயே!
குறளெனச் சிறு உருவம் கொண்டாய் நீ!
கண்டு தமிழுண்ட சங்கத் தமிழ் மேதை நீ!
இழையான சொற்களைப் பிழை நீக்கி ஆள்வோய் நீ!
இச்சைக்கு வளையாத இல்லறத் துறவி நீ!
இல்லந்தோறும் வித்தைத் தூவினாய் நீ!
பெரிய மனதால் எதிரியையும் ஆட்கொள்ளும் அரிய பிறிவி நீ!
பேணும் தொண்டர்கட்குப் பெரியவன் நீ!
என்றென்றும் மாறாத இன்பம் நீ! எழிலார்ந்த காட்சி நீ!
எண்ணங்களைச் சிறையிடா ஏந்தல் நீ!
எந்நாடும் தலை வணங்கும் இனிய பண்பாளன் நீ!
பேராயிரம் பரவி, புவியார் வாழ்த்தும், எமது அண்ணன் நீ!
பிரிவிலாத தோழர்கட்கு தேர்வாய் நின்ற பயன் நீ!
அரச தந்திரத்தின் ஊற்று நீ!
மக்களை ஏய்க்கும் நோய்க்கும் மாமருந்து நீ!
வஞ்சம் அல்லை! கயமை அல்லை நீ!
வன்கொடுமை நெஞ்சம் அல்லை நீ!
மயக்கமல்லை! புதிருமல்லை நீ!
குழப்பம் அல்லை: நஞ்சும் அல்லை! ‘நா’ சறுக்கி வீழ்வானும் அல்லை நீ!
நப்பாசை அல்லை! பேராசை அல்லை! நாச நினைப்புமல்லை நீ!
தஞ்சமென வீழும் நோஞ்சான் அல்லை! பிறிதும் அல்லை! அல்லை நீ!
சிந்தனையின் சிகரமே நீதான்! உனது எல்லை அறிவின் எல்லை!
உன்னை நெருங்குவோருக்கு இல்லை, தொல்லை!
தமிழ் முல்லைக் கொழிக்கின்ற மலர்க் கொல்லை நீ!
பற்றி நின்ற வாழ்க்கை வேதனைகள், பறக்க வேண்டில்
பரவியிருக்கும் பஞ்சமெல்லாம் நகர வேண்டில் –
சுற்றி நின்ற லஞ்ச லாவண்யங்கள் ஒழிய வேண்டில்;
செந்தமிழின் பகையான இந்தி ஒழிய வேண்டில்;
உற்றதொரு தமிழகத்தில் உயர்வே வேண்டில்;
உழைப்பவர்கட்கு உயர்வளிக்கும் உன்னத வாழ்வு வேண்டில் –
கொற்றமெலாம் மக்கட்கு ஆக வேண்டில்;
காஞ்சி நிலக் கருவூலம் அண்ணனே – வேண்டும் நீயே!
பட்டுடுத்த மாட்டாய் நீ பகட்டாக வாழ விரும்பாய் நீ!
பவழச் செவ்வாய் வெற்றிலையால் சிவக்கின்ற இதழுடையோய் நீ!
பாதம் நோவ, இட்டடியிட்டு ஊரூர்ஒடி, கட்டவிழ்ப்பாய் கொள்கையை நீ!
விட்டொழிய மாட்டாய் குறள் வாழ்வை நீ!
விலை பேச முடியாது உன்னையே நீயே!
வட்ட நிலா வடிவம் கொள் குடையின் கீழ்
சுட்ட செழும்பொன் சுடரவிழ்க்கும் கோன் நீ!
திருப்பெயராம் உன் மூவெழுத்தைச் செப்பாராகில்;
திரிவண்ணந் திறங் கொள்கைப் பேசாராகில்;
இரு வண்ணக்கொடியினை ஒருகாலும் ஏந்தாராகில்;
உன் பொதுக் கூட்டத் தேனமுதை உண்ணாராகில்;
அரசியல் நோய் கெட உம்மை அணுகாராகில்;
உன் அணிவகுப்பில் முன் நிற்க உந்தி ஓடி வாராராகில்
பெரு நோய்கள் அரசியலில் தொத்திச் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகிப் பிறந்தார் என்பேன்!
குறளானை, இலக்கியக் குன்றானை, கற்பனை ஊர்தியானை,
தத்துவக் கடலானை, தூற்றல் நஞ்சை உண்டானை,
நாடகத் துறையானை, நல்ல பகுத்தறிவால் குறை தீர்ப்பானை,
இன்னமுதச் சொல்லாட்சி ஈவானை, நடமாடும் இலக்கியத்தானை,
மக்களவையில் மருள் நீக்கிய பேச்சால் ஐயம் தீர்த்தானை!
என் உள்ளத்து உள்ளே ஒளிந்து வகை செய்யும் நிறைவோனை
காலத்தின் ஏழெட்டோடு, ஈரெண்டாண்டையும் கடந்தானைக்,
காஞ்சி வாழ்ந்திட்ட பேரறிஞனை, உணராதார் செந்நெறிகளைப் போற்றாதாரே!
எல்லாமே எனது அண்ணன் என்று நின்றாய் போற்றி,
மல்லோட்டி எமை மக்களாக்கிப் படைத்தாய்ப் போற்றி
மதி பழுத்தறம் சொற் கணிச்சாறுகளால் எமை மதிக்க வைத்தாய் போற்றி,
கல்லாதார் காட்சிக்கும் அரும்பொருளானாய் போற்றி,
கற்றார் இடும்பைக் களைவாய்ப் போற்றி,
கொல்லாத சொல்லளிக்கா நாவோய் போற்றி:
தென்னாட்டுக் காந்தியெனும் பேரறிஞர் போற்றி!
காஞ்சிக் கோட்டமே, கடிகையே போற்றி! போற்றி!
***
8. அண்ணா ஒரு தமிழ்ப் பூ மாலை!
எங்கள் அண்ணனே தத்துவத்தின் தேக்கமே! எதிர்காலத்தின் ஆக்கமே!
கிழக்காசிய நாடுகளைச் சுற்றி விட்டு வந்த உதய சூரியனே!
கடல் கடந்த நாடுகள் தங்களைப் புகழ்ந்து, கோலாகல வரவேற்பைத் தந்தன!
எதிரிகளும் ஊமையாகும்படி கலாச்சாரத் தூதுவராய் சென்று: கீர்த்திக் கொடி நாட்டிவிட்டு வந்தீர்!
தலைநகரம்; உமக்கு வீர வரலாற்று விழாவெடுத்துத் தாங்கொணா மகிழ்ச்சியுற்றது!
அது கண்டு; நாங்கள் தேனில் விழுந்த எறும்பு களானோம்!
உம் தோற்றம் கண்ட இடமெல்லாம்; மக்கள் பூந்தோட்ட மாயினர்!
உம் நோக்கம் படர்ந்த இடமெல்லாம்; வீரத்தின் விளையாடலாகத் திகழ்ந்தது!
அண்ணனே! நீர் தறுகண்மையின் தோற்றுவாய்!
இனியனே! பனியனைய மலர்க்கண்ணா!
பாவையர் கூட்டம் உம் பளிங்கு முகம் கண்டு, தமிழின்
தலைமகனே வருக வருகவென்று பள்ளுபாடிற்றே!
அன்னைக் குலம் ஆரத்தி எடுத்து அகமகிழ்ந்தனவே!
அன்பு மாலைகள் ஆயிரக் கணக்கில் விழுந்தன; உமது அழகூட்டும் அணாருக்கு.
சிறுவர்கள் இனிப்பு வழங்கினர்;
வெடித்த எரிமலையோ – பிளந்த பூகம்ப எதிரொலியோ என்று; மக்கள், ‘அண்ணா வாழ்க’; என்ற வீரமுழக்கமிட்டனர்!
அந்த ஒலி முழக்கங்களைக் கேட்ட அரசியல் எதிரிகள் – மூக்கின் மீது விரல் வைத்தனர்!
புருவத்தை மேலேற்றினர்; புல்லரித்த மக்கள்!
உம்மை வரவேற்க – இன்முகங்காண; அமுத சொற்களைக் கேட்க, எமக்குள் எத்துணைப் போட்டி அண்ணா!
பரி பூட்டிய தேரிலே; தமிழ் மன்னவனே உம்மைப் பார்த்துப் பரவசமடைந்தோம்!
உதயசூரியன், வானவீதியிலே உல்லாச பவனி வருவதைப் போல, காட்சியளித்தீர்!
‘அடடா…வோ! அண்ணாவின் தலைமுறையிலே வாழ எடுத்த பிறவியே பிறவி என்று, எம்மை யாமே, ஏற்றிப் போற்றிக் கொண்டோமே!
மண்ணிலே வேலி போடலாம்; விண்ணிலே போட முடியுமா?
உடலைக் கட்டலாம்; உயிரைக் கட்ட முடியுமா?
விழா என்ற பெயரிலே விண்ணிலே வேலியமைத்தவர்களைத் தமிழகம் கண்டது:
உயிர், இவர்களிடம் உத்திரவு பெற்றுப் போவதைப் போல, அதையும் கட்டுகின்றோம் என்றார்கள்:
நாங்கள் அத்தகையச் செயல்களை நாடவில்லை!
ஏழை மக்கள், இதயம் குளிர பாராட்டுவதைக் கண்டோம்!
மாடி வீடுகளிலே நின்ற மக்கள், மாலைகளை வீசியதை மனமாரக் கண்டோம்!
குடில் மன்னர்கள், குதூகலத்தால் பூப்பாவாடை விரித்ததைப் பூரித்துப் பார்த்தோம்!
தொண்டர்கள், தங்கள் தேரோடும் வீதிகளிலே எல்லாம் மண்ணாகிக் கிடந்தார்கள்! ஏன்?
உயிர் எமக்கு பெரிதல்ல; அண்ணன் அன்புதான் பெரிதென்று:
அதனைப் பெற உயிரையும் விலையாகத் தருவோம் என்ற ஆர்வமேலிட்டால் காட்சியளித்தனர்.
எமது இதயவீணையை மீட்டி ஏழிசைப் பாடி வந்தோம் – ஊர்வலத்திலே!
நரம்புகள் எழுப்பிய நாதமாக, நடை பாட்டு இசைத்து வந்தோம்!
இதற்கெலாம் காரணம் என்ன? எங்கள் இலட்சியமே அறிஞர் அண்ணாதான்!
எங்கள் வாழ்வும் வளமும், அறிஞர் அண்ணாவே என்ற எண்னம் தான்!
இதைவிட யாம் பெறும்பேறு; இப்பிறவியில் இல்லை என்பதை உணர்ந்த காரணத்தால்தான் அண்ணா!
கடிக்க நனி சொட்டும் கரும்பு!
மோப்ப மணக்கின்ற மலர்!
கேட்கப் பரவி வரும் இசை!
நோக்கம் எழிலீயும் காட்சி!
உணர சுகந்தரும் தென்னல்!
எண்ண எண்ண இனிமை தரும் அறிவு!
இத்தனையும் வென்ற ஒரு பெருந்தலைவர் நீர்தானே, அண்ணா!
மாணிக்க விளக்கின் மரகதத் தீபமாக இருந்தது – எங்கள் வரவேற்பைத் தாங்கள் ஏற்றபோது:
மாசறு உமது முகத்திற்கு, இதற்குமேல் உவமை கூறமுடியவில்லையே அண்ணா!
ஆட்சிக் கோணலை நிமிர்த்திட: முழக்கமிட்டீர் கடற்கரையிலே!
காசறு கொள்கைக்கு காவலராய் நின்றீர்!
மேதகு மேன்மையால் மிளிர்கின்ற தங்களது அறிவுரைக்கு, கோடி வணக்கங்கள் செய்தோம்!
புதிருக்குப் புதிராகின்ற புலவோய்!
எதிருக்கும் எதிராய் உம்மை எதிர்க்கின்ற சக்தி ஏது?
நாட்டிலே நீங்கள் ஒரு பிரச்சனையாகி நின்றீர்!
ஆட்சி பிரச்சனைக்கு நீங்கள் ஒர் ஊழி!
வரலாற்றில் நீங்கள் ஒரு பென்னேடு!!
இலக்கியத்தில் நீங்கள் ஒரு காவியம்!
‘நேற்று’, நீங்கள் இல்லாததால் கலங்குகிறது!
‘நாளை’ உங்களுக்காக ஏங்கி நிற்கிறது!
அறிஞரே! மெரீனா கடற்கரையிலே நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டோம்!
உடல் புல்லரித்தது! உவகைக் கலமேறினோம்: வங்கக் கடலிலே உலவி வலம் வந்தோம்:
தமிழாய்த் திகழ்ந்து, திருக்குறளாய் சிரித்தீர்கள்!
பூகோளமாய் விளங்கி, முல்லை நிலமாய் நகைத்தீர்கள்:
கணிதமாயிருந்து, வகுப்பன வகுத்து, கழிப்பன கழித்தீர்கள்!
கூட்டுவதைக் கூட்டிப் பெருக்குவதைப் பெருக்கினீர்கள்!
சரித்திரமாய் இருந்து; சமாதானத்தை நிலை நாட்டி, பொற் காலத்தை உருவாக்கியவருக்குப் பெயர் அறிஞர் அண்ணா!
விஞ்ஞானமாய் விளங்கி, புதியன கண்டுபிடித்து ஈந்து, எமைப் புதியதோர் குடிமக்களாகிய வித்தகர் அண்ணா!
மனோதத்துவமாய் திகழ்ந்து, எமது மனக்குறைகளை மன்னிக்கும் மாமேதையின் நாமம் அண்ணா!
தத்துவமாய் எமை உருவாக்கி, மோன நிலையிலே ஆழ்த்தும் அறிஞர்க்கறிஞரது பெயர் அண்ணா!
அண்ணலே! தென்னகத்து மன்னவனே! தங்கள் பெருமையை உலக நாடுகள் உணர்ந்துவிட்டன:
அதனால், நாங்கள் தங்களுடன் ஐக்கியமாகிவிட்டோம்.
தமிழ் மாலை சூட்டித் தங்களைக் கண்டோம் பூரித்தோம்! பெருமையுற்றோம்.
‘அறுபத்தேழு’ பற்றி நீங்கள் ஆற்றிய கருத்துகளை அகத்திலே இருத்திக் கொண்டோம்!
‘கருமமே கண்ணாகி, கொள்கைப் பகையை அரியணையிலேயிருந்து இறக்குவதே எமது பணியென்று ஆற்றினோம்! அதைத் தங்கள் காலடிக்குக் காணிக்கையாக்கிக் களித்தோம்!
இந்த சபதத்தை எம் இமை மூடினும் மறவோம்! மறவோம்!
***
9. அண்ணா ஒரு தென்றல்!
தமிழெனும் கன்னிப் பெண் தோன்றிய பொதிகையிலே பிறந்த தென்றலே!
அறிவெனும் மணத்தைத் தமிழ் அவனியிலே கமழவைக்க மழலை நடைபோட்டு வரும் வசந்தனே!
பொருப்பை விட்டெழுந்து, பொறுப்போடு விருப்பு வெறுப்பற்று, நீ தமிழகத்தில் உலா வருகிறாய்!
உனக்கிருக்கும் கடமை உள்ளம், அரசுக் கட்டிலிலே ஆரோகணித்திருப்போருக்கும் இல்லையே, என்று நகை புரிகிறாயா? செய்! செய்!
மலர்த் தோழா! நீ வந்து விட்டாய் என்பதைத் தாமரை பூத்துத் தண்ணழகு பெறும் தடாகங்கள் மூலம், நான் நோக்குகிறேன்!
மனம் நிறைந்த காற்றாக – இளம் வேனிலாக, நீ, சில்லென்று என்னை விசிறி விடுகிறாய்!
மனதை மயக்கும் மாலைப் பொழுது: உனைக் கண்டு மகிழ்வுறுவதைப் பார்க்கிறேன்.
காதல் கனிந்த காரிகையர்கட்கு; உன் வரவு சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரிப் பொழிந்ததைப் போன்றதாகிவிடுகிறது.
தேன் வெறி பிடித்த வண்டுகள், அப்போது எழில் மலர்களை முத்தமிடுகின்றன.
சிரிக்கும் பொழுது பற்களை பீறிக் கிளம்பும் வெண்மை நிற ஒளியொத்தக் ‘குருக்கத்திப் பூ’; மலர்ந்து மணம் பெறுகிறது.
பண்தேரே! காதல் என்ற மன்னன் உன்னைக் கண்ணுற்ற பின்தான், நீ கன்னிப் பெண்களை வேட்டையாடப் புறப்படுவதாகத் தமிழ் இலக்கியங்களிலே படித்திருக்கிறேன். நான்.
வெண்ணிலா உனது குடை! வசந்தம் அமைச்சன்! உன் புகழேற்றும் இசைவாணர்கள் குயில்களாமே!
பலாச மலர்கள் உனது வில்லா? வட்டமிட்டொலிக்கும் வண்டினங்கள் நாணா? மாந்தளிர்கள், அம்புகளா உனக்கு?
ஆகா! உன் பெருமையை எப்படிச் சாற்றுவேன் இளங்காற்றே!
தென்னலே! காதல் மன்னன் உன்னைக் குஞ்சரமாக ஊர்ந்து பவனி வருகிறானாமே!
சபாஷ்! யானையின் பலம் உனக்குண்டோ! அப்போது உன் மதிப்பு உரைக்கவொணாததன்றோ.
தென்றலே! நீ பிறந்த இடத்தை விட்டு வருகிறபோது மலர்க் காடுகளைக் காண்கிறாய்!
காவைக் கண்டிருப்பாய்! கன்னல் – செந்நெல் காடுகளையும் பார்த்திருப்பாய்!
அல்லி உன்னைக் கண்டு சிரிக்குமாம்! தாமரை என்ற அரசியல் நோயாளிகள் அச்சத்தால் கூம்பி விடுவார்களாம்! ரோஜா ஆலவட்டம் வீசுமாம்! மல்லி மஞ்சம் விரித்திருக்குமாமே – உனக்காக. இது உண்மைதானே இன்பக் காற்றே!
ஆஹா…. ஹா! உன் அழகே அழகு! அழகு சிரித்தாடும் மலர்களையே, நீ தன் வயப்படுத்திக் கொள்ளும் சக்தி படைத்திருக்கிறாயே! என்னே உன் ஆற்றல்! அன்பு! பண்பு!
வரும் வழியில் இத்தனை இயற்கை அழகுகளைக் கண்டு புளகாங்கிதமுற்ற நீ, அதோ இருக்கும் அந்த இருண்ட காட்டில் நுழைந்தாயா?
புகுந்திருப்பாய், புகுந்திருப்பாய்! உன்னைத் தடுப்பவன் யார்? நீதான் எங்கும் நுழைபவனாயிற்றே!
அந்த இருண்ட காடு தான், எனது சமுதாயம்!
என் சமுதாயம் காடாகத் திகழ்ந்ததால், அங்கே சேறும் சகதியும், காணப்படுகிறது.
அந்த நாற்றத்தை உமது சீர்திருத்தக் கொள்கையால் சீர்படுத்துகிறாய் நீ!
மேடு பள்ளங்களைக் கொண்ட சமுதாயத்தை, நீ சமத்துவச் சமன்படுத்துவதை நான் உணர்கிறேன்.
இல்லாவிட்டால் கருங்காலி மரத்தை யொத்த சில மக்கள் மீது, சந்தன மரத்தின் நறுமணத்தை தவழ விடுவாயா?
சந்தன மரத்திலே நீ தவழும்போது, அந்த மரத்திலே தேன்கூடு ஒன்று கட்டப்பட்டிருந்தது.
தேன், இனிப்பைத்தான் தரும். சுவைக்கப்படும் பொழுது நீ அந்தத் தேன்கூட்டிலே தவழ்ந்ததால், அது மனத்தையும் தருகிறது. என்னே உன் சேவை!
காட்டிலே, நீ உலவப் புறப்பட்டபோது, புன்னை, தேக்கு, ஒதியம், வேம்பு, பூவரசு, மூங்கில், தூங்குமூஞ்சி, கொங்கு போன்ற பல மரங்களையும் பார்த்திருப்பாய்.
இருண்ட கானகத்திலே மட்டுமா அவை உள்ளன இருண்ட என் சமுதாயத்திலே அவை மலிந்து கிடப்பதையும் கண்டிருக்கிறாய்!
அதனால்தான் அவற்றைத் திருத்த, சந்தன மரம்போன்ற உயர்ந்த பண்புகளைப் பரப்பி, நீ சமுதாயத்தை மணம் கமழச் செய்கிறாய் என்று எண்ணுகிறேன்.
இந்த உன் செயலும் ஒரு சமுதாய சீர்திருத்தந்தானே!
இன்றேல், ‘தூங்குமூஞ்சி’களைத் தட்டி எழுப்பி, வேம்பு மூலம் சித்த வைத்தியம் செய்திருப்பாயா?
புன்னைப் பூ அழகானது. என்றாலும், சிறு காற்றையும் தாங்க முடியாமல் தலை கவிழ்ந்து கீழே உதிர்வதைப் போன்ற என் சமுதாய பலவீனர்கட்கு, வைரம் பாய்ந்த தேக்கின் பலத்தையும் வளத்தையும் வழங்கிட நினைப்பாயா நீ?
அவற்றின் உடல்களை ஆரோக்கிய முறையிலே வளர்க்க – சந்தனக் காற்றை நீ, ஊட்டுவது ஏன், என்பதை அறிந்தேன்.
மூங்கில் மூலமாக இசையை எழுப்பி, அவர்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளிக்கிறாய்.
இவையும் சீர்திருத்தமல்லவா? பொதுநலத்தொண்டல்லவா? தென்றலே: இந்த உதவிகளை இருண்ட காட்டுக்கு மட்டுமா செய்கிறாய்? நோய்வாய்ப்பட்ட நம் சமுதாயத்திற்குமன்றோ கூலிபெறாமல் புரிகிறாய்!
நீயன்றோ நீனிலம் புகழும் சீர்திருத்தவாதி! உன் சேவை நீடு புகழ் வாழ்க! வளர்க நின் கடமை உள்ளம்.
சிறுகாலே! சந்தனக் காட்டிலே நீ தவழ்ந்து வரும்போது ‘பூ’வை அணைக்கிறாய்!
‘பூ’ என்றால், பூ, உலகம்தானே! பூவான பூமியை – உலகத்தை, நீ கட்டி அணைக்கின்றாய்.
பூவை நீ அணைக்கும்போது, அதனுள்ளிருக்கும் தாதுவான மகரந்தத்தையும் அன்றோ – மகிழ வைக்கிறாய்!
அந்த தாதுக்களும், உன்னை உளமார சிரித்து, வாழ்த்தியன்றோ, இனிமையாக வரவேற்கின்றன!
பூவான பூமியை, நீ அணைத்து உலா வரும்போது, அந்தப் பூமியில் வதியும் மகரந்தம் போன்ற மக்களும் – உன்னைக் கண்டு இதயப்பூர்வமாக சிரித்து, வாழ்த்தி, வரவேற்கிறார்கள்.
தென்றலே! நீயும் மனித இனத்தின் உள்ளங்களை ஆட்கொண்டு அவர்களை அகமகிழ வைக்கின்றாய்!
மக்கள் உள்ளமும் மலரைப் போன்று மென்மையானது அல்லவா!
அதனாலன்றோ, அவர்கள் உன்னைக் கட்டித் தழுவி ஆர அணைத்துப் பூரிக்கிறார்கள்.
தென்றலே! நீ யார்? ஏனென்றால், உன் பெயரை மட்டும் தான், நான் கேட்டிருக்கிறேன்.
உன் ஊர், தாய் தந்தையர் பெயர் தெரியவில்லை! ஏதோ அருவமாக மாலை நேரங்களில் வருகிறாய்!
குறிப்பிட்ட வசந்த காலத்தில்தான் – என் அகக் கண்ணால், உணர்வால், நான் உன்னைக் காண்கின்றேன். நேரில் பார்க்கலா மென்றால்தான் முடியவில்லையே!
நீ ஆணா பெண்ணா என்று, என்னால் அறிய முடிய வில்லை! புலவர்கள் உன்னைப் பெண் என்று கூறுகிறார்கள்.
‘தென்னன்’ என்ற பெயரும் உனக்கு உண்டல்லவா? அதனால் நீ, ஆணாக இருப்பாயென்று நம்புகிறேன்.
ஆணாக இருந்தால் நீ பெண்ணைக் காதலிக்க உரிமையுண்டு.
பெண்ணென்றாலும் சரி; நீ ஆணைக் காதலிக்க முடியும். ஆனால், நீதான் ஆணையும் பெண்ணையும் காதலிக்கின்றாயே!
அதனாலன்றோ உன்னைக் கண்டதும், ஆண் – பெண் இருபாலருக்குமே காதல் நோய் முகிழ்த்து விடுகிறது:
இது என்னே உன் கோலக் கூத்து! உன்னை நம்ப முடியவில்லை தென்றலே! ஏனென்றால், நீ இருவரையும் கிள்ளி மோத விட்டு வேடிக்கைப் பார்க்கின்றாய்!
எப்படியானாலும், நீ மக்கட்கு உதவியைச் செய்கிறாய்
தென்னனே! எனது இதயம் கவர்ந்த இன்பமே! நான் அரசியல்வாதி!
இந்தக் கண்ணோட்டத்திலே உன்னைக் காணமாட்டேன்!
நீ, ஆண் பெண், இருபாலரையும் மகிழ்வூட்டுகிறாய்! – கவருகிறாய்!
இன்ப ஒற்றுமையை ஊட்டி வளர்க்கிறாய்! வருங்கால வாரீசுகட்கு வழி காட்டுகிறாய்.
அதைத்தான் நான் எனது இதய அரங்கிலே எழிலோவிய மாகக் காண்கிறேன்.
நீ வந்ததும் நாடு உவகை பூக்கிறது; மகிழ்ச்சிதானே மனதுக்கு விருந்து! வாழ்க நீ!
பூவை அணைத்துத் தாதென்ற உள்ளங்களைப் பறித்துக் கொண்டு; காலமெனும் நதியிலே நீ தவழ்கிறாய்!
காலமெனும் நதி வற்றாது ஒடும் ஒரு ஜீவ ஆறு.
அந்த ஆறு எத்தனையோ வரலாறுகளைச் சுமந்திருக்கிறது.
எத்தனை யெத்தனையோ வரலாறுகட்கு கல்லறையும் கட்டியிருக்கிறதே!
சாக்ரடீசுக்கு நஞ்சு தந்து சாகடித்தது யார்?
ஜோன் ஆஃப் ஆர்க்கை எரியவிட்டது யார்?
ஏசுவைத் துடிக்கத் துடிக்க அறைய விட்டது எது?
காந்தியாரின் சாகாகப் புகழ், புத்தனின் அறப் புனிதம், இந்த வரலாறுகளைக் கணக்குத் தவறாமல் எழுதி முடிப்பதும் இந்தக் காலம் அல்லவா?
அந்தக் கால நதியிலேதான் பிறந்தவனும் நீராடுகிறான். இறந்தவன் எலும்புகளும் கரைக்கப்படுகின்றன!
மலர்களை மலர வைப்பதும், மடிய வைப்பதும் அதே காலம்தானே!
புதுமணத் தம்பதிகளை நீராட அனுமதிப்பதும், கணவனை இழந்தவர்களின் தாலியை ஏற்றுக் கொள்வதும். இதே கால நதி தான். இதைப் பல இடங்களிலே பார்த்திருக்கிறேன் தென்றலே!
அது, காலத்திற்கேற்ற நிலைமைகளைத் தழுவிக் காலக் கர்த்தாவாக நடமாடுகிறது.
அப்படிப்பட்டக் கால நதியையும், நீ தழுவிக் கொண்டாயே! என்னே உன் சக்தி வீரம்: ஆற்றல்!
காலத்தையும் உன் பக்கம் இழுக்கும் சக்தி உனக்குண்டு என்பதை நிரூபிக்கத்தானே, காலத்தைப் பல பிரிவாக வகுத்துக் குறிப்பிட்ட ஒரு காலமான – வசந்தத்தின் போது மட்டும்; நீ வருகிறாய்! போகிறாய்!
இத்தகைய சக்தி படைத்த என் அருமைத் தென்றலே! உன்னை உளமாற நான் போற்றுகின்றேன்.
உன் வீரம் நம் தமிழ் இனத்திற்கும் தேவை! என்பதால்!
வாழ்க நீ, தென்றலே வாழ்க நீ, வையம் உள்ளளவும்!
தென்றலே! இவ்வாறு நீ ஓடி வரும்போது, வழியில்; அருவியின் தோளிலே உந்தி உந்தித் தாண்டவமாடுகிறாய்.
அந்த அருவிகள் யார் என்று உனக்கும் தெரியும்!
துடிப்பான உள்ளம் படைத்த தமிழகத்து வாலிபர்கள்தான் என்பதை நானும் அறிவேன்.
வாலிபப் பருவத்தின் வனப்பையும் – வலிமையையும், நீ நன்றாக உணர்ந்திருக்கிறாய்.
இமைப் பொழுதில் எதையும் சாதிக்கும் திறன் பெற்றவர்கள் வாலிபர்கள்.
அதைப் போலவே எதையும் அழிக்கவும் வல்லமை பெற்றவர்கள்.
நீ வரும்போது வாலிபர்கட்கு காதல் உணர்வை ஊட்டி ஒன்றுபடுத்துவாய்!
இப்போது, அவர்கள் காதல் களியாட்டத்தில் இருந்தாலும் பிரித்து, கடமை வீரர்களாக மாற்றும் சக்தியை, ஊட்டி விட்டாய்! வாழ்க நின் செயல்! வளர்க பொதிகை புகழ் போல்:
அவர்கள் பருவயிரத் தோள்கள் மீதும், பொங்கு மணி மார்பகத்தின் மீதும், நீ தவழ்ந்து, உலுக்கிப் புறநானுற்று வீரர்களாக்கி விட்டாய்.
வாலிபர்கட்கும் உன்மீது வரையிலா பற்றை உண்டு பண்ணிவிட்டாய்.
மலரை நாடி வரும் வண்டினத்தைப்போல் – அவர்கள் உன்னை நாடுகிறார்கள்!
பல அருவிகள், எவ்வாறு ஒன்று திரண்டு நதியில் கூடுகின்றனவோ, அதைப்போல!
வாலிபர்கள் என்ற அருவிகள், காலமெனும் நதியோடு கலக்க ஓடி வருகின்றபோது, தென்றலே, அந்தக் கால நதியினையே நான் ஆட்கொண்டுவிட்டேன்;
நீங்கள் ஏன் அங்கு போய் கூடுகிறீர்கள் என்று கூறி, அந்த அருவிகள் தோள் மீதே உந்தி உந்தி ஆனந்தத் தாண்டவம் புரிகிறாய் போலும்.
அருவிகளின் தோள்களையே ஆட்கொண்டு, வீரத்தை ஊட்டிவிட்டத் தென்றலே, நீ வாழ்க! உன்னை எப்படித்தான் புகழ்வேன்! வார்த்தையிலையே வேறு கூற
சிறுகாலே! இத்தகையப் பண்புபெற்ற நீ, சும்மா இருக்கிறாயா என்றால் – அதுவுமில்லை.
முத்து முத்தான கருத்துக்களை உடைய கடலிலே போய் தவழ்கிறாயே ஏன்.
கடலலையின் உச்சிதோறும் சென்று சதிராடுகிறாய். அந்த இலக்கியக் கடலிலே ஆமையாகவா அடங்கிக் கிடக்கிறாய்?
அந்த இலக்கியக் கடலலையிலே தெப்பம்போல மிதந்து மிதந்து, மூழ்கி மூழ்கி, பல முத்துக்களையும், பவழங்களையும் சேகரித்து – இலக்கிய அறிவு பெறுகிறாயே.
இலக்கியம் என்றால் விளையாட்டா என்ன? இதை அறிவாய் நீ நன்கு அறிவாய்.
இலக்கியக் கடலுக்குள் புகுந்த ஒரு புலவன், சாகும் காலம் வரை அவன் மீண்டும் திருப்தியோடு திரும்ப முடியாதே.
திருக்குறள் ஆராய்ச்சியிலே சென்றவன் இன்றுவரை திரும்பியதில்லை!
சிலப்பதிகாரத்துள் புகுந்தவன், காலம் போதவிலையே என்று – தடுக்கி வீழ்ந்து விட்டான்!
கலிங்கத்துப் பரணிக்குள் கரை காணச் சென்றவன்
– போர்க்கள் ஓசையிலேயே, மூச்சுத் திணறி விட்டான்!
அகம், புறங்களை அலசுகிறேன் என்று சென்றவர்கள்
– அந்த எல்லையை விட்டு இதுவரை வந்ததில்லை.
தமிழ் இலக்கியத்தின் பொருள், ஆழ்கடலையும் மிஞ்சியது!
அத்தகைய கடலிலே புகுந்து, அழகழகான முத்துக்களையும் – பவழங்களையும் தேடிப் பெற்றுவிட்ட தென்றலே, உன்னை எவ்வாறு உலகிற்கு புகழ்ந்து காட்டுவேன்!
இலக்கியக் கடலினுள் மட்டுமா நீ, புகுந்தாய்? அதன் உச்சியிலேயே ஆனந்தத் தாண்டவமாடிப், புதியதொரு இலக்கியப் பரம்பரையினையே உருவாக்கிவிட்ட, உன் பெருமை வாழ்க!
கடல்மேல் பரதமாடிய தென்றலே, அத்தோடு மட்டுமா நின்றாய்?
விரிந்து பரந்து கிடக்கும் இலக்கியச் சோலைகளுள்ளும் – புகுந்து விட்டாய்! நீ போக முடியாத இடம் ஏது?
அந்தச் சோலையினுள்ளிருக்கும் பற்பல இலக்கிய உள்ளங்கள் என்ற மலர்களின் நறுமணத்தை உன்னோடு சேர்த்துக் கொண்டாய்!
மதுரைத் தமிழ்ச் சங்கங்களில், முன்பு எப்படி தமிழ் இலக்கியங்கள் வளர்ந்தனவோ, அதைப் போன்ற நிலையை மீண்டும் நாட்டிலே உருவாக்கி விட்டாயே!
உன் செயற்கரிய செயலால் நாவலர்களும், பாவலர்களும், கலைஞர்களும், கவிஞர்களும் இலக்கிய உணர்வு பெற்று நாட்டை இலக்கியப் பூக்காடாக்கி விட்டார்கள்.
அந்த அகமகிழ்வோடு, சோலையிலே புகுந்த தென்றலே, நீ கத்தி போன்ற தாழை மடல்களையெல்லாம் சுற்றிச் சுழற்றச் செய்து அறப்போர் வீரர்களாக ஆக்கிவிட்டாய்.
சாதாரண தாழை மடல்கள் – கத்திபோல் கூர்மையானதாக இருப்பினும், அவற்றை வீரர்களாக நடமாடச் செய்து விட்ட பெருமை, உன்னையல்லால் வேறு எவருக்குண்டு?
அத்தகைய வீரர்களைப் போல நடித்த நாணற் பூக்களை – பூ உருவிலே புகுந்துவிட்ட பயனற்றவைகள் என்று, அவற்றைக் காட்சிப் பொருளாக்கி விட்டாயே.
தென்றலை அனுபவிக்க முடியாத அவை, புயலிலே சிக்கிச் சிக்கிச் சுழன்று வருகின்ற நிலையை; அவை தேடிக் கொண்டன.
நீ போகும் இடமெல்லாம் உனக்கு வரவேற்பு! வாழ்த்து! விழாக்கோலம்!
நாணற்பூக்கள், பெயருக்குப் பூவாக இருக்கின்றன! பிறவி எடுத்துவிட்டமைக்கா அலை பாய்ந்து, வளைந்து, நெளிந்து; வறண்டு சோர்ந்து விழுகின்றன!
அவற்றைக்கூட நீ மன்னித்து விடுகிறாய்; சில்லென்று வீசி! ஆனால், அவைதான் தலை குனிந்து விடுகின்றன; வெட்கத்தால்!
உன்னைக் கண்டால் மக்களுக்குப் பிடிக்கும்; மகிழ்கிறார்கள். ஆனால், சுரம் கண்டவன் மட்டும் உன்னைக் கண்டு ஓடி ஒளிகிறானே!
இதற்கு நீ எப்படிக் காரணமாவாய்? எடுத்த பிறவியின் கோல மல்லவா? மன்னிப்போம்! மறப்போம்! வாழ்க நின் நீடு புகழ்!
தாழை மடல், கத்தி போன்றது. அறப்போர் வீரர்களை மொழிப் போர்க் களத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறாய்! எப்படி?
மூங்கிலிலே பண்ணெழுப்பி – போர்ப் பரணியைப் பாட வைத்து அனுப்புகிறாய்! இதைக் கண்டு மக்கள் வியக்கின்றார்கள்.
உன் பெருமையை, சக்தியை, அறிந்தவர்கள் போற்றுகிறார்கள்! புகழ்கிறார்கள்!
காயந்துபோன மூங்கிலில், தென்றலே, நீ தழுவி நாதத்தை எழுப்புகிறாய்!
மொழியுணர்வு மரத்துப் போனவர்கட்கு, மொழியுணர்ச்சியை உண்டு பண்ணத்தான் என்று, நான் எண்ணுகிறேன்.
“தென்றலாகிய என் இனிமையைப் பெற்று மரம் கூட தமிழிசை எழுப்புகின்றபோது, இந்த மனித மரங்கட்கு அந்த உணர்வும் இல்லையே! அவர்கட்கு இதை அறிவுறுத்தத்தான் என்பது, நான் உன்னிடம் கற்ற அரசியல் பாடமாகும்!
யானை தன் கனவில் சிங்கத்தைக் கண்டால் அலறும்!
அறப்போர் வீரர்கள் அரிமா போன்றவர்கள்.
ஆட்சியாளர் யானையை நிகர்த்தவர்கள்!
அந்த யானை, மொழிப் போர் என்ற வெம்மைக்கு உட்பட்டிருந்தாலும், தன் அடி தொண்டையிலிருந்து உமிழ் நீரை வெளியேறச் செய்து, தனது உலர்ந்த நாவை நனைக்க முயற்சிக்கிறது. ஏன்?
ஒதிய மரம் போன்ற மனிதர்களின் மொழி உணர்வற்ற பண்பால்தான்; காட்டிக் கொடுக்கும் கயமைத்தனத் துரோகத்தால்தான்.
இந்த மொழித் துரோகிகட்கு, தாய் மொழியுணர்ச்சி இல்லை என்பதை, நீ அறிந்த ஒன்றுதானே!
அதனால்தான் தாய்மைப் பண்பு பெற்ற முதிர்ந்த தென்னை மரத்தின் மீது நீ தழுவினாயா?
தாய்மைப் பண்பு தலைசிறந்த பண்பு. எல்லாரையும் பேதமற்ற நிலையில் காத்துப் பேணும் பண்பு.
அந்தப் பண்புக்குரிய தெங்கை, நீ தழுவியது ஏன்? அறிவேன் நான்!
தெங்கு, சிறு கன்றாக இருக்கும்போது உண்ட வானமுதை, என்றைக்குமே தேக்கி வைத்து, பசியெடுக்கும்போது தனது உரிமையாளனுக்கும், மற்றவர்கட்கும் பேதமின்றி இளநீரையும் தேங்காயையும் தந்து உதவுகிறது. இது தாய்மைப் பண்புகளுள் ஒன்று என்பதனை நீ உணர்ந்தாய் போலும்!
அதனால்தான், அத்தகைய முதிர்தெங்கின்மீது தவழ்ந்து, அந்தத் தாய்மை உணர்ச்சியை – பண்பைத் – இந்த துரோக உள்ளங்கட்கும் ஊட்டினாயா?
தாயான தெங்கிற்குச் சேய், சிரிக்கும் அதன் இளம்பாளை.
அந்தப் பாளையிலே வழிந்தோடும் “சேய்மை” அழகை நீ சுவைத்து, அந்த மகிழ்ச்சிக் களையை – இந்த மொழித் துரோகிகட்கும் – உணர்த்த – அன்பூட்ட விரும்பினாயோ?
தாயிற்கு ஏற்பட்ட மானத்தைத் தடுப்பது சேயின் கடமை என்பது உலகுக்கும் – இந்த துரோகிகட்கும் அறிவு உணர்த்தத்தான், அந்த இளம்பாளையை, தென்றலே நீ தழுவி – நாட்டிற்கும் தழுவ விட்டாயே!
அடடா, தென்றலே.! உன் சேவையே சேவை! மக்களுக்காக நீ ஆற்றும் தொண்டே, தொண்டு!
சமுதாயம் அறிவுபெற உணர்வுற – தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ எங்கெங்கெல்லாம் நீதிநெறிகள் தவழ்ந்தாடு கின்றனவோ, அங்கெல்லாம் நீ சென்று, அவற்றை எமக்கு அளிக்கிறாயே!
உனக்கு என்ன கைம்மாறு செய்வோம், வாழ்க என்ற வளமான சொல் ஒன்றைத் தவிர!
தென்றலே! தமிழ்த் தரணியின் அணுவிலெல்லாம் நீ தவழ்ந்து, அற நெறிகளை ஏற்று, மாலை நேரமானதும் தமிழக வீதிகளை நோக்கி ஓடி வருகிறாயே, ஏன்?
அதை நான் உணர்கிறேன் – நாடும் அறிகிறது! இருந்தாலும் உன் புகழையன்றோ எழுத முனைந்து விட்டேன்.
என்னையும் ஆட்கொண்டு விட்டாய். அதனால் வரைகிறேன். என்னை மட்டுமா ஆட்கொண்டாய்? சிந்தையை! சிந்தையை மட்டுமா? சிந்தை அணு ஒவ்வொன்றையும் உன் வயப்படுத்திக் கொண்டதால் அதையும் கூறிவிடுகிறேன்.
மயக்கும் மாலைப் பொழுதான அந்தி நேரத்திலே, தமிழக வீதிகளிலே நடைபெறும் பொதுக் கூட்டங்கள் தோறம் நீ உலா வருகிறாயே!
கூட்டத்திலே குழுமியுள்ள மக்களது உள்ளங்களை எல்லாம், நீ சிக்கி வைக்கிறாய்! கவருகிறாய்! கொள்ளை கொள்கிறாய்.
இதற்குக் காரணம் என்ன, உன் மீதுள்ள எல்லையற்ற பற்று: நீ வாடையா என்ன – வெறுப்பதற்கு? தென்றலல்லவா?
நீயும் தமிழ் மண்ணிலே பிறந்து நடமாடுகின்ற வளல்லவா? அதனால்தான் தமிழ் உணர்வோடு, கூடியிருக்கின்ற பல லட்ச மக்களின் உள்ளங்களிலே இரண்டறக் கலக்கும் பண்பு பெற்றிருக்கிறாய்!
வளர்கின்ற செந்நெல்லுக்கு மடைப்புனல் எப்படி அவசியமோ, அதைப்போல, வளர்கின்ற ஒரு சமுதாயத்திற்கு முதியவர்களும் அவசியமாகும்.
சமுதாய வளர்ச்சி சரியானதுதானா என்பதை அறிய – கற்றோர்களும் மற்றோர்களும் தேவை!
மடைப்புனல், நீரை எப்படி முறையாக அனுப்பி செந்நெல்லுக்கு உரம் ஊட்டுகிறதோ, அதேபோல பொது மக்களும் ஒரு சமுதாய வளர்ச்சிக்கு அவசியம்.
இதைத் தெளிவுற உணர்ந்ததால், தென்றலே! நீ பொது மக்கள் உள்ளங்களிலே எல்லாம் புகுந்து, கருத்துக் குளுமையைத் தவழவிடுகிறாய்!
இளமுல்லை போன்ற வீராங்கனைகள் உள்ளத்திலும், நீ புகுந்து, உணர்ச்சிப் பிழம்பைத் தட்டி எழுப்புகிறாய்.
வீரத்தை அவர்களிடையே விளையாட விடுகிறாய்! வாழ்க நீ வாழ்க!
மக்கள் சிந்தையணு ஒவ்வொன்றும் மொழி உணர்வு கொண்டு, பொதிகையிலே உன்னுடன் பிறந்த தமிழனங்கைப் போற்றிப் பாதுகாக்க வந்த செல்வமே தென்றலே! வாழ்க நீ பல்லாண்டு!
தமிழகத்தின் பேரறிவுப் பெட்டகமே! பெரும் நிதியே! உன் புகழ் தமிழ் உணர்வு பெற்றவர்களின் வீடுதோறும் திரு விளக்காய் திகழ்கின்றது.
எந்த நாட்டிலும் தோன்ற முடியாத தென்னாட்டுத் தென்றலே! அறிவுலகசோதியே! காஞ்சி நகர் வாழ் தென்னலே!
தென்றலையொத்த உமது அரிய சேவையை நாங்கள் உணர்ந்தோம்! நாடும் கண்டு களி பேருவகை கொள்கிறது.
இயற்கையின் செல்வமே! தென்றலே! உன்னைப் பாராட்டு கிறோம்! வாழ்த்துகிறோம்! நீ பிறந்த நாட்டிலே உனக்காக, எமது மூச்சுள்ள வரை. நாங்கள் விழாவெடுக்கிறோம்.
அண்ணா! உன் சதுக்கமே எமக்கெலாம் திருக்கோயில்! தென்றலே! அன்பு தெய்வத்திற்கு ஏன்? எம் அறிவிற்கும் கவரி வீசு!
***
10. அண்ணா ஒரு கதிரவன்!
கதிரவனே, நீ வந்தாய்!
நான் முளைக்க ஆரம்பித்தேன்!
நான் காலையா? மணத்தின் மலரா? இனம் புரியாத காலமா? உனது கிரணங்களால், எனது யாழ், சோலைக்கு நடுவில் மின்னுகிறது.
உனது வரவால், என்னில் பூட்டியிருக்கிற தந்திகள் மீட்டாமலே பாடுகின்றன!
எனது ஜீவன், உனக்கு முன்பேயே கடன்பட்டிருக்கின்றது! கடன் வாங்கியவன் அதைத் திருப்பித் தரவேண்டும்.
ஏ, இளம் கதிரே, திக்கெட்டும் ஒளிப் பிழம்பை விரவிவரும் உனது திருமுகத்திற்கு முன், என்னுடைய அடிமைத்தனம் மறைந்தொழிகின்றது!
உனக்கு இருக்கும் நூறு கோடி கதிர்க் குதிரைகளைக் கருணையோடு என் சாம்ராஜ்யத்தில் புகுத்து, தாழ்ந்து போயிருக்கும் என் மானம், முளை விட்டுக் கிளம்பும் விதைக் குருத்தைப் போல கொஞ்சம் நிமிரட்டும்.
உனது வழக்கமான செம்முகத்தை எனது சிந்தனைக் கிளிகள், கொவ்வைப் பழம் என்று கடிக்க ஆரம்பிக்கின்றன!
என் நாக்கில் விளையாடும் ஒளியலைகள் எங்கோ இருந்து வந்தவையல்ல!
உன்னைக் கண்ட பிறகு – அது மகிழ்ச்சியால் தெளிந்த பிறகு, ஏற்பட்ட ஓசையாகும்!
கதிரவனே! உனது புகழின் ஆழத்தை, உலகைச் சுற்றியிருக்கின்ற கடலும் கொண்டிருக்கவில்லை.
உனது பெருமையின் உயரத்தை, உலகின்மேல் கொப்பளம் போல் குவிந்திருக்கும் மலைகள், கொண்டிருக்கவில்லை.
உனது விரிவு, திக்கை உடைத்துக் கொண்டு வெளியே செல்லுகிறது!
உன்னுடைய விரிந்த விசாலத்தில், நான் ஒரு சொட்டு இயற்கையாகவே இருக்கின்றேன்.
என்னைக் கடையேற்ற, ஆயிரம் கோயில்களைக் கட்டியவன் நீ! ஒரு நாளைக்குப் பத்தாயிரம் தடவைகள் பூசை செய்தவன் நீ!
நான் படைத்த பூக்களின் வண்ணங்களை, என் எண்ணம் ஏன் கவனம் வைக்கவில்லை? சுவையாகப் படைத்த கனிகளின் சுவையை, நான் அறிந்தவனல்லன்!
இவ்வளவையும் நீ செய்த பிறகும் நான் கடைத்தேற முடியவில்லை!
மடையுடைத்துக் கிளம்புகின்ற உன்னை, மனக் கண்ணில் கண்ட பிறகுதான், என் அகக் கண் திறக்க ஆரம்பிக்கின்றது!
ஏ, சுடரொளி! மேகம் மூடிய வானத்தின் கீர்த்தியே! உனது ஆதிக்கத்தால் கேட்பாரற்றுக் கிடக்கின்ற விதைகள் முளைக்கின்றன. வெளுத்துப்போன இலைகள் பச்சையாகின்றன!
நெளியும் புழுக்கள், கூட்டுப் புழுக்கள் ஆகின்றன!
பறவைக் குஞ்சுகளின் இறக்கைகள் முதிர ஆரம்பிக்கின்றன.
அருவியின் அலையோசை, அருகில் இருக்கும் வெட்டுக் கிளியின் காதிலே பாய்கின்றது.
பச்சைப்புல் மீதிருக்கும் ஒவ்வொரு பனித்துளியும், உன் எழிலை எழுதி எழுதிப் பழகுகின்றன.
அடிவானத்தில், நீ தொட்டில் இட்டுக் கொண்டிருக்கின்றாய்!
வானத்தின் சிம்மாசனத்தில், நீ மதியத்தில் அமருகின்றாய்!
அந்தி நேரத்தில், கண் சிவந்த வீரனைப்போல் காட்சி தருகிறாய்!
உனக்கிருக்கும் பெருந்தன்மையான பண்பால், நிலவிற்கு வழிவிட்டுப் போய் மறைகின்றாய்!
உன்னுடைய தயாள குணத்தை விவரிக்க, பைபிளின் கர்த்தா ஏசு பெருமான் வரவேண்டும்!
திருக்குரானின் மூலவர் நபிகள் நாயகம் வரவேண்டும்.
தம்ம பதத்தின் தலைவன் புத்தர் பெருமகன் வருகை தரவேண்டும்.
இருண்ட காட்டிலே நீ எட்டிப் பார்க்கும்போது, தாயைக் கண்ட சேயைப் போல, அரும்புகள் கூச்சமற்றுச் சிரிக்கின்றன!
அறிவுக் காட்டில் நீ நுழையும்போது, உனக்கு வழிவிட சந்தன மரங்கள் தயாராக இருக்கின்றன.
கதிரவனே! நீ ஒரு நகரத்தின் தலைவனா? ஒரு தேசத்தின் அரசனா? இந்தப் பூபாகத்தின் பெரும் சக்தியா? அண்டத்தின் சுழற்சிக்கு மூலமா?
உரிமையின் விளக்கே! நீ புறப்பட்ட நேரம் சரியான காலம்தான்.
அதனால்தான், என்னைப் போலிருக்கும் புழுக்கள் – பட்டாம் பூச்சிகளாய்ப் பறக்கின்றன.
நீ, கிழக்கில் வந்தவன் மட்டுமல்ல; மக்களின் மன வாழ்விலே வந்தவன்.
கடல் மீது மட்டும் நீ விளையாடவில்லை, கனவின் மீதும் விளையாடுகிறாய்!
ஊழித் தீயே, கடையனலே! பரிதியே! உன்னுடைய குதிரைகள் எங்கே?
நீ பனிப் பகைவன்; உன்னுடைய புரவிகள் பணியிலே புரள்கின்றனவா?
நீ சுடர், அதனால்தான் சுடுகிறாயா?
நீ பதங்கன்; அதனால் தான் என்னைப் பதப்படுத்தினாயா?
மார்த்தாண்டன் நீ, உன்னைத் தாண்டி யாரும் வர முடியாது.
என்னுழ் நீ; ஆகவே, நீ என்றும் இருப்பவன்!
அருணன் நீ, அரும்பைத் தொடர்ந்து ஆகாயம் வரை விரிந்து இருக்கிறாய்!
ஆதவன் நீ; உன்னுடைய ஆதரவு எமது உரிமைக்குத் தேவை!
நீ மித்திரன்; எனவே நீ என் உறவு!
நீ ஆயிரம் சோதி; எனவே உனக்கு ஆயிரம் பகை உண்டு!
நீ தரணி! இயல்பாகவே கோடைப் பரணி உன்னிடத்திலே உண்டு!
நீ செங்கதிர்; ஆகவேதான் – நீ காலையிலே மென்மையாக இருக்கின்றாய்!
கண்டன் நீ; என்றும் எவர்க்கும் எப்போதும் தோற்றதில்லை!
தபணன் நீ; உன்னிடத்திலே வைராக்கியம் உண்டு!
ஒளி நீ; உன் உருவத்தைத் தெளிவாக யாரும் கண்டு பிடித்ததில்லை – ஒளிந்துகொண்டே இருப்பவன்!
சான்றோன் நீ; உலக அறிவாளர்கள் உன்னை நோக்கி சிரம் தாழ்த்தி வணங்குகின்றனர்!
நீ எல்; எல்லாம் நீ!
நீ பார்க்கரன்; உன்னுடைய ஒளி நிறமே அதுதான்!
நீ அனலி; கொடுமைகளைத் தீய்ப்பவன்!
நீ அறி; எல்லாம் அறிந்தவன்!
பானு நீ; அதனால் தாமரையைக்கூட மலர வைக்கின்றாய்!
அலரி நீ; யாரையும் விழிக்கச் செய்கிறாய்!
நீ அண்டயோனி! உன்னுள் அறிவுச் செல்வங்கள், எல்லாம் பிறப்பதனால்!
நீ கனலி; உன்னுடைய நிறம் கனகம்!
நீ விகர்த்தனன்; உன்னிடத்திலே பேதம் உண்டு;
தீயைத் தீய்த்து நல்லதை நாட்டிற்கு நல்குவதால்!
கதிரவன் ; வானமே உனக்குக் கழனியாவதால்!
பகலோன் நீ; நாட்களைப் பகர்வதால்!
வெய்யோன் நீ எதையும் வைத்து வளர்ப்பதால்!
தினகரன் நீ புது நாட்களைப் புதுக்குவதால்!
பகல் நீ சொற்களே உன்னிடத்திலிருந்து கிளம்புவதால்!
சோதி நீ; சோதனை உன்னிடத்தில் இருந்து எழுவதால்: ஒளியை உமிழ்வதால்!
திவாகரன் நீ; அறிவொளிப் பிரவாகம் உன்னிடமிருந்தே எடுப்பதால்!
அரியமா நீ; கீழ், அடிவானத்திலிருந்து எடுப்பதால்!
அரிமா நீ கீழ், அடிவானத்திலிருந்து மேல் வானத்திற்கு ஓடுகின்ற குதிரை, மனித இனத்தின் தந்தை நீ;
நீ உதயன்; ஜீவனின் உற்பத்தி.
நீ ஞாயிறு; சிலப்பதிகார ஆசிரியர் உன்னைப் போற்றினார்! கடவுளுக்குப் பதிலாக!
எல்லைநீ; அண்டத்தின் வரைகோடு!
கிரணமாலி; நீ; கிரணத்தை ஆக்குபவன்! ஏழ்பரியோன்;எழுகின்ற காரணத்தால்.
வேந்தன்; உலகை நீ ஆளுவதால்.
விருச்சிகன்; சுடரவிழ்க்கும் தலைவனானதால்!
விண்மிணி, உயிர்களுக்கே நீ கண்மணி!
அருக்கன், வாழ்க்கைச் சுடரை உலகிற்கும் பெருக்குவதால்!
அப்படியானால் நான் யார்?
எங்கோ முளைத்தவனோ? எதற்கோ வந்தவனோ? நானே அதை அறிய முடியவில்லை!
பரிதி வட்டமே! என்னை உனக்காக்கிக் கொள்ள வேண்டும். இழந்த எனது உரிமைகளை மீண்டும் எனக்கு வழங்க, உனது கதிர்காமத்தில் திட்டம் தீட்டுவாயா!
சாம்பல் நிற மேகங்களுக்கு இடையில், உனது சாம்ராச்சிய அழகைப் பைத்தியம் பிடித்த மின்னல்கள் – இந்த பூமியை நேர்க் குத்தலாகக் கிழிக்கும்போது, என் தமிழ் நெஞ்சத்தை இந்தி மொழி தாக்குவதைப் போல் இருக்கிறது!
தொட்டிலிலே எனது தாய், தாலாட்டு பாடிய பாட்டுகள், நீ அறிந்தமட்டில் தமிழ்தான் என்பது தெரிந்ததல்லவா?
வரையறுக்கப்பட்டத் தமிழ்ப் பண்பாட்டில் விளையாடுகின்ற என் மூச்சை, குறை நாளுக்கு என்னை இரையாக்க வேண்டாம்.
வேதத்தின் ஒளிக்குக் கட்டுப்படாத என் மனமும் கூட, தமிழ் நாதத்தில் துவண்டுபோனதை நீ அறிந்திருப்பாய்!
என் விரோதிகளின் கூர்மையான வாள், எனது தசைகளைக் கிழித்திருக்கின்றன!
ஆனால், அதே வாட்கள், எனது தமிழைத் துளைபோட முடியாமல், தாகத்தால் தவித்தவனைப் போலத் தவித்திருப்பதை நான் கண்டேன்.
நரகத்தின் வளைகுடாவான பஞ்சத்தில், எனது வாழ்க்கைத் தெப்பம், சுழலால் பாதிக்கப்படுகின்ற நோக்கில் எனது கண்கள், தமிழென்ற நம்பிக்கை நட்சத்திரத்தை அன்றி, வேறு எதையும் காணவில்லை என்பதும் உனக்குத் தெரியும்!
அப்போதெல்லாம், நான் உன கிரணங்களால் ஒளி கண்டு, நல்ல இடத்தை நாடியே வந்திருக்கிறேன்.
எனது ஆசையும், காதலும் உனது பலிபீடத்தின் மீது துவங்கியதாகும்!
என் குழந்தைகளின் எதிர்காலத்தையும் – எனது இறுதி காலத்தையும் – நான் அந்த பலி பீடத்தின் மீதே வைத்துத் துவக்குகின்றேன்.
உனது கதிர் வட்டத்தால், என்னை எந்த உருவமாக்கினாலும் – அந்த உருவத்தை அடைகின்ற பக்குவப்பட்ட களிமண் நான்!
எனது பண்பாட்டையும் நாகரிகத்தையும், ஆயிரம் ஆண்டுகளாகத் தன்மை மாறாதிருக்கும் உனது பாதத்திலே வைக்கின்றேன்.
எனது எண்ணங்கள் அத்தனையும், உன்னிடத்திலே தான் துவங்குகின்றன.
கொஞ்சமும் தாமதமின்றி, அவை உன்னைப் பின் தொடர்கின்றன!
எனது பகற்கனவுகளும் இராக் கனவுகளும், நீ கொளுத்திய ஆயிரம் விளக்குகளால் ஆனவை.
மயத்தில் நீ தலைநிமிர்ந்து நிற்கும்போது, என்னுடைய கரம் உன்னை நோக்கி வளர்கின்றது!
அந்தியிலே நீ சாயும்போது, எனது வீரம் அதே பணிவோடு உன் காலடியிலே வீழ்கிறது!
மாலை நேரத்தில் வீடுகளில் கொளுத்துகின்ற ஒரு சாண் திரியொளிக்கு, வாய்ப்பளித்துவிட்டு, நீ பதுங்குகின்ற தன்மையைப் பார்த்தால்; உனது பெருந்தன்மை எனக்குப் புரிகின்றது.
என்னுடைய இளமைக் காலம் முழுவதும் பகலாக இருக்குமானால்… அட…. அடே…. பேராசை!
அலையின் மீது மத்தளம் தட்டும் உனது கரங்கள் – புயற்காற்றின் குடுமியைப் பிடித்து உலுக்குகின்றபோது – வீரம் விளக்குகின்ற உனது வியன் மிகு அரசியலை, நான் புரிந்து கொள்ள முடிகின்றது.
பருவ காலங்களில், நீ மலையின் மீதும் அருவியின் தோள்மீதும்
மலரின் உதட்டின் மீதும் – தும்பியின் இறக்கைகள் மீதும்-
கேட்பாரற்றுக் கிடக்கும் காளான்களின் மீதும்
செந்தூர வண்ணங்கொண்டு நீ படரும் போதும் –
எங்கோ முளைத்திருக்கின்ற எனக்கு விடுதலை கிடைத்ததைப் போல உணருகிறேன்.
பாலைவனத்திலே காய்கின்ற உனக்கு பொழிலுக்கு இடையில் வேலை என்ன?
அழிவுக்கு முன்னால் அழுதுவிட்டு, களிப்புக்கு முன்னால் களிக்கின்றாயா?
எதற்கும் அடிப்படைக் காரணம் இல்லாமல், எதையும் செய்யமாட்டாய் என்பது அனைவருக்கும் – தெரியுமா என்ன?
அவனவன் அறிவின் தட்ப வெட்பத்திற்கு ஏற்றாற்போல் அல்லவா உன்னை எடைபோடுகிறான்!
ஆனால் நீ, எல்லோருடைய இதயங்களிலே இருக்கும் இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்கிறாய் அல்லவா?
ஏ, தத்துவ சோதியே! இயக்கத்தின் வளர்ச்சிக்காக இறந்தவர்களை தாலாட்டிவிட்டு – இருப்பவர்களையும் தாலாட்ட வருகிறாயா?
அனாதைகளுக்கு வாழ்வளித்துவிட்டு அடைய வேண்டிய செல்வத்தை அடைந்தவனையும் அருகிருந்து கவனிக்கிறாயா?
நீண்ட கிளைகளை வைத்திருக்கின்ற குள்ளமான மரமா நீ! நெடிய சாம்ராச்சியத்தை ஆளுகின்ற உருவமா நீ?
சிறிய அலகைக் கொண்டு பெரிய இசையைப் பாடிடும் குயிலா நீ!
செட்டான உருவம் கொண்ட முத்தா நீ?
அடங்கிக் கிடக்கும் பெரும் பகையா?
ஒடுங்கிக் கிடக்கும் பேராற்றலா?
கட்டுக் கடங்கிய கடலா?
உன் சக்தி எது? நீதனிமையானால், கவிதைகளுக்கு இசையா?
நீ தூய்மையானால் ஞானத்தின் ஊற்றா?
நீ அன்பானால் அடிமைப்படுத்தும் முயற்சியா?
நீ அணைப்பானால், நான் உன்னுள் அடங்குபவனா?
வித்தைகள் செய்கின்ற நீ, எங்கிருந்து வந்தாய்? இருந்தாய்?
திராட்சையின் இனிமையில் இருந்தா? பாட்டின் அடிப்படையில் இருந்தா?
என் தாயின் பாசத்தில் உலகத்தை வாழவைக்கும் உதயசூரியனே! உன்னை இன்னொன்று கேட்கிறேன்.
ஓசை விம்ம காற்றுக்கு ஒரு பாட்டு உண்டு. அப்பாட்டுக்கும் ஓர் கனவு உண்டு.
அக் கனவு எழும் இடத்தைத்தான் கவிஞனுக்கு ஏற்ற இடம் என்று சொல்வார்கள்.
என் உறவே, ரத்தத்தைச் சூடேற்றும் உணர்ச்சியே, அந்த இடத்தில் இருந்தா வந்தாய்? உன்னுடைய ரதம் அங்கேயா இருக்கிறது?
நடை தளர்ந்த நாள் செத்துவிட்டது! புதிய இரவு பூத்து விட்டது!
காட்டின் சூழ்நிலை கங்குலின் தோள்மீது தட்டியது! அப்போது இனம் புரியா பயம் ஒன்று எங்களுக்கு ஏற்பட்டது. இது இரவுக்குத் தரும் இனிதான விளக்கம்.
என் தாய்நாட்டுப் பண்பு, அனாதை ஆசிரமத்தில்ல, வாழ்கின்ற சிசுவல்ல, என்னுடைய லட்சியம் எல்லோரும் திருடி எடுத்துக் கொண்டு செல்கின்ற பொருளும் அல்ல.
என்னுடைய நரம்புகள் இயற்கையாலானது. எனது தசை இயற்கையின் ஆதிக்கத்தால் சூடுபடுகிறது.
எனது குருதி, என் தாய் கொடுத்த பால் மட்டுமல்ல, முதல் தாய் முதல் மகனுக்குக் கொடுத்த வீரப்பால் ஆகும்.
விபச்சாரியைத் தூங்கவைத்து, அவளுக்கும் ஒரு புதிய காலையைக் கொடுக்கின்ற சூரியன், எனக்கு வேண்டாம்.
கண்ணகியைத் துயில் நீக்கி, மதுரையைப் புடம் போட்டுத் தங்கமாக்கும் ஒரு புதிய நாளை உருவாக்கிடும் உன்னைப் போன்ற உதயசூரியனே தேவை.
வானமென்ற கருவிலே உற்பத்தியான குழந்தை நீ! உன்னுடைய இனத்தைப் பற்றிப் பிண்டங்களில் உற்பத்தியான குழந்தைகள் ஆராய்ச்சி செய்கின்றன.
புதிதாகப் பிறந்த காலை என்பவனின் கரம். அப்போது பூத்த ரோசா மலர் போல் இருக்கிறது. அதுதான் உனக்குக் கைகுலுக்கிறது.
காலை எழுந்தது, தூக்கம் கலைந்தன பூக்கள். பாவம் செய்யாத பறவைகள் பாடின.
ஒன்றும் அறியாத குழந்தைகள், வீட்டில் இருக்கும் சிறிய விளக்கொளியைப் பார்த்துக் கண்களை உருட்டின.
வைகறையில் தாய் முத்தமிட்டாள், முத்தத்தில் இருக்கின்ற குளிர்ச்சி மூன்று கோடி சந்திரனைத் தோற்கடிக்கும்.
தாய்மையை எடைபோட குழந்தை சிரித்தது. இரகசியமாகக் கிழக்கிலிருந்து எட்டிப் பார்த்தவனே! இதோ, என் கைகளில் பூட்டியிருக்கும் விலங்கைப் பார்த்தாயா?
சாக்ரடீஸ் போட்ட விலங்காக இருந்தாலும் சரி, ஏசுபிரான் பூட்டிய விலங்காக இருந்தாலும் சரி, உதய சூரியனே! நீ மாட்டிய விலங்காக இருந்தாலும் சரி, அது உரிமையின் வடிவமாக இருந்தால், உடைக்காமல் நான் பாதுகாப்பேன்.
மொழி ஆதிக்கத்தின் வடிவமாக அது புலப்பட்டால், சூரியனுக்குக் கீழே நான் பொடி பொடியாக்குவேன். என்னுடைய மொழி உணர்ச்சி கரைகின்ற கனவுகள் அல்ல.
உன்னை வெறுத்த இராக்கால மலர்கள்கூட, ஒளிந்திருந்து உனது அழகைப் பார்க்கின்றன.
இறந்துபோன தியாகிகளும், எல்லையற்ற பகைவர்களும் உன்னுடைய ஒளிக் கற்றையால்தான் உயிர் வாழ்கிறார்கள்.
உனது அற்புதமான முகவெட்டை – புகழ் ஒளியை பூட்டை உடைத்து வெளியே வருகின்ற அறிவு ஒளியை – சில நொண்டிக் குதிரைகள் பார்த்துக் கனைத்தன. சில கழுதைகள் பார்த்துக் கத்தின –
அவைகளை, நீ உன் பொன்னான கரங்களால் பொன்னோவியமாக மாற்றிவிட்டாய்.
அதாவது, எதிரிகளை எதிரிலியே உட்காரவைத்து நொடியிலே நண்பனாக்கி விட்டாய்!
தத்துவம், பூமியில் புறப்பட்டு வானத்தில் முடிவாகிறது. வானத்தில் முடிவான தத்துவம் வையத்தை நோக்கி மறுபடியும் வரும்போது, அது ஏறிவரும் தேர் நீதான்!
உன்னை எள்ளி நகையாடுகிறவர்களை; நீ அள்ளி எறிந்து விடுவதில்லை – மாறாகக் கிள்ளி சூட்டிக் கொள்கிறாய்.
உடம்பிலே வலுவில்லாதவன், நீ தருகின்ற வெப்பத்தை எண்ணித் திட்டுகிறான். மனதிலே சுத்தமில்லாதவன் பயப்படுகிறான்.
ஆனால், ஒளியும் – வலிவும் உன்னால் தான் வருகிறது என்பதைப் பிறகே உணருகிறேன்.
உலகம், நீ வாசிக்கும் யாழொலியை கேட்க ஆரம்பிக்கிறது. நீ காட்டும் அற்புதமான உதாரண உருவங்களைக் கண்டு ரசிக்கிறது.
ஆனால், எதிரிகள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டு வசைமாரி பொழிகிறார்கள்.
அவர்கள் தூக்கமில்லாத குரங்குகள் – அவர்கள் கைகள் இழிவானவை.
அவர்கள் புருவம் ஒரு முட்டாளின் புருவம். அவர்கள் வாய், பாம்பு முட்டையிடுவது போலத் தீயவைகளையே முட்டையிடும் கருவாயாகும்.
அவர்களுடைய கண்கள் இறந்தவனுடைய கண்களாகும்.
அவர்களது ஆதிக்கம் சவப் பெட்டியின் மேல் தூவப்பட்ட பூக்களின் ஆதிக்கமாகும்.
அவர்களது நடை தொழு நோய் பிடித்தவனுடைய நடையாகும்.
அவர்கள் தலையிலே சூடிக் கொள்கின்ற கிரீடம் நாடே இல்லாத ஒரு ராசாவின் கிரீடமாகும்.
இந்தக் குறைபாடுகளின் தொகுப்பாக இருக்கின்ற எதிரிகளின் கண்டத்தின் உச்சியிலே இருக்கின்ற உன்னைச் சாடும்போது, நீ வசந்த காலத்தின் மாலை நேரத்திலே இருக்கின்ற மரத்தைப் போல குளுமையாக நின்று தலையை ஆட்டுகிறாய்.
இயல்பாக அடிக்கின்ற காற்றினால் வெவ்வேறு உருவங்களைப் பெறுகின்ற மேகத்தைப் போல, அவர்களுக்குப் பல உருவங்களை நீ காட்டுகிறாய்.
உனது முகத்திற்கு முன்னால் திரையில்லை – சொல்லுக்கு எதிர்ச்சொல் இல்லை – எழுத்துக்கு முன்னால் வேறெழுத்து இல்லை – உனது ஆட்சிக்கு முன்னால் வேறொரு ஆட்சி இல்லை.
பகலவனே! உன்னை நான் இதுவரையில் இவ்வுருவத்தால்
கண்டேன். என் உருவத்தை நான் உனக்கு சொல்லி விடவேண்டும் அல்லவா?
நான் நடு வானத்திலே இருந்து நழுவிவிடும் எரி நட்சத்திர மல்ல, நெற்கதிர்களுக்கு நடுவில் மினுக்கி விழும் மின்மினி அல்ல.
உரிமைக்குக் கையேந்தி- உணர்வுக்கு அலைந்து கொண்டிருக்கும் ஓர் உயரிய உருவம். இயற்கையின் ஒழுங்கான படைப்பு – தமிழால் எழுதப்பட்ட ஓவியம் – நான் தமிழன்.
****
11. அண்ணா ஒரு நிலா!
வசந்த காலத்தின் வரவை நம்பி, முளைகள் ஏற்கனவே தளிர்விட ஆரம்பித்தன.
குருத்துவிட்டுக் கிளம்பிய கனிகள் – சிறு குழந்தைகளின் உதடுகளைப் போல், எந்நேரமும் திறந்த வண்ணமே இருந்தன.
பச்சைக் கிளிகளின் குஞ்சுகள் – கிளைகளில் குந்தியிருப்பதைப் போலத் தளிர்கள் இருந்தன.
உதயசூரியன் மதிய ஒளியனான பிறகு, உழைத்துக் களைத்த மகனுக்கு ஆறுதல்கறி – அன்பு காட்டும் தாய்போல – அந்தி, மாலை நேரத்தில் சூரியனை அழைத்தது.
குறளில் அடங்கும் ஒப்பற்ற பொருளைப்போல், சூரியன் அந்திக்குள் அடங்கினான்.
விளக்க முடியாத துன்பத்தால் இருண்டு போயிருக்கின்ற விதவையின் உள்ளம்போல் – உலகின் மேல் இருள் கவிழ்ந்தது.
வானம் அப்போது நிர்மலமாக இருந்தது.
காலமறிந்து தாக்குவதற்காகப் படை வீரர்கள் பதுங்கிப் பதுங்கி, எதிரியின் எல்லையை எட்டிப் பார்ப்பதுபோல் – விண்மீன்கள், ஒவ்வொன்றாகத் தலையைக் காட்டின.
அவற்றின் கண்கள் சிவந்திருந்தன. நெடுந்தூரத்தில் செல்லுகின்ற தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப்போல, சில நேரத்தில், விண்மீன்கள் தெரிய ஆரம்பித்தன.
ஒரு மனிதனுடைய வாழ் நாட்கள், பறக்கின்ற பறவையைப் போல செல்லுகின்றது என்றால் – அந்தப் பறவைகள் கூடு கட்டுகிற இடம், விண்மீன்கள் மீதுதானா?
என்னுடைய மன உளைச்சலிலிருந்து, நான் விடுதலை பெறுவதற்காக, என் கையில் ஒரு விளக்கு இல்லையே – என்று, இயற்கையெனும் கலைஞனைப் பார்த்துக் கேட்டேன்.
அவன் தன் நெற்றியைச் சுருக்கிக், கால்களை அகல விரித்து, உன்னை நான் இருட்டுக்கு அழைத்துச் செல்லவா? ஒளி தரும் சூரியனைப் பகலிலே தந்தேன்?
நீ தாமரைப் பூத்த தடாகத்தில் குளித்துவிட்டு –
மல்லிகை மணக்கும் பூங்காவில் ஓய்வெடுத்தபின் –
வண்டுகள் மொண்டு வைத்த தேனை வாரி உண்ட பின் –
உன் வழிப் பயணத்தை என்னிடத்தில் முடித்துக்கொள் என்று நான் சொல்லவில்லையா?
மறைபட்ட பொருளை வெளியாக்கி – சிறைபட்டச் சீவனை விடுதலை செய்து –
முட்டாள் தனத்தை அறிவு மயமாக்கி –
குழந்தையை வாலிபனாக்கி
வாலிபத்தை வயதாக்கி –
மேலை கீழாக்கி – கீழை மேலாக்கி
சகதியிலே நீ விழாமல் இருப்பதற்காக, உனக்கென ஓர் ஒளியை உருவாக்கியவன் நான்.
அந்த ஒளி – வானத்தில் நிலவாகவும் – பூமியில் உன் மன அறிவாகவும் இருப்பதை நீ உணரவில்லையா?
நீ, கேட்ட பிறகு உன் கோளுக்கு இணங்கி, அதோ அந்த வான வட்டத்தை, உனக்காகப் பரிசளிக்கிறேன்.
அதன் பெயர் நிலவு.
அந்த நிலா, ஒப்பற்ற ஒளிப் பிழம்பு.
தெளிவுக்கு இலக்கணம் அது.
இந்த ஒளியால் அதனைத் தீண்டியவர்கள். ஒரு போதும் இருளில் இருந்ததில்லை.
காணாமல் போன தனது சீவனைத் தேடிக்கொண்டு அலைபவன்கூட, அந்த நிலவொளியில், காட்டோரத்தில், கண்கலங்கி கொண்டிருக்கும் சீவனைக் கண்டுபிடிக்கிறான்.
உறவு முறைகள் – பழுதுபட்டு அங்கங்கே உதிர்ந்து போகிற நேரத்தில், அந்த ஒளியால் சிதறியதை, மனிதன் பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியும்.
நெடுந்தூரத்திலிருந்து, ஒளி கொடுக்கின்ற சூரியனிடமிருந்து, சூடு வருகிறது.
ஆனால், நெடுந்தூரத்திலிருக்கின்ற நிலாவிடம் இருந்து – சூடு வருவதில்லை.
இந்த வித்தியாசம் ஏனென்று, புரிகிறதா?
உலகத்தில் சிலர், அணுகுகிற நேரத்தில் கொதித்துக் கொண்டுமிருப்பார்கள் – குளிர்ந்து கொண்டும் இருப்பார்கள்!
மனிதன், விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், அவனுக்குச் சூரியனையும் – உழைத்து, அலுத்த நேரத்தில், அலுப்புக் கேற்றபடி நிலாவையும், நான் படைத்தேன்.
நிலா, கடலைக் கூத்தாடச் செய்கிறது.
நிலவுக்கு, இந்த உலகத்தைத் தூங்க வைக்க முடியும.
தனது வாழ்நாளை இந்த உலகம், நிம்மதியில் கழிக்க வேண்டுமென்பதற்காக, கோடிக் கணக்கான தாரகைகளோடு, வருகின்ற பெரிய உள்ளம் படைத்தது நிலா.
சூரியனுக்குக் கை எடுப்பதுபோல, நிலவுக்குக் கையெடுக்க – இந்த சமுதாயம் ஏன் மறுக்கிறது?
அதிலே, ஓர் இரகசியம் இருக்கிறது!
பகலவனை வணங்குகின்ற நேரத்தில், மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான்.
நிலவைப் பற்றி நினைக்கின்ற நேரத்தில், மனிதன் பாதித் தூக்கத்திலே இருக்கிறான்.
மென்மையான தென்றலின் தேர் மேலேறி பயணம் வருகின்ற இராக்கால மவுனம் – நிலவைத் தன்மீது குடையாகப் பிடித்துக் கொண்டு வருகிறது.
உலகத்தின் நடவடிக்கைகளை முழுமையாகக் காணவேண்டு மென்றால், இரவு நேரம் சரியான நேரமாகும்.
பெரிய மனிதர்களின் போலி வேடமும் –
சந்தர்ப்பவாதிகளின் – கொட்டமும் –
சாகசத்தின் முழு உருவமும்
கட்டவிழ்த்த குதிரையாக ஓடுகின்ற நேரம் – இராக் காலமாகும்.
அந்த நேரத்தில், பொதுவாக மனிதப் பண்பு பலவீனமடைகிறது.
மனிதனுடைய சுய உருவம் – தெரிய ஆரம்பிக்கின்ற நேரத்தில், சிரித்த முகத்தோடு பார்ப்பது நிலாவாகும்.
அந்த நிலவை நாம் போற்ற வேண்டும்.
அது தத்துவத்தில இருந்தால், அதனைப் புத்தம் என்று அழைப்போம்.
அது கவிதையிலிருந்தால் – அதனைக் கவித்துவம் என்று, பாராட்டுவோம்.
சித்தாந்தத்தில் அது இருந்தால், அதைச் சித்தர் பட்டியலிலே சேர்ப்போம்.
அது கணிதத்தில் இருந்தால், எண்களின் மாயத்தில் சேர்ப்போம்.
இலக்கியத்தில் இருந்தால், அதனைப் புலமையிலே சேர்ப்போம்.
அது வானத்தில் இருப்பதனால் நிலவு என்கிறோம். அது அரசியலிலும் இப்போது வந்திருக்கிறது.
ஆதலால், அதனை அறிஞர் என்று அழைப்போம். இரக்கமற்ற மனிதக் கண்கள், அந்த நிலவைச் சபிக்கின்ற நேரத்தில், அது தன் குளிர்ச்சியைவிட்டுக் கொதிப்படையவில்லை.
ஊமைக்கும் அதியற்புதமான கற்பனையைக் கொடுக்கக் கூடிய சக்தி, நிலா என்று, கவிஞர்கள் கூறுகிறார்கள்.
உடம்பெல்லாம் தொழு நோய்ப் பற்றிய ஒருவன், அந்த நிலா ஒளியில் செல்கிற நேரத்தில், அவன் பாதி குணமாகி விடுகிறான்.
இல்லையென்றால், அவன் உடல் பூராவும் தங்கமாய், மின்னுவதைப் பார்க்கிறோம்.
மண்ணிலே புதையுண்ட தங்கத்தை வாரிக்கொள்வதைப் போல், விண்ணிலே புதைந்த நிலவைக் கண்களால் வாரிக் கொள்கிறோம் கருத்தால் நிரம்பிக் கொள்கிறோம்.
பேரறிஞர்களை நிலவுக்கு ஒப்பிடுவதின் மூலம், நம்முடைய ஆசையைக் காட்டிக் கொள்கிறோம் என்று நினைக்கக்கூடாது.
உயர்ந்த இடத்தில், ஒருவன் சென்றால், அவன் சூரியனைப் போல் எரிச்சலாக இருப்பான்.
ஆனால், பண்பட்ட அறிஞர்கள் உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும், எரிச்சலாய் இருக்கமாட்டார்கள்.
உயர்ந்த இடத்தில் எரிச்சலை ஊட்டாமல் இருப்பது நிலவு! ஆகவே அண்ணா அவர்கள் ஒரு நிலா.
இப்படி, வாழ்க்கையின் தத்துவத்திற்கு ஒட்டி வருகின்ற ஒரு நிலா, பலருடைய இரகசியத்தை அறிந்ததாகும்.
கோடி மக்களின் அனுபவத்தை உணர்ந்ததாகும்.
அதன் அறிவின் ஆழத்தை, அவனுள் இறங்கி யாரும் கானவில்லை.
அதன் விரிவில், யாரும் குடித்தனம் செய்யவில்லை.
அதனுடைய செறிவில், யாரும் அணுவாகவில்லை.
ஆனால், அதன் ஒளிமட்டும் ஊருக்குப் பரவுகிறது.
அதன் வட்ட வடிவில் அறிவின் சிதறல்கள்.
அதன் மவுனத்தில், ஞானத்தின் தெளிவு.
தன்னிடத்திலே இருக்கின்ற பெரிய சக்தியினால், அந்த நிலா கர்வமடைவதில்லை.
தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி, அது நெடுநேரம் பேசுவதில்லை.
அது இழுக்கின்ற பிராணவாயுவில் – மக்களின் சக்தி இருக்கிறது.
புதிதாகப் பிறந்த குழந்தை முதல், பழையதாகப் போகின்ற மனிதன் வரை – அதன் பெருமைக்குச் சாட்சியாக இருக்கிறார்கள்.
ஏற்றத் தாழ்வென்ற படிக்கட்டுகளிலே ஏறி, அது சரிந்து கீழே விழுந்ததில்லை.
அந்த நிலவைக் கோபப்படுத்திப் பார்த்தாலும், அது கொதிக்கின்ற சூரியனாவதில்லை.
பூமியில் இருக்கின்ற சில அராஜக எரிமலைகள், அதன்மீது தீக்குழம்புகளை வாரி இறைத்தபோது கூட, நிலா சூட்டினால் – வெடிப்பு விடுவதில்லை.
பொறுமையின் எல்லைக் கோட்டில், அந்த நிலா நின்றுகொண்டு, அடக்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி – நடந்து கொண்டிருக்கின்ற கரு முதல் கல்லறை வரையில் துன்பத்தால் அமர்ந்து கொண்டிருக்கின்ற மனித சமுதாயம், நிலவை நம்பியே – தன்னுடைய வாழ்நாளைத் துவங்குகின்றது.
வீசியடித்த புயல், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
அந்தப் புயலுக்குப் பெயர் மக்கள் எழுச்சி – அந்த எழுச்சிக்குக் கர்த்தா அறிஞர் அண்ணா என்ற வெண்ணிலா.
12. அண்ணா ஒரு ‘குமிழி’
வேக்காடு பிடித்த வானம் – உயர்ந்த காற்றால், நெளிந்து கொண்டிருந்தது!
வெப்பத்தின் விளைவு – தேங்கி நிற்கும் குட்டையை ஓங்கி அலையடிக்கும் ஆழியை – சுண்டவைக்கிறது!
விளைவு, எழினிகள் அங்கங்கே வானத்தில் கொத்துக் கொத்தாய்த் தொங்க ஆரம்பித்தன!
கரிய மேகங்கள் – வெண் மேகங்களோடு மோதின!
இடையிலே மின்னற் கீற்றுகள் சவுக்கால் அடிக்கப்பட்ட குதிரைகளைப் போல, மேகங்கள் திக்குக்கொன்றாய் ஓடின.
அந்த அடிகளைத் தாங்க முடியாத மேகங்கள் அழ ஆரம்பித்தன. அதுதான் மழை!
வானம் – தேம்பித் தேம்பி அழுதது! அதனை ஊமை மின்னல் என்று கூறுவார்கள் !
அதோ மின்னல்! அதன் தோற்றம், காதலின் முதல் பார்வையிலே வெளி வந்த ஒளி போல இல்லையா?
உடனே இருள்! அது கூம்பிய காதலின் வடிவமல்லவா?
பிறகு மழை, உடைந்த காதலின் உப்பு நீர் தானே அது?
இப்போது – ஊரே பெருக்கெடுத்தோடுகிறது! எங்கும் வெள்ளக்காடு அலை பரப்பி ஓடை வடிவெடுத்து, கால்வாய் வழியாக ஓடுகிறது – வெள்ளம்!
அந்த வெள்ளப் பெருக்கின் மீது, மேலும் மழைத் துளிகள் விழுந்துகொண்டே இருக்கின்றன!
ஜலதரங்க ஓசை! தண்ணிர்க் கொப்பளங்களாகத் தோன்றிச் சிரிக்கின்றன!
அக்கொப்பளங்கள் மீது வான் துளிகள் வீழ்ந்து உடைந்து, நீரோடு நீராகக் கலக்கின்றன!
தப்பித்தது ஒரு குமிழி! சுழற் பெருக்கோடு, ஓடையிலே குமிழி மிதந்து செல்கிறது!
தமிழன்னையே! தாயே! மலர்த்தேன் குட்டையிலே குளித்தெழுந்து வந்தவளே – நீ வாழ்க!
எத்தனையோ படைப்புக்களைப் படைத்த நீ உனது கைக்குக் கிடைத்தவன் நானா?
என்னைக் குமிழியாகப் படைத்தவளே! நீரின் மீது ஓடமாக ஓட்டி விட்டவளே!
தாய்ப் பாசம் என்னைத் தள்ள, உன் மடியை நோக்கி வரவேண்டிய என்னைக், கற்களிலே மோதி உடையவா படைத்தாய்?
எனது தோற்றத்தால், நீ பெறுகின்ற மகிழ்ச்சிதான் என்னம்மா?
அலையின் அழகில் ஆனந்தக் கூத்தாடும் தென்றல் தேரை, நீ ஓட்டி வந்த நாளில் – உனது தேரூறும் பாதையெலாம் நான் மணலாக இருந்தேன்!
அருள் பெற்ற காரணத்தால், எனக்க நீ அருளிய உருவம், குமிழியா அம்மா!
நிதானத்தைத் தவறாத மனிதன், நித்திரையில் நல்ல கனவைக் காண்கிறான்!
அவனின் ஆசைகள், பகலிலே பூத்துக் குலுங்குகின்றன!
தாயே! என்ன கனவு நான் காண்பேன்!
பயங்கரத்தின் தலை வாயிலிலே நான், பொடிப் பொடியாவதைப் போல, தினம் தினம் காண்கின்றேன்.
என் வாழ்நாள், மக்கிப் போன கயிற்றைப் போல இழை உரிந்துக் கிடக்கின்றது!
ஒரு காலத்தில் இது ஆனையைக் கட்டி இழுத்தது! இப்போது ஓர் ஆட்டைக் கூட கட்ட முடியாமல், கூடியரோக நோயாளியின் உடலைப் போல எலும்புருகி, சதை தளர்ந்து அவிழ்ந்து கிடக்கிறது!
தாயே! இந்த நீர்க் குமிழித் தேகம் எனக்கு வேண்டாமம்மா!
வானிலிருந்து இறங்கும் ஒவ்வொரு மழைத் துளியும் – என்னைக் காயப்படுத்துகின்றன!
அந்தத் துளிகள், தன் காலால் என் தலையை உதைத்து உதைத்து மிதிப்பதைக் கண்டு, விளையாட்டுப் பிள்ளைகள் சிரிக்கிறார்கள் தாயே!
பயங்கரவாதி சிரிப்பது போல், கீற்றுவிடும் மின்னல் தீக்கோடு, என்னைச் சுண்ட வைத்து விடாதா?
வீசுகின்ற புயற் காற்றில், என் உடல், விளாம்பழத்தின் ஒட்டைப்போல் – விரிசல் விடாதா?
வாழைமரத்தில், குத்திவைத்த இரும்புக் காரைப்போல் – துருப்பிடித்துபோன என் எதிர் நாட்கள், வீரர்கள் கையில் இருக்கும் வாளைப் போல, பளபளப்பாகத் தோன்றும் நாள் எந்நாள்?
தத்துவ விளக்கத்திற்காக என்னைப் படைத்து விட்டு, நீ மேகக் குதிரை ஏறிப் போகின்றாய்! சோகப் பாதையில் நான், போய்க்கொண்டிருக்கிறேன்.
எனது வயல்கள், முட்டாள்களின் சிந்தனையைப் போல சாவியாகச் சாய்ந்து கிடக்கின்றன.
கதிர்மணிகளில் சப்பட்டை நெற்களே மிஞ்சியிருக்கின்றன. இந்த லட்சணத்தில், எனக்கு வண்ணம் தோய்த்த நீர்க் கமிழி உருவமா அம்மா!
அதோ, கரும் இருளில் பேய்க்காற்று என்னை அடித்துச் செல்கின்றது!
வழி காட்ட ஒரு மின்மினிப் பூச்சி கூட என்னுடன் வரவில்லையே!
பனித்துளிகளை உண்டு வாழும் வெட்டுக்கிளியின் இயற்கைப் படபடப்பைத் தவிர, வேறு குரலேதும் கேட்கவில்லையே!
நத்தையின் உதடுகள், கிளிஞ்சல்கள் மேல் போகும் போது ஏற்படுகின்ற சப்தத்தைத் தவிர, நான் எதையும் கேட்க முடியவில்லை!
கனவு கண்டு எழுந்த புறாக்களின் முனகலைத் தவிர – வேறு எந்த அசரீரியும் கேட்கவில்லையே!
தொட்டிலில் நீ பாடிய பாட்டை, நான் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்கின்றேன்!
அவை, கவனத்தின் கூடாரத்திற்கு வரவே, ஆண்டுகள் பல பிடிக்கும் போல் இருக்கிறதே!
உனது இனிமையான அன்பழைப்பை ஏற்றுக் கொள்ள என் செவிக் கதவுகள், திறந்தே இருக்கின்றன.
அவற்றில், அவலத்தின் ஆரவாரத்தைத் தவிர – வேறெதுவும் கேட்கவில்லை.
அம்மா! இதோ நான் உடற்குன்றி, இப்போது இரண்டு கற்களுக்கிடையே, நுழைகின்றேன்.
அக்கற்கள், எதேச்சாதிகாரத்தின் பிடியைப் போல், இறுக்கமாக என்னைப் பிடிக்கின்றன.
எனது சுதந்திர உணர்ச்சிக்கு, அவை விலங்குகளைப் பூட்டின போல் தோன்றுகிறது.
உண்மையிலேயே, நீ என்னைச் சுதந்திரமாகப் படைத் திருந்தால், பலி பீடத்தின் முன்னாலே நிற்க வைத்திருக்கும் ஆட்டைப் போல – ஏன் – என் உரிமை பெருமூச்சு விடவேண்டும்?
பலாப் பழத்தின் முட்களைப் போல, சொறி பிடித்த கற்களுக்கு இடையே, இப்போது எனது உடல், தேய்ந்து தேய்ந்து, நழுவி நழுவிச் செல்கின்றது!
இருபதாண்டு காலக் கொடுங்கோல் ஆட்சி ஒன்றிடமிருந்து தப்பித்த மக்களைப்போல, அக்கற்களை விட்டு ஒருவாறு பிழைத்து நகர்ந்து வந்து விட்டேன்.
திடீரென்று உயரமானதோர் இடத்திலே இருந்து – தட தடவென்று சரிந்து, கீழே விழுந்தேன்.
ஒட்டகத்தின் மீதிருந்த அரசனொருவன், ஒட்டாண்டியான போது, எப்படித் தள்ளாடித் தள்ளாடி நடப்பானோ, அப்படி நடுங்கிக் கொண்டே இப்போது செல்கிறேன்.
ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களில், அதன் தொண்டர்களது உடம்பு, பட்ட அடி உதைகளால் படுகாயங்களாவதைப் போல், எனது உடம்பு கீழே விழுந்தபோது படுகாயங்களாகி விட்டன.
இருந்தாலும், எனது உடலை அந்தச் சரிவுகளால், அழிக்க முடியவில்லை . தாயே!
உனது சாகாவரம் பெற்ற இலக்கிய ஏடுகளில் ஒன்று, எனக்குக் கவனம் வருகிறது அம்மா!
சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன், “செந்நாய் சீறினாலும் – சிறுத்தைகள் உறுமினாலும் – கலங்கத் தேவையில்லை” என்பதே அது.
எனது பாதை, பள்ளங்களும் – மேடுகளும் நிறைந்தவை என்றாலும், விழும்போதுதான், மேடும் பள்ளமும் தெரிகிறது!
என் உடலின் மீதிருக்கும் வண்ணத்தைப் பார்த்து – நீ ரசிக்கிறாயா அம்மா!
அவற்றை நீ தானே, துரிகையால் தொட்டு எழுதினாய்?
அளவிட முடியாத உயரத்தைக் காட்டுகின்ற வண்ணம் – நீலம்.
அந்த நீலத்திற்கு, நீ கொடுத்த விமரிசனம் – ‘திருக்குறள்’ அல்லவா?
அதனால், என் உடல் முழுவதும் எழுதி வரைந்தாய்!
அதன் ரசனையில் நீ இருக்கும் போதே, நான் கீழ் – மேலாகவே, வாழ்க்கையை மாற்றிச் செல்கிறேனே!
தாயே! தர்மத்தின் திக்கில் இருப்பவளே! நீதியின் நிழலை விரவும் தருவே!
உனது கம்பீரமான தோற்றத்தை, நான் போகின்ற ஆற்றின் பாதையில், கண்டேன்! மெய்சிலிர்த்தேன்!
என் ஜீவயாழ், உன்னைப் பாடிக் கொண்டே செல்கின்றது!
அந்தப் பாட்டு…! உன் இலட்சியத்தின் மீது கட்டப்பட்டது!
விடுமுறை நாட்களில் ஓய்வு பெற வந்த சிறுவர்கள், என் அழகைப் பார்த்துச் சிரிக்கின்றனர்!
ஒரு தீராத விளையாட்டுப் பையன், தன் காகிதக் கப்பலை – என் மீது மோதினான்!
நான், கப்பலோடு சேர்ந்த வண்ணமாய் சோகமாகச் செல்கின்றேன்.
சிறுவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி! அதே நேரத்தில் எனக்கு எத்தனை அதிர்ச்சி! அப்போது ஒரு கவிஞன் இருந்தால் அது தானே கவர்ச்சி!
உன் அறிவின் ஆழம்போல, ஓர் ஆழமான இடத்தில் நான் மீண்டும் தலைக் குப்புற விழுந்தேன்!
என்னுடன் வந்தக் காகிதக் கப்பலும் கவிழ்ந்தது!
அதன் மீது எழுதப்பட்ட எழுத்துக்கள் – நீரால் கரைந்தன.
ஒரு காலத்தில், இந்த நாட்டின் மானம் எழுதப்பட்ட பத்திரமாக அது இருந்தது.
அதை எடுத்துச் சில சிறுவர்கள் கப்பல் செய்து விட்டுவிட்டனர்.
அந்த எழுத்துக்கள் நீரில் கரையும்போது, என் மானமும் கரைந்து கண்ணீர் பொங்க ஆரம்பித்தது.
தாயே! இதுவும் உன் திருவிளையாடலா?
தமிழர் மானத்தைக் கரைக்க ஓர் ஊழிப் பெருவெள்ளம் எப்போதும் படையெடுத்ததில்லை! எடுத்தால், அது – வென்றதுமில்லை, என்பதை நீ அறிவாயே – அம்மா!
தாயே! இப்போது ஒரு காய்ந்த இலையின் மீது, எறும்பு ஒன்று மிதந்து செல்கிறது. அதனுடைய முகத் தோற்றத்தைப் பார்க்கும்போது – உரிமை இழந்த – கடல் கடந்த தமிழர்களைப் போல, எனக்குப் புலனாகிறது.
அதோ அந்த இலை, இப்போது என்னருகே வருகிறது!
பளபளக்கும் என்னுடைய உடலைப் பவழமலை என்று நினைத்து, எறும்பு என்மீது ஏற ஆரம்பித்து விட்டது.
அதோ பாரம்மா, அந்த எறும்பு தனது தகுதி, திறனை அறியாமல், சரிந்து கீழே விழுந்து, நீரில் மூழ்கி எழுவதை! இஃது, சில பேதை மனிதர்களின் மன நிலையைப் போல – இல்லையா அம்மா?
தாயே! பொய்யானத் தோற்றத்தை, ஏன் அளித்தாய்?
வாழ வேண்டிய ஓர் உயிர், நீரில் மூழ்கிப் போய்விட்டதே!
“அழுக்காறு கொண்டார்க்கு அதுவே சாலும்”, என்று உலக, ஆசான் வள்ளுவன் கூறினானே, அஃது, இந்த எறும்பைப் போன்ற மனிதர்களுக்குத்தானா?
மனித சகாப்தம் என்பதைக் காலம் ஒன்றால்தான் விளக்க முடியும்.
அந்த விளக்கத்தில் இருக்கின்ற ரகசியங்களைக் காலம் ஒன்றால்தான்; பிறகு பிறப்பவர்களுக்கு அறிவிக்க முடியும்.
அம்மா! உனது ரகசியத்தை அறிவதற்கு, நான் நெடுந்துரம் வந்திருக்கிறேன்.
நான் செல்லுகின்ற நீரோடையின் இரு மருங்கிலும் – வாளெடுத்தப் போர் வீரர்களைப்போல, நாணற் புற்கள் கரையில் முளைத்திருக்கின்றன.
இப்போது நான் மிகவும் களைத்து விட்டேன். ஒரு நாணற் புல்லின் அடியிலே நான் இளைப்பாறுகிறேன்.
அந்தப் புல்லின் தண்டின்மேல், ஒரு வானம்பாடி இசை ஓசை எழுப்பிற்று?
அதன் கண்டத்தில், அரசவையில் பாடுகின்ற வித்துவானின் குரல் தோற்றமளித்தது!
அதன் கவிதையில், பாவேந்தர் சுப்புரத்தினத்தின் புரட்சி யாப்பும் இருந்தது.
அதன் தாளத்தில், சுப்பிரமணிய பாரதியாரின் கும்மி இருந்தது.
அதன் இசையலையில், தாயே உன்னுடைய தேனமுதத் தாலாட்டும் இருந்தது;
அந்த வானம்பாடி பாடிய பாட்டுதான் – என்ன?
‘வீணையோடும், சுரமண்டலத்தோடும், மத்தளத்தோடும் நடனத்தோடும் – யாழோடும் தீங்குழலோடும் – ஓசையுள்ள இசைத் தாளங்களோடும், உரிமையைப் பாடிக்கொண்டு வாருங்கள்’ என்ற பொருள்தான்- அதன் டாட்டிலே ரீங்காரமிட்டது.
இந்த இசையின் கூர்மையால், எனதுள்ளம் பொத்தலானது. அதிலே; அந்தக் கருத்துக்கள் குடித்தனம் செய்தன.
மலைகளில் சந்தனத்தை –
மேகத்தில் நீரை –
கடலில் முத்தை –
வானில் நிலவை
தேனில் சுவையை –
வயலில் ஆட்டத்தை –
புயலில் பேயாட்டத்தை – நெருப்பில் சூட்டை –
நிலவில் குளிர்ச்சியை
உண்டாக்கி, மகிழ்ந்து, ஓய்வெடுக்கும் தாயே.
உனது பெயரில் எனது ஜீவன் தாலாட்டுப் பாடுகிறது.
நீதி மன்றத்தில் நின்று அநீதியைக் கண்டிக்கின்றவளே, பள்ளியிலே இருந்து புதுப் பாடத்தைச் சொல்லிக் கொடுப்பவளே, விருந்திலே அறுசுவை படைப்பவளே! உன்னை நான் ஒன்று கேட்பேன்!
எனது பூர்வ காலத்தியச் சொத்து எல்லாம், நீ எழுதிவைத்தவைதான். அதையே, கேள்வி ரூபத்தில் உனக்கு அனுப்பி வைக்கிறேன்.
எனது உடலைப் பார்த்தாயா? வாழ்க்கையின் வெடிப்பும் – வறுமையின் கீறலும் – துன்ப வடுவும் – அதிலே, சோக ரேகைகளோடு பின்னிக் கிடக்கின்றன!
அக்கினித் தழலால் வெந்து போன என் மனம், உனது அருள் மருந்துக்காகக் காத்துக் கிடக்கின்றது.
இந்த நாட்டின் ஜீவநாடி என்று, உன்னைக் கூறுகிறார்கள். எந்தக் காலத்திலும், நீ – தூங்கி அறியாதக் கண்களை வைத்துக் கொண்டிருப்பவள்.
நோஞ்சானுக்கு நேசக்கரமும் – எதிரிக்கு வீரக்கரமும் நீட்டுபவள்.
இப்போது என் நிலை, பயங்கரமான அரசியல் முட்காட்டில் செல்லுபவனைப்போல் இருக்கிறது.
நான், மேற்கொண்டு எனது பயணத்தைத் தொடர்வதற்கு முன்னால், நீ வந்து என்னை அள்ளி எடுத்து, உன் இதயக் கடலிலே மிதக்கவிடு.
சிறுவர்களின் கோரிக்கைக்கும் – சூழ்நிலை என்ற சுழலுக்கும் – நான் பலியாகாமுன், உன் உள்ளக் கடலில் – என்னை உலாவவிடு.
தாயே! ஆடி மாதம் ஒருநாள்! உன்னுடைய பிறந்த நாள் வந்தது!
அப்போது உன் அழகைப் பார்க்கப் பொன்னிப் பெருக்கெடுத்து வரும்போது நானும் வந்தேன்.
கோவலனையும் – மாதவியையும் வெட்டிப் பிரித்த சில மஞ்சள் பூக்கள்; வரலாற்றிலே செய்த வஞ்சத்தை மறைத்துக் கொண்டு, அதே காவிரியில் மிதந்து சென்றன!
இந்தப் பூக்கள், சிலப்பதிகார இசை நாடகத்தால் – கெட்ட பெயர் பெற்ற பூக்கள் அல்ல.
அம்மா! உன் பிறந்த நாளுக்காகச் சூடப்பட்ட, தார் சரத்திலிருந்து உதிர்ந்து விழுந்தவை.
நீ, குஞ்சரத்தின் மீதேறி வந்தாய், உன்னைப் பார்த்து கை எடுக்காதவன் முடவன்தான், உன் அழகைப் பார்க்காதவன் குருடன்தான்!
கரிய மேகத்திற்குக் காலும் வாலும் வைத்தால், நீ ஏறி வந்த கரிய யானைபோல் இருக்கும்.
அந்த மேகங்கள், அப்போது ஒன்றும்கூட இல்லாத காரணத்தால் – வானம் மனப் பெண்ணுக்காக விரிக்கப்பட்ட பாயைப் போல் இருந்தது.
உன் அழகை, அங்கே வந்து பார்க்கலாம் என்று, ஓடோடி வந்தேன். அதற்காக நட்டாற்றைவிட்டு கரைக்கே வந்தேன்.
என் தாயின் அழகில் இந்த உலகம் பூந்தாதிலே மயங்கிக் கிடக்கும் வண்டுகளைப் போல், மயங்கிக் கிடப்பதைக் கண்டேன்.
அந்த காட்சியைக் கண்ணாரக் கண்ட நான், ஒரு கணம் மெய் மறந்தேன்!
உன் தமிழ்ப் பற்றை மட்டும், அப்போது ஒருவன் பாட்டாகப் பாடினான்.
உனது நாட்டுப் பற்றை, ஒருத்தி நாடகமாடினாள்.
உனது அரசியல் பண்பைப் பற்றி, ஒருவன் கவிதை யார்த்தான்!
உனது உறவைப்பற்றி ஒருவன் உருகினான்! அன்பின் உருவாகி, ஆனந்தக் கண்ணிரைச் சொரிந்தான்!
அந்த புகழ் நெரிசலில் – உன்னை எப்படியம்மா, நான் வெளியே வந்து பார்ப்பது?
ஒரே மனத்திரள்: தேனடையில் மொய்த்துக் கொண்டிருக்கும் தேனிக்கள் போல, நானும் நெருங்கிக் கிடந்தேன்.
எப்படியாவது உன்னைப் பார்க்கவேண்டும் என்பதற்காகத் துணி துவைக்கும் தொழிலாளியின் கல்லருகே, வந்தேன்.
அப்போது நீ, வாய் திறந்தாய், கொட்டின முத்துக்கள்! சிதறின. வைரங்கள்! எல்லாம் மரகதக் குப்பைகள்! மரகதக் குப்பைகள்!!
ஒவ்வொரு கற்களும் . ஒவ்வொரு பொருள் வண்ணத்தைக் காட்டி ஒளிர்ந்தன!
வந்தவன் ஒவ்வொருவனும், அந்த விலை மதிக்க முடியாத மணிகளை – மனக் கூடையில் – வாரிக்கொண்டு போனார்கள்!
எஞ்சியிருப்பது ஒரே ஒரு முத்து. அந்த முத்தை நாடி நான், நெருங்க ஆரம்பித்தேன். அது என்னருகிலேயே இருந்தது!
அந்த முத்திலே, கண்ணியம் – கடமை – கட்டுப்பாடு என்ற சொல்லோவியங்கள் எழுதப்பட்டிருந்தன.
குமிழி உருவம் எடுத்தாலும் பரவாயில்லை. ஆனாலும், உன் பேரழகையும், புகழ் உரைகளையும், மக்கள் இதயமாரப் பேசி ரசித்து புகழ் பாடுவதை இந்த அஃறினை உருவத்திலே கானும் பேறு பெற்றேனே! அது ஒன்றை – இப்பிறவி பெற்றதின் பேறாகக் கருதினேன்.
நல்ல குடிமகனாக உருவாக்குக
ஏழ்மை நிலையிலும், பெற்றோர்கள் எவ்வளவோ இன்னல்களையும், இடுக்கண்களையும், இழப்புகளையும் தாங்கிக் கொண்டு நம்மைப் படிக்க வைக்கிறார்கள் என்ற பொறுப்புணர்ச்சியுடன், நல்ல முறையில் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு இந்த நேரத்தில் ஒன்று கூறிக் கொள்வேன். எவ்வளவோ ஏழ்மையிலும் – துன்பத்திலும் பிள்ளைகள் நம்மிடம் படிக்க வருகிறார்கள். அவர்களின் ஏழ்மையையும், அறியாமையையும், போக்கும் விதத்தில், சீரிய முறையில் பாடங்களைக் கற்பித்து, நல்ல குடிமகனாக உருவாக்க வேண்டும்.
- அறிஞர் அண்ணா
13. அண்ணா ஒரு தொடுவான்
தொடுவான் என்பது, பூமியின் மேல் உதடு!
தொடாதவான் – தொடுவானாக மாறுகிறது.
அண்ணாவின் முழுமையை யாரும் தொட்டது கிடையாது!
ஆனால், தொடுவான் பூமியைத் தொடுவது போல் தெரியும்!
அது கண்ணுக்கு மாயை அல்ல – கருத்துக்கு மாயை!
அண்ணா கண்ணுக்கு மாயை அல்ல! கருத்திலே அவர் ஒரு புதிர்! – தொடுவான், மின்னல் விளையாடும் திரை!
அண்ணா, எண்ணத்தை விளையாட வைக்கும் இறை!
அந்தி நேரத்தில், தொடுவானில் ஒரு பறவை பாடிக் கொண்டே செல்வதைக் கேட்டேன்.
அதன் சிறகுகளிலே பொருந்தியிருக்கும் இறகுகள் சொர்ணத்தாலானவை.
கூட்டை நோக்கி அது செல்கிறது.
குஞ்சுகள் கூட்டிலே இருந்து தாய்க்காகக் காத்துக் கிடக்கின்றன!
தொடுவான், வீடு திரும்பும் பறவைகளைத் தினந்தோறும் பார்க்கிறது.
அந்த பறவைகளின் இலட்சியத்தைப் பற்றி, அது தினந்தோறும் நினைக்கிறது.
வீடு திரும்பிய தாய்ப் பறவைகளை, கண்டு களிக்கும் குஞ்சுகளைத் – தொடுவான் பார்க்கிறது.
இவைகளின் வாழ்க்கைக்கு இரை எங்கே கிடைக்கிறது?
அற்பமான இரையைத் தின்றுவிட்டு, எவ்வளவு அழகாகப் பாடுகின்றன – தொடுவான் சிந்திக்கிறது.
முழுமையான வாழ்க்கையை, இந்தப் பறவைகளுக்கு யார் வரையறுக்கப் போகிறார்கள்?
இவ்வாறு தொடுவான் சிந்திக்கும் போது, அதன் முகம் சிவந்து விடுகிறது.
ஏழைகள்பால் அண்ணாவுக்கு, தொடுவானின் இரக்க குணம் எப்போதும் இருந்ததை நான் உணர்ந்தவன்!
ஒரு கவிஞன், எண்ண வெளிச்சத்தில் மறைந்திருந்து, தனியாகத் தன் ஆத்மாவோடு பாடிக்கொண்டு எழுத்துக்களைக் கவிதையாக்கத் துடித்துக் கொண்டிருப்பது போல் – அண்ணாவும் தினந்தோறும் நினைத்தார்.
அதோ தொடுவான் முகத்தில், புன்னகைக் கொடிகள் படர்ந்து மறைகின்றன.
நான் கவிஞனாக இருந்தால், அதனை மின்னலுக்கு உவமையாகக் கொடுப்பேன்.
நான் எழுத்தாளன் – நொந்துபோன நெஞ்சிலே விழுந்த கீறலாகவே கருதுகிறேன்.
அந்த சின்ன மின்னல் ஒளியில், பெரொளியைக் கண்டபோது, மண் புழுக்கள் கீரைப் பாத்திக்கு நடுவிலே, எட்டிப் பார்த்ததை, நான் கண்டேன்.
அண்ணாவின் சிறு சிறு எண்ணங்கள், என் போன்ற மண் புழுக்களுக்கு, அப்படித் தானே தெரியும்.
நான் உயர்ந்த குடும்பத்திலே பிறந்த ஒரு சீமாட்டியாக இருந்தால், எனது மாளிகையின் மேற்பரப்பில், அன்புக் காதலனிட்ட உயிர் முத்தங்களை, என் உதட்டிலே எப்படி விளையாடுகின்றன என்பதைத் தன்னந்தனியே நான், சிந்திப்பேன் அல்லவா?
ஆனால், நான் தொழிலாளிக்கு வாழ்க்கைப்பட்டவள்! எனக்கு அவரிட்ட முத்தம் வட்டியிலே மூழ்கிப்போய் விட்ட குத்து விளக்காகும்!
அந்த ஒளியை நினைத்து, நானும் பெருமூச்சு விடுகிறேன்.
அப்போது அந்த தொடுவான் மட்டும், அவ்வளவு அழகாக இருந்திராவிட்டால், இந்த நினைவு கூட வந்திருக்காது.
அண்ணா ஏழைகளின் வாழ்விலே இருக்கின்ற இன்பத்திற்காகவே, நிலத்தை நோக்கி வளைந்தவர்.
அப்போது ஏழைக் குப்பாயி போன்றவர்கள், பழங்காலச் சிந்தனையைத் தொடுவானால் திரும்பப் பெறுகின்றார்கள்.
தொடுவான் இல்லையென்றால், உலகத்தில் வாழும் கோழிக் குஞ்சுகளான மக்களுக்கு, வானம் போன்ற கூடை கிடைக்காது.
எனக்குக் கவிதா நோக்கம் உண்டு – ஆனால், யாப்பைக் கடைந்தெடுத்து உண்டவன் அல்ல!
வானத்தை, கோழிக் குஞ்சு கவிழ்க்கும் கூடை என்பதை விட, இப்படித்தான் கூற எனக்குத் தோன்றுகிறது.
தனியாக மிதக்கும் ஒரு நீர்க்குமிழியைப் போலத் தெரிகிறது.
நிலம் ஊழிப் பெரும்வெள்ளத்திலே மிதக்கின்ற இலை.
நான் குமிழிக்குள்ளே இருக்கின்ற ஜீவன்!
இலையைத் தொட்டுக் கொண்டிருக்கின்ற உதடுதான் – நான் உள்ளே பார்க்கின்ற தொடுவானம்.
அண்ணாவும் இப்படித்தான்!
உலக ஜீவன்களைப் போர்த்தியிருக்கும் நீர்க்குமிழி போன்றவர் – இல்லையென்றால் தொடுவான் போன்றவர்.
அவரின் வார்த்தைகளின் உட்பொருள் புரியாத போது- அவரைத் தொடுவான் என்று கூறுவதும் உண்டு.
வெட்ட வெளியில் மனிதன் நடக்கிறான். வானம் அவன் அருகில் இருப்பதைப் போலத் தொடுவானால் உணருகிறான்.
அவன் அதனை நோக்கி, தமிழன் விட்ட அம்பு போல், காற்றினால் – உடலைக் கிழித்து ஒடுகிறான்.
வானம் அவன் கைக்குக் கிட்டவில்லை.
சளைத்து – களைத்துக் கீழே விழுகிறான். வாழ்க்கையில் சலிப்பு – இந்த நேரத்தில், தொடுவான் தூரத்திலிருந்து சிரிக்கிறது.
என்னை, நோக்கி வந்தவன் பயணம் செய்கிறான். என்னை, மாயை என்று நினைத்து உட்கார்ந்தவன், மேற்கொண்டு நகர முடியாமல் நிற்கிறான்.
அண்ணாவின் வாழ்க்கையில், இவை நமது மடியில் தெறித்து விழுந்த முத்துக்களாகும்.
தொடுவான், மேகத்திலே தலையை சீவிக் கொண்டிருக்கிறது. அதன் கூந்தலிலே இருந்து நேற்று வைத்த முல்லை இதழ் – சிதறிக் கிழே விழுந்தது.
அதற்குப் பனித்துளி; என்று நான் தெரியாமல் பெயர் வைக்கிறேன்.
அந்தப் பனித்துளி, கடலோரத்திலே இருக்கின்ற கிளிஞ்சலில் ஒய்யாரமாகக் குந்துகிறது. இந்த உவமை எதற்கு?
மனிதர்கள் வானத்தின் வலிவால், அற்பமான இடத்தில் சிதறி விழுகிறார்கள்.
அவர்களை மேலே இருக்கிற சக்தி கூர்ந்து கவனிக்கிறது.
ஆட்டம் போட நினைத்தப் பனித்துளி: அறுந்து போகின்ற தறிநூலைப் போல் நைந்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சாய்கிறது. இதற்காக இரக்கப்படுகிறவர்கள் யாருமில்லைல:
அதோ, தொடுவானத்தில் – அன்புக் கரங்கள் பனித் துளியின் தலையை வருடுகின்றன.
உன்னுடைய பிறப்பு இறப்பில் முடிவதில்லை.
என்னைப்போல நீ, மறுநாள் தோன்றுவாயென்று அதற்கு வாழ்த்துரை வழங்குகின்றது.
எளியவர்களுக்கு, இது போல்தான் அண்ணாவும் வாழ்த்துரை வழங்கினார்.
குகையில் நெளிந்து கொண்டிருக்கும் – இருட்டிலேயே வாழ்க்கை நடத்தும் – சிறிய பூச்சிகளாக மனிதன் வாழுகிறான்.
குகையின் இடுக்கில் பாய்ந்து வரும் சூரிய ஒளியை, அந்த பூச்சிகள் தாங்குகின்ற சக்தியற்றவைகளாக உள்ளன.
ஒளியிழை சிறிதளவு வந்தால் கூட பூச்சிகள் ஓடி ஒளிகின்றன.
மனிதன் இப்படித்தான் இன்று வாழ்கிறான் பாவம்!
நல்ல கருத்துக்களில் ஒர் அணுவைக் கூட அவனால் ஜீரணம் செய்ய முடியவில்லை.
அவனைத் தூக்கி விடுகின்ற சக்தி எங்கிருந்து வரும்? இந்த கேள்வியை, இன்று தத்துவம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
கந்தல் துணி வழியாகப் பிய்த்துக் கொண்டு வெளியே வரும் ஒளியைப்போல் – சிதறியிருக்கும் மேகத்தின் வழியாக, ஒளி தொடுவானிலிருந்து புறப்படுகிறது.
அதனைக் கண்டு எந்த மனிதனும் பயந்து ஒடுவதில்லை. ஆனால், கருத்தைக் கண்டு பயந்து ஒடுகிறான்.
அவன், குகையில் வாழும் பூச்சி!
தொடுவான் ஒளியிலே நனைபவன், உலகத்திலே வாழும் நல்ல மூச்சு!
அண்ணாவின் கருத்துக்கள், பல நேரத்தில் இப்படிச் சிதறி வெளியே தெறிக்கும்போது, பயந்த மனிதனும் உண்டு – பழகிய மனிதனும் உண்டு.
ஆகர்ஷண சக்திக்கு அப்பால், எந்த உலகமும் சுற்றுவதில்லை.
மனிதர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு உலகம்!
அவர்களும் ஈர்ப்பு சக்திகுள்ளேயே சுற்றுகிறார்கள்.
அவர்களுக்குள் சூரியன் உண்டு வெளுத்துப் போன நிலவும் உண்டு.
எண்ணெய் அற்ற அகல் விளக்கைப் போன்ற தாரகைகளும் உண்டு – அலைகின்ற மேகங்களும் அழுவதற்கென்றே உண்டு.
இந்த உலகங்கள் மரணக்குழியில் உருண்டு விடக் கூடாது என்பதற்காக, அகிலாண்டமாக அறிஞர்கள் பிறப்பதுண்டு.
அவர்கள், திசையற்ற இடத்திலே இருந்து பிறந்து, வழியற்ற பாதையிலே நடந்து, விழியற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள்.
அவர்களின் வேர், மூல விதையின் முனையிலே தங்கியிருக்கிறது.
அந்த விதைக்குள்ளே, கிளை – தழை – பூ – பிஞ்சு – கனி – அத்தனையுமுண்டு.
விதை விதைத்த பிறகுதான், இலை வெளியே வரும்.
விதையைப் பார்த்து, கதை இவ்வளவு தானா – என்று முடிவு கூறுபவன் முட்டாள்.
அண்ணா, விதையாக இருந்து – அவரே விருட்சமாக ஆனவர்.
வானமாக இருந்து – தொடுவானாக வளைந்தவர்.
வரியாக இருந்து வரலாறாக, முடிந்தவர்.
ஒளித்துளியாக இருந்து – ஒசையாக லயம் கலந்தவர்.
ஒளிக்கொழுந்தாக இருந்து – பிழம்பு நுனியின் வருடலாக நீண்டவர்.
துளியாக இருந்து பிரளயமாகப் புரண்டவர்.
இறைவனின் முதல் மூச்சான காற்றாக இருந்து – பூந் தோட்டத்திலே புகுந்து வரும் தென்றல் ராணியாகத் திகழ்ந்தவர்.
இருளைத் தினந்தோறும் குடித்தும், ஒளியாக இருக்கின்ற நிலவு இன்னும் வரவில்லை.
தோட்டத்தில் விழா நடத்துகின்ற பூக்கள் இன்னும் கூம்பவில்லை.
மன்னனின் அந்தப் புறச் சுவற்றுக்குப் பின்னால், இன்பத்தின் முணுமுணுப்பு இன்னும் துவங்கவில்லை.
ஏழையின் குழந்தை இன்னும் பசிக்காக அழவில்லை.
மின்மினிப் பூச்சிகள், தங்கள் தங்கள் சிங்காரத்தைக் காட்ட வயல் பக்கம் போகவில்லை.
இறந்து போனவன் கல்லறை மேல், மெழுகு வத்தியினுடைய நரம்பில் ஒளியை ஏற்ற, வெட்டியான் வரவில்லை. அப்போது தொடுவானம், மோன முத்திரையிட்டு வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இங்கு மங்குமாகச் சிதறியிருக்கின்ற புல் பூண்டுகள், தங்களுடைய சிறிய தலைகளை ஆட்டி, கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றன.
நிர்மலமான இந்த சூழ்நிலையில், திக்குத் தவறிய சில பறவைகள், கண்டபடி வானத்தில் மிதக்கின்றன:
அதோ தலைக்கு நேரே ஒரே ஒரு பருந்து மட்டும் கவலையற்ற சர்வாதிகாரியைப் போல், உயரத்தில் மிதக்கிறது.
தொடுவான் இதையும் பார்க்கிறது.
கீழே இருந்த பூண்டுச் செடியால் மேலே போக முடியவில்லை.
மேலே இருந்த ராஜாளியோ – பருந்தோ – கீழே வர முடியவில்லை.
தொடுவான் – பூண்டுக்கு மங்கிய ஒளியில் சிறுசிறு எறும்புகளை – அதன் பக்கத்திலிருக்கும் புற்றுகளைத் – தெளிவாகக் காட்டுகிறது.
மேலே இருக்கின்ற பருந்துக்கு கீழே, இயற்கை காட்டும் இரகசியம் புரியவில்லை.
அண்ணா, மேலே இருப்பவர்களுக்கு இரகசியங்களைக் கூறியதில்லை.
கீழே, புல்லாக – பூண்டாகக் கிடப்பவர்களுக்கு, நுணுக்கமான விஷயங்களை அறிவித்தவர்.
தொடுவானம், கடலின் மேல் கவிந்திருக்கும் போது, நீரே பொங்கி, மேலே இருந்து வழிவது போலத் தெரியும்.
ஆழமான அறிவிருப்பவர்களுக்கு, மேலே இருந்து அண்ணா வழிவதைப்போலத் தோன்றுவார்.
உயரமான ஒரு கொடிக் கம்பத்தின் மீது ஏறி நின்று, தொடு வானைப் பார்க்கும் போது, நிலத்திற்கும் தொடுவானத்திற்கும் மையத்தில், ஒரு கரிய கோடு ஒடும்.
அந்த இருள், இதுவரையிலும் உலகம் சந்திக்காத இருள். அந்த இருளுக்கு மேல், இதுவரை சந்திக்காத ஒரு வெள்ளி ரேகை இருப்பதையும் பார்க்கலாம்.
இது எதனால் வந்தது – என்று, விஞ்ஞானியும் விளக்க வில்லை – மெய்ஞானியும் கூறவில்லை.
நான் நினைக்கிறேன், அந்த இருள்தான் மூடநம்பிக்கைத், தலையை அழுத்துகின்ற அண்ணாவாகும்.
வறண்டுபோன ஒர் ஆறு! அதன்மீது தொடுவானத்தைப் பார்த்தேன்.
பரந்த மணல்வெளி, ஆற்றின் படுக்கையாக இருந்தது.
எல்லையற்ற பெரும்பயணத்திற்கு அது இயற்கையாகவே போடப்பட்ட பாதையாகவே விளங்கியது.
தொடுவானம் அந்த வரண்ட ஆற்றைப் பரிதாபமாகப் பார்க்கிறது.
மணலே, அருவியாக ஒடி வானத்தில் கலப்பதைப் போலத் தோன்றுகிறது.
நிலம் – நீராக மாறுகின்ற விசித்திரக் காட்சியை, இந்த இடத்திலேதான் பார்க்க முடியும்.
இதற்குப் பெயர் திணைமயக்கமாகும்!
வறண்டு போனவர்கள் – வதங்கிப் போனவர்கள் – சுரண்டப் பட்டவர்கள் – சுருங்கிப் போனவர்கள் – இருண்டவர்கள் – எழுந்திருக்க முடியாதவர்கள் – மிரண்டவர்கள் அனைவரையும் துன்பம் தின்றுவிட்டக் காரணத்தால், மீதியானவர்கள் எல்லாம், திணை மயக்கத்தால் தெரிகின்ற ஆற்றைப் போல தொடுவானை நோக்கி ஓடுகிறார்கள்.
அந்த தொடுவானம் தான் அறிஞர் அண்ணா.
உயர்ந்த மலை மீதிருந்து தொடுவானத்தைப் பார்த்தால் ஒரு பொட்டலத்தை துணியில் சுருட்டி வைத்ததுபோல், மலை உள்ளேயும் – தொடுவானம் கீழேயும் சுருண்டிருக்கும்.
அண்ணாவும் பெரிய மனிதர்களைத் தன்னுள்ளே சுருட்டிக் கொண்டவர்.
வெட்ட வெளியில், ஒரே ஒரு மலையிருந்து, அப்போது ஒரு வானவில் வந்திருக்குமானால், அந்த மலை ஒரு துலத்தில் கட்டப்பட்ட மணியைப் போலத் தொங்கும்.
அண்ணாவும் தன்னுடைய வானவில் சொல்லால் பெரிய மலைகளைத் தொங்க விட்டவர்.
தொடுவானைப் பிற்பகுதியாக வைத்து, முன்னே வரிசையாகத் தென்னை மரங்கள் இருக்குமானால். அவை நிழலுருவத்தில் நிற்கும்; நேர்த்தியாகத் தெரியும்.
அண்ணாவுக்கு முன்னால், இருண்டவனும் நேர்த்தியாகிறான். ஒளிவட்டமாகிறான்.
இது தொடுவான் செய்கின்ற ஜாலவித்தை!
தொடுவானைத் தொட்டப்படி ஒரு ஜீவநதி வருமானால் – அது, பூமியின் தலையில் கட்டப்பட்ட, கூந்தல் நாடாவாகத் தெரியும்.
அண்ணாவை தொட்டபடி எவனாவது வருவானானால் – அவன், தலைக்கு அழகாக இருக்கும் பட்டு நாடாவாகத்தான் தெரிகிறான்.
தொடுவானை ஒட்டி, ஒர் ஒளி இருக்குமானால், அது வானத்திற்கு, நிலத்திலே வைக்கப்பட்ட கண்ணாடியாகத் தெரியும்.
அண்ணாவுக்கு அருகில், அற்ப அலைகளால் துள்ளாத ஏரியைப்போல – ஒருவன் இருப்பானேயானால், அவன் முகம் காட்டும் கண்ணடியாக விளங்குவான்.
தொடுவானை எட்டி ஒரு பரந்து விரிந்த வயலிருக்குமானால், அது நிலா மங்கைக்கு கரைத்து வைக்கப்பட்ட, மரகதப் பாலாகத் தெரியும்.
அதைப்போல, அண்ணாவின் பக்கத்தில் வயலாக விரிந்தவன், குளிர்ந்த குணத்துக்கு கரைத்து வைக்கப்பட்ட அமுதாகத் தெரிவான்.
தொடுவானுக்கு அருகில், ஒரே ஒர் ஒற்றைத் தென்னை மரம் இருக்குமானால், அண்ணாவுக்கு முன்னால் வெட்ட வெளியில் தனியாக இருப்பவன் விளம்பரமில்லாத நிமிர்ந்த தம்பியாகவே மாறுகிறான்.
நசுக்கினாலும் நசுங்காத நாகரீகம் போல. துரத்தி வந்தாலும் கைக்குக் கிட்டாத பேரொளிபோல்
பூர்த்தியாக்கப்பட்ட மூலதனம் போல –
என்றும் விழித்திருக்கின்ற விழியைப் போல்
திக்குகளுக்குப் பூராவும் விரைந்திருக்கின்ற தொடுவானம்
எளிய அல்லிக்கும் இறக்கும் காளானுக்கும்
நகரும் புழுக்களுக்கும்
ஊறும் எறும்புகளுக்கும்
இறவாத சக்தி, இதுவென்று காட்டிக் கொண்டு, இருக்கின்றது.
அதனுடைய இருதயத்தில், கோடிக் கணக்கான நனவுகளும் கவிழாத கனவுகளும் தினந்தோறும் வருகின்றன.
தொடுவான், நட்சத்திரத்தின் கூடாரமட்டுமல்ல!
நகர்ந்து நெளிகின்ற ஜீவன்களுக்கு முக்காடாகவும் இருக்கிறது.
அதோ இரவு…! அதன் மீது நடக்கிறது!
அதனை விடிந்த பிறகுதான் தேடவேண்டும்.
***
கண் போன்ற தமிழ்!
நம்முடைய மொழியை நாம் கண் போல் காத்து வருகிறோம். அந்தக் கண்ணில் சிறு துரும்பு பட்டாலும் எரிச்சல் காணத்தான் செய்யும். அதனால் உடல்கூட எரிச்சல் காணுவது போல் இருக்கும்.
அந்த நேரத்தில் யாரேனும் ஏதாவது கேட்டால் எரிந்து விழுவோம். நம் கண்கள் கோபத்தில் மேலும் சிவந்து விடும். இது பட்டவர்களுக்குத் தெரியும்.
கண்ணுக்கு மையிடுவது போல, பிற மொழிகளைப் பயன்படுத்த வேண்டும். மை அதிகமானால் கண்ணை எப்படி அரித்து விடுகிறதோ, அதுபோல பிற மொழிகள் அதிகம் கலப்பதும் நம் மொழிக்கு ஆபத்தான நிலைய உண்டாக்கும்.
– அறிஞர் அண்ணா
14. எல்லாம் நீயே!
வண்டாடும் தமிழ்ப் பூவே!
கண்டாடும் சங்ககாலத் தமிழ்ப்பாவே!
தொண்டுக்குத் தொகை விளக்கம் தந்தவனே!
கண்டுக்கும் பாகுக்கும், நிகர் நின்றவனே!
நயமான நாவுடையோய்! வயப்படுத்தும் வார்த்தைக்
கூட்டே! செயலின் சின்னமே!
வான் வளர்த்தப் பெரும் புகழே!
தேன் வளர்க்கும் தமிழ்த் தாதுக் கூடே!
சுவைக்கும் சுவையாய் நின்ற தீஞ்சுவையே!
ஒப்பற்ற ஒருவனுக்கு இருக்கும் துப்புற்ற முகமே!
கார் பார்த்து ஆடுகின்ற கன்னித் தமிழ் மயிலே!
சீர் பார்த்து அடுக்கி வைத்த செம்மாந்த வெண்பாவே!
போர் பார்த்த முகமே! யார் பார்த்தும் கோணாத அகமே!
தமிழ்ப் பதியே!
ஆனந்தத் திதியே!
தமிழர்க்கு கதியே!
தமிழகத்தின் நிதியே!
சாற்றவனே – தமிழ் சாற்றவனே!
வீற்றவனே! – உள்ளில் வீற்றவனே!
ஏற்றவனே நாட்டுக்கு, ஏற்றவனே!
கடும்புலமை சொல்லடுகிக்கி, விடும் வார்த்தை வேகத்தை – மீறி நின்ற வேகமே!
நெடுங்குன்றம் நிமிர்ந்து நின்ற உச்சிக்குமேல் நின்ற, தமிழ் நிலவே!
கடும் கோபம் தழல் எரியா – கீழ்வானில் உதித்த பரிதியின் உருவே!
மூளைக்கு அலங்காரமிட்டு – மனிதச் சாலையிலே வருகின்ற வடிவா நீ?
இல்லை இல்லை! மூளைக்கு வேர் நீ! வேரோடித் திளைக்கின்ற நீர் நீ!
நீருக்கே வேறான ஊற்று நீ! ஊற்றே முளைக்கின்ற கரு நீ!
கருவுக்கே ஆதாரம் நீதான்!
மெய்யகத்தே விளைகின்ற எண்ணக் கலவையெல்லாம் –
நெய்யகத்தே கொண்டிருக்கும் விளக்கொளியால் பார்த்து –
பொய்யகற்றி; புதுமையேற்றி –
வையகமே வாழ்த்துகின்ற நிலைக்குக் கொண்டு வந்த அண்னனே!
வைதாலும் – உன் சிறப்பை மாற்றார் இழிமொழியால் கொய்தாலும் – எதிரிக்கும், இதயத்தின் தாள் திறந்து – உதவிக்கு அறிவூட்டும் உத்தமனே!
பாடற்கு இனிய வாக்களிக்கும் தேக்குமரத் தோப்பருகில் நீக்கமற நிழலாடும், நற்றமிழ்க் குரலெடுத்துப் பாடுகின்ற குயிலே!
கூடற்கு இனிய குறிக்கோள்கள் குறித்து வைக்கும் – தேடற்கு இனிய சீரளிக்கும் செம்மலே!
நீ உன்னை ஊற்றி வளர்கின்ற இடத்தைக் கொள்கை எடுப்பென்பார்.
தேன் ஊற்றி வளர்க்கின்ற இடத்தைப் பூவென்பார்.
வான் ஊற்றி வளர்க்கின்ற ஒன்றை மழை என்பார்.
நான் ஊற்றிப் பாடுகின்ற இப்புகழைத் திக்கே. திசையே, முன்னே, பின்னே, நடுவே. அண்டத்தின் வளைவே, அகிலாண்ட விரிவே, ஊழிக்கு உறைபோட்ட ஊழியே. வெளியே உயிரணுக்கள் இருக்கின்ற இடமெல்லாம் போய் இதனைச் சொல்லாயோ!
துயருக்குத் தொடுக்கின்ற புகழ் மாலை.
மாலையிலுள்ள பூக்களை வண்டினங்கள் வாய்வைத்து உறிஞ்சி எச்சில் படுத்தவில்லை.
புத்தம் புதிய பூக்கள் பொழுதுக்கே பூத்த பூக்கள் – சத்துடைய ஒருவனுக்கு சாற்ற வந்த பூக்கள்
நிலாச் சொறிந்த வெள்ளிப்பூ!
ஓடும் மின்னற் கொடியில் – உதிர்ந்த பிழம்பொளிப்பூ! நல்ல பூ!
இப்பூக்கள், அண்ணா என்னும் என் இரு கண்களுக்கு இட்டப் பூக்கள்.
வீனுக்குத் தலை வைத்து – வெறுப்புக்கு வழி வைத்து, மானிடராய்த் திரிபவர்கள் ஓதிய மரங்கள்!
ஓங்காரத் தமிழ் மொழியின் பயனை – ஓர்ந்தோர்ந்து – ஆங்கார அடுப்பவித்து – பாங்கான பண்பெனும் விளக்கேற்றி –
தீங்குக்கு உளம் நடுங்கும் தித்திக்கும் மனமுடையோர் வரிசை தன்னில் – ஓவியமாய் – காவியமாய் – ஜீவியமாய் இருப்பவரே – அறிஞர் குல அரசரே!
கண்ணுள்ளே விளங்குகின்ற மணியே – இன்பக் கனியே – நாவரசே – செங்கரும்பே – ஞானப் பண்ணுள்ளே விளைந்த அருட்பயனே!
உண்மைப் பதியே – ஓங்கும் நிதியே – விண்ணுள் விரிந்து ஒளிரும் புகழே!
தேர்ந்த உளத்திடையே மிகத் தித்தித்து ஊறும் செழுந்தேனே – சொல்லரசே!
சார்ந்து திகழும் சண்பக எழுத்தாளா! பொறுமையின் பெருந்தகையே!
கூர்ந்த மதி நிறைவே! தமிழ்க் கொழுந்தே!
தீர்ந்த பெரும் குறள்நெறித் துணையே ஒப்பிலா செல்வமே! எனது அரசியல் குருவே!
சிறப்படையச் செய்பவனே!
அறப்படைக்குத் தலைவனே!
இலைக் குளிர்ந்து நிழல் பரப்பும் தருவே! தலைக் குளிர்ந்த அறிவே!
கலைக் குளிர்ந்த கலையே! மலைக்குமேல் நிற்கும் முனையே!
மதியணிந்த ஒருவா! தமிழர் துதியணிந்த ஒருவா! ஒழுக்க விதியணிந்த ஒருவா!
தேன் படிக்கும் அமுதா! நான் படிக்கும் நூலே! ஊன் படிக்கும் – உளம் படிக்கும் – உயிர் படிக்கும் – உயிர்க்கும் உயிர்தான் படிக்கும் – அனுபவங்கள் படிக்கும் கருணைக் குன்றே – பொறுமையின் வானே!
உலகம் பரவும் பொருளெல்லாம் அறிவான், என்கோ!
கலகம் பெறும் ஐம்புலனை வென்றவன், என்கோ!
தமிழ்த் ‘திலகம் பெற்றவன் என்கோ!’
உலகம் தலைவணங்க உயர்ந்தோன் என்கோ!
மாணித்த ஞான மருந்தே! என் கண்ணின் ஒளியே! ஆணிப் பொன்னே!
சீர்கொண்ட திரள் அறிவு நுதல் சுருங்கும் அறிவு நிறைச் சுருக்கமே!
உனக்கே விழைவு கொண்டு; ஓலமிட்டு இங்கே எனக்கென்று இருக்கின்ற இருதயத்தை உன்பால் வைத்தேன்.
தனக்கென்றும் ஒன்றுமில்லாத தயவே! பிறர்க்களிக்க மனக் கதவைத் திறந்து வைத்த – அன்பு மாளிகையின் வாயிலே!
குடி வாழ்த்தும். கோனே! உன் வாய்ப்பட்ட வார்த்தை யெல்லாம் மணக்கும் – சிந்தனைக் கரம்பட்ட பொருளெலாம் மனக்கும்! நோய்ப்பட்ட சமுதாயத்தின் மருந்து நீர்!
ஓயாத புகழ் வாசம் வீசுவாய் நீ!
படுக்காத அறிவனே! எடுத்த புகழத்தனையும் இந்நாட்டுக்கே நீ எடுத்த புகழ்!
அடுத்துவரும் புகழெல்லாம் தமிழ்நாட்டுக்கு அன்று எதற்குண்டு?
வாங்கி ஒளிக்கீற்றை வாரி இறைக்கும் திங்கள்; தீங்கு தருவதில்லை – அங்கும் வளம் தருமே!
மூங்கை வாய் திறந்து, மொழி நலனில் பேச வைக்க – நீங்கள் செய்யும் பணி, நிலமுள்ளவரை நீடிக்கும்.
தோள் சுமந்த புகழ்த் தோளே! நீர் செய்த செயல் எல்லாம் சேவற் கொண்டை நிறப் பூ பூக்கும் புகழ் மொய்க்கும்.
அதைக் கண்டு என் அன்னை நிலமே இன்பம் துய்க்கும்.
கொம்புத்தேனும் செழும்பாகும் குலவும் பசும்பாலும் கூட்டி, உண்டார்போல் இனிக்கும் குணங் கொண்டவனே!
உன்னில் என்னைச் சேர்ப்பாய்?
எனது நினைவஞ்சலியை நின் மலரடியில் வைக்கின்றேன்.
(முற்றும்)














