கொள்கையில் குழப்பமேன்?

1957 ல் அண்ணா எழுதிய கட்டுரைகள். திராவிட இனத்தின் தாழ்ச்சிக்குக் காரணங்களையும். அது மீண்டெழுவதற்கான திட்டங்களையும், இலக்குகளையும் விவரிக்கும் நூல்.

DOWNLOAD :

(Available Formats)

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களின் “கொள்கையில் குழப்பமேன்?” என்ற நூல், அவர் தனது அரசியல் வாழ்விலும், திராவிட இயக்கத்தின் வளர்ச்சிப் பாதையிலும் சந்தித்த முக்கிய சவால்கள் மற்றும் அவரது கொள்கை விளக்கங்களை மையமாகக் கொண்டது.

இந்த நூல், அண்ணா தனது கொள்கைகளில் ஏன் உறுதியாக இருந்தார் என்பதையும், அவரது முடிவுகளின் பின்னணியில் இருந்த தர்க்கரீதியான காரணங்களையும் விளக்குகிறது.

 

கொள்கையில் குழப்பமேன்?

அண்ணாதுரை

பதிப்புரை

திராவிட முன்னேற்றக் கழகம், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நாட்டு மக்களிடையே, திராவிடநாட்டுப் பிரிவினையைப் பற்றி பேசியும் எழுதியும் வந்துள்ளதை நாட்டு மக்கள் நன்கு அறிவர். திராவிடநாடு பிரிவினைக்கானபணியில் தி. மு. கழகம் மிகத் தீவிரமாக ஈடுபட்டு, பல போராட்டங்களை நடத்தியுள்ளது. அதன் பொருட்டுப் பலர் சிறைத் தண்டனையும் பெற்றுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜீவாதார இலட்சியம் “திராவிட நாடு திராவிடருக்கே” என்பதாகும். இக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டே கழகம் சட்டசபை நுழைவையும் மேற்கொண்டிருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

அண்மையில், கழகத்தை விட்டுப் பிரிந்து, புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நண்பர் ஈ. வெ. கி. சம்பத் அவர்கள், “திராவிட நாடு பிரிவினை சாத்தியமற்றது! கிட்டாது! கேட்பது அர்த்தமற்றது!” என்று பேசியும் எழுதியும் வருவதை யாவரும் நன்கு அறிவர். இதை மறுத்து—அறிஞர் அண்ணா அவர்கள், ஆணித்தரமான விளக்கம் தந்துள்ள கட்டுரையைப் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளோம். இதை மக்கள் படித்துப் பயன் பெறுவார்களென்று நம்புகிறேன்.

அன்பன்
 டி. எம். பார்த்தசாரதி

 

கட்டுரை – 1

 

தம்பி !
கூத்தாடிகள்
கூவிக்கிடப்போர்
அடுக்குமொழியினர்
ஆபாச நடையினர்
பணம் தேடிகள்
பதவிப்பித்தர்கள்
காமச்சுவைப் பேச்சினர்
கதை எழுதிப் பிழைப்போர்
அன்னக்காவடிகள்
ஆடி அலைபவர்கள்.
இவை, ‘குரு’ எனக்காகக் தேர்ந்தெடுத்து ஏவிய கணைகள் அவரைவிட்டு நான் தனியாகக் கிளம்ப நேரிட்டபோது.

காங்கிரஸ் வட்டாரத்துக்குச் சொல்லொணாத குதூகலம்.

வேண்டும் பயலுக்கு! இதுவும் வேண்டும், இதற்கு மேலும் வேண்டும்! பெரியாருடன் கூடிக்கொண்டு, ‘பொடியன்’ காங்கிரஸ் மகாசபையையே அல்லவா கண்டித்தான்.

படித்தவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி—அரசியல் அறியாத அப்பாவிகளும், கிழக்குமேற்குத் தெரியாத ஏமாளிகளும்தான் வேறு வேறு கட்சிகளில், என்று நாம் கூறிக்கொண்டிருந்தோம்—எக்களித்துக் கிடந்தோம்; பல் போனதுகள்—பட்டம் இழந்ததுகள்—சரிகைக்குல்லாய்கள்—சலாமிட்டு வாழ்ந்ததுகள்—ஆகிய வகையினர் மட்டுமே காங்கிரசை எதிர்ப்பர்—இளைஞர்கள்—இளித்துக் கிடக்கவேண்டிய நிலையில்லாதவர்கள்—நிமிர்ந்த நெஞ்சினர்—இவர்களெல்லாம் காங்கிரசில் தான் இருக்க முடியும் என்றோம். இந்த அண்ணாத்துரை நமது வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இளைஞன் ! நான் சரிகைக் குல்லாய்க்காரன் அல்ல ! படித்துமிருக்கிறேன், பதவிக்காகப் பல்லிளித்துக் கிடக்கவில்லை; நான் கண்டிருக்கிறேன் காங்கிரசின் போக்கை என்று பேசி, இளைஞர்களிடம் இருந்துவந்த அழுத்தமான காங்கிரஸ் பக்தியைப் பாழாக்கினானே ! பயலுக்கு இப்போது கிடைக்கிறது சரியான சவுக்கடி ! சுடச்சுடக் கொடுக்கிறார் ! சுற்றிச் சுற்றிக் கொடுக்கிறார் ! எந்தப் பெரியாருக்குப் பராக்குக் கூறிக்கொண்டிருந்தானோ, அதே பெரியார் கொடுக்கிறார் சூடு ! துடிக்கிறான் ! சுருண்டு கீழே விழுகிறான் ! வேண்டும் பயலுக்கு; இதுவும் வேண்டும். இதற்கு மேலும் வேண்டும்!!—என்று காங்கிரஸ் வட்டாரத்தினர் கூறிக் களிப்படைந்தனர்.

பெரியார் பேசக் கேட்டுக் கேட்டுத்தான், காங்கிரஸ் வட்டாரமே, என்னை ஏரக்கற்றுக்கொண்டது; பயிற்சியே அவர்களுக்கு அந்த முறையிலே கிடைத்ததுதான்.

முதலிலே, பெரியார் என்னை ஏசிப்பேசக்கேட்டு மகிழ்ந்தனர்—காதுகுளிர! பிறகு, தாங்களே பேசலாயினர்—நாமணக்க!!

என்ன தெரியும் இந்த அண்ணாத்துரைக்கு என்று துவக்கினர்களானால், காங்கிரஸ் பேச்சாளர்கள் தங்கள் வசம் உள்ள நாராசம் அவ்வளவும் தீருமளவு பேசித் தீர்ப்பார்கள்.

அந்த ஆர்வத்திலே, ஆவேசத்திலே, சபர்மதிச் சிறப்பு, தண்டியாத்திரையின் மகிமை, உப்புச் சத்யாக்கிரகப் பெருமை, இர்வின்—காந்தி ஒப்பந்த அருமை என்பவையாவும் அவர்களுக்கு மறந்தேபோய்விடும்!

 

அவர்களுக்கு ஒரே நோக்கம்—இந்த அண்ணாத்துரைக்கு இழிவுவந்து சேர்ந்தாகவேண்டும்—இதைச் சாதித்துவிட்டுத்தான் பிறகு, மற்றவை; முடிந்தால்; நேரம் கிடைத்தால்.

இந்தச் சாமரம் வீசியபடிதான், என்னை அரசியல் உலகிலே உலாவர வைத்தனர். எனக்கு அது பழக்கமாகவும் ஆகிவிட்டது.

அப்போதெல்லாம், இவ்விதமான கண்மூடித்தனமான கண்டனங்களை, இழிமொழிகளை, பழிச்சொற்களைக் கேட்டுக் கொதித்து, குமுறி, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, ஆகுமா இந்த அக்ரமம்! அண்ணாவையா இப்படித் தூற்றுகிறீர்கள் ! அவர் நடையையா பழிக்கிறீர்கள் !—என்றெல்லாம் கேட்டு, பதிலளித்து, என்மீது விழும் தூசுகளைத் தன் அன்புக்கரத்தால் துடைத்து, என் அண்ணன் மாசுமருவற்றவன் என்று மகிழ்ந்து கொண்டாடியவர்களிலே, முதன்மை இடம், தோழர் சம்பத்துக்கு என்பதை நாடு அறியும்?

எனக்காக அந்த அரும்பணியாற்றியதற்கு, நான் செய்யக்கூடிய ‘கைம்மாறு’ என்ன இருக்கமுடியும் ?

உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, உள்ளே சென்ற பழரசம், விக்கலால் வெளியே வந்ததுகண்டு சிந்தினேனே கண்ணீர், அதுவா! தூ!! உப்புத்தண்ணீர்! உபயோகமற்ற தண்ணீர்! கண் என்று இருந்தால், கண்ணீர் வருகிறது—இது ஒரு பெரிய விஷயமா!!

கைம்மாறு ஏதும் செய்திட இயலாத நிலையில் இருந்தேன் இத்தனை காலம்—இப்போதுதான் அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது; பெரியாரும் காங்கிரஸ்காரர்களும் என்னென்ன ஏசினார்களோ, அதை அப்படியே, சிந்தாமல் சிதறாமல் எடுத்துவைத்துக்கொண்டு தோழர் சம்பத் பேசுகிறார்—தாங்கிக்கொள்கிறேன்—அதுதான் நான் காட்டவேண்டிய ‘கைம்மாறு’ என்றும் கொள்கிறேன்.

 

கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டவனுக்கு ஏற்படும் மனநிம்மதி எனக்கு ஏற்படுகிறது.

பெரியாரும், காங்கிரசாரும், இந்த வசவுகளை வீசியபோது, எப்படி, என்னை அறிந்ததால், இதயத்தில் கொண்டதால், அந்தச் சொற்களை, தம்பி! நீ பொருட்படுத்தவில்லையோ அதுபோலவேதான் இதற்கும்.

குயிலுக்கு, கிளியின் அழகு இல்லை; என்ன செய்வது ! அந்த அழகு பெற்றுக்கொண்ட பிறகு கூவிட வாராய்—என்றா கூறுகிறோம்? இல்லையல்லவா ! ஏதோ நிறம் கருமை எனினும், குரல் இனிமை—அதைச் சுவைப்போம் என்று இருக்கிறோம். அஃதேபோல, எல்லாத் திறமைகளும் குறைவற வந்து குவிந்தான பிறகுதான், ‘அண்ணன்’ என்று ஏற்றுக்கொள்வேன்—அதுவரையில் முடியாது என்று இலட்சக்கணக்கான தம்பிமார்கள் கூறிவிடவில்லை; கூறியிருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? பெருமூச்சுடன் உலவிக்கொண்டிருந்திருப்பேன்.

காமராஜர் அதிகாலையில் எழுந்திருக்கிறாராம்—கனம் சுப்ரமணியம் கடலோரம் நடக்கிறாராம்—மாணிக்கவேலர் மரத்தடி படுக்கிறாராம்— இப்படி ஒவ்வொரு தலைவருக்கும் உள்ள பல சிறப்பு இயல்புகளைப் பலர், சுட்டிக் காட்டுவர். எல்லாத் தலைவர்களிடமும் உள்ள எல்லாச் சிறப்பு இயல்புகளும், ஒருங்கே அமையப் பெற்றாலொழிய, உன்னை என் ‘அண்ணன்’ என்று ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றா கூறினீர்கள் ? இல்லையே! கூறியிருந்தால் என்ன செய்திருப்பேன்? நமக்கு இப்படிப்பட்ட அருமைத் தோழர்களைத் தம்பிகளாகப் பெறும் வாய்ப்பு இல்லாது போயிற்றே என்று மனம் குமுறி இருப்பேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், பாசமும் நேசமும் ஏற்பட்டால், திறமைகள் முற்றிலும் நிரம்பி இருக்கிறதா என்றுகூடக் கவனிக்கச் சொல்லாது; இருப்பதைக் கண்டு மகிழவைத்திடும்.

 

அவ்விதம்தான் நான் உன் போன்றாரின் அன்புப் பாராட்டுதலைப் பெற்றேன்.

அதனால், எனக்குத் திறமைகளைப் பெற வேண்டுமே என்ற அவசர ஆர்வம்கூட ஏற்பட்டது என்று கூறலாம். இலட்சக்கணக்கானவர்கள், நமக்குத் தமது இதயத்திலே இடமளித்திருக்கிறார்களே, அதற்கு ஏற்ற முறையில் அவர்கள் மகிழத்தக்க விதத்தில், பெருமைப்படத்தக்க வகையிலே, நாம் திறமைகளைத் தேடிப் பெற்றாகவேண்டுமே என்ற எண்ணம் எழுந்தது. எல்லாத் திறமைகளையும் பெற்றுவிட முடியுமா?

முடியாதுதான்!

ஏன்?

காலம் போதாது என்பது மட்டுமல்ல; திறமை எது என்பது பற்றிய கருத்தே, காலத்தோடு சேர்ந்து வளர்ந்த வண்ணம் இருக்கிறது; திறமைக்கான இலக்கணம் மாறுகிறது; திறமைபற்றிய மதிப்பீட்டுத்தன்மை மாறுகிறது; திறமை கண்டு பாராட்டும் போக்கேகூட அவ்வப்போது மாறுகிறது.

ஏதோ ஓர் ஏட்டிலே படித்ததாக நினைவு: பிரிட்டிஷ் பாராளுமன்றப் பேச்சுகள், சர்ச்சில் காலத்திலே இருந்தது போல, இலக்கியச் சுவை நிரம்பியதாக இப்போது இல்லை என்று.

பிரிட்டன் சென்று திரும்பியவர்களும் இதனையே கூறக்கேட்டுமிருக்கிறேன்.

உண்மை என்னவென்றால், இப்போது, அந்தப் பாணியில் பேசுபவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, பேசினால் சுவைபடுமா என்பதே ஐயப்பாட்டுக்கு உரியது.

 

ஏனெனில், திறமையைச் சுவைப்பதிலே எப்போதும் நாட்டம் உண்டு என்றாலும், ஒருகாலத்திலே சுவை தருவதாகக் கருதப்பட்டுவந்த திறமை, பிறிதொரு காலத்தில் சுவை தருவதாக அமையாது போகக் கூடும்.

எனவே, நான் எல்லாத் திறமைகளையும் பெறமுடியும் என்றும் நம்புவனுமல்ல; திறமைகளின் இலக்கணம் மாறக் கூடியது என்பதை அறியாதவனுமல்ல. குறைகளுடன் கூடியவனானாலும், அன்பு காட்டுவோர் தமது அன்பை அதற்காக நிறுத்திவிட மாட்டார்கள்.

தங்கத்திலே ஒரு குறை உண்டானால்

தரமும் குறைவதுண்டோ?

உங்கள் அங்கத்திலே ஒரு குறை உண்டானால்

அன்பு குறைவதுண்டோ?

இதிலே இன்னொரு வேடிக்கையும் இழைந்து நிற்கிறது.

பெரியாரும், காங்கிரஸ்காரர்களும், இழி மொழிகளையும் பழிச்சொற்களையும் வீசி, குறையைச் சுட்டிக்காட்டுகிறோம் என்று சொன்னார்களே, அப்போதெல்லாம், மெள்ள ஒரு வார்த்தை, “ஆமண்ணா! குறைகள்தாம் இவை!” என்று எனக்கு, இன்று கண்டிப்பவர்கள், எடுத்துக்காட்டினார்களா என்றால். இல்லை! மாறாக, என்மீது பழி கூறியவர்களுக்குப் பளிச்சுப் பளிச்சென்று பதிலளித்தனர்.

சில வேளைகளிலே, அப்படிப் பதிலளிக்கும்போது, பக்கத்தில் இருந்து கேட்க, எனக்கே கூச்சமாக இருக்கும்—அப்படிப்பட்ட பாராட்டுதல், புகழுரைகள்!

அப்போதும் நான், அவர்களின் நடையழகு கேட்டு இன்புற்றேனேயன்றி, புகழுரையால் மயங்கிப் போய்விடவில்லை.

 

அண்ணன் அப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவன் என்று புகழ்ந்து பேசுவது, அண்ணனுக்கு மட்டுமல்ல, தனக்கும், மொத்தமாகக் குடும்பத்துக்கும், பெருமையைத் தேடித் தருகிற காரியம்தானே !

தம்பி! இதை இப்போது கூறக் காரணம், தூற்றல் கணைகள் என்மீது ஏவப்படும்போதெல்லாம், நான் வரவு—செலவு கணக்குப் பார்த்து, மகிழ்ச்சியைத் தருவித்துக் கொள்பவன்—மனம் நொந்து போய்விடுபவன் அல்ல என்பதை எடுத்துக்காட்டத்தான்.

எந்தத் தூற்றலையும் தான் எடுத்து ஆராய்ந்து பாரேன், நான் கூறுவது தெரியும் விளக்கமாக.

எவர் தூற்றினாலும், முன் நடவடிக்கைகளை ஆராய்ந்து பாரேன்— நான் கூறுவது பளிச்செனத் தெரியும்.

மூன்றாம் படிவ மாணவனாக இருந்தபோது, ஆசிரியர் சொன்ன கதை நினைவிற்கு வருகிறது. ஒரு அரசியல் தலைவன் என்போன், கதை சொல்லலாமா என்று கேட்டு விடாதே—நான் அப்படி!—என்ன செய்யலாம்!! கதையைக்கேளேன்—கருத்து இருக்கிறது.

ஒரு மருத்துவன், பிழைப்பு நாடி வேற்றூர் சென்றானாம்—ஒரு நாள் காலை அந்த ஊர் மக்களிலே, பலர், காலை வெயிலில் உலவிக்கொண்டும், வேலை செய்துகொண்டும் இருக்கக் கண்டான். மெத்த மகிழ்ச்சி ஏற்பட்டதாம் மருத்துவனுக்கு, காலை வெயில், பித்தம் உண்டாக்கும். இந்த ஊர் மக்கள், காலை வெயிலில் கிடக்கிறார்கள்; நிச்சயமாக, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும், நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும்; ஏற்ற இடம்; என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து, தன் ஊர் சென்று, மருந்தும் பெட்டிகளுடன், மாலை, வந்தானாம். வந்ததும், மகிழ்ச்சியே போய்விட்டதாம்; கவலை பிடித்தாட்டிற்றாம். காரணம் என்ன என்றால், ஊர் மக்கள், மாலையில் மஞ்சள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்ததைக் கண்டான்; மாலை வேளையில் மஞ்சள் வெயில் உடலில் பட்டால், பித்தம் போய்விடும் என்பது மருத்துவ உண்மை ! மருத்துவன் என்ன செய்வான் ! இந்த ஊர் பயனில்லை என்று எண்ணி, வேறு இடம் நாடினானாம்.

தம்பி ! பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நாளாய், என் நிலை, ஏறக்குறைய, கதையில் குறிப்பிட்டேனே, ஒரு ஊர் மக்கள், அவர்கள் நிலையைப்போல் இருந்து வருகிறது; ஆகவே தூற்றித் துளைக்கலாம் என்று எண்ணுபவர்கள். நான் உங்கள் அன்புக் கரங்களின் அரவணைப்பில் உள்ள காரணத்தால், தொடர்ந்து ஏமாற்றமே காண்கின்றனர்.

என் இயல்போ என்னை எவர் எக்காரணம் கொண்டு, எத்தகைய இழிமொழி கொண்டு தாக்கினாலும், அவர்கள் எப்போதாவது என்னைப்பற்றி ஏதாகிலும் இரண்டொரு நல்ல வார்த்தைகள் சொல்லியிருந்தால், அதை நினைவுபடுத்திக்கொண்டு, மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேடிக்கொள்வது வாடிக்கை. அதுமட்டும் அல்ல, அன்று நம்மை எவ்வளவோ அன்புடன் பாராட்டினவர்கள் தானே; இப்போது நாலு கடுமொழி பேசிவிட்டால் என்ன ! போகட்டும் என்று எண்ணிக் கொள்பவன்.

வாழ்க வசவாளர்கள் என்று முன்பு ஒருமுறை நான் எழுதியது, வெறும் சொல்லடுக்கு அல்ல; என் உள்ளக் கிடக்கையைத்தான் குறிப்பிட்டேன்.

சட்டசபையிலே நாம் திறமையுடன் நடந்து கொள்வதில்லை— மந்திரிகளே இடித்துப் பேசி, ஏளனம் செய்யும் நிலைக்குச் சென்றுவிட்டோம்—என்று கண்டிக்கிறார்கள்.

திராவிட நாடு பகற்கனவாகிவிட்டது; தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, திராவிட நாடு பற்றிப் பேசுவது பைத்யக்காரத்தனம்—தமிழ் நாடு போதும் என்று கூறிவிடலாம் என்று கண்டனத்துடன் அறிவுரை வழங்கப்படுகிறது.

கலைஞர்கள் கழகத்தில் புகுந்து, எல்லாம் கெட்டுவிட்டது என்று பலமாகக் கண்டிக்கிறார்கள்.

இவைகளைத் தத்துவ விளக்கம் போன்ற முறையிலே அல்ல, குற்றச்சாட்டுகளாக, இழிமொழிகளால், கூறு கிறார்கள்.

மற்றவை இருக்கட்டும்; பலமான மூன்று குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்களே, அதிலும் மிகமிகக் கேவலப்படுத்தும் முறையிலே, என்று எண்ணி நான் ஆயாசப்படவில்லை; மாறாக, இந்த மூன்று விஷயமாகவுமே, அவர்கள், சமீப காலத்துக்கு முன்புவரையில், கனிவுடன் மட்டுமல்ல, பாராட்டும் முறையில் பேசியிருக்கிறார்கள். அதை எண்ணி மகிழ்ச்சி பெறுகிறேன்.

முன்பு அப்படிப் பேசினார்கள்; இப்போது ஒரே அடியாக மாற்றிப் பேசுகிறார்களே, என்றுகூட எனக்கு வியப்பு ஏற்படுவதில்லை.

ஏதோ, முன்பொரு முறையாகிலும் பாராட்டிப் பேசியிருக்கிறார்களல்லவா; அதற்கு நன்றி கூறிக்கொள்வோம் என்றுதான் தோன்றுகிறது.

கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.

பாராட்டியவர்களே, கண்டிக்கும்போது, அதைத் தாங்கிக்கொள்ளும் மனத்திடம் இருக்கிறதே, அது எளிதிலே பெறமுடியாத, ஆனால் விலைமதிக்க முடியாத மிகச்சிறந்த பண்பாகும்.

 

“சிலர் கேட்கிறார்கள், தி. மு. கழகம் சட்டசபைக்குப் போய் என்ன சாதித்துவிட்டது என்று?

“தி. மு. கழகம் எதைச் சாதித்தது என்று கேட்கும் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு முன்னாள் மந்திரி செய்த விமர்சனத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். தமிழ் நாட்டிலிருந்து அண்மையில் இராஜ்யங்கள் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்லி வந்து சேர்ந்தார். வந்தவர் டெல்லியிலுள்ள தமிழ்நாட்டு ராஜ்யசபை உறுப்பினர்களைக் கூட்டிவைத்துக்கொண்டு சென்னைச் செய்திகளைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ‘தெரியுமா, நண்பர்களே ! நான்கூடத்தான் சட்டசபையில் இருந்திருக்கிறேன்; எத்தனையோ முறை சுப்பிரமணியம் அவர்களின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்; ஒரு நாள், காலரியில் உட்கார்ந்து கொண்டு, மிகவும் பிரமாதம், மிகவும் Progress—மிகவும் முன்னேற்றம்’—என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஒருமுறை அந்த முன்னாள் அமைச்சர் பார்த்தார். ‘அப்படியா?’ என்றார்கள் எல்லோரும். ‘ஏன் தெரியுமா?’ என்று அவரே கேள்வியைப் போட்டுக்கொண்டு சொன்னார்: ‘எல்லாம் அண்ணாத்துரையின் டிரெயினிங்—அண்ணாத்துரையின் பயிற்சி’ என்று சொன்னார். ‘மந்திரி சுப்பிரமணியத்திற்குத் தமிழ் அபிவிருத்தி ஏற்பட்டதிலிருந்து அண்ணாத்துரையுடைய சட்டசபைப் பிரவேசம் பலனளித்திருக்கிறது’ என்று அவர்களே ஒத்துக்கொள்ளும் அளவுக்கு நம்முடைய சாதனைப் பட்டியல் ஆரம்பமாகிறது.”

இப்படிப் பேசியதைக் கேட்டு, எனக்கே கூச்சமாக இருந்தது. என்னதான் நம்மிடம் அன்பு இருந்தாலும், அண்ணனைப் பாராட்டவேண்டும் என்ற பாச உணர்ச்சி இருந்தாலும், இப்படிப் பேசத் தேவையில்லையே என்று எண்ணிக்கொண்டேன்.

 

இந்தப் பாராட்டுதலை, நாலைந்து நண்பர்களை வைத்துக்கொண்டு அல்ல, பல்லாயிரவர் கூடிய மாநாட்டிலே தோழர் சம்பத் பேசினார். 1958 ஜூன் 7, 8 நாட்களில் விருத்தாசலத்தில் நடைபெற்ற தி. மு. க. மாநாட்டில் !

இப்போது, சட்டசபையில் திறமையே காட்டுவதில்லை; அக்கறையே இருப்பதில்லை; அமைச்சர்கள் கேலி செய்கிறார்கள் என்று பேசினால், நான் சிரிக்காமல் என்ன செய்வது, தம்பி ! நீ தான் சொல்லேன் ?

சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று கூறுபவர், அமைச்சர் சுப்ரமணியத்துக்கு நல்ல தமிழ் நடைப்பயிற்சியே நான் சென்றதால் கிடைத்தது என்று ஒரு காங்கிரஸ்காரர் பேசியதை மேற்கோளாகக் காட்டிப்பேசி, மாநாட்டினரை மகிழச் செய்தவர் ! இப்போது, இப்படி! அதற்கு நான் என்ன செய்ய !!

சட்ட சபையிலே திறமையே காட்டுவதில்லை என்று உங்கள் சம்பத் கூறுகிறாரே, என்று சொல்லி, அமைச்சர் சுப்ரமணியாவது, சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியுமா ! அவருக்குத் தமிழ் நடையில் பயிற்சியே என்னால்தான் கிடைத்தது என்ற கருத்தை அளித்தவரல்லவா, இன்று இதைக் கூறுகிறார். ஒரு சமயம் என்னிடம் உள்ள பாசம் அப்படிப் பாராட்ட வைத்ததுபோலும் என்று எண்ணிக் கொள்கிறாயா, தம்பி ! அதுவும் இல்லை. அதே தொடரில் தோழர் சம்பத் கூறினார்.

‘அன்று ஒருநாள் நான் சட்டசபைக்குச் சென்றிருந்தேன். அன்று நீர்ப்பாசன திட்டத்தின் மீது விவாதம் நடைபெற்றது. தோழர் கருணாநிதி அவர்கள் பேசினார்கள். அவர் குளித்தலைத் தொகுதிக் குறைகளை மட்டும் சொல்லாமல், குடகு நாட்டுத் திட்டத்தையும் சொல்லிவிட்டு, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை மாவட்டங்களிலேயும் எந்தெந்த நீர்த்தேக்கத் திட்டங்கள் இருக்கின்றன, என்று எண்ணி, காகிதத்திலே திட்டமிடப்பட்டு, கையிலே காசு இல்லையே என்று மூடிவைத்திருக்கிறார்களோ, அத்தனை திட்டங்களையும் பெயரோடு, விவரங்களோடு, நீண்ட ஒரு பட்டியலைச் சொல்லிவிட்டு அமர்ந்தார். பிறகு மந்திரி கக்கன் அவர்கள் எழுந்தார். அவருக்கே உள்ள பார்வையோடு தோழர் கருணாநிதி அவர்களைப் பார்த்துச் சொன்னார்—’இவர் எல்லாத் திட்டங்களையும் சொல்லிவிட்டார்—வேறு யாரும் சொல்லக் கூடாது என்று நினைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்’ என்று பெருமூச்சோடு தொடங்கிப் பதில் சொல்ல ஆரம்பித்தார். இப்படி நம் தோழர்கள் எந்த இடத்திலே புகுந்து வேலை செய்தாலும், புகழ் மணக்கத்தக்க வகையிலே தான் செயலாற்றுவார்கள். நாம் பெறுகின்ற இடம், நம்முடைய ஆசானுடைய திறன் அது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நல்ல பாதையிலே நாம் நடைபோடுவதால்தான் எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடறி விழுந்தோம், தவறுகள் செய்தோம் என்று நம்முடைய வரலாற்றிலே ஒரு இடம்—ஒரு வரியைக்கூடக் காட்ட முடியவில்லை.”

எப்படித் தம்பி ! பாராட்டுதல் !! கேட்போர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திறமையுடன் பணியாற்றுகிறார்கள் நமது கழகத்தவர் என்பதற்காக மட்டுமல்ல, இதை ‘நமது சம்பத்து’ எவ்வளவு அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பார்த்தீர்களா என்பதற்காகவும்தான். இப்போது அதே மக்கள், அதே தோழர் சம்பத், அதே சட்டசபை உறுப்பினர்களைப்பற்றி, ‘சுத்த மோசம்’ என்று கூறுவதைக் கேட்கிறார்கள். என்ன எண்ணிக் கொள்வார்கள்? அவர்களும்தான் சிரிப்பார்கள்.

அதெல்லாம், சந்தோஷமாக இருந்தபோது, போனால் போகட்டும் என்று நாலு வார்த்தை பாராட்டி வைத்தேன் என்று தோழர் சம்பத் கூறுவாரானால், அப்படியானால் இப்போது அவர் கோபத்தால் நாலு வார்த்தை இழிவாகப் பேசுகிறார். என்றுதானே சொல்லுவார்கள் !!

இந்தவிதமான பாராட்டுப் பேச்சு, என்னையோ, மற்றவர்களையோ மகிழச் செய்வதற்காக அல்ல; ஒரு பிரச்சினையை விளக்க என்பதை மேலும் பல ஊர்களிலே பேசினார். சென்னையில் 37-வது வட்டத்தில் பேசுகையில்,

“சாதாரணமாகச் சட்டசபைக்குள் நுழைந்தவுடன், எந்த ஒரு கட்சிக்கும் மந்த நிலை ஏற்படுவது இயல்பு. சென்ற முறை கம்யூனிஸ்டு கட்சிக்கும் அந்த நிலை ஏற்பட்டது. ஆனால், சட்டசபையில், நம் கட்சி நுழைந்தபின், அந்த நிலை மாறி நாம் இரட்டிப்பு மடங்காக வளர்ச்சி பெற்று வருகிறோம். இதற்குக் காரணம் என்ன? அண்ணா அவர்களின் உழைப்பையும், ஆற்றலையும், அனுபவத்தையும், அறிவையும் முன் வைத்து ஆராய்ந்தால், இதற்கு விடை கிடைக்கும். இந்த நாட்டு வரலாற்றிலேயே இப்படிப்பட்ட தொரு மாபெரும் சக்தி இதற்கு முன்பு இப்படி வளர்ந்த தில்லை.” என்று குறிப்பிட்டார்.

சென்னை மக்கள் கேட்டு மகிழ்ந்த இதே விஷயத்தை, குடந்தை நகர மக்களுக்கும் தோழர் சம்பத் வழங்கினார்.

“சட்டமன்றத்தில், தி. மு. கழகத்தினர் எதையும் சாதித்துவிடவில்லை யெனக் கூறுகின்றார் அமைச்சர் சுப்ரமணியம். எப்பொழுதுமில்லாத நிலையில் இப்பொழுது அமைச்சர்கள் சுற்றுப் பயணம் புரிவதே, நம் சாதனைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.”

இப்படிப்பட்ட விளக்கம்—பாராட்டுதல்—பல்வேறு ஊர்களிலே உள்ளவர்களும், கேட்கட்டும் என்று வழங்கிவந்தார். நான் நல்ல வாய்ப்புப் பெற்றேன்—தோழர் சம்பத் அவர்கள், அடியோடு கெட்டுவிட்டது இந்தத் தி. மு. க. என்று கூறி வெளியேறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு, சட்டசபையில், நல்லபடிதான் பணியாற்றுகிறார்கள் என்று, கேட்போர் பெருமைப்படத் தக்க விதத்தில் அவர் மாயவரத்தில் பேசியதையும், அமைச்சரை நேருக்கு நேர் வைத்துக்கொண்டு திருவண்ணாமலைத் தோழர் ப. உ. சண்முகம் அவர்கள், தேர்தல் நிதி வசூலிப்பதுபற்றிக் கண்டனம் தெரிவித்த துணச்சலையும், பாராட்டிப் பேசியதை இவ்வளவு கேட்டான பிறகு, இப்போது அமைச்சர் சுப்ரமணியம் போன்றவர்கள் பாணியில், இவர்கள் சட்டசபையில் திறமையே காட்டவில்லை என்று பேசினால், என்ன செய்வது ! சிரிக்கத்தான் தோன்றுகிறது !!

சட்டசபையில், திறமையாகப் பணியாற்றவில்லை என்று அவர், ஜாடைமாடையாகவேனும் கூறி இருந்திருந்தால், என்னைப் பொறுத்தவரையிலே, கொஞ்சம் திறமையைப் பெற, பாடம் கேட்டாதிலும் பெற, முயற்சி எடுத்துக்கொண்டிருந்திருப்பேன். முயற்சி எடுத்துக்கொண்டாலும், திறமை எனக்கு வருகிறதோ இல்லையோ, அது வேறு சந்தேகம் ! ஆனால் முயற்சியாவது செய்திருக்கலாம். ஆனால், பாராட்டுதலை அல்லவா வழங்கிக்கொண்டிருந்தார் !! நாங்கள் சட்டசபையில் சரிவர வேலை செய்யவில்லை என்று இவர் குறைபட்டுக் கொள்கிறார் என்று எப்படித் தெரிய முடியும்? இப்போது கூறுகிறார்—பிரிந்துபோன பிறகு, இதைக் கேட்டனையா, தம்பி ! அமைச்சர் சுப்ரமணியம் அவர்களுக்கு, தைரியம் ஏற்பட்டதே எப்படி என்று தோழர் சம்பத் கூறியதை, இன்று ஏதேதோ பேசுகிறவர், அன்று என்ன பேசினார் என்பதைத்தான் கேளேன் ! கேட்டால் இப்போதைய அவருடைய பேச்சு உனக்கு எரிச்சல் கூடமூட்டாது.

“கௌஹாத்தியில் நேருவையும் எதிர்த்து, இந்தித்திணிப்பைக் கண்டித்துத் துணிந்து பேசியிருக்கிறார், சுப்ரமணியம். இது அவருடைய வாழ்க்கையில் செய்த முதல் முக்கிய காரியமாகும். அவர் அப்படிப் பேசியிராவிட்டால் நாடு அவரை ஏளனம் செய்யும் என்று தெரிந்துதான் அவர் இப்படித் துணிந்து பேசினார். அந்தத் துணிவு கௌஹாத்தி மாநாட்டிலே அவருக்கு வரக்காரணம், அண்ணாந்துரை சட்டமன்றத்திலிருக்கிறார் என்ற நினைவு அவருக்கு இருந்ததால்தான், அண்ணாவுக்கு எதிரிலே அமர்ந்து அண்ணாவின் பேச்சை அடிக்கடி கேட்டதனால் தான், நிதியமைச்சருக்கு இலேசாகத் தைரியம் வந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலெல்லாம் பந்தல் காலைக் கட்டிக்கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்தவர்தான் அவர்.”

தம்பி ! சட்டசபையில் நமது கழகத் தோழர்கள் ஆற்றிய பணியினால் அமைச்சர் சுப்ரமணியத்திற்கு, நல்ல தமிழ்நடை மட்டுமல்ல, துணிவே வந்தது என்று கூறி, அதற்கு முன்பு அவர், மாநாடுகளில் பந்தல் காலைக் கட்டிக்கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர் என்று பேசி, நம்மைத் தோழர் சம்பத மகிழச் செய்தார் ; இப்போது, நாம் சட்டசபையில் திறமையற்றுக் கிடக்கிறோம் என்று பேசி, அமைச்சர் சுப்ரமணியத்தை மகிழச் செய்கிறார். எத்தனை காலத்துக்கு ஒரே இடத்துக்கு மகிழ்ச்சி தரும் காரியமே செய்துகொண்டிருப்பது ! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !! சிலகாலம், அமைச்சர் வட்டாரமும் அடையட்டுமே இந்த ஆனந்தத்தை !

தம்பி ! சட்டசபையில் நாம் நடந்துகொண்ட தன்மையால்தான் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலிலே நாம் வெற்றிபெற்றோம் என்று நான் கூறி, நீ கேட்டதுண்டா ? எழுதிப் படித்ததுண்டா ? எனக்கு எங்கே இதெல்லாம் தெரிகிறது! தோழர் சம்பத்தான் அதைப் பேசினார். புதுவையில் நடைபெற்ற மாநாட்டில், 1959, மே. 2, 3 நாட்களில்!

 

“நமது வெற்றி பற்றி ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது—இந்த வெற்றி திடீர் என்று அவர்களுக்கு ஏற்பட்டது அல்ல—இடறி விழுந்ததால் ஏற்பட்டதல்ல—அவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாக இருந்து நடந்து கொள்ளும் முறையும், எதை எந்த முறையில் எதிர்க்க வேண்டும் என்று அறிந்து அந்தப் பண்புடன் அவர்கள் எதிர்க்கின்ற முறையும்தான், அவர்களுக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது.”

தம்பி! சட்டசபையில், நாம் எப்படி நடந்துகொண்டிருக்கிறோம் என்கிற பிரச்சினை இருக்கட்டும்—இப்போதைக்கு—இந்த அளவில்.

பெரிய விஷயத்திலேயே பேதம் வந்துவிட்டதே, திராவிட நாடு பகற்கனவு என்று கூறுகிறாராமே, அதைப் பற்றி என்ன சொல்வது என்று யோசிப்பாய். இதிலேயும் சிக்கல் இல்லை, சங்கடம் இல்லை.

திராவிட நாடு பகற்கனவு என்று நேரு கூறினார்—ஏற்க மறுத்துவிட்டோம். காமராசர் கூறினார்—கவைக்குதவாப் பேச்சு என்றோம்.

பெரியார் பேசினார்—போக்கை மாற்றிக்கொண்டார் என்கிறோம்.

இப்போது தோழர் சம்பத் பேசுகிறார் ! அதனால் என்ன ?

ஆனால், பலர் கூறியும் நமக்கு, ‘திராவிடநாடு’ பிரச்சினையில் ஏன், அவ்வளவு அழுத்தமான, அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது? அந்த நம்பிக்கையை நாம் அவசரப்பட்டு மேற்கொள்ளவில்லை—ஆத்திர உணர்ச்சி காரணமாக மேற்கொள்ளவில்லை—மிகப் பெரியவர்கள், மேதைகள் என்ன சொல்வார்களோ என்று கவலை கொள்ளவில்லை. நமது இதயகீதமாக்கிக் கொண்டோம். அந்த இலட்சியத்திலிருந்து நாம் வழுக்கிவிடக்கூடாது—பேரம் பேசுவது —குறைத்துக் கேட்பது—சாயலைக் கேட்பது—இலட்சியவாதிகளின் போக்காக இருத்தல் ஆகாது. இலட்சியவாதியின் பிணத்துக்குப் பக்கத்திலே உட்கார்ந்துகொண்டு வேண்டுமானால் காரியவாதி பேரம் பேசி, கிடைத்ததைப் பெற்று மகிழ முனையலாம். நமக்கு, இலட்சியம், இறுதி மூச்சு உள்ள வரையில் ! இதை வெறி என்று கூறினும், நெளிந்து கொடுக்கத் தெரியாத தன்மை என்றுரைக்கினும், கவலை இல்லை ! இப்படிச் சிலர், நாளைக்கும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கொடுத்ததைக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்று இன்புற்றாலும் பரவாயில்லை ! இலட்சியம் நமக்கு ! விடுதலை, பகுதி பகுதியாகத் தரப்படட்டும் என்று பேசுபவர். இலட்சியவாதிகளாகார்—என்று, நான் படித்த ஏடுகள் கூறுகின்றன !

இந்த நம்பிக்கையுடனே தான் தோழர் சம்பத் லால் குடி மாநாட்டிலே பேசி, கேட்போர்களை, விடுதலை ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினர் ஆக்கினார்.

அந்தக் கொந்தளிப்பு, சிவாஜி கணேசனை, மேடை ஏறி, அண்ணா ஆணையிட்டால், நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, போரில் ஈடுபடுவேன் என்று பேச வைத்தது.

தோழர் சம்பத், நம்மைவிட்டுப் பிரிந்தாலும், அவர் ஆற்றிய உரை, அவரை நம்முடன் பிணைத்துவைத்திருக்கிறது. அது இது:

இயக்கத்தின் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோர் சிறையிலிருந்தபோது வேலூரில் தமிழர் மாநாடொன்று பன்னீர்ச்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் எஸ். எஸ். பாரதியார் போன்ற பெரும் புலவர்கள் கலந்துகொண்டனர். வடமொழி ஆதிக்கம் வடவர் ஆதிக்கத்துக்கு முன்னேற்பாடு என்பதை அறிந்து கொண்ட அம்மாநாடு, தமிழ்நாடு தமிழருக்காக வேண்டும் எனத் தீர்மானித்தது. சிறைசென்ற தலைவர்கள் மீண்டனர், மீண்ட தலைவர்கள் அந்தத் தீர்மானத்தை இயக்கத்தின் இலட்சியமாக்கினர். அச்சமயத்தில் நமது இயக்கத்தில் இருந்த சில ஆந்திர, மலையாள, கன்னடத்தோழர்கள். ‘வடவரை எதிர்த்துத் தமிழகம் மட்டும் என் பிரியவேண்டும்? ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய திராவிடமொழிகள் பேசும் மகாணங்களும் பிரிந்து தீரவேண்டும். அதற்கும் சேர்த்து ஓர் திட்டம் தேவை’ என்றனர். அப்போதே காஞ்சியில், அண்ணா அவர்கள் திராவிடர் கழகம் என்று ஒரு சங்கத்தைத் தோற்றுவித்து இருந்தார்கள். அந்த அடிப்படையில் சிந்தித்து விவாதித்துத்தான் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய சுயநிர்ணய உரிமையோடு கூடிய நாடுகள் வலிந்து ‘இணைத்து’ அமைக்கும் திராவிடக் கூட்டாட்சியைப் பெற இயக்கம் இனிப்போராடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

“பின்னர் அக்கூட்டாட்சி, குடியரசாக மட்டுமின்றி, ஒரு சமதர்மக் குடியரசாகவும் விளங்கவேண்டும் என்பது நமது இலட்சியமாக அமையவேண்டும் என விரும்பிய அண்ணா அவர்கள், சேலத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் முக்கியமான இரண்டு தீர்மானங்களைக் கொண்டுவந்தார். ஒன்று, ஐஸ்டிஸ் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகமாக மாற்றவேண்டுமென்பது; மற்றையது, கட்சியில் சர்க்கார் அளித்த இராவ்பகதூர். சர் போன்ற பட்டங்களைத் தாங்கிக் கொண்டு எவரும் இருக்கக்கூடாது என்பதாகும். கட்சியில் இருந்த ஆலை அரசர்கள், செட்டிநாட்டு வேந்தர்கள் ஆகியோர் கட்சியைவிட்டு ஓட்டம் பிடித்தனர். அரண்மனையில் இருந்த கட்சியை அண்ணா அவர்கள் அந்தத் தீர்மானங்கள் மூலம் மைதானத்திற்குக் கொண்டுவந்து மக்கள் கட்சியாக மாற்றினார். அதன் பிறகு சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும், பொருளாதாரப் பொது உடைமையையும், அரசியலில் திராவிட விடுதலையையும், இலட்சியங்களாகக்கொண்டு திராவிடர் கழகம் நாட்டு மக்களை ஒன்று திரட்டியது. பின்னர், நல்ல சனநாயகப் பண்பு வளரத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு முறையை வகுத்தோம். உழைத்தோம், இவ்வளவு குறுகிய காலத்தில் மகத்தான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறோம், என்றுமில்லாத அளவிற்கு நாட்டு விடுதலைத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவும் பெருகி நிற்கிறது.

“அதுவும் 1947 ஆகஸ்டு 15-ல் இந்திய உபகண்டத்தின் ஆட்சி முறை வடநாட்டுக்காரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் நமது நாடு அடைந்திருக்கும் அவலநிலை, ஆரம்பத்தில் நமது திட்டம் தேவையற்றது, ஆபத்தானது என்று எண்ணியிருந்தவர்களின் ஆதரவை எல்லாம்கூடப் பெற்றிருக்கிறது. வடவர் கையில் ஆட்சி சிக்கிய நாள் முதலாய் நமது நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி ஆகிய இந்த நிலைமைகளும், பட்டினிச்சாவு—பசியால், வேலையில்லாத் திண்டாட்டத்தால் குடும்பத்தோடு தற்கொலை, குற்றங்கள் மலிவு ஆகியவையும் சர்வசாதாரணமாகிவிட்டன. பருவ மழைகளும் தவறிவிட்டதால் வடவர் சுரண்டல் திரை மறைவில் நடைபெற முடியாமல் பட்டவர்த்தனமாக எல்லோர் கண்ணுக்கும் தெரியத்தக்க அளவில் நடைபெற்றது. இங்கு பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் துன்பச் சூறாவளி கடந்த ஆறு ஆண்டுகளாக வீசிவரும் இதே காலத்தில், வடவர், வாழ்விலே வளம், ஏற்றம் ஆகியவைகளைக் கண்டு இன்புற்று வாழ்கின்றனர்.

 

“டில்லிக்கு நாம் செலுத்தும் வரிகள் அனந்தம். ஆனால் அவைகளில் ரூபாய்க்கு எத்தனை தம்படி நமக்குச் செலவழிக்கப்படுகிறது என்று பார்க்கும்போது, பெரியதொரு ஏமாற்றம்தான் கண்ணுக்குத் தெரிகிறது, கடந்த ஆறு ஆண்டுகளில் டில்லி சர்க்காரின் கஜானாவின் ஆதரவோடு ஆரம்பித்து நடைபெற்று வரும் பெரும் அணைக்கட்டுகள், தாமோதர் பள்ளத்தாக்குக் திட்டம், ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டம், கோசி நீர்த்தேக்கத் திட்டம் போன்ற பெரும் பெரும் திட்டங்கள், சிந்திரி உர உற்பத்தித் தொழிற்சாலை, பென்சிலீன், டி. டி. டி. மருந்து ஆகிய மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், இன்னும் எண்ணற்ற தொழில் திட்டங்கள் ஆகியவைகள் அனைத்தும் வடநாட்டில் நடைபெற்று வருகின்றன. இங்கு சிறு சிறு நீர்த் தேக்கத் திட்டங்களுக்குக்கூட டில்லியின் பண உதவியில்லை.

“நாம் வருஷா வருஷம் டில்லிக்கு இறக்குமதி ஏற்றுமதிகள், வருமான வரி, புகையிலை வரி, தபால் கட்டணங்கள், இரயில்வே கட்டணங்கள். ஆகியவை மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுகிறோம். நமது நாட்டில் 100-க்கு 80 பேர் படிப்பில்லாதவராய் இருத்தலாலும், படித்தவரில் பெரும்பகுதி சுயநலமிகளாய் நாட்டைப் பற்றிய கவலையற்றிருத்தலாலும், இவைகள் விளைவிக்கும் பெருகஷ்டத்தைப்பற்றியும் நம் மக்கள் முழுதும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறது. டில்லி சர்க்காரின் வருமானமாகிய கமார் 400 கோடி ரூபாயில் ஏறத்தாழ 200கோடி ரூபாய் ஏற்றுமதி இறக்குமதி வரிகளின் மூலம் கிடைக்கிறது. அதில் நமது பங்கு மிக அதிகம். இங்கிருந்து கொச்சி, நாகை, சென்னை, விசாகப்பட்டினம். ஆகிய துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் மிளகு, ரப்பர், மணிலாக்கொட்டை ஆகிய ஏற்றுமதிப் பொருள்களுக்குக் கோடிக்கணக்கில் டில்லி சர்க்காருக்கு வரி செலுத்துகிறோம். அதைவிட அதிகமாக இங்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு வரி தருகிறோம். இங்கிலாந்தில் செய்யப்படும் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு 15 ரூபாய்க்கு அங்கு விலையாகிறது என்றால், சென்னைத் துறைமுகத்தில் அது இறங்கியதும் அதற்கு இறக்குமதி வரி 10 ரூபாய் டில்லி அதிகாரிகளால் வசூலிக்கப்படுகிறது. உடனே சென்னையில் உள்ள மொத்த வியாபாரிக்கு அதன் அடக்கம் 25 ரூபாய் ஆகிறது. அவன் சில்லறை வியாபாரிக்கு 30 ரூபாய்க்கு விற்கிறான். அவன் 35 ரூபாய்க்கு யாரோ ஒரு முத்தனுக்கு விற்கிறான். அவனுக்குத் தெரியாது, தான் விளக்கிற்கெனத் தந்த 35 ரூபாயில் 10 ரூபாய் டில்லிக்கு வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பது. இவ்வாறே நாம் வாங்கும் வெளிநாட்டுச் சாமான்களான மோட்டார், சைகிள், கடியாரம், பேனா, வாசனைத் தைலங்கள், பொம்மைகள், எஞ்சின்கள். இயந்திரங்கள் அனைத்திற்கும் கோடிக்கணக்கில் வரி தருகிறோம்—வரி தருகிறோம் என்ற நினைவே இல்லாமல், புகையிலை வரியின் மூலம் மட்டும் 10 கோடி ரூபாய் சென்ற ஆண்டில் நாம் கொடுத்திருக்கிறோம். வேறு எந்த ராஜ்யமும் தராத அளவு கொடுத்திருக்கிறோம். இவ்வளவு வரிகளை வாரிக்குவித்துக்கொள்ளும் டில்லி நமக்கெனத் தந்தது என்ன? தொல்லை தவிர வேறில்லை, எல்லோருக்கும் பொது என்பதாக ஒரு இராணுவத்தைக் கட்டி வைக்துத் தீனி போடுவதைத் தவிர, வேறு எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் நமக்குப் பங்கு இல்லை. இராணுவமும் வடநாட்டில் உள்ள அநாகரிகமான இந்து—முஸ்லீம் பிரச்சனையைத் தீர்க்க அடிக்கடி பயன்படுகிறதே தவிர, நமக்குச் செய்ததென்ன? இராணுவம் துணைக்கு வரவேண்டிய எத்தனையோ வாய்ப்புகளில் நாம் ஏமாந்து விட்டிருக்கிறோம். மழையின்மையால் கிணறுகள் நம் நாட்டில் வறண்டு போயுள்ளன. இராணுவத்தினரும், அவர்கள் வசமுள்ள பெரிய இயந்திரங்களும் கிணறுகளை ஆழப்படுத்தித் தந்திருக்கலாம். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் புயல் வீசிப் பெரும் சேதம் விளைந்தபோது, தவித்த மக்களுக்கு இராணுவம் துணை புரிந்திருக்கலாம், செய்யவில்லை. எப்படிச் செய்யும், ஆதிக்கமும் அதிகாரமும் டில்லியில் குவிக்கப் பட்டிருக்கும்போது? இப்படி நம்மிடம் இருந்து வரியின் பெயரால் டில்லி செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அத்தனையும் வடநாட்டில் வாழும் மக்களின் ஏற்றத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றது.

“இந்திய உபகண்டத்தின் பெருந்தொழில்கள் அனைத்தும் வடநாட்டு முதலாளிகளிடத்திலே, சுருக்கமாகச் சொன்னால், இந்தியப் பொருளாதாரமே வடவரின் கைப்பொம்மையாய் இருக்கிறது. இந்த நிலையில் டில்லியின் முழு அதிகாரத்துடன் வீற்றிருக்கும் மத்திய சர்க்காரும் வடவரின் கையிலே. சர்க்கார் இமயமுதல் குமரிவரை உள்ள மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் முழுவதையும் வடநாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையிலேயே செலவழிக்துக் கொண்டிருக்கிறது.

“இந்த நிலையில் திராவிடம் டில்லித் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியரசாய் அமைவதை விரும்பாதவன் ஒன்றும் அறியாத ஏமாளியாய் இருக்கவேண்டும். அல்லது எல்லாம் தெரிந்தும் கொள்ளைக்காரர்களிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகியாய் இருக்கவேண்டும்.

“ஏனெனில், நாட்டின் இன்றைய அரசியலில் சுதந்தரமற்று டில்லியின் கட்டளைகளை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அடிமை நிலை, பொருளாதாரத்தில் பறிகொடுக்கும், கொள்ளை கொடுக்கும் ஏமாந்த நிலை ஆகிய நிலைமைகளும் திராவிடநாடு விடுதலையைத்தான் மருந்தாகச் காட்டுகின்றன.

 

“இந்த நிலைமைகள் மட்டுமல்லாமல், வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது வெள்ளையன் வருவதற்குமுன் இந்தியா என்ற அரசியல் அங்கம் (Politicat unit) உலகில் இருந்ததாகவே தெரியவில்லை. அதாவது, ஒரு சர்க்காரின் கீழ் இந்தியா என்ற நாடு இருந்ததாக இல்லை. இந்தியா என்பது ஒரு பூகோளப் பெயராகவே திகழ்ந்து வந்திருக்கிறது. எப்படி, பல தனித்தனி நாடுகளைக்கொண்ட ஐரோப்பாவின் ஒரு பிரதேசத்திற்குப் பால்கன் தீபகற்பம் என்று பெயரோ, மற்றும் ஸ்வீடன், நார்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து ஸ்காண்டிநேவியா என்று அழைக்கிறோமோ, அதைப்போல் இந்தியத் தீபகற்பம் என்பது ஆகியாக்கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பூகோளப் பெயரே தவிர, சர்க்காரின் கீழ் இருந்த ஒரு நாட்டின் பெயராக அது விளங்கியதில்லை.

“வெள்ளையனுடைய துப்பாக்கிகள், மெல்லச் சென்னையை வென்று, அய்தராலி, திப்பு ஆகியோரை வென்று, மராட்டியத்தைப் பிடித்து, மொகலாய மன்னர்களைச் சதி செய்தும், வென்றும், இந்தியத் தீபகற்பத்தில் கைப்பற்றிய பிரதேசங்கள் அனைத்தையும் சேர்த்து, இந்திய சாம்ராஜ்யம் (Indian Empire) என அழைத்தபோது தான், இந்தியா என்ற பூகோளப் பெயர், ஒரு அரசியல் பெயராக மாறிற்றே தவிர, வேறில்லை என்பது விளங்குகிறது. அன்னியனிடம் ஒரே சமயத்தில் தோற்ற இனங்கள் என்பதில் ஒரு ஒன்றுபட்ட தன்மை நமக்கும் வடவர்களுக்கும் ஏற்பட்டது தவிர, கலாச்சாரத்தில், நாகரிகத்தில் மொழியில், முன் வரலாறு நிகழ்ச்சிகளில், வடக்கையும் தெற்கையும் ஒன்று படுத்தி ஒரினமாக்கக்கூடியது எதுவும் இல்லை. வெள்ளையனுடைய இந்தியா என்னும் பொது சர்க்காரின் கீழ் வாழ்ந்த, கடந்த இருநூறு ஆண்டுகளில்கூட அது ஏற்படவில்லை. அது ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க ஆயிரம் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துக் கூறலாம்.

“ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பல மாதங்களுக்கு முன்பு பீகாரில் பஞ்சம் வருமோ என அந்த சர்க்கார் அஞ்சிப்பஞ்ர நிவாரணத்திற்காகச் சில பணிகளை மேற்கொண்டனர். அவைகளில் ஒன்று வாய்க்கால் வெட்டுவது. அந்தச் சமயத்தில் நேரு அவர்கள் அத்தகைய வாய்க்கால் வெட்டுமிடம் ஒன்றிற்குப் பறந்து சென்று அங்கு குதித்தார். சட்டையின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்தவனிடமிருந்த மண்வெட்டியைப் பிடுங்கினார். விழியால் போட்டோக்காரனை அழைத்தார். அவன் படம் எடுத்தான். இவர் வெட்ட ஆரம்பித்தார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு விளம்பரப் பிரியர் என்பதற்கல்ல, பீகாரில் பஞ்சம் என்றதும் அவருடைய சதை ஆடுகிறது! உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், துயர்ப்படும் ‘அவரது’ மக்கள் மத்தியில் சென்று ஆறுதல் கூறவேண்டுமென்ற அக்கறையும் பிறக்கிறது. அதுமட்டுமல்ல; நம்மெல்லோருக்கும் பொதுவான டில்லி கஜானாவிலிருந்து பீகார் பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு 4 கோடி ரூபாய்வரை உதவவும் அவருக்கு ஆசை பிறக்கிறது. அதேநேரத்தில்கூட அல்ல, கடந்த 6 வருட காலமாகத் தென்னாட்டில் நாடு முழுவதும் பஞ்சம். பஞ்சப் பிரதேசங்களை வந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் இல்லை. பலமுறை கெஞ்சித் தெண்டனிட்டுக் கேட்டும் நேருவின் சர்க்கார் ஒரு தம்பிடி கூட நம்மிடமிருந்து பறித்த பணத்தில் உதவியதாகவோ, கடனாகவோகூட அளிக்கவில்லை. மேலும், அண்மையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் பெரும் புயல் அடித்து, மக்கள் நடுங்கும் குளிரில் தெருத் தெருவாக அலைந்தனர், ஒண்டக்கூட இடமின்றி, நேருவுக்குத் தோன்றவில்லை, அந்தத் துயர்ப்படும் மக்களைப் பார்க்கவேண்டுமென்று. ஆனால், அதே நேரத்தில், புயலால் தாக்குண்ட பிரதேசத்திற்கு முந்நூறு மைல் தொலைவில் திருவிதாங்கூர் கொச்சிராஜ்யத்தில், டில்லியின் அரசியல் புழுக்கத்தினின்றும் ஓய்வு பெற, சில நாட்களை உல்லாசமாகக் கழிக்க வந்திருந்தார். உப்பங்கழிகளில் உல்லாசப் படகேறிக் குடும்பத்தோடு இன்பப் பொழுது போக்கினார், கேரளத்துக் தென்னஞ் சோலைகளினூடே. பின் அது சலித்தபோது மலைமீதேறி அங்கு அடவியில் உள்ள வனவிலங்குகளான யானைகளையும், புலியையம், ஓநாயையும், மானினங்களையும், கரடிகளையும் கண்டுகளிக்க விரும்பினார். மலையில் மகாராஜாவின் கண்ணாடி பங்களாவில் இரவு முன்னேரத்திற்கே சென்று பலகணி வழியே கீழே ஓடும் கானாற்றில் நீர் பருகவந்த விலங்குகளையும், நிலவொளியில் காதல் புரியும் காட்டானை ஜோடிகளையும் கண்டு ரசித்துக் களிப்படைந்துகொண்டிருந்தார் எனச் சேதி வந்தது.

“இதை ஏன் இவ்வளவு ஆத்திரமாகக் கூறுகிறேன் என்றால், பீகாரில் பஞ்சம் என்றதும் துடித்த அவரது உள்ளம், ஆடிய அவரது உடம்பு, தமிழகத்தில், ராயல் சீமையில் பஞ்சம் என்றபோதும், தஞ்சையில், திருச்சியில், புயல் என்றபோதும் ஆடாமல் அசையாமல் அமைதியாக—புதுவித இன்பங்களைத் தேடிக்கொண்டிருந்தது என்பதைப் புரியாதவர்கள் புரிந்துகொள்ளவேண்டு மென்பதற்காகவே இதைச் சொல்லுகிறேன்.

“இந்தனைக்கும் வடநாட்டாருக்குள்ளேயே நேரு ரொம்பவும் யோக்கியமானவர், கருணையுள்ளவர் என்று பெயர். இவரே, ‘ரோம் நகரம் பற்றி யெரியும்போது பிடில் வாசித்த நீரோ’வாகிவிட்டார் என்றால், இனி இவருக்குப் பின் வரும் இவரது வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.

 

“ஆகவே, இந்தியாவுக்குப் பெயரளவில் சட்டரூபமாய் வெள்ளையரும் வடவரும் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தால் ஒரு சர்க்கார் என்றாகிவிட்டதே யொழிய, இந்தியர்கள் என்று ஒரு இனம் தோன்றவில்லை. அவர்களுக்கு முன்னும் இருந்ததில்லை. இனியும் தோன்ற வழியில்லை. நமக்குத் தலைவன் வடநாட்டில் இல்லை. வடநாட்டில், வடநாட்டு மக்களுக்குப் பாடுபடும் வடநாட்டுத் தலைவர்கள் தாம் உண்டு. நமக்குத் தலைவர்கள் நம் நாட்டில்தான் தோன்ற முடியும். வீணே வடநாட்டுக்காரர்கள் சிலரை நம் தலைவர்களென நம்புவதும், அங்கு தலைவர்களைத் தேடுவதும் வீண்வேலையாகும். ஆகவே, இன்றைய திராவிட மக்களின் வாழ்க்கை நிலையும், வடவர்கள், அவர்களின் தலைவர்கள் ஆகியோருடைய எண்ணங்களும் செயல்களும் எல்லாம் திராவிடநாட்டுப் பிரிவினை ஒன்றுதான் திராவிடரின் நல்வாழ்வுக்கு வாக்குறுதியாய் இருக்கமுடியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.

“அடுத்து, நம் மக்களிலே சிலருக்கு ஓர் அச்சம் உண்டு. இந்தியா இவ்வளவு பரந்த நாடாய் இருப்பதால்தான் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. பக்கத்து நாடுகள் படையெடுக்கப் பயப்படுகின்றன. பிரிந்து சிறுசிறு நாடுகளாய்ச் ‘சிதறி’ விட்டால், பழையபடி ஏதாவது ஒரு அன்னிய அரசு வெள்ளையனைப் போல மீண்டும் அடிமை கொண்டு விடும் என்று அஞ்சுவோரும் உள்ளனர். திராவிட நாடு கூடாதென்பதற்கு அந்த அச்சத்தை வாதமாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர்.

“இன்றைய உலகு ‘பானிப்பட்’, ‘பிளாசி’, ‘வந்த வாசி’ காலத்திலில்லை. நவாபுகள், சுல்தான்கள் காலமல்ல. இன்றைய உலகில் ஒரு நாட்டின் பாதுகாப்பு அதன் பரப்பு எவ்வளவு என்பதிலேயோ, இராணுவம், விமானங்கள், கப்பல்கள் ஆகியவை எத்தனை உண்டு என்ற கணக்கிலேயோ இல்லை. அந்தந்த நாட்டு மக்களின் விவேகத்திலும், அவர்களுக்கு அமையும் தலைவர்களின் ஆற்றலிலும், நாணயத்திலும்தான் ஒரு நாட்டின் பாதுகாப்பு இருக்கிறது. முன்புபோல் ஒரு நாடு சின்ன நாடாய் இருக்கிறது என்பதற்காக வம்பிழுத்து ஒரு பெரியநாடு போர்தொடுத்து விட முடியாது. மற்ற நாடுகள் வாளா இரா.

“ஆகவே, ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது இராணுவத்தின் அளவையோ, பரப்பளவையோ பொறுத்ததல்ல, திராவிடம் சிறுநாடு. ஆகவே பாதுகாப்பில்லை, என்பது பத்தாம்பசலிகளின் பேதைமைக் கூற்றே தவிரவேறில்லை.

“நாளுக்குநாள் திராவிடநாட்டுப் பிரிவினையின் அவசியத்தை வலியுறுத்தக்கூடிய வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இச்சமயத்தில் திராவிடத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் திராவிட விடுதலையைக் குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல் வேறு எத்தகைய உலகமகா மேதாவிகளின் தத்துவங்களை இலட்சியங்களாகக் கொண்டிருந்தாலும், அது மக்களையும் வாழவைக்காது தானும் வாழாது!”

அறியாப் பருவத்தில், ஆர்வத்தின் மிகுதியினால், ஆகுமா ஆகாதா என்பதறியாமல், காலம்போகும் போக்குத் தெரியாமல், லால்குடியில் பேசிவிட்டேன் — நானென்ன மாறுதலின் மேன்மையை அறியாதிருக்க வேண்டுமா, என்று கேட்கப்படுமேல், இதனைக் கூறுவேன். அந்த ஆர்வமும் நம்பிக்கையும், 1959, செப்டம்பர் 12, 13, நாட்களில், பூவிருந்தவல்லியில் நடைபெற்ற, தி. மு. கழக மாநட்டின் போதுகூட அல்லவா, கேட்போருக்கு எழுச்சியூட்டிற்று. ‘திராவிடநாடு’ எனும் இலட்சியத்தைக் குலைத்து, குறைத்து, பழிதேடிக் கொள்ளாதீர்கள் என்றல்லவா, சந்தேகப்படுவர்களை, ஆயாசப்படுபவர்களை எச்சரித்தார்.

“தமிழகத்தில் சிலர் குறைகூறுகிறார்கள் — ஏன் கேரளத்தையும் ஆந்திரத்தையும் கருநாடகத்தையும் சேர்த்துக் கொண்டு போகவேண்டும் என்று அவர்கள் அவசரக்காரர்களும் ஆற்றலற்றவருமாவர். ஆத்திரப்பட்டு இப்படிப் பேசுகிறார்கள். நம்மிடம் ஆற்றலும் இருக்கிறது; நீண்ட ஆயுளும் இருக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் நாம் நடைபோட்டால் அந்த உண்மைப் பாதையில் வெற்றிபெற முடியும் அவசரப்படுவோமானால் நடைபெறவேண்டிய நல்ல காரியத்தைக் குலைத்த பழி வருமே தவிர, நாட்டுக்கு நல்லதாகாது.”

1959-ல் இந்த ஆர்வம் இருந்தது, இப்போது அவநம்பிக்கை வரக்காரணம்?

1959-க்குப் பிறகு, பல நாடுகள், விடுதலை பெற்றதைப் படித்தோம்.

தனி அரசு நடத்தக்கூடிய வசதியற்றவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறத்தக்க நிலையில் உள்ள நாடுகள் கூட விடுதலை பெற்று—பிறநாடுகளை விடுவிக்கும் வீரப்பணியில் ஈடுபட்டிருக்கக் காண்கிறோம். இப்போது ஏன் அவநம்பிக்கை? கொடுத்ததைக் கொடுங்கள் என்று நாம், கீழே இறங்கிக் கை ஏந்தவேண்டிய அவசியம் என்ன வந்தது? என்னவோ, வட நாட்டு ஏகாதிபத்தியம் நம்மைச் சந்தித்து, “நீ கேட்பது மிக அதிகம் அப்பா! அவ்வளவு தரமுடியாது! கொஞ்சம் பெரிய மனது செய்து, நீ கேட்பதன் அளவைக் குறைத்துக்கொள். குறைத்துக்கொண்டால், தருகிறேன்” என்று சமாதான உடன்படிக்கைக்கு வந்து நிற்பதுபோலவும், இந்தச் சமயத்தில், நாம் சிறிது விட்டுக் கொடுத்து, சமரசமாகிக், கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு திருப்தி அடையவேண்டும் என்ற கட்டம் வந்ததுபோலவும் இப்போது நாம், நமது கோரிக்கையைக் குறைத்துக்கொள்ளக் காரணம் என்ன? கழகத் தோழர்களையோ, பொது மக்களையோ நாம் இப்படி ஒரு மாறுதலுக்குத் தயாராகுங்கள் என்று கூறிக்கொண்டு இருந்திருக்கிறோமா?

பழி ஏற்படும்! பாதையை மாற்றாதீர்கள் !!—என்று கழக மாநாட்டிலே 1959-ல் பேசுகிறோம். இப்போது கிடைக்கக் கூடியதைக் கேட்போம்—நடக்கக் கூடியதைப் பார்ப்போம் என்று பேசுவதா ! நாம், எந்தெந்த நேரத்தில் மாறுகிறோமோ, அதே வேளையில், நமதுமுன் பேச்சுக்களைக் கேட்டு நம்பிக்கை கொண்டு, நாம் காட்டிய வழிநடந்து கஷ்டநஷ்டம் ஏற்றவர்கள் சரி ! அவர்கள் மாறிவிட்டார்கள், நாமும் மாறிவிடலாம், என்று வந்துவிடவேண்டுமா ? வந்துவிடுவார்களா ? முறைதானா அது ?

இதற்கு, பெரியார், திராவிடநாடு, வெங்காயநாடு என்றாரே, அப்போதே, ஆமாம் ! வாடைகூட அடிக்கிறது என்று கூறி, விட்டுவிட்டு வந்துவிட வேண்டும், என்று யோசனை கூறியிருக்கலாமே. அவராவது, கேட்கும்போது ஒருகணம், நியாயந்தான் என்று எண்ணத்தக்க காரணத்தைக் காட்டினாரே ! எல்லாம் ஒண்ணா இருந்தானுங்க — திராவிடநாடு கேட்டோம்—இப்பத்தான் ஆந்திராக்காரன் போயாச்சி — மலையாளத்தான் பிரிஞ்சாச்சி—கன்னடத்தானும் போனான்—இப்ப ஏன் திராவிடநாடு, வெங்காயநாடு?”—என்று பேசினாரே. அப்போது கழகத்தவரைத் கூட்டி திராவிடநாடு, பகற்கனவு என்று சொல்ல முற்பட்டோமா? தவறு, என்றாவது தோன்றிற்றா நமது மனதுக்கு? அவர் சொல்லிக்கொள்ளட்டும், நமக்குக் கவலையில்லை, என்று சொன்னோம். சொன்னோமா? சொன்னார்! யார் ? தோழர் சம்பத்து, 1959 அக்டோபர் 17, 18-ல் சென்னை மாநாட்டில்—தெளிவாக—அழுத்தந்திருத்தமாக;

 

“ஆந்திரத்தில் நம் கழகம் இல்லை என்று காங்கிரசுக்காரர்கள் சொல்வதற்காக நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு, நமது இலட்சியத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நாம் பொறுப்புள்ளவர்கள். அவசரத்தினாலும் சில்லறையில் உள்ள நாட்டத்தினாலும் தமிழ்நாடு போதும் என்று சொல்லுபவர்கள் சொல்லட்டும்—நமக்குக் கவலையில்லை.”

இப்படிப் பேசிவிட்டு இப்போது தமிழ்நாடு போதும் என்று இவரே பேசினால், கேட்பவர்களுக்கு என்ன சொல்லத் தோன்றும்? பெரியார், தமிழ்நாடு போதும் என்று சொன்னதற்கு இவர் என்ன பதில் சொன்னாரோ, அதேதானே நினைவிற்கு வரும் ! அதைத்தானே சொல்லத் தோன்றும் !

திராவிடநாடு திராவிடருக்கே எனும் இலட்சியம் இன்று ‘பகற்கனவு’ பட்டியலில் சேர்க்கப்படுகிறது. எனக்கோ, தம்பி ! அந்த இலட்சியத்திலே இம்மி அளவும் பற்றுக் குறையவில்லை; நம்பிக்கை தளரவில்லை; எனினும் என்னால், அதனை, தோழர் சம்பத் சொன்னதுபோன்ற அழுத்தந்திருத்தமான முறையிலே சொல்லத் தெரியவில்லை. அதனால், மறுபடியும், அது குறித்துத் தோழர் சம்பத் பேசியிருப்பதைத்தான், நான் மேற்கோள் காட்ட நேரிடுகிறது. இது 1958-ல் திருவாரூரில் நடைபெற்ற தி. மு. க. மாநாட்டில் பேசியது:

“இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் மாஜினி மக்களைப் பார்த்துச் சொன்னான்: ‘இந்த நாட்டினுடைய சுதந்தரத்திற்கான தலைப்பைத் தந்துவிட்டோம். அதனுடைய அத்தியாயங்களை எழுதவேண்டியது உங்கள் கடமை” என்று.

“அதைப்போலத்தான் நம்முடைய அரிய தலைவர் அண்ணா அவர்கள் திராவிடநாட்டின் எதிர்கால வாழ்வுக்கான நல்ல தலைப்பைத் தந்திருக்கிறார்கள். அதுதான் ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்பது. அதனுடைய அத்தியாயங்களை, பாகங்களை, வரிகளை எழுத வேண்டிய கடமை உங்களிலே எல்லோருக்கும் உண்டு என்பதை எண்ணிக்கொள்வேன்.”

தம்பி ! நம் எல்லோர்க்கும் உள்ள கடமையைக் கவனப்படுத்தியவர், இன்று சொல்வது என்ன ? அதுவும் 7—4—61-ல், தி. மு. கழக வரலாற்று வெளியீட்டு விழாவை நடத்திவைத்துவிட்டு, 9—4—61-ல் தி. மு. கழகத்தைவிட்டு விலகி, 19—4—61-ல் திராவிடநாடு பகற்கனவு; தமிழ்நாடு தான் பலிக்கும் என்று பேசுகிறார்.

உன்னாலும் என்னாலும் முடியுமா இந்த மின்னல் வேக மனமாற்றம்— திடீர் முடிவு ?

மனமார, நம்பிக்கை சரிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். கூட்டுத் தோழர்களிடம் அதுபற்றிப் பேசி அவர்களைத் தம் கருத்துக்கு இசைவுதரச் செய்யும் முயற்சி நடைபெற்றதா ? இல்லை ! முதலில் விலகல்—பிறகு விளக்கம்—பிறகு புதுக்கட்சி—புதுக்கொள்கை ! இது, எண்ணிப் பார்க்கும்போதே எவரையும் திடுக்கிடவைக்கக் கூடியதல்லவா !

தமிழ்நாடுகூடப் பிரிய வேண்டுமென்பதல்ல, அவருடைய கட்சியின் குறிக்கோள்.

தமிழரசு—தமிழர் தனி அரசு—தனித் தமிழகம்—இவை அல்ல.

வேண்டும்போது பிரிந்து போகும் உரிமை, சட்டப்படி தரப்படவேண்டும்.

உரிமை தரப்பட்டால் பிரிந்தே போய்விடுவோம் என்று எண்ணற்க ! இந்தியக் கூட்டாட்சியிலேயே இருப்போம்— தேவைப்பட்டால் பிரிந்து போவோம்—இது குறிக்கோளாம்.

விளக்கங்கள் தொடரக்கூடும்.

ஆனால் இதிலிருக்கும் விசித்திரம் வெளிப்படை !

பிரிவினை உரிமையை ஒப்புக்கொள்ள, சட்டத்திலேயே அதற்கு இடம் கிடைக்கத்தக்க மாறுதலைச் செய்தளிக்க இந்திய சர்க்கார் இசையுமானால், பிரிவினையையே ஒப்புக்கொள்ளமே !

எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகும் உரிமையையும் கொடுத்துவிட்டு, கூட்டு வாழ்க்கையையும் நடத்த, இந்தியத் துரைத்தனருகில் உள்ளவர்கள் என்ன ஏமாளிகளா ? அரசியல் அறியாத அப்பாவிகளா ! புரியவில்லை.

போகட்டும், தமிழ்நடு பாரதத்தில் இருந்து பிரியும் உரிமை வேண்டும் என்று கூறினால், வாய் வெந்து விடாது என்ற நிலையாவது நிலைத்து நிற்கட்டும். இனி, மற்றோர் பிரச்சினையைக் கவனிப்போம். தம்பி! இது கலைஞர்களைப் பற்றியது ! மிகக் கசப்புத் தந்துவிட்டிருக்கிறதாம் கழகத்தின் போக்கு, இதிலே ! அந்தக் கசப்புக்கு மருந்து பிரிவினை ! திராவிட இனமக்களின் வாழ்க்கையிலே ஒரே கசப்பு—இருந்தும் அவர்களுக்கும் ‘பிரிவினை’ உடனடியாக வேண்டாம்— பிரிந்துபோகும் உரிமை மட்டும் இருந்தால் போதுமாம். ஆனால், கலைஞர்கள் கழகத்தில் இருப்பதால், ஏற்படும் விளைவுகள் மெத்தக்கசப்பாக இருப்பதால், கழகத்தை விட்டு இவர் போகிறார், என்ன நியாயமோ ! ஏனோ, அந்தக் கசப்பு ஏற்படாதபடி, கலைஞர்களுக்கும் கழகத்துக்கும் தொடர்பு எந்த அளவில் இருக்கவேண்டும், எப்படி அது பக்குவப்படுத்தப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும் என்பதை இங்கு இருந்தே எடுத்துச் சொல்லிக், கழகத்தைச் செம்மைப்படுத்தியிருக்கக்கூடாது? இருக்கட்டும்—யார் இந்தக் கலைஞர்கள் ! மேடைதோறும், எப்படி எப்படிப், படக்காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது பற்றிப் பேசிப் பேசி, நம்மை ஐந்தாண்டுத் திட்டத்தைப்பற்றி, அரிசி நிலைபற்றி, அங்காடிப் போக்குப் பற்றியெல்லாம் சிந்சிக்க ஒட்டாது தடுத்துவிடும், பொல்லாதவர்களோ ! எந்தக் கலைஞரும், கலைபற்றி அல்ல, கழக நிலைபற்றித்தான் பேசிடக் கேட்கிறோம். என்ன இருந்தாலும்………என்று, கூறுவது எதை விளக்குகிறது? பிடிக்கவில்லை என்று தெரிகிறது. பிடிக்கவில்லை என்றால், என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கு இதுபற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம்; கூடிப் பேசலாம்; சிக்கல் போக்கலாம்; செம்மைப்படுத்தலாம். செய்தாரா? இல்லை ! கலைஞர்களைவிட அவர்களுடன் தொடர்புகொண்டுள்ள கழகத் தோழர்களில் சிலர்மீது உள்ள கோபம்தான் வெளியே கொட்டப்படுகிறது. திட்டம் எதனையும் காணோம்.

பேசத்தெரியாத, எந்தப் பிரச்சினையிலும் தொடர்பு கொள்ளாத, ஒப்புக்கு ஒரு கட்சியிலே அலங்காரப் பொருளாக இருக்கும் நிலைமட்டும் போதும் என்று உள்ள கலைஞர்களாக நமது கலைஞர்கள் இருப்பார்களானால், பிரச்சினையே எழாது என்று எண்ணுகின்றனர். ஆனால், நம்மிடம் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மக்கள் கலைஞர் !

தம்பி ! இது என்ன புதுப்பட்டம் என்று என்மீது கோபித்துக்கொள்ளாதே. கவிஞர் கண்ணதாசன் கை எழுத்திட்டுத் தமது ‘தென்ற’லில் தீட்டியுள்ள அழகு நடைதவழும் தலையங்கம் இது, அது, இதோ !

“மக்களின் எண்ணம் இப்போது வெகுதூரம் முன்னேறி விட்டது. எந்தத் துறையில் பணி செய்பவனும் தங்களிடம் ஒட்டியிருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் பிறந்திருக்கிறது. கலைஞனாயினும், ஓவியனாயினும், அலுவலக ஊழியனாயினும் அவனது எண்ணத்தில் பொது நலம் நிறைத்திருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த நினைப்பின் எதிரொலியாகத் தங்களை அண்டி வருவோரைத் தலையில் தூக்கி வைத்துக்கொள்கிறார்கள். சமீபகாலத்தில், இந்நிலை மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சமுதாயச் சிந்தனையுள்ள எவனும் மக்களால் ஒளிபொருத்திக் காட்டப்படுகிறான்.

“இன்றையக் கலைஞர்களுக்கு, அரசியல் ஆர்வம் பிறத்திருப்பதற்குக் காரணம் இதுதான். இவர்களிலே சிலருக்குத்தான் மக்களோடு ஒட்டிப்போகும் முறை தெரிந்திருக்கிறது. எங்கெங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பண்பு தெரித்திருக்கிறது. இவர்கள் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்று வருகிறார்கள். மக்களைக் கவரமுடியாதவர்கள் என்னதான் மறுத்துரைத்த போதிலும் தெளிவான ஒரு கொள்கையின்மீது நிற்கின்ற கலைஞர்கள் எந்நாளும் வீழ்ச்சியுற மாட்டார்கள் என்பது உறுதி. ஒரு கலைஞனுக்கு சுய சிந்தனை இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால், அவன் போக்கில் தெளிவு வேண்டும். நேற்றுச் சொன்னதை இன்று மாற்றிக்கொள்ளாத பக்குவம் வேண்டும். தன்னலத்தைவிடப் பொதுநலத்தில் அவனுக்கு அதிக அக்கறை வேண்டும். இப்படிப்பட்ட கலைஞர்கள் எக்காலத்திலும் குன்றேறி நிற்கமுடியும்.

“கலை வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல என்று கூறுவார்கள். ஓரளவுக்குத்தான் இது உண்மையாகும். பெரும்பாலும் கலையை ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கொள்ளலாம். அப்படிக் கொள்கிற நேரத்திலேயே ஒரு கருத்தை உருவாக்கலாம். நளினப் பண்பு இல்லாமல், வறட்டுத்தனமாகக் கருக்கைத் தொடுத்து, கலையைக் கருத்துச் சாதனமாக்குவதில் வெற்றி பெறமுடியாது. பொழுது போக்கு அங்கங்களிலேயேதான் கருத்தைச் சொல்லவேண்டும். இப்படிச் சொல்லப்படும் கருத்து எல்லோராலும் வரவேற்கப்படும். சொல்கின்றவன் எல்லோராலும் புகழப்படுவான். நளினமான ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அந்தக் கதையில் வரும் அங்கங்களைக் கதைப் போக்கிலேயே விட்டு, சந்தர்ப்பங்களை மோதுவதன் மூலம் ஒரு நல்ல கருத்தை உருவாக்குவது நல்ல கலைக்கு அழகாகும். பொழுதுபோக்க வருகின்றவர்களுக்கும் இது பாடமாரும் இப்படி உருவாக்குவோர்தான் மக்கள் கலைஞர்களாக ஆக முடியும். அண்ணாவின் ‘வேலைக்காரி’, கருணாநிதியின் ‘பிராசக்தி’ இவை இரண்டும் இந்த முறையில் பிறந்தவையே. இவற்றின் தொடர்ச்சி புரட்சி நடிகரின் ‘நாடோடி மன்னன்’. ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே மக்கள் கலைஞர்களாக மலர்ந்து வருகிறார்கள் என்றால், இந்தக் காரணத்தைத்தான் நான் காட்டுவேன். களைப்பை நீக்கும் ஆடல் பாடலோடு, இளைப்பை நீக்கும் கருத்தைக் கொடுத்து மக்களோடும் பழகி உறவாடி வருவதால் மக்கள் கலைஞர்கள் என்ற பதத்திற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களாகிறார்கள்.

“இன்றையத் தமிழுலகில் ஈடு இணையற்ற செல்வாக்குப் பெற்ற கலைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருக்கிறார்கள். கழகத்தில் இருப்பதாலேயே இவர்களின் வலிவும் பொலிவும் அதிகரித்திருப்பது உண்மை. கழகம் என்றால் என்ன ? வெறும் கட்சி என்பதைவிட ஒரு கருத்து என்பதே பொருந்தும். அந்தக் கருத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், எதிர்காலத்திலும் உறுதியான தொடர்புடையது. அதனால்தான் கழகக் கலைஞர்கள், கருத்துக் கலைஞர்களாக, மக்கள் கலைஞர்களாக மலர்கிறார்கள்.

 

“அண்மையில், மதுரையிலும் சென்னையிலும் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் கூறலாம். புரட்சி நடிகருக்கு மதுரையில் தங்கவாள் பரிசளிக் கப்பட்டபோது, கூடியிருந்து உற்சாகக் குரல் கொடுத்த பல இலட்சம் மக்களும், அவரது கருத்துக்கு மதிப்பளித்தார்களே தவிர, திறமைக்கல்ல. இதனைச் சென்னையில் நடைபெற்ற ‘நாடோடி மன்னன்’ நூறாவது தின விழாவில் பல இலட்சம் மக்களுக்கிடையே புரட்சி நடிகரே குறிப்பிட்டார். ஆம்; அவரை மக்கள் கலைஞராக மக்களே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

“வெளியில் எரிகிற வயிறுகள் எரிந்துகொண்டுதானிருக்கின்றன; நாமும் சில கலைஞர்களைச் சேர்த்துக்கொள்வோம், என்று சிலர் எரிந்துபோன சுள்ளிகளைக் கொண்டு வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எந்தெந்த வழிகளைக் கையாண்டாலும், எத்தனை வழிகளில் தாக்கப் பார்த்தாலும் நம்மைப் பலவீனப்படுத்துவதோ, நமது கலைஞர்களைச் சாய்த்துவிடுவதோ அவர்களால் ஆகாது. தங்களையாவது மக்கள் மன்றத்தில் உயர்த்திக்கொள்ள முடியுமா என்றால், அதுவும் நடக்காது. சென்னையில் ‘நாடோடி மன்னன்’ விழாவில் ஒரு உண்மையை நான் கண்டேன். கழகத்தின் கருத்துக் கொண்ட கலைஞர்களைத்தான், மக்கள் கலைஞர்களாக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆம்; காலமும் கருத்தும் என்றும் நம் பக்கமே இருக்கும் ! வாழ்க மக்கள் கலைஞர் !”

அதுமட்டுமல்ல, தம்பி ! திராவிட முன்னேற்றக் கழகத்தினர், திரைக்கதையிலேயும், வசனத்தின் மூலம் கருத்துகளைக் குழைத்து ஊட்டி வந்த நாம், சட்ட மன்றத்துக்குள்ளே நுழைந்த பின்னர், நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வாய்ப்புக் கிட்டியபோதெல்லாம், நம்முடைய திரையுலகப் பணியைக் கேலி பேசி வருகிறார் என்பதை அறிந்து, கலைத்துறைப் பணியின் மேன்மையை விளக்க அதே ‘தென்றல்’ இதழில் வெளியான மற்றுமோர் பகுதியையும் உன்னுடைய பார்வைக்குக் கொண்டுவருகிறேன்;

“தி. மு. கழகம் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு, நிதியமைச்சர் சுப்பிரமணியம் திரைப்படங்களைக் கேவலமாகப் பேசுவதையும், கதை, வசனம் எழுதுவது கடினமான காரியமல்ல என்று இழித்துரைப்பதையும், பழக்கமாகக் கொண்டிருப்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நிதியமைச்சர் சுப்பிரமணியம் கருதுவதைப்போல கதை, வசனம் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல; கோடிக்கணக்கான மக்கள் வாழும் தென்னாட்டில், நூற்றுக்கணக்கான பேர் கதை, வசனம் எழுதுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை ஒருகணம் ஆராய்ந்தால், கதை, வசனம் எழுதுவதிலும் ஏதோ ‘சூட்சமம்’ இருக்கத்தான் செய்கிறது என்பதை எவரும் உணரமுடியும். கதை வசனம் எழுதுபவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதாக அவர் கணக்குப்போடுவது தவறு. ஒருவேளை தி. மு. க.-வைச் சேர்ந்தவர்கள் கலைத்துறையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால், ‘அரசியல் துறையிலே மட்டுமல்லாமல் கலைத்துறையிலும், இலக்கியத் துறையிலும், தி. மு. கழகத்தினர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கின்றனர்’ என்ற மெய்யுரையைத் தெரிவித்தாகவேண்டுமே என்பதற்காக நிதியமைச்சர் கதை, வசனத்தைக் குறைத்துப் பேசக்கூடும்.

“தமிழகத்தில், நாடகங்கள் மிகக்குறைவு என்று பெரிய பத்திரிகைகளெல்லாம் அலறித் துடிக்கின்றன. போட்டிகள் நடத்துகிறார்கள். அந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளில் நமது சுப்பிரமணியமும் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய வாயால் பரிகசிக்கப்படும் தொழிலுக்கு, தானே பாராட்டுரை வழங்கி, பரிசையும் தர ஒப்புதல் தந்திருக்கிறாரென்றால், உண்மையிலேயே அவர் கதை, வசனத்தைக் குறை கூறுகிறாரா, அல்லது அந்த ஆற்றல் தி. மு. க.-வினர் இடத்திலேயே நிறைந்துவிட்டது என்பதற்காகக் குறைத்துப் பேசுகிறாரா என்பது மக்களுக்குத் தெரிந்தாகவேண்டும்.

“தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான சாமிநாதசர்மா அவர்கள், தமிழகத்தில் நாடகங்கள் குறைந்து விட்டனவே என்று மெத்த வருத்தப்பட்டுச் சென்ற கிழமை பேசியிருக்கிறார். சென்னை மாநிலத்தின் கவர்னராக இருந்த பி. வி. இராசமன்னார் அவர்கள், ‘கதை, வசனம் எழுதச் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன்’ என்கிறார். ஆனால், அமைச்சர் சுப்பிரமணியம் கதை, வானம் எழுதுவது மிகச் சுலபம் என்கிறார். அரசியல் கடினம் தான், அதற்காகக் கதை, வசனம் எழுதுவது இலகுவானதாகிவிடுமா ?

“ஆரம்ப காலத்தில் ‘கல்கி’ ஒரு படத்திற்கு வசனம் எழுதியபோது அவரைப் புகழாத காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. வான்முட்ட வர்ணித்தார்கள். ‘இதுவன்றோ அமர சிருஷ்டி’ என்றார்கள். படம் விழுந்தது. பாராட்டுக்கள் காற்றோடு கலந்தன, தன் கரம் பட்டால் கரியாகும் காரியம், எதிரியின் கரம் பட்டால் பொன்னாகும் போது, சொந்தக் கரத்தை நொந்துகொள்ள மனமில்லாமல், அந்தக் காரியத்தையே குறைத்துப் பேசுகிறார்கள்.

“காங்கிரஸ் கட்சி, வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய காலத்தில் பொதுமக்கள் உள்ளத்திலே இலட்சிய வேட்கையை எழுப்பக் காங்கிரசார் என்னென்ன செய்தார்கள் ?

“நாடகங்கள் நடத்தவில்லையா ? கே. பி. சுந்தராம்பாளைக் கேட்டால் தெரியும் !

“தலைவர்கள் நடிக்கவில்லையா ? சத்தியமூர்த்தி நடித்திருக்கிறார் !

“பாடல்கள் இயற்றவில்லையா ? பாரதியார் பாடல்கள் என்ன, குப்பையா, கூளமா ? அத்தனையும் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பாடிய தீப்பொறிகள் அல்லவா !

“நாடகம், இலக்கியம் அவசியம்தான் ; ஆனாலும், அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், கவிக் குயில் சரோஜினிதேவியார் கவர்னராகப் பணி புரிந்ததையும், நாவல் நாடக—ஆசிரியரான முன்ஷி உணவு மந்திரியாக இருந்ததையும், சிறந்த எழுத்தாளரான சந்தானம் கவர்னராகப் பணிபுரிந்ததையும், காலஞ்சென்ற கல்வி யமைச்சர் ஆசாத் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதையும், சுப்பிரமணியம் மறந்துவிட்டார் என்பதைத் தவிர, வேறு பொருளில்லை.”

அவரும் கலை உலகினர் ; எனவே, அவ்விதம் பேசுகிறார் என்று வாதிடத்தோன்றும். சரி, தோழர் சம்பத்தையே அழைக்கிறேன் ; கேட்டுத்தான் பாரேன், அவர் கருத்தையும், இந்தப் பிரச்சினையில் !

கழக மாநாடு ! கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது ! காங்கிரசார் முகத்திலேயோ எள்ளுங் கொள்ளும் வெடிக்கிறது. இதனை உணர்ந்து, தோழர் சம்பத் விளக்கம் அளிக்கிறார் ; கேண் மின் !

 

“கழகக் கலைஞர்கள் எல்லாம் ஏதோ திடீரெனக் கழகத்திற்கு வந்தவர்கள் அல்லர். இராசேந்திரனை எடுத்துக் கொண்டால் அவர் என் எதிரில் வரப் பயப்பட்டுக்கொண்டிருந்த பருவத்திலிருந்து இன்று வரை கழகத்தில் இருப்பவர்.

“அப்படியேதான் பிறரும்—பல காலமாகக் கழகத்தில் இருப்பவர்கள்.

“அவர்கள் கழகத்தில் இருப்பதற்குக் கழகத்தால் கலையே வளருகிறது என்பதும் ஒரு முக்கியமான காரணம்.

“கழகத்தில் உள்ள கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பேசுவதையேகூட நான் விரும்புவதில்லை.

“கழகத்தில் சில டாக்டர்கள் இருக்கிறார்கள், சில என்சினியர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், உழவர்கள் இருக்கிறார்கள், தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களைப்போலவே சில கலைஞர்களும் இருக்கிறார்கள்’ அவ்வளவுதான்.”

தெளிவான விளக்கம் அல்லவா ?

தம்பி ! கலைஞர்களுக்கு மட்டும், குடி அரசுத் தலைவருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில், விலக்கு அளித்துவிட்ட ‘மாபாவி’ என்றல்லவா என்னைச் சித்திரிக்கிறார்கள். தோழர் சம்பத், ‘கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்காதீர்கள்—டாக்டர்கள்—என்சினியர்கள் போல அவர்களும் ஒரு தொழிலினர்’ என்கிறார் ; அது போன்றே, விலக்கு அளிக்கப்பட்டது கலைஞர்களுக்கு மட்டுமல்ல ; டாக்டர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கூடத்தான் ! இது ஏன் மறைக்கப்படவேண்டும் ?

 

மறைத்துவிடட்டும், அதனால் குடி முழுகிப் போய்விடாது. கலைஞர்களைப்பற்றி நாமே கூறிய கருத்தை நாமே மறந்துவிடாமல் இருந்தால் அது போதுமானது.

“தி. மு. கழகம் வளர்வதற்குக் காரணம், ‘நாலைந்து சினிமாக்காரர்கள் இருக்கிறார்கள் ; அதனால்தான் அது வளர்கிறது’ என்கிறார்கள். சினிமாக்காரர்கள் கழகத்தில் இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை—மாறாக, தொல்லைதான் அதிகம்.”

இதை நான் கூறவில்லை ; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு விழாவின்போது 6—6—59-ல் தோழர் சம்பத் சொன்னார்.

இந்த விளக்கங்களை எல்லாம் அறியாமல், காங்கிரசார் கண்டபடி பேசி வருவது தோழர் சம்பத்துக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே, மிகக் கடுமையாகக் காங்கிரசாரைக் கண்டித்தாகவேண்டும் என்ற ‘உத்வேகத்தில்’ இதைச் சொன்னார்.

“இந்த இலட்சியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்வதற்கு வகையற்ற நிலையிலே இருக்கின்ற காரணத்தாலேதான், அண்ணாதுரையின் அகலம் என்ன? உயரம் என்ன? என்பதுபற்றியும், நெடுஞ்செழியன் ஏன் இவ்வளவு நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார்? என்ற ஆராய்ச்சியிலேயும், கருணாநிதிக்குக் கலைஞர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள், ஏன் கொடுத்தார்கள் என்கின்ற ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டுப் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

தம்பி ! இந்த ஆராய்ச்சியோடு, காங்கிரசார் நிறுத்திவிடவில்லை. என் பேச்சு, எழுத்து, அதிலுள்ள அடுக்கு மொழி, உவமை, அந்த உவமையிலே உள்ள தன்மை, சுவை இவைபற்றியெல்லாம் ஆராய்ச்சி நடத்தினர். அதன் விளைவுதான், என்னைப்பற்றி மட்டுமல்ல, பொதுவாகக் கழகத்தைக் குறித்தே, மிகக் கேவலமான முறையில்,

கூத்தாடிகள்

கூவிக்கிடப்போர்

அடுக்குமொழியினர்

ஆபாசநடையினர்

காமச்சுவைப் பேச்சினர்

கதை எழுதிப் பிழைப்போர்

என்றெல்லாம் இழிமொழியால் ஏசலாயினர். கேட்டுக் கொண்டேன். அப்போது என் சார்பாக வாதாடி நின்றவர்கள் இன்று, அதே இழிமொழி வீசி என்னை ஏசிட முற்படுகின்றனர். செய்யட்டும், இதையும் தாங்கிக்கொள்கிறேன்.

வைதிகர்கள் சொல்வார்கள், ‘வந்த வழி’ என்று! இது நானாக மெத்தக் கஷ்டப்பட்டு வகுத்துக்கொண்ட வழி. அதற்கு நான் யார்மீது நொந்துகொள்ளமுடியும் ?

ஆனால், நானாக யோசிக்கிறேன். நிலைமை புரிகிறது நம்மோடு இல்லாதவர்கள் வேறு என்ன பேசித்தான் சமாதானம் கூறிக்கொள்ளமுடியும்? பாவம்!

அறிவாளிகள்

அடக்க குணமுடையோர்

அழகு நடையுடையோர்

கலைத்தொண்டு புரிவோர்

மாற்றாரும் மகிழப் பேசுவோர்

மாண்பு காத்திடுவோர்

என்றும் கூறிக்கொண்டு, நமக்கு மாற்று முகாமிலும் எப்படி இருக்கமுடியும்? எனவேதான், ஏககிறார்கள் ! அது அவர்கள் வகுத்துக்கொண்டு தீரவேண்டிய ‘வழி’ ஆகிவிடுகிறது.

 

இது எனக்குப் புரிவதால்தான், எனக்குக் கோபமோ, குமுறலோ, எளிதில் ஏற்படுவதில்லை.

இந்த நிலை அனைவருக்கும் ஏற்பட்டாகவேண்டும்.

அப்போதுதான் அரசியல் என்பது அமளிகளற்ற, கருத்தரங்கம் என்ற தூய நிலை பிறக்கும்.

அந்தக் கருத்தரங்கம், ஒளிதரவேண்டும்—வீணான வெப்பத்தை அல்ல.

வேறுபாடான எண்ணங்கள் எழலாம், மோதிக் கொள்ளலாம், இறுதியில் குழைந்துபோகலாம், வெறுப்புணர்ச்சியாக மாறிடலாகாது.

இது நாடு; காடு அல்ல ! மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று நாம் இயக்கம் நடத்த முற்படுகிறோம்—நாம் முதலில் நல்வழி நடக்கவேண்டும்.

எத்தனை கோபதாபம் ஏற்பட்டாலும்—ஏற்படக்காரணம் ஏற்படினும்—அடக்கம், பொறுப்புணர்ச்சி மறத்தலாகாது, என்பதனையும் இந்த நேரத்தில் அனைவருக்கும் கூற விரும்புகிறேன்—மறந்துவிட்டேன்—பிரிந்துபோனவர்கள், நீ யாரடா எமக்குப் புத்திமதி கூற என்று கோபித்துக் கொள்ளவேண்டாம். முன் தொடர்புகளை அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும், மறந்துவிட இயலாததால், பழக்கம் காரணமாக, அனைவருக்கும் கூறுகிறேன் என்று சொல்லிவீட்டேன். குறை பொறுத்திடுக! என்னை, இப்போதும், ‘அண்ணன்’ எனக் கொள்வது, அரசியல் ரீதியாகப் பார்த்தால்கூடத் தவறுமல்ல, தரக்குறைவுமல்ல என்ற எண்ணம் கொண்டவர்களுக்குக் கூறுகிறேன்;

கொள்கை மறவாதீர் !

கோபத்துக்கு ஆளாகாதீர் !

கூடி வாழ்வது பொறுப்பான காரியம்—அறிவீர்.

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை !

 

 

கட்டுரை – 2

“அவரது அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன். மந்திரி வெங்கடராமன் திராவிடநாடு கோருபவர்களுக்கு விடுத்த அறைகூவலை, மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன்

“அவர் திராவிட நாடு பிரச்சினையை முன் வைத்துத் தேர்தலுக்கு நிற்பதற்குத் தயாராக இருப்பதாகவும், அப்படித் தேர்தல் நடந்தால் காங்கிரசுக்கு இன்னும் 10 இடங்கள் அதிகம் கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

“காங்கிரசைவிடப் பெரும்பான்மை இடங்களைச் சட்டசபையில் தி. மு. க.—வினருக்குத் தருவதன் மூலம் வாக்காளர்கள் தி. மு. க—விடம் தெரிவிக்கும் நம்பிக்கையை, மத்திய ஆட்சியிலிருந்து மாநிலம் பிரிவதற்கான வாக்கு என்று மாநில மந்திரி சபையும், மத்திய மந்திரி சபையும் ஏற்றுக்கொள்ளுமா ? அப்படி வாக்காளர்கள் தி. மு. க—விடம் தெரிவிக்கும் நம்பிக்கையைப் பிரிவினைப் பிரச்சினை மீது நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பாகக் கருதி மாநிலத்தின்மீது தங்களுக்குள்ள பிடிப்பை என்றென்றைக்கும் விட்டுவிட மத்திய சர்க்கார் ஒப்பும் என்று மந்திரி உறுதி கூறுவாரா?”

பலே ! பலே ! இது அல்லவா துணிவு ! வீரம் ! அண்ணா ! நீ எப்போதும் அச்சம், தயக்கம் காட்டும் போக்குடன் இருப்பது வாடிக்கையல்லவோ ! என் போன்றாருக்குக் கசப்புக் கூட ஏற்படுவதுண்டே அந்தப் போக்கினால். நாடு விழிப்புற்று இருக்க, வீரர் குழாம் திரண்டு நிற்க, அவர்தம் விழிகள் வேல் போல் இருக்க, ஏன் இந்த அண்ணன் இன்னமும் கனிவு, தெளிவு என்ற போக்கையே மேற்கொள்கிறார்; ஒரு கை பார்த்தே விடுவோம் என்று வீரமாக முழக்கமிட வேண்டாமோ! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு! ஆமாம், கவிதைகூட நமது தோழர் தீட்டியிருக்கிறாரே, ‘அஞ்சாமை திராவிடர் உடைமையடா !’ என்று, பலமுறை என் போன்றார் சலித்துக்கொண்ட துண்டு, இது மிதவாதப் போக்காயிற்றே; நமது அண்ணன் ஏன் இப்போக்குக் கொள்ளவேண்டும் என்று, சில வேளைகளில் கோபித்துச் கொண்டதுகூட உண்டு. ஆனால், அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன்—திராவிட நாடு பிரச்சினையை முன்னால் வைத்துத் தேர்தலுக்கு நிற்க தி. மு. க. தயார் ! கேளும் நிபந்தனையை என்று அமைச்சருக்குச் சுடச் சுடப் பதில் அறைந்திருக்கிறீங்க ! இஃதன்றே எமக்குக் களிப்பூட்டும் பேச்சு ! இப்படிப்பட்ட முழக்கமல்லவா, எமது இரத்தத்தில் சூடேற்றவல்லது—நரம்புகளைப் புடைத்திடச் செய்வது—என்றெல்லாம்தானே தம்பி ! எழுச்சி பொங்கக் கூறுகிறாய். ஆமாம் ! விடுதலைப் பேரார்வம் கொந்தளிக்கும் உள்ளம் உனக்கு ! திராவிடம் என் பிறப்புரிமை என்று முழக்கமிடுகிறாய் ! அந்த முழக்கத்தை எவரேனும் கேலி செய்தால் கொதிப்படைகிறாய்; களம் காணத் துடிக்கிறாய்? எனவேதான், அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக் கொள்கிறேன் ! என்ற பேச்சுக் கேட்டதும், ஆர்வத்தால் துள்ளி எழுகிறாய்; அண்ணனைப் பாராட்டுகிறார் ! புரிகிறது—ஆனால், கவலைதான் குடைகிறது! ஏன் என்கிறாயா ?

வீரச் சுவை செறிந்திட, அஞ்சா நெஞ்சுடன், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன், திராவிடம் மீட்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன், அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக்கொண்டு, தேர்தல் களம் வாரீர் ! இரண்டிலொன்று பார்த்து விடுவோம் ! என்று தீப்பொறிபறக்கப் பேசியது, தம்பி ! நான் அல்ல ! திராவிட நாடு பகற்கனவு என்று இன்று பேசும் சம்பத்து ! ஆமாம், தம்பி ! என்னால் ஆகுமா அப்படி அடித்துப்பேச ! அதே நேரத்தில் திராவிடநாடு பகற் கனவு என்று மாறிப் பேசத்தான் முடியுமா?

நான் சாமான்யன் ! அசகாய சூரத்தனமாகப் பேசுவதென்றால் எனக்கு அச்சம் ! அதுபோலவே, இவ்வளவு காலம் இலட்சக்கணக்கானவர்களிடம், ஊட்டிய நம்பிக்கையை மறந்து, எழுச்சியைத் துச்சமென்று மதித்து, எதனையும் எப்போதும் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம் என்று துணிந்து, கொண்ட கொள்கையைக் குப்பை என்று கூறிவிடமுடியாது ! நான் மெத்தக் கூச்சப்பட்டவன் !!

திராவிட நாடு பகற் கனவு என்று இப்போது அவர் கூறுவது கேட்டு உனக்கு எவ்வளவு கோபம் வருகிறதே, அதே போலத்தான், அப்போது வா ஒருகை பார்ப்போம் என்று அறைகூவல் விடுத்தபோது காங்கிரஸ்காரர்கள் கோபித்துக்கொண்டனர். இப்போது திராவிட நாடு பகற் கனவு என்று அவர் கூறக் கேட்டுக் காங்கிரசார் எவ்வளவு குதூகலப்பட்டு, இவரல்லவா அறிவாளி ! மாயையிலிருந்து விடுபட்ட மாவீரர் ! உண்மையை உணர்ந்த மேதை ! என்றெல்லாம் கொண்டாடுவதாகக் கூறுகிறார்களே, அதே போலத்தான், தேர்தல் களம் புகுந்து, திராவிட நாடு பிரச்சினைக்கு, நாம் பெருமைப்பட்டோம், பூரித்தோம், உச்சிமீது வைத்துக்கொண்டாடினோம். ஆக இதிலே யாருக்கும் கஷ்டம் இல்லை !

ஆணித்தரமான பேச்சு ! அடித்துப் பேசும் போக்கு ! அஞ்சா நெஞ்சம் காட்டுவது !!—இவை, கைவசம் உள்ள சரக்கு—ஒவ்வோர் சமயம் ஒவ்வோர் இடத்தில் விலை போகிறது !! கொலைக் குற்றம் செய்தவனையும் தப்ப வைக்க வாதத்திறமை பயன்படுகிறது ! குற்றமற்றவனைக் கூண்டில் தள்ளவும் சில வேளைகளிலே திறமையைப் பயன்படுத்துகிறார்கள். அரசியலிலுமா ? என்று கேட்கிறாய் ! ஆமாம், பார்க்கிறோமே ! என்றோ ஓர் நாள் என்னவோ நினைப்பில், ஏதோ, சொல்லிவிட்டேன், என்று கூறுவாரோ, என்று எண்ணுகிறாய். தம்பி ! இந்த அறைகூவல், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ! நெடு நாட்களுக்கு முன்பு அல்ல !!

அமைச்சர் வெங்கட்ராமன், பேசியதை நானும்தான் பத்திரிகையில் பார்த்தேன்—உடனே விடக்கூடாது ! அறை கூவலை ஏற்றுக்கொள்வதாக உடனே வீராவேசமான அறிக்கை வெளியிட வேண்டும் என்று எனக்குக் தோன்றவில்லை. தோழர் சம்பத்து அப்படியா ? விடுவாரா ? எடுத்தார் பேனா, தொடுத்தார் அறைகூவல் என்ன நடந்தது என்கிறாயா ? அமைச்சர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயம் அமைச்சர் வெங்கட்ராமனுக்கு ‘ஆருடம்’ தெரியுமோ, என்னவோ ! இவ்வளவு வீர தீரமாகப் பேசும் இந்த இலைஞர், எண்ணி மூன்றே ஆண்டுகளில், திராவிடநாடு பகற்கனவு என்று பேசப் போகிறார்; இடையிலே ஏதோ சிறிது விறுவிறுப்புப் பேச்சு ; இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்று எண்ணிக் கொண்டாரோ, என்னவோ !

தம்பி ! இப்படி யெல்லாம், அறைகூவல் விடுவது—அடித்துப் பேசுவது—பரணி பாடுவது—முரசொலிப்பது—போன்றவைகளில் நான் ஈடுபடாததைத்தான் மிதவாதம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள் ! இப்போது விளங்குகிறதல்லவா, போலி அதி தீவிரவாதம், என்ன கதிக்கு ஈடுபட்டோரைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்ற உண்மை ?

திராவிடநாடு பகற்கனவு என்று சொல்வதைக் காட்டிலும், செல்வாக்கு மிகுந்த நுழைவுச் சீட்டு—இல்லை—காங்கிரஸ் மணிமாடம் செல்ல—வழிவிடு ! வழிவிடு ! என்று பலரும் கூறுவர் ; வரவேற்பர் ! பித்தம் தெளிந்த நிலை என்றல்லவா, கூறிப் போற்றுகின்றனர், இன்றைய அவருடைய போக்கை.

தம்பி ! அமைச்சர் வெங்கட்ராமனே, பார்க்கிறார், என்று வைத்துக்கொள், தோழர் சம்பத் அவர்களை, கண்களிலே ஒரு குறும்புப்பார்வை ! உதட்டிலே ஒரு கேலிச்சிரிப்பு ! உள்ளம் என்னென்ன எண்ணும் !!

‘மிஸ்டர் ! நம்மை ஒரு போடு போட்டுப் பயம் காட்டியே விட்டீர்களே, வா, பார்க்கலாம் தேர்தலில் என்று!!’—அமைச்சர் கூறுவார், இவர்…?

‘எனக்குத் தெரியும் மிஸ்டர் ! நீங்களே, கட்டாயமாக மாறிவிடத்தான் போகிறீர்கள் என்பது.’—இதுவும் அமைச்சர், இவர்…?

பகற்கனவு என்று சரியான சூடு கொடுத்தீர்கள், மிஸ்டர் ! நீங்கள் சொல்லவே, சும்மா இருக்கிறார்கள், திகைத்துப்போய். நாங்கள் சொன்னபோது, அடே அப்பா ! எப்படி யெப்படிக் கண்டிப்பார்கள்— நீங்களும் தான் இலேசாகவா கண்டித்தீர்கள் !”—இதவும் அமைச்சர் ! இவர்…?

தம்பி ! சில மாதங்களுக்கு முன்பு, சென்னை சட்ட சபையில், அமைச்சர் வெங்கட்ராமன் இப்போது கொண்டுள்ளதாகக் கூறும் போக்குக்கு முற்றிலும் மாறான முறையில், டெல்லி பாராளுமன்றத்தில் அவர் உறுப்பினராக இருந்தபோது பேசியவைகளை நான் எடுத்துக் காட்டிப் பேசினேன். அமைச்சர் வெட்கம் கலந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தார். பிறகு தொழிலாளர் பிரச்சினையாக அவரைச் சென்று காணவேண்டி நேரிட்டது. என்னைப் பார்த்த உடனே அவர் கோபத்தோடு அல்ல, குழையக் குழையக் கேட்ட முதல் கேள்வி, ‘சார்’, எங்கே இருந்து நான் முன்பு பேசியதை யெல்லாம் தேடிப் பிடித்து எடுத்து வைத்துக் கொண்டீர்கள் ?’ என்பதுதான் ! என் பாராளுமன்ற நடவடிக்கை ஏடுகளிலே இருந்து தான் ! இன்னும் கூட இருக்கிறதே, நிரம்ப’ என்றேன். அவர் கோபித்துக் கொள்ளவில்லை; மாறாக, அந்தக் கருத்துக்களைத் தான் இப்போது வலியுறுத்த முடியாதபடி அமைச்சர் பதவி தடுக்கிறது என்பதைப் பார்வையால் காட்டினார்.

ஆக, நான் அமைச்சரைப் பார்க்கும்போது, அவருக்குத் தான், கூச்சமாக இருந்தது—வெறும் உறுப்பினராக இருந்த போது, தொழிலாளர் உரிமைக்காக, வீரதீரமாகப் பேசினோம், இப்போது இப்படி ஆகிவிட்டோமே !—என்ற கவலையும், வெட்கமும்தான் அவரைப் பிய்த்துத்தின்றது.

திராவிடநாடு பிரச்சினையை வைத்துத் தேர்தலே நடத்தி விடுவோம்; நான் தயார் ! நீங்கள் எப்படி ? என்று அறைகூவல் விடுத்தவர், திராவிடநாடு பகற்கனவு என்று ஏசும் நிலை அடைந்த கோலத்தில், அமைச்சர் அவரைக் காண நேட்டால் ! பரிதாபமாகத்தான் இருக்கிறது, நினைக்கும்போதே !!

1958 ஜனவரி 28-ல் சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில், அமைச்சர் வெங்கட்ராமன் பேசிய பேச்சுக்குத் தோழர் சம்பத் விடுத்த அறைகூவல் அறிக்கையுடன், 1961 ஏப்ரல் 19-ல் திராவிடநாடு பகற்கனவு என்று அவர் அவருடைய உலகுக்கு விடுத்துள்ள அறிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால்…..! சே ! எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது ! அந்தச் சிவாஜியா, நான்…? நினைவிருக்கிறதல்லவா, தோழர் சம்பத் சிவாஜி வேடத்தில் பேசிய உருக்கமான வாசகங்கள் !!

“அஞ்சா நெஞ்சன் எங்கே ? பஞ்சையிடம் பணியப் போகும் நான் எங்கே ?……வீழ்ச்சிதான் ! வேதனைதான் ! ஆனால், வேறு வழியில்லை !” எனக்கென்னவோ, தம்பி ! அந்தக் காட்சியே தெரிவது போல் இருக்கிறது.

படிப்போர் படபடக்க, அமைச்சர் வெடவெடக்க, காங்கிரஸ் பேச்சாளர் துடிதுடிக்க, அறைகூவலை ஏற்றுக் கொண்டேன். அமைச்சரே! களம் வாரீர்—என்றழைத்த அன்றைய தம்பி சம்பத்துடன், இன்றைய தோழர் சம்பத் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால், வேதனையாகத்தான் இருக்கிறது ! என்ன செய்வது !!

1958-ல் அப்படித்தான் நினைப்பு—பிறகு அது மெள்ள மெள்ளத் தளர்ந்து, உலர்ந்து, பொடியாகி, இப்போது காற்றோடு காற்றாகக் கலந்துவிட்டது. அதனால் என்ன?—என்றுகூட வாதமோ, சமாதானமோ, விளக்கமோ கூறமுடியாத நிலையில், 1961 ஏப்ரல் 8-ந் தேதி வரையில் திராவிடநாடு விடுதலைக்காக விழிப்புடன், போர் உடையில் உலவி வரும் வீரராகவன்றோ, காட்சி அளித்து வந்தார் ! நானல்லவா இப்படிப்பட்ட விடுதலை வீரர்களைக் கொண்டு வீரப்போர் நடாத்தி வெற்றியைப் பெற்றுத் தரும், திறமற்றுக் கிடந்தேன்—என்றார்கள். கேட்கிறாயா, விடுதலைப் போர்ப்பரணி, கேள், தம்பி ! இனித்தான் கேட்க முடியாதாமே—இதையாவது கேட்டு இன்புறுவோமே !!

“இரயில் என்ஜின்களுக்கு ஆயுள் 40 ஆண்டுகள் என்று நிபுணர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். அதாவது 40 ஆண்டுகள் தான் ஓட வேண்டும் என்பதாகும். தென் பகுதியில் இருப்பவை ஏதோ ஓடுகின்றன. ஆனால், வடக்கே கனமான என்ஜின்கள்—புதியவை ஓடுகின்றன. அங்குப் பல ஆண்டுகள் ஓடியவை—புதியன வந்தபின், நெற்கே தள்ளப்படுகின்றன—பூமாலை போடப்பட்டு ! பழையவை இங்கே ! புதியவை அங்கே ! அங்கு கழிக்கப்பட்டவை தள்ளப்படுகின்ற குப்பைத தொட்டி தென்னாடு ! இவை எல்லாம் தெரிந்தும் பேசாமல் இருக்கின்றனர் நமது அமைச்சர்கள். இவர்கள் எட்டுப் பேர் அந்தஸ்து உயர்ந்தால் போதுமா ?

“வாழ்வும் இல்லை—மதிப்பும் இல்லை—எனவே, ஏன் வெறும் சோற்றுப் பிண்டங்களாக நாம் வாழவேண்டும் ? 100-க்கு 99 பேர் உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் நான் நம்மவர்கள் இருக்கிறர்கள். இப்படி உழைக்கின்ற உழைப்பு நமக்குப் பயன்பட வேண்டும். அதற்குத் திராவிடநாடு திராவிடருக்காக வேண்டும்.”

17—1—60 உதகைப் பேச்சு. தம்பி ! 19—1—61-ல் அவருடைய அந்தப் பேச்சு உதவாப் பேச்சு ஆகிவிட்டது— நல்லவேளையாக நமக்கு அல்ல—அவருக்கு, ஏழ்மை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாமல் விட்டு விடும் தாய் நிலை போலும் ! நாமும் ஏழைகள் தாம், என்றும் கன்னத்தில் குழி விழுந்தபடி, பிஞ்சுக் கரத்தை நீட்டுகிறதே குழந்தை ! எடுத்து வளர்ப்போம்—இரக்கம் இருக்கிறது—இதயம் இருக்கிறதே ! எனவேதான் இன்று புதுக்கட்சி தேவைப்படுவதால் எந்தெந்தக்கருத்துக் குழவிகளை, காட்டிலும், மேட்டிலும் போட்டு விட்டுப் பெற்றவர் போய் விட்டாலும், நாம் எடுத்துப் பாராட்டி வருகிறோம்.

“வடக்கே வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறார்கள்—தெற்கே வாழ்க்கைத் தரத்தைத் தாழ்த்துகிறார்கள்! வடக்கே வளமான தொழிற்சாலைகள் உருவாக்குகிறார்கள்—தெற்கே உருவாகும் நிலை இருந்தும் உதாசீனம் செய்கின்றார்கள் ! எனவே, திராவிட முன்னேற்றகக் கழகம், தெற்கே உள்ள மாநிலங்கள் நான்கும் தனி உரிமை பெற்று, திராவிடநாடு என இயங்க வேண்டும் என்கிறது. இதற்குத் தமிழகத்தில் ஆதரவு பெருகிவிட்டது; மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகின்றன—நம்முடைய முயற்சிகள் இல்லாமலேயே அங்கெல்லாம் இன்று கழகம் வளர்ந்து வருகிறது.

 

“ஆந்திரா சட்ட மன்ற உறுப்பினர் வாவில்ல கோபால் (ரெட்டி) என்பவர், ‘அந்தந்த மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்’ என்றும், ‘தனித் தனியே இராணுவம் வேண்டு’ மென்றும் பேசியிருக்கின்றார்; இப்படிக் காங்கிரசிலிருந்து நம்மை நோக்கி வருகிறார்களே தவிர, யாரும் இங்கிருந்து அங்கே செல்லவில்லை !”

நம்மை நோக்கி வருகிறார்கள்—என்று 1960-ல் சொல்ல முடிகிறது—அந்தத் தித்திப்புப் பேச்சுப் பெற்றுத் திராவிட மக்கள் மகிழ்ந்திருக்கும் வேளையில், எதெதற்கோ சச்சரவு என்று கூறிக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று, உங்களுக்கும் திராவிடநாடு என்னும் இலட்சியமே வெறும் கனவு—அடைய முடியாதது—என்று தோன்றுகிறது என்று கூறிவிட்டு, இத்தனை காலமும் பேசிக் கொண்டிருந்ததற்கு முற்றிலும் மாறாகப் புதிய கொள்கைகளைக் காட்டுகின்றனர்.

கொள்கைகள், மக்களின் இதயத்தில் இடம் பெற்றுவிட்டன ; இவர்களோ, தாம் இதுவரை பேசி வந்தது உதட்டளவே என்று துளியும் கூச்சமின்றி, மக்கள் என்ன எண்ணுவார்கள் என்பது பற்றிக் கவலையற்று, வேறு பேசுகிறார்கள்.

பிரிவினை வேண்டாம், திராவிடக் கூட்டாட்சி வேண்டாம், சமதர்மத் திட்டம் வேண்டாம் என்றல்லவா கூறுகின்றனர்.

டாடாவும், பிர்லாவும் கூடச் சமதர்மம் கூடாது, தேவையில்லை என்று பேசக் காணோம்—பேச வெட்கப்படுகிறார்கள்—புதுக் கட்சியினர் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள். சமதர்மம் போன்ற இலட்சியத்துக்கு நாங்கள் கட்டுப்படப்போவதில்லை—தொழில் வளர்ந்தால் போதும்—எந்த முறையிலேனும் என்று.

 

வடநாட்டு முதலாளிகளே கூடித் திராவிடம் புகுந்து தொழில் நடத்தலாமாம் ! தடை கிடையாதாம் ! வரவேற்பு உண்டு போலும்!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இப்போதைய தலைமை, மந்தமாக இருக்கிறது ; தீவிரம் இல்லை ; என்று குறைபட்டுக் கொண்டு இருந்த இளைஞர்கள், எப்படி இந்தப் பிற்போக்குத் திட்டத்தை இனிக்கிறது என்று கொள்வர். சமதர்மமே கூட அல்லவா, கசப்பாகி விட்டது. தம்பி ! என்னை விட்டு விலகினர்—வேதனையைத் தாங்கிக் கொள்கிறேன்—இலட்சியத்தையுமா விட்டு விலகிச் செல்ல வேண்டும் ? பாசமும் நேசமும் வேண்டாம், அவை வெறும் பசப்பு என்றனர்—சரி, காலம் கருத்தூட்டும் என்று காத்துக் கொண்டிருக்க முடியும். தனி அரசு கூடவா, வேம்பாகிவிடுவது? என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லையே—சிலரிடம் சீற்றமும், பொதுவாகவே ஒரு சலிப்புணர்ச்சியும் தோன்றினால், இப்படியா ஒரே அடியாக அடிப்படையையே அழித்து விடுவது? நம்பிக்கை நாசமாகி விட்டதா ? எப்படி ? 1959-ல் கூட அல்லவா, நம்பிக்கைச் சங்கு ஊதினார்கள்.

“ஆதிக்கத்திலிருந்து பழகிப்போன நமக்கு விடுதலை கிடைக்கும், எதிர்காலம் அதிவிரைவிலே கிட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை விரைவில் சாதித்துக் கொள்ள தி. மு. கழகம் நல்ல புடம் போட்டெடுத்த அரிய வீரர்களை வைத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சாதிக்க நமக்கிருக்கிற சாதனம், கூர் ஏறி ஒளி பெற்று வருகிறது. மெல்ல மெல்ல உறுதியாக வளர்ந்து வருகிறது, என்றைக்காவது ஒரு நாள் அந்த ஆவலைப் பூர்த்தி செய்து கொள்ளத்தான் போகிறோம் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது.”

இப்படிப் புதுவையில் பேசியதைக் கேட்டவர்கள் பூரித்துப் போயினர் என்பது மட்டுமல்ல, இந்த எழுச்சியும் நம்பிக்கையும் இரண்டே ஆண்டுகளில் உருக்கிப் போய்விடும், உருத்தெரியாமல் போய்விடும் என்று எந்தக் காங்கிரஸ்காரராவது கேலிக்காகச் சொல்லி இருந்தால் கோபம் கொப்பளிக்கும் நிலை பெற்று, “ஏடா ! மூடா ! இந்தப் பேச்சுக் கேட்ட பிறகுமா உனக்குக் கெடுமதி ? பேசினவரின் வார்த்தைகளில் வெளிப்பட்ட வீராவேசத்தைக் கவனித்தனையோ ? இவர் போன்றார், களத்திலே நிற்போர், கிலிகொண்டு கடுகி ஓடிவிடினும், தன்னந்த தனியாக நின்றேனும், இலட்சிய வெற்றிக்கு உழைக்கும் தன்மையினர் என்பதை உணருகிறாயா ? இப்படிப்பட்டவர்கள் ஊட்டும் எழுச்சியா உலர்ந்து போகும் ! என்னே உன் அறிவீனம்!”—என்று கடிந்துரைத்திடும் நிலையினராயினர்.

நல்ல புடம் போட்டெடுத்த அரிய வீரர்கள், கூர் ஏறிய ஒளிவிடும் சாதனங்கள், இரண்டே ஆண்டுகளிலா இடுப்பொடிந்தோர் ஆகிவிட்டனர் ! நம்ப முடியுமா ? ஆதாரம் காட்ட இயலுமா? கூர் மழுங்கியா விட்டது? ஒளி மங்கியா போய் விட்டது? பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியும், இந்தியை எதிர்க்கத் திரண்டு நின்ற எழுச்சியும், கூர் மழுங்கியதையா காட்டுகிறது !! பேதையும் கொள்ளனே அப்படி ஒரு எண்ணத்தை ? பின்னர் ஏன் புதுக்கட்சிதேடினோர். தி. மு. கழகம் பயனற்றுப் போய்விட்டது என்று கூறுகின்றனர் ? ஏன் ?

அதற்கென்ன செய்யலாம், மழை காலத்தில் காளான் முளைக்கிறது ! பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெரிதுமாகிறது ! ஆனால், நிலைத்து நிற்கமுடிகிறதோ ? அதுபோலத்தான் இந்தத் தி. மு. க.! திடீரென்று முளைத்திருக்கிறது—வெகு விரைவிலே, இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடப் போகிறது—என்று மாற்றார்கள் பேசினர், மார் தட்டிக் கொண்டு பேசினார், இன்று தி. மு. கழகம் உருப்படாது என்று பேசுபவர்; “தி. மு. கழகம் துவங்கிப் பத்து ஆண்டுகளாகி விட்டன ; துவங்கும்போது கழகத்திற்கு எந்த வசதியும் இல்லை ; இதன் ஆயுளைப்பற்றி ஆருடம் கணித்தவர்கள் பலர் உண்டு. அரசியலில் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்திருக்கிறது காளான், நாளை அடிக்கும் காற்றில் மறைந்து விடும் என்றார்கள். அப்படிச் சொன்னவர்களைத்தான் இப்பொழுது காணமுடியவில்லை.”

19—9—59-ல் பல்கலைக் கழக மாணவர்கள் உலவிடும் சிதம்பரத்தில், புதுக்கட்சிக்கு உடையார், பேசியது இது. இப்போது அவர், ஆருடம் கணிக்கிறார், தி. மு. கழகம் அழிந்து போகும், போய்விடும் என்று. அவர் பேசியது அவருக்கு நினைவிருக்குமானால், இன்று இப்படி ஆருடம் கணிப்பாரா ? அப்படிப்பட்ட ஆருடம் கணித்தவர்களை இவர் முன்பு எவ்வளவு கடுமையாகத் தாக்கி இருக்கிறார், தெரியுமா ? தம்பி !

துறையூரில் 1959, ஜூன் 20, 21-ல் நடைபெற்ற தி. மு. கழக மாநாட்டுக்கு வந்திருக்க வேண்டும், ‘நமது அரசு’ என்ற தலைப்பில், இன்று வடவரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கலாம்—வெட்டிக்கொண்டு போகும் உரிமையுடன் என்று பேசுபவர், ஆற்றிய பேருரை, கேட்க—அமைச்சர் பக்தவச்சலம் அகப்பட்டார் அன்று !

“தாசர் புத்தி தலைக்கேறிவிட்ட திருக்கூட்டத்தின் தனித் தலைவர் பக்தவத்சலமே !” இப்படி அழைத்து, அமைச்சர் பக்தவத்சலத்தின் அரசியல் அப்பாவித்தனத்தை எள்ளி நகையாடி, ‘நமது அரசு’ இருந்தால் என்னென்ன நடைபெற முடியும்; நலன்கள் கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார். இப்பொழுது அமைச்சர் பக்தவத்சலம், என்ன எண்ணிக்கொள்ளுவார் ? துள்ளுகிற மாடு பொதி சுமக்காது என்பார்கள் ! அதுபோல் அல்லவா ஆகிவிட்டது. அன்று நான், திராவிட அரசு என்பது வீண் பிரமை என்றேன். ஏ ! அப்பா ! என்னென்ன சுடு சொல் என்மீது வீசப்பட்டது. தாசர் புத்தி தலைக்கேறிவிட்டதாம், அதனால், திராவிட அரசு வேண்டாம் என்கிறேனாம் ! சொன்னார் ! இன்று அவரே சொல்கிறார், திராவிட நாடு ; கனவு என்று !! எப்படி அவர் போக்கு !!—என்று கூறி, கெக்கொலி செய்வாரே,

பக்தவத்சலம், தாசர் திருக்கூட்டத் தலைவர் ! ஒரு சமயம், நேரு பெருமகனாரிடம் மதிப்பு வைத்துப் பேசினாரோ என்று கேட்கத் தோன்றும. இல்லை, தம்பி ! இல்லை ! அவரை மட்டும் விடுவாரா ? கதருடை தரித்த சர்வாதிகாரி ! துறையூர் மாநாட்டிலே பேசியதுதான், இரண்டே ஆண்டுகளுக்கு முன்பு.

கதருடை தரித்த சர்வாதிகாரி இன்று இந்தியத் துணைக்கண்டத்தை ஆளுகிறார்.

சரி! ஆளட்டுமே, அதனால் என்ன ? அவருடைய ஆட்சி தான். அசைக்க முடியாததாக, ஈடு எதிர்ப்பு அற்ற வலிவுடன் இருக்கிறதே !—என்று காங்கிரசார் எக்காளமிடுவர். அதற்கு இடமளிப்பாரா ? இதோ அவர்களுக்கு அடி வயிற்றில் கலக்கம் ஏற்படும்படியான பேச்சு; “இந்தியப் பேரரசு இன்னும் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்று சொல்வதற்கில்லை. ஒரு அரசாங்கம் அழிவதற்கு மூல காரணம், நிர்வாகத்திலே ஊழல்கள் மலிவதுதான், இன்றைக்கு இந்தியப் பேரரசின் நிர்வாகத்தில் ஊழல்கள் மறைக்க முடியாத அளவுக்கு வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முந்திரா, டால்மியா போன்ற வடநாட்டுப் பெரு முதலாளிகள் கையிலே பேரரசு சிக்கி, மீளமுடியாத ஊழலிலே அகப்பட்டுக் கொண்டது. அந்த ஊழல் நிர்வாகம் நீடிக்காது என்பது உறுதி !” உறுதி ! உறுதி ! உறுதி ! உரையில் ! இப்போது ? கதருடை அணிந்த சர்வாதிகாரியினால் நடத்தப்பட்டு வருவதும், விரைவிலே அழியப் போவதுமான இந்தியப் பேரரசிலே இணைந்துதான், தமிழ் நாடு இருக்கும்—ஆனால் ஒரு சலுகை ! இஷ்டப்பட்டால், பிரிந்து போகலாம் !! அப்படி ஒரு உரிமை !!

ஆதித்தனார் அதனால்தான் கேட்கிறார், தமிழ் நாடு என்கிற வரையில், மெத்த சந்தோஷம் ; வரவேற்கிறேன் ; ஆனால், அது இந்தியப் பேரரசுடன் இணைந்து இருக்கும் என்றால் நான் ஒப்புக்கொள்ளமுடியாது, ‘நாம்—தமிழர்’ இயக்கம் இலட்சியத்தை இழந்துவிடச் சம்மதிக்காது என்கிறார். நம்மை ஆகரிக்கத்தானே வேண்டும் என்று எண்ணிக்கொள்ளக்கூடுமே, புதுக்கட்சி என்று, ஆதித்தனார் தெளிவாக, திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்—இந்தியப் பேரரசுடன் இணைந்த தமிழ் நாடு உமது கொள்கையானால், நாம் ஏற்கோம் ; நமக்கென்று இலட்சியம் இருக்கிறது ; அதனை இழப்போமா எல்லோரும் என்கிறார். யாரைப் பார்த்து ? இலட்சிய முழக்கம் செய்து வந்தவரைப் பார்த்து !!—தெளிவு—உணர்ச்சி—எழுச்சி ததும்பும் பேச்சல்லவா !!

தம்பி ! அதற்கும் அதே துறையூரில், விளக்கம் தந்தார். ஒன்றைக்கூட பாக்கியாக விடவில்லை, ஒரு வேளை, சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லியாகிவிட்டது—மேலும் பேசினால் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டும் ; சலிப்பாக இருக்கும் ; ஆகவே, முற்றிலும் புதிய பாணியில் பேசியாக வேண்டும் ; நாம் பேசியதற்கு நாமே மறுப்புரைப்போம், என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம் மற்றவர்கள்—என்ற சோதனையோ, இந்தப் புதிய முயற்சி என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

வடநாட்டு முதலாளிகளுக்கு இந்தியப் பேரரசின்மீது உள்ள பிடிப்புக் குறையவில்லை; மாறாக நாளுக்கு நாள் வலுவாகிறது; வடநாட்டு முதலாளிகள் மட்டுமல்ல, அந்நிய முதலாளிகளின் பிடியும் வலுவாகி வருகிறது. அந்த நிலையிலே எந்த மாறுதலும் இல்லை.

நிர்வாக ஊழலோ நாளும் வளருகிறது ; ஒரு அரசின் அழிவுக்கான மூல காரணம் என்றல்லவா அது கூறப்படுகிறது. அந்த நிலையிலேயும் மாறுதல் இல்லை.

கதருடை தரித்த சர்வாதிகாரியாகத்தான் நேரு, இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். அதிலேயும் ஒரு மாறுதலும் இல்லை.

இந்த நிலையை தி. மு. க. எதிர்த்து வருகிறது. அதிலேயும் மாறுதல் இல்லை.

ஆனால், இதைப் புட்டுப் புட்டுக் காட்டி, தி. மு. கழகத்தில் புடம்போட்டு எடுக்கப்பட்ட வீரர்கள் உளர் என்று கூறி, நமது அரசு வேண்டும் என்ற எழுச்சியூட்டி, அதை உணர மறுக்கும் அமைச்சர் தாசர் புத்தி தலைக்கேறியவர்களின் தனிப்பெருங் தலைவர் என்று கண்டித்து, விடுதலைப் போர்ப் பரணி பாடியவரின், நிலையில்தான், நாம் யாரும் எதிர்பார்க்காத, ஆனால், நமது அரசியல் எதிரிகள் அடிக்கடி குத்திக் கிளறிக் காட்டிக்கொண்டு வந்த மாறுதல், ஏற்பட்டிருக்கிறது.

அவனுடைய நிலையில்தான், நம் நெஞ்சை வேகவைக்கும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது தவிர, அவர் எடுத்துக்காட்டிய காரணங்களின் தரம் குறையவில்லை; ஆதாரங்கள் ஆபத்தங்களாகிவிடவில்லை; பூகோளம் பொய்த்துப் போய்விடவில்லை புள்ளி விவரங்கள் புகைந்து போய்விடவில்லை; அவை அன்றுபோல் இன்றும் அருமையாகத்தான் உள்ளன ! மறுக்கொணாதவைகளாகத்தான் உள்ளன ! உள்ளம்தான் மாறிவிட்டது; உண்மையுமா, மாறிவிடும்!! உண்மையின் இலக்கணமே அது அல்லவே.

 

அவர் மறந்துவிடலாம், மறைக்க முற்படலாம்; மண்ணாங்கட்டி என்று கூறிவிடலாம்; ஆனால் அந்த இலட்சியத்தின் தரம் கெட்டாவிடும்? ஒருபோதும் இல்லை !

நேருவைவிட ஜனநாயகவாதி இல்லை !

இந்தியப் பேரசைவிட சிலாக்கியமான நிர்வாகம் கிடையாது.

ஊழல், ஓடோடி ஒளியும் இந்தியப் பேரரசின் பார்வைபட்டால்.

வடநாட்டு முதலாளிகள், கைகட்டி வாய் பொத்தி வருவாயை வரியாகக் கொடுத்துவிட்டு, வேளா வேளைக்கு வயிறாரச் சோறு போட்டால் போதும், என்று இந்தியப் பேரரசிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றனர்—என்றெல்லாமா, தம்பி! இனிப் பேச முடியும், எடுக்குமா? பேச்சிலே சுவை, எழுச்சி காணக்கிடக்குமா அதுபோலப் பேச முற்பட்டால்? முடியாது! பேசுபவர்கள், குளறவேண்டும்—கேட்போரோ ஐயோ! காது குடைகிறதே என்று அலறவேண்டும்.

தம்பி! எழுச்சிமிக்க பேச்சு என்பது நாவன்மையைப் பொறுத்தது மட்டுமில்லை. நாவன்மை தேவை—ஆனால் பயன்பட, பேசப்படும் பொருள், உள்ளத்தில் ஒளி உண்டாக்கத்தக்கதாக இருக்கவேண்டும்.

“கதிரவன் காய்வான், கலங்காதீர்கள் ! கண்களிலே ஒளி படச் செய்திடும், குழம்பாதீர்கள் ! குத்துங்கள், குடைத்திடுங்கள் ! வெட்டுங்கள் ! ஆழமாக வெட்டுங்கள் ! அலுப்பைப் பாராது வெட்டுங்கள் ! கருவியில் கூர் மங்கினாலும் பரவாயில்லை ! ஆழமாக வெட்டுங்கள்!”

என்று ஒரு பேச்சாளர் வீராவேசமாகப் பேசிடக் கேட்போர், உணர்ச்சி வயப்பட்டு நிற்பர். ஆனால் இறுதியில், “ஆழமாக வெட்டி, அருமையான கத்தரிச் செடி நடவு செய்யுங்கள்” என்று முடித்தால், கேட்போர் என்ன சொல்வர்? இதைத்தானா இத்துணை வீராவேசமாகப் பேசினாய் ! கத்தரிச் செடி நடவு வேலைக்காகவா இத்தனை கொக்கரிப்பு என்றெல்லவா கேலி பேசுவர்.

எடுத்துக்கொள்ளும் பொருள் நம் இதயத்தைத் தொடும் அளவுக்கு இருக்குமானால், அந்தக் கொள்கையிலே நமக்கு நீங்காப் பற்று இருந்தால் மட்டுமே, பேச்சு, சுவையும் பயனும், எழுச்சியும் எழிலும் கொண்டதாக அமையும். இதனை மற்றவர்க்குப் புதுக்கட்சியார் அறிவித்திருக்கிறார்.

“நாம் விடுபட வேண்டும் என்ற எண்ணம், நம் இதயத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

“நம்முடைய இலட்சியத்தை யார் ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் பேச்சிலே தெளிவு இருக்கும்—உணர்ச்சி இருக்கும்—எழுச்சி இருக்கும். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஏதேதோ காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ” இவ்வளவு தெளிவாக பேச்சுக்கும், பொருளுக்கும் உள்ள தொடர்பை விளக்கி விட்டுச், சமதர்மம் வேண்டாம்—கூட்டாட்சி வேண்டாம்—பிரியக்கூட வேண்டாம்—ஒட்டிக் கொண்டு இருப்போம், வெட்டிக் கொள்ளும் உரிமையை வாங்கிக் கொண்டு—எனும் பொருளைத் தமக்கு உரியது ஆக்கிக் கொண்டு, ஊராரையும் அழைக்கிறார். இதற்கு ஒரு தனிக்கட்சியாம் ! ஆதித்தனார் ஆற்றல் மிக்கவர் என்றல்லவா எவரும் கூறுவர், தமிழகம் இந்தியக் குடிஅரசிலிருந்து தனியாக வேண்டும்—அம்மட்டோ? கடல் கடந்து வாழும் தமிழர்கள், இருந்து வரும் இடங்கள், தமிழ் இராஜியத்தில் உறுப்புகளாக வேண்டும்—பரந்த தமிழகம் வேண்டும்—இந்தியாவுடன் ஒட்டிக் கொண்ட நிலையில் அல்ல, தனி அரசு எனும் நிலையில் என்று, அவருடைய கரத்தையாவது வலுவாக்கி இருக்கலாம்—அந்த இலட்சியத்துக்காவது பாடுபடலாம். இதிலே கொஞ்சம், அதிலே கொஞ்சம் எல்லாம் இருக்குது, இல்லை பஞ்சம் என்று ஒரு பண்ணா ?

எவ்வளவு கெட்டு விட்டது என்று, தி. மு. கழகத்தைக் குறித்து, விலகினோர் கூறிடினும், இந்தப் புதிய கட்சியின் கதம்பக் கொள்கையைவிட ஆயிரம் மடங்கு மேல் என்று மிக மிகச் சாமான்யர்களும் அறிவார்களே, கழகத்தின் மீது ஏன் இத்துணை கடுப்பு ?

“விடுதலைப் போராட்டத்தில் வேலி யோரத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தவர்களும், காட்டிக் கொடுத்தவர்களும், தங்கள் கைவரிசையைக் காட்டினால், ஐயோ என்று அலறி ஓடிவிடுவோம் என்று நினைத்தார்கள். ஆனால், நாமே கண்டு மயங்கும் அளவுக்கு நம் கழகம் வளர்ந்து வருகிறது” இந்த நிலையிலிருந்து, கழகம் எந்த முறையில், இப்போது கெட்டு விட்டது என்பதை எடுத்துக் காட்டினார்களா? காலமெல்லாம், தனிநாடு, தனிநாடு என்று பேசிப் பேசிக் குடும்பத்தைக்கூட மறந்துவிட்டுக் கொள்கை வீரர்கள் அணி அணியாகக் கிளம்பிக் குருதி கொட்டிய பிறகு, திடீரென்று ஓர் நாள் அவர்களைப் பார்த்து, “வீரர்காள் ! பின்பு பொறுத்திடுவீர் ! வீண் வேலையில் உம்மை ஈடுபடுத்திவிட்டேன். திராவிடநாடு என்பது கற்பனை, அது வேண்டாம் நமக்கு” என்றா கூறுவது? எதேச்சாதிகாரிகள் கூட, இப்படிக் கூறத் துணிவதில்லையே. கூடிப் பணியாற்றிடுவோரைக் கூட்டி வைத்துக் கொள்கைபற்றி ஏற்பட்டுவிட்ட கருத்து வேற்றுமை பற்றிப் பேசிட வேண்டாமா ? ஆண்டவன் அடி எடுத்துக் கொடுக்க, அடியார் பாடிடும் அருள் தரும் பாசுரம் போலவா. தலைவர், எப்போதும், என்ன சொல்வார் ; அதை அப்போது நமக்கு உகந்தகொள்கை யெனக் கொள்வோம் என்று மக்கள் ஏற்க வேண்டும் ? இதுதான், மக்கள் ஆட்சிக்கு அச்சாணியா ? மாண்புள்ள செயலா ? கூடிப் பணியாற்றுவோரிடம், கொள்கை பற்றிப் பேசிடக் கூச்சம் ஏன் ? தயக்கம் ஏன் ? அவர்களைத் தம் வழி கொண்டு செல்லத் தக்க ஆதாரங்கள், விளக்கங்கள் இருப்பின், ஏன் அந்த முறையைக் கையாண்டிருக்க கூடாது ? ஏகாதிபத்தியவாதி கூட அல்லவா, தான் தர இருக்கும் அரசியல் சீர்திருத்தம் குறித்து, பெறுவோரிடம் கலந்து பேசுகிறான் ? அந்த அளவுக்குக் கூடவா, பொறுப்புணர்ச்சியைப் பூரணமாகக் கொள்ளக் கூடாது ? கொண்டனரோ ? முதலில் விலகல்—பிறகு விளக்கம்—அடுத்தது திட்டம்— அதற்குப் பிறகு கொள்கை !!—இப்படி யாமே இலக்கணம்! அக்கறை கொள்வோர், இதனை எப்படி ஏற்கமுடியும் ! திகைக்கிறேன், தம்பி ! திகைக்கிறேன்.

தம்பி ! திகைக்கிறேன்.

திடீரென, தென்னகம், தெற்கு, திராவிடம் என்ற சொல் கசப்பாகிப் போவானேன் ? பொருளற்ற சொற்கள் இவை என்று புது வியாக்யானம் கூறுவானேன்…….? வடக்கு—தெற்கு என்று வறட்டுக் கூச்சலிடுகிறார்கள், என்று நம்மைக் காங்கிரசார், கேலியாகக் கண்டித்த போது, தோழர் சம்பத் அவர்கள் எப்படி எப்படி ஆத்திரம் பட்டார் ! அரிய பெரிய விளக்கம் தர முற்பட்டார் ! இப்போது அவரேவா அவருடைய வாதங்களைச் ‘சொத்தை’ என்று பேசுவது ? காலத்தின் கோலமா, கோபத்தின் விளைவா ? அவருடைய பொருள் செறிந்த வார்த்தையைச் சொல்வதானால், கொள்கைக் குழப்பமா ? என்ன காரணம் இதற்கு?

தம்பி ! நீயும் நானும், வடக்கு—தெற்கு என்று பேசுவது தவறு என்று கூறுபவர்களைக் கண்டிக்கக் கூசுவோம். மிகக் கடுமையான சொல்லே, அவர்களை, ‘பாரத புத்திரர்கள்’ என்று சொல்வதாகும். சின்னாட்களுக்கு முன்பு கூடச் சென்னை மாநகராட்சி மன்றத்திலே ‘பாரத புத்திரர்கள்’ என்று பேசியதை ஏசல் எனக் கொண்டு சிலர் கோபித்துக் கொண்ட செய்தி பத்திரிகைகளில் வந்தது ; கண்டிருப்பாய். அகில இந்தியா பேசுபவர்களை, நாம் கண்டிக்க முற்படும்போது கூட, அவர்கள் மனம் புண்படக்கூடாது, நமது நாக்கும் நரம்பற்றது என்று பலரும் நினைத்து விடும்படி பேசிவிடலாகாது என்ற முறையில், பேசி வந்தோம்—பாரத புத்திரர்கள் என்று.

துரோகிகள், கங்காணிகள், என்று கூறி யிருக்கிறோமா, அகில இந்தியா பேசுபவர்களை? நான் கூறினதில்லை. ஆனால், தோழர் சம்பத்து ? அதையுந்தான் கேளேன் ! இன்று, அவருடைய அறிவாற்றலைப் பத்தி பத்தியாக வெளியிடும், அகில இந்தியாக்களும் கேட்கட்டும் !

“தென்னகத்தில் இருந்துகொண்டு அகில இந்திய அரசியல் பேசினால்—பாரதப் பண்பாடு பற்றிப் பேசினால்—அவர்கள், பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்கிறார்கள், என்பதுதான் பொருள். அவர்கள் எங்கேயோ இருக்கிறவர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத் தானிருக்க முடியும். இது குறுகிய புத்தியால் சொல்வதல்ல,—பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் பரந்த எண்ணம். தத்துவ ரீதியில், வடக்காவது தெற்காவது என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள்.—அல்லது துரோகமிழைக்கிறார்கள் என்பதுதான் பொருள் !”

இந்த விளக்கத்தின்படி, துரோகிப் பட்டியலில், கங்காணிப் பட்டியலில், எவரெவர் என்று தம்பி, எண்ணிப்பாரேன் ! காமராசரும், கனம் சுப்பிரமணியமும், கங்காணிகள் ! நவ இந்தியாவும் அகில இந்தியாவை ஆதரிக்கும் ஏடுகளும் கங்காணிகள் ! எவரெவர், இங்கு இருந்துகொண்டு, அகில இந்தியா பேசுகிறார்களோ, அவர்கள் துரோகிகள்—கங்காணிகள், நீயும் நானும் இல்லை அந்தப் பட்டியலில், பெரியார் இராமசாமி இல்லை, அந்தப் பட்டியலில், ஆதித்தனார் இல்லை அந்தப் பட்டியலில் !

ஆனால், வெட்டிக் கொண்டு செல்லும் உரிமையைப் பெற்றுக் கொண்டு, அகில இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் கொள்கையினர்? எனக்குக் கூச்சமாக இருக்கிறது தம்பி! சொல்ல !

ஆனால், காரணம் காட்டாமல் கண்மூடித்தனமான, கற்பனையாக, வடக்கு—தெற்கு என்று, அவர் பேசிக்கொண்டிருந்தாரா? இல்லை ! அழகழகான ஆதாரங்களுடன் ! இன்று அவருக்கு அவை பிடிக்கவில்லையாம் ! ஆனால், படித்துப் பார்க்கச் சொல், எவரையும், பல நாட்கள் ஏடுகளில் உள்ளது பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துத், தெளிவு பெற்றுத் துணிவு பெற்றுப் பேசியிருக்கிறார் என்பது தெரியும். அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்ததுபோல் அல்ல.

“தென்னகத்துக்கென ஓர் தனிப் பண்பாடு இன்னும் இருந்து வருகிறது. இந்தத் தனிப் பண்பை எல்லாத்துறைகளிலும் காணமுடிகிறது. கோயில் சிற்பங்களை எடுத்துக் கொண்டால், தமிழ் நாட்டிலுள்ள அதே சிற்பக் கோயில் அமைப்பு முறையை ஆந்திரத்திலும் காணலாம்—கருநாடகத்திலும் காணலாம்—கேரளத்திலும் காணலாம்; இந்த நான்கு மாநிலங்களிலும் ஒரே வகையான கட்டிட அமைப்பினைக் காணலாம். இதற்கு, ‘திராவிடக் கட்டிடக்கலை’ என்று இன்றும் வழங்கி வருகிறது.”

“இன்று தமிழகத்தில் வளர்த்துள்ளது போல் ஆந்திரத்தில் தி. மு. கிளைகள் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இந்த நான்கு மாநிலங்களிலும் கலையில்—பண்பாட்டில் ஒருமைப் பாட்டினைக் காணலாம்.”

“இசைத் துறையை எடுத்துக்கொண்டாலும், ‘வடநாட்டு இசை—தென்னாட்டு இசை’ என இரண்டு வகையாகப் பிரிந்து கிடக்கிறது.”

“தென்னாட்டு இசையான கர்நாடக இசையில் புகழ் படைத்த சித்தூராரானாலும், செம்பையானாலும், தென்னக மாநிலங்கள் நான்கில் எதில் வேண்டுமானாலும் பாடலாம்—இந்த நான்கு மொழிகளுக்கிடையே இசையில் ஒரு ஒற்றுமை நிலவுகிறது.”

“இந்தி பேசினால் அதை வங்காளி புரிந்துகொள்ளமுடியும்; ஆனால் ஒரு தென்னாட்டுக்காரன் அதைப் புரிந்து கொள்ளமுடியாது. இதற்குக் காரணம், இந்தி சமஸ்கிருகத்திலிருந்து பிறந்தது, மற்ற வடநாட்டு மொழிகள் அனைத்துக்கும் சமஸ்கிருதம்தான் அடிப்படை.”

“தென்னாட்டு மொழிகள் வடநாட்டு மொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டவையாகும். வடநாட்டிலுள்ள எந்த மாநிலத்திலும் இந்தியில் பேசினால் அங்குள்ளவர்கள் புரிந்துகொள்ளுகிறார்கள்; ஆனால் வடநாட்டவர் தென்னாட்டில் வந்து இந்தியில் பேசினால் அதில் ஒரு அட்சரம்கூடத் தென் நாட்டினரால் புரிந்து கொள்ளமுடியவில்லை, என்று காந்தி, நேரு போன்ற தலைவர்களெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.”

“தென்னாட்டு மொழிகளுக்குள் சிறு சிறு உருமாற்றம் இருக்கலாமே தவிர, வடநாட்டுத் தொடர்பு சிறிதும் அவற்றிற்குக் கிடையாது. தமிழிலே பேசினால் ஆந்திரரும், கர்நாடகரும், மலையாளியும் புரிந்துகொள்ளமுடியும். இதிலிருந்து, தென்னாட்டுக் கலை, மொழி, பண்பாடு அனைத்தும் வடநாட்டினின்றும் முற்றிலும் வேறுபட்டது என்பதை உணரலாம்.”

“இப்பொழுது இருந்து வருகின்ற இந்தத் திராவிட இன ஒருமைப்பாட்டினை அவசரப்பட்டுப் பிரிக்கத் தேவையில்லை. சிலர் நம்மைப் பார்த்துப் பேராசைக்காரர்கள் என்று சொன்னாலும், கெக்கலித்து ஏளனம் செய்தாலும் நமக்குக் கவலை இல்லை, இந்தத் திராவிட இனத் தனிப்பண்பை—உணர்ச்சியை ஒரு அரசியல் சக்தியாக மாற்றக் கூடிய ஓர் சக்தி பிறக்கவேண்டும்.”

“‘தென்னக அரசியல்’ என்ற தலைப்பில் நான் பேசும் போது, தென்னக அரசியல் என்பதை நானே கற்பனை செய்து கொண்டதாகச் சிலர் சொல்வார்கள்—’தென்னாடு—வடநாடு என்று பிரித்துப் பேசுவது குறுகிய மனப்பான்மை’—என்று.”

“தெற்கு—வடக்கு என்பது நாம் புதிதாகப் பாகுபாடு காட்டுவதல்ல, இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடே அப்படித்தான் அமைந்திருக்கிறது. அதன் நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதிலே வடக்கு—தெற்கு பிரிந்து கிடப்பதைக் காணலாம். அரசியலிலும், கலையிலும் இன்ன பிற துறைகளிலும் இந்தப் பிரிவினையைக் காணலாம்.”

“வெள்ளையன் தன் துப்பாக்கி முனையால் இந்தியத் துணைக் கண்டத்தைப் பிரித்து, மிச்சப்பட்டதை வடநாட்டு வெறியர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றான். ‘ஏக இந்தியா’ என்ற இந்தப் பரந்த நிலப் பரப்பை, பெரிய மக்கள் தொகையைக் கட்டியாள, வடநாட்டு ஏகாதிபதியவாதிகளால், இந்தியக் கலாச்சாரம்—இந்தியப் பண்பாடு—இந்திய ஒற்றுமை என்று இன்று பேசப்படுகிறது.”

 

“இந்தியா மட்டுமல்ல—ஆசியாக் கண்டம் முழுவதுமே ஒன்றாக இருந்தால் நன்றாகத்தானிருக்கும். ஒன்றாக இல்லையே! அதனாலேதான், தென்னக அரசியல் என்ற கண்ணோட்டத்தில் நாம் எதையும் காணவேண்டி உள்ளது.”

“நாம் சொல்வதை ஆத்திர—கேரள—கர்நாடகத்தினர் கேட்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் தென்னக அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று வளர்ந்துள்ளதுபோல் ஆந்திர—கேரள—கர்நாடகத்தில் தி. மு. க. வவரவில்லை என்பது மெய்தான். அதைவிட மெய்யானது தென்னக அரசியல் என்று ஒன்றிருக்கிறது என்பது.”

“இன்று வடநாட்டுத் தலைவர்கள் எங்கு எப்பொழுது பேசினாலும் அது பாராளுமன்றக் கூட்டமானாலும்—பள்ளித் திறப்பு விழாவானாலும், அங்கெல்லாம் தென்னக அரசியலை பற்றித்தான் பேசுகிறார்கள். ‘தெற்கை நாங்கள் புறக்கணிக்கவில்லை’ என்று பேசுகிறார்கள்; ‘தமிழ் நாட்டைப் புறக்கணிக்கவில்லை’ என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள், மேற்கத்தியப் பண்பாடு, கிழக்கத்தியப் பண்பாடு என்று பேசுவதில்லை—மராட்டியப் பண்பாட்டை மேற்கத்திப் பண்பாடு என்றோ, வங்காளத்துப் பண்பாட்டைக் கிழக்கத்திப் பண்பாடு என்றோ சொல்வதில்லை.”

“பார்லிமென்டிலே சேத் கோவிந்ததாஸ் என்பவர் பேசும் போதெல்லாம். ‘தட்சிண பாரத்’ என்று, தான் குறிப்பிடுவாரே தவிர, தமிழ் நாட்டை மட்டும் தனியாகக் குறிப்பிடுவதில்லை.”

“தென்னாடு தனித் தன்மையுடன் விளங்கக் காரணம், இந்தியா ஒன்றாக்கப்பட்ட ஒன்றே தவிர, என்றும் ஒன்றாக இருந்ததில்லை. இந்தியா ஒன்றாக்கப்பட்ட வரப்பிரசாதம் வெள்ளையனால் கிடைத்தது. வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் இடையில் எண்ணற்ற எண்ணமோதல்கள்—ஆசாபாசங்கள்—முரண்பாடுகள்—ஏராளமான பேதா பேதங்கள் அரசியலில் இருப்பதை இன்னும் நாம் உணராவிட்டால், நாம் உணர்ந்ததை மற்ற மூன்று திராவிட மாநிலங்களுக்கும் உணர்த்தாவிட்டால், ‘தமிழ் நாட்டில்தான் இந்தக் கூச்சல் இருக்கிறது’ என்று வடநாட்டினர் சொல்லும் நிலைமை ஏற்படக்கூடும்.”

“‘தென்னக அரசியல்’, ஏதோ தி. மு. க. வாழ்வுக்காகப் புதிதாக அமைத்துக்கொண்ட மேடை என்று கருதுவதற்கில்லை.”

“டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் எதிர்பாராவிதத்தில் மந்திரி சபையில் இடம் பெற்றதைக்கண்டு அவருக்கு ஓர் பாராட்டு அளிக்கப்பட்டதும் அந்தப் பாராட்டு விழாவில் கூட வடநாட்டுக்காரர்கள் பேசும் போதெல்லாம், ‘டாக்டர் சுப்பராயனுக்கு மந்திரிப் பதவி கிடைத்ததன் விளைவாகத் தென்னகத்திற்குத் திருப்தி ஏற்படலாம்’ என்றுதான் குறிப்பிட்டார்கள். மற்ற வடநாட்டு மாநிலக்தைச் சேர்ந்த எவரேனும் மந்திரி பதவி பெற்றால் அவர் இன்ன மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அவரவர் மாநிலத்தின் பெயரைக் கூறித்தான் பாராட்டுவார்கள். ஆனால், டாக்டர் சுப்பராயனைப் பாராட்டும்போது, அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதாகப் பாராட்டவில்லை, ‘தென்னாட்டுக்காரர்’ என்ற முறையிலே பாராட்டினார்கள்.”

“மக்கள் சபையில், என்னுடனிருக்கின்ற கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் நாகி ரெட்டி, இந்திப் பிரச்சினை பற்றித் தென்னாட்டு உணர்ச்சி பீறிட்டு வரும் அளவுக்கும் பேசினார். மற்றக் கம்யூனிஸ்டுகளுக்கு அந்த உணர்ச்சி இல்லை.”

“தென்கை அரசியலை மனத்தில் வைத்துக்கொண்டு எவர் எந்தக் கட்சியிலிருந்து பேசினாலும் அவர்களை நான் பாராட்டுவேன்.”

 

“தென்னகத்தில் இருந்துகொண்டு அகில இந்திய அரசியல் பேசினால்—பாரதப் பண்பாடுபற்றிப் பேசினால், ‘அவர்கள், பிறந்த மண்ணுக்கும் துரோகம் செய்கிறார்கள்’ என்பதுதான் பொருள். அவர்கள், எங்கேயோ இருக்கிறவர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத் தானிருக்கமுடியும்! இது குறுகிய புத்தியால் சொல்வதல்ல—பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் பரந்த எண்ணம்! தத்துவ ரீதியில், ‘வடக்காவது தெற்காவது’ என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூச்ழ்கியிருக்கிறார்கள்—அல்லது துரோகமிழைக்கிறார்கள் என்பதுதான் பொருள்.”

தத்துவ விளக்கம் தரமாகத்தான் இருக்கிறது—ஒப்புக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. இதைப் படித்த பிறகு, எவரும், தென்னக அரசியல் என்பது தெகிடு தத்தம் அல்ல என்பதை உணருவார்கள் என்றெல்லாம் தோன்றுகிறதல்லவா நமக்கு ! ஆயினும், பெரிய இடங்களில் உள்ளவர்கள், இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்—அகில இந்தியா என்பதுதான் உண்மை. நியாயம், தேவை ; சட்டம் என்கின்றனர்—அவர்களை என்னென்பது?

தெளிவற்றவர்கள், பிடி பட்டவர்கள், வாழ்வை நாடுவோர், என்று இப்படியெல்லாம் தான் சுற்றி வளைத்துக் சூடு குறைத்துக் கண்டனச் சொல்லைக் கரும்புச் சாற்றினில் தோய்த்தெடுத்துப் பயன் படுத்துவோம். நமக்கெங்கே வருகிறது, தீப்பொறி! நாம் தான் எல்லோரும் இசைவு தர வேண்டும், அதற்கான முறையில், கனிவாகப் பேச வேண்டும், என்ற பைத்தியக்காரத் திட்டம் கொண்டவர்களாயிற்றே! தீர்த்துக் கட்டு! வெளுத்து வாங்கு! என்ற போக்கு, வருவதில்லையே நமக்கு—நல்ல வேளையாக!! தெற்காவது வடக்காவது, எல்லாம் ஒன்று என்று, காமராசர் பேசுகிறார், கக்கன் பேசுகிறார், சுப்பிரமணியம் பேசுகிறார். நவஇந்தியா எழுதுகிறது, மேலும் பலர், பலப்பலர்! இவர்களைத் தோழர் சம்பத், என்ன கூறி அழைத்திருக்கிறார் தெரியுமா, தம்பி. நம்மை விட்டு விலகியதும் அப்பாவி என்கிறார்கள், ஆபாச நடையுடையோன் என்கிறார்கள்—அது கேட்டு, நீ ஆயாசமடைகிறாய். காமராசர் போன்றோரும், அவர் கட்சி ஏடுகளும், பூரித்துப் போகின்றன. ஆனால் அந்த அகில இந்தியாக்களை அவர் என்ன பெயரிட்டு அழைத்திருக்கிறார், தெரியுமா? அகப்பட்டதைச் சுருட்டுபவன்! ஆமாம், தம்பி! அது ஆனானப்பட்ட காமராசராகட்டும், அகிலம் சுற்ற ஆரம்பித்திருக்கும் கனம் சுப்பிரமணியமாகட்டும். இதுதான் தோழர் சம்பத் அவர்கள் தரும் சிறப்புப் பட்டம்!

இப்போது, அப்போது அப்படி எல்லாம் பேசியது ‘பாதகம்’—பொறுத்தருள்வீர் என்றுகூடப் பேசக்கூடும். ஆனால், அதைக் கேட்பவர்கள் இப்போது பேசுவதற்கு மீண்டும் எப்பொழுது, பொறுத்திடுக ! கூறுவாரோ, என்று தான் வியந்து பேசுவர். பன்னிரண்டு ஆண்டுகளாகப் பேசிக் கொண்டு வந்தது பாதகம் என்று இன்று அவருக்குப் புரிகிறது போலும்! இப்போது பேசுவதும், அதே ரகமாக இருக்காது என்பதற்கு என்ன உறுதி, இருக்க முடியும் ? இப்போது பேசுவதை எப்போது மறுப்பாரோ, யாரறிவார்? இவர் எதைப் பேசினாலும், அது எப்போதேனும் இவராலேயே மறுக்கப் பட்டுவிடக்கூடுமே என்ற பயத்தோடு அல்லவா இருந்து தொலைக்க வேண்டும். அப்படிப்பட்ட பேச்சை எப்படி நம்பிக் கொண்டிருப்பது? இப்போது, எப்படி, திராவிடநாடு கனவு என்று பேசுகிறாரோ, அதுபோல, இப்போது பேசும் ‘தேசீயம்’ ஒரு பித்தலாட்டம் என்பதை உணர்ந்து கொண்டேன்! இது வரையில் உங்களைத் தவறான வழியில் அழைத்துச் சென்றதற்காக மன்னித்திடுக! என்று கூறுவாரோ? நாம், இவர் பேச்சை, நம்பிக்கையுடன் கேட்பதே ஆபத்து—என்றல்லவா மக்கள் கருதுவர்—திகில் ஏற்படும் !

தம்பி ! இவர் அகில இந்தியா பேசுவோரிடம் உள்ள திகிலைப் பற்றியும் பேசுகிறார்.

“தெற்காவது வடக்காவது, எல்லாம் ஒன்று என்று பேசுபவன், அகப்பட்டதைச் சுருட்டுபவனே தவிர, அரசியல் தீர்க்கதரிசி அல்ல.”

“சர்க்கஸ் கம்பெனியில் கம்பத்தின் உச்சியில் ஏறிவித்தைகள் செய்பவன், எந்த நிமிடத்தில் கீழே விழுவோமோ என்று அஞ்சிக் கொண்டே இருப்பது போல அகில இந்தியா என்று உதட்டளவில் பேசிக் கொண்டிருந்தாலும், அத்தனை பேர் மனதிலும் ஒரு திகில்—எந்த நேரத்தில் எந்தப் பிரச்னையில் இந்தியா உடையுமோ என்ற திகில் இருந்து கொண்டே இருக்கிறது.”

தம்பி ! இவை பூவிருந்தவல்லியில் 1959, செப்டம்பர் 11,12 நாட்களில் மாநாட்டிலே பேசப்பட்ட மணி மொழிகள் ! இப்போது இவை யாவும் குப்பை, கூளம் என்று தள்ளிவிடச் சொல்கிறார் !

அந்த மாநாட்டிலேதான், இங்கு என்னை ஏசும் அதே விறுவிறுப்புடன், அமைச்சர்களுக்கு அர்ச்சனை நடந்தது.

“இங்குள்ள பக்தவத்சலமும் சுப்பிரமணியமும் டெல்லியிலே வந்து கர்ணம் போடுகிறார்கள்.”

“சில இளிச்சவாயர்கள் கையில் 8 கோடி பேர்கள் திராவிடர்கள், மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சிலர் டெல்லியிலிருந்து கட்டியாளுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் விடுபட்டாக வேண்டும்.” இவ்வளவு திட்டவட்டமாகப் பேசினார்—பேசினால் என்ன? இப்போது, லேபில் மாற்றிக் கொண்டார், அது அவருடைய விருப்பம் என்று அவரைப் பூஜைக்குரியவராக—பொன்னான தலைவராகக் கொண்டு விட்டவர்கள் கூறிடக் கூடும். ஆனால், அதற்கும் அவர் இடம் வைக்கவில்லை.

“எவர் எவர் லேபில் எப்படி யெப்படி மாறினாலும், தென்னக உணர்ச்சி மட்டும் மறைந்து விடப் போவதில்லை.” தம்பி ! அன்று அவருக்கு இருந்த அந்த நம்பிக்கை எனக்கும் உனக்கும், நம் போன்ற இலட்சக் கணக்கானவர்களுக்கும் இன்றும் இருக்கிறது. இதற்காக, நம்மை அப்பாவிகள் என்று ஏசட்டும்—ஆபாச நடையினர் என்று தூற்றட்டும்—கவலை இல்லை—தடித்த வார்த்தைகளை உபயோகிப்பது அவருடைய வாடிக்கை—கைவசமுள்ள சரக்கு என்பதுதான் நமக்குத் தெரிகிறதே. முன்பு ஒரு சாரர்மீது கோபித்துக் கொண்டார்—அப்போது,

துரோகிகள், கங்காணிகள் இளிச்சவாயர், தாசர் புத்தியினர், கர்ணம் அடிப்போர், அகப்பட்டதைச் சுருட்டுவோர்—என்று ஏசினார். இப்பேது நம்மீது கோபம், நாலுவார்த்தை பேசுகிறார், எப்படிச் சும்மா இருக்க முடியம்? சுறுசுறுப்பான சுபாவம், விறுவிறுப்பூட்டும் வயது!!

“இந்த நான்கு மாநிலங்களின் நாகரிகமும் தொன்மையான திராவிட நாகரிகமாகும்; அதனுடைய பளபளப்பு இடையிலே கொஞ்சம் மங்கி யிருக்கலாம்; இருந்தாலும் திராவிட நாகரிகத்தின் கருப்பொருள் இன்றும் தங்கியிருக்கிறது.”

“தென்னகத்தின் தனிச் சிறப்பு வாய்ந்த திராவிட நாகரிகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் நாம். உதய சூரியன் போல் நமது இலட்சியம் எல்லோருடைய கண்களுக்கும் தெரியத்தான் போகிறது. இரவிலே மலையுச்சியைப் பார்த்தால் இருட்டாக இருக்கிறது. இயற்கை விதிப்படி சிலமணி நேரத்தில் உதய சூரியன் வரும். உதய சூரியன் தோன்றியதும் ஆந்தையும், கோட்டானும், ஓடிப் பதுங்குவது போல, இன்று நம்மைப் பார்ந்து அலறும் ஆந்தைகளும், கோட்டான்களும் ஓடிப் பதுங்கத்தான் போகின்றன என நம்பித்தான் இந்த அரிய இலட்சியத்திலே எங்கள் கருத்தைச் செலுத்திப் பணியாற்றுவதிலே ஈடுபட்டிருக்கிரறோம்”

இப்படி விளக்கங்கள் !

சின்னாட்களுக்கு முன்பு அமைச்சர் சுப்பிரமணியம் ஒரு அற்புதமான கண்டு பிடிப்பு நடத்தினார். தோழர் சம்பத் அவர்கள் டில்லி பாராளுமன்றம் சென்ற பிறகு பண்டித் நேருவின் பெருமையை அறிந்து கொண்டாராம். இனி எப்படியோ ! இதுவரை, அப்படி நேருவின் பெருமையை அறிந்து கொண்டதாகவோ பாராட்டியதாகவோ, தெரியவில்லை.

“நேருவை நாங்கள் அன்னியராகவே கருதுகிறோம், அன்னிய நாட்டுக்காரராகவே கருதுகிறோம்.”

“இந்த நாட்டிலே இருக்கிற கோடிக் கணக்கான மக்கள், நேருவினுடைய ஏகாதிபத்தியத்கை எட்டி உதைத்து விட்டுச் சுதந்திரம் பெறுவதற்கு ஆயத்தமாகி விட்டார்கள்.”—பண்டித் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியை விளக்கி, சென்னைக் கடற்கரையில் பேசிய பேச்சிலே ஒரு துளி இது. 21—1—58-ல் பாராளுமன்றப் பிரவேசத்துக்குப் பிறகுதான் !!

“நாம் நியாயத்தின் அடிப்படையில் நின்று ‘திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும்’ என்று உரிமை முழக்க மிடுகிறோம்; ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள். நமது கோரிக்கை நியாயத்தின் அடிப்படையில் எழுந்தது ; அவர்களின் மறுப்பு மமதையினால் எழுந்தது ; மக்களை மக்களாக மதிக்காது, மாக்களாக நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள். இப்படி இவர்கள் மமதையோடு பேசுவதற்குக் காரணம், இவர்களிடமுள்ள ஆதிக்க அரசியல் நிலைதான் என்பதைத் தவிர வேறென்ன ?”

“இந்த அரசியல் நிலை, வெளி விவகாரங்களில் கூட—எதிர் பாராத இடங்களில் இருந்தெல்லாம் கூட, சிற்சில நேரங்களில் வெற்றியைத் தேடித் தரக் கூடும் ; ஆனால், உள் நாட்டில் என்றென்றைக்கும் இந்த அரசியல் நிலை அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்குமே துணைபோய்க் கொண்டிருக்காது என்பதை மமதையோடு பேசுபவர்கள் உணர்ந்தாக வேண்டும்.”

“நமது கோரிக்கையை எந்தக் காரணங் காட்டி இவர்கள் மறுக்கிறார்கள்? எவருக்கு இதுவரை இந்தத் துணிவு இருந்தது?”

“நாம் நமது கோரிக்கையின் நியாயத்தை எந்த மன்றங்களிலும், எவரிடத்திலும் வாதிட்டு நிலைநாட்டத் தயாராயிருக்கிறோம்—என்று, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சொல்லி யிருக்கிறோம்.”

“உலகத்திலே நீதிமான்கள்—நேர்மையாளர்கள்—என்றுள்ள எவரையும் அழைத்து வாருங்கள் ; எங்கள் கோரிக்கை நியாயமா, இல்லையா ? என்று கேட்போம்—என்று கூறி யிருக்கிறோம்.”

“அகில இந்தியா என்று துவங்குகிற எந்த ஒரு காரியமானாலும் சரி—அது—நாடகக் கழங்கள், இசைக் கூடங்கள் என்ற கலை நிறுவனங்களாயினும் சரி—அல்லது அகில இந்திய உளுத்தம் பருப்பு உடைப்போர் சங்கம் என்றிருப்பதாயினும் சரி—அரசியல் கட்சிகளாயிலும் சரி—அவைகள் வடக்கிற்கு வாழ்வும் ஏற்றமும் தரவும், தெற்கிற்குச் தேய்வும் தாழ்வும் தரவுந்தான் பயன்பட முடியும்.”

 

“‘அகில இந்தியா’ என்ற ரீதியில் துவங்கும் எந்த பொருளாதார நிறுவனம் ஆயினும் அதில் வடவர் ஆதிக்கந்தான் நிலவுகிறது.”

“பாங்குகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் முதலியவற்றில் எல்லாம் வடநாட்டவரின் முதலீடுதான் ஆதிக்கம் செலுத்துகிறது.”

“அண்ணா அவர்கள் ‘பணத்தோட்டம்’ என்று தொடர் கட்டுரை ஒன்று எழுதினார்கள். அதில், வடநாட்டவரின் பொருளாதார ஆதிக்கம் எந்த அளவு இந்த நாட்டில் இருக்கிறது—என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.”

“இப்படி, அரசியல், பொருளாதாரத் துறைகளில் வடநாட்டவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு பெற்றிருப்பதனால் தான், ‘தெற்கு—குமரி எங்களுக்குச் சொந்தம்’ என்கிறார்கள், தங்களின் இன்பம் கருதி—பயன் கருதி !”

“நாம் இந்த வடவரின் ஆதிகத்திற்கு அடிமைப்பட்டு கிடப்பதால் தாழ்வுறுகிறோம்—விழுகிறோம், என்று புள்ளிவிவரங்களை பிரித்துக்காட்டி கேட்கிறோம்—’எங்கள் நாடு எங்களுக்காக வேண்டு’ மென !”

“நமது இந்த நியாயமான கோரிக்கையை எந்தக் காரணம் காட்டி, இவர்கள் ‘தவறு’ என்று கூறுகிறார்கள்?”

“குறி சொல்லுவதுபோல இங்குள்ள சிலர், ‘திராவிட நாடாவது கிடைப்பதாவது ? இந்தியாவையாவது—பிரிப்புதாவது ? திராவிட நாடு வெறும் காட்டுக் கூச்சல் ! அது கிடைக்காது ! தரமாட்டோம்’ என்று பேசுகிறார்களே தவிர, நாம் காட்டுகிற காரணங்களை மறுத்துப் பேச வாய்திறப்பதைக் காணோம் !”

சென்னைப் பேச்சு ! அறைகூவி அழைத்திருக்கிறர் திராவிட நாடு காட்டுக் கூச்சலென்று பேசுவோரை !

 

மூன்றாம், நான்காம் படிவம் படிக்கும் மாணவர்களைக் கேட்டால் கூட விளக்கம் கிடைக்கும், “திராவிட நாடு” பற்றி என்றும் பேசினார். அது, இது:

நாம் நமது இலட்சியம் கொள்கை, கோரிக்கைகளுக்கான நியாயங்களை வேறு எவராலும் முடியாத அளவிற்கு தொகுத்தெடுத்துச் சொல்லியிருக்கிறோம் ; சொல்லி வருகிறோம், என்றாலும், காமராசர் திராவிட நாடு என்றால் என்ன? என்று எனக்குப் புரியவில்லை என்கிறார். திராவிட நாடு என்றால் என்ன? திராவிட நாடு வேண்டுமா? வேண்டாமா? என்று இந்த மாநிலத்திலுள்ள பள்ளிகளில் மூன்றாம்—நான்காம் படிவங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு கட்டுரைப் போட்டி வைத்தால் அவர்கள் அழகான விளக்கங்களை எழுதிக் காட்டுவார்கள் வேண்டுமானால் காமராசர், அவர்களை அணுகுகிற முறையில் அணுகிப் பார்க்கட்டும்.

“தி. மு. கழகத்தைப் பொறுத்தவரை, திராவிட நாடு ஏன் என்பதற்கான விளக்கம் தரும் வேலையை முடித்துக் கொண்டு, அந்த விளக்கம் பெற்றோரை ஒன்று திரட்டி, திராவிட நாட்டை அடைவதற்கான வேலைகளில் ஈடுபடும் தறுவாயில் இருக்கிறது; இந்த நேரத்தில் போய் காமராசர் நம்மிடம் விளக்கங்கேட்கிறார்; வேடிக்கையாக இருக்கிறது!”

இப்படி எல்லாம் பேசினவரே இன்று திராவிட நாடு கனவு என்று பேசுகிறாரே, ஏனோ இந்தக் கொடுமை செய்கிறார் என்று எண்ணி ஆயாசம் அடையாதே, தம்பி! இவர் இன்று சொல்லுகிறார், வேறு பலர், முன்பு சொன்னபோது அலட்சியப்படுத்திவிட்டு, அடித்துப் பேசிவிட்டு! நாம் அவர்களின் பேச்சுக்கு எந்த மதிப்புத் தந்தோமோ, அதேதான் இதற்கும்.

அகிலம் சுற்றிவந்தவன், கூறுகிறேன், கேள்மின் திராவிட நாடு கனவு! என்றார் பண்டித் நேரு. அகிலம் சுற்றுவது தெரியும், எமது இன இயல்பு அறிய எங்கெங்கோ சுற்றிப் பயனன்ன? என்று கேட்டோம். நேருவின் பேச்சுக் கேட்க மறுத்தோம்.

இப்போது இவர், திராவிட நாடு கனவு என்று கூறுகிறபோது, நேரு பண்டிதரிடம் நாம் காணாத மேதா விலாசம், அனுபவம், வாதத் திறமை இவரிடம் இருக்கிறது என்றா சொக்கிவிடப் போகிறோம். நேருவாவது, துவக்க முதல் திராவிடநாடு கூடாது—கிடைக்காது என்று பேசி வருகிறார், அதனால் என்ன என்று அலட்சியம் செய்கிறோம். இவரோ, பன்னிரெண்டு ஆண்டுகள் பேசிப் பேசி தமது பேரறிவு போதும், எதிர்ப்பாளர்களை அழித்து ஒழிக்க என்று கூறி வந்துவிட்டு, திடீரென்று இப்போது திராவிட நாடு கனவு என்கிறார், அப்படியா? சரி! விட்டுவிடுகிறோம் என்றா கூறத்தோன்றும். கனவு! தம்பி! கனவு! மாநாடுகளிலே முழக்கமிட்டது—பொதுக் கூட்டங்களிலே பரணி பாடியது—பத்தி பத்தியாக எழுதியது—பார்முழுதும் பார்க்கச் சொல்லிப் படம் காட்டியது எல்லாமே கனவு, எப்போது? பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு! திராவிட நாடு என்பது வீண் மனக்கோட்டை, வெறும் கனவு என்கிறார் சிலர், கனவு காண்பது என்பது ஒரு சமுதாயத்திற்கு மிக மிகத் தேவை. இதோ வானத்தில் வண்ணமதி நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பு இருந்த சந்திரன் வேறு, இப்பொழுது உள்ள சந்திரன் வேறு, பத்து நாள் முன் வாழ்ந்த வையம் வேறு.

“ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரோ ஒருவன் கனவு கண்டதன் விளைவாகத்தான் சந்திரனை எட்டிப் பிடித்து, பூமியிலிருந்த பொருளை சந்திரனில் சேர்க்க முடிந்தது. இன்று சந்திர மண்டலத்தை “ராக்கெட்டு” எட்டிப் பிடிக்க வித்தூன்றியவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கனவு கண்டவன்தான். அப்படிக் கனவு காண்பதற்கு இன்று சிலர் தேவைப்படுகிறார்கள்.”

 

என்ன அண்ணா! கனவுக்கே ஒரு விளக்கம் கொடுத்து விடுவாய் போலிருக்கிறதே என்று என்னைக் கேட்காதே தம்பி! இது என் பேச்சல்ல, தோழர் சம்பத் அவர்களின் பேச்சுத்தான். நெடுங்காலத்திற்கு முன்பு நிகழ்த்தியது அல்ல; 17—6—59-ல் அன்று என்னைப் பாராட்டிப் பேசினார் அவர், எனக்கு வயது 50 என்பதற்காக, அப்போதுதான் கனவு என்கிறார்களே, திராவிட நாடு பிரச்சினையைச் சில பைத்தியகாரர்கள். அவர்களின் மரமண்டையில் படும்படி பேச வேண்டும் என்று அவருக்குத் தோன்றவே, சந்திரனைப்பற்றி முன்பு கண்ட கனவு, ‘ராக்கெட்’ கண்டு பிடிப்பு வரையில், அறிவாற்றலைக் கொடுத்தது என்று விளக்கினார். விளக்கி விட்டு, எனக்கும் சில அன்புரைகள்!

“அண்ணா அவர்கள் அப்படிப்பட்டதொரு அரிய கனவைக் காண்கிறார். அந்தக் கனவு நனவாக நாம் மனமார உழைத்தால், நம் காலத்திலேயே அதைச் சாதிக்கலாம்.”

கனவு காண்பதுகூடத் தேவைதான் என்று தத்துவ விளக்கம் தந்தவரே, திராவிட நாடு வெறும் கனவு என்று ஏன் பேசுகிறார்? சலிப்பு! அலுப்பு! இயற்கையாக எழக்கூடியது! கட்டுப்படுத்தாவிட்டால் மனம் குழம்பும், மார்க்கம் வேறுபடும், மதிப்பீட்டுத் திறமையும் மங்கி மடிந்துவிடும்.

“சிலருக்கு இதிலே சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. அலுத்துப் போனதால், தாங்கள் அமைந்த வேறு ஒரு கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டார்கள். திராவிட நாடு திராவிடருக்கே என்று சொன்னவர்களுக்கே அந்த இலட்சியத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும், தமிழகமும், சேர்ந்து திராவிட நாடு என்று முழக்கமிட்டவர்கள், இன்று தமிழ் நாடு மட்டும் போதும் என்று பாதைமாறி, எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார்கள்.” அன்று அவர் கூறிப்பிட்ட, பாதை மாறி எங்கோ அலைந்து கொண்டிருக்கும், நிலை, தமக்கே இவ்வளவு விரைவாக, திடுக்கிடத்தக்க முறையில் ஏற்படும், என்று அவர் எண்ணியிருந்திருக்க முடியாது, அன்று இரக்கம் கலந்த குரலில் பாதை தவறிச் சென்றிருக்கிறார்களே! என்று யாரை எண்ணிக்கொண்டு, இவர் பேசினார்? பெரியாரை! வெகு விரைவில் நமக்கும் பாதை தவறி அலையும் நிலை ஏற்படப் போகிறது என்பது அறியாமல்!

பாதை புதிதாக வகுத்துக்கொண்டேன் என்று பின்பற்றுவோர் கண் மூடிக்கிடக்கும் வரை பேசலாம். ஆனால் பெரியார், இதே காரியம் செய்தபோது, அவரைக் கேலி செய்துவிட்டு, இன்று இவரே, அதுபோலாகிவிட்டதுடன்—அதற்கு ஒரு சமாதானம் தேடிக்கொள்கிறாரே, என்றுதான் எவரும் கூறுவர்—பரிதாப்படுவர்! பெரியாராவது, தமிழ் நாடு போதும், என்று அளவைக் குறைத்துக்கொண்டார்! வகையை அல்ல! வடநாட்டுத் தொடர்பு அறவே ஆகாது என்று கூறுகிறார். அகில இந்தியா பேசுவோரைக் கங்காணிகள், துரோகிகள், அகப்பட்டதைச் சுருட்டுவோர் என்றெல்லாம் கர்ச்சித்த ஆற்றல் மிக்கவர், தமிழ் நாடு அகில இந்தியாவிலேயே இருக்கும்—ஆனால் பிரிந்து போக விரும்பினால், அதற்கு உரிமைபெற்று இருக்கும், என்று பேசுகிறார்—பெரியார் போலத் திட்ட வட்டமாக, வடநாட்டுப் பிடிப்புக்கூடாது என்று கூற அச்சம், கூச்சம், தயக்கம், ஏனோ? அளவைக் குறைத்துக்கொண்டதற்கே, பெரியார், பாதை மாறி எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார் என்று கேலி பேசினாரே.—ஏன் ? அதற்கும் அவரே பதில் அளிக்கட்டும்.

“அரசியல்களிலே தன் கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்களில் இரண்டு ரகம் உண்டு, அவசரக்காரர்களாக இருப்பவர்கள் அவசரப்பட்டுத் தன் கொள்கையை மாற்றிக் கொள்வது ஒரு ரகம் ; தம் வாழ்நாளில் பெரும் பகுதியும் தம் ஆற்றல் முழுவதையும் காட்டித் தீர்த்துவிட்டு வெற்றிகிட்டாது அவசரத்தால் கொள்கையை மாற்றக் கொள்பவர் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள் ; வேறு சிலர் இருக்கிறார்கள்—அவர்கள் உள்ளமே அவ்வளவுதாள் !”தம்பி ! திடீரென்று இப்பொழுது, கொள்கையை மாற்றிக் கொண்டாரே, இவர், எந்த ஏகம்? காளை வயது ! கடுஞ்சிறையில் ஆண்டு பல அடைபட்டு உருகி, உடல் கருகி வெளிவந்து பார்த்துத் தன் உழைப்பு உருவான பலன்தராதது கண்டு மனம் வெதும்பிக் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்க முடியாது, உள்ளமே அவ்வளவுதான் — என்று கூறப்படும் ரகத்தில், சேர்க்க மனம் இயம் தரவில்லை. மிச்சம் இருப்பது? மீண்டும், படித்துத்தான்பாரேன்—புரிகிறது! இந்த இலட்சணத்தில், நாடு தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று வேறு எதிர்ப்பார்ப்பதா? எப்படி என்று கேட்டால்—ஏன்? முன்பு வந்தக் கொள்கைக்காக எப்படியெப்படி அடித்துப் பேசுனேனொ அதுபோல் இந்தப் புதுக் கொள்கைக்கும் பேசுகிறேன்—மக்களா சேரமாட்டார்கள்? என்றா கூறுவது. மக்கள் என்ன மெழுகா—விருப்பம்போல உருவம் பெறச்செய்ய !

ஆனால், அண்ணா! முழுக்க முழுக்க நீங்கள் கழகத்துக்கே பயன் படவேண்டும் என்று யோசனை கூறினாராம்—கலைத்தொடர்பு வேண்டாம் என்றாராம், கேட்க வில்லையாம், அதுதான் கோபமாம் !

அப்படியா தம்பி ! யோசனை என்ன ? புத்திமதி கூறட்டும்; பரவாயில்லை; நான் இப்பொழுது, கழகக்காரியத்தைக் கவனிக்கும் அளவுடன், யோசனை கூறுபவரின் அலுவலை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறாய் அல்லவா ? மணி மூன்று— விடியற்காலம், எழுதிக் கொண்டிருக்கிறேன் ; இது முடிந்ததும் ஆங்கில ஏட்டு வேலை இருக்கிறது. கலை உலகுத் தொடர்பு எனக்கு எந்த அளவு ? என்ன வகை ? அதற்கு நான் செலவிடும் நேரம் என்ன ? ஒரு கணக்குப் பார்க்கலாமா, என்று கேட்டுப் பாரேன்—குறை கூறுவோரை. புதிய வீடு வாங்க— அலங்காரச் சாமான்கள் வாங்க—அனந்தராம் தீட்சதரின் காலட்சேபம் கேட்க—வாடகைப் பணம் முறைப்படி பெற—வழக்கு வேலைகளைக் கவனிக்க—செலவிடும் நேரம், உண்டா, எனக்கு! இவைகளைக் கவனிக்கத் தேவைப்படும்நேரத்தில் ஒரு பங்குகூட இராதே, எனக்குள்ள கலை உலகத் தொடர்பு ! நான் தெடர்பு கொண்டுள்ளது, இரண்டு படங்கள்—ஒன்று எம். ஜி. ராமச் சந்திரன் நடிப்பது—மற்றொன்று கே ஆர். இராமசாமி, எஸ். எஸ். இராஜேந்திரன், எம். ஆர். ராதா நடிப்பது ; இரண்டுக்கும் நானல்ல, கதைகளைத் தேடிக்கொண்டிருப்பவன் ; உள்ள கதைக்குப் புது உருவம் கொடுக்கும் அளவு தான், என் தொடர்பு ! மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, சில மணி நேரம் ! எடுத்த படத்தைக்கூட தோழர் சம்பத் அவர்கள் பார்த்தாராம்—நான் சரிவரப்பார்க்கக் கூட இல்லை ! இது என் தொடர்பு! இது கழக வேலையை என்ன பாதித்து விட்டது? துளியேனும் உண்மையான மனக்குறை யிருந்தால் விளக்கலாமல்லவா ? போகட்டும்—இதைக் தவிர, இனி, என்றென்றும் கலைத் தொடர்பு வேண்டாமென்று, தம்பி ! உனக்குக் தோன்றினால், யோசனை என்ன? கட்டளையிடு ! ஏற்றுக் கொள்கிறேன்! பொதுத் தேர்தல் வருவதற்குள் ஒரு படத்துக்காவது, கதை எழுதுங்கள் அண்ணா ! என்று என்னிடம் சொன்னவாரா நாட்டினரைப் பார்த்து, சேச்சே! இப்படி ஒரு தலைவனா? படத்துக்குக் கதை எழுதுகிறானே—என்றா பேசுவது?

அதுதான், மனக் குமுறலுக்குக் காரணம் என்றால், தம்பி! ஏற்கனவே கொடுத்துவிட்ட, எதையும் தாங்கும் இதயம்—நல்லவன் வாழ்வான் எனும் இரண்டோடு என் கலை உலகத் தொடர்பை நிறுத்திக்கொள்கிறேன்; யோசனை கூறி என்னை நல்வழிப்படுத்திக் கழகத்தைச் செம்மைப்படுத்தும் அவரைக் கொள்கையை விட்டுவிடாமல், சமதர்மத்தை இழந்துவிடாமல் பணியாற்றச் சொல்லேன்—பார்ப்போம்.

இந்த அளவு கலைத் தொடர்புகூட ஏன் எனக்கு ? அதன் மூலமாக ஏதேனும் நல்லறிவுப் பிரசாரம் செய்ய வழிகிடைக்குமா என்ற ஆவல் தான்! கலை உலகத் தொடர்பு கூடாது என்பதுதான் என் மனக்குமுறல் என்று இன்று பேசுபவரே, கலை உலகில் நான் தொடர்பு கொண்டதாலே பகுத்தறிவுத் துறைக்குக் கலை திரும்பிற்று என்று பேசிக் கேட்டு மகிழ்ந்து, நம்பிச் செய்யத் தொடங்கியது தான்.

போலிவாதம் பேசும் அரசியல் மேதைகளுக்கு ஈ. வி. கே. சம்பத் எச்சரிக்கை என்ற தலைப்பில், அவருடைய சென்னைப் பேச்சு, ஒன்று இருக்கிறது. அதில் இது இடம் பெற்றிருக்கிறது;

“திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி அல்ல; அது டிராமா, சினிமா, கட்சி என்று அந்த ‘அரசியல் மேதை’கள் நம்மைப்பற்றிக் கூறியிருக்கிறார்கள். உலகில் எந்தக் கட்சியில்தான் கலைஞர்கள் இல்லை ? எல்லாக் கட்சியிலும் கலைஞர்கள் இருக்கிறார்கள். நம்மிடம் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்.

“இந்த நாட்டில் காங்கிரஸ் உலவுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்? காந்தியாருக்கு அடுத்தபடியாகச் சத்திய மூர்த்தியும், கே. பி. சுந்தரம்பாள் என்ற அம்மையாரும் தான்! நன்றி கெட்ட காங்கிரசார் வேண்டுமானால் இதை மறந்திருக்கலாம்.

 

“கலைஞர்களின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நாட்டு மக்களிடம் சென்று ஓட்டுகேட்டவர்கள் தான், இன்று நம்மைப் பார்த்து நடிகர்கள் என்று குறை கூறுகிறார்கள்—விதவை, கன்னியைப் பார்த்துக் கேலி செய்வது போல !

“இதை எல்லாம் தெரிந்து கொண்டிருப்பதால்தான், இவர்களுடைய மானம் சந்தி சிரிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பேசின நேரு பண்டிதர், ‘அரசியல் துறைமட்டும் அல்லாமல், ஏதாவது பிழைப்பதற்கு கௌரமான தொழில் வைத்திருப்பவர்கள் மட்டும் அரசியலில் வாருங்கள்’ என்று கூறியிருக்கிறார். அப்படிக் கூறியிருப்பவரைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்கள்தான் வேறு ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களைப்பார்த்துக் கேலி பேசுகின்றனர்.

“எனவே, அரசியல் துறையில் ஈடுபட்டவர் வேறு தொழில்களில் ஈடுபடுவது பலவீனமல்ல, அது தேவையானதுதான் என்பதை நேரு பண்டிதர் விளக்கியிருக்கிறார். எனவேதான் காலை முதல் இரவு வரை உண்ணுவதைத்தான் தங்கள் தொழிலாகக் கொண்டில்லாமல், வேறு ஏதாவது ஒரு தொழிலையும் தெரிந்து கொள்ளச் சொல்கிறார் காங்கிரஸ்காரர்களை நேரு பண்டிதர்.

“திராவிட முன்னேற்றக் கழகம் நல்ல நடிகர்களையும், கலைஞர்களையும், அரசியல் பொருளாதாரத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களையும், இசைவாணர்களையும், திறமை மிக்க ஓவியர்களையும், சிற்பிகளையும், குத்துச் சண்டையில் தேர்ந்தவர்களையும்—இப்படி வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் திறமை பெற்றவர்களைக் கொண்டு விளங்குகிறது. இங்கு அரசியலை மட்டும் நம்பித்தான் வாழவேண்டுமென்ற நிலையில் யாரும் இல்லை.

 

“இலங்கைப் பிரதமாயிருக்கும் பண்டார நாயகரும் கதைகள் எழுதுவார்—அதுவும் மர்மக் கதைகள். மர்மக் கதைகள் என்றால் என்ன என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவர் அண்மையில் காமன்வெல்த் மாநாட்டை ஓட்டி இலண்டனுக்குச் சென்றிருந்தபோது, வெறுக்கையோடு போகவில்லை—தாம் எழுதின 4-மர்மக் கதைப் புத்தகங்களையும் எடுத்துச் சென்றார்; ஏன் ? அங்குள்ள கம்பெனி மூலம் அவைகளை பிரசாரம் செய்வதற்காகத் தான். இவர் என்ன, மர்மக்கதை எழுதுகிறாரே, இவர் அரசியலில் இருக்கலாமா? என்று இலங்கையில் எந்தப் புத்திசாலியும் கேட்கவில்லை; எந்தக் காமராசரும் கேட்கவில்லை. ஆனால், இங்கே கேட்கிறது அந்தக் குரல்.

“இப்படி, சொத்தையான வாதங்களையும் உளுத்துப் போன வாதங்களையும் கூறி நம்மை ஆபாசப்படுத்திவிட நினைக்கிறார்களே தவிர, அறிவுடனும் நீதியோடும் நேர்மையோடும் தர்க்க ரீதியாக நமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இலட்சியங்களையும் எதிர்த்துப் பேசுவார் யாரையும் காணோம்.”

அது முன்பு ! என்பீரேல், இதோ அவருடைய பாராளுமன்றப் பேச்சு !

தணிக்கைக் குழுவைப்பற்றிப் பேசுகிறார் டில்லி பாராளுமன்றத்தில்.

“ஒரு பத்தாண்டுகளுக்கு முன் தமிழ்ப்பட உலகில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை வழக்கமாகப் படமாக்கப்பட்டுவந்த புராணம், மற்றும் இதிகாசக் கதைகளுக்கு மாறாக நவீன காலப் பிரச்சினைகள் பற்றிய கதைகள் படமாக்கப்படும் நிலை முகிழ்த்தது. இந்த மாற்றத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தமது வேலைக்காரி—நல்ல தம்பி—போன்ற கதைகள் மூலம் தோற்றுவித்தார். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரானதால், அவரது கதைகளுக்குக் கிடைக்கிற அமோகமான ஆதரவு, அவரது கட்சிக்கும் ஆதரவையும் வலிவையும் தேடித்தரக் கூடும் என்று சிலர் அஞ்சினர். இப்படிப்பட்டவர்களின் அச்சத்தைத் தவிர்ப்பதற்றாகவோ, என்னவோ தனிக்கைக் குழுவினர் தங்களது கத்தரிக்கோலைப் பதப்படுத்திக் கொண்டனர்.” தம்பி ! இப்படி இவர் பார்லிமெண்டில் பேசியது கேட்டு. நான், சரி, கலைத் தொடர்பு, அவசியம்தானா இல்லையா என்ற சந்தேகம் தேவையில்லை. பாராளுமன்ற உறுப்பினரே, அது பாராட்டுதலுக்குரியது என்றார்—நாம் ஈடுபட்டால் தவறு இல்லை என்றுதானே எண்ணிக் கொள்வேன்;

எப்போது முதல் இவருக்கு, இப்படி ஒரு யோசனை கூறி, என்னை நல்வழிப் படுத்தும் அக்கறை ஏற்பட்டது என்பதே கூட எனக்குப் புரியவில்லை. இருவரும் சேர்ந்து ஒரு ‘படம்’ கூட வாங்கி, ஓட்டி நட்டப்பட்டிருக்கிறோம் !

பெரியார், சினிமாக்கட்சி என்று கூறியபோது, இவர் தான், மிகப் பலமாகத் தாக்கினவர். சினிமாவை விடு ! சிலம்பத்தை எடு! என்ற தத்துவ முழக்கத்தைக் கேட்டு, இடி இடியெனச் சிரித்தவர் இவர்.

இவருக்குத் திடீரென்று நான் கலைத் தொடர்பு கொள்ளலாகாது என்று எப்படித் தோன்றிற்று என்பதே புரிய வில்லை. மற்றொன்று, இவ்வளவிலும், ஊடுருவி நிற்கும் ஓர் விஷயத்தைக் கவனித்தாயா தம்பி ! அது ஒரு பயங்கரமான நிலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

இவருக்குத் திராவிடநாடுதான் சரியான திட்டம் என்று தோன்றும்; நாம் கேட்டு நடக்க வேண்டும். இவருக்குத் திராவிடநாடு கனவு என்று தோன்றும்; தமிழ்நாடு போதும் என்று தோன்றும்; உடனே நாம் அனைவரும் தலை அசைத்தபடி அவர் காட்டும் வழி நடக்க வேண்டும்.

 

பிரிவைத் தவிர வேறு மருந்து இல்லை என்பார், ஆமாம் ! என்று கூறவேண்டும். திடீரென்று, பிரிவினைக்கு உரிமை மட்டும் இருந்தால் போதும் என்பார்—அப்படியா ? அதுவும் சரிதான் ! என்று நாம் பின்பற்ற வேண்டும்.

சமதர்மம் தழைத்தோங்க வேண்டும் என்பார்—சந்தோஷம் என்று கூற வேண்டும். திடீரென்று சமதர்மம் போன்ற தத்துவச் சிக்கல்களை நாம் கவனிக்கத் தேவை இல்லை. நமக்குத் தொழிலில் வளர வேண்டும், சமதர்மம் அல்ல !—என்பார் ! ஆஹா ! இது அல்லவா சரியான திட்டம் என்று கூறி அவர் காட்டும் வழி நடக்க வேண்டும். கலைத் தொடர்பு கழகத்துக்கு நல்லது என்பார். நாடகம் ஆடலாம் என்பார் ! ஆகட்டும் என்று ஆட வேண்டும். சே ! கலைத் தொடர்பு இருக்கலாமா ! அது கழகத்தைக் கெடுத்து விடும் என்று கட்டளையிடுவார் ! கீழ்ப்படிய வேண்டும் !!

அண்ணா என்றால் என்னவென்று எண்ணிக் கொண்டீர்கள் ? அவர் ஒரு தனி ஆள் அல்ல ! ஒரு ஸ்தாபனம் என்பார் ! மகிழ வேண்டும். பிறகு அண்ணா என்ன அண்ணா; அண்ணாத்துரை என்று சொல்வோம்—பூஜாமனோபாவம் வேண்டாம்—கூடாது என்பார்— உடனே டேய்! அண்ணாத்துரை! வரையில், அனைவரும் பேச முற்பட வேண்டும், அண்ணா நடையே புதுமை என்பார், பூரிக்க வேண்டும். சே! என்ன ஆபாசமான நடை! பால் வைத்து எழுதுகிறார்களே, பேசுகிறார்களே, என்பார்; பயப்பட வேண்டும்; நடையைக் காட்டி, நற்சான்று பெற முயல் வேண்டும்,

சட்டசபையில் தி. மு. க. சாதனைகள் பாரீர் என்பார். மகிழ வேண்டும்; சேச்சே! அக்கறையே—இல்லையே! திறமையே—இல்லையே! என்பார். அழவேண்டும்—பாடம் கேட்க வேண்டும்!

 

சிவஞான கிராமணியார் நடத்துவது ஒரு கட்சியா? என்று கேட்டுக் கேலி செய்வார்; கை தட்ட வேண்டும் களிப்புடன்; சுண்டைக்காய்க் கட்சி நடத்தும் சிவஞானத்தாரிடம் தி. மு. கழகத் தலைவர் போய்ப் பேசலாமா ? பேசி, நமது கழகத்தின் தரத்தைக் குறைத்துக் கொள்ளலாமா? என்று கடிந்துரைப்பார்; கைபிசைந்து கொண்டு நிற்க வேண்டும்; பிறகு சிவஞான கிராமணியாருடன் கூடிப் பேசுவேன் என்பார்; அதுதான் முறையான ‘ராஜதந்திரம்’ என்று சொல்லிப் பாராட்ட வேண்டும்.

பத்திரிகை நிருபர்கள் மெத்தக் கெட்டவர்கள், அவர்களைக் கிட்டவே சேர்க்கக் கூடாது என்று சொல்லுவார்; ஆமாம் போட வேண்டும்; பிறகு ஓர் நாள் பத்திரிகை நிருபர்களை நண்பர்களாகக் கொள்வார்; அவர்களின் சேவை நாட்டுக்குத் தேவை என்பார்; ஆமய்யா ஆமாம்! என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஆடம்பர வாழ்க்கை கூடாது என்பர்; அப்படி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடுவது கட்சிக்கே இழுக்கை ஏற்படுத்தும் என்று அறிவுரை கூறுவார்; அரை ஆடை அணிந்த அண்ணலின் மறு பதிப்பு என்று நாம் எண்ணிக்கொள்ள வேண்டும்; அடுத்த சில தினங்களில் அழகான மாளிகையில், அலங்காரச் சூழ்நிலையில், ஆடம்பரமான கொலு நடத்துவார்; விருந்துகள், வைபவங்கள் நடைபெறும்; இதுவா ஆடம்பர ஒழிப்பு என்ற எண்ணம் தோன்றினாலும் அடக்கிக் கொண்டு ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பார், பாராட்ட வேண்டும்.

அவருக்கு எவ்வெப்போது எது எது சரி என்று, முறை என்று படுகிறதோ, அதை நாம், கண்டறிந்து, ஏற்று நடக்க வேண்டும். எது எப்போது, அவருக்குப் பிடிக்காது என்று அறிவிக்கப்படுகிறதோ அப்போதே நாமும் அவைகளை, ஒதுக்கி விட வேண்டும், இவ்வளவையும் அவர் கூடிக் கலந்து பேசமாட்டார்—குறிப்பறிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்தாலொழியப் பதவிகளுக்கு வரலாகாது என்பார்—ஆமாம்! என்றுரைக்க வேண்டும் அடுத்த முறை, ஐந்தாண்டு வேண்டாம், மூன்று ஆண்டுகளே போதும் என்பார்—ஆமாம்! ஐந்தாண்டு அதிகம்—மூன்று ஆண்டுகளே போதும் என்றுரைக்க வேண்டும்.

கழகக் காரியத்தில் இன்னார் இருப்பது ஆபத்து என்பார்—விலக்கி வைத்திருக்கிறோம் என்று கூற வேண்டும்—அடடாடா; ரொம்ப நல்லவர்! நிரம்பத் திறமைசாலி! அவர் எந்த அக்னிப் பரிட்சைக்கும் தயாராக இருப்பவர்—என்பார், ஆமாம்! என்று சொல்ல வேண்டும்.

நமது கழகத்தைத் துச்சமென்று எண்ணும் கலைஞனை நாம் மதிக்கலாகது என்பார்—ஆமாம்! மதிக்கத்தான் கூடாது என்றுரைக்க வேண்டும்; கழகத் தொடர்பு இருந்தாலென்ன?இல்லாது போனால் என்ன? கலைஞனை அவனுடைய திறமைக்காகப் பாராட்ட வேண்டும் என்பார்—பாராட்டுவோம் என்றுரைக்க வேண்டும்.

தம்பி! இப்படி ஒரு பயங்கர நிலைமை வளர்ந்து, நான் எல்லாவற்றுக்கும் இசைவு தந்தேன் — என் சொந்த விருப்பு வெறுப்புப் பற்றிய கவலையைக்கூட விட்டொழித்து, ஆனால், திராவிடநாடு வேண்டாம், பிரிவினையே வேண்டாம், இந்தியப் பேரரசிலேயே ஒட்டிக் கொண்டிருக்கலாம், சமதர்மம் கூட வேண்டாம், என்பதற்குமா, நான் சம்மதிக்க முடியும்!

கொள்கையைக் கடைப்பிடித்தபடி கோபதாபம் காட்டினாலும், முறைகளை மாற்றினாலும், வசவுகளை வீசினாலும், பொறுத்துக் கொண்டேன். ஆனால், கொள்கையையே மாற்றி விடும்போது, நான் எப்படி இணங்க முடியும்— நேர்மையில் நாட்டம் கொண்ட எவர்தான் இணங்கமுடியும்?

அப்போது அப்படிச் சொன்னேன், அதைக் கேட்டு என் பின்னால் வந்தாயல்லவா? இப்போது வேறு ஒன்று, முற்றிலும் மாறானது சொல்கிறேன். பின்பற்ற வேண்டியது தானே! யோசனை என்ன? கேள்வி என்ன?—என்றா பேசுவது?

முன்பு சொன்ன சொல்லை மறந்தவர்களைச் சும்மாவா விட்டு வைத்தார், இவர்? திருச்சி மாநில மாநாடு நினைவிற்கு வருகிறதா? பண்டித நேரு, இவர் நாவில் சிக்கிப் பட்டபாடு, தெரியுமல்லவா? எதற்கு? முன்பு அப்படிப் பேசினாயே, இப்போது இப்படிப் பேசுகிறாயே, ஏன் இந்த முரண்பாடு! நீயும் ஒரு தலைவனா!—என்று கேட்டாரே!

1945-ம் வருட நேருவே! 1956-ம் வருட நேருவுக்குப் புத்தி புகட்ட வாராயோ?—என்று பேசினார். கொள்கைக் குழப்பவாதிகளுக்குத் தெளிவுரை தந்தார்.

“இன்று நம்மை மிகக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருக்கிறவர்—நமது கொள்கைகளுக்கு நேர் எதிரிடையாகப் பயமுறுத்தல்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறவர் யார் என்று சொன்னால், பிரதமர் நேரு ஆவார். அவர் பதவிக்கு வந்தபின்—அந்தப் பதவி நிலைத்தபின், ‘தன் ஆயுட்காலம் வரைதானே இந்த நாட்டு அரசியல் ஆதிபதியத்தில் அமர முடியும்; தனக்கு அடுத்தாற்போல் திரும்பிப் பார்த்தால் எறும்புக் கூட்டங்களும் கரையான் கூட்டங்களும் தான் இருக்கின்றன; வாழ்கின்ற வரையில் நம்மை விட்டால் அவர்களுக்கு வேறு கதியில்லை; —என்ற கருத்து அவர் உள்ளத்திலே ஊற ஊற, அவருடைய வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் பயங்கரமாகவும், 1945-ல் இருந்த நேருவுடைய வார்த்தைகளுக்கு நேர் முரணானவையாகவும், 1945-ல் இந்திய அரசியலில் வீர நடை போட்டுக் கொண்டு வந்த நேருவின் இராஜ தந்திரத்திற்கு முற்றிலும் முரணான வகையிலும் அவருடைய பேச்சுக்கள் உருவெடுத்திருக்கின்றன.

“ஆந்திர மாநிலம் வேண்டும்—என்ற கிளர்ச்சி நடைபெற்ற போது, பண்டித நேரு எவ்வளவு ஆணவமாகப் பேசினார்! ‘முடியாது, முடியாது, முடியாது; யார் அவன்—ஆந்திர மாநிலம் கேட்பவன்? இந்த மக்கள் சபையில்கூட யாரேனும் இருக்கிறார்களா’ என்று முறைத்துப் பார்த்து, அதட்டி உட்கார வைத்துக் கொண்டிருந்தார்; அந்நிலையில், பொட்டி சீராமுலு உண்ணா விரதம் தொடங்கி விட்டார்; ‘அவருடைய நிலை கவலைக்கிடமா யிருக்கிறது’, என்று செய்தி வருகிறது; என்றாலும், மக்கள் சபையில் பிரதமர் நேரு வீர கர்ஜனை புரிந்தார்—’ஆயிரம் பொட்டி சீராமுலுகள் பிணமானாலும்—நான் என்னுடைய நிலையிலிருந்து பிறழமாட்டேன்; தனி மாகாணம் வேண்டும், என்ற கருத்துக் காட்டுமிராண்டித் தனமானது’—என்று குறிப்பிட்டார்.

“ஆனால் பழைய பண்டித நேரு—1945-ல் இருந்த நேரு என்ன சொன்னார்? கம்யூனிஸ்ட் கட்சியைவிட வேகமாக வாதாடினார்—’தனித்தனி மாகாணங்கள் வேண்டு மென்று மட்டுமல்ல; ‘தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்படுபவை, தனி அரசாக வாழ வேண்டும் மென்று விரும்பினாலும் வாழலாம், அதைக் காங்கிரஸ் தடுக்காது—நானிருக்கிற வரையில் தடுக்கவிடமாட்டேன்’—என்று! அந்தப் பேச்சு எங்கே நிகழ்ந்தது என்பதை அறியும்போது இன்னமும் நமக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும்.

“காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிகழ்ந்தது, அந்தப் பேச்சு; அங்கே இருக்கிறது—நமது அனுதாபத்திற்குரிய அரசியல் ஏமாளியான ஷேக் அப்துல்லா இருக்கிறாரே, அவர், கூட்டம் ஒன்றில், நேருவுக்கு ஒரு விண்ணப்பத்தைப் படித்துக் காட்டினார்; என்ன அந்த விண்ணப்பம்? ‘தனித்தனி அந்த அந்த தேசீய இனங்கள், தனித்தனி அரசை நிறுவிக்கொள்வதற்குக் காங்கிரஸ் ஆக்கமளிக்க வேண்டும்,’—என்ற தான் அவர் விண்ணப்பித்துக் கொண்டார்.

“அதைக் கேட்ட நேரு சீறி எழுந்தார்; அளிக்க வேண்டும் என்று கோருவதிலே இருந்து, நாங்கள் ஏதோ அதைப் பிரிப்பதைப் போலல்லவா கேட்கிறீர்கள்? நாங்கள் அதற்காகவே இருக்கிறவர்கள்; தனி அரசு மட்டுமல்ல—அந்தத் தனியரசிலே வாழுகிற ஒரு ‘குரூப்’ கோஷ்டி, அது தனியரசு வேண்டு மென்று விரும்பினாலும் ‘அதில் நூற்றுக்கு நூறு நியாயம் இருக்கிறது;’—என்று பண்டித நேரு பேசினார்.

“அந்தப் பேச்சின் நான்கைந்து வாசகங்களை உங்களுக்கு நான் கூறுகிறேன்; ஏனென்றால் அவர்கள் ஏதோ பெரிய தத்துவங்களை வகுத்துக் கொண்டவர்களைப் போலவும், நாம் ஏதோ ‘தத்து பித்து’ என்று உணர்ச்சி வேகத்தில் கேட்கக்கூடாதவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கும் ‘தப்பிலி’ களைப்போலவும் பல நண்பர்கள் எண்ணி, நம்மை ஏசிப்பேசுகிறார்கள். அவர்களுக்கு விளக்கம் தருவதற்காக, 1945-ம் ஆண்டில் வாழ்ந்த நேரு, பேசியதை இங்கே எடுத்துரைக்கிறேன், நேரு பேசுகிறார், கேளுங்கள்:—

‘இந்தியாவிலிருந்து எவராவது பிரிந்து செல்ல விரும்பினால், ‘வேண்டாம்’ என்று காங்கிரஸ் அவர்களை வேண்டிக்கொள்ளும்; வேண்டிக்கொண்டதற்குப் பின்னும், பிரிந்து தான் செல்லுவோம்’ என்று சொன்னால் கண்ணியத்தோடு அதை அனுமதித்துவிடும்.’

“இது பண்டித நேரு பேசியது—1945 ஆகஸ்டு 2-ந் தேதி ஸ்ரீநகரில் பேசினார்.

‘காங்கிரஸ் ஏற்கனவே தனித் தனி தேசீய இனங்களுடைய சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டுவிட்டது’—கோபத்தோடு இப்படிப் பேசினாராம் நேரு! ஏன்? “ஷேக் அப்துல்லா ஏற்றுக்கொள்ளவேண்டும் ஐயனே! என்று சந்தேகத்தோடு கேட்டார்; வேண்டுமென்ற கோரிக்கையில் சந்தேகம் தொனிக்கிறதே, சிஷ்யா! இந்த உரிமை வேண்டும் என்று நாம் தான் ஏற்கனவே தீர்மானித்துவிட்டோம்! இன்னும் உனக்கு ஏன் சந்தேகம்’ என்று பண்டிதர் நினைத்துக் கொண்டிருக்கிறார் அப்படி!

“முதல் முதல் சந்தேகப்பட்ட அப்துல்லா; மிக மிகப் புத்திசாலி! ஆனால் பண்டிதரது பதிலைக் கேட்டதும், சந்தேகத்தை நீக்கிக்கொண்ட ஷேக்அப்துல்லா, உலகத்திலே இருக்கிற ‘விடுதலை விரும்பி’களின் நிரந்தர அனுதாபத்திற்குரிய ஷேக் அப்துல்லாவாக மாறிவிட்டார்! அதனால்தான் அவர், காலவரையின்றிக், கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீநகரத்துச் சிறைச்சாலையில்!

“பெரிய இந்தியாவில், ஏதாவது ஒரு குறிப்பிட்ட ‘யூனிட்’—பிரதேசம் இருந்துதான் தீரவேண்டும் என்று வற்புறுத்தமாட்டோம்’ என்று பேசிய 1945-வது வருடத்திய நேருவே! இதோ பார்—உன்னுடைய ‘துரோகி’ 1936-வது வருடத்திய நேரு, உன்னை மறுக்கிறார்!

“முடியாது முடியாது! யார் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று கருதுகிறவர்கள்? பிளவு சக்திகளே! விடமாட்டேன்! தெருவிலே குதித்து, உங்கள் குரல்வளையைக் கடித்துக் குருதியை உறுஞ்சுவேன்! முடியாது!” என்று பேசுகிறார், 1956-வது வருடத்திய நேரு!

“பிரிந்துவிட்ட—சுயநிர்ணய உரிமைபெற்ற ஒரு மாகாணத்திலே இருக்கிற ஒரு கோஷ்டி பிரிந்து போக வேண்டுமென்று சொன்னாலும், பிரிந்துதான் போகவேண்டும் என்று கர்ஜித்த நேருவே! இதோ! பம்பாயை மராட்டியர்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்! ‘மராட்டியர்களே பெரும் பகுதியினராக வாழும் பெரு நகராம் பம்பாய் மராட்டியருக்கே வேண்டு’மென்ற கோரிக்கைக்கு உமது பதில் என்ன?

“முடியாது; டில்லியின் நேரடி ஆட்சியில்தான் இருக்கும்,’ என்பதுதானே!

“யாரையா அதை முடிவு செய்வது? பம்பாயிலே இருக்கிற மக்களா? டில்லியில் இருக்கிற நீரா?;’—என்று மராட்டியர் கேட்கிறார்கள்! ‘நான்தான்! நானேதான்!” என்று பதில் சொல்கிறார் நேரு’

“நேருவே! 1945-ம் வருடத்திய நேருவே! நீ உயிர் பெற்று வரமாட்டாயா?—என்று நாங்கள் கோருகிறோம்.

“மக்கள் உரிமையை மதிக்காமல், மதோன்மத்தரைப் போல், பழைய காலத்துக் காட்டுமிராண்டி, இராசாக்களைப் போல் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிற இந்த 1956-ம் ஆண்டு நேருவுக்குப் புத்தி புகட்ட, நீ உயிர்பெற்று வாராயா?—என்று நான் கேட்கிறோம்!

“தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் தமிழர்கள் வாழுகிறார்கள்; அவை தமிழகத்தோடு சேர்க்கப்பட வேண்டும், என்று நாம் கோருகிறோம்.

“தமிழர்கள் வாழுவதனாலேயே அப்பகுதிகள், தமிழகத்துடன் சேராது; அங்கிருக்கிற தமிழர்கள் விரும்புவதனாலேயே அது தமிழகத்துடன் சேராது; நான் விரும்பினால் மட்டுமே அது எங்காவது சேரலாம் அல்லது செத்து ஒழியாலாம், என்று ஒருவர் பேசுகிறார்.

“1945-ம் வருடத்திய நேருவே! நீ இறங்கி வந்து, அவருக்குப் பாடம் புகட்டாயா?—என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது!”

இதே பாணியில் தம்பி சம்பத்தே! தோழர் சம்பத் அவர்களைத் திருத்தமாட்டாயா, என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால், ‘தம்பி’ என்று கூப்பிடவே, பயமாக இருக்கிறதே ! 8—4—61-ல் தான், முதன் முதலாக, ‘அவர்’ என்று அழைத்துப் பேசினேன்—ஒரு புதுக் கட்சியின் தலைவர் ஆகிவிட்டவரை மரியாதையாக அழைக்காவிட்டால், கோபம் கொப்பளிக்குமே என்று. நான் ‘அவர்’ என்று அழைத்ததும், அவரும் என்னைக் கௌரவப்படுத்தினார். எப்படி? அண்ணா என்று அழைத்து வந்தவர், தோழர் அண்ணாத்துரை என்று பண்பு கெடாமல் அழைக்கலானார்.

சரி! அண்ணா என்று அழைக்க நாங்கள் இருக்கிறோம் இலட்சக்கணக்கில் என்று, கூறுகிறாய். உன் உள்ளன்புக்கு என் நன்றி, தம்பி!

“திராவிட நாடு பற்றி முன்பு தவறான கருத்துக்கொண்டிருந்தேன்—அதே கருத்து இப்பொழுது இருக்கவேண்டுமா?” என்று கேட்கிறார் மாறியவர். ஆனால், அவரே தான், நேருவை நையப்புடைத்தார்—சொல்லால் அவ்வளவு அழுத்தந்திருத்தமாகப் பேசினார். முதல் அவதாரத்தில் பேசினார், எட்டாவது அவதாரத்தில் அதை மறந்துவிட்டார் என்பதற்கு, 1945-ல் பேசினார். இடையில் பத்தே ஆண்டுகள்! அரசியல் வாழ்வில் அது கைநொடிப்பொழுது! இவரே, அதற்குள் அதை மறுத்து முரண்பட்டுப் பேசுகிறார் என்றால், ஏன்? நேருவின் உள்ளம் தெளிவற்ற நெஞ்சமா ! இல்லை! தெளிவுள்ள நெஞ்சம் என்பதற்காகவே இந்தியத் துணைக்கண்டத்துத் தலைமையை அவருக்குத் தாராளமாக அளித்தது இந்திய அரசியல், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்கு முரணாகப் பண்டித நேரு பேசியதற்கு இந்தப் பலத்த தாக்குதல்! மாறிப் பேசலாம்—ஆனால் 10 ஆண்டுகள் எனும் இவ்வளவு குறுகிய காலத்திலா? என்று இடித்துக் கேட்டார்! பத்து ஆண்டுகள் ஒரு கைநொடிப்பொழுது என்கிறார்.

இவர்! தம்பி! பத்து நாட்கள் கூடப் பொறுத்துக் கொள்ளவில்லை, 7—4—61-ல் தி. மு. க. வரலாற்று வெளியீட்டு விழா! 9—4—61-ல் தி. மு. கழகம் பயன் இல்லை; அதை விட்டு விலகிவிடுகிறேன், என்று அறிக்கை! இவர் தான் பத்து ஆண்டுக் கணக்கை எடுத்து வைத்துக்கொண்டு, நேருவை பிய்த்து எறிந்தவர். 9—4—61-ல், கழகத்தைவிட்டு வெளியேறினார்—19—4—61-ல் புதுக்கட்சி! அதிலே, திராவிட நாடு இல்லை! சமதர்மம் கிடையாது!? பிரிவினை கிடையாது தமிழ் நாடு, பாரதப் பிணைப்பில்!

பத்தே நாட்கள்! பத்து ஆண்டுகள், கைநொடிப் பொழுது என்றவர்தான், பத்து நாட்களுக்கும் ஒரு உவமைக் கணக்குத் தரவேண்டும்!

இவர் ‘பழைய நேரு’வை அழைத்துப் புதிய நேருவுக்குப் புத்தி கூறச் சொன்னார், நாம்?

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற, திருச்சி மாநில மாநாட்டுப் பேச்சு நான் தந்திருப்பது.

தம்பி! அப்பொழுது அவர், கழகத்தைவிட்டு வெளியேறப் போவதாக ஒரு சரடு விடப்பட்டது, அடேயப்பா! அதற்குப் பதில் அளிக்கும்போது, பேசின பேச்சு—ரீங்காரமல்லவா, அது?

“அண்ணனை நான் இழந்து விடுவேன் என்றோ, இழந்து விட வேண்டுமென்றோ, எவனாவது கருதினால், மடையனே! நீ புத்தி பெறுவதற்கு இன்னும் வெகுநாள் இல்லை என்று தான் கூற இயலும்.” ஐந்து ஆண்டுகள்! கழகத்தைவிட்டு விலகி, எண்ணிப் பத்தே நாட்கள், தோழர் அண்ணாத்துரை ஆக்கப்படுகிறேன்! பெரியாரை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் 12 ஆகிறது—அவருடன் இருந்தபோது அழைத்தது போலவே தான் இன்றும் பெரியார் என்று மேடையில் பேசுகிறோம்; தனியாகப் பேசும்போது, எப்போதும்போல், அவர், “ஐயா!”வாகத்தான் இருக்கிறார்.

 

ஆனால், நம்மைப்போலவா, எல்லோரும் பைத்தியக்காரர்களாக இருப்பார்கள். தலைவர் ஆன பிறகு, அண்ணனாவது மண்ணாவது—தோழர் அண்ணாத்துரை தான்!

போகட்டும்—புதுப் பெருமை கிடைக்கட்டும்—நாட்டம் என்ன எனக்கு? நான் கூற வந்தது, எவ்வளவு மின்சாரவேக மாறுதல் என்பதை, தம்பி! நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

“அண்ணாவுக்கு வேண்டுமானால் இலட்சக் கணக்கான தம்பிகள் உண்டு; ஆனால், எனக்கு ஒரே ஒரு அண்ணன் உண்டு!” ஆண்டுகள் ஐந்து—அரைக் கைத்நொடிப்பொழுது—அண்ணனாது மண்ணாவது என்று கூறும் நிலை பிறந்துவிட்டது. எத்துணை வேகமான வளர்ச்சி!!

நமது கழகத்தில் இருந்து, விலகிப் புதுக் கட்சி அமைப்பது மட்டு மல்ல—புதுக்கட்சியின் வளர்ச்சி கூடப்பிறகு; முதலில் தி. மு. கழகத்தை அழிக்க வேண்டுமாம்! ஏனெனில், இவர் வெளியேறி விட்டாரல்லவா, அதனால்!

இது இவருடைய இப்போதைய எண்ணம். ஆனால் அன்று—5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநில மாநாட்டில் சொன்னது என்ன தெரியுமா, தம்பி!

“தி மு கழகத்தைப் பொறுத்தவரையில் நான் கூறுகிறேன்—எவருடைய இழப்பினாலேயும் தி. மு. கழகம், பெற்றிருக்கிற வளர்ச்சி, அடைந்திருக்கிற பேருரு, பாதிக்கப்படாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருவர் விலகுவதால் உடைந்து போய் விடக்கூடிய நிறுவனம், தி. மு. கழகம் அல்ல.” ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த கழக வளர்ச்சி கண்டே, இப்படிச் சொல்லவேண்டி நேரிட்டது என்றால், இப்பொது தி. மு. கழகம் பெற்றுள்ள நிலையைப் பார்த்திடும் எந்தப் பித்தனாவது, அது அழிந்து விடும் என்று பேசுவானா? அல்லது திராவிட நாடு, கிடைக்காது என்றாவது பேசுவானா?

“தாசிகள் பற்றிய கதைகள், நீங்கள் நிரம்பப் படித்திருக்கலாம்—தாசி—ஒருவனிடத்தில், பணம் இருக்கும் வரையில்தான், என்னைத் தழுவிக் கொண்டே இருங்கள்; நீங்கள் இல்லா விட்டால் நான் ஏது? நான் இல்லா விட்டால் நீங்கள் ஏது? என்று ஈருடலும் ஓருயிரும் என்பது போலப் பேசுவாள். ஆனால் அவனிடம் இருந்த பணம் பூராவும் பறி போன பிறகு, அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு என்ற நிலைக்கு வரும் போது, அவனைக் கழுத்தைப் பிடித்து, நெட்டித் தள்ளிவிடுவார்கள். அதைப் போலவே தான் ஏகாதிபத்தியங்களும்…

“நம் செல்வம் முழுவதும் சுரண்டப் படுகையில்—தாசி போல—நாமெல்லாம் பாரத புத்திரர்கள் அல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே!—என்பர், நாம் ஒட்டாண்டிகளான பின், நீங்கள் ஏன் வடநாட்டுடன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்? என்று பேசுவர்—தாசி போல, எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் வடநாட்டு ஏகாதிபத்திய அணைப்பினின்றும் விலகிக் கொள்ள வேண்டும் என்று தி. மு. கழகம், கூறுகிறது.”

‘அண்ணா நீயும் வேண்டுமென்றே, அவர்கள் குறை சொல்வது போலவே, பெண்கள் விஷயமாகத்தானே எழுதுகிறாய்? ஏனண்ணா; பால் உணர்ச்சி? இதைத்தானே, விலகியோர் கூடக்கண்டிக்கிறார்கள். வடநாடு, தென்னாட்டைச் சுரண்டிச் சக்கையாக்கிக் கீழே துப்பிவிடும் என்று சொல்லக் கூடாதா? ஆபாச ரசமான, ஒரு கதை சொல்லித்தானா இதை விளக்க வேண்டும்? இதைத்தான் அவர்கள் ஆபாச நடை என்கிறார்கள்!’ என்று சொல்லுகிறாய்; தம்பி புரிகிறது! பொறுத்துக்கொள், இந்தக் கதை, நான் சொன்னது அல்ல! எழுத்தோவியமே, ஆபாச நடை, கூடாது, பால் உணர்ச்சி ஆகாது என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ள தோழர் சம்பத் அவர்களுடையது.

அவர் பேசியதா? ஆபாசம் கூடாது என்பவர் பேச்சா?—என்று கேட்டு ஆச்சரியத்தால் மூர்ச்சையாகி விடாதே! அவரேதான்! அவருக்கு விருப்பம் இருந்த போது, இப்படிக் கதை கூறினார்—இப்போது கண்டிக்கிறார்!

இதிலென்ன ஆச்சரியம், திராவிட நாடு கூடாது என்று பேசுவோர் துரோகிகள், கங்காணிகள், இளிச்சவாயர், அகப்பட்டதை சுருட்டுபவர் என்று பேசினவரேதான் இன்று, திராவிட நாடு கனவு என்கிறார்!

அவருக்கு அவரே பதில் சொல்ல, ஏற்பாடு செய், தம்பி! அவரையும் மக்கள் புரிந்து கொள்ள முடியும். இப்படிப் பட்டவர்களால் தி. மு. கழகத்தை ஏதும் செய்திட முடியாது என்பது விளங்கும்.

தப்பி! இவ்வளவும் நான் எடுத்து எழுதுவது, விலகியவரின் போக்கில் ஏற்பட்டு விட்ட விசித்திரமான மாறுதலைச் சுட்டிக் காட்டி ஏளனம் செய்ய அல்ல. உள்ளபடி எனக்கு அதை நினைவிற்குக் கொண்டு வரும் போது, வேதனை பீறிட்டு எழுகிறதே தவிர, பரிகாசம் செய்திடத்தோன்ற வில்லை. நான் அவைகளை எடுத்து எழுதுவதன் நோக்கம், நமக்கு அவர் அளித்திருக்கும் அருஞ் செல்வம், இவ்வளவு கருத்துகளைத் தந்தவர், காலக் கோளாறினால், இன்று சாய்ந்து கொள்கிறார் என்றால், நாம் கோபிக்கத் கூடாது என்பதற்காகவுந்தான்.

 

கேட்போரைச் சொக்க வைக்கும் இசை வாணனுக்கு காய்ச்சல் கண்டால், பக்கத்தில் உள்ளோரின் காதுகுடையும் விதமாக இருமுகிறார்! அதற்காக அவர் மீது கோபித்துக் கொள்கிறோமா? பரிதாபப்படுகிறோம்!! காது குடைச்சல் எடுக்கும் படியாக அவர் இருமும்போது கூட, அவர் நன்றாக இருந்த போது பாடிய பண்ணின் இனிமையைக் எண்ணிக்கொள்கிறோம்; அந்த எண்ணமே நமக்குத் தேன், அது போலத்தான் இது.

ஆகவே, தம்பி! இன்று ஏற்பட்டுவிட்ட போக்குக் கண்டு, மனம் பதறாதே, கோபம் கொள்ளாதே! வெளியே எடுக்கப்பட்டு விட்ட முத்து மீண்டும் சிப்பிக்குள் போய்விட முடியாது; சிப்பியும் முத்துதனை எடுத்து வைத்துக் கொண்டு, கடலிடைச் சென்று ஒளிந்துவிட முடியாது. அது போலவே, திராவிட நாடு பிரிவினைக்கான ஆதாரங்கள், வாதங்கள் ஆகியவற்றினை அளித்தவர், அவைகளைத் தம்முடன் எடுத்துக்கொண்டு போய் விடவில்லை—போய்விட முடியாது—முத்து நம்மிடம்—சிப்பி இடம் மாறிவிட்டிருக்கலாம்—அவ்வளவே.

தூற்றிப் பேசுகிறார்களே என்று துயரப்படாதே! தூற்றிப் பேசுவோரின் பட்டியலில், சில புதிய பெயர்கள் இணைக்கப்படுகின்றன; வேறொன்றுமில்லை என்று எண்ணிக் கொள். தொடர்பே இல்லாதவர்கள் நம்மைத் தூற்றவில்லையா? நாம் தாங்கிக் கொள்ளவில்லையா? அவர்களை விட, இவருக்குச் சற்று உரிமை அதிகம்தானே இருக்கும்; தொடர்பு காரணமாக, தோழமை இருந்த காரணமாக! எனவே ஏசட்டும். எரிச்சலூட்டலாம் என்ற நோக்குடன் ஏசுவர்; நீங்கள் மட்டும், ஏசல் கேட்டும் மனம் கலங்காத நிலையைப் பெற்றுவிடுவீர்களானால், அதனை விட, வலிவூட்டும் வாய்ப்பு வேறு இல்லவே இல்லை என்பதை உணருவீர்கள்.

 

மற்றவர்கள், நமது கொள்கையைத் தூற்றும் போதாகிலும், ஒரு விவரமும் புரியவில்லையே இவர்களுக்கு என்று நமக்கு ஆயாசம் ஏற்படும், புதுக் கட்சியார் பேசும் போது, அப்படியா? எல்லாம் தெரியும் இவருக்கு; நாடு அறியச் சொன்னவர்தானே; மாற்றார் மருளப் பேசினவர்தானே; விவரம் அறியாமலா பேசுகிறார்; அறிந்ததை மறைத்துக் கொண்டு பேசுகிறார்—மெத்தக் கஷ்டப்படுகிறார் என்பதே கூட அல்லவா, நமக்குப் புரிகிறது, புரியும் போது புன்னகை வருமேதவிர, புருவத்தை நெரிக்கவா தோன்றும்!

ஏன், இதனைச் சொல்கிறேன் என்றால், தம்பி! சென்னைக் கூட்டத்திலே, ஏசல் கேட்டு எரிச்சல் கொண்டவக்கள், பூசல் கிளம்பிவிடுமோ என்று எண்ணத்தக்க விதத்தில், கலகம் விளைவிக்க முற்பட்டனர் என்று இதழ்களில் கண்டேன்; அது மிக மிகத் தவறான போக்கு; அருவருக்கத் தக்கது; கண்டிக்கப்பட வேண்டியது என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக இதனை எழுதுகிறேன்.

ஒன்று சொல்வேன், நம்மைப் பிறர் இகழக் கேட்டும், பதறாது இருக்கும் போக்கை விடச் சிறந்த பண்பு வேறு இல்லை. நமக்கு நமது கொள்கையிலே அசைக்க முடியாத நம்பிக்கை! ஆராய்ந்து பார்த்ததால் ஏற்பட்ட நம்பிக்கை இருக்கிறது என்றால், அந்தக் கொள்கையை எவர் கேவலப் படுத்திப் பேசினாலும், நமக்கு என்ன நட்டம்? ஏன் நாம் எரிச்சலடைய வேண்டும்?

கொள்கைப் பற்று என்ன, கீழே வீசினால் உடைந்து தூளாகி விடக்கூடிய, கண்ணாடிப் பாத்திரமா!’

இல்லையே—அது நமது குருதியில் கலந்து விட்ட ஒன்று அல்லவோ? அதைக் கேலி பேசுவோராலா, ஒழித்து விட முடியும்? கண்டித்து விடுவதினாலா அழித்து விட முடியும்?

 

நேரு வீசாத கண்டனமா, கேலிக் கணையா, இனி ஒருவர் வீசப் போகிறார்கள்? என்ன செய்தோம், அவர் உரை கேட்டு? ஏகாதிபத்தியப் போக்கு அவரை அப்படிப் பேச வைக்கிறது என்று எண்ணிக் கொண்டோம்; அவர் உரையை ஏற்க மறுத்தோம் நம்மில், தோழர் சம்பத்து போன்றவர்களோ, பழைய நேருவை விட்டுப் புதிய நேருவுக்குப் புத்தி புகட்டச் சொன்னார்கள்.

நமது கொள்கைகளை மறுப்போரின் பேச்சைக் கேட்டு, மனம் பதறாத போக்கு, கட்டாயம் ஏற்பட்டாக வேண்டும். அவர்கள் பரப்பும் தப்புப் பிரசாரத்தை மறுத்து, மக்களுக்குத் தெளிவளிக்க, நமது கொள்கையின் நியாயத்தை நிலை நாட்ட, நமக்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் நமது நியாயத்தை மெய்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையும், வாய்ப்பும், நமக்கு இருக்கும் போது, நாம் ஏன் பதற வேண்டும்—பேசுவோர் மீது ஏன் ஆத்திரப்பட வேண்டும்—கலகம் விளையும் நிலை ஏன் பிறக்க வேண்டும்?

வேண்டாம், தம்பி! வேண்டாம்! நமது கொள்கையின் தூய்மையும் வலிவும், தரமும் பழுது படாதபடி நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், எவர் நமது கொள்கைகளை, கழகத்தவரை, மனம் போன போக்கில் ஏசினாலும், ஒரு துளியும் பதறாத நிலை—அமைதியான மன நிலை, நமக்கு ஏற்பட்டாக வேண்டும். தணலில் போட்டு எடுக்கிறார்கள் தங்கத்தை, நினைவினில் இருக்கட்டும்.

புடம் போட்டு எடுக்கப்பட்ட வீரர்கள், தி. மு. கழகத்தில் இருக்கிறார்கள்—இது போனவர் சொன்னது, இதனை மறவாதே!

என்னைப் பொறுத்த வரையில், இதனைக் கூறுவேன்—என்னை எவர் இழிவாகப் பேசினாலும், கவலைப்படவில்லை. எனக்கென்ன குறை, தம்பி! உன் இதயத்தில் எனக்கு இடம் இருக்கும் போது.

பிரிந்து சென்றவர்கள் கொதித்துப் பேசும் போதும் கூட, அவர்களைப் பற்றிக் கடிந்துரைக்காதே—எனக்கு நிச்சயமாக அது பிடிக்காது என்பது மட்டுமல்ல—கனியிருக்கக் காய் கொள்ளற்க என்பது தமிழ் மறை அன்றோ—அது நமது பண்பு எனக்கொள்ள வேண்டும். எனக்கு இன்றும், பிரிந்து போனவர்கள், என்னை இழித்தும் பழித்தும் பேசுவது பற்றிக் கோபம் வரவில்லை; இருந்த நாட்களிலே நிகழ்ந்தவைகளைத்தான் எண்ணி எண்ணி உருகியபடி இருக்கிறேன்; என்ன செய்வது தம்பி! எனக்கு இதயம் இருக்கிறதே!!

கட்டுரை –  3

கொளுத்தும் வெயில்

கொட்டும் மழை

கடுங்குளிர்

கருக்கல்

பேய்க்காற்று

இவை எதனையும் பொருட்படுத்தாது, அவர்கள், கருமமே கண்ணாயினர்; பழச்சாறு பருகினர்; பூங்காற்றுத் தேடினர்; புதுப்புனலாடினர்; இசை கேட்டு இன்புற்றனர்; களிப்புத்தரவல்லனவற்றிலே எல்லாம் மாறிமாறி ஈடுபட்டனர், மற்றவர்கள்; அவர்கள், எல்லாம் பெற்றாகிவிட்டது. இனி நமக்குக் குறையேதும் இல்லை, வாழ்க்கை ஒரு இன்பப் பூங்காவாகிவிட்டது; கேட்டது கிடைக்கிறது; தொட்டது மலருகிறது; நினைப்பது நடக்கிறது; இனி நாம் பெற்றவைகளைச் சுவைத்து மகிழத்தான் காலத்தைப் பயன்படுத்த வேண்டும்; கொளுத்தும் வெயில் எனில், குன்றேறிக் குளிர்ச்சி நாடுவோம்; கடுங்குளிர் எனில், கம்பளம் உண்டு, அழகியதாய், வசாதியாய், குளிரைப் போக்கிக்கொள்வோம். பேய்க்காற்றும் பெருமழையும் குடிசைகளைப் பிய்த்தெறியும் மண் சுவரினைக் கீழே சாய்த்திடும், நம்முடைய கோட்டை மீது வீழ்ந்து அவை தம் வலிவிழந்துபோகுமேயன்றி வேறென்ன கெடுதலைச் செய்திட இயலும்? எனவே ஆடுவோம், பள்ளுப் பாடுவோம், அடைய வேண்டியதை எல்லாம் அடைந்து விட்டோம் என்று அகம் மிக மகிழ்வோம் என்று இருந்தனர். சிலர் மட்டும், ஓய்வுக்கு நேரம் இல்லை; உறக்கமோ வருவதில்லை; இடுக்கண்கள் இருப்பதாலே எடுத்த காரியத்தை முடித்திட மேலும் மும்முரமாகப் பணியாற்றிடவேண்டும்; எனவே கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கடுங்குளிர், பேய்க்காற்று, கருக்கல் எனும் எதனையும் பொருட்படுத்தாமல், பணியாற்றியபடி இருந்தனர். மற்றவர் எள்ளி நகையாடினர், “ஏடா மூடா; ஏன் இந்த வீண் வேலை! நான் தான், நீயும் மனித இனம் தானே என்றெண்ணி மனம் இளகி, எண்ணற்றவர்கள் இருந்திட ஏற்றதாம் என் எழில் மணிமாடத்தில், ஆனினம் தங்கிட அமைந்ததோர் இடத்தினிலே, சென்று தங்கிடுவாய், செய்தொழிலைக் காட்டிடுவாய், நல்ல ஊழியன் என்ற பெயரெடுத்து நாலாறும் பெற்று காலத்தைக் கடத்திடுவாய்! உண்ணத் தந்திடுவேன், உழல்வானேன் வயல்தேடி; வண்ணம் இல்லை எனினும், இருந்ததுதான் இந்த ஆடை; அங்கம் மறைத்திட அதுபோதும் அல்லவோ சொல்; தந்திட நானிருக்கத் தவிப்பானேன் வேறுபெற; வந்திடு என் முற்றம்; வாழ்வளிக்க முடியும் என்னால்; வதைபட்டுச் சாகாதே, வரம் தந்தேன் உதறாதே!” என்று பேசினர். ஆனால், அந்த உழைப்பாளிகளோ, ஓயவில்லை, உறங்கவில்லை, மயங்கவில்லை, மனம் மாறவில்லை, வேலை! வேலை! வேலை! செய்தவண்ணம் இருந்தனர்.

வெட்ட வெளி! பொட்டல் காடு! தண்ணீர் கிடைக்காத வறண்ட திடல்!—இருக்க இடம் இதிலாம்! எழில் இல்லம் இவ்விடமாம்! சுற்றும் மணற்பரப்பு! செடி கொடியும் வாழாது! இங்கு வயலாகும், வாழ்வளிக்கும் வகை பெறுவோம், என்று கதைக்கின்றார், கருத்தறியாச் சிறார்போலே!! வெட்டிவரும் வேளையிலே பாறை இருந்திடுமே—பெயர்த்தெடுக்கும் கருவி எங்கே? பெரும் பள்ளந்தனைத் தூர்க்க எளிதாகுமோ இவரால்! உவர் மண்ணால் சுவர் எழுப்பி, உயரம் கண்டதுமே, ஒரு நொடியில் சாய்ந்திடாதோ, கூரை மேல் ஏறியதும்! கதவெங்கே, தாள் எங்கே? கனமான பூட்டுமுண்டோ? ஓடுண்டோ, ஓய்யாரம் தரவல்ல பலகணியும் தானுண்டோ! கள்ளிக்கும் சுள்ளிக்கும், கடும் விஷப்பாம்பினுக்கும் அல்லாமல் கனி குலுங்கும் தருக்கள் வளருதற்கோ, தக்க இடம் இஃது! ஈதெல்லாம் அறியாமல், ஏதேதோ எண்ணமிட்டு ஓயாது உழைக்கின்றார், ஒரு பலனும் காணார் காண்!!—என்று, ‘உடையவர்கள்’ இகழ்ச்சியுடன் பேசி நின்றார்; இவர்களோ அவர் வார்த்தை எமக்கல்ல என்று எண்ணி, இதயம்தனில் பதிந்த ‘எழிலிடம்’ அமைத்திடும் ஓர் ஏற்றமிகு செயலதனில், ஆற்றலெலாம் செலவிட்டார்.

பாறை கண்டபோது பதறினார் இல்லை, அவர்; பிளந்து பெயர்த்தெடுத்து, பொடியாக்கி, கீழ்பரப்பி, வலிவூட்டும் வகைபெற்றோம், இல்லத்தின் அடித்தளம் தனக்கென்று மகிழ்வுற்றார். கல் உடைக்கக் கரம் உண்டு; கருத்திலே உறுதி உண்டு; என்ன இனி நமக்குக் குறை; எழுப்பிடுவோம் நம் இல்லம்; எத்தனைதான் அழகியதாய் இருந்திடினும் மற்றதெல்லாம் இன்னொருவர் இடமன்றோ; இருந்திடலாம் என்கின்றார், தயவன்றோ காட்டுகின்றார்; கொத்தடிமை ஆக்குதற்கே கூவி அழைக்கின்றார்; இத்தரையில் நமது இல்லம் இனிதாய் அமைத்திட்டால், என் இல்லம்! எழில் இல்லம்! என்றெண்ணி மகிழ்ச்சியுடன் இருந்திடலாம் காலமெல்லாம், இன்று பாழ்வெளியாய் இருந்திடும் இவ்விடத்தில், முன்னம் ஓர் நாளில், உலவினராம் முடியுடையோர்; படை நடந்த இடம் இதுவாம்; பண்புக்குப் பெட்டகமாம்; பார்புகழ வாழ்ந்தனராம்; பல நூலும் கண்டனராம்! அந்த இடம் தனக்கே, நாம் உரியர் என்பதனை இன்று அறிந்திட்டோம், இனி ஏற்பது இகழ்ச்சி அல்ல எனக் கூறித், தந்தது தின்று தெந்தினம்பாடித், தருக்கரின் தாளில் தலையினை வைத்து இழுக்கினைத் தேடிக்கொண்டிடப் போமோ! செச்சே! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று நவின்றாரே, கவிஞர்பிரான். நமக்கும் நற்பாடம், அக்கவிதைதாராதோ!! ‘நாமிக்கும் நாடு நமது’ என்பது கண்டோம் என்ற கவிதை, நமக்கும் சேர்த்தன்றோ! ஏன் இனி நமக்கு இச்சகம் பேசிப் பிழைத்திடும் பிச்சை வாழ்வு! ஏற்கோம் இனி இழிநிலை—எடுப்போம் புதுமுயற்சி-கட்டி முடிப்போம் எமதிடம்- என்று சூளுரைத்தார். எதிர்ப்பட்டோர்கள் இடி இடியெனச் சிரித்து, “கண்டீரோ பெருவீரர்! அறிந்தீரோ இவர் தீரம்!! குன்று பெயர்த்தெடுத்து செண்டு ஆக்கப் போகின்றார்! நின்றிடுக என்று கூறி, கடல் அலையைத் தடுத்து நிறுத்தப்போகின்றார்! மணலெல்லாம் குவித்தெடுப்பார், மரகதக் குவியலாக்கிடுவார்! நத்தையில் முத்தெடுப்பார், தாழையில் வாழை காண்பார்; தந்தம் பெற்றிடுவார் தத்திடும் அணில் அதனில்; ஏ! அப்பா! இவர் ஆற்றல் எவர்க்குண்டு; கண்டுரைமின்!” — என்று எவரெவரோ ஏளனம் பேசி நின்றார். பணிபுரியும் போக்கினரோ நீராடி நீந்துகையில், நீர் புரளும் மீனினம் கொத்திடும் விதமாக இவர் ஏதோ சத்தமிட்டுக் கிடக்கின்றார், நமக்கென்ன இது பற்றிக் கவலை என்று கூறுவதுபோலாகித் தூற்றுவோர் தூற்றட்டும் புழுதிவாரி வீசுவோர் வீசட்டும் நம் கடன் பணிசெய்து கிடப்பதே; அவர்க்குரிய ஆற்றலை அவர் காட்டி நிற்கட்டும்; நம் கடமை நாமறிந்து நமது இல்லம் அமைத்திடும் ஓர் நற்பணியில் இறங்கிடுவோம்; வண்டாடும் சோலையிலே வண்ணமயில் ஆடுகையில், வளைந்த வால்காட்டி தாவிடுமாம் மந்தியுந்தான்; மந்தி நடத்திடும் ஓர் நாட்டியமே பாடமாகக் கொண்டிடுவோம் என்று அந்தக் கோலமயில் எண்ணிடுமோ? ஏதேதோ இன்ப நினைவுடனே ஏந்திழையாள் இடுப்பில் குடம் வைத்து இன்பன் இதயம் துவைத்துச் செல்கையிலே, குப்பை கிளறிடும் ஓர் குக்கல் காணின், நின்று என்னே! இதன் திறமை! எதற்குண்டு இவ்வாற்றல்! என்றா எண்ணி நின்று எக்களிப்புக்கொள்கின்றாள். இவரோ ‘இருப்பவர்கள்’—இருப்பதுவோ பறித்தவைகள்—நமக்கோ இடம் இல்லை, நம் இடமோ மாற்றாரால் பாழாகிக் கிடக்கும் இடம்! நாம் அதனை அறிந்தபின்னர், திருத்த, புதுப்பிக்க, திறம்பெற்றுப் பணிபுரியத் துடித்திடுவதல்லாமல், தூற்றல் கணைதொடுத்து தூய்மையினைக் கெடுத்திடுதல், நன்றாமோ! அழைக்கிறது, அறம், அன்பு!! ஆற்றலெல்லாம் அவைதமக்கே! என்று எண்ணி, ஈடுபட்டார் எடுத்த பணியதனில், பாழ் வெளியில் ஓர் பசுமை பாங்குறவே வந்தது காண்! வெட்ட வெளியதுவும், வேற்றுருவம் பெற்றது காண்! சின்னஞ்சிறு கூடம்—கேணி ஆங்கொன்று—அதன் பக்கம் பூச்செடிகள்—மாடியும் அமைத்திடலாம், அடித்தளம் வலிவுற்ற தென்பதனால்; காற்றும் வெளிச்சமும் களிப்பூட்ட வருமாறு கட்டினர் காண் புது இல்லம்.

அழகுண்டு அளவறிந்து; வசதியுண்டு, வசை அளவு! இந்த முறையில் நல்லில்லம் அமைத்து அவரும் இன்புற்று, நம் உழைப்பு வடிவம் பெற்று, நமதாகி நின்றது காண்! எவர் எண்ணினர் இது இயலும் என்று முன்னம், என்னென்ன ஏச்சுகள், எத்துணை ஏளனங்கள்! கூடை எடுத்து நாம் சென்றிடுவோம். குரலெழுப்பி, கல் வீசிக்குலைத்திடுவார் நம் ஆர்வம். எழுப்பிய சுவர் தன்னைக் கைத்தடியால் சாடி “ஏடா பயலே! இஃது இரு நாட்கள் நின்றிடுமோ?” என்று கூறி, அச்சம் எழச்செய்து மகிழ்வுற்றார். கட்டியவர் எவர் அப்பா? கல் உடைக்கும் சொல்லரசா ? அன்றி, மண் பிசையும் மன்னரா? எவர் திட்டம் இட்டவர்கள்? இளங்கோவா, கடுங்கோவா? குழி தோண்டி நின்றவர்கள், கூலி மிகப் பெற்றனரோ? கழி வாங்கச் சென்றவர்கள், கணக்குக் காட்டினரோ, சரியாக? செம்பியன் எனும் உங்கள் தோழன் செப்பினனாம், மற்றவர் மரப் பொம்மை, நானே மாமேதை! என் திறமே, இவ்வில்லம்!! என்றெல்லாம், அறிவீரா? ஏன் அந்த ஆணவம், என்று கேட்டுக் கொதித்தானாம், இரும்பொறையன், உண்மையா? என்னவோ, பிள்ளைகளா! எப்படியோ ஒரு வழியாய், இல்லம் அமைத்தீர்கள்! இனித்தான் இருக்கிறது, உமக்கு இன்னல் அடுக்கடுக்காய்!! இடம் பிடிக்க முனைவோர்கள், இடித்துக் கொள்வரன்றோ! என்னால் இது என்பதனால், எனக்கே எல்லாமென்று, எவனேனும் எக்காளம் எழுப்பிடலாமன்றோ! நான் எழுப்பியது இந்தச் சுவர்—இதை நானே இடித்திடுவேன் என்று இறுமாப்பாளன், எடுத்திடுவான் கடப்பாரை!! ஆன செலவு அதிகம் காட்டி அடித்தான் இலாபம் இவன் என்று, ஒருவன் மற்றொருவன்மீது உமிழ்திடுவான் கோபத்தை! கலாம் விளையும் இல்லத்தில், கண்டவர் ஏசிடுவார்! கார் தந்த நீர்த்துளியால் கலம் நெல் விளைவதுண்டு—கருத்தறியாதார் வயலுக்கு உரியரென்றால், களமன்றோ களமாகும்!! என்ன நேரிடுமோ? எத்தனை நாள் இவ்வாழ்வோ? எனக்கென்னவோ இஃது நீடித்த இன்பம் எனத் தோன்றிடவே இல்லை, சொன்னேன். கூடி வாழ்ந்திடும் குணம் கொண்டோர் என்று இன்று கூறுகின்றீர்; கேட்கின்றேன்; ஆயின் குமுறும் உள்ளத்தான், குறை காணும் எண்ணத்தான், குலவி இருக்கின்றான்; ஓர் நாள் குத்திக் குடலெடுக்கத் துடிக்கின்றான்! அறிந்ததை அறைந்தேன்; ஆசீர்வாதம், வாழ்க!—என்று பெரியவர்கள் சில பேர்கள் பேசினார், இல்லம் கண்டு. கட்டி முடித்திட்ட களிப்பதனில் மூழ்கியவர், கலகமூட்டும் பேச்சுக்குக் காதும் கொடுக்கவில்லை; கல்லெல்லாம் கதை சொல்லும், இல்லம் இஃதன்றோ! மண்ணதனில் சிந்தியது மழை நீரோ? இல்லை, இல்லை! செந்நீரும் கண்ணீரும் கொட்டியன்றோ, செம்மை கண்டோம். இந்த இல்லத்தில், அன்பு அரசோச்சும், அறிவு ஒளி அளிக்கும்; அறம் வழி காட்ட, ஆற்றல் நடைபோட, அனைவரும் நாம், இலட்சியம் அடைந்திடும் முறை வகுக்க, பாசறையாக அமைந்தது காண் நமது இல்லம்; அனைவருக்கும் இது இல்லம்—அனைவரும் அமைத்த இல்லம்—அவர்க்கு எது இவர்க்கு எது என்று அளவு காணும் முறைக்கு இங்கு அணுவளவும் வேலை இல்லை. இகல் வெல்ல வேண்டுமெனில் நம் இதயங்கள் ஒன்றாகி, வெவ்வேறு உருவங்கள், எண்ணமோ ஒன்றேதான், என்று எவரும் எண்ணிப் போற்றிட, வாழ்ந்திடுவோம். இல்லம் அமைத்ததுவும் இருந்து மகிழ்ந்திடவா? இல்லை! இல்லை! மன்றமாக்கி, இம்மனையில் நாம் இருந்து, கொண்ட நம் குறிக்கோள் தனக்காக, தொடர்ந்து பணியாற்ற, தக்கமுறை, வழி பலவும், கண்டறிய, திட்டமிட! இந்த எண்ணம் நம்மை ஆட்கொண்டதென்றால், இடத்தில் இடம் காண, எண்ணுவரோ, எவரேனும்! கேணித் தண்ணீர் இறைத்து, கீழ் உள்ள கற்களை எடுத்துப் பங்குபோட, கருதுபவர், கசடரன்றோ! நாமென்ன இந்த விவரமெல்லாம் அறியாமல், வீண்வாதம், மனபேதம், கொண்டிடக் கடையவரோ? நம்மில் சில பேர்கள் கூடம் இருந்திடுவர். அவ்வேளை, திண்ணையே நமக்குக் கூடமாய், அமையாதோ! தோட்டத்து வேலைதனைத் துரைசாமி கவனித்தால், கூட்டி மெழுகிட குப்பன் முன் வாரானோ? கூட்டி மெழுகிடும் குப்பன், மற்றோர் நாள், கூடத்தில் இருக்கையிலே ஓய்வாகச் சாய்ந்துகொண்டு ஒரு முழுங்கு தண்ணீர் பருகிடத் தருவாய் என்று அண்ணலை அழைத்திட்டால், கேணி வேலை வேணு பார்ப்பான், என் வேலை அஃதல்ல, என்றா கூறிடுவான். நாமெல்லாம் ஓர் குடும்பம்—நமது இல்லம் இக்கூடம்—இங்கு, நான் மேல் நீ அல்ல, என்ற பேச்சுக்கே இடமில்லை, என்றெல்லாம் எண்ணி அவர் இதயம் களித்திருந்தார்.

ஏதேதோ திட்டமிட்டோம், எப்பலனும் கிட்டவில்லை. சிண்டு முடிந்துவிட்டோம், சிக்கறுத்துக் கொள்கின்றார். கலகம் மூட்டுகிறோம், கைகொட்டிச் சிரிக்கின்றார். கண்காட்டி அழைக்கின்றோம், கைவீசிப் போகின்றார். ஏதேது இந்த இல்லத்தார், ஏற்றம் மேல் ஏற்றம் பெற்று, எடுத்த காரியம் முடித்து, இன்பத் திராவிடம் அமைத்து எளியோர் எனினும் வலியோர் பெற்றிடா வெற்றிதனையும், கூடிப்பணியாற்றி, கொள்கை காத்து நின்றால், பெற்றிடுவார் என்ற பேருண்மைதனை நிலைநாட்டிவிடுவார் போலும். எங்ஙனம் கண்டிடுவோம். இவர் வெற்றி பெறுமதனை! என்னாகும் நமது முன்னைய பேச்செல்லாம்! மண்ணாகிப் போச்சுது பார், மற்றவர் பேச்செல்லாம், கண்ணீர்த் துளிகளன்றோ, காரியத்தை முடித்துவிட்டார், என்றெல்லாமன்றோ ஏசுவர், மற்றவர்கள். நாம் இதற்கு என் செய்வோம், அணிவகுப்புதனைப் பிளக்க ஆயிரத்தெட்டும் செய்தோம்; அத்தனையும் ஆடிக் காற்றிடைப்பட்ட பஞ்சாகிப் பறந்தனவே! பேதம் வருமென்று, பேராவல் கொண்டிருந்தோம்—அண்ணன் தம்பி என்று அவர்கள் குலவுகின்றார்! ஐயயோ! ஆபத்து! நாம் அழிந்திடுவோம், இது வளர்ந்தால், என்ன விலை கொடுத்தேனும், எப்பாடு பட்டேனும், சின்னத்தனமான செயலெல்லாம் செய்தேனும், பொன்னைத்தான் இழந்தேனும், கண்ணே! மணியே! என்று கனிவு பேசிப் பார்த்தேனும், உடைத்தாகவேண்டும் இந்த உள்ள உறவுதனை; பிளந்தாக வேண்டும் இந்தப் பெரும் படையை, அணிவகுப்பை; என்று எழுந்தனர், மனம் பொறாத மாற்றார்கள்—கன்னிப் பெண் கண்ணுக்கு மையிட்டு, கார் கூந்தல் தன்னிலே மணமல்லிதனைச் சூடி, சின்ன இடை துவள, அன்ன நடை நடந்து, மணப்பந்தல் போகுமுன்னம், மணவாளன் காணுமுன்னம், கண்ணாடி முன் நின்று, கோலம் திருத்த எண்ணிச் சென்றிடும் வேளையிலே, கண்ணாடி அதன் மீது, கல்வீசி ஒரு சிறுவன், உடைத்திட்ட பான்மைபோல, மாற்றாரின் திட்டம், மனையில் கலாம் விளைத்து மகிழ்ச்சிதனைக் குலைத்து, உறவு முறித்து, ஓர் ஊனம் ஏற்படச் செய்துவிட்டது. சென்ற திங்கள் ஒன்பதாம் நாள்—அந்நாள் துந்துபி முழக்கினர் மாற்றார். துடியாய்த் துடித்தனர், இல்லம் கண்டோர்—இன்பத் திராவிடம் காணப் பாசறை அமைத்தோர்—திராவிட முன்னேற்றக் கழகத்தினர்—நீயும் நானும்—நமது பிறப்பாளர்களாகிவிட்ட இலட்சக்கணக்கான திராவிடரும்.

ஆனால், தம்பி! மாற்றார் திட்டமிட்ட அளவுக்கோ விரும்பிய வகையிலேயோ, நமது கழகத்துக்கு ஊறு நேரிட்டு விடவில்லை, என்பது இந்த ஒரு திங்களிலேயே தெள்ளத்தெளியத் தெரிந்துவிட்டது. ஏற்பட்ட ஊனம், நமக்கு அதிர்ச்சிதரத் தக்கதாகத் தெரிவதற்குக் காரணம் அதன் அளவு அல்ல; நமது குடும்பம் அத்துணை பாசத்தால் கட்டுண்டு இருப்பதால், இதிலே சிறு பேதம், கீறல், வெடிப்பு, பிளவு, ஏற்பட்டாலும் நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நாம் படும் வேதனையைக் காணும் அரசியல் வட்டாரத்தினர் பலரும் வியப்படைகின்றனர். இதென்ன இப்படிக் கலங்குகிறார்களே! ஒரு கட்சி என்றால், சிலர் விலகுவதும். வேறு சிலர் புகுவதும், சாதாரண நிகழ்ச்சிதானே!! இதற்கும் பிறகு இருக்கத்தக்கதுதானே, கட்சி என்ற பெயருக்கே பொருத்தமுள்ளதாகக் கருதப்படும்—என்று கூறுகின்றனர்—கேட்கின்றனர், எனக்கே கூட, அவர்கள் அப்படிக் கேட்கும்போது வெட்கமாகக்கூட இருக்கிறது. இருப்பினும் என் இதயம்தான், நீ அறிவாயே தம்பி! எவர் நம்மை விட்டுப் பிரியினும், என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. இது தெரிந்துதான், அண்ணா, சிலர், உன்னை மிரட்டுகிறார்கள், என்றுகூடத் தம்பியரில் சிலர் கூறுகின்றனர்.

தம்பி! சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்ட மொன்றில், ஆர்வம் கொந்தளிக்கும் நிலையில் பேசிய தம்பி ஒருவர், சொன்னார். “அண்ணா! ஆயாசப்படாதீர்கள்! சிலர் உம்மைவிட்டுப் பிரிந்தனர்; நானும்தான் வருந்துகிறேன்; ஆனாலும் என்ன? நாங்கள் இருக்கிறோம் அணி அணியாக! உம்மை அண்ணனாக ஏற்றுக்கொண்டவர்கள்; அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்; கழகத்தின் ஆணைப்படி நடப்பவர்கள். தம்பிமார்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள், அண்ணா! கவலைப்படாதீர்கள்!” என்று பேசினார். இனிய இசையாக இருந்தது அந்தப் பேச்சு—ஆனால் ஒரு கணம் தான்—மீண்டும் அந்தப் பழைய நினைப்பு—பழைய கவலை! நான் பேசும்போது சொன்னேன்; “எட்டுக் குழைந்தைகளைப் பெற்றெடுத்த தாய், திருவிழாக் காணச் சென்றபோது, ஒரு குழந்தை காணாமற் போய்விட்டால், பரவாயில்லை, எட்டில் ஒன்று போனால் என்ன, ஏழு இருக்கிறதே, என்றெண்ணியா திருப்தி அடைகிறாள். இல்லையே! ஏழு பிள்ளைகளையும், திக்காலொருவராக அனுப்பி, காணாமற்போன பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி அல்லவா அனுப்புவாள்! அது போல, என்னுடன் எண்ணற்றவர்கள் உள்ளனர்—ஆயினும் அதனால், பிரிந்தவர்கள் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடிகிறதா! எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற தாய், காணாமற்போன பிள்ளையைக் கண்டு பிடித்துக் கொண்டு வரும்படி, மற்ற ஏழு பிள்ளைகளைக் கேட்டுக்கொண்டது போலத்தான், என்னுடன் இருக்கும் தம்பிமார்களை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், விலகிய, வழி தவறிய, அந்தத் தம்பிகளையும் தேடிக் கண்டுபிடித்துத் திருத்தித் திரும்ப அழைத்துக்கொண்டு வாருங்கள்!”

 

தம்பி! நான் சொன்னது சுவைக்காக அல்ல—என் மனம் அப்படி.

விலகியவர்களிடம், பாசம் குறையாமல் இருப்பதற்கு, வேறோர் காரணமும் இருக்கிறது—அவசியம் கூடத்தான் இருக்கிறது.

நாம் ஈடுபட்டிருப்பது, தாயக விடுதலைக்கான அரும் பணியில், இதற்கான ஆற்றல் அளித்திடவல்ல எவரையும் நான் இழந்துவிட விரும்பலமா? வாட்போர் புரியும் வீரன், குத்தீட்டியையும் கூடத்தானே வைத்திருக்கிறான். அஃதே போலத்தான், நாட்டு விடுதலை எனும் நற்பணிக்காக, அனைவரும், தேவைப்படுகிறார்கள். இதிலே இழப்பின் அளவும், தரமும் அல்ல, இழப்பு என்பதே இதயத்துக்கு அதிர்ச்சி தரத்தக்கதுதான். கிடைக்கும் வாய்ப்பினை எல்லாம் ஒன்று திரட்டி, களம்செல்ல வேண்டிய வேளையில் களத்தில் பயிற்சி பெற்றவர்கள், அதைவிட்டு விலகுவது என்றால், மனதுக்குச் சங்கடமாகத்தானே இருக்கும்?

தலைவிரி கோலமாக ஓடி வருகிறாள் ஓர் மூதாட்டி—வாழ்ந்தவள் இன்று வதைபடுகிறாள் என்பது பார்க்கும்போதே புரிகிறது. இரத்தம் சொட்டும் வாயுடன் ஓநாய் அவளைத் துரத்திக்கொண்டு வருகிறது. அலறுகிறாள் அம்மூதாட்டி. அந்தக் கதறல் கேட்டு, வேறோர் புறமிருந்து ஓடோடி வருகிறான் ஓர் வீரன்—கையில் வேல் கொண்டு! அவனை நோக்கி ஓடுகிறாள் அந்த அபலை, தன்னைத் துரத்தும் ஓநாயைத் திரும்பிப் பார்க்கிறாள்-திகில் கொள்கிறாள்—ஆனால் எதிர்ப்புறம் பார்க்கிறாள், வேல் உடையோன் வருகிறான்—அப்பா! காப்பாற்று? என்று கூறியபடி, கீழே வீழ்கிறாள். ஓநாயைக் கொன்று மூதாட்டியைக் காப்பாற்ற வேலாயுதத்தைப் பயன்படுத்த வேண்டியவன், வழியில் உள்ள காட்டாற்றினிலே துள்ளிடும் வாளைமீது அந்த வேலினை வீசிடக் கண்டால், தம்பி! மூதாட்டியைத் தள்ளிவிடு, ஓநாயேகூட அல்லவா, இப்படி ஒரு மனமா? என்றெண்ணித் திகைத்துவிடும்!

அதுபோலல்லவா, செய்துவிட்டனர்.

எந்த இடத்திலே உறுதியை எதிர்பார்த்தேனோ, அங்கு அல்லவா, ஏற்பட்டுவிட்டது, மனத்தளர்ச்சி.

என் சங்கடத்துக்குக் காரணம் அதுவன்றோ!

ஒன்று சொல்லுவேன் தம்பி ! எனக்கென்னவோ, பேசத் தெரிந்தவர்களெல்லாம், திரு இடத்தைப்பற்றியே பேசவேண்டும். எழுதத் தெரிந்தவர்களெல்லாம் இன்பத் திராவிடத்தைப்பற்றியே எழுதவேண்டும். ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் தமது ஆற்றலை, இந்த அருமைத் திராவிடம் விடுதலைபெறப் பயன்படுத்த வேண்டும், என்று தோன்றுகிறது. காணும் செங்கரும்பு அவ்வளவும், நமது குழந்தைக்கு வேண்டும் என்று எண்ணுவது போன்ற பேதை நெஞ்சம் ; என் செய்வது !

எனினும், என் மனநிலை அறிந்து, பலர், முன்னிலும் அதிக மும்முரமாகப் பணியாற்றி என் மனச்சோர்வினைப் போக்கி வருகின்றனர், அஞ்சற்க என்றும், கழகப்பணிக்கு ஆவன செய்வோம் என்றும் களிப்பூட்டும் முறையில் எழுதுகின்றனர்.

விலகியோர், நம்மைவிட்டும் கழகத்தை விட்டும் விலகினாரில்லை. ஆண்டு பலவாக அரும்பாடுபட்டு நாம் கட்டிக் காத்துவரும் கொள்கையை விட்டுமன்றே விலகிச் சென்றுவிட்டனர். இனி அவர்தம் போக்கு, நம் மாற்றார்க்கு நிலாச் சோறு ! நாம் அது குறித்துக் கவலையற்றுப் பணியாற்றிச் செல்வதே முறை என்று கூறுகின்றார்.

 

திராவிடநாடு பகற்கனவு என்றும், பிரிந்துபோக வேண்டியதில்லை என்றும், பிரியும் உரிமைமட்டும் சட்டப்படி கேட்டுப் பெற்றுக்கொண்டால் போதுமென்றும், வடநாட்டுடன் ஒட்டி வாழலாம், உறவு கொண்டாடலாமென்றும், வடநாடு கண்டு அச்சம் ஏன் கொள்ளவேண்டும், வடநாடு நரகலோகமுமல்ல; வடவர் யமகிங்கரருமல்லவென்றும் இத்துணை வேகமாக அவர்தம் இந்திய பக்தி முற்றி வருகிற நிலை காணும்போது, இனி ஒரு புதிய சட்டமே செய்து நாட்டுப் பிரிவினை கேட்போரைக் கடுஞ்சிறையில் தள்ள வேண்டும், அப்போதுதான் இந்திய ஒற்றுமை நிலைக்கும் என்று, நேரு பண்டிதருக்கே யோசனை கூறக்கூடும் என்றன்றோ தோன்றுகிறது.

தம்பி! இதனைக் கவனித்தாயா? திராவிடநாடு கூடாது என்பதற்கு இந்திய பக்தியை இன்று பெற்றுவிட்டவர்கள், புதிய காரணம் எதுவும் கூறினாரில்லை. கூறாததுடன் ஏற்கனவே நேரு போன்றார் காட்டிய காரணங்கள் தமது மனதைப் பெரிதும் கவர்ந்து தம்மை இந்நிலைக்குக் கொண்டு வந்தது என்றும் கூறாமல், நேருபண்டிதரின் பேச்சைக் கேட்க மறுத்தவர்களும், இன்று தனது பேச்சைக் கேட்பர், திருந்துவர், ஒப்புதல் அளிப்பர், என்று எண்ணுகின்றனர். எத்துணைத் துணிவு இருத்தல் வேண்டும், அப்படி எண்ணிட !

“நான்” சொல்கிறேன் கேளுங்கள்!—என்று கூறும் போது, அந்த ‘நான்’ என்பதற்குப் பொருள் யாது கொள்வதோ? நான், நேருவினும் பெரிய நிலைபெற்றோன்; நேரு காட்ட இயலாத காரணம் காட்டவல்லோன் ; நேருவுக்கு இல்லை உமது மனம் மாற்றும் ஆற்றல், நான் கொண்டுள்ளேன் என்று பொருளோ—செச்சே ! இப்போது அப்படிச் சொல்லமாட்டார்கள்—நவஇந்தியாவும்—சக்தியும் விளக்கை அணைத்துவிடுவார்களே ! இருட்டிலா உழல்வது !

நான் என்று தம்மை நேருவினின்றும் வேறுபடுத்திக் காட்டுவது, மேலோன் என்பதற்காக அன்று; உங்கள் இனத்தவன் என்ற உரிமையால், நான் கூறுகிறேன் என்பதாகும். நேரு பெரியவர், பேரறிவாளர்; எனினும் வேறு இனத்தவர் ! எனவே தான், அவர் பேச்சை ஏற்க மறுத்து வந்தீர் ! இப்போதோ, சொல்வது நான்! சொந்த இனத்தான்! அந்நியன் அல்ல! எனவே நான் சொல்வது கேண்மின் என்ற பொருள்கொள்வது என்றால், அப்போது, ஒரு அடிப்படை உண்மையை, நாட்டுக்கும் உலகுக்கும் அறிவிக்க வேண்டும். திராவிடநாடு பகற்கனவு என இவர்களும் பேசுகின்றனர் ; நேருவும் பேசுகிறார் ; எனினும் இவர்கள் இனம் வேறு—நேரு இனம் வேறு.

இந்த உண்மையைக் கூறும் துணிவாவது ஏற்பட வேண்டும்; அல்லது இந்தியா, இந்தியன் என்ற உணர்வு தான் உண்மையானது, தேவையானது; கொள்ள வேண்டியது என்று கூறும் நாணயமாவது இருக்க வேண்டும் ; இரண்டும் இன்றி, நான் கூறுகிறேன் திராவிட நாடு வேண்டாமென்று, என் பேச்சைக் கேளுங்கள் ; நேரு இதனைச் சொன்னபோது ஏற்கமறுத்தீர்கள்—மறுத்தோம், தவறில்லை, ஏனெனில், நேரு எவ்வளவு பெரியவராயினும் நம்மவர் அல்ல, திராவிடர் அல்ல ! நானோ திராவிடன் ! எனவே, என் சொல் கேண்மின் !! என்று கூறுவது வெறும் கேலிக் கூத்தாகும்.

“ஐயன் அழைக்கின்றார் ; அகிலம் அறிந்துள்ள ஆற்றல் மிக்கோன் அழைக்கின்றார் ! மேதினி கொண்டுள்ள மெய்யெல்லாம் உணர்ந்தவர் காண் ! வரலாறு பலவும் கற்றறிந்த பேரறிவாளர் ! அவர் காணா நாடில்லை ! அவர் உரை கேளாமாந்தரில்லை ! அவர் அழைக்கின்றார் ! திராவிடம் தனிநாடு என்றெல்லாம் பேசுகிறீர் ! பித்துப் பிள்ளைகள் போல் பேதம் பேசலாமோ என்று மெத்த வருத்தப்பட்டு, மேலோன் கேட்கின்றார். உலகமே ஓர் அரசாய், ஆகிவரும் நாட்கள் இவை. இந்நாளில் என் நாடு, என்னுடைய மொழி என்று இயம்பிடுதல் ஆகாது, அறிவீனம் என்கின்றார். அவர் அறியாதவற்றை எவர் அறிவார், கூறுங்கள். ஐயன் அழைக்கின்றார், வந்திடுவீர், சொந்தமுடன். விந்தியமும் இமயமும் விளங்கி நிற்பதுவும், காவிரியும் கங்கையும் கரைபுரண்டு ஓடுவதும், பாரதம் எனும் இந்த மணித்திரு நாடதனில் ! இந்த உண்மையினை ஏற்றிடுவீர், வாழ்ந்திடுவீர் ! சொந்த நாடு ஒன்று உண்டென்று பேசி நீவிர், தொல்லை வளர்க்காதீர்.” என்றெல்லாம் பேசி அழைத்தனரே காங்கிரசார் அப்போதெல்லாம் தோன்றா மனமாற்றம் இப்போது அரும்பும், மலரும் என்று எதனாலே எண்ணுகிறார்?

எடுத்துரைக்கத் தெரியாமல், ஏமாந்தனரோ காங்கிரசார்!

இவர் எடுத்துக்கூறும் வகையால் எவர் மனமும் மாறிடுமோ ! என்னே பெருந்துணிவு ! ஏன் கொண்டார் இப்போக்கு ?

“இல்லையாமே, அண்ணா ! இவர் கேட்பது தமிழ் நாடாம்; இன்றுள்ள நிலைமையிலே அதுதான் ஏற்புடைத்தாம். அது பெறவே முயலுவது அறிவுடைமை ஆகுமாம்” என்று கேட்டிடுவாய்! என் தம்பி, இதனைக் கேள் நீ கூறும் முறையில் அல்ல நமைவிட்டுப் பிரிந்தார்கள் பேசுவது; பிரிவினை தேவையில்லை—பிரியும் உரிமை மட்டும் பெறுவோம் என்று பேசுகின்றார்; முன்பகுதி கேட்டு, காங்கிரஸ் ஏடுகள் இடம் தரட்டும்; பின்பகுதி காட்டி, பெற்றிடுவோம் ஒரு கூட்டம் என்றன்றோ கொண்டுள்ளார்; புத்தம் புதுப்போக்கு.

தம்பி! தமிழ்நாடு மட்டும்போதும்; அதுமட்டுமாகிலும் பிரிந்து தனிநாடு ஆகிவிடட்டும் என்ற கொள்கையினை, ஆதித்தனார் அளிக்கும் அறிவுரையால் கொள்கின்றார் என்றே வைத்துக் கொள்வோம், வாத முறைக்காக, என்ன பலன் அதனால் ? எவ்வகையில் உதவி செய்யும் ?

திராவிடநாடு கேட்டால் மட்டும், வடவர் சீறுவர்; தமிழ்நாடு கேட்டால், வாரி வழங்குவரோ ? கேள் கொடுக்கப்படும். தமிழ்நாடு—திராவிடநாடு அல்ல என்று நேரு பெருமகனார் செப்பினரோ, என்றேனும். அவருக்கு ஒரே நோக்கம்—பாரதம் ஒன்று என்பதே அவர் திட்டம். இந்நிலையில், திராவிடநாடு என்ற திட்டத்தைத் தமிழ்நாடு என்று மாற்றிக்கொள்வதனால், வந்திடும் வசதி என்ன? காரியம் எளிதாகும் என்பரேல், காட்டட்டும் காரணம்!

இதனைத்தான் எழுதிக் கேட்கின்றார் ஏற்காடுதனில் இருந்து, தன்மான இயக்கம் கண்ட நாள் முதலாய் நம்மோடு இருந்துவரும் தகைமையாளர்—திருவொற்றியூர் சண்முகனார்.

மற்றொன்றும் கேட்கின்றார் நம் நண்பர்.

திராவிடநாடு கேட்கும்போது கொதித்து எழும் காங்கிரசார், தமிழ்நாடு என்று அளவைக் குறைத்துக் கொள்ளும் போது மகிழ்ச்சி கொள்கின்றனரோ ? அங்ஙனமாயின், தமிழ்நாடு தனிநாடு ஆவதற்குக் காங்கிரசார் இசைவரோ? இசைவதாயின், பெறலாமே. பெற்று, காமராசரே முதலமைச்சராக வீற்றிருக்கலாமே—என்று கூறுகின்றார். உண்மைதான் தம்பி! காங்கிரசார் என்னவோ, திராவிட நாடுதான் எட்டி, தமிழ்நாடு இனிப்பு என்று எண்ணுவது போலவும், ஆகவே, தமிழ்நாடு என்று நாம் திட்டத்தை மாற்றிக்கொண்டால், வெற்றி நிச்சயம் என்று கொள்வது போலவும் அன்றோ பேசுகின்றார்.

ஆனால் உண்மை என்னவென்றால், இன்று திராவிட நாடு கோரிக்கை வலிவு பெற்று வருகிறது; இந்தியத் துணைக் கண்டத்துக்கு இது ஒரு பெரிய தலைவலியாகிப்போய் விட்டது; வெளிநாடுகளிளெல்லாம் ‘திராவிடநாடு’ கிளர்ச்சி பற்றியும் எழுச்சிபற்றியும் வெகுவாகப் பரவிவிட்டது; எனவே, முதலில் அதனை உடைத்துவிடவேண்டும்; அதற்கு ஒரு ஊனம் ஏற்படுத்த ஒரே அடியாக, ஏக இந்தியா—பாரதம்—என்று பேசுவதுமட்டும் போதாது—திராவிடம் என்று எண்ணம் கொண்டோர்களிடத்திலேயே, ஒரு பேதத்தை, பிளவை மூட்டிவிட்டு திராவிடம் வேண்டாம், தமிழகம் போதும் என்று பேசவைத்து, அவ்விதம் பேசும் போதும் தமிழகத்தின் தொன்மை தனித் தன்மை; வடவரிடம் சிக்கியதால் வந்த சீரழிவு என்பன குறித்து அதிகம் பேசாமல், அந்தச் சீரழிவுக்குக் காரணமாக உள்ள டில்லி அரசின் போக்கைத் தாக்காமல், திராவிடம் என்று பேசுவேரைத் தாக்கியும், திராவிடநாடு எனும் திட்டத்தைக் கண்டித்தும், அந்தத் திட்டத்துக்குப் பேராதரவு பெற்று அளித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து ஏசியும் பூசலைக் கிளப்பியும், பகை கக்கியும் படிப்படியாகப் பிரிவினைக் கொள்கையையே அழித்து ஒழிப்பது என்பது, அவர்கள் திட்டம். எனவேதான், தம்பி! திராவிடம் பகற்கனவு; திராவிட முன்னேற்றக் கழகம் கேவலமானவர்களின் கூடாரம்; சுயநலமிகள் கொட்டமடிக்கும் இடம்; அறிவிலிகளின் அரங்கம் என்ற இத்தகைய பேச்சுக்களுக்கு காங்கிரஸ் ஏடுகள் இத்தனை முன்னிடம் கொடுத்து உசுப்பி விடுகின்றன. இது பழைய வித்தைதான்; இதிலே பழக்கமும் பயிற்சியும் அதிகம் இருப்பதால், அதனை மும்முரமாகச் செய்துவருகின்றனர். புதிய கட்சியினர், “இவ்வளவு எமது அறிவாற்றலைப் பாராட்டுகிறீர்களே, எமக்கு ஆதரவுகாட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்குகிறீர்களே; நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியும் திராவிடநாடு கூடாது என்பதுபற்றியும் பேசுவதை. சிந்தாமல் சிதைக்காமல் மெருகும் மிகக்கொடுத்து வெளியிடுகின்றீர்களே ! அங்ஙனமாயின், ஐயன்மீர் தமிழ்நாடு தமிழர்க்கு எனும் திட்டத்துக்கு ஆதரவு காட்டுவீரோ?” என்று கேட்பரேல், அந்த இதழினர், இடி இடியெனச் சிரித்து, “என்ன மதியீனம்! எத்துணை ஏமாளி எண்ணம்! உமது பேச்சை எல்லாம் வெளியிட்டோம். எதற்காக? உமது நிலை, உயர்வானது என்பதற்கா ? ஐயே! இதனையுமா, அறைந்திடவேண்டும் நாங்கள் ! ஓங்கி வளர்ந்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகமதை உருக்குலைந்து உடைத்துவிட, உம்மைக் கருவியெனக் கொண்டோம் வேறென்ன? அவர் கேட்கும் திராவிடத்தை உடனிருந்து ஆதரித்த உம்மை உசுப்பிவிட்டு அதனையே தாக்கிக் களிப்புப் பெற்றோம். எந்தத் திருவாயால் ஏசினீரோ நேருதனை, அதே வாயிலிருந்து, அண்ணாவாம் துரையாம் யார் இந்த அறிஞன் ! எவன் தந்தான் இப்பட்டம். எனக்கும் இவனுக்கும் உள்ள ஒட்டென்ன உறவென்ன!—என்று முத்துகள் உதிர்ந்தனவே, அவைதாம் எமக்குத்தேவை, அவைதமை எடுத்தெடுத்து அழகழகாய்த் தொடுத்து, அனைவருக்கும் அளித்திட்டோம். அத்தோடு தீர்ந்ததய்யா, எமக்கு இருந்த அரிப்பெல்லாம், அவ்வளவே அறிந்திடுக! திராவிடம் தீது என்று தித்திக்கத் தித்திக்கப் பேசினீர், சுவைத்திட்டோம். அதுகண்டு, நீர் புதுச்சரக்கு இது கொள்க என்று, தமிழ்நாடு பிரிவினை என்று பேசுகின்றீர்—பேரறிவோ? திராவிடம் வேண்டாமென்று சொல்லுதற்கு உள்ள எல்லாக் காரணமும், நீர்கேட்கும் தமிழ்நாடு தனிநாடு என்பதற்கும்தான் பொருந்தும். திராவிடநாடு பகற்கனவு என்றீர்—உமது ‘தமிழ்நாடும்’ அஃதேதான் ! ஏனோ இதனை நீவிர் அறிந்திடாது இருக்கின்றீர், விட்டிடுவீர் வீண்வேலை! விலைபோட்டுக்கூட வாங்கவேண்டாம் ! கதராடை, புத்தம் புதிய ஆடை தருகின்றோம். புறப்படுவீர். பொன் அவிர் மேனியான், இந்தப் புவிக்குள்ள தலைவர்களுள், மாணிக்கம் போன்ற மதிப்புடையான்; மாமேதை நேருவிடம் மண்டியிட்டுச் சேவைசெய்ய!”—என்றல்லவோ கூறுவார்கள். இஃது அவர்களை இன்று பயன்படுத்திக் கொள்பவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியுமே! ஊரறிந்த இரகசியமல்லவோ இது.

தம்பி! நினைவிலிருக்கிறதா, சில ஆண்டுகளுக்கு முன்பு, ம. பொ. சி. அவர்கள், திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்திவந்த காதை ! ஊரூருக்கும்! நாட்டுப் பிரிவினையை எதிர்க்க, தடுக்க, ஏக இந்தியா எனும் கொள்கையைக் கடைப்பிடிக்கும் காங்கிரசுக்கு இல்லாத பலமும் வசதியும், ம. பொ. சி. அவர்களுக்கு உண்டா? இல்லை! என்றாலும், அவர் கிளம்பினார். கண்டோமே! திராவிடம் என்ற சொல்லாராய்ச்சியிலிருந்து தொடங்கி, கழகத் தோழர்களுக்கு (விலகியவர்களும் இங்கு இருந்த போதுதான்!) ‘விசில் அடிச்சான் குஞ்சுகள்’ என்ற விநோதப்பட்டம் சூட்டும் வரையில் பேசினர். ஏன் செய்தார் அந்த எதிர்ப்பு? தார்கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்த போது மண்ணெண்ணெய் ஊற்றி, தாரைக் கழுவிடத்தமது கழகத்தோரை அனுப்பிவைத்தார். வடநாட்டுக் கடைகள் முன் பெரியாரின் தொண்டர்கள் மறியல் செய்த போது, இவரது கழகத் தொண்டர்கள் எதிர் மறியல் நடத்தினர். இவைகளுக்கு, இன்று விலகியோர் பெறுகின்ற அளவிலும் வகையினும், விளம்பரம், காங்கிரஸ் ஏடுகளில் வெளிவந்தன, அறிவாயல்லவா? ம. பொ. சி.யின் தேசபக்தி, இலக்கிய மேதாவித்தனம் ஆகியவைகளைப் பாராட்டினர், காங்கிரஸ் தலைவர்கள். அவருடைய அறிவுரை கேட்டாகிலும், திராவிடமாயையிலிருந்து விடுபடுங்கள் என்று கூறினர். அவர் நடத்திய மாநாடுகளில், காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். காமராஜரே, சென்னையில் ஒரு மாநாட்டில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார், இதெல்லாம், ம. பொ. சி.க்கு அவர்கள் காட்டிய மதிப்பு; ம. பொ. சி. அவர்களின் பேரறிவை அவர்கள் போற்றுவதற்கான சான்று, என்ற கொள்வர்; ஏவிவிட, தக்க சமயம்! பயன்படுத்திக்கொள்வோம் என்பதன்றி வேறென்ன!

சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் பக்தவத்சலம் தூக்கி எறிந்தாரே, இதே. ம. பொ. சி. அவர்களை. ‘நாங்கள் ஒன்றும் இவருடைய கிளர்ச்சி கண்டு நடுநடுங்கி, தமிழ் நாடு என்று பெயர் மாற்றிடவில்லை; நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்; அவருக்கே அது தெரியும்; அதன்படியே நாங்கள் நடந்துகொண்டோம்’, என்று—மதிப்பளிக்க மறுத்தாரே! நானல்லவா, மாநகராட்சி நடாத்திய விழாவென்றில்,; ம. பொ. சி.யைப் பாராட்டி, நன்றி கூறினேன். நண்பருக்கு இப்போது, என் பாராட்டுதல் தேவைப்படாமல் இருக்கக் கூடும்; ஒரே இடத்திலிருந்து பாராட்டுரைகள் கிடைப்பதை விடப் புதுப்புது இடமிருந்து வருவது, சுவையாகத்தான் இருக்கும். அதற்கல்ல, நான் கூறுவது. திராவிட இயக்க எதிர்ப்பு நடத்துவோர் எவராயினும், அவருக்கு ஆதரவு அளித்து, தூக்கிவிட்டு, வேலை வாங்குவது காங்கிரசுக்கு நீண்ட நாள் பழக்கம் என்பதை விளக்கத்தான், அந்தமுறைப்படி இப்போது, ‘விலகினோர்க்கு’ வீரகண்டாமணி கிடைக்கிறது. வேறென்ன? ‘இதைப் பெறுவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தை இவர்கள் கண்டித்துத் தீரவேண்டும், வேறென்ன செய்கிறார்கள் தமிழ்நாடுதான் பெறவேண்டும் என்பதற்கா தமது பேச்சில் முதலிடம் கொடுக்கிறார்கள்? கொடுப்பதாயின், தமிழ் நாடு தனிநாடாக இல்லாதிருக்கும் தன்மை, அதனால் ஏற்படும் இழிவுகள் இன்னல்கள், சுரண்டல், அந்தச் சுரண்டலால் வடநாடு கொழுத்து வரும் பயங்கரமான உண்மை, இவைபற்றி அல்லவா பேச்சு, விறுவிறுப்பாக, வீரம் கொப்பளிப்பதாக அமையும், எங்கிருந்து வரப்போகிறது அந்த எண்ணம்! அதுதான் சொல்லிவிட்டார்களே,

வடநாடு நரகமுமல்ல, வடநாட்டுக்காரர் யமகிங்கரருமல்ல.

வடநாட்டோடு ஒட்டி வாழலாம்.

வடநாட்டு முதலாளியும் இங்கு வந்து தொழில் நடத்தலாம்.

என்று. இது போதாதா, இவர்களைப் பொட்டிட்டு, ஆலத்தி எடுத்து, ஐஞ்சும் மூணும் அடுக்காய்க்கொடுத்து, பாராட்ட போற்ற, வாழ்த்த! கசக்கிறதா அந்த ஏடுகளுக்கு, எந்த மாவீரன் வடநாட்டானிடம் சிக்கிக்கொண்டிருக்கிற வரையில் திராவிடன் தலை தூக்கமுடியாது என்ற முழக்கமிட்டாரோ; அவரே முன்வந்து, அதே முழக்க மொழியில்,

வடநாட்டு முதலாளி இங்கு வந்து தொழில் நடத்தலாம்.

என்று கூறுவதை, கொட்டை எழுத்தில் வெளியிட; குதூகலம்கொள்ள!! புண்ணிய க்ஷேத்திரங்களிலே உள்ள பண்டாக்கள், தம்மை நாடிவருவோர் எழுதிக்கொடுக்கும் நற்சான்றுகளைப் படித்துப் படித்து மகிழ்வதைப் போலல்லவா, அவர்கள், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சியை, வரிந்து கட்டிக்கொண்டு ஊட்டி வந்தவர், வாயார, மனமார, வாழ்க வடநாடு! என்று கூறும் முறையில் பேசுவது கேட்டு மகிழ்ந்து, தமது இதழ்களிலே வெளியிட்டு அதனைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்வார்கள்.

 

 

பக்ரா—நங்கல் நிர்வாக ஊழல்.

சிந்திரி தொழிற்சாலையில் காணப்பட்ட சீரழிவு.

வெளிநாட்டுக் கடன் சுமை அதிகமாகி அழுத்துவது.

ஏற்றுமதி குறைந்து, இருப்புத் தேய்வது.

நோட்டுப் பெருக்கத்தால் பண வீக்கம் ஏற்பட்டிருப்பது.

மறைமுக வரிகளினால் ஏழை மக்கள் துயர் அடைவது.

வருமான வரி ஏய்க்கும் வன்கணாளரை வீட்டு வைக்கும் கொடுமை.

முந்திரா போன்றார் தரும் பணம் பெற்றுத் தேர்தல் நிதி குவிக்கும் கேவலத் தன்மை.

எல்லையில் இடம் பிடித்த சீனரிடம், ஏதும் செய்ய இயலாமல், நேரு திண்டாடித் திணறுவது.

கரடியாய்க் கத்தினாலும் சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை அமைக்காத கன்னெஞ்சப் போக்கு.

சேது சமுத்திர திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் இன்னமும் ஏட்டளவில் இருந்து வரும், உள்ளம் வாட்டிடும், நிலைமை.

ஒவ்வொரு துறையிலும் ஊழல் அடுக்கடுக்காய் இருப்பதனை, கணக்கு ஆய்வாளர் காட்டி வரும், கொடுமைமிகு சீர்கேடு.

கொடுமைக்கு ஆளான இலங்கைத் தமிழரின் குரல் கேட்டு உதவி புரிய முன் வராது நேரு பெருமகனார் உள்ள போக்கு.

 

 

திட்டங்கள் அத்தனையும் வடக்கையே வளப்படுத்தும் போக்கு.

மூன்றாம் திட்டத்திலும் முகத்தில் கரி பூசப்பட்ட கேவலம்.

எதற்கு எடுத்தாலும் டில்லிக்கு எடுக்கும் காவடி, சிந்து.

இவைபோல அடுக்கடுக்காய் எத்தனையோ, உண்டன்றோ! எடுத்தியம்பக் கேட்டீரோ இவைபற்றி எல்லாம்! இல்லை! ஏன் இல்லை? பேசுவரேல், கூசாமல் இன்று இடங்கொடுக்கும் ஏடுகளின் நேசமும் முறிந்துவிடும்; இருட்டடிப்பும் பின் தொடரும்!! எனவே, விலகியோர், இவைபற்றிய பேச்சை, கட்டி வைத்துவிட்டார் மூட்டை! இப்போது இருப்பதெல்லாம் என்னை இழிவு செய்யும் திருவாய் மொழி—அதற்கே இடம் உண்டு, அந்த இதழ்களிலெல்லாம், வேறு, சட்டத்திலே உள்ள சத்தற்ற நிலைமைகளை மெத்தச் சிரமப்பட்டுப் படித்துப் பொருள் அறிந்து, இத்தனை தொல்லை நமக்கு இருப்பதனால், தமிழ் நாடு தனியே இயங்க ஒரு தன்மான முயற்சி வேண்டும், என்று பேசத் தொடங்குவரேல், அவன் போனான்—இவர் வந்தார்! அடைத்திடு கதவை என்று அன்றே கட்டளை பிறக்கும்.

மாற்றார் மனம் மகிழ நடந்துதான் வாழ்ந்திட இயலும் என்ற நிலை பிறந்துவிட்டால், பெற்றுவிட்டால், இடையே நின்று ஒரு திருத்தம் பெறவும் இயலாது; மணல் மேடு ஏறி நின்றார், கால் இடறிப்போமானால், எங்கு வந்து வீழ்வார்? எவரறியார் இந்த நிலை? எனவே வேகமாய் இவர்கள் ‘இந்தியர்’ ஆகியே தீரவேண்டும்; வேறு வழியில்லை; வேறில்லை முறைகூட.

இவர்கள் இதுபோலத்தான், இப்போதே என்று, வடக்கே உள்ள சில ஏடுகள், வரைந்திருக்கக் கண்டேன். இங்கு தமிழரிடை இப்போது, இந்தியராகுங்கள் என்று இயம்பச் சிறிது கூச்சம் இருக்குமன்றோ! திராவிடர் வேண்டாமென்று, தமிழர் என்ற நிலைகொண்டு, மெள்ள மெள்ள இந்தியராதல் ஒன்றே இவர்க்கு இனி எதிர்காலம்.

வடக்கே வெளியாகும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழ் நிருபர், பேட்டி கண்டாராம் புதியவரை! பெற்றாராம் அவர் கருத்தை, வெளியிட்டிருக்கின்றார்; படித்தேன்; பதைபதைத்தேன்.

பொது உடைமையர் போன்றோ சமதர்மவாதி போன்றோ, புரட்சிப் போக்கினர் அல்ல, நாங்கள்.

எந்த (சமதர்ம) தத்துவமும் பிடித்தலையும் போக்கில்லை, எமக்கு!

தமிழ்நாடு தனிநாடு ஆகவேண்டும் என்ற ஆர்வமும் எமக்கு இல்லை.

என்றுரைத்தாராம், புதிய கட்சியின் தலைவரவர். வெளி வந்து இருகிழமை ஆகிறது; இதுவரையில், மறுப்பும் வரவில்லை. என் சொல்ல! கைப்புண் காணக் கண்ணாடியா வேண்டும்! உள்ளம் இருப்பது, வடக்கே உள்ள இதழில் வந்தது; மெள்ளமெள்ள இங்கும் அதனை எடுத்தரைக்கப் போகின்றார்; உடன் இருப்போரில் ஏழெட்டும் பேர்கள், இலட்சியம் போற்றிடுவோர்! எங்கே அவர் கோபம் எழுந்திடுமோ, என்ற அச்சம். இல்லையெனில் இப்போதே இயம்பிடுவார் ஜெய்இந்தும்! முன்பே இதை உணர்ந்து மொழிந்த ‘மெயில்’ இதழும், திராவிடப் பிரிவினையை உதறினார்; தக்க செயல்; என்றாலும், இஃதேனோ, தமிழ்நாடு என்ற ஒரு தத்துவம் பேசுகிறார்; அதற்குப் பொருள் இல்லை; ஆகப்போவதுமில்லை; உடனடியாய் அனைத்தையும் உதறிட அஞ்சி ஒரு பொருளற்ற திட்டத்தைக் காட்டுகிறார் தோழர்கட்கு; சின்னாட்கள் சென்றதும், இதனையும் போட்டிடுவார் மண்மீது—என்றெல்லாம் எழுதிற்று, அதற்கும் மறுப்பு இல்லை, அச்சம்!

அறிவீர், ஐயன்மீர்! இந்தியா என்பது போலி, சூது, சூழ்ச்சி, ஒரு சுரண்டல் யந்திரம்; இதுவே, என் கருத்து.

தமிழர், தனி இனம்—தாழ்ந்த நிலையில் இன்றுளர்—அதற்குக் காரணம் வடவர்.

வடவர் வாழ்த்திட வழி வகுத்ததுதான், இந்திய அரசியல் சட்டமெனும் பொறி.

இதில் சிக்கி இருக்கு மட்டும், தலைநிமிர்ந்து வாழ்ந்திடான் தமிழன் எனும் இனத்தான்.

அவன் மானம் அழிக்கிறார், மொழியைப் பழிக்கின்றார்; வாழ்க்கை வழியை அடைக்கின்றார்.

வளமெல்லாம் வடக்கேதான்; வாட்டம்தான் தமிழர்க்கு; இந்தியா என்பதிலே இதுவும் ஓர் இடம் என்று இயம்புமட்டும், தன்மானமும் இல்லை, தழைத்திடப் போவதில்லை.

வடநாட்டு ஆதிக்கம், அழித்திடவே, இருக்கின்றேன்; வந்துதிவீர் என்னோடு; தனி அரசு காண்பதற்கே!!

என்று இவ்விதமெல்லாம், எடுத்துரைக்க முன்வந்தால், ஏது ஏடுகளிலே இடம்!! எனவேதான் அவை இன்று, வெளியே, காணோம். அம்மட்டோ, தம்பி! திராவிடம் என்றால் கசப்பு—ஆயின், வடநாடு எனின், இனிப்பேயன்றோ, காண்கின்றனர்.

எனவே தம்பி! எனைவிட்டுப் பிரிந்தனரே, என் செய்வேன் என்று எந்தன் மனம் பட்டபாடு மிக அதிகம் என்றாலும், இவர், நமது இன்னுயிராம் இலட்சியத்தையே, மறந்து, ‘இந்தியர்’ ஆகின்றார், என்பது புரிவதனால், துக்கம்தனையே நான் தூக்கி ஓர்பக்கம் தொலைவாக வைத்து விட்டு, திராவிடநாடு பெற, தக்கவர்கள் பல இலட்சம், அன்றுபோல் இன்றும், ஆற்றலோடு இருப்பதனைக் கண்டு அகமகிழ்ந்து, புத்தார்வம் கொள்கின்றேன். எங்கும், நம் தோழர்கள், புரிந்துகொண்டார், நிலைமையினை; என்னை விட விரைவாக, என் நெஞ்சா அவர் நெஞ்சம்!!

 

(முற்றும்)

Author

Book Page Count

124