“இலட்சிய வரலாறு” என்பது அறிஞர் அண்ணா எழுதிய ஒரு புகழ்பெற்ற நூலாகும். இது அண்ணாவின் முக்கியமான அரசியல் மற்றும் சமூகச் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு தொகுப்பு.
திராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் நோக்கங்கள், பெரியாரின் சமூகப் புரட்சிச் சிந்தனைகள், அண்ணாவின் தலைமைப் பண்புகள், மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஏன் உருவானது போன்ற பல்வேறு அம்சங்களை அண்ணா இந்த நூலில் எடுத்துரைக்கிறார்.
இலட்சிய வரலாறு
C.N.அண்ணாதுரை.M.A
“நான், திராவிடர் கழகத்தை அது ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரோடு இருந்தகாலத்தில் இருந்ததுபோல் இது ஒருகட்சியல்லவென்றும், திராவிடர் கழகம் ஒரு பிரச்சார இயக்கம் என்றும் பத்து ஆண்டுகளாகச் சொல்லிவருகிறேன். அதனாலேயே திராவிடர் கழகத்தை, மக்கள் ஒரு கட்சி என்று கருதாமல் இயக்கம் என்றே கருதவேண்டும் என்பதற்காக, அதற்கு ஏற்றபடி கழகத்தை ஒரு பிரச்சார ஸ்தாபனமாகச் செய்துவருகிறேன். ஏனென்றால், 1925-இல் நாம் ஆரம்பித்து நடத்திவந்த சுயமரியாதை இயக்கம்தான், ஜஸ்டிஸ் கட்சியைக் கைப்பற்றி இயக்கப் பிரச்சாரம் செய்து வருகிறதே ஒழிய, இது ஒரு தனிக்கட்சியாளர் கையில் இல்லை. சுயமரியாதை இயக்கத்தின் திட்டங்களில், ஏதாவது ஒருசிறு மாறுதல் காணப்படலாமே ஒழிய, சுயமரியாதை இயக்க அடிப்படையிலும் அதன் தலையாய கொள்கைகளிலும் திராவிடர் கழகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.இதைச் சேலம் மாநாட்டிலேயே அண்ணாதுரை தீர்மானம் தெளிவுபடுத்தி ஆய்விட்டது. ஆகவே ஜஸ்டிஸ் கட்சி எந்த மக்களுக்காக என்று தோற்றுவித்து நடத்திவரப்பட்டதோ, அந்த மக்கள் (திராவிட மக்கள்) சுயமரியாதை இயக்கத்ததை அப்படியே ஒப்புக்கொண்டு பெரிதும் சுயமரியாதைக்காரர்களாக ஆகிவிட்டார்கள் என்பதும், சுயமரியாதைக்காரர்கள் அல்லாதவர்களாய் இருந்தவர்கள் மெல்ல நழுவிவிட்டார்கள் என்பதும்தான் கருத்தாகும். எனவே, சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் என்னும் பேரால், பெரிதும் தன்இயக்கப் பிரச்சார வேலையே செய்து வருகிறது என்று சொல்லலாம். அதனால்தான் நான் அடிக்கடி திராவிடர்கழகம் ஒரு பிரச்சார இயக்கம் என்றும், இது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோஷியலிஸ்ட், இந்துமகாசபை, வருணாஸ்ரம சுயராஜ்ய சங்கம், பிராமண பாதுகாப்புச் சங்கம், மிதவாத சங்கம், முஸ்லீம் லீக், கிறிஸ்தவ சங்கம், தாழ்த்தப்பட்டவர்கள், ஷெடியூல் லீக் முதலாகியவைபோலும் ஒருகட்சி ஸ்தாபனமல்ல என்றும் சொல்லுகிறேன். எப்படி எனில், இக்கழகம் மக்கள் அறிவுத்துறையிலும், சமுதாயத்திலும், மதத் துறையிலும், கடவுள் துறையிலும், நீண்டநாட்களாக இருந்துவரும் மடமைகளையும், முன்னேற்றத் தடைகளையும், குறைபாடுகளையும் நீக்கவும், மக்கள் யாவரையும் ஒன்றுபடுத்தி ஒருசமுதாயமாக ஆக்கவும், சிறப்பாக நமக்கு- திராவிடமக்களுக்கு- இருந்துவரும் சமுதாய இழிவு, மத மூட நம்பிக்கை, ஜாதிப்பிரிவு வேறுபாடு அடியோடு அழிக்கப்பட்டு, ஆரியக்கொடுமையிலிருந்து மீளவுமே பாடுபட்டு வரும்படியான- அதாவது, மக்களுக்கு வலியுறுத்திவரும்படியான- ஒரு ஸ்தாபனமாகும்.
திராவிடர் கழகத்திற்கு சுயராஜ்யம் பெறவேண்டும் என்கிற ஒரு கற்பனைத்தத்துவமோ, தேர்தலுக்கு நின்று மெஜாரிட்டியாகி, “அரசியலைக்” கைப்பற்றவேண்டும் என்கிற தப்புப் பாவனையோ இல்லை. ஏனென்றால், இன்று நாட்டில்நடப்பது சுயராஜ்யம் என்றுதான் சொல்லப்படுகிறது. அன்னியனான வெள்ளையன் (பிரிட்டிஷார்) ஆதிக்கம் போய்விட்டது. திராவிட நாட்டுக்குத் திராவிட மக்களே முதல் மந்திரி, இரண்டாம் மந்திரி, மொத்தத்தில் 13-இல் 10 மந்திரி திராவிடர்கள் என்று சொல்லும்படியான திராவிட மெஜாரிட்டி மந்திரிசபையாக இருக்கும்போது, இனிச் சுயராஜ்யம் பெறுவது என்பதற்கு வேறு கருத்து என்ன இருக்கமுடியும்? யார் பெறுவது? அரசியலைக் கைப்பற்றுவது? யாரிடமிருந்து யார் கைப்பற்றுவது? திராவிட மக்கள் அல்லாதவர்கள் கைக்கு இனி அரசியல் எப்படிப்போகும்? ஆகவே, சுயராஜ்யம் பெறுவது என்பதோ, அரசியலைக் கைப்பற்றுவது என்பதோ இனி அர்த்தமற்ற பேச்சுகளாகும்; அர்த்தமற்ற காரியங்களுமாகும்.
இந்த மாகாணத்தில் இனி நாம்தான் 100-க்கு 90-க்கு மேற்பட்ட ஓட்டர்களாகவும் ஆக்கப்படப்போகிறோம். பெரும்பாலான மந்திரிகள், உத்தியோகஸ்தர்கள் திராவிடர்களாகத்தான் இருக்கப்போகிறார்கள். அதில் சந்தேகம் இருக்க நியாயமில்லை. ஆனால், இதில் என்ன குறை சொல்லலாம் என்றால், இதனால் திராவிடநாடு பிரிந்து கிடைக்குமா? திராவிடர் கழகக் கொள்கைகள், திட்டங்கள் நடைமுறைக்கு வருமா? என்பதுவேயாகும். சுலபத்தில் வராது என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், நாம்- திராவிடர்கழகத்தார்- சட்டசபைக்குப் போய்விடுவதாலோ, அரசியலைக் கைப்பற்றுவதாலோ, மந்திரிகளாய் விடுவதாலோ, திராவிடநாடு வந்துவிடுமோ, திராவிடர் கழகக் கொள்கைகளும், திட்டங்களும் அரசியல் மூலம் நடத்தப்பட்டு விடுமோ? என்று பார்த்தால் இன்றைய நிலைமையில் அவை சுலபத்தில் ஆகக்கூடிய காரியங்கள் அல்ல என்பதே நமது கருத்து.
வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது
“நம் இழிவு நீக்கம், நம் முன்னேற்றத் தடைநீக்கம், ஆரியத்தில், மூடநம்பிக்கையில் இருந்து விடுபடுதல், பகுத்தறிவாளர்களாக, மானமுள்ள சமுதாயமாக ஆவது, இப்படிப்பட்ட நம் வேலை நெருப்போடு பழகுவதுபோல் பாமர மக்களிடம் பழகுவதாகும். அவர்கள் நம்பிக்கையைப் பெறவேண்டும். அவர்களைத் திருத்தியே ஆகவேண்டும். இதற்கு நல்ல பிரச்சாரம் வேண்டும், ஒத்துழைப்புவேண்டும், ஒன்றுபட வேண்டும். நிலைகுலைந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக்கும் மக்களை ஒன்றுசேர்த்து யாவர் பலத்தையும் ஒன்றாய்த்திரட்டி ஒருமூச்சுப் பார்த்தாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இனி நாம் சூத்திரர்களாக வாழமாட்டோம் என்பதே நமது இலட்சியச்சொல், நமது மூச்சு.
வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது. அது கானல் நீரல்ல. கருத்தும் கவலையும் இருந்தால் கண்டிப்பாக அடைந்தே தீருவோம் என்கிற உறுதி எனக்கு உண்டு.”
தலைவர் : பெரியார்.
கண்ணீரால் எழுதப்பட்டது
திராவிட மன்னர்கள்
தருமராஜன் போல் நாட்டைச் சூதாட்டத்தில் தோற்றதில்லை.
அரிச்சந்திரன்போல் நாட்டை முனிவருக்குத் தானம் செய்ததில்லை.
திராவிடக் கவிஞர்கள்
அதல சுதல பாதாளமென அண்டப்புளுகு எழுதவில்லை.
கண்ட கண்ட உருவெடுத்தார் கடவுள் எனக் கதை தீட்டவில்லை.
காலடியில் புரண்டு தொழுதால் கடாட்சம் என்று கூறவில்லை.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றனர்.
திராவிடர்
உயிர்வாழ மானத்தை இழந்ததில்லை.
உறுதியின்றி உலுத்தராய் இருந்ததில்லை.
சூது, சூட்சியை ஆயுதமாகக் கொண்டதில்லை.
சுதந்திர வாழ்வுக்காக உயிரையும் தந்தனர்.
திராவிடம்
அன்னிய ஆட்சிக்கு அடிமைப்பட்டிருக்கவில்லை.
பஞ்சமும் பிணியும் பதைப்பும் கண்டதில்லை.
பாட்டாளி பதைக்கப் பார்த்துச் சகித்ததுமில்லை.
உழைப்பால் உயர்ந்து உரிய இடம் பெற்றது உலகில்.
திராவிடம் : இன்று
திராவிட மன்னர்கள் மறைந்தனர்; மக்கள் பண்பை மறந்தனர்.
வீரம் கருகிவிட்டது! வீணருக்கு ஆதிக்கம் ஏற்பட்டது.
திராவிடக் கலைக்கும், மொழிகட்கும் மதிப்பு இல்லை.
திராவிடத்தொழில் வளம் தூங்குகிறது. திராவிடன் தேம்புகிறான்.
திராவிடச் செல்வம் கோயிலில், கொடிமரத்தில், கொட்டுமுழக்கில், வெட்டிவேலையில், வெளிநாட்டில் சென்று முடங்கிவிட்டது.
திராவிடன், தேயிலை-கரும்பு-ரப்பர் தோட்டக் காடுகளில் கூலியாய் வதைகிறான்.
திராவிட நாட்டிலே, மூலை முடுக்கிகளிலெல்லாம் மார்வாடிக் கடைகள், குஜராத்திகளின் கிடங்குகள், முல்தானியின் முகாம்கள், சேட்களின் கம்பெனிகள்.
பெரிய வியாபாரங்களெல்லாம் வட நாட்டாரிடம்.
தொழிற்சாலைகளிலே, துரைமார்கள் இல்லை- — பனியாக்கள்!
டால்மியாவுக்கு்த் திருச்சிக்குப் பக்கத்திலே நகரமே இருக்கிறது.
ஆஷர் சேட்களுக்குத் திருப்பூர்- கோவை வட்டாரத்தில் ஆலை அரசர்கள் எல்லாம் கட்டியம் கூறவேண்டிய நிலைமை.
சென்னையிலே சௌகார் பேட்டை இருக்கிறது- பாரத் பாங்க் இருக்கிறது.
தினம் ஒலிக்கும் மணி, ஒருவடநாட்டுக் கோயங்கா உடையது.
சென்னையில், பெரிய கட்டிடங்கள் இன்று வடநாட்டாருக்குச் சொந்தம்!
இந்நிலையில் உள்ள திராவிடத்திலே, ஆடை முதல் ஆணி வரை, வடநாட்டிலிருந்து வருகிறது. வருகிறது என்னும்போது, ஏராளமான பணம் இங்கிருந்து வடநாட்டுக்குப் போகிறது என்று பொருள்.
வளம் இழந்து, இருக்கும் கொஞ்ச நஞ்சம் வளத்தையும், வடநாட்டுக்குக் கொட்டி அழுதுவிட்டு, வறுமைப்பிணியுடன் வாடும் திராவிடம், தலைதூக்க, அதன் மக்களுக்கு முழுவாழ்வு கிடைக்க, வெளிநாடுகளுக்குக் கூலிகளாகச் சென்றுள்ளவர்கள் திரும்பிவர, வாழ்க்கைத்தரம் உயர, திராவிட நாடு திராவிடருக்கு என்ற நமது திட்டம் தவிர வேறு திட்டம் இல்லை!
பொருளாதாரத்தையே அடிப்படையில் கொண்ட இப்பிரச்சினையை, வெறும் கட்சிக் கண்களுடன் நோக்காமல், நாட்டுப்பற்று நிரம்பிய கண்கொண்டு காணும்படி, திராவிடர்கழகத்தைச்சாராதவர் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
தலையிலே ‘பிரிபிரியாக’ வர்ணத் துணியைச் சுற்றிக்கொண்டு, போர் போராக உள்ள சாமான்களின் பக்கத்திலே உட்கார்ந்துகொண்டு, வட்டிக்கணக்கைப் பார்த்துக் கொண்டே வயிற்றைத் தடவிக்கொண்டுள்ள மார்வாரியையும் பாருங்கள், பாரம் நிறைந்த வண்டியை, மாட்டுக்குப் பதிலாக இழுத்துச் செல்லும் தமிழனையும் பாருங்கள்! மெருகு கலையாத மோட்டாரில் பவனிவரும் சேட்டுகளையும் பாருங்கள், கூலி வேலைக்கு வெளிநாடு செல்ல, கிழிந்த ஆடையும், வறண்ட தலையும், ஒளியிழந்த கண்களும் கொண்ட தமிழன், கப்பல் டிக்கட்டுக்குக் காத்துக்கொண்டிருக்கும் காட்சியையும் காணுங்கள். இங்கே பச்சைப் பசேலென்று உள்ள நஞ்சை புஞ்சையையும் பாருங்கள், அதேபோது நடக்கவும் சக்தியற்று, பசியால் மெலிந்துள்ள தமிழர்களையும் பாருங்கள்-எங்களை மறந்து- இந்தக் காட்சிகளைக் காணுங்கள். நாங்கள் கூறுகிறோம் ஒரு திட்டம் என்பதைக் கூட மறந்து- நாங்களாக யோசித்து ஒருதிட்டம் கூறுங்கள். பண்டைப்பெருமையுடன் இருந்த ஒரு நாடு, பல்வேறு வளங்கள் நிரம்பியநாடு, இன்று, வடநாட்டுடன் இணைக்கப்பட்டு, இப்படி வதைபடுவது நியாயமா, இந்த இணைப்பிலிருந்து விடுபட்டு, தனித்து நின்று, தனி அரசு நடத்தி, நாட்டுவளத்தைப் பெருக்கி, அந்த வளம் நாட்டுமக்களுக்கே பயன்படும்படி செய்வது குற்றமா? அதற்கு, திராவிடநாடு திராவிடர்க்கே என்பதன்றி வேறென்ன திட்டம் இருக்கமுடியும்? இருந்தால் கூறுங்கள்!
கப்பல் தட்டிலே நின்றுகொண்டு, வளமிகுந்த என் தாய்நாட்டிலே என் வாழ்வுக்குப் போதுமானவழி கிடைக்காததால், “இதோ நான் மலேயா போகிறேன்; கண்காணாச் சீமை; காட்டிலே வேலை செய்யப் போகிறேன்; தாயைப்பிரிந்து போகிறேன்; தாய் நாட்டிலிருந்து வறுமை என்னைத் துரத்துகிறது; வெளிநாடு செல்கிறேன் கூலியாக” என்று ஏக்கத்துடன் கூறித் தமிழன் சி்ந்திய கண்ணீர்கொண்டு எழுதப்பட்ட இலட்சியம், திராவிட திராவிடருக்கே என்பது.
புதிய வரலாறு
11—09—1938
தமிழ்நாடு தமிழருக்கு
என்று நாம் பரணி
பாடினோம்.
10—12—1939
தமிழ்நாடு தமிழருக்கே
என்ற திட்டத்தை நாட்டு
மக்களுக்கு விளக்க விழாக்
கொண்டாடப்பட்டது.
27—12—1938
வேலூர் தமிழர்
மாநாட்டில்
தமிழ்நாடு எதிர்காலத்
திட்டம் பேசப்பட்டது.
2—07—1940
காஞ்சிபுரத்தில்
திராவிடநாடு
பிரிவினை மாநாடு
நடத்தப்பட்டுப்
பிரிவினைக்குக் கமிட்டி
நியமிக்கப்பட்டது.
29—12—38
சென்னை, ஜஸ்டிஸ்
மாகாண மாநாட்டில்
தமிழ்நாடு தனிநாடு
ஆகவேண்டும்
என்பது வலியுறுத்தப்பட்டது.
24, 25—08—1940
திருவாரூர்,
மாகாண மாநாட்டில்,
திராவிட நாடு
தனிநாடாக வேண்டும்
என்ற திட்டம் தீர்மானமாயிற்று.
20—8—44
மாகாண சேலம்
மாநாட்டில்,
திராவிட நாடு
தனிநாடாக வேண்டும்
என்பது
கட்சியின் மூலாதாரத் திட்டமாக்கப்பட்டதுடன்,
கட்சியின் பெயரே
திராவிடர் கழகம்
என்று மாற்றப்பட்டது.
29—9—1945
திருச்சியில்,
மாகாண மாநாட்டில்,
திராவிட நாடு
தனிநாடாக வேண்டும்
என்பது
மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
1—7—1947
திராவிட நாடு
பிரிவினை நாள்
கொண்டாட்டம்.
சொன்னோம் பாகிஸ்தான் பெறுவது, இன் கபர்ஸ்தான் புகுவது என்று எண்ணுமளவுக்கு இஸ்லாமியர் துணி்ந்து விட்டனர். அவர்கள் தோட்டா இல்லாத துப்பாக்கிகளல்ல. “விடுதலை” 1940 டிசம்பர் 16. |
சொன்னார் “பாகிஸ்தான் திட்டம் ஆபாசமானது; விஷமத்தனமானது. காங்கிரஸ் யோசித்துப் பார்க்குமளவு யோக்யதை உள்ள விஷயம் என்று கூட அதனைக் காங்கிரஸ் கருதவில்லை” 1940 அக்டோபர், ஜவஹர் |
நடந்தது?
பாகிஸ்தான் கிடைத்துவிட்டது.
திராவிடர் கழகம்
சேலத்திலே, 27-ஆந்தேதி நடைபெற்ற மாநாட்டிலே, தெ.இ.ந.உ.சங்கத்திற்குத் திராவிடர் கழகம் என்ற புதுப்பெயரும், பட்டம் பதவிகளை விட்டொழித்துவிட்டு, நாடு மீளவும் கேடுதீரவும் பணிபுரியும் அணிவகுப்பினை அமைக்கும் திட்டமும், உணர்ச்சியும் வேகமும் கொண்ட பல்லாயிரக்கணக்கான திராவிடத்தீரர்கள் ஆதரவைப் பெற்றுவிட்டன. வெற்றிகரமாக நடந்தேறிய அம்மாநாடு வெறும் வைபவமென்றோ, ஒரு குழுவின் வெற்றியென்றோ நாம் கருதவில்லை; ஒரு இயக்கவளர்ச்சியிலே முக்கியமான, குறிப்பிடத்தக்க ஒரு கட்டம் என்றே கருதுகிறோம். தீவிரமான திட்டங்களை நிறைவேற்றிவிட்டது, மனத் திருப்திக்காக அல்ல! திட்டங்களைத்தீட்டிவிட்டு, எட்டிநிற்போராக இருப்பவர்களைப் பற்றிக் கவலையில்லை. அத்தகையவர்க்ளுக்குத் திட்டங்களைப்பற்றியும் கவலையில்லை. ஆனால், கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவுடன் அன்று அங்குக் கூடிய வீரர்கள் கூட்டம் விரும்புவது, விடுதலைப்போரினையேயாகும்! விவேகசிந்தாமணிக்கு விளக்கவுரையாற்றும் காரியத்திலோ, அரசியல் தந்திரங்களுக்கு அட்டவணை தயாரிக்கும் வேலையிலோ, அந்த அஞ்சா நெஞ்சு படைத்த ஆயிரமாயிரம் தோழர்களுக்கு அக்கறை கிடையாது. அவர்கள், பட்டம் பதவி கிட்டுமா என்று பக்குவம் பார்த்துப் பொதுவாழ்வு நடத்தும் பண்பினரல்ல! ‘ஒரு பெரிய பண்டைப் பெருமை வாய்ந்த இனம் பாழாகிவிடுவதா, உலகவரலாற்று ஏடுகளிலே இடம்பெற்ற ஒருநாடு உதவாக்கரைகளுக்கு உலவுமிடமாவதா, இந்நிலையை மாற்றப் போரிடாது ஆண்மையாளர் என்ற பெயரைத்தாங்குவதா?’ என்ற தீ உள்ளே கொழுந்துவிட்டெரியும் கோலத்துடன் கூடிய அந்த வீரர்கள் விரும்புவது, உரிமை! ஆம்! திராவிடநாடு திராவிடருக்கே என்ற உரிமையைத்தான் அவர்கள் விரும்புகின்றனர். அந்தக் கண்கள் காட்டிய ஒளி, அவர்கள் அன்று கிளப்பிய ஒலி, தோள்தட்டி மார்நிமிர்த்தி அணிவகுத்து நின்ற காட்சி, ஒருஇனத்தின் ஏழுச்சியின் அறிகுறியாக, விடுதலைப்படையின் எக்காளமாக, மூலத்தை உணர்ந்தோரின் முழக்கமாக இருந்ததேயன்றிக் காருண்யமுள்ள சர்க்காருக்கு வாழ்த்துக்கூறிக் கனதனவான்களுக்கு நமஸ்காரம் செலுத்திச் சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் சேதி கூறிடும் சிங்காரக் கூட்டமாக இல்லை. இதனை நாடு அறிதல் வேண்டும்; நாமும் மனதிலே பதியவைத்துக் கொள்ளவேண்டும்.
ஆளும் கூட்டத்தாரால் அலட்சியப்படுத்தப்பட்டு, மாற்றுக் கட்சிகளால் கேலிசெய்யப்பட்டு, ஆரியர்களால் அவமதிக்கப்பட்டு, வடநாட்டவரால் வாட்டப்பட்டு, மண் இழந்து மானம் இழந்து, பொருளைப் பறிகொடுத்து, மருளைத் துணைக்கழைத்து, மார்க்கமின்றி மமதையாளரிடம் மண்டியிட்டுக் கிடக்கும் ஒரு இனம், அன்று, “விடுதலை பெற்றுத் தீரவேண்டும், அதற்காக நான் உழைப்பேன்! உயிர் அளிப்பேன்! இடையே இன்பம் என்ற பெயரிலே எதுவரினுங்கூட மயங்கிடேன்; போரிடுவேன்! பெற்றால் வெற்றிமாலை, இல்லையேல் சாவு ஓலை!” என்று பெரியதோர் சூள் உரைத்த சூரர்கள் கூட்டம் அது.
வழக்கமாகக் கூடி, வசீகரமாகப் பேசி, வளையாது குனியாது வாய்வீரம் காட்டிவிட்டு, வாகை சூடியதாக மனப்பால் குடித்துவிட்டுத் தோகையர் புடைசூழப் போக பூமிக்குச் செல்லும் சுகபோகிகளின் கூட்டம் அல்ல! வறுமையின் இயல்பைத் தெரிந்தவர்களின் கூட்டம்! பசியும் பட்டினியும் எப்படி இருக்கும் என்பதை அறிந்தவர்கள்! பாட்டாளிகள்! ஆனால் பார்ப்பனீயத்தின் பாதத்தைத் தாங்கும் ஏமாளிகளல்ல, அந்தப் பார்ப்பனீயத்தை மத-சமுதாயத் துறைகளிலேயே முறியடிக்காமலேயே பட்டத்தரசராகிவிடமுடியும் என்று கருதும் கோமாளிகளல்ல, ஊருக்கு உழைத்து உருமாறிக் கிடக்கும் உத்தமர்கள் கூடினர் அன்று! உறுதியை வெளிப்படுத்தினர், ஊராள்வோரின் உளமும் உணரும் விதத்திலே. பட்டம் பதவிக்காகவே கொட்டாவி விட்டுக்கிடக்கும் கட்சி என்றிருந்த பழிச்சொல்லை அன்று துடைத்தனர், மணிமீது கிடந்த மாசுதுடைக்கப்பட்டது; ஒளி வெளிவரத் தொடங்கிவிட்டது, பட்டம் ஏன்? பதவி ஏன்? பரங்கியும் பார்ப்பனனும் பார்த்தா, பாராண்ட தமிழனுக்குப் பட்டம் சூட்டவேண்டும்? கடல் கடந்தவன் தமிழன்! இமயத்தில் புலி பொறித்தவன் தமிழன்! கடாரத்தைக் கொண்டவன் தமிழன்! ரோம் நகருக்குப் பொன்னாடை விற்றவன் தமிழன்! இலக்கியச் சுவையைக் கண்டவன் தமிழன்! எந்நாடும் வியக்கும் வீரன் தமிழன்! ஏறு நடையுடையான் தமிழன்! இன்னல்கண்டும் புன்னகை புரிவான் தமிழன்! அவனுக்குப் பட்டம், சோப்பும் சீப்பும் கண்ணாடியும் விற்கவந்து, பின்னர் அரசாள ஆரம்பித்த துரைமார்கள் தருவதா? ஏன்? அந்நாள்தொட்டு, ஆரியன் நமக்கு இட்ட “சூத்திரன்” என்ற இழிபட்டம் போக்கச் சிறுவிரலை அசைக்காதவருக்கு, ‘இராவ்பகதூர்’ எதற்கு? இந்தப் பட்டமும் பதவியும், தமது காலிலே தட்டுப்பட்டால் மட்டுமே, எடுத்துக்கொள்ளும் பண்பினர் பலர் உண்டு! ஒருசிலர் உண்டு, பகலிலே அதுபற்றியே பேச்சு, இரவிலே கனவு, எந்தநேரமும் அந்தச் சிந்தனையே! அவர்களின் தொகை மிகக்குறைவு! பிரிட்டனின் பாரதிதாசன் எனத்தகும் ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிஞன் கூறினதுபோல, “அவர்கள் சிறுதொகை, நாம் மிகப்பலர்” மிகப்பலர் கூடி, அவர்களை “ஒன்று உமது இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள், அது இயலாது எனின், எமக்குத் தனிவாழ்வு நடாத்த வழிசெய்துவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். பட்டம் பதவிகளை விட்டுவிடுவது என்ற தீர்மானத்தின் கருத்து அதுதான்! தளபதி பாண்டியன் அவர்கள் இத்தீர்மானத்தை ஆதரித்ததுடன், அது நடைமுறைக்கு ஏற்றதாக அமைவதற்கு முக்கியமாகக் கட்சியிலே ஒழுங்கான அமைப்பு வேலை இருக்கவேண்டும் என்று கூறினார்கள். ‘ஆம்! செய்வோம்!’ என்று கூறினர் அன்பர்கள்.
தமிழகத்தைப்பொறுத்த வரையிலே, தளபதிகள் இசைந்துவிட்டனர், இந்த ஆக்கவேலைக்கு. இதற்கான ஊக்கம் அளிக்கவேண்டிய பொறுப்பு உணர்ச்சியுள்ள தோழர்களுடையது. இதைக் காரியத்திலே காட்டும் “சக்தி” வாலிபர்களிடம் இருக்கிறது. சிறு கிராமம் முதற்கொண்டு பெரிய நகரம் வரையிலே செல்லுங்கள், செய்தியைச் சொல்லுங்கள், திராவிடர் கழகத்திலே ஏராளமாகத் தோழர்களைச் சேர்த்துக் காட்டுங்கள். தலைவர்கள ஆச்சரியப்படவேண்டும், அந்த அணிவகுப்பைக் கண்டு. ஆரியம் அலற, உலகம் உணர ஒருஅணிவகுப்புத் தேவை! விரைவாகத் தேவை! வேலை மிகுதியாக இருக்கிறது, விடுதலை முரசு கொட்டப்பட்டுவிட்டது. இன அரசுக்குப் போர், இறுதிப்போர் நடந்தாகவேண்டும். இன்றே கிளம்புக, திராவிடர் பாசறை நிறுவ, பலப்படுத்த!!
ஆந்திரமும், கேரளமும் இந்த வேகத்தைக் காணும்நாள் தூரத்தில் இல்லை. அதற்கான வழிவகையும் நிச்சயம் வகுக்கப்படும்.
இன்று நமது இனமிருக்கும் நிலைமை மாறித் திராவிடநாடு திராவிடருக்கே ஆகவேண்டும் என்பதுதான். அதைச்செய்யவே நாம், வடு நிரம்பியஉடலும், வைரம்பாய்ந்த உள்ளமும், சிந்தனை ததும்பும் மனமும், செய்வகை அனுபவமும் தெளிந்த, சிறைக்கோட்டத்துக்கும் வீட்டுக்கும் வித்தியாசமிருப்பதாகவே கருதாத, ஓய்வு தெரியாத ஒருபெரியாரின் தலைமையிலே கூடி நிற்கிறோம். அவர் களம்பல கண்டவர். போர்பல நடத்தியவர், போகவாழ்வை வெறுத்து ஏழை வாழ்வை நடாத்திவருபவர். அவருக்கு அநேக தாலமுத்து நடராஜன்கள் கிடைப்பர். புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதுபோல வாலிபர்கள் வருகிறார்களே என்று ஆளும் கூட்டம் ஆயாசத்தோடு கூறும் விதத்திலே, வாலிபர்களை வரச்சொல்லும் வசீகரம் அவருக்கு உண்டு. அவர் நமக்குப்போதும். வேறுசிலருக்கு வேறுசிலர் தேவையாம்! நமக்கு அதுபற்றிக் கவலை வேண்டாம்! போரிடத் தெரிந்த பெரியார், போர்வீரர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்: “போர்வீரர்களே! வருக! வருக!” நமக்கு வேறு அறிக்கை வேண்டாம்- தேவையுமில்லை.
“உழைக்கவாருங்கள்; பிழைக்கும் வழி என்ன என்று என்னைக் கேட்காதீர்கள்! உங்கள் இனத்தை மீட்க வாருங்கள், அதற்கு ஏற்ற சக்தி உண்டா என்று என்னைக் கேட்காதீர்கள்! போருக்கு வாருங்கள்; அது எப்படி முடியும், எப்போது முடியும் என்று என்னைக் கேட்காதீர்கள்”- இதுவே பெரியாரின் அறிக்கை.
ஓய்வை விரும்புவோர் ஒதுங்கி நிற்கலாம், சாய்வு நாற்காலியினர் சாய்ந்து கிடக்கலாம், பதவிப்பிரியர்கள் பாதையை விட்டு விலகலாம்; மானத்தைப்பெற, உயிரையும் இழக்கும் மனப்போக்குடையோர் வரலாம்!!- சேலம் விடுத்த செய்தி அதுவே.
இலட்சிய விளக்கம்
திராவிட நாடு திராவிடருக்கே
இது ஒரு கட்சியின் முழக்கமல்ல; ஒரு இனத்தின் இருதயகீதம்! மூலாதார உண்மை. எங்கும் எந்தவகையான மக்களாலும் ஏற்றுக்கொள்ளபட்ட உண்மை. இந்தக் கருத்தை, நாம் கூறுகிறோம் என்ற காரணத்தால், எதிர்க்கத்தான் வேண்டும் என்று எண்ணுபவர்கள், அலட்சியப்படுத்துபவர்கள், நமக்கல்ல நாட்டுக்குக் கேடு செய்கிறார்கள், தங்கள் இனத்துக்குத் துரோகம் செய்கிறார்கள்.
சின்னஞ்சிறு நாடுகள், இயற்கைவளமற்ற நாடுகள், இரவல் பொருளில் வாழ்வு நடத்தவேண்டிய நாடுகள்கூடத் தனி அரசுரிமை பெற்றுவிட்டன. இங்கோ, இலக்கியச்செறிவை இருஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்று வாழ்ந்துவந்த நாடு. இன்று மற்ற நாட்டுடன் பிணைக்கப்பட்டு, பிடி ஆளாகிக்கிடக்கிறது. தங்கள் வாழ்நாளில் தாய்நாட்டின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை உடைத்தெறிவதை, பெரும்பணி என்று கருதும் வீர்ர்களுக்கு அழைப்பு விடுகிறோம்; திராவிடநாடு திராவிடருக்கே என்பதை மூலை முடுக்கிலுள்ளோரும் அறியச் செய்யுங்கள்- அணிவகுப்பில் சேருங்கள் என்று கூறுகிறோம்.
நமது கொள்கையின் மாசற்ற தன்மையை, திட்டத்தின் அவசியத்தை, இலட்சியத்தின் மேன்மையை, அனைவரும் அறியும்படி, விளக்க, இந்த ஜூலை 1-ஆம்தேதி, திராவிடப் பிரிவினை தினமாகக் கொண்டாடத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. திராவிடநாடு திராவிடருக்கு என்ற திட்டததை, நாம் அர்த்தமற்றுத் தீட்டிக் கொள்ளவில்லை- தக்க- மறுக்க முடியாத காரணங்கள் உள்ளன.
கண்டனம் செய்வோர், கேலி செய்வோர், அலட்சியமாகக் கருதுபவர், அசட்டை செய்பவர், யாராயினும் சரியே- திராவிடநாடு திராவிடருக்கே என்பதற்காக நாம் கூறும் காரணங்களைக் கொஞ்சம் ஆர அமர இருந்து யோசித்துப் பார்த்துவிட்டு ஒருமுடிவு்க்கு வரும்படி கேட்டுக்கொள்கிறோம். பன்முறை கூறியிருக்கிறோம், இக்காரணங்களை இம்முறை இதற்கென ஓர் நாள் கொண்டாடும் சமயத்திலே நாட்டு மக்களுக்கு மீ்ண்டும் ஓர்முறை, அதே காரணங்களைக்கூறுகிறோம்:
- இந்தியா என்பது ஒருகண்டம். எனவே, அது பலநாடுகளாகத்தான் பிரிக்கப்பட வேண்டும். ஐரோப்பாக் கண்டத்தில் 32 தனித்தனி நாடுகள் உள்ளன. ஐரோப்பா முழுவதும் ஒருகுடைக்கீழ் இருக்கவேண்டுமென யாரும் கூறவில்லை. இந்தியாவும் ஒரே குடையின்கீழ் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.
- இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு தனித்தனி ஆட்சி கொண்ட 56 தேசங்கள் உள்ள கண்டமாகத்தான் இருந்துவந்தது. பிரிட்டிஷார் தமது ஆட்சி சரியாக நடக்கச் சௌகரியம் தேடிக்கொள்ளவே இந்தியாவை ஒரேநாடு என்று கருதினர்; மற்றவரையும் கருதும்படி செய்தனர்.
- மதம், மொழி, கலை, மனோநிலை, ஒருகுடிமக்கள் என்ற உணர்ச்சி வரலாற்றுப் பந்தத்துவம்- இவைகள்தாம் இன இயல்புகள். இந்த முறையில் பார்த்தால் இந்தியாவில் தனித்தனி இனங்கள் பல உள்ளன. அவைகளை மூன்று பெரும் பிரிவுகளாகக் கொள்ளலாம்: திராவிடர், முஸ்லீம், ஆரியர் என்று. இந்த மூன்று இனங்களில், திராவிடரும் முஸ்லீமும் இன இயல்புகளில் அதிகமான வித்தியாசம் இல்லாதவர்கள். ஆரிய இன இயல்புகளுக்கும் மற்ற இரு இன இயல்புகளுக்கும் துளியும் பொருத்தம் கிடையாது; பகைமை பெரிதும் உண்டு. இந்தத் தனித்தனி இயல்புகள் இருப்பதால், இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால்தான் அந்தந்த இனத்துக்கென இடமும் ஆட்சியும் கிடைக்கும். இல்லையேல் எந்த இனம் தந்திரத்தாலும், சூது சூழ்ச்சியாலும், தனனலத்துக்காகப் பிறரை நசுக்கும் சுவாபத்திலும் கைதேர்ந்து இருக்கிறதோ, அந்த இனத்திற்கு மற்ற இனங்கள் அடிமைப்பட்டு வாழவேண்டி நேரிடும்.
- இந்தியா ஒரே நாடு என்று கூறி வருவதால், ஆரிய ஆதிக்கம் வளருகிறது. ஆரிய ஆட்சியின் காரணமாக மற்ற இனநலன்கள் தவிடு பொடியாயின.
- முரண்பாடுள்ள இயல்புகளைக்கொண்ட இனங்களைச் சூழ்ச்சியால் பிணைத்துக் கட்டுவதால், கலவரமும், மனக்கிலேசமும், தொல்லையுமே வளர்ந்தன. எனவே, எதிர்காலத்தி்ல் தொல்லைகள் வளர்ந்து இந்தியா இரத்தக்காடாகாதிருக்கவேண்டுமானால், இப்போதே சமரசமாக, இனவாரியாக இந்தியாவைப் பிரிக்கவேண்டும்.
- இனவாரியாக நாடு பிரிக்கப்படுவது என்பது புதிதுமல்ல, கேட்டறியாததுமல்ல. ஏற்கனவே, இந்தியாவில், பிரிட்டிஷ் இந்தியா, சுதேச இந்தியா, பிரெஞ்சு இந்தியா, டச்சு இந்தியா எனப் பல இந்தியாக்கள் உள்ளன. இதுபோல் முஸ்லிம் இந்தியா, ஆரிய இந்தியா, திராவிட இந்தியா என மூன்று தனித்தனி வட்டாரங்கள் தேவை எனக்கேட்பது தவறல்ல.
- சுதேச சமஸ்தானங்கள் மட்டும் 574 உள்ளன. அவைகளில் தனித்தனி ஆட்சி, தனித்தனி முறை. அதுபோல், மூன்று பெரும்பகுதிகள் தனித்தனி ஆட்சிமுறையுடன் தத்தமது இன இயல்புகளை வளர்த்துக்கொள்ள வழிதேடிக் கொள்வது, தடுக்கமுடியாத உரிமை.
- ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்ட துருக்கி, வல்லரசுகளில் தலைசிறந்ததாக ஆனதுபோல, இன வாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால், ஒவ்வொரு வட்டாரமும், தனிக்கீர்த்தியுடன் விளங்கும்.
- தனித்தனி வட்டாரமானால், இராணுவ பலத்தை அவரவர் இயல்புகளுக்கு ஏற்றபடி, வளர்க்க ஏது உண்டாகும்.
- அசோகர், கனிஷ்கர்,க்ஹர்சர், சமுத்திரகுப்தர், அக்பர் முதலிய மன்னாதி மன்னர்கள் காலத்திலும், இந்தியா ஒரேநாடாக இருந்ததில்லை. அப்போதும் திராவிடநாடு எனத் தனிநாடு இருந்தது.
- தனித்தனி வட்டாரம் பிரிந்தால், அங்கங்குள்ள வசதிகளுக்கேற்றபடி பொருளாததார விருத்திசெய்துகொள்ளவும், ஒரு வட்டாரம் மற்ற இடங்களைச் சுரண்டும் கொடுமையை ஒழிக்கவும் முடியும்.
- அந்தந்த இனத்துக்கென தனித்தனி இடமும் ஆட்சியும் இருந்தால்தான், அந்தந்த இனமும், மற்றவைகளிடம் சம உரிமை, சமஅந்தஸ்து பெறமுடியும்.
- இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்று கூறித்தான் ஆரியர்கள், இமயம் முதல் குமரிவரை உள்ள இடத்தைத் தமது வேட்டைக்காடாக்கிக் கொண்டு, அரசியலில் அதிகாரிகளாய், கல்வியில் ஆசான்களாய், மதத்தில் குருமார்களாய், சமுதாயத்தில் பூதேவர்களாய், பொருளாதாரத்தில் பாடுபடாது உல்லாச வாழ்வு வாழக்கூடியவர்களாய் இருக்கவும், மற்ற இனத்தவர் தாசர்களாய், பாட்டாளிகளாய் உழைத்து உருவின்றிச் சிதைபவர்களாய் வாடவும் நிலைமை ஏற்பட்டது. இந்தக்கொடுமை நீங்க, வர்க்கத்துக்கொரு வட்டாரத்தைப் பிரிப்பதுதான் சிறந்தவழி!
- ஒரு இனத்திடம் மற்றொரு இனத்துக்கு நம்பிக்கை இல்லை. ஒரு இனத்து ஆட்சியின் கீழ் மற்றொரு இனம் இருப்பது என்று சொன்னாலே அச்சம் உண்டாகிவிட்டது. அச்சமும் அவநம்பிக்கையும் பெற்றெடுக்கும் குழந்தையே பயங்கரப்புரட்சி. இந்தப் பயங்கரப்புரட்சியைத் தடுக்கவே, இப்போது பிரியவேண்டும் என்கின்றோம்.
- இந்தியா பிரியாது இருந்தால் இதுவரை, ராணுவப் பொருளாதார அறிவுப் பலம் வளர்ந்ததாகவோ, இந்திய இனம் என்ற புதுச் சமுதாயம் அமைந்ததாகவோ கூற எந்த ஆதாரமும் இல்லை. ஒரு இனத்தின் குரல்வளையை மற்றொரு இனம் அழித்து நெரித்து்க் கொல்லாது போனதற்குக் காரணம் எல்லா இனத்தையும் பிரிட்டிஷ் துப்பாக்கி ஏககாலத்தில் அடக்கிவைத்திருந்தததால்தான். எனவே, பிரிட்டிஷ் பிடிபோய்விட்டால், இந்தியா இரணகளமாகும். இதற்கு ஐரோப்பாவில் அடிக்கடி நடக்கும் போர் ஒரு உதாரணம். எனவே, இத்தகைய இன்னல்கள் உண்டாகாதிருக்க இனவாரியாக இடம் பிரித்து விடுவதே, ஆபத்தைத் தடுக்கும் வழி.
எனவே, இனவாரியாக இந்தியா பிரிந்தால், இன இயல்புகள் தனித்துத் தனிச் சிறப்புடன் விளங்கவும், ஆரிய ஆதி்க்கம் அடங்கவும் பொருளாதாரச்சுரண்டல் போகவும், அறிவை அடக்கும் அவதி நீங்கவும், எதிர்காலத்தில் பூசல் எழாதிருக்கவும், சாந்தம் சமாதானம் நிலவவும் மார்க்கமுண்டு. எனவேதான் இந்தியா இனவாரியாகப்பிரியவேண்டும் என்று, இந்தியாவை இனப்போர்க்களமாகக் காணக்கூடாது என்ற நல்ல நோக்கம் கொண்டவர்கள் கூறுகின்றனர். இதை மறுப்பவர்கள், சரிதத்தை மறந்தவர்களாக இருக்கவேண்டும் இல்லையேல் சரிதத்தை மக்கள் தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணங்கொண்டவர்களாக இருக்கவேண்டும். ஒரே இனஇயல்பு அதாவது ஆரிய ஆதிக்கம், மற்றவைகளை மிதித்துத் துவைத்து அழி்க்கவேண்டுமென்ற கெட்ட எண்ணங் கொண்டவர்களும், வலுத்தவனுக்கு வாழ்க்கைப்படும் வனிதைபோல, இந்தியாவைச் செய்துவிட்டுத் தாங்கள் எப்படியேனும் வழிசெய்து கொள்ளவேண்டும் என்ற கேடுகால யோசனையும் கொண்டவர்களே, இந்தப்பிரிவினைத் திட்டத்தை எதிர்ப்பர்.
இன்னோரன்ன காரணங்களையும், ஆரிய ஆதி்க்கம் வளர்ந்த விதம், அதனால் பிற இயல்புகள் அழிந்த கொடுமை, இனி ஆரியத்தை அடக்கித் தீரவேண்டியதன் அவசியம் ஆகியவைகளை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினோம். இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் வாதங்கள் ஏலாதனவென்று விளக்கினோம். காரணங்களை அவர்கள் கதைகளால் வீழ்த்தவும், ஆதாரங்களை வெறும் அளப்பினால் அடக்கவும், சரித்திரத்தைச் சவடாலால் சாய்க்கவும், உறுதியை உறுமிக்கெடுக்கவும் நமது எதிரிகள் முனைந்து நிற்பதைப் பொருட்படுத்தாது நம்கடனை நாம் செய்தல் வேண்டும் என்று கூறினோம்.
இஸ்லாமியர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து தங்களின் தலைவரின் திட்டத்தின்படி பணிபுரிந்து வெற்றிபெற்றுவிட்டனர். வடக்கே இனஅரசு -பாகிஸ்தான்- ஏற்பட்டுவிட்டது.
அவர்கள் எந்த இலட்சியத்துக்காகப் போராடி வெற்றிபெற்றார்களோ, அந்த இலட்சியத்தை, அவர்கள் முழக்கமாகக் கொள்ளாததற்கு முன்பு நாம்கொண்டோம்; அவர்கள் லாகூரில் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றாததற்கு முன்பு நாம் திராவிடநாடு திராவிடருக்கே என்று தீர்மானம் செய்தோம். நாடெங்கும், இந்த இலட்சிய்த்தை விளக்கிப் பிரசாரம் செய்தோம்… செய்தும் வருகிறோம்.
பாகிஸ்தான் தேவை என்பதற்குக் கூறப்பட்ட காரணங்களைவிட, அதிகமான, சிலாக்கியமான காரணங்கள், திராவிடத்தனி அரசு தேவை என்பதற்கு உள்ளன. ஆனால், திராவிடப் பெருங்குடி மக்கள், இதனை இன்னும் உணர்ந்ததாகக் காணோம்.
போர்வாள்
திருச்சியிலே! அதற்கு அடுத்தகிழமை நாம் கூடினோம். அங்கே ராஜகோலாகலர்கள் இல்லை! மிட்டாமிராசுகளும், ஜெமீன் ஜரிகைக் குல்லாய்களும் இல்லை! மாநாட்டுப்பந்தலிலே, வந்திருந்த தாய்மார்களின் தங்கக் கட்டிகள் தூங்குவதற்கு ஏணைகள் கட்டிவிடப்பட்டன! கொலுவீற்றிருக்கும் ராஜா கொடுத்த 2000-த்துக்காக, அவருடைய கோணல் சேட்டையைச்சகித்துக் கொண்டிருந்தனர் காங்கிரசில்- இங்கோ, அழுகிற குழந்தையை முத்தமிட்டுச் சத்தம் வெளிவராதபடி தடுத்த தாய்மார்களைக் கண்டோம்; பெருமையும் பூரிப்பும் கொண்டோம். நாட்டுப்பற்றுக்கு நாயகர் என்று கூறிடுவோர், அங்கு ஓட்டுவேட்டைக்கான ஓங்காரச் சத்தமிட்டனர்- இங்கோ, நலிந்து கிடக்கும் இனத்துக்கு நல்லதோர் மூலிகை தேடிடும் நற்காரியத்தில் ஈடுபட்டோம். அங்கு அரசாளவழிகண்டனர்! அங்குப் பதவி தேடிடும் பண்பின்ர் கூடினர்- இங்கு இனத்தின் இழிவுதுடைக்க எத்தகைய கஷ்டநஷ்டமும் ஏற்கத் தயார் என்று உறுதிகூறிய வீரர் கூடினர். அங்கு, வெள்ளை ஆடை அணிந்தவரின் விழா- இங்குத் துயர்கொண்ட திருஇடத்தின் இழிவைக்குறிக்க இனிக்கருப்பு உடைதரித்து, விடுதலைப்போர் துவக்குவோம் என்று சூள் உரைத்த வாலிபர்களின் அணிவகுப்பு. அங்கு அறுவடை- இங்கு உழவு! அங்குப் பேரம்- இங்கு வீரம்! அங்குக் காங்கிரசு- இங்குத் திராவிடர்கழகம்! செல்வம் கொழிக்கும் பம்பாய் நகரிலே, தாஜ் ஹோட்டல் என்ன! ராயல் ரெஸ்டாரண்ட் என்ன! ரம்மியமான பல விடுதிகள் என்ன! இவ்வளவு வசதிகள்! செல்வவான்களுக்கு்த் தேவையான சுவைகள்!- இங்கோ வெட்ட வெளியிலே, ஒரு கொட்டகை! கொட்டகைக்கும் நகருக்கும் இடையே இரண்டுமைல் தொலைவு! மாநாட்டார், சாப்பாடு போட இல்லை! தங்கப்போதுமான விடுதிகள் இல்லை! மழைத்தொல்லையோ தொலையவில்லை! இடியும் மின்னலும், அதிகாரவர்க்கத்தின் அமுலும் அமோகம்! மாநாட்டுக்கு மகாராஜாக்களும், பட்டமகிஷிகளும் இல்லை! அலங்கார புருஷரும் அவரை அடக்கியாளும் மெழுகுபொம்மைகளும் இல்லை! ஒரே ஒருமோட்டார்! இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தது; அதுவும் வாடகை வண்டி!
பதவிபெறப் பாதை வகுத்தனரா? இல்லை! இருக்கும்பதவியை விட்டுவிடு, இல்லையேல் விலகிநில் என்று கூறினர்! தேர்தல் முஸ்தீப்புகள் உண்டா? இல்லை! தீண்டினால் திருநீலகண்டம்!! மாஜி மந்திரிகள் உண்டா? தென்படவில்லை! மிட்டா மிராசுகள் உண்டா? இல்லை! காருண்ய மிகுந்த’ சர்க்காருக்குக் காவடி தூக்குவோர் உண்டா? இல்லை! வேறு யார் இருந்தனர்? வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! அவர்கள் கூடிப்பேசி வகுத்த வழி என்ன? “நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்; இது நமக்கே உரிமையாம் என்பதும் தெரிந்தோம்” என்று கூறினர். ‘கொலைவாளினை எடடா! ‘மிகு கொடியோர் செயல் அறவே’ என்று பாடினர். “திராவிடத்திருநாட்டினிலே ஆரிய அரசா? அதற்குப் பார்ப்பன முரசா?” என்று கேட்டனர். சர்க்கார்சனாதனத்துக்கு இடந்தரும் போக்கைச் சாடினர்; பெரியாரே, இப்பெரும் படைக்குகந்த தலைவர் என்று தேர்ந்தெடுத்தனர். களம் காட்டுக என்று முழக்கமிட்டனர், கடும் பத்தியத்துக்கெல்லாம் தயார் என்று உறுதிமொழி பூண்டுவிட்டனர்; போயுள்ளனர். தத்தமது பட்டிதொட்டிகளிலும், திராவிடரின் விடுதலைப் படையிலே நாங்கள் பெயரைப் பொறித்து விட்டோம்! எந்தச் சமயத்திலே அழைப்பு வருமோ அறியோம். வந்தால், வாளா யிரோம். அது மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலையாக இருக்கக்கூடும். எதுவாக இருக்குமோ தெரியாது ஆனால் எதற்கும் நாங்கள் தயார் என்று உறுதி கூறிவிட்டோம் ” என்று உரைத்திடுவர். திருச்சி, தீரர்களின் அணிவகுப்பைக் காட்டிவிட்டது! இரயில்வே வசதிக் குறைவு. கால நிலைக் கோளாறுகள் இவ்வளவையும் பொருட்படுத்தாமல், அங்கு கூடிய ஏறக்குறைய நாற்பது ஆயிரம் மக்களும், நமது நாட்டு விடுதலைக்கான படை; அதனைத் தடுக்கும் தடை இருக்க முடியாது.
கட்சியின் குறிக்கோள் கெட்டுவிட்டது என்று மேதாவிகளிலே ஒருவரான சிலப்பதிகார உரையாசிரியர் சர். சண்முகனார் முழக்கமிட்ட பிறகு, ஞாயிறு நோக்கி நாத்தழும்பேற நிந்தித்தபிறகு, கிழமைதோறும் இந்தக் கிழத்தை நாங்கள் கவிழ்த்துவிட்டோம் என்று வளையுள் நெளியும் சுனை விழுங்கிகள் சொல்லம்புகளை விட்டபிறகு, ஜல்லடம் கட்டிய வீரரும், புகலிடம் தேடிடும் வீணரும், கனலைக் கக்கிய பிறகு, சர்களும், திவான்பகதூர்களும் விருந்துண்டு, விருது புகன்று, வீர ரசம் பருகி, விடமாட்டோம் என்று ஆவேசம் பேசிய பிறகு, கட்சியிலே பிளவு என்று கலகப் பிரியர்கள் பேசிய பிறகு, காட்டுக் கூச்சலிடுவோர் தானே மிச்சம், கண்ணியமானவர்கள் எங்கே என்று கனத்த குரலினர் கூறிய பிறகு, கட்சி கரைந்து விட்டது என்று கேலி பேசிய பிறகு, இந்தக் காட்சி–மக்கள் பலப்பல ஆயிரவர் கூடிய காட்சி-பட்டம் பதவி, தேர்தல் முதலிய பசையும் ருசியும் இல்லை என்று தெரிந்தும் கூடிய கோலம், சிறையும் பிறவும் கிடைக்கும் என்று தெரிந்தும் கூடிய கூட்டம், சர்வாதிகாரம் செய்கிறார், யாரையும் சட்டை செய்ய மறுக்கிறார் என்று பெரியாரைப்பற்றிக் கூறப்படுவது தெரிந்தும் கூடிய கூட்டம். அமைப்பு இல்லை, ஆங்கில – தமிழ் தினசரிகள் இல்லை, ஆந்திர கர்நாடகம் போகவில்லை; பணம் பெறும் பிரசாரகர்கள் இல்லை – இவை கட்சியிலுள்ள குறைபாடுகள் என்று சிலர் கூறினது தெரிந்தும் கூடிய இந்தக் கூட்டம், தவறான வழியிலே சென்றுகொண்டிருக்கும் ஒரு சிலருக்குக் கண்ணையும் கருத்தையும் திறந்திடும் காட்சி என்போம் ! சேலத்திற்குப் பிறகு, கட்சியிலே பிளவு, பெரியாரின் பலம் ஒடுங்கி விட்டது, பிளவு பலமாகி விட்டது என்று, கொட்டை எழுத்திலே அச்சிட்டு விட்டு, பெரியாரின் செல்வாக்கு அதனால் பட்டுப் போய்விட்டதாகக் கருதிக்கொண்டனர் சிலர்! அவர்களின் சிந்தனைக்கு ஒரு சிக்கலான வேலை, இந்தத் திருச்சி மாநாட்டுக் காட்சி! ஏன் கூடினர் இவ்வளவு மக்கள், எவ்வளவோ வசதிக் குறைவு இருந்தும்? கட்சியிலே பிளவு என்பது இந்த விளைவையா தரும், பிளவு என்பது உண்மையாக இருக்குமானால்? ஒரு சிலர் வழக்கமாகக் காணப்படுபவர், வருவதற்கு ஆருடம் பார்த்து, ஆள் அம்பு அனுப்பி, தங்கியிருக்கப் பங்களாவும், தர்பாருக்கேற்ற “தாசர்” கூட்டமும், தலையிலே பாகையும், தடியிலே தங்கப்பூணும் கொண்ட சீமான்கள் அங்கு இல்லை? ஆனால் சீறிப் போரிடும் சிங்கங்கள் இருந்தன !! இதனை நண்பர் வேதாச்சலம், ‘இராமநாதபுரம் ராஜா தலைவராகவும், தனவணிகர் குலதிலகர் பெத்தாச்சி செட்டியார் வரவேற்புக் கழகத் தலைவராகவும் இருந்து, ஜஸ்டிஸ் மாநாட்டை இதே திருச்சியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தினர், இன்று நான் வரவேற்புத் தலைவனாய் இருக்கிறேன். சாமான்யன் ! பெரியார் தலைவராக இருக்கிருர். அவர் ராஜா அல்ல ! என்று கூறினார். கோடி உள்ளங்களின் எதிரொலி அவருடைய வாசகம்! ஆம்! ராஜாக்களும், ஜெமீன்தாரர்களும், இன்றைய திராவிடர் கழகம் நேற்று ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்று அழைக்கப்பட்ட காலத்திலே, அக்கட்சியைத் தமக்குக் கொலுமண்டபமாகவே கொண்டனர்! இன்று அது மக்கள் மன்றமாகி விட்டது!நாளை, அந்த மக்கள் மன்றத்தின் மாவீரர்களின் எதிர்ப்பினால் “மஞ்சள் கருப்பாச்சுதே! எங்கள் மனக்கோட்டை தூளாச்சுதே!” என்று பாடி அழப்போகின்றனர்’ இன்று ஓடி ஆடி அடாணா பாடும் கட்சியினர். மா நாட்டிலே, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,எங்களால் தாங்கக்கூடியவை அல்ல என்று சோகித்துக் கூறிக் கை பிசையும் “கனங்கள்” வாழ்ந்த இந்தக் கட்சியிலே, திருச்சி மாநாட்டிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், ‘போதுமான அளவு தீவிரமாக இல்லை, போர் வாடை அடித்தது. முரசும் கேட்டது. ஆனால், களம் செல் என்று கட்டளை காணோமே! ஏன்?’ என்று பெருமூச்சு விட்டபடி, தோளைக் குலுக்கிடும் வீரர்கள் ஆயிரம் ஆயிரம் இருந்தனர்!
மூன்றடுக்கு மாடி வீடு, நமது கட்சியின் மூலபுருஷர்கள் என்று கூறப்படுவோரின் முகாம் ! இந்தி எதிர்ப்புப் போர் மும்முரம்! அந்தச் சமயத்திலே கூடியபோது இந்தப் போரை ஐஸ்டிஸ் கட்சி எடுத்து நடத்த வேண்டும் என்று அந்தப் போரிலே ஈடுபட்டிருந்தவர்கள் கூறினர். கூறினது தான் தாமதம், குளிர்ச்சி மறைந்தது; கொதிப்பு கூத்தாடிற்று. கூடினது இதற்கா என்ற கேள்வி பிறந்தது. எங்களால் முடியாது என்று பேசப்பட்டது! யாரால்? சிறைச்சாலைக்குச் சென்று ‘சீரழிய?” வாலிபர்களை அனுப்பிவிட்டு செல்வத்தின் துணையினால் சட்டசபை சென்று சிங்கார வாழ்வு நடாத்தும், சீமான்களால் ! அன்றே “சேலம்” ஏற்பட்டிருக்க வேண்டும்! பெரியார் மெல்லவும் முடியாது. விழுங்கவும் முடியாது கஷ்டப்பட்டார் ! இது ஒட்டாச் சரக்கு என்பது அன்றே தெரிந்தது! தாட்சணியம் என்ற பசையால் ஒட்ட வைத்தார்! அதுவும் ஓட்டு வேலைக்காகவே தவிர, திராவிடத்தின் மானத்தை மாய்க்கும் ஆரிய எதேச்சாதிகாரத்துக்கு வேட்டு வைக்க அல்ல! சேலம் மாநாட்டிலே, “சேலம் நடந்ததே” அது நெடுநாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய சம்பவம். கொஞ்சம் காலங் கழித்தே நடந்தது! நடந்த பிறகு, உள்ளபடியே அதனாய் நமக்கு நஷ்டமோ என்று சிலருக்கு நம்மவரிலேயே சிலருக்குக்கூடச் சந்தேகமும், சஞ்சலமும் இருந்தது! அந்தச் சந்தேகத்தைத் திருச்சி துடைத்து விட்டது ! இனி நமது பாதை தெளிவாகி விட்டது; பயணத்தைத் துவக்க வேண்டியதுதான் பாக்கி ! அதுவும் விரைவிலே! நிச்சயம் துவக்கப்படும்!!
திருச்சி மாநாட்டிலே, நமக்கு ஏற்பட்ட உருவான பலன் இதுதான்! நமக்கு பழைய கூட்டுறவுக்காரர்கள் விலகியதால் நமக்கு நஷ்டம் இல்லை! அந்தப் “பழைய கூட்டாளிகளைக் கொண்டு அமைக்கப்படும் தேர்தல் காளான் நமது பாதையைத் தடைப்படுத்தக்கூடியதல்ல! நமது பாதை தெளிவாக்கப்பட்டு விட்டது” என்பது, திருச்சி மாநாடு நமக்களித்துள்ள பாடம்! இனித் தயங்கவோ, திரும்பிப் பார்க்கவோ, தழதழத்த குரலுக்கோ, தாட்சணியத் தொல்லைக்கோ இடமில்லை; அவசியமும் கிடையாது, போர்ப் பாதையிலே வந்து நிற்கின்றோம்! பார்க்கின்றோம்! அஞ்சா நெஞ்சினரும், ஆர்வத்தால் தம்மை மறந்தவரும், ஆற்றல் மிக்கவருமான தோழர்கள் உள்ளனர், கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலே! அவர்கள் ‘போர்வாள்!’ காண்பவர்கள் கண்டு ரசிப்பவர்கள்! நடுநிசி வரை, நாட்டுக்காக வீட்டை மறந்து, வெட்ட வெளியிலே கொட்டு மழை வருமோ என்ற நினைப்புமின்றி, ஆணும் பெண்ணும், குழந்தையும் கிழவருமாகக் கூடியிருந்தனர். ஏன்? ‘நாங்கள் போய்விட்டோம். இனி இவர்கள் நாதியற்றவர்கள் ” என்று நையாண்டி செய்தார்களே.சில சீமான்களும் அவர்களின் “பில்லைச் சேவகர்களும்” அது பொய், என்பதை நிரூபித்துக் காட்ட! இந்த மக்கள் கூட்டம், நமது பக்கம் இருக்கும்போது, உரிமைப் போரைத் துவக்காமலிருக்க முடியாது. அந்தப் போர், துவக்கப்பட்டே தீரும்! காலம் வெகு தூரத்திலில்லை!!
காங்கிரசார் மிகப் பலம் பொருந்திய மெஜாரிட்டியினராக. வந்தபோது பானகல் அரசர் சொன்னார், “இதுவரை மெஜாரிட்டி கட்சி ஆண்ட காட்சியையே நீங்கள் கண்டிருக்கிறீர்கள்தான், ஓர் விசித்திரக் காட்சியை இனி ஏற்படுத்திக் காட்டுகிறேன் பாரீர்! சிறுபான்மையாக (மைனாரிட்டியாக) உள்ள கட்சி, பெரும்பான்மையினராக உள்ள கட்சியை ஆட்டி வைத்து, அரசாளும் காட்சியை இனிக் காண்பீர்கள்” என்று! செய்தும் காட்டினார். பானகலின் பேச்சுக் கேட்டு, ஆடும் பதுமைகளாயினர், பாராளும்உரிமை பெற்றதாகக் கூறிப் பரங்கியரை மிரட்டிய காங்கிரசார். இன்று பெரியார் ” இதுவரையிலே தேர்தலிலே நின்று வெற்றிபெற்ற கட்சியின் வீரச் செயல்களையும், அக்கட்சியைச் சட்டசபையிலே அமர்ந்திருந்து எதிர்க்கும் கட்சியின் வீரச்செயலையுமே கண்டிருக்கிறீர்கள். இனி ஓர் அதிசயத்தைக் காணப் போகிறீர்கள். அஃது என்ன? திராவிடர் கட்சி தேர்தலிலே போவதில்லை. ஆனால், தேர்தலிலே நின்று வெற்றிபெற்று, நிற்கப் குதூகலத்துடன் அரசாள வரும் கட்சியின்கொட்டம் அடங்குமளவு, சட்டசபைக்கு வெளியே இருந்து உள்ளே இருந்துசெய்வதைவிட உக்கிரமான, உருவான எதிர்ப்புக் கட்சியாக இருக்கும். இந்த அற்புதத்தைச் செய்து காட்டுகிறேன் பாரீர்” என்று கூறுகிறார். திருச்சி மாநாட்டைக் கண்ட எவருக்கும், இது நடைபெற முடியாதது என்ற எண்ணம் வராது! இவ்வளவு வீரர்கள் இருக்க, தீரத்துக்குக் குறைவு எது?. பெரியார் பெரும்படை சட்டசபை புகாவிட்டால் என்ன? நாடு முழுதும் சட்டசபையாக்கிக் காட்டுவோம்! நாடாள வருபவர், மக்கள் மன்றத்தின்முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவர்! இது நிச்சயம்! “ஆள்வது நானா, இந்த இராமசாமி நாயக்கரா?” என்று ஆச்சாரியார் கேட்டார், ஆணவத்துடன். “ஒரு இராமசாமிக்காகப் பயந்து இந்தியை எடுத்து விடுவதா ” என்று கோபித்துக் கூறினார். ஆனால் பாபம், புற்றிலிருந்து ஈசல் போல் கிளம்புகின்றனரே! இந்தச் சனியனுக்கு இவ்வளவு தொல்லை இருக்குமென்று தெரிந்திருந்தால் இந்தியைப் புகுத்தியே இருக்கமாட்டேனே ” என்று அதே ஆச்சாரியார் அலறினார்! எதைக்கண்டு? நமது கட்சி அங்கத்தினர்கள் சட்டசபையிலே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுடன் இருந்தனரா ? இல்லை! வேறு எதைக்கண்டு அந்த வேதியருக்குச் சோகம் பிறந்தது? நாட்டிலே, மூண்டுவிட்ட எதிர்ப்பைக் கண்டு ! பல ஆயிரக்கணக்காளகட்சி அங்கத்தினர்கள் முறைப்படி சேர்க்கப்படாமல், கட்சியின் கிளைகள் ஏற்படாமல், கல்லூரிகளிலே நமது குரல் கேளாமல் இருந்த நாளிலே இது சாத்தியமாயிற்று என்றால், கட்சி அங்கத்தினர்கள் குவிந்து, கிளைகள் ஆங்காங்கு தழைத்து, கல்லூரிகளிலே தளபதிகள் தயாரிக்கப்படும் இந்நாளிலே, தாலமுத்துவும் நடராசனும் பிணமாயினர் என்ற செய்தி இரத்தத்திலே சூடேற்றி வீட்டிருக்கும் இந்நாளிலே, புரட்சிக் கவிஞரின் புதுக்கருத்துக்கள் நமது புண்ணை ஆற்றிப் புதியதோர் வீரத்தை ஊட்டும் இந்நாட்களிலே, நடிகமணிகள் திராவிட நாட்டு விடுதலைக்காகக் கலையை வேலை வாங்கும் இந்நாட்களிலே, கம்பனைக் காப்பாற்றக் கலா ரசிகர்கள் ஓட்டை ஒடிசல் நீக்கப் பாடுபடும் இந்த நாளிலே, கொச்சியும் திருவிதாங்கூரும். மைசூரும் ஆந்திரமும் மாகாண மாநாட்டுக்குப் பிரதி நிதிகள் அனுப்பி யிருந்தன என்று “இந்து” பத்திரிகை எழுதித் தீர வேண்டி நேரிட்ட இந்த நாளிலே, திருநாமம் தரிப்பதை மறவாத திருவாளர் வீடுகளிலேயும், “பார்ப்பனத் தீட்டு” கூடாது, என்ற திடசித்தம் ஏற்பட்ட இந்த நாளிலே, தீப்பொறி பறக்கும் தீர்மானங்கள் இல்லையே என்று கோபித்துக் கூறும் தீரர்கள் திரண்டுவிட்ட இந்நாளிலே, காந்தியின் சம்பந்தியார் காங்கிரசிலே கள்ளத்தனமாக நுழைந்தார் என்று காமராஜர்கள் கூறக்கூடிய இந்நாளிலே, நாம், ஏன், சட்டசபைகளிலே நுழையாமலேயும். அந்தச் சபையில் நுழைந்துகொள்பவரை நமது இஷ்டப்படி நாட்டை ஆளச் செய்ய முடியாது என்று கேட்கிறோம் ? அந்த நாளிலே அவ்வளவு முடிந்ததே! இந்த நாளிலே !! எண்ணும்போதே களிப்பும் நம்பிக்கையும் கலந்து வருகிறது, கனிச் சாறும் கன்னல் சாறும் கலந்திருப்பது போல!
நாடாள, யாரேனும் வரட்டும், நாம் நாட்டு மக்களுக்கு, நமது பலத்தின்மீது ஆணையிட்டுக் கூறுகிறோம், அவர்களை “நல்ல பிள்ளைகளாக ” நடந்துகொள்ளச் செய்வோம், நிச்சயமாக நம்மால் அது முடியும்!!
வேவல் தமது படைகளைப் பர்மாப் போர்களத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தார். போர்த் தந்திரம் தெரியாதவர்கள் கேலி செய்தனர்! பிறகு? அந்தமான் தீவுகளைக் கை விட்டனர். நையாண்டி செய்தனர், போர்முறை அறியாதார். இன்று? படை பலத்தைச் சிதற வைப்பதும், தாக்குதலுக்கு ஒரு சமயம் உண்டு என்பதை அறியாமல் தாக்குவதும் படைத்தலைவருக்கு இருக்குமானால், படை தப்பாது; வெற்றியும் கிட்டாது. காங்கிரஸ் டோஜோ, மலேயாவையும் ஜாவாவையும், பிலிப்பைனையும் பொல் துறைமுகத்தையும் பிடித்துக்கொள்ளட்டுமே, பயம் ஏன்? டோக்கியோவைத் தாக்குவோம், சமயமறிந்து அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, வெற்றிக் கொலுமண்டபம்,சரணாகதிச் சாஸனம் கையொப்ப மிடவேண்டிய இடங்களாக மாறுகிறது; கவலை ஏன் ? ஆனால், ரஷ்யப் படை, நாஜிப் படையுடன் கஷ்ட நஷ்டம் பாராது கடும் போரிட்டதாலே தான், மேற்கு அரசாங்கத்திலும் சரி, கிழக்கு அரசாங்கத்திலும் சரி, நேசநாட்டினரால் பிறகு வெற்றி காண முடிந்தது என்று கூறுவர்! உண்மை! அதுபோலத்தான், இன்றைய தேர்தல் போராட்டத்திலே, முஸ்லீம் லீக், ரஷ்யப் படையாக இருக்கிறது !! அதிலே சந்தேகம் ஏது? காங்கிரசுக்கு, முஸ்லீம் லீக், இந்தியாவின் ஏகபோக மிராசு பாத்யதை இல்லை என்பதை நிரூபித்துவிடப் போகிறது! ஆகவே இந்தத் தேர்தலிலே நாம் கலந்து கொள்ளாதது, கேடுள்ளதுமல்ல, காங்கிரசுக்கு இதன் பலனாக சர்வ வல்லமை ஏற்பட்டுவிடப் போவதுமில்லை. நமது போர்க்கருவிகள் பழுதுபட்டுக் கிடக்கின்றன! அவைகளைச் சரி செய்து கொள்வோம்; பிறகு பாய்வோம்! ஜப்பான் தாக்கிப் பிடித்த ஒவ்வொரு நாட்டையும், திரும்பித் தாக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமின்றி, தலைமேல் ஒரு பலமான தாக்குதல், அதன் பயனாக பிடிபட்ட இடங்கள் யாவும் சரணாகதி என்றானதுபோல இன்று ஒதுங்கி நிற்கும் நம்மால், ஓடிவரும் காங்கிரசை ஒடுக்கி விட முடியும் ! அந்தக் கட்சி ஆளச் சந்தர்ப்பம் தருவோம், அதன் மமதை மாள! இந்தப் போர்முறைச் சூட்சுமத்தைச் சிலர் தெரிந்துகொள்ளாததற்குக் காரணம், “தேர்தல் தரகர்கள்” தேடிக் கண்டுபிடித்துத் தரும் தேய்ந்துபோன ஆர்வம்! அஃதன்றி வேறில்லை! திருச்சி மாநாட்டிலே நாம் தெளிவாக்கி விட்டோம் இதனையும்.
மற்றுமோர், முக்கியமான முடிவு கண்டோம்; அதாவது. சமுதாய இழிவுகளைத் துடைக்கப் போரிடும் ஒரு விடுதலைப் படையை அமைத்துள்ளோம். “கருப்புச் சட்டை’ அணிந்திருக்க வேண்டும் என்று பெரியார் கூறினார். ஏன், என்றும் விளக்கினார். திராவிட மக்கள் அடைந்துள்ள இழி நிலையால் ஏற்பட்ட துக்கத்தின் அறிகுறி அந்த உடை என்றார். நாம், நாடிழந்து, அரசு இழந்து, நம்மில் பாமரர் அறிவிழந்து,மொழிவளமும் கலை உயர்வும் இழந்து, செல்வம் இழந்து, சீர் இழந்து நாலாம் ஜாதியாய், ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறோம். நம்மை ஒரு. சிறு கூட்டத்தார் கொடுமைப் படுத்துவது, ஏக்கத்தைத் தரு கிறது. அதனினும் அதிகமான துக்கம், நம்மவரில் பலரும் அந்தக் கொடுமையை உணராமல் இருக்கும் நிலைமையால் ஏற்படுகிறது. இந்தப் பெருந் துக்கத்தைக் காட்டும் குறியாகவே கருப்பு உடை அணியச் சொல்கிறார் தலைவர். ஏற்கனவே உள்ள ஏளன மொழிகளுடன் நமது எதிரிகள் இனி கருப்புச் சட்டைக்காரன், கள்ளன் போன்ற உடை அணிந்தோன் என்று புதுவசவுகளைச் சேர்த்துக் கொள்வர்; அவர்கள் ஆசையும் தீர்ந்து போகட்டும். கருப்புச் சட்டை பாசிச அடையாளம் என்று பேசுவர் ஏட்டிலே சமதர்மம் காண்போர், பேசட்டும்; நமது துக்கத்தை நாட்டுக்குத் தெரிவிக்கட்டும் நமது உடை ! இந்த விடுதலைப் படை சமுதாய இழிவுகளைப் போக்கும் போரிலே முன்னணி நிற்கும் ! இதற்குத் திருச்சி மாநாடு தந்துள்ள ஆர்வத்தைக் கொடுமையான நிலைமையைத் தமது கோணல் புத்தியைக் கொண்டு நீடிக்கச் செய்பவர் உணர்வது நல்லது. சமுதாய இழிவு எது, அதனை ஒழிப்பது எப்படி, எந்த முறையிலே என்பதிலே, திருச்சி மாநாட்டிலே காணப்பட்ட எழுச்சி, கட்சி அடைந்துள்ள புதுக் கட்டத்தைக் காட்டுவதாக இருக்கிறது.
முன்பெல்லாம், சமுதாய சீர்திருத்தத்துக்காகவே இந்தக் கட்சி இருக்கிறது என்று டாக்டர் நாயர் போன்றவர்கள் முழக்கமிட்டு வந்துங்கூட, முற்போக்கான, கொஞ்சம் தீவிரமான கருத்துள்ள தீர்மானம் மா நாட்டிலே வந்தால் ஒரு நடுக்கம் ஏற்படும். எடுத்துக் காட்டாக, ஆதிதிராவிட மக்களை ஆலயங்களிலே அனுமதிக்க வேண்டும் என்று பேசப்பட்டால், அரகரா சிவ சிவா என்று அலறுபவரும், ராம ராமா என்று அழுபவரும், இதைக் கூறிவிட்டு ஓட்டுக்குப் போனால் கிடைக்காதே என்று யூகமுரைத்தவரும், இவ்வளவு புரட்சிகரமாகப் போகக் கூடாது என்று எச்சரிக்கை செய்பவரும், நம்மிடம் இருந்தனர். திருச்சியிலே ஓர் தலைகீழ் மாற்றம் ஆதிதிராவிடர்களுக்குச் சகல கோயில்களிலும் பிரவேசிக்க அனுமதி தரவேண்டும் என்று தீர்மானம் ! இதற்கு, வைதீக எதிர்ப்பு, சனாதனச் சலசலப்பு, பழைமை விரும்பியின் பயம், இவை இல்லை! ஆனால் வேறு என்ன இருந்தது ? “ஆதித்திராவிடருக்கு ஆலயப் பிரவேசம், ஒரு நன்மையும் செய்யாது ! நாம் இதுவரை அங்கே சென்று கெட்டது போதும், பழங்குடி மக்களையும் அங்கு அனுப்பிப் பாழ் செய்யாதீர்! ஆலயங்களிலே என்ன இருக்கிறது? அது ஆரியக் கோட்டை ! கள்ளர் குகை! சனாதனச் சேரி! வைதீக வளை ! நாமோ, அத்தகைய வைதீக பிடிப்பிலிருந்து மக்களை மீட்கும் பணியிலே ஈடுபட்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட நாம், ஆதித்திராவிடரை ஏன், ஆலயத்துக்குப் போகச் செய்து, அவர்களுள் வாழ்வையும் அறிவையும் பாழாக்குவது?” என்று பல தோழர்கள், ஆர்வமும் ஆவேசமும் கலந்தது மட்டுமல்ல; உண்மையாகவே, கோயில் நுழைவு கேடு தரும் என்று உணர்ந்து பேசினர். ‘கோயிலிலே ஆதித்திராவிடரை நுழைய விடுவது, மதத்துக்குக் கேடு, ஆசாரத்துக்கு ஆபத்து. மஹா பாபம் ! ‘ என்று பேசி வந்த காலம் மலை ஏறி, “ஆதித் திராவிடரை, ஏனய்யா அந்தக் கள்ளர் குகைக்கே போகச் செய்கிறீர்? ஆலயப் பிரவேசம் என்ற தண்டனையை ஏன் குற்றமற்ற அந்த மக்களுக்குத் தருகிறீர்கள்? ” என்று பேசப்படும் காலம் தோன்றிவிட்டது ! ஆலயம்! இங்கே ஆதித்திராவிடர் நுழையக் கூடாது என்ற பலகை முன்பு! இப்போது “இது ஆலயம்! ஆதித்திராவிடத் தோழர்களே, உள்ளே போகாதீர்கள்! ஆரியன் அறிவையும் பொருளையும் அபகரிக்க உள்ளே பதுங்கிக்கொண்டிருக்கிறான்” என்று பலகை தயாரிக்கின்றனர், நமது தோழர்கள் ! கடைசியில், ஆலயப் பிரவேச கேட்பது, உரிமைப் போரின் ஒரு பகுதியே தவிர, ஆரிய மார்க்கத்திலே அவர்களைத் தள்ளுவதற்கு அல்ல என்று விளக்கம் தரப்பட்ட பிறகே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது! அந்த அளவு சுயமரியாதை ஆர்வமும், தீவிர நோக்கமும் பொங்குகிறது ! இந்தக் கொந்தளப்பிலே, எப்படி ராவ்பகதூர்கள் தங்க முடியும் ? தீய்ந்து போவர் ! “கோயில்கள் எல்லாம் ஏழை விடுதிகளாகும் ! வாசகசாலைகளாகும், காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள அழகிய இடங்களாகும்” என்றார், சுயமரியாதை மாநாட்டுத் திறப்பாளர், தோழர் நீலமேகம். அந்த வாசகத்தைக் கேட்டு, மாநாட்டினர் கொட்டிய கரகோஷம், ஆரியக் கோட்டைகளை அதிரச் செய்யக்கூடியதாக இருந்தது! அத்துணை ஆர்வம்! அவ்வளவு எழுச்சி ! தலைவர்களின் வீர உரைகள் ஒவ்வொன்றும் தனித் தனியே எடுத்து விளக்கப்பட வேண்டியவை. எனினும், எல்லோருடைய உரையினும் ஒரு மூல தத்துவம் பொதிந்து இருந்தது. அதனைச் சுயமரியாதை மாநாட்டுத் தலைவர் டி. சண்முகம், திராவிட மாநாட்டுத் திறப்பாளர் தோழர் அர்ஜுனனும் விளக்கமாகக் கூறினர். அதாவது, திராவிட நாடு திராவிடருக்கே என்பதாகும்! தோழர் அர்ஜுனன் அவர்களுடைய அரிய உரையிலே. வடநாடு பொருளாதாரத் துறையிலே பெற்றுள்ள ஆபத்து நிறைந்த ஆதிக்கத்தை விளக்கி யிருந்தார். அந்த ஆதிக்கத்தை அறுபடச் செய்யப் பெரும் படை திரட்டி நடத்தக் கூடியவர் பெரியார் என்பதைத் தோழர் சண்முகம் அழகுறத் தமது பேருரையிலே எடுத்துக் காட்டினார். திருச்சி மாநாடுகள் விழிப்புற்ற எழுச்சியற்ற திராவிடத்தின் உருவைக் காட்டிற்று? பெரியாரின் செல்வாக்குச் சிறப்புத் தரும் சித்திரங்களாகவும், உறுதியுடன் உழைக்கும் தலைவரை, ஒருபோதும் வாலிப உலகு மறவாது, பின் பற்றத் தயங்காது என்பதை விளக்கும் காட்சிகளாகவும் இருந்தன. மறக்கொணாத காட்சிகள் ! மதியுடையோருக்கு, திராவிடத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை உணரச் செய்யக்கூடிய காட்சிகள்! திருச்சி, தன் கடமையை மிகமிகப் போற்றக்கூடிய விதத்திலே நிறைவேற்றி விட்டது. நம்மாலே முடியுமா” என்று கொஞ்சம் பயந்த குரலிலே பேசியே பழக்கப்பட்ட நண்பர் வேதாச்சலம் அவர்களின் விடாமுயற்சியின் பயனாக ஏற்பட்ட வெற்றி, அந்த மாநாடுகள்! அவருக்குப் பக்க பலமாக இருந்தனர், பொன்மலை, திருச்சி, தஞ்சை முதலிய பல பகுதிகளிலே உள்ள பெரியார் தொண்டர் படையினர். மாநாட்டு வெற்றிக்கான பங்கு செலுத்த ஒவ்வொரு வட்டாரமும் ஆர்வத்துடன் முன்வந்து. அற்புதமான வெற்றியை உண்டாக்கிற்று. திருச்சி மாநாடு கூடும்போது பெரியாருக்கு வயது 67. மா நாடு முடிந்த பிறகு அவருக்கு வயது 45. அவ்வளவு “வாலிப முறுக்கு ” ஏற்பட்டு விட்டது. இளைஞர்களின் எழுச்சிக் குரலைக் கேட்டதன் பயனாக !! மாநாட்டுக்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையிலே, இடையிடையே நேரிட்ட தொல்லைகளும், திடீர் ஆபத்துக்களும் பல. அவை யாவும், கரும்புக்குள்ள கணுப்போலாயின ! திருச்சித் தோழர்களை நாம் மனமாரப் பாராட்டுகிறோம்! வெற்றிகரமாக அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்திய பெருமையை அடைந்த திருச்சி, திராவிட நாடு திராவிடருக்கு ஆக்கப்படுவதற்கான முயற்சி முகாமாகி, பயிற்சிக் கூடமாகி, பாசறையாகி. திராவிடத்துக்கு வழி காட்டும் என்று நம்புகிறோம். மாநாடு வெற்றிகரமாக நடந்தேறப் பல்வகையானும் உதவி புரிந்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, வாழ்க திராவிடம் என்று இதனை முடிக்கிறோம். திருச்சி மாநாடு உண்மையிலேயே, திராவிடருக்கு போர்வாள் தந்திருக்கிறது! ஏந்திய வாளை அஞ்சாநெஞ்சுடன் வீசத் திராவிடத் தீரர் கூடினர். தலைவர் தந்த போர்வாளை முத்தமிட்டுக் கரத்திலே பிடித்துள்ளனர் ! முன்பெல்லாம்ஜஸ்டிஸ் மாநாடுகள். உத்தியோகத்துக்கு மனுப் போடும் பேனா முனைகளைத் தந்தது வாலிபர்களிடம் ! திருச்சியிலே வாலிபர் கரத்திலே தரப்பட்டது போர்வாள்!! திராவிடத்திலே படர்ந்துள்ள ஆரியக் கள்ளியை வெட்டி வீழ்த்த, வைதிக மென்ற பெயரால் வளைந்து நெளியும் வஞ்சனையைக் கூறு கூறாக்க, மக்களின் மனதிலே குவிந்து கிடக்கும் மடைமை எனும் நச்சுக் கொடியை அறுத் தெறிய, ஜாதி பேதமெனும் முட்புதரை அழிக்க,வீரரைத் தழுவி வீணராக்கும் பழைமை எனும் கொடுமையைக் கொல்ல, திராவிடத்தை மீட்கப் போர்வாளைத் திருச்சியில் தீரத் திராவிடர் கரத்திலே தந்தது.
இலட்சியம் வளர்ந்த வரலாறு.
இலட்சியம் நமது மூல முழக்கம்
திராவிடநாடு திராவிடருக்கே என்ற இலட்சியம், இப்போது நமது மூல முழக்கமாகி விட்டது. மற்றப் பல பிரச்சினைகள் யாவும், இலட்சியத்துக்குத் துணை தேடும் அளவுக்கே கவனிக்கப்படுகின்றன. ஒரே நோக்கமாக, இந்த இலட்சியத்தைக் கொண்டிருக்கிறோம். திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்களுக்கு, மத,சமுதாய, பொருளாதாரப் பிரச்சினைகளிலே பலவகையான கருத்துகளும், திட்டங்களும் உண்டு என்ற போதிலும். இவையாவும், இசைக்கு உள்ள ‘சுருதி ‘ போல, திராவிட நாடு திராவிடருக்கே என்ற இலட்சியத்துக்குத் தக்க விதமாகவே அமைத்துக் கொள்ளப்படுகின்றன.
உறுதிகொள்ள ஓர் நாள்
இந்த இலட்சியத்தை நாம் கைவிடப் போவதில்லை என்ற நமது உறுதியைத் தெரிவிக்கவும், இந்த இலட்சியம் நிறைவேற முன்னம், இடையிலே வீசப்படும் சில்லரைகளைக் கண்டு திருப்திப்பட முடியாது என்பதைத் திட்டமாகத் தெரிவிக்கவும், திராவிட நாடு பிரிவினை நாள் கொண்டாட்டம் ஏற்பாடாகிறது. இந்தச் சமயத்தில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற நமது இலட்சியம் வளர்ந்த விதத்தைக் கவனப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.
உரிமை முழக்கத்தில் உயிர் துறந்த வீரன்
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு, திராவிடர் என்ற உரிமை முழக்கம் கிளம்பிற்று. ஆனால், அந்த முழக்கம் மாளிகைவாசிகளின் தொடர்பினால் கெட்டுவிட்டது. இந்த நாடு திராவிட நாடு-இங்குள்ள நாம் திராவிடர்-என்ற முழக்கத்தை மக்கள் மன்றத்திலே, தமது கடைசி மூச்சு இருக்கும் வரை செய்து வந்தவர் டாக்டர் சி. நடேச முதலியார். அவர் துவக்கிய அந்த அரிய இயக்கத்தினால் உண்டான வேகத்தை, உண்மையான விடுதலைக்குப் பயன் படுத்திக்கொள்ளாமல். அரண்மனைகளிலே வீற்றுக்கொண்டு அரசியலை நடத்தி வந்த சீமான்கள், பட்டம் பதவிகளுக்கு இந்த வேகத்தைப் பயன்படுத்திக்கொண்டதுடன், தங்களுடைய முழுத் திறமையும், காங்கிரசைக் குறை கூறவும், அதே நேரத்தில் பிரிட்டிஷாருக்குத் துதி பாடவுமே உபயோகப்பட வேண்டுமென்று நோக்கம் கொண்டவர்களாக இருந்தனர். எனவே, திராவிடர் என்ற உரிமைச் சொல், திராவிட அரசு அமைக்கும் பரணியாகாமல், சர்க்கார் காரியாலயக் கதவைத் தட்டும் சுயநலச் சத்தமாகி விட்டது. டாக்டர் நடேச முதலியார், உள்ளம் உடைந்தே மாண்டார்; இருந்த வரையில் அவர் திராவிடன் என்று பேசத் தவறியதில்லை.
ஆரியத்தை அகற்ற ஆர்வம் காட்டாத தலைவர்கள்
அந்த நாட்களிலே, ஆங்கிலத்திலே, S. I. L. F. என்றும், ஜஸ்டிஸ் என்றும் மாளிகைகளில் வழங்கி வந்ததேயொழிய, மக்களின் முன்பு, திராவிடன் என்ற பெயரே வழங்கப்பட்டது. தமிழ்ப் பத்திரிகையின் பெயரே ‘ திராவிடன்’ திராவிடக் கலை, திராவிட மதம், திராவிட வைத்யம், திராவிட இசைவாணர்கள் — என்றெல்லாம், அந்த நாளில், பலர், பல்வேறு துறைகளிலே, திராவிட மறுமலர்ச்சிக்காகப் பணிபுரிய முனைந்தனர். ஆனால் அந்த அடிப்படை வேலையில் ஆர்வம் காட்டத் தலைவர்கள் தவறி விட்டனர். அவர்கள் தங்கள் ஆற்றலை எல்லாம் அரசியல் அதிகாரம் எனும் மாய மானை பிடிக்கவே செலவிட்டனர். அதனால், அவர்கள், ஒவ்வொரு நகரிலும், பிரமுகர்களைச் சந்தித்தபோது, தேர்தலைப் பற்றிப் பேசி வந்தனரே தவிர, உத்தியோகத் துறையிலே, ஐயர்களுக்கு ஆதிக்கம் இருக்கிறது, அதை ஒழிக்க வேண்டும் என்பதை வலியிறுத்தி வந்தனரே யொழிய சமுதாயத்திலே படிந்து கிடந்த ஆரியத்தை அகற்ற, திராவிட உணர்ச்சியை ஊட்ட, பணிபுரியவில்லை.
“அந்த நாள்” தலைவர்கள்
மக்களுக்குப் புதிராயினர்
சமுதாயத் துறையிலே பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்துவது ஆபத்தல்ல; அரசியலில் ஆதிக்கம் பெற்றுள்ள பார்பனர்களாலேயே நமக்கு ஆபத்து- என்று வெளிப்படையாகவே அந்த நாள் தலைவர் பேசிவந்தனர். தலைவர்களின் பேச்சு அவ்விதமிருந்தது, டாக்டர் நடேச முதலியார் போன்ற ஒருவரிருவர் தவிர; அதேபோது மக்களின் பழகி, பிரசாரம் புரிந்து வந்த ஜே. என். ராமநாதன், கண்ணப்பர், டி. வி. சுப்பிரமணியன் போன்றவர்கள், திராவிடன் என்ற உணர்ச்சியை ஊட்டியும்
அரசியலிலே மட்டுமல்லாமல், சமுதாயத் துறையிலே பார்ப்பனர்கள் பெற்றிருந்த ஆதிக்கத்தை விளக்கிக் கண்டித்தும் வந்தனர். மக்களை அவர்கள். திராவிடர்களாக வாழும்படி வலியுறுத்தி வந்தனர். தலைவர்களோ, மக்களை, பார்ப்பனருக்கு எதிராக ‘ஓட்’ கொடுக்கும் அளவுக்குத்தான் உபயோகித்தனர். எனவே, மக்களுக்கு அந்தத் தலைவர்களின் போக்கு முதலில் புரியவில்லை; புரிந்த பிறகு பிடிக்கவில்லை; பிடிக்காததால் விலகினர்.
மாயமான் வேட்டையில் ‘மாடமாளிகைக்காரர்கள்’
திராவிட இன உணர்ச்சிக்காக எடுத்துக் கொண்ட முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது, மக்களுக்கு ஆர்வம் ஏற்படாமல் போனதால் அல்ல; நமது தலைவர்கள் அரசியலை மட்டுமே கவனித்து சமுதாயத்தில் தலையிடுவதைத் தவறு என்று எண்ணியதால். ஒரு இருபதாண்டுகள் மாயமான் வேட்டையில்-மந்திரிப் பதவி அமைப்பதில், அதாவது சுயநல வேட்டைக்கு, அதன் விளைவாக, சதியாலோசளைகளுக்குச் செலவிடப்பட்டன. அந்தக் காலத்திலே, மாளிகை சதியாலோசனை மண்டபங்களாயின! ஆள் தூக்கிகள் அரசியல் சூத்திரதாரிகளாயினர்! பதவி தேடுவோர், அரங்கமேறினர்! பரங்கிக்கும் கொண்டாட்டம், மக்கள் இந்தக் காரியம் தங்களுக்கு அல்ல என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டு கட்சியைக் கண்டிக்கவே தொடங்கினர். மாளிகைகளிலே சதிச்செயல்கள், கட்டுக்கடங்கா நிலைபெற்று ஒருதலைவர் இன்னொரு தலைவரை வீழ்த்துவதையே தொழிலாகக் கொண்டு, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, கும்பலாகச் சாய்ந்தனர். அந்த அதிர்ச்சியிலே, ஆரம்பத்திலே ஆர்வத்துடன் கிளம்பிய திராவிட இன உணர்ச்சி மங்கிற்று; மடியவில்லை. அந்த உணர்ச்சி, என்றுமே மடிந்ததில்லை— அடிக்கடி மங்கி இருக்கிறது — ஏனெனில், அந்த உணர்ச்சி, உள்ளத்தின் பேச்சு — அரசியல் வெட்டுக்கிளிகள் கூச்சல் அல்ல.
ஆரியத்தின் அணைப்பில் அவதியுற்ற திராவிடம்
இங்கு நெடுங்காலமாகவே, ஆரியத்தின் அணைப்பிலிருந்து விடுபட, திராவிடம் பலமுறை முயன்றிருக்கிறது. சில நேரத்தில் செயலற்று இருந்தது என்றபோதிலும், அடியோடு சரண் புகுந்ததில்லை. அடிக்கடி தனித்தமிழ், வேளாள நாகரிகம், உண்மைச் சைவம், பண்டை நாகரிகம், என்று பல்வேறு தலைப்புகளிலே கிளம்பிய இயக்கங்கள் யாவும், மூல முயற்சியின் சிறு சிறு பதிப்புகளேயாகும். இவை ஒவ்வொன்றும், தேவை, பலனுமுண்டு இவைகளால் என்று போதிலும், இவை, மக்களில் ஒரு சிலரால் மட்டுமே உணரக்கூடியதாக இருந்த காரணத்தால், மூல முயற்சியை இந்த இயக்கங்கள் பலப்படுத்த முடியவில்லை. ஒவ்வொன்றும், தனித்தனி இயக்கங்களாக மாறி விட்டன. முரண்பாடுகளாகவும் தெரியலாயின. விரோத உணர்ச்சியும்கூட வளர்ந்தது. தமிழகத்திலே, பல முகாம்கள் தோன்றலாயின! மூல முயற்சியை மறந்து விட்டனர்.
மடிந்த உணர்ச்சி கண்டு மாற்றார் மனமகிழ்ந்தனர்
கண்ணைக் கட்டிவிடப்பட்ட வீரன், சாலையிலே நடந்து செல்கையில், மரத்துக்கு மரம் மோதிக்கொண்டு சங்கடப்படுவதைப்போல, நாடு, இருந்தது. மீண்டும் ஒருமுறை திராவிட இன உணர்ச்சி தோன்றுமா என்பதே சந்தேகமாகிவிட்டது. அந்த உணர்ச்சி அடியோடு மடிந்து விட்டது என்று மாற்றார்கள் மகிழவும் செய்தனர்.ஆனால் இலட்சியம் மடியவில்லை—சமயத்துக்காகக் காத்து கொண்டிருந்தது. பலப்பல சமயங்கள் வந்தன— ஆனால் சரியான சமயங்களாகவில்லை.
தாழ்ந்த தமிழகம் தன்னார்வம் கொண்டது
இந்தி எதிர்ப்புப் போராட்டம் தக்க சமயமாயிற்று. நாடு எங்கும், காங்கிரஸ்மீது கோபமட்டுமல்ல அதன் அளவு குறைவுதான்— தமிழ்ப் பற்று, பரவிய காலம். எங்கும் சங்க நூற்களைப் வடிக்க ஆரம்பித்த காலம். தமிழனுக்கு தனியாக ஓர் மொழி உண்டு, தனியான பண்பு உண்டு என்ற பெருமையைப் பேசலாயினர்; ஐம்பெருங் காப்பியத்தைப் பற்றிய பேச்சு பொது மேடைக்கு வந்து விட்டது! ஆர்வம், தமிழ்மீது அதிகமானதும், இடையே, புராணீகர்களும் புகுந்து கொண்டனர். ஆனால் அவர்களின் ஆதிக்கம் வளரமுடியாதபடி, தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் தமிழ்மொழி தாழ்வுற்ற காரணம் என்ன, தமிழ்ப்பண்டி
மறைந்த காரணம், தமிழகச்சிறப்பு தேய்ந்த காரணம் ஆகியவற்றை ஆராயத் தொடங்கினர். அந்த ஆராய்ச்சி, அவர்களை விட்ட இடத்தில் கொண்டுவந்து சேர்த்தது அதாவது டாக்டர் நடேச முதலியாரின் கல்லறைக்கு அருகே கொண்டு வந்து நிறுத்திற்று. பழைய நினைவுகள், பழைய பரணிகள் மீண்டும் உலவலாயின !
வாடிய தமிழ்ப்பயிர் செழிக்க “வாய்க்கால் வெட்டிய ” வீரர்கள்
தமிழ்மொழியைக் காப்பாற்ற ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறை சென்ற காட்சி, தமிழரின் உள்ளத்திலே, ஓர் புது உணர்ச்சியை உண்டாக்கி விட்டது. தாலமுத்து நடராஜன் கல்லறைமீது தமிழர் கண்ணீர் சிந்தினர். இரு வாலிபர்களுக்குச் சாவு, பல வாலிபர்களுக்குச் சிறை, எல்லாம் தமிழ் மொழியின் பாதுகாப்பின் பொருட்டு என்பதை அந்தக் கல்லறையின் பக்கம் நின்று சிந்தித்த போதுதான், இந்நிலை மாறவேண்டும் என்ற உறுதி தமிழருக்குப் பிறந்தது. அப்போது தான் “தமிழ்மொழிக்குப் பிறமொழியால் ஆபத்து என்று அலறுகிறாயே தோழனே ! ஏன் வந்தது அந்த ஆபத்து, யாரால் வந்தது என்பதை எண்ணிப்பார். மொழிக்கு மட்டும் தானா, கலைக்கு, நெறிக்கு, பண்புக்கு, இனத்துக்கு, நாட்டுக்கு, உன் வாழ்வுக்கு, ஆபத்து வந்திருக்கிறதே அதைத் தெரிந்து கொண்டாயா ? எவரால் வந்தது இந்த ஆபத்து என்பதை அறிவாயா? ஏன் வந்தது என்பதை யோசிப்பாயா? நான் கூறுகிறேன் கேள். தமிழ்நாடு தமிழனிடம் இல்லை! ஆகவே தான் தமிழனுடைய பொருள் தமிழனிடம் இல்லை. பிற நாட்டான் எண்ணுகிற எண்ணமெல்லாம் இங்கு இப்போது சட்டமாகி விடுகிறது. பிறநாட்டானின் பொருளுக்கு இது மார்க்கட்டாகிறது. இந்நிலை மாறவேண்டும் மொழிப்போராட்டம் மட்டும் போதாது — இது முடிவல்ல; தொடக்கம்— இந்தியை விரட்டினால் மட்டும் போதாது; தமிழ்நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தும் தீய சக்திகள் யாவும் தொலைய வேண்டும் – அதுவே நமது முழக்கமாக வேண்டும்— இனி அதுவே நமது போர்—நமது இலட்சியம்— தமிழ் நாடு தமிழருக்கே!” என்று பெரியார் இராமசாமி முழக்கமிட்டார். ஆம்! ஆம்! அறிந்தோம் ! தெளிந்தோம் ! என்று அன்று கடற்கரையிலே கூடிய இலட்சத்தை எட்டிப் பார்த்த பெருந்தொகையினரான மக்கள் முழக்கமிட்டனர் – உறுதி கொண்டனர். மக்களின் மனக் குமுறலைக் காட்டுவது போல கடலலை ஒலித்தது. மேலே நிலவு. தமிழரின் விழிப்புற்ற நிலைமை விளக்குவது போல ! வானத்திலே இங்கு மங்கும் மேகங்கள், தமிழ்ச் சமுதாயத்திலே உள்ள கரைகள் போல ! தமிழன் மீண்டும் தன் இலட்சியத்தைப் பெற்றுவிட்டான். தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டான். மங்கியிருந்த இலட்சியம், மீண்டும் உலவலாயிற்று ! இம்முறை நேரடியாக, மன்றத்துக்கு இலட்சியம் போய்ச் சேர்ந்தது ! ஆகவே அந்த இலட்சியத்துக்கு, புதியதோர் சக்தி ஏற்பட்டு விட்டது. மக்களுக்கு, தாங்கள் ஒரு இலட்சியத்துக்காகப் பணியாற்றப் போகிறோம் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மாளிகைக்கு அல்ல, பதவிக்கு அல்ல; நம் நாட்டின் தனி உரிமைக்குப் போராடப் போகிறோம் என்று எண்ணலாயினர்! அந்த எண்ணம், புரட்சிக் கவிஞரின் பொன்மொழிகளினால், மேலும் உரம் பெற்றது.
ஆடுவமே பள்ளுப் பாடுவமே
தமிழ்ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!
என்றார் கவிஞர் ! ஆயிரமாயிரம் இளைஞர்களின் விழிகளிலே களிப்பு கூத்தாடலாயிற்று. தேர்தல், சட்டசபை, மந்திரி சபை முதலியன, அவர்களின் பார்வைக்கு மிக மிகச் சாமான்யப் பொருள்களாயின. அந்தப் பொருள்களுக்காக ஆவல் கொண்டிருப்பவர்கள், இளைஞர்களின் கண்களிலே, சேலத்தில் கேலிச் சித்திரங்களாகத் தெரியலாயினர். தடைகளை, சங்கடங்களை மீறி, இளைஞர்கள், அந்த இலட்சியத்தை நோக்கி நடக்கலாயினர், புதிய பாதை கிடைத்து விட்டது என்ற பூரிப்புடன் தமிழன், தன் மொழி, கலை, இவைகளைக் காப்பாற்ற நாட்டை மீட்டாகவேண்டும் என்பதைக் கண்டறிந்து, கூறிய போர் முழக்கம், தமிழ்நாடு தமிழருக்கே என்பது !
ஏளனம் பேசியோர் ” எரிமலை” கண்டனர்
எலிவளை எலிகளுக்கே என்றனர், ஏளனம் பேசியே எதையும் ஒழித்துவிடமுடியும் என்று எண்ணிய அறிவாளிகள்! மக்களோ தமிழ் நாடு தமிழருக்கே என்பதை உச்சரிக்கலாயினர். உண்மைதானே, நியாயம்தானே, அவசியம்தானே கூறிக்கொண்டனர்; கூறிக்கொண்டே மேலும் யோசிக்கலாயினர்— இன்று எப்படி இருக்கிறது தமிழ் நாடு என்று. சர்வம் ஆரிய நியமாக இருக்கக்கண்டனர்— எப்போது இருந்து இந்நிலை என்று என்று ஆராயத் தொடங்கினர் – தமிழன் ஆரியத்துக்கு இடங் கொடுத்த நாள் தொட்டு இந்நிலை என்பதறிந்தனர் — அதற்கு முன்பு எந்திலை என்று ஆராய்ந்தனர்— முப்புறம் கடலும் வடபுறம் விந்தியமும் ஆரணளிக்க, அழகுத் திராவிடம், ஆற்றலுடன் விளங்கியிருந்ததைக் கண்டறிந்தனர். திராவிடத்தின் ஒரு பகுதி ஆந்திரராகி, பிறிதோர் பகுதி கேரளராகி விட்டதைக் கண்டனர்— பிரிந்தாலும், இவைகளுக்கிடையே மொழிவழியாக ஒருமைப்பாடு இருத்தலைக் கண்டனர்— பண்டைத் திராவிடத்தை நினைவிற் கொண்டனர்— ஆரியத்துக்கு எதிர்ச்சொல்லாக— ஆரியர் என்ற கலாசாரத்துக்கு முற்றிலும் மாறான கலாசாரத்தை உணர்த்தும் குறியாக — திராவிடம் என்ற சொல் இருக்கக் கண்டனர். சரிதமும், பூகோளமும், மக்கள் உளப்பண்பு நூலும் இந்த உண்மைக்கு ஆக்கம் அளித்திடக் கண்டனர்! ஓஹோஹோ கண்டோம் உண்மையை என்றனர். திராவிடநாடு திராவிடருக்கே என்றனர். இலட்சியம் முழு உருவம் பெற்றது! இன்று அந்த இலட்சியத்தை ஆதரிக்க திராவிடநாடு திராவிடருக்கே என்று கூற மட்டும் கூச்சப்பட்டுக்கொண்டு, மாகாண சுதந்திரம், மாகாண சுயாட்சி என்று சில பலர் கூறுவர். சிலர், முழு உரிமை நமக்கு, ஆனால் அகில இந்தியத் தொடர்பு வேண்டுமன்றோ என்பர், அவர்களின் வார்த்தையிலே உள்ள வளைவு நெளிவுகள் அல்ல, முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை— அவர்கள் இலட்சியத்தை நோக்கி நடந்து வருகிறார்கள் என்பதே முக்கியம்.
பித்தம் தெளிந்தும் சிந்திக்க மறுத்தார்!
தமிழ்நாட்டுக் காங்கிரஸின் தலைவர், நாம்திராவிடப் பிரிவினை நாள் கொண்டாடும் சமயமாகப் பார்த்து “திராவிடநாடு தனிநாடு ஆகவேண்டும் என்ற திட்டம், நாட்டை மேலும் பிளவுபடுத்துவதாகவே முடியும்” என்று கூறினார். அதாவது, நண்பர் காமராஜர் நமது திட்டத்தின் விளைவு என்ன என்பதைக் கூறுகிறார். ஏன் அந்தத் திட்டம் தேவைப்படுகிறது என்பது பற்றிச் சிந்திக்க மறுக்கிறார்— ஒருவேளை சிந்தித்து உண்மையைக் கண்டபிறகு, மறைக்கிறாரோ என்னவோ! நமது விஷயத்தில் வடநாட்டுத் தலைவர்கள் குறுக்கிட்டபோது, காமராஜருக்கு மேலிடத்தின்மீது எவ்வளவு கோபம் வந்தது— நாம், அதே மேலிடம், உள்நாட்டு விவகாரத்தில், கலையில், நாகரிகத்தில், முக்கியமாகப் பொருளாதாரத் துறையிலே நுழைந்து, ஆதிக்கம் பெறுவதைக்கண்டு, கோபிப்பது குற்றமாகுமா என்பதை அவர் யோசிக்க வேண்டும். அவருக்குள்ள பல தொல்லைகளுக்கிடையே அவகாசம் கிடைப்பது அரிது என்றாலும், கொஞ்சம் அவகாசம் ஏற்படுத்திக்கொண்டு, நமது தலைவரிடம் பேசினால், திராவிடநாடு ஏன் தனி நாடாக வேண்டுமென்று கூறுகிறோம் என்ற காரணங்களைத் தெரிந்து கொள்ளலாம் — பிறகு அவர் தமது கருத்தை வெளியிட்டால் பொருத்த மிருக்கும். ஒரு பிரச்சினையை அதன் விளைவை முன் கூட்டித் தாமாகக் கற்பித்துக்கொண்டு கவனிப்பது, சரியான முறையல்ல. இந்தப் பிரச்சினையைக் கவனிக்கும்படி, காரணங்களை ஆராயும்படி காமராஜர்களை அழைக்கும் நாள்தான் ஜூலை I-ந் தேதி.
தனி அரசுரிமையிலே “தன்னலம்”
தோற்றமேன்?
திராவிடஸ்தானால், நாடு துண்டாகும் என்று சொன்னவர், அதேபோது, நமது இலட்சியத்தின் அருகே வந்து போகிறார், தெரிந்தோ தெரியாமலோ ! அவர் கூறியிருக்கிறார், ‘ஆந்திரம், கேரளம், தமிழகம் ஆகியவைகள் தனிச் சுதந்திர அமைப்புகளாகி இந்திய சமஷ்டியோடுகூடி வாழ வேண்டும்’ என்று INDEPEN-DENT UNITS தனி உரிமையுள்ள அங்கங்கள் என்கிறார். ஏன், அந்த ஆசை பிறந்தது? தனி உரிமை கோரக்காரணம் என்ன? இப்போதுள்ள நிலைக்கும், தனி உரிமை பெற்றால் ஏற்படும் நிலைமைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? இதனை அவர் விளக்கவில்லை ! அதுமட்டுமல்ல, அவருடைய ‘ஆசை’க்கு நேர்மாறாக இப்போது அ. நி. சபையில், இந்த ‘அங்கங்கள்’ பங்கப்படுத்தப்படுகின்றன என்பதையும் அவர் மறைக்கிறார்— தடுக்க முடியாத காரணத்தால் ! தனி அரசுரிமை கோருகிறார் நாம் அதிலே மாசு மருவற்ற நிலை கேட்கிறோம். அவர், ‘தனி’ அரசுரிமை பெற்றாலும், இந்திய சமஷ்டியிலே சேரவேண்டும் என்கிறார். இந்திய சமஷ்டி மட்டுமல்ல, நேரு கூறும் ஆசிய சமஸ்டியானாலும் சரி, வெண்டல் வில்க்கி கூறிய உலக சமஸ்டியானாலும் சரி, சேருவோம்; தவறில்லை; தடையில்லை. ஆனால், தனி அரசுரிமை வேண்டுமே, எங்கே அதற்குத் திட்டம்— திட்டம் தீட்டிவிடுகிறார்களே அ. நி. சபையில் ! அது காமராஜரின் ஆவலைப் பூர்த்திசெய்யக் கூடியது அல்லவே ! அதற்கு என்ன சொல்லுகிறார் அன்பர் ?
எதிர்ப்பாளர்கூட “இலட்சியம்” பேசக் கண்டோம்
திராவிடஸ்தான் கூடாது என்று பேசுமுன்பு, ஏன் கேட்கிறார்கள் என்பதை, பொறுப்பான இடங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் கேட்டறியவேண்டும். அதற்கு அழைப்புச் சீட்டுதான், விழா நாள். நாம் இந்த இலட்சியத்தை எதிர்ப்பதாகக் கூறும் நண்பர்களின் வாய்மொழிகளிலே கூட நமது இலட்சியத்தின் சாயல் இருக்கக்கண்டு மகிழ்கிறோம். இந்நிலைக்குக் காரணம் என்ன? இலட்சியம் வளர்ந்துவிட்டது எதிர்பாராத இடங்களி லெல்லாம் அதன் மணம் இருக்கக் காண்கிறோம். இனிச் சிலகாலம் நமது இலட்சியத்தை விளக்கி — குறிப்பாக அதற்கான பொருளாதாரக் காரணங்களை விளக்கிக் கூறினோமானால், திராவிடநாடு திராவிடருக்கே என்பது கட்சி முழக்கம் என்ற நிலை மாறி, நாட்டு முழக்கமாகும். பல தடைகளை மீறி வளர்ந்துள்ள இலட்சியம் இந்த முழு உருவுடன் விளங்கத்தான் போகிறது. ஏனெனில் இந்த இலட்சியம் விழிப்புற்ற மக்களின் உரிமை முரசொலி— கட்சிப் பேச்சல்ல.
சகித்துக் கொண்டோம்! பின்னர் “சல்லடம்” கட்டுவோம்.
இராமகிருஷ்ணர் படங்கள், கல்கத்தாவில் அச்சாகி நமக்குக் கிடைத்து, டால்மியா சிமிட்டி பூசப்பட்ட சுவரிலே டாட்டா கம்பெனி அனுப்பும் ஆணியை அடித்து மாட்டும் போதெல்லாம், இந்த இலட்சியம், மெல்ல காதருகே நின்று கேட்கும் “இதுதான் உன் நிலையா? உன் நாட்டிலே இரும்பு, இல்லையா?” என்று கேட்டுவிட்டுச் சிரிக்கும் ! ஷோலாப்பூர், பம்பாயிலிருந்து வேட்டியும், சேலையும், லாகூருக்கும் விஷாவாருக்கும் போக முடியாததால், அதிகமாக இங்கே வருகிறபோது, இலட்சியம் கவனத்துக்கு வரும்! வங்காள ரசாயன சாலையிலிருந்து வரும் மருந்து வகை இலட்சியத்தைக் கவனப்படுத்தும்! வெளி உலகுடன் நடத்தும் வியாபாரமும், கொள்ளும் தொடர்பும், விந்தியத்துக்கு மேலே உள்ளவர்களோடு முடிந்து விடுகிற போது, இலட்சியம் கவனத்துக்கு வரும். முதலில் கொஞ்சம்
தயக்கம், பிறகு தைரியம் உண்டாகும். நாம் எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் “இந்த வடநாட்டு ஆதிக்கத்தை நம்மால் சகிக்க முடியவில்லை. திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும் என்ற இலட்சியம் பேசப்படும். அந்த நாளைக் காணவே இந்த நாட்களில் ஏற்படும் இழிவுகளை, பழிகளை, எதிர்ப்புகளை, ஏளனங்களைச் சகித்துக்கொள்கிறோம்—சகித்துக்கொள்வோம்—நாம் அல்ல இதிலே முக்கியம், நாடு !
பூஜா மனோபாவம் கூடாது.
நாட்டை மீட்கும் நற்பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். இப்போது இங்கே இரண்டே கட்சிகள்தான் உண்டு: ஒன்று விடுதலைப் போர் புரியும் கட்சி, மற்றொன்று ஏகாதிபத்தியம். எனவே வேறு கட்சிகள் இருக்கக்கூடாது. நாடு விடுதலை பெற்றான பிறகு, நாட்டை ஆளும் நேரத்திலே கட்சிகள் இருக்கலாம்; போராட்டத்தின்போது கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். இன்றோ நாட்டுக்கு விடுதலை கிடைத்து விட்டது, ஆனால், காங்கிரசாருக்கு, வேறு கட்சியே இருக்கக்கூடாது ! எதிர்ப்பின்றி, ஏகபோகமாகத் தாங்களே நாடாள வேண்டும், நிர்வாகம் எவ்வளவு கேடுள்ளதாயினும் யாரும் எதிர்த்திடக் கூடாது என்ற எண்ணம் பலமாக ஏற்பட்டிருக்கிறது.
வெற்றிக் களிப்பே, இந்த விபரீத எண்ணத்துக்கு முக்கிய காரணம்; ஆனால் மூலகாரணம் வேறு இருக்கிறது.
என்ன தவறு செய்தாலும், சகித்துக்கொண்டு தவறுகளை வெளியே எடுத்துச் சொல்லவும் யாருமே இல்லை என்றால் மட்டுமே, தங்களால் ஆட்சியை நடத்த முடியும்; குறை கண்டுபிடிக்கப் பலருக்கோ சிலருக்கோ வாய்ப்பிருந்தால், தமது ‘பிடி’ தளர்ந்து விடும் என்ற அச்சம் அந்த மூலகாரணம்.
இது. குடி அரசுக் கோட்பாட்டுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது.
அறிஞர், டாக்டர் கிருஷ்ணலால் சீதரணி, இந்த போக்குக் கூடாது என்று தக்க காரணத்தோடு விளக்கியுள்ளார்.
புதிய நிலை நாட்டுக்குப் பிறந்து விட்டது; இப்போது பழைய ‘பூஜா மனோபாவம்’ நீடிக்குமானால் ஜனநாயகம் வளராது என்கிறார். அவருடைய கருத்துரை கீழே வெளியிடப் பட்டிருக்கிறது.
புதிய கட்சிகள் வேண்டும்
“சுதந்திரம் அடைந்திருக்கும் இந்த நேரத்தில் நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் தேவைப்படுகின்றன. எங்கு ஒரே கட்சி ஆதிக்கம் செலுத்துகிறதோ அங்கு ஜன நாயகத்திற்கு உறைவிடம் சவக்குழி தான். இது ஒரு மகத்தான சோதனையாயிருக்கும். ஏனெனில், நாம் நடத்தி வந்துள்ள ஒரு நீண்ட கடுமையான போராட்டத்தின் போக்கில் நாம் காங்கிரசைத் தவிர மற்றச் சகல கட்சிகளிடத்தும் அவநம்பிக்கை கொள்ளக் கற்று வந்திருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் ஒன்றினிடத்தில் மட்டும் நாம் கொண்ட பக்திக்குக் காரணம், காங்கிரஸ் இன்று வரை ஒரு கட்சியாக இராமல் ஒரு இயக்கமாக இருந்து வந்ததுதான் என்பதை நாம் உணர வேண்டும். அது ஒரு பொதுஜன முன்னணியாக விளங்கிற்று; அதன் ஆதரவில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றுபட்டு அந்நிய அதிகாரத்திற்கெதிராக ஒரு பொது இலட்சியத்தை உருவாக்கின. அந்த இயக்கம், இந்தியாவை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் தனது பணியை இப்போது நிறைவேற்றி வைத்து விட்டது.
சுதந்திரமெய்திருக்கும் இத்தருணத்தில் காங்கிரஸ் ஒரு கட்சியாக மாறிவிடுகிறது. இயக்கம் என்ற அதன் உருவம் மறைந்து விடுகிறது. அந்த நிலைமையானது பல்வேறு அரசியல் பொருளாதாரத் திட்டங்களையுடைய மற்றக் கட்சிகள் ஸ்தாபிக்கப் படவேண்டியதை அவசியமாக்குகிறது.
இந்தப் புதிய கட்சிகளில் சில, காங்கிரசிற்கு உள்ளிருந்தே எழும் அந்தக் கட்சிகள், காங்கிரசிற்கு ஒருபோதும் தங்களின் தளராத விசுவாசத்தை அளித்திராத நபர்களையும் சேர்த்துக் கொள்ளும் காங்கிரஸ் வலதுசாரியாகவும், இடதுசாரியாகவும் பிரிந்துவிடுமென்று தோன்றுகிறது. எனினும் அதுவும் கொஞ்சகாலம் வரை ஒரு இடைக் கட்சியாக ஆதிக்கம் வகித்துவரும்.
பத்திரிகைச் சுதந்திரம்
சுதந்திரமடைந்திருக்கும் இந்த நேரத்தில் நமக்கும் சுதந்திரம் பெற்ற பத்திரிகைகள் தேவை. இப்போது ஒரு தர்மசங்கடமான பிரச்சினையா யிருக்கிறது. அந்நிய அடக்குமுறை ஒழிக்கப்பட அந்த நிமிடமே நமது பத்திரிகைகள் தாமாகச் சுதந்திரமடைந்து விடுமென்று சில ஜனங்கள் நினைப்பார்கள், ஆனால் அன்னிய ஆட்சியில் அவை சுதந்தரமாக நடந்து கொள்ளலாம். நமது சொந்த ஆட்சியில் அவ்வாறு நடந்து கொள்வது தான் கஷ்டம். ஏகாதிபத்திய வாதிகளுக் கெதிரான தங்களுடைய போராட்டத்தில் பல்வேறு கொள்கைகளோடு இறங்கிய நமது வீரர்களைப் போற்றி, ஆதரவு நல்கி, நமது பத்திரிகைகள் தேசத்திற்கு அவை ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்தன. அது ஒரு பழக்கமாக மாறியது. பழக்கங்கள் மாறுவது துர்லபம். நமது பத்திரிகைகள் தாமாகவே நமது வீரர்களின் விளம்பர ஸ்தாபனங்களாக இருந்து வரத் தொடங்கினால், அவை தத்தம் ஜனநாயகக் கடமைகளைச் செய்யத் தவறிவிடும், யுத்த காலத்தில் குற்றங் குறைகள் கூறுவதைச் சகிப்பது கஷ்டம்தான். ஆனால் சமாதான காலத்தில் சீர்திருத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு குற்றங் குறைகள் எடுத்துக் கூறவேண்டியது ஒரு கடமையாகி விடுகிறது.
தன் குறும்புத்தனத்தை அதாவது எதேச்சாதிகாரத்தைத் திருத்தக்கூடிய வல்லமை கிடைத்தது பத்திரிகை ஒன்றுக்குத் தான். ஆனால் சுதந்திரமா யிருந்தால் தான் அந்த வல்லமை அதற்குண்டு. நமது பத்திரிகாசிரியர்கள் அந்நிய ஆட்சி வர்க்கத்தினருக் கெதிராக எவ்வளவு தைரியத்துடன் நடந்து கொண்டார்களோ, அவ்வளவு தைரியத்துடன் இப்போது நமது சொந்தத் தலைவர்களிடமும் நடந்து கொள்ளவேண்டும். இது நமது தலைவர்களில் சிலருக்கு வேப்பங்காயாக இருக்கலாம்.
ஏனெனில் இதுவரை அவர்களுடைய பேச்சிற்கு மறுபேச்சு இல்லாமலிருந்து வந்தது. ஆனால் தங்கள் தலைவர்களின் நேரான நடத்தையை எதிர்பார்ப்பது ஜனநாயக மக்களின் உரிமையாகும். “சர்வமும் நாம்தான்” என்ற மமதை கொண்ட எந்தவொரு மனிதனும் ஜனநாயக ஆட்சிக்குத் தலைமை தாங்கத் தகுதியுடையவனாக முடியாது.
வீரர் வணக்கம் பற்றிய எனது கருத்திற்கு இது தோற்றுவாயாகிறது. ஒரு போராட்டத்தின் போது அது ஆயுதப் போராட்டமாயினும் சரி, அகிம்சைப் போராட்டபாயினும் சரி, நமக்கு ராணுவ மனோபாவம் அவசியமாகிறது. ஆகவே. இங்கு நமது வீரவணக்கம் தீவிரப்பட்டு, மேலே போகப்போக, பல இடங்களில் சிதறிக்கிடந்த நமது விசுவாசம் ஒரு முகப்பட்டு எல்லோருக்கும் மேம்பட்டு விளங்கும் அந்த ஒரு மனிதரிடமே செல்கின்றது. பார்க்குமிடமெல்லாம் அவரது முகமே நம் முன் தோன்றுகிறது. சகல குண நலன்களையம் நாம் அவருக்கு உரிமையாக்கி விடுகிறோம். வேறு யாரும் நம்மைத் திருப்தி படுத்த முடியாது.
ஆயினும், சாதாரண காலத்தில் ஒரு ஜனநாயக அரசை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது நமது வீர வணக்கமானது ஒரு முகமாகத் தீவிரப் படுவதற்குப் பதிலாகப் பல திசையில் பரந்து செல்ல வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் வீரர்களாகிவிடும் ஒரு காலம் வரும் வரை நாம் அனேக வீரர்களைப் பெறவேண்டும், சாதாரண மனிதனின் பெருமை தான் ஜனநாயகம் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவைப் போல நாம் அரசியலைத் தவிர மற்றத் துறைகளிலும் அதாவது கலைத் துறையில், இலக்கியத் துறையில், தொழில் துறையில், தொழிலாளர் இயக்கத் துறையில், சினிமாத் துறையில் வீரர்களைப் பெறவேண்டும். இங்கு நாட்டின் பத்திரிகைகள் புதிய சமுதாயத்திலிருந்து புதிய தலைவர்களை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் பணிசெய்ய முடியும். இப்போது நமது பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் நாம் எப்போதும் பார்க்கும் அதே முகங்கள்தான் பிரசுரிக்கப்படுகின்றன. வழக்கமான ஒரு சில தலைவர்களின் சொற்கள் தான் வெளியாகின்றன.
மற்றவர்களும் செய்திகளில் இடம் பெற முடியுமென்பதையும் அச்செய்திகளை ஜனங்கள் படிப்பார்கள் என்பதையும் முயற்சி, ஊக்கமுடைய நிருபர்கள் காண்பார்கள்.
ஜனநாயகம் ஆழ்ந்து வேரூன்ற வேரூன்ற, பெரியவர்களுக்கே புகழ்பாடும் மனோபாவம் அருகத் தொடங்குகிறது. சாதாரண மனிதனுடைய முக்கியத்துவம் அதிகரித்துக்கொண்டே போகும் போது “படே மனிதர்ளோடு” அவனை ஒப்பிட்டுக் கூற வேண்டிய அவசியம் குறைந்து விடுகிறது. அமெரிக்காவில் “சாதாரண மனிதன் எப்படி வாழ்கிறான் என்பதை எடுத்துரைக்கும் புத்தகங்களும், பத்திரிகைகளும், பெரிய மனிதர்களின் செய்கைகளை விவரிக்கும் புத்தகங்களைப் போலம் பிரபலம் பெற்றுவிளங்குகின்றன.”
ஒரே கட்சிக்கே நாடாளும் வாய்ப்பு இருக்கவேண்டும். அந்தக் கட்சி எவ்வளவு தவறு செய்தாலும், எடுத்துக் காட்டுவதுகூடத் தவறு, அந்தக் கட்சியின் தலைவர்களின் புகழ் பாடுவதன்றி வேறோர் காரியம் செய்தலாகாது என்ற மனோபாவம், சர்வாதிகாரத்திலே போய்ச் சேரும் என்ற உண்மையையும், விடுதலைப் போரின் போது, மகாவீரராக யாரேனும் ஒருவர் விளங்கினார் என்றால் நாட்டை ஆளும் நிர்வாக காரியத்திலும் அவர் மகாவீரராகவே இருந்து தீருவர்; அங்ஙனம் இல்லை என்றாலும், அவரை கண்டிப்பது கூடாது என்று கட்டளையிடுவதும், நிச்சயமாக நாட்டு முன்னேற்றத்தைத் தடுக்கு மென்பதையும், அறிஞர் விளக்கிக் கூறியிருக்கிறார். இக்கட்டுரையில் இவர், காங்கிரசுக்கு எதிர்க்கட்சி நடத்திக் கொண்டிருந்தவருமல்ல, உலக நிலைமையும், நாடாளும் முறைகளையும் ஆராய்ந்து இதனைக் கூறினார். ஆனால் இங்குள்ள காங்கிரசாருக்கோ, என்றென்றும் ஆட்சி உரிமை தமக்கே என்ற எண்ணமும், அந்த நிலையைப் பாதுகாத்துக்கொள்ளத் தம்மிடம் அதிகாரம் இருக்கும் இந்நாளிலேயே, மிகக் கடுமையான நடவடிக்கைகள் மூலம், காங்கிரசுக்கு எதிர்க்கட்சி என்று ஏதும் இருக்க முடியாதபடி செய்துவிட வேண்டுமென்னும் எண்ணமும் பலமாகி விட்டது. பேச்சும் நடவடிக்கையும் இதற்கு ஏற்றபடியே இருந்திடக் காண்கிறோம்.
“இவர்களை எல்லாம் பிடித்து ஜெயிலில் போட்டுவிடப் போகிறோம்” என்று மேடையில் பேசுவது, இப்போது காங்கிரஸ் பிரசாரகர்களுக்கு மிகச் சகஜமாகி விட்டது.”
. “இதோ தந்திகொடுத்து விட்டோம் மந்திரிக்கு. நாளைக்குள்ளே அரஸ்ட்டு வாரண்டு பிறந்து விடுகிறது பார்!” என்று மிரட்டுவதிலே, இப்போது காங்கிரசார் புதிய களிப்புப் பெறுகின்றனர்.
ஒரு காலத்திலே, தொல்லைக்கு ஆளாகி, அடக்குமுறை யினால் தாக்கப்பட்டவர்களான படியால், தங்களுக்கு ஆளும் வாய்ப்புக் கிடைத்த உடனே, பிறர், தங்களைக்கண்டு பயப்பட வேண்டும், பிறரை அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணம், அவர்களுக்குச் சுலபத்தில் உண்டாகிவிடுகிறது. சாமான்யர்களுக்கு, இந்த அதிகாரம் பெற்ற நிலை, சாஸ்வதமானது என்றே தோன்றும். ஒரு மந்திரி சபைக்கு சட்டப்படி உள்ள ஆயுட்காலம் கூட இருப்பதற்கின்றி, பிரசாரம் இருண்டு, ஓமாந்தூரார் ஒளிவிடும் மாறுதல் மந்திரி சபைக்கே ஏற்பட்டு விட்டதே. இதற்கே இந்த நிலை என்றால், நாடு ஆளும் நிலை நமக்கு என்றென்றும் இருக்கும் என்று எதைக்கொண்டு தீர்மானிப்பது என்று கூட அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.
அடக்குமுறை, ஒரு விசித்திரமான சக்தி. அதை உபயோகப்படுத்துவோருக்கு துவக்கத்திலே களிப்பு அதிகரிக்கும். சவுக்கெடுத்துக் காளையின் முதுகிலே, ‘சுளீர்’ என அடி கொடுத்ததும், அது, துள்ளி, வேகமாக ஓடும்போது உண்டாகிற களிப்புப்போல, அடக்குமுறையை வீசி, எதிர்க்கட்சியினரை இம்சை செய்து, அவர்கள் கஷ்டம் அனுபவிப்பதைக் கண்டதும், ஒரு வகைக் களிப்புப் பிறக்கும்.
அதேபோல முதல் தாக்குதல், அடிபட்டவனுக்கு அதிக வருத்தத்தை, சோகத்தை, திகைப்பைத் தான் தரும், அவனிடம் அதிகாரம் இருக்கிறது, நான் என்ன செய்ய முடியும் அவனுக்கு எதிராக, என்ற எண்ணம் வரும்.
அடிக்கடி ‘சவுக்கு ‘ வீசவேண்டியும், ஒவ்வொருமுறை சவுக்கு வீசும்போதும், காளை துள்ளுவதோடு மட்டும் நிற்காமல், துரிதமாக இருந்தால், முதல் சவுக்கு வீசியபோது உண்டான ஆனந்தம் கருகி, இதேதடா தொல்லை ! என்று, சலிப்புப் பிறந்துவிடும் கையிலே சவுக்கு இருப்பினும், அடக்குமுறை உபயோகிப்பவருக்கும் அதேநிலைதான். ஆரம்பத்திலே அதனை உபயோகிக்கும்போது ஏற்படும் களிப்பு, அதனை அடிக்கடி உபயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் உண்டாகாது. சலிப்பும், இப்படியே. அடக்குமுறையைக்கொண்டே எவ்வளவு காலத்துக்குத் தான் ஆட்சியை நிலைநிறுத்துவது என்ற அச்சமும் ஏற்படும்.
அதுபோலவே, முதன் முறை தாக்குண்ட போது, துயரப் பட்டு, திகைத்தவர்கள், பிறகும் அடிக்கடியும் தாக்குதலை அனுபவிக்க நேரிட்டால், துயரமும் திகைப்பும் தீய்ந்துபோகும்; உறுதியும் எதிர்ப்புச் சக்தியும் புதிதாகத் தோன்றும்.
அடக்குமுறை, இவ்விதமான பலன்கள் தரும், ஒருவகை விசித்திர சக்தி.
சாவது அவ்வளவு கஷ்டமான தல்ல — என்று கூறிக் கொண்டே இறந்தாள் ஓர் மங்கை— கொடுங் கோலனிடம் சிக்கியபோது, அவளுடைய கணவனின் செவியிலே அந்த வாசகம் வீழ்ந்தது ! சாவது அவ்வளவு கஷ்டமில்லை ! செத்துக் கொண்டே கூறினாள் சேல்விழியாள் !—நானோ சாவுக்கு அஞ்சி, கொடுங்கோலனைச் சரணடையலாமா என்றுகூட யோசித்தேன். சே ! நான் கோழை ! ஆகாது இக்கோழைத்தனம் என்று கூறி, சீறிப் போரிட்டுக் கொடுங்கோலனை விரட்டினான், என்றோர் கிரேக்கக் கதை உண்டு. அது போன்றே, அதிகாரத்தைப்
பெற்றிருக்கும் கட்சி அடக்குமுறை கொண்டு எதிர்க்கட்சியைத் தாக்கும் போது, அந்தத் தாக்குதலைச் சமாளித்து விட்டால், பிறகு பிறக்கும் புதிய சக்தியின் உருவைக் கண்டு நாமே ஆச்சரியமடைவோம்.
அடக்கு முறையின் இந்த இலட்சணத்தை ஆராய அவர்களுக்கு அவகாசம் இல்லை. எனவேதான், ஆள்வதற்கு நாங்கள் கிளம்பிவிட்டோம், இனி நாட்டிலே வேறு எக்கட்சியும் இருக்க அனுமதியோம் என்று கூறுகிறார்கள்.
தமது ஆதிக்கத்திற்கு அடிபணிவோ ரெல்லாம் நல்ல பிள்ளைகள்; மற்றையோர் துடுக்கர்கள் என்றே உலகில் இதுவரை எல்லா எதேச்சாதிகாரிகளும் எண்ணி வந்தனர். ரஷிய நாட்டை ரணகளமாக்கிய ஜார் மன்னனும் அப்படித்தான் எண்ணினான். சில்லரை அதிகாரம் வகிக்கும் சிறு தேவதைகளும் அவ்வண்ணமே எண்ணுகின்றன; எதிர்ப்பு என்ற உடனே எரிச்சல் வருவதும், அதனை அழித்தே விடுவது என்ற ஆணவம் எழுவதும், அழிக்க எத்தகைய கொடிய இழிந்த முறைகளைக் கையாளும் துணிவு ஏற்படுவதும் வீரமென்று அவர்கள் எண்ணிக்கொண்டு செய்யும் நடவடிக்கைகளெல்லாம் பயங்கொள்ளிச் செயல்களாகும். உண்மையில், எதிர்ப்பில் சக்தி இல்லாவிடின் எதிர்ப்போருக்கு நாட்டிலே ஆதரவு வராது என்ற எண்ணமிருப்பின், யார் எவ்வளவு எதிர்ப்பினும் தமது செல்வாக்குக் குறையாது என்ற நம்பிக்கை இருப்பின், தம்மைப்பற்றி மக்கள் உண்மையை உணரும்படிச் செய்யத் தங்களால் முடியும் என்ற வீர உணர்ச்சி இருப்பின், எதிர்ப்பைக் கண்டதும் அதன் மீது உடனே பாய்ந்து அடித்து ஒழித்துவிட யாரும் எண்ணார்.
வீரருக்கு அழகு, எதிர்ப்படும் எத்தனை ஆபத்தையும் பொருட்படுத்தாது போரிடல். கோழைகளின் கொள்கை, எதிர்ப்பு என்ற உடனே ‘என்னாகுமோ நமது கதி’ என்று பயந்து, பதை பதைத்து, பாதகச் செயலையும் செய்யத் துணிவது. முன்னையோர் முடிவில் வெற்றியும், பின்னையோர் இறுதியில் தோல்வியும் பெற்று வந்ததாலேயே, இன்று உலகில் ஏதோ ஓரளவுக்காவது நீதியும் நேர்மையும் நிலைத்திருக்கின்றன.
புரட்சி என்பது இயங்கும் சக்தி ! அதைப் பொசுக்கிவிட யாராகிலும் ஆகாது. புரட்சி என்பது மக்களின் போராடும் சக்தியின் வழி வருவது. புரட்சி வாவிபத்தின் கூறு! பகுத்தறிவாளர் ஆயுதம். பழமை விரும்பிகள், புரட்டர்கள், எதேச்சாதிகாரிகள், சர்வாதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. எனவேதான், அத்தகையோர் புரட்சி என்ற சொல்லைக் கேட்டதும் மருட்சி அடைந்தே விடுவர். நீண்டு வளர்ந்து நிற்கும் நெடு மரங்களும் அசைந்து, ஆடி, சுழன்று,அடி அறுபட்டு,விழுந்து நொறுங்கும், சூறாவளி வரின். அதைப் போன்றே ராணுவம், பொக்கிஷம், கர்வம், கபடம், ஆணவம், அகந்தை ஆகிய எல்லா ஆயுதங்களையும் ஒருங்கே படைத்துத் தனக்கு ஒப்பாரும் மிக்.காரும் இல்லை என இறுமாந்து கிடந்த எத்தனையோ எதேச்சாதிகாரிகள் இடர்ப்பட்டு, இடிபட்டு கீழே உருண்டர், புரட்சியின் வேகத்தைத் தாங்க மாட்டாது. எனவே தான் அவர் வழி வந்தவருக்கெல்லாம் புரட்சி என்றதும் மருட்சி ஏற்பட்டு விடுகிறது. மருட்சி அவர்களைக் காப்பாற்றாது. மருட்சிகொண்டோன், பலப்பல கொடுமையான காரியங்களையும் கூசாது செய்வான். எனினும், எச்செயலும் புரட்சிப் புயலில் அவனைச் சிக்கவைக்காது போகாது. இது சரித்திரம்.
எதேச்சாதிகாரிகளுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், அதனை வைத்துக்கொண்டு சட்டம் கொண்டு புரட்சியை ஒடுக்கப் பார்ப்பர். ராணுவ பலமிருப்பின் புரட்சிக்காரரை சுட்டுக் கொல்லுவர். இரண்டுமின்றி நமது நாட்டில் அந்த நாளிலே இருந்ததாகக் கூறப்படும் ரிஷிகளாக இருப்பின் சபித்து விடுவர். இன்று அந்த ‘ரிஷி பரம்பரையில்” வந்தவராகக் கருதப்படும் காந்தியாரும், அவரது பூசாரிகளும், ஒழுங்கு நடவடிக்கை எனும் தண்டத்தை வீசுகின்றனர். ஒன்றுமே இல்லாத பேர்வழிகள் எதோ தங்களாலான விதத்திலே தமது சமர்த்தைக் காட்ட முற்படுவர். இந்தி எதிர்ப்பை அடக்கி விடலாமென எண்ணவில்லையா? மதுரைக் கோயில் பட்டர்கள், கோயிற் கதவைப் பூட்டிக்கொண்டு, சாவிகளை ஒளித்து வைத்து விட்டுத் தாமும் மறைந்து கொண்டால் ஆலயப் பிரவேசம் அடியோடு நின்று விடும் என்று எண்ணவில்லையா ? அத்தகைய கோமாளித்தனமான முறைகள் கையாளப்படுவதற்குக் காரணம் யாது? அவர்களின் மன மருட்சிதான் காரணம். புரட்சியின் சக்தி அப்படிப் பட்டது.
சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுப் பல புதிய கருத்துக்களை புகுத்திப், புரட்சியைக் கிளப்பிய போது, மருண்டவர் எத்தனை பேர் ! மருட்சியின் காரணமாக அவர்கள் ஆடிய ஆட்டமும், போட்ட கூக்குரலும் கையாண்ட இழிவான முறைகளும் கொஞ்சமா !
அதைப்போன்றே “தமிழ் நாடு தமிழருக்கே” என்ற புரட்சிக் கீதம் பாடப்பட்டவுடன், யாராருக்கு மருட்சி ஏற்பட்டது ! மருட்சி காரணமாக, கோமாளித்தனமே குறை நீக்கும் மருந்தெனக் கருதும் ஆசாமி முதற்கொண்டு, கோபக்கனலால் எதிர்ப்போரைத் தகித்து விடலாம் எனக் கருதிய காங்கிரஸ் மந்திரிகள் வரையிலே, என்னென்ன பேசினார்கள்! புரட்சி, அவ்விதமாக வெல்லாம், அவர்கள் மனதை மருட்டி விட்டது.
பிரசாரகரோ, பத்திரிகையோ நாட்டிலே இவர்கள் மீது எழுந்துள்ள எதிர்ப்பையே எடுத்துக் காட்டி வருகின்றனர்; இவர்களாக எதிர்ப்பை உற்பத்தி செய்வதில்லை. எதிர்ப்பை எழுப்புவது, ஆட்சி முறைகளின் விளைவுகள். அவர்களின் போக்கு, பேச்சு, புதிய சட்டங்கள், புதுப்புது வரிகள். இவைகள் நாட்டிலே அதிருப்தியை-வெறுப்பைக்- கொதிப்பைக்- கிளப்பி, எதிர்ப்பு என உருண்டு திரண்டு வருகிறது. அந்த எதிர்ப்பு என்ற ‘ஜ்வாலை ‘யின் பொறிகளைத் தாங்கி வருவன பத்திரிகைகள், பிரசாரங்கள். பொறிகளை அணைத்து விடுவது ஜ்வாலையை அணைத்ததாகாது.
“உண்மையைக் கேள், குழந்தாய் ! ஜ்வாலை விட்டு எரியும் பெருந் தீயிலிருந்து நான்கு பக்கமும் பொறிகள் பறந்து செல்வது போல்” என்று உபநிஷத்தில் ஒரு இடத்தில் வருவதாகக் கூறுகிறார்கள்.
பொறிகளைக் கண்டு மருண்டு அவைகளை அழித்து விட்டால் பயனில்லை. ‘ஜ்வாலை’ இருக்கிறது, பொறிகளை, எண்ணற்ற பொறிகளை எடுத்தெடுத்து வீச !
எனவே, மருட்சி கொண்டவர் செயல் ஒருபோதும் புரட்சியை அடக்கிவிடாது என்பதை ஆட்சி செலுத்துவோருக்கு, நாம் எடுத்துக்காட்டுகிறோம்.
சூட்சுமம் இதுதான் !
புதிதாக, நமது இயக்கப் பிரச்சினை களைக் கேள்விப்படும் சில நண்பர்கள், பார்ப்பனர்களை, நாம் அவசியமற்றுக் கண்டிக்கிறோம் என்றும், அவர்கள், சமூகத்திலே மிகமிகச் சிறுபான்மையோராக இருக்கிறார்கள், அப்படியிருக்க அவர்களை ஏன் ‘சதா சர்வகாலமும் தூற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.
இது, நமது இயக்கத்துக்குப் பழைய கேள்வி-மிகமிகப் பழைய கேள்வி. ஆனால், கேட்பவர்களிலே பலர், இயக்கத்துக்குப் புதிய ‘வரவு’ எனவே அவர்களின் கேள்வி, உண்மையிலேயே, சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளக் கேட்கப்படுவதேயாகும். அவர்களின் சந்தேகத்தைப் போக்க வேண்டியது நமது கடமையுமாகும். முதலில் அந்த நண்பர்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்கிறோம், நாம் பார்ப்பனர் என்ற ஆட்களை அவர்களின் வகுப்புக் காரணமாக, விஷமத்துக்காகக் கண்டிக்கிறோம் என்று தயவு செய்து எண்ணிவிட வேண்டாம். நாம் கண்டிப்பது பார்ப்பனியம் எனும் ஒரு முறையே.
அதன் ஆரம்ப கர்த்தாக்களாகவும், காவலர்களாகவும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்— பார்ப்பனரல்லாதாரிலே பலர் இதற்கு ஆதரவாளர்களாக உள்ளனர்.
ஆகவே, நமது கண்டனம், பார்ப்பனியத்துக்கே யாகும். இனிப், பார்ப்பனர், மிகச் சிறுபான்மை தானே! அவர்களைக் கண்டிக்க வேண்டியதும், அவர்களின் முறையைக் கண்டிக்க வேண்டியதும், அவசியந்தானா என்று கேட்கப்படுவதைக் கூர்ந்து கவனிப்போம். பிரச்னை, மக்களின் எண்ணிக்கையை மட்டும் கவனித்தால் விளங்காது. அந்தப் பார்ப்பனியம் எனும் முறைக்கு நாட்டிலே உள்ள செல்வாக்கின் அளவே முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். அப்படி கவனித்தால் ஐயர், ஐயங்கார், சர்மா போன்ற பார்ப்பனர்களோடு இது நின்று விடுவதாக இராமல், பார்ப்பனரல்லாதாரில் பலருக்கும் ‘சொந்தமான’ பிரச்னையாகிவிடக் காணலாம்.
ஒரு முறையைக் கவனிக்கும் போது, அதனை உற்பத்தி செய்த மக்களின் எண்ணிக்கையை மட்டும் கவனிப்பது போதாது — அந்த முறைக்கு நாட்டிலே ஏற்பட்டுள்ள செல்வாக்கின் அளவே முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டும். அப்போது அந்தப் பிரச்னையின் முழு உருவமும் தெரியும்.
பார்ப்பனரிடம் ஏனய்யா பயம் ? அவர்களைக் கண்டு பொறாமை எதற்கு ? அவர்கள் 100-க்கு 3 பேர் தானே ! நீங்கள் 100-க்கு 97 பேரன்றோ! (மைனாரிட்டி) சிறுபான்மைச் சமூகத்திடம் பெரும் பாலான சமூகம் ஏன் பயங்கொண்டு, பாதுகாப்புக் கோரவேண்டும் என்று அடிக்கடி தேசியத் தோழர்கள் கேட்பதுண்டு. அப்படிக் கேட்கும் போதெல்லாம், தங்கள் அறிவின் திறத்தைத் தாமே மெச்சிக்கொள்வர் அத்தோழர்கள்.
சமூகத்தைக் கவனித்தால், பார்ப்பனர் சிறு தொகையினர்.
பார்ப்பன ரல்லாதாரின் மூச்சு, பார்ப்பனரைத் திணறவைக்கும். அவ்வளவு அதிக எண்ணிக்கை யுள்ளவர்கள் தான் பார்ப்பனால்லாதார். ஆனால், பார்ப்பனியம் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல ! இதுவரை அதற்குப் பலவழிகளிலும் தரப்பட்ட படைபலத்தைப் பொறுத்திருக்கிறது
ஊரே அஞ்சும் படியான வீரர் தான், ஆனால் அவன், மயங்கும் வேளையிலே, மந்திரக்காரன் கையிலுள்ள சிறு வேப்பிலைக் கொத்துக்கு அஞ்சுகிறான். அந்த இலைக்கும், மந்திரக்காரனுக்கும் இருப்பதாகக் கற்பிக்கப்பட்டிருக்கும் மகத்துவந்தான் வீரனும் அஞ்சும்படியான நிலையை உண்டாக்குவதற்குள்ள காரணமாகும். அதைப் போலப் பார்ப்பனர் சிறு தொகையினராக இருப்பினும்,மோட்ச, நரகத் திறவு கோலும், ஆண்டவன் அருளை அளக்கும் அளவு கோலும், அவர்களிடம் இருப்பதாகவும், பிற சமூகத்தினரின் சேவையைப் பெறுவது, அவர்களின் பிறப்புரிமை என்றும், அவர்களின் திருப்தி ஆண்டவனுக்கே திருப்தி அளிக்குமென்றும், எண்ணற்ற ஏடுகள் எழுதப்பட்டுப், பன்னெடு நாட்களாக மக்கள் இரத்தத்திலே அந்த எண்ணம் கலக்கப்பட்டு விட்டதால் அந்தச் சமூகத்திற்கு, எண்ணிக்கைக்குத் துளியும் பொருத்தமில்லாத அளவு, அமோகமான செல்வாக்கு வளர மார்க்கம் ஏற்பட்டிருக்கிறது.
கடிவாளம் சிறியது; ஆனால் குதிரை அதனிடம் படும்பாடு யாவரும் அறிந்தது தான் ! மூக்கணாங்கயிறு தனது வால் பருமன் கூடத்தான் இல்லை. ஆனால், மாடு அதனிடம் அகப்பட்டால் அடங்கித்தான் விடும்! அதைப்போலச், சிறிய
சமூகமாயினும், அதற்கு ஏதேதோ மகத்துவத்தைக் கற்பித்து விட்டால், பிறகு அந்தச் சமூகத்தவரின் செல்வாக்கு நிச்சயம் வளரும். ஊரின் மீது ஒரு ஆகாய விமானம் வட்டமிட்டால், 9000 பேர் இருப்பினும் ஊரார் அஞ்சுகின்றனர். ஏன்? ஆகாய விமானத்திலிருந்து வெடிகுண்டு வீசப்படும் என்று தெரிந்ததால். இதனால் தான், பார்ப்பனியம் எனும் பிரச்னை, கண்டிக்கப்பட வேண்டியதாகிறது.
“பார்ப்பனர்களை ஏனய்யா கண்டிக்க வேண்டும் ?” என்று எத்தனையோ பார்ப்பனரல்லாதாரைக் கேட்கச் செய்யும் அளவு, அந்த பார்ப்பனியத்துக்குச் ‘சக்தி’ ஏற்பட்டிருக்கிறதல்லவா? பார்ப்பனியத்தைக் கண்டிக்கும் போது, அனந்தாச்சாரிகள் கூடச் சும்மா இருப்பர், அவினாசிகளல்லவா ஆத்திரப்படுகின்றனர்.ஏன்? அதுதான் சூட்சுமம். மிகமிகச் சிறுபான்மையோராக இருப்பினும் அவர்களின் முறை, அவ்வளவு பரவிச் செல்வாக்குப் பெற்றிருக்கிறது, எனவே தான், நமது இயக்கம், அந்தப் பிரச்னையை முக்கியமானதாகக் கருதுகிறது. இதுவரையிலே, பார்ப்பனியத்துக்கு, நாம் உண்டாக்கிய எதிர்ப்புக்கு, மறுப்பும், எதிர்ப்பும், பார்ப்பனரிடமிருந்து கிளம்பியதைவிட, நம்மவர்களிடமிருந்தே அதிகம் கிளம்பிற்று. அவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு முறையைக் கண்டிப்பது, வீண் வேலையாகுமா? அந்த அளவு செல்வாக்குடன் உள்ள ஒரு முறையை, எதிர்க்க, நாம் துணிவுடன் பணியாற்றுவது, அவசியமற்றதாகுமா என்பதைக். கேள்வி கேட்கும் நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
தூத்துக்குடி
அவன் கரங்களிலே இரும்புச் சங்கிலி !
கால்களையும் இரும்புச் சங்கிலி கொண்டு, அசைக்க முடியாத பாறையிலே கட்டி விட்டனர்.
கண்களின் மீது கனமான ஓர் துணிக்கட்டு.
அவனைக் கண்டதும், ‘அவன் ஓர் துர்ப்பாக்கியன், துயரத்துடன் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருக்கிறான்— அடிமைச் சங்கிலிகள் அவனைக் கொடுமைக்காளாக்குகின்றன’ என்பது விளங்குகிறது.
அவனைச் சுற்றிலும், மனித சஞ்சாரம் அதிக மற்ற இடம். தொலைவிலே, அலைஓசை கேட்கிறது.
கடும் காற்று வீசுகிறது.
மழையும் பொழிகிறது.
அவன் நெளிகிறான்—
அவன் பொருட்டுப் பேசுவோர் இல்லை !
கட்டுகளை அவிழ்த்துவிடும் கண்ணியம் கொண்டவர் இல்லை.
ஏன் இந்நிலை பிறந்தது என்று கேட்கும் வீரன் இல்லை அவனோ நெளிகிறான்—தன் பலத்துக்கு மீறிய பலத்தால்
அழுத்தி வைக்கப்பட்ட அவனால் நெளியமட்டுமே முடிகிறது.
ஒரு உதவி ! ஒரு அபயக் குரல் கேட்குமா, என்று ஆவலுடன், உற்றுக் கேட்கிறான். தொலைவிலே, ஓர் காலடிச் சத்தம் கேட்குமா என்று காத்துக்கிடக்கிறான். ஒரு அன்புமொழி, இரக்கச்சொல், நம்பிக்கையூட்டும் வார்த்தை கிடைக்குமா என்று ஆவலுடன் காத்துக் கிடக்கிறான்.
கண்களை மூடிக்கொண்டிருக்கும் துண்டுத் துணியையானது விலக்க ஒருவர் கிடைக்க மாட்டாரா என்று எண்ணுகிறான்— நெளிகிறான்— நெளிகிறான்–நெளியும் நிலையிலேயே யோசிக்கிறான், “இன்னும் சற்றுபலமாக மேலும் கொஞ்சம் உறுதியுடன்— சேர்வு அடையாமல்— நம்பிக்கையை இழக்காமல், பிணைப்பிலிருந்து விடுபட முயற்சி செய்—இரும்புச் சங்கிலிதான்; ஆனால் எஃகு உள்ளம் இருக்கிறது உனக்கு, அஞ்சாதே, இதோ தளை அறுபடும் நிலை ஏற்பட்டு விட்டது, வீரனே! விசாரம் கொள்ளாதே!” என்று யாராவது கூறமாட்டார்களா, ஆர்வம் தரமாட்டார்களா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறான். கடும் காற்றுத்தான் வீசுகிறது ! அலையின் ஒலிதான் கேட்கிறது ! அவன் எதிர்பார்க்கும் உதவிக்குரல் கிளம்பவில்லை. சிங்காரச் சிறுபடகுகளிலே ஏறிக்கொண்டு, வெகு தொலைவிலே, யாரோ செல்கிறார்கள்— அவர்கள் பாடும் சிந்து செவிக்கு வருகிறது.
வேறு எங்கிருந்தோ, குமுறல் சத்தம் கேட்கிறது. ஆனால் அவன் அருகே வருவார் யாருமில்லை ! அவன் நிலைமையை மாற்றத் துணிவு கொள்வார் யாரையும் காணோம். அவன் அடிமை ! அவன் அவதிக்காளானவன் ! அவனுக்கு உறுதுணையாக ஏதும் இல்லை !!
முப்பதாண்டுகளுக்கு முன்பு திராவிடன் இந்நிலையில் இருந்தான், ஜாதி மதம் எனும் தளைகளால் கட்டப்பட்டு ஆரியமெனும் கற்பாறையிலே பிணைக்கப்பட்டு, அஞ்ஞானமெனும் துண்டுத் துணி கொண்டு கண்கள் கட்டப்பட்டு, உலகம் மாறிக் கொண்டிருந்த நாட்களில், உரிமைப்போர் முழக்கம் எங்கெங்கோ கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் விடுபடும் வழிவகை அறியாது, உதவிக்கோர் துணைகிடைக்காது; தன் பலத்துக்கு மேற்பட்ட பலத்தால் தாக்குண்டு, தத்தளித்துக் கொண்டிருந்தான். அவன் கரத்திலும் காலிலும் இருந்த தளைகளைவிட, அதிக பயங்கரமானதோர் தளை, அவன் கருத்திலே! திடீரென்று பூட்டப்பட்ட தளையுமல்ல—அவனுடைய வெள்ளை உள்ளத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, மெள்ள மெள்ள, கள்ளக் கருத்துக் கொண்டோர், பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பூட்டிய தளைகள், திக்குத் தெரியாத காட்டில், திரிந்து திகைக்கும். சிறு பறவைபோல, எந்தப் பக்கம் சென்றாலும் துறைமுகம் கிடைக்காது, கலங்கும் ஓடக்காரன்போல, தளைகளால் கட்டுண்டு தவித்துக் கொண்டிருந்தான்.
நெடு நாட்களாக இந்நிலை இருந்து வந்ததால் அவன், தன்னம்பிக்கையையும் இழந்து விட்டான்.
நெளிவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். தன்மேல் பூட்டப்பட்டுள்ளவை, தளைகள் என்று எண்ணுவதையும் நிறுத்த. முயற்சிக்கலானான், கண்களை மறைக்கும் துண்டுத் துணியையும் ஊடுருவித் தன் பார்வையைச் செலுத்த முயற்சித்துத் தோற்றதால், கண்ணுக்குப் பார்வை உண்டு என்ற எண்ணத்திலேயே சந்தேகம் கொண்டு விட்டான். நமக்கு விடுதலை இல்லை, விமோசனம் இல்லை—இவை அறுபடாத் தளைகள்—இது விடுபட முடியாத நிலைமை என்றே கூடத் தீர்மானித்து விட்டான்.
இந்நிலையை மாற்றலாம்—மாற்ற முடியும்—மாற்றிக் காட்டுகிறேன்—என்று கூற, இந்தத் தமிழகத்திலே, ஒருவர் மட்டும், துணிவு பெற்றார்—பணி புரியலானார்—படை ஒன்றைத் திரட்டினார்—கண்கள் மீதிருந்த துண்டுத் துணியைக் கிழித்தெறிந்தார்—தளைகளையும் நொறுக்கலானார்.
நம்பிக்கையை இழந்து போயிருந்தவனுக்கு, முதலில் மிரட்சியே உண்டாயிற்று ! “சாத்யமற்ற காரியத்தைச் செய்ய முன்வந்திருக்கிறாய் ! முன்பு, என் கண்கள் மூடிக்கிடந்தன ! தளைகள் உள்ளன என்ற நினைப்பு மட்டுமே இருந்தது—அவை, எப்படிப்பட்டவை என்பதை நான் அறியவில்லை—கண் திறக்கப்பட்டு விட்டது. இப்போது, தெரிகிறது. தளைகள் மிகமிகப் பலமானவை என்று—எப்படி, இவைகளை நொறுக்க முடியுமா ? உன்னிடமோ சம்மட்டி இல்லை ! கரத்தாலேயே நொறுக்குகிறாய், அதனால் வேதனைக்கு ஆளாகிறாய்; பாபம் ! உன்னால் முடியாத காரியம் ! முயற்சியை விட்டுவிடு ! ஏதோ கண் திறந்திருப்பது போதும், வானத்தைக் காண்கிறேன், விண்ணிலே பறக்கும் பட்சிகளைப் பார்க்கிறேன்—அலையைக் காண்கிறேன்,— மகிழ்கிறேன்— இதுபோதும். இந்தத் தளைகள் உன் தாக்குதலால் அறுபடாது” என்று கூறினான்.
“ஆமாம் — ஆமாம்—பலமான தளை என்றார் அவர்.
“பலமான தளைகள் மட்டுமல்ல—இன்று நேற்று, ஈராண்டு பத்தாண்டுகளுக்கு முன்பு பூட்டப்பட்ட தளைகளல்ல, பலப்பல காலமாக இருந்து வரும் தளைகள்” என்று, பிணைக்கப்பட்டிருந்தவன் கூறினான்.
அவர் புன்னகையுடன் சொன்னார், “இப்போதுதான் என் நம்பிக்கை அதிகமாகிறது. பன்னெடுங் காலத்துக்கு முன்பு பூட்டப்பட்டவைகள் இந்தத் தளைகள் ! நீ தளைகளின் பெருமை இது என்கிறாய். பைத்தியக்காரா ! சரியாக யோசித்துப் பார். இது பெருமைக்குரியதல்ல ! தளைகள் மிக மிகப் பழையன— எனவே வலிவற்றன ! பன்னெடுங்காலமாக உள்ளவை, எனவே காலத்தின் தாக்குதலால், கொஞ்சம் கொஞ்சமாக வலிவை இழந்துள்ளன. எனவே இவை, அறுபட முடியாதன. அல்ல, ஆற்றலுடன் நம்பிக்கையும் கொண்டு முயன்றால், தளைகளைப் பொடியுடச் செய்ய முடியும்” என்று உறுதியுடன் உரைத்தார். எங்கிருந்தோ, யாரோ, கேலிக் குரலில் சிரித்த சத்தம் கேட்டது. அதனைப் பொருட்படுத்தாது, தளையை நொறுக்கும் பணியினைத் தொடர்ந்து நடத்தலானார்— சலிக்காது வெற்றியுடன்— முப்பதாண்டுகளாக— கேலிச் சிரிப்பொலியை அடக்கும் அளவுக்கு வலுவடைகிறது, தளைகள் அறுபடும் சத்தம் !! நம்பிக்கை பலமாகிறது ! மங்கிக் கிடந்த கண்களிலிருந்து, புத்தொளி கிளம்புகிறது.
இந்த அரும்பணியினை ஆற்றலுடன் செய்து வரும் பெரியாருக்கு, விழிப்புற்று, நம்பிக்கையும் பெற்றுள்ள திராவிடம் தரும் அன்புக் காணிக்கைதான், சென்ற வருடம் தூத்துக்குடியில் நடைபெற்ற, திராவிடர் கழக மாகாண மாநாடு !
ஆடவரும், பெண்டிரும், கிழவரும், குழந்தைகளும், இலட்சம் பேருக்குமேல், திராவிடத்தின் தென் முனையிலே, கூடினர்— விழாக் கொண்டாடினர்.
மந்திரிகளையும் ராஜதந்திரிகளையும் கொண்ட கட்சியினர், ஆள்தேடும் படலத்துக்கு வந்துள்ள நேரத்தில் இங்கு, ஆட்சிப் பீடத்தை நோக்கும் எண்ணமும் இல்லை என்பதைத் தெள்ளத் தெளிய எடுத்துக் கூறிடும் திராவிடர் கழகத்துக்கு, ஒரு இலட்சம் மக்கள் கூடுகின்றனர் !— வெளிநாடு சென்று நெடுநாட்களுக்குப் பிறகு வீடு திரும்பும் மகன், வீட்டிற்குள் நுழையும் போது பெறும் உணர்ச்சி போன்றதோர் உள்ளக்கிளர்ச்சி பெறுகின்றனர்—தேடித் தேடிப் பிறகு கண்டெடுத்த கருவூலத்தைக் கண்டு களிப்பதுபோல் களிப்புறுகின்றனர். ஓர்வகைப் பாசம்—பற்று, அவர்களைப் பிணைக்கிறது—நடமாட வைக்கிறது.
“வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்
விசை ஓடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்”
என்ற கவிதை, காட்சியாகி, எழுச்சி நடமாடுகிறது. எண்ணத்திலே புதிய முறுக்கு ஏற்படுகிறது ! எப்படியும் தன் இலட்சியம் ஈடேறும் என்ற நம்பிக்கை ஊனில், உயிரில் கலந்து, அவர்களைப் புது மனிதராக்குகிறது. இது நடைபெறும் அது நடைபெறும் என்று எதிர்பார்த்து, அவை நடைபெறாது போயினுங்கூட, சஞ்சலத்துக்கு இடம் இருப்பதில்லை; சந்தோஷம் பிறக்கிறது!
‘புல்லேத்தும் கையால் வாள் ஏந்துவோம் என்று பிதற்றிடும் பேதைகள், இந்த ‘நிலைமை’ எதன் அறிகுறி, எத்தகைய சின்னம், இது காட்டும் பாடம் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆணவத்தால் சிறுமதி கொண்ட, புல்லேந்திகள் இதனை உணராதிருக்கிறார்கள்—அவர்களை யோசிக்கச் சொல்கிறோம்—இந்த ஆர்வத்துக்குப் பொருள் என்ன? ஒரு இனம் விழிப்படைந்து விட்டது, என்பதாகும் ! புலி விழித்துக் கொண்டது என்பதாகும்! இந்நிலையில் புல்லேந்தும் கையிலே, வாளேந்திக் காணப்போவதென்ன ?
காலப்போக்கை, ஒரு இள மக்களின் கருத்திலே விளைந்துள்ள புதுமையை விளக்கமாக்கிடும் வகையில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டினின்றும்கூட, அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் ஏதோ மகா புத்திசாலிகள் என்று கூறப்படும் பேச்சுங்கூட அபத்தம் என்றே கூறுவோம். மிக மிக மட்டரகமான மனப்பான்மையும், மிக மிகக் குறைந்த தரமான புத்தியும் இருக்கும் காரணத்தாலேதான், புல்லேந்தும் கரத்தால் வாளேந்துவோம் என்று கூறத்துணிவு பிறந்தது— இந்தத் “துணிவு” — அறியாமையும் ஆணவமும் கலந்த இந்த மனப்போக்கு எவ்வளவு கேலிக்குரியது என்பதை விளக்கும் எழில்மிகு சித்திரம், தூத்துக்குடி மாநாடு !
எனவே, மாநாட்டுச் சிறப்பு, கழகத்தவருக்கு மகிழ்ச்சி தருவது மட்டுமல்ல, தங்கள் மமதைக்கு நாடு இனியும் இடமளிக்கும் என்று எண்ணும் மந்த மதியினருக்கு, ஓர் அபாய அறிவிப்பாகும். அன்று அங்கு கூடிய மாபெரும் கூட்டம், வழக்கமாகக் கட்சிகள் எத்தகைய ‘ஆசாபாசங்களில்’ சிக்கிக் கொள்வது வாடிக்கையோ, அவ்விதமான ‘ஆசாபாசங்களை’ அதாவது, அரசியல் சூதாட்டம், பதவி வேட்டை எனும் தன்மைகளை விட்டொழித்த கூட்டம் என்பதை உணர்ந்தால்தான் வளர்ந்துள்ள சக்தி எத்தகையது, அதன் விளைவு யாதாக இருக்கும் என்பது புரியும். முப்புரியினர், வேதத்தின் உட் பொருளை எல்லாம் உணர்ந்தவர்கள், என்று பெருமை பேசுகின்றனர்— ஆனால், அவர்களுக்கு, இந்த உண்மை மட்டும் இன்னமும் புரிந்ததாகத் தெரியவில்லை. புரிந்திருக்குமானால் ‘பாரத தேவி’ 11-தேதி இதழில், பழைய பித்தத்தைக் கக்கியிருக்காது— மற்றோர் முப்புரி, புல்லேந்தும் கையால் வாளேந்துவோம் என்று பிதற்றியிருக்காது, நாடு இன்றுள்ள நிலையை அவர்கள் இன்னமும் புரிந்து கொள்ளாததாலேயே, இந்தப் பித்தம் அவர்களுக்குக் குறையவில்லை. தூத்துக்குடி மாநாடாவது அவர்களுக்குத் தெளிவை உண்டாக்கட்டும்.
ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால், அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு விட்டால், வளர்ந்து வரும் சக்தி சிதறும் சிதையும், என்ற சித்தாந்தம் சேலம் மாநாட்டிலே, நாம் பெற்ற பெரும் பாடம். கழகம் இனியும் அதே போக்கிலேதான் செல்லும் என்பதைத் தலைவர் தெளிவாக்கி விட்டார். எனவே, பச்சைப் பசேலெனக் கழகம் இருப்பது கண்டு, பறந்து வந்து தங்கும் அரசியல் பட்டுப்பூச்சிகளுக்கும், வெட்டுக்கிளிகளுக்கும் கழகம் பலியிடப்படமாட்டாது என்பது தெளிவாகி விட்டது.
ஆசாபாசத்தை அறுத்துவிட்டு, ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டு, கூட்டத்திலே ஆள்சேருவது ஏது என்ற நிலையிலிருந்து விடுபட்டு, கூட்டம் ஒரு இலட்சம் இருக்கும், இரண்டு இலட்சம் இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் மதிப்பிடும் அளவுக்கு நிலைமை முன்னேறி, இதெல்லாம் தேர்தலுக்காக, பதவிக்காக பட்டத்துக்காக, காண்டிராக்டுக்காக என்ற பழிச் சொல்லிலிருந்து விடுபட்டு இது சமுதாயத்தைப் புது உருவாக்க, அறிவுத் துறையிலே புரட்சியை உண்டாக்க, என்று கூறத்தக்க முறைக்கு முன்னேறியுள்ள இந்த மாபெரும் சக்தியை உதாசீனப்படுத்துபவர், உலுத்தராக இருக்க முடியுமே தவிர, உள்ளத்தின் போக்கை யூகித்துரைக்கக் கூடியவர்களாக இருக்க முடியாது. ஆகட்டும்; அடுத்த தேர்தலிலே, அரைகோடி ஒரு கோடி செலவிட்டாவது இதுகளைத் தொலைத்துவிடுகிறேன் என்று கூறவும் முடியாது. பதவி பிடிக்கும் சுயநலமிகள் இவர்கள், பாரீர் இன்னின்னார் இன்னின்ன பதவிக்குப் பல்லிளிக்கிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டி, ‘இதுகளை வெளியே தலைகாட்ட முடியாதபடி செய்து விடுகிறோம்’ என்று வீம்பு பேசவும் இடமில்லை.
“உரத்த குரலிலே கூவிடுவோருக்கு உயர்ந்த பதவி கொடுத்துவிட்டு, செல்லப்பிள்ளையாக்கிக் கொள்வோம் ” என்ற தந்திரம் புரியவும் இடமில்லை. ஏனெனில், திராவிடர் கழகம், இத்தகைய ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டது— சேலத்தில் புடம் போட்ட தங்கம், மாற்றுக் குறையாததாகி விட்டது. இந்த மகத்தான உண்மையை, “முகத்திலுதித்த” முத்தண்ணாக் கூட்டம், சற்று உணர வேண்டும்.
“இருக்கட்டும் இருக்கட்டும், இதுகளின் மீது காங்கிரசை மோதவிட்டு, இரு மண்டைகளிலிருந்தும் குருதி கொட்டக்கண்டு மகிழ்வோம்” என்ற நயவஞ்சக நினைப்புக்கும், இடமளிக்கவில்லை கழகம். ஏனெனில், காங்கிரஸ் கட்சியுடன், தேர்தலிலோ, பதவிகளிலோ போட்டியிடும் எண்ணத்தையும் அறவே நீக்கிவிட்ட நிலை பெற்றுவிட்டது.
எனவேதான், ‘ஆசாபாசம், அறுபட்ட நிலையை நாம் மிக மிக ஜீவசக்தி தருவது’ என்று கூறுகிறோம்
கழகத்தின் நோக்கமிருக்கட்டும், நிலை இருக்கட்டும், கழகத்துக்குள்ளே பிளவும் பேதமும், அதிசமாகி வருகிறதாமே– என்று பேசுவதன் மூலம் திருப்தியைத் தருவித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தையும் விட்டுவிட வேண்டும்; முன்பு புல்லேந்தி இனி வில்லேந்தலாம் என்று எண்ணும் கூட்டத்தினர். பேதம் உண்டு. ஆனால், அந்தப் பேதம், பேதப்பட்டுள்ள இரு பிரிவினரும், இடையே உள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவும், தன்மையை உணர்ந்து கொள்ளவும், வசதி தருமே; ஒழிய, எதிரிக்கு இடந்தருவதற்கு எள்ளளவும் உபயோகப் படாது. சிற்சில சந்தர்ப்பங்களைச் சிலர்; எப்படி எப்படி உபயோகித்துக் கொள்வார்கள் என்பதைக் கண்டறியும் ஒரு போட்டிப் பந்தயம் போன்றதே, பேதம். இது எந்த வகையிலும், மாற்றார்க்கு இடந்தரும் மன நிலையை ஏற்படுத்தாது.
எனவே, தூத்துக்குடி மாநாடு தரும் பாடம், என்ன என்பதை நாட்டிலே நாலு ஜாதி வகுத்தவர்களும், நாடாள்வோரும் உணர வேண்டும். அங்கு கூடிய மக்களின் உள்ளத்திலே இருந்ததெல்லாம்,
ஜாதி பேதமற்ற—பொருளாதார பேதமற்ற—அறிவுத் தெளிவுபெற்ற அன்னியனின் சுரண்டலுக்கு ஆளாகாத ஓர் இனம்.— அதன் உரிமையுள்ள ஆட்சியை அமைத்துக் கொண்டு, உலக மன்றத்திலே வீற்றிருக்க வேண்டும்.
என்பதுதான். இந்த மூலக் கருத்தை இனி முறியடிக்க முடியாது— இதன் வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது. இக் கருத்து, கழகக் கோட்டத்தோடும் நின்றுவிடவில்லை-கதர்ச் சட்டையைத் துளைத்துக் கொண்டு, காங்கிரஸ் நண்பர்களின் உள்ளங்களிலே இடம்பெற்று வருகிறது. நாட்டிலே நல்லறிவாளர் பேசும் பேச்சிலே, இந்தக் கருத்து வெளிவருகிறது. புதிய கவிதைகள், புதிய நாடகங்கள், புதிய சினிமாக்கள், எதிலும் இந்த மூலக் கருத்து தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. எனவே, இந்தக் கருத்தைக் குலைத்துவிட முடியும் என்று கனவு காணும் நிலையை விட்டு விட்டு, காலத்தின் தாக்குதல் பலமாக விழா முன்பே, கருத்திலே தெளிவைக்கொண்டு நீதியை நிலைநாட்ட முற்பட வேண்டுகிறோம். கரங்களிலேயும் கருத்திலேயும் இரும்புச் சங்கிலி போட்டு விட்டிருக்கிறோமே எங்ஙனம் அந்த அடிமை விடுபட முடியும் என்று எண்ணியவர்கள் கண்முன்பு, இன்று, அறுபட்ட தளைகளைக் கழற்றி வீசிடாமலும்கூட, திராவிடன் ஏறு நடை நடந்து வந்து, எதிரே நின்று,
இது என் நாடு ! —இயற்கை, இதைப் பொன்னாடு ஆக்கும்—
இங்கு ஜாதி கூடாது !— மதத்தின் கொடுமை கூடாது
பொருளாதார பேதம் கூடாது !—வடநாட்டுச் சுரண்டல் கூடாது !
உரிமை வேண்டும் புது வாழ்வுவேண்டும் ! என்று கூறுகிறான்.
காற்றையும், கடலலையையும் கேட்டுக் கலங்கிய திராவிடனின் செவியிலே, ஒரு இலட்சம் மக்களின் உணர்ச்சியும், சூளுரையும் விழுந்தது ! அவன் வெற்றிப் பாதையில் நடக்கிறான்— அந்தப் பயணத்தைத் தடுக்க முடியாது—வெற்றியைக் கெடுக்க இயலாது— அவன் விழிப்புற்றான், எழுச்சியுற்றான், கூட்டினை விட்டுக் கிளம்பிய சிங்கமெனக் காணப்படுகிறான். முப்புரியினருக்கு ‘ஞானக்கண்’ உண்டென்று வீம்பு பேசுபவர், அந்த ஞானக்கண் கொண்டுகூட அல்ல, சாதாரண ஊனக்கண்ணும், சராசரி மூளை பலமும் கொண்டு கண்டாலே போதும்; மறைக்க முடியாத உண்மையைக் காணலாம் !
மரண சாசனம்
திராவிடர் கழகத்திலுள்ள தோழர்கள் ஒவ்வொருவரும், தயாரித்துக்கொள்ள வேண்டிய மரண சாசனம் இது. வீழ்ச்சியுற்ற இனத்தை எழுச்சி பெறச் செய்துவிட்டோம்; எந்த விலை கொடுத்தேனும், விடுதலையைப் பெற்றுத் தீரவேண்டிய கட்டத்தில் வந்துவிட்டோம்.
வெட்டும் குத்தும், இனி நம்மை விரைந்து தேடி வரும்; வாழ்வுக்கும், சாவுக்கும், இடையே அமைந்துள்ள ஊஞ்சலிலேயே நாம் உலாவ வேண்டியவர்களாக இருப்போம். வைகைக் கரையிலே சென்ற கிழமை நடந்த அமளி, நமக்கு அறிவுறுத்தும் பாடம் அதுதான்; நாம் இருக்குமட்டும் நமது ஆதிக்கத்துக்கு ஆபத்துத்தான் என்பதை ஐயந்திரிபற அறிந்துகொண்ட வர்ணாஸ்ரமம், நாம் செத்தால் மட்டுமே, தான் இன்னும் கொஞ்ச காலத்துக்கேனும் ஜீவித்திருக்க முடியும் என்று நன்கு தெரிந்து கொண்டு, நம்மைக் கொல்லக் கோர நாட்டியம் செய்தது. நமது இரத்தத்தையும் கொஞ்சம் குடித்து ருசி பார்த்தது. நமது வளர்ச்சியின் அறிகுறி நமக்குமட்டுமல்ல, பிராமண சேவா சங்கத்தாருக்கும் தெரிந்திருக்கிறது. அவர்களின் மகஜர், நமது வளர்ச்சிக்கு ஆரியம் தரும் நற்சாட்சிப் பத்திரம்.
எல்லாம் சரி, ஆனால், இத்தகைய அறப்போரில் சேதம் நேரிடுகிறதே. இரத்தம் வீணாக்கப்படுகிறதே என்று எண்ணுகிறார்கள் சிலர். அவர்களுக்கு ஒரு வார்த்தை ! நாம் எடுத்துக்கொண்டுள்ள மகத்தான காரியத்தின் தன்மையை ஒரு கணம் சிந்திக்கவேண்டும்.
யுகயுகமாக இருந்துவருவதாகக் கூறப்படும் ஏற்பாடுகளை நாம், திருத்தி அமைக்க விரும்புகிறோம். மமதை மலைக்கு வேட்டு வைக்கிறோம். நம்மீது சிறுசிறு துண்டுகள் சிதறி விழுந்து, மண்டையைப் பிளக்கின்றன என்றால், நாம் வைத்த வேட்டு ம்வையைப் பிளந்து வருகிறது என்று பொருள் மலையைப் பிளக்கும் காரியத்தில் இறங்கிவிட்டு, மலர் தலைமீது விழும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா ?நம்மை நாமாகவே இந்தக் காரியத்துக்கு ஒப்படைத்துவிட்டோம். உலகில் பாகங்களிலே, இதற்கு ஒப்பான காரியம் செய்யப் புகுந்தவர்கள் பட்ட பாடுகள், இன்று பல்கலைக் கழகங்களின் பாடப் பத்தகங்களாகி விட்டன. அன்று சாக்ரடீஸ் குடித்த விஷம், இன்றுவரை, சாகா நிலையைச் சாக்ரடீசுக்குத் தந்துவிட்டது. பழியையும் இழிவையும், எதிர்ப்பையும் ஆபத்தையும், தலைமீது ஏற்றுக்கொண்டு, பணி புரிந்து சென்று, அந்தப் பணியின் பலனைப் பின் சந்ததியார் அனுபவிக்கச் செய்யும் பரம்பரையில், நாம், சேர்ந்திருக்கிறோம். நமக்கு, இன்னலும் இடையூறும் இருக்கத்தான் செய்யும்; ஆனால் நமது உழைப்பு ஒருநாளும் வீண் போகாது !
கடு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டோர், காரிருட் சிறையில் ஆயுட்கால முழுதும் தள்ளப்பட்டோர், கல்லால் அடித்துத் துரத்தப்பட்டோர், சிலுவையில் அறையப்பட்டோர். சிறுத்தைக்கு இரையாக்கப்பட்டோர், கழுத்து நெரிக்கப்பட்டோர். கனலில் தள்ளப்பட்டோர், கண்டதுண்ட மாக்கப்பட்டோர். நாட்டு மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டோர், நாதியற்றுப் போனோர் என்று இவ்விதமாகத்தான் இருக்கும், சமூகப் புரட்சிப் பணியிலே ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள். நாம் அந்த இனம். அவர்களெல்லாம் இன்று அறிஞர்; உலகின் அணிமணிகளாயினர். நம்மையும், பின்சந்ததி மறவாது.
காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிய காலம், கட்டிப்போட்டு வீட்டுக்குத் தீயிட்டகாலம், கிணற்றில் தள்ளிக் கல்விட்ட காலம், கண்களைத் தோண்டி எடுத்த காலம், நாவைத் துண்டித்த காலம், கழுவிலேற்றிய காலம், தலையைக் கொய்த காலம், தணலில் தள்ளிய காலம்— இவையெல்லாம் இருந்தன. சீர்திருத்தம் பேசியோர் இவைகளிலேதான் உழன்றனர். பெரும்பாலானவர்கள் சாகவில்லை; கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டதாலேயே அவர்கள் இன்று சாகாதவராக உள்ளனர். எனவேதான், மரணசாசனம் தயாரித்துக்கொண்டு இந்த மகத்தான போராட்டத்திலே இறங்கவேண்டும் என்று கூறுகிறோம்.
சமூகத்தில் அடிப்படை மாறுதலை விரும்பும் நாம் கொல்லப்படக்கூடும் என்ற எண்ணத்திற்காக நாம் இப்பணி நமக்கேன் என்றிருந்துவிடினும், ‘சாவு’ ஓய்வு எடுத்துக்கொள்ளாது. சாந்தம் பேசினாலும் “இன்றைக் கிருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடமில்லை ஐயோ !” என்று தான் பதிகம் செவியில் ஒலிக்கும். செத்தால், செத்ததுதான்! ஆனால் கடமையைச் செய்கையில் கொல்லப்பட்டால், அது சாகா வரம்பெற்றதாகும்! நாம் வாழ்வோம், நமது உழைப்பின் பலனால் புதுவாழ்வு பெறும், நமது பின் சந்ததியாரின் பேச்சில், பாட்டில். தொட்டிலருகே, பூந்தோட்டத்தருகே, கட்டிலருகே, பட்டி மண்டபத்திலே, நாம் பேசப்படுவோம். “நமக்காகப் பணிபுரிந்தனர் கொல்லப்பட்டனர்” என்று. அப்போது நாம் வாழ்ந்திருப்பதாகத்தான் பொருள். நமக்கென்ன, மரணம் நேரிடுகையில் மாளிகை என்னாகுமோ, மனோஹரிகள் என்ன ஆவரோ, தோட்டம் துரவு என்னகதியோ, தோடு தொங்கட்டம் யாருக்குப் போகுமோ, வாணிபம் குறையுமோ, வட்டித் தொகை கெடுமோ என்ற எண்ணம் குறையப் போகிறதோ? இல்லை ! “ஆரியமே ! என்னைக் கொன்றுவிட்டாய்! நான் உயிருடன் இருந்தால் உனக்கு ஆபத்து என்று தெரிந்து இதனைச் செய்தாய். திருப்தி அடையாதே! திரும்பிப்பார்! பிணமாகாது வேறு பலர் உளர்” என்று கூறிக்கொண்டேதான் இறப்போம். எனவே, மரண சாசனம் தயாரித்துவிடுங்கள் !
மதுரைக்கு மறுகிழமை, குடந்தையில் கூடினர் நமது தோழர்கள், பல ஆயிரக்கணக்கிலே. மதுரையைவிட இங்கு தாய்மார்கள் ஏராளம். இரு நாள் மாநாடுகள், இரு இரவும் நாடகங்கள் ; எழுச்சியின் அளவும் தன்மையும், மதுரைச் சம்பவம், கனவிலே கண்ட காட்சியோ என்று என்ணக்கூடிய வகையினதாக இருந்தது. இதன் பொருள் என்ன? மதுரைச் சம்பவத்தால், மகத்தான நமது இயக்கம் மங்காது என்பதை நமது தோழர்கள் காட்டிவிட்டனர் என்றே பொருள். ஆர்வமும், ஆவேச உணர்ச்சியும்கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சிலர் மதுரைத் தழும்புகளுடன், அங்கு கூடினர். பணிபுரியத் தயார் என்று முழக்கமிட்டனர். மதுரை ஓய்ந்துவிட்டது. நமது தோழர்கள்மீது கல்வீசியவர்களின் கரத்தின் வலி இன்னும் குறைந்திராது. ஆனால், கல்லடியும் கத்திக்குத்தும் பெற்ற நமது தோழர்கள், புண் ஆறாமுன்பே, என்றும் போலவே பணிபுரியக் குடந்தையில் கூடினர். ஆம் ! மரணசாசனம் தயாரித்துவிட்டே இந்த மகத்தான காரியத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களின் வீரத்தை தியாக உணர்ச்சியை, உறுதியை நாம் பாராட்டுகிறோம்! அவர்களின் வீரத்துக்குத் தலைவணங்குகிறோம். மணலிலே இரத்தம் சிந்திய தோழர்களே ! உங்கள் இரத்தம். வீணுக்குச் சிந்தப்படவில்லை. அந்தச் சேதி எண்ணற்ற தமிழரின் இரத்தத்தில் கொதிப்பேற்றி இருக்கிறது. வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம் காணமுடியாத மனப்பான்மையைத் தந்துவிட்டது. நாம்கொல்லப்படக்கூடும், ஆகையினால் இருக்கும் இன்றே இன்னும் கொஞ்சம் இன எழுச்சிப் பணிபுரிவோம் என்ற எண்ணத்தை ஊட்டிவிட்டது. கொஞ்சநஞ்சம் நம்மவருக்கு இருந்துவந்த குடும்ப பாசம். பந்தம் ஆகியவைகளையும் நாட்டு கலாச்சாரத்தைக் காக்க ஏற்பட்டுள்ள அறப்போர், போக்கடித்துவிட்டது. இனி இருப்பது நாம் நமது தொண்டு, அதைக் கண்டு துடி துடிக்கும் ஆரியம் அது ஏவும் அஸ்திரம், அது பாயுமுன் பணிபுரிய வேண்டிய அவசரமான நிலைமை— இவ்வளவே ! நாம், மரணசாசனம் தயாரித்துவிட்டு, இந்த மகத்தான போராட்டத்தில், ஈடுபட்டு விட்டோம்! எனவே, நமது இலட்சியம்— குறிக்கோள் எப்படியும் வெற்றிபெற்றே தீருமென்பது உறுதி !
(முற்றும்)