கயிற்றில் தொங்கிய கணபதி

இருபத்தி நான்கு வயது இளைஞன் – எழில்நிறை தமிழன், கணபதி கயிற்றிலே தொங்க நேரிட்டது, கதியற்றவராய் – காப்பாரற்ற நாதியற்றவராய்! ஏன்?
இதைப் படியுங்கள்.

DOWNLOAD :

(Available Formats)

“கயிற்றில் தொங்கிய கணபதி” என்பது கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் எழுதிய ஒரு சிறுகதை. இது 1949 ஆம் ஆண்டு “அறிவுப் பண்ணை” பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மலேசியாவில் கணபதி அநியாயமாக தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து எழுதப்பட்ட நாவல். இது தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புகிறது.

இது கலைஞர் கருணாநிதியின் ஆரம்ப காலப் படைப்புகளில் ஒன்று. அவரது எழுத்துப் பயணத்தில் ஒரு முக்கியமான அடியாக இது பார்க்கப்படுகிறது.

 

கயிற்றில் தொங்கிய கணபதி

பகவத்சிங்கை தூக்குமேடையிலே ஊஞ்சலாட்டி உவகைகொண்ட ஏகாதிபத்தியம் – திருப்பூர்க் குமரனை தடிகொண்டு தாக்கி தெருவெல்லாம் குருதியோடச்செய்து, அதை நக்கிக் குடித்து எக்காளமிட்ட ஏகாதிபத்தியம் – இதோ, இன்று மலேயா சர்க்கார் என்ற உருவிலே தன் சொர சொரப்பான ரத்த நாக்குகளால் கணபதியையும் ருசித்துப் பார்த்துவிட்டது. தூக்குமேடை எத்தனையோ மனிதர்களைத் தனக்கு உணவாக்கிக்கொண்டு உல்லாசம் பாடியபடிதான் இருக்கிறது. அதன் கோரப்பற்களுக் கிடையே சிக்கிச் சீரழிந்த மனித உருவங்கள் கணக்கிலடங்கா. குற்றவாளிகளின் குரல்வளையை நெறிப்பது மட்டுமல்ல, நிரபராதிகளின் வாழ்வை அரை நொடியில் தீர்த்துக்கட்டி, தன் வயிற்றைப் புடைக்கவைத்துக் கொண்டிருக்கிறது தூக்குமேடை! தூக்குமேடையிலே உரைந்திருக்கும் ரத்தத்திலே, எத்தனை உத்தமர்களின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? அங்கே அறுத்தெறியப்பட்ட நரம்புகள் ஒவ்வொன்றும் – ஒடித் தெறியப்பட்ட எலும்புகள் ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தால், எத்தனை நீதிபதிகளின் “நேர்மை” அம்பலத்திற்கு வரும்! குற்றவாளிக் கூண்டிலே மரண தண்டனை பெற்ற நிரபராதி – அவன்மேல் அபாண்டங்களைச் சுமத்தி, அவனை அழித்த ஆனந்தத்தில் வக்கீலோடு கைகுலுக்கும் வறண்ட நெஞ்சத்தினன் – தூக்கிலே தொங்கவேண்டியவன் தோகைமயிலாளின் மடியிலே!.. எதிர்க்கத் தெரியாத ஏழை சுருக்குக் கயிற்றின் அணைப்பிலே!…… இப்படியெல்லாம் பேசத்துவங்கும், அந்த நிரபராதிப் பிணங்கள்.

அவன் சீமான்.
அடுத்த வீட்டுக்காரனும் சீமான்தான்.
ஒருவன் லட்சாதிபதி.
மற்றவன் கோடீஸ்வரன்.

கோடீஸ்வரன் நினைக்கிறான், ‘லட்சாதிபதி கோடீஸ்வரனாய் வளர்ந்துவிட்டால் என்செய்வது? தன் பெருமை போய்விடுமே’ என்று! அல்லது லட்சாதிபதிக்கு கோடீஸ்வரனிடத்தில் பொறாமை. இந்த எண்ணம் வளருகிறது. முடிவு கொலையில் முடிகிறது. இருவரில் ஒருவன் தூக்குமேடைக்கு நடக்கிறான். கொலைச் செய்தி பத்திரிகையில் வந்ததும் ”கொடும்பாதகா ” என்று திட்டினவர்கள், கொலையாளி தூக்கில் தொங்கிவிட்டான் என்ற செய்தி கேட்டதும் சிறிது வருந்தத்தான் செய்கிறார்கள். ஏன்? முஸோலினி அழியமாட்டானா? அக்கிரமக்காரன்! என்றெல்லாம் ‘சாபம் தந்தவர்கள், அவன் கொல்லப்பட்டதும், ‘அடபாபமே!’ என்று சோகக்குரல் எழுப்பவில்லையா? குற்றவாளிகளுக்கேற்ற தண்டனைகள் நிறைவேறுகிற நேரத்திலேயே இந்த நிலை மக்களுக்கு என்றால், குற்றமற்றவன் – கொடுமையை நினைத்தும் பாராதவன் – கொஞ்சு மொழியினன் – நல் நெஞ்சினன், அநியாயமாகச் சாகப்போகிறான் என்று கேட்டால், அச்செய்தி காதிலே ஆயிரமாயிரம் மேகங்கள் சேர்ந்து முழக்கும் இடியொலியாகத்தானே விழும்?

கணபதி தூக்கிலிடப்படுவார்’ இச்செய்தி திராவிடத்தை – ஏன், உலகத்தையே எட்டிய நேரத்தில் திராவிடம் சோர்ந்து வீழ்ந்தது. அதே வேளையில் ஆறுதல் சிறிது தலைநீட்டியது, ‘சுதந்திர பூமியில் சுதந்திர வீரர்களாய் – சுதந்திரத் தலைவர்களைப் ‘பெற்றிருக்கிற நமக்கு ஏன் அச்சம்? நமக்கு ஏன் வீண் சஞ்சலம்? நமது சர்க்கார், நமது நாட்டு கணபதியை அநாதையாக மலேயாவில் மாளவிடாது என மனத்தைத் திடப்படுத்திக்கொண்டோம். அதுமட்டுமல்ல; காமன் வெல்த்தோடு ஏற்படும் உறவு, கணபதியைக் காப்பாற்றும் என நம்பி கண்ணீரைத் துடைத்துக்கொண்டோம். துடைத்த கையை எடுக்கவில்லை. தூக்குமேடை கணபதியைத் தின்று ஏப்பமிட்ட சப்தம் நமக்கு கேட்டுவிட்டது.
“அய்யோ கணபதீ! அருமைத் தமிழகத்தின் அன்புச்செல்வா! எப்படியடா உன் உயிர் நீங்கிற்று! உன்னைப் பெற்ற வயிறு பற்றி எரிகிறதடா!… ஆபத்து உன்னை அணுகிய நேரத்திலும், நம் அரசாங்கம் காப்பாற்றும் என நம்பியிருந்தேனடா… ஜவகரும், பட்டேலும், தமிழகத்தின் ஆளவந்தாரும் உன்னைக் காலில் மிதிபட்டு நசுங்கும் ஒரு எறும்பாக எண்ணி விடுவரென்று தெரியாதேடா..!”

– தமிழ்த்தாய் கதறுகிறாள் இங்கே!…அவளைப் பார்த்து தூக்குமேடை சிரிக்கிறது.

“பார்த்தாயா, தமிழ்த் தாயே…! பாராள பாரத புத்ரர் வந்தால், யாராலும் எம்மைத் தொட முடியாதென்றாயே….! வெள்ளைக்காரன் வெளியேறினால் நல்ல காலம் பிறக்குமென்றாயே…! இதோபார்…! உன் மகனின் சதைகளை, நான் பிய்த்துச் சாப்பிடுகிறேன். வெள்ளைக்காரன் தந்த தீனி இது ! வெகு இனிப்பு ! இந்நேரத்தில் வெள்ளையரின் விரோதி நேரு – வெள்ளையர் நாட்டிலே விருந்து சாப்பிடுகிறார்… நானுந்தான் இங்கு விருந்து சாப்பிடுகிறேன்” – சிரிக்கிறது தூக்குமேடை. கைகொட்டிச் சிரிக்கிறது; கலகலவெனச் சிரிக்கிறது. பக்கத்திலே பிணம் சிரிக்கிறது.

உலகில் எத்தனையோபேர் தினம் தினம் சாகிறார்கள். எல்லாவற்றுக்குமா எல்லோரும் கவலைப்படுகிறோம்? அதுபோலவே, எத்தனையோபேர் தூக்கிலிடப்படுகிறார்கள்… ஆனால் கணபதியின் தண்டனை தமிழ் நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. கணபதியே ஒரு பாடமாகிவிடுகிறார், தமிழ் நாட்டுக்கு ! அவர் வாழ்வே தமிழர்க்கு ஒரு அரசியல் வகுப்பு. அவர் இறுதிக் கடிதம் தமிழர் பட்டாளத்துக்கு ஒரு போர்ப்பிரசங்கம்.

“மலர் மலரும்… மணம் வீசும்… கருகி மடியும்.” பூ மலர்வதும் கருகி மடிவதும், “காயமே இது பொய்யடா” எனக் கழறுபவர் பயன்படுத்திக்கொள்ளும் உதாரணங்கள். ஆனால் மலர்ந்த பூ, மணம் வீசுகிறதே. அதைத்தான் அறிவியக்கம் சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறது. ” மனிதன் பிறக்கிறான், சாகிறான். வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போவதே மனிதனின் லட்சணம்” என, வாழ்வை வெறுத்தவர் பேசுவர். மலர் மலர்வதும், கருகி உதிர்வதும்தான் அவர்கள் கண்களில்படுமே தவிர, மலர்தரும் இன்பவாசம் அவர்கள் உணர்வைத் தொடுவதில்லை. தொட்டாலும் அதை உரைக்க மறுக்கின்றனர். மடியப்போகிறோமே என்று மலர் மணம் தராமல் இருக்கிறதா ? அப்படியிருக்கும் மலரைத்தான் மக்கள் விரும்புவரா? வயது நீண்ட வாடா மல்லிகையை வரவேற்பவர் யார்? சாகப்போகிறோமே என்பதற்காக, சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய பணியைச் செய்யாமலிருப்பதா? மலர் மணம் தர மறுப்பதா ?மணம் தரும் மலராகத்தானிருந்தார் கணபதி. ‘முடிசார்ந்த மன்னரெலாம் வெந்து பிடி சாம்பலாயினர்’ என்று பாடி, முனிவர் ஆஸ்ரமம் அமைத்துக்கொள்ளவில்லை தூக்குமேடையிலே இந்த முகாரியைப் பாடவுமில்லை, அந்த வீரர்! “நான் மணம் தரும் மலர்… கசக்கி எறியப்படுகிறேன்” என்ற இதய ஒலியை அவர் கடிதமாக்கினார். அவர் கடிதம் அந்த லோக’ ஆசைக்காரருக்கு ஒரு சவுக்கு…!

“மிகவும் உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்துபோன ஒரு குடும்பத்தை உருவாக்காது உழைக்கிறானாம், என்று பலர் என்னைப் பார்த்துப் பேசியதுண்டு. அதுபற்றி நான் கவலைப்படவில்லை.”

ஊருக்குழைத்த உத்தமர், தோழர் சற்குணத்திற்கு எழுதிய கடைசி கடிதத்தில் இதையும் குறிப்பிடுகிறார்.

எத்தனையோபேர் பணபலத்தினால்…..! குடும்பத்துக்குள்ள செல்வாக்கினால், நாட்டுக்குத் தலைவன் நான் என வருவர். நாட்டிலிருந்து வீட்டுக்கு மூட்டைகட்டுவர். அண்ணன், தம்பி, மாமன், மைத்துனன், வீடு, வாசல், இவைகளே அவர்கள் கனவாயிருக்கும். உறவினருக்கு வேலை தேடிக்கொடுத்தல் – தனக்காக உழைத்தவர்கள், தன்னை தலைவனாக்கியவர்கள், சிறு உரிமை கொண்டாடினாலும் எட்டி உதைத்தல் – இது சில உயர் குடும்பத்து தலைவருக்குப் பிறவிக்குணமாகவே இருக்கும். ஆனால் தாழ்ந்துபோன குடும்பத்தைக்கூட கவனிக்க நேரமில்லை கணபதிக்கு…! உழைக்கச்சென்ற இடத்திலும் மக்களுக்காக உயிர்விட்டார். உயிர் பிரியும் நேரத்திலும் “வாழ்க வையம் ‘என உற்சாகப் பண்பாடினார்.

கடிதத்தில் நம்மையெல்லாம் வேல் கொண்டு குத்தும் பகுதிதான் கீழேவருவது. ஆம் ! அது நம் பிரசாரத்திலே ஒரு அங்கம்கூட!

“நமது குடும்பம் நசித்துப்போன பின், நான் எப்படி இங்கு வந்தேன் என்பனத நீ அறிவாய். அப்பம் விற்றுக்கொண்டும் இராணி வீட்டில் மங்கு கழுவிக்கொண்டும் ஆங்கிலம் படித்தேன்.”

தஞ்சை மாவட்டத்திலே… தங்கநிற நெல் விளையும் சோழவள நாட்டினிலே… தம்பிக்கோட்டையிலே பிறந்த கணபதி, ஒருசாண் வயிற்றுக்காக இளமையிலே மலேயாவுக்கு ஓடினார். தில்லை நடராசனுக்குத் தங்கவீடு…… திருப்பதி வெங்கடேசனுக்கு வைரக்குல்லாய். ஏன், ஆற்றங்கரை கருங்கல் கணபதிக்குக்கூட, அதிரசமும் அக்கார வடிசலும்…! ஆனால்… தம்பிக்கோட்டை கணபதிக்கு தாங்காத பசி. மலேயாவில் வயிற்றுப் பிழைப்பு. தமிழகம் தானியக் களஞ்சியமாயிற்றே! தங்கந்தோண்டு மிடமாயிற்றே! முத்துக் குலுங்கும் கடல்களுண்டே! கணபதி ஏன் மலேயாவுக்கு ஓடவேண்டும்? ஒரு கணபதியா? எத்தனை கணபதிகளை….. ஏ! தாழ்ந்த தமிழகமே! நீ.. மலேயாவுக்கும் இலங்கைக்கும் அனுப்பியிருக்கிறாய். செப்புச் சிலைகளுக்குத் தேருந்திருவிழாவும். செல்வச் சீமான்களுக்கு சீரும் சிறப்பும்! கணபதிகள் காலந்தள்ள, இலங்கையும் மலேயாவும்! இது அடுக்குமா. தமிழகமே!…… அன்பு மகன் செத்தான் என்று அழுகிறாயே ஆத்திரப்படுகிறாயே…… அலறித் துடிக்கிறாயே அவனை நீதானே விரட்டியடித்தாய், அவனுக்குச் சோறில்லை என்று சொன்னது நீதானே….! அவன் நல்ல வீட்டில் வாழக்கூடாது என்று கூறியது நீதானே! அவன் பொன்னையும் முத்தையும் தீண்டக்கூடாது எனத் தடைபோட்டது நீதானே…!

இப்போது அழு! நன்றாக அழு! கண் இமைகள் கனத்துப்போகும் வரையில் அழு! விழிகளில் ரத்தம் வழிய ஆரம்பிக்கும் வரையில் அழு !

இதைத்தான் கணபதியின் உரத்தகுரலில், உத்வேகத்தோடு ஒலிக்கின்றது. இல்லையென்று கூற முடியுமா?

ஆங்கிலேயராட்சியிலே மலேயா சென்ற கணபதி, இங்கு “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்ற பாட்டு பழசானபிறகு. அதே ஆங்கிலேய சர்க்காரால் சவமாக சாய்க்கப்பட்டார். பிறந்த நாட்டிலே’ சுதந்திர தேவியின் சங்கநாதம்! அந்த நாதம், கணபதி பிழைக்கப்போன நாட்டிலே கேட்கவில்லை. கேட்கும் அளவுக்கு ஊதப்படவில்லை. ஏன்? சங்கு ஓட்டையா? அல்லது ஊதுபவர் குரலிலே உரமில்லையா?

கணபதி எந்த வெள்ளை முதலாளியையும் சுட்டுக் கொன்றதாக வழக்கு கிடையாது. கையிலே துப்பாக்கி வைத்திருந்த ஒரே குற்றத்திற்காக இந்தக் கோர மரணம். தீர்ப்பு கேட்டு திராவிடம் திகைத்தது. ஆளவந்தார்க்கு நினைக்க நேரமில்லை. சம்பளத்தை ஆயிரமாக்கிக்கொள்வது பற்றிய பிரச்னையில் அக்கரை பிறந்ததால்! அவர்கள்மேல் குற்றமில்லை அமைச்சர்கள். கொலுவே இன்னும் பூர்த்தியாக அடுக்கப்படவில்லை. அங்கே தமிழனின் இருதயம் பிளக்கப்படுகிறது; இங்கே பாதாளலிங்கத்தின் குகை ஆச்சாரியாரால் திறக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கோ கனல்கக்கும் விழிகளைக் காட்டிக் கொண்டு திராவிடர் கழகத்தை திட்டித் தீர்க்கவே நாளும் நாழிகையும் போதுவதில்லை. இந்த நெருக்கடியில் (!) அந்த வீரர், கணபதியை மறந்தேபோனார். “தூக்குபோட்டுவிட்டீர்களா! அது மிகவும் தப்பான காரியம்” என இப்போது கர்ஜிக்கிறார். “அடிப்பியோ? உங்க அப்பன் மவனே! சிங்கண்டா” என்று அடிவாங்கியபிறகு அழுகிற நகைச்சுவைப் பகுதியாக இருக்கிறது. காமராஜரின் வீரமுழக்கம். அவர் முழக்கம் முடிவதற்குள்ளேயே வீரசேனன் சுட்டு வீழ்த்தப்பட்டார், ஒரு அற்ப மிருகத்தைப்போல! சாம்பசிவம் சாவின்முனையிலே நிறுத்தப்பட்டுவிட்டார். செவிடன் காதிலே சங்கு ஊதினால் கேட்காது என்பார்கள். ஊதுபவர்களுக்கும் உதடு இல்லாவிட்டால் எவ்வளவு வேதனையான வேடிக்கையாக இருக்குமோ அப்படித்தானிருக்கிறது. மலேயா சர்க்காரின் வெறிப்போக்கும், இந்திய சர்க்காரின் வேண்டுகோள் படலமும்! இந்நேரம் மலேயாவிலே இருக்கவேண்டிய காமராஜர், இங்கு மந்திரி நாற்காலியைத் துடைத்துக் கொண்டிருக்கிறார். நியாயமா காமராஜரே! தமிழருடைய பிணங்கள் தூக்குமேடையில் அடுக்கப்படுவதை ஜவகரும், பட்டேலுமா கண்டிக்கப் போகிறார்கள்? கண்டித்தாலும் அதில் காரசாரமிருக்குமா? அவர்கட்கு அக்கரை இருந்திருந்தால், கணபதியின் கழுத்தை இறுக்கிய கயிறு. சாம்பசிவத்தின் முன்னே தொங்கிக்கொண்டிருக்குமா? அவர்கள் கண்களிலே நெருப்புக் கிளம்பியிருந்தால், வீரசேனனை நோக்கி குண்டுகள் கிளம்பியிருக்குமா? இரண்டு கட்டிளங்காளைகளை மலேயா சர்க்காரின் அடக்குமுறைக்கு காணிக்கையாகத் தந்துவிட்டு, அறிக்கைகள் பறக்கவிடுவது உயிரோடிருக்கும் வரையில் உதாசீனம் செய்யப்பட்டவனுக்கு, செத்தபிறகு உத்தரகிரியை வெகு சிறப்பாக நடத்துவதுபோலத்தானே!

கணபதியோ வீரசேனனோ, இனி நம் கண்ணீரால் பிழைக்கமுடியாதவர்கள். அதற்காக கல்கியார் பாணியில்’ அவர்தம் ஆத்மா சாந்தி அடைக!’ என மங்களம் பாடிட மனம் வரவில்லை. கணபதி நமக்கு ஒரு பாடம் என்பதை மறந்துவிடக்கூடாது. காமராஜர் உட்பட! மலேயாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தமிழர் வாழ்வில் ஒரு சோகத் தொடர்கதை. இந்தக் கதை, பிழைக்கப்போகும் அத்தியாய’த்தைத் தாண்டி, ‘தமிழன் அநியாயமாய்க் கொல்லப்படும் அத்தியாய’த்திற்கு வந்து நிற்கிறது. அடுத்த அத்தியாயம் என்னவோ? எத்துணை பயங்கரமானதோ?

திராவிடம் தனித்திருந்தால் – தனியரசு நாடாக இருந்திருந்தால், கணபதி மலேயாவுக்கு கூலியாக சென்றிருப்பாரா? திராவிடத்தின் பிரதிநிதியாகவன்றோ அங்கு சுற்றுப்பயணம் நடத்தியிருப்பார். அந்தத் தொழிலாளர் தோழன் தூக்கிலே தொங்கும் காட்சியை திராவிடர் காணும் அவலநிலை ஏற்பட்டிருக்காதே. ஏன்…! இப்போதுதான் என்ன…? திராவிடம் தன்னாட்சி பெற்று விட்டால், ஒரே உத்தரவு! மலேயாவுக்கு பிழைக்கச்சென்று. மரணாவஸ்தைக்காளாகும் திராவிடத்தின் திருக்குழந்தைகள் திருப்பியழைக்கப்படுவார்கள். திருப்பதி வெங்கடேசனும், தில்லை நடராசனும் கூட்டு முதல் போட்டு, அங்கிருந்துவரும் அகதிகளுக்கு ஆலை அமைத்துக் கொடுப்பர். மதுரை மீனாட்சியம்மை பெண்தெய்வ மாநாடு கூட்டி ‘நமக்கு நகைகள் தேவையில்லை’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றி,முத்து மரகத மாலைகளை, மாணிக்க மூக்குத்திகளை கழற்றிக்கொடுத்து, ஏழைத் தமிழர்கள் இருக்க எழில்மிகு இடங்கள் அமைத்துத்தருவாள். இதுதான் பிரிந்த திராவிடத்திலே நடக்கும் நலமிகு செயல். திராவிடம் தனித்திருந்தால், தன்மான உணர்ச்சி பூத்துக் குலுங்கும். ரத்தபாசம் திராவிடனின் நெஞ்சைவிட்டு நீங்காதிருக்கும். மன்னர் மரபில் வந்தவர்கள், மலேயாவுக்கும் இலங்கைக்கும் சென்று மண்டியிடும் அவசியமிருக்காது. திராவிடர் தங்கள் திருநாட்டிலேயே வாழ்வர். வாழமுடியும். வாழத்தான் போகிறார்கள். கணபதியின் கொலை இந்த உறுதியை திராவிடர்க்கு அளிக்குமாக.

(முற்றும்)