புலவர் சுந்தர சண்முகனார் எழுதிய “புத்தர் பொன்மொழி நூறு” என்பது, பெயரிலேயே குறிப்பிடுவது போல, புத்தரின் போதனைகளையும் தத்துவங்களையும் நூறு செய்யுள்களின் வடிவில் தொகுத்து அளிக்கும் ஒரு செய்யுள் நூல்.
புத்தரின் அறவுரைகள், தத்துவங்கள், மற்றும் போதனைகள் உலகெங்கிலும் பரவி, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புலவர் சுந்தர சண்முகனார், அவற்றை தமிழ் மரபுக்கேற்ப, செய்யுள் வடிவில் கொண்டுவந்துள்ளார்.
புத்தர் பொன்மொழி நூறு
புலவர் சுந்தர சண்முகனார்
முன்னுரை
நூல் அமைப்பு : ‘கவுதம புத்தர் காப்பியம்’ என்னும் காப்பியம் ஒன்று அடியேன் இயற்றியுள்ளேன். அதனையடுத்து, புத்தரின் பொன்னான அறிவுரைகள் பலவற்றை நூறு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்களில் தொகுத்து ‘புத்தர் பொன்மொழி நூறு’ என்னும் இந்நூலை இயற்றினேன்.
நன்கொடை அளிப்பவர்கள், 101 உரூபா அல்லது 1001 உரூபா எனப் பேரெண்ணோடு ஒன்று கூட்டி அளிப்பதுபோல், சரியாக நூறு பாக்களோடு நிற்காமல், வளர்ச்சி முகம் நோக்கி மேலும் ஒரு பாடல் எழுதிச், சேர்த்துள்ளேன். எனவே, இந்நூலுள் 101 பாடல்கள் இருக்கும். வழக்கம்போல் நூலின் தொடக்கத்தில் பாயிரப்பாடல் ஒன்றும், நூலின் இறுதியில் ‘நூல் பயன்’ கூறும் பாடல் ஒன்றும், மேற்கொண்டு கூடுதலாக உள்ளன. இவை இரண்டும் வெண்பாக்கள் ஆகும்.
‘புத்தர் பொன்மொழி நூறு’ என்னும் தொடரில் உள்ள நூறு என்னும் எண்ணுப் பெயர். முதலில், எண்ணல் அளவை ஆகுபெயராக நூறு பாக்களைக் குறித்து, பின்னர் இருமடி ஆகுபெயராக நூறு பாக்கள் உள்ள நூலைக் குறிக்கிறது.
புத்தர் வரலாறு: புத்தர் இந்தியாவின் வடபகுதியில், சாக்கிய நாட்டின் தலைநகரான கபிலவாஸ்த்து என்னும் இடத்தில், சுத்தோதனன் என்னும் அரசனுக்கும் அரசி மாயா தேவிக்கும் மகனாகக் கி.மு. 563ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இளமையிலேயே வா ழ் க் கை யி ல் வெறுப்புற்றிருந்தார். ஆயினும், தந்தையின் முயற்சியால், யசோதரை என்னும் பெண்ணை ம ண ந் து கொண்டார்; இராகுலன் என்னும் மகனையும் பெற்றார். இருபத்தொன்பதாம் அகவையில் மனைவி, மகன் முதலிய சுற்றத்தார் அனைவரையும் விட்டு நீங்கி துறவு கொண்டு காட்டில் ஆறு ஆண்டு அருந்தவம் புரிந்து, பின்னர், ஆழ்ந்த எண்ணத்தால் (தியானத்தால்) மெ ய் ய றி வு (போதம்) பெற்றுப் ‘புத்தர்’ என்னும் பெயருக்கு உரியவரானார். இவரது இளமைப் பெயர் சித்தார்த்தன் என்பதாகும்.
புத்தரின் அறவுரைகளைப் பின்பற்றி அவருக்கு அன்பராகவும் அடியவராகவும் பலர் இருந்த தன்றி, துறவறத்தையும் பலர் மேற்கொண்டனர். புத்தர் சங்கம் அமைத்துத் தம் கொள்கைகளை உலகெங்கும் பரவச் செய்தார். அவரது அறநெறி ‘பெளத்தம்’ என்னும் ஒரு புது மதமாக உருவெடுத்தது. வேத வைதிக நெறிக்கு எதிராகப் பெளத்தம் செயல்பட்டது, புத்தரின் அறவுரைகள் பெளத்த மறை நூல்களாகக் தொகுக்கப் பெற்றன,
புரட்சியாளராகவும், சீர்திருத்தக்காரராகவும், பகுத்தறி வாளராகவும் விளங்கிய புத்தர், பல அருஞ்செயல்கள் ஆற்றி குசீ என்னும் இடத்தில் கி.மு. 483 ஆம் ஆண்டு தம் எண்பதாம் அகவையில் இறுதி எய்தினார். இது புத்தரின் சுருக்கமான வரலாறு.
புத்தரின் புரட்சிக் கொள்கைகள்: புத்தர் புரட்சி மிக்க கொள்கையாளர். “கடவுள் என ஒருவர் இல்லை; அப்படி ஒருவர் இருந்து கொண்டு எதையும் படைக்கவில்லை; எனவே கடவுள் பற்றிக் கவலைப்பட வேண்டா. உயிர் எனத் தனியே ஒன்று இல்லை. உடலில் உள்ள உறுப்புக்கள்.ஒருங்கிணைந்து செயற்படும் இயக்க ஆற்றலே உயிர் எனப்படுவது. துறக்கம் (சுவர்க்கம்) என ஒன்று இல்லை, எனவே இல்லாத ஒன்றை அடைய வீண், முயற்சி செய்ய வேண்டா.”
“ஏதோ நற்பேறு பெறலாம் என்ற நம்பிக்கையில், பட்டினியாலும் கடுந்தவ முறையாலும் உடலை அளவு மீறி, வருத்தி வாட்டலாகாது; அதேபோல, அளவு மீறி உண்டு கொழுத்து உடலைப் பெருக்கச் செய்யவும் கூடாது; தேவையானபோது தேவையான அளவு உணவு கொண்டு உடலை ஓம்பி, நல்லன நாடும் ‘நடுநிலை வழி’யே வேண்டத் தக்கது.”
“பேரவாக்களே (பேராசைகளே) எ ல் லா வ கை த், துன்பங்கட்கும் முதல் (காரணம்) ஆகும்; எனவே பேரவாக்களை ஒழிக்க வேண்டும். நல்லொழுக்க-நல்லற நெறிகளைப் பின்பற்ற வேண்டும். நல்லன கொண்டு அல்லன நீ க் க வேண்டும். எவ்வுயிருக்கும் தீமை செய்யாது நன்மையே செய்ய வேண்டும். இன்ன பிற நன்முறைகளைக் கைக்கொள்ளின், கிடைக்கக் கூடிய தற்பயன் கிடைத்தே தீரும் புத்தரின் புரட்சிக் கொள்கைகளுள் இன்றியமையாதவை இவை.
முதல் நூல்: மற்ற மதங்கட்கு மறைநூல் (வேதம்). இருப்பது போலவே, பெளத்த மதத்திற்கும் மறைநூல்கள் உண்டு. அவை புத்தரின் அறநெறிக் கோட்பாடுகளின் தொகுப்பாகும். ‘திரிபிடகம்’ (மூன்று நூல்கள் என்னும், தொகுப்புப் பெயருடன், சுத்த பிடகம், விநய பிடகம், அபிதம்ம பிடகம் என்னும் மூன்று மறை நூல்கள் பெளத்தத்திற்கு உள்ளன. இவற்றுள் ஒன்றான சுத்த பிடகத்தில், ‘நிகாயம்’ என்னும் பெயர் உடைய ஐந்து பிரிவுகள் உள்ளன. இவ்வைந்து நிகாயங்களுள் ஒன்றான ‘குந்தக நிகாயம்’ என்னும் பிரிவில் ‘தம்ம பதம்’ என்னும் ஒரு பகுதி உள்ளது அற (தரும) நெறியை வற்புறுத்தும் ‘தம்ம பதம்’ என்பது, பெளத்த மதத்திற்கு மிகவும் இன்றியமையாத மறைநூல் பகுதியாகும்.
இந்தத் ‘தம்மபதம்’ என்னும் பிரிவுநூலில், ‘இரட்டைச் செய்யுள் இயல்’ (யமக வர்க்கம்) முதலாகப் பிராமண இயல்; (பிராமண வர்க்கம்) ஈறாக இருபத்தாறு (26) பிரிவுகள் உள்ளன. இந்த இருபத்தாறிலும் மொத்தம் நானுற்று இருபத்து மூன்று (423) அறவுரைகள் (உபதேசங்கள்) அடங்கியுள்ளன. தம்மபதம் பாலி மொழியில் எழுதப்பட்டது.
மொழி பெயர்ப்புகள்: தம்மபதம் பாலி மொழியிலிருந்து பிறமொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களும், நிலக்கொடை இயக்கத் தலைவராயிருந்த விநோபா அவர்களும், ஆங்கில அறிஞர் மாக்சுமில்லர் அவர்களும் இதனை ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளனர். தமிழிலும் இரண்டு மொழி பெயர்ப்புகள் உள்ளன. இவற்றின் துணை கொண்டு, உயர்திரு அ. லெ. நடராசன் அவர்கள் தமிழில் ஒரு மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். எளிய உரை நடையில் உள்ளது இப்பெயர்ப்பு.
கி. பி. 1979 ஆம் ஆண்டில் வெளியான திரு. அ. லெ. நடராசன் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலின் முதல் பதிப்பைப் படித்த யான், அந்நூலின் துணைக்கொண்டு நானூற்று இருபத்து மூன்று அறவுரைகளுள் மிகவும் சிறப்பாகத் தோன்றிய நூற்றுக்கு மேற்பட்ட அறவுரைகளை நூற்றொரு பாடலில் தொகுத்து இந்நூலாக யாத்துத்தந்துள்ளேன்.
உரைநடை வடிவத்தினும் செய்யுள் வடிவத்திற்குத் தனி மதிப்பு உண்டு. செய்யுள் வடிவம், நெட்டுரு செய்து நினைவில் இருத்திக் கொள்வதற்கு ஏற்றது. செய்யுள் வடிவில் கருத்துக்களைக் கூறின், மக்கட்கு நன்மதிப்பும் தன்னம்பிக்கையும் ஏற்படும். அதனால் இம்முயற்சியில் ஈடுபட்டேன்.
தம்ம பதம் நூலிலுள்ள கருத்துக்கள் சிலவற்றை நூற்றொரு பாடல்களில் தொகுத்துக் கூறியிருப்பதல்லாமல் மேற்கொண்டு, புத்தர் தம் வாழ்க்கையில் பலர்க்குப் பல வேளைகளில் கூறிய அறவுரைகள் சிலவற்றைப் பதினொரு பாடல்களில் தொகுத்துப் பிற்சேர்க்கை’ என்னும் தலைப்புடன் இந்நூலின் இறுதியில் அமைத்துள்ளேன்.
கி.பி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகிய இந்தக் காலத்தில், புதுமை, பொதுவுடைமை, புரட்சி, பகுத்தறிவு, சீர்திருத்தம், முன்னேற்றம்-என்னும் பெயர்களில் கூற ப் படும் கருத்துக்கள், இன்றைக்கு ஏறக்குறைய 2500 ஆண்டு கட்கு முன்பே புத்தரால் அருள்ப் பெற்றுள்ள கருத்துக்களில் கருக்கொண்டவை எனக்கூறலாம். புத்தர் தம் கருத்துக்களில் வலுக்கட்டாயப் படுத்தித் திணிக்கவில்லை; ஆ ய் ந் து பார்த்து நிலைமைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளலாம் என்ற உரிமையும் அளித்துள்ளார். எனவே, புத்தரின் புரட்சி பழம் பெரும் புரட்சியாகும். இதனை, இ ந் நூ லைக் கற்றுணர்வோர் நன்கு நம்புவர்.
நூலைக் கற்பதோடு அமையாமல், நூலில் கூறப்பட்டுள்ள அறக் கொள்கைகளை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. உலகில் அறநெறி ஓங்குக!.
இந்த நூலை நன்முறையில் வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தாருக்கு நன்றி செலுத்தும் கடப்பாடு மிகவும் உடையேன்.
புதுச்சேரி அன்புள்ள அடியவன்
பிப்ரவரி, 1985 சுந்தர சண்முகன்
புத்தர் பொன்மொழி நூறு
பாயிரம்
உலகெலாம் உய்வித்த ஒண்புத்தர்ஈந்த
அலகில் சீர்ப் பொன்மொழிகள் ஆய்ந்தே-இலகிடப்
புத்தரின் பொன்மொழி நூறு புனைந்துரைத்தேன்
இத்தரையோர் வாழ இனிது.
நூல்
[அறுசீர் ஆசிரிய விருத்தம்]
1. இரட்டைச் செய்யுள் இயல்
உளமது தூய தாயின்
ஒழுக்கமும் தூய தாகும்;
உளமதில் தீய எண்ணம்
உள்ளதேல், அதன்தொ டர்பாய்
வளமுறு காளை ஈர்க்கும்
வழிசெலும் வண்டி போல
நலமறு துன்பம் வந்து
நண்ணுதல் உறுதி தானே. 1
எனையவன் இகழ்ந்து பேசி
எள்ளியே அடித்தான் என்றும்,
எனையவன் தோற்கச் செய்தே
எய்தினான் வெற்றி என்றும்,
எனதுறு பொருளை அன்னான்
ஏய்த்தனன் என்றும், என்றும்
நினைவதை மறவோ மாயின்
நிலைத்திடும் பகைமைப் பூசல். 2
நெருப்பினை நீரால் இன்றி
நெருப்பினால் அணைத்தல் இல்லை
சிரிப்பினால் பகைவெல் லாமல்
சினத்தினால் வெல்லல் ஆமோ ?
வரிப்புலி போன்ற மிக்க
வல்லமை கொண்டார் தாமும்
இறப்பது நிலையென் றோரின்
இரிந்திடும் பகைமைக் காய்ச்சல் 3
ஐம்புல இன்பச் சேற்றில்
அளவிலா தழுந்து வோர்கள்
சிம்புகள் சூறைக் காற்றில்
சிதைவது போலத் தேய்வர்
வம்புறு அவாவ றுத்தோர்
வருந்திட ஏது மில்லை;
மொய்ம்புறு மலையைச் சூறை
முட்டியே அழித்தல் ஆமோ? 4
அடைவுறக் கூரை வேயா
அகத்தினில் மழைகொட் டல்போல்
அடைவுறப் பண்ப டாத
அகத்தினில் அவாக்கள் ஈண்டும்,
நடைமுறை யில்கொள் ளாமல்
நன்மறை ஓதல் மட்டும்
உடையவர், சுரையை ஏட்டில்
உண்டவர்[11] போன்றோ ராவர். 5
2. விழிப்பு இயல்
ஓங்கலில் நிற்போன் கீழே
உலவுவோர் தமைக்கா ணல்போல்,
ஓங்குமெய் யறிவாம் வல்ல
உயர்மலை வீற்றி ருப்போன்,
தூங்கியே மிகவும் சோம்பும்
தூங்குமூஞ் சிகளைக் கண்டு
வீங்கவும் இரங்கித் தன்னை
விழிப்பொடு காத்துக் கொள்வான். 6
உழைப்பிலாப் பரியை முந்தி
ஊக்கமார் பரிவெல் லல்போல்,
விழிப்புடன் ஊக்கம் கொள்வோர்
வீணரை வெற்றி கொள்வர்
விழிப்பினில் மகிழ்வும் சோம்பில்
வெருட்சியும் காண வல்லார்,
அழிப்புசெய் நெருப்பைப் போல
அவாத்தளை[13] எரிப்பர் சுட்டே. 7
3. அடக்க இயல்
உள்ளமோர் உறுதி இன்றி
ஓடிடும் அங்கும் இங்கும்;
தள்ளரு[14] பகையின் தீமை
தந்திடும் அடக்கா விட்டால்,
வில்லினை நிமிர்த்தித் தாங்கும்
வேடனின் செயலைப் போல,
மெள்ளமாய் அடக்கிக் காத்து
மீட்டிடல் நன்மையாகும். 8
அரித்திடும் உள்ளம் ஓய
அடக்கிடோ மாயின், தீயில்
எரித்ததோர் விறகைப் போல
எதற்குமே பயன்ப டாது.
புரத்தலார் பெற்றோர் சுற்றம்
புரிந்திடும் நலத்தின் மேலாய்
வரித்திடும்[15] உளவ டக்கம்
வழங்கிடும் நன்மை யெல்லாம். 9
4. மலர்கள் இயல்
பூவிலே மணத்தி னோடு
பொலிவெதும் போகா வண்ணம்
மேவியே தேனு றிஞ்சும்
மிகுதிறல் வண்டே போல,
யாவரும் வருந்தா வாறு
யாண்டுமே நன்மை நாடல்
தாவரு[16] கொள்கை யாகும்;
தரையுளோர் இங்ஙன் செய்க. 10
வண்ணமும் வனப்பும் கொண்டு
வயங்கிடும் மலருங் கூட
நன்மணம் இல்லை யாயின்
நச்சிடார்[17] அதனை யாரும்;
எண்ணமோ தூய்மை இன்றி
இருப்பவர் பகட்டாய்ச் செய்யும்
கண்ணறு செயல்கள் யாவும்
கனவக்குத வாது போகும். 11
புலர்தலில் நல்லோர் ஈட்டும்
புகழ்மணம் பொன்றா[18] தென்றும்
மலர்தலை உலகம் எங்கும்
மணந்திடும் காலம் வென்றே,
மலர்களின் மணமோ – வல்லே
மறைந்திடு மாறு போல,
உலர்வுறும் மறைத்து தீயோர்
உற்றிடும் போலிச் சீர்த்தி. 12
5.பேதைகள் இயல்
விழத்திருப் பவன் தனக்கு
விடிவுறா திரவு நீளும்;
உழைத்ததால் களைத்தோ னுக்கோ
உறுவழி[19] நீண்டு செல்லும்,
அழித்திடும் அவாவாம் சேற்றில்
அழுந்தியோர்க் குலக வாழ்க்கை
இழுத்திட் முடியாத் தேர்போல்
இரும்பெருஞ் சுமையாய்த் தோன்றும் 13
தன்னுறு தவறு ணர்ந்தோர்
தக்கநல் அறிஞர் ஆவர்,
தன்னைநல் அறிஞர் என்போர்
தகுதியில் பேதை யாவர்,
தன்னது செல்வம் என்போர்
தணந்திடும் போது தாழ்வர்
துன்னிட[20] அறம்கைக் கொண்டோர்
தூயசீர் பெறுவ துண்மை. 14
ஆழினும் குழம்புக் குள்ளே
அகப்பையோ சுவைக்கா தேதும்;
வாழினும் அறிஞர் நாப்பண்[21]
வன்கணர் அறத்தை ஓரார்.
வீழினும் துளிக்கு ழம்பு
வியன்சுவை உணரும் நாக்கு;
நாழிகை நட்பென் றாலும்
நல்லவர் அறிஞர்ச் சார்வர். 15
கறந்தபால் உடனே மாறிக்
கலங்கியே தயிரா காது;
திறந்தெரி யாதார் செய்யும்
தீமையும் அன்ன தாகும்,
மறைந்துதான் நீற்றில், பின்னர்
மண்டிடும் நெருப்பே போல,
கரந்திடும்[22] தீமை தானும்
கவிழ்த்திடும் காலம் பார்த்தே. 16
6. அறிஞர் இயல்
நம்முறு தவறைக் காட்டும்
நல்லவர் கிடைக்கக் கண்டால்
வெம்மை[1] சேர் பகைவ ராக
வெறுத்திடல் மடமை யாகும்.
நம்முடை நலத்திற் காக
நல்லபொற் புதையல் காட்டும்
செம்மைசேர் நண்ப ராகச்
சிறப்பொடு போற்றல் வேண்டும். 17
ஆழ்ந்தநீர் நிலையில் தூய்மை
அமைதியோ டிருத்தல் போல
ஆழ்ந்தநல் அறிவு மிக்கோர் .
அகத்தினில் தூய்மை யோடு
தாழ்ந்திடும் அடக்கம் கொண்டு
தரையினர்[2] போற்ற வாழ்வர்
ஆழ்ந்திடத் துடிப்பர் பற்றில்
ஆழறி வில்லா மூடர். 18
7. அருகந்தர் இயல்
முடுக்குறும் தேரின் பாகன்
முரண்டிடும் பரிகள் தம்மை
அடக்கியே கட்டுள் வைக்கும்
ஆற்றலார் செயலே போல
இடக்குசெய் பொறிகள் ஐந்தும்
இம்மியும் மீறா வண்ணம்
மடக்கியே கட்டிக் காக்கின்
மறைத்திடும் துன்பம் எல்லாம். 19
நிலத்தினைப் போன்று தாங்கி
நிலைத்திடும் பொறுமைப் பண்பும்
உளைத்தினை யளவும் இல்லா
ஊருணி நேர்தூய் மையும்
நிலைத்துள வாயில் கம்பம்
நிகர்த்திடும் உறுதிக் கோளும்[3]
நலத்தொடு சேரப் பெற்றோர்
நலிந்திடார் துயரில் சிக்கி. 20
காடுதான் எனினும், சாலக்
கவர்ந்திடும் யாணர் மிக்க
நாடுதான் எனினும், நன்கு
நண்ணருங்[4] குழியென் றாலும்
மேடுதான் எனினும், நல்லோர்
மேவிடும் குடியி ருப்பே
ஈடிலா இடம தாகும்;
இவ்விடம் வாழ்தல் நன்றாம் 21
8. ஆயிரம் இயல்
ஆயிரம் பாவென் றாலும்
அரும்பொருள் இல்லை யாயின்,
ஆயுநற் பொருள்மி குந்த
அரியபா ஒன்றை ஒவ்வா.[5]
ஆயிரம் பேரைப் போரில்
ஆயிர முறைவென் றோனின்,
பாய்கிற உளத்தை வென்று
பண்படுத்து வோனே மல்லன். 22
ஒழுக்கமும் உயர்ந்த பண்பும்
ஒருசிறி தளவும் இன்றி
இழுக்கமோ டாண்டு நூறோ
இன்னுமேல் பற்பல் லாண்டோ
வழுக்கி[6]யே வாழ்வோன் மெய்யாய்
வாழ்பவ னாக மாட்டான்.
ஒழுக்கமோ டொருநாள் வாழ்ந்தோன்
உண்மையாய் வாழ்ந்தோன் ஆவான். 23
9. தீய நடத்தை இயல்
ஒன்றுதான் ஒன்றே ஒன்றென்(று)
உரைத்துநாம் தீமை செய்யின்,
ஒன்றுநீர்த் துளியும் சொட்டி
உயர்குடம் நிரப்பு தல்போல்
ஒன்றுவொன் றாகத் தீமை
ஒன்றியே மலையாய் மண்டும்
ஒன்றுவொன் றாக தன்மை
உஞற்றலே[7] உறுதி நல்கும். 24
விள்ளரும்[8] பணம்கைக் கொண்டோன்
வேறொரு துணையும் இல்லோன்
கள்ளரால் திருட்டு நேரும்
கடுவழி செல்லா னாகி
நல்லவர் நடமா டுஞ்சீர்
நல்வழி செல்லு தல்போல்
எள்ளருத் தீமை நீக்கி
ஏத்திடும் அறமே செய்க. 25
கையினில் புண்ணில் லாதான்
கடுவையும் தொடலாம் நன்கு;
கையினில் பொருளில் லாதான்
கள்வருக் கஞ்சல் வேண்டா;
பொய்மைசேர் தீமை செய்யான்
பொன்றுதல்[9] என்றும் இல்லை,
மெய்மையே பற்று வோனை
மேவிடும் நன்மை எல்லாம். 26
காற்றெதிர் புழுதி தூவின்,
கடுகி[10]யப் புழுதி தன்னைத்
துாற்றிய வனையே சேர்ந்து
துன்புறச் செய்தல் போல.
ஆற்றவும் பிறர்க்குத் தீமை
ஆற்றிடின், அந்தத் தீமை
ஆற்றிய வனையே பற்றி
அல்லலில் சிக்கச் செய்யும். 27
10. ஒறுப்பு இயல்
ஆயனும் மாட்டைக் கோலால்
அடித்தடித் தோட்டல் போல,
தீயவை, செய்தோன் தன்னைத்
தீயவே துய்க்க ஒட்டும்.[11]
தீயினில் வீழ்ந்த பின்னர்த்
தீயினுக் கஞ்சல் ஆமோ?
தீயவை செய்த பின்பு
தீமையின் தப்பல் இல்லை. 28
வேடரும் எய்தற் கேற்ப
வில்லினை வளைத்துக் கொள்வர்;
நீடிய வயலுக் கேற்ப
நீரினை உழவர் கொள்வர்;
நாடிடும் வடிவு[12]க் கேற்ற
நன்மரம் தச்சர் கொள்வர்;
கூடிடும் சூழற் கேற்ற
குறியினைக் கொள்ளல் வேண்டும். 29
11. முதுமை நிலை இயல்
வண்ணமேல் தீட்டிச் செய்து
வயங்கிடும் பொம்மை காயம்;
புண்ணொடு பற்பல் நோய்கள்
பொருந்திய திந்தக் கூடாம்;
எண்ணரு அவாவாம் குப்பை
இருந்திடும் அழுக்கு மேடாம்
நிண்ணிடத் தூய்மை மாண்பு
நலமொடு காத்தல் வேண்டும். 30
என்பினால் கட்டப் பட்ட
இவ்வுடற் கோட்டை மேலே
வன்பிலாத் தசையும் மூடி
வயங்கிடும் போலி யாக.
துன்பமார் பிணியும் மூப்பும்
தூய்மையில் தீய நோக்கும்
வன்பொடு[13] குடியி ராமல்
வல்லையே காலி செய்க. 31
ஒப்பனை பலவும் செய்தே
ஒளிவிடும் மன்ன ரின்தேர்
தப்புதல் இன்றிப் போரில்
தகர்ந்திடு வதுபோல், இந்தத்
துப்பறு[14] உடலும் மூப்பு
தொடுத்திடும் போரில் தோற்கும்;
உப்பொடு வாழும் போதே
உயரறம் செய்தல் வேண்டும். 32
வீட்டினை யாத்த கொத்தா!
வீடுதான் சிதைதல் காண்பாய்!
வீட்டினைப் புதுமை யாக்கும்
வினைதனில் வல்லை[15] யோநீ?
வீட்டினைப் பிணிமூப் பென்னும்
வீணரோ அழித்து விட்டார்.
காட்டினை அடையு முன்பே
கடுந்தவம் செய்யுமோ வீடு? 33
உறுதியாம் இளமை தன்னில்
உயரறி வுற்றி டாரும்,
உறுதியாய் உடல்உள் ளக்கால்
உயரறம் செய்யா தாரும்,
அறுதியாய் மீனே வாரா
அகல்மடை[16] கொக்கு தங்கி
இறுதியில் ஏமா றல்போல்
இன்பமே எய்த மாட்டார். 34
12. தன் தூய்மை இயல்
அயலவர் பலர்க்கும் மேலாம்
அறமுரைப் பவன்தான் முன்னர்
மயல[1]றத் தன்னை மிக்க
மாண்புடை யவனாய்ச் செய்ய
முயலுதல் கடமை; பின்னர்
மொழியலாம் ஊர்க்கு நன்மை.
செயலதும் சொல்வ தேபோல்
செம்மையாய் இருத்தல் வேண்டும். 35
எவருமே தமக்குத் தாமே
இரும்பெருந் தலைவர் ஆவர்.
எவர்க்குமே வேறோர் மாந்தர்
எங்ங்னம் தலைவ ராவர்?
எவருமே தம்மைத் தாமே
இயற்கையாய் அடக்கி ஆளின்,
எவரும் எய்தல் ஒல்லா[2]
இனியநல் தலைமை ஏற்பர். 36
மணிகளுள் வைரம் மற்ற
மணிகளைச் சிதைத்தல் போல,
தனதுளந் தனிலே, தீமை,
தங்கிடத் தோன்றி மேலும்
இணையிலாப் பற்பல் தீங்கை
இழைத்திடச் செய்து, பின்னர்த்
தனதுவாழ் வினையே கல்லித்[3]
தகர்த்திடும், விழிப்பாய்க் காக்க 37
நன்மைசெய் வோனும் நீயே!
நலமறத் துன்பு றுத்தும்
தின்மைசெய் வோனும் நீயே!
தின்மையோ நன்மை தானோ
உண்மையில் உனது செய்கை;
ஒருவரும் பொறுப்பா காரே.
உன்னையே நீயே தூய்மை.
உடையனாய்ச் செய்தல் வேண்டும். 38
உன்னிலும் பெரியோர் என்றே
ஒருசிலர் மகிழப் போற்றி
அன்னவர் தமக்கு மட்டும்
அரியபல் நன்மை செய்தே
உன்னைநீ மறத்தல் வேண்டா
உன்னுடைக் குறிக்கோள் விட்டே;
பொன்னினும், நேர்மைப் பண்பைப்
போற்றியே காத்தல் வேண்டும் 39
18. உலக இயல்
நீரிலே குமிழி போல
நிலையிலை உலக வாழ்வு
காரளி நீரி ருக்கக்
கானலை நாட லாமோ?
ஆருமின் கனியி ருக்க
அருந்தலேன் காஞ்சி ரங்காய்?[4]
நேருற அறமி ருக்க
தேடலேன் தீமைப் பாதை? 40
மண்டிடும் அறியா மையாம்
மாவிருள் மூழ்கி யோன்பின்
கண்டரும்[5] அறிவுச் செல்வம்
கணக்கிலா தடைவா னாயின்
கொண்டலின் விலகித் தோன்றும்
குளிர்நில வினைப்போல் அன்னான்
மண்டிணி ஞால மீது
மகிழ்வொடு மிளிரு வானே. 41
கண்ணியில் அகப்பட் டோங்கிக்
கலுழ்ந்திடும்[6] பறவை கள்போல்
புண்ணுறும் அவாவில் வீழ்ந்து
புலம்புவோர் பலரா யுள்ளார்.
கண்ணியின் விடுபட் டோடிக்
களித்திடும் மானைப் போல,
மண்ணினில் அவாவின் நீங்கும்
மாண்பினர் சிலரே உள்ளார். 42
ஒண்கடல் சூழும் இந்த
உலகெலாம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றி ஆளும்
வேந்துறு பதவி தானும்
விண்கடந் திருப்ப தாக
விளம்பிடும் வீடு பேறும்,
மண்டனில்[7]அவாவ றுத்தோர்
மகிழ்ச்சியின் மேலா காவாம். 43
14. புத்தர் இயல்
பொன்னினால் ஆன காசே
பொழியினும் மழையே யாக,
தன்கையால் தொட்ட எல்லாம்
தங்கமே ஆகி னாலும்
உன்னியே[1] அவாவில் ஆழ்ந்தோர்
உளம்நிறை வடைவ தில்லை.
இன்னதீ மயக்கம் தீர்ந்தோர்
இறைஞ்சிடத் தக்கார் ஆவர். 44
துறவியர் கோலத் தோடு
தொப்பை[2] தான் பெருத்திட் டோரும்
அறிவினை சிறிதும் செய்யா
அரும்பெருஞ் செல்வர் தாமும்
வறியவர் காலில் வீழ்ந்து
வணங்கிட உரியர் அல்லர்.
அறநெறி பற்று வோரே
அனைவரும் வணங்கத் தக்கார், 45
15. மகிழ்ச்சி இயல்
பகைத்திடும் உணர்வில் லாதோர்
பகைத்திடார் எவரும் நோக;
பகைவரின் நடுவி லேயே
பகையிலா தினிது வாழ்வர்.
பகைத்திடும் உணர்வுள் ளோரே
பகையிலா நண்பர் மாட்டும்
பகைகோடு வாழ்வர், இந்தப்
பகையதை[3]ப் பகைத்தல் வேண்டும். 46
வெற்றியோ பகையை மேலும்
வீறொடு வளரச் செய்யும்
உற்றிடும் தோல்வி தானும்
உறுதுயர் உறுத்து விக்கும்[4]
வெற்றியோ தோல்வி தானோ
விளைத்திடா தியல்பாய் வாழ்வோர்
வெற்றியே பெற்றோ ராவர்;
விதைத்திடார் துன்ப வித்தை[5]. 47
உற்றிடும் அவாவை ஒத்த
உறுநெருப் பேதும் இல்லை.
முற்றிடும் பகையை ஒத்த
முட்புதர் யாதும் இல்லை.
பற்றிடும் பிணிமூப் பொத்த
பகைப்பொருள் ஒன்றும் இல்லை.
வற்றிடா மகிழ்ச்சி வாழ்வை
வழங்கிடும் அமைதி உள்ளம். 48
பேரவா தன்னின் மிக்க
பெரியநோய் ஒன்றும் இல்லை.
ஊறிய மூடக் கொள்கை
உறச்செயும் பெரிய கேடு,
நேரிய உண்மைப் போக்கே
நிலைத்திடச் செய்யும் வாழ்வை.
ஆரிவை உணர்கின் றாரோ
அவருளம் இன்பக் கோட்டை. 49
யாதுமே நோயில் லாத
வாழ்க்கையே யாணர்[6]ச் செல்வம்
போதுமென் றமைதி கொள்ளும்
பொன்னுளம் குறையாச் செல்வம்
சூதிலா மாந்தர் தாமே
சூழ்ந்திடும் பெரிய சுற்றம்
சூதுறு போலி நண்பர்
சூழ்ச்சிசார் பகைவ ராவர். 50
அறிவரை[7]க் காணும் நேரம்
அரியபொற் கால மாகும்;
அறிவரின் உரையைக் கேட்கும்
அஞ்செவி உண்மைக் காதாம்;
அறிவரின் பணியைச் செய்தே
அவரொடு வாழ்தல் வீடாம்
அறிவிலா ரோடு செய்யும்
அனைத்துமே அளறே யாகும். 51
16 விருப்ப இயல்
விருப்புறு பொருள்கிட் டாதேல்
விளைந்திடும் பெரிய துன்பம்
வெறுப்புறு பொருள்கிட் டிற்றேல்
வெறுப்புமேல் வெறுப்பு சேரும்
விருப்பொடு வெறுப்பு கொள்வோர்
வீழுவர் பற்றுச் சேற்றில்
விருப்பொடு வெறுப்பில் லோரை
விரும்பிடும் உலக மெல்லாம் 52
அன்பினை ஒருவர் மீதே
அறவிறந் தாற்றக் கொள்ளின்,
வன்புறு[8] முறையில் ஓர
வஞ்சனைக் கிடமுண் டாகும்;
அன்பினால் அவர்குற் றத்தை
அறிந்திடும் வாய்ப்பும் போகும்;
அன்பினைக் கொள்ளு தற்கும்
அளவது பொதுவாய் வேண்டும் 53
புனல்வழி ஓடு கின்ற
புணை[9]யினைப் போலப் பற்றை
மனவழிப் பற்றிச் செல்லல்
மடமையாம்; அடக்கம் என்னும்
அணைவழிந் தோடு கின்ற
ஐம்புல அவாவெள் ளத்தில்
முனைவுடன் எதிர்த்து நீந்தி
முன்னுறச் செல்லல் வேண்டும். 54
நீண்டநாள் கடந்த பின்னர்
நேடுந்தொலை இடத்தி னின்று
மீண்டுவந் தோரை யாரும்
மிகுமகிழ் வுடனே ஏற்பர்;
ஈண்டிடும் பொருள்மீ தெல்லாம்
இணைந்திடும் பற்று நீங்கி
வேண்டிடும் பொருளில் மட்டும்
விருப்பினை அளவாய்க் கொள்க 55
17. சின இயல்
உறுவழி தவறி ஓடும்
ஊர்தியை நிறுத்தாப் பாகன்
வெறுமையாய்க் கடிவா ளத்தை
விதிர்த்தலால் பயனே இல்லை
வெருவரும்[10] சினத்தைக் கொட்டி
வீண்வழி செலும்உள் ளத்தை
அறிவொடு மடக்கி மீட்போர்
அறிஞருள் அறிஞர் ஆவர். 56
அன்பினால் சினத்தை வெல்க;
அறத்தினால் மறத்தை வெல்க;
நண்பினால் பகையை வெல்க;
நல்கலால் வறுமை வெல்க:
இன்பினால் துன்பம் வெல்க;
என்றுமே வற்றா மெய்மைப்
பண்பினால் பொய்மை வெல்க;
பாருளோர் போற்ற வாழ்க 57
தனதுவாய் பேசா தோனைத்
தருக்கி[11]யென் றுரைப்பர் மக்கள்;
தனதுவாய் மிகவும் பேசும்
தன்மைவா யாடல் என்பர்;
தனதுவாய் அளவாய்ப் பேசின்
தான்பெருஞ் சூதன் என்பர்,
தனதுரை சூழற் கேற்பத்
தருதலே தக்க தாகும் 58
முழுவதும் புகழ்ச்சி பெற்றோர்
முன்னரும் இன்றும் இல்லை;
முழுவதும் இகழ்ச்சி உற்றோர்
முப்பொழுது[12] மில்லை; ஆனால்
முழுவதும் ஆய்ந்து நோக்கி
முனைப்பதாய் உளதைக் கொண்டு
மொழியலாம் கீழோர் என்றோ—
முதிர்ந்தநல் மேலோர் என்றோ ! 59
உள்ளலில்[13] உளத்தைக் கட்டி
உயர்ந்ததே உள்ளச் செய்க ;
சொல்லலில் நாவைக் கட்டி
நல்லதே சொல்லச் செய்க ;
வல்லதாய்ச் செயலில் மெய்யை
வணக்கியே நலஞ்செய் விக்க,
உள்ளமும் நாவும் மெய்யும்
ஒன்றுநற் செயல்கள் செய்க. 60
18. மாசு இயல்
இன்றுநீ உலர்ந்த குப்பை ,
எமனுடைத் தூதர் உள்ளார் ;
சென்றுளாய், உலகை விட்டுச்
சென்றிடும் வாயில் நோக்கி ,
சென்றிடும் வழியில் தங்கச்
சிற்றிடம் தானும் மற்றும்
தின்றிடக் கட்டு சோறும்
தினைத்துணை அளவும் இல்லை. 61
அரும்பெரு வெள்ளி சார்ந்த
களிம்பினை அக ற்றல் போல,
உரம்பெறு உளத்தின் மாசை
ஒல்லை[14]யில் ஒழித்தல் வேண்டும்,
இரும்பினில் தோன்றி அந்த
இரும்பையே துருதின் னல்போல்,
தரும்படர் நாமே செய்த .
தகாச் செயல் நமக்குச் சால. 62
படிக்கிலோ மாயின் நல்ல
பழமறை[15] மதிப்பி ழக்கும் ;
அடிக்கடி பழுது பார்க்கின்
அகமது கெடுதல் இல்லை ;
திடுக்கிடத் திருட்டுப் போகும்
திருமனை காவா விட்டால் ;
மடிக்குநாம் அடிமை யாயின்
மாண்புறு செயல்கள் செய்யோம், 63
நெஞ்சினில் இரக்கம், நாணம்,
நேர்மைதான் இல்லா தோர்க்கும்—
வஞ்சனை, பொய்பு ரட்டு,
வழிப்பறி, சூது, யார்க்கும்
அஞ்சுதல், இன்மை, காமம்,
ஆயவை[16] மிக்குள் ளோர்க்கும்—
மிஞ்சுமீவ் வுலக வாழ்வு
மிகமிக எளிதாய்த் தோன்றும். 64
நெஞ்சினிரில் இரக்கம், நாணம்,
நேர்மையோ டொழுக்கம், தூய்மை,
அஞ்சிடும் அடக்கம், மெய்மை,
அமைதியோ டன்பு, பண்பு,
விஞ்சிடும்[17] அவாவே இன்மை,
விளம்பிய இவையுள் ளோர்க்கு
மிஞ்சுமிவ் வுலக வாழ்க்கை
மிகுகடி னமாகத் தோன்றும். 65
பிறரது வாழ்வைக் கண்டு
பெரியதோர் பொறாமை கொள்வோன்
இரவொடு பகலும் தூங்கான்:
இம்மியும்[18] அமைதி கொள்ளான்.
பிறரது குற்றம் கானும்
பேய்த்தனம் பெரிதும் உள்ளோன்
பெருகுறு தனது குற்றம்
பேணலின் விலகிச் செல்வான். 66
பதரெனப் பிறர்குற் றத்தைப்
பாரெலாம் தூற்றும் கீழோன்,
அதிர்வுறச் சூதாட் டத்தில்
ஆடிடும் காய்ம றைத்தே
எதிருளார் பலரைச் சால
ஏய்ப்பவர் போலத் தன்பால்
புதரென மண்டு குற்றம்
புலப்படா தொளித்தல் செய்வான். 67
நெருப்பது வேறொன் றில்லை
நிகர்த்திடக்[19] காமத் தீயை;
விருப்பினைப் போன்றதான
விழும்வலை பிறிதொன் றில்லை;
வெறுப்பினை வெல்லத் தக்க
வேறொரு முதலை இல்லை,
அரிப்பதில் வாழ்வாம் மண்ணை,
அவாவைநேர் வெள்ளம் உண்டோ? 68
வானிலே பாதை போட
வல்லவர் யாரும் உண்டோ?
வானிலே துறவி தோன்றார்;
வருவது மண்ணி லேதான்
ஊனு[20]டல் பெற்ற எல்லாம்
ஒருபொழு தழிந்து போகும்
வீணிலே பொழுது போக்கேல்;
விழிப்புடன் அறமே செய்க. 69
- சான்றோர் இயல்வன்முறை கொண்டு நன்மை
வாய்த்திடச் செய்வோன் மூடன்;
பன்முறை பேசும் பேச்சால்
படித்தவன் ஆதல் உண்டோ[21]?
நன்முறை கற்ற வண்ணம்
நடப்பவன் கல்விச் சான்றோன்
இன்முறை கொண்டா ராய்ந்தே .
எதையுமே ஏற்றல் வேண்டும். 70
தலைமயிர் நரைத்தோ ரெல்லாம்
தகுதிசொல் சான்றோ ராகார் ;
தலைமயிர் புனைந்தோ ரெல்லாம்[22]
தகவுறும் அழக ராகார் ;
தலைமயிர் வழித்தோ ரெல்லாம்
தக்கநல் துறவி ஆகார் ;
நிலைபெற அறஞ்செய் வோரே
நீள்புகழ்க் குரியர் ஆவர் 71
20. நெறி இயல்
மருத்துவர் மருந்தே ஈவார்,
மாந்துதல்[23] பிணியோர் செய்கை ;
அறுத்திட அவாவை, மேலோர்
அறநெறி மட்டும் சொல்வர் ;
அறுத்திடல், அவாவை, மிக்க
அறிவுளோர் கடமை யாகும்.
அறுத்திடா ராயின், தீமை,
அன்னைசேர் சேய்போல் பற்றும். 72
அவாவெனும் காட்டி னின்றே
அனைத்துள கேடும் தோன்றும்.
கவைமரம் ஒன்றை மட்டும்
களைந்திடல் போதா தாகும் ;
அவாவெனும் காட்டை முற்றும்
அடர்ந்துள புதர்க ளோடு
தவிர்த்திட வேண்டும், பற்றில்
தகுநெறி எரி[24]யை மூட்டி, 73
உறிவுசால் தந்தை தாயோ
உற்றிடும் மக்கள் தாமோ
ஒருவரும் காக்க மாட்டார்
உயிரது பிரியும் வேளை
உறங்கிடும் போது வெள்ளம்
ஊர்முழு வதுமாய்த் தாற்போல்
ஒருவிடின் அறத்தை[25], சாவோ
ஒல்லையில் அடித்துச் செல்லும். 74
21. பல்வகை இயல்
சிறியதாம் இன்பம் விட்டுச்
சிறந்தபே ரின்பம் நாடீர் !
உரியதைச்[26] செய்யாச் சோம்பும்
உரியதல் லாத ஒன்றைப்
பெரியதாய்ச் செயலும் வேண்டா !
பெற்றிடத் தன்ன லத்தை,
பிறரது நலங்கெ டாமல்
பேணுவீர் நேர்மைப் பாதை. 75
துறப்பதும் கடினம: ஒன்றும்
துறந்திடாத் துய்ப்பும்[27] அஃதே !
சிறப்பொடு, மனைய றத்தைச்
செய்வதும் அரிதே ! தீமை
மறப்பிலா மக்க ளோடு
மகிழ்வதும் இயலா ஒன்றே !
சிறப்புடன் உலகில் வாழ்தல்
செயற்கருஞ் செய்கை யாகும். 76
ஒழுக்கமும் நேர்மைப் பண்பும்
உயரறி வோடு பெற்றோர்
இழுக்கிடா தெங்கும் என்றும்
ஏற்றமே பெறுவர் சால.
இழுக்கிலாச் சிறந்த பண்பர்
இமயமாய் உயர்ந்து காண்பர்.
வழுக்கியோர் இருளில் எய்த
வன்கணை[28] போலக் காணார், 77
22. அளறு இயல்
பிறர்மனை விரும்பும் பேதை
பெரியதாம் பழியும் ஏச்சும்
உறுவதற் காளா கின்றான்,
ஒருசிறு மகிழ்ச்சிக் காக;
அரசரின் ஒறுப்பை[29] அன்னான்
அடைவதும் நிகழக் கூடும்
பிறர்மனை விரும்பாப் பண்பு
பெரியதோர் ஆண்மை யாமே! 78
தருப்பையைத் தவறாய் பற்றின்
தன்கையை அறுத்தல் செய்யும்
துறப்பதாம் போர்வைக் குள்ளே
துய்மைஇல் செயல்கள் செய்வோர்
இறப்பவும் அளற்றுத் துன்பம்[30]
எய்துவர்; இளமை நோன்பும்
முறைப்படி செய்யா ராயின்
முயல்வதால் பயனே இல்லை, 79
நகரதைப் புறமும் உள்ளும்
நலமுறக் காத்தல் போல,
அகத்தொடு புறமும் உன்னை
அரண்பெறக் காத்துக் கொள்க
அகமு[31] நா ணுவன நாணி,
அஞ்சுவ அஞ்சிக் காக்க,
மிகத்தவ றான நீக்கி
மேன்மையாய் ஒழுகி வெல்க. 80
23. யானை இயல்
எய்திடும் அம்பை யானை
ஏற்றுமே பொறுத்தல் போல,
வைதிடும் பிறரை நீயும்
வலுவொடு பொறுத்துக் கொள்க
உய்தியில்[32] உலகில் தீயோர்
உறுதவ உள்ள தாலே
வெய்துறத் திட்டு வோரே
வெளியெலாம் திரிவர் சால. 81
பழக்கிய யானை கொண்டு
படுகளம் வெல்வர் மள்ளர்;
பழக்கிய யானை மீது
பார்புரப் பவரும்[33] செல்வர்,
இழுக்கமில் பயிற்சி யாலே
எதனையும் அடக்கல் ஒல்லும்
ஒழுக்கமாய்ப் பயிற்றி உள்ளம்
உயர்ந்திடச் செய்தல் வேண்டும். 82
பழித்திடும் மலத்தைத் தின்று
பன்றிதான் பெருத்தல் போல,
கொழுத்திடத் தீனி தின்று
குன்றென உடல்வ ளர்த்தால்
இழித்திடத் துயிலும் சோம்பும்[34]
இறுக்கமாய்ப் பற்றிக் கொள்ளும் ;
செழித்திட முடியா துள்ளம்
சிறப்புறு அறிவு பெற்றே. 83
வெருவரு[35] போரில் தோற்ற
வேந்தனும் விட்டோ டல்போல்,
அறிவொடு பண்புள் ளோரை
அன்புசால் நண்ப ராகப்
பெறுவது முடியா தாயின்
பிரிந்துநீ தனித்து வாழ்க.
அறிவறு மூடர் கூட்டம்
அணுகலும் தீய தாகும். 84
24. அவா இயல்
உரங்கொளா அவாஆர் உள்ளம்
உறுபொருள் பெறுதற் காகக்
குரங்குபோல் அங்கும் இங்கும்
குதித்துமே தாவிச் செல்லும்.
தரங்குறை அவாமே லிட்டுத்
தாக்கிய போர்தோற் றோரை
அரங்கவும்[36] அழிக்கத் துன்பம்
அறுகுபோல் ஆழ ஊன்றும். 85
முடுக்குறு[37] வேரை வெட்டின்
முளைத்திடா மரங்கள் மீண்டும் ;
அடக்கரும் அவாவ றுத்தோர்
அயர்ந்திடத் துன்பம் பற்றித்
தடுக்குதல் என்றும் இல்லை ;
தாமரை இலையில் தண்ணீர்
வெடுக்கென விலகு தல்போல்
விலகிடும் துன்பம் யாவும். 86
உற்றிடும் அவாவோ நீண்ட
ஒடைபோல் ஓயா தோடும் ;
பற்றெனும்[38] கொடியோ ஆண்டு
படர்ந்திடும் வளமாய் நீள ;
கற்றுறும் அறிவு கொண்டு
களைந்திடல் வேண்டும் முற்றும்.
வெற்றிநீ கொள்ளா யாயின்
விடாப்பிடி யாகும் துன்பம். 87
வேட்டையில் முயல்கள் தோன்றின்
விரைந்திடும் அங்கும் இங்கும் ;
வேட்டையில்[39] சிக்கு மாந்தர்
திரிகிறார் இங்கும் அங்கும்.
சாட்டிடும் தீய பற்றாம்
சங்கிலி பிணைக்கப் பெற்றோர்
மீட்டிடாச் சிறைத்துன் பத்தில்
மேவுவார் நிலையாய் மன்னி. 88
இரும்பினால் மரத்தி னாலே
இயற்றுவ தளைகள் ஆகா;
விரும்பிகும் மனைவி மக்கள்
வியனிலம் மணிகள் இன்ன
இரும்பெரும் தளைகள்; தானே
இழைத்திடும் வலையில் சிக்கித்
திரும்பிடாச் சிலந்தி போலத்
திகைக்கலீர்[40] பற்றுள் சிக்கி. 89
ஆர்ந்திடும்[41] செல்வத் தாலே
அழிகிறார் மூட மாந்தர்;
ஓர்த்திடும் அறிஞர் என்றும்
ஒழிந்திடார் செல்வத் தாலே.
சேர்ந்திட நுகர்ச்சி இன்பம்,
சிற்றறி வுடையோர், தம்மைச்
சார்ந்திடும் இனத்தி னோடு
சாலவும் அழித்துக் கொள்வர். 90
பயிரினைக் களைகள் சுற்றிப்
பற்றியே அழித்தல் போல,
மயர்வுறு காம வேட்கை
மாய்த்திடும் நலங்கள் எல்லாம்.
செயிரு[42] றும் பகைமைப் பண்பு
செறுத்திடும் தனைக்கொண் டோரை.
துயரறப் பற்று நீங்கித்
தூயவர்க் கறமே செய்க. ` 91
25. பிக்கு இயல்
சுமைகுறை வாயி ருப்பின்
சோர்வுறார் பயணம் செய்வோர்;
சுமைமிகின் ஆற்று நீரின்
சுழலிலே ஓடம் ஆழும்;
அமைவிலா[1] வெறுப்புச் சேறும்
அலர்விடும் விருப்பும் கூடின்,
சுமையது மிகுத லாலே
சுழலுமோ வாழ்க்கை வண்டி? 92
அறம்பிறழ் காமத் தீயை
ஆர்ந்திடத்[2] துடிக்கும் செய்கை
இரும்பினால் ஆன கல்லை
எரியினில் பழுக்கக் காய்ச்சி
விரும்பியே நெஞ்சுக் குள்ளே
விழுங்குவ தொப்ப தாகும்
திறம்பெற அதமே செய்து
தீவினை அகற்றி வாழ்க. 93
ஒவ்வொரு வர்த மக்கும்
உற்றிடும் தலைவர் தாமே.
ஒவ்விடா திடக்கு செய்யும்
உயிரினப் பரியைத் தட்டிச்
செவ்விதின் அடக்கி ஒட்டிச்
சென்றிடும் வணிகர் போல,
வவ்விடும் அகந்தை “நானை”[3]
வளர்த்திடா தடக்கல் வேண்டும் 94
26. பிராமண இயல்
முடியினை வளர்த்து நீள,
முழுவதும் மானின் தோலை
உடையெனக் கொண்டோர் யாரும்
உயர்பிரா மணரா காரே.
உடையதாய்க் கந்தை சுற்றி,
உடல்நரம் புகள்பு றத்தே[4]
அடையவே தெரிய நோன்பை
ஆற்றுவோர் பிராம ணர்தாம். 95
பிறந்திடும் குலத்தி னாலோ,
பிராமணத் தாய்வ யிற்றில்
பிறந்திடு வாய்ப்பி னாலோ
பிராமணர் ஆகார் யாரும்.
பறந்திட[5]ப் பற்றை நீக்கிப்
படுபொருள் இல்லா தோரே
சிறந்திடும் பிராம ணப்பேர்
சீரொடு கொள்ளத் தக்கார். 96
மயக்கிடும் வாழ்வாம் சேற்று
வழியினைத் தாண்டி மாறி,
கயக்கிடும்[6] அவாவாம் ஆற்றின்
கரையினைக் கடந்தே ஏறி,
உயக்கொளும் நல்லெண் ணத்தால்
உயிர்க்கெலாம் அறமே செய்து,
வியக்கவே கலந்து வாழ்வோர்
வியன்பிரா மணராம் காண்பீர். 97
தாமரை இலையில் ஒட்டாத்
தண்ணிய[7] நீரே போல,
தாமமார் ஊசிக் கூரில்
தங்கிடாக் கடுகு மான,
காமமும் சினமும் பற்றும்
கழிந்திடச் செயவல் லோரே
ஆமென ஏற்கும் வண்ணம்
அரும்பிரா மணரே யாவர். 98
உயிர்களைத் துன்பு றுத்தல்,
உறுபெருங் கொலையும் செய்தல்,
துயருறக் கொலைகள் செய்யத்
தூண்டுதல், வேள்வித் தீயில்
உயிருடல் வெட்டிப் போட்டே
உயர்மறைக் கூற்றின்[8] பேரால்
உயர்வற உண்ணல், செய்வோர்
உயர்பிரா மணரே யாகார். 99
ஆர்க்குமே பகையால் தீமை
ஆர்ந்திடச் செய்யாப் பண்பர்.
போர்க்கெழும் முரடர் நாப்பண்[9]
பொறுமையோ டிருந்து வாழ்வோர்.
ஈர்க்குமெப் பற்றும் உள்ளோ
ரிடையிலே பற்றற் றுள்ளோர்.
ஓர்க்கரு நோன்பு கொள்வோர்,
உயர்பிரா மணரே யன்றோ! 100
மண்ணுல கப்பற் றோடு
மறுவுல கத்தின் பற்றும்
திண்ணமாய் நீக்கி யோரும்,
தீர்ந்திடா இன்ப துன்பம்
என்னுமாத் தளை[10]வென் றோரும்,
இன்னருள் மிக்குள் ளோரும்,
துன்னரும் பிராம ணப்பேர்
துளங்கிடப் பெற்று வாழ்வர். 101
நூல் பயன் [வெண்பா]
புத்தரின் பொன்மொழி போற்றுவோர் தீஅவாப்
பித்தது நீங்கிப் பெரியராய்—நித்தலும்
அல்லன நீக்கி அறநெறி பற்றியே
நல்லன கொள்வர் நயந்து.
பிற் சேர்க்கை
(புத்தர் பல்வேறு வேளைகளில் பலர்க்குக் கூறியவை)
நம்முடைக் குறையைச் சொல்வோர்
நன்மையே செய்வோ ராவர்.
நம்முடைக் குறையை அன்னார்
நவின்றிடா ராயின், ஓர்ந்[1]தே
நம்முடைக் குறைகள் முற்றும்
நாமறிந் திடுதல் எங்ஙன்?
நம்மைநாம் திருத்த இங்ஙன்
நல்வழி செய்வோர் வாழ்க! 1
ஒருபொருள் நாம்பி றர்க்கே
உதவிடின், அவர்ம றுப்பின்
தருபொருள் நமையே மீண்டும்
சார்ந்திடும் தன்மை போல,
ஒருவரை நாமி கழ்ந்தால்
ஒப்பவே மாட்டார்; அந்த
வெருவரும்[2] இகழ்ச்சி நம்மை
விரைவிலே மீண்டும் சேரும். 2
மற்றவர் கடைப்பி டிக்கும்
மதத்தினைத் தாழ்த்திப் பேசல்,
உற்றதன் மார்பில் மல்லாந்[3]
துமிழ்வது போன்ற தாகும்.
மற்றவர் கொள்கை யாவும்
மாண்புடன் அணுகி ஆய்ந்து
நற்றமா யுள்ள வற்றை
நயமுடன் ஏற்றல் நன்று. 3
உடம்பினைப் போற்றா விட்டால்
ஒன்றுமே செயலொண் ணாதே[4],
உடம்பதின் நலவி யக்கம்
உயிரெனப் படுவ தாகும்.
உடம்பினைப் போற்று தல்தான்
உயிரினைப் போற்ற லாகும்.
உடம்பினை நன்கு போற்றி
உயர்செயல் புரிதல் வேண்டும். 4
உலுத்திடும் கட்டை யாலே
ஒள்ளழல்[5] கடைதல் இல்லை,
அலுத்திடும் உடம்பி னாலே
அடைபயன் ஒன்றும் இல்லை.
கலைத்திறன் வளர்க்க நல்ல
கழகமும் காணல் போல,
நிலைத்திடும் உடம்பு வேண்டும்
நெடும்புகழ்ச் செயல்கள் ஆற்ற. 5
உடலினை வாட்ட லாலோ,
உணவினை மிகவும் மாந்தி[6]
உடலினைப் பெருக்க லாலோ
உறுநலம் ஏதும் இல்லை.
கெடலிலா தளவாய் உண்டு,
கிளர்பொறி அடக்கி ஆளும்
நடுநிலை வழியாம் ஒன்றே
நலவழி பயப்ப துண்மை. 6
காட்டிலே புல்லைத் தின்றால்
காணலாம் ‘மோட்சம்’ என்றால்,
காட்டுள மான்கள் யாவும்
கானுமோ மோட்ச வீட்டை?
ஈட்டமாம்[7] நீருள் தங்கின்
எய்தலாம் ‘மோட்சம்’ என்றால்,
கூட்டமாய் நீருள் வாழ்வ
குறுகுமோ வீடு பேற்றை? 7
ஆறுகள் யாவற் றிற்கும்
அளவிலாப் பெயர்கள் உண்டாம்;
ஆறுகள் அனைத்தும் ஓடி
ஆழ்கடல் கலந்த பின்னர்க்
கூறிடும் பெயர்கள் நில்லாக்
கொள்கைபோல் ‘சாதி’ யாவும்
வேறறு கழகம்[8] சாரின்
விரைவிலே மறைந்து போகும். 8
இறைவரே உலகில் எல்லாம்
இயற்றினார் என்றால், அந்த
இறைவரே, பற்பல் தீமை
இயற்றுவோர்க் கெலாம்பொ றுப்போ?
இறைவரை நோக்கி ஏதும்
ஈகென வேண்ட லின்றி
முறைவழி கடமை ஆற்றின்
முன்னுவ[9] எல்லாம் முற்றும். 9
அறவுரை வழங்கல் எல்லா
அறங்களின் சிறந்த தாகும்.
அறம்உரை சுவையின் மிக்க
அருஞ்சுவை யாதும் இல்லை.
அறம்தரும் இன்பின்[10] மேலாய்
ஆர்ந்திடும் இன்பம் உண்டோ
அறந்தனை இறுகப் பற்றி
அவாவினை அறுத்து வாழ்க.
10
(வேறு)
அறமென்னும் விளைநிலத்தில் அவாவென்னும் களையகற்றி
அறிவென்னும் கலப்பையுடன் ஆள்வினையாம் காளைபூட்டி
அறஉழுதே[11], அரியகாட்சி யாம்விதைகள் ஆரஇட்டே,
அரியபண்பாம் நீர்பாய்ச்சி அமைதியினை விளைத்திடுவீர். 11
குறிப்புரை
பாயிரம்—முகவுரை, பொருள்அடக்கம், எ டு த் த து இயம்பல். 1. ஒண்புத்தர்—ஒளிவிடும் புத்தர். 2. அலகில்— அலகு+இல்,—அளவு இல்லாத.
நூல்
- இரட்டைச் செய்யுள் இயல் தலைப்பு—ஒரே கருத்தை உடன்பாட்டு முறையிலும் எதிர்மறை முறையிலும் இரண்டு விதமாக இரண்டு செய்யுள்களில், முதல் நூலில் கூறப் பட்டிருப்பதால், இந்தத் தலைப்புக்கு ‘இரட்டைச் செய்யுள் இயல்’ என்னும் பெயர் தரப்பட்டது. ஆனால், இந்தத் தமிழ்ச் செய்யுள் நூலில், ஒரு கருத்து ஒரே செய்யுளில் மட்டும் கூறப்பட்டுள்ளது.
அருஞ் சொற் பொருள்
- இரட்டைச் செய்யுள் இயல்
- ஈர்க்கும்—இழுக்கும். 5. எள்ளி—கேலி செய்து. 6. ஓரின்—உணர்ந்தால், அறிந்தால், 7. ஐம்புலம்—சுவை ஒளி, ஊறு (தொடு அறிவு, ஒலி, மணம் என்பன. 8. சிம்புகள்—மரத்தின் சிறுகிளைப் பகுதிகள், 9. மொய்ம்பு—வலிமை. 10. அடைவுற—பொத்தல் இன்றி நன்றாக அடைத்து. 11. அடைவுற—முற்றிலும், 12. ஈண்டும் — நிறையும். 13. சுரையை ஏட்டில் உண்டவர்—ஏட்டுச் சுரைக்காயை உண்டவர்.
- விழிப்பு இயல்
- ஓங்கல்—மலை, 15. அவா தளை—அவாவாகிய விலங்கு,
- அடக்க இயல்
- தள்ளரு—தள்ள அரு (‘அ’ தொ கு த் த ல் — நீக்குதற்கு அரிய. 17. வரித்தல்—கட்டுதல்:
- மலர்கள் இயல்
- தா அரு—குற்றம் இல்லாத, 19. நச்சிடார்—விரும்பார். 20. பொன்றாது—அழியாமல்.
- பேதைகள் இயல்
- உறுவழி—செல்லும் வழி. 22. துன்னுதல்—பொருந்துதல். 23. நாப்பண்—நடுவே. 24. கரந்திடும்—மறைந்திருக்கும்.
- அறிஞர் இயல்
- வெம்மை—கொடுமை. 26. தரையினர்—உலகத்தார்.
- அருகந்தர் இயல்
- அருகந்தர் இயல்—விருப்பு வெறுப்பு இ ல் லா த மேலோர் பற்றியது. 28. கோ ள் —கொ ள் கை, 29. நண்ணரும்—நண்ண (அடைவதற்கு) அரிய.
- ஆயிரம் இயல்
- ஒவ்வா—சமம் ஒ ப் ப தி ல் லை. 31. வழுக்கி—முறை தவறி.
- தீய நடத்தை இயல்
- உஞற்றல்—செய்தல். 33. விள்ளரும்—வி ள் ள அரும்—சொல்ல முடியாத அளவினதான. 34. பொன்று தல்—அழிதல். 35. கடுகி—விரைந்து.
- ஒறுப்பு இயல்
- ஓட்டும்—வீரைந்து அனுபவிக்கும்படி விரட்டும் 37. நாடிடும் வடிவு—செய்ய எண்ணிய உருவம்.
- முதுமை நிலை இயல்
- வன்பொடு—வலிமையோடு, 39. துப்பு அறு—வலிமை திறமை) அற்ற, உப்பு—இனிமை, இன்பம். 40. வல்லையோ—வல்லமை உடையையோ. 41. அகல் மடை—அகன்ற நீர் மடை.
- தன் தூய்மை இயல்
- மயல்—மயக்கம். 43. எய்தல் ஒல்லா—எளிதில் அடைய முடியாத, 44. க ல் லி — சி றி து சி றி தா க ச் சுரண்டி, தோண்டி,
- உலக இயல்
- காஞ்சிரங்காய்—கசக்கும் எட்டிக்காய், 46. கண்டரும்—கண் தரும்— (உண்மையைக் காணும்) கண்ணைத் தருகின்ற. 47. கலுழ்தல்—அழுதல். 48. மண்டனில்—மண் தனில்—மண்ணுலகில்,
- புத்தர் இயல்
- உன்னி—உற்று எண்ணி. 50. தொப்பை—பெரு வயிறு.
15, மகிழ்ச்சி இயல்
- பகையதை — பகைக் குணத்தை (அது—பகுதிப் பொருள் விகுதி). 52 உறுத்துவிக்கும்—உண்டாக்கும் 53. வித்தை—விதையை. 54. யாணர்—புது வருவாய். 55. அறிவர்—மெய்யறிவுடைய மேலோர்.
- விருப்ப இயல்
- வன்புறு—வன்பு உறு—வன்கண்மை (கொடுமை), உற்ற 57. புணை—தெப்பம்.
- சின இயல்
- வெருவரும்—அஞ்சத்தக்க. 59. தருக்கி—தருக்கு (செருக்கு) உடையவன். 60. முப்பொழுதும்—இறப்பு—நிகழ்வு—எதிர்வு என்னும் மூன்று காலத்திலும், 61. உள்ள லில்—நினைப்பதில்.
18 மாசு இயல்
- ஒல்லையில்—விரைவில். 63. பழ மறை—பழம் பெருமை உடைய வேதம் 64. ஆயவை—ஆகிய (தீய) குணங்கள். 63. விஞ்சிடும்—மிகுகின்ற, 66. இம்மியும்—சிறிதும், 67. நிகர்த்தல்—ஒத்தல், 68, ஊன்உடல்—மாமிச உடம்பு.
- சான்றோர் இயல்
- ஆதல் உண்டோ—ஆதல் இல்லை. 70. புனைந் தோர்—ஒப்பனை (அலங்காரம்) செய்தவர்.
- நெறி இயல்
- மாந்துதல்—உண்ணுதல். 72. தகுநெறி எரி—தக்க அறநெறியாகிய நெருப்பு. 73. அறத்தை ஒருவிடின்—அறத்தைக் கைவிடின்.
- பல்வகை இயல்
- அடி 3,3— செய்ய வேண்டியதைச் செ ய் யா ச் (சோம்பும்) சோம்பலும் செய்யக் கூடாததைச் செய்தலும் வேண்டா— 75. துய்ப்பும் — அனுபவிப்பதும். 76. வன் கணை—கொடிய அம்பு.
- அளறு இயல்
- ஒறுப்பு—தண்டனை. 78. அளற்றுத் துன்பம்— நரக வேதனை. 79. அகம்—மனம்
- யானை இயல்
- உய்தி இல்—கடைத்தேறும் வழி இல்லாத. 81. பார் புரப்பவர்—உலகைக் காக்கும் அரசர். 82. சோம்பு—சோம்பல். 83. வெருவரு—அஞ்சத்தக்க.
- அவா இயல்
- அரங்கவும்—முற்றிலும். 85. முடுக்குறு—வலுவாகப் பொருந்தியுள்ள, 86. பற்று — ஆசை. 87. தேட்டை — பேரவா. 88. திகைக்கலீர் — திகைக்காதீர்கள். 89. ஆர்ந் திடும்—நிறைந்த. 90. செயிர்—குற்றம்.
- பிக்கு இயல்
- அமைவிலா—அ மை தி இல்லாத, பொருந்தாத, 92. ஆர்ந்திட—அனுபவிக்க
- பிராமண இயல்
- ‘நான்’—நான் என்ற ஆணவம் அல்லது அகந்கை 94. புறத்தே—உடலின் வெ ளி யே. 95. பறந்திட—பறந்து (விரைவில் பிரிந்து) ஓட. 96. கயக்கிடும்—கசக் கிடும், கலக்கிடும். 97. தண்ணிய— குளிர்ந்த தன்மை உடைய. 98. கூற்று—மொழி, உரை, ஈண்டு இருபொருள் உள்ளது—மற்றொரு பொருள்: வேதமாகிய எமன் பேரால் —என்பது (கூற்று — எமன்). 99. நாப்பண்-நடுவே: 100. மா தளை—பெரிய கட்டு—பெருவிலங்கு.
பிற் சேர்க்கை
- ஓர்ந்து—ஆய்ந்து அறிந்து. 2. வெருவரும்—அஞ்சத் தக்க. 3. மல்லாந்து படுத்துக் கொண்டு நேரே எச்சில் உமிழ்ந்தால், அது, உமிழ்ந்தவர் மார்பிலேயே விழும். 4. ஒண்ணாது—இயலாது. 5. ஒள் அழல்—விளக்கமான நெருப்பு. 6 மாந்தி—சாப்பிட்டு 7. ஈட்டமாம் நீர்—நீர் மிகுதியாயுள்ள நீர்நிலை. 8. கழகம் – ச ங் க ம். 9. முன்னுவ—நினைப்பவை (வினையால் அ ணை யு ம் பெயர்). 10. இன்பின்—இன்பத்தைக் காட்டிலும். 11. அற உழுது—முற்றிலும் மிகவும் ஆழமாக உழுது.
(முற்றும்)