மிசா காலத்தில் நடந்த கொடுமைகளை மிக விரிவாக தனது தன்வரலாற்று நூலான “நெஞ்சுக்கு நீதி” நூலில் விவரித்துளார் கலைஞர். அதன் சுறுக்கமாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுகவினர் சந்தித்த அடக்குமுறைகள், சிறை அனுபவங்கள், காவல்துறையின் கெடுபிடிகள், மற்றும் அவரது மகன் மு.க. ஸ்டாலின் சிறையில் அனுபவித்த கொடுமைகள் ஆகியவை மிகவும் உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டிருக்கும். இந்த நிகழ்வுகள், ஒரு தலைவராக கலைஞர் எடுத்த முடிவுகளையும், அவரது குடும்பம் சந்தித்த சவால்களையும் வெளிப்படுத்தும்.
மிசா கால கொடுமைகள்
கலைஞர் மு. கருணாநிதி
1. கலைஞரின் எச்சரிக்கை!
தியாகராயநகரில் நடைபெற்ற கோதண்டராமன் – சாந்தா திருமணவிழாவிற்கு தலைமையேற்று தலைவர் கலைஞர் ஆற்றிய உரையின் விவரமாவது:
இந்த மண விழாவிற்கு தலைமை ஏற்பதிலும், மணவிழா நிகழ்ச்சியினை நிறைவேற்றி வைப்பதிலும் நான் மிகுந்த பூரிப்பும் பெருமையும் கொள்கிறேன்.
இன்று காலையில் இருந்து இப்போது நான் கலந்து கொள்கின்ற திருமண விழா மூன்றாவது நிகழ்ச்சியாகும்,
காலையிலே ஐயனாவரத்தில் ஒரு திருமண விழாவிலும், அதை அடுத்து அந்த பகுதியிலே இன்னொரு திருமண விழாவிலும் நானும் நம்முடைய பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களும் கலந்து கொண்டு, அவர்கள் வேறு சில நிகழ்ச்சிகளுக்கு செல்லவும், நான் இங்கே இந்த நிகழ்ச்சி மூலமாக இன்று முற்பகல் முழுதிலும் நம்முடைய கழகத்தவர் இல்லங்களின் திருமணவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்ற வாய்ப்பினை கழகத்தினுடைய முன்னணியினராகிய நாங்கள் பெற்றிருக்கிறோம்.
இந்த திருமண விழா எவ்வளவு எழுச்சியோடும் சீரோடும் சிறப்போடும் நடைபெறுகிறது என்று எண்ணி நான் பூரிப்படைகிறேன் என்றாலும் நம்முடைய நண்பர் ஜெயராமன் தலையிட்டுச் செய்கின்ற எந்த காரியமும் சிங்காரத்திற்குக் குறைவில்லாமல், பட்டாசு வெடிகளுக்குப் பஞ்சமில்லாமல், பழங்களை காட்டி எடுத்துச் செல்வதில் தலைசிறந்த சாமர்த்தியசாலியாக நண்பர் ஜெயராமன் விளங்குவார். விளங்குகிறார் என்பதை நான் மட்டு மல்ல, நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள்.
அத்தகைய நண்பருடைய முன்முயற்சியோடு இந்த திருமண விழா நடைபெறுகிறது.
விழா மேடையில் வந்து அமர்ந்ததும் என்னிடத்திலே ஜெயராமன் ஒரு புகைப்படத்தினைக் காட்டினார். நம்முடைய கழக உடன்பிறப்புக்களில் ஒருவரான கன்னியப்பன் நேற்றைய தினம் ஆளும் கட்சியினுடைய குண்டர்களால் தாக்கப்பட்டு ரத்தம் சொட்டச்சொட்ட மண்டை பிளக்கப்பட்ட நிலையில் எடுக்கபட்ட புகைப்படம் அது. அதுபற்றி புகார் போலீஸ் நிலையத்திலே தரப்பட்டும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையையும் போலீசார் எடுக்கவில்லை என்றும் எனக்குத் தகவல் தரப்பட்டிருக்கிறது.
பாவம் போலீசார் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்! நடவடிக்கை எடுத்துக் கொண்டு போய் ஸ்டேஷனில் வைத்தால் இன்னும் நான்கு ஆளும் கட்சிக்காரர்கள் உள்ளே சென்று போலீசாரையே அடித்துப் போட்டுவிட்டு, யாரைப்பூட்டி வைத்தார்களோ, அவர்களை விடுதலை செய்து கொண்டு வருவதற்கு இன்று ஆளும் கட்சியிலே உள்ளவர்களுக்கு அபாரமான துணிச்சல் இருக்கிறது.
இதை நான் கற்பனையாகச் சொல்லவில்லை. பொள்ளாச்சிக்கு அருகிலே கிணத்துக்கடவு என்கிற போலீஸ் நிலையத்தில் ஒரு கலவரத்தின் காரணமாகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த தன்னுடைய மகனையும் சகோதரனையும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் போலீஸ் நிலையத்திற்குள்ளேயே நுழைந்து “நீ எப்படியடா என்னுடைய மகனை கைது செய்யலாம்” என்று போலீஸ் அதிகாரிகளை மிரட்டி பலாத்காரமாக ஸ்டேஷனிலிருந்து விடுவித்துக் கொண்டு சென்றார் என்ற செய்தியும் பத்திரிகைகளிலே வந்தது.
அப்படி பலாத்காரமாக ஸ்டேஷனிலே சென்று நடந்து கொண்ட அந்த எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதே தவிர அவர் கைது செய்யப்படவில்லை என்ற செய்தியும் பத்திரிகையிலே வந்தது.
போலீஸ் நிர்வாகம் அந்த அளவிற்கு இன்று முடக்கப் பட்டிருக்கிறது.
பக்கத்திலே உள்ள தேனாம்பேட்டையில் சாராயம் காய்சினார்கள் ஆளும் கட்சிக்காரர்கள் – வேறு யார் காய்ச்சுவார்கள் – அவர்களைப் பிடிக்க போலீசார் சென்றபோது அப்படிச் சென்ற போலீஸ் அதிகாரிகளை கட்டி வைத்து – என்ன தலைகீழ் மாற்றம் பாருங்கள். போலீஸ் அதிகாரிகளை ஆளும் கட்சிக்காரர்கள் கட்டி வைத்து, அதில் ஒரு போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்தி காயப்படுத்தி, இவ்வளவும் செய்த பிறகு, அப்படி செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு என்ன ஆயிற்று? அது நீர்மேல் எழுதப்பட்ட எழுத்தாக ஆயிற்றா என்று நாமெல்லாம் எண்ணத்தக்க அளவிற்கு அந்த வழக்கும் கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது
இந்த அளவில் இன்றைக்கு நாட்டிலே நடைபெறுகின்ற சட்டம், ஒழுங்கு, அமைதி பாதிக்கின்ற காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன!
அதிகாரிகளுக்கு தனி நியாயமா?
உங்களுக்குத் தெரியும். நெருக்கடி காலத்தில் சீராளன் என்கின்ற வாலிபனை போலீசார் அடித்துக் கொன்று விட்டார்கள் என்கின்ற ஒரு விவகாரம்,
அதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லாக் கட்சிக்காரர்களும், முன்னேற்றக் கழகத்தார் உட்பட முறையீடு செய்ததற்கு, அண்மையிலே அந்த போலீசார் மீது கொலை வழக்கு போடப்பட்டிருக்கிறது
சீராளன் என்ற வாலிபனை அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்று போலிசார் மீது கொலை வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. 302 வது செக்ஷன் ஆனால் அந்த வழக்கிலே யார் யார் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்களோ அந்த போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்களா என்றால் இல்லை. வேடிக்கை என்ன வென்றால், நானும், பேராசிரியரும், சாதிக்பாட்சாவும், வீராசாமியும் இன்னும் ப.உ. சண்முகமும் மற்றுமுள்ள கழகத்தினுடைய தலைமைக் கழகச்செயலாளர்களும் இந்திரா காந்தியை கொலை செய்ய முயற்சிக்க சதி நடத்தினோம் எத்தனை பாருங்கள் – இந்திரா காந்தி தமிழகம் வந்தபோது அந்த அம்மையாரை கொலை செய்ய முயற்சிக்க ஒரு சதி நடத்தினோம் என்ற 307வது செக்ஷன்போட்டு எங்களையெல்லாம் கைது செய்து நாற்பது நாள் சிறைச்சாலையிலே எம்.ஜி. ராமச்சந்திரன் வைத்திருந்தார்.
நான் அவரைக் கேட்கிறேன். கொலை செய்ய முயற்சிக்க சதி செய்தார்கள் என்பதற்கு பிரிவு 307, கொலையே செய்தார்கள் என்பதற்கு பிரிவு 302.
307வது செக்ஷனிலே வழக்கு போடப்பட்ட எங்களை சிறையிலே வைத்திருந்தாய், ஆனால் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 302வது செக்ஷன்படி வழக்கு போடப்பட்டவர்களை இன்னும் நீ கைது செய்யவில்லை. நீங்கள் யோக்கியர்களைப் போல நாட்டிலே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் நீதியைப் பற்றி பேசுகிறீர்கள்? நேர்மையைப்பற்றிப் பேசுகிறீர்கள்? சட்டத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? உங்களுக்கும் நீதியைப் பற்றி பேசுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. என்று எனக்குப் புரியவில்லை!
நான்தான் உத்தமன் என்று முதலிலேயே சொல்லி விட்டால், அப்படிச் சொன்னவனெல்லாம் உத்தமனாகிவிட முடியுமா?
இன்னொருவரைப் பார்த்து நீ குற்றவாளி என்று சொல்லி விட்ட காரணத்தாலேயே குற்றம் சுமத்தியவன் நல்லவனாகி விடமுடியுமா? என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனவே இன்றைக்கு நடைபெறுகின்ற எம். ஜி. ஆருடைய அரசாங்கத்தில்
நீதி செத்துப் போய்விட்டது !
சட்டம் முடங்கிக் கிடக்கிறது !
நேர்மைக்கு இடமே இல்லை!
நிர்வாகம் ஏற்கனவே ஸ்தம்பித்து போய் விட்டது!
இவரால் எதுவும் செய்ய முடியாத காரணத்தால் ஆடத்தெரியாத நடனக்காரி மேடைகோணல் என்று சொன்னதைப் போல, இவரால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாத காரணத்தால், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோயில் ஆண்டி என்பதைப் போல் அதிகாரிகள் மீது இன்றைக்கு பழியைப்போடத் தொடங்கி இருக்கிறார்.
“நாங்கள் செய்கிற நல்ல காரியங்களையெல்லாம் அதிகாரிகள் கெடுக்கிறார்கள். அதிகாரிகள் ஊழல் செய்கிறார்கள்” என்று இன்று அதிகாரிகள் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்.
இந்த ஒரு சம்பவம் போதாதா? மண்டை பிளக்கப்பட்டிருக்கிறார் கன்னியப்பன், ரத்தம் உடலெல்லாம் குபு குபுவென வழிய அதை புகைப்பட மெடுத்து போலீஸ் ஸ்டேஷனிலே காட்டி புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும் போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லையென்றால் காவல் துறையின் கைகளை இன்றைக்கு எம், ஜி. ராமச்சந்திரன் கட்டிப் போட்டிருக்கிறார்.
அவர்கள் நல்லவைகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அனுமதிக்கப்படவில்லை.
காவல்துறை எதற்கு பயன்படுத்தப்படுகிறது? பத்திரிகைக் காரர்களை மிரட்ட பயன்படுத்தப்படுகிறது.
போட்டி ஊர்வலம் நடத்தி, 10 ஆயிரம் பேர்தான் வந்தார்கள் என்றாலும் காவல் துறையினர் பத்திரிகைக்காரர்களுக்கு செய்தி கொடுக்கிறார்கள். 50 ஆயிரம் பேர் என்று போடு, போடாவிட்டால், உன்னுடைய பத்திரிகை அலுவலகத்திற்கு மின்சாரம் நிறுத்தப்படும் என்கின்ற அளவிற்கு பத்திரிகைக்காரர்கள் மிரட்டப்படுகிறார்கள். பாவம் என்ன செய்வார்கள் பத்திரிகைக்காரர்கள்!
லட்சக்கணக்கில் வந்த நம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் வந்தார்கள் என்றும், 10 ஆயிரம் பேர் வந்த அவர்களுடைய ஊர்வலத்தை 50 ஆயிரம் பேர்கொண்ட ஊர்வலம் என்றும் போடவேண்டிய அவஸ்தைக்கு இன்றைக்கு பத்திரிகைக்காரர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.
இந்திரா காந்தியின் நெருக்கடி காலத்தில் கூட இவ்வளவு தொல்லை பத்திரிகைக்காரர்களுக்கு இருந்ததாக தெரியவில்லை. இந்திரா காந்தியே மேலப்பா இங்கே இருக்கின்ற இந்த ஆட்சி இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சியின் நிழலாகக் கூட அல்ல, அதை விட அக்கிரமமான ஆட்சியாக இன்றைக்கு இருக்கிறது என்று எண்ணுகின்ற அளவிற்கு மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள். வழக்குகளைப் போடுவேன் என்கின்ற பயமுறுத்தல்கள் இத்தனையும் இன்றைக்கு நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நான் இவைகளையெல்லாம் பேசுவதற்கு காரணம் இதற்கு நண்பர் எம். ஜி. ராமச்சந்திரன்தான் வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார்.
ஏனென்றால் திருமண மேடையானாலும், வேறு எந்த நிகழ்ச்சியானாலும், அரசியலைப்பேசுவது. என்னைப் பழி கூறிப் பேசுவது என்பது இன்றைக்கு அவருடைய பணியாக இருந்து வருகிறது.
எனவேதான் நண்பர் ஜெயராமன் காட்டிய இந்த புகைப்படத்தை யொட்டி, இப்படியெல்லாம் நம்முடைய நண்பர்கள் தாக்கப்படுகிறார்கள், போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவார்களேயானால் நான் போலீசாருக்குச் சொல்லிக் கொள்கின்றேன். பிறகு எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்கின்றாரே பொதுமக்கள் அந்த பொதுமக்களே நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிடுவார்கள். இதை நான் போலீசாருக்கு எடுத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
அப்படிப்பட்ட தியாகத்தைச் செய்கின்ற, ரத்தத்தைச் சிந்துகின்ற, நரம்புகளை ஒடித்துக் கொடுக்கின்ற, மாற்றார்களுடைய தாக்குதல்களுக்கு ஆளாகின்ற அடக்கு முறைகளை ஏற்றுக்கொள்கின்ற, கன்னியப்பனைப் போன்ற ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்டதுதான் கழகக் குடும்பம். அந்த குடும்பத்திலே ஒருவர் தான் கோதண்டராமன் அவர் இன்று நம் முன்னிலையில் நம்முடைய இனிய வாழ்த்துக்களையெல்லாம் பெற்று சாந்தாவை தன்னுடைய வாழ்க்கைத் துணை நலமாக பெறுகின்றார். அவர்களுடைய வாழ்வு வளம் பெற்ற வாழ்வாக அமைந்திட வேண்டும் என்று நான் என்னுடைய விழைவினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மணம் புனைந்து கொள்கின்ற அவர்கள், வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல தொண்டாற்ற வேண்டும். பெரியார் பாதையிலும், பேரறிஞர் அண்ணா வழியிலும் வள்ளுவர் வகுத்த வழியிலும் அவர்கள் வாழ்வு அமையுமாக என்று கூறி உங்கள் இதய முன்னிலையில், இதய வாழ்த்துக்களோடு அவர்களுடைய திருமண விழாவினை நிறைவேற்றி வைக்கின்றேன்.
இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் பேசினார்.
தலைவர் பங்கேற்ற மூன்று திருமணங்கள்
தலைவர் கலைஞர் அவர்கள் இன்று சென்னையில் கழக இல்லத்தைச் சேர்ந்த மூன்று திருமண நிகழ்ச்சிகளுக்கு தலைமையேற்று திருமணங்களை இனிதே நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
முதலாவதாக கழக செயல்வீரர் திருமங்கலம் கோபால் என்கின்ற வெ. கோபாலகிருஷ்ணனுக்கும் பு. சரோஜினிக்கும் ஐ. சி. எப். கம்பர் அரங்கில் நடைபெற்ற திருமணத்திற்கு தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையேற்று சிறப்புற நடத்திவைத்தார் பொதுச்செயலாளர் பேராசிரியர் முன்னிலை வகித்தார்.
விழாவிற்கு வந்தோர்களை தலைமை நிலையச் செயலாளர் ஆற்காடு வீராசாமி எம். எல். சி. வரவேற்றார்.
மதுரை மாவட்டச் செயலாளர் பொன். முத்துராமலிங்கம் திருச்சி மாவட்டச் செயலாளர் எம். எஸ். வெங்கடாசலம், வேலூர் நாராயணன், கழக மாணவர் அணி இணைச் செயலாளர் வை. கோபால்சாமி. பெ. சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்க வாசகம் முன்னாள் அமைச்சர் அன்பில், கழகப்பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முரசொலி சங்கரய்யா நன்றியுரை கூறினார்.
அடுத்து 55-வது வட்டக் கழக துணைச் செயலாளர் மதிமாறன் என்கின்ற கோ. குருச்சந்திரனுக்கும் சாந்தகுமாரிக்கும் நம்மாழ்வார்பேட்டை சமூகநல கூடத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் பொதுச்செயலாளர் பேராசிரியர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் பொ. மோகன் வரவேற்று பேசினார்.
புரசைப் பகுதி கழக செயலாளர் எழிலன். திண்டிவனம் தங்கவேல் எம். எல்.சி., வேலூர் நாராயணன் தலைமை நிலையச் செயலாளர் ஆற்காடு வீராசாமி எம். எல். சி. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இத்திருமணத்தை இனிதே நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கிய தலைவர் கலைஞர் அவர்கள் அடுத்து தியாகராயநகர் எல். ஆர். சுவாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கோதண்டராமன் – சாந்தா திருமண விழாவிற்கு தலைமையேற்று நடத்தி வைத்தார்.
தியாகராயநகர் பகுதிச் செயலாளர் ஜெயராமன் வரவேற்புரையாற்ற கழகச் சட்டமன்ற உறுப்பினர் புருசோத்தமன் தலைமை நிலையச் செயலாளர் ஆற்காடு வீராசாமி எம். எல். சி, கழக பொருளாளர் எஸ். ஜே. சாதிக்பாட்சா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
2. மிசாக் கொடுமை
நெஞ்சை உருக்கும் அந்த விவரங்களில் சில பகுதி கீழே தரப்பட்டுள்ளது.
நெருக்கடி நிலை நிலவியபோது, தமிழ்நாட்டில் அரசியல் அடிப்படையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மரநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக் கப்பட்டனர்!
இவர்களுள் சுமார் 900 பேர் நீண்டகாலச் சிறைவாச மிருந்தனர் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிகாரவர்க்க வட்டாரமோ ஐநூறு பேர்தான் என்கிறது. 1975 ஜூன் 25முதலே அப்போது தடைசெய்யப்பட்டவை என அறிவிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்த்த கட்சிகளின் உறுப்பினர்கள் என்று கூறப்படுபவர்கள் மத்திய அரசின் ஆலோசனை பேரில் சிறை வைக்கப்பட்டார்கள்.
அவர்களுள் ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கக்தைச் (ஆர்.எஸ்.எஸ்) சார்ந்த 53 பேர் அதன் தலைவர் ரங்கசாமித் தேவர் உட்பட அடக்கம். மற்றவர்கள், ஜமா – அத் – ஏ – இஸ் லாமியையும், தடை செய்யப்பட்ட வேறு அமைப்புகளையும் சார்ந்தோராவர்.
1975 நவ, 14 முதல் 1977 ஜன. 26 வரை, லோக்சங்காஷ சமிதி என்ற அமைப்பு (தமிழ்நாட்டில்) மறியல் தடை மீறிய ஊர்வலம் போன்ற அறப்போராட்டங்கள் பலவற்றை நடத்தியது. இது, நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்த்து நடத்தப்பட்டது இதில் பெண்டிர் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைதாகினர்.
அந்த அறப்போர் வீரர்களின் கடைசி அணி 55 பேரைக் கொண்டது.
ஜெயப்பிரகாசர் சீடர் சர்வோதயத் தலைவர் ஆர் சுப்ரமணியம் தலைமையில் அமைந்த இந்த அணி, 1976 ஜனவரி 26 (குடியரசு நாளன்று) சென்னை மெரீனா கடற்கரையில் கைதானது. அன்னார், சென்னை தலைமைச் சிறையில் காவல் கைதிகளாக வைக்கப்பட்டனர்.
1976 சனவரி 31 அன்று தி.மு.கழக ஆட்சி கவிழ்க்கப் பட்டது அப்போது தி மு கழகம், பழைய காங்கிரஸ், ஜன சங்கம், மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சி ஆகியவற்றைச் சார்ந்த தலைவர்களும் தீவிர உறுப்பினர்களும் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.
புதிய வரவுகள்
பெப்ரவரி முதல் நாள் தொட்டு – கைதி செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் சென்னை நகரத் தலைமைச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே தனித்த கொட்டடி ஒன்றில் வைக்கப்பட்டனர்
அந்தக் கொட்டடிக்கு அருகே உள்ள மற்றொருகொட்டடியில் அறப்போர் வீரர்களும் மற்றவர்களும் வைக்கப்பட்டிருந்தனர்.
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னைத் தலைமைச் சிறைச் சாலையில் பல அநியாயங்கள் நடந்தன. அந்த விவரங்களை* நேரடியாகக்கண்ட அறப்போர்வீரர் ஒருவர் கூறுகிறார்: ”அவசர நிலைப் பிரகடன எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்ட நாங்கள் 95 பேர் இரண்டாம் வகுப்புக் கைதிகளுக்கான கொட்டடி ஒன்றின் முதல் மாடியில் காவல்வைக்கப்பட்டிருந்தோம். கீழ்த்தளத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ரங்கசாமி தேவர் உட்பட மிசாகைதிகள் பலர் வைக்கப்பட்டிருந்தனர்.
சனவரி 31 அன்றுமாலை தி.மு.க. அரசு கவிழ்க்கப்பட்டுக் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்ட செய்தியை கேள்விப் பட்டோம். கைதுகள் பற்றி வானொலி தகவல் ஏதுமில்லை. ஆனாலும் சிறைக்கு புதிய வரவுகள் வருமென்று நாங்கள் எதிர் பார்த்தோம்.
தொழு நோயாளி நடுவே ……
“மறு நாள் பிப்ரவரி முதள் நாள் கைதான தி.மு.க, தி.க. மற்றும் பழைய காங்கிரஸ் தலைவர்கள் பற்பலர் எம் சிறைக்கு ” கொண்டுவரப்பட்டனர்.
அவர்கள் எமது கொட்டடிவழியாக மற்றகட்டிடங்களோடு தொடர்பில்லாமல் தனித்திருந்த கட்டிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அந்தக் கட்டிடம் தொழு நோயாளிகளுக்கும் தொத்து நோய்களுக்கும் உரியகொட்டடியாகும். அந்தக் கொட்டடியைச் சுற்றி ஒரு வளைவுச் சுவரும் உண்டு.
எமதுகொட்டடியில் கீழ்த்தளத்திலிருந்தோர் புதியவரவுகள் தம் கொட்டடி வழியே நடத்திச் செல்லப்படும்போது அவர்களது பெயர்களை இரைந்து கூறினார்கள்.
மாலைப்போதில் நாங்களெல்லாம் ஓரிடத்தில் கூடி வழி பாட்டு பாடல்களை பாடுவதும், மதம் அல்லது நாட்டுப்பற்று தொடர்பான ஏதேனும் ஒரு பொருள் புற்றி யாரேனும் ஒருவர் சொற்பொழிவு நடத்துவது எமக்கு வழக்கம்.
பிப்ரவரி 2 அன்று இரவு 8.30 மணிவாக்கில் நாங்கள் வழக்கமாக வழிபாட்டுப் பாடல்களைப் பாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கையில், சிலர் அமைதி இழந்தனர்.
தூரத்தே கூச்சல்களும் ஓலங்களும் கேட்டன. எங்களில் பலர் சாரளரம் நோக்கி விரைந்தோம். அந்தச்சாளரங்கள் தரையிலிருந்து இரண்டடி உயரமுள்ளவை. கிழக்குப் பார்த்தவை.
தனித்த கொட்டடியில் எங்கள் கொட்டடியிலிருந்து ஏறத் தாழ ஐம்பது அடி தொலைவில் உள்ளது. எங்கள் சாரளத்திலிருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும், உட்பகுதியையே நாங்கள் பார்க்கமுடியும்,
நாங்கள் எல்லோரு எங்கள் உரையாடலைத் திடீரென நிறுத்தினோம். அந்த அமைதியினூடே கூச்சல்களையும் ஓலத்தையும் நாங்கள் தெளிவாகக் கேட்க முடிந்தது.
அப்போது அண்டைக் கொட்டடியில் நாங்கள் கண்ட காட்சியை – எங்களில் யாராலும் ஒருபோதும் மறக்கவே முடியாது.
அந்தத் தனி கொட்டடியின் இருதளத்திலும் சுமார் ஆறு ஆறு அறைகளிருந்தன கீழ்த்தள அறைகளின் கதவுகளை ஒன்றடுத்து ஒன்றாய் ஒரு கூட்டத்தவர் திறப்பதை கண்டோம்!
அந்த அறைகளின் உள்ளே எரிந்தகுறைந்த வெளிச்ச மின் விளக்குகளைக் கொண்டு. அறைக்கதவுகள் திறக்கப்படுவதையும் ஏறத்தாழ முப்பது அல்லது அதற்கு மேற்பட்டோர் நுழைவதையும் காண முடிந்தது. அவர்களுள் சிலர் காக்கி உடையும் மற்றையோர் வெள்ளை உடையும் உடுத்தியிருந்தார்கள். அவர்கள் சிறைக்காவலாளிகளும் தண்டனைக் காவலாளிகளும் ஆவர்.
ஒவ்வொரு அறையிலும் பாதுகாப்புக் கைதிகள் மூவர் அல்லது அதற்கு மேலிருக்க வேண்டும். அவர்கள் வெளியே வரும் போது, தடித்த சுழிகளை வைத்துக் கொண்டிருந்த காவலாளிகள் அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டு அடிக்கத் துவங்கிவிட்டார்கள் – வலியின் ஓலம் கூடக்கூட அடியின் வேகமும் கூடியது.
மிருகத்தனமாய் தாக்கப்பட்டனர்
அன்றிரவு பாதுகாப்புக் கைதிகள் சுமார் இருபதுபேர் அந்த அடிதடிக்கு பலியாகிருப்பார்கள்,
ஒவ்வொரு கைதியையும் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட காவலாளிகள் சுற்றிவளைத்துக்கொண்டு, தாக்குதல் திட்டமிட்ட முறையில் நடந்தது. வேண்டுமென்றே நடந்தது. இந்தத் தாக்குதல் ஏறத்தாழ ஒருமணி நேரம் நீடித்தது. அடிவாங்கி யோருள் பெரும்பாலோர் மயங்கி கீழே விழுந்தனர். அவர்கள் மற்றவர்களால் அறைக்கு தூக்கிச் செல்லப்பட வேண்டியிருந்தது.
இது பின்னர் பல இரவுகள் தொடர்ந்தது. அநேகமாக அதேநேரத்தில்தான் நடந்தது. முதல்நாள் பார்த்ததற்குப் பின்னர் நாங்கள் அதிகமாகப் பார்க்க முடியவில்லை.
மிசா கைதிகள் மிருகத்தனமாக தாக்கப்பட்ட செய்தி சிறையெல்லாம் பரவிவிட்டது. பின்னர் நாங்கள் தெரிந்து கொண்ட படி சிறைக்கு வெளியேயும் பரவிவிட்டிருக்கிறது.
பிப்ரவரி 3 அன்று காலை கொத்தனார்கள் சிலர் வந்து தனிமைக் கொட்டடியின் வளைவுச்சுவரை உயர்த்தத் துவங்கினர்.
அதன்பின் அந்த கொட்டடியினுள் உள்ளே நடப்பதை எங்கள் சன்னல்கள் வழியே நாங்கள் பார்க்க முடியவில்லை. எனினும் ஒவ்வொரு இரவும் பயங்கர ஓலம் தொடர்ந்து கேட்டது. மறுநாள் காலை எங்களில் சிலர் சொந்தப் பணிகளுக்காக – ஜெயிலரைப் பார்க்கப்போனோம். அப்போது அவர் “நேற்றிரவு என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆம் எச்சரிக்கையாக இருங்கள் ஒழுங்காய் நடந்து கொள்ளுங்கள்! மாநில நிர்வாகம் கைமாறி விட்டது!” என்று பயங்கரமாக எச்சரித்தார்
பிப்ரவரி 8 அன்றோ 3 அன்றோ நாங்கள் சிறைக் கண்காணிப்பாளர் (வித்தியாசாகரன்) அலுவலகத்தினருகே காத்திருந்தோம், அப்போது தி.மு.கழக எம்.பி. ஆன முரசொலிமாறன் அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுப்பப் படுவதற்காக அங்கு கொண்டுவரப்பட்டார், அவரால் நிற்கவும் முடியவில்லை. நடக்கவும் முடியவில்லை.
ஆம்புலன்ஸ் வண்டி வரும் வரை தரையிலேயே நிலை குலைந்து கிடந்தார். தனிமைக் கொட்டடியில் இருந்து வேறு பலரும் அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்வாறு கூறினார் அந்த அறப்போர் வீரர்
அவர்களது கொட்டடிக்கும் தனிமைக் கொட்டடிக்கும் இடையேயுள்ள சிறைச் சமையலறையில் சில விசித்திரமான நிகழ்ச்சிகளை கண்டார்கள். அந்த அறப்போர் வீரர்கள்.
தனிமைக் கொட்டடியில் இருந்த மிசாக் கைதிகளுக்கு அங்கு உணவு தயாரிக்கப்பட்டது. அங்கு சிறை அலுவலர் ஒருவர் வந்தார். பதார்த்தத்தை எடுத்து சுவை பார்த்தார். உடனே சமையல்காரனை அந்தப் பதார்த்தத்தில் கண்டபடி உப்பை அள்ளிப் போடச்சொன்னார்.
பிப்ரவரி முதல் வாரங்களில் இது வழக்கமான அம்சமாகிவிட்டது என்கிறார்கள் பாதுகாப்புக் கைதிகள்.
தாராளமாக மண் கலந்த சோறு, வேப்பெண்ணெய் கலந்த சாம்பார், ஒவ்வொரு பதார்த்தத்திலும் தாறுமாறாகப் போடப்பட்ட உப்பு ஆகியன அந்த மிசா கைதிகளுக்குத் தரப்பட்டன.
மிருகத்தனமானத் தாக்குதலுக்கு ஆளானோர் முன் முதல்வர் கருணாநிதியின் புதல்வர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத்தைச் சார்ந்த விடுதலை கி. வீரமணி விடுதலை சம்பந்தம்.
நடிகர் எம்.ஆர். ராதா. தி. மு. க. நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு மற்றும் பலர் அடக்கம்.
விடுதலை மேலாளரான என். எஸ். சம்பந்தம் (50 வயது) கைதாவதற்குச் சில மாதங்களுக்கு முன் தான் முதுகெலும்பில் ஒரு கோளாறுக்காக இருமுறை அறுவை சிகிச்சை செய்யபப்பட்டிருந்தார்.
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இடத்திலேயே அடிகள் விழுந்தன. அவரை சக்தியற்றவராக்கிவிட்டது. 1976 டிசம்பரில் மீண்டும் ஒருமுறை சிகிச்சை செய்யவேண்டியதாகி விட்டது.
தமது விடுதலைக்குப் பின்னும் அரசாங்கம் மாறியதற்குப் பின்னும், சம்பந்தம் புதிய தலைமை அமைச்சர் புதிய உள்துறை அமைச்சர் புதிய மின்சார அமைச்சருக்கும் மற்றுமுள்ளவர்களுக்கும் – சிறையில் நடந்தவற்றை விளக்கி எழுதியுள்ளார், அதில் விசாரனை வேண்டுமென்றும் தொடர்புடைய சிறை அலுவலர்களுக்கு கடுந் தண்டனை விதிக்கவேண்டுமென்றும் கோரி புள்ளார்.
இந்த அடிதடித் தாக்குதல்கள் சிறைக் கண்காணிப்பாளர் கே.வித்தியாசாகரின் திட்டவட்டமான உத்திரவுகளின் கீழும், கூடுதல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், சிறைப் பொறுப்பாளர் கயூம் ஆகியோர் நேரடிப் பார்வையிலும் நடத்தன என்று பாதுகாப்புக் கைதிகள் கூறுகிறார்கள். (கயூம்) என்றால் அன்பு என்று பொருள்.
அடிபட்ட பாதுகாப்புக் கைதிகளிடம் அவர்களது மனைவி மார்களைத் தொடர்புபடுத்தி ஆபாசமாகப் பேசுவதில் மகாலிங்கம், உபயதுல்லா என்ற இரு காவலாளிகள் கில்லாடித்தனம் பெற்றிருந்தனர் என்றும் அவர்கள் கூறினர்.
ஏறத்தாழ பதினைந்து நாட்கள் கழித்து, இந்த மிசா கைதிகளெல்லாம் தனிமைக் கொட்டடியை விட்டு அகற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் அல்லது படுத்த படுக்கையாகிவிட்டனர்.
1976ஆண்டு நடுவாக்கில் மாநில உள்துறை செயலாளர் சென்னை தலைமைச் சிறையை பார்க்கவந்திருந்தார். அப்போது மிசா கைதிகள் 134 பேர் அவரைத் தனியே கண்டு சிறையில் நடந்த கொடுமைகள் விவரமாக எழுதப்பட்ட மனு ஒன்றைத் தந்துவிட்டனர்!
அவ்வளவுதான்! சிறைக் கண்காணிப்பாளர் வித்தியாசாகரனுக்குக் கோபம் வந்துவிட்டது. மிசா கைதிகளுக்கு சமையல் “வேலைக்காக அனுப்பிக் கொண்டிருந்த ஏவல் கைதிகளை (ஆர்டர்லிகளே) நிறுத்தி விட்டார்.
நானே இந்தச் சிறையின் ராஜாக்களுக்கெல்லாம் ராஜா! உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும்! என்று கொக்கரித்தாராம் வித்தியாசாகரன்!
மிசாக் கைதிகள் அதை எதிர்த்து பட்டினி போராட்டம் துவக்கப்போவதாக சொல்லிவிட்டனர்! சிறைத்துறை மாநிலத் துணைத்தலைமை அதிகாரி உடனடியாகத் தலையிட்டு அவர்களை அமைதிபடுத்த வேண்டியதாயிற்று. சமையல்வேலைக்கு ஏவலாளிகள் திரும்பவும் வந்தனர்!
“சிவப்புநாடா” பழைய காங்கிரஸ் ஏடு. இதன் ஆசிரியர் கயிலை மன்னன் அவர்கள், தனிமைக்கொட்டடியில் அநேகமாகப் பதினைந்துநாள் தொடர்ந்து அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை தலைமைச் சிறையிலிருந்த பழைய காங்கிரஸ் தலைவர்களுள் கோடம்பாக்கம் டி. அய்யாவு கொண்டல்தாசன் (இரு வரும் ஜனவரி 31 அன்றே கைது செய்யப்பட்டனர்). பழைய காங்கிரஸ் கட்சி செயலாளர் டி. பி ஏழுமலை, மாணவர் தலைவர் நேதாஜி, பேச்சாளர் ஜெபமணி, இலா. அன்புமணி, எஸ் ஜி. விநாயகமூர்த்தி (இவர் பின்னர் கட்சி மாறிவிட்டார்) கோ.கலிவரதன் மகளிர் தலைவர் ரமணிபாய் முதலியோர் அடக்கம்.
ஜனசங்கத் தலைவர் அறுவரும், சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்த நால்வரும் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் இருந்தனர்.
மார்க்சியப் பொதுவுடைமையருள் பெரும்பாலோர் தொழிற் சங்கத்தலைவர்கள். அவர்கள், சி.ஐ.டி.யு. தலைவர் ஹரிபட் உட்பட ஏறத்தாழ நாற்பது பேராவர்.
வி.பி. சித்தன், சி. கே. மாதவன் போன்றோர் மீது பிடி வாரண்டுகள் இருந்தன. இவர்கள் இருவரும் தலைமறைவாயினர் போக்குவரத்து தொழிலாளர்களின் மார்க்சிஸ்ட் தலைவரும் கைதாகாமல் தப்பித்து விட்டார். ஆனால் ஏமாந்து ஆத்திரம்கொண்ட போலீசார் அவரது பெயர் கொண்ட போக்குவரத்து தொழிலாளி ஒருவரைக் கைது செய்துவிட்டனர்.
அசல் நபர்கள் தப்பிவிட்ட போது அவர்களது பெயர்களைக் கொண்ட வேறு நபர்கள் கைது செய்யப்பட்டதற்கு, உதாரணம் தருகின்றன.
மிசா கைதிகளான பெண்களும் பலநேரங்களில் ஆண்களைப் போலவே மோசமாக நடத்தப்பட்டனர்.
நள்ளிரவில் நடந்த கொடுமை
பழைய காங்கிரஸ் மகளிர் அணி அமைப்பாளர் மணிபாய் 1976 பிப். 24 அன்று காவல் துறையினரிடம் சரணடைந்தார். சென்னை தலைமைச் சிறையில் வைக்கப்பட்டு அங்கு ஏப். 15 வரை இருந்தார்.
(மறுபடியும்) ஆகஸ்ட் 5 அன்று ரமணிபாய் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 5அன்று நள்ளிரவு வாக்கில் சென்னை நகரக் காவல்துறை அசிஸ்டெண்ட் கமிஷனர் ஒருவரும் கான்ஸ்டபிள்கள் சிலரும் அவரதுவீட்டுக்குள்புகுந்தனர். விசாரணை ஒன்றுக்காகத் தங்களோடு வரவேண்டுமென்றனர்
இரவில் வெகுநேரம் ஆகிவிட்டதாலும், வீட்டில் ஆண் உறவினர் எவரும் துணைக்குவர இயலாததாலும் தான் வர முடியாதென்றார் ரமணிபாய்.
உடனே அந்த அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆபாசமாகப் பேசத்துவங்கிவிட்டார். ரமணிபாய் கைது செய்யப்படுவதாகவும் கூறிவிட்டார்கள்.
வாரண்டைக் காட்டு என்று கேட்டதும் அந்த ஆசாமி மேலும் கோபமாய் கத்த ஆரம்பித்துவிட்டார்.
முடிவாக ஒருசமரசம் ஏற்பட்டது. அதன்படி (காவலர்களோடு செல்வதற்கு முன்னர்) தனது கட்சித் தலைவர் ஒருவருடன் பேச அனுமதிக்கப்பட்டார், ரமணிபாய்.
ஏறத்தாழ நள்ளிரவு ஒரு மணிவாக்கில் ரமணிபாய் நகரக் காவல்துறை ஆணையர் இல்லத்திற்குக் கொணரப்பட்டார்.
அப்போது ரமணிபாயின் தோழரும் வழக்கறிஞர் ஒருவரும் கூட இங்கு வந்து சேர்ந்தனர்.
அசிஸ்டெண்ட் கமிஷனரோ இருளில் நிறுத்தப்பட்ட போலீஸ் வேனுக்குள்ளேயே இருந்து விட்டார். வெளியே வரவில்லை. பழைய காங்கிரஸ் தலைவர் மற்றும் வழக்கறிஞர் வற்புறுத்தலைத் தாங்க முடியாத காவல் துறையினர் இரவு 1-30 மணிவாக்கில் மிசா உற்கரவை ‘டைப்’ செய்து தந்தனர்,
ஆம் அங்கே “மிசா” கைது உத்தரவுக்கான வெற்றுத்தாள்கள் நகர ஆணையரின் கையெழுத்துடன் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருக்கின்றன.
பின்னர் ரமணிபாய் தலைமைச் சிறைக்கு இட்டுச் செல்லப் பட்டார்.
அவரது கட்சித்தலைவர்கள் மாநிலக் காவல் துறைத் தலைவரிடம் இது பற்றிப் புகார் செய்தபோது இந்த விவகாரம் மொத்தமும் தமக்குத் தெரியாது என்றாராம்.
காச நோயாளி மத்தியில்
அவர் மன்னிப்புக் கோரியதோடு; “அரசியல்வாதிகளான மகளிர் எவரும் இனி இரவில் கைது செய்யப்பட மாட்டார்கள். பெண் கைதிகளை அழைத்துச் செல்ல பெண் போலீசாரே எப்போதும் வருவர் என உறுதி கூறியதாகவும் தெரிகிறது.
திருச்சி மாவட்ட பழைய காங்கிரஸ் மகளிர் அணி அமைப்பாளர் திருமதி திலகவதி சிறைக் கொடுமைக்கு பலியான மற்றொருவர்.
நாற்பது வயதான அவர் உயரம் கட்டையானவர்: நலிந்த உடலினர். பழைய தலைமையமைச்சரை மேடையில் தாக்கிப் பேசியதாக இந்தியப் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி அவர் கைது செய்யப்பட்டார். 1976 பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 1 வரை அவர் திருச்சிச் சிறையிலும் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த தூத்துக்குடி கொக்கிரகுளம் சிறைகளிலும் வைக்கப்பட்டிருந்தார்.
தூத்துக்குடி துணைச்சிறை நிலைமைகள் மிக மோசமானவை என்று கூறுகிறார் திலகவதி. அவர் பதினைந்துக்குப் பத்தடி அகல முள்ள ஓர் அறையில் வேறு பன்னிரு பெண்களோடு வைக்கப்பட்டிருந்தார். அந்தப்பெண்கள் யாரும் அரசியல்வாதிகளில்லை அவர்களிலே விபச்சாரிகளும் உண்டு. பலர் காசம் மற்றும் சில நோய் பெற்றவர்.
உணவருந்த எல்லோருக்கும் பொதுவாக ஒரே தட்டுதான். அதையே பகிர்ந்து கொள்ளும்படி திலகவதி நெருக்கடிக்கப்பட்டார். அத்தட்டைக் கழுவுவதற்கும் வசதியில்லை. ஆடை மாற்றிக்கொள்ளக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. அங்கு உணவு எப்போதுமே மட்டமாகத்தான் சமைக்கப்பட்டிருந்தது.
அந்ததுறையிலிருந்தோர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தான் இயற்கை கடன்களைக் கழிக்கக்கூட வெளியே போய்வர அனுமதிக்கப்பட்டனர்.
அந்த அறைக் கைதிகளில் பலர் அறையின் ஓரத்திலேயே தம் உபரதைகளை தணித்துக் கொள்ள துவங்கிவிட்டனர்.
காசநோயாளிகள் அடிக்கடி தரையிலேயே வாந்திஎடுக்கவும் உமிழவும் செய்தனர். இந்தக் குப்பைக் கூளங்களை அப்புறப் படுந்த தரையை மெழுக பினாயிலோ வேறு பொருள்களோ தர மறுத்துவிட்டனர் சிறை ஆசாமிகள்!
அறைக்கு வெளியே பாண்டம் ஒன்றில் குடி நீர் வைக்கப்பட்டிருந்தது. கம்பியின் வழியே கை நீட்டித்தான் தண்ணீர் சேந்த வேண்டிவந்தது. பலநேரங்களில் குவளையில் தண்ணீர் வராது. ஆம் அப்பானையில் பலமணி நேரம் தண்ணீர் இல்லாமலே இருக்கும்!
வயதான தந்தை, திலகவதி சிறைப்பட்ட 95வது நாள் கழித்த பின் தான் வந்து பார்க்க முடிந்தது. அதுவரை அவர் வைக்கப்பட்டிருக்கும் இடம் அவரது குடும்பத்திற்கே தெரியாது. பொறுப்பில் விடுவிக்கப்பட்டு ஓராண்டு கழித்தபின் இந்த ஏப்ரலில் நீதிமன்றத்துக்கு வரும்படி அவருக்கு சம்மன் வந்தது. இன்னும் அந்த வழக்கு முடியவில்லை. இழுத்துக்கொண்டே போகிறது.
அவர் ஆணயிட்டால்…
(தமிழகத்தில் நடந்த) அரசியல் கைதுகளெல்லாம் மிசாவின் கீழோ டி.ஐ.ஆர் கீழோ வேறு சட்ட மீறலுக்காகவோ நடக்கவில்லை. இந்திரா காங்கிரஸ் தலைவர்கள் சொன்னாலே போதும்; காவலர்கள் கைது செய்யத் துவங்கிவிட்டார்கள்.
தாக்கினாலும் தாங்கினாலும்
அவர் என்னைத் தாக்கி எழுதினாலும் – தாங்கி எழுதினாலும், தாக்கிப் பேசினாலும் தாங்கிப் பேசினாலும் இரண்டிலுமே நான் அதிக ஆத்திரம் அடைவதில்லை.
காரணம் தாக்கினாலும் தாங்கினாலும் அதிலே தமிழ் கொஞ்சுகிற காரணத்தினால் நான் அவர் தாக்குகிற நேரத்தில் ஏதோ ஓரிரு முறையைத் தவிர வேறு எந்த நேரத்திலும் மனம் புண்பட்டதில்லை.
எனக்கும் கவிஞருக்கும் பகை உண்டு என்று மற்றவர்கள் கருதத்தக்க அளவுக்கு ஒரு சூழல் உருவாகி, இரண்டு மூன்றாண்டுக்காலம் ஒருவரை ஒருவர் சந்திக்காமலும் பேசிக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளாமலும் இருந்தோம். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்று கருதுகிறேன். சென்னையில் ஒரு இடத்திலிருந்து நான் படத்திற்கான கதை வசனங்களை எழுதிக் கொண்டிருந்தபோது அவசரமாக ஒரு தகவல் அறிய நான் தங்கியிருந்த இடத்திலிருந்து மேகலா நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்கிறேன்.
நிறுவனத்திலுள்ளவர்கள் “ஹலோ” என்று கேட்கிற அதே நேரத்தில் இடையிலே கவிஞர் கண்ணதாசன் குரலும் ஒலிக்கிறது.
சில நேரங்களில் தொலைபேசிகளில் நாம் பேசும் போது குறுக்குக் கம்பிகளின் வழியாக மற்றவர்களின் பேச்சு வந்து விடுவதுண்டு.
அதைப்போல அவர் வேறு யாரிடமோ தொடர்பு கொள்ள முனைந்திருக்கிறார். நான் மேகலா நிறுவனத்திற்கு தொடர்பு கொள்ள எண்ணி இருக்கின்றேன்,
நான் அந்த நிறுவனத்தோடு பேச முடியாமல் நானும் அவரும் பேச நேரிடுகிறது.
‘யார் பேசுவது? என்கிறேன், அவர்’ நீ யார் பேசுவது? என்கிறார். பிறகு ஒருவருக்கொருவர் எங்களுடைய குரலைக் கண்டுபிடித்து கண்ணதாசனா?’ என்கிறேன். ‘கருணாநிதியா? என்கிறார். பிறகு நான் மேகலா நிறுவனத்தோடு பேசுவதை விட்டுவிட்டு அவரோடு பேசுகிறேன்.
அவர் கேட்கிறார் ‘என்ன நான் தாக்கி எழுதுகிறேனே அதையெல்லாம் படித்து வருகிறீரா? என்று கேட்கிறார்.
‘படிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு ‘எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கி எழுதுங்கள். ஆனால் தாக்குகிற நேரத்தில் என்றைக்காவது ஒரு நாள் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதிலே வைத்துக் கொண்டு எழுதினால் தாக்குகிற நேரத்தில் பகை உணர்ச்சி உள்ளத்திலே நிச்சயமாக இருக்காது என்று நான் குறிப்பிட்டேன்.
அப்படிப்பட்ட பகை உணர்ச்சியோடு நான் எழுதவில்லை’ என்று அவரும் குறிப்பிட்டார்.
ஆனால் எவ்வளவுதான் நாங்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டாலும் கருத்துமாறுபாடு கொண்டு கட்டுரைகள் தீட்டினாலும், மேடைகளிலே பேசினாலும் இவைகள் அத்தனைக்கும் அப்பாற்பட்ட நட்புணர்ச்சி என்றென்றைக்கும் அழிக்க முடியாத அளவுக்கு எங்களிடத்திலே இருக்கிற காரணத்தினாலே தான் அவர் அழைக்கின்ற விழாக்களுக்கு நான் தவறாமல்வந்து கொண்டிருக்கின்றேன்.
3. காமராஜரின் தியாகம்
காமராஜர் தியாகத்தை ஒப்பிட்டுப் பார்த்து நாம் மேலும் பல தியாகங்களை புரிய திடசித்தம் பெறுவோம்” என்று சனியன்று சென்ளையில் நடைபெற்ற காமராஜர் பிறந்ததின விழா பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் கலைஞர் கூறினார்.
கவிஞர் கண்ணதாசன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு பல்லாயிரவர் பங்கேற்க – பனகல்பூங்கா வாயிலில் நடந்த மாபெரும் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:-
இந்த விழாவுக்குத் தலைமையேற்றுள்ள ஆறுமுகசாமி அவர்கள் என்னைப்பற்றிக் கூறிய சில வார்த்தைகள் என்னுடைய பயணத்தில் என்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்த உதவும் என்ற வகையில் அவருக்கு நான் என் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிஞர் அவர்கள் என்னைப் பாராட்டுவதும் – திடீரென்று என்னைத் தாக்குவதும் மாறி மாறி வருகின்ற வாடிக்கையாகிவிட்ட காரணத்தினால் அவசரப்பட்டு நான் இப்போது நன்றி தெரிவிக்கத் தயாராக இல்லை (சிரிப்பு) ஏனென்றால் மீண்டும் என்றைக்குத் தாக்குவாரோ எனக்குத் தெரியாது (பலத்த சிரிப்பு).
ஆனால் ஒன்றைமாத்திரம் உங்களுக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நட்புக்கு அடையாளம்
அதைப்போலவே அவரும் எனக்கு இன்னல்கள் தொல்லைகள் வருகிற நேரத்திலெல்லாம் நண்பர்களுடைய இலக்கணமென்ன என்பதற்கு அடையாளமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
வள்ளுவர் அழகாகச் சொன்னார்
கேட்டிலும் ஒரு நன்மை உண்டு’ என்று இதைக் கேட்பவர்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும்.
கேடு வருகிற நேரத்திலேதான் யார் யார் நம்மோடு இருக்கிறார்கள், யார் யார் நம்மை விட்டு ஓடிவிடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே கேட்டிலும் ஒரு நன்மையுண்டு என்று வள்ளுவர் சொன்னார்.
அப்படிப்பட்ட கேடுகள் -இன்னல்கள் – துன்ப துயரங்கள் வந்து என்னைச் சூழ்ந்த நேரத்தில் யார் யார் என்னோடு இருந்தார்கள் யார் யார் என்னை விட்டுச் சென்றார்கள் என்ற பட்டியலை நீங்கள் பார்த்தீர்களானால் எனக்கும் கவிஞருக்கும் இப்போது அரசியல்தொடர்பு இல்லை என்றாலும் நட்புத்தொடர்பு அறுந்து போகாமல் இருக்கிற காரணத்தினால் அவர், அற்றகுளத்து அறுநீர்ப்பறவையாகாமல் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும்போல் ஒட்டியிருக்கின்ற உறவினை என்னிடத்தில் காட்டுகிறார் என்பதை நான் உணர்ந்திருக்கிற காரணத்தால் களங்கமில்லாமல் அவர் இந்த விழாவுக்கு வரவேண்டுமென்று என்னை அழைத்தநேரத்தில் நான் ஒப்புக்கொண்டேன்.
காமராசர் விழா நடத்துகிறேன் நீங்கள் அதிலே பேசுகிறீர்கள்’ என்றார். அந்த அழைப்பினை ஏற்று நான் உங்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பினை பெற்றிருக்கின்றேன்.
அழைத்தவர் கவிஞர் அழைக்கப்பட்டிருக்கிற நிகழ்ச்சியோ காமராசரைப்பற்றிய நிகழ்ச்சி ! இந்த இரண்டையும் நினைக்கிற நேரத்தில் நான் வராமல் இருந்தால்தான் ஆச்சரியமே தவிர வந்ததைப்பார்த்து யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
நன்றிக்கடன்
நான் மேடையில் வந்து அமர்ந்ததும் என்னிடம் ஒரு துண்டுத் தாள் தரப்பட்டது. கவிஞரிடத்தில் கூட அதைக் காட்டவில்லை.
அந்தத் துண்டுத்தாளில் உங்களை ஒழிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒன்னரை ஆண்டுகள் பாடுபட்ட சில கட்சிக்காரர்கள் கலந்துகொள்கிற கூட்டத்திலே நீங்கள் கலந்துகொள்வதா? இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்று எழுதித் தந்தார்கள், அதை நான் பத்திரமாக வைத்துக்கொண்டேன்.
அவர்களிலே சிலபேர் இங்கே இருப்பார்கள் என்ற முறையிலே சொல்லுகிறேன் -அவைகள் அத்தனைக்கும் அப்பாற்பட்ட ஒருபெருந்தலைவரைப் பாராட்டவந்திருக்கின்ற இந்த விழாவில் அவைகளைப்பற்றியெல்லாம் சிந்திக்கக்கூடாது என்று அந்த நண்பர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
இதில் கண்டிக்க ஒன்றுமில்லை அனைவரும் சேர்ந்து பாராட்டவேண்டும். ஏனென்றால் பெருந்தலைவர் காமராசரைப் பாராட்டுவதும் அவரது சிறப்பியல்புகளை எடுத்துரைப்பதும் மறைந்துவிட்டவருக்கு செலுத்துகின்ற நன்றிக்கடன் என்று கூறுவதைவிட அப்படி பாராட்டுவதால் நாம் நம்மை வளர்த்துக்கொள்கிறோம்.
அவருடைய சிறப்பியல்புகளை எடுத்துச் சொல்வதால் நாம் எப்படிப்பட்ட சிறப்பியல்புகளைப் பெற வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.
அவருடைய தியாகம் நிறைந்த வாழ்க்கையை எடுத்துச்சொல்வதால் நாமும் நம்மைத் தியாகிகளாக்கிக் கொள்கின்ற பயிற்சியினைப் பெற்றுக் கொள்கின்றோம்.
அவர் எத்தனை ஆண்டுகள் இந்த நாட்டுக்காக சிறைக்கோட்டத்தில் வாழ்ந்தார் என்பதை எடுத்துச்சொல்வதால் நாம் இதுவரை புரிந்த தியாகம் அதற்கு நேராக ஒப்பிட்டுப்பார்க்கும்போது மிகமிகக் குறைவானதுதான் என்று நமக்கு நாமே சிந்தித்து மேலும் பல தியாகங்களுக்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளுகின்ற திடசித்தத்தைப் பெறுகின்றோம்.
ஆகவே பெருந்தலைவர் காமராசரைப் பாராட்டுவது அவருக்காக அல்ல; நமக்காக – நம்முடைய சமுதாயத்திற்காக நம்முடைய மக்களுக்காக நம்முடைய நாட்டுக்காக நம்முடைய மொழிக்காகத்தான் அவரை நாம் பாராட்டுகின்றோம்.
மறைந்தவர்கள், மறைந்தவர்களாக ஆகிவிடுவதில்லை. அவர்கள் நம் நெஞ்சில் நிறைந்தவர்களாகிவிடுகிறார்கள்.
அப்படி நெஞ்சில் நிறைந்த தலைவர்களிலே ஒருவர்தான் – அந்தத் தலைவர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் தான் பெருந்தலைவர் காமராசர்!
அவரிடத்தில் நான் நீண்டநாள் நெருங்கிப் பழகவில்லை, ஆனால் ஓரிரு ஆண்டுக்காலம் பழகுகின்ற வாய்ப்பினை நான் பெற்றேன்.
அமைச்சரவையில் அவர் முதலமைச்சராக வீற்றிருந்தார். எதிர்க்கட்சி வரிசையிலே நாங்கள் இருந்தோம். காரசாரமான விவாதங்கள் நடைபெறும், ஆனால் காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு சூடு தணித்து அவரும் நாங்களும் – மனிதாபி மான உணர்வோடு எத்தனையோ பிரச்னைகளைப் பேசித் தீர்த்திருக்கிறோம்.
பேரறிஞர் அண்ணாவும் பெருந்தலைவர் காமராசரும் சட்டப்பேரவையில் எதிர் எதிராக உட்கார்ந்திருந்த காட்சியையெல்லாம் இந்த நாடு கண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட நேரத்தில் அண்ணாவும் காமராசரும் தனிப்பட்ட முறையில் எவ்வளவு விஷயங்களைப்பற்றி பேசி இருப்பார்கள் என்பதை அருகிலிருந்து கவனித்த எங்களுக்குக் தெரியும்.
இன்றைக்கு இந்தி பிரச்னை குறித்து, மொழிப்பிரச்னை குறித்து அனைவரும் பேசுகிறோம்.
தமிழகத்தில் பிறமொழி ஆதிக்கம் வந்துவிடக்கூடாது. என்கிற கருத்தினை குறிப்பாகச் சொல்வதானால் இந்தித்திணிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்கிற கருத்தினை எல்லாக் கட்சியினருக்கும் எடுத்துச் சொல்லுகின்றோம்.
மொரார்ஜி தேசாய் வந்தாலும் உறுதியளித்து விட்டுப் போகிறார் இந்தித் திணிப்பு நிச்சயமாக இருக்காது’ என்று!
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வந்தாலும் ‘பண்டித ஜவகர் லால் நேருவின் உறுதிமொழியைக் காப்பாற்றுவதற்கு நாங்கள்என்றென்றும் உறுதுணையாக இருப்போம்’ என்று உறுதி மொழியைத் தருகிறார்கள்.
தி. மு. கழகம் அந்தக் கொள்கையுடையது என்பது உங்களுக்கே தெரியும்.
ஓராண்டுக்கு முன்பு இந்தியை ஆதரித்து நாடாளுமன்றத் தில் பேசியவர்கள்கூட இந்த ஆண்டு (சிரிப்பு) இந்தித் திணிப்புக் கூடாது என்று சொல்கிற அளவுக்கு அப்படிச் சொன்னால்தான் தமிழ்நாட்டில் உலவலாம் என்கிற அளவுக்கு நாட்டில் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இவைகளை யெல்லாம் கவனத்தில் வைத்துக்கொண்டு யோசிப்பீர்களானால் பெருந்தலைவர் காமராசரும் பேரறிஞர் அண்ணாவும் அன்றைக்கு சட்டமன்றத்தில் ஒருவர் காதில் ஒருவர் பேசிக்கொண்டதை சொன்னால் நீங்கள் வியப்படைவீர்கள்.
ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்திடவேண்டும் என்கிற விவாதம் சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழ் பயிற்றுமொழியாக இருக்க வேண்டு மென்பதை வலியுறித்திப் பேசிக்கொண்டிருக்கிறார்.
அப்போது காமராசர் அண்ணாவை கையசைத்து அழைத்தார்கள், அண்ணா உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து குனிந்து காமராசர் பக்கத்தில் தலையை நீட்டினார். காமராசரும் குனிந்து அண்ணாவின் பக்கத்தில் தலைநீட்டிப் பேசினார்.
அப்போது அண்ணா அவர்களிடம் வேறு விஷயங்களைப் பற்றிப்பேச அருகிலே நான் அமர்ந்திருந்தேன்
காமராசர் சொல்கிறார் அண்ணா அவர்களிடத்தில் “தமிழ் பயிற்றுமொழி ஆகவேண்டுமென்று சொல்கிறீர்கள் தமிழ் பயிற்று மொழியாவதில் இரண்டுவிதக் கருத்து இல்லை. ஆனால் எனக்குள்ள பயமெல்லாம் தமிழ்பயிற்றுமொழி என்கிற பெயரால் ஆங்கிலம் அகற்றப்பட்டுவிடுமானால் ஆங்கிலம் அகற்றப்பட்ட அடுத்த நாளே இந்தியல்லவா வந்து அமர்ந்துவிடும். எனவே ஆங்கிலத்தை அவசரப்பட்டு அகற்றிவிடக்கூடாது என்பதிலே நான் உறுதியாக இருக்கிறேன்” என்று காமராசர் எடுத்துச் சொன்னார்.
அது உண்மைதானா என்று விசாரிக்க இப்போது இரண்டு பேரும் இல்லை என்றாலும் கூட நான் அந்த நேரத்தில் பல பேரிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறேன். கவிஞரிடமும் சொல்லியிருக்கிறேன்.
இப்போது அதைச்சொல்லக்காரணம் – மொழிப் பிரச்னைப் பற்றி மிக வேகமாகப்பேசப்படும் இந்த நேரத்தில் – நான் இதைச் சொல்வதால் தமிழ்பயிற்றுமொழி கூடாது என்கிற வாதத்தை வைக்கிறேன் என்று யாரும் இதை அரசியல் நோக்கத்தோடு பார்க்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டு கூறுவேன் .
பெருந்தலைவர் காமராசரின் எண்ணமெல்லாம் இந்தி எப்படியும் தமிழகத்தில் நுழைந்து தமிழின் இடத்தைப் பிடித்து விடக்கூடாது என்பதிலே அவர் எந்த அளவுக்கு அக்கறையாக இருந்தார் என்பதை நினைவு படுத்துவதற்காகத்தான் இதைச்சுட்டிக்காட்டுகிறேன்.
ஆங்கிலத்தை அவசரப்பட்டு அகற்றிவிடுவோமேயானால் அந்த இடத்தில் வேறு ஒன்று வந்து உட்கார்ந்துவிடுவது இந்தியாகத்தான் இருக்கும், ஆகவே அதற்கு நாம் இடம் தந்துவிடக் கூடாது என்று காமராசர் கருதினார்.
தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற உணர்வும் அதே நேரத்தில் இந்தியத் திருநாட்டில் ஒற்றுமையை ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்ற பேருள்ளம் கொண்ட பேரறிவாளர் பெருந்தலைவர் காமராசர். தமிழகத்தில் எப்படிப்பட்ட புரட்சிகரமான திருப்பங்களையெல்லாம் செய்தார் என்பதை அவருடைய வரலாற்றைப் படிப்பவர்களுக்கு நன்றாகப் புரியும்.
தமிழ்நாட்டில் மூதறிஞர் ராஜாஜி ஒரு கல்வித்திட்டத்தை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், அது உரிய திட்டம்தான் இந்த நாட்டு இளம் பிள்ளைகள் ஏற்றுக் கொள்ளத்தக்க திட்டம்தான் என்று அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பொழுது நாடு ஒரு சேர எதிர்த்தது.
அந்த நேரத்தில் காமராசர் நாட்டு மக்களின் உள்ளத்தை எதிரொலித்தார். அதன் விளைவாக மூதறிஞர் ராஜாஜி பதவி விலகிக்கொள்ளவும் அதற்குப்பிறகு நடைபெற்றசரித்திரத் திருப்பங்களின் காரணமாக காமராசர் தமிழகத்தின் முதலமைச்சராக வரவும் நேரிட்டது.
“குணாளா குலக்கொழுந்தே”
அப்படி அவர்தமிழகத்தின் முதலமைச்சராக வந்த நேரத்தில் சட்ட விதிகளின்படி, ஒருவர் அமைச்சராக வந்துவிட்டால் ஆறுமாத காலத்திற்குள் மேலவை உறுப்பினராகவோ,பேரவை உறுப்பினராக வர தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும்.
அந்த விதிகளின்படி, ‘நான் பேரவையின் தேர்தலுக்கு நிற்கிறேன்’ என்று காமராசர் அறிவித்து குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் உறுப்பினர் பதவி விலகி – அங்கே காமராசர் போட்டியிட்டார்.
அப்படி போட்டியிட்டபோது தி.மு. கழகத்தின் சார்பாக அண்ணா ஒரு அறிக்கை விடுத்து “காமராசர் வெற்றிக்கு நாங்கள் பாடுபடத் தயாராக இருக்கிறோம். ஏனென்றால் தமிழ்நாட்டில் வர இருந்த ஒரு பெரும் பிரளயத்தைச் சமாளித்து, தமிழ்ச் சமுதாயத்து மாணவ மணிகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றுகின்ற அளவுக்கு வரவிருந்த ஆபத்தைத் தவிர்த்து காப்பாற்றியதால் காமராசரை குடியாத்தம் தேர்தலில் தி.மு. கழகம் எதிர்த்துப் போட்டியிடாமல் ஆதரிக்கும் என்று அறிக்கை விட்டது மாத்திரமல்ல: அந்த நேரத்தில் ‘திராவிட நாடு’ இதழில் ‘குணாளா! குலக் கொழுந்தே!” என்றெல்லாம் தலைப்பிட்டு காமராசரைக் குறித்து அழகழகான கட்டுரைகளை எழுதிக் குவித்தார்.
இதை நான் சொல்லக்காரணம் ஆயிரம் கருத்து மாறுபாடு இருந்தாலும் – நூற்றுக்கணக்கான கொள்கை வேறுபாடு இருந்தாலும் எவ்வளவு மனமாச்சரியம் இருந்தாலும் ஒரு தமிழன் இன்னொரு தமிழனை எப்படி நேசிக்கிறான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!
அப்படி நேசிக்காதவனெல்லாம் தமிழனல்ல என்ற அந்த அடிப்படையிலேதான் நான் இதைச் சொல்லுகிறேன்.
ஒரு தமிழன் இன்னொரு தமிழனை எப்படி நேசிக்கிறான் அதுவும் ஒரு பெரும் தமிழன் இன்னொரு பெருந்தமிழனை நேசித்த வரலாற்றுக்காகத்தான் இதை எடுத்துக் காட்டுகின்றேன்.
அப்படிப்பட்ட பெருந்தன்மையோடு காமராசர் முதலமைச்சராக வரவேண்டும் – வந்த அந்தப் பதவி நிலைக்கவேண்டும் என்கிற எண்ணத்தோடு அரசியல் மாறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கழகம் அந்தத் தேர்தலில் அவருக்கு ஆதரவை நல்கியது.
அதற்குப் பிறகு தமிழக முதலமைச்சராக அவர் பொறுப்பேற்று நண்பர் திருமாறன் இங்கே எடுத்துக் காட்டியது போல தமிழகத்தில் ஒரு புதிய பொற்காலத்தை உருவாக்கிக் காட்டிய பெருமைக்குரியவராக காமராசர் திகழ்ந்தார்.
அதன் பின்னர் அவருடைய பொதுவாழ்வில் எவ்வளவு பெரிய ஏற்றங்களைப் பெறவேண்டுமோ அவ்வளவு ஏற்றங்களையும் பெற்றார்.
தமிழின் பெருமை
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். அது மாத்திரமல்ல அ. இ.கா. க. மாநாட்டில் தமிழிலேயே உரைநிகழ்த்தினார். காமராசருக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாவிட்டாலும் ஆங்கிலத்தில் படிக்க இயலும் அப்படிப்பட்ட உரையைக்கூட காங்கிரஸ் கட்சி மாநாட்டில் தமிழிலேதான் ஆற்றினார்.
இப்படி ஒரு தமிழன் இந்தியத் திருநாட்டில் ஓங்கு புகழ் எய்தியது கண்டு அன்றைக்கே தமிழகம் மகிழ்ச்சிப் பெருங் கடலில் ஆழ்ந்தது.
ரஷ்யாவுக்கு காமராசர் சென்றபொழுது அண்ணாவைப் பார்த்து நிருபர்கள் கேட்டார்கள். ரஷ்யாவுக்குச் செல்கிறாரே காமராசர் அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்றுகேட்டார்கள்,
ஒரு தமிழனுக்கு வெளிநாட்டில் கிடைக்கின்ற பெருமையைப் பார்த்து நான் பெருமையடைகிறேன் என்று அண்ணா அன்றைக்குப் பதிலளித்தார்.
காமராசர் இன்றைக்கு நம்மிடத்திலே இல்லை – மறைந்து விட்டார் அவருடைய சிந்தனைகள் நூல்வடிவில் இன்று நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவருடைய பொன்மொழிகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அவருடைய இல்லம் நினைவுச்சின்னமாக ஆக்கப்பட்டிருக்கிறது. அவருடைய உடல் எரியூட்டப் பட்ட இடம் நினைவிடமாக மாற்றப்பட்டிருக் கிறது. அவருடைய பெயரால் சாலைகள் -சோலைகள் அவருக்குச் சிலைகள் – இவ்வளவும் செய்கிறோம்.
கம்யூனல் ஜி.ஓ.
ஆனால் எந்த ஒரு தலைவனுக்கும் நாம் ஆற்றுகின்ற கடமை அவர்களுக்கு நினைவுச்சின்னம் எழுப்புவது, சாலைகள், சோலைகளுக்கு அவருடைய பெயர்களை இடுவது, நாடெங்கும் சிலைகள் அமைப்பது இத்தோடு நம் பணிகள் முடிந்துவிடுகிறதா என்றால் இல்லை.
அவர்கள் எதற்காகப் பாடுபட்டார்கள் எந்தச் சமுதாயத்திற்காகப் பாடுபட்டார்கள் – அந்தச் சமுதாயத்தில் எந்தெந்தப் பிரிவினருக்காகப் பாடுபட்டார்கள்? பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட மக்களுக்கு அந்தத் தலைவர் செய்த பணிகள் என்னென்ன என்பவைகளை எண்ணிப் பார்க்கவேண்டும்.
அவர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் இன்னொரு ஆபத்தும் தமிழகத்திற்கு வர இருந்தது.
கப்யூனல் ஜி.ஓ.வை காமராசர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் எப்படியாவது அகற்றிவிட வேண்டுமென்ற முனைப்பான கருத்து எழுந்து காமராசரிடம் தூதுக்கள் சென்று அவர் இதைப்பற்றி சிந்திக்கிறார் என்று பரவிய பிறகுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் நாட்டில் இருக்கிற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன – தொடர்ந்து கிடைத்து வருகின்றன என்கிற பட்டியலையெல்லாம் எடுத்துக் காட்டி அவரிடம் வாதிட்டு கூட்டங்களிலும் எடுத்துக்கூறி ஏடுகளிலே எழுதிக்காட்டி அவரிடத்தில் தனிப்பட்ட முறையிலும் பேசியபிறகு-
காமராசர் ‘ஆமாம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தே தீரவேண்டும்’ என்றார்.
எப்படி ஓட்டப் பந்தயத்தில் இளைத்தவனுக்குச் சலுகை அளிப்பது போல – சமுதாயத்திலும் பின்தங்கிக் கிடக்கின்ற மக்களுக்கு சலுகைகள் அளித்தே தீரவேண்டுமென்கிற செழுமிய கருத்தை பல ஆண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி காலத்திலே சொல்லப்பட்டு நடைமுறைக்கு வந்த அந்தத் திட்டத்தை காமராசர் “கைவிடமாட்டேன்’ என்று உறுதியாகத் தெரிவித்தார்.
அப்படி தெரிவித்தபோதுதான் பெரியார்கூட காமராசரைப் பார்த்து ‘இவரல்லவா பச்சை தமிழர் என்று பாராட்டினார்.
பெருந்தலை இல்லாத வீடு
நான் இவ்வளவும் சொல்வதற்குக் காரணம் ஏழை எளியவர்கள்பால் – பின்தங்கிய மக்களின் பால் தாழ்த்தப் பட்ட- சமுதாயத்தில் அடித்தளத்தில் வீழ்த்தப்பட்ட மக்களைப் பார்த்து காமராசரின் கண்ணோட்டம் எப்படி இருந்தது அதைத் தடுப்பதற்கு சிலர் முயன்றாலும் எடுத்துச் சொல்லவேண்டியவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்கின்ற பேருள்ளமும் இருந்தது என்பதை சுட்டிக்காட்டத்தான் இதைக் குறிப்பிடுகிறேன்.
இந்தச் சமுதாயத்தை வழிநடத்திட இன்னும் கொஞ்சகாலம் காமராசர் இருந்திக்க வேண்டும். ஆனால் புராணிகர்கள் மொழியில் தமிழர்களின் துரதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும் தமிழர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டது.
பெரியார் மறைந்தார் – மூதறிஞர் ராஜாஜி பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் மறைந்தனர். இப்படிப்பட்ட பெரியவர்களெல்லாம் இல்லாத தமிழகம் எப்படி இருக்கிறதென்றால்-
ஒரு வீட்டில் அத்தனையும் இளவெட்டுகளாய் இருந்து கொண்டு எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் கிராமிய மொழியில் சொல்வார்களே ‘ஒரு’ ‘பெரியா பெருந்தலை’வீட்டில் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்று கேட்பது போலத்தான் இன்றைக்கு ஒரு “பெரியா பெருந்தலை’ இல்லாதவீடு போல் தமிழகம் இருக்கிறது.
எனக்கு சங்கடம் வருகிற நேரத்திலெல்லாம் எண்ணிக் கொள்கிறேன் அப்படிப்பட்ட நேரத்தில் பெரியார் இல்லையே அண்ணா இல்லையே – காமராசர் இல்லையே-ராஜாஜி இல்லையே என்று கருதிக்கொள்கிறேன்.
எனக்கு என்றால் தனிப்பட்ட கருணாநிதிக்கு மட்டும் என்றல்ல; என்னைத்தலைவராக ஏற்றிருக்கிற கழகத்திற்கானாலும் அந்தக் கழகத்தைச் சார்ந்திருக்கிற மக்களுக்கானாலும், அல்லது தமிழகத்தில் இருக்கிற எந்தக்கட்சிக்கானாலும், தமிழ்நாட்டு மக்களுக்கானாலும் – தமிழக மக்களும், இந்திய மக்களும் போற்றிக்காக்கின்ற ஜனநாயகத்திற்கானாலும் யாருக்குச் சங்கடம் வந்தாலும் இந்த நேரத்தில் இவர் இல்லையே என்று நாம் ஒரு வரைப்பற்றி எண்ணுகிறோம் என்றால் நம்முடைய வாழ்நாளிலே மாத்திரமல்ல; நம்முடை வாழ்நாளைக்குப் பிறகும் நம்முடைய பல தலைமுறைகளின் வாழ்நாளுக்கும் பிறகு வாழக்கூடிய சிறந்த ஆற்றலாளர் அவர் என்பதற்கு அது ஒன்றே சரியான சான்றாகும். அப்படிப்பட்ட தலைவர்களிலே ஒருவர் தான் காமராசர்.
கவிஞர் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதுபோல் – காமராசர் உயிரோடு இருந்திருந்தால் தமிழ் நாட்டில் தி. மு. கழக ஆட்சி கலைக்கப்பட்டிருக்காது. அதற்கு என்ன காரணம் என்று கேட்பீர்கள்,
காமராசருக்கு தி. மு. கழக ஆட்சியின் மீது அவ்வளவு ஆசையா? இல்லை!
தி. மு. கழக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று விரும் பினாரா. இல்லை!
கருணாநிதிதான் தொடர்ந்து முதலமைச்சராக இருக்கவேண்டு மென்று ஆசைப்பட்டஇல்லை!
அவருடைய ஆசை நிறுவனகாங்கிரஸ்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான்! அதை யாரும் தடுத்திட இயலாது – இது அவரது உரிமை!
கலைப்புக்கு எதிரானவர்
ஆனால் தி.மு.கழக ஆட்சி கலைக்கப்படக் கூடாது என்ற கருத்தைக் கொண்டிருந்தார் என்றால் என்ன காரணம்?
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி மக்களால் ஐந் தாண்டுகள் அந்த ஆட்சி பொறுப்பில் இருக்கலாம் என்று தீர் பளிக்கப்பட்ட பிறகு அந்த ஐந்தாண்டுகளில் ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற பொறுப்பினை நாம் ஏற்றுக்கொண்டு மக்களை தம்வயப்படுத்தி ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக வழியில் தேர்தலில் ஆட்சியை மாற்றிவிட்டு புதிய ஆட்சியைக் கொண்டு வருவதுதான் முறையே தவிர இடையில் ஒரு ஆட்சியைக் கவிழ்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று காமராஜர் கூறியகாரணத்தினால்தான் அவர் உயிரோடு இருக்கும்வரை அந்தக் காரியம் நடைபெறவில்லை என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.
ஏனென்றால் நான் அப்போது முதலமைச்சர் பொறுப்பில் இருந்ததால் டில்லி வட்டாரத் தகவல்களை சென்னை வட்டாரத்து தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய இடத்திலே இருந்தேன்.
தி.மு.கழக ஆட்சியைக் கலைக்கலாமா என்று டில்லியிலிருந்து யோசனை கேட்டபோதெல்லாம் “கூடாது எனக்கென்னமோ கருணாநிதி நெருங்கியவன் என்ற முறையில் சொல்வதாக கருதிக்கொள்ளாதீர்கள். அப்படி கலைப்பது ஜனநாயகத்திற்கு ஒத்ததாக ஆகாது. தேவையில்லாமல் கலைக்காதீர்கள்” என்று அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தவர் காமராசர்தான்.
எனவே அவர் கண்மூடிய பிறகு தமிழகத்தை பொறுத்த வரை ஜனநாயகத்தின்கண்களும் மூடப்பட்டுவிட்டன.
அதுவரை காத்திருந்தார்கள் நான் அரசியல் பேசுவதாக கருதக்கூடாது காமராசரின் பெருமைகளை சொல்கிற நேரத்தில் காமராசரின் சிறப்பியல்புகளை சொல்கிற நேரத்தில் அரசியல் கலவாமல் பேச முடியாது.
திருக்குறளிலேயே அரசியல் என்ற அதிகாரம் இருக்கும் நேரத்தில் காமராசர் வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது அரசியல் இல்லாமல் எங்கே போய்விடும்?
அவர் ஆட்சியில் இருக்கும் வரை தமிழக ஆட்சியின் மீது கைவைக்க டில்லியில் உள்ளவர்கள் அஞ்சினார்கள்
காமராசர் என்ன சொல்கிறாரோ எனக் கேட்டுத்தான் அத்தனையையும் செய்தாகள். அந்த அளவுக்கு வல்லமை வாய்ந்தவராக அவர் இருந்தார்.
இத்தனைக்கும் அவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தாரா? தமிழகத்தை ஆளுகின்ற பொருப்பில் இருந்தாரா? அவரைச் சுற்றி அதிகார வர்க்கம் சூழ்ந்திருந்ததா? இல்லை.
இருந்தாலும் காமராசர் என்னசொல்கிறார் என்கிற அளவுக்கு டில்லி உற்று கவனித்துக் கொண்டிருந்தது. அந்த அளவுக்கு பெருமை பெற்றவராக இருந்தார்.
தோற்ற பின்னும் பெருமை
முதலமைச்சராக இருந்தால்தான் பெருமை – முதலமைச்சர் பதவியில் உட்காந்தால்தான் பெருமை என்றில்லாமல் அவர் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகியபிறகும் – அவரது கட்சி இங்கே வெற்றிபெற வாய்ப்பை இழந்த பிறகும் அவர் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் நாட்டில் நடமாடிய நேரத்திலும் ஒரு முதலமைச்சருக்குள்ள பெருமையைவிட அதிகப் பெருமையோடு அவர் இங்கே வாழ்ந்தார்.
ஆகவே, ஒருவர் எந்தப் பதவியில் இருக்கிறார் என்ற கேள்வியைக் கேட்டு அதற்குக் கிடைக்கும் விடை மூலம் அல்ல ஒரு தலைவருடைய பெருமையை நிர்ணயிப்பது!
அவருக்கும் எனக்குமிடையே உள்ள நட்புக்காலம் குறைவுதான் என்றும் – கவிஞர் சொன்னார் இரண்டுபேரும் சந்தித்தீர்களா என்று கேட்டேன். இப்போது வேண்டாம் என்று காமராசர் சொல்லிவிட்டார் என்று சொன்னார்கள்.
ஆனால் கவிஞர் கேட்பதற்கு முன்பு நானும் பெருந்தலைவர் காமராசரும் இதே சென்னையில் ஒரு டாக்டர் வீட்டில் சந்தித் தோம் அந்த டாக்டர் யார் என்று கவிஞருக்குத் தெரியும்.
எங்களுடைய சந்திப்பு ரகசியமாக இருக்கவேண்டுமென திட்டமிடப்பட்டது.
பெருந்தலைவர் காமராசர் டாக்டரிடம் உடல்நிலையைப் பரிசோதிக்க வருவது போலவும் நானும் அவ்வாறே அங்கே வரு வது போலவும் ஏற்பாடு!
அதிக அதிகாரம்
இரண்டுபேரும் அரைமணி நேரவித்தியாசத்திலே சென்று டாக்டர் வீட்டு மாடியில் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் பேசினோம்.
இந்திய நாட்டு அரசியலைப்பற்றி – தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி எத்தனையோ கருத்துக்களை விவாதித்தோம்
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டுமென்று இப்போது நீ சொல்லாதே’ என்றார்.
“ஏன்?” என்று கேட்டேன்.
‘ஏற்கனவே நீங்கள் பிரிவினைகேட்ட கட்சி. எனவே நீங்கள் இதைச்சொன்னால் ஓகோ அந்தப் பிரிவினையைத்தான் வேறு ரூபத்தில் கொண்டுவருகிறான் என்று அதிகாரங்களைப்பரவலாக்க விரும்பாதவர்கள் ஒரு கற்பனைக் கதையை கட்டிவிட்டு உன்னுடைய வாதத்தை முறியடித்துவிடுவார்கள் என்றார்.
பிறகு என்னசெய்யச் சொல்கிறீர்கள்? நீங்களும் எதுவும் பேசமாட்டேன் என்கிறீர்கள் – என்னையும் போவேண்டாம் என்கிறீர்களே. வழி என்னதான்?” என்று கேட்டேன்.
அப்போது அவர் – ‘ஒரு ஆறுமாத காலம் பொறுத்திரு! அதற்குப்பிறகு மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டுமென்கிற போராட்டத்தை நானே ஆரம்பிக்கிறேன்’ என்று சொன்னார்.
ஜனாதிபதி கிரியின் தேர்தலுக்கு ஆறு ஏழு மாதங்களுக்குப் பின்னால் நடைபெற்ற உரையாடல் இது!
நான் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை – பெருந்தலைவர் சொன்னார் ஆந்திரத்தில் ஒருவரை அனுப்பி இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கு என்று சொன்னேன். அவர் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் விவசாய வேலைபார்க்கப் போய்விட்டார். அதனால்தான் நான் அந்தக் காரியத்தை உடனடியாக தொடங்கமுடியவில்லை. எனவே இன்னும் ஆறேழு மாதங்கள் பொறுத்து நான் முதலில் தொடங்குகின்றேன்.- பிறகு நீ தொடங்கு. அதற்குப் பிறகு இருவரும் இணைந்தே அந்தக்காரியத்தில் ஈடுபடலாம்” என்ற கருத்தினை பெருந்தலைவர் காமராசர் சொன்னார்.
அந்த உரையாடலை எண்ணுகிற நேரத்தில் அவர் இன்று உயிரோடு இல்லையே, இருந்திருந்தால் நாங்கள் உடன்பிறப்புக்களாய் இந்தச் சமுதாயத்து மக்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு கோரிக்கைக்காக ஒருவர்பின் ஒருவராய் பெரிய பேரணியை நடத்தக்கூடிய ஆற்றலை அவருடைய தலைமையில் பெற்றிருக்கலாமே என்று எண்ணுகின்றேன்.
நான் இன்னொன்றைச் சொல்லுவேன்
நம்முடைய நண்பர் ராஜாராம் நாயுடு அவர்களுடைய இல்லத்தில் மதுரையில் திருமணம். எனக்கும் அழைப்பு வந்தது மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ராஜாராம் நாயுடு – முதலமைச்சர் என்ற முறையில் நான் சென்றே தீரவேண்டும் என்ற முறையில் சென்றேன்.
திருமணம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. பெருந்தலைவர் வீற்றிருக்கிறார் – நானும் பக்கத்தில் அமருகிறேன். திருமணவிழா முடிவுற்று மணமக்கள் எங்களிடம் வாழ்த்துக்களைப் பெற்ற பிறகு இருவரும் எழுந்து நின்றோம். அந்த நேரத்தில் ஒரு புகைப்படகாரர் ஓடோடி வந்து ‘இருவரையும் நிற்கவைத்துப் படமெடுக்க வேண்டும்’ என்றார். என்னை பக்கத்தில் நில்லுங்கள் என்றார். புகைப்படக்காரர் ஒரு மாலையை காமராசர் கழுத்தில் போட்டார் இன்னொரு மாலையை எடுத்து என்னுடைய கழுத்தில் போடவந்தார். கையில் வாங்கிக்கொண்டேன். காமராசர் நீயும் போட்டுக்கொள் கழுத்தில் என்றார். இருவரும் போட்டுக்கொண்டோம் – புகைப்படம் எடுக்கப்பட்டது. பல பத்திரிகைகளில் அந்தப் படம் வந்தது.
அந்தப் படம் எடுக்கப்பட்டு முடிந்ததும் காமராசர் என்ன சொன்னார் தெரியுமா?
‘இந்தப் படத்தைப் பார்த்தால் ஒருவன் ரொம்பப் பொருமைப்படுவான்’ என்றார் யார் என்றெல்லாம் கேட்காதீர்கள் (சிரிப்பு)
நீண்டநாள் நெருங்கிப் பழக முடியாவிட்டாலும் நெருங்கிப் பழகிய காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் சாதாரண மானவைகளல்ல.
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நேரத்தில் நானும் நாவலர் அவர்களும் பெருந்தலைவர் காமராசர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து அவரது இல்லத்திற்குச் செல்கிறோம். படுக்கையில் படுத்திருக்கிறார், எப்படி இருக்கிறது. என்று உடம்பைத் தொட்டுக் கேட்கிறேன்.
உடம்பு கொதித்துக்கொண்டிருக்கிறது. விக்கி விக்கி அழத் தொடங்கினார்.
”தேசம் போச்சு – தேசம் போச்சு – தேசம் போச்சு” என்று கண்ணீர் வழிய வழிய மூன்று முறை சொன்னார்.
நான் அவரிடத்தில் சொன்னேன் தேசம் போச்சு என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இப்பொழுதே நீங்கள் உத்திரவிடுங்கள். நான் மந்திரிசபையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நாட்டைக்காக்க நீங்கள் நடத்துகின்ற போராட்டத்தில் உங்கள் பின்னால்வர தி.மு. கழகம் தயாராக இருக்கிறது (பலத்த கைதட்டல்) என்று சொன்னேன்.
அப்போதும் சொன்னார், “இன்னும் பத்துநாள் பொறுத்துக் கொள்” என்று.
இப்படிப் பொறுத்துக்கொள் பொறுத்துக்கொள் என்று சொல்லியே நம்மை பொறுத்துக்கொள்ள முடியாத துயரத்திற்கு ஆளாக்கிப் போய்விட்டார் பெருந்தலைவர் காமராசர் என்று எண்ணி எண்ணித்தான் நான் வருத்தப்படுகிறேன்.
அவரது நினைவு என்றென்றும் நிலைத்திருக்கும்!
அவரது வாழ்க்கை என்றென்றும் நமக்குப் பாடமாக இருக்கும்.
அவரது தியாகம் என்றென்றும் தமக்கு வழிகாட்டியாக இருக்கும்!
4. புனித ராஜ்யமா?
எம்.ஜி. ராமச்சந்திரனின் ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு செத்துக்கிடப்பதை. நேற்று செங்குன்றம் சிறப்புக் கூட்டத்தில் பேசிய கழகத்தலைவர் கலைஞர் அவர்கள் பட்டியல் போட்டுக் காட்டினார் நேர்மை – தர்மம் – நீதி எங்கே என்று கேட்டார். இதுதான் புனித ராஜ்யமா என்றும் சாடினார்.
அவரது உரை வருமாறு:
கழகத்தின் அருமைச் செயல் வீரர் ஒருவரை நினைந்து நடைபெறுகிற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருப்பதை மறந்து விடுவதற்கில்லை. இந்தப் பகுதியில் தி.மு. கழகத்தின் ஒப்பற்ற செயல் வீரர்களில் ஒருவராக விளங்கியவரும். பேரறிஞர் அண்ணா தந்த கொள்கைகளை, இலட்சிய முகட்டை எட்டிப்பிடிப்பதற்காக பம்பரமெனச் சுழன்று பணியாற்றியவருவான வெங்கடேசன் அவர்கள் திடீரென நம்மையெல்லாம் விட்டு மறைந்துவிட்டார் நாட்டை நெருக்கடிநிலை உலுக்கிக் கொண்டிருந்தபோது அவருடைய மறைவு நம்முடைய நெஞ்சை குலுக்கத்தக்க வகையில் அமைந்தது.
தி. மு. கழகத்தைப் பொறுத்தவரையில் இப்படிப்பட்ட தொண்டர்களுடைய குடும்பங்கள் திக்கற்றுப் போய்விடக் கூடாது என்று எண்ணுகின்ற நிலை இன்று நேற்றல்ல; நீண்ட நெடுங்காலமாக இருந்துவருகின்ற பண்பு என்பதால், அதன் தொடர்பாக இந்த வட்டாரத்து நண்பர்கள் பெருமுயற்சியில் ஈடுபட்டு இந்த பொதுக்கூட்டத்தினை அடிப்படையாக வைத்து தங்களால் இயன்ற அளவு வசூல் செய்து மறைந்த நண்பர் வெங்கடேசன் குடும்பத்தாருக்கு, அவருடைய துணைவியாரிடத்தில் குழந்தைகள் புடைசூழ கண்ணீரும் கம்பலையுமாக இருக்கின்ற அந்தச்சகோதரியாரிடத்தில் ஏழாயிரத்து ஐநூறு ரூபாயை இன்றைக்கு நாம் வழங்கியிருக்கின்றோம்.
இது பெருந்தொகை அல்ல! என்றாலும், சிறுதொகைதான் என்றாலும் இதற்குப்பின்னால் இருக்கின்ற உணர்வுகள் தான் மிகப் பெரியவை.
கழகம் ஒரு குடும்பமாகத்தான் பாவிக்கப்பட்டு வருகின்றது இந்தக் குடும்பத்திலே யாருக்கு இன்னலென்றாலும் மற்றவர்கள் துடிப்பதும், எந்த இல்லத்திலே ஒரு மகிழ்ச்சி என்றாலும் அந்த மகிழ்ச்சியில் அனைவரும் திளைப்பதும் நம்முடைய வரலாறு!
ஒரு அரசியல் இயக்கத்தைக் குடும்பப் பாசமுள்ள இயக்கமாக நடத்திக்காட்டிய பெருமை நம்மையெல்லாம் ஆளாக்கிய தலைவர் அண்ணா அவர்களுக்கு உண்டு!
தந்தை என்று பெரியாரையும் அண்ணன் என்று பேரறிஞர் அண்ணாவையும் அழைத்து நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அண்ணன் – தம்பி என்ற உறவு கொண்டு ஒரு கட்சி – அதன் தலைவர் – பொதுச்செயலாளர் – தொண்டர்கள் என்பதெல்லாம் கழகசட்ட திட்டப் புத்தகத்தில் இருக்கின்ற ஒன்று என்றாலும் கூட அவைகளுக்கு அப்பாற்பட்ட நிலையிலே பாச உணர்ச்சியோடு நாம் பழகிக் கொண்டிருக்கிறோம்.
அப்படிப்பட்ட பாச உணர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக இருப்பதுதான் இந்நிகழ்ச்சி என்றால் அது மிகையாகாது!
இடம் தந்ததற்காக ஏழுமலை பட்டபாடு!
வெங்கடேசன் அவர்கள் 1976-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி மிகவேகமாகப் பரவி, அது தமிழகத்திலே ஊடுருவி, இந்தியாவில் ஒரு தீவாக சுதந்திரக் காற்றை அனுபவிக்கின்ற இடமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த இடத்தையும் நெருக்கடிக் களமாக ஆக்கி விடவேண்டும் என்று முடிவெடுத்து. தி. மு.கழக அரசைக் கலைத்து, கூட்டங்களிலே கருத்துக்களை எடுத்துச் சொல்லுகின்ற உரிமை பறிக்கப்பட்டு, பிறகு மெல்ல மெல்ல அந்த உரிமை தரப்படும் என்று கூறப்பட்டு இது போன்ற மைதானங்களில், தெருக்களில் கூட்டம் போடக் கூடாது. சுற்றடைப்புக்குள்ளேதான் போடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, இந்த செங்குன்றத்தில் சுற்றடைப்புள்ள இடமாகப் பார்த்து நண்பர் ஏழுமலையின் அரிசி ஆலையில் சுற்றடைப்பு இருந்த காரணத்தினால் அங்கே ஒரு கூட்டத்தை நடத்தி நான் கூடியிருந்த மக்களிடம் கருத்துரையாற்றிவிட்டு – சென்னைக்குத் திரும்பினேன்.
சுற்றடைப்புக்குள்ளே கூட்டம் நடத்தலாம் என்று அறி விக்கப்பட்டு நான் பேசினேன் தடையில்லை ஆனால் நிலைமை என்னவென்றால் கருணாநிதி பேசலாம் அனுமதியுண்டு; ஆனால் அந்த சுற்றடைப்புள்ள அரிசிமில்லை கூட்டத்திற்காகக் கொடுத்த ஏழுமலை வெளியே இருக்கக்கூடாது. அவரும் சுற்றடைப்புக்குள்ளே செல்லவேண்டும் என்று சென்னை மத்திய சிறைச்சாலைச் சுற்றடைப்புக்குள்ளே அடைத்து வைக்கப்பட்ட இரண்டொரு நாட்களுக்கெல்லாம் அந்த சுற்றடைப்புக் கூட்டத்தை நடத்திய அருமை நண்பர் செயல்வீரர் வெங்கடேசன் மறைந்தார்.
மறைந்த அந்தச் செம்மலை, மறந்துவிடாத மாண்புடன் கழக நண்பர்கள் அந்தக்குடும்பத்திற்கு ஆற்ற வேண்டிய அரும் செயலை இன்றைக்குச் செய்து முடித்திருக்கிறார்கள்.
அதற்கு ஒத்துழைத்த இந்த வட்டாரத்து நண்பர்களையும் உறுதுணையாக இருந்த மாவட்டச் செயலாளர் மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவரையும் பாராட்ட வாழ்த்திப் போற்ற – புகழக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நெருக்கடி நிலைக்குப் பிறகு இந்தப்பகுதிக்கு நான் வரு கின்ற முதல் கூட்டம் என்று நான் கருதுகின்றேன்.
நண்பர் மா.வெ. நாராயணசாமிகூட சொல்லிக் கொண்டிருந்தார். 78- பிப்ரவரி 19- ம்நாள் அம்பத்தூரிலே பால்பண்ணை ஒன்றினைத் திறந்து வைத்துவிட்டு, இந்த ஊர் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தது. அதற்குள்ளாக ஆட்சிக் கலைக்கப் பட்டுவிட்டது என்று சொன்னார்.
நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு பேரூராட்சி வரவேற்பைப் பெறச் சென்றிருந்தேன். அங்கே என்னை வரவேற்றுப் பேசிய மார்க்கிஸ்ட் கட்சித்தோழர் கூட அதைத்தான் சொன்னார் – இந்த பேரூராட்சி மன்ற சார்பில் அண்ணா சிலையொன்று திறக்கப்பட இருந்தது அதை அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி திறந்துவைப்பதாக இருந்தது. ஆனால் அது நடைபெறாமல் போய்விட்டது, ஆட்சி கலைக்கப் பட்ட காரணத்தினால்’ என்று கூறினார்.
ஆகவே ஆட்சி கலைக்கப்பட்ட காரணத்தினால் அம்பத்தூர் பால் நிலையம் மாத்திரமல்ல: இதுபோன்ற கூட்டம் மாத்திர மல்ல: பேரூராட்சி மன்றத்தின் பேருந்து நிலைய அண்ணா சிலைதிறப்பு மாத்திரம் நடக்காமல் விட்டுவிடவில்லை. தமிழ்நாட்டு மக்களுடைய நல்வாழ்வில் முன்னேற்றம் நடைபெறாத ஒரு தடை போடப்பட்டு விட்டதை நான் சொல்லாமல் இருக்க முடியாது.
ஏன் ஆட்சி கலைக்கப்பட்டது? என்ன குற்றம் செய்தோம்? எந்தக் குற்றம் சாட்டி ஆட்சியைக் கலைத்தார்கள்? காரணம் சொல்லி ஆட்சியைக் கலைத்தார்களா? ஆட்சியைக் கலைத்து விட்டு என்ன காரணம் சொல்லலாம் என்று குற்றங்களைக் கண்டு பிடித்தார்களா?
குற்றம் சாட்டி ஆட்சியைக் கலைக்கவில்லை குற்றம் சுமத்தி ஆட்சியைக் கலைத்தவர்களாக இருந்தால் இந்த ஆட்சி கலைக்கப்படவேண்டும் என்று குற்றத்தைத் தயாரித்து சட்டப்படி அனுப்புகின்ற தகுதியும் உரிமையும் படைத்தவர் ஆளுநர் கே.கே. ஷா. அவர்தான் அறிக்கை அனுப்ப வேண்டியவர்.
76-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி காலை 3 மணிக்கு சென்னை கிண்டி காந்தி மண்டபத்திலே விழா அந்த விழாவில் கூட கவர்னர் ஷா பேசுகிறார். அவர் தான் இந்த ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு – அமைதியில்லை ஆகவே இதைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று குடியரசுத்தலைவருக்கு சிபாரிசு செய்கிறேன் என்று எழுதவேண்டிய பொறுப்பில் உள்ளவர் கவர்னர்
அந்த கவர்னர் 76-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி காலை 9 மணிக்கு காந்தி மண்டபத்தில் நடைபெற்ற காந்தி விழாவில் கழக ஆட்சியைப் பாராட்டிப் புகழ் மாலை சூட்டுகிறார்.
என்ன புகழ்ந்தார் புகழ்மாலை சூட்டினார் என்று நான் சொல்வதைவிட நம்முடைய நாவலர் சொன்னால் மிக அழகாக இருக்கும். ஏனென்றால் கூட்டத்திற்குக் கூட்டம் அந்தப் புகழ்மாலையிலுள்ள ஒவ்வொரு முத்துக்களையும் எடுத்து அவருக்கே உரிய பாணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பல ஊர்களில் நாவலர் பேசியிருக்கிறார்.
அப்படிப்பட்ட புகழ்மாலையை கழக ஆட்சியின்பால் அன்றைக்கு கவர்னர் கே. கே. ஷா சூட்டினார்.
அன்று மாலையோ கழக ஆட்சி கலைக்கப்படுகிறது.
காலையிலே பாராட்டு – மாலையிலே கழக ஆட்சி கலைக்கப் பட்டதாக வானொலியில் செய்தி!
மறுநாள் கவர்னருடைய அறிக்கையில் இது ஊழல் நிறைந்த ஆட்சி – இங்கே சட்டம் ஒழுங்கு அமைதியில்லை ஆகவே கலைக்கப்படுகிறது என்று அறிக்கை முதல் நாள் சொல்கிறார் இது காந்தி நெறியில் செல்கிற ஆட்சி – மறுநாள் அறிக்கைவிடுகிறார் இது ஊழல் நிறைந்த ஆட்சி, சட்டம் ஒழுங்கு அமைதியைக் காப்பாற்றாத ஆட்சி என்று – அப்படியென்றால் என்ன அர்த்தம்?
காந்தி வழி ஆட்சி என்றால் என்ன தான் பொருள்?
காந்திவழி ஆட்சி என்றால் ஊழல் நிறைந்த ஆட்சி என்று அர்த்தம்! ஏனென்றால் முதல்நாள் கவர்னரே திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார் – காந்தி வழி ஆட்சி என்று காந்தி வழி ஆட்சி என்றால் சட்டம் ஒழுங்கு – அமைதி பற்றி கவலைப்படாத ஆட்சி என்று அர்த்தம் – அப்படிப்பட்ட சூழ்நிலையில் கவர்னருக்கே அறிவிக்காமல் கழக ஆட்சியைக் கலைப்பதற்கு அவ்வளவு அவசரமாக என்ன காரணம் அவர்களுக்குத் தேவைப்பட்டது?
இந்தியாவில் இருக்கின்ற எல்லா முதலமைச்சர்களும் நெருக்கடி நிலையையும், வாய்ப்பூட்டுச் சட்டத்தையும் ஒப்புக் கொண்டுவிட்டார்கள், பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு விட்டார்கள். இலட்சத்து அறுபதாயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுவிட்டார்கள்- தொழிலாளர்களுக்கு போனஸ் கிடையாது என்ற உரிமை பறிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுவிட்டார்கள் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துவந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமையற்றவர்கள் என்பதை எல்லா முதலமைச்சர்களும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆனால் ஒரே ஒருவன் தமிழ் நாட்டு முதலமைச்சர் கருணாநிதி மட்டும் பிடித்தால் பிடி என்றிருப்பான் தனக்குப் பின்னால் தி.மு. கழகம் என்கிற பெரும்படை இருக்கின்ற காரணத்தினால் ஆணவம் கொண்டு நம்முடைய ஆணைக்குக் கீழ்படிய மறுக்கிறான் என்ற எண்ணத்தோடு இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசும் போது “இந்தியாவில் தமிழ்நாடு ஒரு தீவாக இருக்கிறது.அந்தத் தீவிலேதான் நெருக்கடி நிலையை எதிர்க்கின்ற அரசியல் தலைவர்களுக்கெல்லாம் அபயம் கொடுக்கப்படுகின்றது. அந்தத் தீவிலே தான் நெருக்கடி காலச்சட்டங்கள் அவசியமற்றவை என்பதற்கான விளக்கமளிக்கும் துண்டு அறிக்கைகளெல்லாம் அச்சடித்து இந்தியா முழுவதுமே வெளியிடப்படுகின்றன. அந்தத் தீவிலேதான் 20 அம்சத் திட்டத்தை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றி விட்டோம் என்று கர்வத்தோடு பேசுகின்ற ஓர் அரசு இருக்கிறது; என்கிற இந்தனை கருத்துக்களையும் உள்ளடக்கி இந்திராகாந்தி அம்மையார் இது ஒரு தீவு என்று குறிப்பிட்டார்,
இந்தியப் பூலோகத்தின் படத்தை வரைந்து பார்த்தார்கள். எல்லா இடத்திற்கும் நெருக்கடி வர்ணம் பூசப்பட்டாகிவிட்டது. ஒரே ஒரு திட்டுத்தான் – தமிழ்நாடு இங்கே நெருக்கடி வர்ணம் பூசவேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். ஆட்சியைக் கலைத்தார்கள். மக்கள் தந்த ஜனநாயகத் தீர்ப்பின் படி புதிய தேர்தலை நடத்தி – புதிய அரசு பொறுப்பேற்றுக் கொள்ள ஐம்பது நாட்கள் இருந்த இடைக்காலத்தில் கழக ஆட்சி கலைக்கப்பட்டது.
ஆட்சிக் கலைக்கப்பட்டதற்காக வருத்தப்படவில்லை. 1976 ஆண்டில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டது. சர்வாதிகாரம் மிக வேகமாக நாட்டில் உலவிக் கொண்டிருந்தது.
ஜனநாயகத்திற்கு ஒரு புதுவாழ்வு மறுமலர்ச்சி ஏற்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்து அந்தத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஜனதா ஆட்சியும், பல மாநிலங்களில் ஜனதா கட்சியும் அதற்குப்பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் சில மாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாட்டில் தி.மு.கழக ஆட்சி மாற்றப்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுக்காலம் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்று அதற்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆருடைய ஆட்சியும் ஏற் பட்டது.
தி.மு.கழகம் இன்று எதிர்க்கட்சியாக ஆக்கப்பட்டிருக்கிறது. எதிர்க் கட்சியாக நீங்கள் தி.மு. கழகந்தை ஆக்கி இருக்கிறீர்கள். கொஞ்ச நாளைக்கு எதிர்க்கட்சியாக இருங்கள் என்று ஆணையிட்டிருக்கிறீர்கள்.
கழகம் தனியாகப் பெற்ற
மக்கள் ஆதரவு
‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று அண்ணா அடிக்கடி சொல்வார். மகேசன் குரலை விட மக்கள் குரல்தான் முக்கியமானது. நாங்கள் உங்கள் குரலை மதித்து எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்திருக்கிறோம். நாங்கள் தோற்றுவிட்டதாக எண்ணவில்லை. நாங்கள் தமிழ்நாட்டு வாக்காளப்பெருமக்கள் ஆதரவை இழந்துவிட்டதாக எண்ணவில்லை-
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தைதான் பெற்றோம் என்றாலும் மக்களுடைய ஆதரவு கழகத்தின் பக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கத் தவறிவிடவில்லை.
சட்டமன்றத் தேர்தலில் 48 இடங்களைத்தான் பெற்றோம் என்றாலும் எத்தனை பேர் தம்பக்கம் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அறிய நாங்கள் தவறவில்லை.
எம்.ஜி. ஆர் கட்சியானது மார்க்சிஸ்டு கட்சி, முஸ்லீம் லீக், காங்கிரஸ் கட்சி உழைப்பாளர்கட்சி ஆதரவோடு போட்டி போட்டு உடன்பாடு செய்து கொண்டு எம்.ஜி.ஆர் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 52 லட்சம்!
முஸ்லீம் லீக் ஆதரவில்லாமல், ஜனதா கட்சி ஆதரவையும் திரும்பப் பெற்றுக் கொண்ட நிலையில், எந்த கம்யூனிஸ்டுகட்சியின் ஆதரவில்லாமல் தன்னந்தனியாக தி.மு.கழகம் நின்று பெற்ற வாக்குகள் 42 லட்சம் வாக்குகள்
எனவே நாங்கள் இடத்தைப்பார்த்து களைப்படையவில்லை. இடத்தைப் பார்த்து பெருமூச்சு விடவில்லை. எதிர்க்கட்சி வரிசைதானா என்று ஏக்கப்படவில்லை. காரணம் இடம் 48 ஆனாலும் இருக்கிறகட்சி எதிர்க்கட்சி நாற்காலியானாலும் நமக்குப்பின்னால் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்
எதற்குப் பிறகு? எவ்வளவோ அலைகளுக்குப் பிறகு சர்க்காரியா கமிஷன் விசாரணைக்குப் பிறகு கோதுமை வழக்கிற்கும் – கருணாநிதி கொலை செய்ய முயன்றார் என்ற வழக்கிற் கும் பிறகு இப்படிப் பல்வேறு வழக்குகள் போட்டப்பட்ட பிறகு சிறைச்சாலையில் கழகத் தோழர்களை சித்ரவதை செய்த பிறகு – சிட்டிபாபு, பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு வீரர்களை இழந்த,பிறகு நாம் மிரட்டப்பட்ட பிறகு, தமிழக மக்களின் அச்சுறுத்தலுக்கு ஆளான பிறகு – அகில இந்திய வானொலியைத் திறந்தால் காலையிலிருந்து மாலைவரைக்கு அர்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருந்ததே அதற்குப் பிறகு – தமிழ்நாட்டு மக்கள் தி.மு.கழகத்திற்கு அளித்த வாக்குகள் 42 லட்சம் என்பதை மறந்து விடக்கூடாது.
அங்கே பல கட்சிகள் சார்பில் எம்.ஜி. ஆருக்கு கிடைத்த வாக்குகள் 52 லட்சம்!
இங்கே ஒரே கட்சி தனித்து நின்று பெற்ற வாக்குகள் 42 லட்சம்!
இடையில் இருக்கிற வித்தியாசம் பத்து லட்சம்தான். அடுத்த தேர்தலில் ; நடக்கக்கூடாததுமல்ல முடியாததுமல்ல; நடைபெற்றிருக்கிறது; தமிழ்நாட்டில் அதற்கு சான்றும் இருக்கிறது.
ஆனால் எதிர்க்கட்சியாகிவிட்ட காரணத்தாலேயே ஆளுங் கட்சியினுடைய தவறுகளை எடுத்துச்சொல்லவே கூடாது என்ற நிபந்தனையை யாராவது விதிப்பார்களேயானால், தவறுகளை எடுத்துச்சொல்கிற நேரத்தில் நீ செய்யவில்லையா? என்று கேட்டுக்கொண்டே இருப்பார்களானால் அவர்களுக்கு சொல்கின்ற ஒரே பதில் – நான் செய்தேன் குற்றம் என்று சொன்னால் மக்கள் எனக்கு தீர்ப்பளித்து எதிர்கட்சியில் உட்கார வைத்திருக்கிறார்கள். நான் செய்வதையே நீயும் செய்ய எதற்காக அங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாய்? இந்தக் கேள்வியை நான் கேட்பேன்.
விவசாயிகளின் போராட்டத்தில் எட்டுப்பேரைச்சுடலாமா?
என்று கேட்டால் 12 பேரை நீ சுட்டாய்; எனவே இன்னும் நான் சுடவேண்டியது 4 பாக்கி இருக்கிறது என்று கேட்பதா? விவசாயிகளின் போராட்டத்தை தி.மு. கழக ஆட்சியில் நடத்தியது யார்? எல்லாக்கட்சிக்காரர்களும் சேர்ந்து நடத்தினார்கள்!
இன்றைக்கு நடைபெற்ற விவசாயப் போராட்டத்தில் எந்தக் கட்சியின் பின்னணியுமில்லை. நடைபெற்று முடித்த அடக்குமுறை, வன்முறைகள் பற்றி எதிர்க்கட்சிகள் தங்கள் குரலைக் கொடுத்தன.
ஆனால் அன்றைக்கு தி. மு. கழக ஆட்சியிலே விவசாயிகள் போராட்டத்தை பல கட்சிகள் முன்னின்று நடத்தின. இல்லை என்று சொல்ல முடியுமா? பத்திரிகைச் செய்தி கிடையாதா?
அந்த நேரத்தில் துப்பாக்திப் பிரயோகம் நடந்தது – நான் மறுக்கவில்லை. அந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது சரிதான் என்று நான் கூட அந்த அளவுக்கு நியாயம் பேசவில்லை – அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் சுட்டது நியாயம்தான் என்று அன்றைக்கு மேடைக்கு மேடை பேசினார். மறந்துவிட முடியுமா? பத்திரிகைகளில் ஆதார மில்லேயா?
பஸ் தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதியம் போதவில்லை என்று கேட்கிறார்களா ? கருணாநிதிதான் காரணம்!
விவசாயிகள் தங்களின் வீடு, வாசல் தாங்கள் பட்டகடனுக்காக கடுமையான முறையில் ஜப்தி செய்யப்படுகின்றன, நாங்கள் கைது செய்யப்படுகிறோம். இது நியாயமா என்று விவசாயிகள் கேட்கிறார்கள் இதற்கும் கருணாநிதி தான் காரணம்?
என்.ஜி.ஓக்கள் – அரசு ஊழயர்கள் சம்பளம் போதவில்லை என்று கோரிக்கை விடுத்தாலும் கருணாநிதிதான் காரணம் என்று எதற்கெடுத்தாலும் தி.மு. கழகத்தின் மீதே பழி சொல்லிக்கொண்டிருக்கிறார்
கருணாநிதிக்கு சித்தபிரமை வந்து விட்டது என்று பேசுகிறார்.
முதலமைச்சரே இப்படிப் பேசினால் – எனக்குச் சித்தப் பிரமை பிடித்து விட்டது என்றால் எனக்குக் கோபம் வருவது பிறகு இருக்கட்டும், கட்சியிலுள்ள கொள்கை வெறி பிடித்த தொண்டனுக்கு இதைக்கேட்கும்போது கோபம் வருமாவராதா?
(முற்றும்)