கலைஞர் கருணாநிதி தனது வாழ்நாளில் எண்ணற்ற கட்டுரைகள், உரைகள், திரைக்கதைகள் போன்ற பலவற்றை எழுதியுள்ளார். அவரது எழுத்துக்கள் தமிழ் இலக்கியம் மற்றும் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லிய கருத்தாளம் மிக்க குட்டிக்கதைகளின் தொகுப்பு இந்நூல். இது 1984ஆம் ஆண்டு முரசொலி குமரப்பன் அவர்களால் துகுத்து வெளியிடப்பட்டது.
கலைஞர் சொன்ன குட்டிக் கதைகள்
தொகுப்பு : முரசொலி குமரப்பன்
பதிப்புரை
கதை என்றால் சிறுவர்முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவர். எனவேதான் புரிந்து கொள்ளக் கடினமான தத்துவங்களை எல்லாம் சிறுசிறுகதைகள் வாயிலாக முன்னோர்கள் விளக்கிக் கூறிவந்திருக்கின்றனர்.
கதை சொல்வதிலும் சுவையோடு கேட்போரைக் கவரும் வண்ணம் சொல்லும் திறமை எல்லோருக்கும் அமைந்து விடாது. சொல்லும் விதத்தில் கதைக்குச் தனிச்சுவை ஏற்படுகிறது. கதை எல்லோரும் சொல்லிவிடலாம். ஆனால் கலைஞர் அவர்களைப் போல் கதையைச் சுவைபட விளக்கி இக்கால அரசியல் சூழ்நிலைகளோடு ஒப்பிட்டு மனதில் பதியும் வண்ணம் எடுத்து விளக்கும் பாங்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கது.
கலைஞர் அவர்கள் பல்வேறு சமயங்களில் எடுத்துக் கூறிய குட்டிக்கதைகளை நண்பர் முரசொலி குமரப்பன் அவர்கள் தொகுத்து வழங்கி இருக்கிறார். இவருக்கு என் நன்றி என்றும் உரியது.
கலைஞர் அவர்களின் மணிவிழாவினையொட்டி இந்நூலை வெளியிட வாய்ப்புக் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
-குறள்
எஸ். மாசிலாமணி – பதிப்பாசிரியர்
மன்னனும் குருவியும்!
ஒரு மாளிகையின் தாழ்வாரத்தில் மன்னன் ஒருவன் நடந்து கொண்டிருந்தான். அப்போது எங்கேயிருந்தோ ஒரு காசைத் திருடிக்கொண்டு ஒரு சின்னஞ்சிறு குருவி அந்தத் தாழ்வாரத்திலே வந்து அமர்ந்து அந்தக் காசை தன்னுடைய காலிலே வைத்துக் கொண்டு அந்த மன்னனைப் பார்த்துக் கேலியாக “என்கிட்ட ஒருகாசு இருக்கு. யாருக்கு வேணும்?” என்று மூன்றுமுறை கேட்டதாம்.
மன்னன் போனவன் அப்படியே போயிருந்தால் வம்பில்லை. அவன் குருவி சொன்னதைப் பெரிதுபடுத்தி அந்தக் குருவியைப் பார்த்து ”சும்மா இல்லாமல் என்ன அடிக்கடி சொல்கிறாய்! அந்தக் காசை எனக்குத்தான் கொடேன்!” என்றான்.
குருவி உடனே அந்தக்காசை மன்னனிடத்தில் கொடுத்து விட்டு ”என்கிட்ட பிச்சை வாங்கினான் ராஜா” என்று சொல்லிக் கொண்டேயிருந்தது.
உடனே மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டது.”சே! உன்னிடமா நான் பிச்சை வாங்கினேன் ! இந்தா உன்காசு” என்று எறிந்தான்! அப்பொழுதும் குருவி சும்மா இல்லை “எனக்குப் பயந்து ராஜா காசை திருப்பிக் கொடுத்து விட்டான்.” என்று சொன்னதாம்.
நம்வழியில் நாம்செல்வோம் என்று மன்னன் தன்வழியில் சென்றிருந்தால் கேவலம் குருவியினிடத்தில் அந்தப் பேச்சைக் கேட்டிருக்கத் தேவையில்லை அல்லவா! அவன் திரும்பு வானேன்! எனக்குத்தாள் கொடு என்று கேட்பானேன்! பயந்தாங்கொள்ளி பட்டத்தை குருவியிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்வானேன்!
அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் திருமதி ஜெயலலிதா தலைவர் கலைஞரையும், முன்னணித் தலைவர் களையும் தரம் தாழ்ந்து பேசிவருவதை மனதில் வைத்து தலைவர் அந்தப் பேச்சுக்களைப் பொருட்படுத்தக் கூடாது. என்பதை சுட்டிக்காட்டவே இந்தக் கதையைக் கூறினார்.
அராபியக் கதை
சில நேரங்களில் சிலர் சின்ன விஷயங்களில் நாணயமாக இருப்பார்கள். பெரிய விஷயங்களில் நாணயமாக இருக்க மாட்டார்கள். ஐந்து ரூபாய் கடன் வாங்கினால் மறுமாள் வட்டியோடு ஆறு ரூபாயாகத் திருப்பிக் கொடுப்பார்கள்.
ஆனால் ஐயாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஊரை விட்டு ஓடி விடுவார்கள். எனவே சின்ன விஷயத்தில் காட்டு கின்ற நாணயத்தை பெரிய விஷயத்திலும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஓர் அராபியக் கதை சொல்வார்கள். ஒருவன் தனது பக்கத்து வீட்டுக்காரனிடம் ஒரு ஜாடியை இரவலாக வாங்கினான். அது ஒரு சின்ன ஜாடி. ஒருவாரம் கழித்து அதைக் கொண்டுபோய்த் திருப்பிக் கொடுத்தான். கொடுக்கும் போது அந்த ஜாடியோடு ஒரு சின்ன ஜாடியையும் கொடுத் தான். ஜாடி இரவல் கொடுத்தவன் “நான் ஒரு ஜாடிதானே கொடுத்தேன். நீ இரண்டு ஜாடியாகத் தருகிறாயே!” என்று கேட்டான். அதற்கு இவனோ ”உன் ஜாடி குட்டி போட்டு விட்டது. அதை உன்னிடத்திலேயே திருப்பிக் கொடுத்து விட்டேன்” என்று சொல்ல இந்த ஏமாளியும் அதை ஏற்றுக் கொண்டு வாங்கிக் கொண்டான்.
பிறகு பத்து நாட்கள் கழித்து பக்கத்து வீட்டுக்காரன் வந்து விலை உயர்ந்த பெரிய வெள்ளி ஜாடியை இரவலாகக் கேட்டான். இதுவும் குட்டி போடும் என்ற பேராசையுடன் அவன் அந்த வெள்ளி ஜாடியையும் கொடுத்தான். நாட்கள் பல ஆகியும் ஜாடி திரும்ப வரவேயில்லை. ஜாடியைக் கொடுத்தவன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு ஜாடியை வாங்கிச் சென்றவனிடம் ஜாடியைத் திரும்பக் கேட்டான். அவனோ “உனது ஜாடி பிரசவத்தில் இறந்து போய்விட்டது” என்று கூறி விட்டான்.
என்ன செய்வது ஜாடி குட்டி போடுகிறது என்பதை நம்பியவன் அது இறந்து விட்டது என்பதையும் நம்பித்தானே ஆக வேண்டும்.
எனவே சின்ன விஷயங்களில் நாணயம் உள்ளவர்களைப் போல நடித்து பெரிய விஷயங்களில் நாணயமற்றவர்களாக நடந்து கொள்ளக்கூடாது.
தென்னை மரத்தில் புல்
மக்களை ஏமாற்ற எம்.ஜி.ஆருடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்களுடைய புதல்வர்கள் அத்தனை பேரும் ”நாங்கள் சாராயத் தொழிற்சாலைக்கு லைசென்ஸ் வழங்க லஞ்சம் வாங்கவில்லை. சினிமா படம் எடுப்பதற்கு பத்தே முக்கால் லட்சம் ரூபாய் கடனாக வாங்கினோம்” என்று சொல்கிறார்கள்.
யாருமில்லாத நேரத்தில் நள்ளிரவில் தென்னந்தோப்பில் ஒரு தென்னை மரத்தில் ஒரு திருடன் ஏறினான். தேங்காய் குலைகளைப் பறிக்க 1 அதை தோப்புக்குச் சொந்தக்காரர் பார்த்து விட்டார்.
“இறங்கு கீழே” என்றார், இறங்கினான். ஓர் அறை கொடுத்துக் கேட்டார் ஏன் தென்னை மரத்தில் ஏறினாய் என்று! புல் பிடுங்க ஏறினேன் என்றான் அந்தத் திருடன். “தென்னை மரத்தில் ஏதடா புல்” என்றார் தோப்புக்குச் சொந்தக்காரர் “அதுதான் பார்த்தேன். புல் இல்லை இறங்கி விட்டேன்’ என்றான் திருடன்.
தென்னை மரத்தில் புல் பிடுங்குகிற கதைபோல சினிமா படம் எடுக்க கடன் வாங்கினோமேயல்லாமல் லஞ்சமாக வாங்க வில்லை என்று சொல்கிறார்கள்.
நாராயணா! நாராயணா!
நாரதர் பூலோகத்தில் பல பகுதிகளைச் சுற்றி விட்டு ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திற்கு வருகிறார். அங்கே ஓர் ஏழை விவசாயியைப் பார்க்கிறார். அவன் வயலிலே வேலை செய்து கொண்டிருக்கிறான். நாரதர் வரும்பொழுதே “நாராயணா, நாராயணா” என்று சொல்லிக் கொண்டே வருகிறார். அப்படி வரும்பொழுது அந்த விவசாயியைப் பார்த்து நாரதர் “நான் உலகமெல்லாம் சுற்றுகிறேன். ஓயாமல் என் உதடுகள் ‘நாராயணா,நாராயணா’என்றே ஜெபித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நீ இந்த வயலில் சும்மாதானே வேலை செய்து கொண்டு இருக்கிறாய். ‘நாராயணா, நாராயணா’ என்று சொல்லக்கூடாதா? பாபம் தொலையாதா? புண்ணியம் உன்னை அணுகாதா?” என்று கேட்கிறார்.
உடனே அந்த விவசாயி நாரதரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று நான் ஒரு வேலை தருகிறேன் முதலில் நீங்கள் அதை செய்யுங்கள். பிறகு நீங்கள் எழுப்பிய சந்தேகத்தை நான் போக்குகிறேன் என்று சொன்னான் என்ன வேலை என்று கேட்டார். ஒரு சிறு கிண்ணத்திலே எண்ணெய்யை ஊற்றி நாரதர் கையில் அந்தக் கிண்ணத்தைக் கொடுத்து “நாரத முனிவரே! இந்த எண்ணெய்க் கிண்ணத் தைக் கையில் வைத்துக் கொண்டு இந்த ஊரை ஒரு முறை சுற்றி வாருங்கள்” என்று விவசாயி சொன்னான். நாரத முனிவர் அந்தக் கிண்ணத்தைக் கையில் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தார்.
ஊரைச் சுற்றிவந்து முடிந்ததும் அந்தவிவசாயி ஊரை சுற்றினீர்களே! இப்படி எண்ணெய்க் கிண்ணத்தைக் கையிலே வைத்துக் கொண்டு சுற்றிய பொழுது எத்தனை முறை ‘நாராயணா, நாராயணா’ என்று சொன்னீர்கள்” எனக் கேட்டான். நாரதர் “நான் சொல்லவே இல்லை” என்று சொன்னார். “ஏன் என்று விவசாயி கேட்க என்னுடைய கவனமெல்லாம் எண்ணெய்க் கிண்ணத்தில் தான் இருந்தது. எண்ணெய் சிந்தாமல், சிதறாமல் கிண்ணத்தைக் கொணடு சேர்க்க வேண்டும் என்ற கவலையில் நான் இருந்தேன் அதனால் நான் நாராயணா! நாராயணா என்று சொல்லவில்லை. என்று நாரதர் சொன்னார்.
அதைப் போலத்தான் நாரதர் கையிலே தரப்பட்ட எண்ணெய்க் கிண்ணத்தைப் போல் மாநில உரிமைகள், மாநில பிரச்சனைகள். இந்த மாநிலத்தில் உள்ள தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம். தமிழனுடைய உரிமையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம். இன மானம் காக்க வேண்டும் என்ற எண்ணம பகுத்தறிவுப் பாசறையாகத் தமிழகத்தை ஆக்க வேண்டும் என்ற எண்ணம் இவைகள் எல்லாம் நம்கையிலே எண்ணெய்க் கிண்ணத்தைப்போல இருப்பதால் அதைச் சிந்தாமல் சிதறாமல் கொண்டு வரவேண்டும் என்ற அக்கறையில் நாம் தேசியம்!
தேசியம் என்று சொல்வதில்லை.நாராயணா ! நாராயணா மறந்து விட்டதைப் போல் நாமும் தேசியத்தைப் பற்றிப் கவலைப்படாமல் நம்மைப்பற்றி, நம்முடைய சமுதாயத்தைப் பற்றி மொழியைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இதைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ தேசியம் என்றால் சொர்க்கத்தைப் போல நம் மாநில உறவுகளைப் பற்றிப் பேசினால் இது படு நரகத்திற்கு நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதைப் போல சில தேசியவாதிகள் பேசுவது முறையல்ல!
துறவியும் சீடர்களும்
ஒரு துறவி பல மாணவர்கள் அடங்கிய ஒரு மடத்தை நடத்திக் கொண்டிருந்தார். அந்த மடத்தின் மாணவர்களுக்கு நல்ல அறநெறியைப் போதித்து வந்தார். மாணவர்கள் ஒரு நாள் தங்களுக்குள்ளாகவே ஒரு கலந்துரையாடலை நடத்தி “இந்த துறவி யாரோடு நீண்டகாலமாகவே நாமும்இங்கேயே தங்கி பயின்று வருகிறோம். இந்த மடத்தில் நமக்கு எல்லாம் பிடிக்கிறது. ஆனால் இந்த மடத்தில் இருக்கிற சமையல்காரன் நல்ல உணவைச் சமைப்பது இல்லை, எதற்கும் ஒரு பெண்மணி சமையல்காரியாக இங்கு வருவாளேயானால் நல்ல உணவு கிடைக்கும் என்று தீர்மானித்து எல்லா மாணவர்களும் சேர்ந்து அந்த மடத்தினுடைய குருநாதரைச் சந்தித்தனர்.
அவரிடம் மாணவர்கள் தங்களுடைய எண்ணத்தை சமையல்காரப் வெளியிட்டார்கள். உடனே அந்தத் துறவி பெண் ஒருத்தி இந்த மடத்திற்கு வந்து விட்டால் உங்களிலே யாருக்காவது அவள் மீது தவறான எண்ணம்- மோகம் பிறந்து விட்டால் இந்த மடத்தின் தூய்மை என்ன ஆவது? எனவே சமையற்காரப் பெண்ணை வேலைக்கு அமர்த்த நான் ஒப்புக் கொள்ள இயலாது” என்று கூறிவிட்டார்.
உடனே சில மாணவர்கள் ”பரவாயில்லை ஒரு கிழவியை சமையல்காரியாக அமாத்துங்கள் அப்படி நியமித்தால் நீங்கள் சொல்லுகின்ற நிலை ஏற்படாது”என்றுசொன்னார்கள் ‘சரி நாளைக்கு யோசித்துச் சொல்கிறேன். இரவுச் சாப்பாட்டிற்கு எல்லோரும் செல்லுங்கள்” என்று சொல்லி விட்டார்.
மாணவர்களும் தங்கள் கடமைகளை முடித்துவிட்டு இரவு உணவுக்குத் தயாராக வந்துவிட்டார்கள். அதற்கு முன்பே துறவியார் சமையற்காரனை அழைத்து ”இன்றைக்கு இரவு மாணவர்களுக்குப் பரிமாறும் உணவில் அளவுக்கு அதிகமாக உப்பைக் கொட்டிவிடு. அத்துடன் உணவு பரிமாறுகின்ற போது யாருக்கும் தண்ணீர் வைக்காதே” என்று உத்தர விட்டார். துறவியார் சொன்னபடியே உப்பு அதிகமாகப் போடப்பட்டஉணவு மாணவர்களுக்குப் பரிமாறப்பட்டதுடன் யாருக்கும் தண்ணீர் வைக்கப்படவில்லை.
துறவியும் அவர்களோடு அமர்ந்து சாப்பிட்டார். துறவிக்குப் பரிமாறப்பட்ட உணவில் உப்பு கலக்கப்படவில்லை. மாணவர்களுக்கு அது தெரியாது. துறவி உணவை வேக வேகமாகச் சாப்பிடுவதைப் பார்த்த மாணவர்கள் “துறவியே இப்படிச் சாப்பிடுகிறாரே! நமது உணவில் உப்பு அதிகம் என்று நாம் எப்படிச் சொல்வது’ என்ற பயத்தோடு அத்தனை பேரும் சாப்பிட்டு முடித்தார்கள் பிறகு தாங்கள் தங்குகிற விடுதிக்குச் சென்று படுத்துவிட்டார்கள். குருநாதர் தனது அறைக்குப் போய்விட்டார். அதற்குமுன் அவர் சமையல்காரனை அழைத்து ”மாணவர்கள் தூங்குகின்ற தாழ்வாரத்திற்கு அருகில் உள்ள முற்றத்தில் ஒரு பாத்திரத்தில் சாணத்தைக் கரைத்து வைத்துவிடு” என்று சொல்ல சமையற்காரனும் அப்படியே சாணத்தைக் கரைத்து வைத்துவிட்டான்.
மாணவர்களோ அதிக உப்புக் கலக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டதால் தாகத்தால் தவித்தார்கள். என்ன செய்வதென்று புரியவில்லை. வழக்கமாக வைக்கப்படும் தண்ணீர்ப் பானைகளும் அங்கு இல்லை. தேடித் தேடிப் பார்த்த மாணவர்கள் கடைசியாக சாணம் கரைத்து வைககப் பட்டிருந்த பானையைப் பார்த்தார்கள்.
ஒரு மாணவன் ”கொஞ்ச நேரம் சென்றால் சாண நீர் தெளியும். அதற்குப் பிறகு நாம் அந்தத் தண்ணீரைக் குடிப்போம்” என்று சொல்லிக் காத்திருந்தான். கொஞ்சம் கொஞ்சமாகச் சாணம் தெளிந்து வர அந்த மாணவன் ஒரு குவளையை எடுத்து அந்தத் தண்ணீரை மொண்டு. சாப்பிட்டான். குவளையை விட்டு மொண்டதில் சாணநீர் மறுபடியும் கலங்கி விட்டது.
ஆனால் தாகம் தாங்க முடியாத மாணவர்கள் வேறு வழியின்றி அந்த சாணத் தண்ணீரையே எடுத்துக் குடித்து தாகத்தைத் தணித்துக் கொண்டார்கள்.
காலையில் துறவி வந்தார் “இங்கு இருந்த சாணத் தண்ணீர் என்ன ஆயிற்று” என்று கேட்டார். மாணவர்கள் நடந்ததைச் சொன்னார்கள். அப்பொழுது “தாகத்தில் நீங்கள் சாணத் தண்ணீரா -நல்ல தண்ணீரா என்று கூடக் கருதாமல் அந்தத் தண்ணீரைச் சாப்பிட்டிருக்கிறீர்கள். இதைப் போலத்தான் இங்கு ஒரு கிழவியை வேலைக்கு வைத்தால் கூட மோகத்தில் அவள் கிழவியா குமரியா என்று கூடப் பார்க்காமல் தவறு செய்து விடுவீர்கள் என்று சொன்னார்.
மோகம் எவ்வளவு பொல்லாதது என்பதை விளக்க இந்தக் கதை போதும்.
மூளி மூக்குக்காரன்
மூக்கு மூளியாக இருந்த ஒருவன் தன்னை எல்லோரும் கேலி செய்கிறார்கள் என்பதால் ஒருநாள் கடைவீதியில் நின்று கொண்டு தன்னுடைய மூளிமூக்கை அறுத்துக் கொண்டான் அறுத்துக் கொண்டவன் ‘ஆகா! கடவுள் தெரிகிறார்! கடவுள் தெரிகிறார்!” என்று சத்தம் போட்டான். பக்கத்தில் இருந்தவர்கள், “கடவுள்தெரிகிறாரா? எப்படி ” என்று கேட்க நீங்களும் மூக்கை அறுத்துக் கொண்டால் உங்களுக்கும் கடவுள் தெரிவார்” என்று அவன் சொன்னான். அதைக் கேட்ட ஒருவன் தானும் மூக்கை அறுத்துக் கொண்டான். ஆனால் அவனுக்குக் கடவுள் தெரியவில்லை. அவனுக்கோ தான் மூக்கை அறுத்துக் கொண்டு போய் நின்றால் ஊரில் கேலி பேசுவார்களே என்று மற்றவர்களும் மூக்கை அறுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக “ஆமாம்! கடவுள் தெரிகிறார் என்று கூறினான். அவனை நம்பி எல்லோரும் மூக்கை அறுத்துக் கொண்டார்கள். அந்த ஊரில் இருந்த எல்லோருமே மூக்கில்லாத மூளிகளாக ஆகிவிட்டார்கள் என்பது பழைய கதை.
அது போல-யாரோ ஒரு மந்திரவாதி எம். ஜி ஆகுக்கு ஒரு கண்டம் இருப்பதாகவும், அதனால் அவர் கறுப்புச்சட்டை போடவேண்டும் என்று சொன்னதாகவும். தான் மாத்திரம் கறுப்புச் சட்டை போட்டால் அது கேலிக்குரியதாக ஆகிவிடும் என்பதற்காக தன் கட்சியிலே உள்ள எல்லோரும் கறுப்புச் சட்டை போடவேண்டும் என்று எம். ஜி. ஆர். கட்டளையிட்டு விட்டார் என்பது ஒரு நம்பகமான தகவல்.
அதன்படி மந்திரவாதியின் சொல்லைக் கேட்டு கறுப்புச் சட்டை போட்டு இரண்டு மண்டலம் அதாவது தொண்ணூற்று ஆறு நாள் கறுப்புச் சட்டை போட்டு கழற்றி விட்டார். அவகுடைய தொண்டர்களும் கறுப்புச் சட்டைபோட்டு கழற்றி விட்டார்கள் இலங்கைத் தமிழர்களுக்காக அவர்கள் காட்டிய ஆர்வம் அக்கறை அவ்வளவு தான்!
சொர்க்கத்திற்குச் சென்றுவந்த துறவி!
வசதியான குடும்பத்தில் ஓர் அழகான அனைவராலும் பாராட்டத்தக்க – கற்பு நெறி வாய்ந்த ஒரு பெண்மணி இருந்தாள். பெற்றோருக்கு அவள் ஒரே பெண். திடீரென அவள் இறந்து விட்டாள் அவள் மரணமடைந்த பி ற கு அவளுடைய தாயும் தந்தையும் அவளையே நினைத்து பெரும் கவலையோடு இருந்தார்கள். அவளுக்குப் பூட்டி மகிழ்ந்த அணிகலன்களை எல்லாம் தாயும் தந்தையும் எடுத்து வைத்து அவற்றைப் பார்த்துப் பார்த்துக் கண்கலங்கினார்கள்.
ஒரு நாள் தந்தை வெளியில் சென்றிருந்தார் தாய் மாத்திரம் வீட்டில் இருந்தாள். அப்போது ஒரு துறவி அந்த வீட்டிற்கு வந்தான். அந்தத் துறவி ஓர் எத்தன் -ஏமாற்றுக்காரன் -அந்தத் தாய் அப்போலித் துறவியை வரவேற்று உபசரித்து அன்னமிட்டு தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டாள். அந்த வீட்டில் நகைகள் ஏராளமாக இருக்கின்றன என்று தெரிந்தே வந்த அந்தப் போலித் துறவியோ “நான் சொர்க்கத்தில் இருந்து வருகிறேன்” என்று சொன்னான்.
உடனே அந்தத்தாய் என்னுடைய மகள் இறந்து மூன்று ஆண்டு ஆகிறது. அவளும் சொர்க்கத்தில்தானே இருக்கிறாள் அவளை நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்டாள்.
துறவியோ “பார்த்தேன்! பார்த்தேன்! உங்கள் பெண் சுகமாக இருக்கிறாள். ஆனால் அவளுக்கு ஒரே ஒரு குறை! சொர்க்கத்திற்குச் செல்லும் பொழுது நகைகளை எல்லாம் இங்கே விட்டுவிட்டுச் சென்று விட்டாளாம். துறவியாரே என் வீட்டுப் பக்கம் போனால் அவைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னாள்!” என்றான்.
இப்படித் துறவி சொன்னதும் “அப்படியா சொன்னாள் என் மகள்! அவளுக்கில்லாத நகையா! இந்த நகைகளை யெல்லாம் அவளிடத்திலே கொடுத்து விடுங்கள்” என்று வீட்டிலிருந்த நகைகள் அத்தனையையும் மூட்டை கட்டி துறவியினிடத்திலே அந்தத் தாய் ஒப்படைத்தாள். அந்தத் துறவியும் அதை வாங்கிக் கொண்டு சென்று விட்டான்.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வெளியில் சென்றிருந்த தந்தை வந்தார். உடனே அந்தத் தாய் தன்னுடைய கணவனைப் பார்த்து ஆர்வத்தோடு அவசர அவசரமாக “நம்முடைய மகள் சொர்க்கத்திலே இருப்பதைப் பார்த்து விட்டு ஒரு துறவி வந்தார் நகை இல்லாமல் நம் மகள் வருத்தப்படுவதாக அந்தத் துறவி சொன்னார்.எல்லா நகை களையும் அவரிடத்திலே கொடுத்தனுப்பியிருக்கிறேன்” என்று சொன்னதும் “அடிப்பாவி! பைத்தியக்காரி! ஏமாந்து விட்டாயே! யாரோ ஒருவன் உன்னைச் சரியாக ஏமாற்றி யிருக்கிறான். தாய்க்குலம் என்றால் சரியாக இருக்கிறது பார்த்தாயா! இப்படி எமாந்து விட்டாயே!” என்று சொல்லி உடனே குதிரையில் ஏறி அந்தத் துறவியைத் தூரத்திச் சென்றான். துறவி ஓடினான். நகையைப் பறிகொடுத்த தந்தையோ விடாமல் குதிரையில் துரத்திச் சென்றார்
ஒடிக் கொண்டே இருந்த துறவி திடீரென்று ஒரு மரக் கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.குதிரையில் துரத்திச் சென்றவரோ மரக்கிளைக்குக் கீழே குதிரையை நிறுத்திவிட்டு துறவியைப் பிடிக்க மாத்திலே ஏறினார். அந்த நேரம் பார்த்து மரக்கிளையில் இருந்த துறவி குதிரையின் மீது குதித்து குதிரையை ஒட்டிச் சென்று விட்டான்.
நிலையில் எனவே துறவியைப் பிடிக்க முடியாத “துறவியாரே பெண்ணுடைய தாயார் கொடுத்தநகைகளையும் என் பெண்ணிடம் கொடுத்துவிடு, நான் கொடுத்த குதிரை யையும் அவளிடத்திலே கொடுத்துவிடு” என்று சொல்லிவிட்டு வேதனையோடு வீட்டுக்குத் திரும்பினார்.
“நான் உங்களைக் கேட்கிறேன். கதையில் வந்தது போல குதிரையையும் கொடுத்து விட்டுத் திரும்பவா? அல்லது இழந்த நகையை இழந்த உரிமையை- இழந்த உணர்வை மீட்டு யாரிடத்திலோ ஏமாந்து விட்ட தமிழ்க் குலத்தைக் காப்பாற்றவா? “குதிரையையும் எடுத்துக் கொண்டு போ’ என்று கூறிவிடவா? என்கின்ற கேள்வியைத் தான் நான் உங்கள் முன் வைக்கிறேன்.”
யாராலோ நீங்கள் தந்திரமாக எமாற்றப்படுகிறீர்களே! இதை எடுத்துச் சொல்லுகின்ற பணியில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பவர்கள் தான். இருந்தாலும் எனக்கே ஒரு சந்தேகம்! என்றைக்காவது ஒருநாள் நமக்கே கூட சலிப்பு ஏற்பட்டு விடுமோ ! என்கின்ற சந்தேகம். நமக்கே கூட ஒரு மனச் சங்கடம் ஏற்பட்டு விடுமோ என்கின்ற ஒரு ஐயப்பாடு !
புத்தர் உணர்த்திய உண்மை
இறந்தவர்களைக் காப்பாற்றக்கூடிய மகாத்மாக்கள் -மகான்கள் இவர்கள் எல்லாம் உலகத்திலே இருந்ததாக அவர்கள் இருப்பதாகக் கூட இன்றளவும் கற்பனை செய்து -கொண்டிருப்பவர்கள் இதைச் சொல்லி மக்கள் உள்ளத்திலே ஒரு மாயை ஏற்படுத்துகின்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் உலகத்தை உண்மையாக உணரச் செய்ய வேண் டும் என்று கருதிய புத்தரைப் பற்றி அவருடைய வாழ்க்கை யிலே நடைபெற்ற நிகழ்ச்சியைப் பற்றி ஒரு குறிப்பு உண்டு.
புத்தர் ஒரு நாள் ஓர் ஊரிலே வீதியிலே நடந்து சென்றபோது கண்ணீரும் கம்பலையுமாக கையிலே ஒரு குழந்தையினுடைய சவத்தோடு ஒரு பெண்மணி ஓடோடி வந்தாள். புத்தரிடம் வந்து அழுதாள்.
“என்னம்மா உனக்கு என்ன நேர்ந்தது” என்று புத்தர் கேட்டார்.
இறந்துபோன தன்னுடைய பச்சிளங் குழந்தையை புத்த ருடைய பாதாரவிந்தங்களிலே வைத்துவிட்டு அந்தப் பாவை சொன்னாள் “இது என் குழந்தை; இந்த ஒரே குழந்தையை நான் இழந்துவிட்டேன். இதற்கு நீங்கள் தான் உயிர்தர வேண்டும்'” என்று கேட்டாள்.
புத்தரை உலகமே கொண்டாடுகிறதே! அவர் மாமனிதர் என்று புகழப்படுகிறாரே! மனிதசக்திக்கு அப்பாற்பட்டகாரியங் களை அவரால் செய்ய முடியும் என்பது அவளுக்கு அவர்மீது இருந்த நம்பிக்கை.
எனவேதான் இறந்துபோன குழந்தையினுடைய சவத்தை புத்தருடைய காலடியில் வைத்து. “இதற்கு எப்படியாவது உயிர்கொடுத்துமீண்டும்பிழைக்கவையுங்கள்!” என்று கெஞ்சினாள்; மண்டியிட்டுக் கதறினாள்.
புத்தர் அந்தப் பெண்ணை சுலபத்திலே தேற்றிட முடியாது என்று தெரிந்து கொண்டு, ”சரியம்மா! அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு, நீ ஒரு காரியம் செய்” என்றார்.
அந்தப் பெண்மணி தன்னுடைய குழந்தை பிழைத்து விடும் என்ற நம்பிக்கையில் “எந்தக் காரியம் ஆனாலும் செய்கிறேன்.சொல்லுங்கள்” என்று கேட்டாள்.
உடனே புத்தர். “இந்த ஊரில் போய் ஒரு பிடி அரிசி வாங்கிக் கொண்டு வா” என்றார்.
”இது தானா பிரமாதம்? இப்போதே வாங்கிக் கொண்டு வருகிறேன்” என்று அந்தப் பெண்மணி ஓடத் துவங்கினாள்
புத்தர் அந்தப் பெண்மணியைக் கைதட்டிக் கூப்பிட்டார். ஓடியவள் திகைத்துப்போய் அருகே வந்து “என்ன” என்று கேட்டாள்
”ஒரு பிடி அரிசி வாங்கி வா; ஆனால் அப்படி வாங்கி வருகின்ற அந்த அரிசி எந்த வீட்டிலே இருந்து வாங்கப்பட வேண்டும் தெரியுமா! யாருடைய வீட்டிலே இதுவரை யாரும் சாகாமல் இருக்கிறார்களோ அவர்களுடைய வீட்டிலே இருந்து வாங்கிவா” என்று புத்தர் சொன்னார்,
அவளுக்கு எப்படியும் குழந்தை பிழைக்க வேண்டும் என்ற ஆவல் அதனால் அந்த ஊர் முழுவதும் சென்று கேட்டாள்; பக்கத்து ஊருக்கு ஓடினாள்: அருகாமையில் இருக்கின்ற ஊர்களுக்கு ஓடினாள். எந்த வீட்டிலே போய் அரிசி கேட்டாலும் அரிசி கொடுப்பதற்கு தயாராக இருந் தார்கள் ஆனால் அந்த வீட்டிலே எப்பொழுதோ ஒரு சாவு ஏற்பட்டிருக்கிறது.
போன ஆண்டு ஒரு சாவு அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாவு ! பச்சிளம் பாலகன் இறந்து விட்டான்! ஒரே மகள் இறந்து விட்டாள் ! கல்யாண மாப்பிள்ளை இறந்து விட்டான்! தந்தை இறந்து விட்டார் ! இப்படிப்பட்டதொரு சாவுச் செய்தியைச் சொல்லாத வீடே கிடையாது
திரும்பி வந்தாள் புத்தருக்கு நேராகத் தலைகுனிந்தாள். பின்புத்தரைப் பார்த்துச் சொன்னாள். ”எனக்கு உங்களுடைய அறிவுரையின் மகாத்மியம் புரிந்துவிட்டது நான் வருகிறேன்” என்று இறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு போனாள்.
ஆக சாவு நிகழாத வீடு கிடையாது ! சாவு என்பது எல்லா வீட்டையும் எல்லா இடத்தையும் தொடக் கூடியது. புத்தர் தன்னை ‘மகான் மகிமை பொருந்தியவர்’ என்று காட்டிக் கொள்ள வேண்டுமேயானால் “அந்த ஊரில் அந்தக் குழந்தையை உயிர் கொடுத்து எழுப்பினார்! இந்த ஊரில் இந்தக் குழந்தையை உயிர்கொடுத்து எழுப்பினார்” என்றெல் லாம் கூட கதைகள் கட்டியிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிப்பட்ட கதைகள் சமுதாயத்தைச் செல்லரிக்கக் கூடியவை என்று எண்ணிய காரணத்தினாலேதான் புத்தரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பிலே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நாம் காணமுடிகிறது.
கஜினி முகமதுவும் கவிஞர் பர்டோசியும்
பர்டோசி என்கின்ற பெரும் கவிஞன் கஜினிமுகமது வுடைய நண்பன். கஜினிமுகமது அந்த நண்பனைப் பார்த்து நான் எத்தனையோ போர்க்களங்களைக் கண்டிருக்கிறேன்; எத்தனையோவெற்றிகளும் அடைந்திருக்கிறேன்; எவ்வளவோ பொருட்களைக் குவித்திருக்கிறேன்; மாடமாளிகைகள் கூட கோபுரங்கள் இவற்றுக்கெல்லாம் சொந்தக்காரனாக இருக் கின்றேன். ஆனால் இவைகள் அத்தனையையும் விட உயர்ந்த தாக நான் கருதுவது ஒரு கவிஞன் என்னைப் பற்றிப் பாராட்டுவதைத் தான்; எனவே கவிஞர் பர்டோசி அவர்களே அப்படிப்பட்ட ஒரு பாராட்டினை கவிமாலையாகத் தொகுத்து எனக்கு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்ள, கவிஞர் சற்று தயங்க, உடனே கஜினிமுகமது. “நீங்கள் என்னைப் புகழ்ந்து அப்படிப்பட்ட ஒருகவிமாலை எழுதித்தருவீர் களேயானால் உங்களுக்கு அறுபதாயிரம் பொற்காசுகளைப் பரிசாக வழங்குவேன்” என்று குறிப்பிட, அறுபதாயிரம் பொற்காசுகள் தனக்குக் கிடைக்கிறதே என்ற ஆர்வத்தின் காரணமாக பர்டோசி உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு கவிதைகளை எழுதத்தொடங்கி, எழுதிய அந்தக் கவிதை மணிமாலையை கொலு மண்டபத்திற்கு வந்து கஜினி முகமதுக்குமுன் பாடிக்காட்ட கஜினிமுகமது பரவசத்தால் மயங்கியே போனான்.
கவிஞர் தனக்கு அறுபதாயிரம் பொற்காசுகள் வழங்கப் படும் என்று நின்றார். “ஏன் நிற்கிறீர்” என்று கேட்டான் கஜினிமுகமது.
கவிஞர் பர்டோசி “அறுபதாயிரம் பொற்காசுகள் வழங்கு வதாகச் சொன்னீர்களே! அதை வாங்கிச் செல்லத்தான் காத்திருக்கிறேன்”. என்று சொன்னாராம்.
உடனே கஜினிமுகமது “அறுபதாயிரம் பொற்காசுகளா? யார் சொன்னது அப்படி? வேண்டுமானால் அறுபதாயிரம் வெள்ளிக் காசுகள் தருகிறேன்; வாங்கிக்கொண்டு செல்லும்” என்று கூறினான்.
அதைக்கேட்ட கவிஞர்.”உன்னுடைய வெள்ளிக்காசு யாருக்கு வேண்டும்” எனச் சொல்லிவிட்டு தன்னுடைய இல்லத்திற்குச் சென்றார். இல்லத்திற்குச் சென்றவர் கவலையினால் வாடினார்; தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந் தார். அந்த ஏமாற்றத்தின் விளைவாக அவருடைய நெஞ்சு அடைத்தது; இதயம் வெடித்தது.மாண்டே போனார்.
அவர் மாண்டபின் அவருடைய சடலத்தை இல்லத் திலிருந்து எடுத்துக் கொண்டு போகிற நேரத்தில்,கஜினி முகமதுவுடைய அரண்மனையிலிருந்து அறுபதாயிரம் பொற் காசுகளை ஏற்றிக் கொண்டு ஒரு வண்டி வந்தது. வந்தவர்கள் கவிஞர் இறந்த செய்தியை கஜினி முகமதுவிடம் போய் சொன்னார்கள்.
கஜினியோ “என்னுடைய பாராட்டுக் கவிமாலையை அவர் பாடி முடித்ததும், அவரை ஒரு திடீர் ஏமாற்றத்துக்கு ஆளாக்க வேண்டும் என்று விளையாட்டுக்குத்தான் அப்படிச் செய்தேன். அவருக்கு அறுபதாயிரம் பொற்காசுகளைத் தருவதென்று தீர்மானித்த பிறகுதான் அப்படிச் சொன்னேன். ஆனால் அதுபோய்ச் சேருவதற்குள்ளேயே கவிஞர்பர்டோசியை இழந்து விட்டேனே” என்று கதறி அழுதான்.
அதைப் போல த் தான் பாரதியாருக்கு இன்று நாம் நூற்றாண்டு விழாக் கொண்டாடுகிறோம். பாரதியார் மறைந்த பிறகு மணிமண்டபம் கட்டினோம் அதற்குப் பிறகும் அவரைப் பாராட்டினோம்; புகழ்ந்தோம்; இவைகளெல்லாம் எதற்கு ஒப்பிடக்கூடிய தன்மையில் இருக்கிறதென்றால், தருகிறேன் என்றுசொல்லி வினையாட்டுக்காக ஏமாற்றி, ஏமாற்றமடைந்த கவிஞன் இறந்து போனபிறகு “இதோ அறுபதாயிரம் பொற் காசுகள்”என்று அனுப்பினானே கஜினிமுகமது அதைப் போலத்தான் இன்றைக்கு நாடு பாரதியாருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
இரு நிழல்கள்
இலக்கியத்தில் இரண்டு நிழல்கள் குறிப்பிடப்படுகின்றன ஒன்று காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தில் வருவது. மற்றொன்று சங்க இலக்கியத்தில் வருவது.
காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தில் கோடையைப் பற்றி அவன் வர்ணிக்கிறான்.
தாங்கமுடியாத வெப்பம். வயல்களெல்லாம் வெடித்துப் பிளந்திருக்கின்றன. அப்பொழுது நிழலே எங்கும் கிடைக் காமல் ஒரு பாம்பு அங்கேயும் இங்கேயும் ஓடி நெளிகிறது. அது ஓடுகின்ற நேரத்தில்கூட வெப்பம் தாங்க முடியாத காரணத்தால் தன் வாலை மாத்திரம் கீழே ஊன்றிக் கொண்டு முழு உடலையும் தூக்கி நின்று கொண்டிருக்கிறது; அந்தப் பாம்பினுடைய நிழல் கீழே படுகிறது. அப்பொழுது நிழல் என்று தெரியாமல் அந்த நிழலுக்குக் கீழே போய் ஒதுங்குகிறது.
தவளைக்குத் தெரியாது தான் ஒதுங்கி இருப்பது ஒரு பாம்பின் நிழல் என்று; ஏதோ ஒரு நிழல் தேவை என்ற நிலையில் பாம்பின் நிழலிலே தவளை ஒதுங்குகிறது.
இது காளிதாசன் எழுதியுள்ள சாகுந்தலத்திலே வர்ணிக்கப்பட்டுள்ள காட்சி.
தமிழ்ப்புலவன் சங்க இலக்கியத்தில் கலித்தொகையில் ஒரு செய்யுளை இயற்றி இருக்கின்றான். அந்தகலித்தொகை பாடல்களில் பாலைக்கலியில் ஒருபாடல் சாகுந்தலத்தில் வந்தது போலவே ஒரு கோடைக்காலம். அந்தக் கோடைக்காலத்தில் ஆண் மானும், பெண்மாணும் ஒரு பாலைவனத்தில் செல்லுகின்றன.
தாங்க முடியாத அந்த வெப்பத்தில் பெண்மான் துடிப்பதைக் காணச் சகிக்காமல் ஆண்மான் அங்கே நின்று கொண்டு தன் நிழல் கீழே விழுகின்ற இடத்தில் பெண்மானைப் படுக்க வைத்து நிழல் தருகிறது இது சங்க இலக்கியத்தில் வரும் நிழல்.
இரண்டு நிழல்களையும் ஏன் சொல்லுகிறேன் என்றால் சாகுந்தலத்தில் பாம்பின் நிழல் என்று தெரியாமல் தவளை போய் அந்த நிழலில் நின்று கொண்டிருக்கிறது. பாம்புக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியும்.
ஆனால் சங்க இலக்கியத்தில் உணர்ந்தே நிழல் தரப்படு -கிறது. தனது துணைக்கு நிழல் தருகிறோம் என்று ஆண்மான் நின்று கொண்டு நிழல் தருகிறது. பெண் மான் கவலைப் படாமல் பயமில்லாமல் கீழே படுத்திருக்கிறது.
நான் சிறுபான்மை சமூகத்தார்க்குச் சொல்லிக் கொள்வேன். நீங்கள் இடைக் காலத்தில் கொஞ்சநாள் பாம்பின் நிழலைத் தேடிப் போனீர்கள். அந்த நிழலைப்பற்றித் தான் நண்பர் சுலைமான் சேட் அவர்களும் மற்றவர்களும் வெகுவேகமாகத் தாக்கிப் பேசினார்கள்.
இப்போது தனக்கு நிழல் இல்லாவிட்டாலும்பரவாயில்லை, தன்னுடைய துணைக்கு நிழல் தரவேண்டும் என்று சொல்கின்ற கலித்தொகை காட்டுகின்ற நிழல் சிறுபான்மையோருக்குக் கிடைத்திருக்கிறது. அதுதான் தி.மு.க. என்னும் நிழல்.
குருவி ராமேஸ்வரம்
ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரி மாணவர் பேரவை விழாவில் பேசும்போது கூறியது :-
மாணவர்களுக்கெல்லாம் ஒரு ஆறுதல்! எனக்கு மாலை அணிவிக்கிற நேரத்திலும் கைத்தறி ஆடைகளை அணிவிக்கிற நேரத்திலும் உலகத் தமிழ்நாடு போல நாங்கள் இந்த மாணவர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று சொன்னார்கள்.
ராமாயணத்தில் ஒரு கர்ண பரம்பரைக் கதை உண்டு. ராமர் சீதையைத் தேடி அலைந்து கொண்டிருந்த போது எங்கள் திருவாரூருக்குப் பக்கத்தில் வந்தாராம்.
அப்படி வந்த போது அவரை வணங்கி ஒரு குருவி எனக்கு ஒரு வரம் வேண்டும் என்று கேட்டதாம், என்ன வரம் வேண்டும் என்று ராமன் கேட்ட போது நான் ராமேஸ்வரத் திற்குச் செல்லலேண்டும் என்று அந்தக் குருவி வரம் கேட்டதாம்.
குருவியினுடைய சிறகுகள் மிகச் சிறியது. ராமேசுவரமோ தொலைவில் இருக்கின்ற ஊர் அவ்வளவு தூரம் உன்னால் பறந்து செல்ல முடியாது. எனவே குருவியே உனக்காக இங்கேயே ஒரு ராமேசுவரத்தை உண்டாக்குகிறேன் என்று தன்னுடைய அம்பின் முனையால் அங்கே ஒரு கோடு போட்டு ஒரு சிறிய குளத்தை உண்டாக்கி இதில் குளித்தால் உனக்கு புண்ணியம் கிடைக்கும் என்றாராம்.
குருவியும் ராமனுடைய பேச்சைச் கேட்டு அவனுடைய அம்பால் வரையப்பட்ட அந்தக் குளத்தில் குளித்துப் புண்ணியம் பெற்றதாகக் கதை. இப்பொழுதும் அந்த ஊருக்குக் குருவி ராமேசுவரம் என்று பெயர்.
அதைப் போலத்தான் ராமேசுவரம் போகமுடியாத எனக்கு நீங்கள் இங்கேயே ஒரு ராமேசுவரத்தைக் காட்டி, உலகத்தமிழ் மாநாட்டுக்குச் செல்ல முடியாவிட்டாலும் அங்கே நான் செல்வதற்கேற்ற தன்மான உணர்வுகள் அடைக்கப்பட்டது என்ற காரணத்தினால் குருவிக்கு ராமேசு வரத்தை ராமன் உருவாக்கித் தந்ததைப்போல் உனக்கும் ஓர் உலகத் தமிழ்நாட்டை இங்கே உருவாக்கி இருக்கிறோம் என்று உங்களுடைய பாசம் பொழிகின்ற இதயத்தின் சார்பாக இதை உலகத் தமிழ் மாநாடு என்று நீங்கள் சொன்னீர்கள்.
ஒவ்வொருவருடைய உள்ளமும் ஒரு உலகம்தான். ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் ஒரு உலகம் இருக்கிறது.
சாமியாரும் பூக்காரியும்
ஒரு சாமியார் கோயில்பக்கமாகச் செல்லும்போதெல்லாம் அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண் அந்தச் சாமியாரைப் பார்த்து “என்ன சாமியாரே ? எப்போது கல்யாணம்?” என்று கேட்டுக் கொண்டிருப்பாள். முதல்நாள் அவள் அப்படிக் கேட்டபோது சாமியார் முறைத்துவிட்டுப் போய்விட்டாராம் இரண்டாவது நாள் அந்தப் பூக்காரி அதே கேள்வியைக் கேட்டபோது சாமியார் கொஞ்சம் கனி வாகப் பார்த்துவிட்டுப் போனார். மூன்ருவது நாள் அவள் கேட்டபோது சாமியார் கடைக்கண்ணால் பார்த்துவிட்டுப் போனார்.
நான்காவது நாள் “இப்போதே நான் தயார் கல்யாணத்திற்கு ! வா? இதோ தாலி!” என்று சொன்னார். அவள் கேட்டதும் சாமியார்
அதைப்போல. யார் முதலமைச்சர்? யார் முதலமைச்சர் என்று கேட்டார்கள். அது நான்;தான் முதலமைச்சர் என்று பதில் சொல்ல வேண்டிய நிலைமையை உருவாக்கியது. எனவே அந்த அவசியத்தை உருவாக்கியது எம்.ஜி.ஆர்தான் (இது 1980 சட்டமன்ற தேர்தலின்போது கூறிய கதை)
ஹஜரத் அலியும் யூதனும்
ஒருமுறை நபிகள் நாதரின் (ஸல்) மருமகனும்ஒன்றுவிட்ட சகோதாரும், வாரிசுமான ஹஜரத் அலி (ரலி ) அவர்கள் முன் ஒரு மைந்தன் இஸ்லாத்தையும் இறைவனையும், மார்க்கத்தையும் நிந்தித்துப் பேசினான். உடனே அலி (ரலி) அவர்கள் பாய்ந்து அவனைக் கீழே தள்ளி நெஞ்சின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். யூதனுக்கு தான் கொல்லப்படுவோம் என்ற பயம் ஏற்பட்டு விட்டது. தப்பிப்போம் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாமல் அலி (ரலி) அவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்தான்.
அடுப்பிலேற்றப்பட்ட பால் நிறைந்த ஒரு பாத்திரம் கொதிப்பேற்பட்டுப் பொங்கும்போது சிறிது குளிர்ந்த நீரை அதன்மீது தெளித்தவுடன் எப்படி அடங்கி விடுகிறது என்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்நிலை போன்றே அந்த யூதன் துப்பியதும் ஆச்சரியகரமாக அலி (ரலி ) யின் கடுஞ்சினம் தணிந்து விட்டது. யூதனை ஒன்றுஞ் செய்யாது விட்டுவிட்டு அகன்று சென்றுவிட்டார். இந்த எதிர்பாராத திருப்பத்தைக் கண்டு வியப்படைந்த அந்த யூதன் அலி (ரலி) யின் பின்னால் ஓடோடியும் சென்று அவரைப் பிடித்து நிறுத்தி “நீங்கள் கொண்டபோக்கு மிக்க விந்தையாயுள்ளதே நான் கூறிய ஒரு வார்த்தைக்காக என்னைக் கீழேதள்ளிக் கொல்லவும் எத்தனித்தீர்கள். நான் நம்பிக்கை இழந்த நிலையில் உம் முகத்தில் துப்பியபோது என்னை ஒன்றுஞ் செய்யாதுவிட்டு அப்பால் சென்றீர்களே. ஏன்?” வினவினான். என
“நீ எங்கள் இறைவனை நிந்தித்தாய் அதன் காரணமாக உன்னைக் கொல்ல நினைத்தேன். ஆனால் என்மீது நீ துப்பிய போது என் சொந்த விஷயத்துக்காகவே நான் கோபங் கொள்வதாகிறது தனிப்பட்ட துவேஷத்தைப் பொதுநலத் தொண்டோடு பொருத்துதல் முறையல்ல. அல்லாஹ்வுக்காக நான் உயிர் கொல்லலாமேதவிர அலிக்காக நான்கொலையாளி யாக மாறக் கூடாது” என்று பதிலளித்தார். கனவான்களே நாங்கள் இருவரும் (சவுக்கத் அலியும், முகம்மதலியும்) அந்தக் கண்ணியத்துக்குரிய அலி என்னும் நாமத்தைக் கொண்டிருக் கிறோம். என்று அந்த அலி அவர்களோடு தங்களை ஒப்பிட்டுக் காட்டிக் கொண்டு எங்களுடைய கொள்கை இகழப்பட்டால் நாங்கள் நெஞ்சில் ஏற்றிருக்கிற தத்துவம் இகழப்பட்டால் எதற்கும் கூடத் துணிந்து விடுவோம். ஆனால் தனிப்பட்ட முறையில் முகத்தில் காறித் துப்பினால் கூட அவன் இகழ்ந்தது கொள்கையை அல்ல; மார்க்கத்தை அல்ல; இறைவனை அல்ல தனிப்பட்ட என்னை இகழ்ந்தான் ஆகவே காறித்துப்பினாலும் பரவாயில்லை என்று அன்று அலி சகோதரர்கள் சொன்னார்கள்
அதைத்தான் எங்கள் அண்ணன் ‘மறப்போம், மன்னிப் போம்’ என்று கூறியதை இப்போது எங்கள் மீது காறித் துப்புகிறவர்களைப் பார்க்கும்போது எண்ணிக் கொள்கிறேன்.
புகழேந்திப் புலவர் கதை
நண்பர் தர்மலிங்கம் அவர்களுடைய இளைய மகள் செல்வி தேன்மொழியும் திரு. துரைசாமி அவர்களுடைய இரண்டாவது செல்வன் புகழேந்தி நம் அனைவருடைய முன்னிலையில் வாழ்க்கைத் துணைவர்களாக இல்வாழ்விலே இன்று அடியெடுத்து வைக்கிறார்கள்.
தேன் என்ற சொல்லையும், புகழேந்தி என்ற பெய ரையும் நான் நினைவிற்குக் கொண்டு வந்தபோது புகழேந்திப் புலவருடைய கதை கூட என்னுடைய ஞாபகத்திற்கு வந்தது. புலவர் புகழேந்தி அரசருடைய முன்னிலையில் ஓர் அழகான பாடலைப் பாடினார்.
“மல்லிகையாம் வெண்சங்கு வண்டு ஊத” என்ற ஒரு பாடலைப் பாடி – அந்தப் பாடலை மன்னர் பாராட்ட அவையில் இருந்த அத்தனைபேரும் புகழ்ந்துரைக்க “மல்லிகையின் வெண் சங்கு வண்டூத” என்ற அந்தஅழகான சொற்றொடரை அனைவரும் சுவைத்து மகிழ்ந்த போது அங்கே ஒட்டக்கூத்தர் என்ற புலவர் “நான் அந்த பாடலை மறுக்கிறேன். இது குற்றம் வாய்ந்தது. பொருள் குற்றம் கொண்டது” என்று குறிப்பிட்டார்.
எப்படி என்று மன்னர் கேட்டபோது “மல்லிகை மலரை வெண் சங்காகக் கொண்டு வண்டு ஊதுகிறது” என்று புகழேந்தி சொல்கிறார். ஆனால் நான் கேட்கிறேன் சங்கை ஊதுவதென்றால் சங்கின் பின்புறத்தில் இருந்துதான்ஊத வேண்டும். வண்டு மல்லிகை மலரின் முன்புறத்தில் அல்லவா அமர்கிறது எப்படிப் பொருந்தும்” என்று ஒட்டக்கூத்தர் கேட்டவுடன் புகழேந்தி பதில் சொன்னார்.”இந்த வண்டு தேன் உண்ட மயக்கத்தில் முன்புறம் எது பின்புறம் எது என்று தெரியாமல் ஊதுகிறது” என்று சொன்னார்.
எனவே, அப்படி இங்கேமணமகன் புகழேந்தியும் ‘தேன்’ அருந்தும் மயக்கத்தில் அமர்ந்து இருக்கிறார். அவர்களை நான் வாழ்த்தி தர்மலிங்கம் அவர்களுடைய இல்லத்தில் நடை பெறுகின்ற விழாவில் நான் கலந்து கொள்வது என்பது ஒன்றும் வியப்புற்குரியது அல்ல.
நம்முடைய குடும்பத்து நிகழ்ச்சியில் நீண்ட நேரம் பேசா விட்டால் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்ற உணர் வோடு மணமக்களை வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
மன மாற்றம்
ஒரு கொடையாளி அவனுடைய துணைவி இருவரும் ஒர் ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். யாருக்காவது கொடை வழங்க வேண்டும் என்பது அவர்களது எண்ணம்.
எதிரேயிருந்து அந்த ஒற்றையடிப் பாதையிலே ஒருவன் வேகமாக நடந்து வருகிறான்.
கொடையாளியிடம், அவன் துணைவி சொல்லுகிறாள். ‘அதோ வருகிறானே அவனுக்கு இந்த நன்கொடையைத் தரலாமே ‘ என்று கையிலிருந்த பண முடிப்பைக் கணவனிடம் தருகிறாள்.
கணவன் அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு ‘ஓ! அவனா ! அவன் அடிக்கடி மனம் மாறுபவன் ஆயிற்றே! அவன் இதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கொடுத்தால் பெற்றுக் கொள்ள அவன் தவறிவிடுவானே!” என்கிறான்கொடையாளி. அதையும்தான் பார்ப்போமே என்கிறாள் மனைவி.
‘சரி, பார்’ என்று சொல்லிவிட்டு அந்தப் பணமுடிப்பை பாதையில் வைத்துவிட்டு ‘நாம் இருவரும் இந்த மரத்திற்குப் பின்னால் மறைந்திருப்போம்; வருகிறவன் இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு போகிறானா பார்ப்போம்! அவனுக்கு இப் பொருள் கிடைத்தால் அது அவனுக்கேற்பட்ட நல்வாய்ப்பு என்று கருதுவோம்! மகிழ்வோம்!” என்று இருவரும் ஒளிந்து கொள்கிறார்கள்.
ஒற்றையடிப் பாதையிலே அந்தப் பணமுடிப்பு வைக்கப் படுகிறது.
அவன் வேகமாக வருகிறான். வரும்போதே அவனுக்கு ஒரு மனமாற்றம்.
என்ன மனமாற்றம் தெரியுமா? நாம் இந்த ஒற்றையடிப் பாதையிலே கண்களைத் திறந்து கொண்டு இவ்வளவு வேக மாகச் செல்லுகிறாமே கொஞ்ச தூரம் கண்ணை மூடிக்கொண்டு செல்லமுடியுமா? பார்ப்போம் என்று கண்ணை மூடிக்கொண்டு செல்லுகிறான்.
அவ்வாறு அவன் கண்ணைமூடிக் கொண்டு செல்லுகிற இடம் அந்தப் பணப்பை கிடக்கிற இடம். அதைக் கடந்து சென்று விடுகிறான்.
அவன் சென்றபிறகு அந்தக் கொடையாளி தன்னுடைய மனைவியிடம், பார்த்தாயா! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது என்பார்கள். இவனைப் பொறுத்தவரை அது எவ்வளவு சரியாக இருக்கிறதுபார். அவன் மனதை மாற்றிக் கொண்ட காரணத்தால் அவனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போயிற்று” என்று சொல்கிறான்.
இதைப் போலத்தான் கொண்டது. மனம் மாறுகிற இயல்பு
தமிழக மக்கள் மற்ற நேரங்களில் விழிப்பாக இருக் கின்றனர். தேர்தல் வரும்போது மனம் மாறி அயர்ந்து விடுகின்றனர்.
குறிக்கோள்
எனக்குப் பிடித்தமான கருத்தல்ல கதையம்சம்கொண்ட பாரதத்திலே இருந்து ஒரு உதாரணம்,
அர்ச்சுனன் புகழ்பெற்ற வில்வீரன். அவன் காண்டீபன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது மிக இளமைக் காலத்தில். அந்தப் புகழைப் பெற்றது அவன் துரோணரிடத்தில் மாணவராக இருந்த போதுதான். துரோணரிடத்தில் மாணவ வராக பாண்டவர்களும் கௌரவர்களும் இருந்தபோது அவர்களது பயிற்சி முடிந்து ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்காக சோதனை செய்து பார்ப்பதற்காக துரோணர் பாண்டவர் களையும் கௌரவர்களையும் அழைத்து ஒரு பெரிய மரத்தைக் காட்டி அந்த மரத்தில் அமர்ந்திருந்த கிளியைக் காட்டி ஒவ்வொருவரையும் வில்லை வளைக்கச் சொன்னார்.
வில்லை வளைத்துநின்ற துரியனைப் பார்த்து. என்ன தெரிகிறது’ என்றுகேட்க மரம்தெரிகிறது-இலைதெரிகிறது-என்று வர்ணித்துக் கொண்டு செல்ல நீ வேண்டாம் என்று கூறிவிட்டு எல்லா வீரர்களையும் பார்த்துக் கேட்க ஒவ்வொருவரும் மரம் தெரிகிறது -இலை தெரிகிறது கிளை தெரிகிறது என்று கூற அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு இறுதியாக அர்ச்சுனனை அழைத்து “நீ பார்! என்ன தெரிகிறது ‘ என்று கேட்க அர்ச்சுனன் சொன்னானாம் “என்னுடைய வில்லில் பூட்டப்பட்டிருக்கின்ற அம்பின் முனையும், மரக்கிளையிலே அமர்ந்திருக்கின்ற கிளியின் கழுத்தும் தான் தெரிகிறது” என்று சொன்னானாம். உடனே அம்பை எய்தான். கிளியின் கழுத்து கீழே விழுந்தது.
எனவே குறிக்கோள் என்று ஒன்று இருக்குமேயானால் அந்தக் குறிக்கோளின் மேல்தான் முழுக்கவனமும் இருக்க வேண்டுமே அல்லாமல் அக்கம்பக்கம் கவனம் செல்லக்கூடாது என்பதற்கு எடுத்துக் காட்டாகவும், அந்த எடுத்துக்காட்டிலே வெற்றி பெற்றவனாகவும் விளங்கினான் அர்ச்சுனன் என்றால் இளம்பிராயத்திலேதான் ! கொஞ்சம் வாலிபனான பிறகு அக்கம் பக்கம் திரும்பினான் எந்தெந்தப் பக்கம் என்றெல்லாம் உங்களுக்குத் தெரியும். நான் அந்த அல்லி, பவளக்கொடி கதைக்கெல்லாம் செல்ல விரும்பவில்லை. ஆனாலுல் இளமைக் காலத்திலே அர்ச்சுனன் புரிந்த அற்புதங்களைக்காட்டத்தான் இதை சொன்னேன்,
பாலும் தண்ணீரும்
அன்பில், என்றைக்கோ, நான் வேடிகையாகச் சொன்ன வார்த்தையை வைத்துக் கொண்டு “நீ என்னய்யா சர்வ கட்சித்தலைவன்” என்று நான் கூறி யதை வைத்துக் கொண்டு இங்கே வந்திருக்கிற சர்வ கட்சித் தலைவர்களும் ஆதரிப்பது போதாது என்று எம்-ஜி.ஆர் கட்சியும் தன்னை ஆதரிக்கும். இந்திரா காங்கிரஸ் கட்சியும் தன்னை ஆதரிக்கும் என்று கூறினார்.
எல்லோரும் என்னை ஆதரிப்பார்கள் என்று அவர் சொன்ன கருத்துக்கு, ‘நான் இனிமேல் வேலையே செய்ய வேண்டியதில்லை” என்று பொருள் அல்ல 1 அவர் லால்குடிக்கோ, அன்பிலுக்கோ சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்ற அர்த்தமல்ல.
அன்பில் சொன்னதெல்லாம் எம்.ஜி.ஆர். கட்சி இந்திரா காங்கிரஸ் கட்சி அத்தனை கட்சிகளும் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று அவரும் நம்பி நாமும் நம்பினால் பழைய காலத்துக் கதை தான் நினைவுக்கு வருகிறது.
மன்னன் ஒருவன் ஊரிலே உள்ளவர்களெல்லாம் ஆளுக்கு ஒரு குடம் பால் கொண்டுவந்து கோட்டையில் கட்டியுள்ள தொட்டியில் ஊற்ற வேண்டும் என்று கட்டளை இட்டானாம்.
”ஒரு குடம் பாலுக்குப் பதில் ஒருகுடம் தண்ணீரைக் கொண்டு போய் ஊற்றினால் தெரியவா போகிறது ! எத்தனையோ பேர் பால் கொண்டு வந்து ஊற்றுவார்கள். அதிலே நாம் ஒருகுடம் தண்ணீரை ஊற்றினால் யார் கண்டு பிடிக்க முடியும்” என்று ஒவ்வொரு வீட்டுக்காரனும் எண்ணிக் கொண்டு அத்தனை பேரும் தண்ணீரைக் கொண்டுபோய் ஊற்றிவிட்டார்கள். கடைசியில் தொட்டியைத் திறந்துபார்த்த போது அதில் தண்ணீர்தான் இருந்ததே தவிர பால் இல்லை. அதைப்போல இங்கு வீற்றிருக்கிற அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நம்பாமல் எம். ஜி ஆர்.கட்சியும், இந்திரா காங்கிரஸ் கட்சியும் அவருக்கு வாக்களிக்கும் என்று அன்பில் நம்புவாரேயானால் இவர்களும் சேர்ந்து அத்தனைபேரும் விட்டுவிட்டுப் போய்விடுவார்கள் என்று அன்பிலை நான் எச்சரிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். எச்சரிக்கை அன்பிலுக்கு அல்ல! தஞ்சைத் தொகுதியில் திமுகழகத்-தினருக்காக பணியாற்றுகிற அருமைச் செயல் வீரர்கள் அனைவரையும் எச்சரிக்கவும்,கேட்டுக் கொள்ளவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஜெயத்தரதனின் வீழ்ச்சி
பாரதப் போர்க் களத்தில் அபிமன்யு வீழ்ந்து விடுகிறான். அபிமன்யுவை பின்னாலிருந்து கெளரவர்களின் தளபதிகளில் ஒருவனாக நின்று போரிட்ட ஜெயத்தரதன். அபிமன்யு சக்கர வியூகத்தைப் பிளந்துகொண்டு உள்ளே சென்று போரிடுகிற நேரத்தில் யாருமே அவனை வெல்ல முடியாது என்றிருந்த நேரத்தில் பின்னாலிருந்து கொன்று விடுகிறான்.
அபிமன்யு மாண்டான் என்ற செய்தி வேறு ஒரு போர்க் களத்தில் இருந்த அர்ச்சுனனுக்கு எட்டுகிறது அர்ச்சுனனின் தேரைச் செலுத்துபவர் கண்ணன். அன்றையப் போர்க் களத்தில் தன்னுடைய மகன் மாண்டான் என்ற அதிர்ச்சியான செய்தியால் தாக்குண்ட அர்ச்சுனன் என்னுடைய மகன் அபிமன்யுவைக் கொன்றவனை இன்று மாலை சூரியன் மறைவதற்குள்ளாக கொல்வேன்; அப்படி என்னால் கொல்ல முடியாவிட்டால் நெருப்புக் குண்டம்வளர்த்து அதிலேவிழுந்து செத்துவிடுவேன் என்று சபதம் செய்கிறான்.
கண்ணணும் அதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
பகல் பொழுதெல்லாம் பகைவன் ஜெயத்தரதனை அர்ச்சுனன் தேடித்தேடி அலைகிறான். அவன் கிடைக்கவில்லை ஜெயத்தரதனைக் கொண்டுபோய்- அவனை அர்ச்சுனன் கண்டால்தானே கொல்லுவான் என்று ஒளிய வைத்து விடுகிறார்கள். தேடித்தேடி அலுத்துப் போகிறான் அர்ச்சுனன்.
மாலைப் பொழுதும் மங்க அரம்பிக்கிறது சூரியன் அஸ்தமித்து விடுகிறான். அர்ச்சுனன் தான்சபதம் செய்தவாறு நெருப்புக் குண்டத்தை வளர்த்து அதில் விழுவது என முடிவு -எடுத்து நெருப்புக் குண்டத்தைச் சுற்றி வருகிறான். இரண்டு முறை சுற்றி வந்து விட்டான்.
இதற்கிடையே அர்ச்சுனன் தீயில் விழுந்து சாகப் போகிறான் என்ற செய்தி கௌரவர்களுக்கு எட்டுகிறது.
ஜெயந்தரதனுக்கு ஒரு ஆசை! அர்ச்சுனன் தீயில் விழுந்து சாவதை ப் பார்க்கவேண்டும் அபிமன்யுவைக் கொன்றானே அந்த ஜெயத்தரனுக்கு அப்படிப்பட்ட விபரீத ஆசை ஏற்படுகிறது.
அவனை ஒரு யானையின் அம்பாரியில் உட்கார வைத்துக் கொண்டு வந்து ஒரு மலை முகட்டில் நிறுத்து கிறார்கள்.’அந்தக் கண்ணுக்கினிய காட்சியைப் பார்’ என்று நிறுத்துகிறார்கள்.
அவனும் அங்கே அமர்ந்து மூன்றாவது முறையாக அர்ச்சுனன் தீயை வலம் வந்து தீயில் விழப்போகும் காட்சி யைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அப்பொழுது அர்ச்சுனனுக்குப் பின்னாலே வந்து கொண்டிருந்த கண்ணன் கேட்கிறான்.
“பார்ந்தீபா உனக்கு கடைசியாக என்ன வேண்டும்?” அப்பொழுது அர்ச்சுனன் :-
‘பரமாத்மா எனக்கு வேறெதுவும் தேவையில்லை. கொஞ்சநேரம் சூரிய வெளிச்சம் வேண்டும்” என்கிறான்.
அப்பொழுது கண்ணன் சொல்கிறான். உண்மையிலேயே சூரியன் மறையவில்லை அப்பா ! அதை என் சக்கராயுதத்தால் மறைத்து வைத்திருக்கிறேன் ஏமாந்து போய் ஜெயத்தரதன் எங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறான் இதோ பார் சக்கராயுதத்தை எடுக்கிறேன் சூரியன் தெரிவான்’ என்று சொல்கிறான் சக்கரத்தைக் கண்ணன் அகற்றியதும் சூரியன் ஒளிவிட அந்த சூரிய ஒளிபட்ட அதேகணத்தில் அர்ச்சுனன் தன்னுடைய வில்லிலிருந்து நாணை ஏற்றி அம்பை விடுத்து ஜெயத்தரதனின் தலையை வீழ்த்துகிறான் இப்படிப் பாரதப் போரில் அந்த காட்சி முடிகிறது.
அதைப் போலத்தான் சட்டமன்றத்திலே தி.மு கழகம் தோற்றுவிட்டது; அபிமன்யு மாண்டு விட்டதைப் போல! எம். ஜி. ஆர் தி.மு.கழகம் தொடர்ந்து தோல்வியைப் பெற்று அது அழிந்து போகிற காட்சியைக் காணவேண்டும் என்று யானை மீது அம்பாரிகட்டி ஜெயத்தரதனைப் போல உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
நம்மிடத்திலே கண்ணனும் இல்லை; நம்முடைய அன்பு அண்ணனும் இல்லை. எனினும் தமிழ்நாட்டு மக்கள் சூரிய ஒளியை இரண்டு மூன்றாண்டுகாலம் ஒளித்து வைத்திருந் தார்கள் என்றாலும் இப்போது நம்மைப் பார்த்துச் சொல் கிறார்கள் உனக்கு ஒளிதானே தேவை.இதோ சூரியன் -அதோ ஜெயத்தரதன் என்று சொல்கிறார்கள்.
நாம் வில்லை எடுக்கிறோம்! அம்பை வில்லில் பூட்டுகிறோம். கணை பாய்கிறது ! தி. மு. கழகம் தீயிலே விழாத காட்சியை நாட்டு மக்கள் பார்க்கிறார்கள் !
நிச்சயமாக தீயிலே தி.மு. கழகமோ – தோழமைக் கட்சிகளோ விழாது.
சர்வாதிகார சக்திகள்தான் – தொழிலாளர் விரோத சக்திகள்தான் இந்த உணர்வுகள்தான் தீயிலே விழும்; கழகமோ கழகத்தை ஆதரிக்கும் தோழமை கட்சிகளோ அந்தத் தீக்கு இரையாகாது!
தென்னாலிராமன் கதை
எம்.ஜி.ஆர். முதலமைச்சராகப் பதவி ஏற்றதை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டசபையில் கேட் டேன்; கழக ஆட்சியில் தரப்பட்டதைப் போல போனஸ், போக்குவரத்துச் செலவுக்கான 15 ரூபாய் விவசாயிகளுக்குத் தரப்படுமா ? என்று கேட்டேன். நீங்கள் கொடுத்ததைவிட அதிகமாகத்தான் தரப்படும் என்றார்.
அப்படி சொல்லி இரண்டு ஆண்டு காலமாகிறது. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் தரப்படாமல் இப்போது 20ரூபாய் அதிகம் கொள்முதல் நிலையம், அரசு வாங்கிக் கொள்ள ஏற் பாடு என்கிறார்.
போனவாரம் எட்மண்ட் சொல்லியிருக்கிறார் நெல்லை அர சாங்கம் வழங்க வழியில்லை. அப்படி வாங்குவதற்கு எங்களிடம் பணம் இல்லை என்று கூறி இருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர். இன்று ‘நெல்லை வாங்கிக் கொள்வேன்’ என்று சொல்லியிருக் கிறார். இது எப்படி இருக்கிறது என்றாள், தெனாலிராமன் கதையைப் போல இருக்கிறது.
தெனாலிராமன் ஒரு நாள் மன்னரைச் சந்தித்தான். “தெனாலிராமா, நம்முடைய அரண்மனைக்குப் பக்கத்தில் இருக்கிற மாளிகையில் அழகான ஓவியங்களைத் தயார் செய்ய வேண்டும். அதைப் பார்த்து நான் மகிழவேண்டும்” என்றார் மன்னர்.
“இதென்ன மன்னா பெரியகாரியம்? நானே ஓவியங்களைத் தீட்டுகிறேன் பத்தாயிரம் பொன் கொடுங்கள்’ என்கிறான்
மன்னனும் பத்தாயிரம் பொன் கொடுக்கிறான். ஆறுமாத காலத்தில் ஓவியம் தயாராகி விடும் என்று தெனாலிராமன் சொல்கிறான்.
பத்தாயிரம் பொன் வாங்கிக் கொண்டுபோனவன் திரும்பி வரவில்லை. ஆறுமாதங்கள் கழித்துத் திரும்பி வருகிறான் மன்னனிடம்.
”ஓவியம் தயாரா? பார்க்கலாமா?” என்று மன்னன் கேட்கிறான் . ‘பார்க்கலாம்’ என்று தெனாலிராமன் சொல் கிறான் அதுவரையில் எந்த ஓவியமும் எழுதப்படவில்லை.
‘மறுநாள் காலை ஓவியங்களைப் பார்க்கவருகிறேன்’ என்கிறான் மன்னன். எப்படி மன்னனைத் திருப்திபடுத்துவது என்று தெனாலிராமன் யோசிக்கிறான். ஒரு சட்டியில் சாணத் தைக் கரைத்து, துடைப்பத்தால் தோய்த்து எடுத்து மாளிகையினுடைய வெள்ளைச் சுவர்களில் பல இடங்களில் கோடு களாகக் கிழித்துக் கொண்டே போனான்.
காலையில் மன்னன் வருகிறான். மன்னனை அழைத்துச் செல்கிறான் தென்னாலிராமன். ஓவியங்களைக் காணவில்லை. சாணத்தால் போடப்பட்ட பெரிய கோடுகள் தான் இருக் கின்றன. ‘இவைகள் எல்லாம் என்ன’ என்று மன்னன் ஆத்திரத்தோடு கேட்கிறான்.
தெனாலிராமன் ‘இவைகள் எல்லாம் குதிரையின் வால்கள்’ என்று சொல்கிறான். ‘குதிரைகள் எங்கே’ என்று மன்னன் கேட்கிறான். சுவருக்கு அப்பாலே இருக்கின்றன என்று தெனாலிராமன் கூறுகிறான்.
அதைப்போல மன்னனுக்கு தெனாலிராமன் குதிரை வாலைக் காட்டியதைப்போல விவசாய பெ ருமக்களுக்கு எம்.ஜி.ஆர்.20 ரூபாய் அதிகவிலை என்று காட்டுகிறார். நாளைய தினம் ‘குதிரைகள் எங்கே’ என்று கேட்டால் ‘சுவருக்கு பின்னால் இருக்கிறது’ என்று தெனாலிராமன் சொன்னானே அதைப்போல ‘கொள்முதல் நிலையம் எங்கே. என்று கேட்டால், ‘தேர்தலுக்குப் பின்னால் வரும்’ என்றுதான் சொல்வார்.
சுவருக்குப் பின்னால் இருக்கும் குதிரைகளைப் போல தேர்தலுக்குப் பின்னால் அது வரப்போவதில்லை.
வல்வில் ஓரி
கொள்ளிமலை வள்ளல் ஓரிக்குப் பெயர் ‘ வல்வில் ஓரி’ அவன் வில்லில் அப்படி வல்லமை படைத்தவன்.
எப்படிப்பட்ட வல்லமை படைத்தவன் என்றால் இவன் வில்லிலே இருந்து நாணேற்றி ஒரு கணையை எய்வானே யானால் அந்தக் கணை யானையைத் துளைக்கும்; யானையைத் துளைத்துவிட்டு அந்த யானையின் உடலிலே இருந்து வெளியேறி வேங்கையின் மீது பாயும்; வேங்கையை வீழ்த்தி விட்டு அதன் உடலிலே இருந்து வெளியேறி மான் மீது தாக்கும். பிறகு மான் உடலிலே இருந்து வெளியேறி கீழே இருக்கின்ற பன்றியைக் கொல்லும், பன்றியின் உடலிலே இருந்து வெளியேறி தரையில் ஓடிக்கொண்டிருக்கின்ற உடும்பைக் கொல்லும்.
-ஒரு சந்தேகம் தோன்றலாம்.அம்பு எய்யும் போது-அது செல்லும் போது யானையின் உயரம் என்ன ? யானையைத் தாக்கிய பிறகு அந்த அம்பு எப்படி யானையைவிட குறைந்த உயரம் உள்ள வேங்கையைச் சென்று தாக்க இயலும்?பிறகு வேங்கையின் உயரத்தை விடக் குறைந்த உயரமுள்ள மான்மீது எப்படி அந்த அம்பு பாயமுடியும்? பின் மானைவிடக் குள்ளமான பன்றியின்மீதும், தரையோடு கிடக்கும் உடும்பின் மீதும் பாயமுடியும்?
மலை உச்சியின் மீது இருந்து மன்னன் அம்பை எய்கிறான். மலைச் சரிவில் உள்ள யானை, வேங்கை, மான், பன்றி, உடும்பு என்று படிப்படியாக அம்பு பாய்ந்து செல்கிறது.
இந்தியாவில் நெருக்கடிநிலை அமலில் இருந்த காலத்தில் இந்தக் கதையைச் சொல்லி விளக்கினேன்.
நெருக்கடியினால் மதயானை கொல்லப்படுகிறது என்றால் பரவாயில்லை. பாயும் வேங்கை கொல்லப்படுகிறது என்றால் பரவாயில்லை. துள்ளிஓடும் புள்ளிமானும், ஏதும் அறியாத உடும்பும் செத்திட வேண்டுமா என்று கேட்டேன். எதை ஒப்பிட்டுக் கேட்டேன் என்பதை விவரிக்கவேண்டியதில்லை என்று கருதுகிறேன்.
யசோதர காவியம்
எரிசாராய ஊழல் தொடர்பாக நியமிக்கப்பட்ட என் ராமமூர்த்தி கமிஷன்முன் முன்னால் எ. ஜி. ஆர். மாணிக்கம் ஒரு வாக்குமூலம் கெடுத்தார், அதில் அவருடைய உறவினர்கள் இரண்டு பேர் சாராயக் கலவைத் தொழிற்சாலை வைப்பதற்காக எம். ஜி. ஆரிடமும், எம்.ஜி.ஆர். அண்ணனி மும் எம். ஜி. ஆர். அண்ணன் புதல்வர்களிடமும், பொது வாக எம். ஜி. ஆர் குடும்பத்திடமும் ஏறத்தாழ 11 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு அந்தத் தொழிற்சாலை உரிமம் கிடைக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சட்டசபையில் இதைப் பற்றி முதல்வரின் பதில் என்ன என்று எதிர்கட்சித் தலைவர்கள் கேட்டார்கள். முதல்வர் தான் பதில் அளிக்காமல் ஒரு விளக்கத்தை எழுதி அவை முன்னவர் நாவலர் மூலம் அதைப் படிக்க வைத்தார். “இந்த அறிக்கை யின்மீது இந்த விளக்கத்தின் மீது – ஒரு நாள் விவாதம் வேண்டும்’ என்று கேட்டோம்.
நாவலர் சரி என்று ஒப்புக்கொண்டார்; அவைத் தலைவர் ராஜாராமும் மின்துறை அமைச்சர் ராமச்சந்திரனும் ஒப்புக் கொண்டனர்.
இவ்வளவுக்கும் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அமைச்சர்களும் அவைத்தலைவரும் சட்டம் புரியாமல் பதில் சொல்லிவிட்டார்கள். அவர்கள் அளித்த உறுதிமொழி என்னைக் கட்டுப்படுத்தாது. அவர்கள் சொன்னது தவறு என்று கூறிவிட்டார்.
நாவலர், ராஜாராம், பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த மூன்று பேரும் திராவிட முன்னேற்றக்கழக அமைச்சர்களாக இருந்தவர்கள்.
நாம் எவ்வளவு அருமையாக, மரியாதையாக வைத்திருந் தோம்.அவர்களுக்கு இப்படிப்பட்ட கதி ஏற்பட வேண்டுமா என்று உள்ளபடியே வருத்தப்பட்டேன்.
எனக்கு வேறு யாராகவாவது இருந்தால் உடனே பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருப்பார்கள். அப்பொழுது நான் முன்பெல்லாம் சொல்லிப் பழக்கப்பட்டஒரு கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
‘யசோதர காவியம்’ என்று ஒரு வடபுலத்துக் காவியம்.
யசோதரன் என்பவன் அவந்தி என்ற ஒரு நாட்டை ஆண்டு கொண்டிருந்த ஒருஅரசன். அவனுடைய மனைவிக்குப் பெயர் அமிர்தவள்ளி அவன் அந்த மன்னனோடு மாளிகை வாசத்தை அனுபவித்தாள். மன்னனோடு இருந்தாலும், மாளிகை வாசம் கிடைத்தாலும்தர்பார் மண்டபம்-தான் இட்ட கட்டளையை நிறைவேற்ற தாதியர் பட்டாளம் – இவைகளெல் லாம் இருந்தாலும் கூட அந்த மகாராணிக்கு அந்த அரண் மனையில் உள்ள ஒரு சொறிபிடித்த கூனல் விழுந்த- பாதிக் குருடனான – நோஞ்சானான ஒருயானைப்பாகன் மீதுதான்காதல் இந்தயானைப் பாகனுக்காக இரவெல்லாம் காத்திருப்பாள் அவன் தாமதமாக வருவான் வந்தவுடன் கையிலே இருக்கிற சவுக்கால் இந்த மகாராணியைப் பத்து அடி அடிப்பான். அதை அவள் பொறுத்துக் கொள்வாள். அதற்குப் பிறகு இரு வரும் சோலையிலே அணைத்து மகிழ்வார்கள். அதிலே மகா ராணிக்கு ஒரு சுகம்.
என்னதான் மகாராஜா அன்பாக ஆதரவாக அரண்மனை யிலே வைத்து பன்னீர்துளி, பழரச பானம் என்று தந்தாலும் கூட இவைகள் எல்லாம் அந்த மகாராணிக்குப் பிடிப்பதில்லை. யானைப்பாகன் பத்து அடி அடித்து ‘ஏண்டி நேரங்கழித்து வந் தாய்’ என்று கேட்டு பிறகு அணைத்து தருகிறானே சுகம் அதிலே அவளுக்கு இன்பம்.
அதைப் போலத்தான் இவர்கள் எல்லாம் இங்கே மகாராஜாவிடத்திலே மாளிகையிலே இருந்த நேரத்தில் இருந்த சுகம் போதாமல், எப்படி யானைப்பாகன் தரும் சுகம் தான் சுகம் என்று அரசி க ருதினாளோ, அதைப் போல எம்.ஜி.ஆர்.தருவதுதான் சுகம் -அதற்கு மிஞ்சிய சுகம் கிடையாது என்கிற அளவிற்கு தங்களை அமிர்தவள்ளியாகஆக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிற நேரத்தில் நான் மெத்தவும் வேதனைப்படுகிறேன்.
காடு சென்ற குமணன்
நுகர்பொருள் வாணிப நிறுவன ஊழியர்களாகி உங்கள் கீர்த்தி மிக்க சங்கத்தினுடைய மாநில மாநாட்டை சீரும் சிறப்புமாக நடத்தி 29 கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள்.
உங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால் முப்பதாவது கோரிக்கை ஒன்றும் அதாவது இருக்கின்ற ஆட்சி மாறி கருணாநிதி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இங்கு பேசிய நண்பர்கள் குறிப்பிட்டார்கள்.
கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற முதல்வராக நான் இல்லாவிட்டாலும் இந்தக் கோரிக்கைகளை எடுத்துச் சொல் வதில் முதல்வனாக இருப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.
நீங்கள் துணிக்சலாக 29 கோரிக்கைகளை வைத்து அதற் காகப் போராடக்கூடிய திண்தோளையும் பெற்றிருக்கின்றீர்கள் என்பதை எண்ணி நான் பெருமையடைகிறேன்.
என்னால் நிறைவேற்ற முடியாது-முடியவில்லை என்று வருத்தத்தோடு சொல்கிற நேரத்திலே எனக்கு குமணன் கதை தான் நினைவுக்கு வருகிறது.
குமணன் தன்னுடைய இளவலின் விருப்பத்திற்கேற்ப முடிதுறந்து காட்டில் வாழ்ந்து வந்தான். அப்படியும் நிறைவு கொள்ளாத அவன் தம்பி குமணன் உயிரோடு இருந்தால் தனக்குத் தொல்லை என்று கருதி அவன் தலைக்கு விலைவைத்து அறிவித்திருந்தான்.
இந்நிலையில் இவற்றை எல்லாம் அறியாத புலவர் ஒருவர் காட்டுக்கு வந்து குமணனைப் பாட அப்போது
”அந்தநாள் வந்திலை அருங்கவிப் புலவோய் இந்தநாள் வந்து நீ நொந்து எனை அடைத்தாய் தலைதனைக் கொண்டுபோய் தம்பிகைக் கொடுத்து விலைதனைப் பெற்றுஉன் வறுமைநோய் களையே!” என்று குமணன் சொன்னானே அதைப் போல சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
அந்த நாள் இல்லை என்றாலும், இந்த நாளும் அந்த நாளும் எனக்கு சமமான நாட்கள்தான் என்பதை நீங்கள் அறி வீர்கள்.
எனவே உங்களுக்காக எந்தவித தியாகத்திற்கும். உங் களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக எத்தகைய வகையிலே வாதாட வேண்டுமோ – போராட வேண்டுமோ அவற்றுக்கு நான் தயாராக இருப்பேன் – நான் சார்ந்திருக் கின்ற திமுகழகம் உங்களுக்குத் துணை நிற்கும் என்ற உறுதியை வழங்குகிறேன்.
அகத்திலேஅன்பு!
ஒரு அழகான பெண். அவளுக்கு ஈடான அழகு இந்த உலகத்தில் யாருமேஇல்லை; புராணிகர்கள் கூறுகின்ற அழகு! ஊர்வசி, ரம்பை, திலோத்தமை கூட இல்லை. அவ்வளவு அழகான பெண். அவள் ஒரு குளிர்புன ல் ஓடைக்குக் குளிக்கச் சென்றாள் அவள் குளித்து முடித்துவிட்டுக் கரை யேறுகின்ற நேரத்தில் மற்றொரு பெண் கைக் குழந்தையோடு கையில் குடத்துடன் வருகிறாள்.
வந்தவள் கைக் குழந்தையை ஒரு மேட்டினிலே உட்கார வைத்துவிட்டு ஓடையிலே குடத்தைத் துலக்கிக் கொண்டிருக் கிறாள்.
அந்த நேரத்திலே மேட்டிலே இருந்த குழந்தை தவழ்ந்து வந்து கீழே தண்ணீரில் விழக்கூடிய சூழ்நிலை.
இவள் ஓடி, குழந்தை விழாமல் தடுக்க முடியுமா என்றால் முடியாது ஏனென்றால் அவள் அவ்வளவு தொலைவில் இருக் கிறாள். எனவே அவள் அழகான அந்தப் பெண்ணைப் பார்த்து ‘ஓடிப்போய் குழந்தையைக் காப்பாற்று’ என்று சொல்லு கின்றாள்
ஆனால் அந்த அழகான பெண் அதை அலட்சியமாகப் பார்த்துவிட்டுப் போய்விடுகிறாள்.
தாய் ஓடி வருவதற்குள்ளாக குழந்தை தண்ணீருக்குள் விழுந்து விடுகின்றது. விழுந்தாலும் உடனடியாகப் போய்த் தூக்கிய காரணத்தால் குழந்தைக்கு உயிர் மூச்சு தரமுடிகிறது தாயால்.
அப்போது அந்த அழகான பெண்ணைப் பார்த்து அந்தத் தாய் சொல்லுகின்றாள்.
“புறத்துறுப் பெல்லர்ம் எவன் செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு”
இவ்வளவு அழகாக நீ இருந்து என்னடி! உன் அகத்தில் அன்பில்லையே என்று சொல்லுகின்றாள்.
தெனாலிராமன் பூனை
வாக்குரிமை ! 18 வயது நிரம்பியவர்களுக்கு தாய்மார்களுக்குத் தனி இடம் ! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஊராட்சி மன்றங்களில் தனி இடம் ஒதுக்கப்படும்!
இவ்வளவு இனிப்பான அறிவிப்புகள் ! இந்த மூன்று அறிவிப்புகளையும் எம். ஜி ஆர். செய்தாரே! அதையும் முறையாகச் செய்தாரா? ஒழுங்காகச் செய்தாரா? என்றால் இல்லை
யா ரா வ து தெரியாத காரணத்தாலா? அப்படி நான் நம்பவில்லை. தெரியும்! வேண்டுமென்றே முறைகேடாகச் செய்தார் ஏன் அப்படிச் செய்தாரென்றால் கோர்ட்டுக்குப் போவார்கள் ! கோர்ட் மூலம் தேர்தலுக்குத் தடை வரும். அப்பாடி என்று பெருமூச்சு விட்டு தேர்தலை நடத்தாமல் இருந்து விடலாம் என்று வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம்.
தெனாலிராமன் பூனை வளர்த்தான் என்று ஒரு கதை கேள்விப் பட்டிருக்கிறோம். அரசன் தெனாலி ராமனிடத்தில் ஓர் அழகான பூனைக்குட்டியைக் கொடுத்து அதைப் பெரிதாக வளர்த்து ஓராண்டு காலத்தில் தன்னிடத்திலே திருப்பித் தரவேண்டும் என்று சொல்லி பூனைக்குட்டியை வளர்ப்பதற்காக பொன் நாணயங்களையும் ஒப்படைத்துவிட்டு அரசன் காத்திருந்தான்.
தெனாலிராமன் முதல்நாள் என்ன செய்தான் தெரியுமா? பூனைக்குட்டியை வீட்டிற்குத் தூக்கிவந்து. அதற்குப் பால் வைத்தான்.எப்படிப்பட்ட பால் தெரியுமா நல்ல சூடான, தொட்டால் நாக்கு வெந்து சுருண்டு விழக்கூடிய கொதிப்பு ஏறிய பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து பூனைக்குட்டியின் முன்னால் வைத்தான்.பாலைக் கண்டதும் பூனைக்குட்டிக்கு அவ்வளவு ஆனந்தம். எப்படித் தாழ்த்தப்பட்டோருக்கு தனி இடம் என்றதும் தாழ்த்தப்பட்டோருக்கு ஆனந்தமோ ! தாய்மார்களுக்குத் தனி இடம் என்றதும் தாய்மார்களுக்கு ஆனந்தமோ? 8வயது இளைஞர்களுக்கொல்லாம் வாக்குரிமை என்றதும் இளைஞர்களுக்கு ஆனந்தமோ அதைப்போல இந்தப் பூனைக்குட்டிக்கு ஆனந்தம்.
ஆகா பால் என்று வாயைக் கொண்டுபோய் வைத்தது. வாய் வெந்து நாக்கு வெந்து பூனை ஓடி விட்டது. மறுநாள் அதே பூனைக் குட்டியைக் கொண்டுவந்து வைத்து நன்றாக ஆறிய பாலை வைத்தான்.
வருமா அது ! சூடுகண்ட பூனை, எனவே வரவில்லை. பாலைத் திரும்பியும் பாரேன் என்று ஓடிவிட்டது. பிறகு அந்தப் பூனைக்குட்டி பெரிதாக வளர்ந்தாலும் எலும்பும், தேலுமாக இருந்தது. கூட இளைத்து
அரசன் தெனாலிராமனை அழைத்தான். ‘வளர்க்கச் சொன்ன பூனைக்குட்டி எங்கே? கொண்டுவா’ என்றான். கொண்டுவந்நான். அது எலும்பும் தோலுமாக இருந்தது. என்னப்பா ஆயிரக்கணக்கான பொன் நாணயங்கள் கொடுத் தேன் இதை வளர்க்கச் சொல்லி ! பூனை இப்படி எலும்பும் தோலுமாக இருக்கிற தென்று கேட்டான் அதற்குத் தெனாலி ராமன் இந்தப் பூனைக்கு நான் தினம் தினம் பால் வைக் கிறேன். ஆனால் குடிப்பதே இல்லையென்று சொன்னான்,
பால் குடிக்காத பூனையா? இது என்னப்பா உலகத் திலேயே அதிசயமாக இருக்கிறதே என்று வியந்த அரசன் தன் மாளிகையிலேயே இருக்கிற பாலைக் கொண்டு வரச் சொல்லி பூனைக்கு நேராக வைக்கச் சென்னான்.
பாலைக் கண்டது தான் தாமதம் ! நாலுகால் பாய்ச்சலில் பூனை ஓடிற்று, சரிதான் தெனாலிராமன் சொல்வது உண்மை தான் என்று அரசன் நம்பினான்.
அதைப்போலத்தான் எப்படி சூடுகண்ட பூனை தெனாலி ராமனால் வளர்க்கப்பட்ட பூனை ஆறிய பாலைப் பார்த்ததும் ஓடியதோ அதைப்போல இந்த நாட்டு மக்களையெல்லாம் தாழ்த்தப்பட்டோருக்குத் தனி இடம். தாய்மார்களுக்குத் தனிஇடம் 18 வயது இளைஞர்களுக்கெல்லாம் வாக்குரிமை என்கின்ற பாலைக் காட்டி -ஆனால் சூடான பாலைக் காட்டி – ஏ! அப்பா எங்களுக்கு பாலே வேண்டாம் என்று சொல்லுகின்ற அளவுக்கு இந்தத் தேர்தலையே ஒரு வகையாக முடித்துக் காட்டிய பெருமை என்னுடைய அருமை நண்பர் தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி. ராமச்சந்திரனைத் தவிர வேறு யாருக்கும் கிட்ட முடியாது.
குழந்தையும் கீரியும்
நாங்கள் ஒரு காலத்திலே இந்த தமிழ்நாட்டு மக்களால்
தமிழ்நாட்டு அரியணையில் ஏற்றுவிக்கப்பட்டவர்கள்தான். ஒன்பதாண்டு காலம் அமைச்சர் பொறுப்பிலே இருந்தவர்கள் தான், ஏழாண்டுகாலம் முதலமைச்சராக இருந்தவன்தான். இன்றைக்கு அந்தப் பதவியில் நான் இல்லை என்பதற்காக உங்களை மறந்து விடத் தயாரில்லை. இடையில் உங்களுக்கு எங்கள்மீதுஏதோ ஒரு சந்தேகம்; அல்லது ஏதோஒரு கோபம். நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்ற தவறான கற்பனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
பால பாடத்திலே படித்ததுண்டு. ஒரு பார்ப்பணப் பெண் கீரி வளர்த்தால் என்று அந்தக் கீரியை தன்னுடைய குழந்தைக்குப் பாதுகாப்பாக விட்டுவிட்டு அவள் வெளிய பல்வேறு வேலைகளுக்காகச் செல்வாள்,
ஒருநாள் குழந்தையை தோட்டிலிலே படுக்க வைத்து விட்டு அந்தப் பார்ப்பன மாது கீரியைக் காவலுக்கு வைத்து விட்டு குடமெடுத்துக் குளத்திற்குச் சென்றாள் தண்ணீர் முகந்துவர. அவள் வருவதற்குள்ளாக தொட்டிலே மேலே இருந்து ஒரு பாம்பு கீழே இறங்கிவந்து அந்தக்குழந்தையைத் தீண்டுகிற கட்டம் வந்தது. அந்தக் கீரிப்பிள்ளை பார்த்து விட்டு உடனடியாகப் பாய்ந்து அந்தப் பாம்பைக் கொன்று குழந்தையைக் காப்பாற்றி, தான் அந்தக் குழந்தையைக் காப்பாற்றிய வெற்றிச்செய்தியைச் சொல்வதற்காக வெளியே ஓடி வந்தது.
பாம்பைக் கொன்ற காரணத்தால் கீரிப்பிள்ளையின் வாயெல்லாம் ரத்தமாக இருந்தது. குளத்திற்குச் சென்ற பெண்மணி வீட்டிற்குத் திரும்பி வந்தாள். வாசலிலிருந்து ஓடி வந்த கீரிப்பிள்ளையின் வாயைப் பார்த்தாள். அவளுக்குச் சந்தேகம். ஆகா! பாதுகாப்புக்காக வைத்த கீரிப்பிள்ளை நம்முடைய பச்சைக் குழந்தையை அல்லவா கொன்று விட்டது. அதுதான் வாயில் இரத்தம் என்று எண்ணினாள். அவசரப்பட்டாள் கையில் தண்ணீரோடு இருந்த குடத்தை கீரிப்பிள்ளையின் தலையிலே போட்டாள். கீரியைக் கொன்றாள்.
உள்ளே வந்து பார்த்தால். குழந்தை சிரித்துக் கொண்டு தொட்டிலில் படுத்திருக்கிறது. கீரியால் சுடிவுண்ட பாம்பு அங்கே கண்டம் துண்டமாகக் கிடக்கிறது.
அப்படித்தான் நீங்களும் கீரிப்பிள்ளையை அந்தப் பார்ப்பன மாது தவறாகப் புரிந்து கொண்டு கொன்று விட்ட தைப்போல திராவிட முன்னேற்றக் கழகத்தை கடந்த தேர்தலிலே தோற்கடித்தீர்கள்.
கொஞ்சம் உள்ளே வாருங்கள் தெரியும்! கிரிப்பிள்ளையின் வாயிலே ரத்தம் இருந்ததற்குக் காரணம் பச்சிளங் குழந்தையைக் கடித்த காரணமா ? என்பது உங்களுக்குப் புரியும்’ எனவே உள்ளே வாருங்கள் என்று அழைக்கின்றோம். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் புரிந்துகொள்ளுங்கள் என்று அழைக்கிறோம், திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய கொள்கைகளை உணர்ந்து கொள்ளுங்கள் என்று அழைக்கிறோம்.
(முற்றும்)