ஜெயகாந்தன் (1934-2015), நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் வாய்ந்த ஆளுமை. அவர் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர், மற்றும் சமூகச் சிந்தனையாளர். தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிறுகதைகளில், யதார்த்தவாதம், புதுமை, மற்றும் புரட்சிகரமான சிந்தனைகளை அறிமுகப்படுத்தியதில் அவருக்கு முக்கியப் பங்குண்டு.ஜெயகாந்தனின் சிறுகதைகள் வெறும் கதைகளாக இல்லாமல், சமூகத்தின் ஆழமான பிரச்சினைகளையும், மனித மனதின் சிக்கல்களையும் ஆராய்ந்தன.
ஜெயகாந்தன் சிறுகதைகள்
த. ஜெயகாந்தன்
முன்னுரை
இந்தத் தொகுதியில் உள்ள இந்தக் கதைகள் 1956 முதல் 1972 வரை தமிழ் நாட்டின் பல்வேறு பத்திரிகைகளில் அவ்வப்போது நான் எழுதியவை. 50-60-களில், லட்சக் கணக்கில் வெளியாகும் வெகுஜனப் பத்திரிகைகளில் இலக்கியத் தரமான கதைகள் இல்லை என்கிற வசை என்னால் கழிந்தது. நல்ல கதைகளுக்காகத் தமிழ்ப் பத்திரிகை படிக்கலாம் என்ற நிலைஅக்காலத்தில் உருவாயிற்று. அதற்காக நியாயமான நன்றியை வாசகர்களும் பத்திரிகைக்காரர்களும் எனக்குப் பாராட்டினார்கள்
தமிழ்ச் சிறுகதை உலகில இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் உலகின் தரத்துக்கு உகந்த கதைகளை எழுதித் தமிழையும் தங்களையும் உயர்த்திக்கொண்ட ஒரு சில எழுத்தாளர்கள் உண்டு அவர்களில் நானும் ஒருவன். இந்த உண்மையை யார் சொன்ன போதிலும் அது வெறும் புகழ்ச்சி ஆகிவிடாது. இதை நானே சொல்வதனால் தற்புகழ்ச்சியாகிவிடக் கூடாது. இந்த முன்னுரையில் இதுபற்றிப் பிற மொழிக்காரர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு இதை ஒரு செய்தியாகவே நான் கூறுகிறேன்
தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் உலகில் வேறு யாருக்குமே இல்லாத சிறப்புக்கள் உண்டு அதே போல் வேறு யாருக்குமே இல்லாத சில அவலங்களும் உண்டு மனிதர்களையும் வாழ்வையும் நேசிப்பதே என் சித்தாந்தம் மனிதரையும் வாழ்வையும் சார்ந்திருப்பதே ஒரு மொழியின் முதற் சிறப்பு ஒரு மொழியிலே வெளிப்படுகின்ற எந்தப் படைப்பு அந்த மொழிக்கு மட்டுமே சொந்தமாக இருப்பது ஒரு சிறப்பு அல்ல மனிதரைப் பற்றிய மனிதனின் சிந்தனைகள் மொழி, தேசம் என்கிற எல்லைகளையெல்லாம் கடந்து உறவாடுதல் நாகரிக வளர்ச்சியாகும் இலக்கியம் நாகரிகத்தின் உரைகல். இந்தக் கதைகளுக்குக் கடுமையான விமர்சனங்களும் கட்டற்ற பாராட்டுதல்களும் அவை வெளிவந்த காலத்தில் நேர்ந்தன. எனது வளர்ச்சிக்கு ஏற்ப இந்த விமர்சன விவாதங்களில் நான் கலந்து பதில் அளித்ததும் உண்டு; கலந்து கொள்ளாமல் ஒதுங்கி மௌனம் சாதித்ததும் உண்டு ஆனால் காரியம் ஆற்றாமல் ஒருபோதும் நான் இருந்ததில்லை.
நான் பத்திரிகைகளின் மூலமே மக்களுக்கு அறிமுகம் ஆனவன். தமிழ் நாட்டின் நிலை அப்படித்தான். ஒரு ‘கதம்ப ரசனை ‘யை ‘இலக்கிய ரசனை ‘யாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது, இலக்கியம் படித்த யாரும் ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டிய விஷயம் அல்ல ஏனெனில் படைக்கிற ஒவ்வொருவனிடமும், ‘எதையாவது கதம்பமாகக் கட்டித் தாருங்கள்’ என்று அவர்கள் கேட்பதில்லை. அப்படி நினைத்துக்கொண்டு— அவர்களை வசீகரித்துவிட வேண்டும் என்ற நினைப்பில்— தான் அறிந்த ‘கவர்ச்சி வித்தை’ களையெல்லாம் காட்டி, அந்த முயற்சியின் இயல்பேயாகிற தாழ்ச்சியை அடைந்தவர்கள் அதற்காக மக்களின் ரசனையைப் பற்றிப் பிரலாபிப்பது இங்கு இலக்கிய விமர்சனம் ஆகிவிட்டது
எனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை நான் சிறப்பாகவும் பயன்படுத்திக்கொள்ள முயன்றிருக்கிறேன். எனது கதைகளை அதிகமாக வெளியிட்ட தமிழ்நாட்டுப் பத்திரிகைகளெல்லாம் ‘இலக்கிய உத்தாரணம் செய்கின்றனவா, இல்லையா?’ என்பது வேறு விஷயம். இவர்கள் இலக்கியம் வளர்த்தாக வேண்டும் என்று வாதிட எனக்கு அதிகாரம இல்லை. நான் அவர்களின் ஊழியனே, பங்குதாரனோ அல்ல. அவர்கள் பத்திரிகை வியாபாரம் செய்கிறார்கள் வர வர மிக மோசமான வியாபார உத்திகளை அவர்கள கையாள ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு சமூகப் பிரஜை என்ற முறையில் இது பற்றி எனக்குக் கண்டனமும் விமர்சனமும் கூட உண்டு சௌஜன்னியமான சந்தர்பபயங்களின் போது அந்தப் பத்திரிகைகளிலேயே இந்த எனது கருத்தை நான் தெரிவித்திருக்கிறேன்
ஒரு எழுத்தாளன் எனகிற முறையில் எனது உரிமைகளை முன்வைத்துப் போராட நான் வெட்கப்படுகிறேன் ஏனெனில் இந்த உலத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் எந்தவித உரிமையும் இல்லாமல். போராட்டங்களின் பெயரால ஏமாற்றப்படுவதை நான் அறிவேன் உரிமைகளும் வசதிகளும் எல்லா மனிதர்களுக்கும வந்த பிறகுதான் – இரண்டாம் பட்சமாகத்தான். இறுதியில் தான் அறிவு ஜீவிகளுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அப்படி அல்லாமல் கிடைக்கிற உரிமையும் வசதியும் உள்ளூர அவனது ஆத்மாவில் எந்தவித நிறைவையும் ஏற்படுத்த முடியாது; மாறாக அது அவனது உள்ளுணர்வில் குற்ற உணர்வையே விளைவிக்கும்.
“அக்கினிப் பிரவேசம்”—1966-ல் ஆனந்த விகடனில் எழுதப்பட்டது இந்தக் கதையின் ‘தீம்’ எல்வோரும் சொல்லுகிற மாதிரி அப்படி ஒன்றும் புரட்சிகரமானது அல்ல. ஆனால், ‘இப்படி ஒரு கதை புரட்சிகரமானது!’ என்று தோன்றுகிற அளவுக்கு மிக மேலோட்டமான ரசனை உடையவர்கள் மத்தியில் இது பெரும் சல சலப்பை ஏற்படுத்திற்று.
எனது கதையின் முடிவை மாற்றியும், அந்தக் கதாபாத்திரத்தைக் கொன்றும் அதே தலைப்பில் கதை எழுதித் தமிழ் நாட்டின் பெரும் பத்திரிகைகளில் அவற்றுக்கு ஊக்கம் தந்து, நடந்த அத்து மீறல்களையெல்லாம் மிகப் பொறுமையோடுநான் சகித்துக்கொண்டிருந்தேன் எழுதுகிற பணிக்குப் பொறுமை மிகமிக இன்றியமையாதது அதன் பிறகு அதன் முடிவை மாற்றி— நான் சொல்லவந்த கருத்தை மாற்றிக் கொள்ளாமல்—நான் ஒரு நாவலே எழுதுவதற்கு அந்த ‘அத்து மீறல்’களும் எனது “அக்கினிப் பிரவேச”மும் காரணமானதால் அவர்களுக்கும்கூட நான் நன்றி பாராட்டுகிறேன்
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி“ (1956) ஆரம்பகாலக் கதைகளில் ஒன்று. நான் சுதந்திரமாக எழுதுவதற்கு முதலில் ஒரு தளம் அமைத்துத் தந்த, மார்க்ஸிஸத்தில் நம்பிக்கையுடைய நண்பர்களின் இலக்கிய மேடைகளில் ஒன்றாக அக்காலத்தில் விளங்கிய ‘ஸரஸ்வதி பத்திரிகையில் அது வெளியயாயிற்று
“அந்தரங்கம புனிதமானது“ (1957, ஆனந்த விகடன்)
“இருளைத் தேடி“ (1961, ஆனந்த விகடன்) நான் பிராமணப் பெண்களை இழிவு படுத்துகிறேன் எனறு வதந்தி மாதிரியான ஒரு ‘விமர்சன’ த்திற்கு இலக்கான கதைகளில் இதுவும் ஒனறு
“குருபீடம்“ (1970, ஆனந்த விகடன் தீபாவளி மலர்).
“நான் இருக்கிறேன்“ (1962, ஆனந்தவிகடன்) எல்லாத் தரத்தினராலும் ஏகோபித்துப் பாராட்டப்பெற்ற எனது ஆரம்பகாலக் கதைகளில் ஒன்று
“சுய தரிசமை“ (1951, ஆனந்த விகடன்) எனது கதைகளை வாசிக்கிற வாசகர்கள் மத்தியில் என்னை ஒரு பிராமணனாக எண்ண வைத்த கதை இது பிராமணர்களின் மத்தியில் இருந்து இந்தக் கதைக்குத்தான் அதிக எதிர்ப்பு நேர்டும் என்று எதிர்பார்த்தேன் நல்ல வேளை ! அப்படி ஒன்றும் ஆகவில்லை தமிழ் நாட்டுப் பிராமணர்கள் மேல் எனக்கொரு புதிய நம்பிக்கை பிறந்தது.
“தவறுகள் குற்றங்களல்ல“ (1966,ஆனந்த விகடன்) “அக்ரஹாரத்துப் பூனை“ (1963, ஆனந்த விகடன் தீபாவளி மலர்)
“ஒரு பகல் நேரப் பாஞ்சர் வணடியிலே“ (1964, ஆனந்த விகடன்) ஒரு பெரிய நாவலுக்குப் போட்டிருந்த திட்டத்திலிருந்து உருவி எடுத்த ஒரு சிறு கதை இது. பின்னர் “பிரளயம்“ (1965, ஆனந்த விகடன்) என்ற தலைப்பில் சற்றுப் பெரியதான கதைக்கு
அடிப்படை ஆயிற்று இந்தக் கதை “பிரளயம்“— குறுநாவல் என்று சொல்லப்பட்டது.
“ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது” (1969, ஆனந்த விகடன்) எனக்குக் கவிதைகள் மாதிரியும், நாடகம் மாதிரியும், கட்டுரை மாதிரியும், சிறுகதை எழுத வேண்டுமென்ற ஆசை வருவது உண்டு —அதாவது அவற்றின் சாயல் அதிகம் சார்ந்தும், சிறுகதைத் தன்மை அதனால் கெடாமலும் நான் சில கதைகள் எழுதியிருப்பதைப் பின்னால் கண்டுபிடித்தேன். இந்தக் குறிப்பிட்ட கதை, என் மனசில் நடந்த ஓரங்க நாடகம் ஒன்றின் ரிப்போர்ட்.
“சிலுவை“ (1958)-கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியப் பத்திரிகையான ‘தாமரை’யில் வெளியாயிற்று.
“நான் என்ன செய்யட்டும், சொல்லுங்கோ…“ (1968 ஆனந்த விகடன்) தமிழகத்து மக்களின் சமூக வாழ்க்கையில் ஒரு கொள்ளை நோய் மாதிரிப் பரவி அவர்களைச் சூறையாடிய, அரசாங்கத்தின் சூதாட்டமான, லாட்டரிச் சீட்டு மோகத்தைப் பார்த்து ஏற்பட்ட அச்சத்தால் எழுந்த கற்பனை அது.
“புதுச் செருப்பு கடிக்கும்“ (1971, ஆனந்த விகடன்) “நிக்கி” (1969, கலைமகள் தீபாவளி மலர்) நான் வீட்டு மிருகங்களை வைத்துப் பல கதைகள் எழுதியிருக்கிறேன் எனக்கு மிருகங்களோடு உறவாடுதல் பிடிக்காது. ஆயினும் நான் எவ்வளவு ரகசியமாக அவற்றின் மீது அன்பு பாராட்டுகிறேன்; அவற்றை நான் எப்படி ரசிக்கிறேன் என்றெல்லாம் எனக்கே தெரியவைத்த கதை இது.
இந்தக் கதைகளின் இலக்கியத் தரம் குறித்துப் பேசுவது என் வேலை அல்ல. இந்தக் கதை ஒவ்வொன்றுக்கும் பின்னால் இதை எழுதியவனுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவின் கதை ஒன்று உண்டு. அது குறித்துப் பேசுவது இந்த முன்னுரையின் நோக்கம் அல்ல. இங்கே நான் தந்திருப்பது வெறும் விவரங்களே. தனிப்பட்ட எனது பெயரையும், பெருமை சிறுமைகளையுமல்லாமல் இந்தக் காலத்தில் வாழ்கிற இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த பொதுவான மனிதர்களின் சிறப்பான தன்மைகளைப் பிறமொழிகளிலும் போய் இவை பேசுமாயின் எனக்கு அதில் மகிழ்ச்சி உண்டு.
இவற்றை, நான் அறியாத மொழிகளில் அறிமுகப் படுத்துகிற மேலான பொறுப்பை ஏற்று, என்னையும் எனது மொழியையும் கௌரவப்படுத்துகிற நேஷனல் புக் ட்ரஸட், இந்தியா— ஸ்தாபனத்தாருக்கு நான் நிரந்தரமாய் உள்ளார்ந்த நன்றி பாராட்டுவேன்.
சென்னை-31. 12-7-73 |
த. ஜெயகாந்தன். |
அக்கினிப் பிரவேசம்
மத்தியானத்திலிருந்தே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது…
மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸீக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் – ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில் கொட்டும் மழையில் பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே கட்டிப் பிடித்து நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்கிறது.
நகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகமில்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், மேலாடை கொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத்தகங்களும் மழையில் நனைந்து விடாமல் உயர்த்தி முழங்காலுக்கிடையே செருகிய புடவைக் கொசுவங்களோடு அந்த மாணவிகள் வெகுநேரமாய்த் தத்தம் பஸ்களை எதிர்நோக்கி நின்றிருக்கின்றனர்.
—வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது.
“ஹேய்… பஸ் இஸ் கம்மிங்!” என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன.
வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த ‘டீஸல் அநாகரிகம்’ வந்து நிற்கிறது.
“பை… பை…”
“ஸீ யூ”
“சீரியோ!”
—கண்டக்டரின் விசில் சப்தம்.
அந்தக் கும்பலில் பாதியை எடுத்து விழுங்கிக் கொண்டு ஏப்பம் விடுவதுபோல் செருமி நகர்கிறது அந்த பஸ்.
பஸ் ஸ்டாண்டில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் மட்டுமே நின்றிருக்கின்றனர்.
மழைக் காலமாதலால் நேரத்தோடே பொழுது இருண்டு வருகிறது.
வீதியில் மழைக் கோட்டணிந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரன் குறுக்கே வந்து அலட்சியமாக நின்று விட்ட ஓர் அநாதை மாட்டுக்காகத் தொண்டை கம்மிப் போன மணியை முழக்கிக் கொண்டு வேகமாய் வந்தும் அது ஒதுங்காததால் – அங்கே பெண்கள் இருப்பதையும் லட்சியப் படுத்தாது அசிங்கமாகத் திட்டிக்கொண்டே செல்கிறான். அவன் வெகு தூரம் சென்ற பிறகு அவனது வசை மொழியை ரசித்த பெண்களின் கும்பல் அதை நினைத்து நினைத்துச் சிரித்து அடங்குகிறது.
அதன் பிறகு வெகு நேரம் வரை அந்தத் தெருவில் சுவாரசியம் ஏதுமில்லை. எரிச்சல் தரத்தக்க அமைதியில் மனம் சலித்துப் போன அவர்களின் கால்கள் ஈரத்தில் நின்று நின்று கடுக்க ஆரம்பித்து விட்டன.
பஸ்ஸைக் காணோம்!
அந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது; அது காளை மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று அதன் நெற்றியின் மீது விழுந்து தொங்குகிறது. மழை நீர் முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன் பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன் உடலில் ஏதேனும் ஒரு பகுதி – அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில் வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது.
எவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக் கொண்டிருப்பது; ஒரு பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லாவிதங்களிலும் விதி விலக்காய் நின்றிருந்த அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.
—வீதியின் மறு கோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது.
பஸ் வந்து நிற்பதற்காக இடம் தந்து ஒதுங்கி அந்த மாடு வீதியின் குறுக்காகச் சாவதானமாய் நடந்து மாணவிகள் நிற்கும் பிளாட்பாரத்தருகே நெருங்கித் தனக்கும் சிறுது இடம் கேட்பது போல் தயங்கி நிற்கிறது.
“ஹேய்… இட் இஸ் மை பஸ்!…” அந்தக் கூட்டத்திலேயே வயதில் மூத்தவளான ஒருத்தி சின்னக் குழந்தை மாதிரிக் குதிக்கிறாள்.
“பை… பை…”
“டாடா!”
கும்பலை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி. மற்றொருத்தி பெரியவள் – இன்றைய பெரும்பாலான சராசரி காலேஜ் ரகம். அவள் மட்டுமே குடை வைத்திருக்கிறாள். அவளது கருணையில் அந்தச் சிறுமி ஒதுங்கி நிற்கிறாள். சிறுமியைப் பார்த்தால் கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை. ஹைஸ்கூல் மாணவி போன்ற தோற்றம். அவளது தோற்றத்தில் இருந்தே அவள் வசதி படைத்த குடும்பப் பெண் அல்ல என்று சொல்லிவிட முடியும். ஒரு பச்சை நிறப் பாவாடை, கலர் மாட்சே இல்லாத… அவள் தாயாரின் புடவையில் கிழித்த – சாயம் போய் இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒருவகை சிவப்பு நிறத் தாவணி. கழுத்தில் நூலில் கோத்து ‘பிரஸ் பட்டன்’ வைத்துத் தைத்த ஒரு கருப்பு மணிமாலை; காதில் கிளாவர் வடிவத்தில் எண்ணெய் இறங்குவதற்காகவே கல் வைத்து இழைத்த – அதிலும் ஒரு கல்லைக் காணோம் – கம்மல்… ‘இந்த முகத்திற்கு நகைகளே வேண்டாம்’ என்பது போல் சுடர் விட்டுப் பிரகாசித்துப் புரண்டு புரண்டு மின்னுகின்ற கறை படியாத குழந்தைக் கண்கள்…
அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக, அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களூம் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக் கொண்டு, சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய் விடலாம் போலக் கூடத் தோன்றும்…
“பஸ் வரலியே; மணி என்ன?” என்று குடை பிடித்துக் கொண்டிருப்பவளை அண்ணாந்து பார்த்துக் கேட்கிறாள் சிறுமி.
“ஸிக்ஸ் ஆகப் போறதுடீ” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துச் சலிப்புடன் கூறிய பின், “அதோ ஒரு பஸ் வரது. அது என் பஸ்ஸாக இருந்தால் நான் போயிடுவேன்” என்று குடையை மடக்கிக் கொள்கிறாள் பெரியவள்.
“ஓ எஸ்! மழையும் நின்னுருக்கு. எனக்கும் பஸ் வந்துடும். அஞ்சே முக்காலுக்கு டெர்மினஸ்லேருந்து ஒரு பஸ் புறப்படும். வரது என் பஸ்ஸானா நானும் போயிடுவேன்” என்று ஒப்பந்தம் செய்து கொள்வது போல் அவள் பேசுகையில் குரலே ஓர் இனிமையாகவும், அந்த மொழியே ஒரு மழலையாகவும், அவளே ஒரு குழந்தையாகவும் பெரியவளுக்குத் தோன்ற சிறுமியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி…
“சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ” என்று தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்கிறாள்.
பஸ் வருகிறது… ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு பஸ்கள் வருகின்றன. முதலில் வந்த பஸ்ஸில் பெரியவள் ஏறிக் கொள்கிறாள்.
“பை… பை!”
“தாங்க் யூ! என் பஸ்ஸும் வந்துடுத்து” என்று கூவியவாறு பெரியவளை வழி அனுப்பிய சிறுமி, பின்னால் வந்த பஸ்ஸின் நம்பரைப் பார்த்து ஏமாற்றமடைகிறாள். அவள் முக மாற்றத்தைக் கண்டே இவள் நிற்பது இந்த பஸ்ஸீக்காக அல்ல என்று புரிந்து கொண்ட டிரைவர், பஸ் ஸ்டாண்டில் வேறு ஆட்களூம் இல்லாததால் பஸ்ஸை நிறுத்தாமலே ஓட்டிச் செல்லுகிறான்.
அந்தப் பெரிய சாலையின் ஆளரவமற்ற சூழ்நிலையில் அவள் மட்டும் தன்னந் தனியே நின்றிருக்கிறாள். அவளுக்குத் துணையாக அந்தக் கிழ மாடும் நிற்கிறது. தூரத்தில் – எதிரே காலேஜ் காம்பவுண்டுக்குள் எப்பொழுதேனும் யாரோ ஒருவர் நடமாடுவது தெரிகிறது. திடீரென ஒரு திரை விழுந்து கவிகிற மாதிரி இருள் வந்து படிகிறது. அதைத் தொடர்ந்து சீறி அடித்த ஒரு காற்றால் அந்தச் சாலையில் கவிந்திருந்த மரக் கிளைகளிலிருந்து படபடவென நீர்த் துளிகள் விழுகின்றன. அவள் மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறாள். சிறிதே நின்றிருந்த மழை திடீரெனக் கடுமையாகப் பொழிய ஆரம்பிக்கிறது. குறுக்கே உள்ள சாலையைக் கடந்து மீண்டும் கல்லூரிக்குள்ளேயே ஓடிவிட அவள் சாலையின் இரண்டு பக்கமும் பார்க்கும்போது, அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவது போல் சடக்கென நின்று, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.
அவள் அந்த அழகிய காரை, பின்னால் இருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட்வரை விழிகளை ஓட்டி ஓர் ஆச்சரியம் போலப் பார்க்கிறாள்.
அந்தக் காரை ஓட்டி வந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடது புறம் சரிந்து படுத்துப் பின் ஸீட்டின் கதவைத் திறக்கிறான்.
“ப்ளிஸ் கெட் இன்… ஐ கேன் டிராப் யூ அட் யுவர் பிளேஸ்” என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான்.
அவனது முகத்தைப் பார்த்த அவளூக்குக் காதோரமும் மூக்கு நுனியும் சிவந்து போகிறது; “நோ தாங்க்ஸ்! கொஞ்ச நேரம் கழிச்சு… மழை விட்டதும் பஸ்ஸிலேயே போயிடுவேன்…”
“ஓ! இட் இஸ் ஆல் ரைட்… கெட் இன்” என்று அவன் அவசரப் படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை…
அவள் ஒரு முறை தன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். மழைக்குப் புகலிடமாய் இருந்த அந்த மரத்தை ஒட்டிய வளைவை இப்போது அந்தக் கிழ மாடு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
அவளுக்கு முன்னே அந்தக் காரின் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. தனக்காகத் திறக்கப்பட்டிருக்கும் அந்தக் கதவின் வழியே மழை நீர் உள்ளே சாரலாய் வீசுவதைப் பார்த்து அவள் அந்தக் கதவை மூடும்போது, அவள் கையின் மீது அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுந்துகையில், அவள் பதறிப் போய்க் கையை எடுத்துக் கொள்கிறாள். அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள். அவன் தான் என்னமாய் அழகொழுகச் சிரிக்கிறான்.
இப்போது அவனும் காரிலிருந்து வௌியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே…
“ம்… கெட் இன்.”
இப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே…
அவள் உள்ளே ஏறியதும் அவன் கை அவளைச் சிறைப்பிடித்ததே போன்ற எக்களிப்பில் கதவை அடித்துச் சாத்துகிறது. அலையில் மிதப்பது போல் சாலையில் வழுக்கிக் கொண்டு அந்தக் கார் விரைகிறது.
அவளது விழிகள் காருக்குள் அலைகின்றன. காரின் உள்ளே கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அந்த வௌிறிய நீல நிறச் சூழல் கனவு மாதிரி மயக்குகிறது. இத்தனை நேரமாய் மழையின் குளிரில் நின்றிருந்த உடம்புக்கு, காருக்குள் நிலவிய வெப்பம் இதமாக இருக்கிறது. இந்தக் கார் தரையில் ஓடுகிற மாதிரியே தெரியவில்லை. பூமிக்கு ஓர் அடி உயரத்தில் நீந்துவது போல் இருக்கிறது.
‘ஸீட்டெல்லாம் எவ்வளவு அகலமா இருக்கு! தாராளமா ஒருத்தர் படுத்துக்கலாம்’ என்ற நினைப்பு வந்ததும் தான் ஒரு மூலையில் மார்போடு தழுவிய புத்தகக் கட்டுடன் ஒடுங்கி உட்கார்ந்திருப்பது அவளூக்கு ரொம்ப அநாகரிகமாகத் தோன்றுகிறது. புத்தக அடுக்கையும் அந்தச் சிறிய டிபன் பாக்சையும் ஸீட்டிலேயே ஒரு பக்கம் வைத்த பின்னர் நன்றாகவே நகர்ந்து கம்பீரமாக உட்கார்ந்து கொள்கிறாள்.
“இந்தக் காரே ஒரு வீடு மாதிரி இருக்கு. இப்படி ஒரு கார் இருந்தா வீடே வேண்டாம். இவனுக்கும் – ஐயையோ – இவருக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா?… காரே இப்படி இருந்தா இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும்! பெரிசா இருக்கும்! அரண்மனை மாதிரி இருக்கும்… அங்கே யாரெல்லாமோ இருப்பா. இவர் யாருன்னே எனக்குத் தெரியாதே?… ஹை, இது என்ன நடுவிலே?… ரெண்டு ஸீட்டுக்கும் மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே! இதுமேலே புஸ்தகத்தை வச்சுண்டு படிக்கலாம். எழுதலாம் – இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுண்டு ‘ஜம்’னு படுத்துக்கலாம். இந்தச் சின்னவிளக்கு எவ்வளவு அழகா இருக்கு, தாமரை மொட்டு மாதிரி இருக்கு. ம்ஹீம். அல்லி மொட்டு மாதிரி! இதை எரிய விட்டுப் பார்க்கலாமா? சீ! இவர் கோபித்துக் கொண்டார்னா!”
– “அதுக்குக் கீழே இருக்கு பாரு ஸ்விட்ச்” அவன் காரை ஓட்டியவாறே முன்புறமிருந்த சிறிய கண்ணாடியில் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு கூறுகிறான்.
அவள் அந்த ஸ்விட்சைப் போட்டு அந்த விளக்கு எரிகிற அழகை ரசித்துப் பார்க்கிறாள். பின்னர் ‘பவரை வேஸ்ட் பண்ணப்படாது’ என்ற சிக்கன உணர்வோடு விளக்கை நிறுத்துகிறாள்.
பிறகு தன்னையே ஒரு முறை பார்த்துத் தலையிலிருந்து விழுகின்ற நீரை இரண்டு கைகளினாலும் வழித்து விட்டுக் கொள்கிறாள்.
‘ஹம்! இன்னிக்கின்னு போய் இந்த தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுண்டு வந்திருக்கேனே’ என்று மனத்திற்குள் சலித்துக் கொண்டே, தாவணியின் தலைப்பைப் பிழிந்து கொண்டிருக்கையில் – அவன் இடது கையால் ஸ்டியரிங்கிற்குப் பக்கத்தில் இருந்த பெட்டி போன்ற அறையின் கதவைத் திறந்து— ‘டப்’ என்ற சப்தத்தில் அவள் தலை நிமிர்ந்து பார்க்கிறாள் – ‘அட! கதவைத் திறந்த உடனே உள்ளே இருந்து ஒரு சிவப்பு பல்ப் எரியறதே’- ஒரு சிறிய டர்க்கி டவலை எடுத்துப் பின்னால் அவளிடம் நீட்டுகிறான்.
“தாங்ஸ்” – அந்த டவலை வாங்கித் தலையையும் முழங்கையையும் துடைத்துக் கொண்டு முகத்தைத் துடைக்கையில் – ‘அப்பா, என்ன வாசனை!’ – சுகமாக முகத்தை அதில் அழுந்தப் புதைத்துக் கொள்கிறாள்.
ஒரு திருப்பத்தில் அந்தக் கார் வளைந்து திரும்புகையில் அவள், ஒரு பக்கம் ‘அம்மா என்று கூவிச் சரிய ஸீட்டின் மீதிருந்த புத்தகங்களூம் மற்றொரு பக்கம் சரிந்து, அந்த வட்ட வடிவமான சின்னஞ்சிறு எவர்சில்வர் டிபன் பாக்ஸீம் ஒரு பக்கம் உருளுகிறது.
“ஸாரி” என்று சிரித்தவாறே அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தபின் காரை மெதுவாக ஓட்டுகிறான் அவன். தான் பயந்துபோய் அலறியதற்காக வெட்கத்துடன் சிரித்தவாறே இறைந்து கிடக்கும் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு எழுந்து அமர்கிறாள் அவள்.
ஜன்னல் கண்ணாடியினூடே வௌியே பார்க்கையில் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. கண்ணாடியின் மீது புகை படர்ந்ததுபோல் படிந்திருந்த நீர்த் திவலையை அவள் தனது தாவணியின் தலைப்பால் துடைத்துவிட்டு வௌியே பார்க்கிறாள்.
தெருவெங்கும் விளக்குகள் எரிகின்றன. பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட கடைகளின் நிழல்கள் தெருவிலுள்ள மழை நீரில் பிரதிபலித்துக் கண்களைப் பறிக்கின்றன. பூலோகத்துக்குக் கீழே இன்னொரு உலகம் இருக்கிறதாமே, அது மாதிரி தெரிகிறது…!
“இதென்ன – கார் இந்தத் தெருவில் போகிறது?”
“ஓ! எங்க வீடு அங்கே இருக்கு” என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன.
“இருக்கட்டுமே, யார் இல்லேன்னா” என்று அவனும் முனகிக்கொண்டே அவளைப் பார்த்துச் சிரிக்கிறான்.
“என்னடி இது வம்பாப் போச்சு” என்று அவள் தன் கைகளைப் பிசைந்து கொண்ட போதிலும், அவன் தன்னைப் பார்க்கும்போது அவனது திருப்திக்காகப் புன்னகை பூக்கிறாள்.
கார் போய்க்கொண்டே இருக்கிறது.
நகரத்தின் ஜன நடமாட்டம் மிகுந்த பிரதான பஜாரைக் கடந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைந்த அகலமான சாலைகளைத் தாண்டி, அழகிய பூங்காக்களும் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோடில் கார் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த மழையில் இப்படி ஒரு காரில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியினால் அதில் ஒரு குதூகலம் இருந்த போதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒரு வகை பீதி உணர்ச்சி அவளது அடி வயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்து கொண்டிருக்கிறது.
சின்னக் குழந்தை மாதிரி அடிக்கடி வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனை நச்சரிக்கவும் பயமாயிருக்கிறது.
தன்னை அந்த பஸ் ஸ்டாண்டில் தனிமையில் விட்டுவிட்டுப் போனாளே, அவளைப் பற்றிய நினைவும், அவள் தன் கன்னத்தைக் கிள்ளியவாறு சொல்லிவிட்டுப் போனாளே அந்த வார்த்தைகளூம் இப்போது அவள் நினைவுக்கு வருகின்றன: “சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ.”
‘நான் இப்ப அசடாயிட்டேனா? இப்படி முன்பின் தெரியாத ஒருத்தரோட கார்லே ஏறிண்டு தனியாகப் போறது தப்பில்லையோ?… இவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரித் தெரியலியே? என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது – இப்ப என்ன பண்றது? எனக்கு அழுகை வரதே. சீ! அழக் கூடாது… அழுதா இவர் கோபித்துக் கொண்டு ‘அசடே! இங்கேயே கிட’ன்னு இறக்கி விட்டுட்டுப் போயிட்டா? எப்படி வீட்டுக்குப் போறது? எனக்கு வழியே தெரியாதே… நாளைக்கு ஜீவாலஜி ரெக்கார்ட் வேற ஸப்மிட் பண்ணணுமே! வேலை நிறைய இருக்கு.’
அவளது பார்வை எதிர்ப்புறக் கண்ணாடியின் மீது கிடந்து அவளைப்போல் தத்தளித்துக் கொண்டிருக்கும் ‘வைய்ப்பரை’யே வெறித்துக் கொண்டிருக்கிறது. கடைசியில் தைரியமாக அவளை அறியாமலேயே அந்த வார்த்தைகளை அவள் கேட்டு விடுகிறாள்.
“இப்ப நாம எங்கே போறோம்” – அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான்.
“எங்கேயுமில்லை; சும்மா ஒரு டிரைவ்…”
“நேரம் ஆயிடுத்தே – வீட்டிலே அம்மா தேடுவா…”
“ஓ எஸ் திரும்பிடலாம்”
—- கார் திரும்புகிறது. டிரங்க் ரோடை விட்டு விலகிப் பாலைவனம் போன்ற ஒரு திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகு தூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைத்திருக்கின்றன. அந்த அத்துவானக் காட்டில், தவளைகளின் கூக்குரல் பேரோலமாகக் கேட்கிறது. மழையும் காற்றும் முன்னைவிட மூர்க்கமாய்ச் சீறி விளையாடுகின்றன.
காருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை.
திடீரென்று கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: “ஏன் கார் நின்னுடுத்து? பிரேக் டௌனா?”
அவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடிஇடிப்பது போல் சிரிக்கிறான். அவள் முகத்தைப் பார்ப்பதற்காகக் காரினுள் இருந்த ரேடியோவின் பொத்தானை அமுக்குகிறான். ரேடியோவில் இருந்து முதலில் லேசான வௌிச்சமும் அதைத் தொடர்ந்து இசையும் பிறக்கிறது.
அந்த மங்கிய வௌிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பது போல் எதற்கோ கெஞ்சுகிறான்.
அப்போது ரேடியோவிலிருந்து ஒரு ‘ட்ரம்ப்பட்’டின் எக்காள ஒலி நீண்டு விம்மி விம்மி வெறி மிகுந்து எழுந்து முழங்குகிறது. அதைத் தொடர்ந்து படபடவென்று நாடி துடிப்பதுபோல் அமுத்தலாக நடுங்கி அதிர்கின்ற காங்கோ ‘ட்ரம்’களின் தாளம்… அவன் விரல்களால் சொடுக்குப் போட்டு அந்த இசையின் கதிக்கேற்பக் கழுத்தை வெட்டி இழுத்து ரசித்தவாறே அவள் பக்கம் திரும்பி ‘உனக்குப் பிடிக்கிறதா’ என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவள் இதழ்கள் பிரியாத புன்னகையால் ‘ஆம்’ என்று சொல்லித் தலை அசைக்கிறாள்.
ரேடியோவுக்கு அருகே இருந்த பெட்டியைத் திறந்து இரண்டு ‘காட்பரீஸ்’ சாக்லெட்டுகளை எடுத்து ஒன்றை அவளிடம் தருகிறான் அவன். பின்னர் அந்த சாக்லெட்டின் மேல் சுற்றிய காகிதத்தை முழுக்கவும் பிரிக்காமல் ஓர் ஓரமாய்த் திறந்து ஒவ்வொரு துண்டாகக் கடித்து மென்றவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஒரு கையால் கார் ஸீட்டின் பின்புறம் ரேடியோவிலிருந்து ஒலிக்கும் இசைக்கெற்பத் தாளமிட்டுக் கொண்டு ஹாய்யாக உட்கார்ந்திருக்கும் அவனை, அவள் தீர்க்கமாக அளப்பது மாதிரிப் பார்க்கிறாள்.
அவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, ‘ஒட்டு உசரமாய்’. அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே ஒரு பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளியுமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத் தரித்த கிராப்புச் சிகையும் காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும் கூட அந்த மங்கிய வௌிச்சத்தில் மினுமினுக்கின்றன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அந்த ஒளி வீசும் முகத்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ! அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது! அவன் உட்கார்ந்திருக்கும் ஸீட்டின் மேல் நீண்டு கிடக்கும் அவனது இடது கரத்தில் கனத்த தங்கச் சங்கிலியில் பிணிக்கப்பட்ட கடிகாரத்தில் ஏழு மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவனது புறங்கையில் மொசு மொசுவென்று அடர்ந்திருக்கும் இள மயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது.
“ஐயையோ! மணி ஏழாயிடுத்தே!” சாக்லெட்டைத் தின்றவாறு அமைதியாய் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள், திடீரென்று வாய்விட்டுக் கூவிய குரலைக் கேட்டு அவனும் ஒரு முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான்.
காரின் முன்புறக் கதவை அவன் லேசாகத் திறந்து பார்க்கும்போது தான், மழையின் ஓலம் பேரோசையாகக் கேட்கிறது. அவன் ஒரு நொடியில் கதவைத் திறந்து கீழே இறங்கி விட்டான்.
“எங்கே?” என்று அவள் அவனிடம் பதற்றத்தோடு கேட்டது கதவை மூடிய பிறகே வௌியே நின்றிருக்கும் அவனது செவிகளில் அமுங்கி ஒலிக்கிறது. “எங்கே போறீங்க?”
“எங்கேயும் போகலே… இங்கேதான் வரேன்” என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பலாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான்.
அவள் அருகே அமர்ந்து, ஸீட்டின் மீது கிடந்த – சற்று முன் ஈரத்தைத் துடைத்துக் கொள்வதற்காக அவளுக்கு அவன் தந்த டவலை எடுத்து முகத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டபின், கையிலிருந்த சாக்லெட் காகிதத்தைக் கசக்கி எறிகிறான். அவள் இன்னும் இந்த சாக்லெட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்கிறான். அதனுள் அடுக்காக இருக்கும் மிட்டாய் போன்ற ஒன்றை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு அவளிடம் ஒன்றைத் தருகிறான்.
“என்ன அது?”
“சூயிங்கம்.”
“ஐயே, எனக்கு வேண்டாம்!”
“ட்ரை… யூ வில் லைக் இட்.”
அவள் கையிலிருந்த சாக்லெட்டை அவசர அவசரமாகத் தின்றுவிட்டு அவன் தருவதை மறுக்க மனமின்றி வாங்கக் கை நீட்டுகிறாள்.
“நோ!” – அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின்மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான்.
அவளூக்குத் தலை பற்றி எரிவதுபோல் உடம்பெல்லாம் சுகமான ஒரு வெப்பம் காந்துகிறது. சற்றே பின்னால் விலகி, அவன் கையிலிருந்ததைத் தன் கையிலேயே வாங்கிக் கொள்கிறான்: “தாங்க் யூ!”
அவனது இரண்டு விழிகளும் அவளது விழிகளில் செருகி இருக்கின்றன. அவனது கண்களை ஏறிட்டுப் பார்க்க இயலாத கூச்சத்தால் அவளது பலஹீனமான பார்வை அடிக்கடி தாழ்ந்து தாழ்ந்து தவிக்கிறது. அவளது கவிழ்ந்த பார்வையில் அவனது முழந்தாள் இரண்டும் அந்த ஸீட்டில் மெள்ள மெள்ள நகர்ந்து தன்னை நெருங்கி வருவது தெரிகிறது.
அவள் கண்ணாடி வழியே பார்க்கிறாள். வௌியே மழையும் காற்றும் அந்த இருளில் மூர்க்கமாய்ச் சீறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவள் அந்தக் கதவோடு ஒண்டி உட்கார்ந்து கொள்கிறாள். அவனும் மார்பின் மீது கைகளைக் கட்டியவாறு மிகவும் கௌரவமாய் விலகி அமர்ந்து, அவள் உள்ளத்தைத் துருவி அறியும் ஆர்வத்தோடு அவளைப் பயில்கிறான்.
“டூ யூ லைக் திஸ் கார்?” “- இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்த்ரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வௌிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: “ஓ! இட் இஸ் நைஸ்.”
அவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: “உனக்குத் தெரியுமா? இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு – டூ யூ நோ தட்?” என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய் மறந்து போகிறாள்.
“ரியலி…?”
“ரியலி!”
அவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது. அவனது ரகசியக் குரல் அவளது இருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது. “டூ யூ லைக் மீ?” ‘என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?’
“ம்” விலக இடமில்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான்.
வௌியே மழை பெய்து கொண்டிருக்கிறது. ரேடியோவிலிருந்து அந்த ‘ட்ரம்ப்பட்’டின் இசை புதிய புதிய லயவிந்நியாசங்களைப் பொழிந்து கொண்டிருக்கிறது.
“ரொம்ப நல்லா இருக்கு இல்லே?” – இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.
“நல்லா இருக்கு… ஆனா பயம்மா இருக்கே…”
“பயமா? எதுக்கு… எதுக்குப் பயப்படணும்?” அவளைத் தேற்றுகின்ற தோரணையில் தோளைப் பற்றி அவன் குலுக்கியபோது, தன் உடம்பில் இருந்து நயமிக்க பெண்மையே அந்தக் குலுக்கலில் உதிர்ந்தது போன்று அவள் நிலை குலைந்து போகிறாள்: “எனக்குப் பயம்மா இருக்கு; எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு…”
“எதுக்கு இந்த ஸர்டிபிகேட் எல்லாம்?” என்று தன்னுள் முனகியவாறே இந்த முறை பின்வாங்கப் போவதில்லை என்ற தீர்மானத்தோடு மீண்டும் அவளை அவன் நெருங்கி வருகிறான்.
“மே ஐ கிஸ் யூ?”
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்துத் தேகம் பதறுகிறது.
திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டதைப் போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, “ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி…
அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப் போகிறது. அவனைப் பழி தீர்ப்பதுபோல் இப்போது அவளது கரங்கள் இவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன…
வௌியே…
வானம் கிழிந்து அறுபட்டது! மின்னல்கள் சிதறித் தெறித்தன! இடியோசை முழங்கி வெடித்தது!
ஆ! அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும்.
“நான் வீட்டுக்குப் போகணும், ஐயோ! எங்க அம்மா தேடுவா…”
காரின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டிலிருந்து அவன் இறங்குகிறான். அந்த மைதானத்தில் குழம்பி இருந்த சேற்றில் அவனது ஷீஸ் அணிந்த பாதம் புதைகிறது. அவன் காலை உயர்த்தியபோது ‘சளக்’ என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன.
உடலிலோ மனத்திலோ உறுத்துகின்ற வேதனையால் தன்னை மீறிப் பொங்கிப் பொங்கி பிரவகிக்கும் கண்ணீரை அடக்க முடியாமல் அவனறியாதவாறு அவள் மௌனமாக அழுது கொண்டிருக்கிறாள்.
முன்புறக் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்த அவன் சேறு படிந்த காலணியைக் கழற்றி எறிகிறான். ரேடியோவுக்கருகில் உள்ள அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, மூசு மூசென்று புகை விட்டவாறு ‘சூயிங்கம்’மை மென்று கொண்டிருக்கிறான்.
இந்த விநாடியே தான் வீட்டில் இருக்க வேண்டும் போலவும், அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு ‘ஹோ’ வென்று கதறி அழுது இந்தக் கொடுமைக்கு ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டும் போலவும் அவள் உள்ளே ஓர் அவசரம் மிகுந்து நெஞ்சும் நினைவும் உடலும் உணர்ச்சியும் நடுநடுங்குகின்றன.
அவனோ சாவதானமாக சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அதைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. அந்தக் காருக்குள்ளே இருப்பது ஏதோ பாறைகளூக்கு இடையேயுள்ள ஒரு குகையில் அகப்பட்டது போல் ஒரு சமயம் பயமாகவும் மறு சமயம் அருவருப்பாகவும் – அந்த சிகரெட்டின் நெடி வேறு வயிற்றைக் குமட்ட – அந்த மைதானத்தில் உள்ள சேறு முழுவதும் அவள் மீது வாரிச் சொரியப்பட்டது போல் அவள் உடலெல்லாம் பிசுபிசுக்கிறதே…
நரி ஊளைமாதிரி ரேடியோவிலிருந்து அந்த ‘ட்ரம்ப்பட்’டின் ஓசை உடலையே இரு கூறாகப் பிளப்பது போல் வெறியேறிப் பிளிறுகிறதே…
அவள் தன்னை மீறிய ஓர் ஆத்திரத்தில் கிறீச்சிட்டு அழுகைக் குரலில் அலறுகிறாள். “என்னை வீட்டிலே கொண்டுபோய் விடப்போறீங்களா, இல்லையா?”
அவனது கை “டப்” என்று ரேடியோவை நிறுத்துகிறது.
“டோண்ட் ஷவ்ட் லைக் தட்!” அவன் எரிச்சல் மிகுந்த குரலில் அவளை எச்சரிக்கிறான். “கத்தாதே!”
அவனை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிப் பரிதாபமாக அழுதவாறு அவள் கெஞ்சுகிறாள். “எங்க அம்மா தேடுவா; என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுட்டா உங்களூக்குக் கோடிப் புண்ணியம்” என்று வௌியே கூறினாலும் மனதிற்குள் “என் புத்தியைச் செருப்பால் அடிக்கணும். நான் இப்படி வந்திருக்கவே கூடாது. ஐயோ! என்னென்னவோ ஆயிடுத்தே” என்ற புலம்பலும் எங்காவது தலையை மோதி உடைத்துக் கொண்டால் தேவலை என்ற ஆத்திரமும் மூண்டு தகிக்கப் பற்களை நறநறவென்று கடிக்கிறாள். அந்த விநாடியில் அவள் தோற்றத்தைக் கண்டு அவன் நடுங்குகிறான்.
“ப்ளீஸ்… டோண்ட் க்ரியேட் ஸீன்ஸ்” என்று அவளைக் கெஞ்சி வேண்டிக் கொண்டு, சலிப்போடு காரைத் திருப்புகிறான்…
அந்த இருண்ட சாலையில் கண்களைக் கூசவைக்கும் ஓளியை வாரி இறைத்தவாறு உறுமி விரைந்து கொண்டிருக்கிறது கார்.
“சீ! என்ன கஷ்டம் இது! பிடிக்கலேன்னா அப்பவே சொல்லி இருக்கலாமே. ஒரு அருமையான சாயங்காலப் பொழுது பாழாகி விட்டது. பாவம்! இதெல்லாம் காலேஜீலே படிச்சு என்ன பண்ணப் போறதோ? இன்னும் கூட அழறாளே!” அவன் அவள் பக்கம் திரும்பி அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான். “ஐ ஆம் ஸாரி… உனது உணர்ச்சிகளை நான் புண்படுத்தி இருந்தால், தயவுசெய்து மன்னித்துக் கொள்.”
…அவளை அவளது இடத்தில் இறக்கி விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியையே மறந்து நிம்மதி காண வேண்டும் என்கிற அவசரத்தில் அவன் காரை அதிவேகமாக ஓட்டுகிறான்.
இன்னும் மழை பெய்துகொண்டு இருக்கிறது.
சந்தடியே இல்லாத ட்ரங்க் ரோட்டைக் கடந்து, அழகிய பங்களாக்களூம் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் மிகுந்த அந்தப் பிரதான பஜாரில் போய்க்கொண்டிருந்த கார் ஒரு குறுக்குத் தெருவில் திரும்பி அவளது வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
‘இங்கே நிறுத்துங்கள். நான் இறங்கிக் கொள்ளுகிறேன்’ என்று அவளாகச் சொல்லுவாள் என்று அவளது தெரு நெருங்க நெருங்க அவன் யோசித்துக் காரை மெதுவாக ஓட்டுகிறான். அவள் அந்த அளவுக்குக்கூட விவரம் தெரியாத பேதை என்பதைப் புரிந்துகொண்டு அவனே ஓரிடத்தில் காரை நிறுத்திக் கூறுகிறான். “வீடு வரைக்கும் கொண்டு வந்து நான் விடக்கூடாது. அதனாலே நீ இங்கேயே இறங்கிப் போயிடு… ம்” அவளைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயும் வருத்தமாயும் இருக்கிறது. ஏதோ குற்ற உணர்வில், அல்லது கடன் பட்டுவிட்டது போன்ற நெஞ்சின் உறுத்தலில் அவனது கண்கள் கலங்கி விவஸ்தையற்ற கண்ணீர் பளபளக்கிறது. அவனே இறங்கி வந்து ஒரு பணியாள் மாதிரி அவளுக்காகக் காரின் கதவைத் திறந்து கொண்டு மழைத் தூறலில் நின்று கொண்டிருக்கிறான். உணர்ச்சிகள் மரத்துப்போன நிலையில் அவள் தனது புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு கீழே விழுந்திருந்த அந்தச் சிறிய வட்ட வடிவமான எவர்சில்வர் டிபன் பாக்ஸைத் தேடி எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கி அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறாள்.
அந்தச் சிறிய தெருவில், மழை இரவானதால் ஜன நடமாட்டமே அற்றிருக்கிறது. தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்கின் மங்கிய வௌிச்சத்தில் தன் அருகே குள்ளமாய்க் குழந்தை மாதிரி நின்றிருக்கும் அவளைப் பார்க்கும்போது அவன் தன்னுள்ளே தன்னையே நொந்து கொள்கிறான். தனக்கிருக்கும் அளவிறந்த சுதந்திரமே தன்னை எவ்வளவு கேவலமான அடிமையாக்கி இருக்கிறது என்பதை அவன் எண்ணிப் பார்க்கிறான்.
“ஆம். அடிமை! – உணர்ச்சிகளின் அடிமை!” என்று அவன் உள்ளம் உணருகிறது. அவன் அவளிடம் ரகஸியம் போல் கூறுகிறான்: “ஐ ஆம் ஸாரி!”
அவள் அவனை முகம் நிமிர்த்திப் பார்க்கிறாள்… ஓ! அந்தப் பார்வை!
அவளிடம் என்னவோ கேட்க அவன் உதடுகள் துடிக்கின்றன. “என்ன…” என்ற ஒரே வார்த்தையோடு அவனது குரல் கம்மி அடைத்துப் போகிறது.
“ஒண்ணுமில்லே” என்று கூறி அவள் நகர்கிறாள்.
அவளுக்கு முன்னால் அந்தக் கார் விரைந்து செல்கையில் காரின் பின்னால் உள்ள அந்தச் சிவப்பு வௌிச்சம் ஓடி ஓடி இருளில் கலந்து மறைகிறது.
கூடத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கு அணைந்து போயிருந்தது. சமையலறையில் கை வேலையாக இருந்த அம்மா, கூடம் இருண்டு கிடப்பதைப் பார்த்து அணைந்த விளக்கை எடுத்துக்கொண்டு போய் ஏற்றிக் கொண்டு வந்து மாட்டியபோது, கூடத்துக் கடிகாரத்தில் மணி ஏழரை ஆகிவிட்டதைக் கண்டு திடீரென்று மனசில் என்னவோ பதைக்கத் திரும்பிப் பார்த்தபோது, அவள் படியேறிக் கொண்டிருந்தாள்.
மழையில் நனைந்து தலை ஒரு கோலம் துணி ஒரு கோலமாய் வருகின்ற மகளைப் பார்த்ததுமே வயிற்றில் என்னமோ செய்தது அவளுக்கு: “என்னடி இது, அலங்கோலம்?”
அவள் ஒரு சிலை அசைவது மாதிரிக் கூடத்துக்கு வந்தாள்; அரிக்கேன் விளக்கு வௌிச்சத்தில் ஒரு சிலை மாதிரியே அசைவற்று நின்றாள். “அம்மா!” என்று குமுறி வந்த அழுகையைத் தாயின் தோள்மீது வாய் புதைத்து அடைத்துக் கொண்டு அவளை இறுகத் தழுவியவாறே குலுங்கிக் குலுங்கி அழுதாள்!
அம்மாவின் மனசுக்குள், ஏதோ விபரீதம் நடந்து விட்டது புரிவது போலவும் புரியாமலும் கிடந்து நெருடிற்று.
“என்னடி, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரம்? அழாமல் சொல்லு” தன்மீது விழுந்து தழுவிக்கொண்டு புழுமாதிரித் துடிக்கும் மகளின் வேதனைக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அது வேதனை என்ற அளவில் உணர்ந்து, அந்த வேதனைக்குத் தானும் ஆட்பட்டு மனம் கலங்கி அழுது முந்தானையோடு கண்களைத் துடைத்தவாறு மகளின் முதுகில் ஆதரவோடு தட்டிக் கொடுத்தாள்: “ஏன்டி, ஏன் இப்படி அழறே? சொல்லு”
தாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் தோளில் முகம் புதைத்தவாறு அவள் காதில் மட்டும் விழுகிற மாதிரி சொன்னாள். அழுகை அடங்கி மெதுவாக ஒலித்த குரலில் அவள் சொல்ல ஆரம்பித்த உடனேயே தன்மீது ஒட்டிக் கிடந்த அவளைப் பிரித்து நிறுத்தி, விலகி நின்று சபிக்கப்பட்ட ஒரு நீசப் பெண்ணைப் பார்ப்பதுபோல் அருவருத்து நின்றாள் அம்மா.
அந்தப் பேதைப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். “மழை கொட்டுக் கொட்டுனு கொட்டித்து! பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன் – அப்புறம் எங்கேயோ காடுமாதிரி ஒரு இடம்… மனுஷாளே இல்லை… ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா எனக்கோ வழியும் தெரியாது… நான் என்ன பண்ணுவேன்? அப்புறம் வந்து வந்து… ஐயோ! அம்மா… அவன் என்னெ…”
— அவள் சொல்லி முடிப்பதற்குள் பார்வையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த அறை அவளது காதிலோ, நெற்றிப் பொருத்திலோ எங்கேயோ வசமாய் விழுந்தது. கூடத்து மூலையில் அவள் சுருண்டு விழ, கையில் இருந்த புத்தகங்கள் நாற்புறமும் சிதறி டிபன் பாக்ஸ் கீழே விழுந்து கணகணத்து உருண்டது.
“அடிப்பாவி! என் தலையிலே நெருப்பைக் கொட்டிட்டாயே…” என்று அலறத் திறந்த வாய், திறந்த நிலையில் அடைபட்டது.
அது நான்கு குடித்தனங்கள் உள்ள வீடு. சத்தம் கேட்டுப் பின் கட்டிலிருந்து சிலர் அங்கே ஓடி வந்தார்கள்.
“என்னடி, என்ன விஷயம்?” என்று ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு சுவாரசியமாய் விசாரித்த வண்ணம் கூடத்துக்கே வந்து விட்டாள் பின் கட்டு மாமி.
“ஒண்ணுமில்லை, இந்தக் கொட்டற மழையிலே அப்படி என்ன குடி முழுகிப் போச்சு? தெப்பமா நனைஞ்சுண்டு வந்திருக்காள். காசைப் பணத்தைக் கொட்டிப் படிக்க வெச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது? நல்ல வேளை, அவ அண்ணா இல்லே; இருந்தால் இந்நேரம் தோலை உரிச்சிரிருப்பான்” என்று பொய்யாக அங்கலாய்த்துக் கொண்டாள் அம்மா.
“சரி சரி, விடு. இதுக்குப் போய் குழந்தையே அடிப்பாளோ?” பின் கட்டு அம்மாளுக்கு விஷயம் அவ்வளவு சுரத்தாக இல்லை. போய்விட்டாள்.
வாசற் கதவையும் கூடத்து ஜன்னல்களையும் இழுத்து மூடினாள் அம்மா. ஓர் அறையில் பூனைக் குட்டி மாதிரிச் சுருண்டு விழுந்து – அந்த அடிக்காகக் கொஞ்சம் கூட வேதனைப் படாமல் இன்னும் பலமாகத் தன்னை அடிக்க மாட்டாளா, உயிர் போகும் வரை தன்னை மிதித்துத் துவைக்க மாட்டாளா என்று எதிர்பார்த்து அசைவற்றுக் கிடந்த மகளை எரிப்பது போல் வெறித்து விழித்தாள் அம்மா…
‘இவளை என்ன செய்யலாம்?… ஒரு கௌரவமான குடும்பத்தையே கறைப்படுத்திட்டாளே?… தெய்வமே! நான் என்ன செய்வேன்?’ என்று திரும்பிப் பார்த்தாள்.
அம்மாவின் பின்னே சமையலறையிலே அடுப்பின் வாய்க்குள்ளே தீச்சுவாலைகள் சுழன்றெரியக் கங்குகள் கனன்று கொண்டிருந்தன…
‘அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன’ என்று தோன்றிற்று.
—அவள் கண் முன் தீயின் நடுவே கிடந்து புழுவைப் போல் நௌிந்து கருகிச் சாகும் மகளின் தோற்றம் தெரிந்தது…
‘அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போய் விடுமா? ஐயோ! மகளே உன்னை என் கையால் கொன்ற பின் நான் உயிர் வாழவா?… நானும் என் உயிரைப் போக்கிக் கொண்டால்?’
‘ம்… அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போயிடுமா?’ அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மகளின் கூந்தலைப் பற்றி முகத்தை நிமிர்த்தித் தூக்கி நிறுத்தினாள் அம்மா.
நடுக் கூடத்தில் தொங்கிய அரிக்கேனின் திரியை உயர்த்தி ஒளி கூட்டி அதைக் கையில் எடுத்துக் கொண்டு மகளின் அருகே வந்து நின்று அவளைத் தலை முதல் கால்வரை ஒவ்வோர் அங்குலமாக உற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாங்க மாட்டாமல் அவள் முகத்தை மூடிக் கொண்டு “ஐயோ அம்மா! என்னைப் பார்க்காதேயேன்” என்று முதுகுப் புறத்தைத் திருப்பிக் கொண்டு சுவரில் முகம் புதைத்து அழுதாள்…
“அட கடவுளே! அந்தப் பாவிக்கு நீ தான் கூலி கொடுக்கணும்” என்று வாயைப் பொத்திக் கொண்டு அந்த முகம் தெரியாத அவனைக் குமுறிச் சபித்தாள் அம்மா. அவளைத் தொடுவதற்குத் தனது கைகள் கூசினாலும், அவளைத் தானே தீண்டுவதற்குக் கூசி ஒதுக்கினால் அவள் வேறு எங்கே தஞ்சம் புகுவாள் என்று எண்ணிய கருணையினால் சகித்துக் கொண்டு தனது நடுங்கும் கைகளால் அவளைத் தொட்டாள். ‘என் தலையெழுத்தே’ என்று பெருமூச்செறிந்தவாறு, இவளைக் கோபிப்பதிலோ தண்டிப்பதிலோ இதற்குப் பரிகாரம் காண முடியாது என்று ஆழமாய் உணர்ந்து அவளைக் கைப்பிடியில் இழுத்துக்கொண்டு அரிக்கேன் விளக்குடன் பாத்ரூமை நோக்கி நடந்தாள்.
‘இப்ப என்ன செய்யலாம்? அவனை யாருன்னு கண்டு பிடிச்சுட்டா?… அவன் தலையிலேயே இவளைக் கட்டிடறதோ? அட தெய்வமே… வாழ்க்கை முழுதும் அப்படிப்பட்ட ஒரு மிருகத்தோட இவளை வாழ வச்சுடறதா? அதுக்கு இவளைக் கொன்னுடலாமே? என்ன செய்யறது!’ என்று அம்மாவின் மனம் கிடந்து அரற்றியது!
பாத்ரூமில் தண்ணீர்த் தொட்டியின் அருகே அவளை நிறுத்தி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு, தானறிந்த தெய்வங்களையெல்லாம் வழிபட்டு இந்த ஒன்றுமறியாப் பேதையின்மீது பட்டுவிட்ட கறையைக் கழுவிக் களங்கத்தைப் போக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டாள் அம்மா.
குளிரில் நடுங்குகிறவள் மாதிரி மார்பின்மீது குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு கூனிக் குறுகி நின்றிருந்தாள் அவள்.
கண்களை இறுக மூடிக்கொண்டு சிலை மாதிரி நிற்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளது ஆடைகளை யெல்லாம் தானே களைந்தாள் அம்மா. இடுப்புக்குக் கீழ் வரை பின்னித் தொங்கிய சடையைப் பிரித்து அவளது வெண்மையான முதுகை மறைத்துப் பரத்தி விட்டாள். முழங்கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு யந்திரம் மாதிரிக் குறுகி உட்கார்ந்த அவள் தலையில் குடம் குடமாய்த் தொட்டியிலிருந்த நீரை எடுத்துக் கொட்டினாள். அவள் தலையில் சீயக்காய்த் தூளை வைத்துத் தேய்த்தவாறு மெல்லிய குரலில் அம்மா விசாரித்தாள்: “உனக்கு அவனைத் தெரியுமோ?…”
“ம்ஹீம்…”
“அழிஞ்சு போறவன். அவனை என்ன செய்தால் தேவலை!”
– பற்களைக் கடித்துக் கொண்டு சீயக்காய் தேய்த்த விரல்களைப் புலி மாதிரி விரித்துக் கொண்டு கண்களில் கொலை வெறி கொப்பளிக்க வெறித்த பார்வையுடன் நிமிர்ந்து நின்றாள்.
‘ம்… வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்’ – என்று பொங்கி வந்த ஆவேசம் தணிந்து, பெண்ணினத்தின் தலை எழுத்தையே தேய்த்து அழிப்பதுபோல் இன்னும் ஒரு கை சீயக்காயை அவள் தலையில் வைத்துப் பரபரவென்று தேய்த்தாள்.
ஏனோ அந்தச் சமயம் இவளை இரண்டு வயசுக் குழந்தையாக விட்டு இறந்து போன தன் கணவனை நினைத்துக் கொண்டு அழுதாள். ‘அவர் மட்டும் இருந்தாரென்றால் – மகராஜன், இந்தக் கொடுமையெல்லாம் பார்க்காமல் போய்ச் சேர்ந்தாரே?’
“இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே! தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ஒரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா… மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா? வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு!” என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையைத் துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். “நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்லே. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ, பளிங்கு. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பார்க்கறே? தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பாக்கறியா? என்னடி தெரியப் போறது? எவனோடயோ நீ கார்லே வந்தேன்னுதானே தெரியப் போறது? அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வாயைக் கிழிக்க மாட்டாளா? ம்… ஓண்ணுமே நடக்கலேடி, நடக்கலே! கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ? அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி… உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி… நீ நம்பு… நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே….? ஆமா – தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்… அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் – எல்லாம் மனசுதான்டி…. மனசு சுத்தமா இருக்கணும்… ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாததுளி அவமேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா… வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு… கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு… உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே…”
கொடியில் துவைத்து உலர்த்திக் கிடந்த உடைகளை எடுத்துத் தந்து அவளை உடுத்திக் கொள்ளச் சொன்னாள் அம்மா.
“அதென்ன வாயிலே ‘சவக் சவக்’ன்னு மெல்லறே?”
“சூயிங்கம்.”
“கருமத்தைத் துப்பு… சீ! துப்புடி. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்புளிச்சுட்டு வா” என்று கூறிவிட்டுப் பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா.
சுவாமி படத்தின் முன்னே மனம் கசிந்து உருகத் தன்னை மறந்து சில விநாடிகள் நின்றாள் அம்மா. பக்கத்தில் வந்து நின்ற மகளை “கொழந்தே, ‘எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடு’ன்னு கடவுளை வேண்டிக்கோ. இப்படி எல்லாம் ஆனதுக்கு நானுந்தான் காரணம். வயசுக்கு வந்த பொண்ணை வௌியே அனுப்பறமே, உலகம் கெட்டுக் கெடக்கேன்னு எனக்கும் தோணாமே போச்சே? என் கொழந்தே காலேஜீக்கும் போறாளேங்கிற பூரிப்பிலே எனக்கு ஒன்னுமே தோணல்லே. அதுவுமில்லாம எனக்கு நீ இன்னும் கொழந்தை தானே! ஆனா நீ இனிமே உலகத்துக்குக் கொழந்தை இல்லேடி! இதை மறந்துடு என்ன, மறந்துடுன்னா சொன்னேன்? இல்லே, இதை மறக்காம இனிமே நடந்துக்கோ. யார்கிட்டேயும் இதைப் பத்திப் பேசாதே. இந்த ஒரு விஷயத்திலே மட்டும் வேண்டியவா, நெருக்கமானவான்னு கிடையாது. யார்கிட்டேயும் இதைச் சொல்லலேன்னு என் கையில் அடிச்சு சத்தியம் பண்ணு, ம்” ஏதோ தன்னுடைய ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு வாக்குறுதி கேட்பதுபோல் அவள் எதிரே கையேந்தி நிற்கும் தாயின் கை மீது கரத்தை வைத்து இறுகப் பற்றினாள் அவள்: “சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்…”
“பரீட்சையிலே நிறைய மார்க் வாங்கிண்டு வராளே, சமத்து சமத்துன்னு நினைச்சிண்டிருந்தேன். இப்பத்தான் நீ சமத்தா ஆயிருக்கே. எப்பவும் இனிமே சமத்தா இருந்துக்கோ” என்று மகளின் முகத்தை ஒரு கையில் ஏந்தி, இன்னொரு கையால் அவள் நெற்றியில் விபூதியை இட்டாள் அம்மா.
அந்தப் பேதையின் கண்களில் பூஜை அறையில் எரிந்த குத்து விளக்குச் சுடரின் பிரபை மின்னிப் பிரகாசித்தது. அது வெறும் விளக்கின் நிழலாட்டம் மட்டும் அல்ல, அதிலே முழு வளர்ச்சியுற்ற பெண்மையின் நிறைவே பிரகாசிப்பதை அந்தத் தாய் கண்டு கொண்டாள்.
அதோ, அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ற பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே! சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக்கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு!
பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மேற்கு மூலையில், பனை ஓலைகளால் வேயப்பட்ட சின்னஞ்சிறு குடிசை ஒன்று இருக்கிறது.
அதில் தான் ஆண்டி வசிக்கிறான். குடிசைக்கு முன்னே வேப்ப மரக் கிளையில் கட்டித் தொங்கும் தூளியில் அவன் செல்ல
மகன் இருளன் சுக நித்திரை புரிகிறான்.
அதோ அவன் மனைவி முருகாயி வேலியோரத்தில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.
ஆம்; ஆண்டிக்கு மனைவியும் மகனும் உண்டு. அவன் பெயர் மட்டும் தான் ஆண்டி. அவன் இருக்கும் அந்த இடம் தூரத்துப் பார்வைக்குத்தான் நந்தவனம்.
ஆண்டி ஒரு வெட்டியான். அவன் வாழும் இடம் இடுகாடு. அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக் குழி வெட்டுவது அவன் தொழில். அதற்காக முனிசிபாலிடியில் மாதம் ஏழு ரூபாய் சம்பளமும், அந்த இடுகாட்டிலேயே வசிக்க ஒரு வீடும் தந்திருக்கிறார்கள்.
ஆண்டி ‘ஒரு மாதிரியான’ ஆள்; பைத்தியம் அல்ல. மகிழ்ச்சி என்பது என்னவென்றே தெரியாத மனிதர்கள் எப்பொழுதும் குஷியாகப் பாடிக்கொண்டே இருக்கும் அவனை ‘ஒரு மாதிரி’ என்று நினைத்தார்கள். அவன் உடம்பில் எப்பொழுதும் அலுப்போ, சோர்வோ ஏற்படுவதே இல்லை. வயது நாற்பது ஆகிறது; இருபது வயது இளைஞனைப்போல் துறுதுறு வென்றிருப்பான்.
அர்த்தம் புரிந்தோ புரியாமலோ அவன் வாய், உரத்த குரலில் சதா ஒரு பாட்டை அலப்பிக்கொண்டே இருக்கும்.
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி — அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி — அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி…”
குழி வெட்டும் வேலை இல்லாத சமயத்தில் அவன் நந்தவன வேலையில் ஈடுபடுவான். அவன் உழைப்பால் தான் அந்த இடுகாடு கூட ‘நந்தவன’ மாகி இருக்கிறது. அவனுக்குச் சோகம் என்பது என்ன வென்றே தெரியாது.
செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போதும் சரி, பிணங்களுக்கு குழி பறிக்கும் போதும் சரி – சலனமோ, சங்கடமோ ஏதுமின்றி, உரத்த குரலில் கழுத்து நரம்புகள் புடைக்க அந்தப் பாட்டை தனது கரகரத்த குரலில் பாடுவான்.
அவனைப் பொறுத்தவரை அந்தப் பாட்டிற்கு அர்த்தம் கிடையாது; வெறும் பழக்கம்தான்.
அது புதைக்கும் இடமாதலால் பெரும்பாலும் குழந்தைகளின் பிரேதம்தான் அங்கு வரும்.
‘மூன்றடி நீளம் மூன்றடி ஆழ’க் குழிகள் வெட்டுவது ஆண்டிக்கு ஒரு வேலையே அல்ல.
தலையின் இறுகக் கட்டிய முண்டாசுடன், வரிந்து கட்டிய வேட்டியுடன், கால்களை அகட்டி வைத்துக் கொண்டு நிற்பான். அவன் கையிலுள்ள மண்வெட்டி அனாயாசமாகப் பூமியில் விழுந்து மேற்கிளம்பும். ஒவ்வொரு வெட்டுக்கும் ஈர மண் மடிந்து கொடுக்கும். பூமியே புரண்டு கொடுக்கும்.
“… கொண்டு வந்தான் ஒரு தோண்டி — அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப்.. போட்டுடைத்தாண்டி…”
அந்தக் ‘கூத்தாடி’ என்ற வார்த்தையை அழுத்தி அழுத்தி உச்சரித்தவாறு பூமியின் மார்பை அவன் பிளக்கும்போது அவனை யாராவது கண்டால் அந்தப் பாட்டின் பொருள் தெரிந்துதான் அவன் பாடுகிறான் என்றே எண்ணத் தோன்றும்.
உண்மையில் அந்தப் பாட்டுக்கு உரிய பொருள் அவனுக்குத் தெரியவே தெரியாது.
அவன் அந்தப் பாட்டை, எங்கு எப்பொழுது கற்றுக் கொண்டான்?
நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக்கொண்டு முதன்முதலில் உச்சரித்தோம் என்று சொல்ல முடியுமா? ஆனால், ஏதோ ஒரு விசேஷமான வார்த்தையைக் குறிப்பாக எண்ணினோமானால் நம்மில் எவ்வளவோ பேர் சொல்லி விடுவோம்.
ஆண்டி இந்தப் பாட்டை எப்பொழுது எங்கு முதன் முதலில் கேட்டான்? சற்று நினைவு கூர்ந்தால் அவனால் சொல்லிவிட முடியும்.
★★★
ஒரு நாள் காலை, கயிற்றுக் கட்டிலில் உறக்கம் கலைந்து எழுந்த ஆண்டி, தன் கண்களைக் கசக்கிவிட்ட பின் கண்ட காட்சி அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
குடிசை வாசலில், கிழிந்த கோரைப் பாயில், வழக்கத்திற்கு மாறாக இன்னும் உறக்கம் கலையாமல் தன்னை மறந்து கிடக்கிறாள் முருகாயி.
அவன், தான் எழுந்தபின் அவள் தூங்கிக் கொண்டிருப்பதை, கலியாணம் ஆகி இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் ஒருநாள் கூடப் பார்த்ததில்லை.
“ஏ… முருவாயி…” என்று குரல் கொடுத்தான்.
அவள் எழுந்திருக்கவில்லை; புரண்டு படுத்தாள்.
அவன் கயிற்றுக் கட்டிலை விட்டு எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தான்.
‘உடம்பு சுடுகிறதோ’ என்ற நினைப்பில் அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
“முருவாயி…” என்று மறுபடியும் உலுப்பினான்.
மயங்கிக் கிறங்கிய நிலையில் முருகாயி கண்களைத் திறந்தாள். எதிரில் புருஷன் குந்தி இருப்பதைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்து பேந்தப் பேந்த விழித்தாள்.
“என்ன முருவாயி… ஒடம்புக்கு என்னா பண்ணுது?” என்று பதறினான் ஆண்டி.
“ஒண்ணுமில்லே… கையி காலெல்லாம் கொடைச்சலா இருக்கு… ஒடம்பு பூரா அடிச்சி போட்ட மாதிரி… கிர்னு தலை சுத்துது…” என்று சொல்லும்போதே கறுத்த இமைகள் ஒட்டி ஒட்டிப் பிரிந்தன.
“கனா ஒண்ணு கண்டேன்.”
“என்ன கனா புள்ளே?”
முருகாயி கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே கொட்டாவி விட்டாள்.
“கனாவிலே ஒரு பூச்சி… கறுப்பா… சின்னதா…” அவள் உடல் ஒருமுறை குலுங்கிற்று.
“உம்…”
“சொல்லும்போதே திரேகம் சிலுக்குது மச்சான்… அந்தக் கறுப்புப் பூச்சி நவுந்து வந்து எங் கையி மேலே ஏறுச்சி… ஏறினவுடனே அது மஞ்சளா மாறிச்சி – ஊஹீம் மஞ்ச நெறமில்லே… தங்க நெறம்… அப்பிடி ஒரு சொலிப்பு சொலிச்சது… அது எங் கையிலே வந்து குந்திக்கிட்டு… ‘என்னெத் தின்னுடு என்னெத் தின்னுடு’ன்னு சொல்லிச்சு.”
“உம் அப்புறம்?…”
“தின்னுடு தின்னுடுன்னு சொல்லிக்கிட்டே எங்கையெ கொறிக்க ஆரம்பிச்சது. எனக்கு என்னவோ புத்திக் கொளம்பிப்போய் ஒரு ஆவேசம் வந்திடுச்சி… சீ, இந்த அல்பப் பூச்சி வந்து என்ன தைரியமா நம்மகிட்டே வந்து ‘தின்னுடு தின்னுடு’ன்னு சொல்லுது பாத்தியா?… நாம்ப திங்கமாட்டோம்கிற தைரியம் தானேன்னு நெனைச்சி…”
—அவள் முகம் சிவந்தது, சுளித்தது!
“ஒடம்பெல்லாம் கூசுது மச்சான். அந்தப் பூச்சியெ ரெண்டு விரல்லே தூக்கிப் பிடிச்சி வாயிலே போட்டு ‘கச முச’ன்னு மென்னு…வ் வோ ஓ!…”
—அவள் சொல்லி முடிக்கவில்லை, குடலை முறுக்கிக் கொண்டு வந்த ஓங்கரிப்பு பிடரியைத் தாக்கிக் கழுத்து நரம்புகளைப் புடைக்க வைத்தது; தலை கனத்தது; மூச்சு அடைக்க, கண்கள் சிவக்க,
‘வ் வோ ஓ’—’
“மச்சான்… மச்சான்… அந்தப் பூச்சி வவுத்துக்குள்ளே ஓடுது மச்சான்…”
மறுபடியும் ஓர் பலத்த ஓங்காரம். அடி வயிற்றைப் பிசைந்துகொண்டே தலை குனிந்து உட்கார்ந்தாள். வாயெல்லாம் வெறும் உமிழ் நீர் சுரந்து ஒழுகியது.
“மச்சான்… வவுத்திலே பூச்சி”
—ஆண்டி புரிந்து கொண்டான். அவன் உடல் முழுதும் இன்பக் கிளுகிளுப்பு ஓடிப் பரவியது.
பதினைந்து வருஷமாய் வாய்க்காதது
எத்தனையோ காலம் நினைத்து நினைத்துப் பார்த்து, ஏமாந்து ஏமாந்து, இல்லை என்ற தீர்க்கமான முடிவில் மறந்தே போனபின்…
—உடலை குலுக்கி, குடலை முறுக்கி ஓங்கரித்தாள்… முருகாயி.
—”ஆ… அதுதான் ஹாஹா… முருகாயி அதுதான்… ஹாஹா!” ஆண்டி சிரித்தான்.
‘வ்வோ ஓ!…’
—குத்திட்டுத் தலை குனிந்து உட்கார்ந்திருந்த முருகாயியை உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஆண்டி சிரித்தான்.
“ஹாஹாஹ்ஹா… அதுதான் புள்ளே, அது தான்.”
பலத்த ஓங்கரிப்புடன் வந்த சிரிப்பைத் தாங்க முடியாது தவித்தாள் முருகாயி.
“மச்சான் வவுத்தைப் பொறட்டுதே. தாங்க முடியலியே ஐயோ!…” என்று பதறினாள்.
“சும்மா, இரு புள்ளே, நம்ம வடிவேலு வைத்தியர் கிட்டே போயி எதனாச்சும் மருந்து வாங்கியாறேன்” என்று மேல் துண்டை உதறித் தோள்மீது போட்டுக் கொண்டு கிளம்பினான் ஆண்டி.
முருகாயி சிரித்தாள்.
“ஏ! சும்மாத்தானே இரு மச்சான். யாராவது சிரிக்கப் போறாங்க”
“நீ படற அவஸ்தையைப் பார்க்க முடியலியே புள்ளே…”
“நீ ஏன் பாக்கிறே?…அந்தாலே தள்ளிப்போய் நின்னுக்க…”
ஆண்டி மனசுக்குள் கும்மாளியிடும் மகிழ்ச்சியுடன் இடுகாட்டின் கேட்டருகே நின்றான்.
அப்போதுதான் அந்தச் சாலை வழியே சென்ற காவி தரித்த பண்டாரம் ஒருவன் தன்னை மறந்த லயத்தில் அந்தப் பாட்டைப் பாடியவாறு நடந்தான்.
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி — அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி — அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.”
இதுவரை அனுபவித்தறியாத ஒரு புதிய உணர்வில் மகிழ்ச்சியில் லயித்து தன் நிலை மறந்து நின்ற ஆண்டியின் மனத்தில், தாள லயம் தவறாமல் குதித்தோடி வந்த அந்தப் பாட்டின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாய்ப் பதிந்தன.
அதைப் பதிய வைப்பதற்காகவே பாடுவதுபோல் அந்தப் பண்டாரம் அந்த நான்கு வரிகளையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு நடந்தான்.
அன்றுமுதல் தன்னையறியாமல் ஆண்டியும் அந்தப் பாடலைப் பாடிக் குதிக்க ஆரம்பித்தான்.
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி“
ஆயிரக்கணக்கான மனித உடல்கள் மாண்டபின் புதையுண்ட அந்த மயான பூமியில் ஒரு மனிதன் பிறந்தான்.
ஆண்டிக்கு ஒரு மகன் பிறந்தான்.
தாயின் கருவில் அவன் ஜனித்த அந்த நாளில் பிறந்த குதூகலம் ஆண்டிக்கு என்றும் மறையவில்லை.
பொழுதெல்லாம் தன் செல்வ மகனைத் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினான்.
நூற்றுக்கணக்கான குழந்தைகளின் சவங்களுக்குக் குழிபறித்த ஆண்டியின் கரங்கள் தன் செல்வ மகனை மார்போடு அணைத்து ஆரத் தழுவின.
— தனது மதலையை மார்புறத் தழுவி மகிழ்ந்த ஆண்டியின் கரங்கள் ஊரார் பிள்ளைகளின் சவங்களுக்குக் குழி பறித்தன.
ஊராரின் புத்திர சோகம் அவனுக்குப் புரிந்ததே இல்லை.
ரோஜாச் செடிக்குப் பதியன் போடும் சிறுவனைப் போல பாட்டுப் பாடிக்கொண்டே குழி பறிப்பான்.
அருகிலிருக்கும் அந்தப் பச்சைச் சிசுவின் பிரேதத்தைப் பார்த்தும் — அதோ பக்கத்தில், பீறிவரும் அழுகையை அடக்கிக் கொண்டு நிற்கும் அந்தத் தகப்பனைப் பார்த்தும் — நெஞ்சில் ஈரமில்லாமல் பசை இல்லாமல் பாடிக் கொண்டிருக்கிறானே…
சீசீ இவனும் ஒரு மனிதனா!… அதனால்தான் அவனை எல்லோரும் ‘ஒரு மாதிரி’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
குழி பறித்து முடித்தபின் நேரே தன் குடிசைக்கு ஓடுவான். தூளியில் உறங்கும் இருளனைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவான்; கூத்தாடுவான்.
அந்த மகிழ்ச்சிக்கு, குதூகலத்திற்கு, பாட்டிற்கு, கும்மாளத்துக்கெல்லாம் காரணம் இருளன்தானா?
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்…
எத்தனையோ பெற்றோரின் ஆனந்தத்துக்கு, கனவுகளுக்கெல்லாம் புதை குழியாயிருந்த அந்த இடுகாட்டில் மரணம் என்ற மாயை மறந்து, ஜனனம் என்ற புதரில் மட்டும் லயித்துக் குதித்துக் கொண்டிருந்த ஆண்டியின்… ஆண்டியின்…
—சொல்ல என்ன இருக்கிறது?
இருளன் ஒருநாள் செத்துப் போனான்.
வாடியிருந்து வரம் கேட்டு, காத்திருந்து தவமிருந்து காலம் போன ஒரு நாளில், எதிர்பாராமல் – நினைவின் நப்பாசை கூட அறுந்துபோன ஒரு காலமற்ற காலத்தில் வாராமல் வந்து அவதரித்து, ஆசை காட்டி விளையாடி கனவுகளை வளர்த்த இருளன், எதிர்பாராமல் திடீரென்று இரண்டு நாள் கொள்ளையிலே வந்ததுபோல் போய்விட்டான்.
ஆசைகளையும் கனவுகளையும், பாழுக்கும் பொய்மைக்கும் பறி கொடுத்த முருகாயி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புரண்டு புரண்டு அழுதாள்.
எத்தனையோ சோகங்களின் திரடுகள் கரடு தட்டி மேடிட்டுப்போன அந்த மயான பூமியில் தனது பங்கிற்காக அந்தத் தாய் ஒப்பாரி வைத்து அழுதாள்.
வேப்ப மரத்தடியில், கட்டித் தொங்கும் வெறும் தூளியினருகே முழங் கால்களில் முகம் புதைத்துக் குந்தி இருக்கிறான் ஆண்டி.
எங்கோ வெறித்த விழிகள்.. என்னென்னமோ காட்சிகள்.. எல்லாம் கண்டவை.. இனி, காண முடியாதவை…
அதோ இருளன்!—
வேலியோரத்தில் தவழ்ந்து சென்றதும்… தூளியிலிருந்து உறக்கம் கலைந்தபின் தலையை மட்டும் தூளிக்கு வெளியே தள்ளித் தொங்க விட்டுக்கொண்டு, கன்னம் குழையும் சிரிப்புடன் ‘அப்பா’வென்று அழைத்ததும்…
செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும்போது அவனரியாமல் பின்னே வந்து, திடீரென்று பாய்ந்து புறம்புல்லி உடலைச் சிவிர்க்கவைத்து மகிழ்வித்ததும்…
எதிரிவிருக்கும் தட்டத்துச் சோற்றில், வேகமாய்த் தவழ்ந்து வந்து— தனது பிஞ்சுக் கைகளை இட்டுக் குழப்பி.விரல்களுக்கிடையே சிக்கிய இரண்டொரு பருக்கைகளை வாயில் வைத்துச் சுவைத்துச் சப்புக்கொட்டி, கைதட்டிச் சிரித்துக் களித்ததும்…
நெஞ்சோடு நெஞ்சாய்க் கிடந்து இரவு பகல் பாராமல் நாளெல்லாம் உறங்கியதும்…
—பொய்யா?… கனவா?… மருளா?. பித்தா? பேதைமையா ?
ஆண்டி சித்தம் குலைவுற்றவன் போல் சிலையாய் உட்கார்ந்திருந்தான்.
இருளன் தவழ்ந்து திரிந்த மண்ணெல்லாம், அவன் தொட்டு விளையாடிய பொருளெல்லாம், அவன் சொல்லிக் கொஞ்சிய சொல்லெல்லாம் ஆண்டியின் புலன்களில் மோதி மோதிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன.
அதோ குடிசையினுள்ளே அந்தச் சிறு பாலகனின் சடலம் ஊதிப் புடைத்துக் கிடக்கிறது. வாயிலும் கண்களிலும் ஈக்கள் மொய்க்கின்றன. நெற்றியில் சாந்துப் பொட்டு; கறுத்துப்போன இதழ்களுக்கிடையே பால்மணம் மாறாத இளம் பற்கள் மின்னித் தெரிகின்றன. கையையும் காலையும் அகல விரித்துக்கொண்டு…
—ஆழ்ந்த நித்திரையோ ?…
‘இல்லை. செத்துப் போய்விட்டான்.’
முருகாயி அவன் கைகளை மார்பின்மீது கோத்து வைத்தாள். முகத்தில், கண்களில் மொய்த்த ஈக்களை விரட்டினாள். பிணத்தின் மீது ஒரு துணியை எடுத்துப் போர்த்தி மூடினாள்…
கடைசியில்..
கடமை என்று ஒன்று இருக்கிறது அல்லவா?
★★★
சிவந்த கண்கள் நீர்த்தாரை பொழிய, தலையில் மேல் துண்டை எடுத்துச் சுற்றிக்கொண்டான் ஆண்டி. மூலையில் கிடந்த மண்வெட்டியை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டான் நனைத்து வைத்திருந்த மஞ்சள் துணியில் இருளனைச் சுருட்டி எடுத்து மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு புறப்பட்டான்.
“ஐயோ!…என் ராசா” என்ற குரல் வெடித்தது—முருகாயி கதறிக்கொண்டே பூமியில் விழுந்து துடித்தாள். ஆண்டியின் கால்களைச் சேர்த்துக் கட்டிக்கொண்டு அவனைப் போகவிடாமல் இழுத்தாள்.
கையில் ஒரு சோகம்: நெஞ்சில் ஒரு சோகம்; காலைப் பிடித்துக் கொண்டு ஒரு பெரும் சோகம்…
—ஐயோ, அவன் என்ன செய்வான் ? நின்ற நிலையில் தவித்தான். எல்லா சோகத்துக்கும் குழி பறிக்க, தோளில் தொங்குகிறதே அந்த மண்வெட்டி, அதனால் முடியுமா?…
ஒரு கை பிணத்தை அணைத்தது. மறு கை மண்வெட்டியின் பிடியை இறுகப் பற்றியது…
“முருகாயி… அழுவாதே புள்ளே…” என்று சொல்லிக்கொண்டே அவனும் அழுதான்.
அவள் ‘ஓ’வென்று கதறியழுதாள்.
அவள் பிடியிவிருந்து தன்னை விலக்கிக்கொண்டு நடந்தான் ஆண்டி.
—அவனுக்கு இத்தனை நாளாய் பிணங்கள் தான் தெரியும். அந்தப் பிணங்களின் பின்னே இத்தனை சோகமா ?…
★★★
‘ஐயோ!…’ அன்று அந்த நந்தவனத்துக்கு என்ன பூரிப்போ ?…
மரங்களும் செடிகளும் புதுமலர்க் கொத்துக்களை அந்த மயான பூமியெங்கும் சிதறிச் சொரிந்துகொண்டிருந்தன.
—ஆண்டி தனது இழந்த கனவைக் கைகளில் ஏந்தி நடந்தான்.
‘அந்தப் பன்னீர் மரத்தடியில் இருளனுக்குக் குழி தோண்ட வேண்டும். அந்த மரம் அவன்மீது எப்பொழுதும் அதன் வாசமுள்ள மலர்களைப் பொழிந்து நிற்கும்.’
மகனின் சடலத்தை மண்மீது கிடத்தினான். தோளில் கிடந்த மண்வெட்டியைக் கையில் ஏந்தி மரமாய் நின்றான்.
அவனது கண்கள் சூனியமான வானவெளியை வெறித்து விழித்தன. வெறித்த விழிகள் சிவந்து கண்ணீர் பெருக்கின நாசியும் உதடுகளும் தாளாத சோகத்தில் துடித்தன நெஞ்சில் என்னவோ அடைத்தது.
மனசை இரும்பாக்கிக்கொண்டு மண்வெட்டியை ஓங்கினான். ஓங்கிய கைகள் நடுங்கின. கால்கள் பூமியில் நிலைக்காமல் தடுமாறன.
உயர்த்திப பிடித்திருந்த மண்வெட்டியை உதறி எறிந்துவிட்டு ‘மவனே ‘ என்று அலறியவாறு சடலத்தின்மீது விழுந்தாண் ‘ஓ’வென்றுக் கதறி அழுதான். அழுது சோர்ந்தான…
வெகுநேரம் தன் செல்வ மகனின் —இனிமேல பார்க்க முடியரத மகனின் — முகததை வெறித்துப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான்.
வேர்வைத் துளிகள் நெற்றியில் சரம் கட்டி நினறன.
மார்பை அழுத்திப் பிடித்துக்கொண்டு மண்வெட்டியை எடுத்தான். கால்களை அகட்டி நின்று, கண்களை மூடிக்கொண்டு மண்வெட்டியை ஓங்கி. பூமியில் பதித்தான்.
‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி!’
அந்தப் பாட்டு!…அவன் பாடவில்லை
ஊரார் பிணத்துக்குக் குழி பறிக்கும்போது மனசில் அரிப்போ கனமோ இல்லாமல் குதித்து வருமே அந்தப் பாட்டு…
‘பாடியது யார் ? ‘…
மீண்டும் ஒருமுறை மண்வெட்டியை உயர்த்தி, பூமியைக் கொத்தினான்…
‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி !’…
—மீண்டும் அந்தக் குரல்!…
‘யாரது?…’
புலன்களை எல்லாம் அடக்கிக்கொண்டு மீண்டும் மண் வெட்டியால் பூமியை வெட்டினான்.
மீண்டும் ஒரு குரல் :
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி—அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி…”
‘ஐயோ! அர்த்தம் புரிகிறதே !…’
—ஆண்டி மண்வெட்டியை வீசி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
தூணைப் பிளந்து வெளிக் கிளம்பிய நரசிம்மாவதாரம் போன்று பூமியை, புதை குழி மேடுகளைப் பிளந்துகொண்டு ஒரு அழகிய சின்னஞ்சிறு பாலகன் வெளி வந்தான்.
கைகளைத் தட்டித் தாளமிட்டவாறே ஆண்டியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே பாடியது சிசு !
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி—அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி…
கொண்டு வந்தான் ஒரு தோண்டி—அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி…”
குரல்கள் ஒன்றாகி, பலவாகி, ஏகமாகிச் சங்கமித்து முழங்கின. அந்த மயான பூமியில் எத்தனையோ காலத்திற்குமுன் புதையுண்ட முதற் குழந்தை முதல் நேற்று மாண்டு புதையுண்ட கடைசிக் குழந்தைவரை எல்லாம் உயிர்பெற்று, உருப்பெற்று ஒன்றாகச் சங்கமித்து, விம்மிப் புடைத்து விகஸித்த குரலில்—மழலை மாறாத மதலைக் குரலில் — பாடிக்கொண்டு கைத்தாளமிட்டு அவனைச் சுற்றிச் சூழ நின்று ஆடின. வான வெளியெல்லாம் திசைகெட்டு தறிகெட்டுத் திரிந்து ஓடின.
ஆண்டி தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தான்
அதோ, அவன் இருளனும் அந்தப் பாலகர் நடுவே நின்று நர்த்தனம் புரிகிறான்: தாளம் போடுகிறான்.
பாட்டுப் பாடுகிறான்.
என்ன பாட்டு தெரியுமா?..
ன’நந்தவனத்தில் ஓர் ஆண்டி…
அடைத்துப் புடைத்து தெருக்கிக்கொண்டு ஓடும் சிகக்களின் மகா சமுத்திரத்தில் தன் இருளனைத் தாவி அணைக்க அவன் ஓடினான்…
இருளனைக் காணாம்…தேடினான், காணோம்…காணோம். இருளனை மட்டும் காணவே காணோம்…
அந்தச் சிசுக்கள் யாவும் ஒன்றுபோல் இருந்தன.
என்னுடையது என்றும், இன்னொருவனுடையது என்றும், அவன் என்றும், அதுவென்றும் இதுவென்றும் பேதம் காண முடியாத அந்தச் சமுத்திரத்தில் இருளனை மட்டும் எப்படி இனம் கண்டு விடமுடியும்!…
ஆண்டி தவித்தான்!
ஆ!…என்ன தவிப்பு…என்ன தவிப்பு…
★★★
பன்னீர் மரத்தடியில் பிள்ளையின் பிணத்தருகே முகம் புதைத்து வீழ்ந்து கிடக்கும் ஆண்டியைக் கண்டு பதறியடித்துக்கொண்டு ஓடினாள் முருகாயி.
அவனைப் புரட்டி நிமிர்த்தி மடிமீது வைத்துக்கொண்டு கதறினாள். அவன் விழிகள் மெல்லத் திறந்தன.
—தெய்வமே! அவனுக்கு உயிர் இருந்தது: அவன் சாகவில்லை. இன்னும்கூட அவன் அந்த ‘நந்தவன’தில்தான் வாழ்கிறான். ஆனால் முன்போல் இப்போதெல்லாம் பாடுவதில்லை.
இடுகாட்டிற்கு வரும் பிணங்களைப் பார்க்கும்
போதெல்லாம் ‘கோ’வென்று கதறி அழுகிறான. ஊராரின் ஒவ்வொரு சோகத்திற்கும் அவன் பலியாகிறான்! ஆனால் இப்பொழுதும் ஊரார் அவனை ஒருமாதிரி என்றுதான் சொல்லுகிறார்கள் !
குருபீடம்
அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.
அவன் ஜெயிலிருந்து வந்திருப்பதாகச் சில பேர் பேசிக்கொண்டார்கள். அவன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றப்பட்டவனென்றும் சிலர் சொன்னார்கள்.
ஆனால், இப்போது அவன் நோயாளியோ பைத்தியக்காரனோ அல்ல என்று அவனைப் பார்த்த எல்லாரும் புரிந்து கொண்டார்கள். உண்மையும் அதுதான். சோம்பலும், சுயமரியாதை இல்லாமையும், இந்தக் கோலம் அசிங்கமென்று உணர முடியாத அளவுக்கு அவனிடம் ஊறி உறைந்துபோன தாமசத்தின் மதமதப்பினாலும் அவன் இவ்வாறு திரிகிறான். பசிக்கிறதோ இல்லையோ தன் கையில் கிடைத்ததையும் பிறர் கையில் இருப்பதையும் தின்ன வேண்டுமென்ற வேட்கை அவன் கண்ணில் அலைந்தது. ஒரு குழந்தை சாப்பிடுவதைக்கூட ஒரு நாய் மாதிரி அவன் நின்று பார்த்தான். அவர்களும் அவனை நாயை விரட்டுவது மாதிரி விரட்டினார்கள். அவ்விதம் அவர்கள் விரட்டி அவன் விலகிவரும்போது அவன் தனது பார்வையால் பிறர் சாப்பிடும் பொருளை எச்சில் படுத்திவிட்டு வந்தான். அவன் எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருந்தான். அவன் கடைவாயிலும் பல்லிலும் அவன் தின்றவை சிக்கிக் காய்ந்திருந்தது. யாராவது பீடியோ சுருட்டோ புகைத்துக் கொண்டிருந்தால் அதற்கும் அவன் கையேந்தினான். அவர்கள் புகைத்து எறிகிற வரைக்கும் காத்திருந்து, அதன் பிறகு அவற்றைப் பொறுக்கி அவர்களை அவமரியாதை செய்கிற மாதிரியான சந்தோஷத்துடன் அவன் புகைத்தான்.
சந்தைக்கு வந்திருக்கிற நாட்டுப்புறப் பெண்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போதும், குனிந்து நிமிர்கையில் ஆடை விலகும்போதும், இவன் காமாதூரம் கொண்டு வெட்கமில்லாமல் அவர்களை வெறித்துப் பார்த்து ரசித்தான்.
அவனுக்கு உடம்பில் நல்ல வலுவும் ஆரோக்கியமும் இருந்தது. எனினும் எப்போதும் ஒரு நோயாளியைப்போல் பாசாங்கு செய்வது அவனுக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. அவனுக்கு வயது நாற்பதுக்குள்தான் இருக்கும். கடுமையாக உழைக்காததாலும், கவலைகள் ஏதும் இல்லாததாலும் அவன் உடம்புவாகே ஒரு பொலிகாளை மாதிரி இருந்தது. இளமையும் உடல் வலுவும் ஆரோக்கியமும் இயற்கையால் அவனுக்கு அனுக்கிரகிக்கப்பட்டிருந்தும் அவன் தன்னைத்தானே சபித்துக் கொண்டது மாதிரி சேற்றில் மேய்கிற பன்றியாய்த் திரிந்தான்.
சந்தைத் திடலுக்கும் ரயிலடிக்கும் நடுவேயுள்ள குளக்கரையை அடுத்த சத்திரத்தில் உட்கார்ந்துகொண்டு அங்கே குளிக்கிற பெண்களை வேடிக்கை பார்ப்பது அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. ஆனால், ஒரு நாளாவது தானும் குளிக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியதே இல்லை. மற்ற நேரங்களில் அவன் அந்தத் திண்ணையில் அசிங்கமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருப்பான். சில சமயங்களில் பகல் நேரத்தில் கூட உறங்குவது மாதிரி பாவனையில் வேண்டுமென்றே ஆடைகளை விலக்கிப் போட்டுக்கொண்டு தெருவில் போவோர் வருவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி ரகசியமாக மனத்திற்குள் மகிழ்ச்சி அடைவான்.
இரண்டு தினங்களுக்கு முன்பு லேசாக மழை பெய்து கொண்டிருந்த இரவில் ஒரு பிச்சைக்காரி இந்தச் சத்திரத்துத் திண்ணையில் வந்து படுக்க, அவளுக்கு ஏதேதோ ஆசை காட்டிக் கடைசியில் அவளை வலியச்சென்று சல்லாபித்தான். அதன் பிறகு இவனைப் பழிவாங்கிவிட்ட மகிழ்ச்சியில் தனது குறைபட்டுப்போன விரல்களைக் காட்டித் தான் ஒரு நோயாளி என்று அவள் சிரித்தாள். அதற்காக அருவருப்புக் கொள்கிற உணர்ச்சிகூட இல்லாமல் அவன் மழுங்கிப் போயிருந்தான். எனவே, இவள் இவனுக்குப் பயந்துகொண்டு இரண்டு நாட்களாக இந்தப் பக்கமே திரும்பவில்லை. இவன் அவளைத் தேடிக்கொண்டு நேற்று இரவெல்லாம் சினிமாக் கொட்டகை அருகேயும், சந்தைப்பேட்டையிலும், ஊரின் தெருக்களிலும் கார்த்திகை மாதத்து நாய் மாதிரி அலைந்தான்.
மனித உருக்கொண்டு அவனிடம் உறைந்துபோன தாமசத் தன்மையினால், சோம்பலைச் சுகமென்று சுமந்து கொள்கிற புத்தியின் மந்தத்தினால் அருவருக்கத்தக்க ஒரு புலை நாய் மாதிரி அவன் அங்கு அலைந்து கொண்டிருந்தான். வயிற்றுப்பசி, உடற்பசி என்கிற விகாரங்களிலும் உபாதைகளிலும் சிக்குண்டு அலைகின்ற நேரம் தவிர, பிற பொழுதுகளில் அந்தச் சத்திரத்துத் திண்ணையில் அவன் தூங்கிக்கொண்டே இருப்பான்.
ஃஃஃ ஃஃஃ ஃஃஃ ஃஃஃ
காலை நேரம்; விடியற்காலை நேரம் அல்ல. சந்தைக்குப் போகிற ஜனங்களும், ரயிலேறிப் பக்கத்து ஊரில் படிப்பதற்காகப் போகும் பள்ளிக்கூடச் சிறுவர்களும் நிறைந்து அந்தத் தெருவே சுறுசுறுப்பாக இயங்குகின்ற – சுரீர் என்று வெயில் அடிக்கிற நேரத்தில், அழுக்கும் கந்தலுமான இடுப்பு வேட்டியை அவிழ்த்துத் தலையில் இருந்து கால்வரை போர்த்திக் கொண்டு, அந்தப் போர்வைக்குள் க்ருப்பிண்டம் மாதிரி முழங்கால்களை மடக்கிக் கொண்டு, கைகளிரண்டையும் காலிடையே இடுக்கியவாறு வாயிலிருந்து எச்சில் ஒழுக, ஈ மொய்ப்பது கூடத் தெரியாமல் அவன் தூங்கிக் கொண்டிருந்தான். தெருவிலே ஏற்படுகிற சந்தடியும் இரைச்சலும் ஏதோ ஒரு சமயத்தில் அவன் தூக்கத்தைக் கலைத்தது. எனினும் அவன் விழித்துக் கொள்ள விரும்பாததனால் தூங்கிக் கொண்டிருந்தான்.
– இதுதான் சோம்பல். உறக்கம் உடலுக்குத் தேவை. அனால், இந்தத் தேவையற்ற நிர்ப்பந்தத் தூக்கம்தான் சோம்பலாகும். இந்த மதமதப்பைச் சுகமென்று சகிக்கிற அறிவுதான் தாமசமாகும்.
விரைவாக ஏறி வந்த வெயில் அவன்மீது மெதுவாக ஊர்ந்தது. அவன் தெருவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு சுவர் ஓரமாகப் படுத்திருந்தான். சத்திரத்துச் சுவரின் நிழல் கொஞ்சங் கொஞ்சமாகச் சுருங்க ஆரம்பித்தது. முதலில் வெயிலின் விளிம்பு அவனது விலாவுக்கும் தரைக்கும் இடையே மெள்ள மெள்ளப் புகுவதை அவனது மதர்த்த தேகம் ரொம்பத் தாமதமாக உணர்ந்தது. வெயிலின் உறைப்பை உணரக்கூடிய உணர்ச்சிக் குறுகுறுப்பு மழுங்கிப் போனதால் ஒரு மலைப்பாம்பு மாதிரி அவன் அசிங்கமாக நெளிந்தான். அந்த வெப்பத்திலிருந்து – அந்த வெயிலின் விளிம்பிலிருந்து ஒரு நூல் இழை விலகுவதற்கு எவ்வளவு குறைவான, மெதுவான முயற்சி எடுத்துக் கொள்ளலாமோ, அவ்வளவே அவன் நகர்ந்து படுத்தான். சற்று நேரத்தில் மறுபடியும் வெயில் அவனைக் கடித்தது. அவனது அசமந்தம் எரிச்சலாகி அவன் தூக்கம் கலைந்தான். ஆனாலும் அவன் எழுந்திருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் நகர்ந்து சுவரோடு ஒட்டிக் கொண்டான்.
எதிரே இருந்த டீக்கடையிலிருந்து டீ அடிக்கிற சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் அவன் டீ குடிப்பது மாதிரி கற்பனை செய்து கொண்டான்.
மறுபடியும் வெயில் அவனை விடாமல் போய்க் கடித்தது. அதற்குமேல் நகர முடியாமல் சுவர் தடுத்தது. ஒரு பக்கம் சுவரும் ஒரு பக்கம் வெயிலும் நெருக்க அவன் எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குக் கண்கள் கூசின. ஒரு கண்ணைத் திறக்கவே முடியவில்லை. பீளை காய்ந்து இமைகள் ஒட்டிக் கொண்டிருந்தன.
அவன் ஒரு கையால் கண்ணைக் கசக்கிக் கொண்டே இன்னொரு கையால், தலைமாட்டில் சேகரித்து வைத்திருந்த துண்டு பீடிகளில் ஒன்றை எடுத்தான். பீடியைப் பற்ற வைத்து அவன் புகையை ஊதிய போது அவனது அரைக் கண் பார்வையில் மிக அருகாமையில் யாரோ நின்றிருக்கிற மாதிரி முகம் மட்டும் தெரிந்தது. புகையை விலக்கிக் கண்களைத் திறந்து பார்த்தான்.
எதிரே ஒருவன் கைகளை கூப்பி, உடல் முழுவதும் குறுகி, இவனை வணங்கி வழிபடுகிற மாதிரி நின்றிருந்தான். இவனுக்குச் சந்தேகமாகித் தனக்குப் பின்னால் ஏதேனும் சாமி சிலையோ, சித்திரமோ இந்தச் சுவரில் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்து நகர்ந்து உட்கார்ந்தான். இவனது இந்தச் செய்கையில் ஏதோ ஒரு அரிய பொருளைச் சங்கேதமாகப் புரிந்துகொண்டு வந்தவன் மெய்சிலிர்த்து நெக்குருகி நின்றான்.
” இவன் எதற்குத் தன்னை வந்து கும்பிட்டுக் கொண்டு நிற்கிறான் – பைத்தியமோ ? ” என்று நினைத்து உள்சிரிப்புடன் –
” என்னாய்யா இங்கே வந்து கும்பிடறே ? இது கோயிலு இல்லே – சத்திரம். என்னைச் சாமியார் கீமியார்னு நெனச்சுக்கிட்டியா ? நான் பிச்சைக்காரன் …” என்றான் திண்ணையிலிருந்தவன்.
” ஓ !.. கோயிலென்று எதுவுமே இல்லை.. எல்லாம் சத்திரங்களே ! சாமியார்கள் என்று யாருமில்லை. எல்லாரும் பிச்சைக்காரர்களே ! ” என்று அவன் சொன்னதை உபதேச மொழிகள் மாதிரி இலக்கண அலங்காரத்தோடு திரும்பத் திரும்பச் சொல்லிப் புதிய புதிய அர்த்தங்கள் கண்டான் தெருவில் நின்றவன்.
” சரி சரி ! இவன் சரியான பைத்தியம்தான் ” என்று நினைத்துக் கொண்டான் திண்ணையிலிருந்தவன்.
தெருவில் நின்றவன் இவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிற பவ்யத்துடன் ‘ சுவாமி ‘ என்றழைத்தான்.
இவனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. வந்த சிரிப்பில் பெரும் பகுதியை அடக்கிக் கொண்டு புன்முறுவல் காட்டினான்.
” என்னைத் தங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; தங்களுக்குப் பணிவிடை புரியவும், தாங்கள் அழைத்த குரலுக்கு ஓடி வரவும் எனக்கு அனுக்கிரகிக்க வேண்டும். ”
திண்ணையிலிருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ” சரி, இப்போ எனக்கு ஒரு டீ வாங்கியாந்து குடு ” என்றான்.
அந்தக் கட்டளையில் அவன் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டுவிட்டான் என்று புரிந்துகொண்ட மகிழ்ச்சியுடன் இடுப்புத் துண்டிலிருந்த சில்லரையை அவிழ்த்துக் கொண்டு ஓடினான் வந்தவன். அவன் கையிலிருந்த காசைப் பார்வையால் அளந்த ‘ குரு ‘, ஓடுகின்ற அவனைக் கைதட்டிக் கூப்பிட்டு ” அப்படியே பீடியும் வாங்கியா ” என்று குரல் கொடுத்தான்.
அவன் டீக்கடைக்குச் சென்று பார்வைக்கு மறைந்ததும் இவன் வந்து சீடனாக வாய்த்த அதிர்ஷ்டத்தை எண்ணிப் பெருங்குரலில் சிரித்தான் குரு. ” சரியான பயல் கிடைத்திருக்கிறான். இவன் மயக்கம் தெளியாதபடி பார்த்துக்கணும். திண்ணெயெ விட்டு எறங்காமல் சொகமா இங்கேயே இருக்கலாம். பிச்சைக்கு இனிமே நாம்ப அலைய வேணாம். அதான் சிஷ்யன் இருக்கானே… கொண்டான்னா கொண்டுவரான். முடிஞ்சா சம்பாரிச்சுக் குடுப்பான்… இல்லாட்டி பிச்சை எடுத்துக்கினு வரான்.. என்னா அதிர்ஷ்டம் வந்து நமக்கு அடிச்சிருக்கு…” என்று மகிழ்ந்திருந்தான் குரு.
சற்று நேரத்தில் சீடன் டீயும் பீடியும் வாங்கி வந்து நிவேதனம் மாதிரி இரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்டு குருவின் எதிரே நின்றான்.
குரு அவனைப் பார்த்து பொய்யாகச் சிரித்தான். அவன் கையிலிருந்த டீயையும் பீடியையும் தனக்குச் சொந்தமான ஒன்று – இதனை யாசிக்கத் தேவையில்லை – என்ற உரிமை உணர்ச்சியோடு முதன் முறையாய்ப் பார்த்தான். அதனை வாங்கிக் கொள்வதில் அவன் அவசரம் காட்டாமல் இருந்தான். தான் சீடனை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொள்வதற்காக அவன் பீடிகையாகச் சொன்னான்:
” என்னை நீ கண்டுபிடிச்சுட்டே. நீ உண்மையான சிஷ்யன்தான். என்னை நீ இன்னிக்குத்தான் கண்டுபிடிச்சே. ஆனால், நான் உன்னை ரொம்ப நாளாப் பார்த்துக்கினே இருக்கேன். நான் உன்னைக் கொஞ்சம் கேள்விங்கள்ளாம் கேப்பேன். அதுக்கெல்லாம் நீ பதில் சொல்லணும். அதுக்கோசரம் எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுக்காதே. எனக்கு எல்லாம் தெரியும் ! தெரிஞ்சாலும் சிலதெல்லாம் கேட்டுத்தான் தெரிஞ்சுக்கணும். ”
இந்த வார்த்தைகளைக் கேட்டு இரண்டு கையிலும் டீயையும் பீடியையும் ஏந்தி இருந்த சீடன் அவனைக் கரங்கூப்பி வணங்க முடியாமல் பார்வையாலும் முகபாவத்தாலும் தன் பணிவைக் காட்டினான்.
” நீ யாரு ? எந்த ஊரு ? பேரு என்ன? நீ எங்கே வந்தே? நான்தான் குருன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது ? … டீ ஆறிப் போச்சில்லே ? குடு ” என்று டீயை வாங்கிக் குடித்துக் கொண்டே சீடன் சொல்கிற பதிலை மெத்தனமாகத் தலையை ஆட்டியவாறே கேட்டான்.
” குருவே… நான் ஒரு அனாதை. அதோ இருக்கிறதே முருகன் கோயில், அங்கே ஒரு மடப்பள்ளி இருக்குது. அங்கே தண்ணி எறைச்சுக் கொண்டு வர்ற வேலை. மடப்பள்ளியிலே இருக்கிற ஐயிரு மூணு வேளையும் சாப்பாடு போட்டுச் செலவுக்கு நாலணா தினம் குடுக்கிறாரு. எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு. இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லேன்னு தெரிஞ்சும் உடம்பைச் சுமந்துகிட்டுத் திரியற சுமையைத் தாங்க முடியலே.. துன்பத்துக்கெல்லாம் பற்று தான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்கு ஒரு விதப் பற்றும் இல்லே… ஆனாலும் நான் துன்பப்படறேன்… என்ன வழியிலே மீட்சின்னு எனக்குத் தெரியலே… நேத்து என் கனவிலே நீங்க பிரசன்னமாகி, ‘ இந்தச் சத்திரந்தான் குருபீடம், அங்கே வா ‘ ன்னு எனக்குக் கட்டளை இட்டீங்க குருவே ! நீங்க இதெல்லாம் கேட்கிறதனாலே சொல்றேன். தாங்கள் அறியாததா ? விடியற்காலையிலேருந்து சந்நிதானத்திலே காத்துக்கிட்டிருந்தேன். என் பாக்கியம் தங்கள் கடாட்சம் கிட்டியது…. ”
” ம்…ம்… ” என்று மீசையை நெருடிக்கொண்டே அவன் கூறுவதைக் கேட்ட குரு, காலியான தம்ளரை அவனிடம் நீட்டினான்.
சீடன் டீக்கடையில் காலித் தம்ளரைக் கொடுக்கப் போனான். கடவுள் இந்தப் பயலை நன்றாகச் சோதிக்கிறார் என்று நினைத்து அவனுக்காக அனுதாபப்பட்டுச் சிரித்தான் குரு. ” ம்.. அதனால் நமக்கென்ன ? நமக்கு ஒரு சிஷ்யன் கிடைத்திருக்கிறான் ” என்று திருப்திப்பட்டுக் கொண்டான்.
சீடன் வந்தபிறகு அவன் பெயரைக் கேட்டான் குரு. அவன் பதில் சொல்வதற்குள் தனக்குத் தெரிந்த பல பெயர்களைக் கற்பனை செய்த குரு திடீரெனச் சிரித்தான். இவன் கூறுமுன் இவனது பெயரைத்தான் சொல்ல முடிந்தால் இந்த நாடகத்தில் அது எவ்வளவு அற்புதமான லீலையாக அமையும் என்று நினைத்தே அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பினால் சீடன் பதில் சொல்லச் சற்றுத் தயங்கி நின்றான்.
அப்போது குருசொன்னான்: ” பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா – ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான் பாத்தியா ? ஒரு கேள்விக்கு எம்மாம் பதில் ! ” என்று ஏதோ தத்துவ விசாரம் செய்கிற மாதிரிப் பிதற்றினான். சீடன் அதைக் கேட்டு மகா ஞானவாசகம் மாதிரி வியந்தான்.
” சரி, உன் பேரு என்னான்னு நீ சொல்ல வேண்டாம். நான் குரு. நீ சிஷ்யன் … எனக்குப் பேரு குரு; உனக்குப் பேரு ச ஷ்யன். நீதான் என்னை ‘ குருவே குருவே ‘ ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டே…. நானும் உன்னை ‘ சிஷ்யா சிஷ்யா ‘ ன்னு கூப்பிடறேன்… என்னா ? சரிதானா ? …” என்று பேசிக்கொண்டே இருந்தான் குரு.
“எல்லாமே ஒரு பெயர்தானா?” என்று அந்தப் பேச்சிலும் எதையோ புரிந்துகொண்ட சீடனின் விழிகள் பளபளத்தன.
“நான் என்ன இப்படியெல்லாம் பேசுகிறேன்…” என்று குரு தன்னையே எண்ணித் திடீரென வியந்தான். இப்படியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
மத்தியானமும் இரவும் அந்தச் சீடன் மடப்பள்ளியிலிருந்து தனக்குக் கிடைக்கிற புளியோதிரை, சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் பயபக்தியுடனும் அன்போடும் கொண்டுவந்து இந்தக் குருவுக்குப் படைத்தான். அவ்வளவு ருசியும் மணமும் புனிதமும் அன்பும் உபசரணையும் உடைய அமிர்தத்தை இவன் ஜென்மத்தில் ருசி பார்த்ததில்லை. ஆவல் மிகுதியால் தனது நடிப்பைக்கூட மறந்து அவற்றை அள்ளி அள்ளி இவன் உண்பதை அன்பு கனியப் பார்த்துக் கொண்டிருந்தான் சீடன்.
குருவுக்கு எதனாலோ கண்கள் கலங்கின. சீடன் தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்.
மறுநாள் காலை அதே மாதிரி திண்ணைக்குக் கீழே வந்து காத்து நின்றிருந்தான் சீடன். அவனுக்கு டீயும் பீடியும் வாங்கி வந்தான். குருவை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போய் அவனது ஆடைகளைத் துவைத்துக் கொடுத்தான். அவனைக் குளிக்க வைத்து அழைத்து வந்தான்.
உச்சியில் வெயில் வருகிற வரை – குருவுக்குப் பசி எடுக்கும்வரை – அவர்கள் ஆற்றில் நீந்திக் குளித்தார்கள்.
“குளிக்கிறது சொகமாகத்தான் இருக்கு. ஆனா, குளிச்சி என்னா பிரயோசனம்… குளிக்க குளிக்க அளுக்கு சேந்துக்கிட்டுத்தானே இருக்கு?… அது அப்படித்தான். பசிக்குது… திங்கறோம்… அப்புறமும் பசிக்கத்தானே செய்யிது… குளிக்க குளிக்க அளுக்காகும். அளுக்கு ஆக ஆகக் குளிக்கணும். பசிக்கப் பசிக்கத் திங்கணும்… திங்கத் திங்கப் பசிக்கும்… என்ன வேடிக்கை!” என்று சொல்லிவிட்டு குரு சிரித்தான். சிரித்துக் கொண்டே இருக்கும் போது “என்ன இது, நான் இப்படியெல்லாம் பேசுகறேன்” என்று எண்ணிப் பயந்துபோய்ச் சட்டென நிறுத்திக் கொண்டான்.
சீடன் கை கட்டிக்கொண்டு இவன் சொல்வதைக் கேட்டான்.
ஃஃஃ ஃஃஃ ஃஃஃ ஃஃஃ
அன்றும் அதற்கு மறுதினமும் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் இதே மாதிரி காலையில் டீயும் பீடியும் வாங்கித் தந்து, குளிப்பாட்டி, மத்தியானம் உணவு படைத்து, அவனைத் தனிமையில் விடாமலும், அவன் தெருவில் அலையாமலும் இந்தச் சீடன் எப்போதும் அவன் கூடவே இருந்தான்.
அவன் பேசுகிற எல்லா வார்த்தைகளிலும் அவனே புதிதாகப் புரிந்து கொள்ளுகிற மாதிரி பலவிதமான அர்த்தங்கள் கண்டு இந்தச் சீடன் புளகாங்கிதம் அடைவதைச் சந்தைக்கு வருகிற சிலர் சத்திரத்துத் திண்ணையில் ஓய்வுக்காகத் தங்கி இளைப்பாறும்போது வேடிக்கை பார்த்தார்கள்.
சிலர் குருவை அடையாளம் கண்டு கொண்டு இவன் யாரோ ஒரு சித்தன் என்று அப்போதே நினைத்ததாகவும், அப்படிப்பட்டவர்கள் இப்படியெல்லாம் கந்தலுடுத்தி, அழுக்கு சுமந்து, எச்சில் பொறுக்கித் திரிவார்கள் என்றும் தன்னைப் பற்றி இவனுக்குத் தெரியாத ஒன்றைத் தெரிவித்தார்கள். அதைத் தெரிந்து கொள்வதற்கே ஒருவருக்குப் பக்குவம் வேண்டுமென்றும், அந்தப் பக்குவம் இந்தச் சீடனுக்கு இருப்பதாகவும் கூறிச் சீடனைப் புகழ்ந்தார்கள்.
அதில் சிலர், இப்படியெல்லாம் தெரியாமல் இந்தச் சித்த புருஷனை ஏசி விரட்டியடித்ததற்காக இப்போது பயமடைந்து இவனிடம் மானசீகமாவும், கீழே விழுந்து பணிந்தும் மன்னிப்பு வேண்டினார்கள்.
இந்த ஒரு சீடனைத் தவிர குருவுக்குப் பக்தர்கள் நாள்தோறும் பெருக ஆரம்பித்தார்கள். சந்தைக்கு வருகிற வியாபாரிகளும் மற்றவர்களும் இவனை வேடிக்கை பார்த்து நின்றுவிட்டு இவனுக்கு டீயும், பீடியும், பழங்களும் வாங்கித் தந்தார்கள்.
இவன் அவற்றைச் சாப்பிடுகிற அழகையும், தோலை வீசி எறிகிற லாவகத்தையும், பீடி குடிக்கிற ஒய்யாரத்தையும், விழி திறந்து பார்க்கிற கொலத்தையும், விழி மூடிப் பாராமலிருக்கிற பாவத்தையும், அவர்கள் புகழ்ந்தும் வியந்தும் பேசினார்கள்.
குருவுக்கு முதலில் இது வசதியாகவும், சந்தோஷமாகவும், பின்னர் ஒன்றும் புரியாமலும் புதிராகவும் இருந்து, கொஞ்ச நாட்களில் எல்லாம் புரியவும் புதிர்கள் விடுபடவும் தொடங்கின.
ஒரு நாள் இரவு குருவுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் எது எது பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தான். அதாவது, அந்தச் சிஷ்யனோடு பேசுகிற மாதிரித் தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தான்.
அவன் நட்சத்திரங்களைப் பற்றியும், தான் இந்த உலகத்தில் வருவதற்கு முன்னால் இருந்த காலத்தைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும், தனக்குப் பின்னால் உள்ள காலங்களைப் பற்றியும் எந்த முடிவிலும் மனம் நிற்க முடியாத விஷயங்களைப் பற்றியெல்லாம் யோசித்தான்.
அவன் தூங்காமலே கனவு மாதிரி ஏதோ ஒன்று கண்டான். அதில் தன் குரலோ, சீடனின் குரலோ அல்லது சந்தையில் திரிகிற இவனை வணங்கிச் செல்கிற யாருடைய குரலோ மிகவும் தெளிவாகப் பேசியதைக் கேட்டான்.
“உனக்கு சிஷ்யனாக வந்திருக்கிறானே, அவன்தான் உண்மையிலே குரு… சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கிறான்… அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்திருக்கிறான். எந்தப் பீடத்திலே இருந்தால் என்ன? எவன் கற்றுத் தருகிறானோ அவன் குரு. கற்றுக் கொள்கிறவன் சீடன். பரமசிவனின் மடி மீது உட்கார்ந்துகொண்டு முருகன் அவனுக்குக் கற்றுத் தரவில்லையா? அங்கே சீடனின் மடியே குருபீடம். அவனை வணங்கு…”
பறவைகள் பாடிச் சிறகடித்துப் பறந்து சந்தைத் திடலின் மரச் செறிவில் குதூகலிக்கிற காலைப்பொழுது புலர்கிற நேரத்தில் அதே மாதிரியான குதூகலத்துடன் கண் விழித்தெழுந்த குரு, சீடனை வணங்குவதற்காகக் காத்திருந்தான். மானசீகமாய் வணங்கினான். அவன் வந்தவுடன் சாஷ்டாங்கமாய் அவன் பாதங்களில் தான் விழப்போவதை எண்ணி மெய்சிலிர்த்தான்.
ஆனால், அந்தச் சிஷ்யன் வரவே இல்லை. இந்தக் குரு அந்த மடப்பள்ளிக்கு – தன்னை ரசவாதம் செய்து மாற்றிவிட்ட சீடனைத் தேடி ஓடினான்.
மடப்பள்ளியில் உள்ளவர்கள் இவனை வணங்கி வரவேற்று உட்காரவைத்து உபசரித்தார்கள்.
குருவுக்கு அப்போது சீடனின் பெயர் தெரியாத குழப்பத்தால் என்னவென்று கேட்பது என்று புரியாமல் “என் சிஷ்யன் எங்கே?” என்று விசாரித்தான்.
அவர்கள் விழித்தார்கள். குரு அடையாளம் சொன்னான். கடைசியில் அவர்கள் ரொம்ப அலட்சியமாக “அவன் நேற்றே எங்கோ போய்விட்டானே” என்றார்கள்.
“அவன்தான் நமக்கெல்லாம் குரு!” என்றான் குரு.
“அப்படியா!” என்று அவர்கள் ஆச்சரியம் கொண்டனர்.
அதுபற்றி அவனது வேதாந்தமான விளக்கத்தை, அவர்கள் எதிர்பார்த்து நின்றனர். ஆனால், இவன் ஒன்றும் பேசவில்லை. அதன் பிறகு, ஒன்றுமே பேசவில்லை. எழுந்து நடந்தான்.
சந்தைத் திடலிலும் ஊரின் தெருக்களிலும் சீடனாகி வந்த அந்த குருவைத் தேடித் திரிந்தான் இவன். சீடனைக் காணோம். இவன் சிரித்தான். தேடுவதை விட்டு விட்டான்.
இப்போதெல்லாம் சந்தைத் திடலில் அழுக்கும் கந்தையும் உடுத்தி ஒவ்வொருவரிலும் எதையோ தேடுவது மாதிரியான கூர்த்த பார்வையுடன் இவன் திரிந்து கொண்டிருக்கிறான். இவனை யாரும் விரட்டுவதில்லை. குழந்தைகள் இவனைப் பார்த்துச் சிரித்து விளையாடுகின்றன. பெண்களூம் ஆண்களும் இவனை வணங்கி இவனுக்கு எதையாவது வாங்கித் தந்து அன்புடன் உபசரிக்கிறார்கள்.
அந்தச் சீடனிடம் என்ன கற்றானோ அதனை இவன் எல்லாரிடத்தும் எல்லாவற்றிலும் காண்கிற மாதிரி நிறைவோடு சிரித்துச் சிரித்துத் திரிந்து கொண்டிருக்கிறான்.
முற்றும்
நான் இருக்கிறேன்
அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறைக் காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவௌி வழியாகப் பார்த்தால் உள் சுவர்களைக் கிழித்துக்கொண்டு கம்பீரமாய் வளர்ந்துள்ள அரசஞ்செடிகளும் காடாய் மண்டிக்கிடக்கும் எருக்கம் புதர்களும் தெரியும். சத்திரத்துக்கு எதிரே அதாவது சாலையின் மறுபுறத்தில் நான்கு புறமும் படித்துறையுள்ள ஆழமில்லாத குளம்; குளத்திற்கு அப்பாலும், குளத்தைச் சுற்றிலும் செழிப்பான நஞ்சை நிலப்பகுதி, வரப்பினூடே நடந்து ஏறினால், சற்றுத் தூரத்தில் ரயில்வே லைன் மேட்டுப் பகுதி. ரயில்வே லைனுக்கு மறுபுறம் – ‘இந்தப் பக்கம் செழித்துத் தலையாட்டிக் கொண்டிருக்கும் பயிர்களை வளர்த்ததன் பெருமை என்னுடையதுதான்’ என்று அலையடித்துச் சிலு சிலுக்கும் ஏரி நீர்ப்பரப்பு கண்ணுக்கெட்டிய தூரம் பரந்து கிடக்கிறது.
அதற்கப்புறம் ஒன்றுமில்லை; வெறும் தண்ணீர்தான்; தண்ணீர் பரப்பின் கடைக்கோடியில் வானம்தான் தண்ணீரும் வானமும் தொட்டுக்கொண்டிருக்கின்ற இடத்தில் நிலவின் பெருவட்டம் மங்கிய ஔியை ஏரிநீரில் கரைத்து மிதந்து கொண்டிருக்கிறது…நிலவு மேலே ஏற ஏற அதன் உருவம் குறுகிச் சிறுத்தது; ஔி பெருகிப் பிரகாசித்தது. ஒரு கோடியில் எழுந்து, ரயில்வே லைன் மேட்டின் மேலேறிய நிலவு வீசிய வௌிச்சம், மறுகோடியில், சத்திரத்துத் திண்ணையில் உட்கார்ந்து உணவருந்திக்கொண்டிருந்த அந்த வியாதிக்காரப் பிச்சைக்காரனின் புத்தம் புதிய தகரக் குவளையின் மீது பட்டுப் பளபளக்க, அதன் பிரதிபிம்பம் அவன் முகத்தில் விழுந்தது.
திண்ணையில் அவனைத் தவிர யாரும் இல்லை. அவன் அந்தத் தனிமையிலும், தகரக் குவளையில் ஊறிக் கிடந்த ரசத்து வண்டல் சோற்றிலும் லயித்துத் தன்னை மறந்த மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டே ஒவ்வொரு கவளமாய்ச் சாப்பிட்டான். அவன் பார்வை நிமிர்ந்து நிலவில் பதிந்திருந்தது. வாய் நிறையச் சோறுடன் அவன் பாடுவது தௌிவாய் ஔிக்கவில்லை. கேட்கத்தான் அங்கு வேறு யாரிருக்கிறார்கள்’
தகரக் குவளையை வழித்து நக்கிச் சுற்றிலும் இறைந்து கிடந்த பருக்கைகளை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி விரலோடு சேர்த்து உறிஞ்சிச் சாப்பிட்டானதும் தனது–விரல்கள் குறைபட்ட–இரண்டு கைகளாலும் தகரக் குவளையை இடுக்கி எடுத்துக் கொண்டு சாலையின் குறுக்காய், குளத்தை நோக்கி நடந்தான். கால்விரல்களுக்குப் பிடிப்பு இல்லாததால் குதிகால்களை அழுந்த ஊன்றித் தாங்கி தாங்கித்தான் அவனால் நடக்க முடியும் — குளத்தின் மேல்படியில் காலிலிருந்த கான்வாஸ்ஷஉஸ் நனையாமல் நின்றுகொண்டு, தகரக் குவளையை அலம்பி, ஒரு குவளைத் தண்ணீரைக் குடித்தான். தண்ணீரை ‘மடக் மடக்’ கென்று குடிக்கும்போது அவசரத்தில் குவளைக்கும் வாய்க்குமிடையே இரண்டு பக்கத்திலும் தண்ணீர் வழிந்து அவன்மேலிருந்த கோட்டின் காலரை நனைக்கவே அவசர அவசரமாகத் தண்ணீரைத் தட்டிக்கொண்டே கோட்டின் மார்புப் பையிலிருந்த பீடியையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்து வேறு பைக்கு மாற்றிக்கொண்டான். மேலேறி வந்த பிறகு தகரக் குவளையைக் கீழே வைத்துவிட்டு, நின்று ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டான். புகையோடு சேர்த்துத் திருப்தியுடன் ஏப்பம் விட்டவாறு அவன் முனகிக் கொண்டான்.
‘நல்லாத்தான் இருக்கு…’ என்று வாய்விட்டு முனகிக் கொள்ளும்போதே மனசில் ‘–என்ன நல்லாருக்கு?’ என்ற கேள்வியும் பிறந்தது.
“எல்லாம்தான். தோ… இந்த நெலா, இந்தக் குளம்… அடிக்கிற காத்து, குடிக்கிற தண்ணி…பசி,சோறு, தூக்கம்-எல்லாந்தான். வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கு… பீடிச் சொகம் ஒண்ணு போதுமே’ ” என்று நெருப்புகனியக் கனியப் புகையை வாய் நிறைய இழுத்து ஊதினான். சிறிது நேரம் நின்று ஏதோ யோசனைக்குப்பின் சத்திரத்துத் திண்ணைக்கு வந்து ஒரு மூலையில் தகரக் குவளையைக் கவிழ்த்து வைத்து விட்டு, சுவரோரமாகக் கிடந்த கந்தல் துணியால் தரையைத் தட்டிவிட்டு உட்கார்ந்தான்.
“உலகம் இவ்வளவு அழகாயிருக்கு. இதைப் பார்க்கற எம் மனசு சந்தோஷப்படுது. ஆமா, எல்லாப்பொருளும் பார்த்தவங்க மனசை சந்தோஷப்பட வைக்கும்போது, நான்…நான் என்னைப் பார்த்தவுடனே ஒவ்வொருத்தர் முகத்திலேயும் ஏற்படற மாற்றம் இருக்கே, வியாதியாலே மரத்துப்போன என் உடம்புக்குத் தெரியாத வேதனை, பாவம் அவங்க மனசுக்குத் தெரியுது. அன்னக்கி ஒரு நாளு, ஒரு வீட்டுக்கு முன்னாடி போயி
அம்மா தாயே’ பசிக்குது’ன்னு நின்னப்ப, சாப்பிட்டுட்டு எச்சில் இலை கொண்டுவந்து வௌியே போட்ட ஒரு பொண்ணு என்னைப் பாத்துட்டு வாந்திவர்ரமாதிரி குமட்டிக்கிட்டு உள்ளே ஓடினப்புறம், ஒரு ஆளு வந்து எட்டிப் பார்த்துட்டு சொன்னானே… ‘அம்மா, வௌியே ஒரு தரித்திரம்வந்து நிக்குது; ஏதாவது போட்டு அனுப்பு. இவனெல்லாம் ஏன் தான் உசிரை வெச்சுக்கிட்டு இருக்கானோ இந்தத் தீராத நோயோடே’ ன்னு…
“அந்த வார்த்தையைக் கேட்டவுடனே அங்கே நிக்க முடியாமத் திரும்பினப்போ, ‘இந்தப்பா பரதேசி’ ன்னு கூப்பிட்ட அந்தக் குரல் இருக்கே, அதிலே இருந்த ஆறுதல்தான் உலகத்திலே வாழணும்னு ஆசை குடுத்திடிச்சி… ராமலிங்கசாமி மாதிரி காதோரத்திலே முக்காட்டுத் துணியைச்செருகிக்கிட்டு கையிலே சோத்தோட எதிரே’ என் பையன் கொஞ்சம் வாய்த்துடுக்கு…சாகறதும் இருக்கறதும் நம்ம கையிலா இருக்கு’ ன்னு சொல்லிக்கிட்டே கொவளையிலே சோத்தைப் போட்டாங்க.. நான் அந்த அம்மா முகத்தையே பார்த்துக்கிட்டு நின்னேன்.
தன் மகனைப் பார்த்து, ‘நீ சாகக்கூடாதா’ ன்னு யாரோ கேட்டுட்ட மாதிரி அவங்க கண்ணில தண்ணி கொட்டிக்கிட்டே இருந்தது…”
–அன்றைக்குப் பிறகு அவன் பகலில் பிச்சைக்குப் போவதில்லை. இருட்டிய பிறகு யார் கண்ணிலும் படாமல் தலையில் முக்காடிட்டுக்கொண்டுதான் போவான். மூன்று வேளைக்கும் முதல் நாளிரவு ஒருவேளை எடுத்த பிச்சைதான் சில நாட்களில் அதுவே அதிகமாகி அடுத்த நாளைக்கும் இருந்துவிடுவதும் உண்டு.
தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் நிறைவாக இருந்த வயிற்றைத் தடவி விட்டுக்கொண்டான். “சாப்பாடு கொஞ்சம் அதிகம்தான்…” என்று மறுபடியும் ஒரு ஏப்பம் விட்டவாறு, “முருகா” என்று எழுந்தான். தரையில் விரித்த கந்தலை எடுத்துத் தலையில் முண்டாசாகக் கட்டினான். மூலையில் இருந்த தடியையும் கையில் எடுத்துக்கொண்டு ஏரிக் கரையை நோக்கி நடந்தான்.
“ம்…உடம்பிலே வியாதி இருந்தா என்ன? உசிரு இருக்கறது நல்லாத்தான் இருக்கு. நாக்குக்கு ருசியா திங்கிற சொகம்; கண்ணுக்குக் குளிர்ச்சியா பாக்கற சொகம்; காதுக்கு எதமா கேட்கற சொகம்…வியாதி இருந்தால் இதெல்லாம் கெட்டுப்பூடுதா?…”
ஏரிக்கரையின் ஓரமாக ரயில்வே லைன் மேட்டுச் சரிவில் தடிக்கம்பை ஊன்றியவாறு உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் பீடிப் புகையைக் காற்றில் ஊதிவிட்டான்…
“அப்பாடா’ சாப்பிட்டவுடனே வயித்திலே என்னமோ ஒரு வலி’ திங்கறதிலே ஒண்ணும் சொகமில்லே: ஆனா, தின்னாத்தான் சொகம். ஒடம்பிலே சேத்துக்கறதா சொகம்? உடம்பிலேருந்து எல்லாத்தையும் போக்கிக்கறதிலேதான் சொகம். உடம்பையே போக்கிக்கிட்டா?… சொகந்தான்’ ஆனா, உடம்பிலே இருக்கிற சொரணையே போயிட்டா, சொகம் ஏது? ”
இப்பொழுது அவன் முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான். நிலவும் நட்சத்திரங்களும் அவன் கண்களுக்கும் அழகாகத்தான் தெரிந்தன.
“ம்….தோ… அதான் சப்தரிஸி மண்டலம். அந்த நாலு நச்சத்திரம் சதுரமா இருக்கு; அதுக்கு ஓரமா வாலு மாதிரி மூணு நீட்டிக்கிட்டு இருக்கே; அந்த மூணுலே நடுவாலே இருக்குதே, அதுக்குத் தள்ளி மங்கலா.. அதான் அருந்ததி நச்சத்திரம்…சர்த்தான், நமக்கு ஆயுசு கெட்டி’ அருந்ததி தெரியுதே… அம்மாஞ் சுளுவா எல்லாருக்கும் தெரியுமா அது? லேசா எழுதிக் கலைச்சிட்ட மாதிரி… புள்ளி மானத்திலே இருக்கா, கண்ணுலே இருக்கான்னு கண்ணைக் கசக்கிட்டு எங்கியுமில்லேன்னு சொல்லிடுவாங்க பலபேரு… அருந்ததியைப் பாத்தவனுக்கு ஆறுமாசத்துக்குச் சாவு இல்லேம்பாங்க…”
நிலவொளியில் பளபளத்துக்கொண்டிருக்கும் ஏரி நீரில் புரண்டு எழுந்து குளுமை பெற்றுவரும் தென்றல் காற்று அந்த வியாதிக்காரனின் உடலையும் தழுவத்தான் செய்தது. நீரின் அலைகள், சின்னஞ் சிறு கால்கள் சலங்கை அணிந்து சதிராய் நடந்து வருவதுபோல் தரையில் மோதி மோதித் தளதளக்கும் இனிய நாதத்தை அவன் செவிகளும் கேட்டன. கரையோரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த காட்டுப் பூக்களின் நெடிமிக்க போதை மணம் அவனது நாசியையும் துளைக்கத்தான் செய்தது… அவன் வாழ ஆசைப்படுவதில் என்ன தவறு?
வெகு நேரத்திற்குப் பிறகு தண்ணீரிலிருந்து கரையேறி வந்து, அங்கு கழற்றிப் போட்டிருந்த கான்வாஸ் ஷஉஸை எடுத்து குனிந்து நின்று காலில் அணிந்துகொண்டான்; அப்படியே அவன் தலை நிமிரும்போது…எதிரே…
நீண்டுசெல்லும் இருப்புப் பாதையில் வளைந்து திரும்பும் அந்தக் கண்ணுக்கெட்டிய எல்லையில் வௌிச்சம் தெரிந்தது…ஒரு துண்டு வௌிச்சம்தான். அந்த ஔிக்கீற்றின் அசைவால் தரையில்செல்லும் இருப்புப்பாதையிலும், வானில் செல்லும் தந்திக் கம்பிகளிலும் ஒரு ஜொலிப்புத் துண்டம், விட்டு விட்டுத் தாவிச் செல்லுவது போலிருந்தது. தூரத்தில் ரயில் வருகின்ற ஓசை லேசாகக் கேட்டது.
“அடேயப்பா’ மெயிலு வரானோ? மணி பன்னனெண்டா ஆயிடுச்சி’ ” என்று தண்டவாளத்தைக் கடப்பதற்காகக் கைத்தடியைச் சரிவில் ஊன்றித் தட்டுத் தடுமாறி ரயில்வே லைன் மேட்டின் மீது ஏறும்போது தூரத்தில்…
நீண்டு செல்லும் இருப்புப் பாதையின் வளைந்து திரும்பும் கண்ணுக்கெட்டிய எல்லையில் இரண்டடி உயரத்திற்கு, வௌபுள்ளிளையாய் அசைகின்ற உருவம்…ஏதாவது மிருகமா? அல்லது…
கால்களை மண்டியிட்டு தரையில் ஊர்ந்து வந்த அந்த மனித உருவம், ரயில்வேலைன் மீது ஏறியதும் எழுந்து நின்றது. சுற்றிலும் ஒருமுறை பார்த்து, தன் பின்னால் பிச்சைக்காரன் வரும் திசையைப் பார்க்கத் திரும்பியபோது அதற்குள் நிற்க முடியாமல் கால்கள் நடுங்க, மெல்லக் கைகளைத் தரையில் ஊன்றித் தண்டவாளத்தின்மீது உட்கார்ந்துகொண்டது. பிறகு உறுதியுடன் இரண்டு தண்டவாளங்களுக்கும் குறுக்காக விறைத்து நீட்டிப் படுத்துக்கொண்டது.
“அடச்சே, மனுசப்பயதான் டோய்’ உசிரை வெறுத்துட்டான் போல… ஐயையோ’ உங்களுக்கு ஏண்டா புத்தி இப்படி போவுது? வௌிச்சம் வேகமா வருதே’ ” என்று பதறியவாறு, விரல்களில்லாத பாதங்களுக்குப்பாதுகாப்பாய் இருந்த கான்வாஸ் ஷஉஸ் தேயத் தேய இழுத்தவாறு தாவித் தாவி ஓடிவந்த பிச்சைக்காரனின் செவிகளில் தூரத்து ரயில் சத்தம் பேரோசையாகக் கேட்டது.
ரயிலின் ஓசை சமீபித்துவிட்டது. பிச்சைக்காரன் ஓடி வந்த வேகத்தில், கண்களை இறுக மூடித் தண்டவாளத்தின் குறுக்காக விறைத்து நீட்டிக் கிடந்தவனின் விலாவுக் கடியில் கைத்தடியைக் கொடுத்து, மயானத்தில் பிணத்தைப் புரட்டுவது போல் நெம்பித் தள்ளினான். அவனைத் தள்ளிய வேகத்தில், வியாதிக்காரன் இரண்டு உள்ளங் கைகளாலும் பற்றிப் பிடித்திருந்த கைத்தடி எகிறி விழுந்தது. தண்டவாளத்திலிருந்து உருண்டு எழுந்த அந்த இளைஞன் ஒன்றும் புரியாமல் எதிரிலிருப்பவனை வெறித்து விழித்தான். மறுபடியும் தன்னைத் தள்ளிவிட்டு அவன் ரயிலின் முன்னே போய் விழுந்துவிடுவானோ என்ற பயத்துடன் தனது கைகள் இரண்டையும் அகல் விரித்துக்கொண்டு அவன் மீது பாய்வதுபோல் நின்று, “வேணாம் ஐயா, வேணாம்’ உசிரு போனா வராது…” என்று கெஞ்சினான் வியாதிக்காரன். அவன் முன்னே இரண்டு கால்களும் வெடவெடக்க உடலே நடுங்க நின்றிருந்தான் அந்த இளைஞன்.
அப்பொழுது ‘ஹோ’வென்ற பேரிரைச்சலோடு வந்த மெயில்வண்டி, அந்த இருவரின் மீது தன் நிழலை ஏற்றி இழுத்தவாறு கடகடத்து ஓடியது. ரயிலின் பேரோசை அருகே அதிர்ந்து நகரும்வரை மௌனமாய் நின்றிருந்த இருவரும், ரயில் அவர்களை கடந்து போனபின் அதன் பின்புறத்தைப் பார்த்தனர். செக்கச் சிவந்த ஒற்றை விளக்கு ஓடி ஓடித் தூரத்தில் மறைந்தது. நின்றிருந்த இளைஞன் கால்கள் நிலைக்காமல் உட்கார்ந்துக்கொண்டான். வியாதிக்காரன் கையிலிருந்து எகிறிப் போன கைத்தடியைத் தேடி எடுத்துக் கொண்டு வந்தான். “யோவ்’ உன்னைச் சொல்லி குத்தமில்லை ஐயா…இந்த எடத்து ராசி அப்படி’ ஆமா, இந்த எடத்துக்கு ஒரு காவு வேணுமினு இருக்கு. ஒண்ணு ரெண்டு உன்னோட மூணு ஆச்சு, நாளைக்கிப் பொழுது விடியட்டும்; ரெண்டு எலுமிச்சம் பழத்தையாவது வாங்கி வெக்கணும். முந்தாநாளு அப்படித்தான்–ஏரிக் கரையிலே யாரோ ஒரு அம்மாவும் ஐயாவும் கொழந்தையை விட்டுட்டு கட்டுச்சோத்தை அவுத்து வெச்சிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க… அதுக்கென்னா தெரியும் –பச்சைபுள்ளை’ நடந்து நடந்து வந்து தண்டவாளத்திலே ஏறிட்டுது…இந்த இடம்தான். ரயிலு வார நேரம்…அப்புறம், நான் பாத்துட்டேன்…வேற யாரையுங்காணோம். சர்த்தான், ஆபத்துக்குப் பாவமில்லேன்னு தொட்டுத் தூக்கிட்டேன்…” என்று சொல்லிவிட்டு ஒரு வநாடி மௌனமாகி நின்றான். பிறகு எதையோ நினைத்துப் பெருமூச்சுடன், ம்…..இருக்காதா…பெத்தவங்களுக்குத்தான் தெரியும் புள்ளை அருமை’ ” என்று தன் நினைவுக்கு அவனே சமாதானம் சொல்லிக்கொண்டு தொடர்ந்தான்; “எதுக்குச் சொல்ல வந்தேன்னா, இந்த இடத்து ராசி அப்படி இன்னக்கிக் காத்தாலே கூட ஒரு எருமை மாடு… ஆபத்துன்னு வந்தா மனுசனுக்கே புத்தி மாறிப்பூடுது. எருமை என்னா பண்ணும்? கூடுஸஉ வண்டி வந்துட்டான். இஞ்சினுக்காரன் ஊதறான்…ஊதறான்…இது என்னடான்னா, லைனைவுட்டு நவுறாம, நேரா ஓடிக்கினே இருக்குது. அவன் வந்த வேகத்திலே பிரேக் போட்டாப் புடிக்கிதா, என்னா எழவு?…ரயிலும் ஓடியாருது, எருமையும் ஓடுது. நானு ஒரு பக்கத்திலே ஓடி, கல்லுங்களை எடுத்து அடிச்சிக்கினே இருக்கேன். அப்புறம், சும்மா ஒரு மயிரிழையிலே தப்பிச்சிதுன்னு வெச்சிக்கியேன்…” என்று அந்த இடத்தின் ராசியை விவரித்தான் வியாதிக்காரன்.
அந்த இளைஞன் தலையைக் குனிந்து மௌனமாய் உட்கார்ந்திருந்தான். வியாதிக்காரன் ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். “நா” ஒருத்தன் இந்தப் பக்கந்தானே சுத்திக்கிட்டிருக்கேன்’ இப்ப என்னடான்னா, ஏதாவது ஆடு கீடு வந்து நிக்குதோன்னு ஓடியாந்தேன்…நல்லவேளை; ஒரு மனுஷனைச் சாவுலேருந்து தடுத்தாச்சி…ம்…நாம்பளா தடுக்கறோம்?…ஒனக்கு இன்னம் ஆயுசு இருக்கு…என்னமோ, தடுக்கணும்னு இருக்கு, தடுத்தாச்சி…இல்லாட்டி, மனுசன் தடுத்தா வர்ர சாவு நின்னுடப்போவுது?” என்று வாயில் புகையும் பீடியுடன் தோளில் கிடந்த துண்டை எடுத்துத் தலைப்பாகையைச் சுற்றிக்கொண்டான். பிறகு, மண்ணில் தலைகுனிந்தவாறு காலை மடக்கிப்போட்டு உட்கார்ந்திருந்த அந்த இளைஞனை மௌனமாக உற்றுப் பார்த்தான். அவன் அழகாக இருந்தான்; நல்ல நிறம். தலைமயிர் நிலா வௌிச்சத்தில் கருகருவெனப் பளபளத்தது. வௌபுள்ளிளை ஷர்ட்; எட்டுமுழ வேட்டி உடுத்தியிருந்தான். அவன் தன்னைப் போல் பரம ஏழையோ, பிச்சைக்காரனோ, வியாதிக்காரனோ அல்லவென்று தோன்றியது. ‘வறுமையோ பட்டினியின் கொடுமையோ அந்த இளைஞனிடம் தெரியவில்லை. பின் எதற்காகத் தற்கொலை செய்து கொள்ள வந்தான்?’ என்று தெரிந்துக்கொள்ளத் துடித்தது வியாதிக்காரனுக்கு.
“சர்த்தான், எந்திரிச்சி வாய்யா’ தோ…அங்கே சத்தரத்துத் திண்ணையிலே போயிக் குந்துவோம்…இந்தச் சத்தரம் இருக்கே…” என்று பேசிக்கொண்டே நடந்து திரும்பிப் பார்த்த பிச்சைக்காரன், அவன் இன்னும் எழுந்திருக்காமல் தூரத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். ‘என்னாயா, குந்திக்கினே இருக்கியே? இனிமே அடுத்த ரயிலு காத்தாலே ஆறு மணிக்கு வடக்கே போற பார்சலுதான்; வா போவோம் ஒலகத்துலே மனுசன்னு பொறந்துட்டா கஸ்டமும் இருக்கும் சொகமும் இருக்கும். கஸ்டத்துக்குப் பயந்து செத்துபூட்டா, சொகத்தை அனுபவிக்கிறது யாரு? கஸ்டத்தைப் பார்த்து சிரிக்கணுமய்யா. ஏன்னா, கஸ்டம் வருதுன்னா பின்னாடிச் சொகம் காத்துக்கிட்டு இருக்குதுன்னு அர்த்தம்…ம், எழுந்திரு, போலாம்…” என்று உற்சாகமாகப் பேசும் பிச்சைக்காரனை நிமிர்ந்து பார்த்துக் கலங்குகின்ற கண்களோடு முகத்தில் பரிதாபகரமான புன்சிரிப்போடு அந்த இளைஞன் எழுந்திருப்பதற்கு முன்னால் உதவிக்குக் கை நீட்டினான்.
“தெய்வமே’… இவன் கையை புடிச்சி நான் தூக்கறதாவது?’ என்று விலகிக்கொண்டான் பிச்சைக்காரன். அந்த இளைஞன் தன் முயற்சியால் கைகளை ஊன்றி ஒருவாறு எழுந்து நின்றான். பிறகு நிதானித்து, காலைப் பதனமாக ஊன்றி மறு காலை உயர்த்தும்போது தடுமாறி விழ இருந்தவன், பிச்சைக்காரனின் தோள்களைப் பிடித்துக்கொண்டு நின்றான். அவன் பிடித்த வேகத்தில் நிலைகுலைந்த பிச்சைக்காரன் சமாளித்தவாறு, அப்பொழுதுதான் அந்த இளைஞனின் கால்களைப் பார்த்தான். அவை பார்ப்பதற்கு ஒழுங்காக இருப்பன போன்று தோன்றின. என்றாலும் கணுக்காலில், தொடைகள் சேர்கின்ற இடம் முழுதும் — முழங்கால் மூட்டுக்கள் உறுதியற்று நடுங்கிக் கொண்டிருந்தன. முழங்காலுக்கு கீழே நான்கு புறமும் மடங்கும் தன்மையுடன் கால்கள் தொளதொளத்துச் சூம்பிக் கிடந்தன.
சற்று நேரத்துக்குமுன் தூரத்துப் பார்வைக்கு இரண்டடி உருவமாய்க் குறுகித் தெரிந்த அந்த உருவம் நினைவுக்கு வந்தது பிச்சைக்காரனுக்கு. அந்த இளைஞன் நடக்க முடியாமல் மண்டியிட்டுத் தவழ்ந்து வந்திருக்கிறான் என்பதை யூகித்து, “இந்தாய்யா’ இந்த கம்பை வச்சிக்கிட்டு நடக்கிறியா?” என்று கைத்தடியைக் கொடுத்தான்.
“ஊஹஉம், முடியாது. இப்பிடியே வர்ரேன்…நீ நடந்தா நானும் வருவேன்…” என்று அவன் தோள்களை இறுகப் பற்றியவாறு கூறினான் நொண்டி.
வியாதிக்காரன் லேசாகச் சிரித்தான். “கம்பு இல்லாம நானும் நடக்கமுடியாது…இருந்தாலும் சமாளிச்சிக்கிடலாம்னுதான் குடுத்தேன்…கையிலே கம்பு இருந்தா உன்னைத் தூக்கிக்கிட்டுகூட நடப்பேன்…வா போவோம்” என்று கைத்தடியைப் பூமியில் உறுதியாய் ஊன்றித் தாங்கித் தாங்கி நடந்த வியாதிக்காரனின் தோளில் தொங்குவதைப்போல் பிடித்துக்கொண்டு ஊனக் கால்களைத் தத்தித் தத்தி இழுத்தவாறு நகர்ந்தான் நொண்டி.
“ஐயா…”
“ம்….”
“ரொம்பப் பாரமா இருக்கேனா?….உம்….உம்…பார்த்து….”
“அதெல்லாம் ஒண்ணுமில்லே….பயப்படாம வா…”
“இப்பிடி எல்லாருக்கும் பாரமா இருக்கப் பிடிக்காமத்தான்…பிடிக்காமத்தான்…” என்று விம்மினான் நொண்டி.
—உசிரையே விட்டுடலாம்னு பாத்தியா? ஏய்யா எப்பப்பார்த்தாலும் உன்னைப் பத்தியே உனக்கு நெனப்பு?…”
“என்னாலே எல்லாருக்கும் கஷ்டம்தான்…”
அவர்கள் இருவரும் தட்டுத் தடுமாறிப் போய்க்கொண்டிருந்தார்கள்.
நொண்டியும் வியாதிக்காரனும் நிலா வௌிச்சம் இறங்கிக் கொண்டிருக்கும் திண்ணையில் படுத்திருந்தனர். வியாதிக்காரன் பாதிபடுத்தும் பாதி படுக்காமலும் தூணில் சாய்ந்து கால்களை நீட்டிக்கொண்டு பீடி புகைத்துக்கொண்டிருந்தான்..
“பீடி குடிக்கிறியா ஐயா?”
“வேண்டாம்; பழக்கமில்லை…” என்று குப்புறப் படுத்திருந்த நொண்டி பதில் சொன்னான். திடீரென்று குப்புறக் கிடந்த முகத்தைத் திருப்பி வியாதிக்காரனைக் கேட்டான் நொண்டி: “கஷ்டத்துக்கு அப்புறம்தான் சொகம்னு சொன்னியே…எனக்கு இனிமே ஏது சொகம்? சொகமே வராதுன்னு தெரிஞ்சும் எதுக்கு நான் இருக்கணும்?”
“சொகமே வராதுன்னு முடிவு சொல்லறதுக்கு நீ யாரு? கஷ்டம் வரப் போவுதுன்னு நீயா முன்கூட்டியே சொன்னே? அது திடீர்னு வந்தமாதிரி இது வராதா’….அதெல்லாம் அவன் பார்த்துச் சொல்லணும்” என்று வானத்தை நோக்கிப் புகையை ஊதினான் பிச்சைக்காரன்.
வியாதிக்காரனுக்கே தான் சொன்ன பதில் நொண்டியின் மனச் சமாதானத்துக்குத்தான் என்று தெரிந்தது.
“சாகப் படாது ஐயா…அதான் ஒரு நாளைக்கு எல்லாருமே சாகப் போறமே?… அதுவரைக்கும் இருந்துதான் சாவமே…” என்று சமாதானம் கூறினான். “அது சரி; நீ பாட்டுக்குச் சாகறதுக்கு வந்துட்டியே…உனக்கு தாயி, தகப்பன், குடும்பம்னு ஒண்ணுமில்லியா? என்னை மாதிரி அநாதைதானா?” என்றான் வியாதிக்காரன்.
“அம்மா…” என்று பெருமூச்செறிந்தவாறு எழுந்து உட்கார்ந்த நொண்டி, சில விநாடிகள் மௌனமாய்த் தலை குனிந்திருந்துவிட்டு, விம்மி விம்மி அழ ஆரம்பித்தான்.
“வருத்தப்படாதே ஐயா” என்று ஆறுதல் கூறினான் பிச்சைக்காரன். முகத்தைத் துடைத்துக் கொண்டு சொன்னான் இளைஞன்.
“அதோ தெரியுது பாரு” என்று ரயில்வே லைனுக்கு நேரே வரிசையாகத் தெரியும் சில வீடுகளின் கொல்லைப்புறத்தைக் காட்டி, “அங்கேதான் எனக்கு வீடு. அம்மா இருக்காங்க, தம்பி இருக்கான். தம்பிக்கிக் கல்யாணமாகிக் கொழந்தைகள்கூட இருக்கு. என்னாலேதான் யாருக்கும் உதவியுமில்லே, சந்தோஷமுமில்லே. நான் வயித்திலே ஜனித்ததிலிருந்து எங்க அம்மா என்னைச் சுமந்துகிட்டே இருக்காங்க. அம்மாவுக்கு ஒரே நம்பிக்கை–எனக்கு காலு வந்திடும்னு…எப்பப் பார்த்தாலும் தம்பிகிட்டே ‘அந்த டாக்டரைப் பார்க்கணும்னு பணத்தை வாங்கிக்கிட்டு டாக்டர்களைப் பார்த்ததுதான் மிச்சம். அவன் என்ன பண்ணுவான்?…வரவரத் தம்பியும் குடும்பஸ்தனாக மாறிப் புள்ளைகளும் பெண்டாட்டியுமா ஆனப்புறமும் நான் ஒரு சொமையா இருக்கிறதா? எனக்காக அம்மாவும் தம்பியும் தினம் சண்டை போடறாங்க…தம்பி கோவத்திலே என்னை நொண்டின்னு சொல்லிட்டான். அம்மா, ‘ஓ’ ன்னு அழுதுட்டாங்க’ என்று நொண்டி சொல்லும்போது வியாதிக்காரனின் மனசில், ராமலிங்கசாமி மாதிரி காதோரத்திலே முக்காட்டுத் துணியைச் சொருகிக்கொண்டு ‘பரதேசி’ ன்னு கூப்பிடும் அந்த குரலும் முகமும் தோன்றின. நீட்டிய காலகளின் முழந்தாள் முட்டுகளைப் பிசைந்துகொண்டே சொன்னான் நொண்டி:
“நேத்து ஏதோ ஒரு நாட்டு வைத்தியர் இந்தமாதிரிக் குறையெல்லாம் தீத்து வைக்கிறார்னு யாரோ சொன்னாங்க — அம்மா கையிலே இருந்த காசை முந்தானையிலே முடிஞ்சுண்டு ‘வாடா’ ன்னு உசிரைவாங்கி என்னை அழைச்சிண்டு போறப்ப நான் என்ன பண்ணுவேன், சொல்லு, சரின்னு அம்மா தோள்லே தொத்திண்டு போனேன். அந்த வைத்தியன் இருக்கிற இடம் நாலு மைல் இருக்கு…பஸ்ஸிலதான் போகணும்…போனோம்…அம்மா ஆசையிலே, வழக்கம்போல இல்லாம ஒரே தடவையிலேயே மண்ணு விழுந்திட்டுது…என் காலைப் பாத்துட்டு முடியாதுன்னுட்டான் அவன். ‘இவன் ஒண்ணும் நல்ல வைத்தியன் இல்லே…ஊரை ஏமாத்தறவன்’ னு என்னை அழைச்சிண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டாங்க அம்மா… பஸ்ஸிலே ஒரே கூட்டம்…”
ஒரு நிமிஷம் பேச்சை நிறுத்திக் கண் கலங்க எங்கோ பார்த்தவாறு வெறித்த விழிகளுடன் நெஞ்சில் பெருகி, தொண்டையில் அடைத்த துயரை விழுங்கினான் நொண்டி. அவன் வாழ்வின் மீது கொண்ட வெறுப்புக்கெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சி காரணமாய் அமைந்து அவனைச் சாவின் பீடத்துக்குக் கொண்டு வந்து தள்ளியதோ — அந்த நிகழ்ச்சி மனசில் தெரிந்தது. அதை மனசால் பார்த்துக்கொண்டே வியாதிக்காரனிடம் விவரித்தான் நொண்டி.
அந்த காட்சி —
வௌபுள்ளிளைப் புடவையுடுத்தி முக்காடிட்ட அந்த வயோதிகத் தாயின் தோளைப் பற்றி, தன்னுடலின் முழுப் பாரத்தையும் அவள் மேலே சுமத்திக்கொண்டு, “கட்டாலே போறவன்; யாராரோ சொன்னாளேன்னு நம்பி வந்தேன். இவன் ஒண்ணும் வைத்தியன் இல்லே; பில்லி சூனியம் வைக்கறவன்… நீ கவலைப்படாதேடா கண்ணா’ நான் உன்னை அடுத்த மாசம் வேலூர் மிஷன் ஆஸ்பத்திரிக்கி அழைச்சிண்டு போயி…” என்று ஏதோ சொல்ல வரும்போது, அவள் தோளில் நெற்றியைத் தேய்த்துக்கொள்வதுபோல் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொன்னான் மகன்:–
“எனக்குக் ‘காலில்லையே’ங்கற கவலைகூட இல்லேம்மா; நீ எனக்காகப்படற சிரமத்தைப் பார்த்தாத்தான் ரொம்பக் கஷ்டமா இருக்கம்மா…” என்று விம்முகின்ற குரலோடு அவள் தோளில் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே இருக்கும்போது, பஸ் வந்தது.
“கண்ணா, கெட்டியாப் பிடிச்சுக்கோ…பாத்து, பாத்து…இதோ, இப்பிடி உட்காந்துக்கோ” என்று மகனைச் சுமந்து இழுத்தவாறு பஸ்ஸில் அவள் ஏறுவதற்குள், முன்பக்கத்தில் டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்த கண்டக்டர்,”ஆச்சா? எவ்வளவு நாழி?” என்று அவசரப்படுத்தினான். ஒருவாறு சிரமத்திற்குப்பின் பஸ்ஸில் ஏறியதும், எதிரில் இருந்த இருவர் உட்காரும் ஸீட்டில் மகனைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு உட்கார்ந்தாள் அம்மா.
பஸ் போய்க்கொண்டிருக்கும்போது, அவனது தாய் சேலைத் தலைப்பிலிருந்த சில்லறையை எடுக்கும்போது, அவன் அகஸ்மாத்தாகத் திரும்பும்போது அவர்கள் ஸீட்டுக்கு மேலே எழுதியிருந்த ‘பெண்கள்’ என்ற வாசகம் அவன் கண்களில் பட்டது. அப்பொழுது ஒரு ஸ்டாப்பில் பஸ் நின்றது. அழகிய இளம் பெண்ணொருத்தி பஸ்ஸில் ஏறினாள். அவளைப் பார்த்தவாறே அருகில் வந்தான் கண்டக்டர். நொண்டி ஒரு விநாடி பெண்ணைப் பார்த்தான்; அவளது இடத்தில் தான் உட்கார்ந்திருப்பதை உணரும்போது அவனது ஆண்மை உணர்ச்சி அவனுள் ரகசியமாக வதைபட்டுக் கொண்டிருக்கும் அதே சமயம், அதைக் கொல்லுவதுபோல் கண்டக்டரின் குரல் ஒலித்தது: “இந்தாய்யா ஆம்பளே’ பொம்மனாட்டி நிக்கிறாங்க இல்லே?”
அந்த நொண்டி திடீரென்று கால்கள் வந்துவிட்டது போல் எழுந்து நின்றான். அவன் எழுந்த வேகத்தில் அந்தப் பெண் அந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டாள். எழுந்து நின்ற நொண்டியின் கால்கள் நடுங்கின…
“ஐயா’…ஐயா’ “என்ற தாயின் பரிதாபகரமான குரல் கண்டக்டரையும், அந்த பெண்ணையும் பஸ்ஸிலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்னொருவர் சொல்லித்தன் காதால் கேட்கப் பொறாத அந்த வார்த்தையை அவளே சொல்லவேண்டிய நிர்ப்பந்தம்… “ஐயா’ அவன் நொண்டி ஐயா’ நிக்க முடியாதையா’….” என்று சொல்லிக் கண்களில் வழிந்த கண்ணீருடன் எழுந்து தன் இடத்தைக்காட்டி, “கண்ணா, நீ இப்படி உக்காந்துக்கோடா” என்று சொல்லும்போது தடுமாறி விழ இருந்த மகன், தாயின் தோளைப் பிடித்துக்கொண்டு சொன்னான்; ‘இல்லேம்மா, நான் நிப்பேன்.”
“உன்னாலே முடியாது கண்ணா” என்று அந்தப் பெண்ணின் பக்கத்தில் மகனை உட்கார வைத்து அந்தத் தாய் நிற்கும்போது, அந்தப் பெண் எழுந்து அவன் தாயிடம் மன்னிப்புக் கேட்பதுபோல், “நீங்க உக்காருங்க அம்மா” என்று வற்புறுத்திக் கெஞ்சினாள். கண்டக்டரின் முகம் அழுவதுபோல் மாறிவிட்டது “ஸார், மன்னிச்சுக்குங்க, எனக்கு முதல்லே தெரியலை ஸார்…” என்று நொண்டியிடம் குனிந்து சொன்னான். நொண்டி யாருக்கும் ஒன்றும் பதில் சொல்லாமல், யார் முகத்தையும் பார்க்காமல், பக்கத்தில் அமர்ந்திருந்த தாயின் பின்னால் ஒரு குழந்தையைப்போல் முகம் புதைத்து, அழுகையை அடக்கி, நெற்றியை அவள் தோளில் தேய்த்துக் கொண்டே இருந்தான்.
பஸ் போய்க் கொண்டிருந்தது. பஸ்ஸிலிருந்த எல்லோரின் அநுதாபமும் அவன் நெஞ்சில் கனமேற்றி அவன் உயிரையே அரிப்பதுபோல்…
—நொண்டி சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் மௌனமாய்க் கேட்டவாறிருந்த வியாதிக்காரன் தன்னைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தான்.
‘இவனுக்கு இன்னும் வயசு இருக்கு, வாழ்க்கை இருக்கு… இவனுக்கு ஒரு கஸ்டம்னா வருத்தப்படறதுக்கு, உதவி செய்யறதுக்கு உறவுக்காரங்க இருக்காங்க. இவன் வாழணுன்னு ஆசைப்படறதுக்கு அன்பான தாய் இருக்கா…இவன் நொண்டின்னு தெரிஞ்சு அன்பு காட்ட, பரிதாபப்பட, பிரியம்காட்ட உலகமே இருக்கு….இவன் எதுக்கு சாகணும்?’ என்று ஆரம்பித்த மனம் தன்னைப்பற்றி எண்ணும்போது…
‘எனக்கு யார் இருக்கா? எனக்கு ஒரு கஸ்டம்னா, வருத்தப்படறதுக்கு, உதவி செய்யறதுக்கு உறவு இருக்கா? உறவுங்கெல்லாம் உதறித்தள்ளி எத்தனையோ காலம் ஆயிடுச்சே? நான் வாளணும்னு ஆசைப்படற ஜீவன் என்னைத் தவிர இன்னொண்ணு உண்டா? எனக்கு அன்பு காட்ட, பரிதாபப்பட, பிரியங்காட்ட யார் இருக்கா? உலகமே வெறுத்து முகம் சுளிச்சு என்னைப் பாக்குது’ என்றெல்லாம் எண்ணி மௌனமாய் உட்கார்ந்திருந்தான் வியாதிக்காரன்.
நொண்டியின் இமைகளைத் தூக்கம் அழுத்த, அவன் கொட்டாவி விட்டான். அந்த சப்தம் கேட்டு வியாதிக்காரன் நொண்டியைப் பார்த்தான், “இந்தாய்யா, நீ சாகப்படாது,….சொல்லிட்டேன். ஒனக்குக் காலு இல்லேங்கிற நெனப்பினாலேதான் நீ கஸ்டப்படறே, மத்தவங்களையும் கஸ்டப்படுத்தறே.”
“நான்தான் சொல்றேனே, எனக்குக் காலில்லாம மத்தவங்களுக்குத் தான் பாரமா இருக்கேனே’ எங்கம்மா வைத்தியனுக்குன்னு தம்பியைப் பணம் கேக்கறப்போ அவங்க ரெண்டு பேருக்கும் என்னாலே எவ்வளவு சண்டை’ எவ்வளவு வருத்தம்’ ” என்று நொண்டி சொல்ல, குறுக்கிட்ட வியாதிக்காரன், “ஆமாய்யா, நீ சதாநேரமும் உங்கம்மா தோளைப் புடிச்சுத் தொங்கிக்கிட்டே இருந்தா அப்படித்தான் சண்டை வரும். காலு இல்லாட்டிப்போனா என்னாய்யா? கையாலே இந்த உலகத்தையே வளைக்கலாமே’ வாழ்றத்துக்குக் காலும் கையும் வேணாமய்யா. நல்ல மனசு வேணும், அறிவு வேணும். மனுசனோட அறிவு யானையைக் காட்டிலும் சிங்கத்தை காட்டிலும் வலுவானது. இல்லேங்கறதுக்காகச் செத்து இருந்தா மனுச சாதியே பூண்டத்துப்போயிருக்கும். காலு இல்லாட்டி அது இல்லாத் கொறையை மாத்திக்கிட்டு எப்படி இருக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்னா, காலு இருக்கிறங்களைக்காட்டிலும் நீ வேகமா ஓடிடமாட்டியா?
“மனுசனுக்கு ரெக்கை இருந்திருந்தா அவனும் பறந்துகிட்டிருப்பான். ரெக்கை இல்லாததனாலேதான் ‘விர்ரு விர்ரு’ ன்னு இப்ப ஏரோப்ளேன்லே பறக்கிறான். இன்னும் மானத்துலே எங்கெங்கேயோ போயி என்னென்னாத்தையோ புடிக்கிறான். இல்லேன்னு சாவறதா? உங்கம்மாவேதான், என் மகனுக்குக் காலு இல்லாட்டி என்னா, என்னென்னா காரியம் பண்றான்னு நெனைக்க வெச்சிட்டியினா அவுங்க ஏன் உன் தம்பிகிட்டே போயி வம்புக்கு நிக்கப் போறாங்க? நீ என்னா என்னை மாதிரி தீராத நோயாளியா? நானே வாழறப்போ நீ சாகப்போறேங்கறியே…” என்று சொல்லும்போது வியாதிக்காரனின் தொண்டை அடைத்தது. அவனது பேச்சால் வியாதிக்காரனின் நெஞ்சிலிருந்து, வாழவேண்டுமென்ற ஆசை, வாழ முடியும் என்ற நம்பிக்கை நொண்டியின் இதயத்தில் தொற்ற ஆரம்பித்தது. நொண்டி புதியதோர் நம்பிக்கையுடன் தலை நிமிர்த்தி வியாதிக்காரனைப் பார்த்தான். வியாதிக்காரன் தொடர்ந்தான்.
“நீ என்னமோ சொல்றியே, பஸ்ஸிலே உன்னை எந்திரிக்கச் சொன்னான், அப்புறம் உட்காரச் சொன்னான்னு… அதுக்காக உன் மனசு கஸ்டப்பட்டது, நாயந்தான். தோ, என்னைப்பாரு. என்னை அந்த பஸ்ஸிலே ஏறவுடுவானாய்யா? நீ என்னைப் பகல்லே பாத்தா இப்பிடி பக்கத்திலே உக்காந்து பேசக்கூட மாட்டே, தோ… வௌிச்சத்திலே பாரு இந்தக் கையை” என்று தன் குறைபட்ட கைகளை மேலே இருந்த கோட்டை இழுத்து விட்டுக் கொண்டு நிலா வௌிச்சத்தில் நீட்டி விம்மினான்: “இந்தக் கை கொஞ்ச நாளைக்கு முன்னே முழுசா இருந்தது. உனக்குக் காலு இல்லே– அவ்வளவுதான். எனக்கு இருக்கிறதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இல்லாமாப் போயிக்கிட்டே இருக்கு… இந்தக் கையாலே முந்தாநாளு ஒரு கொழந்தையைத் தூக்கிட்டேன். கொழந்தையைத் தூக்கணும்கிற ஆசையினாலேயா தூக்கினேன்? சீ அந்த ஆசை எனக்கு வரலாமா? தண்டவாளத்திலே வந்து நிக்குதே, ரயிலு வர்ர நேரமாச்சேன்னு பதறித்தூக்கிட்டேன். நான் வியாதிக்காரந்தான். என் உடம்பிலே சொரணைன் அத்தே போயிடுச்சி. ஆனாலும் ஒரு குழந்தையை தூக்கறோம்கிற நெனைப்பிலேயே என் மனம் சிலிர்த்துப் போச்சு… ஆனா, ஆனா…. அதுக்காக அந்தப் பெத்தவங்க என்னை அடிக்க வந்துட்டாங்க, தெரியுமாய்யா?… மனுசனாப் பொறந்தும், மனுசனுக்குள்ள எந்தச் சொகத்தையும், எந்த உரிமையையும் அநுபவிக்க முடியாம் நான் வாழறேனே… ஒரு பிசாசு மாதிரி தனியா குந்திக்கிட்டு, வாழறதா நெனச்சி என்னையே ஏமாத்திக்கிறேனே” என்று சொல்லும்போது கொஞ்சம் கொஞ்சமாக விம்ம ஆரம்பித்து விக்கிவிக்கி அழுதான் வியாதிக்காரன்.
சற்று நேரத்திற்குப்பின் கண்களைத் துடைத்துக் கொண்டு ஒரு வரண்ட சிரிப்புடன் சொன்னான்: “ஆமா, பெத்தவங்களுக்குத் தெரியும் புள்ளை அருமை…. சாவைக் காட்டிலும் கொடியது இல்லையா, இந்த நோயி? அப்புறம் விஷயத்தைச் சொன்னப்புறம் ஒருமாதிரி சமாதானம் ஆனாங்க…அப்பக்கூட, ‘ஒரு கொரலு, எங்களைக் கூப்பிட வேண்டியதுதானே…நீயா தூக்கறது?’ன்னு கேட்டிச்சி —அந்த அம்மா. ‘நீங்க சொல்றது நாயந்தான். தெரியாம செஞ்சிட்டே’ ன்னு மன்னிப்பு கேட்டுகிட்டு வந்தேன், ஏன்னா, இது பொல்லாத நோயி, மனுசனுக்கு வரக்கூடாது; ஆரம்ப காலம்னா தீத்துடலாம். இது ரொம்ப முத்தின கேஸஉ’ இனிமே கொறையாது; பரவும். மத்தவங்க ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். ஒரு தாய்க்குத் தன் குழந்தை செத்தாலும் பரவாயில்லே; இந்த நோய்வரப் பொறுக்கமாட்டா” என்று அவன் தன்னையுணர்ந்து தனக்குள் முனகுவதுபோல் பேசினான்.
சில நிமிஷ மௌனத்துக்குப் பிறகு நொண்டி இரண்டாவது முறை கொட்டாவி விட்டான்.
“தூக்கம் வருதா? படுத்துக்க, ஐயா’ தூங்கர்து ரொம்பச் சொகம். செத்தாத் தூங்கமுடியாது, கேட்டுக்க, பொழுது விடிஞ்சி பெத்த மகராசிக்குப் புள்ளையாப் போய்ச் சேரு’ உனக்கு நான் கடைசியாச் சொல்றது இதுதான்: காலு இல்லேன்னு நெனச்சி நீ யாருக்கும் பாரமா இருக்காதே. இப்ப யாரோட துணையுமில்லாம எப்பிடி சாக வந்தியோ, அந்த மாதிரி வாழப் போ. அதிலே ஒண்ணும் வெக்கப்படவேணாம். உன்னையே பாத்து உங்கம்மா மகிழ்ந்து போவாங்க, பாரு…” என்று, அணைந்திருந்த கடைசிப் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான் வியாதிக்காரன். படுத்த சற்று நேரத்துக்கெல்லாம் நொண்டி தூங்கிப் போனான். வியாதிக்காரன் தூக்கம் வராமல், கீழே கிடந்த துண்டுப் பீடிகளைப் பொறுக்கிப் பற்றவைத்துக் கொண்டு தூணில் சாய்ந்து வானத்தை வெறித்தவாறு உட்கார்ந்திருந்தான்.
“அதோ, ரொம்ப தூரம் தள்ளி வந்திருச்சே சப்தரிஸி மண்டலம்…நாலு நச்சத்திரச் சதுரத்திக்கு ஓரமா, வாலு மாதிரி இருக்கற மூணுக்கு நடுவாலே, ஓரத்திலே, ஆமாமா, அருந்ததி…அருந்ததியைப் பார்த்தவனுக்கு ஆறு மாசத்துக்குச் சாவில்லே’ அடிச் செருப்பாலே’ இன்னும் ஆயுசு அதிகம் வேணுமா என் கட்டைக்கி?” என்று விரக்தியும் வேதனையும் குழைய முனகிக்கொண்ட வியாதிக்காரன், கையிலிருந்த பீடியைத் தரையில் நசுக்கித் தேய்த்தான். அவன் பார்வை சப்தரிஷி மண்டலத்தை வெறித்தது.
விடிந்து ஆறு மணிக்கு வடக்கே போகும் பார்சல் வண்டியின் அவலமான கூக்குரல் கேட்டு, சத்திரத்துத் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த நொண்டி கண் விழித்தான்.
அவனருகே வியாதிக்காரனின் கறை படிந்த கந்தலும், பளபளப்பான புதிய தகரக் குவளையும் தனியாகக் கிடந்தன. அங்கே ஈக்கள் மொய்த்தன.
தூரத்தில், நீண்டு செல்லும் இருப்புப் பாதையின் வளைந்து திரும்பும் எல்லையில் புகை கக்கி அழுதவாறு பார்சல் வண்டி நின்றிருந்தது’ அங்கு மனிதர்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர்.
“இங்கே சுத்திக்கினு இருப்பானே — அந்தப் பெருவியாதிக்காரன், ரயிலு முன்னாடி போயி விழுந்துட்டான்’…”
“அவன் எனக்கு வாழக் கற்றுக் கொடுத்தான்; நான் அவனுக்குச் சாகக் கற்றுக் கொடுத்தேன். அவன் என்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால்?” –நொண்டியின் கண்கள் கலங்கின.
“அந்த இடத்தின் ராசியோ?–தன்னையே காவு தந்து இன்னொரு விபத்து ஏற்படாமல் தடுக்க முயற்சியோ? அவன் மேனியிலிருந்ததா பயங்கர தொத்து வியாதி?…இல்லை; என் மனசில் தோன்றியதே—தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் –அந்த ‘வாழ்க்கையின் வெறுப்பு’ த்தான் பயங்கர வியாதி…அதற்கு அவன் பலியாகிவிட்டான்.”
திடீரென்று ரெயில்வே லைனுக்கு அப்பால் வரிசையாகத் தெரியும் வீடுகளின் கொல்லைப்புறக் கதவுகளைத் திறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோரின் நடுவே இருந்து, “ஐயோ’ கண்ணா’ ” என்ற அலறல் ரயில்வே லைனுக்கு அப்பால் வெகு தூரத்திலிருந்த நொண்டியின் வயிற்றைக் கலக்கியது.
“அம்மா’ நான் இருக்கிறேன்….அம்மா’ ” என்று கோஷித்தவாறு வேகமாய்த் தவழ்ந்தோடினான் அவள் மகன்.
“மகனே’….மகனே’…” என்று ரயில்வே லைன் மேட்டின் மீது விழுந்து புரண்டு கொண்டிருந்த அவன் தாய் ‘நான் இருக்கேன்’ என்ற குரல் கேட்டு அவனைப் பார்த்து ஒன்றும் புரியாமல் அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் சிரித்தாள். பிறகு, “யார் பெத்த மகனோ’ ” ரயில் சக்கரத்தைப் பார்த்து அழுதாள்.
அவள் அருகே வந்த அவள் மகன் அவள் தோளில் முகம் புதைத்து நெற்றியைத் தேய்த்து அழுதுகொண்டே சொன்னான்: “அம்மா’ நான் இருக்கேம்மா…அது உன் மகனில்லே… அது. அந்த மனுஷன்…அவன் செத்திருக்கக் கூடாது அம்மா….ஆ’….” என்று பெருங்குரலில் கதறி அழுதான் நொண்டி.
முற்றும்
சுயதரிசனம்
அந்த வாரப் பத்திரிகையில் தனக்கு உதவி ஆசிரியர் உத்தியோகம் என்று கௌரவமாகச் சொல்லிக் கொண்டு – ஒவ்வொரு நாளும் வந்து குவியும் கதைகளுக்கெல்லாம் அனுப்பியவர்களின் விலாசங்களைப் பதிவு செய்தும், பிரசுரிக்காமல் தள்ளப்பட்ட கதைகளை ‘வருந்துகிறோம்’ ஸ்டாம்பு குத்தித் திருப்பி அனுப்பியும் – விலாசமெழுதிக் கொண்டிருப்பதையே பணியாகக் கொண்டுள்ள சிவராமனுக்கு, இன்று அவன் பெயருக்கே ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்த நீளக் கவரின் மீது ‘சிவராமன், உதவி ஆசிரியர்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டதில் அவனுக்குச் சற்றுப் பெருமிதம்தான்!
அந்த நீளக் கவரின் வாய்ப்புறத்தை இரண்டு விரல்களால் பிடித்து லாகவமாக வளைவு வளைவாய்க் கிழித்துப் பிரிக்கிறான் சிவராமன். அதனுள் ஒரு கத்தைக் காகிதமிருந்தும் அதன் நடுவே இருந்து ‘இது கடிதம்’ என்று சொல்வதுபோல் தனியாக விழுந்த ஒரு காகிதத்தை எடுத்துப் படிக்கிறான் அவன்.
“சிரஞ்சீவி சிவராமனுக்கு அநேக ஆசிர்வாதம். பகவான் கிருபையால் உனக்கு சகல சௌபாக்கியங்களும் உண்டாகணும்.
உங்கள் எல்லாரையும் பார்த்து நேரிடையாகச் சொல்லிண்டு வராமப் போனதை நெனைச்சா கஷ்டமாத்தான் இருக்கு… இருந்தாலும் பரவாயில்லை. யோசிச்சுப் பார்க்கச்சே, ஆசையும் உறவும் மனசிலே ஆழமா இருந்தா, உதட்டோட சொல்ற வார்த்தையெல்லாம் அநாவசியம்னு தோண்றது. ஆனாலும் அப்படி யெல்லாம் நெனைச்சுண்டு ஒரு தீர்மானத்தோட நான் சொல்லிக்காம வந்துடல்லே. சொல்லிக்கறதுக்கு எனக்குத் தைரியம் வரலே… சொல்லிக்க முடியல்லே… அவ்வளவுதான்; வந்துட்டேன். ஆமாம்; எதையுமே சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும். என் அனுபவத்திலே செய்யறதுகூட சுலபம்; சொல்றதுதான் கஷ்டமாயிருக்கு…. அதான் சிரமம். நன்னா யோசிச்சுப் பாரு. நீ யோசிக்கிறவன்; கதை எழுதறவன்… நல்லதும் கெட்டதுமா எத்தனையோ விஷயங்களைச் செஞ்சுடறோம்… அதையெல்லாம் அலசிப் பிச்சுச் சொல்றதுன்னா முடியற காரியமா? நான் இப்படி ஓடி வந்துடறதுன்னு முடிவு பண்ணிண்டு உங்ககிட்டேயெல்லாம் சொல்லிண்டு போக வந்திருந்தேன்னா… சொல்லி இருப்பேன் – கடைசியிலே மனசு கேக்காம அங்கேயே உக்காந்துண்டிருந்திருப்பேன். எனக்குத் தெரியும்; நான் போறேன்னா நீங்க யாரும் அழமாட்டேள்னு… ஆனா நான் அழுவேனே!… உன் ஆத்துக்காரி என் காதிலே விழட்டும்னே, நான் இருக்கிறது தெரியாத மாதிரி சொல்லுவாளே ‘அசட்டு பிராம்ணன்’னு… அது நெஜந்தான்! சரி. இப்ப நான் வந்துட்டேன். எங்கே இருக்கேன், என்ன பண்றேன்னு எல்லாம் தெரிஞ்சுக்க உன் மனசிலே ஒரு துடிப்பு இருக்கும்னு எனக்குப் புரியறது. இந்தக் கடுதாசியோடு ஒரு கத்தைக் காகிதம் கிறுக்கி அனுப்பி இருக்கேனே… அதை எப்பவாவது போது இருக்கச்சே – போது போகலேன்னா படிச்சுப்பாரு. என்னை, என் மனச்சாட்சியை நீ புரிஞ்சுக்கலாம். நீ புரிஞ்சுப்பேன்னு நெனைக்கறேன்… நீ புரிஞ்சுண்டாலும் புரிஞ்சுக்கல்லேன்னாலும் எனக்குக் கவலை இல்லே… இந்த ஒரு மாசமா உனக்கு ஒரு கடுதாசி எழுதணும் எழுதணும்னு ஏனோ தோணிண்டே, எழுதலியேன்னு உறுத்திண்டே இருந்தது. சத்தியமாச் சொன்னா இந்தக் கடுதாசியைத் தவிர மீதி இருக்கற ஒரு கத்தைக் காகிதத்தை உனக்காக நான் எழுதல்லே… நானா, எனக்குத் தோணினதெ யெல்லாம் எதுக்குன்னு தெரியாமலே எழுதிண்டே இருந்தேன்; இன்னும் எழுதிண்டிருக்கேன்… இது என்னை நானே பார்த்துக்கற பார்வை, சுயவிமரிசனம்…. இல்லே, சுயதரிசனம்! திடீர்னு என்னமோ தோணித்து; எழுதின வரைக்கும் அந்த நோட்டு புக்கிலிருந்து பிச்சு எடுத்து உனக்கு அனுப்பறேன். இதுவும் ஒரு அசட்டுத்தனமோ என்னமோ? ஆனா ஒண்ணு, உன் ஆத்துக்காரியிடம் சொல்லு: ‘அசடு பிராம்ணனா இருக்கப்படாது; அசடா இருந்தா அவன் பிராம்மணனில்லே; பிராம்ணன்னா ஞானப் பொக்கிஷம்னு அர்த்தம்’… அந்தக் குலத்திலே பொறந்து, ‘கணபதி’ன்னு பெத்தவா சூட்டினபேரை இழந்து ‘அசட்டு சாஸ்திரி, தத்தி சாஸ்திரி’ன்னே அறுபது வருஷமா பட்டம் வாங்கிண்டு இருந்திருக்கேன். சரி, போனது போச்சு. இப்ப நான் சந்தோஷமா கௌரவமா – அறுபது வயசுக்கப்புறம் – இப்பத்தான் சந்தோஷமா இருக்கேன். ப்ராப்தம் இருந்தால் எங்கேயோ எப்பவோ நாம சந்திக்கலாம். என்னை நீங்கல்லாம் மறந்துட்டாலும் பாதகமில்லை. என்னால் எதையுமே மறக்க முடியல்லே…
இப்படிக்கு உன் தகப்பனார் கணபதி…”
– கையெழுத்திட்ட இடத்தில் கணபதி சாஸ்திரிகள் என்று எழுதி, சாஸ்திரிகள் என்ற வார்த்தை அடித்து நைக்கப்பட்டிருக்கிறது.
கவருக்குள்ளிருந்து அந்த ஒரு கத்தைக் காகிதத்தைப் பத்திரிகை ஆசிரியர் தோரணையில் கையில் எடுத்து எத்தனை பக்கங்கள் என்று அறிய அவன் கடைசித் தாளை நீக்கிப் பார்க்கிறான். அதில் பக்க எண் எதுவுமில்லை. அந்தக் காகிதங்கள் அனைத்தும் ஒரு நோட்டுப் புத்தகத்திலிருந்து பிய்த்தெடுக்கப்ட்டிருந்ததால் ஓரத்தில் ஒழுங்கற்ற பிசிறுகளுடன் இருக்கின்றன. அவற்றில் சில பக்கங்களில் பென்சிலாலும் சில பக்கங்களில் பேனாவாலும் – தீர்க்கமான சிந்தனையோடு பல காலம் மனசில் ஊறிவரும் தௌிவு மிகுந்த கருத்துக்களானதால் – அடித்தல் திருத்தல் ஏதுமின்றி எழுதப்பட்டிருக்கிறது. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட வேண்டும் என்ற ஆர்வமிருந்தும் ஆபிசில் அதற்கு நேரமில்லாது வேலை குவிந்திருப்பதால் அந்தக் கடிதத்தைப் பத்திரமாக மடித்துத் தன் கைப்பையில் வைத்துக் கொள்கிறான் சிவராமன். அதைப் பைக்குள் வைக்குமுன் அந்தக் கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்றறிய உறையையும் கடிதத்தையும் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான். அனுப்பியோர் விலாசம் ஏதும் அதில் இல்லை. எனினும் தபால் முத்திரையிலிருந்து அக்கடிதம் புது டில்லியிலிருந்து வந்திருப்பதைக் கண்டு ஒரு வினாடி பிரமித்து விழிக்கிறான் சிவராமன்.
‘இந்த அப்பா என்ன துணிச்சலோடு இவ்வளவு தூரம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிருக்கிறார்!’ என்று எண்ணியபோது, கள்ளங் கபடு அறியாத அந்த அப்பாவி உள்ளம் இந்த வாழ்க்கையில் எந்த அளவுக்குக் கைத்து நொந்து போயிருக்கும் என்ற – அறிவில் விளையாத, மனத்தில் சுரந்த – உணர்வில் அவனது கண்கள் கலங்குகின்றன.
– அந்த வினாடி அவன் தனது தந்தையின், அந்த அசட்டுப் பிராம்மணரின் – தாடி மழிக்காத, நரைத்த ரோமக்கட்டை அடர்ந்த, முன் பல் விழுந்த, அம்மைத் தழும்புகள் நிறைந்த, மாறு கண் பார்வையோடு கூடிய கரிய முக விலாசத்தைக் கற்பனை செய்து கண்ணெதிரே காண்கிறான்.
2
கணபதி சாஸ்திரிகள் போன மாசம் அமாவாசைக்கு அடுத்த நாள் திடீரென்று காணாமல் போய்விட்டார்….
முதல் இரண்டு நாட்கள் அவரது குடும்பத்தினர் – குடும்பத்தினர் என்றால் வேறு யார்? அவரது இரண்டு பிள்ளைகளான சிவராமனும் மணியும்தான் – அவர்கள் அதற்காக அதிகம் கவலை கொள்ள வில்லை.
நான்கைந்து சாஸ்திரிகளோடு அவர் காஞ்சிபுரம் போயிருப்பதாக யாரோ சொல்லக் கேட்டு, “போகிற மனுஷர் ஆத்திலே வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போகப்படாதோ? நெனச்சப்போ வரதும் போறதும்… இது என்ன சத்திரமா சாவடியா?” என்று மொறுமொறுவென அவரைத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள் அவரது மாட்டுப் பெண் ராஜம். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த நான்கு சாஸ்திரிகளூம் திரும்பி வந்து கணபதி சாஸ்திரிகள் தங்களுடன் வரவில்லை என்று தெரிவித்த அந்த நிமிஷமே ராஜம் ஒரு வினாடி திகைத்து, அந்தத் திகைப்புக்குப் பின்னர் அவரைத் திட்டுவதை நிறுத்திக் கொண்டாள்.
‘எங்கே போயிருப்பார்? எங்கே போயிருப்பார்?’ என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டாள். வேறு மகளோ, அவரை மதித்து அன்புடன் உபசரிக்கும் உறவினரோ யாருமில்லாத அவரது நிலையை எண்ணி யெண்ணித் தனக்குள் பெருமூச்செறிந்தாள். சிவராமனின் மனத்திலும் லேசான கலக்கம் குடிகொண்டது.
தினசரி மாலையில் ஆபிசிலிருந்து வரும்போது, வழியில் உள்ள தெப்பக்குளச் சுவரின்மீது வரிசையாய் உட்கார்ந்து உரத்த குரலில் வாக்கு வாதங்களில் ஈடுபட்டிருக்கும் சாஸ்திரிகளின் சபையில் தன் தகப்பனார் இருக்கிறாரா? என்று சிவராமனின் கண்கள் அலைந்து அலைந்து தேடி ஏமாந்தன.
– அவனுக்குத் தெரியுமா, ஊரில் இருக்கும்போது கூட, இந்தக் கூட்டத்திலிருந்து ஒதுங்கித் தனித்தே அவர் நிற்பார் என்பது… அது சரி, அந்த அசட்டு பிராம்மணரை யார்தான் சேர்த்துக் கொள்வார்கள்.
நாளுக்கு நாள் தன் தந்தையின் மீது ‘அவர் என்ன ஆனாரோ, எங்கே நிற்கிறாரோ, அல்லது வேறு ஏதாவது’… என்று எண்ணியெண்ணி அவர்பால் தன் மனத்துக்குள் ஒரு ரகசியமான ஏக்கம் மிகுந்து கனப்பதை அவன் உணர ஆரம்பித்தான். எனினும் அது பற்றி வௌிப்படையாய் விசாரிக்கவோ பேசவோ அவன் வெட்கப்பட்டான். தன் மனைவி ராஜம் ‘லோகத்திலே இல்லாத அப்பாவைப் படைச்சுட்டேளே… ஒரேயடியா உருகிப் போகாதேங்கோ’ என்று எரிந்து விழுவாளோ என்று அஞ்சினான். தன் தம்பியும் தன்னைப் போலவே உள்ளூர அப்பாவுக்காக ஏங்குகிறானோ, அல்லது, ‘அந்த அசட்டுக் கிழம் எங்கே தொலைந்தால் என்ன?’ என்று அசட்டையாக இருக்கிறானோ என்று அறிய முடியாமல் தவித்தான். அப்படி அசட்டையாக இருந்தால் அது மகா பாவம் என்று தோன்றியது. சின்ன வயசில் – சின்ன வயசில் என்ன – இப்போது கூடத்தான் அவரை அப்பா என்றூ சொல்லிக் கொள்ளவே தானும் தன் தம்பியும் வெட்கப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன.
கணபதி சாஸ்திரிகள் போன்ற ஓர் அழகற்ற கறுப்புப் பிராம்மணர் அசட்டுச் சிரிப்புடன், மாறு கண் பார்வையோடு எதிரில் வந்து நின்றால் யாருக்குமே மதிப்பான எண்ணம் பிறக்காதுதான். அவரைப் பார்த்தால் சிலருக்குப் பரிதாபமாக இருக்கும்; சிலருக்குப் பரிகாசமாக இருக்கும்; அவரும் ‘ஈஈ’ என்று ஓட்டை வாய்ச் சிரிப்புடன் குழந்தைபோல் எதையாவது பேசுவார். பேச்சில் பொதிந்துள்ள அர்த்தத்தை யார் கவனிக்கிறார்கள்? ஆகவே அது பலருக்கு ஒரு, ‘போரா’கவே இருக்கும். பரிதாபத்துக்கும் பரிகசிப்புக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் தன்னை அப்பா என்று சொல்லிக் கொள்ளவே தன் பிள்ளைகள் வெட்கப்படுவதில் ஒரு நியாயமிருப்பதாகக் கருதி வந்தார் கணபதி சாஸ்திரிகள். மொத்தத்தில் கணபதி சாஸ்திரிகளை ஊரில் யாரும் மதித்ததில்லை. சில சமயங்களில் அவமதித்ததுண்டு….
மற்ற சாஸ்திரிகளுக்கு எதையாவது பேசி அவர் வாயைக் கிளறி மகிழ அவர் ஒரு பொழுதுபோக்குச் சாதனம். வீட்டில் அவரது பிள்ளைகளூக்கு அவரால் அவமானம்; வெட்கம். அவரது மாட்டுப் பெண்ணுக்கு அவர்மீது வெறுப்பு!
ராஜத்துக்கு அவர் மீது தனியாக விசேஷமான வெறுப்பு ஒன்றும் கிடையாது. சதா நேரமும் சிடுசிடுத்துக் கொண்டிருப்பது அவள் சுபாவம். அந்தச் சிடுசிடுப்பில் அடிக்கடி வந்து சிக்கிக் கொள்பவர் அவர்தான் என்றால் அதற்கு அவளா பழி?
இவ்விதம் யாருக்கும் வேண்டாதவராயிருந்த கணபதி சாஸ்திரிகள் எங்கோ ஓடிப் போனதில் யாருக்கு என்ன நஷ்டம்?
“இன்னியோட பத்து நாளாச்சு. இருபது நாளாச்சு…” என்று அவர்கள் ஏன் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்?
“இப்படி நம்ம தலையிலே பழியைப் போடணும்னு காத்துண்டு இருந்திருக்கார் மனுஷர். ஊர்லே என்னைத் தானே சொல்லுவா? நான் அவரை ஒரு வார்த்தை பேசினது உண்டா?… மனுஷன் இருந்தும் என் பிராணனை வாங்கினார். இப்போ இல்லாமலும் என் பிராணனை வாங்கறார்” என்று பொழுது விடிந்து பொழுது போனால் தன் மாமனாரின் பிரிவுக்காக அவளும் தன் சுபாவப்படி ஏங்கிக்கொண்டு தானிருந்தாள்…
– அவர் இருக்கும்போது, ஒரு வார்த்தை கூட அவரைக் கடிந்து தான் பேசினதில்லை என்று நிஜமாகவே நினைக்கிறாள் ராஜம்.
இந்த ஒருமாதப் பிரிவின் காரணமாக – தங்களை விட்டு விலகிப் போன கணபதி சாஸ்திரிகள் உயிருடனாவது இருக்கிறாரா? என்று அறிந்து கொள்ள விரும்பும் துடிப்பில் அவர் குடும்பத்தினருக்கு அவர் மீது ஒருவித ஏக்கமும் அன்பும் பிறந்திருக்கிறது. அவர் இப்படி எங்கோ அனாதை போலப் போய்விட்டதை எண்ணியெண்ணி ‘அவர் எங்கே அனாதைப் பிணமாகக் கிடக்கிறாரோ’ என்ற பயங்கரமான கற்பனைகளில் சிக்கிக் கொண்டு, ‘இந்தப் பாபத்துக்கு நான் தான் காரணமோ?’ என்று உள்ளூர விளைந்த நடுக்கத்துடன் ரகசியமாகக் கண்ணீர் வடிக்கிறாள் ராஜம். இந்த விஷயம் சிவராமனுக்கோ மணிக்கோ தெரியாது.
-
-
- டிடிடிடி***டிடிடிடி ****
-
பத்து நாட்களுக்கு முன்பு ஆபிசில் இருந்து வருகின்றபோது, தெப்பக் குளக்கரையில் கூடி நின்ற சாஸ்திரிகள் கும்பலில் சிவராமனின் பார்வை – கட்டை குட்டையாய் கன்னங் கரேலெனத் துண்டாகத் தென்படும் – தன் தந்தையைத் தேடி வழக்கம்போல் துழாவியபோது அவனைப் பார்த்துவிட்டார் வெங்கிட்டுவையர்… அவனைப் பின் தொடர்ந்து கடைத் தெருவரை வந்தார்… பிறகு தன் பின்னால் யாரும் வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு “என்னடா சிவராமா…” என்றழைத்தார்.
சிவராமன் திரும்பினான்.
“என்ன, உங்கப்பாவைப் பத்தின தகவல் ஏதாவது கிடைச்சுதோ?” என்று நெருக்கமாய் வந்து கேட்டார். வெங்கிட்டுவையர், கணபதி சாஸ்திரிகளின் பால்ய சினேகிதர்; ஒத்த வயது.
சிவராமனுக்கு ஏனோ தான் பெரிய தவறு புரிந்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டுக் குனிந்த தலையோடு, “ஒரு தகவலும் இல்லை… எங்கே போயிருப்பார்ன்னு தெரியல்லே… ஏன் போனார்னும் தெரியல்லே… ஆத்திலே கூட ஒண்ணும் வருத்தம் இல்லே… ம்… உங்களுக்குத் தெரியாதா நாங்க எப்படி அவரை வெச்சிருந்தோம்னு” என்று மென்று மென்று விழுங்கினான் சிவராமன். அவனுக்குக் குற்றமுள்ள மனசு குமைந்தது…
“அட அசடு.. அதுக்கு நீ என்ன செய்வே?… அப்படியே இருந்தாலும் தோப்பனுக்கும் மகனுக்கும் ஆயிரம் இருக்கும்… அதுக்காக ஒருத்தன் ஆத்தை விட்டே போயிடுவானோ? அது சரி, உனக்கு விஷயமே தெரியாதா?…” என்று சுற்று முற்றும் பார்த்தார். பிறகு குரலைத் தாழ்த்தி “இப்படி வா சொல்றேன்” என்று நடுத் தெருவிலிருந்து ஓரமாய், பஜனை மடத்தருகே அவனை அழைத்து வந்தார் வெங்கிட்டுவையர்.
கணபதி சாஸ்திரிகள் ஊரைவிட்டே ஓடிப் போவதற்கு முதல் நாள் தெப்பக் குளக்கரையில் நடந்த சம்பவத்தை அவர் நினைத்துப் பார்த்தார்.
தெரு ஓரமாய் இருவரும் வந்து நின்றபின், தனது இடுப்பில் செருகி இருந்த பொடி மட்டையை எடுத்து ஒரு சிமிட்டா பொடியை விரல்களில் இடுக்கியவாறு அவர் சொன்னார்: “அவனுக்கு மனசே வெறுத்துப் போச்சுடா. அவனை அப்பிடி அவமானப் படுத்திட்டார் வேற யாரு, சுந்தரகனபாடிகள் தான்…” என்று சொல்லி விட்டுக் கையிலிருந்த பொடியைக் காரமாய் உறிஞ்சினார் வெங்கிட்டுவையர். பொடியின் காரத்தில் கலங்கிய கண்களோடு சிவராமனை வெறித்துப் பார்த்தார்.
சிவராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. சுந்தரகனபாடிகள் கணபதி சாஸ்திரிகளை அவமானப்படுத்தினாரா?… ஏன்?
சிவராமனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் சுந்தரகனபாடிகள் மீது அளவற்ற மரியாதையும் பக்தியும் உண்டு. கணபதி சாஸ்திரிகளின் குருநாதர் அவர்தான். அந்தக் காலத்தில் மகா பண்டிதராய் விளங்கிய கணபதி சாஸ்திரிகளின் தந்தையான பரமேஸ்வர கனபாடிகளின் உயிருக்கு உயிரான சீடர் சுந்தரகனபாடிகள் என்கிற விஷயம், ஒரு குடும்பப் பெருமையாய்ப் போற்றிவந்த செய்தி. அவரிடம் தான் கணபதி சாஸ்திரிகள் வேதம் பயின்றார். ‘எழுபத்தைந்து வயதுக்கு மேலாகிப் பழுத்த பழமாய்ப் பார்த்தவர் வணங்கும் தோற்றமும் தன்மையும் பொருந்திய கனபாடிகள், பாவம், தன் தந்தையை என்ன காரணத்தினால் அவமானப்படுத்தி இருக்க முடியும்? அப்படியே கொஞ்சம் முன்கோபியான கனபாடிகள் ஏதாவது சொல்லியிருந்தாலும், யார் என்ன கூறிப் பழித்தாலும் அதனைப் பொருட்படுத்தாத ‘பரப்பிரம்மமான’ தன் தந்தை, அதற்காகவா ஊரை விட்டு ஓடிப்போயிருப்பார்?’ என்றெல்லாம் யோசித்த தயக்கத்துடன் “நீங்க என்ன சொல்றேள்?” என்று வெங்கிட்டுவையரின் முகத்தைப் பார்த்தான் சிவராமன்.
“நான் பார்த்ததைத்தாண்டா சொல்றேன்… நேக்கென்னடா பயம்? மத்தவாள்ளாம் ஒரு கட்சி மாதிரி, இந்த அநியாயத்தைப் பத்தி ஒரு வார்த்தை பேச மாட்டேங்கறாளே… சுந்தரகனபாடிகள் ரொம்பப் பெரியவர்தான்… நான் இல்லேங்கலே…. ஆனாலும் அவருக்கு இந்த வயசிலே இப்படி ஒரு கோபம் கூடாது… மனுஷன் என்ன, இப்படியா அசிங்க அசிங்கமாப் பேசுவார்? இவர் தகுதிக்கு ஆகுமா?… சீ!” என்று படபடவென்று பேசி அலுத்துக் கொண்ட வெங்கிட்டுவையர், அதற்குமேல் விஷயத்தை அறிந்து கொள்ள அவன் ஆர்வம் காட்டுகிறானா என்று அறிய மௌனமாய் சிவராமனின் முகத்தைப் பார்த்தார்.
“என்னதான் நடந்தது… எனக்கு ஒண்ணுமே தெரியாதே!” பதைத்தான் சிவராமன்.
“எனக்கும்தான் தெரியாது… நான் கோயில்லேருந்து வந்துண்டிருந்தேன். குளத்தங்கரையிலே ஒரே சத்தமா, ஏக களேபரமா இருந்தது. பார்த்தா உங்கப்பன் – கணபதி தேமேன்னு நின்னுண்டிருக்கான். கனபாடிகள் அடிக்கப் போறவர் மாதிரிக் கையைக் கையை ஓங்கிண்டு ஆவேசம் வந்த மாதிரி குதிக்கறார். அவனை அவர் அடிக்கக் கூட பாத்தியதை உள்ளவர்தாண்டா, நான் இல்லேங்கல்லே… ஆனாலும் கன்னா பின்னான்னு – சீ! ஒரு பிராமணன் பேசக் கூடிய பேச்சா? அப்பிடி அசிங்க அசிங்கமா திட்டினார்… கணபதி அப்படியே கூனிக் குறுகி நின்னுண்டிருந்தான்… கடைசியிலே – அவன் மட்டும் என்ன மனுஷன் இல்லியா? நேக்கே தோணித்து… அதை அவன் கேட்டுட்டான்; அப்படி ஒண்ணும் தப்பா பேசிடலே. “ஓய்.. இப்படி அசிங்க அசிங்கமா பேசறீரே… நீர் ஒரு பிராமணனாய்யா”ன்னு கேட்டான்…! எவ்வளவு பேச்சுக்குத்தான் ஒரு மனுஷன் பேசாம இருப்பான்? நறுக்குன்னு கேட்டான்… அவ்வளவுதான்! அந்தக் கிழவரைப் பார்க்கணுமே… கணபதி கழுத்திலே போட்டிருந்த துண்டை இழுத்து முறுக்கிப் பிடிச்சுண்டார்… ஆவேசம் வந்ததுமாதிரி காயத்திரி மந்திரத்தைக் கூவினார். “சொல்லுடா, இதுக்கு அர்த்தம் சொல்லு. நீ பிராமணனுக்குப் பொறந்தவனானா சொல்லுடா…. என்னைப் பார்த்தா கேட்டே… பிராமணனான்னு?… இவன் பிராமணனான்னு எல்லாரும் கேளுங்கோ…”ன்னு அசிங்க அசிங்கமாத் திட்டினார் – ஒரே கும்பல் கூடிடுத்து… நான் போய் விலக்கப் பார்த்தேன். அந்தக் கிழவனுக்குத்தான் என்ன பலமோ? என்னைப் பிடிச்சு ஒரு தள்ளு தள்ளினார் பாரு… நான் போயி குளக்கரை சுவர் மேலே விழுந்தேன்…. தள்ளிட்டுக் கத்தறார்…. மனுஷனுக்கு வெறி! ஒண்ணு மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லு…. இல்லேன்னா ‘நான் பிராமணன் இல்லே’ன்னு ஒத்துக்கோ… என்னெக் கேட்டியேடா, என்ன தைரியம்?” என்று உறுமினார். அவர் பிடியிலே பாவம், கணபதிக்கு உடம்பே நடுங்கறது. நாங்க அவர்கிட்டே பேச முடியல்லே… அந்தக் கெழம்தான் மூர்க்கமாச்சேன்னு கணபதிகிட்டே கெஞ்சினோம்…. ‘சொல்லுமோய்யா… மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லிட்டுப்போமே… பிடிவாதம் பிடிக்காதீர்’ன்னு நானும் கிட்டே போயி சொன்னேன்… கணபதி என் மூஞ்சியை வெறிச்சிப் பார்த்தான். பார்த்துட்டு ‘ஓ’ன்னு கொழந்தை மாதிரி அழுதான்…
– ‘நேக்கு மந்தரம் தான் தெரியும்… அர்த்தம் தெரியாதே’ன்னு அவன் அழறப்போ, அம்பது வருஷத்துக்கு முந்தி நானும் அவனும் ஒண்ணா படிச்சதெல்லாம் நேக்கு ஞாபகம் வந்து நானும் அழுதுட்டேன்.
திடீர்னு உங்கப்பன் கனபாடிகள் கையைத் தள்ளி உதறினான். எல்லாரும் என்ன நடக்கப் போறதோன்னு திகைச்சுப் போனோம். பல்லைக் கடிச்சுண்டு உடம்பிலேருந்த பூணூலை வெடுக்குனு பிச்சு அறுத்து, கனபாடிகள் மூஞ்சிலே எறிஞ்சுட்டு ‘போங்க… நான் பிராமணன் இல்லே… நான் பிராமணன் இல்லே’ன்னு கோஷம் போடற மாதிரிக் கத்திண்டு ஓட்டமும் நடையுமா நாலுவீதியும் சுத்திண்டு அப்ப போனவன்தான்; என்ன ஆனானோ, எங்கே போனானோன்னு உன்னடை வந்து விசாரிக்கணும்னுதான் நெனைச்சிண்டிருந்தேன்… நீ என்னடான்னா இந்த விஷயமே தெரியாதுங்கறே?…” என்று, தான் சம்பந்தப்படாத – இந்தக் காலத்து பிராமணர்களாகிய தாங்கள் யாருமே சம்பந்தப்படாத – கணபதி சாஸ்திரி என்ற தனிப்பட்ட ஒருவனின் விவகாரம்போல் அன்று நடந்த நிகழ்ச்சியை விளக்கினார் வெங்கிட்டுவையர்.
வெங்கிட்டுவையர் விவரித்த சம்பவத்தில் பொதிந்துள்ள ஒரு சமூகச் சீரழவின் கொடுமையை ஆழ்ந்து உணர்ந்த வேதனையில் வாய்மூடி மௌனியனான் சிவராமன். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளாமலேயே குனிந்த தலையோடு, கலங்குகின்ற கண்களோடு அவன் வீடு நோக்கி நடந்தான்.
வீட்டிற்குப் போனதும் ஒரு மூலையில் கவிழ்ந்து படுத்துக் கதறி அழவேண்டும் என்று வழியெல்லாம் நினைத்துக் கொண்டே அவன் நடந்தான்…
ஆனால் அன்று அவன் வீடு சென்றதும் அவ்விதம் செய்யவில்லை. தந்தையின் பிரிவை எண்ணித் தான் அழுவதைக் கண்டு ‘அவள்’ கோபிப்பாள் என்ற அச்சத்தில் அவன் அந்த ‘ஆசை’யைக் கைவிட்டு விட்டான்.
– தாழ்ந்த குலத்தில் பிறந்த கொடுமைக்கு அழுதால் அதற்கு ஓர் அர்த்தமும் இருக்கும்; அனுதாபமும் கிடைக்கும். உயர்ந்த குலத்தில் பிறந்தும் கலியின் விளைவால் விபரீதமாய்ப் போன இந்தக் கொடுமைக்கு அழத்தான் முடியுமா? அனுதாபந்தான் கிடைக்குமா?
3
சிவராமன் ஆபிசிலிருந்து வரும்போது வழியில் குறுக்கிட்ட தெப்பக்குளக்கரை சாஸ்திரிகள் கூட்டத்தில் அவன் பார்வை இன்று யாரையும் தேடவில்லை. வீடு சென்றதும் தபாலில் வந்த அந்தக் காகிதக் கத்தையில் பென்சிலாலும் பேனாவாலும் எழுதப்பட்டிருக்கும் செய்திகளை, காலத்தின் அடியை நெஞ்சில் ஏற்றதால் ஒரு வயோதிக இதயத்திலிருந்து தெறித்து விழுந்த ரகசியமான உதிரத் துளிகளின் அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரத் துடிப்பில் நடந்து கொண்டிருந்த அவன், அந்தக் கூட்டத்தையே கவனிக்கவில்லை.
சிவராமன் வீட்டை அடையும்போது ராஜம் அடுக்களையில் இருக்கிறாள். மணி இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அவனுக்கு மவுண்ட் ரோடிலுள்ள ஒரு பெரிய பாதரட்சைக் கடையில் சேல்ஸ்மேன் உத்தியோகமானதால், இரவு எட்டு மணிக்குமேல் கடை அடைத்த பின்பே வீட்டுக்கு வர முடியும்…
தனது அறையில் சென்று உடைகளைக் களைந்தபின் முதல் வேலையாகக் கைப் பையைத் திறந்து அந்த நீளக் கவரின் உள்ளே இருந்த காகிதக் கத்தையை எடுத்து அந்தரங்கமாய்ப் படிக்க ஆரம்பிக்கிறான் சிவராமன்.
அவன் படித்த முதல் வரியே ஒரு மகத்தான இலக்கியத்தின் ஆரம்ப வாசகம்போல் அமைந்து இருக்கிறது:
“இதோ! என் கண்முன்னே ஆயிரக்கணக்கான மனுஷா சஞ்சரிச்சுண்டிருக்கா. ஒவ்வொரு மனுஷாளூம் ஒவ்வொரு விதமா இருக்கா. ஒருவிதம் மாதிரி இன்னொரு விதம் இல்லே. ஆயிரமும் ஆயிரம் விதம்! இந்த மைதானத்திலே எனக்கு முன்னேயும் எனக்குப் பின்னேயும் ஆயிரம் ஆயிரமா மனுஷா போயிண்டும் வந்துண்டும் இருக்கா…. சின்ன வயசிலே குடை ராட்டினத்திலே முதல் தடவை சுத்தினப்ப ஏற்பட்ட மயக்கம் மாதிரி இந்த நிமிஷம் என்னைச் சுத்தி ஆயிரம் ஆயிரமா ஜனங்கள் சுத்திண்டு இருக்கச்சே ஒரு பிரமை தட்டறது. நானும் திருவிழாக் கும்பல்லே வழி தவறிச் சிக்கிண்ட கொழந்தெ மாதிரி திருதிருன்னு முழிச்சுப் பாக்கறேன். இந்த ஆயிரக்கணக்கான மனுஷா முகத்திலே ஒண்ணுகூட தெரிஞ்ச முகமா இல்லே. என்னைக் கவனிக்கிற முகம் இதிலே ஒண்ணுகூட இல்லேங்கறதை நெனச்சுப் பார்க்கறப்போ பரம சுகமா இருக்கு.
இந்த டில்லி இருக்கே, ரொம்ப புராதன நகரம். அசோகன் என்ன, பாதுஷாக்கள் என்ன, வெள்ளைக்காரா என்ன – இந்த தேசத்தையே எத்தனையோ வருஷங்களா ஆண்டு வர்ர நகரம் இது. இன்னிய தேதியிலே நாமெல்லாம் உக்காந்துண்டு சொந்தம் கொண்டாடறோம். எத்தனை தலைமுறைகளை இந்த லோகம் பாத்துண்டே இருக்கு. இந்த நிமிஷம் உயிர் வாழற மனுஷ ஜாதியிலே ஒரு நபர் கூட இருநூறு வருஷத்துக்கு முன்னாலே இல்லை; இருநூறு வருஷத்துக்கு முன்னாலே வாழ்ந்த மனுஷ ஜாதியின் ஒரு ஜீவன் கூட இப்போ இல்லே. அது ஒரு பிரிவு; இது ஒரு பிரிவு. அந்தப் பிரிவு எப்போ எப்படிப் போயி இந்தப் பிரிவு எப்போ எப்படி வந்ததுன்னு யார் சொல்ல முடியும்? இது மட்டும் சத்தியம். அது முழுக்கப் போயிடுத்து, இது முழுக்க வந்துடுத்து. ஆழமா யோசிக்காம எடுத்த எடுப்பிலே பார்த்த உடனே இந்த உலகத்திலே உள்ள எல்லாமே ஒரு அதிசயமாத்தான் இருக்கு. அதுமாதிரிதான் இந்த விஷயமும் – இருநூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்தவா முழுக்கப் போனதும், இப்ப உள்ளவா முழுக்க வந்துட்டதும் ஆச்சரியமாத்தான் இருக்கு – அவா கொஞ்சம் கொஞ்சமா போனா; இவா கொஞ்சம் கொஞ்சமா வந்தா. இதுமாதிரிதான் போறதும் வர்ரதும். கடவுள் விதிப்படி இந்தக் காரியம் தடங்கல் இல்லாமல்தான் நடக்கறது. மனுஷ விதிப்படியும் இப்படித்தான் நடக்கணும்; நடக்கும்.
இயற்கையிலே ஒரு சிக்கலும் இல்லை. சிக்கலே இல்லேன்னா அது செயற்கையே இல்லை. இப்படி ஒரு செயற்கையான சிக்கல்லேதான் நான் சிக்கிண்டேன். அப்படி சிக்கிக்கறதுதான் வாழ்க்கை… சிக்கல் விடுபடலேன்னா அதுக்கு நாமதான் பொறுப்பு…”
அந்தக் காகிதங்களில் இதுவரை பென்சிலால் எழுதப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு ஆரம்பமாகிற பக்கங்கள் பேனாவால் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த வித்தியாசத்தை ஒரு அத்தியாயப் பிரிவு போல் உருவகித்துக் கொண்டு, தான் படித்த கனமான விஷயங்களைக் கருத்தூன்றிச் சிந்திக்கிறான் சிவராமன்… அவனது சிந்தனைகளை மறித்துக் கொண்டு ‘இந்த அசட்டு அப்பாவா இப்படி யெல்லாம் சிந்திக்கிறார்’ என்ற வியப்புணர்ச்சியே மேலிடுகிறது.
இந்த வினாடி அவன் தனது தந்தையின், அந்த அசட்டுப் பிராமணரின், தாடி மழிக்காத ரோமக்கட்டை அடர்ந்த, முன்பல் விழுந்த, அம்மைத் தழும்பு நிறைந்த, மாறுகண் பார்வையோடு கூடிய கரியமுக விலாசத்தைக் கற்பனை செய்து கண்ணெதிரே காண்கிறான்.
எழுத்தைத் தொழிலாகக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு ஒரு பத்திரிகையில் பணியாற்றும் தனது சிந்தனையில் ஏற்பட முடியாத எண்ணங்களூம், தன்னால் எழுத்தில் வடிப்பதற்குக் கைவரப் பெறாத கலையும் – காலமெல்லாம் எல்லோருடைய கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளான அந்த அப்பாவி பிராமணனுக்கு எப்படி சித்தியாயிற்று! என்ற பிரமிப்பில் விளைந்த நடுக்கத்தோடு அவன் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கிறான்.
“என் தகப்பனாரின் முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லே. அவர் சாகறப்ப எனக்கு வயசு ஒன்பது; நியாயமா அது எனக்கு ஞாபகம் இருக்கணும். நான்தான் அசடாச்சே, மறந்துட்டேன். ஆனா வயசு ஆக ஆக அவரைப் பத்தி எல்லாரும் பேசிக்கறதிலே இருந்து நானும் அவரைப்பத்தி ரொம்பத் தெரிஞ்சுண்டேன். அவர் மகா பண்டிதர். எந்த அளவு அவருக்கு சம்ஸ்கிருதத்தில் பாண்டியத்தம் உண்டோ அந்த அளவுக்குத் தமிழிலும் உண்டாம். சுந்தர கனபாடிகள் மாதிரி பெரியவாள்ளாம் அவர்கிட்டே படிக்கக் கொடுத்து வச்சவா. எனக்குத்தான் கொடுத்து வைக்கல்லே. அம்மா சொல்லுவா; அப்பா மாதிரி நானும் மகா பண்டிதனாகணும்னு. அதுதான் அப்பாவுக்கும் ஆசையாம்; ம்…. அதெல்லாம் அந்தக் காலத்துப் பிராமணத் தம்பதிகளின் லட்சியம்; தன் பிள்ளை பிராமண தர்மத்தின் பிரதிநிதியா ஆகணும்கறது. இந்தக் காலத்திலே எவன் இருக்கான்? நான் ஏன் எவனையோ தேடணும்? அப்படிப் பட்டவாளுக்குப் பொறந்த நானிருந்தேனா அவா மாதிரி?…
நான் எவ்வளவோ சொன்னேன்: அந்தச் செருப்புக் கடை வேலை வாண்டாம்னு, இந்த மணி கேட்டானா?… ‘உனக்கு ஒண்ணும் தெரியாது. இதுக்கே நான் என்ன சிரமப்பட்டிருக்கேன்… மாசம் இருநூத்தைம்பது ரூபா சம்பளம். வருஷத்திலே மூணுமாச போனஸ் இந்த வேலைக்கு என்ன குறைச்சல்! அங்கே ஒண்ணும் மாட்டை அறுத்துத் தோல் எடுத்துச் செருப்புத் தைக்கிற வேலை இல்லே. டப்பாவிலே வர்ர செருப்பை எடுத்து விக்கறதுதான். உனக்கு ஒண்ணும் தெரியாது, நீ ஒரு பஞ்சாங்கம்… சும்மா இரு’ன்னு என் வாயை அடைச்சுட்டுப் போயிட்டான் அந்த வேலைக்கு.
அது அவன் தப்பா? இல்லை, அது ஒரு தப்பான்னு யோசிச்சுப் பார்த்தா இந்தக் கலியிலே எல்லாம் சரிதான்னு தோண்றது. ஏன்னா, என் பிள்ளைகள் என்னைப் போல குடுமி வச்சுண்டு, உடம்பிலே சட்டையும், கால்லே செருப்பும் போட உரிமை இல்லாம – இந்தக் காலம் பார்த்துப் பரிகசிக்கிற ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டமா வாழணும்னு நான் ஆசைப்படலே. அதனாலேதான் அவாளை இங்கிலீஷ் படிக்க வச்சேன். கிராப்பு வச்சுக்கச் சொன்னேன். இதுக்கு அர்த்தம் என்ன? நான் எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டு என்னாலே இருக முடியலையோ அப்படி யெல்லாம் அவாளை ஆக்கித் திருப்தி பட்டுண்டேனா? ஆமாம்; ‘ஒதுங்கிப்போ ஒதுங்கிப்போ’ன்னு சொல்லிச் சொல்லி நானேதான் ஒதுங்கிப் போயிட்டேனே!… ஒரு ஜாதி தாழ்ந்தது எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் இன்னொரு ஜாதி உயர்ந்ததும். இது எப்போ தெரியறதுன்னா தாழ்த்தி ஒதுக்கப்பட்ட ஜாதியைப் போலவே உயர்ந்து ஒதுங்கிப்போன ஜாதியும் படற கஷ்டத்திலே எனக்குத் தெரியறது. என் பிள்ளைகள் பேருக்கு உயர்ந்த ஜாதின்னு சொல்லிண்டாலும், ஊருக்குப் பூணூல் போட்டுண்டாலும் நல்ல வேளை! – என்னைப்போல ஒதுங்கிப் போன ஜாதி ஆயிடலே. ஆனா அவாகூட என்னை ஒதுக்கி வச்சுட்டாளே. என்னை அப்பான்னு சொல்லிக்க, அவ சமமா பழகறவா மத்தியிலே என்னை அப்பான்னு காட்டிக்க எவ்வளவு வெக்கப்பட்டாங்கறதை நான் எத்தனையோ தடவை பார்த்திருக்கேன்.
ம்… முகம் தெரியாத அப்பாவை நெனச்சு நான் பெருமைப் பட்டுண்டிருக்கேன்… கண்ணெதிரே இருக்கிற அப்பனைப் பார்த்து என் பிள்ளைகள் வெக்கப்பட்டுண்டிருக்கு! அது சரி, நானே என்னை நெனச்சு வெக்கப்படறச்சே, அவா படறது தப்பா?”
– மீண்டும் இந்த இடத்திலிருந்து பென்சில் எழுத்துக்கள் ஆரம்பமாகின்றன. சிவராமனின் கண்களில் சுரந்த கண்ணீரால் அந்த எழுத்துக்களும் மறைகின்றன. அவன் சில விநாடிகள் மேல் துண்டால் முகத்தை மூடிக் கொள்கிறான். அழுகிறானா? பிறகு ஒரு முறை பெருமூச்செறிந்து சிவந்த கண்களூம் துடிக்கின்ற உதடுகளுமாய்த் தொடர்ந்து படிக்கிறான்:
“பாரதியார் ரொம்ப கோபத்தோடு கடுமையாய்த்தான் சொல்லியிருக்கார்: ‘அர்த்தம் தெரியாம மந்திரம் சொல்றதைவிட செரைக்கப் போகலாம்’னு. ஒரு பத்து வருஷத்துக்கு முன்னே இதை எங்கேயோ படிச்சேன். நான் சொல்ற மந்திரத்துக்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியுமா?ன்னு நான் யோசிச்சுப் பார்த்தேன். அன்னிக்குப் பூரா முகந் தெரியாத என் தகப்பனாரை – அந்த மகா பண்டிதரை நெனச்சு, நெனச்சு, நான் அழுதேன். அந்த மகா பண்டிதரிடம் – என் தகப்பனாரிடம் – படிச்ச சுந்தர கனபாடிகளும் மகா பண்டிதர்தான். அவரிடம் படிச்சவன் நான். ஆனா எனக்கு அவர்கிட்டே ஆசான் என்கிற பக்தியைவிட ‘அடிப்பாரே’ என்கிற பயம்தான் அதிகமாக இருந்தது. ஒரு தடவைக்கு மேலே கேட்டா அவருக்குப் பொல்லாத கோபம் வரும். அந்த பயத்திலே அவர் ஒரு தடவை சொல்றதைக் கூட நான் ஒழுங்காப் புரிஞ்சுக்கல்லே. நான் கிளிப்பிள்ளைமாதிரி வேதம் படிச்சேன். அப்போ அது எனக்கு தப்புன்னு தோணலே…
… மந்திரங்கள் தெய்வீகமான, புனிதமான, பவித்திரமான விஷயங்களைப் பத்திப் பேசறதுங்கற நம்பிக்கையிலேயே அதை நான் மனனம் பண்ணிட்டேன். ‘தாய்ப்பால்லே என்னென்ன வைட்டமின் இருக்குன்னு தெரிஞ்சுண்டா குழந்தை குடிக்கிறது! ஆனாலும் அது அவசியமில்லையா? நோயாளிக்கு மருந்துதான் முக்கியமே ஒழிய, ஒவ்வொரு மாத்திரையிலேயும் என்னென்ன ரசாயனம் கலந்து இருக்குங்கிற ஞானம் அவசியமா என்ன? அதுபோலதான் மந்திரம்! உனக்கு அது தேவை; அதை ஜபிப்பதன் மூலம் அதற்குரிய பலன்கள் உன்னை அடையும்’னு ஒரு பெரிய மேதை எழுதியிருந்தார். அதைப் படிச்சப்பறம்தான் எனக்கு ஒரு ஆறுதல் பிறந்தது. ஆனா, அந்த ஞானியின் இந்த வாதமும் எனக்குத் தக்க சமயத்தில் கை கொடுக்கல்லே…
ஒரு தடவை வக்கீல் ராகவைய்யர் ஆத்துக்கு தர்ப்பணம் பண்ணி வைக்கப் போயிருந்தேன். அவர் ரொம்பப் பெரியவர். என் தகப்பனார் மேலே வச்சிருந்த பக்தியை தகுதி இல்லாத என்பேர்லே அப்படியே வச்சிருந்தார். நாற்பது வருஷமா என்னை அவருக்குத் தெரியும். போன வருஷம் ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போயிருக்கச்சே, அவர் மருமான், வைத்தியநாத அய்யர்னு டில்லியிலேருந்து வந்திருந்தார். அவருக்கும் அன்னிக்கி தர்ப்பணம் பண்ணி வைக்க வேண்டியிருந்தது. அவரைப் பார்த்தா ஆள் வெள்ளைக்காரன் மாதிரி இருந்தார். அந்தப் பட்டுவஸ்திரத்தை அவர் கட்டியிருந்த முறையிலேயே மனுஷன் வேஷ்டி கட்டிப் பழகாதவர்னு தெரிஞ்சுண்டேன். நாலு அங்குலத்துக்குச் சரிகைக் கரை வேஷ்டியும் பட்டுத் துண்டுமா அவர் மாடியிலேருந்து எறங்கி வர்ரச்சே பளபளன்னு கால்லே சிலிப்பர் வேறே… என்ன பண்றது?… காலம்!
நான் முகத்தைச் சுளிச்சுண்டு ‘தர்ப்பணம் பண்ணச்சே அதைக் கழட்டிடணும்’னு சொன்னேன். ‘ஐ ஆம் ஸாரி’ன்னு ஞாபக மறதிக்கு அவரும் வெக்கப்பட்டுண்டார். நானும் ‘இட் இஸ் ஆல்ரைட்’ சொன்னேன்… நானும் அடிக்கடி ஏதாவது ரெண்டு இங்கிலீஷ் வார்த்தையைக் கலந்து பேசறதுதான்!… உலகம் என்னை ஒதுக்கி வச்சிருந்தாலும் ஓடி ஓடி வந்து ஒட்டிக்கிற குணம் அது.
எனக்கும் அன்னிக்கி பல எடத்துக்குப் போக வேண்டியிருந்தது. அவசர அவசரமா கடமையை முடிச்சுண்டு எழுந்திருக்கச்சே பார்த்தா தட்சணை குறைவா இருந்தது. ‘இந்த மனுஷனுக்கு ஒண்ணுமே தெரியலையே’ங்கற அலட்சியத்தோட, ‘என்ன ஸ்வாமி தட்சணை குறையறதே’ன்னேன். அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே ‘மந்திரமும் குறைஞ்சிருந்ததே’ன்னார்… அன்னிக்கு மாதிரி வாழ்க்கையிலே அதுக்கு முன்னே நான் இப்படி அவமானப்பட்டதில்லே. அப்புறமான்னா தெரிஞ்சது அவர் டில்லியிலே பெரிய சம்ஸ்கிருத புரொபஸர்னு…
அவர் என்னைக் கேட்டார்: ‘உங்க பீடத்துக்கு நாங்க வெச்சிருக்கற மதிப்பை நீங்க காக்க வேண்டாமா? அர்த்தம் தெரியாம மந்திரம் சொல்லித் தரலாமா?’ன்னு… நான் சொன்னேன்: ‘மருந்தைச் சாப்பிட்டா போறும்; மருந்திலே என்ன இருக்குன்னு தெரிஞ்சா என்ன, தெரியாட்டா என்ன?’ன்னு எப்பவோ படிச்சதை எடுத்துவிட்டேன். அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே, ‘மருந்து சாப்பிடறவனுக்குத் தெரியாட்டா பாதகமில்லே. மருந்து கொடுக்கிறவருக்குத் தெரிஞ்சிருக்கணுமே?’ன்னார்… ஒரு நிமிஷம் யோசித்துப் பார்த்தேன்…! என்ன சொல்றதுன்னு புரியல்லே…. ‘மன்னிச்சுக்கோங்கோ ஸ்வாமி’ன்னு கை எடுத்து கும்பிட்டுட்டு சைக்கிள்லே ஏறி ஓடி வந்துட்டேன்.”
– மணி எட்டு அடிக்கிறது. ராஜம் அடுக்களையிலிருந்து அறைக்குள் வந்து அவன் முதுகில் உரசியவாறு நின்று அவன் தோள் வழியே அவன் படிக்கும் காகிதங்களைப் பார்க்கிறாள்; ஏதோ ஆபீஸ் விவகாரம் என்ற அலட்சியத்தோடு.
“இன்னும் முடியலையா? சாப்பிட வரேளா?” என்ற குரல் கேட்டு அவன் கவனம் கலைந்து அவளைப் பார்க்கிறான்.
“மணியும் வந்துடட்டுமே” என்று ஒரு பயந்த புன்னகையோடு அவன் வேண்டிக் கொள்கிறான். “இந்தக் குப்பைகளையெல்லாம் ஆபீசோட வச்சுக்கப்படாதோ?” என்று சிடுசிடுத்தவாறு மேஜைமீது கிடந்த ஒரு வாரப் பத்திரிகையை எடுத்துப் பிரித்துக் கொண்டு சுவரோரமாக உட்காருகிறாள் ராஜம்.
அவன் அடுத்த காகிதத்தைப் புரட்டுகிறான்.
“அறுபது வருஷமா அர்த்தமில்லாமல் பேத்திண்டே வாழ்ந்திருக்கேன்! என்னைப்போல மனுஷாளாலேதான் பிராம்மண தர்மமே அவமானப் பட்டுடுத்து. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் சந்தியாவதனம் பண்றச்சேயெல்லாம் ஏதோ குத்தம் செய்யறமதிரி ஒரு உறுத்தல். பொய்யாவே வாழ்ந்துட்டமாதிரி ஒரு புகைச்சல்… சாஸ்திரங்கள், வேதங்கள் எல்லாம் இந்தக் காலத்தினாலே மதிப்பிழந்து போயிடுத்துன்னு நான் சொல்லமாட்டேன். அதுக்கு உரிய மதிப்பை, மரியாதையை நாமே உணர்ந்துக்கலேங்கறதுதான் எனக்குத் தெரியற உண்மை. இந்த ஒரு மாசமாத்தான் நானே ஒரு மனுஷன்னு எனக்குத் தெரியறது. இதுக்கு முன்னே நாடகத்திலே வர்ரமாதிரி நான் வேஷம் போட்டுண்டு, யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசறமாதிரி மந்திரங்களை மனசிலே ஒட்டாம உதட்டிலே ஒட்டிண்டு திரிஞ்சேன்.
… எனக்குத் தெரிஞ்சவா இப்ப யாராவது என்னெப் பார்த்தா அவாளுக்குத் தெரிஞ்ச கணபதிசாஸ்திரி நான்தான்னு சொன்னால் கூட, நம்பவேமாட்டா. எங்கேயாவது கண்ணாடியிலே என் உருவம் திடீர்னு தெரியறப்போ எனக்கே என்னை நம்ப முடியலே. ஆமாம்; என் மனசிலே இருக்கிற என் உருவம் குடுமி வச்சுண்டிருக்கு; பத்தாறு தரிச்சிண்டிருக்கு… அறுபது வருஷ நெனைப்பு அவ்வளவு சீக்கிரம் மாறிடுமா? ம்… நினைப்புத்தான்…
இப்ப நான் பிராமணனும் இல்லே, சாஸ்திரியும் இல்லே. எனக்கு, என் மனசாட்சிக்குத் துரோகம் செஞ்சுக்காத ஒரு நேர்மையான மனுஷன் நான்! நான் பொறந்த குலத்தை நான் ரொம்பவும் மதிக்கிறேன். ரொம்பப் பெரியவாள் செய்ய வேண்டிய காரியத்தை எல்லாம் போலித்தனமா நான் செஞ்சுண்டு இருக்கறது, அவாளை நான் மதிக்கிறது ஆகாது. எல்லாரும் என்னைக் ‘கிறுக்கு’ன்னுதான் சொல்லுவா இப்பவும். சொல்லட்டுமே… அன்னிக்கி, குளத்தங்கரையிலேருந்து வந்த கோலத்தைப் பார்த்தவா எனக்குப் பயித்தியம் பிடிச்சுடுத்துன்னுதான் நெனச்சுண்டு இருப்பா. சுந்தர கனபாடிகள் மாதிரி இருக்கிறவாளுக்கு புரோகிதம் கௌரவமான ஜீவிதம்தான். அவன் என்னை என்னதான் வைதிருந்தாலும், அவரை நினைச்சு நான் நமஸ்காரம் பண்றேன். என் கண்ணைத் திறந்துவிட்ட குரு அவர்தான். இந்த உலகமே அவர் ரூபத்திலே வந்து என்னைப் பிடிச்சுண்டு ‘நீ பிராமணனா சொல்லு, இந்த மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாதவன்… நீ பிராமணனா சொல்லு’ன்னு உலுக்கின மாதிரி இருந்தது… அவர்தான் எனக்கு பிரம்மோபதேசம் செஞ்சு வச்சு பூணூல் போட்டவர்…. அவர் சொல்லிக் கொடுத்ததைத்தான் நான் இத்தனை காலமா சொல்லிண்டு இருந்தேன். அது தப்புன்னு அவரே சொல்லிட்டார். எப்படிப் பார்த்தாலும் அவர்தான் என் குருநாதர். அவரை நான் நமஸ்காரம் பண்றேன்.
இப்போ நான் கிராப்பு வச்சுண்டுட்டேன். சட்டை போட்டுண்டென், செருப்பு போட்டுண்டேன். இதெல்லாம் நன்னாத்தான் இருக்கு. எனக்கு நெனச்சுப் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வரது. சாஸ்திரிகள்னா செருப்புப் போட்டுக்கப்படாதாமே… ஆனா சைக்கிள்லே மட்டும் போலாமாம். என்னோட சைக்கிள் – நாற்பது ரூபாய்க்கு சிவராமன்தான் வாங்கித் தந்தான். வாங்கும்போதே அது கிழம்… இப்ப யாரு அதை உபயோகப் படுத்திண்டிருப்பா? சிவராமனா? மணியா?… கிழங்களும் உபயோகப்படுமே, சாகற வரைக்கும்.”
படித்துக் கொண்டிருந்த சிவராமன் தலைநிமிர்ந்து கூடத்துச் சுவரோரமாக நிறுத்தி இருந்த சைக்கிளைப் பார்க்கிறான். அவன் முகத்தைப் பார்த்து அவன் பார்வை வழியே முகம் திரும்பி, கூடத்தில் நிறுத்தி இருந்த கணபதி சாஸ்திரிகளின் சைக்கிளை ராஜமும் பார்க்கிறாள். அந்த நிமிஷம் வார்த்தைகள் ஏதுமற்ற மௌனத்திலேயே, அவர்கள் இருவரும் ஒரே விஷயத்தைப்பற்றிப் பேசாமலேயே மன உறுத்தலைப் பரஸ்பரம் பரிமாறி உணர்ந்து கொள்கின்றனர். திடீரென ஒரு விம்மலுடன் ராஜம் அந்த மௌனத்தைக் கலைக்கிறாள்:
“இந்தப் பாழும் பிராம்மணர் எங்கே போய்த் தொலைஞ்சாரோ? ஒரு சேதியும் தெரியல்லையே… நாள் ஆக ஆக, என் மனசைப் போட்டு என்னென்னமோ செய்யறதே!… உங்ககிட்டே இப்ப மனசை விட்டுச் சொல்றேனே. அவர் இல்லாம எனக்கு இந்த வீடே வெறிச்சுனு இருக்கு; நீங்க ஏதாவது சண்டை போட்டேளா? இப்படி ரெண்டு பிள்ளைகள் மலையாட்டமா இருந்தும், இப்படி அனாதையாய்ப் போகணும்னு அவர் தலையிலே எழுத்தா?” என்று கையிலிருந்த வாரப் பத்திரிகையால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள் ராஜம்.
‘ஒன்றுமே தெரியாத அசடு’ என்று தான் தீர்மானித்திருந்த தன் தந்தையின் உள்ளுணர்வுகளை அறிந்து பிரமித்தது போலவே, அவர் மீது வெறுப்பைத் தவிர வேறு பாசமேதும் இல்லாதவள் என்று இதுநாள் வரை தான் எண்ணியிருந்த ராஜத்தின் மன உணர்வுகளைத் திடீரென அறிய நேர்ந்ததும் எல்லா விஷயங்களிலும் ஏதோ ஒரு மகத்துவம் நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கிறது என்ற உணர்வில் மெய்சிலிர்க்கிறான் சிவராமன். மேஜை மீதிருந்த காகிதக் கத்தையில் தான் படித்திருந்த பக்கங்களை எடுத்து மௌனமாய் அவளிடம் நீட்டுகிறான்.
அப்போது அவன் விழிகளில் தைரியமான இரண்டு சொட்டுக் கண்ணீர் துளித்திருந்து பொட்டென உதிர்கிறது!
“என்ன கடுதாசியா… அவரா எழுதியிருக்கார்?” என்ற பரபரப்போடு அவர் எங்கோ உயிரோடு இருக்கிறார் என்ற ஒரே திருப்தியில் ஆனந்தமயமாகி அதை வாங்கிப் படிக்க ஆரம்பிக்கிறாள் ராஜம்.
இப்போதுதான் வீட்டிற்குள் வந்த மணி, அவள் வார்த்தைகளை அரைகுறையாய்க் கேட்டவாறு, “அப்பாவா? எங்கே இருக்கார்? என்று கூவியவாறு ராஜத்தின் அருகே உட்கார்ந்து அவளோடு சேர்ந்து அந்தக் கடிதத்தைப் படிக்க முயல்கிறான்.
மணி ஒன்பது அடிக்கிறது… அவர்களில் யாரும் இன்னும் சாப்பிடப் போகவில்லை. அந்த ஒரு கத்தைக் காகிதம் இப்போது முடிவதாக இல்லை.
தன்னை விட்டு எங்கோ விலகிக் கிடக்கும் அவரை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆவலில் ஆளுக்கு ஒரு பக்கத்தை அவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்தக் காகிதத்தில் ஏதோ ஒரு பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்த மணி திடீரெனக் கூவுகிறான்: “வெல்டன்… பாதர்…”
அந்தக் காகிதங்களில் அவர்கள் அறிவது, அவர்கள் கண்களுக்குத் தெரிவது, அவர்கள் தரிசிப்பது – அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த, இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழ நேர்ந்துவிட்ட, கணபதி சாஸ்திரிகள் என்ற தனிப்பட்ட ஒரு பிராம்மணரை மட்டும்தானா?
எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத்தானிருக்க வேண்டும். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அங்கே, அந்தத் தெருவில் ஓர் பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிருகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே!
நான் பார்த்த ஊரும் – ‘இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது’ என்று உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப் போன அந்த அக்ரஹாரத்து வீடுகளூம், ‘இவர்கள் என்றைக்கும் புதுமையுற மாட்டார்கள்’ என்கிற மாதிரி தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும், அவர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதிலே ஒரு அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது.
நான் இப்போது ரொம்பவும் வளர்ந்து விட்டேன்; ரொம்பவும் விஷயங்கள் தெரிந்து கொண்டு விட்டேன். என்னிடமிருந்த குறும்புத்தனங்கள் எவ்வளவோ நீங்கி விட்டன. ஆனாலும் கற்பனையாக இத்தனை மைல்களூக்கப்பாலிருந்து அந்த ஊரின் தெருவுக்குள் பிரவேசிக்கும் போது – கற்பனையால் தூரத்தை மட்டும்தான் கடக்க முடியுமா? – காலத்தையும் கடந்து நான் ஒரு பத்து வயதுச் சிறுவனாகவே நுழைகிறேன்.
அந்தக் குளத்தங்கரை ஓரமாக நான் வரும்போது, எனது பிரசன்னத்தைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்கள் குளித்து கொண்டிருக்கும்போது, குளக்கரைப் படியிலே நான் சற்று உட்கார்ந்து கொள்கிறேன். அங்கு சுகமாகக் காற்று வரும். குளத்திலே தண்ணீருக்கு மேல் ஓர் அடி உயரத்துக்கு மீன்கள் துள்ளிக் குதிக்கும் – கூழாங் கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாமே – எங்கெங்கே பரந்து என்ன வாரிக் கட்டிக் கொண்டோம்?
வெங்கிட்டு, உத்தண்டம், சுந்தரம், தண்டபாணி எல்லாரும் பெண்கள் படித்துறைக்கும் ஆண்கள் படித்துறைக்குமிடையே உள்ள கட்டைச் சுவரின் மீது வரிசையாக வந்து நின்று, ஒவ்வொருவராக ‘தொபுக்’ ‘தொபுக்’ என்று குதித்த பின்னர், ஈரம் சொட்டச் சொட்ட ஒரு ‘ரிப்பன்’ கோவணத்தை இழுத்துச் செருகிக் கொண்டு மறூபடியும் சுவரின் மீது ஏறி வந்து வரிசை அமைக்கின்றனர்.
நான் எப்போதுமே தனி. என்னை அவர்கள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். நான் துஷ்டனாம்.
நான் அந்தச் சிறுவர்களுடன் சேராமல் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பெரியவர்கள் என்னை உதாரணம் காட்டிப் பேசுவார்கள். நான் விஷமம் செய்யாமல் ‘தேமே’னென்றிருக்கிறேனாம். நான் அடக்கமான பதிவிசான பையனாம்…. ‘சீ, பாவம்டா! அவனையும் சேத்துண்டு வெளையாடுங்களேன். போனா போறது; நீ வாடா அம்பி. அவா உன்னை சேத்துண்டு வெளையாடலேன்னா ஒண்ணும் கொறைஞ்சு போயிட மாட்டே… நீ வாடா, நான் உனக்கு பட்சணம் தர்றேன்… காப்பிப் பொடி அரைக்கலாம் வரயா?…’ என்றெல்லாம் என் மீது அன்பைச் சொரிகின்ற பெரியவர்களின் அரவணைப்பு எனக்கு மனசுக்கு இதமாக வெது வெது என்றிருக்கும். நான் அவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்துக் கொடுக்கிறதிலிருந்து சில நேரங்களில் கால் அமுக்கி விடுவது வரை எல்லாக் காரியங்களும் செய்வேன். என் அம்மா சொன்னால் மட்டும் கேட்க மாட்டேன். ‘போ! போ!’ என்று ஓடுவேன்.
எனக்குப் பத்து வயசாகறதுக்குள்ளேயே என் அம்மாவுக்கு ஐந்து கொழந்தைகள். தாயின் அன்போ அரவணைப்போ எனக்கு நினைவு கூட இல்லை.
என் அம்மா என்னைக் கூப்பிடற பேரே ‘ஏ! கடன்காரா’ தான். ஊருக்கு, தெருவுக்கு, மற்றவர்களுக்குப் பதிவிசாகத் ‘தேமே’னென்று தோற்றமளிக்கிற நான் வீட்டில் அவ்வளவு விஷமங்கள் செய்வேன். என்ன விஷமம்? ஏதாவது ஒரு குழந்தை ஓடி வரும்போது ‘தேமே’னென்று உட்கார்ந்திருக்கும் நான் ‘தேமே’னென்று குறுக்கே காலை நீட்டுவேன்… கீழே விழுந்து ‘ஓ’ வென்று அழும் குழந்தைக்குச் சில சமயங்களில் மோவாயிலிருந்தோ பல்லிலிருந்தோ ரத்தம் ஒழுகும். நான் ‘தேமே’னென்று உட்கார்ந்திருப்பேன். அந்தச் சனிகள் பேசத் தெரியாவிட்டாலும் அழுது கொண்டே, கையை நீட்டிச் சாடை காட்டி, தான் விழுந்ததுக்கு நான் தான் காரணம் என்று எப்படியோ சொல்லிக் காட்டிக் கொடுத்து விடும்கள்!
“கடன்காரா! செய்யறதையும் செய்துட்டுப் பூனை மாதிரி உக்காந்திருக்கியா?” என்று அம்மா வந்து முதுகில் அறைவாள். அறைந்து விட்டுக் “கையெல்லாம் எரியறது… எருமை மாடே!” என்று நொந்து கொண்டு விரட்டுவாள்.
“ஏண்டி அவனை அடிக்கறே! பாவம், அவன் ‘தேமே’ன்னு தானே இருக்கான்” என்று யாராவது அடுத்த வீட்டு – எதிர் வீட்டு மாமி வந்து – அவள் வந்த பிறகு அழ ஆரம்பித்த என்னைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போவார்கள். பட்சணம் கிடைத்த பிறகு நான் சமாதானம் அடைவேன். ஆனாலும் அங்கேயும் ‘தேமே’னென்று இருந்து கொண்டே ஏதாவது செய்து விடுவேன். எப்படியோ பழியிலிருந்து மட்டும் தப்பித்துக் கொள்வேன்… காப்பிப் பொடி அரைக்கிற மிஷின்லே மண்ணைக் கொட்டி அரைக்கிறது… திடீர்னு “மாமி… இங்கே வந்து பாருங்கோ. யாரோ மிஷின்லே மண்ணெப் போட்டு அரைச்சிருக்கா”ன்னு கத்துவேன்.
“வேற யாரு? எங்காத்துக் கடன்காரனாத்தான் இருக்கும்” என்று அவர்கள் வீட்டுக் ‘கடன்கார’னைத் தேடிப் பிடித்து நாலறை வாங்கி வைத்துப் பார்த்தால்தான் ஒரு சந்தோஷம்; ஒரு நிம்மதி.
என் அம்மா மட்டும் என் மேல் அனுதாபம் காட்டுகிற மாமிகளை எச்சரித்துக் கொண்டே இருப்பாள்: “அவனை நம்பாதீங்கோ… பார்த்தா ‘மொசு மொசு’ன்னு பூனை மாதிரி இருந்துண்டு உடம்பே வெஷம்… என்னமோ சொல்லுவாளே, பூனை செய்யறதெல்லாம் வெஷமம்… அடிச்சா பாவம்னு – அந்த மாதிரி…”
அதைக் கேட்டு “ஏண்டா, அப்படியா?” என்று அந்த மாமி என்னைப் பார்ப்பாள். நான் ‘தேமே’னென்று அவளைப் பார்ப்பேன்…
“சீ, போடி! என்னத்துக்குக் கொழந்தையெ இப்படிக் கரிச்சுக் கொட்டறே! நீ வாடா…” என்கிற அந்த அணைப்பும் அன்பும் எவ்வளவு இதமாக, சுகமாக இருக்கும்! ஆனால் அந்த அனுதாபம் காட்டுகிற அவர்களுக்குக் கூட நான் உண்மையாக, வெள்ளையாக இல்லை என்பது எனக்கல்லவா தெரியும்!
சரி! நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்! அந்த அக்ரஹாரத்துப் பூனையெப் பத்தி சொல்ல வந்து – அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியும் என்னைப் பத்தியும்னா சொல்லிண்டு இருக்கேன்! – இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னே பத்து வயசு வரைக்கும் வாழ்ந்திருந்த ஒரு கிராமத்தையும் ஒரு அக்ரஹாரத்தையும் அதிலே வாழ்ந்த மனுஷாளையும் பத்தி இன்னும் எவ்வளவு நாளைக்கி வேணும்னாலும் என்னால் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். எனக்கு அலுக்காது, சலிக்காது. பார்க்கப் போனா, நான் சொல்லிக் கொண்டு, பேசிக் கொண்டு, எழுதிக் கொண்டு இருக்கிற எல்லாமே ஒரு ஊரை, ஒரு தெருவைச் சேர்ந்தவாளைப் பத்திதான். மீனா, ருக்கு, பட்டு, லலிதா, கௌரிப் பாட்டி, ஆனந்த சர்மா, வைத்தா, ராகவய்யர், கணபதி ஐயர், சங்கர சர்மா இவர்கள் எல்லோருக்குமே ஒருத்தரை ஒருத்தர்க்குத் தெரியும். இவா அப்ப இருந்தது, இப்ப எப்பிடி இருப்பான்னு நான் இப்பக் கற்பனை பண்றது, இவர்களிலே சில பேர் எக்கச் சக்கமா பட்டணத்தின் ‘மெர்க்குரி லைட்’ வௌிச்சத்திலே என்னிடம் வந்து சிக்கிக் கொண்டது, காலத்தினுடைய அடிகளினாலே இவர்கள் வளைஞ்சு போனது, உடைஞ்சு போனது, அடிபடாமல் ஒதுங்கி ஓடிப்போனது, அடிபட்டும் ‘ஒண்ணுமில்லை’யென்னு உடம்பெத் தொடச்சு விட்டுண்டது, எங்கேயோ பட்ட அடிக்கு, எங்கேயோ போய் முட்டிண்டது, சமயத்திலே என்னண்டையே வந்து முட்டிக் கொண்டு குட்டு வாங்கிக் கொண்டது இதைப்பத்தியெல்லாம் எழுதறதிலே எனக்குச் சலிப்பே கிடையாது; அலுப்பே கிடையாது. எனக்கு அவா மேலே அப்படி ஒரு பிரேமை. அவா சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு ரொம்ப ஒஸத்தி!
ஆனால், அவர்கள்லே சிலருக்கு இதுவே அலுத்துப் போச்சுப் போலே இருக்கு… ம்ஹ்ம்! பயமா இருக்குப் போலே இருக்கு… என்னமோ சங்கடப் பட்டுக்கறா, ‘என்ன ஸார், அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியே எழுதிண்டு’ன்னு.
நான் என்ன பண்ணுவேன்? எனக்குத் தெரிஞ்சதைத் தானே எழுதுவேன். சரி. இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு எனக்குத் தெரிஞ்ச ஒரு பூனையைப் பற்றி எழுதப் போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ சலிப்போ பயமோ சங்கடமோ வராது. பூனைகள் கதை படிக்கிறதோ, கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத் தான் ‘ஆஷாடபூதி’ மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரி குணமெல்லாம் நிச்சயம் கிடையாது.
எனக்குப் பூனைகளைக் கண்டால் கொஞ்சம் கூடப் பிடிக்கிறது இல்லை. ஒரு அவெர்ஷன்! சாதாரணமா எனக்கு எந்தச் செல்லப் பிராணிகளையும் பிடிக்காது. அருவருப்பா இருக்கும். சிங்கம், புலி இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்! அதையெல்லாம் பார்த்ததில்லையல்லவா? அதனாலே பிடிக்கும்! பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல் போறது மனுஷ இயல்புதானே? அதுவும் பூனை, நாய், பெருச்சாளி இதையெல்லாம் யாருக்குத் தான் பிடிக்கும்? யாருக்குமே பெருச்சாளி பிடிக்காது! – அப்போவெல்லாம் எனக்கு பொழுதுபோக்கே கொலை பண்றதுதான்.
‘தேமே’ன்னு உக்கார்ந்துண்டு ஒரு கட்டெறும்பைப் பிடிச்சு ரெண்டு காலைக் கிள்ளிட்டு அது ஆடற நடனத்தை ரசிக்கிறது… ஒரு குச்சியாலே அதன் நடு முதுகிலே அழுத்திக் குத்தி, அதெ ரெண்டாக்கி, அந்த ரெண்டு துண்டும் எப்படித் துடிக்கிறதுன்னு ஆராயறது; பல்லியெ அடிச்சு, வால் துடிக்கிறதெப் பாக்கறது. தும்பியெப் பிடிச்சு, வாலிலே நூல் கட்டி, சங்கீதம் பாட வைக்கிறது. மரவட்டை, வளையல் பூச்சி, ஓணான் இதுக்கெல்லாம் அந்தக் காலத்திலே நான் ஒரு யமகிங்கரன்! எங்க தெருவிலே நுழையற எந்த நாயும் என்னைப் பார்த்துட்டா அதுக்கப்புறம் தைரியமா முன்னேறி வராது. அப்படியே வாபஸ்தான்!
ஜெயா மாமி வீட்டுத் திண்ணையில் நான் பாட்டுக்குத் ‘தேமே’ன்னு உக்காந்திண்டிருக்கேன். பக்கத்துலே ஒரு குவியல் கருங்கல். நானே செலக்ட் பண்ணிப் பொறுக்கு சேர்த்து வச்சது. அதோ! தூரத்திலே ஒரு நாய் வரது. இதுக்கு முன்னேயே ஒரு தடவை அதை மூணு காலிலே ஓட வச்சிருக்கேன். உடனே நான் தூணிலே மறையறேன். அடிக்கிறவனுக்கே இவ்வளவு உஷார் உணர்ச்சி இருந்தா, அடிபடுகிற அதுக்கு இருக்காதா? இரண்டு காதையும் குத்திட்டு நிமிர்த்திண்டு சட்டுனு என்னைப் பார்த்துடுத்து! ‘டேய்! அடிப்பியா? நான் பாட்டுக்குப் போயிடறேண்டா’ என்பது போல் ஒரு பார்வை. நான் உடனே அதைப் பாக்காத மாதிரி முகத்தைத் திருப்பிண்டுடறேன். அதுக்குக் கொஞ்சம் தைரியம். அந்த எதிர் வீட்டு வரிசை ஓரமா இரண்டு பின்னங்காலுக்கும் நடுவிலே வாலை இடுக்கிண்டு என் மேலே வச்ச கண்ணை எடுக்காமலேயே நகர்ந்து வரது. என் கையெல்லாம் பரபரக்கறது. பல்லைக் கடிச்சுண்டு என்னை அடக்கிக்கிறேன். இதோ அது எனக்கு நேரே வந்துட்டது… சீ! அந்த வேகமெல்லாம் இப்ப வராது. நான் என்ன பண்ணினேன்னு யாருக்கும் தெரியாது. தெருவையே கூட்டற மாதிரி கத்திண்டு என்ன ஓட்டம் ஓடறது அது! தலையிலே குறி வச்சாதான் காலிலே படும். பட்டுடுத்து! நான் ‘தேமே’ன்னு உக்காந்திருக்கேன்.
சத்தம் கேட்டு ஜெயா மாமி உள்ளேருந்து வரா. ‘சடக்’னு திண்ணையிலிருந்து கல்லையெல்லாம் கீழே தள்ளிடறேன்.
“ஏண்டா, நாயை யாரு அடிச்சது?”
“ஐயையோ, நான் இல்லே மாமி.”
“சரி, யாரையாவது கூப்பிடு. வெந்நீர் உள்ளே ஒரு பெருச்சாளி வௌியே போக முடியாம நிக்கறது. யாரையாவது கூப்பிடுடா அம்பி.”
அவ்வளவுதான் ஒரு விறகுக் கட்டையைத் தூக்கிண்டு நான் போறேன். மாமி கத்தறா. “வேண்டாண்டா, வேற யாரையாவது கூப்பிடு. அது உன் மேலே பாஞ்சுடும்.”
வெந்நீர் உள் மூலையிலே அதைக் ‘கார்னர்’ பண்ணிட்டேன் நான். பெருச்சாளி தலையைத் தூக்கி என்னைப் பாத்து சீறிண்டு நிக்கறது. தலையைக் குறிபார்த்து, ‘நச்’னு ஒரு அடி. சனியன்! தன்னையே பிரதட்சிணம் பண்ணிக்கிற மாதிரி சுத்திச் சுத்தி வெந்நீருள் பூரா ரத்தம் கக்கிச் செத்துடுத்து. ஜெயா மாமி பயந்துட்டாள். நானும் பயந்த மாதிரி “மாமி மாமி”ன்னு கத்தினேன். ஜெயா மாமி ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சிண்டா. “நோக்கு இந்த வேலை வேண்டாம்னு சொன்னேனோன்னா… கருமத்தைப் பார்க்காதே… வா. ராக்காயி வந்தால், கழுவிவிடச் சொல்லலாம்.”
பயந்து நின்னுண்டிருக்கிற என்னை ஆதரவா ஜெயா மாமி அணைச்சுக்கிறாள். பெரியவா அணைச்சுண்டா என்ன சுகமா இருக்கு!
அந்தப் பெருச்சாளி என்னைப் பார்த்துச் சீறலைன்னா எனக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. அது மட்டும் என்னைப் பார்த்துச் சீறிட்டுத் தப்பிச்சும் போயிருந்தால் நான் அழுதிருப்பேன்.
கொலை செய்யறதைத் தவிர இன்னொரு பொழுது போக்கும் எனக்கு உண்டு. அது என்னன்னா, கொலை பண்றதையும், கூறு போட்டு விக்கறதையும் வேடிக்கை பார்க்கறது. அந்த அக்ரஹாரத்துக் கடைசீலே ஒரு திடல் உண்டு. அந்தத் திடல்லே இருக்கிறவாளெல்லாம் என்னமோ ஒரு பாஷை பேசுவா. ஆடு, மாடு, கோழி எல்லாம் வச்சிருப்பா. அங்கே ஒரு கடா மீசைக்காரன் இருப்பான். வெங்கிட்டு, சுந்தரம், உத்தண்டம் இவங்களுக்கெல்லாம் அவனைக் கண்டாலே ‘டபிள்ஸ்’ தான். எனக்கு அவனைக் கண்டா பயமே கிடையாது. அவன் எப்போடா நம்ம தெரு வழியா வருவான்னு காத்துண்டே இருப்பேன். அவன் சாயங்காலம் நாலு மணிக்கு எங்க தெரு வழியா அந்தத் திடலுக்கு திரும்பிப் போவான். நான் அவனையே பாத்துண்டிருப்பேன். அவன் மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு துருப்பிடிச்ச கறுப்பு சைக்கிளிலே அவன் வருவான். அந்த சைக்கிளிலே அவனைப் பார்த்தா ஆடு மேலே ஒரு ஆள் உக்காந்து சவாரி பண்றாப்பலே இருக்கும். சைக்கிள் ஹாண்ட் பார்லே ஒரு காக்கி பை இருக்கும். அதுலெ ரத்தக்கறையா இருக்கும்; ஈ மொய்க்கும்; அது உள்ளே இருக்கற கத்தியோட பிடி மட்டும் தெரியும். நான் பெரியவனானப்புறம் அவனை மாதிரியே மீசை வச்சுண்டுடுவேன். இன்னும் பெரிய கத்தியா வெச்சுக்குவேன். யாரானும் சண்டைக்கு வந்தால், வெட்டிடுவேன். பெரியவனானால் நிச்சயமா மனுஷாளையும் வெட்டுவேன். என்னைக் கண்டு எல்லோரும் பயப்படணும். இல்லாட்டா, கத்தியாலெ வெட்டுவேன். – நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்? அக்ரஹாரத்துப் பூனையைப் பத்தியல்லவா சொல்ல வந்தேன்? பரவாயில்லை. பூனையைப் பத்தி சொல்ல இடம் வந்தாச்சு. சொல்லிடறேன்.
எங்க அக்ரஹாரத்திலே ஒரு பூனையும் உண்டு. ரொம்ப ‘நொட்டோரியஸ்!’ பூனைன்னா, ஒரு சின்னப் புலி மாதிரி இருக்கும். உடம்பெல்லாம் வரி வரியா இருக்கும். இந்தச் சனியனுக்கு அக்ரஹாரத்துலே என்ன வச்சிருக்கோ? பூனை மாமிச பட்சிணிதானே! அது மாமிசம் கிடைக்கிற இடத்தையெல்லாம் விட்டுட்டு, இந்த அக்ரஹாரத்துலே இருக்கு. அதனாலே இந்த அக்ரஹாரத்துப் பூனை கம்பல்ஸரியா சைவப் பூனை ஆயிடுத்து. எனக்கும் அதுக்கும் ஓர் ஒத்துமை உண்டு. நானும் ‘தேமே’ன்னு இருப்பேன். அதுவும் ‘தேமே’ன்னு இருக்கும். நானும் விஷமம் பண்ணுவேன். அதுவும் விஷமம் பண்ணும். நானும் எல்லாராத்துலேயும் போய் விஷமம் பண்ணுவேன். அதுவும் எல்லார் ஆத்துலேயும் போய் விஷமம் பண்ணும்.
ஒருநாள் ஜெயா மாமி ‘ஓ’ன்னு அலறிண்டு சபிச்சா: “இந்தக் கட்டேல போற பூனை ஒரு படி பாலையும் சாச்சுக் கொட்டிடுத்தே…! அந்தப் பெருச்சாளியை அடிச்ச மாதிரி இதை யாராவது அடிச்சுக் கொன்னாக் கூடத் தேவலை.”
ஊஞ்சல்லே படுத்துண்டு விசிறிண்டிருந்த மாமா சொன்னார்: “வாயெ அலம்புடி… பாவம்! பாவம்! பூனையைக் கொல்றதுன்னு நெனைச்சாலே மகாபாவம்!” – நான் ‘தேமே’ன்னு நின்னுண்டு கேட்டுண்டிருந்தேன்.
பெருச்சாளியை அடிச்ச மாதிரி பூனையை அடிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். பெருச்சாளி சீறித்தே – ஆனா, பூனை பாஞ்சு கொதறிப்பிடும் கொதறி… பூனை மொதல்லே பயப்படும், கத்தும்; ஓடப் பார்க்கும்; ஒண்ணும் வழியில்லேன்னா ஸ்ட்ரெய்ட் அட்டாக் தான்!… எனக்கு ஞாபகம் இல்லாத வயசிலே ஒரு பூனை என் வயத்தைக் கீறின வடு இப்பவும் அரைஞாண் கட்டற எடத்துலே நீளமா இருக்கே… சின்னக் குழந்தையா தவழ்ந்துண்டு இருந்த பருவம்… பூனையைப் பிடிச்சுண்டு சர்க்கஸ் பண்ணி இருக்கேன். எக்குத் தப்பா கழுத்தெப் புடிச்சுட்டேனாம்…. சீறிக் கத்திண்டு அது என்னைப் பொறண்டறதாம். நான் ‘ஓ’ன்னு அலறிண்டு அதன் கழுத்தை விடாம நெருக்கறேனாம்…. அம்மா இப்பவும் சொல்லுவா… அந்த வடு இப்பவும் அடி வயத்திலே இருக்கு.
அன்னிக்கி சாயங்காலம் எங்க வீட்டுத் தோட்டத்திலே அந்தப் பூனையை நான் பார்த்தேன். எங்கு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் நடுவே வேலியோரமாப் போய்க்கொண்டிருந்தது அந்தப் பூனை. போற போக்கிலே ஒரு தடவை திரும்பிப் பார்த்தது. நானும் பார்த்தேன். மொறைச்சுப் பார்த்தேன். உடனே அதுவும் கொஞ்சம் உஷாராகி நன்னா திரும்பிண்டு என்னையே மொறைச்சுப் பார்த்தது. நான் அது மேலே பாய்கிற மாதிரி குதிச்சுப் பயம் காண்பிச்சேன். அது பயப்படலே. கொஞ்சம் தரையிலே பம்மி நிமிர்ந்தது; அவ்வளவுதான். ‘இது என்ன பயப்பட மாட்டேங்கறதே’ன்னு எனக்குக் கோவம். ஆத்திரத்தோட நானும் மொறைக்கறேன். அலட்சியமா அதுவும் மொறைக்கிறது… அது ஒரு மௌனமான சவால் மாதிரி இருந்தது. சிவப்பா வாயைத் தெறந்து என்னைப் பார்த்துண்டே… ‘மியாவ்!’..ன்னு அது கத்தினப்போ – அது தன் பாஷையிலே என்னை சவாலுக்கு அழைக்கிற மாதிரியே இருந்தது.
‘அதெல்லாம் பெருச்சாளிக்கிட்டே வெச்சிக்கோ… நம்ம கையிலே நடக்காது.’
‘இரு… இரு. ஒரு நாளைக்கு உன்னைப் பிடிச்சுக் கோணியிலே அடைச்சுத் துவைக்கிற கல்லிலே அடிச்சுக்…’
‘மியாவ் – சும்மா பூச்சி காட்டாதே; முதல்லே என்னைப் பிடிக்க முடியுமா உன்னாலே’ – சட்டுன்னு வேலியைத் தாண்டிடுத்து. அடுத்தாத்துத் தோட்டத்துலே நின்னுண்டு வேலி வழியா என்னைப் பார்த்து மொறைக்கிறது.
‘எங்கே போயிடப் போறே? உன்னைப் பிடிக்கலேன்னா பேரை மாத்தி வெச்சிக்கோ’ன்னேன் நான்.
அதுக்குப் பதில் சொல்ற மாதிரி ஒரு சின்ன மியாவ் – ‘பார்ப்போமா?’ன்னு அதுக்கு அர்த்தம்.
‘ம்… பார்க்கலாம்…’ன்னேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கலை. அந்தப் பூனையும் தூங்கலை. ராத்திரிப் பூரா குடுகுடுன்னு ஓட்டு மேல ஓடறது. இன்னொரு பூனையையும் ஜோடி சேர்த்துண்டு ஒரு ராட்சஸக் குழந்தை அழற மாதிரி ரெண்டும் அலறிண்டு ‘காச்சு மூச்சு’ன்னு கத்தி ஒண்ணு மேலே ஒண்ணு பாஞ்சு பிறாண்டிண்டு… எங்க வீட்டு ஓட்டுக் கூரை மேல ஒரே ஹதம். எங்கேயோ ஒரு ஓடு வேறே சரிஞ்சு ‘பொத்’துனு தரையிலே விழறது. திண்ணையிலே படுத்துண்டிருந்த தாத்தா, தடியை எடுத்துத் தரையிலே தட்டி ‘சூசூ’ன்னு வெரட்டறார். ரெண்டும் ஒண்ணு பின்னாடி ஒண்ணு குதிச்சுத் தெருவிலே குறுக்கா ஓடி ஜெயா மாமி ஆத்துக் கூரையிலே ஏறினதை நிலா வௌிச்சத்திலே நான் நன்னாப் பார்த்தேன்.
அடுத்த நாள் அதை வேட்டையாடிடறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன். ஜெயா மாமி ஆத்து வெந்நீருள்ளே ஒரு தட்டு நிறையப் பாலை வெச்சேன். ஒரு கதவை மட்டும் திறந்து வெச்சிண்டேன். ஜன்னல் கதவை மூடிட்டேன். மத்தியானம் சாப்பிடக்கூட ஆத்துக்குப் போகாமே காத்துண்டிருந்தேன்… கடைசிலே மத்தியானம் மூணு மணிக்குப் ‘பூனைப் பெரியவாள்’ வந்தா…. நான் கிணற்றடியிலிருந்து இவ்வளவையும் பார்த்துண்டே இருக்கேன்… மெதுவா அடிமேலே அடி வச்சுப் பூனை மாதிரி போனேன். ‘அவா’ பின்னம் பக்கம் மட்டுந்தான் தெரியறது. ஒரு தட்டுப் பாலையும் புகுந்து விளாசிண்டிருக்கா. ‘டப்’னு கதவை மூடிட்டேன்… உள்ளே சிக்கிண்ட உடனே பாலை மறந்துட்டுக் கதவைப் பிறாண்டறதே!
“மாமி… மாமி, ஓடி வாங்கோ, ‘பெரியவா’ இங்கே சிக்கிண்டா”ன்னு கத்தறேன். மாமி வந்து பாக்கறா… பூனை உள்ளேயே கத்திண்டிருக்கு.
“என்னடா, வெந்நீர் உள்ளே பூனையெ வெச்சு மூடிட்டா நாம எப்படி உள்ளே போறது? நாம உள்ளே போறச்சே அது வௌியே போயிடாதோ!”
“இப்பத்தான் முதல் கட்டம் முடிஞ்சிருக்கு மாமி. அதிலேயே ஜெயம். நீங்க உள்ளே போங்கோ… கடைசி கட்டத்திலே கூப்பிடறேன்.”
மாமி மனசிலே அந்தப் பெருச்சாளி வதம் ஞாபகம் வரது போல இருக்கு.
“அம்பி வேண்டாண்டா. அதை ஒண்ணும் பண்ணிடாதே. ஜன்மத்துக்கும் மகா பாவம், வேண்டாம்.”
“நான் அதைக் கொல்லலை மாமி. கோணியிலே போட்டுக் கொண்டு போய் வெரட்டி விட்டுடறேன்…”
“ஆமா… வெரட்டிட்டு நீ திரும்பி வரதுக்குள்ளே அது இங்கே வந்து நிக்கும்” – ஜெயா மாமி பரிகாசம் செய்து விட்டுப் போனாள். நான் மனத்திற்குள்ளே நெனச்சுண்டேன்; அதைத் ‘திரும்பி வராத ஊரு’க்கு அனுப்பிச்சுட்டுத் தானே வரப் போறேன்.
அக்ரஹாரத்திலே அன்னிக்கு நான்தான் ஹீரோ! விளையாடும் போது என்னைச் சேர்த்துக்காத பையன்களெல்லாம் அன்னிக்கு என் பின்னாடி வரான்கள். நான் பூனையைக் கோணியிலே கட்டிண்டு போறேன். ‘ஹோ’ன்னு கத்திண்டு என் பின்னாடி பையன்களெல்லாம் வரா. எங்கம்மா வாசல்லே வந்து நின்னுண்டு திட்டறா.
“ஏ, கடன்காரா, கட்டேலே போறவனே…. அழிஞ்சி போகாதே; பூனை பாவத்தைக் கொட்டிக்காதே. ஒரு முடி விழுந்தாலும் எடைக்கு எடை தங்கம் தரணும்பா. உங்கப்பா வரட்டும்… சொல்லி உன்னைக் கொன்னு குழியை வெட்டி…”
அதை நான் காதிலேயே வாங்கிக்கலை. கோணியைத் தூக்கிண்டு தெருக் கோடியிலே இருக்கற மண்டபத்திலே போய் உக்காந்துட்டோம் எல்லோரும்.
“கோணியிலேருந்து பூனையை எடுத்து ஒரு கயித்திலே கட்டிப் பிடிச்சுண்டா, வேடிக்கை காட்டலாம்டா”ன்னு உத்தண்டம் யோசனை சொல்றான். ஆனால், பூனைக்கு யார் கயிறு கட்டறது?
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அந்தக் கடா மீசைக்காரன் இப்போ வருவான். அவன் கிட்டே குடுத்தாப் போறும். அப்படியே கோணியோட வச்சு ஒரு ‘சதக்’… ஆட்டம் குளோஸ்!”
“அவன் கிட்டே நீதான் கேக்கணும்” என்று அவன் வருவதற்கு முன்னாடியே பயப்பட ஆரம்பிச்சுட்டான் சுந்தரம். இந்தப் பையன்களை வெச்சிண்டு இந்தக் காரியம் செய்யறது சரின்னு தோணலை; பயந்துடுவான்கள்.
“டேய்! நீங்கள்ளாம் ஆத்துக்குப் போங்கோ. அவன் வெட்டறதைப் பாத்து பயப்படுவேள். அப்புறம் உங்கம்மா என்னை வைவா!” பையன்களையெல்லாம் வெரட்டறேன்.
“அன்னிக்கு அங்கே ஆட்டை நறுக்கினானே… நீ காட்டினியே… நான் பயந்தேனா?… நான் இருக்கேண்டா.”
“ஆனா, ஒண்ணு… இந்த விஷயத்தை யாரும் ஆத்துலே போய் சொல்லப்படாது. சத்தியம் பண்ணுங்கோ!”ன்னு கேட்டேன்.
“சத்தியமா சொல்ல மாட்டோம்.” – எல்லோரும் சேர்ந்து ஒரு கோரஸ்.
கடா மீசைக்காரனை நாங்களெல்லாம் எதிர்பார்த்துண்டிருக்கோம்.
கடைசியிலே சாயங்காலம் நாலு மணிக்கு ஆட்டு மேலே உட்கார்ந்து ஆள் சவாரி பண்ற மாதிரி தெருக் கோடியிலே அவன் வரது தெரியறது. பையன்களெல்லாம் மண்டபத்துலே ஆளுக்கொரு தூண் பின்னாலே ஒளிஞ்சிண்டான்க. “நாங்கெல்லாம் இங்கேயே இருக்கோம். நீ போய் கேளுடா”ன்னு என்னைத் தள்ளி விட்டான்கள். எனக்கென்ன பயம்?
கடா மீசைக்காரன் கிட்டக்கே வந்துட்டான். நான் ஒரு குட் மார்னிங் வச்சேன். அவனும் எனக்கு ஒரு சலாம் போட்டானே!
அவன் என் பக்கத்திலே வந்து இரண்டு காலையும் தரையிலே ஊணிண்டு சைக்கிள்லேருந்து எழுந்திருக்காமலே நிக்கறான். அம்மாடி… அவன் எவ்வளவு உசரம்! நான் அவனை அண்ணாந்து பார்த்துச் சொல்றேன்:
“ஒரு சின்ன உதவி…”
“அதென்ன கோணியிலே?” – அவன் குரல் கிருஷ்ண லீலாவிலே வர்ற கம்சன் குரல் மாதிரி இருந்தது.
“பூனை… ரொம்ப லூட்டி அடிக்கறது. அதுக்காக அதை கொன்னுடறதுக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்.”
“நீயேவா புடிச்சே?” – நான் பெருமையா தலையை ஆட்டறேன். அவன் மண்டபத்திலே ஒளிஞ்சிண்டிருக்கிற பையன்களையெல்லாம் ஒரு தரம் பார்க்கறான். என்னையும் பார்க்கறான். நான் அந்தக் காக்கிப் பைக்குள்ளே இருக்கற கத்தியோட பிடியையே பார்க்கறேன்.
“வெட்டறதுக்குக் கத்தி வேணுமா?”ன்னு அவன் என்னைப் பார்த்துக் கேட்கிறான்.
“ஊஹீம்…. நீங்கதானே ஆடெல்லாம் வெட்டுவேள். அதனாலே நீங்களே இதை வெட்டணும்.”
“ஓ!”ன்னு யோசிச்சிண்டே அந்தக் கத்தியை எடுக்கறான். பெரிய கத்தி! விளிம்பிலே கட்டை விரலை வெச்சு கூர் பார்த்துண்டே அவன் சொல்றான்:
“பூனையை இதுவரைக்கும் நான் வெட்டினதே இல்லே… ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே… நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா?”
“உவ்வே!… வெட்டிக் குழியிலே புதைச்சுடலாம்.”
“அப்பத்தான் பாவம் இல்லே. நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன்? எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திருக்கிறியா?”
“ஓ, பார்த்திருக்கேனே. நீங்க ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே.”
“மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்ப ஆண்டவனைத் தொளுவறது இல்லையா? அதுதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசு கீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை; அது பாவம்! என்னா சொல்றே?”
“இன்னிக்கு மட்டும் ஒரு தடவை விளையாட்டுக்காக இந்தப் பூனையை வெட்டுங்களேன்.”
அவன் லேசாச் சிரிச்சு, என் மோவாயை நிமிர்த்தி, கையிலே ஏந்திண்டே சொன்னான்: (அவன் விரல் எல்லாம் பிசுபிசுன்னு இருந்தது.)
“வெளையாட்டுக்குக் கொலை பண்ணச் சொல்றியா, த்சு… த்சு…! வெளையாட்டுக்கு வெட்ட ஆரம்பிச்சா, கத்தி பூனையோட நிக்காது தம்பி. நான் உன்னைக் கேக்கறேன்? விளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன?…”
எனக்கு உடல் வெடவெடக்கிறது.
“ம்… அந்தப் பூனை விஷமம் பண்றதே?”
“நீ வெஷமம் பண்றது இல்லியா? பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே. சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே! வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டி வெக்கச் சொல்லு”ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப்! திரும்பிப் பார்க்காமே ஓடிட்டுது பூனை. பையன்களெல்லாம் சிரிச்சாங்க. கடா மீசைக்காரனும் சிரிச்சான். நானும் சிரிச்சேன்.
அன்னிக்கு ராத்திரியெல்லாம் நான் அழுதேன். பூனை தப்பிச்சுப் போயிடுத்தேன்னு இல்லே… நான் விளையாட்டா கொலை செஞ்ச வளையல் பூச்சி, மரவட்டை, தும்பி, ஓணான், பெருச்சாளி, பாவம்! அந்த நாய்… எல்லாத்தையும் நெனைச்சுண்டு அழுதேன்…
நான் இப்ப அந்த அக்ரஹாரத்திலே இல்லை. இப்பவும் அந்த அக்ரஹாரத்திலே அந்த மாதிரி ஒரு பூனை இருக்கும்! இல்லையா?
முற்றும்
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
வேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு மடியைக் கழுவுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய சுப்புக் கோனார்தான் முதலில் அவனைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்திலேயே கோனாருக்கு அவனை அடையாளம் தெரிந்து விட்டது. அதே சமயம் அவன் மார்புக்குள் ‘திக்’கென்று என்னமோ உடைந்து ஒரு பயமும் உண்டாயிற்று. அடையாளம் தெரிந்ததால் தனக்கு அந்த பயம் உண்டாயிற்றா அல்லது அவனைக் கண்ட மாத்திரத்திலேயே தன்னைக் கவ்விக் கொண்ட அந்தப் பயத்தினால்தான் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததா என்று நிச்சயிக்க முடியாத நிலையில் அவனை அடையாளம் கண்டதும் அச்சம் கொண்டதும் சுப்புக் கோனாருக்கு ஒரே சமயத்தில் நிகழ்ந்தன.
அது பனிக்காலம்தான். இன்னும் பனிமூட்டம் விலகாத மார்கழி மாதக் காலை நேரம்தான். அதற்காக உடம்பு திடீரென்று இப்படி உதறுமா என்ன? பாதத்தின் விரல்களை மட்டும் பூமியில் ஊன்றி, குத்திட்டு அமர்ந்திருந்த கோனாரின் இடது முழங்கால் ஏகமாய் நடுங்கிற்று. எழுந்து நின்று கொண்டான். உடம்பு நடுங்கினாலும் தலையில் கட்டியிருக்கும் ‘மப்ள’ருக்குள்ளே திடீரென வேர்க்கிறதே!
முண்டாசை அவிழ்த்துத் தலையை நன்றாகச் சொறிந்து விட்டுக் கொண்டான் கோனார்.
காலனி காம்பவுண்டின் இரும்பாலான கதவுகளை ஓசையிடத் திறந்து பெரிய ஆகிருதியாய் உள்ளே வந்து கொண்டிருந்த அவன், தன்னையே குறி வைத்து முன்னேறி வருவது போலிருந்தது கோனாருக்கு.
அவன் கால் செருப்பு ரொம்ப அதிகமாகக் கிறீச்சிட்டது. அவன் கறுப்பு நிறத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தான். உள்ளே போட்டிருக்கும் பனியனும், இடுப்பிலணிந்த நான்கு விரற்கடை அகலமுள்ள தோல் பெல்ட்டும், அந்த பெல்ட்டிலே தொங்குகின்ற அடர்ந்த சாவிக் கொத்தின் வளையத்தை இணைத்து இடுப்பில் செருகி இருக்கும் பெரிய பேனாக் கத்தியும் தெரிய அணிந்த மஸ்லின் ஜிப்பா; அதைப் பார்க்கும்போது சாவிக் கொத்திலே இணைத்த ஒரு பேனாக் கத்தி மாதிரி தோன்றாமல் கத்தியின் பிடியிலே ஒரு சாவிக் கொத்தை இணைத்திருப்பது போல் தோன்றும் அளவுக்கு அந்தக் கத்தி பெரிதாக இருந்தது.
அவன் சுப்புக் கோனாரைச் சாதாரணமாகத்தான் பார்த்தான். தான் வருகிற வழியில் எதிரில் வருகிற எவரையும் பார்ப்பதுபோல்தான் பார்த்தான். போதாதா கோனாருக்கு? ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், பால் கறக்கவும் முடியாமல், பசுவின் காலை அவிழ்க்கவும் முடியாமல் தன்னைக் கடந்து செல்லும் அவனது முதுகைப் பார்த்தவாறு உறைந்து போய் நின்றிருக்கும் கோனாரைப் பார்த்து வேப்ப மரத்தில் கட்டிப்பட்டிருந்த அந்தக் கன்றுக்குட்டிக்கு என்ன மகிழ்ச்சியோ? ஒரு துள்ளூத் துள்ளிக் கட்டை அவிழ்த்துக் கொண்டு பசுவின் மடியில் வந்து முட்டியதைக் கூட அவன் பார்க்கவில்லை.
வழக்கம்போல் படுக்கையிலிருந்து எழுந்ததும் பசுவின் முகத்தில் விழிப்பதற்காக ஜன்னல் கதவைத் திறந்த முதல் வீட்டுக் குடித்தனக்காரரான குஞ்சுமணி இந்த மஸ்லின் ஜிப்பாக்காரனின் – காக்கை கூடு கட்டிய மாதிரி உள்ள கிராப்பையும், கிருதாவையும் பார்த்து முகம் சுளித்துக் கண்களை மூடிக் கொண்டார். கண்ணை மூடிக் கொண்ட பிறகுதான் மூடிய கண்களுக்குள்ளே அவனை அவருக்கு அடையாளம் தெரிந்தது. மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்தார். அவனேதான்!
அவனைத் துரத்திக் கொண்டு யாராவது ஓடி வருகிறார்களா என்று பார்ப்பதற்காகக் குஞ்சுமணி வெளியில் ஓடி வந்தார்.
அப்போது அவன் அவரையும் கடந்து மேலே போய்க் கொண்டிருந்தான். வெளியில் வந்து பார்த்த குஞ்சுமணி, பசுவின் காலைக் கட்டிப்போட்டு விட்டுத் தன் கால்களையும் பயத்தால் கட்டிப் போட்டுக் கொண்டு நிற்கும் சுப்புக் கோனாரைப் பார்த்தார். கோனாருக்குப் பின்னால் காம்பவுண்டு ‘கேட்’டுக்கு வெளியே நின்றிருந்த அந்த ஜட்கா வண்டியிலிருந்துதான் இவன் இறங்கி வருகிறானா என்று குஞ்சுமணியால் தீர்மானிக்க முடியவில்லை.
ஏனெனில் – தெருவோடு போகிற வண்டி தானாகவே அதன் போக்கில் நின்றிருக்கலாமென்று தோன்றுகிற விதமாக அந்த ஜட்கா வண்டியின் குதிரை, பின்னங்கால்களை முழங்கால் வளையப் பூமியில் உந்தி விறைத்துக் கொண்டு புழுதி மண்ணில் நுரை கிளம்பச் சிறுநீர் கழித்த பின், கழுத்துச் சலங்கை அசைய அப்போதுதான் நகர ஆரம்பித்திருந்தது. காலையில் தனக்கு வரிசையாகக் காணக் கிடைக்கின்ற ‘தரிசன’ங்களை எண்ணிக் காறித் துப்பினார் குஞ்சுமணி. துப்பிய பிறகுதான் ‘அவன் திரும்பிப் பார்த்துவிடுவானோ’ என்று அவர் பயந்தார். அந்தப் பயத்தினால், தான் துப்பியது அவனைப் பார்த்து இல்லை என்று அவனுக்கு உணர்த்துவதற்காக “தூ! தூ! வாயிலே கொசு பூந்துட்டது” என்று இரண்டு தடவை பொய்யாகத் துப்பினார் குஞ்சுமணி.
அவன் அந்தக் காலணியின் உள்ளே நுழைந்து இரண்டு பக்கமும் வரிசையாய் அமைந்த அந்தக் குடியிருப்பு வீடுகளை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல், அவற்றின் உள்ளே மனிதர்கள் தான் வாழுகிறார்களா என்றூ அறியக் கூட சிரத்தையற்றவனாய், தனது இந்த வருகையைக் கண்டபின் இங்கே உள்ள அத்தனை பேருமே ஆச்சரியமும், அச்சமும், கவலையும், கலக்கமும் கொள்வார்கள் என்று தெரிந்தும், அவர்களின் அந்த உணர்ச்சிகளைத் தான் பொருட்படுத்தவில்லை என்று காட்டிக் கொள்ளுகிற ஓர் அகந்தை மாதிரி, ‘இங்கே இருக்கும் எவனையும் போல் எனக்கும் இங்கு நடமாட உரிமை உண்டு’ என்பதைத் தனது இந்தப் பிரசன்னத்தின் மூலம் ஒரு மெளனப் பிரகடனம் செய்கின்ற தோரணையில், பின்னங் கைகளைக் கட்டிக் கொண்டு, பின்புறம் கோத்த உள்ளங்கைகளைக் கோழிவால் மாதிரி ஆட்டிக் கொண்டு, ‘சரக் சரக்’ என்று நிதானமாய், மெதுவாய், யோசனையில் குனிந்த தலையோடு மேலே நடந்து கொண்டிருந்தான்.
அந்த அகந்தையும், அவனது மெளனமான இந்தப் பிரகடனத்தையும்தான் குஞ்சுமணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், தாங்கிக் கொள்ளாமல் வேறென்ன செய்வது? ஏற்கனவே ஒரு பக்கம் பயத்தால் படபடத்துக் கொண்டிருக்கும் அவர் மனத்துள், அவனது இந்த நடையைப் பார்த்ததும் கோபமும் துடிதுடிக்க ஆரம்பித்தது. ஆனால், அறிவு நிதானமாக வேலை செய்தது அவருக்கு.
“இவன் எதற்கு இங்கு வந்திருப்பான்! இவன் நடையைப் பார்த்தால் திருடுவதற்கு வந்தவன் மாதிரி இல்லை. எதையோ கணக்குத் தீர்க்க வந்து அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிற நிதானம் இவன் நடையில் இருக்கிறதே…. ஆள் அப்போ இருந்ததை விட இப்போ இன்னும் கொஞ்சம் சதை போட்டிருக்கான். அப்போ மட்டும் என்ன…. சுவரேறிக் குதிச்ச வேகத்திலே கீழே விழுந்து, முழங்காலை ஒடிச்சுக்காமல் இருந்திருந்தான்னா அத்தனை பேரையும் அப்படியே அள்ளித் தூக்கித் தூர எறிஞ்சுட்டு ஓடிப் போயிருப்பான்… அன்னிக்கு முழங்கால்லேருந்து கொட்டின ரத்தத்தையும், பட்டிருந்த அடியையும் பார்த்தப்போ, இவனுக்கு இன்னமே காலே விளங்காதுன்னு தோணித்து எனக்கு. இப்போ என்னடான்னா நடை போட்டுக் காட்டறான், நடை! அது சரி! இப்போ இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்?… என்ன பண்ணினாப் போவான்?… இவன் வந்திருக்கறது நல்லதுக்கில்லைன்னு தோணறதே. இன்னிக்கு யார் மொகத்திலே முழிச்சேனோ? சித்தமின்னே இவன் மொகத்திலே தான் முழிச்சேனோ?…” என்ற கலவரமான சிந்தனையோடு சுப்புக் கோனாரைப் பரிதாபமாகப் பார்த்தார், குஞ்சுமணி. அந்தப் பார்வையில் சுப்புக் கோனாரின் உடம்பையும், அந்த ‘அவனு’டைய உடம்பையும் ஒப்பிட்டு அளந்தார்.
‘கோனாருக்கு நல்ல உடம்புதான்… தயிர், பால், வெண்ணெய், நெய்யில் வளர்ந்த உடம்பாச்சே! சரிதான்! ஆனால், அடி தாங்குமோ? அவனுக்கு அன்னிக்கு முழங்காலிலே அடி படாமல் இருந்திருந்தா, இந்த சுப்புக் கோனார், கீழே விழுந்திருந்த அவன் முதுகிலே அணைக்கயத்தாலே வீறு வீறுன்னு வீறி இருப்பானா! அந்தக் கயறே ரத்தத்திலே நனைஞ்சு போயிடுத்தே!… அடிபட்டு ரத்தம் கொட்டற அந்த முழங்காலிலே ஒண்ணு வச்சான். அவ்வளவுதான்! பயல் மூர்ச்சை ஆயிட்டான். அதுக்கப்புறம் பொணம் மாதிரின்னா அவனை இழுத்துண்டு வந்து, வேப்பமரத்தோட தூக்கி வச்சுக் கட்டினா… அப்புறம் அவன் முழிச்சுப் பார்த்தப்போன்னா உயிர் இருக்கறது தெரிஞ்சது… ‘தண்ணி தண்ணி’ன்னு மொனகினான். நான்தான் பால் குவளையிலே தண்ணி கொண்டு போய்க் குடுத்தேன். குடுத்த பாவி அத்தோடே சும்மா இருக்கப் படாதோ! ‘திருட்டுப் பயலே! உனக்குப் பரிதாபப் பட்டா பாவமாச்சே!’ன்னு பால் குவளையாலேயே கன்னத்திலே ஓங்கி இடிச்சேன்… தண்ணி குடிச்ச வாயிலேருந்து கொடகொடன்னு ரத்தம் கொட்டிடுத்து… அவன் கண்ணைத் திறந்து கறுப்பு முழியைச் சொருகிண்டு என்னைப் பார்த்தான். அதுக்கு அர்த்தம் இப்போன்னா புரியறது…’
‘எலே பாப்பான், இருடா வந்து பாத்துக்கறேன்’ங்கற மாதிரி அன்னிக்கே தோணித்து. இப்போ வந்திருக்கான்… நான் தண்ணி குடுத்தேனே… அதை மறந்திருப்பானா என்ன? எனக்கென்ன – மத்தவா மாதிரி ‘ஒருத்தன் வகையா மாட்டிண்டானே, கெடைச்சது சான்ஸ்’னு போட்டு அடிக்கற ஆசையா? ‘இப்படித் திருடிட்டு, ஓடிவந்து, இவா கையிலே மாட்டிண்டு, அடி வாங்கி, தண்ணி தண்ணின்னு தவிக்கறயே… நோக்கென்னடா தலையெழுத்து?’ன்னு அடிச்சேன். இல்லேங்கல்லை… அடிச்சேன்… அவனுக்கு அடிச்சது மட்டும்தான் ஞாபகம் இருக்கும். இப்போ திருப்பி அடிக்கத்தான் அவன் வந்திருக்கான். எனக்கு நன்னாத் தெரியறது. அவன் நடையே சொல்றதே! நன்னா, ஆறு மாசம் ஜெயில் சாப்பாட்லே உடம்பைத் தேத்திண்டு வந்திருக்கான். வஞ்சம் தீக்கறதுக்குத்தான் வந்திருக்கான்… பாவம்! இந்த சுப்புக் கோனாரைப் பார்க்கறச்சேதான் பாவமா இருக்கு.. அப்படியே சிலை மாதிரி நின்னுட்டானே? இவன் கணக்குத்தான் அதிகம். என்னமா அடிச்சான்! அடிக்கறச்சே மட்டும் நன்னா இருந்ததோ?… இப்போ திருப்பி தரப் போறான்… நேக்கும்தான்… என் கணக்கு ஒரு அடிதான்… ஆனால், அதை நான் தாங்கணுமே!.. இந்தக் காலனிலே இருக்கிறவாள் எல்லாருமே ஆளுக்கு ஒரு தர்ம அடி போட்டா… அப்படி இவன் என்ன மகா சூரன்? எல்லாரையுமா இவன் அடிச்சுடுவான்?” என்ற எண்ணத்தோடு மறுபடியும் சுப்புக் கோனாரின் உடம்பை அளந்து பார்த்தார் குஞ்சுமணி. அவன் உடம்போடு தன் உடம்பையும் – ஏதோ இலங்கைக்குப் பாலம் போடும்போது அணில் செய்த உதவி மாதிரி தன் பலத்தையும் கூட்டி அதன் பிறகு தானும் சுப்புக் கோனாரும் சேர்ந்து போடுகிற கூச்சலில் வந்து சேருவார்கள் என்று நம்புகிற கூட்டத்தின் பலத்தையும் சேர்த்துப் பெருக்கிக் கொண்ட தைரியத்தோடு குஞ்சுமணி பலமாக ஒருமுறை – இருமினார்! அவர் என்னமோ அவனை மிரட்டுகிற தோரணையில் கனைத்து ஒரு குரல் கொடுக்கத் தான் நினைத்தார். அப்படியெல்லாம் கனைத்துப் பழக்கமில்லாத காரணத்தினாலோ, அல்லது நாள் முழுவதும் அந்த நடராஜா விலாஸில் சரக்கு மாஸ்டராக அடுப்படிப் புகையில், கடலை எண்ணெயில் உருட்டிப் போட்ட புளி உருண்டை தீய்கிற கமறலில் இருமி இருமி நாள் கழிக்கிற பழக்கத்தினாலோ கனைப்பதாக நினைத்துக் கொண்டு அவரால் இருமத்தான் முடிந்தது.
அவன், அவரையோ, அவர் இருமலையோ கொஞ்சம்கூட லட்சியம் செய்யாமல் பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டு வாசற்படிகளில் ஏறினான்.
“நல்ல இடம்தான் பார்த்திருக்கான். திண்ணையிலே உக்காந்துக்கப் போறான். பக்கத்திலே இருக்கிற குழாயடிக்கு எப்படிப் பொம்மனாட்டிகள் வந்து தண்ணி பிடிப்பா?… இதோ! இன்னும் சித்த நாழியிலே எங்க அம்மா ரெண்டு குடத்தையும் கொண்டு வந்து திண்ணையிலே வச்சுட்டு, ‘குஞ்சுமணிக் கண்ணா! என் கண்ணோல்லியோ? ரெண்டே ரெண்டு குடம் தண்ணி கொண்டு வந்து குடுத்துடுடா’ன்னு கெஞ்சப் போறாள். பாவம். அவளுக்கு உக்காந்த இடத்திலே சமைச்சுப் போடத்தான் முடியும். தண்ணிக் குடம் தூக்க முடியுமா என்ன? ரெண்டு குடத்தையும் எடுத்துண்டு நான் குழாயடிக்குப் போகப் போறேன். அப்படியே அலாக்கா என்னைத் திண்ணை மேலே தூக்கி… சொல்லிடணும்…. ‘ஒரு அடி தாம்பா தாங்க முடியும். அதோட விட்டுடணும்… அவ்வளவுதான் என் கணக்கு’ன்னு சொல்லிடணும். நியாயப்படி பார்த்தா அவன் முதல்லே சுப்புக் கோனாரைத்தானே அடிக்கணும்? இந்தக் கோனாருக்கு அவனை அடையாளம் தெரியலியோ?…”
“ஏய், சுப்பு! பாத்துண்டு நிக்கறீயே… ஆளை உனக்கு அடையாளம் தெரியலையா?” என்று குரலைத் தாழ்த்திச் சுப்புக் கோனாரை விசாரித்தார், குஞ்சுமணி.
“அடையாளம் எனக்குத் தெரியுது சாமி. என்னையும் அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோன்னுதான் யோசிக்கிறேன்” என்று முணுமுணுத்தான் சுப்புக் கோனார்.
அந்த நேரம், கையில் பால் செம்புடன் வெளியில் வந்த குஞ்சுமணியின் தாயார் சீதம்மாள், சுப்புக் கோனார் பாலைக் கறக்காமல் தன் பிள்ளையாண்டானுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அதுவும் அவன் ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அதைத் தானும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன், காதை மறைத்திருந்த முக்காட்டை எடுத்துச் செவி மடலில் செருகிக் கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள்.
சாதாரணமாகக் குஞ்சுமணி யாருடனும் பேசமாட்டார். காலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியாகப் பசுவைத் தரிசனம் செய்துவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்துகொண்டு வெற்றிலை சீவல் போட ஆரம்பிப்பார். சீதம்மாள் பாலை வாங்கிக் கொண்டு போய், காப்பி கலந்து, அவரைக் கூப்பிடுவதற்கு முன் இரண்டு தடவையாவது வெற்றிலை போட்டு முடித்திருப்பார் குஞ்சுமணி. காப்பி குடித்த பிறகு இன்னொரு முறை போடுவார். வெற்றிலை, சீவல், புகையிலை அடைத்த வாயுடன் இரண்டு குடங்களையும் தூக்கிக் கொண்டு குழாயடிக்கு வருவார். அவர் அதிகமாகப் பேசுகின்ற பாஷையே ‘உம்’, ‘ம்ஹீம்’ என்ற ஹீங்காரங்களும் கையசைப்பும்தான். அப்படிப்பட்ட குஞ்சுமணி காலையில் எழுந்து வெற்றிலை கூடப் போடாமல் இந்தக் கோனாரிடம் போய் ஏதோ பேசுகிறார் என்றால், அது ஏதோ மிக அவசியமான, சுவாரசியமான விஷயமாய்த்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்த சீதம்மாள், மோப்பம் பிடிக்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு நாலு புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள். அவ்விதம் அவள் பார்க்கும்போது அந்தப் பூட்டிக் கிடக்கும் வீட்டின் முன்னால் நின்றிருக்கும் அவன், இவர்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தான்.
“இங்கேதான் பார்க்கறான்… அம்மா, நீ ஏன் அங்கே பார்க்கறே?” என்று பல்லைக் கடித்தார் குஞ்சுமணி.
“யார்ரா அவன்? பூட்டிக் கிடக்கற வீட்டண்ட என்ன வேலை? கேள்வி முறை கிடையாதா? யாரு நீ?” என்று அவனைப் பார்த்த மாத்திரத்தில் குரலை உயர்த்திச் சப்தமிட்டவாறே பால் செம்புடன் கையை நீட்டி நீட்டிக் கேட்டுக்கொண்டு, அவனை நோக்கி நடந்த சீதம்மாளின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார் குஞ்சுமணி.
“அவன் யாரு தெரியுமோ? முன்னே ஒரு நாள் காலையிலே எங்கேயோ திருடிட்டு, அவா துரத்தறச்சே ஓடி வந்து நம்ப காம்பவுண்டுச் சுவரிலே ஏறிக் குதிச்சுக் காலை ஒடிச்சிண்டு, இந்தக் கோனார் கையிலே மாட்டிண்டு அடிபட்டானே….”
“சொல்லு…”
“பத்து மணிக்குப் போலீஸ்காரன் வரவரைக்கும் வேப்பமரத்திலே கட்டி வச்சு, போறவா வரவா எல்லாரும் ஆளுக்கொரு தர்ம அடி போட்டாளே…”
“ஆமா…”
“நான் கூடப் பால் குவளையாலே கன்னத்திலே ஓங்கி இடிச்சேனே… அவன்தான் – அந்தத் திருடன்தான் வந்திருக்கான்… திருடறதுக்கு இல்லே. எல்லாருக்கும் திருப்பிக் குடிக்கறத்துக்கு…”
“குடுப்பான்… குடுப்பான். மத்தவா கை பூப்பறிச்சுண்டிருக்குமாக்கும்… திருடனைக் கட்டி வச்சு அடிக்காம கையைப் பிடிச்சு முத்தம் குடுப்பாளாக்கும்…? என்ன கோனாரே! இந்த அக்கிரமத்தைப் பாத்துண்டு நிக்கறீரே? மரியாதையா காம்பவுண்டை விட்டு வெளியே போகச் சொல்லும்… இல்லேன்னா போலீஸைக் கூப்பிடுவேன்னு சொல்லும்” என்றூ அந்தக் காலனியையே கூட்டுகிற மாதிரி ‘ஓ’ வென்று கத்தினாள் சீதம்மாள்.
அவளுடைய கூக்குரல் கிளம்புவதற்கு முன்னாலேயே அந்தக் காலனியில் ஓரிருவர் பால் வாங்குவதற்காகவும், குழாயடியில் முந்திக் கொள்வதற்காகப் பாத்திரம் வைக்கவும் அங்கொருவர், இங்கொருவராய்த் தென்படலாயினர்.
இப்போது சீதம்மாளின் குரல் கேட்ட பிறகு, எல்லாருமே அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணையின் மேல் வந்து உட்கார்ந்திருக்கும் அந்த அவனைப் பார்த்தனர்; பார்த்ததும் அடையாளமும் கண்டனர். சுப்புக் கோனார் மாதிரியும், குஞ்சுமணி மாதிரியும் அவனது பிரசன்னத்தைக் கண்டு அவர்களும் அஞ்சினர்.
கூட்டம் சேர்ந்த பிறகு கோனாருக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. ‘என்ன இவன்?… பெரிய இவன்!… திருட்டுப் பயல்தானே? அன்னிக்கு வாங்கின அடி மறந்திருக்கும். என்ன உத்தேசத்தோட வந்திருப்பான்னுதான் யோசிச்சேன்…’
மப்ளரை உதறித் தோளில் போட்டுக் கொண்ட கோனார், பலமாக ஒரு கனைப்புக் கனைத்தான்.
‘ம்…’ என்று குஞ்சுமணி அந்தக் கனைப்பை மனசுக்குள் சிலாகித்துக் கொண்டார்.
கோனார், தைரியமாக, கொஞ்சம் மிரட்டுகிற தோரணையுடனேயே அவன் உட்கார்ந்திருந்த அந்தத் திண்ணையை நோக்கி நடந்தான். அவனுக்குத் துணையாக – ஏதாவது நடந்தால் விலக்கி விடவோ, அல்லது கூச்சலிடவோ ஒரு ஆள் வேண்டாமா? அதற்காக – குஞ்சுமணியும் கோனாரின் பின்னால் கம்பீரமாக நடந்து சென்றார்.
“எலே!… உன்னை யாருன்னு இங்கே எல்லாருக்கும் தெரியும்… இடம் தெரியாம வந்துட்டே போல இருக்கு. வேறே ஏதாவது தகராறு வரதுக்கு முன்னாடி இந்தக் காம்பவுண்டை விட்டு வெளியே போயிடு” என்று கோனார் சொல்லும் போது –
“ஆமாம்பா… தகராறு பண்ணாம போயிடு… நோக்கு இடமா கிடைக்காது?” என்று குஞ்சுமணியும் குரல் கொடுத்தார்.
அவன் மெளனமாக ஜிப்பா பாக்கெட்டிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். பின்னர் சாவதானமாய் இடுப்பை எக்கி பெல்ட்டோ டு தைத்திருந்த ஒரு பையைத் திறந்து, நான்காய் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தைத் கோனாரிடம் கொடுத்துவிட்டு, அதிலிருந்து ஒரு சாவியைத் தேடி எடுத்து, அந்தப் பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான்.
கோனார் அந்தக் காகிதத்தைக் குஞ்சுமணியிடம் கொடுத்தான். குஞ்சுமணி அதை வாங்கிப் பார்த்ததும் வாயைப் பிளந்தார்.
“என்னய்யா கோனாரே… முதலியார் கிட்டே இரண்டு மாச அட்வான்ஸ் ஐம்பது ரூபாய் கட்டி, ரசீது வாங்கிண்டு வந்திருக்கானய்யா…” என்று ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டார்.
“நன்னா இருக்கே, நாயம்! சம்சாரிகள் இருக்கற எடத்துலே திருட்டுப் பயலைக் கொண்டு வந்து குடி வெக்கறதாவது? இந்த முதலியாருக்கென்ன புத்தி கெட்டா போயிடுத்து? ஏண்டா குஞ்சுமணி! நானும் இந்த வீடு காலியான பதினைந்து நாளா சொல்லிண்டு இருக்கேனோன்னோ? நம்ப சுப்புணி பிள்ளை பட்டம்பி இங்கே ஏதோ ‘கோப்பரேட்டி’ பரீட்சை எழுத வரப் போறேன்னு கடிதாசி எழுதினப்பவே சொன்னேனே…. ‘அந்த முதலியார் மூஞ்சியிலே அம்பது ரூபாக் காசை ‘அடுமாசி’யா விட்டெறிஞ்சுட்டு இந்த இடத்தைப் பிடிடா’ன்னு சொன்னேனோன்னோ?… நேக்கு அப்பவே பயம்தான்… வயசுப் பொண்கள் இருக்கற எடத்துலே எவனாவது கண்ட கவாலிப் பயல் வந்துடப்படாதேன்னு… பாரேன்…. அவனும் அவன் தலையும்…. கட்டால போறவன்… பீடி வேறே பிடிச்சுண்டு… என்ன கிரகசாரமோ?” என்று முடிவற்று முழங்கிக் கொண்டிருந்த சீதம்மாளை வாயைப் பொத்தி அடக்குவதா, கழுத்தை நெரித்து அடக்குவதா என்று புரியாத படபடப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் முகத்துக்கு நேரே இரண்டு கையையும் நீட்டி –
“அவன் காதுலே விழப் போறது. வாயை மூடு…. அவன் கையால எனக்கு அடி வாங்கி வெக்கறதுன்னு கங்கணம் கட்டிண்டு நிக்கறயா? எவனும் எங்கேயும் வந்துட்டுப் போறான். நமக்கென்ன?” என்று கூறிச் சீதம்மாளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தார் குஞ்சுமணி.
“நேக்கு என்னடா பயம்? நோக்கு பயமா இருந்தா, நீ ஆத்துக்குள்ளே இரு… புருஷாள்ளாம் வெளிலே போயிடுவேள்; நாங்க பொம்மனாட்டிகள்னா வயத்துலே நெருப்பைக் கட்டிண்டு இங்கே இருக்கணும்… இப்பவே குழாயடியிலிருந்த தவலையைக் காணோம்… கொடியிலே உலர்த்தியிருந்த துணியைக் காணோம்… போறாக்குறைக்கு திருடனையே கொண்டு வந்து குடி வச்சாச்சு… காதுலே மூக்கிலே ரெண்டு திருகாணி போட்டுண்டிருக்கற கொழந்தைகளை எப்படித் தைரியமா வெளிலே அனுப்பறது? ஓய்…. கோனாரே, பேசாம போய் போலிசுலே ஒரு ‘கம்ப்ளேண்டு’ குடும். இதே எடத்துலே இவனைப் பிடிச்சுக் குடுத்திருக்கோம்” என்று வழி நெடுக, வாயைப் பொத்துகிற மகனின் கையைத் தள்ளித் தள்ளிப் புலம்பியவாறு வீட்டுக்குள் சென்ற சீதம்மாள், உள்ளே இருந்தும் உரத்த குரலில் அந்தத் தெருவுக்கே அபாய அறிவிப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
இதற்கிடையில், சுப்புக் கோனார், வேப்ப மரத்தடியில் கட்டியிருந்த பசுவின் மடியில் பாலை ஊட்டிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியைப் பார்த்துவிட்டுக் கோபமாக வைது கொண்டு ஓடி வந்தான். பசுவின் மடியில் கொஞ்சங்கூட மிச்சம் வைக்காமல், உறிஞ்சிவிட்ட எக்களிப்பில், வாயெல்லாம் பால் நுரை வழியத் துள்ளிக் கொண்டிருந்தது கன்றுக் குட்டி. பசு, கோனாரைக் கள்ளத்தனமாகப் பார்த்தது. ஆத்திரமடைந்த கோனார் பசுவின் காலைக் கட்டியிருந்த அணைக் கயிற்றை அவிழ்த்துச் ‘சுரீர்’ என்று ஒன்று வைத்தான். அடுத்த அடி கன்றுக் குட்டிக்கு. பசுவும் கன்றும் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு காம்பவுண்டு கேட்டைத் தாண்டி ஓடின.
கையில் பால் செம்புடன் வெளியில் வந்த சீதம்மாளைப் பார்த்துச் சுப்புக் கோனார் கத்தினான்: “பாலுமில்லை ஒண்ணுமில்லை, போங்கம்மா… கன்னுக்குட்டி ஊட்டிப்பிடுத்து… இந்தத் திருட்டுப் பய முகத்திலே முழிச்சதுதான்” என்று சொல்லிக் கொண்டே இது தான் சந்தர்ப்பமென்று அவனும் அங்கிருந்து நழுவினான்.
திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டிருந்த குஞ்சுமணி, “மத்தியானத்துக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துடு” என்று குரல் கொடுத்தார். ‘அதற்குள்ளே இங்கு என்னென்ன நடக்கப் போகிறதோ?’ என்று எண்ணிப் பயந்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம் அந்தக் காலனி முழுவதும், ஆறு மாதத்துக்கு முன் ஒரு நாள் விடியற்காலையில், எங்கோ திருடிவிட்டு, தப்பி ஓடிவந்து, சுவரேறிக் குதித்து, இங்கே சிக்குண்டு, எல்லோரிடமும் தர்ம அடி வாங்கி, போலீசில் ஒப்படைக்கப்பட்டு, ஆறு மாதம் சிறை தண்டனையும் பெற்ற ஒரு பழைய கேடி, இங்குள்ள, இத்தனை நாள் காலியாக இருந்த, இதற்கு முன் ஒரு கல்லூரி மாணவன் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அந்தக் கடைசிப் போர்ஷனில் குடி வந்திருக்கிறான் என்கிற செய்தி பரவிற்று.
திண்ணையில் உட்கார்ந்திருந்த குஞ்சுமணி, வெற்றிலையை மென்று கொண்டே, அந்தத் திருடனைப் பற்றிய பயங்கரக் கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலனியிலே திரிகின்ற ஒவ்வொரு மனிதரையும் அவர் அவனோடு சம்பந்தப்படுத்திப் பார்த்தார். ஆமாம். அவர்கள் எல்லோருக்குமே அவனுடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இருந்திருக்கிறது. பால் குவளையால் அவன் கன்னத்தில் ஓங்கி இடித்ததன் மூலம் அவனோடு குறைந்த பட்சம் சம்பந்தம் கொண்டவர் தான் மட்டுமே என்பதில் அவருக்கு கொஞ்சம் ஆறுதல் இருந்தது. மற்றவர்களெல்லாம் அவனை எவ்வளவு ஆசை தீர, ஆத்திரம் தீர அடித்தனர் என்பதை அவர் தனது மனக் கண்ணால் கண்டு, அந்த அடிகள் எல்லாம் அவர்களூக்கு வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைக்கப் போவதைக் கற்பனை செய்து அவர்களுக்காகப் பயந்து கொண்டிருந்தார்.
‘அந்த பதினேழாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கானே, போஸ்டாபீஸிலே வேலை செய்யற நாயுடு – சைக்கிளிலே வந்தவன் – சைக்கிளிலே உக்காந்தபடியே, ஒரு காலைத் தரையில் ஊணிண்டு எட்டி வயத்துலே உதைச்சானே… அப்படியே எருமை முக்காரமிடற மாதிரி அஞ்சு நிமிஷம் மூச்சு அடைச்சு, வாயைப் பிளந்துண்டு அவன் கத்தினப்போ, இதோட பிழைக்க மாட்டான்னு நெனைச்சேன்… இப்போ திரும்பி வந்திருக்கான்! அவனை இவன் சும்மாவா விடுவான்? இவன் வெறும் திருடனாக மட்டுமா இருப்பான்? பெரிய கொலைகாரனாகவும் இருப்பான் போல இருக்கே…’ என்ற அவரது எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வது மாதிரி, அவன் அந்தக் கடைசி வீட்டிலிருந்து கையில் கத்தியுடன் இறங்கி வந்தான். இப்போது மேலே அந்த மஸ்லின் ஜிப்பாகூட இல்லை. முண்டா பனியனுக்கு மேலே கழுத்து வரைக்கும் மார்பு ரோமம் ‘பிலுபிலு’வென வளர்ந்திருக்கிறது. தோளூம் கழுத்தும் காண்டா மிருகம் மாதிரி மதர்த்திருக்கின்றன.
‘ஐயையோ… கத்தியை வேற எடுத்துண்டு வரானே… நான் வெறும் பால் குவளையாலேதானே இடிச்சேன்… இங்கேதான் வரான்!’ என்று எண்ணிய குஞ்சுமணி, திண்ணையிலிருந்து இறங்கி, ஏதோ காரியமாகப் போகிறவர் மாதிரி உள்ளே சென்று ‘படா’ரென்று கதவைத் தாளிட்டு கொண்டார். அவர் மனம் அத்துடன் நிதானமடையவில்லை. அறைக்குள் ஓடி ஜன்னல் வழியாகப் பார்த்தார்.
அவன் வேப்ப மரத்துக்கு எதிரே வந்து நின்றிருந்தான். வேப்ப மரம் குஞ்சுமணியின் வீட்டுக்கு எதிரே இருந்தது. எனவே, அவன் குஞ்சுமணி வீட்டின் எதிரிலும் நின்றிருந்தான்.
‘ஏண்டாப்பா… எவன் எவனோ போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி உன்னை அடிச்சான். அவனையெல்லாம் விட்டுட்டு என்னையே சுத்திச் சுத்தி வரயே?… இந்த அம்மா கடன்காரி வேற உன் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுட்டா… நேக்குப் புரியறது… மனுஷனுக்கு ரோஷம்னு வந்துட்டா பழிக்குப்பழி தீத்துக்காம அடங்காது. அதுவும் உன்னை மாதிரி மனுஷனுக்கு ஒண்ணுக்கு ஒன்பதாத் தீத்துக்கத் தோணும். நான் வேணும்னா இப்பவே ஓடிப் போயி, அந்தக் கோனார் கிட்டே பால் குவளையை வாங்கிண்டு வந்து உன் கையிலே குடுக்கறேன். வேணுமானா அதே மாதிரி என் கன்னத்திலே ‘லேசா’ ஒரு இடி இடிச்சுடு. அத்தோட விடு… என்னத்துக்குக் கையிலே கத்தியையும் கபடாவையும் தூக்கிண்டு அலையறே?’ என்று மானசீகமாக அவனிடம் கெஞ்சினார் குஞ்சுமணி.
அந்தச் சமயம் பார்த்து, போஸ்ட் ஆபீசில் வேலை செய்கிற அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், சைக்கிளை எடுத்துக் கொண்டு வாசலில் இறங்குவதையும் பார்த்தார். ‘அடப் போறாத காலமே! ஆத்துக்குள்ளே போயிடுடா. உன் காலை வெட்டப் போறான்!’ என்று கத்த வேண்டும் போலிருந்தது குஞ்சுமணிக்கு.
‘எந்த வீட்டுக்கு எவன் குடித்தனம் வந்தால் எனக்கென்ன?’ என்கிற மாதிரி அசட்டையாய் சைக்கிளில் ஏறிய பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், வேப்ப மரத்தடியில் கையில் கத்தியோடு நிற்கும் இவனைப் பார்த்ததும் பெடலைப் பின்புறமாகச் சுற்றினான் – சைக்கிளின் வேகத்தை மட்டுப் படுத்தினான்; குஞ்சுமணியின் கண்கள் அவன் கைகளில் இருந்த கத்தியையே வெறித்தன. அவன் அந்தக் கத்தியில் எதையோ அழுத்த, ‘படக்’கென்று அரை அடி நீளத்துக்கு ‘பளபள’வென்று அதில் மடிந்திருந்த எஃகுக் கத்தி வெளியில் வந்து மின்னிற்று. நடக்கப்போகிற கொலையைப் பார்க்க வேண்டாமென்று கண்களை மூடிக் கொண்டார் குஞ்சுமணி. அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன் சைக்கிளைத் திருப்பி ஒரு அரைவட்டம் அடித்து வீட்டுக்கே திரும்பினான்.
குஞ்சுமணி மெள்ளக் கண்களைத் திறந்து, பதினேழாம் நம்பர் வீட்டுக்கார நாயுடு, சைக்கிளோடு வீட்டுக்குள் போவதைக் கண்டார்: ‘நல்ல வேளை! தப்பிச்சே… ஆத்தை விட்டு வெளிலே வராதே… பலி போட்டுடுவான், பலி!’
அவன் வேப்பமரத்தடியில் நின்று கைகளால் ஒரு கிளையை இழுத்து வளைத்து ஒரு குச்சியை வெட்டினான். பின்னர் அதிலிருக்கும் இலையைக் கழித்து, குச்சியை நறுக்கி, கடைவாயில் மென்று, பல் துலக்கிக் கொண்டே திரும்பி நடந்தான். அவன் பார்வையிலிருந்து மறைந்ததும், குஞ்சுமணி தெருக் கதவைத் திறந்து கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போடத் தொடங்கினார்.
அவனும் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெகு நேரம் துலக்கினான். அவன் வேப்ப மரத்தடியில் நின்றிருந்த சமயம், சில பெண்கள் அவசர அவசரமாக அந்தக் கடைசி வீட்டருகே இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். அவன் மறுபடியும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டதும் குழாயடியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் குடத்தை எடுக்கக் கூட யாரும் வராததைக் கண்டு அவனே எழுந்து உள்ளே போனான்.
அங்குள்ள அத்தனை குடித்தனக்காரர்களும் தண்ணீர் பிடித்துக் கொண்டு குழாயடியைக் காலி செய்கிற வரைக்கும் அவன் வெளியே தலை காட்டவே இல்லை.
அந்த நேரத்தில்தான் குஞ்சுமணி ஒவ்வொரு வீடாகச் சென்று எல்லோரையும் பேட்டி கண்டார். அவர்கள் எல்லோருமே, சிலர் தன்னைப் போலவும், சிலர் தன்னைவிட அதிகமாகவும், மற்றும் சிலர் கொஞ்சம் அசட்டுத் தனமான தைரியத்தோடும் பயந்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒவ்வொருவரையும், “வீட்டில் பெண்டு பிள்ளைகளைத் தனியே விட்டு விட்டு வெளியில் போக வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார் குஞ்சுமணி.
“ஆமாம் ஆமாம்” என்று அவர் கூறியதை அவர்கள் ஆமோதித்தார்கள். சிலர் தங்களுக்கு ஆபீசில் லீவு கிடைக்காது என்ற கொடுமைக்காக மேலதிகாரிகளை வைது விட்டு, போகும்போது வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிவிட்டுப் பயந்து கொண்டே ஆபீசுக்குப் போனார்கள்.
அப்படிப் போனவர்களில் ஒருவரான தாசில்தார் ஆபீஸ் தலைமைக் குமாஸ்தா தெய்வசகாயம் பிள்ளை, தமது நண்பரொருவர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருப்பது ஞாபகம் வரவே, ஆபீசுக்குப் போகிற வழியில் ஒரு புகாரும் கொடுத்துவிட்டுப் போனார்.
காலை பதினொரு மணி வரை அவன் வெளியிலே வரவில்லை. குழாயடி காலியாகி மற்றவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்த பிறகு, அவன் குளிப்பதற்காக வெளியிலே வந்தான்.
வீட்டைப் பூட்டாமலேயே திறந்து போட்டு விட்டு, அந்தக் காலனி காம்பவுண்டுச் சுவரோரமாக உள்ள பெட்டிக் கடைக்குப் போய்த் துணி சோப்பும், ஒரு கட்டு பீடியும் வாங்கிக் கொண்டு வந்தான்.
இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, லுங்கி, பனியன், ஜிப்பா எல்லாவற்றையும் குழாயடி முழுதும் சோப்பு நுரை பரப்பித் துவைத்தான். துவைத்த துணிகளை வேப்பமரக் கிளைகளில் கட்டிக் காயப்போட்டான்.
காலனியில் ஆளரவமே இல்லை. எல்லோரும் அவரவர் வீடுகளுக்குள்ளே அடைந்து கிடந்தனர். துணிகளைக் காயப் போட்டுவிட்டு வந்த அவன், குழாயடியில் அமர்ந்து ‘தப தப’வென விழும் தண்ணீரில் நெடுநேரம் குளித்தான்.
திடீரென்று,
“மாமா… உங்க பனியன் மண்ணிலே விழுந்துடுத்து…” என்ற மழலைக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கையில், நாலு வயதுப் பெண் குழந்தையொன்று அரையில் ஜட்டியோடு மண்ணில் கிடந்த அவனது பனியனைக் கையிலே ஏந்திக் கொண்டு நின்றிருந்தது.
அப்போதுதான் அவன் பயந்தான்.
தன்னோடு இவ்வளவு நெருக்கமாக உறவாடும் இந்தக் குழந்தையை யாராவது பார்த்து விட்டார்களோ? என்று சுற்று முற்றும் திருடன் மாதிரிப் பார்த்தான்.
“நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா?… உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா… அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா? திருடிண்டு வந்துடு… அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு…”
அவன் சிரித்தான். அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தொட்டபொழுது அவனுக்கு அழுகை வந்தது. அவசர அவசரமாக உடம்பைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் கட்டிய துண்டோ டு பெட்டிக் கடைக்குப் புறப்பட்டான்.
அவன் போகும்போது அவனது இடுப்புத் துண்டைப் பிடித்து இழுத்து ரகசியமாகச் சொல்லிற்று, குழந்தை: “அம்மா பாத்தா அடிப்பா… சுருக்கப் போய் அவனுக்குத் தெரியாம மிட்டாயை எடுத்துண்டு ஓடி வந்துடு! நான் உங்காத்திலே ஒளிஞ்சிண்டிருக்கேன்…”
அவனும் ஒரு குழந்தை மாதிரியே தலையை ஆட்டிவிட்டுக் கடைக்கு ஓடினான்.
ஒரு நொடியிலே ஓடிப் போய், கை கொள்ளாமல் சாக்லெட்டை மடியில் கட்டிக் கொண்டு அவன் வந்தான்.
திருடன் என்கிற ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் போலும் அவனுக்கு! ‘இது உன் வீடு’ என்ற உரிமையை இந்தச் சமூகமே அந்தக் குழந்தை உருவில் வந்து தந்துவிட்ட ஒரு குதூகலம் அவனுக்கு.
அந்த மகிழ்ச்சியில் ஓடி வந்த அவன், வீட்டுக்குள் குழந்தையைக் காணாமல் ஒரு நிமிஷம் திகைத்தான். ‘யாராவது வந்து அடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்களோ?’ என்ற நினைப்பில் அவன் நெஞ்சு துணுக்குற்றது.
“பாப்பா… பாப்பா” என்று ஏக்கத்தோடு இரண்டு முறை அழைத்தான்.
‘உஸ்’ என்று உதட்டின் மீது ஆள்காட்டி விரலைப் பதித்து ஓசை எழுப்பியவாறு கதவுக்குப் பின்னால் ஒளிந்து, காத்துக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்தது.
“இங்கேதான் இருக்கேன்… வேற யாரோ வந்துட்டாளாக்கும்னு நினைச்சு பயந்துட்டேன். உக்காச்சிக்கோ” என்று அவனை இழுத்து உட்கார வைத்துத் தானும் உட்கார்ந்து கொண்டது குழந்தை.
குழந்தையின் கை நிறைய வழிந்து, தரையெல்லாம் சிதறும்படி அவன் சாக்லெட்டை நிரப்பினான்.
“எல்லாம் எனக்கே எனக்கா?”
“ம்…”
இரண்டு மூன்று சாக்லெட்டுகளை ஒரே சமயத்தில் பிரித்து வாயில் திணித்துக் கொண்ட குழந்தையின் உதடுகளில் இனிப்பின் சாறு வழிந்தது.
“இந்தா! உனக்கும் ஒண்ணு” என்று ரொம்ப தாராளமாக ஒரு சாக்லெட்டை அவனுக்கும் தந்தபோது –
“ராஜி… ராஜி” என்ற குரல் கேட்டதும் குழந்தை உஷாராக எழுந்து நின்று கொண்டது.
“அம்மா தேடறா…” என்று அவனிடம் சொல்லி விட்டு “அம்மா! இங்கேதான் இருக்கேன்” என்று உரத்துக் கூவினாள் குழந்தை.
“எங்கேடி இருக்கே?”
“இங்கேதான்… திருட வந்திருக்காளே புது மாமா! அவாத்திலே இருக்கேன்.”
அவனுக்குச் சிரிப்பு வந்தது. சாக்லெட்டை அள்ளிக் குழந்தை கையிலே கொடுத்து, “அம்மா அடிப்பாங்க. இப்போ போயிட்டு அப்புறமா வா” என்று கூறினான் அவன்.
“மிட்டாயெ எடுத்துண்டு போனாதான் அடிப்பா… இதோ! மாடத்திலே எல்லாத்தையும் எடுத்து வச்சுடு. நான் அப்புறமா வந்து எடுத்துக்கறேன். வேற யாருக்கும் குடுக்காதே. ரமேஷீக்குக் கூட…”
குழந்தை போன சற்று நேரத்துக்கெல்லாம் வேப்ப மரத்தில் கட்டி உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்து உடுத்திக் கொண்டு அவன் சாப்பிடுவதற்காக வெளியே போனான்.
மத்தியானம் இரண்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு வந்த அவன் வாசற்கதவை விரியத் திறந்து வைத்துக் கொண்டு தலைமாட்டில் சாவிக் கொத்து, கத்தி, பீடிக் கட்டு, பணம் நிறைந்த தோல் வார்ப்பெல்ட்டு முதலியவற்றை வைத்து விட்டுச் சற்று நேரம் படுத்து உறங்கினான்.
நான்கு மணி சுமாருக்கு யாரோ தன்னை ஒரு குச்சியினால் தட்டி எழுப்புவதை உணர்ந்து, சிவந்த விழிகளை உயர்த்திப் பார்த்தான். எதிரே போலீஸ்காரன் நிற்பதைக் கண்டதும் எழுந்து நின்று வணங்கினான்.
குழாயடிக்கு நேரே குஞ்சுமணி, கோனார், சீதம்மாள் ஆகியவர்கள் தலைமையில் ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது.
போலீஸ்காரரை வணங்கிய பின் தன்னுடைய பெல்ட்டின் பர்ஸிலிருந்து ஒரு ரசீதை எடுத்து நீட்டினான் அவன்.
“தெரியும்டா… பொல்லாத ரசீது… ஐம்பது ரூபாக் காசைக் கொடுத்து அட்வான்ஸ் கட்டினால் போதுமா? உடனே யோக்கியனாயிடுவியா, நீ? மரியாதையா இன்னைக்கே இந்த இடத்தைக் காலி பண்ணனும். என்ன? நாளைக்கும் நீ இங்கே இருக்கறதா சேதி வந்ததோ, தொலைச்சுப்பிடுவேன், தொலைச்சு… என்னைக்கிடா நீ ரிலீஸானே?” என்று மிரட்டினான் போலீஸ்காரன்.
“முந்தா நாளுங்க, எஜமான்” என்று கையைக் கட்டிக் கொண்டு, பணிவாகப் பதில் சொன்ன அவனது கண்கள் கலங்கி இருந்தன.
அப்போது தெரு வழியே வண்டியில் போய்க் கொண்டிருந்த அந்தக் காலனியின் சொந்தக்காரர் சோமசுந்தரம் முதலியார், இங்கு கூடி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து, வண்டியை நிறுத்தச் சொன்னார்.
முதலியாரைக் கண்டதும் குஞ்சுமணி ஓடோ டி வந்தார்.
“உங்களுக்கே நன்னா இருக்கா? நாலு குடித்தனம் இருக்கற எடத்துலே ஊரறிஞ்ச திருடனைக் கொண்டு வந்து குடி வைக்கலாமா?”
‘வாக்கிங் ஸ்டிக்’கைத் தரையில் ஊன்றி, எங்கோ பார்த்தவாறு மீசையைத் தடவிக் கொண்டு நின்றார் முதலியார்.
“அட அசடே! அவனைப் பத்தி அவருக்கென்னடா தெரியும்? திருடன்னு தெரிஞ்சிருந்தா வீடு குடுப்பாரா? அதான் போலீஸ்காரன் வந்து இப்பவே காலி பண்ணனும்னு சொல்லிட்டானே, அதோட விடு… அவர் கிட்டே என்னத்துக்கு புகார் பண்ணிண்டிருக்கே?” என்று குஞ்சுமணியைச் சீதம்மாள் அடக்கினாள்.
முதலியாருக்குக் கண்கள் சிவந்தன. அந்தக் கடைசி வீட்டை நோக்கி அவர் வேகமாய் நடந்தார். அவர் வருவதைக் கண்ட போலீஸ்காரன் வாசற்படியிலேயே அவரை எதிர் கொண்டழைத்து சலாம் செய்தான்.
“இங்கே உனக்கு என்ன வேலை?” என்று போலீஸ்காரனைப் பார்த்து உறுமினார் முதலியார்.
“இவன் ஒரு கேடி, ஸார். ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்திருந்தாங்க. அதனாலே காலி பண்ணும்படியா சொல்லிட்டுப் போறேன்.”
முதலியார் அவனையும் போலீஸ்காரனையும் மற்றவர்களையும் ஒரு முறை பார்த்தார்.
“என்னுடைய ‘டெனன்டை’ காலி பண்ணச் சொல்றதுக்கு நீ யார்? மொதல்லே ‘யூ கெட் அவுட்’!”
முதலியாரின் கோபத்தைக் கண்டதும் போலீஸ்காரன் நடுநடுங்கிப் போனான்.
“எஸ், ஸார்” என்று இன்னொரு முறை சலாம் வைத்தான்.
“அதிகாரம் இருக்குன்னா அதை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. திருடினப்போ ஜெயிலுக்குப் போனான்; அப்புறம் ஏன் வெளியிலே விட்டாங்க? திருடாதப்போ அவன் எங்கே போறது? அவன் திருடினா அப்போ வந்து பிடிச்சிக்கிட்டுப் போ” என்று கூறிப் போலீஸ்காரனை முதலியார் வெளியே அனுப்பி வைத்தார்.
“ஓய், குஞ்சுமணி! இங்கே வாரும். உம்ம மாதிரிதான் இவனும் எனக்கு ஒரு குடித்தனக்காரன். எனக்கு வேண்டியது வாடகை. அதை நீர் திருடிக் குடுக்கிறீரா, சூதாடிக் குடுக்கறீராங்கறதைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை. அதே மாதிரிதான் அவனைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. நீர் ஜெயிலுக்குப் போன ஒரு திருடனைக் கண்டு பயப்படறீர். நான் ஜெயிலுக்குப் போகாத பல திருடன்களைப் பாத்துக்கிட்டிருக்கேன். அவன் அங்கேதான் இருப்பான். சும்மாக் கெடந்து அலட்டிக்காதீர்.” என்று குஞ்சுமணியிடம் சொல்லிவிட்டுக் கோனாரின் பக்கம் திரும்பினார்.
“என்ன கோனாரே… நீயும் சேர்ந்துகிட்டு யோக்கியன் மாதிரிப் பேசிறியா?… நாலு வருஷத்துக்கு முன்னே பால்லே தண்ணி கலந்ததுக்கு நீ பைன் கட்டின ஆளுதானே?…” என்று கேட்டபோது கோனார் தலையைச் சொறிந்தான்.
கடைசியாகத் தனது புதுக் குடித்தனக்காரனிடத்தில் முதலியார் சொன்னார்:
“இந்தாப்பா… உன் கிட்டே நான் கை நீட்டி ரெண்டு மாச அட்வான்ஸ் வாங்கி இருக்கேன். கையெழுத்துப் போட்டு ரசீது கொடுத்திருக்கேன். யாராவது வந்து உன்னை மிரட்டினா எங்கிட்டே சொல்லு. நான் பாத்துக்கறேன்…” என்று கூறிவிட்டு வண்டியை நோக்கி நடந்தார் முதலியார்.
அன்று நள்ளிரவு வரை அவன் அங்கேயே இருந்தன். அவன் எப்போது வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே போனான் என்று எவருக்கும் தெரியாது.
காலையில் பால் கறக்க வந்த கோனார் அவன் உள்ளே இருக்கிறான் என்ற பயத்துடனேயே பால் கறந்தான்.
குஞ்சுமணி, இன்றைக்கும் அந்தத் திருட்டுப் பயலின் முகத்தில் விழித்துவிடக் கூடாதே என்ற அச்சத்தோடு ஜன்னலைத் திறந்து பசுவைத் தரிசனம் செய்தார்.
குழாயடிக்குத் தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் மட்டும், அந்த வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டு தைரியமாக, அவனைப் பற்றியும் முதலியாரைப் பற்றியும் விமரிசனம் செய்து பேசிக் கொண்டார்கள். சீதம்மாளின் குரலே அதில் மிகவும் எடுப்பாகக் கேட்டது.
அந்த வீடு பூட்டிக் கிடக்கிறது என்பதை அறிந்த கோனாரும், குஞ்சுமணியும், நேற்று இரவு அடித்த கொள்ளையோடு அவன் திரும்பி வரும் கோலத்தைப் பார்க்கக் காத்திருந்தார்கள்.
மத்தியானமாயிற்று; மாலையாயிற்று. மறுநாளும் ஆயிற்று…
இரண்டு நாட்களாக அவன் வராததைக் கண்டு, கோனாரும் குஞ்சுமணியும், அவன் திருடப் போன இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கக் கூடுமென்று மிகுந்த சந்தோஷ ஆரவாரத்தோடு பேசிக் கொண்டார்கள்.
அந்த நான்கு வயதுக் குழந்தை மட்டும் ஒருநாள் மத்தியானம் அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணை மீது ஏறி, திறந்திருக்கும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தது.
மாடம் நிறைய இருந்த சாக்லெட்டுகளைக் கலங்குகிற கண்களோடு பார்த்தது.
“ஏ, மிட்டாய் மாமா! நீ வரவே மாட்டியா?” என்று கண்களைக் கசக்கிக் கொண்டு தனிமையில் அழுதது குழந்தை.
முற்றும்
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
நாற்பது வருஷம் ஆச்சு… இந்தாத்துக்கு மாட்டுப் பொண்ணா வந்து… கை நெறைய ஒரு கூடைச் சொப்பை வச்சுண்டு… அப்பா தூக்கிண்டு வந்து விட்டாளே… அப்போ அம்மா, – அவர்தான் எங்க மாமியார் இருந்தார்… மாமியாருக்கு மாமியாரா அம்மாவுக்கு அம்மாவா… பெத்த தாய்க்கு மகளாயிருந்தது அஞ்சு வருஷ காலந்தானே!… மிச்ச காலத்துக்கும் மாமியாருக்கு… மாட்டுப் பொண்தானே… கூடத்துலே என்னை இறக்கி விட்டுட்டு மேல் துண்டாலே முகத்தை மூடிண்டு அப்பா என்னத்துக்கு அழுதார்னு இப்பவும் நேக்குப் புரியலை… இதோ இந்த முற்றத்துலே – அப்பவே அடத்துக்குக் குறைச்சலில்லே. அந்தச் செங்கல் தரையிலேதான் பம்பரம் விட்டாகணும்னு நாக்கைத் துருத்திக் கடிச்சுண்டு சொடுக்கிச் சொடுக்கிப் பம்பரம் விட்டுண்டு நிக்கறாரே, இவர் நேக்கு ஆத்துக்காரர்னு, புரியறதுக்கே ரொம்ப நாளாச்சே… அதுக்காக ‘நறுக் நறுக்’ குனு வந்து தலையிலே குட்டறதோ?… ‘போடா’ன்னு ஒரு நாள் நன்னா வெசுட்டேன்… சமையலுள்ளே காரியமா இருந்த அவர், ஓடி வந்தார். “ஐயையோ… என்னடீது? அவன்… இவன்னு… அவனை.” “அவன் மட்டும் என்னைக் குட்டலாமோ?”… அம்மாவுக்கு ஒரு பக்கம் சிரிப்பா வரது… என்னைக் கட்டி அணைச்சுண்டு எங்க உறவைப் பத்தி விளக்கிச் சொல்றார்… ஆனால், எல்லாம் புரியும் காலம் வரச்ச தானே புரியறது…. நெனைச்சுப் பார்த்தா, எல்லாமே ஆச்சரியமா இருக்கு… இவர் கிட்டே நேக்கு எப்படி இத்தனை பயம் வந்தது! பயம்னா, அது சந்தோஷமான பயம்… மரியாதையான பயம், பயம்ங்கறதைகூடச் சரியில்லே… அது ஒரு பக்தின்னு தோண்றது… எப்படியோ வந்துடுத்தே… ம்..ம்!… நாற்பது வருஷத்துக்கு மேலே ஆச்சு…
‘இந்த மனுசனைக் கட்டிண்டு நான் என்னத்தைக் கண்டேன். ஒரு அது உண்டா, ஒரு இது உண்டா’ன்னு குளத்தங்கரைலேயிருந்து கோயில் பிரகாரம் வரைக்கும் அலுத்துண்டு அழுதுண்டு சில பேர் அழிச்சாட்டியம் பண்ணிண்டு திரியறாளே, அவாளெல்லாம் என்ன ஜன்மங்களோ அம்மா!
நேக்கு ஒரு குறையும் இல்லை… ஆமாம்… எந்தக் கோயிலிலே வந்து வேணாலும் நின்னு ஈரத் துணியைக் கட்டிண்டு சொல்வேன் – எனக்கு ஒரு குறையும் இல்லை… பாக்கறவா சொல்லுவா… நேக்கு குழந்தை இல்லைங்கறதைப் பெரிய குறையாச் சொல்லுவா… சொல்றா… நானே கேட்டிருக்கேன். எதுக்கு… பொய் சொல்லுவானேன்… நேக்கும் அப்படி ஒரு குறை கொஞ்ச நாள் இருந்திருக்கு. அது எவ்வளவு அஞ்ஞானம்னு அப்பறமாத்தான் புரிஞ்சது… நேக்கே சொந்தமா ஒண்ணும் புரிஞ்சுடலை… அவர் புரிய வச்சார். அவராலேதான் அது முடியும். பேச ஆரம்பிச்சார்னா எங்கேருந்துதான் அந்தச் சூத்திரங்களெல்லாம் கையைக் கட்டிண்டு வந்து நிக்குமோ! சாஸ்திரங்களிலேருந்தும் வேதங்களிலேருந்தும் நிரூபணங்கள் எடுத்துக் காட்டி… எப்பேர்ப்பட்ட சந்தேகங்களானாலும் சரி, என்ன மாதிரியான அஞ்ஞானக் கவலைகளானாலும் சரி, அவரோட பேச்சினாலேயே அடிச்சு ஓட்டற சாமார்த்தியம்… அப்படி ஒரு வாக்கு பலம்… அப்படி ஒரு ஞானம்… அது அவருக்கு மட்டுந்தான் வரும்… ஏதோ, எங்க ஆத்துக்காரர்ங்கறதுக்காக ஒரேயடியாப் புகழ்ந்துடறேன்னு நெனைச்சுக்காதேங்கோ… அவரைப் புகழற அளவுக்கு நேக்கு ஞானம் போறாது. அப்பேர்ப்பட்ட வித்துவானுக்குச் சரியான நிரட்சரகுஷி வந்து சகதர்மிணியா வாச்சிருக்கேன் பாருங்கோ. இதைப் பத்தி நானே ஒரு தடவை அவர் கிட்டே சொன்னேன். பெரிய பிரசங்கமே பண்ணிட்டார். அவருக்கு நான் சகதர்மிணியா இருக்கறது எவ்வளவு பாந்தம்கிறதைப் பத்தி… அவருக்கு… அதுலே எவ்வளவு சந்தோஷம்கிறதைப் பத்தி. அவர் என்கிட்டே சொன்னதெல்லாம் நான் எப்படிச் சொல்றது? அவருக்குச் சகதர்மிணியாக இருக்கறதுக்கு நேக்குத் தகுதி இருக்குங்கறது வாஸ்தவமாகவே இருக்கட்டுமே! அதனாலே அவரைப் புகழற தகுதி நேக்கு வந்துடுத்துன்னு அர்த்தமாயிடுமா?
மகா வித்துவான் ஸரீாமான்..னு சொன்னா இந்த ராஜதானி பூராத் தெரியும். இவரோட பிரக்கியாதி சென்னைப் பட்டணம் என்ன, காசி வரைக்கும் பரவி இருந்தது…
இவர்கிட்டே படிச்சவாள், இந்தாத்துலே நேக்குக் கூடமாட வேலை செஞ்சவாள் எத்தனை பேர் கலெக்டராகவும் பெரிய பெரிய உத்தியோகத்திலேயும் இருக்கா தெரியுமோ?
நாமே பெத்து, நாமே வளத்து, நாயும் பூனையுமா நின்னிண்டிருந்தாத்தானா?
“இதோ, இப்பவும் சங்கர மடத்துத் திண்ணையிலே, எதிரே வரிசையாக் குழந்தைகளை உட்கார்த்தி வச்சுண்டு அவர் வித்தியாப்பியாசம் பண்ணி வச்சிண்டிருக்கார்… அவர் குரல் மட்டும் தனியா, ஒத்தையா, கனமா, நாபிலேருந்து கிளம்பி ஒலிக்கறதைக் கேக்கறச்சே, உடம்பெல்லாம் சிலிர்க்கறது. அப்புறம் இந்த வாண்டுப் ‘படை’ களெல்லாம் கூடச் சேர்ந்துண்டு முழங்கறதே… அந்தக் குழந்தைகள் அத்தனை சிரத்தையோட, பக்தியோட மெல்லீசுக் குரலிலே அவர் மாதிரியே சொல்லணும்னு பிரயாசைப் பட்டு, அந்தக் கனம் இல்லாம அந்த ஸ்தாயியை மட்டும் எட்டறதுக்கு வயத்தை எக்கிண்டு, மார்மேலே கையையும் கட்டிண்டு உச்சாடனம் பண்றாளே… அது வந்து காதிலே விழறச்சே, வயத்தை என்னமோ செய்யறதே, அது பெத்தவாளுக்கு மட்டுந்தான் வருமோ?…”
அவர்தான் சொல்லுவார்… ‘குழந்தையைப் பெத்துக்கறது ஒண்ணும் பெரிய காரியமில்லை; அதுக்கு வயத்தை அடைச்சு வளத்துடறதும் ஒண்ணும் பெரிய காரியமில்லை. அறிவையும் ஒழுக்கத்தையும் தந்து அவனை ஞானஸ்தனாக்கறதுதான் பெரிய காரியம். நாமெல்லாம் சாதாரணக் குழந்தைகளைப் பெத்தவாள்ங்கற பெயரைவிட இந்த மாதிரி ஞானஸ்தர்களை உற்பத்தி பண்ணினவாள்ங்கற பேருதான் சிரேஷ்டமானது…’ இன்னும் என்னென்னமோ சொல்லுவார். நேக்கு எங்கே அதெல்லாம் திருப்பிச் சொல்ல வரது?… ஆனா, அது எவ்வளவு சத்தியம்னு மனசுக்குப் புரியறது.
இவர்ட்டே படிச்சுட்டு இப்போ பட்டணத்துலே ஏதோ காலேஜிலே ஸம்ஸ்கிருத புரபசரா இருக்கானே சீமாச்சு… இப்போ பண்டித ஸரீனிவாச ஸாஸ்திரிகள்னு பேராம்… கேக்கறச்சே என்னமா மனசுக்குக் குளிர்ச்சியா இருக்கு… பெத்தாத்தான் வருமோ… பெத்தவள் இங்கேதான் இருக்காள்… தன் பிள்ளை தன்னைச் சரியாகக் கவனிக்கலேன்னு காலத்துக்கும் சபிச்சிண்டு…
ஒண்ணொண்ணும் அவர் சொல்றச்சே, என்னமோ சமத்காரமா தர்க்கம் பண்ணிச் சாதிக்கற மாதிரித் தோணும். திடீர்னு, அன்னிக்கே அவர் எவ்வளவு சரியாச் சொன்னார்னு நெனச்சு நெனச்சு ஆச்சர்யப்படற மாதிரி ஒண்ணொண்ணும் நடக்கும்.
அன்னிக்குக் கோயிலுக்குப் போயிட்டு வரச்சே சீமாச்சுவோட அம்மா, ஒரு நாழி நிறுத்தி வச்சு, அந்தச் சீமாச்சு இவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமே மாமியார் வீடே கதின்னு போய்ட்டதையும், அவனை வளக்கறதுக்கும் படிக்க வைக்கறதுக்கும் அவள் பட்ட கஷ்டத்தையெல்லாம் கொஞ்சங்கூட நன்றியில்லாமல் அவன் மறந்துட்டதையும் சொல்லிப் புலம்பிண்டு, அழுதுண்டு அவனைச் சபிச்சாளே… அப்போ நேக்குத் தோணித்து… இப்படிப் பெக்கவும் வேண்டாம், இப்படிச் சபிக்கவும் வேண்டாம்னு… ஏதோ அவள் மனசு சமாதானத்துக்காக நானும் தலையைத் தலையை ஆட்டிண்டிருந்தேனே ஒழிய, நேக்குப் புரிஞ்சது; இந்தக் கிழவி பொறாமையாலே கிடந்து எரிஞ்சுண்டிருக்காள்னு… கிழவிக்கு இங்கே ஒரு குறைச்சலும் இல்லே… நன்னா சௌக்கியமாத்தான் இருக்காள்… இருந்தாலும் தான் பெத்த பிள்ளையினாலெ மத்தவா இன்னும் சுகப்பட்டுடுவாளோங்கற ஆத்திரம், கிழவி மனசை அலக்கழிக்கறது… பாத்யதை கொண்டாடறவாளாலே எப்படிப் பாசம் கொண்டாட முடியறதே இல்லேன்னு—
எல்லாம் இவர் சொல்லித்தான் நேக்கும் புரியறது… இல்லேன்னா இந்தக் கிழவியோட சேந்துண்டு நானும் சீமாச்சுவை ஒரு பாட்டம் பாடிட்டுத்தானே வந்திருப்பேன்.
இவர் எல்லாத்தையும் எப்படித்தான் கறாரா, தீர்க்கமா அலசி அலசிப் பாத்துடறாரோ? தனக்கு அதனாலே நஷ்டமா லாபமானுகூட யோசிக்க மாட்டார். எத்தனை பேர் அதை ஒத்துக்கறா, எத்தனை பேர் ஒத்துக்கலேங்கறதெப் பத்தியும் கவலைப்பட மாட்டார். அவரோட சாஸ்திரத்துக்கு, தர்க்கத்துக்கு ஒத்துவராத ஒரு காரியத்தை லோகமே அவர் மேலே திணிச்சாலும், ‘தூ’னு தள்ளி எறிஞ்சுடுவார் – அப்படி அதைத் தூர எறிஞ்சது எவ்வளவு நியாயம்னு, லோகத்தையே இழுத்து வச்சுண்டு வாதம் பண்ணவும் தயாரா இருப்பார். நானும் இத்தனை காலமா பாத்துண்டிருக்கேனே… ஒத்தராவது, ‘அதென்னமோ, நீங்க சொல்றது சரியில்லை ஸ்வாமி’ன்னு சொல்லிண்டு போனதில்லை. அப்படிச் சொல்லிண்டு வருவா.
அவாளோடெல்லாம் திண்ணையிலே உக்காந்து இவர் பேசிண்டிருக்கறச்சே, நான் அவர் முதுகுக்குப் பின்னாலே அறையிலே உட்கார்ந்து கேட்டுண்டிருப்பேன். அவர் பேசறதிலே ரொம்ப விஷயங்கள் எனக்குப் புரியறதே இல்லை. அவர் என்னமா இங்கிலிஷ் பேசறார். நேக்குத் தெரிஞ்சு இருபது வயசுக்கு மேலே இவர் இங்கிலீஷ் படிச்சார். ஒத்தருக்கு ஸம்ஸ்கிருத பாடம் சொல்லிக் கொடுத்துண்டு – அவருக்கு இவரைவிட வயசு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் – அவர்கிட்டே இவர் இங்கிலீஷ் கத்துண்டார். இங்கேருந்து கும்பகோணத்துக்குப் போயிப் போயி என்னென்னமோ பரீட்சையெல்லாம் எழுதினார்.
இப்போ, இவர் எழுதின புஸ்தகங்களை அங்கெல்லாம் படிக்கிறவாளுக்குப் பாடமா வெச்சிருக்காளாம்.
பத்து வருஷத்துக்கு முன்னே காசியிலே ஏதோ மகாநாடுனு இவர் போறச்சே, நானும் கூடப் போனேன். இவருக்கு என்னென்னமோ பட்டம் எல்லாம் குடுத்தா… நேக்கு ரொம்பப் பெருமையா இருந்தது. நான் வெள்ளிக் குடத்து நிறைய கங்கா தீர்த்தம் எடுத்துண்டு வந்து, ஊர்லே இருக்கிறவாளுக்கெல்லாம் குடுத்தேன். நேக்கென்ன குறைச்சல்?
அப்போதான் காசிலேருந்து திரும்பி வரச்சே சென்னப் பட்டணத்துலே சீமாச்சு ஆத்திலே தங்கினோம். பட்டணத்துப் பெரிய ரயிலடிக்கு, சீமாச்சு மோட்டார் காரோட வந்திருக்கான். ரயிலடியிலேயே எங்களை நிறுத்தி வச்சு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிண்டான். சமுத்திரக் கரையை எல்லாம் சுத்திக் காட்டினான். சென்னப் பட்டணத்துலே மோட்டார் கார் இல்லாமே ஒண்ணும் முடியாதாம். அப்பவும் முன்னே மாதிரியே இவர்கிட்டே வந்து கையைக் கட்டிண்டு நின்னுண்டு ஏதேதோ சந்தேகமெல்லாம் கேட்டுண்டான். ஆனால், அவன் காலேஜீக்குப் போறச்சே அவனைப் பாக்கறதுக்கு நேக்கே பயமாயிருந்தது. துரை மாதிரி என்னென்னத்தையோ மாட்டிண்டிருக்கான். இவர் என்னடான்னா அதைப் பார்த்துட்டு ‘ஓ’ன்னு சிரிக்கிறார்.
அதுக்கு அப்பறந்தான் ஒரு நாள் இந்தாத்துக்கு முன்னாடி ஒரு பெரிய கார் வந்து நின்றது. யார் யாரோ பெரிய மனுஷாள் – சீமாச்சு புரபசரா இருக்கானே அந்தக் காலேஜை சேர்ந்தவாளாம் – எல்லாம் வந்து – இந்தாத்துத் திண்ணையிலேதான் உட்கார்ந்துண்டா… சீமாச்சு மட்டும் சொந்தமா அடுக்களை வரைக்கும் வந்துட்டான். நான் அவன்ட்டே அடிக்கடி ஒரு நடை வந்து தாயாரைப் பார்த்துட்டுப் போகப்படாதோன்னு கேட்டேன்… ‘எனக்கெங்கே முடியறது… என்னோட வந்துடுனு கூப்பிட்டாலும் வரமாட்டேங்கறாளே’ன்னு சொல்லி வருத்தப்பட்டுண்டான். அப்பறமா அவன் வந்திருக்கிற காரியத்தைச் சொன்னான்.
அவன் வேலை பாக்கற காலேஜிலே இவரை ஏதோ பெரிய உத்தியோகத்துலே வச்சுக்கறதுக்குத் தவம் கெடக்கறாளாம். ஆனால், இவரைக் கேக்கறதுக்குப் பயப்படறாளாம். ‘நான் கேட்டு அவரைச் சம்மதிக்க வெக்கறேன்’னு தைரியம் குடுத்து இவன் அழைச்சிண்டு வந்திருக்கானாம்… இன்னும் என்னென்னமோ சொன்னான்… நேக்குக் கூட ரொம்ப ஆசையாத்தான் இருந்தது.
இவர் வந்ததும், எல்லாரும் திண்ணையிலே உக்காந்துண்டு பேசினா, பேசினா அப்பிடிப் பேசினா. நான் அறைக்குள்ளே உக்காந்து கேட்டுண்டே இருந்தேன். நேக்கு அவர் பேசினது ஒண்ணும் புரியலை. ஆனால், ஒண்ணு புரிஞ்சது… அவா ஜம்பம் இவாகிட்டே சாயலைன்னு…
கடைசியிலே அன்னிக்கு அவாள்ளாம் போனப்பறம் நானே கேட்டுட்டேன்:
“உங்களுக்கு இந்த உத்தியோகத்தெ ஒத்துண்டா என்ன? அங்கே படிக்கிறவாளும் மாணவர்கள்தானே?… உங்களுக்கு என்ன இப்படி ஒரு பிடிவாதம்? பாவம்! சீமாச்சு ரொம்ப ஆசை ஆசையா நம்பிக்கையோட வந்தான்!” – நான் சொன்னதெக் கேட்டு அவர் சிரித்தார்.
இவருக்கு இது ஒண்ணு. உடம்போடயே பொறந்தது அந்தச் சிரிப்பு. அதுவும் இந்தச் சிரிப்பு இருக்கே என்கிட்டே மாத்திரம்தான்.
சிரிச்சுண்டே சொன்னார்:
“சீமாச்சு கட்டிண்டு திரியறானே அந்த மாதிரி என்னை வேஷம் கட்டிப் பாக்கணும்னு நோக்கு ஆசையா இருக்காக்கும்… வித்தியாப்பியாசம் பண்ணி வெக்கறதுக்கு கூலி வாங்கப் படாதுங்கறது உனக்குத் தெரியாதா? ஆசிரியனுக்குக் கூலி கொடுத்துட்டப்பறம் மாணாக்கனுக்கு அவர் கிட்டே என்ன மரியாதை இருக்கும்? எப்படி மரியாதை இருக்கும்? இவன் கூலி வாங்கறவன் ஆயிடறானே… கூலி பத்தாதுன்னு கொடி புடுச்சிண்டு கொஷம் போட்டுண்டு – என்னைக் கொடி புடிக்கவும் கோஷம் போடவும் கூப்பிட மாட்டான்னாலும் – அந்தக் கும்பலுக்குத் தலைவரா வாங்கோம்பா… எனக்கு இதெல்லாம் ஆகிற காரியமா? நீயே சொல்லு”ன்னார்.
நான் என்னத்தைச் சொல்றது?… பேசாம அவர் பேசிண்டிருந்ததெ வாயை மூடிண்டு கேட்டுண்டு இருந்தேன்.
இவர் உடம்பிலே ஒரு சட்டையெப் போட்டுண்டு நிக்கற மாதிரி நெனச்சுப் பாக்கிறப்பவே நேக்குச் சிரிப்புச் சிரிப்பா வரது? அந்த நெனப்பே ஒரு பாந்தமில்லாம இருக்கே… நானும் அவரோட சிரிச்சிட்டு, அந்த விஷயத்தை அதோட விட்டுட்டேன்.
அவரைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சிருந்தும் நான் போயி அவரைக் கேட்டதை நெனச்சித்தான் வெட்கப்பட்டேன். ஆனாலும், இந்த நாற்பது வருஷத்தில் அசடாவேதான் இருக்கேன்… புதுசு புதுசா ஏதாவது அசட்டுத்தனம் பண்ண வேண்டியது. அவர் சிரிக்க வேண்டியது – இப்படி ஒரு ஜன்மமாயிட்டேன்.
ஒரு பத்து நாளக்கி முன்னே பாருங்கோ… இப்படித்தான் – இவர்ட்டே படிக்கிற பையன் ஒருத்தன்… ஏதோ ஒரு சீட்டை எடுத்துண்டு வந்து, மாமி மாமி… இது கெவர்மண்ட் நடத்தற பரிசுச் சீட்டோ அதிர்ஷ்டச் சீட்டோ… என்னமோ சொல்லி, ஒரு ரூபாதான் வாங்கிக்கோங்க… கெடைக்கறதே கஷ்டம்… உங்களுக்காகச் சேத்து நான் வாங்கிண்டு வந்தேன்னு தந்தான்… நானும் அதெப் பத்தி ஒண்ணும் பிரமாதமா நெனச்சுக்காம, ஏதோ கொழந்தை நம்மை நெனச்சிண்டு அக்கறையோட வாங்கி வந்திருக்கேன்னு ஒரு ரூபாயைக் கொடுத்து வாங்கிட்டேன்.
அந்தக் கொழந்தை அதெப்பத்தி பெரிய பிரசங்கமே பண்ணினான்…. எத்தனையோ பேர் அதிலே பிரைஸ் வந்து லட்சாதிபதியா ஆயிட்டாளாம்… ஏழைகளுக்குத்தான் அதுவும் விழறதாம்… இன்னும் என்னென்னவோ சொன்னான்…. நான் சும்மா ஒரு வெளையாட்டுக்குத்தான் வாங்கினேன்… ஆனாக்க அன்னிக்கி சாயந்திரமே இவர் திண்ணையிலே உக்காந்துண்டு ஒரு அஞ்சாறு பேர்கிட்டே இந்தப் பரிசுச் சீட்டைக் கிழிச்சிக் கட்டிண்டிருந்தாரே பார்க்கலாம்.
அறையிலே உக்காந்து கேட்டுண்டு இருக்கறப்ப – என்னை அப்படியே செவுள்லே ‘பளார் பளார்’னு பிடிச்சிண்டு அறையற மாதிரி இருந்தது.
அதுவும் அன்னிக்கி அவர் பேசறச்சே, அது சாதாரணமா எப்பவுமே பண்ணுவாரே அந்த மாதிரி நிதானமா வாதம் மாதிரி இல்லே. இந்த லோகத்தையே சபிக்கப் பொறப்பட்டவர் மாதிரி ஆவேசமா கத்தினார்.
என்னத்துக்கு இவருக்கு இதிலே இவ்வளவு கோபம்னு நேக்குப் புரியவே இல்லே.
“இந்த தேசத்திலே இது நடக்கலாமாங்காணும்… சூதாடி சூதாடட்டும். சோரம் போறவா சோரம் போகட்டும்… ராஜரீகம் பண்றவா, லோக பரிபாலனம் பண்றவா இதைச் செய்யலாமாங்காணும்… கலி முத்தி, நாம அழியப் போறொம்கறத்துக்கு இதாங்காணும் அத்தாட்சி. நெறி தவறாம ராஜபரிபாலனம் பண்ணின தருமன் எப்பிடி அழிஞ்சான்?… யோசிச்சுப் பாரும்… தருமனே சூதினாலேதானே அழிஞ்சான்…. சூதிலே ஜெயிச்சவனும் வாழறதில்லே, தோத்தவனும் வாழறதில்லேங்கற சத்யத்தைத்தானே ஐயா, மகாபாரதம் பேசறது… சூதாட்டத்துக்கும் ஒரு தர்மம் இருக்கு, கேளும்…. சம அந்தஸ்திலே இருக்கிறவாதான் சூது ஆடலாம்… அதுவே பாவம்தான்… அந்தப் பாவத்துக்கும் ஓர் அத்து வெச்சிருக்கா… ராஜரீகம் பண்றவா, ராஜ்ய பரிபாலனம் செய்யறவா பாமர மக்களை எல்லாம் இப்படி மாயாஜாலம் பண்ணி சூது ஆடறாளே, இது அடுக்குமா? போச்சு… எல்லாம் போச்சு… இனிமே இந்த ஜன சமூகத்திலே எந்த விவஸ்தையும் இருக்காது… ஓய வறுமையினாலே அழியறதைவிட சூதினாலேதான் ஜன சமூகமே அழிஞ்சு போயிடும். திருவள்ளுவருக்குத் தெருத் தெருவா சிலை வெச்சு பிரதிஷ்டை பண்ணாப் போறுமா… அவர் சூதுன்னு பொருள்பால்லே ஓர் அதிகாரமே எழுதி வெச்சிருக்காரே…”ன்னு அந்தப் பத்துப்பாட்டையும் எடுத்தெடுத்துச் சொன்னார். அர்த்தம் சொன்னார்… மகாபாரதத்திலேருந்து ஸ்லோகங்கள் பாடினார். ‘உருப்படமாட்டேள்… உருப்படமாட்டேள்’னு தலையிலே அடிச்சிண்டார்…
எனக்கு வயத்திலே புளி கரைக்க ஆரம்பிச்சுடுத்து… ஏண்டா, இந்தச் சனியனை ஒரு ரூபா குடுத்து வாங்கினோம்னு இருந்தது. ஆனாலும், என்னத்துக்கு இவர் இதுக்காகப் போயி இவ்வளவு ஆவேசம் காட்டறார்னும் புரியலை. இவர் சட்டை போட்டுக்கறதில்லே; லோகமே அதுக்காக இவர் மாதிரி சட்டையில்லாம, குடுமியும் வெச்சுண்டு, பஞ்சாங்கம் பாத்து க்ஷவரம் பண்ணிண்டு இருக்கணும்னு சொல்வாரோன்னு நான் பண்ணின காரியத்துக்கு வசதியாக மனசுக்குள்ளே, எதிர்வாதம் பண்ணிண்டேன்.
அந்தச் சீட்டை வாங்கி வச்சுண்டதனாலேயே இப்ப என்ன கெட்டுப் போயிட்டுதுன்னு சமாதானப்பட்டுண்டாலும், திடீர்னு நம்ம போறாத வேளை ஒரு நூறு ரூபா விழுந்து வெக்கறதுன்னு வெச்சுக்கோங்கோ… ஊரு பூரா இதுன்னா ஒரே அக்கப்போராயிடும்!…
அதுவும் இவர் இந்த மாதிரிப் பேசிண்டு இருக்கறச்சே… நான் வாங்கி அது பரசியமா ஆயிடுத்துன்னா, இவரோட நாணயத்தைன்னா, எல்லாரும் சந்தேகப்படுவான்னு நேக்கு மனசைக் கொழப்பிண்டே இருந்தது…
அந்தக் கொழந்தை – அவன்தான் சீட்டுக் குடுத்தவன் – சொல்லித்து. பத்திரிகைக்காரா எல்லாம் போட்டோ பிடிக்கறவனையும் அழைச்சிண்டு எந்தப் பட்டிக்காடா இருந்தாலும் தேடிண்டு வந்துடறாளாம்… சென்னப் பட்டணத்திலே இதுக்காகப் பெரிய திருவிழா நடத்தி, ரொம்பப் பெரிய பெரிய மனுஷாள் கையாலேதான் இதெத் த்ருவாளாம்…அட கஷ்ட காலமே!…
சரி, என்னமோ வாங்கிட்டேன்; இதெல்லாம் என்ன வீண் கற்பனைன்னு அவர்கிட்டே இது விஷயமா நான் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கலே…
வேணும்னே அன்னிக்கு அவருக்கு சாதம் போடறச்சே நானே பேச்சைக் கிளப்பினேன்…
“என்ன அது? என்னமோ பிரைஸ் சீட்டாம்… ஒரு ரூபா குடுத்து வாங்கினவாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் கெடைக்கறதாம் – கெவர்மெண்டாரே நடத்தறதனாலே பொய், மோசடி ஒண்ணும் கெடையாதாம். நாணயமா நடக்கறதாம். பக்கத்தாத்துப் பொண்ணு பத்து ரூபாய்க்கு ஒரேயடியா வாங்கி இருக்காளாம். அது என்ன அது?…”ன்னு கேட்டு வெச்சேன்.
“அது நம்மாத்து அடுக்களை வரைக்கும் வந்தாச்சா? அது ராஜாங்கம் நடத்தற சூதாட்டம் – அவ்வளவுதான். வாந்தி பேதி மாதிரி ஜனங்களை வெரட்டி வெரட்டிப் புடிக்கறது இது. வாந்தி பேதி, வைசூரி வராம தடுக்கிற காரியத்தைச் செய்யற கெவர்மெண்டார் தான் இதையும் செய்யறா. அதனாலே அவாளுக்குப் பணம் கெடைக்கறதாம். ஏழைகள் லட்சாதிபதியாறாளாம்… எப்படியும் போகட்டும். நீயும் நானும் லட்சாதிபதியாகலேன்னா அழறோம்? நமக்கென்ன அதைப்பத்தி”ன்னார்.
“ஒரு லட்சத்தைக் கொண்டு வந்து உங்களண்ட கொடுத்தா, வேணாம்னு சொல்லிடுவேளா?”ன்னேன்.
இவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். எனக்கு அவமானமா இருந்தது… உடம்பு கூசித்து.
“நாற்பது வருஷம் என்னோடே வாழ்ந்த உனக்கா, இப்படி ஒரு சந்தேகம் வந்தது”ன்னு கேக்கற மாதிரி இருந்தது அந்தச் சிரிப்பு… நான் தலையைக் குனிஞ்சிண்டேன்.
“நீங்க வேணாம்னு சொல்லுவேள்; அது எனக்குத் தெரியும். ஏன் அப்படிச் சொல்லணும்னு கேக்கறேன்?… உங்க கொள்ளூப் பாட்டனாருக்கு மானியமா கெடச்ச இந்த வீட்டுக்கு, அந்த மேற்கு மூலையிலே மூணுவருஷமா சுவத்திலே விரிசல் கண்டு, மழை பேயறச்சே ஒரே தெப்பமா ஆறதே – அதெ சரி பண்றதுக்கு வழி இல்லாம இருக்கோமே – நமக்கும் பணம் அவசியமாத்தானே இருக்கு… எதுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை அலட்சியம் பண்ணணும்னு யோசிக்கிறேன். அது தப்பா?”ன்னு கேட்டேன்.
“ஓ! நீ பேசறதெப் பாத்தா உனக்கு அந்தச் சீட்டு வாங்க ஒரு ஆசை; அப்படித்தானே?”ன்னு கேட்டார்.
நான் பேசாம இருந்தேன்.
“அசடே… அசடே… ஆசைதான் மானத்துக்குச் சத்ரு. அதிலே பரிசு வராதுங்கறதினாலே நான் அது தப்புன்னு சொல்லலே. வந்தாலும் அது அதர்மமா வந்த, பலபேரை வயிறெரிய வச்சு சம்பாதிக்கிற பணம்னு சொல்றேன். தரும வழியில் சம்பாதிக்காம வர்ற செல்வம், பாப மூட்டைன்னா… நீ சொன்னயே எங்க கொள்ளுப் பாட்டனாரைப் பத்தி… அவாள்ளாம் உஞ்சவிருத்தி பண்ணித்தான் மகா மேதைகளா இருந்தா… நேக்கு நன்னா ஞாபகமிருக்கு… அப்பா, இதே சங்கர மடத்திலே பகலெல்லாம் வித்தியாப்பியாசம் பண்ணி வைப்பார்… சாயங்காலம் காலக்ஷேபம் பண்ணுவார். காலையிலே உஞ்சவிருத்திக்கிப் போவார்… மறுவேளைக்கு மீதி இல்லாம சேருகிற அளவுதான் அந்தப் பாத்திரம் இருக்கும். ஸ்லோகத்தெச் சொல்லிண்டு அவர் நடு வீதியிலேதான் நடப்பார்… வீட்டுக்குள்ளேயிருந்து அந்தாத்துக் கொழந்தை கையினாலே ஒரு பிடி அரிசி அளவா எடுத்துண்டு நடு வீதியிலே வந்து அவருக்கு பிக்ஷை தருவா… எதுக்குத் தெரியுமா கொழந்தையின் கையை அளவா வெச்சா… பெரியவா கை அளவானா நாலு வீட்டோட பாத்திரம் நெறைஞ்சி போயிடும்… மத்தவா வீட்டிலே வெச்சுண்டு காத்திருப்பாளே, அந்தப் பிக்ஷயைத் தடுத்த பாவம், அதிகமா போட்டவாளுக்கு வந்துடாதோ?… அதுக்காகத்தான். அந்த மாதிரிப் பாத்திரம் நெறைஞ்சப்புறமும் யாராவது கொண்டு வந்தா, அதெ வாங்க மாட்டார் – பிக்ஷை போட வந்தவா தலையிலே ரெண்டு அட்சதையை இவர் பாத்திரத்திலேருந்து போட்டு ஆசிர்வாதம் பண்ணிட்டு வருவார்… அந்த வம்சத்திலே வந்த புண்ணியம்தான் இந்த ஞானம் பிடிச்சிருக்கு. இதைவிட அதிர்ஷ்டம் என்னன்னு எனக்குத் தெரியலே… இந்த நிம்மதியை இந்த மனஸ் ஆரோக்கியத்தை எத்தனை லட்சம் தரும்?… சூதாட்டத்துலே, பணத்தாலே லட்சாதிபதிகளை இந்த அரசாங்கம் உருவாக்கலாம். ஒரு ஞானஸ்தனை, ஒரு சதுர்வேத பண்டிதனை உருவாக்கச் சொல்லேன், பார்க்கலாம்”னு அன்னிக்குப் பூரா, போய் வந்து போய் வந்து என்னண்ட பேசிக் கொண்டிருந்தார்.
இதெல்லாம் நடந்து பத்து நாளைக்கு மேலே ஆயிடுத்து… அந்தச் சீட்டுச் சமாசாரத்தையே நான் மறந்துட்டேன்…
நேத்து அந்தக் கொழந்தை – சீட்டு கொண்டு வந்து குடுத்தானே – ஒரு பேப்பரை எடுத்துண்டு வந்து ‘பரிசு கெடைச்சவா நம்பரெல்லாம் வந்திருக்கு… உங்க சீட்டைக் கொண்டு வாங்கோ பார்க்கலாம்’னு உற்சாகமாக் கத்திண்டு ஓடி வந்தான். நல்ல வேளை! அந்தச் சமயம் அவர் ஆத்துலே இல்லை…
எனக்கு வயத்தை என்னமோ பண்ணித்து.
‘ஈஸ்வரா, என்னைக் காட்டிக் குடுத்துடாதே’ன்னு வேண்டிண்டப்ப, ஒரு யுக்தி தோணித்து.
‘அதெ எங்கே வெச்சேனோ காணோம்டா அப்பா’ன்னு அவனண்ட பொய் சொல்லிட்டேன்… அதிலே ஏதாவது நம்பர் வந்து தொலைஞ்சிருந்தா, ஊரே வந்து இங்கே கூடிடாதோ?’
அந்தக் கொழந்தெக்கு அப்பிடியே மொகம் வாடிப் போயிடுத்து.
கோவிச்சுக்கற மாதிரி பாத்துட்டு அந்தப் பேப்பரையும் போட்டுட்டுப் போயிட்டான்.
அவன் போனப்பறம் நான் அந்தப் பேப்பரை எடுத்துண்டு அறைக்குள்ளே போயி, தனியா வெச்சிண்டு பார்த்தேன்.
நேக்குப் படிக்கத் தெரியாதுன்னாலும் எண்கள் தெரியும். அந்த எண்களுக்கு முன்னாலே ஏதோ எழுத்துப் போட்டிருக்கு… அது என்னன்னு தெரியலை. ஆனா, அதே மாதிரி இந்தச் சீட்டிலே இருக்கான்னு தேடிப் பார்த்தேன்.
தெய்வமே! எடுத்தவுடனே மொதல் மொதல்லே அதே மாதிரி ரெண்டு எழுத்து… அப்பறம் அதே மாதிரி மூணு…ஏழு, சுன்னம்… ஒண்ணு… ஒண்ணு… ஆறு!…
அப்படீன்னா, ஒரு லட்ச ரூபாய் எனக்கே அதிர்ஷ்டம் அடிச்சிருக்கா?… ஐயையோ… இப்ப நான் என்ன செய்வேன்?
மத்தியானம் அவர் வந்தப்ப, சீட்டைக் கொண்டு போயி அவர் காலடியிலே வெச்சு ‘ என்னை மன்னிச்சுடுங்கோ’ன்னு அழுதேன்.
“நான் வெளையாட்டா அந்தக் கொழந்தை வற்புறுத்தினானேன்னு வாங்கிட்டேன். இதெப்பத்தி நீங்க இவ்வளவு கோவமா இருக்கேள்ன்னு அப்பறம்தான் தெரிஞ்சது… நமக்கு எங்கே விழப்போறதுன்னு அசட்டையா இருந்துட்டேன்… பிரைஸ் விழப்படாதுன்னு ஸ்வாமிய வேண்டிட்டேன்…. இப்போ இப்படி ஆயிடுத்தே… மன்னிச்சு இதையும் என்னையும் ஏத்துண்டே ஆகணும்”னு அழுதேன்.
அவர் அதே மாதிரி சிரிச்சார். சிரிச்சிண்டே என்னெத் தூக்கி நிறுத்தினார். முகத்திலே அந்தச் சிரிப்பு மாறாமலே சொன்னார்:
“அடியே!… நீ இப்ப லட்சாதிபதியாய்ட்டே… சபாஷ்…! இது நான் சம்பந்தப்படாம நீயே தேடிண்ட சம்பத்து. என்னத்துக்கு என் காலண்டை கொண்டு வந்து வச்சு இந்தப் பாவத்தை என் தலையில் கட்டப் பாக்கறே! நேக்கு லட்சம் வேண்டாம்னு சொன்னது வெளையாட்டுக்கு இல்லே. நெஜமாவே நேக்கு வேண்டாம். நேக்கு இருக்கற கவலையெல்லாம் முன்னே மாதிரி… இப்ப வர வர வேதாப்பியாசம் பண்றவா கொறைஞ்சிண்டு வராளேங்கறதுதான்… இன்னும் ஒரு பத்துப்பிள்ளைகள் இதுக்குக் கெடைச்சாப் போதும்… பணத்தாலே அவா வரப்படாது… பணத்துக்காகவும் வரப்படாது… இது உனக்குப் புரியாது. சரி, இது உன்னோட பிரச்னை. நான் எப்பவுமே உஞ்சவிருத்தி பிராமணன்தான். என் தோப்பன், பாட்டன் – எல்லோரும் வந்த வழி அதுதான். லட்சாதிபதிக்கு புருஷனா இருக்கற அந்தஸ்து, கொணம் எதுவும் எனக்குக் கெடையாது…”ன்னு பேசிண்டே போனாரே அவர்.
“ஏன் இப்படி யெல்லாம் பிரிச்சுப் பிரிச்சுப் பேசறேள்?… இப்ப நான் இதுக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்கோ… நான் செய்யறேன்… நான் இப்படி ஆகும்னு எதிர்பார்க்காதது; நடந்துடுத்து… இனிமே நான் என்ன செய்யணும்”னு அவரைத் திரும்ப திரும்ப நான் கேக்கறேன்…
கொஞ்சம்கூட மனசிலே பசை இல்லாம என்னைப் பார்த்து அவர் சிரிக்கிறார்.
கடைசிலே அவருக்குப் பாடசாலைக்குப் போக நேரமாயிடுத்தாம்… போகும்போது அதே மாதிரி சிரிச்சுண்டே சொல்லிட்டுப் போனார்:
“இந்த அதிர்ஷ்டச் சீட்டைப் பயன்படுத்திக்கறதுன்னு முடிவு பண்ணினா அது உன் இஷ்டம். நேராப் போயி படம் புடிச்சுண்டு பத்திரிகையிலே போட்டோ போட்டுண்டு ஜம்னு நீ வாழலாம்… நான் இன்னார் சகதர்மிணின்னு சொல்லிக்கப்படாது… ம், உன் திருப்திக்கு அந்தப் பொய்யைச் சொல்லிண்டு காலம் தள்ளிக்கோ. இல்லேன்னா ‘இந்த மாயை வலையிலே நான் மாட்டிக்கலே; எனக்கு இது வேண்டாம்’னு அந்தத் தரித்திரச் சீட்டைக் கிழிச்சு எறி. ஆமாம் கிழிச்சு எறிஞ்சுடு. வேறே யார் கிட்டேயாவது குடுத்து அதுக்கு வட்டி வாங்கிண்டாலும் ஒண்ணுதான், நன்றியை வாங்கிண்டாலும் ஒண்ணுதான். சூது மனசுக்கு அதெல்லாம் தோணும். அதுக்கெல்லாம் பலியாகாம எந்த விதத்திலயும் அந்தச் சூதுக்கு ஆட்படாமே அதை கிழிச்சு எறிஞ்சுடு. இரண்டும் உன்னோட இஷ்டம். அது பாவமா, பாக்கியமான்னு முடிவு பண்ண வேண்டியது நீ; எனக்கு நாழியாறது!”ன்னு சொல்லிட்டுப் போயிண்டே இருக்காரே!
இதுக்கு நான் என்ன செய்யலாம் சொல்லுங்கோ. தெய்வமே! ஒரு லட்சம்! இந்த ஒரு லட்சத்தை, அதிர்ஷ்ட லட்சுமியை நிர்த்தாட்சணியமா கிழிச்சு எறியறதா? அவர் கையிலே குடுத்தா, கிழிச்சு எறிஞ்சுடுவார். அவர் மாதிரி ஞானிகளுக்கு அது சுலபம்.
நம்பளை மாதிரி அஞ்ஞானிகளுக்கு அது ஆகற காரியமா, சொல்லுங்கோ?
எத்தனை லட்சத்தையும் விட இவர் உசந்தவர்தான். நான் இல்லேங்கலே. அந்த லட்சத்தைக் கால்தூசா மதிக்கிறாரே இந்த மகா புருஷர். உஞ்சவிருத்தி பண்ணினார்னா இவருக்கு ஒரு குறையும் வந்துடாது. இப்பேர்ப்பட்டவரோட சம்சாரம் பண்ணினா, அந்த உஞ்சவிருத்தி வாழ்க்கையிலேயும் நேக்குப் பெருமை உண்டு.
பணம் பெரிசா, ஞானம் பெரிசாங்கிறதெல்லாம் நேக்குத் தெரியாது. ஆனால், பணம் – அது எவ்வளவு அதிகம்னாலும் எப்படி நிலையில்லையோ அதே மாதிரி மனுஷாளும் எவ்வளவு பெரிய ஞானியாயிருந்தாலும் வாழ்க்கை சாசுவதமில்லையே!
அப்படி நினைக்கிறதோ சொல்றதோ மகா பாவம். ஆனால் இந்தக் காலத்திலே எப்பேர்ப்பட்ட பதிவிரதையும் உடன்கட்டை ஏறிடுறதில்லையே! இவருக்கு அப்புறம் ஒருவேளை நான் இருக்க வேண்டி வந்ததுன்னா… சிவ! சிவா!…
உஞ்சவிருத்தி பண்றதிலே எனக்கென்ன பெருமை! எல்லோரும் பிச்சைக்காரின்னு சொல்லுவா. கட்டினவளைப் பிச்சைக்காரியா விட்டுட்டான்னு இந்த மகா ஞானியைப் பத்தியும் பேசுவா.
அவர் கிழிச்சு எறியலாம். நான் அதைச் செய்யலாமா? ஆனால், அவர் அப்படிச் சொல்லிட்டுப் போயிட்டார்.
நான் கையிலே சீட்டை வச்சுண்டு நிக்கறேன். கனக்கறது. இதுக்கு நான் என்ன செய்யட்டும் – சொல்லுங்கோ?
முற்றும்
புது செருப்புக் கடிக்கும்
அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வௌியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை மூடுகிறவரை எங்கு போகவேண்டும் என்றோ, எங்காவது போக வேண்டுமா என்றோவெல்லாம் அவன் நினைக்கவே இல்லை. அவள்மீது கொண்ட கோபமும், தன்னை அவமதிக்கிற மாதிரி தனது உணர்ச்சிகளை அசட்டை செய்துவிட்டுச் சுவரோரமாகத் திரும்பிக் கொண்டு தூங்குகிற அவளுக்குத் துணையாக விழித்துக்கொண்டிருக்கிற – ‘ஏன் படுக்கவில்லையா?’ என்று அவள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிற – அவமானம் தாங்கமாட்டாமல்தான் அவன் வௌியில் வந்து கோபமாகக் கதவை அறைந்து மூடினான்.
அவள் நிஜமாகவே தூங்கியிருந்தால் இந்தச் சத்தத்தில் விழித்திருக்க வேண்டும். இந்தச் சத்தத்தில் பக்கத்துப் போர்ஷன்காரர்கள் யாரேனும் விழித்துக் கொண்டுவிட்டார்களோ என்று தன் செய்கைக்காக அவன் அவமானத்தோடு அச்சம் கொண்டு இருள் அடர்ந்த அந்த முற்றத்தில் மூடியிருக்கும் எதிர் போர்ஷன் கதவுகளைப் பார்த்தான். உள்ளே விடிவிளக்கு எரிவது கதவுக்கு மேலுள்ள ‘வென்டிலேட்டர்’ வழியாய்த் தெரிந்தது. டேபிள்ஃபேன் சுற்றுகிற சத்தம் ‘கும்’மென்று ஒலித்தது. மணி பதினொன்று இருக்கும். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இருட்டில் தெரியவில்லை. எங்காவது போய்விட்டு விடிந்த பிறகு வந்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது. எப்படிக் கதவைத் திறந்து போட்டுவிட்டுத் தனிமையில் இவளை விட்டுப் போவது என்ற தயக்கமும் ஏற்பட்டது. அவள் வேண்டுமென்றே அடமாகப் படுத்துக் கொண்டு அழும்பு செய்கிறாள் என்று மனத்துக்குப் புரிந்தது.
அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தன் மீதே ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றியது. இதெல்லாம் தனக்கு வீண் தலைவிதிதானே என்று மனம் புழுங்கிற்று. தானுண்டு, தன் வேலையும் சம்பாத்தியமும் உண்டு என்று சுதந்திரமாகத் திரிகிற வாழ்க்கையின் சந்தோஷத்தை அல்லது வெறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தவனை, அப்படியே வாழ்ந்து விடுவது எனத் தீர்மானித்திருந்தவனை இந்தக் கல்யாணம், பெண்டாட்டி, குடும்பம் என்றெல்லாம் இதில் ஏதேதோ பெரிய சுகம் இருப்பதாகவும், மனுஷ வாழ்க்கையின் அர்த்தமே அதில் அடங்கி இருப்பதாகவும் கற்பித்துக் கொள்கிற பைத்தியக்காரத்தனத்தில் சிக்க வைத்த அந்தச் சைத்தானின் தூண்டுதலை எண்ணிப்பார்த்த பெருமூச்சுடன் வீட்டிற்குள் போகாமல் வாசற்படியில் அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு இருளும் நட்சத்திரமும் கவிந்த வானத்தைப் பார்த்தான்.
‘அந்தச் சைத்தான்’ என்ற முனகலில் அவனுக்குக் கிரிஜாவின் நினைவு வந்தது. அவள் எவ்வளவு இனியவள். இங்கிதம் தெரிந்தவள். சைத்தானைக் கட்டிக் கொண்டு வந்து வீட்டில் வைத்துக்கொண்டு அவளைப் போய்ச் சைத்தான் என்று நினைக்கிறேனே- என்று அந்த நினைவைக் கடிந்து கொண்டான் நந்தகோபால். ஆனாலும், தான் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தக் காரணமாக இருந்தவள் அந்த கிரிஜாதான் என்பதால் தனக்கு அவள் மீது வருகிற இந்தக் கோபத்துக்கு நியாயம் இருப்பதாக நினைத்தான் அவன்.
‘இப்போது, இந்த நேரத்தில் அவளைப் போய்ப் பார்த்தால் என்ன?’ என்ற எண்ணம் வந்தது அவனுக்கு. அவளை எப்போது வேண்டுமானாலும் போய்ப் பார்க்கலாம். இந்த ஆறுமாத காலமாக – கல்யாணமாகி ஒவ்வொரு நாளும் இவளோடு மனஸ்தாபம் கொண்டு ‘ஏன் இப்படி ஒரு வம்பில் மாட்டிக் கொண்டோம்’ என்று மனம் சலிக்கிற போதெல்லாம் அவன் கிரிஜாவை நினைத்துக் கொள்ளுவது உண்டு. என்றாலும் அங்கே போகலாம் என்ற எண்ணம் இப்போதுதான் தோன்றியது.
‘தான் இவளைக் கல்யாணம் செய்து கொள்ளுவதற்கு முன்பு எப்படியெல்லாம் இருந்தபோதிலும், இப்போது இவளை இங்கு தனியே விட்டுவிட்டு, அங்கே போவது இவளுக்குச் செய்கிற துரோகமில்லையா?’ என்று நினைத்துப் பார்த்தான். இவள் என்னதான் சண்டைக்காரியாக இருந்தாலும், இவள் மீது தனக்கு எவ்வளவுதான் கோபம் இருந்தபோதிலும், தன் மீதுள்ள வெறுப்பினால், அதற்கு ஆறுதலாக இருக்கும் பொருட்டு, இவள் அந்த மாதிரி ஏதாவது செய்தால் அதைத் தன்னால் தாங்க முடியுமா என்றும் எண்ணி அந்த எண்ணத்தையே தாங்க முடியாமல் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.
கடிகாரத்தின் ஒற்றை மணியோசை கேட்டது. மணி இன்னும் ஒன்றாகி இருக்காது. மூடியிருந்த கதவை லேசாகத் திறந்து கைக்கடிகாரத்தை உள்ளே இருந்து வீசும் வௌிச்சத்தின் ஒரு கீற்றில் பார்த்தான். இவனது வாட்சில் மணி பதினொன்றரை ஆகவில்லை. அடித்தது பதினொன்றரைதான் என்ற தீர்மானம் கொண்டு கதவின் இடைவௌி வழியாக அவளைப் பார்த்தான். அவள் அசையாமல் புரண்டு படுக்காமல் முன் இருந்த நிலையிலேயே முதுகைத் திருப்பிக் கொண்டு படுத்திருந்தாள். இவனுக்குக் கோபம் வந்தது. எழுந்து போய் முதுகிலே இரண்டு அறையோ, ஓர் உதையோ கொடுக்கலாமா என்று ஆங்காரம் வந்தது. “சீ” என்று தன்னையே அப்போது அருவருத்துக் கொண்டான் அவன்.
அப்படிப்பட்ட குரூரமான ஆபாசமான சம்பவங்களை அவன் சிறுவயதில் அடிக்கடி சந்தித்திருக்கிறான். திடீரென நள்ளிரவில் அவனுடைய தாயின் தீனமான அலறல் கேட்கும். விழித்தெழுந்து உடலும் உயிரும் நடுங்க இவன் நின்றிருப்பான். இவனுடைய தந்தை வெறி பிடித்தாற்போல் ஆவேசம் கொண்டு இவனுடைய தாயை முகத்திலும் உடலிலும், காலாலும் கையாலும் பாய்ந்து பாய்ந்து தாக்க, அவள் “ஐயோ பாவி சண்டாளா…” என்று அழுதுகொண்டே ஆக்ரோஷமாகத் திட்டுவாள். இவள் திட்டத் திட்ட அவர் அடிப்பார்…
அந்த நாட்கள் மிகக் குரூரமானவை. மறுநாள் ஒன்றுமே நடவாத மாதிரி அவர்கள் இருவரும் நடந்து கொள்ளுவது – அவள் அவருக்குப் பணிவிடை புரிவதும், அவர் அவளைப் பேர் சொல்லி அழைத்து விவகாரங்கள் பேசுவதும் – இவனுக்கு மிக ஆபாசமாக இருக்கும். இதெல்லாம் என்னவென்றே புரியாத அருவருப்பைத் தரும்.
பதினைந்து வயது வரைக்கும் இந்த வாழ்க்கையை அனுபவித்திருக்கிறான் அவன். அவர்களது சண்டையை விடவும் அந்தப் பெற்றோரின் சமாதானங்கள் அவன் மனசை மிகவும் அசிங்கப்படுத்தியிருக்கின்றன. அவன் தகப்பனாரை மனமார வெறுத்திருக்கிறான். ‘குடும்ப வாழ்க்கையும் தாம்பத்தியம் என்பதும் மிகவும் அருவருப்பானவை’ என்ற எண்ணம் இள வயதிலே அவனுக்கு ஏற்பட இந்த அனுபவங்கள் காரணமாயின போலும்.
இப்போது அவன் தகப்பனார் இல்லை. அவனுடைய விதவைத் தாய் வயோதிக காலத்தில் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தான் சாகுமுன் இவனுக்குக் கல்யாணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்ற தன் ஆசையை இவனிடம் தெரிவிக்கும் போதெல்லாம் அவளது வாழ்க்கையைச் சுட்டிக் காட்டித் தாயைப் பரிகாசம் செய்வான். அவளுக்கு அப்போது வருத்தமாகவும் கோபமாகவும் கூட இருக்கும். விட்டுக் கொடுக்காமல், ‘நான் வாழ்ந்ததற்கு என்ன குறை?’ என்று பெருமை பேசுவாள். கடைசியில் ‘ கலியாணம் பண்ணிக்க முடியாது’ என்று அவள் முகத்தில் அடித்துப் பேசிவிட்டு வந்துவிடுவான் நந்தகோபால்.
பட்டனத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு தனி வாழ்க்கைக்குப் பழகி இப்படியே முப்பது வயது கடத்திவிட்ட அவனுக்குக் கல்யாண ஆசையையும் குடும்பத்தைப் பற்றிய சுய கற்பனைகளையும் வளர்த்து அதற்குத் தயாராக்கியது கிரிஜாவின் உறவுதான். கிரிஜாவுக்கு முன்னால் அவனுக்கு அது மாதிரியான உறவு வேறு எந்தப் பெண்ணோடும் ஏற்பட்டிருந்ததில்லை. அவளுக்கு இவன் மிகவும் புதியவனாக இருந்தான். ஆனால், அவள் அப்படியல்ல என்று இவனுக்கு மாத்திரமல்லாமல் வேறு பலருக்கும் பிரசித்தமாகி இருந்தது. அவளும் அதையெல்லாம் மறைக்கக் கூடிய நிலையில் இல்லை. எனினும் இவனோடு இருந்த நாட்களில் அவள் மிகவும் உண்மையாகவும் அன்பாகவும், ஒரு பெண்ணின் உடனிருப்பும் உறவும் ஓர் ஆணுக்கு எவ்வளவு இன்பமானது, வசதியானது என்பதை உணர்த்துகின்ற முறையிலும் வாழ்ந்தாள். அந்த இரண்டு மாத காலம் மிக மேன்மையான இல்லறம் என்று இந்த நிமிஷம் – இவனை அவமதித்தும் புறக்கணித்தும் வாசற்படிக்கு வௌியே இந்த நள்ளிரவில் நிறுத்தி வைத்துவிட்டு இறுமாப்போடு படுத்துக் கொண்டிருக்கிறாளே, அவள் மீது பற்றிக்கொண்டு வருகிற கோபத்தில் – நினைத்துப் பெருமூச்சும் கண்ணீருமாய்ப் பரிதாபமாக மறுபடியும் உள்ளே திரும்பிப் பார்த்தான் நந்தகோபால்.
நிச்சயம் அவள் எழுந்திருக்கவோ சமாதானமுறவோ போவதில்லை. இந்த ஆறு மாத அனுபவத்தில் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அவனுக்குப் பழக்கமாகிப் போனதால் இதன் தொடக்கமும் இதன் போக்கும் இதன் முடிவும் அவனுக்கு ஒவ்வொரு தடவையும் முன் கூட்டியே தெரிகிறது. என்றாலும் இதனைத் தவிர்க்கத்தான் முடியவில்லை. பிறகு யோசித்துப் பார்க்கையில் அவனது அறிவுபூர்வமான எந்த நியாயத்துக்கும் இந்தச் சச்சரவுகள் ஒத்து வருவதில்லை. நாளுக்கு நாள் இந்த வாழ்க்கை அவமானகரமானதாகவும் துன்பம் மிகுவதாகவும் மாறிக்கொண்டே இருப்பதை எப்படித் தாங்குவது என்று புரியவில்லை.
உள்ளே மங்கிய விளக்கொளியில், கொடிகளில் கிடக்கும் துணிகளும், நிழலில் தெரிகிற சமையலறையினுள் பாத்திரங்களின் பளபளப்பில் அவை இறைந்து கிடக்கிற கோலமும் மிகச் சோகமாய் அவனுக்குத் தெரிந்தன.
ஒரே அறையும் அதைத் தொடர்ந்து கதவில்லாத ஒரு சுவரால் பிரிகிற சிறு சமையல்கட்டும் அதனுள்ளேயே அடங்கிய தொட்டி முற்றமாகிய பாத்ரூம் உள்ள அந்தப் போர்ஷனுக்கு நாற்பத்தைந்து ரூபாய் வாடகை. குடும்பச் செலவுக்கு மாதம் நூற்றைம்பது ரூபாய் ஆகிறது. நந்தகோபாலுக்கு சம்பளம் கிட்டத்தட்ட முந்நூறு ரூபாய். மனமொத்து வாழ்ந்தால் இந்த நெருக்கடி ஒரு துன்பமல்ல. ஆறேழு பேர் சேர்ந்து ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து எல்லா வசதிகளோடும் வாழ்ந்த அந்த ‘மெஸ்’ வாழ்க்கைக்கு இப்போது மனசு ஏங்க ஆரம்பிப்பதன் பரிதாபத்தை நினைத்து அவன் மனம் கசந்தான்.
ஒரு பெருமூச்சுடன் எழுந்தான். கிரிஜாவைப் போய்ப் பார்த்துவிட்டு இரவை அவளுடன் கழிப்பது மனதுக்கு ஆறுதல் தரும் என்று தோன்றியது. ‘வேறு எதற்காகவும் இல்லை’ என்ற நினைப்பில் இதைப் பற்றிய உறுத்தலை உதறி ‘ அவளோடு பேசிக்கொண்டிருப்பது எனக்கு நிம்மதியைத் தரும்’ என்கிற சமாதானத்தோடு புறப்பட்டான். உள்ளே போய் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டான். நைட்லாம்ப் எரிந்து கொண்டிருந்த மங்கிய வௌிச்சத்துடன் நாற்பது வோல்ட் விளக்கையும் போட்டவுடன் வௌிச்சம் கண்ணைக் கூசிற்று.
“ஏய்!…” என்று அவளை மெல்லத் தட்டினான். அவள் அசையவில்லை.
“இப்ப உன்னை கொஞ்சறதுக்கு எழுப்பலே; நான் வௌியே போறேன். கதவைத் தாப்பாப் போட்டுக்க” என்று அவள் புஜத்தைக் கொஞ்சம் அழுத்தி வலிக்கிற மாதிரிப் பிடித்து முரட்டுத்தனமாகத் திருப்பினான்.
அவள் எழுந்து உட்கார்ந்து அவனை வெறுப்புடன் முகம் சுளித்த எரிச்சலுடன் பார்த்தாள்.
இவ்வளவு நேரம் எழுந்திருக்காதவள், தான் போகிறோம் என்றதும் கதவைத் தாழிடத் தயாராய் எழுந்து உட்கார்ந்திருப்பது அவனுக்குக் கோபத்தை உண்டாக்கியது.
‘இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்’ என்று கேட்பதுதானே நியாயம்? ஆனால், அவள் கேட்கவில்லை. ‘போறதானால் தொலைய வேண்டியதுதானே… நான் நிம்மதியாகப் படுத்துக் கொள்ளுவேன்’ என்கிற மாதிரி அவள், அவன் சட்டையை மாட்டிக்கொண்டு நிற்பதைப் பொருட்படுத்தாமல் எழுந்து எரிச்சலுடன் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவன் கட்டிலுக்கடியில் குனிந்து செருப்பைத் தேடினான். கட்டிலின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிற அவளது சேலையின் நிழலோ காலின் நிழலோ மறைத்தது. தான் கட்டிலுக்கடியில் குனிந்து செருப்பைத் தேடும்போது அவள் இப்படி மறைத்துக் கொண்டு – தான் மறைக்கிற விஷயம் அவளுக்குத் தெரியாது என்றும் அவனுக்குத் தெரிந்தது – கட்டிலின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிற காரியம் அவமரியாதை என்று அவனுக்குத் தோன்றியது. அந்தக் கோபத்துடன் அவன் செருப்பைத் தேடி எடுத்துக் கொண்டு நிமிரும்போது கட்டிலின் விளிம்பில் தலையை இடித்துக் கொண்டான். கண்ணில் தண்ணீர் வருகிற மாதிரி வலித்தது. அவள் கொஞ்சம்கூடப் பதட்டம் காட்டாதிருந்தாள். இதே மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் அவளுக்கு இப்படித் தலையில் ஓர் இடியோ, விரலில் ஒரு காயமோ ஏற்பட்டால் தன்னால் பதட்டமுறாமலிருக்க முடியாதே என்று எண்ணிய நினைப்பில் அவன் தன்னிரக்கத்தோடு முகம் திருப்பிக் காலில் செருப்பை மாட்டிக்கொண்டு புறப்பட்டான்.
திறந்த கதவை மூடாமல் நிதானமாக அவன் முற்றத்தில் நடந்து தாழ்வாரத்தில் தூணோரமாக நிறுத்தியிருந்த சைக்கிளின் ‘லாக்’கைத் திறக்கையில் இருட்டில் நிற்கிற தன்னை அவள் பார்க்க முடியாது என்பதால் அவள் வௌியே தலை நீட்டிப் பார்க்கிறாளா என்று கவனித்தான். அவன் மனம் சோர்வு கொள்ளத் தக்க வண்ணம் அவள் கதவைப் பட்டென்று மூடித் தாழிட்டுக் கொண்டாள். அவள் வௌியே தலை நீட்டிப் பார்க்காதது மிகவும் வருத்தம் தந்தது இவனுக்கு. அறைக்குள் எரிந்த நாற்பது வோல்ட் வௌிச்சம் அணைந்து நைட்லாம்பின் வௌிச்சம் வெண்டிலேட்டர் வழியே தெரிந்தது.
நந்தகோபால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தான். வாசற்புறத்தில் முறைவாசல் செய்கிற கிழவி தன் படுக்கையில் உட்கார்ந்து இருமிக்கொண்டிருந்தவள், அவன் வௌியே சென்றதும், ‘திரும்பி எப்போ வருவே அப்பா’ என்று கேட்டு, இவன் ‘இல்லை’ என்று சொன்னதும் பிறகு கதவைத் தாழிட்டாள். வௌியில் வந்து நின்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டபோது, தெரு விளக்குகள் திடீரென அணைந்தது. டைனமோ வௌிச்சம் பளீரென்று வழிகாட்ட அவன் சைக்கிளில் ஏறி மிதித்தான்.
—ஃஃஃ—ஃஃஃ—ஃஃஃ—ஃஃஃ
கிரிஜாவின் வீடு மேற்கு மாம்பலத்தில் குண்டும் குழியும் சாக்கடையும் எருமை மாடும் நிறைந்த ஒரு தெருவில் இருக்கிறது. தெருப்புறம் மாடிப் படியுள்ள ஒரு வீட்டின் மேல் போர்ஷனில் அவள் சுதந்திரமாக வாழ்கிறாள். அவளுக்குத் தாய் இருக்கிறாள். அவள் எங்கோ ஒரு பணக்காரர் வீட்டில் ஆயாவாக வேலை செய்கிறாள். எப்போதாவது வந்து மகளைப் பார்த்துவிட்டு அசைவச் சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போவாள். அவள் வேலை செய்கிற வீட்டில் அது கிடைக்காதாம். கிரிஜாவுக்கு இருபத்தைந்து வயதான தம்பி ஒருவன் உண்டு. அவனுக்கு ஏதோ ஒரு சினிமாக் கம்பெனியில் வேலை. அவனும் எப்போதாவது தான் வருவான். அவள் பத்தாவதுவரை படித்திருக்கிறாள். நிரந்தரமாக இல்லாவிட்டாலும் டெம்ப்ரரியாகவே அவள் ஒவ்வோரிடமாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். முப்பது வயதாகிறது. இப்படியொரு நிராதரவான நிலையற்ற வாழ்க்கையிலும் அவள் நிறைவோடும் மலர்ச்சியோடும் இருக்கிறாள்.
நந்த கோபால் வேலை செய்கிற காஸ்மெடிக்ஸ் கம்பெனியார் எக்ஸிபிஷனில் ஒரு ஸ்டால் போட்டிருந்தார்கள். அங்கு அவள் வேலை செய்து கொண்டிருந்தபோது தான் போன டிசம்பரில் அவளை இவன் சந்திக்க நேர்ந்தது. அவளைப் பார்த்தவுடன் அவளை இதற்கு முன்பு எங்கோ பார்த்த மாதிரியானதொரு இணக்கம் அவள் முகத்தில் இவனுக்குத் தோன்றியது. இந்த ஸ்டாலில் விற்பனைப் பணிப் பெண்ணாக வேலை செய்வதற்காகக் கொண்ட முகபாவமோ அது என்றுதான் முதலில் அவன் நினைத்தான். பிறகுதான் தெரிந்தது; அவன் டெஸ்பாட்சிங் கிளார்க்காக வெலை செய்யும் அந்த காஸ்மெடிக்ஸ் கம்பெனியில் நாள்தோறும் பார்சல் பார்சல்களாக அனுப்பப்படுகிற அந்தப் பவுடர் டின்களின் மேல் இருக்கின்ற உருவமே அவளுடையதுதான் என்று. இரண்டு மாத காலம் மாலை நேரத்தில் மட்டும் ‘பார்ட் டய’ மாக அவனும் எக்ஸிபிஷனிலே வேலை செய்த காலத்தில் அவளுடன் ஏற்பட்ட நட்பின்போது அவளைப் பற்றி அவன் தெரிந்து கொண்டான். ஒரு கௌரவமான நிரந்தர உத்தியோகத்துக்காக அவள் ஒவ்வொருவரிடமும் சிபாரிசு வேண்டியபோது இவன் அவளுக்காகப் பரிதாபப்பட்டான். ஆனாலும் அவளுக்கு உதவும் காரியம் தனது சக்திக்கு மீறியது என்று அவளைப் பற்றிய கவலையிலிருந்து ஒதுங்கியே நின்றான்.
அவள் எல்லோருடனும் கலகலவென்று பேசுவாள். இவனை அவள்தான் முதலில் டீ சாப்பிட அழைத்தாள். இவனோடு பேச்சுக் கொடுத்தாள். இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பும்போது சில நாட்களில் அந்த ஸேல்ஸ் மானேஜர் தான் காரில் போகும் வழியில் இவளை இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச் செல்வார். அவரைப் பற்றி ஆபிசில் ஒரு மாதிரி பேசிக் கொள்வார்கள். அவருடன் அவள் போவது இவனுக்கு என்னமோ மாதிரி இருக்கும். ஒருநாள் அதுபோல் மானேஜர் தன்னுடன் அவளை அழைத்தபோது அவள் நந்தகோபாலைக் காட்டி, ” மிஸ்டர் நந்தகோபால் எங்க வீட்டுக்குப் போற வழியிலேதான் சார் இருக்காரு. நாங்க பேசிக்கிட்டே போயிடுவோம் சார்… என்னாங்கோ மிஸ்டர்?” என்று இவனைப் பார்த்துச் சிரித்தபோது இவனும் சம்மதித்தான்.
அவள் பேசுவது இவனுக்கு வேடிக்கையாக இருக்கும். ‘என்னாங்கோ, சரீங்கோ… ஆமாங்கோ..’ என்று அவள் கொஞ்சம் நீட்டிப் பேசுவாள். அவள் வீட்டில் பேசுகிற பாஷை தெலுங்கு என்று பின்னால் தெரிந்தது இவனுக்கு. படித்ததெல்லாம் தமிழ்தான். தெலுங்கு என்றால், மெட்ராஸ் தமிழ் மாதிரி மெட்ராஸ் தெலுங்காம்.
– ‘அவள் எப்படிச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள்!’ என்று நினைத்துக் கொண்டு சைக்கிளை வேகமாய் மிதித்தான் நந்தகோபால்.
அவள் நிஜமாகவே சந்தோஷமாக இருக்கிறாள் என்று, அவளோடு பழகிய பிறகுதான் இவன் தெரிந்து கொண்டான். எக்ஸிபிஷன் ஸ்டால் வேலை முடிந்த பிறகு டெலிபோன் சுத்தம் செய்து அதில் ஸென்ட் போடுகிற ஒரு கம்பெனியில் வேலைக்கமர்ந்து டெலிபோன் இருக்கிற வீடுகளிலும் கம்பெனிகளிலும் ஏறி இறங்கி வருகையில் ஒருநாள் தெருவில் அவளை இவன் பார்த்தான். இப்படி ஏதாவதொரு கௌரவமான உத்தியோகம் செய்து அவள் சம்பாதித்தாள். வயது முப்பது ஆவதால் இதற்கிடையில் நம்பிக்கை அல்லது தேவை காரணமாகச் சில ஆண்களோடு அவளுக்கு உறவு நேர்ந்திருக்கிறது என்றாலும் அதை ஒரு பிழைப்பாகக் கொள்ளும் இழி மனம் அவளுக்கு இல்லை என்று அவன் அறிந்தான்.
எப்போதாவது இவன் அவளைத் தேடிக் கொண்டு போவான். இருவரும் பேசிக்கொண்டு இருப்பார்கள். இவனுக்கு அவள் காபி மட்டும் தருவாள். அவள் சினிமாப் பத்திரிகைகள் எல்லாம் வாங்குவாள். கையில் காசு இருக்கும் போதெல்லாம் சினிமாவுக்குப் போவாள். நேரம் இருக்கும்போதெல்லாம் சினிமாக்களைப் பற்றியும் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் ரொம்பத் தெரிந்தவள் மாதிரி சுவாரஸ்யமாக அரட்டை அடிப்பாள். சினிமா கம்பெனியில் வேலை செய்கிற அவளுடைய தம்பி ‘ நீ என்ன வேணும்னாலும் செய்… ஆனா சினிமாவிலே சான்ஸீ குடுக்கறேன்னு எவனாவது சொன்னா – அத்தெ நம்பிக்கினு மட்டும் போயிடாதே… நான் அங்கே இருக்கறதுனாலே என் மானத்தெக் காப்பாத்தறதுக்கோசரம் அந்தப் பக்கம் வராதே’ என்று எப்போதோ சொல்லி வைத்திருந்ததைத் தான் உறுதியாகக் கடைபிடிப்பதை இவனிடம் அவள் ஒரு முறை கூறினாள்.
– அவளோடு அவன் இரண்டு மாதம் வாழ்ந்திருக்கிறான். அதை நினைக்கையில் இப்போதும் மனசுக்குச் சுகமாக இருக்கிறது.
அருமையாக நேர்ந்த அந்த வாழ்க்கையை விடுத்து வேறு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட குற்றத்துக்கான தண்டனைதானோ இப்போது தான் அனுபவிக்கிற வேதனைகளும் அவமானங்களும் என்று எண்ணியவாறே அவன் சைக்கிளை மிதித்தான். இன்னும் ஒரு மைலாவது இருக்கும்.
தொடர்ந்து ஒரு வேலையும் கிடைக்காமல் இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நந்தகோபால் வேலை செய்யும் இடத்துக்கு இவனைத் தேடி வந்தாள் கிரிஜா. ஆபீஸ் முடிகிற நேரமானதால் இவளைக் கொஞ்ச நேரம் காத்திருக்கச் செய்த பின் இவளுடனே அவனும் வௌியில் வந்தான். இருவரும் ஓட்டலுக்குப் போயினர். அவள் மிகவும் களைத்திருந்தாள். இவன் இரண்டு காபிதான் சொல்ல இருந்தான். அதை எப்படியோ புரிந்து கொண்டு அவள் சொன்னாள்: “எனக்கு வெறும் காபி மட்டும் போதாதுங்கோ… எதனாச்சும் சாப்பிடணுங்கோ”
அவள் மனசின் வெண்மை இவனைக் கனிய வைத்தது. அன்று அவளை மிகுந்த அன்போடு இவன் உபசரித்தான். பகல் முழுதும் அவள் சாப்பிடாதிருந்தாள் என்றும் இப்போது வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறாள் என்றும் தெரிந்தபோது அவளுக்காக மனம் வருந்தினான். அவள் அவனிடம் ஏதாவது வேலைக்குச் சிபாரிசு செய்யச் சொன்னாள். நம்பிக்கை இல்லாமலே அவன் அவளுக்கு வாக்குறுதி தந்தான். மாலையில் அவளுடன் அவனும் அவள் வீடுவரைச் சென்று சமையலுக்கான பொருள்களைக் கூட இருந்து வாங்கி, அதற்கு இவன் பணம் கொடுத்தான். அன்றிரவு இவனை இவள் தன்னுடன் வீட்டில் சாப்பிடச் சொன்னாள்.
அவள் சமையல் செய்கிற அழகைப் பக்கத்திலிருந்து அவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவு அங்கு அவன் சாப்பிட்டான். அவனுக்குத் தன் தாயின் பரிவும் அவள் கைச் சமையலின் ருசியும் நினைவுக்கு வந்தது. அவள் தன் சமையல் அவன் ருசிக்கு ஏற்கிறதா என்று மிகவும் பக்தி சிரத்தையுடன் வினவி வினவிப் பரிமாறினாள்.
அன்றிரவு இவன் அங்கே தங்க நேர்ந்தது. அந்த இரவில் தான் அவள் தன்னைப் பற்றியும் தன் தாய் தம்பி வாழ்க்கை நிலைமைகளைப் பற்றியெல்லாம் இவனோடு மனம் விட்டுப் பேசினாள். திடீரென்று தோன்றிய ஒரு யோசனையை அவனிடம் அவள் வௌியிட்டாள். அவள் சொன்னாள்: “நீங்க மெஸ்ஸீக்குக் குடுக்கிற பணத்தை இங்கே கொடுத்தால் உங்களுக்கும் சமைச்சுப் போட்டு நானும் சாப்பிடுவேன்… என்னாங்கோ- உங்களுக்கு சௌகரியப்படுமாங்கோ?…”
அவன் வெகுநேரம் யோசித்த பிறகு சம்மதித்தான். இதுவரை அவர்களிடையே வெறும் நட்பாக இருந்த உறவு அன்று அவனுக்கொரு புதிய அனுபவமாயிற்று. அது வாழ்க்கையிலேயே அவனுக்குப் புதிது. அதே மாதிரி ஒரு புதிய மனிதனைச் சந்திப்பது அவளுக்கும் முதலும் புதிதுமான அனுபவம்.
தான் எதனாலோ வெறுத்தும் பயந்தும் ஒதுக்கி வைத்த குடும்ப வாழ்க்கை என்பது, ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்தல் என்பது எவ்வளவு சுகமான, சுவையான, அர்த்தமுள்ள அனுபவம் என்பதை அவன் கண்டு மயங்கினான்.
அந்த வீடும் அந்த வாழ்க்கையும் மிக மிக எளிமையானது. மாடியின்மீது கூரை போட்ட ஒரே அறையில் தான் சமையல், படுக்கை எல்லாம். குளிப்பதற்குக் கீழே வரவேண்டும். குண்டும் குழியுமான தரையில் பாய் விரித்துப் படுக்க வேண்டும். அவளுடைய அம்மாவோ, தம்பியோ – அவர்கள் பகலில்தான் வருவார்கள் – அப்போது அங்கே இருக்க நேர்ந்தால் இப்போதுதான் வந்ததுபோல் நடிக்க வேண்டும். இதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
தான் கல்யாணமே வேண்டாம் என்று பயந்திருந்த காரணங்களை அவளிடம் சொன்னபோது அவள் சிரித்தாள். “உங்க நைனா, அம்மாவைக் கொடுமைப்படுத்தினாருன்னா பயந்துகினு இருந்தீங்கோ? ஒரு பொண்ணுக்கு இந்த பயம் வந்தா நாயம்… ஆம்பளைக்கு இதிலே என்னாங்கோ பயம்?… அவரை மாதிரி நீங்க உங்க பெண்சாதியே அடிக்காம இருந்தா சரியாப்பூடுது…”
அவன் அவளிடம் கல்யாணத்தைப் பற்றியும், ஊரிலிருந்து அம்மா எழுதுகிற கடிதங்களைப் பற்றியும் பேசினான். இருவரும் ஒன்றாக வாழ்ந்துகொண்டு தான் இன்னொருத்தியைக் கல்யாணம் செய்து கொள்கிற விஷயமாக அவன் அவளிடம் பேசுவதும், அதற்கு உடன்பாடாக அவளும் அவனை வற்புறுத்துவதும் முரண்பாடான விஷயமாகவோ பொருத்தமற்றதாகவோ இருவருக்குமே தொன்றவில்லை. தனித்தனியாக இருக்கிற நேரத்தில் மனசின் ஆழத்தில் அந்த முரண்பாடு தோன்றியதன் காரணமாகவே அவர்கள் அது குறித்து மிகச் சாதாரணமாகவும் அதிகமாகவும் பேசினார்கள் போலும்.
கடைசியில் ஒருநாள் நந்தகோபால் தன் தாய் வற்புறுத்திச் சொல்கிற, தனது சொந்தத்துப் பெண்ணும், பத்தாவது படித்தவளும், மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டவளூம், இதற்கு முன்னால் இவனே பார்த்து அழகிதான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டவளுமான வத்ஸலாவைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்துக் கடிதம் எழுதியபின் அந்தச் செய்தியை கிரிஜாவிடமும் கூறினான்.
அவள் மனத்தினுள் அவளே உணராத வண்ணம் ரகசியமான ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தாலும் மனம் நிறைந்த சந்தோஷத்துடனும் சிரிப்புடனும் அவனைப் பாராட்டினாள். ‘புது மாப்பிள்ளை புது மாப்பிள்ளை’ என்று பரிகாசம் செய்தாள். என்னென்னவோ புத்திமதிகள் கூறினாள். அவனைவிட அனுபவமும் முதிர்ச்சியும் உடையவள் என்பதால் அவனுக்கு நிறையவும் கற்றுத் தந்தாள். அதற்காக அவன் அவளிடம் மிகுந்த நன்றி பாராட்டினான். பெண் என்றாலே பயந்தும் வெறுத்தும் ஓடிய தன்னைக் கல்யாணத்துக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் தயார்ப்படுத்திய பொறுப்பு அவளுடையதுதான் என்று அவன் நம்பியது மாத்திரமல்லாமல் அவளிடமே அதைத் தெரிவித்தான். அப்போதெல்லாம் என்னவென்று விளங்காத ஓர் உணர்ச்சியுடன் வாய்க்குள் அவள் சிரித்துக் கொள்வாள்.
அவளோடு சேர்ந்து இவன் இருந்த அந்த இரண்டு மாத காலத்தில், பக்கத்திலுள்ள ஒரு நர்சரி பள்ளியில் ‘அன்ட்ரெயின்ட்’ டீச்சராக, ஒரு டெம்பரரி வேலையும் அவள் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். மாலை நேரங்களில் தையல் கிளாசுக்குப் போனாள். ஏற்கனவே அவளுக்கு டெய்லரிங் கொஞ்சம் தெரியுமாம்.
அவனுடைய கல்யாணத்துக்குத் தேதி குறிக்கும்வரை அவன் அவளோடுதான் இருந்தான். பின்னர் அவளேதான் கூறினாள். “நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்கோ. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கிறது கல்யாணத்துக்கு. நீங்க உங்க மெஸ்ஸீக்கே போயிடுங்கோ. உடம்பெ நல்லாப் பாத்துக்குங்கோ… நல்லாச் சாப்பிடுங்கோ… கல்யாணத்துக்கு அப்பாலே ஒரு ஃபிரண்டு மாதிரி வந்து பாருங்கோ. எனக்குச் சந்தோஷமா இருக்கும்.”
– அப்போது அவள் கண் கலங்கியதை எண்ணி இப்போது மனம் பொருமிய நந்தகோபால் அவள் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு மாடியை அண்ணாந்து பார்த்தான். மாடி மீதுள்ள கூரையின் சிறிய ஓட்டைகளினூடே உள்ளே விளக்கு எரிவது தெரிந்தது. தீக்குச்சியைக் கிழித்து வாட்சில் மணி பார்த்தான். பன்னிரண்டு.
திடீரென்று தன்னைப் பார்க்கும் அவளுடைய ஆச்சரியத்தை எண்ணிக்கொண்டு, அவளைப் பார்க்கப் போகிற ஆவலில் நெஞ்சு படபடக்க அவன் படியேறினான்.
மேல் படியிலிருந்து அவன் தலை தெரியும்போது காலடிச் சத்தம் கேட்டுத் தையல் மிஷின் அருகே ஸ்டூலில் உட்கார்ந்து, எதையோ ஊசியால் பிரித்துக் கொண்டிருந்த கிரிஜா, “யாரது?” என்ற அதட்டல் குரலுடன் எழுந்தாள்.
“நான் தான்” என்று இவன் பேரைச் சொல்லுவதற்கு முன் அவள் சந்தோஷம் தாங்க முடியாமல் “ஹை! நீங்களா! வாங்கோ” என்று வரவேற்றாள். அவனைத் தழுவிக் கொள்ளப் பரபரத்த கைகளின் விரல்களைத் திருகித் திருகி நெட்டி முறித்துக் கொண்டே, “என்ன இந்த நேரத்திலே? உக்காருங்கோ. சாப்பாடெல்லாம் ஆச்சா?” என்று பலவாறு கேட்டுக்கொண்டே பாயை எடுத்து விரித்து உட்காரச் சொன்னாள்.
“திடீர்னு உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சு – வந்தேன்” என்றான். அவள் கலவரமடைந்தாள். அது அவனுக்குத் தெரியாத வண்ணம் சமாளித்துச் சிரித்தாள். “தாகத்துக்குச் சாப்பிடுங்கோ” என்று தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.
இருவருக்குமே திகைப்பும் படபடப்பும் அடங்கச் சற்று நேரம் பிடித்தது. அவன் அந்தப் புதிய தையல் மிஷினைப் பார்த்து அதைப் பற்றி விசாரித்தான். அவள் தான் டெய்லரிங் பாஸ் பண்ணியதையும், இன்ஸ்டால்மெண்டில் இதை வாங்கி இருப்பதையும், இதில் நிறையச் சம்பாதிப்பதையும், இந்த மாதம் மூணு பவுனில் ஒரு செயின் வாங்கிப் போட்டுக் கொண்டதையும் காட்டி – “ஸ்கூல் வேலையை விட்டுடலீங்கோ” என்று கூறித் தனது நல்ல நிலைமையை விளக்கி அவனைச் சந்தோஷப்படுத்தினாள். அவன் மனசுக்கு அவள் கூறியவை மிகவும் இதமாக இருந்தன. அவன் ரொம்ப மகிழ்ச்சியடைந்தான்.
“நீங்க எப்படி இருக்கிறீங்கோ?… உங்க ‘வய்ப்’ நல்லா இருக்காங்களாங்கோ?” என்று குதூகலமாய் அவள் விசாரித்தபோது அவன் பெருமூச்சுடன் அவளைப் பார்த்து வருத்தமாகச் சிரித்தான்.
அவள் தையல் மிஷின் மீது குவிந்து கிடந்த தைத்த, தைக்க வேண்டிய, வெட்டிய, வெட்ட வேண்டிய புதுத்துணிகளையெல்லாம் எடுத்துப் பிரித்து ஒவ்வொன்றாக ஒரு பெட்டியினுள் மடித்து வைத்து இவனோடு பேசிக் கொண்டிருப்பதற்காக வேலைகளை ‘ஏறக் கட்டி’க் கொண்டிருந்தாள். அவன் ஏதோ வருத்தத்தில் இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது. அதற்காகத்தான் அவன் சந்தோஷப்படத்தக்க விஷயங்களை முந்திக்கொண்டு அவள் சொன்னாள். இதனை புத்திசாலித்தனத்தால் செய்ய வில்லை; நல்லியல்பால் செய்தாள். எனவே இப்போது அவன் வருத்தம் அறிவுக்குப் புரிய, தானும் வருந்தினாள்.
அவன், ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நெஞ்சு நிறையப் புகையிழுத்துக் கூரையை நோக்கி நீளமாக ஊதிவிட்டான். சிகரெட்டின் சாம்பலை மிகக் கவனமாக விரலிடுக்கில் உருட்டி தட்டிக்கொண்டே அவள் முகத்தைப் பாராமல் வருத்தம் தோய்ந்த குரலின் சொன்னான்: “நான் உனக்குச் செஞ்ச பாவத்துக்கு இப்ப அனுபவிக்கிறேன். நான் உன்னையே கல்யாணம் பண்ணிக் கிட்டிருக்கலாம். ஓ! இப்ப என்ன பண்றது?” என்று புலம்பிக்கொண்டிருந்தவனின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டாள் கிரிஜா.
கல்யாணம் முடிந்து தன்னோடு புறப்பட்டபோது அவள் ஆரம்பித்த அழுகையை இன்னும் நிறுத்தவில்லை என்றும், அவளுக்குத் தன்னோடு வாழ்வதில் சந்தோஷமில்லை என்றும், தன்னை அவள் அவமதிப்பதையும், இன்று கூடத் தலையில் அடித்துக் கொண்டதையும் அவன் வாய் ஓயாமல் வத்ஸலாவைப் பற்றிப் பேசித் துயரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தான்.
தையல் மிஷினுக்குப் பக்கத்திலிருந்து எண்ணெய் போடுகிற ‘ஆயில் கேனை’ எடுத்துக் கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையேயுள்ள புண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டே, அவன் புலம்புவதையெல்லாம் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் கிரிஜா.
“பாவங்கோ அது. அறியாப் பொண்ணு தானேங்கோ?” என்று அவள் சொன்னதைக் கேட்டு அவன் ஒன்றும் புரியாமல் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“உங்களைக் கல்யாணம் பண்ணிக்கினதுனாலேயே உங்களுக்குச் சமமா ஆயிடுவாங்களாங்கோ அவுங்க?… அப்பா அம்மாவுக்கு ரொம்பச் செல்லப் பொண்ணுன்னு நீங்க தானேங்கோ சொல்லியிருக்கீங்கோ? எல்லாரையும் விட்டுட்டு வேற ஒரு ஊரிலே தனியா உங்களேட வந்து வாழறப்ப அந்தக் கொழந்தை மனசு எப்படிங்கோ இருக்கும்? அதெப் புரிஞ்சு நீங்கதான் – அட்ஜஸ்ட் பண்ணி நடக்கணும். நீங்க ‘டிரெய்ன்ட்’ இல்லீங்களா? ஒரு ஆம்பிளைங்கறதே அவுங்களுக்குப் புதுசு இல்லீங்களா? பயமா இருக்கும்ங்கோ; அருவருப்பாகூட இருக்கும்ங்கோ… நான் உங்ககிட்ட அப்படியெல்லாம் இருந்தேன்னா அதுக்குக் காரணம் என்னாங்கோ? நான் ‘எக்ஸ்பீரியன்ஸ்ட்’ இல்லீங்களா? யாருங்கோ ‘வய்ஃபா’ இருக்கிறதுக்கு டிரெய்ன்ட் ஹாண்ட் கேக்கறாங்கோ? இப்ப சொல்றீங்களே – என்னையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு – அப்ப ஏங்க அது தோணலே? நான் ஏற்கனவே ‘டிரெய்ன்ட்’ங்கற ‘டிஸ்குவாலிஃபிகேஷன்’ தாங்கோ அதுக்குக் காரணம்! அதனாலே, உங்க வய்ஃபை விட நீங்க அனுபவஸ்தர்ங்கிறதை நெனைப்பிலே வெச்சிக்கணும். அவுங்க கொழந்தைன்னு புரிஞ்சுக்கணும். நான் உங்ககிட்டே இருந்த மாதிரி நீங்க அவுங்ககிட்டே இருக்கணும். அப்படித்தான் போகப் போக எல்லாம் சரியாப் போயிடுங்கோ…” என்று அவள் எல்லாவற்றையும் லேசாக்கி விட்டதை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான். இவளிடம் வரவேண்டுமென்று தான் நினைத்தது எவ்வளவு சரியானது என்று எண்ணினான்.
அவன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த – கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற – காரியத்தில் மறுபடியும் முனைந்தாள்.
“என்ன காலிலே?” என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன்.
“போன வாரம் புதுசா செருப்பு வாங்கினேன். கடிச்சிடுச்சுங்கோ. மிஷின் தைக்கறதிலே விரல் அசையறதனாலே சீக்கிரம் ஆற மாட்டேங்குது” என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்: “பார்த்தீங்களாங்கோ… செருப்புக்கூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ… அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களாங்கோ?”
அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுவிட்டான்.
முற்றும்
நிக்கி
செம்படவக் குப்பம். இரண்டு நாளாக மழை வேறு. ஒரே சகதி. ஈரம்.
ஒரு தாழ்ந்த குடிசையின் பின்புறம். இரண்டு குடிசைகளின் நடுவேயுள்ள இடைவெளியில் அவ்விரு கூரைகளின் ஓலைகளும் அந்த இடத்தில் சேர்ந்து ஒரு கூரையாகி, ஒரு சிறு திட்டில் ஈரம் படாமல் காய்ந்த மிருதுவான புழுதி மண்ணைக் குவித்து நடுவில் குழி பரத்தியது போன்ற இடத்தில் இரண்டு நாட்கள்வரை ஐந்து நாய்க்குட்டிகளை பிரசவித்த ஒரு குப்பத்து நாய் மடியைத் தரையில் தேய்த்துக் கொண்டு தாய்மை பெருமிதத்துடன் ‘பாரா’ கொடுத்துத் தன் குட்டிகளைப் பாதுகாவல் செய்தவாறு கிடந்தும் திரிந்தும் அலைந்து கொண்டிருந்தது. காலையிலிருந்து காணோம்!
இனிமேல் அந்த நாய் வராது என்று செய்தியைக் குப்பத்துச்சிறுவன் ஒருவன் எல்லோருக்கும் அறிவித்தான்.
” ஐஸவுஸாண்டே பஸ்லே அடிபட்டு அந்த நாய் கூய் கூயாப் பூட்ச்சி.”
இந்த அறிவிப்புக்குப் பிறகு குப்பத்துச் சிறுவர்கள் தைரியமாக இந்த குட்டிகளைத் தேடி வந்தனர். ஆளுக்கு ஒரு குட்டியை எடுத்துக் கொண்டபின் கடைசியாக ஒன்றைமட்டும் எல்லோரும் நிராதரவாக விட்டுப் போய்விட்டார்கள். அதன் நிறம் கறுப்பு, இரண்டு காதுகளிலும் வாலிலும் மட்டும் வெள்ளைத் திட்டுக்கள். “சீ! அது பொட்டடா!” என்று அதனை அவர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்வதுபோல் விட்டுச் சென்றனர்.
அந்தப் பெட்டை நாய்க்குட்டி ஒரு புழுமாதிரி நாளெல்லாம் சிணுங்கியவாறு புழுதியிலும் சகதியிலும் நெளிந்து ஊர்ந்து கொண்டிருந்தது. கண்ணைத் திறந்து முதல் முறையாக உலகைப் பார்த்தது. பசியால் சிணுங்கிச் சிணுங்கி அழுதது. தான் கவனிக்க யாருமில்லாத அநாதை நாய் என்று புரிந்து கொண்டுவிட்டது மாதிரி, நடக்கக்கூடப் பயிலாத அந்த நாய்க்குட்டி கால்களைத் தரையில் இழுத்து இழுத்து நடை பழகியபோதே தனது ஜீவித யாத்திரையை மேற்கொண்டது. அந்தத் தாழ்ந்த இரண்டு குடிசைகளின் நடுவே இருந்து வெளியே வந்து ஈரமும் சகதியுமான குப்பத்துத் தெருவில் அது புரண்டு புரண்டு நடந்த காட்சியைச் சிறுவர்கள் கூடி ரசித்தனர்.
அது தனக்கு ஓர் எஜமானனை அவர்கள் மத்தியில் யாசிப்பது மாதிரி அவலமாக அழுதது. அவர்களூம் அதற்குப் பரிதாபப்பட்டனர். ஒரு குடிசையின் திண்ணையில் அதற்குப் புகலிடம் தந்து கஞ்சித் தண்ணீர், சோறு, டீ என்று படிப்படியாகத் தங்களின் தரித்திரத்தை அதற்கும் அறிமுகம் காட்டினர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறுவர்களுக்கு இந்த நாய் விளையாட்டுச் சலித்துப் போயிற்று. அந்தக் குடிசைக்குச் சொந்தக்காரி இந்த நாயைக் கண்டு, அதன் மீது பூசிக் கிடக்கும் சேறும் சகதியும் அதற்கே சொந்தம் போன்றும், அது அந்தத் திண்ணையின் மூலையை அசுத்தப்படுத்துகிறது என்றும் கோபித்து, விளக்குமாற்றால் குப்பையைக் கூட்ட வந்தவள் நாயையும் சேர்த்துக் கூட்டித் திண்ணையிலிருந்து தெருவுக்குத் தள்ளினாள். அது கத்தி அலறியவாறு தலைகீழாகப் புரண்டு திண்ணையிலிருந்து தெருவில் வீசி விழுந்தது.
விழுந்த வேகத்தில் வசமாக அடிபட்டது. நாய்க்குட்டி பெருங்குரலில் அழுதவாறு புரண்டு எழுந்து ஒரு காலை மட்டும் நொண்டி நொண்டி இழுத்தவாறு தனது பயணத்தைத் தொடர்ந்தது. கொஞ்ச தூரம் நடந்ததும் கத்துவதை நிறுத்திக் கொண்டு, விதியை நொந்துகொண்டு போவது மாதிரி மெளனமாய் – காலை இழுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் சரியாகவே – நடக்க ஆரம்பித்தது. பயந்து பயந்து குடிசை மண் சுவரை ஆதாரமாகக் கொண்டு நடந்து குப்பத்தின் எல்லைக்கும் மெயின் ரோட்டுக்கும் குறுக்கே உள்ள நாற்றச் சாக்கடைப் பாலத்தருகே வந்து விட்டது. அதற்கு மேல் திசை புரியாமல் அரை நாள் யோசனையில் அங்கேயே கிடந்து உறங்கி விழித்துக் கத்திக் கத்திக் குரல் தேய்ந்த பிறகு தைரியமாகப் பாலத்தைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்தது. பெரிய கட்டிடங்கள் நிறைந்த வீதி. ராட்சஸத்தனமாய்ப் பஸ்களும் லாரிகளூம் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஜன சந்தடி மிகுந்திருக்கிறது. அந்தச் சின்னப் பெட்டை நாய் தைரியமாக வீதியின் குறுக்கே நடந்தது. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் மனிதன் என்ன என்ன சாகசங்களை எவ்வளவு ஆர்வத்தோடு நடத்திக் காட்டுகிறான்! இந்த நாய் இந்தத் தெருவில் நடக்கக்கூட கூடாதா என்ன? நடந்தது.
ஒரு மாடி பஸ் வந்தது. அந்த டிரைவர் நல்ல மனுஷன். இந்தச் சிறிய நாய்க்காக அந்த பெரிய பஸ்ஸையே சில விநாடி நிறுத்தினான். அது குறுக்கே நடந்து போனபிறகு, ‘ எவ்வளவு சின்ன நாய்! அடிகிடிபட்டுச் சாகப்போகுது. நமக்கு ஏன் அந்தப் பாவம்!” என்று அதற்காக விசனம் கொண்டவன் மாதிரி அதைப்பார்த்துக் கொண்டே அந்தப் பெரிய பஸ்ஸைத் திருப்பினான.
நாய் ரோட்டைக் கடந்துவிட்டது. பிறகு எங்கே போவது? எங்காவது போகவேண்டியதுதானே? போயிற்று.
மெயின் ரோட்டைக் கடந்து குப்பம் மாதிரி இல்லாத ஆனால் குப்பத்துத் தெரு போன்றதேயான ஒரு குறுகிய தெருவில் நடக்கையில் அதன் எதிரே ஒரு இலை வந்து விழுந்தது. இலை விழுந்ததும் அதற்காகப் பாய்ந்தோடுவதற்கான அநுபவமோ அறிவோ அதற்கு இன்னும் வராததனால் ‘பொத்’ தென்ற சத்தத்துக்குப் பயந்து பின்னால் பதுங்கியது அது. பதுங்கியதோ, பிழைத்ததோ!
ஒரு பெரிய நாய் அந்த இலையை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. இந்தக் குட்டிக்கு அது தன் இனத்தைச் சேர்ந்தது என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அது பெரிதாகவும் மூர்க்கமாகவும் இருந்ததனால் இது பதுங்கிக்கொண்டு அதை அச்சத்தோடு பார்த்தது. அந்த இலையில் இருப்பது சாப்பிடத் தகுந்தது என்பதைச் சுவரோரமாகப் பதுங்கிக்கொண்டு பார்த்ததனால் இந்தக் குட்டி புரிந்துகொண்டது.
ஆனாலும் இந்தக் குட்டிக்குப் பசி வந்தபோது எதிரே இலை விழுந்தும், இலை விழுந்தபோதெல்லாம் போட்டிக்கு மூர்க்கமாக மோதிச் சாடிக்கொண்டு பெரிய நாய்கள் வந்ததனால், இலையில் இருப்பதைச் சாப்பிடலாம் என்று அறிவு வந்தும் அதை அநுபவமாக்கிக் கொள்ள வாய்ப்பு வரவில்லை.
ஆனால் பசி மட்டும் வந்துகொண்டே இருந்தது.
மழையிலும் குளிரிலும் முனகி அழுதவாறு தெரு ஓரங்களில் ஓடும் சாக்கடை அருகே போட்டிக்கு யாரும் இல்லாததனால் பொறுக்கித் தின்று உழன்றுகொண்டே அந்தக் குறுகிய தெருவில் சில நாட்கள் இந்த நாய் வாழ்ந்தது.
பின் ஒரு நாள் வெயிலடித்தபோது உடம்பின் ஈரம் காய்ந்து, அழுகலையும் கழிவையும் தின்று உடம்பில் ஏறிய பலத்தால் கொஞ்சம் தெம்பும் வளர்ச்சியும் பெற்றிருந்த இந்தக் குட்டி அந்தக் குறுகிய தெருவிலிருந்து வேறொரு பெரிய தெருவுக்கு தனது யாத்திரையைத் தொடங்கிற்று.
அந்த நாளை இந்த நாய்க்கு ஒரு சோபன தினம் என்று சொல்ல வேண்டும்.
அழுது அடம் பிடித்த ஒரு குழந்தையை அதன் தாய் மல்லுக்கட்டி எங்கேயோ தூக்கிக்கொண்டு போகிறாள்.
குழந்தை பிடிவாதமாய் அவள் பிடியில் அடங்காமல் திமிறித் திமிறித் தாயின் இடுப்பிலிருந்து நழுவி நழுவி வழிகிறது.
ஒரு கையில் சிலேட்டும் பையும் வைத்துக்கொண்டு அந்தத் தாய் அந்தக் குழந்தையை ஒரு கையால் சமாளிக்க முடியாமல் வைது அடிக்கிறாள். அடம் பிடித்த குழந்தை அலறி அழுகிறது. அழுகிற குழந்தையை அவள் சமாதானம் செய்து கொஞ்சுகின்ற வேளையில் இந்தக் குட்டி அங்கே போய் சேர்ந்தது. இந்த நாயை வேடிக்கை காட்டி அந்தக் குழந்தையைத் தாய் சமாதானப்படுத்தினாள்.
இப்போது அந்தக் குழந்தை இந்த நாய் வேண்டுமென்று அடம் பிடித்தது.
அந்த மனித நேசத்தைப் புரிந்துகொண்ட இந்த அநாதை நாய் குழைந்து வாலை ஆட்டிற்று.
நல்ல வேளை. மழையில் நனைந்தும் வெயிலில் உலர்ந்தும் இது சுத்தமாக இருந்தது. நேற்றுவரை இது தின்ற அழுகலும் கழிவும் மனிதர்களுடையதுதானே! நாய்க்குட்டியை எடுத்து முத்தம் கொடுத்துக் குழந்தையிடம் கொஞ்சி அதன் கையில் கொடுத்தாள் தாய்.
இந்த நாய் ஜென்ம சாபல்யம் அடைந்தது.
சிலகாலம் அந்த வீட்டின் திண்ணை தூணில் சணல் கயிற்றால் கட்டப்பட்டுக் குழந்தையின் காட்சிப் பொருளாகவும் விளையாட்டுச் சாமானாகவும் அது வளர்ந்தது. அதற்கு அந்தக் குழந்தை தன் மழலையில் ‘பப்பி’ என்றோ ‘நிக்கி’ என்றோ பேரிட்டது.
இப்போது பார்வைக்குப் பெரிய நாய் மாதிரி உருவம் கொண்டிருந்த அந்தப் பெட்டை நாய் நிக்கி, ஒரு நாள் அந்த வீட்டு எஜமானி வெளியில் போனபோது நன்றியுணர்ச்சியுடன் அவளைத் தொடர்ந்து ஓடிற்று. அவள், “வீட்டுக்குப் போ!” என்று எத்தனையோ முறை விரட்டியும் குழந்தைமாதிரி போக்குக் காட்டியும் ஒளிந்து ஒளிந்தும் அவளைத் தொடர்ந்து வாலை ஆட்டிக் கொண்டு துள்ளித் துள்ளி ஓடிற்று. அப்படி அவள் தன்னை விரட்டுவதும் அவள் விரட்டியவுடன் சில அடிகள் ஓடிப் பின்பு திரும்பிப் பார்த்து, அவளைத் தொடர்ந்து ஓடிப் பிடிப்பதும் நிக்கிக்கு ஆனந்தமான விளையாட்டாக இருந்தது. அந்த அம்மாவுக்கு வேலை இல்லையா என்ன? கடைசியில் ‘வீட்டுக்குப் போய்விடும்’ என்ற நம்பிக்கையோடு அவள் பஸ்ஸில் ஏறிப் போய்விட்டாள். கொஞ்சதூரம் பஸ்ஸைத் தொடர்ந்து நாலுகால் பாய்ச்சலில் ஓடிற்று நிக்கி. அந்த நெடிய சாலையில், பிடிக்க முடியாத, எட்ட முடியாத வேகத்தோடு விலகி விலகி எஜமானியோடு வெகுதூரத்தில் போய் – கடைசியில் அந்தத் திருப்பத்தில் பார்வைக்கும் மறைந்து விட்டது பஸ். ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் பஸ் மறைந்த பிறகும் அந்தத் திருப்பம் வரைக்கும் ஓடிற்று நிக்கி.
பஸ்ஸைக் காணோம்! வேறு வேறு பஸ்களூம் கார்களூம் மனிதர்களூமாகப் பெரும் சந்தடி நிறைந்திருந்தது அந்த வீதியில். வீட்டுக்குத் திரும்ப மனம் கொண்டு நிக்கி வந்த வழியே ஓடி வரலாயிற்று. வரும் வழியில் ஒரு சிறிய சந்து.
அங்கேயிருந்து மசால்வடை வாசனை எண்ணெய்க் கமறலுடன் வீசிற்று. நிக்கி சற்று நின்று காதுகளை உயர்த்தி, வேர்வையின் ஈரம் துளித்த நாசி விரிய வாடை பிடித்தது. மகிழ்ச்சியுடன் ஒரு துள்ளலில் சந்துக்குள் நுழைந்தது.
ஒரு கிழவி, மரத்தடியில் அடுப்பைச் சுற்றிலும் தகர அடைப்பு வைத்து வடை சுட்டுக் கொண்டிருக்கிறாள். பக்கத்திலுள்ள குப்பை மேட்டில் ஏறிப் படுத்துக்கொண்டு மிகுந்த சுவாரசியத்துடன் வடை வாசனையை வாயில் நீரொழுக அநுபவித்துக் கொண்டிருந்தது நிக்கி. எப்போதாவது ஒரு வடையில் கொஞ்சம் பிய்த்துத் தன்னிடம் எறிய மாட்டாளா என்ற கற்பனையோடு அவளையே தன் எஜமானியாகப் பாவித்து வாலாட்டிற்று.
ஏதோ ஒரு சமயம் அவளும் ஒரு சிறு துண்டு வடையை நிக்கியிடம் வீசி எறிந்தாள். சந்தோஷம் தாங்கவில்லை நிக்கிக்கு. ஒரு சுற்றுச் சுற்றிப் பரவச நடனம் ஆடிற்று. அந்த வடைத் துண்டைத் தின்னாமல் தரையில் போட்டு, இரண்டடி பின்னால் நகர்ந்து அதன் அழகை ரசிப்பது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குள் யாரோ அந்த வடைத் துண்டை அபகரிக்க வந்துவிட்ட அவசரத்தோடு, அந்தக் கற்பனை எதிரியிடம் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்து தன்னுடைய பொருளை ஸ்வீகரிக்கும் அவசரத்தோடு அதைக் கவ்வியது. மறுபடியும் போட்டியில் ஜயித்த ஆனந்தத்தில் வாயில் கவ்விய அந்த வடைத் துண்டைக் கீழே போட்டுச் சுற்றிச் சுற்றிப் பரவச நடனமாடிச் சுழன்றது.
திடீரென மழை பெய்தது. கிழவி அடுப்பையும் பிற சாமான்களையும் அவசர அவசரமாகத் தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த வீட்டின் திண்ணைக்கு ஓடினாள். நிக்கியும் மழைக்காக அந்தத் திண்ணையோரமாக ஒதுங்கி நின்றது. நல்ல மழை சடசடத்துப் பெய்து சற்று நேரத்தில் ஓய்ந்தது. மழை நின்ற பின் தெருவில் ஜனங்கள் நடமாடினார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகள் திரும்பின.
நிக்கிக்குத் தன் எஜமானியும் தனக்குப் பேரிட்ட அந்தப் பாப்பாவும் நினைவுக்கு வந்தனர். பாப்பாவின் நினைவு வந்ததும் அதற்கு ஒரு விநாடி கூட அங்கே கால் தரிக்கவில்லை. பாய்ந்து பாய்ந்து ஓடிற்று. பாதைகள் பல திசைகளில் பிரிந்தன. வந்த வழி எதுவென்று அதற்குப் புரியவில்லை. எந்த திசையில் பாப்பாவின் வீடு இருக்கிறதென்று பிடிபடவில்லை. நாலு திசையும் ஓடிற்று. எஜமானியின் பின்னால் ஓடி வந்தபோது அந்த அவசரத்திலும் பல இடங்களில் உட்கார்ந்து திரும்பி வருவதற்கு வழி தெரியும் பொருட்டுச் சிறுநீர் கழித்திருந்தது நிக்கி. சற்று முன் பெய்த நல்ல மழையில் தெருவெல்லாம் சுத்தமாகியிருந்தது.
நிக்கி நம்பிக்கை இழக்காமல் ஓடிக் கொண்டிருந்தது. பொழுதும் இருட்டிப் போயிற்று. தெரு விளக்குகளெல்லாம் எரிய ஆரம்பித்தன. நிக்கிக்குப் பயம் பிறந்தது. தன் எஜமானியையோ பாப்பாவையோ பார்க்கவே முடியாதோ என்ற ஏக்கத்தில் அது வானத்தைப் பார்த்து அழுதது. இரவெல்லாம் அழுது அழுது ஏதோ ஒரு தெருவில் எங்கோ ஒரு மூலையில் படுத்து உறங்கி விழித்து அடுத்த நாள் காலை மறுபடி அனாதையாயிற்று!
தெருவில் போகிறவர்களையெல்லாம் தன் எஜமானியோ என்று நினைத்து நினைத்து ஓடி அவர்களால் விரட்டியடிக்கப்பட்டுப் பரிதாபமாகத் திரும்பியது நிக்கி.
இப்போதெல்லாம் தெருவில் எச்சிலை விழுகிறபோது பெரிய நாய்களுக்குப் பயப்படாமல் பாய்ந்து அவற்றோடு சண்டையிட்டுத் தன் பங்கை எடுத்துக் கொள்ளுகிற அளவுக்கு நிக்கி வளர்ந்திருந்ததனால் அதன் வயிற்றுப் பிரச்னை ஒருவாறு தீர்ந்துவிடுகிறது.
ஆனாலும் வாழ்க்கையின் பிரச்னை வயிறு மட்டுமா? அதற்கு மனித நேசம் பசிக்கு உணவு மாதிரி ஓர் அவசியத் தேவையாயிற்று.! அந்தப் பாப்பாவையும் எஜமானியையும் எண்ணி எண்ணி எல்லா இரவுகளிலும் தனிமையில் ‘ஓ’ வென்று அழுதது நிக்கி.
ரோட்டில் சங்கிலியால் பிணித்துக் கையில் ஒய்யாரமாகப் பிடித்துக் கொண்டு நடக்கும் எஜமானர்களின் பின்னால் ஓடுகிற சிங்கார நாய்களையும், சங்கிலியால் பிணைப்புண்டு மதர்ப்போடு எஜமானர்களையே இழுத்துக் கொண்டு முன்னால் செல்கின்ற கம்பீர நாய்களையும், கார்களில் எஜமானர்களோடு சமதையாக வீற்றிருந்து வெளியே தலைநீட்டிப் பார்க்கிற செல்ல நாய்களையும் பொறாமையோடும் கவலையோடும் பார்த்து அழுதது நிக்கி.
சில சமயங்களில் அந்த நாய்கள் நிக்கி தங்களைப் பார்ப்பதைக் கண்டு, பற்கள் வெளித் தெரிய உறுமியவாறு பாய வரும். அப்போதெல்லாம் அந்த எஜமானர்கள் நிக்கியைத்தான் கல்லெடுத்து அடிக்கிற மாதிரி பாவனை காட்டி விரட்டுவார்கள்.
அப்போதெல்லாம் தொலைவில் வந்து திரும்பிப் பார்த்து ஒரு முறை குரைத்த பின் ஓடிப்போகும் நிக்கி.
ஒருநாள் மத்தியானம். பங்களாக்கள் நிறைந்த ஒரு தெரு. ஜனசந்தடியே இல்லை. நல்ல வெயில். பகலெல்லாம் ஓடி ஓடி, ஊரெல்லாம் பொறுக்கித் தின்று வயிறு புடைத்துக் கொண்டிருந்தது நிக்கிக்கு. எங்காவது சுகமான இடம் தேடி, ஒரு நிழலில் படுத்துக் கிடக்கும் உத்தேசத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.
யாரோ தன்னைக் கூப்பிடுவது மாதிரி குரலோ சிணுங்கலோ கேட்டது. ஓடிக் கொண்டிருந்த நிக்கி நின்று திரும்பிக் காதுகளை உயர்த்திப் பார்த்தது.
ஒரு பங்களாவின் பூட்டிய கேட்டுக்குப் பின்னால் ஒரு நாய் முன்னங்கால்களைத் தூக்கி இரும்பாலான அந்தக் கேட்டின்மீது வைத்து எம்பி நின்றுகொண்டு நிக்கியை அழைத்தது.
அதன் உடம்புதான் என்ன வெள்ளை! சடை சடையாய் வெள்ளி மாதிரி சுருள் முடி வழிகின்றது. அது நின்ற நிலையில் ஆண் நாய் என்று தெரிகிறது. நிக்கி சற்று நின்றது. கம்பியைப் பிறாண்டிச் சிணுங்கிச் சிணுங்கி அது தன்னை அழைக்கும் தவிப்பை ரசித்துப் பார்த்தது. நிக்கியைப் பார்த்துக் குரைக்காமல், கூப்பிடுகிற முதல் நாயே இதுதான்.
நிக்கி லேசாக வாலை ஆட்டிற்று. நிக்கியின் சம்மதம் தெரிந்த அந்த ஜாதி நாய் முன்னிலும் மும்முரமாகக் கதவுகளைப் பிறாண்டித் தாவியது. தரைக்குக் கேட்டுக்கும் இடையே உள்ள சந்தில் நுழைந்து வெளியில் வர முயன்றது. ம், நடக்கவில்லை! அந்தச் சந்தில் நுழைய முடியாத அளவு அது பருமனாக இருந்தது. ஜாதி நாய் பரிதாபமாகக் கொஞ்சியது.
நிக்கிக்கும் அதன் அருகில் போகவேண்டும் போலிருந்தது. அந்த ஜாதி நாய், தான் மனித நேசத்துக்காகத் தவிக்கிற மாதிரி, இன்னொரு நாயின் நேசத்துக்காகத் தவிப்பதை நிக்கி புரிந்து கொண்டது. அது தனக்காகத் தவிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்தது. அதுவும் இவ்வளவு பெரிய இடத்து உயர்ந்த ஜாதி நாயின் நேசம் கிடைக்கும்போது ஓர் ஆதரவுமின்றித் தெரு நாயாக அலையும் நிக்கியால் எப்படி இந்தக் காதல் மிகுந்த அழைப்பை மீறிப்போக முடியும்?
போயிற்று. கேட்டுக்குக் கீழே இருந்த இடைவெளி வழியாக அந்த ஜாதி நாய்தான் போக முடியவில்லை. எனினும் இந்தத் தெரு நாய் நுழைந்து உள்ளே வர முடியும் என்று கனக்கிட்டு வைத்ததுபோல் அந்த ஜாதி நாய் நிக்கியை ‘ இதன் வழியாக வா’ என்று கூறுவது போல் நிக்கியின் முன்னங்கால்களில் ஒன்றைப் பிடித்து இழுத்தது.
நிக்கிப் பங்களாக் காம்பவுண்டுக்குள் ஓடிப் போய் விட்டது. இரண்டும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஒன்றன்மீது ஒன்று தாவிப் புரண்டு கவ்வி விளையாடின. நிக்கி அதன் பிடிகளிலிருந்து விலகித் திமிறி ஓடி ஓடி ஆனந்த நடனம் ஆடியது. இதனுடைய ஆட்டத்தைச் சற்று விலகி இருந்து அநுபவித்த ஜாதி நாய் சமயம் பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென்று நிக்கியின் மீது தாவியது. அவ்வளவுதான்; அந்தப் பிடியிலிருந்து அசைய முடியாமல் கட்டுண்டு கண் கிறங்கியது.
பங்களா வீட்டினுள்ளிருந்து நாயைக் காணோமே என்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த வீட்டு எஜமானி, ‘ ஏ… சீ! சர்தார்!… சர்தார்!’ என்று இரண்டு தடவை கூப்பிட்டாள். அதற்குள் இந்தப் பிணைப்பு பிரிக்க முடியாததாகப் போகவே, தன்னை யாராவது கவனித்தார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு உள்ளே போய்க் கதவை மூடிக் கொண்டாள் எஜமானி.
இப்போதெல்லாம் நிக்கி எங்கே போனாலும் எல்லோருமே விரட்டுகிறார்கள். எந்த வீட்டின் அருகேயும் யாரும் அதனை நெருங்க விடமாட்டேனென்கிறார்களே!
எங்கேயாவது இந்தத் தெரு நாய், குட்டி போட்டு வைத்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே அவர்கள் விரட்டுகிறார்கள் என்று நிக்கிக்குப் புரியவே இல்லை. விரட்டுவதும் ஓடுவதும் அதற்குப் புதிதா என்ன? ஆனாலும் இப்போதெல்லாம் ஓடுவது சிரமமாக இருக்கிறதே, இந்த அநுபவந்தான் அதற்குப் புதிதாக இருந்தது.
சுத்தமான திண்ணையிலும் காம்பவுண்டுகளிலும் இந்த அசுத்தம் பிடித்த நாய்க்கு இடம் தர மறுத்து விரட்டியபின் கடைசியில் ஒருநாள் இரவில் மிகுந்த வேதனையோடும் விரக்தியோடும் அசுத்தம் பிடித்த ஒரு சேரிக்குள் நுழைந்தது நிக்கி.
அது பிறந்ததே, அந்த மாதிரி இன்னொரு குப்பம்.
ஈரம், சகதி. ஒரு குடிசையின் பின்னால் உள்ள மூலையில் சுகமான புழுதி மண்ணில் ஐந்து அழகிய நாய்க் குட்டிகளைப் பிரசவித்தது நிக்கி.
எல்லோரும் வந்து அந்தக் குட்டிகளின் அழகைப் புகழ்ந்தார்கள். ஏதோ ஜாதி நாயின் கலப்பு என்று பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். சில நாட்களில் அவை அனைத்தும் நிக்கியிடமிருந்து பறிபோயின.
வாழ்வும் தாழ்வும், பெருமையும் வீழ்ச்சியும், மகிழ்ச்சியும் துயரமும் நாயின் வாழ்க்கையிலும் மாறி மாறித்தான் வரும் போலும்!
காரில் போகிற, சங்கிலியால் பிணித்துக் கையில் இழுத்துக் கொண்டு போகிற ஜாதி நாய்களைப் பார்த்து இப்போது நிக்கி ஓடுகிறது. ஒருவேளை, தனது குட்டியை அது தேடுகிறதோ? நிக்கி பெற்றதாகவே இருந்தாலும் அவை நிக்கியின் ஜாதியாகிவிடுமா, என்ன?
அதோ, பங்களா நாயையோ அல்லது இன்னுமொரு குப்பத்து நாயையோ தேடித் தெரு நாயாக நிக்கி அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு இப்போது ஒரு நாயின் தேவையை நாடுகிற ஸீஸன். தேவை என்று வந்து விட்டால் ஜாதியையா பார்க்கத் தோன்றும்?
(முற்றும்)