பாரதிதாசன், தனது கவிதைகள் மூலம் தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும், அதன் கலாச்சாரத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளார். “முல்லைக்காடு” அவரின் இயற்கைப் புனைவுகளில் ஒன்றாகும். இது முல்லை நிலத்தின் எழிலையும், அங்கு வாழும் மக்களின் வாழ்வியலையும், இயற்கையின் அழகையும் செய்யுள் வடிவில் காட்சிப்படுத்துகிறது. பாரதிதாசன் இயற்கையை வெறும் வறண்ட காட்சியாகப் பார்க்காமல், அதனுள் ஒரு இயக்கத்தையும், உணர்வையும் கண்டவர். அவர் இயற்கையைப் பாடும்போது, அதனுடன் சமூகச் சிந்தனைகளையும் இணைத்துப் பாடும் தன்மை கொண்டவர்.
முல்லைக்காடு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
நன்றி!
தமிழகம் எத்தனையோ தலை சிறந்த கவிஞர்களை உண்டாக்கி இருக்கிறது. அவர்களில் நமது பாரதிதாசன் அவர்கள் வெறும் கவியல்ல புரட்சிக் கவி..
கவிஞர் எழுதிய கவிகள் பல. அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துத் தருவதே முல்லைக் காடு என்னும் இச்சிறு நூல்.
இந்த அரிய நூலினை இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுக் கொள்ளும், உரிமையை முரசொலி பதிப்பகத்தார் மூலம் எங்களுக்கு அளித்த ஞாயிறு நூற் பதிப்பகத்தினருக்கு எங்கள் நன்றி!
வணக்கம்
கலைமன்றம்.
இயற்கைப் பகுதி
அதிகாலை
கொக்கோ கோகோ என இனிமையின்
குரல் மிகுத்திடக கூவல் – செவிக்
குளிர்தரும் அதிகாலை என்பதைக்
குறித்திடும் மணிச் சேவல்!
திக்கார்ந்திடும் இருள் விலகிடும்
சிறு பறவைகள் கூவும் – நல்ல
திரைக்கடல் மிசை எழுந்திடும் முனம்
செழுங் கதிரொளி தூவும்!
தக்கோர் கண்ணில், தெளியுளமதிற்
தகு புதுமைகள் உதிக்கும் – நல்ல
தமிழ்க் கவிதைகள் உழுபவர் சொல்ல
எருதுகள் சதி மிதிக்கும்!
செக்காடுவார் திகு திடு கிறு
கீச்சென வருஞ் சத்தம்! – நல்ல
சேரியின் துணை கோரி அங்குள
ஊர் முழுமையும் கத்தும்.
கண்மாமலர் விரிந்திடும், பெண்கள்
கரம் கதவுகள் திறக்கும் – மிகக்
கருத்துடனவர் முன்றில் விளக்கக்
காற் சிலம்பொலி பறக்கும்!
உண்ணா துண்டு துயில் கிடந்திடும்
உயிர் நிகர்த்தகு ழந்தை – விரைந்
தோடித் தனது பாடம்படிக்க
உவகை கொண்டிடும் தந்தை.
விண்ணேறிடும் பகலவன் கதிர்!
விளங்குறும் திசை முகமே! – தகு
வினை தொடங்குது கிடுகிடுவென
விரி மனிதச முகமே!
அந்திப்போதின் கதி!
அந்தியும் மேற்கில் மறைந்தாள்-அவள்
ஆடையெனும் கருவானம்,
எந்தத் திசையிலும் காற்றில்-பறந்
தேறிடும் காட்சியும் கண்டீர்!
சிந்திய முத்து வடந்தான்-ஒளி
சேர்ந்திடு நட்சத்திரங்கள்!
சிந்தையிற் கோபம் அடைந்தாள்-அந்தி
சின்றமுகம் இங்குத் திருப்பாள்.
பாடுங் கடற்பெரு வேந்தன்-தன்
பங்கில் இருந்தன னேனும்,
நாடும் உளத்தினில் வேறு-தனி
நங்கையை எண்ணிடலானான்.
ஏடு திருப்பிப் படித்தால்-அந்தி
எப்படி ஒப்புவள் கண்டீர்!
ஆடி நடந்து வந்திட்டான்-அதோ
அந்தியின் நேர் சக்களத்தி!
கன்னங்கறுத்த நற் கூந்தல்-அந்தி
கட்டவிழ நடந்தாளே!
சென்னி புனைந்த கிரீடம்-மணி
சிந்திட ஓடி விட்டாளே!
யுளகன்னிம் வெறுத்தாளே-கடற்
காதலன் போக்கினை எண்ணி!
என்ன உரைப்பினும் கேளாள்-அந்தி
யின்முகம் கீழ்த்திசை காட்டாள்!
ஏடி ஒளிமுகத்தாளே!– அந்தி!
என்னை மறந்தனை என்றே
கோடிமுறை அழைத்திட்டான்-உளம்
கொந்தளிப் புற்றுப் புரண்டான்!
வாடிய அந்தி நடந்த-அந்த
மார்க்கத்திலே விழி போக்கிப்,
பீடழிந்தான் அந்த நேரம்-ஒரு
பெண்வந்து பின்புறம் நின்றாள்!
வந்திடும் சோதி நிலாவைக்-கடல்
வாரி அணைத்தனன் கண்டீர்!
அந்தி பிரிந்ததினாலே-கடல்
ஆகம் இருண்டது; பின்னை
விந்தை நிலாவரப் பெற்றான்-கடல்
மேனியெலாம் ஒளிபெற்றான்!
சிந்தையை அள்ளுது கண்டீர்!-அங்குச்
சீதக் கடல் மதிச் சேர்க்கை!
நிலாப் பாட்டு
நிலவே நிலவே, எங்கெங்குப் போனாய்?
உலக முற்றும் உலவப் போனேன்.
உலாவல் எதற்கு விலாசத் தீபமே?
காடும், மலையும், மனிதரும் காண.
காண்ப தெதற்கு களிக்கும் பூவே?
சூரிய வெப்பம் நீங்கிக் குளிர.
குளிர்ச்சி எதற்கு வெளிச்சப் பொருளே?
செய்யுந் தொழிலிற் சித்தங் களிக்க.
சித்தங் களிக்கச் செய்வ தெதற்கு?
நித்தமும் நாட்டை நிலையில் உயர்த்த.
நாட்டை உயர்த்தும் நாட்டம் எதற்கு?
வீட்டைச் சுரண்டும் அடிமை விலக்க.
அடிமை விலக்கும் அதுதான் எதற்கு?
கொடுமை தவிர்த்துக் குலத்தைக் காக்க.
குலத்தைக் காக்கும் குறிதான் எதற்கு?
நிலத்துச் சண்டையைச் சாந்தியில் நிறுத்த.
சாந்தி ஆக்கும் அதுதான் எதற்கோ?
ஏய்ந்திடும் உயிரெலாம் இன்பமாய் இருக்க.
பதந்தனில் இன்ப வாழ்வுதான் எதற்கோ?
சுதந்தர முடியின் சுகநிலை காணவே!
சோலை
விரைமலர்த் தேன் வண் டெல்லாம்
வீணையை மிழற்ற, ஆங்கே
மரங்கொத்திப் புட்கள் தாளம்
வகைப்படுத் திடத், தடாகக்
கரையினில் அலைக்கரங்கள்
கவின் மிருதங்கம் ஆர்ப்பக்,
கருங்குயில் பாடத் தோகைக்
கணிகை நின்றாடும் சோலை!
வானவில் ஏந்தல் கண்டு
மாந்தளிர் மெய் சிவக்கத்,
தேனுந்தும் மலர்க் குலங்கள்
செம்மக ரந்தம் தூவ,
ஆநந்தத் தென்றல் மெல்ல
ஆலவட்டம் பிடிக்க
வானவில் மறைய, மாவை
மல்லிகை சிரிக்கும் சோலை!
நெல்லியும் கமுகும் ஆலும்
நெடுங்கிளைக் கரம் வளைத்துச்
சொல்லுக இரண்டி லொன்று
தொட்டிழுத்திடுவோம் என்ன,
நல்ல மாதுளம் நடுங்கும்;
நறுவிளா நடுங்கும்; கொய்யா
வல்லி என் மார்போ கொய்யாக்
கனியென வழுத்தும் சோலை!
மாணிக்க அலகிற் கொஞ்சும்
மரகதக் கிள்ளைக் கூட்டம்
ஆணிப் பொன் னூசலாட,
அணிக்கிளை அசைக்கும் தென்றல்!
தூணிட்ட பச்சைப் பந்தல்
சூழ்கிளை மஞ்சத்தின்மேல்
ஆணொடு பெண்சிட் டின்பம்
மொண்டு மொண் டருந்தும் சோலை!
பறிபடாப் பசும்புற் பூமி
பட்டுத் தைத்திட்ட பெட்டி
திறந்த அப் பெட்டி யெங்கும்
சேர்பனி வயிரக் குப்பை!
அறைமணிக் குப்பை யெல்லாம்
அருக்கனின் ஒளிப் பெருக்கம்!
பறிபடாப் புற்கள் கண்ணைப்
பறித்திடச் சிறக்கும் சோலை!
குவட்டாவில் கூட்டக்கொலை
எந்த நிமிஷத்திலும்-சாதல்
ஏற்படக் காரணங்கள்
ஐந்து லக்ஷம் உளவாம்-இதில்
ஐயமுற வேண்டாம்.
இந்த உலகத்திலே-“நீ
இருத்தல்” என்பதெலாம்
வந்த விபத்துனையே-கொஞ்சம்
மறந்த காரணத்தால்!
வானமும் மண்ணகமும்-உண்டு;
மத்தியில் நீ யிருந்தாய்.
வானிடைக் கோடிவகை-“நிலை
மாற்றம்” நிகழ்வதுண்டாம்.
ஆனஇம் மண்ணகத்தே-பதி
னாயிரம் உற்பாதம்!
பானை வெடிக்கையிலே-அதிற்
பருக்கை தப்புவதோ!
நாளைய காலையிலே- இந்த
ஞாலம் உடைவதெனில்,
வேளை அறிந்ததனை-நீ
விலக்கல் சாத்தியமோ?
ஆளழிக்கும் விபத்தோ-முன்
னறிக்கை செய்வதில்லை.
தூளிபடும் புவிதான்-இயற்கை
சுண்டுவிரல் அசைத்தால்!
மானிடர் மானிடரைக்-கொல்லும்
வம்பினை மானிடர்கள்
ஆனபடி முயன்றால்-பகை
அத்தனையும் விலகும்.
மானிடன் கொன்றிடுவான்-எனில்
மந்த மனிதனைத்தான்!
மானிடன் மானிடனின்-உயிர்
மாய்ப்பதும் மிக்கருமை!
நல்ல குவட்டாவில்-உன்
நல்ல உறவினர்கள்
இல்லம் தெருக்களுடன்-அவர்
இல்லை எனக்கேட்டோம்.
சொல்லத் துடிக்குதடா-உடல்!
தூய வடநாட்டார்
அல்லற் பெருஞ்சாவின்-வயிற்றில்
அகப்பட் டறைப் பட்டார்.
ஆகும் ஐம்பத்தாறா-யிரம்
அன்பு மனிதர்களைப்
பூகம்ப உற்பா தம்-மண்ணிற்
போட்டு வதைத்துவாம்!
சோகம் புலம்புமடா-இந்தத்
தொல்லைச் செயல்கண்டால்!
ஊகத்தில் இக்கோரம்-தோன்றி
உள்ளம் அறுக்குதடா!
மாடம் இடிந்தனவாம்!-அவை
மண்ணிற் புதைந்தனவாம்!
ஆடும் தரையோடும்-மெத்தை
அடுக் கொடிந்தனவாம்!
கூடத்து மக்களெலாம்-எழிற்
கொஞ்சிப் பழம்போலே,
வாட நசுங்கின ராம்-ரத்த
வாடை எடுத்ததுவாம்!
பெற்ற குழந்தைகளைத்-தினம்
பேணிவரும் தாய்மார்,
சிற்றெறும்புக் கடிக்கே-அழும்
திவ்ய அன்புடையார்!
வெற்றிக் குவட்டாவை-இயற்கை
வேரறுக்கும் சமயம்
பெற்ற பிள்ளை துடிப்பும்-பிள்ளை
பேணும் அன்னை துடிப்பும்,
எண்ணச் சகிக்கவில்லை!-நகர்
எங்கும் சுடுகாடாம்!
கண்டவர் செத்திருப்பார்-இந்தக்
கஷ்ட நிஷ்டூரமெலாம்!
அண்டை அயலிருப்பார்-அவர்
அன்பினிற் செத்திருப்பார்!
எண்டிசை கேட்டிருக்கும்-இதை!
ஏக்கம் அடைந்திருக்கும்
இன்றிரவே நமது-நிலைமை
ஏதுகொல் என்றெண்ணும்
தின்றுபடுக்கு முனம்-உயிர்
தீரும்என நடுங்கும்!
நன்று புவிவாழ்வு-மிக
நன்று மிகநன்று!
மென்று விழுங்கும் “புலிப்-பெருவாய்”
மேதினிஎன்று பொருள்.
தம்பிஉனக் குரைப்பேன்-நீ
சஞ்சலம் கொள்ளுகின்றாய்!
வெம்புகின்றாய் உளந்தான்-இந்த
வேதனைச் செய்தியினால்!
அம்பு தொடுக்காமல்-நா
லாட்படை ஏவாமல்,
கும்பலிற் சாகும்வகை-இயற்கை
கோடிவகை புரியும்!
பூகம்ப லோகத்திலே-தீயும்
புனலும் வாழ்புவியில்,
வேகும் எரிமலைகள்-நல்ல
வேட்டையிடும் புவியில்.
நோகும்படி தோன்றிக்-கொல்லும்
நோய்கள் ஒருகோடி
ஆகுமிப் பூமியிலே-நீ
அன்புறு வாழ்க்கையுற
மன மிருந்தாலோ-ஒரு
மருந்துனக் களிப்பேன்.
தினமிரு வேளை-அதைத்
தின்றுவர வேண்டும்.
எனை வெறுக்காதே-மருந்
தின்னதெனச் சொல்வேன்.
தினையள வேனும்-அதைச்
சீயென் றொதுக்காதே!
சாவது நிச்சயமாம்-நான்
சாவது நிச்சயமாம்
சாவது நிச்சயமாம்-என்ற
சத்திய வார்த்தையினைக்
கூவுதம்பி கூவு!-இந்தக்
குவலயம் கேட்கக்
கூவுக லக்ஷமுறை!-உன்
கொச்சை மனந்தெளியும்!
அந்தத் தெளிவினிலே-உனக்
காண்மை உதித்துவிடும்!
சொந்த உலகினிலே-என்றும்
தொல்லை விளைத்துவரும்
எந்த மனிதனையும்-நீ
ஏறிக் கலக்கிடுவாய்!
சந்ததம் இன்பத்திலே-புவி
சாரும் வகைபுரிவாய்!
மக்களுக் கிங்குழைப்பாய்-இங்கு
வாழ்ந்திடும் நாட்களெலாம்,
தக்கன செய்வதற்கே-மனம்
சலித்தல் விட்டொழிப்பாய்!
அக்கினி மத்தியிலும்-நீ
அஞ்சுதல் நீக்கிடுவாய்!
புக்க மனிதரெலாம்-ஒற்றைப்
போகமுறை உழைப்பாய்!
தமிழகப் பகுதி
தமிழ்த் தொண்டு
இயற்கை அன்னை அருளிய இன் தமிழ்!
அயல்மொழி வேண்டாஆர் எழில் சேர் தமிழ்!
நிறைதமிழ்! இந்நாள் நெடுநிலம் முழுதும்
குறைவில தென்று குறிக்கும் தனித்தமிழ்!
தமிழர் வாழ்வின் தனிப் பெருமைக்கும்
அமைந்த சான்றாம் அமுதுநேர் செந்தமிழ்
அந்த நாளில் அறிவுசால் புலவர்
எந்தநாள் தோன்றிய தோஎனும் பழந்தமிழ்!
தமிழ்நாடு பலப்பல தடுப்பரும் இன்னலில்
அமைந்தும், அணுவும் அசையாப் பெருந்தமிழ்!
தமிழை அழித்தல் தமிழரை அழிப்பதென்று-
இமையாது முயன்ற அயலவர் எதிரில்,
இறவாது நிற்கும் ஏற்றத் தமிழன்
பெருநிலை எண்ணுக தமிழ்ப்பெரு மக்களே!
அருஞ் செல்வர்கள் அன்று தொடங்கி
இன்று வரைக்கும் ஈந்து வந்துள்ள
பொன்றா ஆதரவு-அன்றோ காரணம்?
அயல்மொழி எல்லாம் அண்டையில், கண்ணெதிர்
வியக்கு முறையில் மேன்மை பெற்றன;
என்ன முயற்சி! எத்தனை ஆர்வம்!
இன்ன வண்ணம் இருக்கையில், நம்மவர்
தமிழிடம் காட்டும் தயவு போதுமா?
தமிழ்த்தாய் பூசை போதுமா? சாற்றுக!
“தமிழர் பொருளெலாம் தமிழுக்குத் தந்தார்”
“தமிழை யுயர்த்தினர் தாமுயர் வுற்றார்”
என்றசொல் நாட்டினால், இறவா நற்புகழ்
நன்று வாய்ந்திடும் என்ற நடுக்கமோ?
தமிழின் தொண்டு தரித்திர வயிற்றுக்கு-
அமிழ்தம் அன்றோ அண்ணன்மாரே!
ஆவன தமிழுக் காற்றுதல் சிறிதே.
ஈவது சிறிதே இன்ப மொழிக்கு!
வருத்தச் சேதி இஃதொன்று மட்டுமா?
ஒருவர் ஒன்று தமிழ்கலம் உன்னி
இயற்ற முன் வந்திடில், இடையூறு பற்பல
இயற்ற முன்வருவதை என்ன என்பது!
சேர்ந்து தொண்டாற்றுதல் சிறப்பா? அன்றிக்
காய்ந்தும், முணுத்துக் கசந்தும் கலகம்
செய்தும் திரிதல் சிறப்பா? செப்புக!
குள்ள நெஞ்சினர் கொடுமை செய்வதைத்
தெள்ளிய நெஞ்சினர் தீர்த்தும், தமிழில்
அன்பிலாத் தமிழரை அன்பில் தோய்த்தும்,
தென்பா லெழுந்த தீந்தமிழ்ச் சுடரை
வானிடை எழுமோர் வண்மைச் சுடராய்ச்
செய்யமுன் வருக தமிழரே,
உய்ய நம்மவர்க்கிங் குறுதுணை அஃதே!
நமது நாடகம், சினிமா
சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச்
சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்.
கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால்
கொடுமை இதைவிட வேறே என்ன வேண்டும்?
பாராத காட்சியெலாம் பார்ப்ப தற்கும்,
பழமையினை நீக்கி நலம் சேர்ப்ப தற்கும்
ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள்
அமைக்கின்றார் முன்னேற்றம் அடைகின் றார்கள்.
ஒருநாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி
உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்ப தற்கும்,
பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்
பிடித்த பிடியில் முடித்துத் தீர்ப்ப தற்கும்,
பெருநோக்கம் பெருவாழ்வு கூட்டு தற்கும்,
பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்! என்றன்
திருகாட்டில் பயனற்ற நாடகங்கள்
சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்!
தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பா திப்போர்
தமிழ்ப்பாஷையின் பகைவர்; கொள்கை யற்றோர்;
இமயமலை யவ்வளவு சுயந லத்தார்;
இதம் அகிதம்சிறிதேனும் அறியா மக்கள்!
“தமைக்காக்க! பிறர்நலமும் காக்க” என்னும்
சகஜகுண மேனுமுண்டா? இல்லை. இந்த
அமானிகள்பால் சினிமாக்கள் நாட கங்கள்
அடிமையுற்றுக் கிடக்குமட்டும் நன்மை யில்லை.
முன்னேற்றம் கோருகின்ற இற்றை நாளில்
“மூளிசெயல் தாங்காத நல்லதங்கை
தன்னேழு பிள்ளைகளைக் கிணற்றில் போட்ட”
சரிதத்தைக் காட்டுகின்றார் சினிமாக் காரர்!
இந்நிலையில் நாடகத்தின் தமிழோ, “காதை
இருகையால் மூடிக்கொள்” என்று சொல்லும்.
தென்னாட்டின் நிலைநினைத்தால் வருந்தும் உள்ளம்!
செந்தமிழின் நிலைநினைத்தால் உளம்வெடிக்கும்!
சுகாதார வாழ்வு!
(மாமயிலேறிநீ வா மகாநுபாவா என்ற மெட்டு]
பல்லவி
நோயினைப் போய் அழிப்பாய்
நூறாண்டு வாழ்வாய்!
(நோ)
சரணம்
ஆயநன் னெஞ்சில் வேண்டும்நல் வீரம் (நோ) அசுத்தமும் இருட்டும் புறத்தும் நல் லகத்தும் (நோ) வாழ்க்கையின் கடுவே வரஎண்ணும் சாவைப் (நோ) அயர்வினில் தொடரும் துயரெனும் சேதி (நோ) |
தகுந்த குடும்பம் சர்வ கலாசாலை
காலை விழித்தெழுந்தாள் கைம்மலரால் கண்துடைத்தாள்!
கோல மலர்கமழும் கூந்தல் திருத்தினாள்.
காந்தி முகம்கழுவிக் கைவிளக்கை ஏற்றி,மிகு
சாந்த உரைபேசிப் பிள்ளைகளைத் தானெழுப்பி,
வீணை எடுத்தாள்! விளைத்தாள் அமுதத்தை!
ஆணழகன் தன்நாதன் அவ்வமுதம் கேட்டெழுந்தான்!
காதற் கணவன், கனியன்புப் பிள்ளைகள்
சோதித் தமிழ்க்கவிதை சுருதியொடு கலக்கப்
பாடினார்! பாடிப் பனிக்காலைப் போதுக்குச்
சூடிஅழைக்கச், சுடரும் கிழக்கினிலே
செம்மை ஒளியிற் சிரித்துத் தலைநிமிர்ந்தான்!
அம்மை குடித்தனத்தை ஆளும் அரசியிவள்
பிள்ளைகளைக் கூட்டிப்போய்ப் பீடத்தி லேயமைத்துப்
பள்ளிக்கு வேண்டியநற் பாடங்கள் சொல்லிவிட்டு,
நல்ல கதையுரைத்து ஞாலப் பதுமைகளைச்
சொல்லி மகிழ்வித்தாள். தோயன்பு நாதன்முதல்
எல்லாரும் இன்ப உணவுண்டார். மக்களெலாம்
கல்விச்சாலை செல்லக் கட்டும் உடைப்பொத்தலெல்லாம்
இல்லக் கிழத்தி எழில் தையற் காரியாய்த்
தைத்துடுத்தி விட்டாள்; தனது கணவனிடம்
அத்தினத்தில் ஆனபல ஆலோசனை பேசி
நாதன் வெளிச்செல்ல நங்கை இனிதிருந்த
போதில், வெளியூர்ப் புறத்தி லிருந்து தன்
வீட்டுக்கு வந்த விருந்தாளி, வீதியிலே
போட்டிருந்த கல்தடுக்கப் பொத்தென்று வீழ்ந்ததனால்
மண்டை யுடைந்துவந்தான்; வஞ்சி இரக்கத்தால்
அண்டையிலே கட்டில் அதில்வளர்த்தி நற்சிகிச்சை
தக்கபடி புரிந்தாள். தன்நாதன் வீடுவந்தான்.
ஒக்க இருந்தான். உடலும் நலமாச்சு.
நல்ல சுகாதாரம் நாடிச் சமைத்திருந்த
பல்லுணவும் இட்டாள். பகல் கணக்கும் தான்எழுதிச்
சித்திரத்தில் மக்கள் திருந்தப் படமெழுதி
வைத்திருந்த நூலை மணவாள னோடிருந்து
வாசித்தாள். நல்ல வடிவழகன் பேச்சமுதை
ஆசித்தாள், இன்பம் அடைந்தாள். சிறிதயர்ந்தாள்.
பக்கத்து வீட்டுப் பருவதத்தாள் தான்வந்து
சொக்கர் திருவிழாச் சோபிதத்தைச் சொல்லி,
வருவாய் நாம்போய் வருவோம்; மாலைதிரும்பி
வருவோம் என்றாள்! இந்த வார்த்தைகளைக் கேட்ட
இல்லக் கிழத்தியவள் சும்மா இருந்துவிட்டாள்.
நல்ல விழாவைத் தன்நாவால் மறுப்பாளா?
வந்த விருந்தாளி பருவதததின் வார்த்தைக்குத்
தந்தபதில் இதுவாம்:- “தையலரே கேளுங்கள்!
சங்கீதக் கோகிலத்தைத்- தாவும் கிளையினின்று
அங்கு விழாவுக் கழைத்தால் வருவதுண்டோ?
மக்களுக்கு வாத்தியென வாய்ந்த மருக்கொழுந்தைக்
கக்கும் அனலில் கசக்க அழைப்பீரோ?
தையற்றொழில் அன்னம் தாமரைப்பூ வைமறந்து
வெய்யிற் சுரத்திடையே வீழ்த்த அழைப்பீரோ?
வீட்டுக் கணக்கெழுதும் வித்தகத்தை அவ்விழவில்
போட்டுக் குலைக்கப் பொறாமை உமக்கமோ?
காவியங்கள் கற்றுக் கவிசெய்து நல்லநல்ல
ஓவியங்கள் தீட்டும் உயர்புலமைத் தேவியினை
வம்புக் கிழுக்க வசமாமோ சொல்லிடுவீர்?
அம்மையீர், நல்ல அறிவும் திருவுமுறும்
சீமாட்டி தன்னைத், திருவிளக்கைக் கல்வியெனும்
மாமேட்டில் வீற்றிருக்கும் மங்கைக் கரசிதனைச்
சொந்தக் கணவனுடன் சேய்கள் தொடர்பறவே
எந்நிமிஷமும் பிரிதல் ஏற்றதல்ல என்றுரைப்பேன்.
நிர்மலமாங் கல்வி நிறைந்தாள் இருந்தகுடி
சர்வகலா சாலை எனத்தகுமே! அவ்வம்மை
ஊமைஎன இருந்தாள் உங்கள் அழைப்புக்கே!
தீமை புரியாதீர்” என்று தெரிவித்தான்!
இல்லக் கிழத்தி எதிரிருந்த மங்கைதனை
முல்லை மலர்ந்த சிரித்த முகங்காட்டி,
தோழி, விழாவுக் கழைத்தாய் அதுவேண்டாம்;
வாழி உலகென்றாள் வாய்ந்து.
தமிழர் எழுச்சி!
உயர்தமிழ் உயர்நடை உயர்தனி வீரம்
இங்கிவை தமிழரின் உடைமை!
அயர்வுகள் தீர்ந்தன புதுமையில் உலகை
ஆள்வது தமிழர்கள் கடமை!
புயல்நிகர் பகைமையும் வேரோடு மாளும்
தமிழர்கள் சமரிடைப் புகுந்தால்!
வெயில்முகம் சுளித்தால் அகிலம் தூளாம்
மேன்மையை முழக்குக முரசே!
பழமையில் இங்குள அன்புறு காதற்
பயனுறும் அகப்பொருள் காப்போம்!
அழகிய தமிழ்நடை யாற்புதி யனவாய்!
ஆயிரம் கலைநூல் சேர்ப்போம்!
அழுதிட ஒருவன்மற் றொருவனை மேய்க்கும்
அதருமம் அனைத்தையும் மாய்ப்போம்!
முழுதுல கப்பயன் உலகினர் சமம்பெற
அன்பினில் மனிதரைத் தோய்ப்போம்!
முழக்குக எங்கணும் முழக்குக முரசே
முழக்குக தமிழர்கள் பெருமை!
வழங்கிடும் அங்கையர் வாளுயர் தோளினர்
வாய்மையின் வாழ்பவர் தமிழர்!
எழுந்துள வீரம் தமிழரின் மூச்சில்
எழுந்தது வாமென முழக்கே!
அழுந்துதல் இல்லை உலகுள்ள வரைக்கும்
அன்புத் தமிழர்கள் வாழ்வு!
மணிமுடி மறவர்கள் முழுதுணர் மேலோர்
மாபெரும் கவிஞர்கள் கூட்டம்,
அணிமுடி காதல் மகளிர்கள் கூட்டம்
ஆவது தமிழர்கள் ஈட்டம்!
பணிகுதல் இல்லை அஞ்சுதல் இல்லை
பாய்ந்திடும் ஒற்றுமை யாலே!
தணியாக் காதல் நிறைவா மின்பம்
தமிழர்க் கிப்புவி மேலே!
உலக சமாதானம்
அகிலப் பொதுச்சேனை
படை நடத்தல்
நானிலத்தின் மேனிலைக்குச்
சேனை கூட்டினோம்!-பொதுச்
சேனை கூட்டினோம்-வெறி
நாய்கள் ஒக்கப் போர்தொடுக்கும்
ஈனம் ஓட்டினோம்!- கெட்ட
ஈனம் ஓட்டினோம்.
தேனடைக்குள் ஈக்கள் ஒப்பர்
பூதலத்தினோர்!- இந்தப்
பூதலத்தினோர் – அவர்
சீவனத்திற் பேதம்வைத்துப்
பாழ்படுத்தினார்!-துஷ்டர்
பாழ்படுத்தினார்.
ஆனதுஷ்டர் தீயதன்மை
சாகடிக்கும் நாள்-முற்றும்
சாகடிக்கும் நாள்-இது
வாகும் என்று தீவிரத்தில்
வாளெடுக்கும் தோள்!-கூர்
வாளெடுக்கும் தோள்!
மேனிலைக்கண் மாநிலத்தை
ஏற்றுவிப்பீரே-விரைந்
தேற்றுவிப்பீரே-நீர்
மேல் நடப்பிர்! மேல் நடப்பீர்!!
மேல் நடப்பீரே!!!
உலக முன்னேற்றம்
உலகமே உயர்வடைவாய்!
உள்ளவர்க் கெல்லாம் நீயே தாய்!
நலந் தரும் சமத்வம்
நாடுதல் மகத்வம்
நண்ணுவாய் சுதந்தரத்வம்! (உலக)
கலகமேன்? சண்டைகளேன்?
கருத்தெலாம் பேதம் கொள்வதேன்?
கலன் செல்லும் பாதையின்
காரிருள் வெளிக்குக்
கல்வியே சுடர் விளக்கு! (உலக)
கொடை வாழ்க!
எக்காளக் குயில்
வெண்பா
நின்றசெங் காந்தட்பூ நேரிற்கை யேந்தநெடுங்
கொன்றைமலர்ப் பொன்னைக் கொட்டுகின்றாள்-என்றே
அடைகுயில்கள் எக்காளம் ஆர்த்தனவே மண்ணிற்
கொடை வாழ்க என்று குறித்து.
காதற் பகுதி
கண்டதும் காதல்!
(வண்ணம்)
ஸ்ரீமதிஇவ ளார்? உலகிடை மானிடமதி லேதிவள்? ஒரு
சேலிணையினை நேரிருவிழி, கோகனகவி நோதஅதரம்,
மாமதிநிகர் ஓரிளமுகம், வானுறுமழை தானிருள் குழல்,
வாழ்மதுகரம் ஊதிடுமலர் சூடியமுடி யோடிவளிரு
மத்தக மொத்த தனத்தொடு சித்தமி
னித்திட நிற்பது மிக்கவும் அற்புதம்!
மலர்வாய் திறந்தொரு வார்த்தை சொல்லாளோ?
தோய்மதுமலர் மாலையைநிகர் ஆகிய ஒருதேகவனிதை
தீவிரநடம் ஆடியமயி லேஎனுமொரு சாயலினோடு
மாசறுகலை மானெனமருள் வாளவள்நடை யோ அனநடை
வாழுலகினி லேஇவளரு ளாலதிசுக மேபெருகிடும்!
வைத்திடு புத்தமு தத்தையெ டுக்கம
றுத்திடல் மெத்தவ ருத்தமெ னக்குறும்!
மதுவோடையை மொண்டுண வாக்கு நல்காளோ?
மாமயலெனும் ஓர் அனலிடையே எனதுளம் நோயடைவதை
மாதிவளறி யான் இதைஎவர் போயவளிடமே புகலுவர்?
ஆம். அவள்தரு வாயிதழமு தேஇதுததி மாஅவுஷதம்!
ஆவியுனவ ளே உடைமைக ளாதியுமவ ளேயுலகினில்!
அற்புத சித்திர சிற்ப கலைக்கொரி
லக்கியம் வைத்தசி லப்புமி குத்திடும்
அழகாகிய வஞ்சியென் வீட்டை நண்ணாளோ?
காமுறுதமிழ் நாடெனுமொரு தாயுறுபுக ழோ!இனிதென
நாவலர்களு மேதுதிநிதம் ஓதிடுதமிழோ நவநிதி
யோ!முழுநில வோ!கதிரவ னோ!கவிதையி லேவருசுவை
யோ!இதுகன வோபுதுயுக மோ! வடிவழ கேவடிரசம்
மக்கள் உயிர்க்குறு நற்பதம் இப்படி
வைத்த தெனச்சொல விட்டசு கக்கடல்!
மனமே இனும்பொறு வீழ்ச்சி கொள்ளாதே!
கண்டதும் காதல்
இரா: அடாணா. அடதாளம்.
பல்லவி
களிப்பில் ஆடும் கான மயிலோ
காதாரும் பண் பாடும் குயிலோ? (களிப்)
அனுபல்லவி
துளிக்கும் மது மலரின் தேகம்
சுகம் தரும் இவள் அளிக்கும் போகம்! (களிப்)
சரணம்
பளிக்குமேனி கண்டு மனந்தத் தளிக்குதுடல் கொப்பளிக்குதே!
ஒளிக்குதே இம் முகவிலாசம் உளத்தில் மோகம் தெளிக்குதே!
வளர்க்கா தெழில் வளர்ந்த ரூபம்
வையம் விளங்க ஏற்றும் தீபம்! {களிப்)
கலைத்துக் கலைத்து வரைந்த சித்திரமோ
கவினுறும் விழி வேலோ!
ஒலிக்கெலாம் உயிர் தரும் இவள் மொழி
இனிப்புச் சேர்த்திட்ட பாலோ!
தலைக்கேறுதே கொண்ட மோகம்
தகிக்குதே இதென்ன வேகம்! (களிப்)
நாணிக்கண் புதைத்தல்!
தலைவன் கூற்று.
இராகம்: கமாஸ்
(ஏனிந்தப்படி மனம் கலங்கலானீர் மன்னா என்ற
மெட்டிற் சிறிது பேதம்)
தாமரை முகத்தினைத் தளிர்க்கரம் மறைத்ததடி-இளந்தையலே!
பூமது வருந்திடும் புதுவண்டுபோல் மனம்
புழுங்குதடி மயிலே, வழங்கும் தமிழ்க்குயிலே! (தாமரை)
விழிமலர் மறைத்ததில் கழிமயல் ஆகுதடி-இளந்தையலே!
பிழிந்த அமுதமதைப் பிசைந்த கனிரசத்தை
விழுந்து புசித்துவிடின் ஒழிந்து விடுமெனதே (தாமரை)
நாணப்படுவதிங்கு நாணயமில்லையடி-இளந்தையலே!
காணப்படும் நிலவைக், கரம்பொத்தி விடுவதில்
ஆணழகன் சகித்தல் அருமை அருமையடி! (தாமரை)
மலர்க்கொடி விலக்கடி மதிமுகம் மறைத்தகரம்-இளந்தையலே!
இலக்குத் தவறுதடி என்முகம் உன்முகம்
இணைத்திணைத் திழுத்திழுத்தணைத்தணைத் தமுதளி! (தாமரை)
தலைவன், தலைவி தந்த சுகம்
நினைந்துருகல்
(ஸ்ருங்காரலகரி என்ற மெட்டு)
பல்லவி
செந்தேனோ தமிழோ அவளுதவிய சகம் (செந்)
அநுபல்லவி
முந்தோர் நாள் தானே வந்தெதிர்
குளிர் சோலையில் முழு நிலவினில்
கொண்ட காதல் மிகவாகிச் சிலீரெனக்
[சிட்டா ஸ்வரத்திற்கு]
கோ-கனகவி தழ்குவிய முகமே என
தொருமுக மிசையுற, மலருடல் எனதொரு
புளகமெய் தனிலுற இருவரொருவ ராகஆவலொடு
கொஞ்சித்தந்த வஞ்சி முத்தம்
கொஞ்சத்தினில் நெஞ்சைவிட்டு
நிமிஷமும் அரை நிமிஷமும்
விலகுதல் அருமை விரைவினில் அவள்பிரி
வினைமனது பொறுத்திடுவது சகம் வெறுப்பது வாகும்
மலர்ச் (செந்)
சரணம்
சுந்தராங்கி அமுதங் குழல்போல் மொழியாள்
சுகுணாலயம் அன்னவள்!
எந்த வனிதை அவளோ டிணைபெற வருவாள்?
கந்தக் களப உடலாள்! அதிசோபித
கண்ய மான அதி புண்யவதி சுநிதி! (செந்)
4. நகைச்சுவைப் பகுதி
பறக்கும் மிளகு!
பூமியில் மிளகு புள்போல் பறக்குமா?
புதுவை மிளகோ புள்ளாய்ப் பறக்கும்!
சீர்புதுச் சேரியில் தெரிந்த வீடு
சென்றேன் சென்றமாதக் கடைசியில்!
கூடம் நிறையக் கொட்டியிருந்த
கொட்டை மிளகைக் கூட்டிவார
எண்ணினேன், வீட்டார் இல்லை யாதலால்!
எழுந்து துடைப்பம் எடுத்து நாட்டினேன். பூ
மியில் மிளகு புள்போற் பறக்குமா?
புதுவை மிளகு புள்ளாய்ப் பறந்ததே!
எனக்கும் ஆயுள் எண்பது முடிந்ததாம்;
இந்த அதிசயம் எங்கும் கண்டிலேன்!
பூமியில் துடைப்பம் போட்டு நின்றேன்;
போன மிளகு பூமியில் வந்தது!
கூட்டப் போனேன் கூட்டமாய்ப்பறந்தது!
கூட்டாப் போது பூமியில் குந்தும்!
வீட்டுக்காரி வந்து
பாட்டாய்ப் பாடினான் “ஈ”ப்படுத்துவதையே!
பழய நினைப்பு
நேற்றவன் சேவகனாம்-இன்று
நீங்கிவந் திட்டாண்டி!
ஏற்றம் இறைத்திடவே-உச்சி
ஏறி மிதித்தாண்டி!
சேற்று நிலத்தினிலே-ஒரு
சின்னஞ்சிறு குறும்பன்
தோற்றி மணியடித்தான்-அந்தத்
தொல்லை மணி ஓசை.
பழைய சேவகனின்-காதிற்
பட்டதும் வண்டி என்றே
பழய ஞாபகத்தில்-செல்லும்
பாதை குறிப்பதற்கு,
முழுதும் கைதூக்க-அவன்
முக்கரணம் போட்டு
விழுந்துவிட்டாண்டி!-அவன்
வீணிற் கிணற்றினிலே!
கொசு! உஷார்!!
(கும்மி மெட்டு)
கும்பகோணத்திற்குப் போகவேணும்-அங்குக்
கும்பலிற் சேர்ந்து நடக்க வேணும்
சம்பள வீரர் பிடிக்கவேணும்-அங்குச்
சாவுக்கும் அஞ்சாத தன்மை வேணும்!
கும்பலும் வீரரும் ஏதுக் கென்பீர்?-நல்ல
கும்பகோணத்தினில் என்ன என்பீர்?
அம்பு பிடித்த கொசுக்கூட்டம்-அங்கே
ஆட்களை அப்படியே புரட்டும்!
சென்னையில் வீட்டு வசதி
ஒரு வரம் தேவை! உதவுவீர் ஐயா!
திருவரங்கப் பெருமாள் நீரே!
சென்னையில் உங்கள் சிறந்த நாமம்
தெரியாதவர்கள் ஒருவருமில்லை!
பிச்சை எடுத்துப் பிச்சை எடுத்துநான்
பெற்ற பொருளில் மிச்சம் பிடித்துத்
தேன் போட் டுண்ணத் தினையில் ஒருபடி
சேகரித்தேன்! ஆகையால் அதனை
வீட்டில் வைத்து வெளியிற் சென்று
விடிய வந்து எடுத்துக் கொள்கிறேன்.
வீட்டுக் காரன் கேட்டுத் துடித்தான்
“பாட்டுப் பாடும் பராபர வஸ்துவே!
படித்தினைக் கிடமிருந்தால்,
குடித்தனத் துக்கிடம் கொடுத்திருப்பேனே!!”
ஏற்றப்பாட்டு
- ஆழஉழுதம்பி அத்தனையும் பொன்னாம்!
அத்தனையும் பொன்னாம் புத்தம்புது நெல்லாம்! - செட்டிமகள் வந்தாள் சிரித்துவிட்டுப் போனாள்!
சிரித்துவிட்டுப் போனாள் சிறுக்கி துரும்பானாள்! - ஆற்றுமணல்போலே அள்ளி அள்ளிப் போட்டாள்
அத்தனையும் பொன்னாம் அன்புமனந் தாண்டி! - கீற்று முடைந்தாளே கிளியலகு வாயாள்
நேற்றுச் சிறுகுட்டி இன்று பெரிசானாள்! - தோட்டங்கொத்தும் வீரன் தொந்தரவு செய்தான்
தொந்தரவுக் குள்ளே தோழிசுகம் கண்டாள்!
அம்மானை ஏசல்
(எல்லாரும் போனாப்போலே என்ற மெட்டு)
மந்தை எருமைகளில் வளர்ந்திருந்த காரெருமை
இந்தவிதம் சோமன்கட்டி மாப்பிள்ளையாய் இங்கு வந்தீர்
மாமா-எங்கள் இன்ப மயிலை நீர் மணக்க லாமா?
ஆந்தை விழி என்பதும் அம்மிபோன்ற மூக்கென்பதும்!
ஓந்தி முதுகென்பதும் உமக்கமைந்து கிடப்பதென்ன?
மாமா-எங்கள் ஓவியத்தை நீர் மணக்க லாமா?
கோடாலிப் பல் திறந்து குலுங்கக் குலுங்க நகைக்கையிலே
காடே நடுங்கிடுமே கட்டை வெட்டக் கூடுமென்று!
மாமா-எங்கள் வாசமலரை நீர் மணக்க லாமா?
வெள்ளாப்பம்போலுதடு வெளுத்திருக்கும் வேடிக்கையில்
சொள்ளொழுகிப் பாய்வதுதான் சொகுசு மிகவும் சொகுசு சொகுசு!
மாமா-எங்கள் சுந்தரியை நீர் மணக்க லாமா?
ஆனைக்குக் காதில்லையாம் அளிப்பதுண்டோ நீர் இரவல்?
கூன்முதுகின் உச்சியிலே கொக்குக்கழுத்து முளைத்ததென்ன?
மாமா-எங்கள் கொஞ்சுகிளியை நீர் மணக்க லாமா?
எட்டாள் எடுக்க ஒண்ணா இரும்புப் பீப்பாய் போலுடம்பு
கொட்டாப்புளிக் கால்களால் குள்ளவாத்துப் போல் நடப்பீர்!
மாமா-எங்கள் கோகிலத்தை நீர் மணக்க லாமா?
அண்ணியை ஏசல்
(கத்தாழம் பழமே உனைநத்தினேன் தினமே என்ற மெட்டு)
அண்ணி வந்தார்கள்-எங்கள்
அண்ணாவுக்காக-நல்ல (அண்)
கண்ணாலம் பண்ணியாச்சு!
கழுத்தில் தாலி கட்டியாச்சு!
பிண்ணாக்குச் சேலை பிழியப்
பெரிய குளமும் சேறாய்ப் போச்சு! (அண்)
எட்டிப் பிடித்திடலாம்
இரண்டங்குலம் ஜடைநுனிதான்
பட்டி வெள்ளாட்டு வாலைப்
போல மேலே பார்க்கும்படி!
நத்தைப்பல் சொட்டைமூக்கு
நாவற்பழ மேனியிலே
கத்தாழை நாற்றம் எங்கள்
கழுத்தை நெட்டித் தள்ளிடுதே! (அண்)
அழுக்குச் சுமந்துசெல்லும்
அழகுவெள்ளை முகக்குதிரை
வழுக்காது நடப்பதுபோல்
வாய்த்தநடை என்ன சொல்வேன்! (அண்)
கோல்போல் இடுப்புக்கொரு
கோல ஒட்டியாணம்செய்யப்
பேல்கட்டு வாங்கவேண்டும்
பிரித்துத் தகட்டை எடுக்க வேணும்! (அண்)
பக்குவமாய்ப் பேசும்போது
பாய்ந்துவரும் குரல்ஒலிதான்,
செக்காடும் சங்கிதமே
செவியில்வந்து துளைத்திடுதே! (அண்)
4. சிறுவர் பகுதி
கல்வி
(மகாவதி குண மாதர வேகமாய் எ-மெ)
(தந்தை தநயனுக் குரைத்தல்)
|
பிள்ளைக்கு நீதி
(ஆனந்தக் களிப்பு மெட்டு)
சோம்பிக் கிடப்பது தீமை-நல்ல
தொண்டுசெயாது கிடப்பவன் ஆமை!
தேம்பி அழும் பிள்ளைபோலே-பிறர்
தீமையை அஞ்சி நடப்பவன் ஊமை!
புதுமையிலே விரைந்தோடு-ஒன்று
போனவழிச் செல்லும் மந்தையில் ஆடு!
எதிலும் நிசத்தினைத் தேடு-பொய்
எவர்சொன்ன போதிலும் நீ தள்ளிப்போடு.
தேகத்திலே வலி.வேற்று-உன்
சித்தத்திலே வரும் அச்சத்தை மாற்று
ஊகத்திலே செயல் ஆற்று!-தினம்
உன்னருமைத் தமிழ் அன்னையைப் போற்று.
பசிவந்த போதுண வுண்ணு-நீ
பாடிடும் பாட்டினி லேசுவை நண்ணு!
வசித்திடும் நாட்டினை எண்ணு-மிக
வறியவர்க்காம் உபகாரங்கள் பண்ணு.
பொய்யுரைப் போன் பயங்காளி-பிறர்
பூமி சுரண்டிடு வோன் பெருச்சாளி
வையக மக்கள் எல்லோரும்-நலம்
வாய்ந்திட எண்ணிடுவோன் அறிவாளி.
வறுமையிற் செம்மை
(தாய்-மகள் சம்பாஷணை)
சகானா ஆதி
|
மாணவர்க்கு எழுச்சி
(கல்யாணம் செய்துக்கோ என்ற மெட்டு)
நிற்கையில் நிமிர்ந்து நில்! ந
டப்பதில் மகிழ்ச்சி கொள்!
சற்றே தினந்தோறும் விளையாடு.
பற்பல பாட்டும் பாடிடப் பழகு!-நீ
பணிவாகப் பேசுதல் உனக் கழகு! (நிற்)
கற்பதில் முதன்மை கொள்
காண்பதைத் தெரிந்து கொள்
எப்பொழுதும் மெய்யுரைக்க அஞ்சாதே!
சுற்றித் திரிந்திடும் துஷ்டர் சிநேகிதம்
தொல்லை என்பதி லென்னசந் தோம்? நீ (நிற்)
சித்திரம் பயின்று வா
தேன் போன்ற கதை சொல்
முத்தைப்போலே துவைத்த உடையணிவாய்.
புத்தகம் உனக்குப் பூஷணம் அல்லவோ?
போக்கடிக்காதே இதை நான் சொல்லவோ-நீ (நிற்)
பத்திரி கைபடி நீ
பலவும் அறிந்து கொள்
ஒத்துப் பிறர்க்கு நலம் உண்டாக்கு!
நித்தமும் இந்தத் தேசம் தன்னை
நினைத்துப் பொதுப் பணிசெய் அவளுனக் கன்னை (நிற்)
நல்லினஞ் சேர்தல்
(பக்ஷமிருக்கவேணும் மன்னனே எ-மெ)
சேரிடம் அறிந்துசேர் எந்நாளும்-மைந்தா
தீயரை அணுகிடிற் பழி மூளும்!
சீரிய ஒழுக்கம்
சிறந்தநூற் பழக்கம்
ஆரிடம் உள்ளதோ அன்னவரிடமே-சினேகம்
ஆகுதல் அல்லவோடா உன் கடமை!
மண்ணின்குணம் அங்குள்ள நீருக்குண்டு-மைந்தா
மாலையில் மலர்மணம் நாருக்குண்டு.
திண்ணம் பன்றியொடும்
சேர்ந்த கன்றும் கெடும்!
கண்செய்த பாவம் தீயர் தமைக்காண்டல்-மைந்தா
கை செய்த புண்யம் நல்லார் அடி தீண்டல்
சடுதியிலே துஷ்டர் சகவாசம்-பிராமண
சங்கடம் உணர் இந்த உபதேசம்.
தடையிதில் ஏது
தாய் எனக் கோது?
சுடுநெருப் பானவரின் குணம் தெரிந்து-மைந்தா,
சுப்புரத்தினம் சொல்லும் அமுதருந்து!
(சேரிடம்)
வழி நடத்தல்
(சென்று கனி பறித்துக் கொண்டு எ-மெ)
மரங்கள் அடர்திருக்குங் காடு – கரு
வானில் உயர்ந்த மலை மேடு – தம்மில்
பிரிந்து பிரிந்து செல்லும் வரியாய் – நாம்
பிரியத்துடன் நடப்போம் விரைவாய்ப்
பெருங் குரலில் பாட்டும்
பேச்சும் விளையாட்டும் – நம்மை
விரைவில் அவ்விடம் கொண்டு கூட்டும்!
இளமை தன்னில் வலிமை சேர்ப்போம் – நாம்
எதிலும் தைரியத்தைக் காப்போம், – நாம்
அளவில் லாத நாள் வாழ – உடல்
அழகும் உறுதியு முண்டாக,
ஆசை கொண்டு நடப்போம்
அச்சமதைத் தொலைப்போம் – நம்
நேசர் பலரும் மனங் களிப்போம். (மரங்கள்)
(முற்றும்)