தமிழ் இலக்கிய வரலாறு

பேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூல், தமிழ் மொழியின் தொன்மை முதல் இன்றைய நவீன இலக்கியம் வரை விரிவாக ஆராயும் ஒரு சிறந்த ஆய்வு நூல். இந் நூல் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு காலகட்டங்களை விரிவாகவும், ஆழமாகவும் ஆராய்கிறது.

DOWNLOAD :

(Available Formats)

பேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன் அவர்கள் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு” ஒரு முக்கியமான நூலாகும். இது தமிழ் இலக்கியத்தின் நீண்ட மற்றும் செழுமையான வரலாற்றை விரிவாகவும் ஆழமாகவும் ஆராயும் ஒரு முழுமையான ஆய்வு நூலாகும். சங்க இலக்கியம் தொடங்கி, நீதி இலக்கியம், பக்தி இலக்கியம் (சைவம், வைணவம்), காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள், தற்கால இலக்கியம் (புதினம், சிறுகதை, புதுக்கவிதை, நாடகம்) எனப் பல்வேறு காலகட்டங்களை அத்துறைசார் வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் காலப் பகுப்பு செய்து இந் நூலை ஆராய்கிறார் ஆசிரியர்.

தமிழ் இலக்கிய வரலாறு

பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்

உள்ளடக்கம்

சங்க காலம்

மூன்று சங்கங்கள் – இலக்கியச் சான்றுகள் – கல்வெட்டுச் சான்றுகள் – தொல்காப்பியம், அகம், புறம் முதலியவற்றின் சிறப்பு – சங்க நூல்கள் – எட்டுத் தொகை, பத்துப் பாட்டு – சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம்.

சங்கம் மருவிய காலம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் – திருக்குறள் – நான்மணிக் கடிகை – இனியவை நாற்பது – இன்னா நாற்பது – கார் நாற்பது – களவழி நாற்பது – திணை மொழி ஐம்பது – திணைமாலை நூற்றைம்பது – ஐந்திணை எழுபது – திரிகடுகம் – ஆசாரக் கோவை – பழமொழி – சிறுபஞ்ச மூலம்- முதுமொழிக் காஞ்சி – ஏலாதி – இன்னிலை – கைந்நிலை – சிலப்பதிகாரம் – மணிமேகலை – திருமந்திரம்.

பல்லவர் காலம்

சைவ வைணவப் பாடல்கள் – சைவ சமய குரவர் நால்வர்: திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர்; பன்னிரு ஆழ்வார்கள்: பொய்கையாழ்வார். பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், தொட்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார். குலசேகராழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெளத்த, சமண நூல்கள், புறப்பொருள் வெண்பாமாலை, பெருங்கதை, முத்தொள்ளாயிரம், உலா நூல்கள், சமணர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அறநெறிக் கதைகள், நிகண்டுகள், இலக்கண, இலக்கியங்கள்.

சோழர் காலம்

ஐம்பெருங் காப்பியங்கள் – ஐஞ்சிறு காப்பியங்கள் – திருமுறைகள் – நம்பியகப் பொருள் – யாப்பருங்கலவிருத்தி – யாப்பருங்கலக்காரிகை – நேமிநாதம் – வச்சணந்தி மாலை – வீர சோழியம் – நன்னூல் முதலிய இலக்கண நூல்கள் – கம்பராமாயணம், கந்த புராணம்

நாயக்கர் காலம்

சைவ சித்தாந்த சாத்திரங்கள் – இலக்கண, இலக்கிய உரையாசிரியர்கள்-இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் – சிறு பிரபந்தங்கள் – சைவ மடங்களின் தமிழ்த் தொண்டு – தாயுமானவர் – முகம்மதியப் புலவர்கள்.

ஐரோப்பியர் காலம்

உரைநடை வளர்ச்சி – கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு: வீரமாமுனிவர் – போப், கால்டுவெல் ஐயர் தமிழ்ப்பணி – முக்கூடற் பள்ளு – மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை – இராமலிங்க அடிகளின் திருவருட்பா – ஆறுமுக நாவலர், உ.வே.சா. பண்டிதமணி, வையாபுரிப்பிள்ளை, திரு.வி.க., மற்றைய தமிழறிஞர்கள்.

இருபதாம் நூற்றாண்டு

கவிதை – பாரதி, தேசிக விநாயகம் பிள்ளை. பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், இசைத் தமிழ் – நாடகத் தமிழ் – சிறுகதை வளர்ச்சி, நாவல் வளர்ச்சி, இதழ்களின் வளர்ச்சி, தமிழ்நாட்டு வரலாறு, திறனாய்வு நூல்கள்.

 

 

1. தமிழ் மொழியின் பழமையும் சிறப்பும்

தமிழ் நாடு

தமிழகம் வடக்கே வேங்கடமும், தெற்கே குமரி முனையும் கொண்ட தனிப்பெரும் நாடாகும். இதனை ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ எனத் தொல்காப்பியப் பாயிரம் வகுத்துக் கூறுகிறது.

தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தி அன்புற்று இன்புற்று வாழ்ந்தனர். உயர்ந்த மலைகளும், செறிந்த காடுகளும், பரந்த வயல்களும், விரிந்த கடற்கரையும் அவர்கள் வாழ்ந்த இடங்களாகும். பொருள் தேடச் சென்ற வழிகள் காடும் மலையும் நிறைந்த பாலை நிலங்களாக விளங்கின. இவற்றை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனக் குறிப்பிட்டனர்.

தென்னிந்தியாவில் குமரி முதல் வேங்கடம் வரை தமிழ் பேசப்படுகிறது. கடல் கடந்த வடஈழத்திலும் தென் ஆப்பிரிக்காவிலும், மலேயா, சிங்கப்பூர்ப் பகுதிகளிலும் தமிழ் பேசப்படுகிறது.

தமிழ்மொழி

மிகப் பழங்காலத்தில் இந்தியநாடு முழுவதிலும் ஒரு மொழி பேசப்பட்டு வந்தது. அதனைப் பழந்திராவிட மொழி என்பர்; வடகிழக்குக் கணவாய் வழியாகத் துரானியரும், வடமேற்குக் கணவாய் வழியாக ஆரியரும் வந்து புகுந்தனர். அவர்களின் கலப்பால் பிராகிருதம், பாலி முதலிய புதிய மொழிகள் தோன்றின; அந்நிலையிலும் பழந்திராவிடச் சிலர் அவர்களோடு கலவாமல் தனித்து ஒதுங்கி வாழ்ந்தனர், அவர்கள் மொழி இன்றும் திராவிடத்தின் திரிபுகளாக வழங்குகின்றன. மலை நாட்டு மக்கள் பலர் திராவிடத்தின் இனமொழிகளை இன்றும் பேசி வருகின்றனர். அவற்றைத் திருந்தா மொழிகள் என்பர்; அவை ஏட்டு வழக்குப் பெறாமல் பேச்சு வழக்கு மட்டும் பெற்றுள்ளன. அவை துதம், கோதம், கோண்ட், கூ, ஒரோஒன், ராஜ்மகால் முதலியனவாம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு முதலியனவற்றைத் திருந்திய மொழி என்பர். இவை ஏட்டு வழக்கும் பெற்றுள்ளன. இவற்றுள் தமிழ் மொழியே பழந்திராவிடக் கூறுகளை மிகுதியாய்ப் பெற்றுள்ளது.

சிறப்புக் கூறுகள்

தமிழ் மொழியும் அதன் இலக்கியமும் பிறமொழித் தாக்குதலின்றித் தனித்து வளர்ந்தன. தமிழ் தனக்கென ஓர் இலக்கிய மரபையும், இலக்கண அமைப்பையும் கொண்டு விளங்குகிறது. கிரேக்கம், இலத்தீன், வடமொழி முதலியவற்றைப் போலத் தமிழ் பழம்பெரும் மொழியாகும், ஆனால் அவற்றைப் போலத் தமிழ் இலக்கிய வளத்தோடு மட்டும் நிற்கவில்லை; பேச்சு வழக்கும், இலக்கியச் சிறப்பும் கொண்டு இன்றும் உயர் தனிச்செம்மொழியாக விளங்குகிறது.

தமிழிலக்கியம் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்டது. தென்னிந்தியாவில் ஏனைய திராவிட இலக்கியங்கள் கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே தோன்றின. தமிழோ, கி.மு. 5 ஆம் நூற்றாண்டிலேயே செப்பம் பெற்ற இலக்கிய இலக்கணங்களைப் பெற்றிருந்தது. ஏனைய திராவிட மொழிகள் வடமொழியின் தாக்குதலுக்கு ஆட்பட்டுத் தம் தனித் தன்மையைப் பெரும்பாலும் இழந்துவிட்டன. தமிழ் ஒன்றே அதன் ஆதிக்கத்துக்கு உட்படாமல் தனித்து வளர்ந்து வந்துள்ளது எனலாம். எழுத்துக்கும். சொல்லுக்கும் மட்டுமன்றிப் பொருளுக்கும் இலக்கணம் பெற்றுத் திகழ்கிறது. தமிழ் பண்டைக் காலத்துக் குமரி முனைக்குத் தெற்கே லெமூரியா என்ற பகுதியும் தமிழ் நாட்டோடு இணைந்த பெரு நிலப்பரப்பாக இருந்து வந்தது. கடற்கோளால் அப்பகுதி அழிந்தபோது பல நூல்களும் அழிந்து விட்டன. இன்று கிடைக்கும் இலக்கியங்கள், எட்டுத் தொகையும், பத்துப்பாட்டுமேயாகும். தொல்காப்பியம் அவற்றுக்கு முன் தோன்றியதாகும். இவற்றைச் சங்க இலக்கியம் என்பர். சங்ககாலமே இலக்கிய வரலாற்றின் பொற்காலமாகும்.

 

 

2. சங்க காலம் (கி.மு. 500 – கி.பி. 200)

கி.மு. 500 முதல் கி.பி. 100 வரை சங்க இலக்கிய காலமாகும். தொல்காப்பியர் காலம் கி.மு. 300 என்பர். சங்க இலக்கியப் பாடல்கள் தனித்தனிப் பாடல்களாகும். அவை பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை, பின் வந்தவர் இவற்றைத் தொகுத்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என வகைப்படுத்தினர். இவை பொருள், அடிவரையரை கருதித் தொகுக்கப்பட்டுள்ளன. அகம், புறம் என்பன பொருள் பற்றிய பாகுபாடுகளாகும் முதலில் இவை வாய் மொழி இலக்கியமாக வழங்கியிருக்க வேண்டும் என்றும், இவற்றுக்குப் புலவர்கள் எழுத்து வடிவு தந்தனர் என்றும் கூறுவர். இவற்றை ஆராய்ந்து இவற்றின் மரபையும், பொருளையும் கண்டு இலக்கண நூல்களை இயற்றினர். புறச்சார்பு ஏதுமின்றி மக்கள் உணர்வுகளினின்று இயற்கையாகத் தோன்றிய காதல் பாடல்களும் வீரப் பாடல்களும் சங்க இலக்கியங்களாயின.

மூன்று சங்கங்கள்

புலவர்களையும், அறிஞர்களையும் தன்னகத்தே கொண்டதொரு அமைப்பே சங்கமாகும். கி.பி. 4, 5 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சமணத்துறவிகள் சங்கங்களைத் தோற்றுவித்துக் கல்வித் தொண்டும், சமயப் பணியும் செய்து வந்தனர். அவர்கள் காலத்துச் சங்கங்களைப்போலவே பழங்காலத்திலும் சங்கங்கள் இருந்திருக்க வேண்டும் எனப் பிற்காலத்தார் கருதினர். சங்கங்களில் அமர்ந்து புலவர்கள் சங்க இலக்கியங்களைப் பாடினர் எனக் கருதுதற்குத் தக்க சான்றுகள் இல்லை.

 

இலக்கியச் சான்றுகள்

இறையனார் களவியல் உரை தரும் செய்திகள்

‘கடலால் கொள்ளப்பட்ட தென் மதுரையில் முதற் சங்கமாகிய தலைச்சங்கம் இருந்தது. திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்றம் எறிந்த குமரவேள், அகத்தியர். முரஞ்சியூர் முடி நாகராயர், நிதியின் கிழவன் முதலான 549 புலவர்கள் அச்சங்கத்தில் வீற்றிருந்தனர்; 4449 புலவர்கள் பாடினர். அவர்கள் பாடிய முதுநாரை, முதுமுருகு, பெரும்பரிபாடல், களரியாவிரை முதலான நூல்கள் மறைந்துபோயின. காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக 89 மன்னர்கள் தலைச் சங்கத்தைப் புரந்தனர். அச்சங்கம் 4440 ஆண்டுகள் நிலவியது. புலவர்க்கு அகத்தியமே இலக்கண நூலாக விளங்கியது.

“இடைச்சங்கம் கடல் கொண்ட கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் நிலவியது; இருந்தையூர்க் கருங்கோழி, சிறு பாண்டரங்கன், துவரைக் கோமான், கீரந்தை, வெள்ளூர் காப்பியன், திரையன் மாறன் உள்ளிட்ட 59 புலவர்கள் வீற்றிருந்தனர்: 3700 புலவர்கள் பாடினர். கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல், மாபுராணம், பூத புராணம், தொல்காப்பியம் முதலான பல நூல்கள் தோன்றின. இவற்றுள் இன்று தொல்காப்பியம் ஒன்றே கிடைத்துள்ளது. வெண்டேர்ச் செழியன் முதலாக மூடத் திருமாறன் ஈறாக 59 மன்னர்கள் இச் சங்கத்தைப் புரந்தனர்.

 

“கடைச்சங்கம் பாண்டியர் தலைநகரமாயிருந்த மதுரை மாநகரில் விளங்கியது. கபிலர், பரணர், நக்கீரர், சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், பெருங்குன்றூர்க் கிழார் உட்பட 49 புலவர்கள் வீற்றிருந்தனர். 499 புலவர்கள் பாடினர். எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் வேறு பிற நூல்களும் இப்புலவர்களால் இயற்றப்பட்டன; 1850 ஆண்டுகள் நிலவிய இச்சங்கத்தை முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக 49 பாண்டிய மன்னர்கள் போற்றிப் புரந்தனர்.”

— இச் செய்திகளை இறையனார் களவியல் உரை கூறுகிறது; இதன் ஆசிரியர் நக்கீரர்.

முதற்சங்கம் தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாட புரத்திலும், கடைச் சங்கம் இன்றைய மதுரையிலும் இருந்தன என்பதும். முதற்சங்கத்தில் அகத்தியமும். இடைச் சங்கத்தில் தொல்காப்பியமும், கடைச் சங்கத்தில் எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் தோன்றின என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கன எனினும், அது குறிப்பிடும் ஆண்டுகளும் புலவர்களின் எண்ணிக்கையும் மிகைபடக் கூறலாகும். செவிவழிச் செய்தியாகப் பேசப்பட்டு வந்த இவற்றை நக்கீரர் தம்முரையில் குறிப்பிட்டார் என்பது பொருந்தும்.

மற்றும் பண்டைக் காலத்தில் சங்கங்கள் இருந்தன என்ற கருத்தைப் புலவர்களும்; மக்களும் நம்பினர். கீழ் வரும் சான்றுகள் அதற்குச் சான்று பகர்கின்றன.

 

‘சங்கத் தமிழ் மூன்றும் தா’- அவ்வையார்.

‘தலைச்சங்கப் புலவனார் தம்முன்’- மாணிக்க வாசகர்;

‘சங்க முகத்தமிழ்; சங்க மலிதிகழ்’– திருமங்கையாழ்வார்.

கல்வெட்டுச் சான்றுகள்

கல்வெட்டுகளும் சங்கம் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. சின்னமனூர்ச் செப்பேட்டில் அதுபற்றிக் குறிப்பு ஒன்று கிடைக்கிறது. அதன் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு என்பர்.

‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும்,

மதுராபுரிச் சங்கம் வைந்தும்’- செப்பேட்டு வரிகள்

இச்சான்றுகள் சங்கம் இருந்தது என்பதனை வற்புறுத்துவனவேயாயினும், சங்க இலக்கியங்களில் அது பற்றிய குறிப்பு ஒன்றும் கிடைக்கவில்லை.

தொல்காப்பியம்

தொல்காப்பியம் கி. மு 300-க்கு முற்பட்டதாகும். காப்பியர் என்பது ஒருவகைக் குடிப்பெயர், அதுவே அவர் இயற்பெயராக மருவிவிட்டது. தொல் என்பது அடை மொழியாகும் தொல்காப்பியர் நிலந்தரு திருவிற்பாண்டியன் அவைக் களத்தில் இருந்தவர். கபாடபுரம் பாண்டியர் தலை நகரமாக விளங்கிற்று. அதங்கோட்டு ஆசான் என்னும் பெரும்புலவர் தலைமையில் இவர் தம் நூலை அரங்கேற்றினார் எனப் பாயிரம் கூறுகிறது.

 

‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று பாயிரத் தொடர் இவரது இலக்கணப் புலமைக்கும், வடமொழி அறிவுக்கும் சான்றாகும். இவரை உரையாசிரியர்கள் அகத்தியரின் மாணாக்கர் என்பர்.

தொல்காப்பியம், எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமன்றிப் பொருளுக்கும் இலக்கணம் கூறுகிறது; எழுத்திலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல்லிலக்கணத்தைச் சொல்லதிகாரத்திலும், பொருளிலக்கணத்தைப் பொருளதிகாரத்திலும் விளக்குகிறது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. எழுத்துக்களின் இயல்பு. அவை மொழியாகும் திறம், மொழி புணருங்கால் ஏற்படும் திரிபு முதலியவற்றை எழுத்ததிகாரம் விளக்குகிறது ஒலிகளின் அமைப்பைப் பிறப்பியல் அடிப்படையில் விளக்குவது தொல்காப்பியத்திற்கே உரிய தனிச் சிறப்பாகும். இது மேலை நாட்டார் அணுகுமுறையை ஒத்துள்ளது. பெயர், வினை, இடை, உரி என்னும் நால்வகைச் சொற்களையும் அவை தொடரும் முறையையும் சொல்லதிகாரம் விளக்குகிறது; வேற்றுமைத் தொடர், அல்வழித் தொடர் எனத் தொடரியலைப் பிரித்துக் காட்டுகிறது. இவ் அடிப்படையிலேயே சந்தியிலக்கணமும் அமைந்துள்ளது. பொருளதிகாரம் தமிழ் இலக்கிய மரபுகளைத் தெளிவுபடுத்துகிறது; அகத்திணை, புறத்திணை எனும் ஒழுக்கங்களையும், உவமை எனும் அணி வகையையும் மெய்ப்பாடுகளையும், செய்யுள் அமைப்புகளையும், சொற்பொருள் மரபுகளையும் விரிவாக விளக்குகிறது.

தொல்காப்பியம் வகுத்துள்ள மரபுகளை ஒட்டியே சங்க இலக்கியங்களின் பொருள் மரபும், யாப்பும், அணி நயங்களும் அமைந்துள்ளன. பிற்காலத்து இலக்கண நூல்களும் அதனையொட்டியே பெரும்பாலும் அமைத்துள்ளன. காலத்துக்கு ஏற்றவாறு அவற்றில் சில மாற்றங்கள் தோன்றின. இலக்கணங்களில் மட்டுமன்றி இலக்கியங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அம் மாற்றங்களின் வரலாறே இலக்கிய வரலாறாகும்.

மேலை நாட்டார் இலக்கிய ஆராய்ச்சிக்கு அரிஸ்டாட்டிலின் கொள்கைகளை அடிப்படையாகக் கொள்வதைப் போலத் தமிழ்ப் புலவர்கள் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை இலக்கியக் கோட்பாட்டையும் மரபையும் அறிவதற்கு. அடிப்படையாகவும், தொடக்கமாகவும் கொள்கின்றனர். தமிழ்மொழி அமைப்பையும் இலக்கிய மரபுகளையும் தெளிவுபடுத்தும் முதல் நூல் தொல்காப்பியமே. அஃது இலக்கண நூலாகத் திகழ்தல் குறிப்பிடத்தக்கது.

அகம், புறம் முதலியவற்றின் சிறப்பு

சங்க இலக்கியப் பாடல்கள் சில மரபுகளையொட்டி அமைந்தவை. காதல் பற்றிய செய்தியை அகம் என்றும், வீரம், கொடை, புகழ் முதலிய வாழ்க்கை முறைகளைப் பற்றிய செய்திகளைப் புறம் என்றும் பாகுபடுத்தினர். அகப் பாடல்களில் வரும் தலைவன் தலைவியர் கற்பனை மாந்தர்களாதலின் அவர்கள் பெயர் சுட்டிக் கூறப்படுவதில்லை. புறப் பாடல்களில் நாட்டை ஆளும் அரசனின் வீரச் செயல்களும், கொடைப்பண்பும், குடி மக்களுள் சிறந்தவர்களின் புகழ்மிக்க செயல்களும் குறிப்பிடப்படுகின்றன. அகப் பாடல்கள் கற்பனையால் அமைந்தவை; புறப்பாடல்கள் உண்மைச் செய்திகளைக் கூறுபவை. இவ்வகத்திணைப் புறத்திணைப் பாடல்களுக்கு மலை, காடு, பாலை, வயல், கடல், காலம் முதலியன பின்னணிகளாக அமைகின்றன. அவற்றால் தீட்டப்படும் காநல் வாழ்வு உரிப்பொருள் எனப் போற்றப்படுகிறது. பின்னணிகளுள் இடமும் (மலை, காடு.. பாலை. வயல், கடல்) காலமும் முதற் பொருள்களாகும். மரம், விலங்கு, பறவை. தொழில், இசை முதலியவை கருப் பொருள்களாகும். நிலம், குறிஞ்சி (மலை). முல்லை (காடு) பாலை, மருதம் (வயல்), நெய்தல் (கடல்) என ஐவகைத் திணைகளாக அமைந்தன. இவ்வாறே புறத்திணைகளும் திணைப் பாகுபாட்டைப் பெற்றன. அவை வெட்சி, கரந்தை. நொச்சி, உழிஞை, வஞ்சி, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி என ஒன்பது வகைப்படும். அகத்திணை, புறத்திணை இரண்டும் பல துறைகளைத் தம்மகத்தே கொண்டன.

சங்க நூல்கள்

சங்க இலக்கியங்களுள் ஒரு பகுப்பாகிய எட்டுத் தொகை நூல்களுள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை எனும் ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றியன. அவற்றுள் அகநானூறு 13 முதல் 31 அடிவரை உள்ள 400 பாடல்களைக் கொண்டது. நற்றிணை 9 முதல் 12 அடி வரை உள்ள 400 பாடல்களைக்கொண்டது. குறுந்தொகை 4 முதல் 8 அடிவரை உள்ள 400 பாடல்களைக் கொண்டது. ஐங்குறுநூறு 3 முதல் 5 அடிவரை உள்ள 500 பாடல்களைக் கொண்டது. இவை அடிவரையறையால் பாகுபாடு செய்யப்பட்டவை. கலித்தொகை கலியோசை தழுவிய 150 பாடல்களைக் கொண்டது.

பரிபாடல் என்பது இசை பற்றி அமைந்த பெயராகும். 70 பாடல்களுள் கிடைத்துள்ளவை 32 ஆகும். இவற்றுள் அகப் பாடல்களும் உண்டு; புறப்பாடல்களும் உண்டு. பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறப்பொருளைப் பற்றியவை. பத்துப் பத்தாகப் பாடப்பட்ட சேரவேந்தர் பதின்மரைப் பற்றிய நூறு பாடல்களைக் கொண்டது பதிற்றுப்பத்தாகும். அவற்றுள் முதற்பத்தும் இறுதிப்பத்தும் இன்று கிடைக்கவில்லை. தமிழக மன்னர்கள், சிற்றரசர்கள். கொடை வள்ளல்கள், வீரர்கள் முதலானோரின் செயற்கு அரிய செயல்களையும், உயர் பண்புகளையும் கூறுவது புறநானூறாகும். வாழ்க்கை உண்மைகளை எடுத்துரைக்கும் பாடல்களும் இதில் உண்டு.

எட்டுத் தொகை

நற்றிணை , தல்லதிணை என்பது இதன் பொருளாகும்; இதன் பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். ‘முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்’ என்றும், “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வமன்று; தம் செய்வினைப் பயனே” என்றும், ‘சான்றோர் செல்வ மென்பது சேர்ந்தோர் புன் கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம்’ என்றும் வரும் தற்றிணைத் தொடர்கள் குறிப்பிடத்தக்கன. இதில் வரும் உவமை அழகு நம் உள்ளத்தைக் கவர வல்லது, ‘நின்ற சொல்லர் நீடு தோன்று இனியராக’ விளங்கும் தலைவரின் நட்பின் திறத்திற்குச் சந்தன மரத்தின் உயரத்தில் தொகுத்து வைத்த தாமரை மலர்த் தேனை உவமையாகக் காட்டுகிறாள் தலைவி ஒருத்தி.

‘நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என்தோள் பிரிபு அறியலரே;
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை’

குறுந்தொகை

இது ‘ நல்ல குறுந்தொகை’ என்று சிறப்பிக்கப்படுகிறது. இதன் பாடல்களை இருநூற்றுக்கும் மேற்பட்ட புலவர்கள் பாடியுள்ளனர். ஒளவையார். அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடினியார், வெள்ளி வீதியார் முதலிய பெண்பாற் புலவர்களின் பாடல்களும் இதன் கண் இடம் பெற்றுள்ளன. இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.

பாரி, ஓரி. மலையமான், அஞ்சி, ஆய், நன்னன், நள்ளி, கட்டி, அகுதை முதலான குறுநில மன்னரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் குறுத்தொகை தருகிறது.

தலைவியின் அன்பு நெஞ்சினை அழகு ஓவியமாகப் படைத்துக் காட்டுகிறார் புலவர் ஒருவர். தான் சமைத்த உணவைத் தன் கணவன் இனிதென உண்ணும் போது பெரிதும் மகிழ்கிறாள் தலைவி ஒருத்தி, இல்லறத்தின் இனிமை இதில் இனிதாக இனிக்கிறது.

‘ முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துஉ டீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே’

ஐங்குறுநூறு

இதன் கண்ணுள்ள மருதப் பாடல்களை அம்மூவனாரும், குறிஞ்சிப் பாடல்களைக் கபிலரும், பாலைப் பாடல்களை ஓதலாந்தையாரும், முல்லைப் பாடல்களைப் பேயனாரும் இயற்றியுள்ளனர்.

பெருந்தேவனார் இதற்கும் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.

 

இதன்கண் ஒவ்வொருதிணையும் பிரிவுக்குப் பத்துப் பாடல்களாகப் பத்துப் பிரிவுகளை உடையது. ஒவ்வொரு பிரிவும் வேட்கைப் பத்து, வேழப்பத்து எனத் தனித்தனித் தலைப்புகளைப் பெற்றுள்ளன. பிற்காலத்தில் மணிவாசகரும் பிடித்த பத்து, வாழாப் பத்து எனப் பத்துப் பத்தாகப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைமகள் ஒருத்தி தன் தலைவனுடன் உடன் போக்காகச் சென்று விடுகிறாள். அதனை அறிந்த தாய் அவளைத் தேடி வருமாறு பலரையும் போக்கினாள்; அவர்களோ அவளைக் காணாது வறிதே திரும்பினர். தன் அருமை மகளை விட்டு ஒரு நாளும் பிரியாத தாய்க்கு மகளின் பிரிவு எல்லையற்ற துன்பத்தை அளித்தது. குழந்தைப் பருவத்திலிருந்து தன் மகள் விளையாடிய பாவை, அவள் வளர்த்த கிளி, பூவை முதலியவற்றை நோக்கி நோக்கி மளம் குழைந்து ஏங்கி வருந்துகிறாள் அவள்.

‘இது என் பாவை பாவை; இது என்
பூவைக்கு இனிய சொற் பூவை என்று
அலமரு நோக்கின் நலம் வரும் சுடர் நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி என்று இவை
காண்தொறும் காண்தொறும் கலங்க
நீங்கின னேஎன் பூங்க ணோளே!’

கலித்தொகை

பாலைக் கலியைப் பெருங்கோவும், குறிஞ்சிக் கலியைக் கபிலரும், மருதக் கலியை மருதனிள நாகனும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும் பாடினர்.

நாடகப் போக்கிலமைந்த இனிய பாடல்களை இந் நூலில் காணலாம். கலியோசை நிறைந்த இசைப் பாடல்களைக் கொண்ட இந் நூல் ‘ கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும், ‘கல்விவலார் கண்டகலி’ என்றும் போற்றப் படுகிறது.

தலைவி, தன் காதலனுடன் சென்றுவிடுகிறாள். அதனை அறிந்த தாய் கலங்கி வருந்துகிறாள். அவளுக்கு ஆறுதல் கூறும் அறிஞர் ஒருவரின் அறிவுரை தக்க உவமைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

அம்மையே! சந்தனம் மலையில் பிறந்தாலும் மலைக் கென்ன பயன்? பூசிக்கொள்பவர்க்கன்றோ அது பயன்படுகிறது! முத்துக் கடலில் பிறந்தாலும் கடற்கென்ன பயன்? அணிபவர்க்கன்றோ அது பயன்படுகிறது. இசை யாழில் பிறந்தாலும் யாழுக்கு என்ன பயன்? கேட்பவர்க் கன்றோ பயன்படுகிறது! அவைபோல நின்மகளும் உனக்குப் பயன்படாமல் மற்றொருவனுக்கு உரிமையாகி விட்டாள்.’

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
பிறப்பினும் மலைக்கவைதாம் என் செய்யும்
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையனே
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே

அகநானூறு

இதன்கண் அகப் பொருட்செய்திகள் மிகச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன; அழகிய வருணனைகளும், வரலாற்றுச் செய்திகளும், பண்பாட்டுக் கூறுகளும் இடம் பெற்றுள்ளன. நந்தர் , மோரியர் முதலியோர் பற்றிய குறிப்புகளும், கடையெழு மன்னர்கள், குறுநில மன்னர்கள், மூவேந்தர் பற்றிய செய்திகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன. தமிழகத்தின் மலைகளும், ஆறுகளும், நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

சோலையில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றில் பெடையும் வண்டும் பெட்புடன் படிந்து தேன் உண்டு தம்மை மறந்து கிடக்கின்றன. வினைமுடித்து மீளும் தலைமகன் அவ்வழியே தேரூர்ந்து வருகிறான்; இக்காட்சியைக் காண்கிறான். தன் தேர் மணி நாவொலி அவற்றின் இன்பத்திற்கு இடையூறு தருமே – எனக் கலங்குகிறான்; மணிகளிள் நாவை அசையாவாறு கட்டித் தேரைச் செலுத்துகிறான்.

‘பூத்த பொங்கர்த் துணையோடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண்வினைத் தோன்’

பதிற்றுப்பத்து

இது சேரவேந்தர் பதின்மரைப்பற்றிய பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய நூறு புறப்பாடல்களின் தொகுப்பாகும், சேர மன்னர்களின் வீரம், வெற்றிச் சிறப்புகள், கொடை, உயர் பண்பாடு, நீதி வழங்கும் முறை, அறம் வளர்த்த திறம். அஞ்சாமை, நாகரிகம் முதலிய பல செய்திகளை இதனால் அறியலாம்.

ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் ஒன்று காணப்படுகிறது. அஃது அப்பத்தால் பாடப்பெறும் மன்னன் பெயர், அவனது வெற்றி. கொடைத்திறம், பாடிய புலவர், அவர் பெற்ற பரிசில் முதலியவற்றைக் கூறுகிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் முதலிய செய்திகள் தரப்பட்டுள்ளன. பாட்டின்கண் இடம் பெற்றுள்ள ஒரு சிறந்த தொடரே ஒவ்வொரு பாட்டிற்கும் தலைப்பாக (பெயராக) அமைந்துள்ளது.

பூத்த நெய்தல், கூந்தல் விறலியர், கயிறு குறுமுகவை, செங்கை மறவர் , சில்வளை விறலி, ஏறாஏணி போன்றவை தலைப்புகளாக விளங்குகின்றன.

சேரமன்னர் தம் சிறப்பையும், செல்வாக்கையும் அறிவதற்குப் பெருந்துணை புரியும் இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றுள்ளது.

‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியோடு ஆயிடை
மன்மீக் கூறுநர்’

பத்து-1

ஓவத் தன்னை வினைபுனை நல்லில்
பாவை அன்ன நல்லோள்

பத்து-61

போன்ற அடிகள் அழகிய சொற் சித்திரங்களாக அமைகின்றன.

புறநானூறு

இது சங்க நூல்களுள் தலையாயதும் வரலாற்றுச் சிறப்புடையதுமாக விளங்குகிறது. அறம், பொருள், வீடு எனும் புறப்பொருள் பற்றிய 400 பாடல்களைக் கொண்டுள்ளது. இதன் பாடல்களை ஏறத்தாழ 160 புலவர்கள் பாடியுள்ளனர்.

தமிழர் வாழ்வினையும், நாகரிகத்தினையும் அறிய இந்நூல் பெரிதும் துணை செய்கிறது. இது கிடைக்கப் பெறாதிருப்பின் பண்டைத் தமிழக வரலாற்றை அறிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். தமிழரின் வீரம், கொடை, பண்பாடு, நீதி, அறம், அஞ்சாமை: நாகரிகம் முதலியவற்றை இந் நூலால் அறியலாம்.

சேர, சோழ பாண்டிய மன்னர்களின் வெற்றியையும், செங்கோன்மைச் சிறப்புகளையும், குறுநில மன்னர்களின் கொடைச் சிறப்பையும் இது விளக்குகிறது. ஔவையும், அதிகமானும் அன்பும் பண்பும் பொருந்தக் கொண்ட நட்பின் திறமும், பாரியும் கபிலரும் கொண்ட மாரியும் நிலமும் போன்ற நெருங்கிய தொடர்பும் உணர்வுமிக்க சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. நாட்டு மன்னனிடம் வீரர்கள் காட்டிய அன்பும், அவனுக்காக அஞ்சாமல் உயிர் துறந்த வீர வரலாறும் சிறப்பாகப் பேசப்படுகின்றன. சுருங்கக் கூறின் இது பண்டைக் காலப் பண்பாட்டுக் கருவூலமாகவும், விளங்குகிறதெனலாம்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’

“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே’

‘இன்னா தம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்த்தோரே’

‘செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே’

‘நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்’

முதலான புறநானூற்றுப் பகுதிகள் பண்டைத் தமிழரின் உயர்பண்பாட்டையும், ஒழுக்க நெறிகளையும் சிறந்து நாகரிகத்தையும் விளக்குவனவாகும்.

பரிபாடல்

இது பரந்து செல்லும் ‘ஓசையுடைய ஒருவகை இசைப்பாவால் ஆன பாடல்களைக் கொண்டது. இன்பத்தையே பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து. மலைவளம், புனல் விளையாட்டு முதலியவற்றையடக்கி 25 முதல் 400 அடிகட்கு உட்பட்ட அளவில் பாடப்படுவது, பரிபாடலாகும். அகப் பொருள், புறப்பொருள் பகுதிகள் இதன்கண் இடம் பெற்றுள்ளன. திருமாலைப்பற்றிய பாடல்கள் ஆறும், முருகனைப் பற்றிய பாடல்கள் எட்டும் புறப்பொருள் பற்றியன. வையைபற்றிய பாடல்கள் எட்டும் அகப்பொருள் பற்றியன.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் அரிய உரை இதற்கும் கிடைத்துள்ளது.

திருப்பரங்குன்றம், இருங்குன்றம், மதுரை, வையை, இருந்தையூர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை இந்நூல் தருகிறது; முருகனின் பெருமையையும், திருமாலின் சிறப்பையும் மிக அழகாகப் புனைந்துரைக்கிறது. இதன்கண் உள்ள 22 பாடல்களையும் பதின்மூன்று புலவர்கள் பாடியுள்ளனர்: அவற்றிற்கு இசையமைத்த புலவர்கள் வேறு. சங்க நூல்களுள் காலத்தால் மிகவும் பிற்பட்டது பரிபாடலே என்பது அறிஞர் கருத்து; டாக்டர் மா. இராசமாணிக்கனார் பரிபாடலின் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி என்பர். கலித் தொகையும் இக்காலத்தைச் சேர்ந்ததே என்பது அவர் கருத்து.

சிவபெருமான், முருகன். கண்ணன், அகலிகை முதலானவர்களைப் பற்றிய புராணக் கதைகள் பரிபாடலில் காணப்படுகின்றன.

முருகனிடம் அருள் வேண்டும் ஒருவன் ஐந்தாம் பாடலில் ‘யாம் இரப்பவை, பொருளும் பொன்னும் போகமுமல்ல, நின்பால் அருளும் அன்பும் அறனும் உருளிணர்க் கடம்பி னொலிதா ரோயே’ என்று கூறி வேண்டுகிறான்.

 

திருமாலுக்குரிய பாடல்கள் ஏழானாலும் திருமால் பலவாறு போற்றப்படுகிறார்.

‘தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ’

என்று திருமாலின் நிலை விளக்கப்படுகிறது. இவ்வடிகள் இறைவன் ‘ தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்ற – பிரகலாதன் வாக்கிற்கு விளக்கமாக அமைந்துள்ளன.

பத்துப்பாட்டு

இதன் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக நீண்ட அளவின. அகப்பொருள் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஆற்றுப்படை

இதன் பாடல்களில் ஆற்றுப்படை நூல்கள் ஐந்துள்ளன . அவை புறப் பாடல்களாகும். வள்ளன்மைமிக்க மன்னிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் கலைஞன் ஒருவன். தனக்கெதிரே வரும் மற்றொரு கலைஞனைத் தனக்குப் பரிசில் தந்த மன்னனிடம் அவன் அருமை பெருமைகளைக் கூறி அவன்பால் அனுப்பி வைத்தல் ஆற்றுப்படை எனப்படும்.

  1. திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்துப்போல முதலாவதாக அமைந்துள்ள பாடல் திருமுருகாற்றுப் படையாகும். இதனை ‘முருகு’ என்றும், ‘ புலவராற்றுப்படை’ என்றும் அழைப்பர். 317 அடிகளைக் கொண்ட இப்பாடலி. ஆசிரியர் நக்கீரர்; சைவர் தம் பதினோராந் திருமுறையில் இஃது இடம் பெற்றுள்ளது. ‘ வீடு பேற்றை விரும்பும் ஓர் இரவலனை வீடுபெற்றான் ஒருவன் முருகன்பால் ஆற்றுப் படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. ஏனைய ஆற்றுப்படைகள் எல்லாம் ஆற்றுப் படுத்துபவர் பெயரால் அமைந்திருக்க, இஃதொன்று மட்டும் பாட்டுடைத் தலைவன் பெயரால் அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்க தாகும்.

சங்க இலக்கியத்தில் வரும் பக்தி உணர்ச்சிகள் நிரம்பிய முழுப்பாடல் இஃதொன்றே எனலாம். அக்காலத்தில் இருந்த முருகன் திருக்கோயில்களைப் பற்றியும், வழிபாட்டு முறைகளைப் பற்றியும் இது குறிப்பிடுகிறது. இதில் அமைந்துள்ள இயற்கை வருணனைகள் உள்ளம் கவரும் தன்மையன.

இது முருகக் கடவுள் எழுந்தருளியிருக்கும் திருப்பரங்குன்றம் முதலாகிய ஆறுபடை வீடுகளைப் பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

முதற்பகுதியில் முருகக் கடவுளுடைய திருவுருவச் சிறப்பும், அவர் அணியும் மாலை விசேடங்களும், சூரர மகளிர் செயல்களும், முருகக் கடவுள் சூரனை வென்ற சிறப்பும், மதுரையின் பெருமையும், திருப்பரங்குன்றத்தின் இயற்கை வளமும் கூறப்படுகின்றன.

இரண்டாம் பகுதியில் முருகனின் ஆறு திருமுகங்கள் பற்றிய குறிப்புகளும், பன்னிரண்டு கைகளின் செயல்களும், திருச்சீரலைவாயில் அவர் எழுந்தருளியிருக்கும் நிலையும் கூறப்படுகின்றன.

மூன்றாம் பகுதியில் முருகனை வழிபடும் முனிவர்களின் ஒழுக்கமும், மகளிர் இயல்புகளும் கூறப்படுகின்றன.

நான்காம் பகுதியில் அந்தணர் இயல்பும், அவர்கள் முருகனை வழிபடும் இயல்பும் கூறப்படுகின்றன.

 

ஐந்தாம் பகுதியில் குன்றக் குரவை நிகழ்ச்சிகளும் முருகனை வழிபடும் மகளிரின் இயல்பும் கூறப்படுகின்றன.

ஆறாம் பகுதி, முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்களையும், முருகன்பாற் சென்று அருள் பெறும் வழியையும், அவன் அருள் புரியும் திறத்தையும், பழமுதிர்சோலையில் உள்ள அருவியின் சிறப்பையும் கூறுகிறது.

முருகனது திருமேனியின் புனைந்துரை அழகிய சொல்லோவியமாக அமைத்துள்ளது.

‘உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன் தாள்
செறுர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை’

  1. பொருநர் ஆற்றுப்படை

இது 248 அடிகளைக் கொண்டது; வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பாவால் அமைந்தது. பரிசில் பெற விரும்பும் பொருநனைப் பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் கரிகாற் சோழனிடம் ஆற்றுப் டுத்திப் பாடிய பாடல் இது. இதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்பவர்.

இதில் பொருநர்கள் விழவின்கண் ஒன்று கூடித் தம் இசைத்திறனைக் காட்டுகின்றனர்; அவ்விழா முடிந்ததும் வேற்றூரை நோக்கிச் செல்கின்றனர்,

பாலையாழின் வருணனையும், பாலைப்பண்னைக் கேட்டு ஆறலை கள்வரும் தம் கொடுஞ்செயலை மறந்து அன்பு காட்டும் திறமும் இதில் கூறப்படுகின்றன. விறலியரின் கேசாதி பாத வருணனை போற்றத்தக்கது.

கரிகாலன்பால் பொருநர் பொற்றாமரை பெறுதலும் விறலியர் பொன் மாலைகள் பெறுதலும் கூறப்படுகின்றன.

கரிகாலன் இளமையில் வெண்ணிப் பறந்தலையில் சேர பாண்டியர்களை வென்ற வரலாற்றுச் செய்தி இதில் கூறப்படுகிறது.

‘சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே’

– பொருநர் 246-258

வரம்பு கட்டின வேலி நிலத்தில் ஆயிரங்கலம் செந்நெல்லை விளைவிக்கும் காவிரியால் பாதுகாக்கப்படும் நாட்டுக்குரியவன் கரிகாலன் என இத்தொடர்களால் காவிரியும் கரிகாலனும் பாராட்டப்படுதல் காண்க.

  1. சிறுபாணாற்றுப் படை

இது 269 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவாகும். இது பாணன் ஒருவனை ஓய்மா நாட்டு நல்லியக் கோடனிடத்தே ஆற்றுப்படுத்துகிறது. இதனைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்:

‘இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ’ (35) என்னும் வரி சிறுபாணனைக் குறிக்கிறது. அதனால், சிறுபாணாற்றுப்படை என வழங்கலாயிற்று.

இதிலும் விறலியின் கேசாதிபாத வருணனை தக்க உவமைகளால் கூறப்பட்டுள்ளது.

‘உயங்கு நாய் நாவின் நல்லெழில் அசைஇ

வயங்கிழை உலறிய அடி என விறலியின்

அடிகளுக்கு நாயின் நாவை உவமை, கூறியமை பாராட்டத் தக்கது.

 

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்’

இது வறுமையால் வாடும் பாணன் ஒருவனது அடுப்பங்கரை வருணனை.

ஈன்று அணிமைப்பட்ட நாய், குட்டிக்கும் பால் கொடுக்க முடியாமல் அடுப்பங்கரையில் குரைத்துக் கொண்டிருக்கிறது என்பது வறுமைச் சித்திரம்.

பிறர்தம் வறுமை நிலையைக் காணாதவாறு கதவை அடைத்துக்கொண்டு பாண்மகள் ஒருத்தி உப்பும் இல்லாமல் வேகவைத்த வேளைக் கீரையை உண்கிறாள்.

‘ஒல்குபசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைந்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்’

இதில் நல்லியக் கோடனின் வீரமும் கொடையும் சிறப்பிக்கப்படுகின்றன.

  1. பெரும்பாணாற்றுப்படை

இது 500 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவால் அமைந்தது; பாணன் ஒருவன் மற்றொருபாணனைத் தொண்டைமான் இளந்திரையளிடத்தே ஆற்றுப்படுத்துகிறான். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாராவர்.

‘இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி’ (அடி- 467) எனப் பேரியாழ் சிறப்பிக்கப்படுதலால் இது பெரும்பாணாற்றுப்படை என வழங்கலாயிற்று.

 

‘ஐவகை நிலங்களின் வருணைகளும் அவ்வந் திலங்களில் வாழும் பல்வகைச் சாதியார் இயல்புகளும், அவர்கள் தத்தமக்கு ஏற்றவாறு விருந்தினரை உபசரிக்கும் திறமும் இப்பாட்டில் அழகாகத் தரப்பட்டுள்ளன.

இளந்திரையன் பாணர்களை உபசரிக்கும் இயல்பு அழகாகப் புனைந்துரைக்கப்படுகிறது.

‘பாசியன்ன சிதர்வை நீக்கி
ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் உடீஇ’

இத்தொடர்கள் பாணரின் சுற்றத்தினருக்கு வேந்தன் ஆடை வழங்கிய திறத்தை விளக்குகின்றன.

‘கொட்டைப் பாசியின் வேரை ஒத்த கிழிந்த ஆடையை நீத்து விளங்குகின்ற நூலாற் செய்த பாலாவியை ஒத்த துகில்களைக் கரிய பெரிய சுற்றத்தாரோடு சேர உடுக்கப் பண்ணி’ என்பது இத்தொடர்களின் கருத்தாகும்.

  1. மலைபடுகடாம்

இது 583 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவில் அமைந்தது; கூத்தனை ஆற்றுப்படுத்துவதால் ‘கூத்தராற்றுப்படை’ என்ற பெயரும் இதற்கு வழங்குகிறது.

செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகர் – பாடியது.

“மலைபடுகடாஅம் மாதிரத்து இசைப்ப” என்ற அடி மலைக்கு யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்தமையால் இப்பாட்டு மலை படுகடாம்’ என வழங்குகிறது.

 

நன்னனது கவிர மலைச் சிறப்பு, மலைச்சாரலின் “வளம், அச்சாரலில் வாழும் குறவர்கள், மலைப்பக்கத்துத் திகழும் பல்வகை ஓசைகள், நன்னனது ஊரின் பெருமை. அவன் கூத்தர், விறலியர்களுக்குப் பரிசில் நல்கும் சிறப்பு. முதலியன இதில் கூறப்படுகின்றன.

இவை ஐந்தும் ஆற்றுப்படை நூல்களாகும்.

  1. முல்லைப்பாட்டு

வினைமேற் கொண்டு பிரிந்து சென்ற கணவன் மீளுந்துணையும் தலைவி ஆற்றியிருத்தல் முல்லைத் திணையாகும். இது 103 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் அமைந்தது; அகப் பொருளைப் பற்றியது.

தலைமகனைப் பிரிந்த தலைவியின் பிரிவுத்துயரும், அவள் ஆற்றியிருக்கும் திறனும், வினை முடித்து மீளும் தலைவன் நிலையும் இதில் கூறப்படுகின்றன. இதனைப் பாடியவர் நப்பூதனார் என்பவர்.

போர்க் காரணமாகத் தான் பிரிதலைத் தலைவன் குறிப்பால் உணர்த்தத் தலைவி அதனைத் தாங்காமல் துன்புறுகிறாள். “அவள் வினைமுடித்து மீளல் உண்மை; நீ வருத்தம் நீங்குக” என்று பெருமுது பெண்டிர் ஆறுதல் கூறி அவளைத் தேற்றுகின்றனர்.

பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டலும், பாசறையில் மன்னன் தன்படைகளுக்குத் துணையாகிக் கடமையில் கண்ணுங் கருத்துமாய்ச் செயலாற்றலும், தலைவி தலைவனைக் காணாது துயருழத்தலும், கார்கால வருணனையும் இதில் கூறப்படுகின்றன.

செறியிலைக் காயா அஞ்சனம் மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக்

 

கோடற் குவிமுகை அங்கை அவிழத்
தோடார் தோன்றி குருதி பூப்பக்
கானம் நந்திய செந்நிலப் பெருவழி’

என்னும் காட்டு வழியின் புனைந்துரை கற்பார் உள்ளத்தைக் கவர்கிறது. காயா கருநிறமாக மலர்கின்றனவாம்; கொன்றை நல்ல பொற்காசுகளைச் சொரிகின்றனவாம்; காந்தள் கை விரல்களை விரிக்கின்றனவாம்; தோன்றிப்பூ குருதியைப் பூக்கின்றனவாம். என்ன அழகு!

  1. நெடுநல்வாடை

இது 188 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவால் அமைந்தது. பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியுள்ளார்.

கூதிர்ப்பருவம் இதில் அழகாகச் சித்திரிக்கப்படுகிறது. தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும் வேந்தனுக்குத் துணையாவி நல்வாடையாகவும் திகழ்தலால் இது நெடுநல்வாடை என வழங்குகிறது.

இஃது அகப் பொருளைப் பற்றியதாயினும் – வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம் (176) எனப் பாண்டியனது அடையாளப் பூக் குறிப்பிடப்படுவதால் இது புறத்திணையின் பாற்பட்டது.

இதில் கூதிர்க் காலத்தில் மக்களும் விலங்குகளும் பறவைகளும் குளிரால் நடுங்கும் நிலையும், அந்தப்புரத்தில் அரசி யாமத்தும் கட்டிற்கண் பிரிவுத்துயரால் உறக்கமின்றிக் கிடந்து வருந்தும் நிலையும், அதே சமயம் பாசறையில் வேந்தனும் உறங்குதலின்றிப் புண்பட்ட வீரர்களை நேரில் கண்டு ஆறுதல் கூறும் நிலையும் கூறப்படுகின்றன. ஒருபால் காதலும் மறுபால் கடமையும் சித்திரிக்கப்படுகின்றன. முல்லைப்பாட்டும் இவ்வகையில் இதனொடு ஒத்து விளங்குகிறது. அது முல்லை வருணனைச் சிறப்பால் முல்லைப்பாட்டு எனப்பட்டது இது வாடைக் காற்றின் வருணனையால் நெடுநல்வாடை எனப்பட்டது

நள்ளென் காமத்துப் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே”

– (186-88)

இவை வேந்தனின் கடமை உணர்வைக் காட்டும் தொடர்கள்.

  1. மதுரைக் காஞ்சி

இது 782 அடிகளைக் கொண்டது; வஞ்சியடிகள் விரலிய ஆசிரியப்பாவால் அமைந்தது. மதுரை என்னும் நகரின் பெயரும், காஞ்சி என்னும் திணைப் பெயரும் இணைந்து மதுரைக் காஞ்சி எனப் பாட்டின் தலைப்பாக அமைந்துள்ளது.

மதுரைக் காஞ்சி – மதுரையிடத்து வேந்தனுக்குக் கூறிய காஞ்சி என விரியும். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைக் கூறி அறிவுரை கூறும் பாட்டு, அது. இதனைப் பாடியவர் மாங்குடி மருதனார்.

திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர் தலை உலகம் மாண்டு கழிந்தோரே”

என்பது நிலையாமையை விளக்கும் தொடராகும். மதுரைக்கண் பாயும் வையை யாற்றின் சிறப்பு, அந்நகரின் நாளங்காடி அல்லங்காடி முதலியன இதில் புனைந்துரைக்கப்பட்டுள்ளன.

 

இதில் பாண்டியர்களின் பெருமை மிகுதியாகக் கூறப்படுகிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போரில் சேர சோழர்களையும் குறுநில மன்னர்களையும் வென்ற செய்தி இதில் மிகுதியாகக் கூறப்படுகிறது.

நாளங்காடி என்பது பகற்கடைகளைக் குறிக்கும். பண்டம் விற்பவர், விழா எடுப்பவர் முதலியோர் எடுத்த பல்வகைக் கொடிகள் ஆண்டுத் திகழும்.

அல்லங்காடி என்பது இரவுக் கடைகளைக் குறிக்கும்.

குறிஞ்சிப் பாட்டு

இது குறிஞ்சித் திணைபற்றி அமைந்த பாட்டாகும், இது 261 அடிகளைக் கொண்டது; ஆசிரியப் பாவால் அமைந்தது.

தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் கூற்றாக இப்பா அமைந்துள்ளது. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்தும் பொருட்டுக் கபிலர் இதனைப் பாடினார் என்பர்.

தலைவி தோழியுடன் நீராடிப் பூக்களைப் பறித்துக் குவித்தாள் என்ற செய்தியைக் கூறும் பகுதியில் 99 மலர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

‘முத்தாலும், மணியாலும், பொன்னாலும் அமைத்த அணிகலன் கெட்டாலும் சீர் செய்து கொள்ளலாம்; மனிதரின் சால்பும், பண்பும் கெட்டுவிட்டால் அவற்றை மீண்டும் நிலை நிறுத்த முடியாது’ என்னும் கருத்தைப் பின்வரும் தொடர்கள் அழகாக விளக்குகின்றன. ”

முத்தினும் பொன்னினும் அத்துணை
தேர்வருங் குரைய கலங்கெடிற் புணரும்

 

சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்’

(13-18)

10 பட்டினப் பாலை

இது 301 அடிகளைக் கொண்டது; வஞ்சியடிகள் மிகுதியாக விரவிவந்த ஆசிரியப்பாவால் அமைந்தமையின் இது வஞ்சிநெடும்பாட்டு எனவும் வழங்குகிறது. இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாவார். கரிகாற் பெருவளத்தான் இதன் தலைவனாவன். தலைவியைப் பிரிய நினைத்த தலைவன், தன் நெஞ்சினை நோக்கிப் ‘பட்டினமே பெறுவதாயினும் பிரிந்து வாரேன்’ என்று கூறிச் செல வழங்குவதாகப் பாடப்பெற்ற அகத்திணைப் பாடல் பட்டினபாலை. பட்டினம் என்பது காவிரிப்பூம் பட்டினத்தையும், பாலை என்பது திணையொழுக்கத்தையும் குறிக்கும்.

தலைவன் செல்லும் கானமோ வெம்மையானது; தலைவியின் தோள்களோ தண்மையானவை; ஆகையால் புகார்ப் பட்டினமே கிடைப்பினும் அவளைத் தான் பிரிவதற்கில்லை” என்று தலைவன் தன் நெஞ்சினை நோக்கிக் கூறுவதனைப் பின்வரும் தொடர்கள் குறிப்பிடு கின்றன.

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே!”

அவன் கடக்க வேண்டிய சுரத்தைத் ‘திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும் வெய்ய கானம்’ என்னும் தொடரும், அவன் தழுவும் தலைவியின் தோள்கள் அவன் கோலினும் தண்ணிய’ என்னும் தொடரும் விளக்குகின்றன.

கரிகாலன் ஆட்சியைப் பெற்ற திறமும், அவன் வெற்றிகளும், காவிரிப்பூம் பட்டினத்து வணிகச் சிறப்பும் இதில் மிகுதியாக விளக்கப்படுகின்றன.

 

சங்க காலம் ஒரு பொற்காலம்

தொன்மைச் சிறப்பு

நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களுள் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களுமே தொன்மை வாய்ந்தவை. இவை பிற நாட்டின் தாக்குதலால் தோன்றியவை அல்ல; மக்கள் வாழ்க்கையினின்று தாமே முகிழ்த்து எழுந்தவை. பண்டைக் காலத் தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்க்கை நடத்தினர். அவ்வாழ்க்கையின் பிரதிபலிப்பே சங்க நூல்களாகும். எட்டுத் தொகை, பத்துப் பாட்டு நூல்களேயன்றி அவற்றிற்கு முற்பட்ட தொல்காப்பியம் தமிழின் தொன்மைக்குச் சான்று பகரும்.

அகமும் புறமும்

சங்க இலக்கியங்கள் அனைத்தும் அகம், புறம் எனும் இரு பெரும்பிரிவுகளுள் அடங்கும். வாழ்க்கையின் உயிர் நாடியாகிய காதலும், போரும் சங்கப் பாடல்களில் சித்திரிக்கப்படுகின்றன. எட்டுத் தொகையுள் நற்றிணை, குறுத்தொகை, ஐங்குறுநூறு. கலித்தொகை, அகநானூறு எனும் ஐந்தும் அகத்திணை நூல்களாகும். பத்துப் பாட்டுன் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை தவிர ஏனைய ஏழும் புறப் பாடல்களாகும். இவற்றுள் ஆற்றுப்படை நூல்கள் ஐந்துள்ளன. பரிசில் பெற்ற கலைஞன் ஒருவன் பெறாதவர்க்கு அறிவுறுத்தி ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படையாகும். அது புறத்துறைகளுள் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வேந்தர்கள் கலைஞர்களைப் போற்றிய திறம் ஆற்றுப் படைகளால் தெளிவாகப் புலப்படுகிறது.

உரிப்பொருளின் சிறப்பு

முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனும் மூன்றும் அகப்பொருள் பாடல்களுள் இன்றியமையாதனவாகும்; நிலமும், பொழுதும் முதற் பொருளாகும். தெய்வம், உணவு , மரம், விலங்கு, தொழில், யாழ், பண், மலர், பறவை முதலியன கருப் பொருள்களாகும். உரிப்பொருள் இவ்விரண்டினையும் பின்னணியாகக் கொண்டு விளங்குகிறது. புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்பன முறையே குறிஞ்சி, பாலை, முல்லை; மருதம், நெய்தல் எனும் ஐந்திணைகளுக்குமுரிய உரிப்பொருளாகும். இம்மூன்றனுள் உரிப்பொருளே – சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இயற்கைக்காக இயற்கையைப் பாடும் மரபினைச் சங்க இலக்கியங்களில் காண இயலாது.

முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை”

(தொல்.அக, 8)

தன்மை நவிற்சி

இல்லது புனைதல் என்பதனைச் சங்க இலக்கியத்தில் காண முடியாது. உள்ளதை உள்ளவாறு கூறிச் சங்க காலப் புலவர்கள் மன நிறைவு பெற்றனர். உண்மை நிகழ்ச்சிகளை அழகுபடக் கூறி அழகுணர்வை வெளிப்படுத்தினர்.

 

‘திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்’

(சிறுபாண். 130-132)

என்பது வறுமை பற்றித் தீட்டிய சித்திரமாகும். இது தன்மை நவிற்சியாகும்.

உவமைத்திறன்

வினை, பயன், மெய், உரு எனும் நான்கன் அடிப்படையில் உவமைகளை அமைத்தனர்; உயர்ந்த பொருள்களையே உவமைகளாகக் கூறினர்.

‘தாமரைத் தண்தாது மாதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை’

-நற்

தலைவனின் நட்பின் திறத்திற்கு உயர்ந்த சந்தன மரத்தில் தொகுத்த தாமரை மலர்த்தேனை உவமையாகக் காட்டுகிறாள் தலைவி, உயர்ந்த பொருளை உவமையாகக் காட்டும் அழகை இங்குக் காணலாம்.

வெளிப்படையாக அன்றி உள்ளுறையாகவும் உவமம் கூறுதல் சங்கப் பாடல்களின் தனி அழகாகும்.

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்’

(குறுந். 8)

இதில் உள்ளுறைப் பொருள் அமைந்து கிடத்தலைக் காண்க.

உயர்ந்த கோட்பாடுகள்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் உயர்ந்த கோட்பாட்டைச் சங்க இலக்கியம் வெளிப்படுத்துகிறது.

‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி
நல்லை வாழிய நிலனே’

என்ற வரிகள் மக்களின் சிறப்பால் தான் நாடு உயர்வு பெறுகிறது என்பதைக் காட்டுகின்றன .

‘முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்’

என்பது அக்கால மக்களின் பண்பாட்டுச் சிறப்பை விளக்குகிறது.

‘வினையே ஆடவர்க்கு உயிரே! வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’

இல்லத் தலைவனுக்குத் தொழிலே உயிராம்; மனை உறை மகளிர்க்குந் தலைவனே உயிராம்; வினைக்கு ஆண்: காதலுக்குப் பெண் என்ற கோட்பாடு அவர்கள் வாழ்க்கையில் மிளிர்கின்றன.

அரசர்களுள் புலவர்கள்

அரசர்களும் தம் புலமையை அரிய பாடல்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர். குறுகுறு நடந்தும், சிறு கை நீட்டியும், இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும் குழந்தை மயக்குகிறது என அறிவுடை நம்பி விளக்கி இருப்பது கற்பார் மனத்தைக் கவர வல்லது. இளம்பெரு வழுதி, சோழள் நல்லுருந்திரன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலாய வேந்தர் பலரும் பாடியுள்ளனர்.

பெண்பாற் புலவர்கள்

அதிகனின் உயிர் நண்பராக விளங்கிய அவ்வையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. காக்கை பாடினியார், நச்செள்ளையார், பொன்முடியார், பெருங்கோப்பெண்டு, ஆதிமந்தியார் முதலிய பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்களும் மிகச் சிறந்தனவாகும்.

யாப்பு

அகவல், கலிப்பா, வெண்பா, வஞ்சிப்பா இந்நால்வகைப் பாக்களே சங்க காலப் பாடல்களாகும், அகவற்பாவுக்கே அன்றைய புலவர்கள் முதலிடம் தந்தனர். ஓசைக்கு அவர்கள் முதன்மை தரவில்லை. உரை நடையே ஒலி நயம் பெற்று அழகாக இயங்கியபோது அது பாட்டாயிற்று: பிற்காலக் கவிஞர்கள் சந்தங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதனால், கருத்துக்கும். தக்க சொல்லாட்சிக்கும் சிறப்புத் தர இயலாமல் போய்விட்டது. அகவலும், செப்பலும், தூங்கலும், துள்ளலும் ஆகிய இவ்வோசைகளையே தம்பாடல்களில் கையாண்டனர்.

மரபுகள்

சங்க இலக்கியங்கள் சிறந்த இலக்கிய மரபுகளைக் கொண்டுள்ளன. அகப்பொருள், புறப்பொருள்கள் மரபு மீறாமல் விளங்குகின்றன. புலவர்கள் எண்ணிக்கையில் மிக்கு இருந்தும் அனைவரும் மரபுக்குக் கட்டுப்பட்டே பாடினர்.

 

3. சங்கம் மருவிய காலம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

எட்டுத்தொகை பத்துப்பாட்டு மேல்கணக்கு நூல்கள் எனப்படும். தாலடி முதலாகக் கைந்நிலை ஈறாகப் பதினெட்டு நூல்களும் கீழ்க்கணக்கு எனப்படும். சங்க காலம் கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலமாகும். அதனை அடுத்துத் தோன்றிய இலக்கியங்கள் புதியதொரு மரபினைக் கொண்டுள்ளன. அவ்விலக்கியங்களைச் சங்கம் மருவிய நூல்கள் என்பர். நீதி நூல்கள் சிலவும். அகப்பொருள் புறப்பொருள் பற்றிய நூல்கள் சிலவும், இக்காலத்தில் தோன்றின. இவையே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்பட்டன.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சி கால் கொண்டது. அக்காலத்தில் சங்க இலக்கியம் போன்ற குறிக்கோள் இலக்கியங்கள் வளரவில்லை. பெரும்பாலும் நீதி நூல்களே எழுந்தன. வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, மருட்பா என்னும் பா வகையால் 50 முதல் 500 அடி வரையுள்ள செய்யுள்களை மேல் கணக்கு என்பர்.

கணக்கென்பது இலக்கியம். என்னும் பொருளது; அறம், பொருள், இன்பம் எனும் மூன்றையும் ஐந்தடிகளுக்கு மிகாத செய்யுள்களால் அடுக்கிச் சொல்லுதல் கீழ்க்கணக்காகும், இவை பெரும்பாலும் வெண்பா வகையினவே.

அடிநிமிர் பில்லாச் செய்யுள தொகுதி
அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத்
திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்.

பன்னிருபடலம்

  1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இனியவை நாற்பது, 4. இன்னா நாற்பது, 5. கார் நாற்பது, 9. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. ஐந்திணை எழுபது, 9. திணைமொழி ஐம்பது. 10. திணைமாலை நூற்றைம்பது 11. திருக்குறள், 12. திரிகடுகம், 13. ஆசாரக்கோவை, 14. பழமொழி, 15. சிறுபஞ்சமூலம், 16. முதுமொழிக்காஞ்சி, 17. ஏலாதி. 18. கைந்நிலை என்பன கீழ்க்கணக்கு நூல்களாகும்.
  2. நாலடியார்

இது நான்கு அடிகளைக் கொண்ட நூல் என்ற பொருளில் நாலடியார் என வழங்குகிறது; சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். தொகுத்தவர் பதுமனார், பாடல்கள் வெண்பா யாப்பால் அமைந்தவை. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பகுப்புகள் இந்நூலில் உள்ளன.

‘நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி’

‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’

போன்ற தொடர்கள் நாலடியாரின் சிறப்பினைக் கூறுவன’ ஜி.யு. போப் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

இளமை நிலையாமையை முற்றியிருந்த கனியொழியத் தீவளியால், நற்காய் உதிர்தலும் உண்டு’ எனவும், செல்வத்தைச் ‘சகடக்கால்போல வரும்’ எனவும், கல்லாதவர் ஆரவாரம் செய்தலை வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை ஒலி’ எனவும். நெல்லுக்கு உமியுண்டு; நீருக்கு நுரையுண்டு; புல்லிதழ் பூவிற்கும். உண்டு, அதனால், நண்பர் குறையைப் பொறுத்தல் வேண்டும்’ எனவும் நாலடியார் கூறுகிறது.

முத்திரையர் என்னும் குறுநில மன்னரைப் பற்றிய குறிப்பு இதன்கண் வருவதால் இந்நூல் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர்.

  1. நான்மணிக்கடிகை

இதன் ஆசிரியர் விளம்பிநாகனார்; இது 104 பாடல்களைக் கொண்ட அறநூலாகும். ஒவ்வொரு பாடலும் நன்னான்கு மணியான கருத்துகளைக் கொண்டு விளங்குகின்றது. நல்லவர் பிறக்கும் குடி இதுவென்று அறிய முடியாது என்பதனைப் பின்வரும் பாடல் அழகாக விளக்குகிறது.

‘கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்; மான்வயிற்றில்
ஒள்ளரி தாரம். பிறக்கும்; பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார்யார்
நல்லாள் பிறக்கும் குடி’

  1. இனியவை நாற்பது

இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதன் சேந்தனார். கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 41 பாடல்களை இது கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் இனியவற்றையே’ விதந் தோதுவதால் இஃது இனியவை நாற்பது எனப்பட்டது. இளமையை மூப்பென்று கருதிக் கடமையை உடன் ஆற்றல் இனிது, சுற்றத்தார் அச்சமில்லாது வாழ்தலுக்கு உதவுதல் இனிது; அழகிய விலை மகளிரை நஞ்சென்று ஒதுக்குதல் இனிது’ என இது கூறுகிறது.

‘இளமையை மூப்பென்று உணர் தல் இனிதே;
கிளைஞர்மாட்டு அச்சமின்மை கேட்டல் இனிதே;
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென்றுணர்தல் இனிது.

  1. இன்னா நாற்பது

இது கடவுள் வாழ்த்தோடு 41 வெண்பாக்களைக் கொண்டது; பாடியவர் கபிலர். இன்னாமை பயப்பன இவை எனக் கூறலின் இஃது இப்பெயர் பெற்றது; துன்பத்திற்குக் காரணமாகியவற்றைத் தொகுத்துரைப்பது இதன் தனிச் சிறப்பாகும்.

 

பார்ப்பார் வீட்டில் கோழியும் நாயும் புகுவதும், மனைவி அடங்காதிருப்பதும், கரையில்லாத புடவை உடுத்துவதும், உலகைக் காப்பாற்றாத வேந்தனும் இன்னாதவையாம்.

‘பார்ப்பாரில் கோழியும் நாயும் புகலின்னா;
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா;
பாத்தில் புடவை யுடையின்னா;
ஆங்கின்னா காப்பாற்றா வேந்தன் உலகு .

  1. கார் நாற்பது

இதன் ஆசிரியர் மதுரைக் கண்ணனார். காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு. இது முல்லைத் திணையைச் சார்ந்த அகப்பொருள் பற்றியதாகும். கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச்சென்ற தலைவன் அதன்படி வாராமையால் தலைவி வருந்தும் வருத்தத்தை இந்நூல் நன்கு விளக்குகிறது.

சென்ற நங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி
ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர
வென்றி முரசின் இரங்கி யெழில்வானம்
நின்று மிரங்கு மிவட்கு

கார்ப் பருவத்தைச் சிறப்பித்துக் கூறுவதால் இது கார்நாற்பது எனப் பெயர் பெற்றது.

  1. களவழி நாற்பது

கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டனுள் போர்பற்றிய புறப்பொருள் நூல் இஃதொன்றே யாகும். இதன் ஆசிரியர் பொய்கையார் சங்க காலத்தவர். சோழன் செங்கணான் கழுமலம் என்னுமிடத்தில் சேரமான் கணைக்கால் இரும்பொறையோடு மாறுபட்டுப் போர் புரிந்து வெற்றியடைந்தான். சோழனின் வெற்றியைப் புகழ்ந்து பாடிப்பொய்கையார் சேரனைச் சிறையினின்றும் மீட்க முனைந்தார். அதற்குள் சேரன், சிறையில் தண்ணீர் பெறாது தடுமாறிப் பின்பெற்று, மானம் கருதி அதனை நிலத்தில் உகுத்து உயிர் நீத்தாள். சோழனது கழுமல வெற்றியை இந்நூல் விரிவாகப் பாராட்டுகிறது. இதன் நாற்பது வெண்பாக்களும் ‘களத்து’ என்ற சொல்லால் முடிகின்றன.

‘அஞ்சனக் குன்றேய்க்கும் யானை அமருழக்கும்
இங்குலிகக் குன்றே போற்றோன்றும் -செங்கண்
வரிவரால் மீன்பிறழும் காவிரி நாடன்
பொருநரை யட்ட களத்து’

  1. ஐந்திணை ஐம்பது

இதன் ஆசிரியர் மாறன் பொறையனார், இது முல்லை. குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைக்கும் முறையே பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்களைக் கொண்டு விளங்கும் அகப்பொருள் நூலாகும். பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர் என்று இந்நூலினைப் புகழ்கிறது இதன் பாயிரம். காதலர் செல்லும் சுரநெறியில் உள்ள மான்களின் அன்புக் காட்சியை ஒரு பாடல் அழகாகக் காட்டுகிறது.

‘சுனைவாய்ச் சிறு நீரை எய்யா தென் (று) எண்ணிப்
பிணைமான் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி’

 

 

  1. ஐந்திணை எழுபது

இதன் ஆசிரியர் மூவாதியார், இது திணைக்கு 14 பாடல்களாக ஐந்திணைக்கும் எழுபது பாடல்களைக் கொண்ட ஓர் அகப்பொருள் நூலாகும். காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு; கார் காலத்துத் தலைவனை நினைத்து நெஞ்சு உருகும் தலைவியின் நிலை ஒருபாடலில் அழகாகச் சித்திரிக்கப்படுகிறது.

‘இனத்த அருங்கலை பொங்கப் புனத்த
கொடி மயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி
யானு மவரும் வருந்தச் சிறுமா லை
தானும் புயலும் வரும்’

  1. திணைமொழி ஐம்பது

இதன் ஆசிரியர் கண்ணன் சேந்தனார். காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு, ‘யாழும் குழலும் இயைந்தென வீழும் அருவி’ என அருவி பாராட்டப்படுகிறது.

தலைவியின் உறவினர் கடுஞ்சொல்லினர். வில்வினர்; வேலினர்; அம்பினர்; கல்லிடை வாழ்நர் என்று கூறி மலை விடை வாராதவாறு தலைவனைத் தடுக்கின்றாள் தோழி ஒருத்தி.

‘விரைகமழ் சாரல் விளைபுனங் காப்பார்
வரையிடை வாரன்மின் ஐயா-உரைகடியர்
வில்வினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்
கல்லிடை வாழ்நர் எமர்’

 

  1. திணைமாலை நூற்றைம்பது

இதன் ஆசிரியர் கணிமேதாவியார், இது திணைக்கு முப்பது பாடல்களாக நூற்றைம்பது பாடல்கள் கொண்டுள்ளது. காலம் கி பி. ஐந்தாம் நூற்றாண்டு; நெய்தல் நிலக் காட்சியும், தலைவன் வருகையும் கீழ்வரும் பாடலில் சித்திரிக்கப்படுகின்றன,

 

‘ஈங்கு வருதி யிருங்கழித் தண்சேர்ப்ப!
பொங்கு திரையுதைப்பப் போந்தொழிந்த – சங்கு
நான்றுயிர்த்த நித்தில நள்ளிருள்கால் சீக்கும்
வரன் றுயிர்த்த பாக்கத்து வந்து’

  1. திருக்குறள்

இதன் ஆசிரியர் திருவள்ளுவர், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பகுப்புகளைக் கொண்டது. 1330 குறள்களையும், 133 அதிகாரங்களையும் உடையது; குறள் வெண்பாவால் இயன்றது. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது இதன் தனிப் பண்பாகும். குறிக்கோள் மிக்க வாழ்க்கையை இது வலியுறுத்துகிறது.

அறத்துப்பால்

அறத்தில் திருவள்ளுவருக்கு அசையாத நம்பிக்கை உண்டு. தாய் பசித்தாலும் சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யக்கூடாது என்பது அவர் கோட்பாடு.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை’

அன்பே அறத்தின் இயக்கம் என்பது அவர் கொள்கையாகும்.

‘ அன்பின் வழியது உயிர் நிலை; அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

ஈந்து இசைபட வாழ்தலே வாழ்க்கையின் குறிக்கோள்: என்பர்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு’

 

‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருட்பால்

இதன்கண் அரசர்க்கென அறிவுறுத்தும் நீதிகள் அனை வருக்குமே பொருந்துவனவாகும். அறிவு என்பதற்கு வள்ளுவர் தரும் விளக்கம் போற்றத் தக்கது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப (து) அறிவு’

மருந்து என்னும் அதிகாரத்தில் மருத்துவம்பற்றி அவர் கூறும் கருத்துப் போற்றத்தக்க தாகும்.

‘நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்”

காமத்துப்பால்

இது கற்பனை நயம் மிக்கது. சங்க இலக்கிய மரபினின்று மாறுபட்டது. ஊடல் நுணுக்கங்கள் வள்ளுவரின் கற்பனைத் திறனைக் காட்டுகின்றன.

‘இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா
கண்ணிறை நீர் கொண்டனள்’

 

உரைகள்

தருமர், தாமத்தர், நச்சர், மல்லர், பரிதி, பரிப்பொருமாள், காளிங்கர், பரிமேலழகர், மணக்குடவர், திருமலையர் எனும் பதின்மர் திருக்குறளுக்கு உரைகண்டனர். பரிமேலழகர் உரையே தலை சிறந்ததாகும். திருக்குறளை வீரமாமுனிவர் இலத்தீனிலும், ஜீ. யு. போப் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்த்துள்ளனர். மேலும் பலர் பலமொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர். இன்று இந்து உலகப் பொதுமறையாகத் திகழ்கிறது.

 

  1. திரிகடுகம்

இதன் ஆசிரியர் நல்லாதனார். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று பொருள்களால் ஆன மருந்து உடல் நோயினைப் போக்கல் போல இதன் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் மூன்று கருத்துகள் உளநோயைப் போக்குதலின், இந்நூல் இப்பெயரைப் பெற்றது. மனிதன் மேற்கொள்ள் வேண்டிய நன்னெறிகளை இந்நூல் அழகுபடக் கூறுகிறது.

‘ தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்;
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்”
கோளாளன் என்பான் மறவாதான்; இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது’

இப்பாடல் சுற்றமாகத் தழுவிக் கொள்ளத் தக்கவரை அறிவுறுத்துகிறது,

  1. ஆசாரக் கோவை

இதன் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார், காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. இந்நூலில் உணவு கொள்ளும் முறை, உறங்கும் முறை, உடையணியும் முறை, நீராடும் முறை முதலான நடைமுறைச் செய்திகளைக் கூறுவதால் இஃது -ஆசாரக் கோவை எனப் பெயர் பெற்றது.

‘வைகறை யாமம் துயிலெழுந்து, தான் செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து, வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை’

  1. பழமொழி

இதன் ஆசிரியர் முன்றுரையரையனார். ஒவ்வொருபாட்டின் இறுதியில் ஒவ்வொரு பழமொழி இடம் பெறுவதால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதன்கண் 400 வெண்பாக்கள் உள்ளன.

‘உரை முடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப- நரை முடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன்; குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

  1. சிறுபஞ்ச மூலம்

இதன் ஆசிரியர் காரியாசான். கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி எனும் ஐந்து வேர்கள் உடல் நோயைப் போக்குவது போல, இதன் செய்யுள்கள் ஒவ்வொன்றிலும் தரப்படும் ஐந்து செய்திகள் மக்களது மனநோயைப் போக்குதலின், இஃது இப்பெயரைப் பெற்றது.

‘மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
பல்லின் வனப்பும் வனப்பல்ல: நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு’

 

 

  1. முதுமொழிக் காஞ்சி

இதன் ஆசிரியர் கூடலூர் கிழார். செய்யுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முதுமொழி இடம் பெற்றுள்ளமையால் இஃது இப்பெயர் பெற்றது.

‘ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை’

  1. ஏலாதி

இதன் ஆசிரியர் கணிமேதாவியார், இது கடவுள் வாழ்த்துடன் சேர்த்து எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டது. ஏலம், இலவங்கப்பட்டை , சிறு நாவற்பூ, மிளகு, சுக்கு, திப்பிலி ஆறும் உடலுக்கு நன்மை தருவது போல, இதன் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் ஆறு உறுதிப் பொருள்களும் உயிர்க்கு நன்மை செய்தலின் இஃது இப்பெயர் பெற்றது.

 

கொல்லான்; கொலைபுரியான்; பொய்யான்; பிறர்மனைமேல்
செல்லான்; சிறியார் இனம்சேரான்;-சொல்லும்
மறையிற் செவியிலன்; தீச்சொற்கண் மூங்கை;
இறையிற் பெரியாற் கிவை”

  1. கைந்நிலை

இதன் ஆசிரியர் புல்லங்காடனார். இதன்கண் நாற்பத்தைந்து பாடல்கள் உள்ளன. அவை திணை அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளன.

காந்தள் பூவினைப் புகை என்று கருதிக் களிறு ஒன்று. தன் கூட்டத்தை நோக்கி ஓடுகிறதாம். ‘

‘காந்தள் அரும்புகை என்று கதவேழம்
ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனன் நோக்கிப்
பாய்ந்தெழுந் தோடும் பயமலை நன்னாடன்’

பொருள் பாகுபாடு

இவற்றுள் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, கார் நாற்பது எனும் ஆறும் அகப்பொருள் பற்றியன. களவழி நாற்பது மட்டும் புறப்பொருள் பற்றியது. ஏனைய பதினொன்றும் நீதி பற்றியன.

பிற நூல்கள்

சிலப்பதிகாரம்

கண்ணகியின் காற்சிலம்பைக் கதைக்குக் கருவாகக் கொண்டிருத்தலின் இது சிலப்பதிகாரம் எனப்பட்டது.

சேரன் செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்குக் கோயில் கட்டிச் சிலையமைத்து வழிபாடு செய்த விழாவிற்குக் கயவாகு மன்னன் வந்திருந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இலங்கை வரலாற்று நூல்களான ‘மகாவமிசம்’, ‘இராஜா வளி’ என்பவை அவன் காலம் கி பி. 114-136 என அறிவிக்கின்றன. அதனால், இவன் காலமாகிய இரண்டாம் நூற்றாண்டே சிலப்பதிகார காலம் எனக் கணிக்கப்படுகிறது.

குடிமக்கள் காப்பியம்

காப்பியம் என்பது தன்னிகரில்லாத தலைவனை உடைத்தாய், நாடு நகர், இயற்கை வருணனைகள் பெற்று, அறம், பொருள் இன்பம், வீடு என்னும் உயர்ந்த நோக்கங்களைத் தாங்கி அமைவது. பொதுவாக அரசர்களையே தலைவர்களாகக் கொண்டு காப்பியம் இயற்றல் இயல்பு. ஆனால் இக்காப்பியம் மக்களுள் சிறந்தவனாகிய கோவலனையும் கற்பின் செல்வியாகிய கண்ணகியையும் காப்பியத் தலைவர்களாக வைத்து இயற்றப் பெற்றுள்ளது. இஃது இதன் தனிச் சிறப்பாகும். பெண்மைக்கு உயர்வு தரும் நோக்கில் இது படைக்கப்பட்டுள்ளது. மணிமேகலையும் பெண்மைக்கு உயர்வு தருகிறது.

காப்பியத்தின் நோக்கம்

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்’

என்பன இக்காவியத்தின் குறிக்கோள்களாகும்.

 

பாண்டியன் முறை தவறியதால் உயிர் விடுகிறான்; அவன் ஆட்சி குலைகிறது. அரசியல் பிழை செய்தவர் அழிவர் என்பது இந்நிகழ்ச்சியால் காட்டப்படுகிறது.

கற்பிற் சிறந்த காரிகை தொழத் தக்க தெய்வம் என்பதனைச் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டமை காட்டுகிறது.

‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ – என்பது கதை நிகழ்ச்சிக்கும் பின்னணிக்கும் பயன்படும் உத்தியாகும் கோவலன் கொலைக்குத் தனிப்பட்டவர் எவரும் காரணம் அல்லர்; ஊழ்வினையே என்பது ஆசிரியர் வருத்து. சமண சமயத்தின் கோட்பாடு ஊழ்வினையின் ஆற்றலை வற்புறுத் துவதாகும். அதனை இக்காப்பியத்தில் இளங்கோவடிகள் நன்கு காட்டியுள்ளார்.

நாட்டுக் காவியம்

புகார், மதுரை, வஞ்சி இம்மூன்று தலைநகர்களுக்குத் தலைமை தந்து முறையே சோழ, பாண்டிய, சேர நாடுகளில் இக்காப்பியம் நடைபெறுகிறது. மன்னர்களும் பாத்திரங்களாகின்றனர். மாடலன் குமரி முனையிலிருந்து புறப்பட்டு வடவேங்கடம் வரை செல்கிறான்; காவிரிக் கரையில் பள்ளி கொண்ட அரங்கனையும், வேங்கடத்தில் வேங்கடவனையும் காண்கிறான், வேட்டுவர் பாடல்கள் குன்றக்குறவர் கூத்துகள் முதலியன இடம் பெறுகின்றன. கற்புடைய மாந்தர் பெருமை பேசப்படுகிறது. மூவேந்தரையும் ஒருங்கிணைத்துக் காட்டும் சிறப்பு இதில் காணப்படுகிறது. வடநாட்டு வேந்தரை எதிர்த்துத் தமிழகத்தின் பெருமையைச் சேரன் செங்குட்டுவன் நிலை நாட்டுகிறான். இவ்வகையில் சிலப்பதிகாரம் ஒரு தேசிய காவியமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் பெருமையையும், உயர்வுகளையும் காட்டுவதில் இது தலைசிறந்து விளங்குகிறது. காண்டங்களின் தலைப்புகளாகத் தமிழகத்தின் தலைநகர்களே அமைந்திருக்கின்றன.

 

கலைச் செல்வம்

மாதவியின் படைப்புத் தன்னிகரற்று விளங்குகிறது. அரங்கேற்று காதையில் நடன அரங்கின் அமைப்பும், பல்வகை வாத்தியங்களின் வகையும் இசை நுணுக்கங்களும் சிறப்பிக்கப்படுகின்றன. கானல் வரிப் பாடல்களில் மாதவியின் இசைப் புலமையும், வேனிற் காதையில் அவள் ஆடிய கூத்து வகைகளும் விளக்கப்படுகின்றன. இளங்கோ தாம் ஓர் கலைச்செல்வர் என்பதை இக்காவியத்தில் காட்டுகிறார். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் இயல்பையும். தமிழ் நாட்டில் விளங்கிய பழங்கலைகள், தொழில் வகைகள், நாடு, நகர அமைப்புகள் முதலியவற்றையும் இதில் காணமுடிகிறது.

மணிமேகலை

இதன் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாராவார் சிலம்பின் காலமே மணிமேகலை காலமாகும். சிலம்பைப் போலவே இந்நூலும் ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. இது முப்பது காதைகளைக் கொண்டு விளங்குகிறது.

மணிமேகலை மாதவியின் மகள். அவள் துறவு பூண்டு உலகத்துக்கு அறிவுரை கூறும் சமயத் தலைமையைப் பெறுகிறாள், கோவலன் இறப்பே இதற்குக்காரணம். சித்திராபதி மணிமேகலையை ஆடல் மகளாகக் காண விரும்புகிறாள். தாய் மாதவியின் அறிவுரைப்படி துறவும், தொண்டுமே வாழ்க்கையின் நெறிகள் என மணிமேகலை கொள்கிறாள். அறவண அடிகள் அவளுக்குச் சமய அறிவினை ஊட்டுகிறார். புத்தமதக் கோட்பாடுகளை அறிந்து புத்ததேவனை வழிபட்டுச் சமயவாதிகளோடு வாதிட்டுப் பிறவித் துன்பம் நீங்கத் தவமியற்றுகிறாள். இதுவே இவள் வாழ்க்கையின் முடிவாக அமைகிறது.

 

சிறப்பியல்புகள்

  1. சிலம்பு சமண கருத்துகளைத் தெரிவித்தாலும் அச்சமயத்திற்கு முதலிடம் கொடுக்கவில்லை. சமயப் பொறையோடு பிற கடவுளரையும், பிற சமய வழிபாடுகளையும் கூறிச் செல்வதோடு அஃது எச்சமயத்தையும் இகழ்ந்து கூறவில்லை. மணிமேகலை முழுக்க முழுக்கப் பௌத்த காவியமாகவே திகழ்கிறது. பௌத்த மதக் கோட்பாடுகளைப் பரப்பவே இக்கதையை ஆசிரியர் பயன்படுத்துகிறார்.
  2. இது சிலப்பதிகாரத்தைப் போல் முத்தமிழ்க் காப்பியமாகத் திகழாது. இயற்றமிழ்க் காப்பியமாகவே திகழ்கிறது.
  3. இஃது இளமை, யாக்கை, செல்வம் இவற்றின் நிலையாமையை வற்புறுத்தி, அறம் செய்ய வேண்டியதன் இன்றியமையாமையை இயம்பி அற நூலாகவே திகழ்கிறது.
  4. பசிப் பிணியை ஒழிக்க வேண்டும் என்பது இக்காவியத்தின் குறிக்கோளாகும்.

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

(காதை-11)

  1. உண்மையான தொண்டு செய்வதற்குத் துறவு உள்ளம் வேண்டும் என்பதை வற்புறுத்தவே ‘ஆபுத்திரன்’ என்ற பாத்திரப் படைப்புச் சேர்க்கப்படுகிறது.
  2. ‘அட்சய பாத்திரம்’ என்ற கற்பனை உலகப் பசியைப் போக்குவதற்குப் பொது நெறி ஒன்று வேண்டும் என்பதை உணர்த்த அமைந்ததாகும்.

திருமந்திரம்

இதனை இயற்றியவர் திருமூலராவார். இது பத்தாம் திருமுறையாகக் கருதப்படுகிறது. 3090 பாடல்களைக் கொண்டது; யாக்கை நிலையாமை முதலானவற்றை விளக்கிக் கூறி வீடுபேற்று நெறியினை விளக்குவது. இதில் இன்று ஒன்பது தந்திரமென 232 அதிகாரங்கள் திகழ்கின்றன பாடல்களின் எண்ணிக்கை 3071.

திருமூலர் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியினர் என்பர். இவர் நெளிவான நடையில் நகைச்சுவையும் ததும்பப் பாடல்களை இயற்றியுள்ளார்.

‘மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்’

இப்பாடல்களில் உயர்ந்த கருத்துகள் மிளிர்வதைக் காணலாம்.

4. பல்லவர் காலம் (கி.பி. 600 – 900)

சிலப்பதிகாரம், மணிமேகலைகளுக்குப் பின் இடைக்காலத்தில் தமிழகம் இலக்கிய வளர்ச்சி குன்றி இருளடைந்து கிடந்தது. பாலியும், பிராகிருதமும் செல்வாக்குப் பெற்றன. சமணமும், பௌத்தமும் தழைத்தன, இக்காலத்தில் களப்பிரர் தமிழகத்தை ஆண்டனர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் இந்நிலை நீடிந்தது. பாண்டியன் கடுங்கோன் உள்ளிருந்து எதிர்த்தான். வடக்கேயிருந்து பல்லவர்கள் படை எடுத்தனர்; களப்பிரர் ஆட்சி வீழ்ச்சி உற்றது.

தமிழ் இசையும், சைவ வைணவ சமயங்களும் தழைத்து ஓங்குவதற்குப் பலலவர் ஆட்சி வழிவகுத்தது. மக்கள் இன்னிசையால் தமிழ்பாடி இறைவனை வாழ்த்தி வணங்கினர்.

பன்னிரு திருமுறைகள்

சைவமும், வைணவமும் தழைத்தன. இறைவற்குப் பணி செய்த தொண்டர்களுள் தலை சிறந்தவர்கள் நாயன்மார்களும், ஆழ்வார்களுமாவர். நாயன்மார் அறுபத்து மூவர்; ஆழ்வார்கள் பன்னிருவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். மாணிக்கவாசகர், சேந்தனார், திருமூலர், காரைக்காலம்மையார் முதலியோர் இயற்றிய பாடல்களைப் பத்தாம் நூற்றாண்டில் இராசராசனின் வேண்டுகோட்கு இணங்கி நம்பியாண்டார் நம்பி என்பவர் பதினொரு திருமுறைகளாகத் தொகுத்துத் தந்தார். பின்னர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணமும் சேர்ந்து சைவ சமய குரவரின் திருமுறைகள் பன்னிரண்டாயின.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். மாணிக்கவாசகர் எனும் நால்வரும் சைவசமயக் குரவர் எனப் பெற்றனர், முதல் மூவரும் பாடிய பாடற்றொகுதி தேவாரம் எனப்பட்டது. மாணிக்கவாசகர் பாடியது திருவாசகம் எனப்பட்டது.

திருஞானம்பந்தர்

இவர் சீகாழிப்பதியில் சிவபாத இருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் பிறந்தவர், குழவிந் பருவத்திலேயே இறைவி பாலூட்ட ஞானம் பெற்றவர்.

இவர் தம் தந்தை தோளில் அமர்ந்து கோயில் தலங்கள்தோறும் சென்று கைத்தாளமிட்டுப் பாடல்கள் பல பாடினார்: திருக்கோலாக்கா என்னும் திருப்பதியில் இறைவன்பால் பொற்றாளம் பெற்று நாளும் இன்னிசையால் தமிழைப் பரப்பி வந்தார்; அறத்துறையில் முத்துப் பல்லக்கினையும் திருபட்டீசுவரத்தில் முத்துப் பந்தலையும், திருவாவடுதுறையில் பொற்கிழியையும், திருவீழிமிழலையில் படிக்காசும் பெற்றார். திருநல்லூரில் இவருக்குத் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணமகளோடும் பிறரோடும் பெருமணம் என்ற கோயிலை அடைந்து இறைவனோடு இரண்டறக் கலந்தார்.

நரசிம்ம பல்லவனின் தானைத்தலைவரை இவர் சந்தித்ததாகப் பெரிய புராணம் கூறுவதால் இவரது காலம் ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பர், தம் காலத்தவராய திருநாவுக்கரசரை இவர் இருமுறை சந்தித்திருக்கிறார்.

‘வாவிதொறும் வண்கமலம் முகங்காட்டக் செங்கு
முதம் வாய்கள் காட்ட
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டும்
கழுமலமே’

எனும் வரிகள் இவரது இயற்கை வருணனைக்கும்

‘சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனோடுபால்
முறையாலே உணத் தருவன் மொய்பவளத் தோடு தரளம்
துறையாரும் கடல்தோணி புறத்தீசன் துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே

 

எனும் பாடல் இவரது அகத்துறைப் புலமைக்கும் தக்க எடுத்துக் காட்டுகளாகும்.

இவர் பாடிய பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

திருநாவுக்கரசர்

இவக் வாகீசர் எனவும் அழைக்கப்பெறுகின்றார், இயற்பெயர் மருள் நீக்கியார்; தமக்கையார் திலகவதியார் இவரைச் சமண சமயத்தினின்றும் சைவத்திற்குக் கொண்டு வந்தார். சமண சமயம் புக்கவரை இறைவன் சூலைநோய் தந்து ஆட்கொண்டார்.

மகேந்திரவர்மன் காலத்தவராதலின். இவர் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர்.

இவர் பாடியவை 4900 என்பர் ; கிடைத்தவை 3066; இவை 312 பதிகங்களுள் அடங்கும். இவர் பாடிய விருத்தப்பா. தாண்டகம் எனப்பெயர் பெறும். இவரைத் தாண்டக வேந்தர் எனவும் அழைப்பர்.

‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை,

இவ்வரிகள் இவரது அஞ்சா நெஞ்சினைப் புலப்படுந்து வனவாகும்.

‘மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே’

இப்பாடல் இவரது இறையுணர்வை இயம்பவல்லது.

 

இவர் பாடல்கள் 4, 5, 6, ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சுந்தரர்

திருக்கயிலையில் இறைவனுக்கு மலர்த்தொண்டு செய்து வந்த இவர் அநிந்திதை, கமலினி என்ற தெய்வ மகளிர் மீது காதல் கொண்டார். அதனால் இம்மூவரும் மண்ணில் பிறந்து தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள இறைவன் திருவுள்ளம் கொண்டார். அதன்படி கமலினி பரவையாராகவும். அநிந்திதை சங்கிலியாராகவும் பிறந்தனர்.

சடங்களியின் மகளை மணம் செய்து கொள்ளாதவாறு சுந்தரரை மண நாளில் ஆட்கொண்டார் இறைவர், இறைவனைத் தோழராகக் கொண்டமையால் சுந்தரர் தம்பிரான் தோழன் எனப்பெற்றார். இறுதியில் வெள்ளை யானை மீது இவர்ந்து திருக்கயிலைக்குச் சென்றார்.

இவர் பாடிய பாடல்கள் 38,000 என்பர், கிடைத்தவை 1029; இவை நூறு பதிகங்களில் அடங்கும்.

தம்மைப் பித்தன் என விளித்ததால் இறைவன் அதனையே தம்மைப்பற்றிப் பாடுவதற்கு முதல் அடியாகக் கொடுத்தார் என்பர்.

‘அரும்பருகே சுரும்பருவ அறுபதாம் பண்பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழ்வயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்
கமலங்கள் முகமலரும் கலய நல்லூர் காணே’.

இப்பாடல், சுந்தரரது இயற்கைப் புனைந்துரைத் திறனை விளக்குகிறது.

கங்கை யாளேல் வாய்திற வாள்;
கணப தியேல் வயிறு தாரி;

 

அங்கை வேலோன் குமரன் பிள்ளை;
தேவி யார்கோற் றட்டி யாளர்
உங்களுக்குஆட் செய்ய மாட்டோம்
ஒண்காந்தள் தளியு ளீரே’

இஃது அவரது நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் பாடியவை திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். இவை எட்டாம் திருமுறையைச் சேர்ந்தனவாகும்.

இவர் திருவாதவூரில் பிறந்தவர்; தந்தை சம்புபாதாசிருதர்; தாய் சிவஞானவதியார். இறைவர் திருப்பெருந்துறையில் குருத்த மரத்தடியில் குருவடிவாய் எழுந்தருளி இவரை ஆட்கொண்டார். அரிமர்த்தன பாண்டியன் பரி வாங்கத் தந்த பொருளை இவர் கோயில் திருப்பணிக்குச் செலவிட்டார். இவருக்காக இறைவர் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டியன் கைப் பிரம்பால் அடிபட்டார்.

இவர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்னும் பழமொழி இவர் பாடலின் சிறப்பைப் புலப்படுத்தும். இராமலிங்க அடிகளும் ‘வான் கலந்த மாணிக்கவாசகர்’ என்று தொடங்கும் பாடலால் இவர் பாடல் பெருமையை விளக்குகிறார்.

சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் எனும் நான்கு அகவற் பாடல்களும் திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருப்பொன்னுசல் ழுதவிய மகளிர் ஆடல்களை அடிப்படையாகக் கொண்ட பகுதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

 

இவர் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களாகப் பாடியுள்ளமை போற்றதக்கது. அதிசயப் பத்து, அன்னைப்பத்து, ஆசைப்பத்து, அருட்பத்து, குயிற்பத்து முதலியன இத்தகையன.

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளம் தாழ் உறுபுனலின் கீழ்மேல் ஆப்
பதைத்துருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளந்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லால்
கண் இணையும் மரமாம்தீ வினையி னேற்கே’

இது பத்திச்சுவை நனிசொட்டும் பாடல் என்பதில் ஐயமில்லை.

மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார் 400 கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டது. இறைவனைத் தலைவனாகவும், ஆன்மாவைத் தலைவியாகவும் கொண்டு இது பாடப்பட்டது. இலக்கியக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் பொழுது இஃது ஒரு சுவைமிக்க நூலாகப் புலப்படும்.

பன்னிரு ஆழ்வார்கள்

திருமால்பால் கொண்ட பக்தி வெள்ளத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆழ்வார்கள் பன்னிருவராவர். அவர்தம் நூல்கள் இருபத்து நான்கு. பாடிய பாடல் ஏறத்தாழ நாலாயிரம். இவை நாலாயிர திவ்வியபிரபந்தம் என்ற பெயரால் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. கி.பி.ஆறாம் நூற்றாண்டு தொடங்கி, ஒன்பதாம் நூற்றாண்டுக்குட்பட்ட முந்நூறு ஆண்டு காலத்தில இவ்வடியார்கள் திருப்பாசுரங்களைப் பாடித் தமிழையும் இறையுணர்வையும் ஒருங்கே வளர்த்துள்ளனர். இவர்கள் பாடல்கள் எளிமையும், இனிமையும் அழகும் பொலிந்து தமிழின் பெருமையை நிலை நாட்டி வருகின்றன. இவற்றைத் தொகுத்தவர் நாதமுனிகளாவார்.

  1. பொய்கையாழ்வார்

இவர் காஞ்சியில் பிறந்தவர். சங்க காலப் பொய்கை யாழ்வார் இவரல்லர் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் எனும் மூவரையும் முதலாழ்வார்கள் என்பர். மூவரும் ஒருகால் தனித்தனியே திருக்கோவலூரை அடைந்து வைணவர் ஒருவர் வீட்டின் இடைக்கழியில் தங்கினர். ஒருவர் படுக்கவும், இருவர் இருக்கவும், மூவர் நிற்கவும் இருந்த அச்சிறிய இடத்தில் நாலாமவராக இறைவனும் வந்து புகுந்து நெருக்கிப் பின் தம் அருட் காட்சியினை அவர்களுக்கு அளித்தார்.

‘வையந் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று’

இறைவனுக்குப் பாமாலை சூட்டிய நிலையினை இப்பாடலால் பொய்கையாழ்வார் உரைக்கின்றார். இவர் பாடிய 72 பாசுரங்களும் அந்தாதித் தொடையோடு வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.

  1. பூதத்தாழ்வார்

இவர் கடன் மல்லை எனப்படும் மாமல்லபுரத்தில் தோன்றியவர் திருமாலைப் ‘பூதம்’ என்று பாடியதனால் இப்பெயர் பெற்றவர் எனக்கூறுவர்.

‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சித்தை இடுதிரியா – என்புருகி
ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்’

இஃது இவர் பாடிய இரண்டாம் திருவந்தாதியின் முதற்பாடலாகும்.

இவரும் வெண்பா யாப்பால் அந்தாதித்தொடை அமைத்துப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் காலம் ஏழாம் நூற்றாண்டு.

  1. பேயாழ்வார்

இவர் திருமயிலையில் பிறந்து திருமாலைப் பாடிப் புகழ் பெற்றவர். இறைவன் மீது மிகுந்த காதல் கொண்டு பேயாய் அலைந்ததனால் பேயாழ்வார் என்ற பெயரைப் பெற்றவர் என்பர்.

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்.
அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைகண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.”

இஃது இவர்கண்ட திருமால் காட்சியாகும். இவர் பாடல்கள் மூன்றாம் திருவந்தாதியாக அமைந்துள்ளன.

இவரும் பூதத்தாழ்வாரும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தனர்.

  1. திருமழிசையாழ்வார்

தொண்டை நாட்டின் ஒரு பகுதியாகிய திருமழிசையில் பிறந்தவர் இவர். இவரது இயற்பெயர் பக்திசாரர் என்பது. பெற்றோரை இழந்த இவரைத் தாழ்ந்த குலத்தவர் ஒருவர் வளர்த்து வந்தார். இவ் ஆழ்வாரின் வேண்டு கோள்படி காஞ்சிபுரத்தில் திருமால் தம் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு சென்றார் என்றும், பின்னர் அவர் விரும்பியவாறே மீண்டும் திரும்பி அதனை விரித்துக் கொண்டார் என்றும் கூறுவர். இதனால் திருமாலும் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ எனப் பெயர் பெற்றார்.

இவர் பாடியவை திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்பன. இவரது காலம் கி பி. ஏழாம் நூற்றாண்டு.

  1. பெரியாழ்வார்

இவர் திருவில்லிபுத்தூரில், வேயர் குலத்தில் பிறந்தவர்; வீட்டுசித்தர் என்னும் இயற்பெயருடையவர் ; நாள் தோறும் பெருமாளுக்குப் பூமாலை சார்த்தும் திருத்தொண்டு புரிந்து வந்தார். இவர் இறைவனுக்கே திருப்பல்லாண்டு பாடியதால் பெரியாழ்வார் என்றழைக்கப் பெற்றார். இவர் பாடிய திருப்பல்லாண்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் தொடக்கத்தில் அமைந்துள்ளது. இவர் கண்ணனைக் குழந்தையாகக் கொண்டு, தம்மையே தாயாகப் பாவித்துத் தாலாட்டுப் பாடியுள்ளார். அதுவே பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கிய வகை தோன்றக் காரணமாயிற்று. இவர் பாடிய மற்றொரு நூல் பெரியாழ்வார் திருமொழியாரும். ஆண்டாளை வளர்த்தவர் இவரே.

“மாணிக்கம் கட்டி வயிர மிடைகட்டி
ஆணிப்பொன் னாற்செய்தவண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தாள்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தவனே தாலேலோ”

 

இஃது இவர் பாடிய தாலாட்டுப் பாடல்களுள் ஒன்று; இவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும்.

  1. ஆண்டாள்

இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாவர். திருமாலுக்குப் பூமாலை சூடிக் கொடுத்ததால் ‘சூடிக்கொடுத்த சுடர் கொடி’ என்னும் பெயர் பெற்றார், திருமாலையே மணம் புரிவேன் என இரவும் பகலும் ஏங்கி இறுதியில் திருவரங்கத்தில் அவரோடு இரண்டறக் கலந்தார். இவரை ஒரு கற்பனைப் பாத்திரம்’ என்பர் சிலர். இவர் பாடியவை நாச்சியார் திருமொழியும், திருப்பாவையுமாகும், திருப்பாவை இன்றும் மக்களால் – பெரிதும் விரும்பிப் பயிலப்படுகிறது.

‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி நான்,

இது இவரது காதல் மனத்தை அழகுறக் காட்டுவதாகும். இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.

  1. திருமங்கையாழ்வார்

நாலாயிர திவ்விய பிரபந்தத்துப் பாடல்களுள் மிகுதியானவற்றைப் பாடியவர் இவ்வாழ்வாரே. இவர் திருக்குறையலூரில் ‘நீலன்’ என்ற பெயரோடு பிறந்தார். பின்னர் மன்னனிடம் ‘பரகாலன்’ என்ற பெயரோடு சேனைத் தலைவராக இருந்தார்; ‘திருமங்கை’ என்னும் பதியை ஆண்டு திருமங்கை மன்னன் என்ற பெயரைப் பெற்றார். குமுதவல்லி என்னும் மாதினை மணந்து, அவள் வேண்டுகோள்படி திருமாலடியார்க்குப் பெருந்தொண்டு புரிந்தார்; தம் கைப் பொருள் முழுவதையும் செலவழித்தபின், இறைத்தொண்டுக்காக வழிப்பறியும் தயங்காமல் செய்து இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றார். இவர் பாடிய நூல்கள் பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம். திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல் திருவெழு கூற்றிருக்கை என்பவை.

குலம் தரும் ; செல்வம் தந்திடும்; அடியார் படுதுயர்
ஆயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும்; நீள் விசும் பருளும்; அருளொடு
பெரு நில மளிக்கும்
வளந்தரும்; மற்றும் தந்திடும்; பெற்ற தாயினும்
ஆயின செய்யும்;
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்’

இஃது இவர் நாராயணன்மேல் கொண்ட பத்தியை நன்கு காட்டவல்லது.

இவர் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு.

  1. தொண்டரடிப் பொடியாழ்வார்

இவர் திருமண்டங்குடி என்னும் சோழநாட்டுப் பகுதியில் முன்குடுமிச் சோழியப் பார்ப்பனர் குலத்தில் தோன்றியவர், இவர் இயற்பெயர் விப்பிர நாராயணர், திருமாலை, திருப்பள்ளி யெழுச்சி என்பன இவர் பாடியவை.

‘பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே’

 

இஃது இவரது திருமால் பத்தியை நன்கு விளக்குகிறது, இவர் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டு.

  1. திருப்பாணாழ்வார்

இவர் உறையூரைச் சார்ந்தவர்; பாணர் குலத்தில் தீண்டத்தகாதவராய்ப் பிறந்தார். அதனால், இவர் கோயிலுள் புகாமல் காவிரியாற்றங் கரையிலேயே நின்று அரங்கன் ஆலயம் நோக்கிப் பாடி வந்தார். ஒரு நாள் இவரைப் பக்தரென்று பாராது கல்லெறிந்தனர். அதனால் திருவரங்கநாதர் தம் நெற்றியில் குருதி கொட்டச் செய்தார்; நல்லவர் கனவில் தோன்றித் திருப்பாணாழ்வாரை ஆலயம் புகவைத்தார். இறைவனை நேரில் கண்ட இவ்வாழ்வார். இறைவன் அழகிலே மையல் கொண்டு, ‘அமலனாதிபிரான்’ என்ற பதிகத்தைப் பாடியருளினார்.

கொண்டல் வண்ணனைக்கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே’

இவர் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டு.

  1. குலசேகராழ்வார்

இவர் சேர அரச பரம்பரையில் திருவஞ்சைக்களத்தில் தோன்றியவர். சேரகுலமும், வைணவமும் தழைக்கப் பிறந்ததனால் இவர் ‘குலசேகரர்’ என்றழைக்கப் பெற்றார். வீரப்போர் புரிந்து வெற்றிபல கண்ட இவர், இறுதியில் திருமால் அடியவரானார், இராமன்மீது பித்துக் கொண்டு இவர் பாடிய பாடல்கள் கற்பார் உள்ளத்தை உருக்க வல்லன. இவர் வடமொழியும், தமிழ் மொழியும் நன்குணர்ந்தவர். வடமொழியில் ‘முகுந்தமாலை’ என்னும் நூலையும், தமிழ் மொழியில் பெருமாள் திருமொழியையும் பாடியுள்ளார் இது 105 பாசுரங்களின் தொகுப்பாகும்.

‘அடியாரும் வான வரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே’

இஃது இவரது திருமால் பக்தியைக் காட்டவல்லது. இன்றும் அங்கு இறைவன் முன்னிலையில் உள்ள படி ‘குலசேகரப்படி’ என்றழைக்கப்படுகிறது.

இவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு.

‘மன்னுபுகழ்க் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன் மா மதிள் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

இஃது இராமனுக்கு இவர் பாடிய ஒரு தாலாட்டுப் பாடலாகும்.

இவர் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டு.

  1. நம்மாழ்வார்

இவர் திருக்குருகூரில் வேளாளர் குலத்தில் தோன்றினார். இயற்பெயர் நம்மாழ்வார். பதினாறு ஆண்டுகள் புளிய மரத்தடியில் யோக நிலையில் இருந்தார். ஆழ்வார்களுள் இவரை உடலாகவும், மற்றையோரை உறுப்பாகவும் வைணவர் கருதுவர். சடகோபன், பராங்குசன், வகுளாபரணன் முதலானவை இவர் வேறு பெயர்களாகும். இவர் திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி ஆகிய நான்கு நூல்களைப் பாடியுள்ளார், திருவாய்மொழி ‘திராவிடவேதம்’ என்று போற்றப்படுகிறது; இஃது இறுதி ஆயிரமாகத் திகழ்கிறது; வேத சாரமாக விளங்குகிறது. இதற்குப் பல உரைகள் உள்ளன; அவற்றுள் பெரியவாச்சான் பிள்ளை உரை சிறந்து விளங்குகிறது.

“பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்று காண்டொறும்-பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வாவை
எல்லாம் பிரான் உருவே”

இஃது இவர் உளங்கசிந்து உருகும் பாடல்.

  1. மதுரகவியாழ்வார்

இவர் நம்மாழ்வாரின் சீடர். திருக்கோளூர் இவரது பிறப்பிடமாகும் அயோத்திக்குச் சென்றபோது ஒரு ஒளியினைக் கண்டு அதனைத் தொடர்ந்து வந்து நம்மாழ்வாரைக் கண்டார் என்பர். நம்மாழ்வாரின் பாடல்களனைத்தையும் தம் கரத்தால் எழுதிப் பெருமை பெற்றவர்; இவர் நம் ஆழ்வாரையே தம் தெய்வமாகக் கருதி வழிபட்டவர். ‘கண்ணி நுண் சிறுதாம்பு’ என்பது இவர் பாடிய நூலாகும். அஃது அளவால் மிகச் சிறியது.

நண்ணித் தென்குருகூர் நம்பியென் றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே

என்பது போல இவர் பாடும் பாடல்கள் எல்லாம் நம்மாழ்வார் சிறப்பைப் பாடுவனவாகவே உள்ளன.

பிறநூல்கள்

சங்கம் மருவிய நூல்களாகக் குறிப்பிடத்தக்கன முத்தொள்ளாயிரமும் பெருங்கதையுமாகும்.

 

பெருங்கதை

இதனை இயற்றியவர் கொங்கு வேளிராதலின் இதற்குக் கொங்குவேள் மாக்கதை என்ற பெயரும் உண்டு. பைசாச மொழியில் குணாட்டியர் எழுதிய பிருகத் கதா எனும் நூலின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை இவர் காவியமாகத் தந்துள்ளார். இது சமணச் சார்புடையது; காலம் கி. பி. 6 ஆம் நூற்றாண்டு. இதில் உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம். மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என ஐந்து காண்டங்கள் உள்ளன . இஃது ஆசிரியப்பாவால் இயன்றது.

வத்தவ நாட்டில் கௌசாம்பிய நகரத்து அரசன் உதயணன், இவனது யாழ் இசையில் மயங்கிய கடவுள் தன்மை வாய்ந்த யானை ஒன்று, இவன் அடிபணிகிறது. உச்சையினி நகரத்து அரசனால் சிறைபட்ட இவன் நண்பன் யூகியின் உதவியால் வெளியேறினான்; அந்நகரத்து மன்னன் மகள் வாசவதத்தையை மணந்தான். இறுதியில் துறவறம் ஏற்றான், இந் நூற்கண் சமணக் கோட்பாடுகள் மிகுதியாக விளக்கப்படுகின்றன.

“அன்புடைக் கணவர் அழிதகச் செயினும்
பெண்பிறந்தோர்க்குப் பொறையே பெருமை”

என்பது போன்ற அரிய கருத்துகள் இந்நூலில் உள்ளன.

முத்தொள்ளாயிரம்

இது சங்க காலத்தை அடுத்த இருண்ட காலத்துத் தோன்றிய நூலாகும். சேர, சோழ, பாண்டியர்களைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு அரசருக்கும் 900 பாடல்கள் பாடப்பட்டன என்பர். நூல் முழுமையும் இப்போது கிடைக்கவில்லை. 108 செய்யுள்களே கிடைத்துள்ளன.

 

யானை மறம், குதிரை மறம். அரசன் வெற்றி, ஈகை முதலான பல செய்திகளை அழகிய வெண்பாக்களால் இந்நூல் கூறுகின்றது. கைக்கிளை ஒழுக்கத்தைச் சார்ந்த இனிய காதற் பாடல்களையும் இதில் காணலாம். நள வெண்பாவினை நிகர்க்கும் வெண்பாக்களை உடையது இது. இதன் காலம் பி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு என்பார் சதாசிவப்பண்டாரத்தார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர்.

“கச்சி யொருகால் மிதியா ஒருகாலால்
தத்து நீர்த் தண் உஞ்சை தான் மிதியாப்-பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமே நம்
கோழியர்கோக் கிள்ளி களிறு

என்பது சோழ மன்னனின் யானை மறத்தை இயம்பும் பாடல்.

புறப் பொருள் வெண்பாமாலை

இதன் ஆசிரியர் ஐயனாரிதனார். காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. இது புறப்பொருள் பற்றி எழுந்த பொருள் இலக்கண நூலாகும், கொளு சூத்திரயாப்பாலும்; எடுத்துக்காட்டு வெண்பா யாப்பாலும் இதில் அமைந்துள்ளன. இது பன்னிரு படலத்தைப் பின்பற்றி அமைந்துள்ளது.

நிகண்டுகள்

இக்காலத்தைப் போலப் பண்டைக் காலத்துச் சொற்களுக்குப் பொருள் கூறும் அகராதிகள் தோன்றவில்லை. நிகண்டுகள் அப்பணியைச் செய்து வந்தன. நிகண்டுகளுள் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது திவாகரமாகும். இதன் காலம் 10ஆம் நூற்றாண்டு, ஆசிரியர் திவாகர முனிவர். இக்காலத்திலேயே பிங்கலர் இயற்றிய பிங்கல நிகண்டும் மண்டல புருடன் இயற்றிய சூடாமணி நிகண்டும் தோன்றின .

 

இவற்றைத் தொடர்ந்து பதினைந்தாம் நூற்றாண்டுக்கு மேல் உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு, அகராதி நிகண்டு முதலியன தோன்றின.

பெளத்த சமண நூல்கள்

பெளத்தர்கள் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்கவை மணிமேகலையும், குண்டலகேசியுமாகும். மணிமேகலை சங்கம் மருவிய காலத்ததாகும். இவை இரண்டும் ஐம்பெருங் காப்பியங்களைச் சார்ந்தன.

வீரசோழியம் எனும் இலக்கண நூலும் புத்தமித்திரர் எனும் பெளத்தரால் இயற்றப்பட்டதே: இதன் காலம் பதினொன்றாம் நூற்றாண்டு.

பெளத்தர்களைவிடச் சமணர்களே இலக்கிய இலக்கணங்களை மிகுதியாக எழுதியுள்ளனர். ஐம்பெருங் காப்பியங்களுள் சிலப்பதிகாரம் (சங்கம் மருவிய காலம்), சீவக சிந்தாமணி (சோழர் காலம்), வளையாபதி (சோழர் காலம்) எனும் மூன்றும் சமணச் சார்புடைய இலக்கியங்களாகும். சிறுகாப்பியங்கள் ஐந்தும் சமணர்கள் இயற்றியனவே. எஞ்சியவற்றைக் காப்பியங்கள் எனும் தலைப்பில் காண்க.

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் நாலடியாரும், பழமொழியும், சிறுபஞ்ச மூலமும், ஏலாதியும் சமணரால் இயற்றப்பட்டவை.

வாமன முனிவர் எழுதிய மேருமந்திர புராணமும் (கி.பி. 14ஆம் நூற்றாண்டு) சமண நூலே.

இலக்கண நூல்களுள் யாப்பருங்கலம், யாப்பருங் கலக்காரிகை, நன்னூல், நேமிநாதம். வெண்பாப்பாட்டியல், நம்பியகப் பொருள் முதலியன சமணர்கள் இயற்றியவையே.

 

 

 

5. சோழர் காலம் கி.பி. (800-1200)

காப்பியங்கள்

பல்லவர் காலம் சைவ, வைணவ இலக்கியங்களுக்கு வழிகோலியது; சோழர் காலத்தில் திருத்தக்க தேவர். சேக்கிழார், கம்பர் முதலிய மாபெருங் கவிஞர்கள் தோன்றி அழியா இலக்கியங்களைப் படைத்தனர்.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை சோழர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் காலத்தில் கலையும், இலக்கியமும் புத்தொளி பெற்றன. சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாகத் தஞ்சைப் பெரிய கோயிலைக் குறிப்பிடலாம். இக்காலத்தில் பெளத்த சமண, வைணவ, சைவ சமயங்கள் வளர்ந்தன.

காப்பியத்தின் அமைப்பு

காப்பியம் என்பது அறம், பொருள் இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களைக் கூறும். மலை, கடல், நாடு, நகர், பொழுது, ஞாயிறு, திங்கள் இவற்றின் வருணனையைக் கொண்டு விளங்கும், தன்னிகரில்லாத தலைவன் இடம் பெறுவான். நீர் விளையாட்டு, சோலை விளையாட்டு, மணவாழ்வு, மக்கட்பேறு முதலியனவும் அமையும். அரசியல், அமைச்சியல், போர், தூது, பயணம் வென்றி முதலிய இடம் பெறும். சருக்கம், இலம்பகம், படலம் முதலிய பிரிவுகளைப் பெறும், அணிநலன் மிக்கும், சந்த நயம் பெற்றும் இதன் பாடல்கள் இயங்குகின்றன.

ஐம்பெரும் காப்பியங்கள்

தமிழில் தோன்றிய காப்பியங்களை ஐம்பெருங்காப்பியங்கள் எனவும், ஐஞ்சிறு காப்பியங்கள் எனவும் வகைப்படுத்திக் காண்பர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி என்பவை ஐம்பெருங்காப்பியங்களாகும். இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றின.

  1. சீவக சிந்தாமணி

திருத்தக்க தேவர் இதன் ஆசிரியர் இவர் சமண துறவி; நிலையாமையையும் அறத்தையும் வற்புறுத்தும் நோக்கத்தோடு இந்நூல் அமைந்துள்ளது.

இது நாமகள் இலம்பகல் முதல் முத்தியிலம்பகம் முடியப் பதின்மூன்று இலம்பகங்களைக் கொண்டது; 3145 செய்யுட்கள் இதன்கண் உள்ளன . இதற்கு நச்சினார்க்கினியர் சிறந்ததோர் உரை எழுதியுள்ளார். இதன் காலம் கி. பி பத்தாம் நூற்றாண்டு

இக்காப்பியத் தலைவன் சீவகன், ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன் விசயமா தேவியை மணந்தான்; நாடாளும் பொறுப்பினை அமைச்சனாக இருந்த கட்டியங்காரனிடம் ஒப்படைத்துவிட்டுப் புதுமண வாழ்வின் இன்பத்தில் மூழ்கினான். கட்டியங்காரன் ஆட்சியைத் தானே கைப்பற்றிக் கொள்ள விரும்பினான்: சூழ்ச்சியால் மன்னனை வீழ்த்தக் காலம் கருதி இருந்தான். வேந்தனும் விசயமா தேவியை மயிற் பொறியில் அமர்த்தித் தப்பு வித்தான்; பின்பு கட்டியங்காரனை எதிர்த்து மடிந்தான், அவன் மகன் சீவகன் மணம் பல பூண்டான்; கட்டியங்காரனை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இறுதியில் நிலையாமையை உணர்ந்து துறவினை மேற்கொண்டான். இது சீவக சிந்தாமணியின் சுருக்கமாகும்.

  1. வளையாபதி

இதுவும் ஒரு சமண காப்பியம் ஆகும்; இஃது இன்று முழுமையாக்க் கிடைக்கவில்லை; 72 பாடல்களே கிடைத்துள்ளன. நூலாசிரியர் பெயரும் அவர் வாழ்ந்த காலமும் அறியக்கூடவில்லை. இதன் பாடல்கள் யாக்கை நிலையாமை, கற்புடைய மகளிர், கற்பில் மகளிர்; விரதத்தின் வகை, அருளுடைமை, புலால் மறுத்தல் முதலியவை பற்றிக் கூறுகின்றன.

  1. குண்டலகேசி

இது பெளத்த சமய நூல். இதன் பாடல்கள் இனிய ஓசையும் பொருள் நயமும் கொண்டுள்ளன. இவற்றுள் சில பாடல்களே கிடைத்துள்ளன.

பாளையாந் தன்மை செத்தும், பாலனாம் தன்மை செத்தும்
காளையாந் தன்மை செத்தும், காமுறும்- இளமை செத்தும்
மீளுமிவ் வியல்பும் இன்னே மேவரு மூப்புமாகி
நாளும்நாள் சாகின் றேமால் நமக்குநாம் அழாத தென்னே

இச்செய்யுள் நிலையாமையை அழகுபடக் கூறுதல் காண்க.

ஐஞ்சிறு காப்பியங்கள்

சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நாக குமார காவியம் எனும் இவ்வைந்தம் ஐஞ்சிறு காப்பியங்களாகும்.

  1. சூளமாணி

இதன் ஆசிரியர் தோலாமொழித்தேவர். இஃது ஓசை நயத்தில் சிந்தாமணியையும் வெல்வது என்பர். சங்க காலத்துக்கும், தேவார காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தே இந்நூல் தோன்றி இருக்க வேண்டும்.

  1. நீலகேசி

இது ‘நீலகேசித் தெருட்டு’ எனவும் வழங்கப்படுகிறது. குண்டலகேசி என்னும் பெளத்த காப்பியத்திற்கு எதிராக இது தோன்றியது. இது 10 சருக்கங்களையும் 1894 பாக்களையும் கொண்ட சமண நூல் எனத் தெரிகிறது.

இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை; சமண முனிவரால் இயற்றப்பட்டது என அறிய முடிகிறது. ஐந்து கருக்கங்களையும், 320 பாடல்களையும், இதுகொண்டுள்ளது. அவந்தி நாட்டு மன்னன் யசேதேரன் என்பவனின் வரலாற்றை நவில்கிறது. இசையை இழித்துக் கூறுகிறது.

  1. உதயன குமார காவியம்

இஃது உதயணின் வரலாற்றைக் கூறுகிறது. இஃது பெருங்கதையின் வழி நூலாகும். இதன் பாடல்களின் எண்ணிக்கை 367, இஃது உஞ்சைக் காண்டம் இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவான காண்டம் என ஐந்து காண்டங்களைக் கொண்டது. நூலாசிரியரின் காலமோ, பெயரோ அறியக்கூடவில்லை.

  1. நாககுமார காவியம்

இது சமண சமயச் சார்புடையது என்பது தவிர வேறு ஏதும் தெரியவில்லை. யசோதர காவியம் போல் இதுவும் வடமொரு பற்றியதாக இருந்திருக்கலாம்.

பெரிய புராணம்

இதன் ஆசிரியர் சேக்கிழார். இவர் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்; இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தார். இந்நூலுக்குச் சுந்தரர் இயற்றிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியும் முதல் நூல்களாக அமைந்தன.

இஃது சைவத்திருமுறைகளுள் பன்னிரண்டாம் திருமுறையாக விளங்குகிறது; சைவ நாயன்மார்களின் பெரும் பணியை உணர்த்துகிறது. அதனையே செயற்கரிய செயலாகச் சித்திரிக்கிறது; எளிய நடை, தெளிவான சொற்கள், உயர்ந்த கருத்துகள், பண்பாடு நெறிகள், பக்திச்சுவை முதலியவற்றைக் கொண்டுள்ளது.

 

 

கம்பராமாயணம்

பாரதமும், இராமாயணமும் இதிகாசங்களாகையால் அவற்றைக் காப்பியங்களில் சேர்க்கவில்லை.

இதன் ஆசிரியர் கம்பர். இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தார்: வடமொழி இராமாயணத்தைத் தமிழில் கற்பனையழகும் தமிழ் மரபும் தோன்றப் பாடினார். சோழநாட்டு மக்களின் வாழ்வு, ஆட்சித்திறம், பண்பாடு, காதல்நெறி முதலியவற்றைக் காட்டுவதாகவே கம்பனது படைப்பு அமைந்துள்ளது. காடும், நாடும், மாந்தர் இயல்பும், காட்சிப் புனைவுகளும் தமிழகத்தையே நினைவு படுத்துகின்றன.

பாலகாண்டம், அயோத்தியா காண்டம். ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு பகுதிகளைக் கொண்ட இந்நூலுக்குக் கம்பர் இட்ட பெயர் இராமவதாரம் என்பது. இது 113 படலங்களையும் 10,500 பாடல்களையும் கொண்டுள்ளது; காவியக் கட்டுக் கோப்பும், நாடக நயமும் கொண்டு விளங்குகிறது. இதனைக் ‘கம்ப நாடகம்’ எனவும் அறிஞர் போற்றுவர்.

‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்’

இப்பாடல் கம்பரின் சந்த நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

கந்தபுராணம்

இதன் ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியார். இவர் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. முருகனுக்கும் சூரபதுமனுக்கும் நடந்த போர் இதில் விரித்துக் கூறப்படுகிறது. முருகன் வள்ளியையும், தெய்வயானையையும் மணந்த வரலாறுகளும் இடம் பெறுகின்றன. இந்நூல் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டது. வடமொழிஸ்காந்தத்தின் ஒரு பகுதியாகிய சங்கர சங்கிதை இதன் மூல நூலாகும்.

இலக்கண நூல்கள் (சோழர் காலம்)

சோழர் காலத்தில் காப்பியங்களோடு சிறந்த இலக்கண நூல்கள் பலவும் தோன்றின. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத் தக்கனவாகும்.

வீரசோழியம்

இதன் ஆசிரியர் புத்தமித்திரர்; காலம் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐந்தனுக்கும் இஃது இலக்கணம் கூறுகிறது: ஆசிரியர் தம்மை ஆதரித்த வீர சோழன் பெயரையே தம் நூலுக்கு வைத்துள்ளார்.

நேமிநாதம்

இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர்; காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. இஃது எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் கூறுகிறது. இதில் 96 நூற்பாக்களே உள்ளன. இந்நூல் மிகவும் சுருக்கமாக அமைந்தமையால் இதற்குச் ‘சின்னூல்’ என்ற பெயரும் வழங்குகிறது.

நன்னூல்

இதன் ஆசிரியர் பவணந்தியார்; காலம் பதின் மூன்றாம் நூற்றாண்டு, வீர சோழியத்தையும், தொல்காப்பியத்தையும் முதல் நூலாகக் கொண்டு இதன் ஆசிரியர் எழுதியுள்ளார்: தொல்காப்பியனார் விரித்துக் கூறியவற்றைத் தொகுத்தும், சிலவற்றை விரித்தும் தந்துள்ளார். இதன் பாயிரம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் அரும்பொருள் ஐந்தனையும் இது ஓதுவதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் இன்று எழுத்தும் சொல்லுமே கிடைத்துள்ளன.

 

 

 

நம்பியகப் பொருள்

இதன் ஆசிரியர் நாற்கவிராச நம்பியார்; காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. இஃது அகப்பொருள் இலக்கணத்தைக் கூறுகிறது. இதனை இலக்கணமாகக் கொண்டு தஞ்சைவாணன் கோவை எனும் நூலைப் பொய்யாமொழிப் புலவர் இயற்றியுள்ளார். அதனால், அதன் பாடல்கள் இந்நூற்கண் உதாரணச் செய்யுள்களாகந் தரப்பட்டுள்ளன.

யாப்பருங்கலம்

இதன் ஆசிரியர் அமிதசாகரர், காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு. உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என மூன்று பகுதிகளால் இது யாப்பிலக்கணத்தை ஓதுகிறது.

யாப்பருங்கலக்காரிகை

இதன் ஆசிரியரும் அமிதசாகரரே, இது யாப்பருங்கலத்தின் சுருக்கமாகும், கட்டளைக் கலித்துறை யாப்பால் இஃது இயற்றப்பட்டுள்ளது. இதுவும் உறுப்பு, செய்யுள், ஒழிபு எனும் மூன்றியல்களால் யாப்பிலக்கணத்தை ஓதுகிறது.

வச்சணந்திமாலை

இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர்; தம் ஆசிரியர் பெயராகிய வச்சணந்தி என்பதையே தம் நூலுக்குப் பெயராக வைத்துள்ளார். இது சிற்றிலக்கியங்களின் அமைப்புப் பற்றியும். செய்யுள் எழுதும் முறைகளைப் பற்றியும் கூறுகிறது. இதன் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு.

 

தண்டியலங்காரம்

காவியதர்சம் என்னும் வடமொழி நூலைத் தழுவி இது தமிழில் எழுதப்பட்டது. இதன் காலம் 12 ஆம்’ நூற்றாண்டு. இஃது அணியிலக்கணத்தை அழகு பெறக் கூறுகிறது. காப்பிய இலக்கணமும் இதில் இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியம் உவமையணி ஒன்றனையே கூறிச்செல்ல, இஃது ஏனைய அணிகளையும் விளக்கிச் செல்கிறது; பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.

 

 

 

 

 

6. நாயக்கர் காலம் (கி.பி. 1350—1750)

சோழப் பேரரசு பதின்மூன்றாம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்றது; பாண்டியர் தலையெடுத்தனர்; பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அலாவுதின் கில்ஜியின் படைத் தலைவன் மாலிக்காபூர் படையெடுத்து வந்து பாண்டியரை வென்று, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான். அதனால், தமிழகத்தில் மகமதியர் ஆட்சி கால்கொள்ளத் தொடங்கியது.

ஆந்திர நாட்டில் விசயநகர ஆட்சி ஏற்பட்டபின் மகமதியர் ஆட்சி வலிமை குன்றியது. விசயநகர வேந்தர்களின் பிரதிநிதிகளாக நாயக்கர்கள் மதுரையில் ஆட்சி செலுத்தினர். அவர்கள் ஆட்சி நானூறு ஆண்டுகள் நிலவியது.

சைவசித்தாந்த நூல்கள்

பல்லவர் காலத்தில் தேவாரமும், திவ்வியபிரபந்தங்களும் தோன்றிப் பக்தி உணர்வை வளர்த்தன. நாயக்கர் காலத்தில் சைவ சித்தாந்த சாத்திரங்கள் தோன்றின. அவை பதி, பசு, பாசம் பற்றிய விளக்கங்களைத் தருகின்றன.

அவற்றுள் குறிப்பிடத்தக்கன திருவுந்தியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், உண்மை விளக்கம் முதலியனவாகும். இவற்றின் காலம் 11 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை எனலாம்.

இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள்

இளம்பூரணர்

தொல்காப்பியம் முழுவதற்கும் முதன் முதலில் உரை எழுதியவர் இளம்பூரணரே ஆவர். அதனால் இவரை ‘உரையாசிரியர்’ என்று அழைப்பர். இவர் உரை தெளிவும், எளிமையும். அழகும், சுருக்கமும் வாய்ந்ததாகும். இவர் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.

பேராசிரியர்

இவர் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இறுதி நான்கியல்களுக்கும் உரை எழுதியுள்ளார். இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டாகும்.

சேனாவரையர்

இவர் வடமொழி, தமிழ்மொழி எனும் இருமொழிப் புலமையும் உடையவர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டும் இவர் உரை எழுதியுள்ளார். ‘வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையர்’ எனும், தொடர் இவர் பெருமையைப் பறைசாற்றும், இவர் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.

நச்சினார்க்கினிரியர்

‘உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியார்’ என இவரைப் பாராட்டுவர் தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் உரை எழுதினார் என்பர், இறுதி நான்கியல்களுக்கும் இவரது உரை கிடைக்கவில்லை. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி முதலாய இலக்கியங்களுக்கும் சிறந்த உரைகளைத் தந்துள்ளார். இவர் காலம் பதினான்காம் நூற்றாண்டு.

அடியார்க்கு நல்லார்

சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த விரிவுரை ஒன்றனை இவர் எழுதியுள்ளார். இசை, நாடகம், வானநூல் முதலியவற்றைப் பற்றிய குறிப்புகள் பல இவர் தந்துள்ளமையிலிருந்து இவரது பல்கலைப் புலமை புலனாகிறது. இவர் காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.

சிலப்பதிகாரத்திற்கும் பழைய குறிப்புரை ஒன்றும் உள்ளது. அதனை எழுதியவர் அரும்பத உரையாசிரியர் என்பர்.

பரிமேலழகர்

திருக்குறளுக்கு அமைந்த பதின்மர் உரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்ததாகப் போற்றப்படுகிறது. பரிமேலழகர் வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் புலமை பெற்றவர். இலக்கண மரபு தவறாமல் உரை எழுதுவதிலும், சொற்களுக்குத் தக்க வகையில் நயமும் விளக்கமும் தருவதிலும் இவர் வல்லவர். இவர் காலம் கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டு.

சிற்றிலக்கியங்கள்

அறம், பொருள், இன்பம், வீடு எனும் உறுதிப் பொருள்கள் நான்கனுள் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிற்றிலக்கியமாகும். இது வடமொழிப் பிரபந்த வகையினைச் சார்ந்ததாகும். கோவை, உலா, அந்தாதி, தூது, கலம்பகம், பரணி, பிள்ளைத் தமிழ், குறவஞ்சி முதலியன இதனுள் அடங்கும். இவற்றுள் சில சோழர் காலத்தில் தோன்றின. நாயக்கர் காலத்தில் மிகுதியாகத் தோன்றின.

கோவை

கடவுளரையோ, வேந்தரையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அகப்பொருள் துறைகளைக் கோவை படக் கூறுவது கோவையாகும், இதன் பாடல்கள் கட்டளைக் கலித்துறையால் அமைவது இயல்பு. திருக்கோவையார் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

நாயக்கர் காலத்து வாழ்ந்த பொய்யாமொழிப் புலவர் எழுதிய கோவை நூல் தஞ்சைவாணன் கோவை என வழங்குகிறது.

உலா

இறைவனோ வேந்தனோ நகர்க்கண் உலா வருவதாகவும், அவர்களைக் கண்டு பருவமடைந்தவர் காதல் கொள்வதாகவும் பாடப்படுவது உலா என்னும் நூல் வசையாகும். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவ மகளிரின் நிலையை உள்ளவாறு விளக்குவதில் இந்நூல் தலைசிறந்ததாகும்.

சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கைலாயஞான உலாவே தமிழில் தோன்றிய முதல் உலாவாகும். இது பல்லவர் காலத்தில் எழுந்தது. ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலா மிகச் சிறந்ததாகப் பாராட்டப்படுகிறது.

திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றால நாதர் உலாவும், இரட்டைப் புலவர்களின் ஏகாம்பர நாதர் உலாவும், அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் திருவாரூர் உலாவும் பிற்காலத் தெழுந்த உலாக்களுள் குறிப்பிடத்தக்கனவாகும்.

அந்தாதி

ஒரு பாடலின் ஈற்றிலுள்ள எழுத்தோ, அசையோ சீரோ, அடியோ அடுத்த பாடற்கண் முதலாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை எனப்படும். நூல் முழுவதும் இத்தொடை அமையின் அஃது அந்தாதி எனும் நூல் வகையைச் சாரும்.

அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி எனக் கூறுகிறது யாப்பருங்கலக் காரிகை. இந்நூலை வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறையால் பாடுவர்.

காரைக் காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதியும், கம்பர் பாடிய சரசுவதி அந்தாதியும், சடகோபர் அந்தாதியும் சோழர் காலத்தில் எழுந்தவை: சைவ எல்லப்ப நாவலரின் திருவருணை அந்தாதி, பிள்ளைப் பெருமாளையங்காரின் திருவரங்கத்து அந்தாதி, அருணகிரி அந்தாதி முதலியன நாயக்கர் காலத்தைச் சாந்தவை. கலம்பகம், உலா, தூது முதலியவற்றின் பாடல்களும் அந்தாதித் தொடையில் அமைவதுண்டு.

 

 

தூது

அகப்பொருள் இலக்கியங்களுள் துாது எனும் சிற்றிலக்கியம் குறிப்பிடத்தக்கதாகும். பிரிவுத் துயரால் வருந்தும் தலைவி, தலைவனிடம் அன்னம், குயில், கிளி, மேகம், பாங்கி, குயில், நாகணவாய்ப்புள், நெஞ்சு, தென்றல், வண்டு முதலாய பொருள்களுள் ஒன்றனைத் தூதனுப்புவதாகப் பாடப்படும் நூல் துாது எனப்படும். முறையே தூது எனப்படும். இது தூதுப் பொருளையும் தலைவனையும், செல்லும் நெறியையும், தலைவனைக் காணும் நிலையையும் சிறப்பித்துக் கூறி இறுதியில் தலைவனின் மாலையை வாங்கி வருமாறு பாடுதல் தூதின் இயல்பாகும்.

 

உமாபதி சிவாச்சாரியார் எழுதிய நெஞ்சுவிடு துதே தூதிலக்கியங்களுள் முதலாவதாகும். பல பட்டடைச் சொக்சுநாதப் புலவர் எழுதிய கிள்ளைவிடு தூது தூதிலக்கியங்களுள் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. அடுத்ததாகக் குறிப்பிடத்தக்கது தமிழ் விடு தூதாகும்.

“இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

-தமிழ்விடுதூது

கலம்பகம்

பலவகை மலர்களால் தொடுக்கப்பட்ட கதம்பமாலை போலப் பலவகைப் பாக்களால் பாடப்படுதல் பற்றிக் கலம்பகம் என்ற பெயரைப் பெற்தென்பர் சிலர், சிலர் கதம்பம் என்பதன் மரூஉ மொழியே கலம்பகம் என்பர். கலம்+பகம்; கலம் 12, பகம்-அதில் பாதி 6 ஆக 18 உறுப்புகள் கலந்துவரப் பாடப்படுவது கலம்பகம் என்பர். வேறு சிலர். புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதாயம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்பன பதினெட்டு உறுப்புகளாகும்.

பிள்ளைப் பெருமளையங்காரின் திருவரங்கக் கலம்பகமும், சைவ எல்லப்ப நாவலரின் திருவருணைக் கலம்பகமும், குமரகுருபரரின் மதுரைக் கலம்பகமும் கலம்பக நூல்களுள் குறிப்பிடத்தக்கனவாகும். கலம்பகத்திற்கு இரட்டையர் எனும் தொடர் கலம்பகம் பாடுவதில் இரட்டையர் வல்லவர் என்பதைக் குறிப்பிடுகிறது. தில்லைக் கலம்பகம் இவர்கள் பாடியதாகும்.

 

பிள்ளைத் தமிழ்

தான் போற்றும் கடவுளரையோ, அரசரையோ, பெரியோரையே குழந்தையாகப் பாவித்துப் பத்துப் பருவம் அமையப்படுவது பிள்ளைத் தமிழ் எனப்படும். இஃது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில். சிறுபறை, சிறுதேர் என்பன பத்துப் பருவங்களாகும். இறுதி மூன்றனுக்குப் பதிலாகக் கழங்கு, அம்மானை, ஊசல் என்பன வந்து ஏனைய ஒத்து வருதல் பெண்பாற் பிள்ளைத் தமிழின் இலக்கணமாகும்.

ஒட்டக் கூத்தர் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழே இவ்வகையில் முதல் நூல் என்பர். அது சோழர் காலத்தைச் சார்ந்தது. குமர குருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமாாசாமிப் பிள்ளைத் தமிழ், பகழிக் கூத்தர் பாடிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் முதலியன பிள்ளைத் தமிழ் நூல்களுள் சிறந்தன என்பர் இவற்றுள்ளும் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே சிறந்ததென்பர் சிலர்.

பரணி

ஆயிரம் யானைகளை வீழ்த்தி வெற்றி கண்ட தலைவனைப் புகழ்ந்து பாடுவது பரணி என்னும் இலக்கியமாகும்.

“ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி”

செயங்கொண்டார் சோழவேந்தன் குலோத்துங்கன் மீது பாடிய கலிங்கத்துப் பரணி கற்பனை வளனும், ஓசை நலமும் கொண்டது; ஒட்டக்கூத்தர் தக்கயகப் பரணியைப் பாடியுள்ளார். இவை இரண்டும் சோழர் காலத்தில் தோன்றியவை.

 

சூரன் வதைப் பரணி, இரணியவதைப் பரணி, பாசவதைப் பரணி, திருச்செந்தூர் பரணி முதலியன நாயக்கர் காலத்தனவாகும்.

குறவஞ்சி

இஃது ஒரு நாட்டிய நாடகமாகும். பவனிவரும் தலைவனைக் கண்டு மயங்கிக் காதல் கொள்ளும் தலைவியின் கையைப் பார்த்துக் குறத்தி குறிசொல்லிப் பரிசில் பெறுதலும், குறத்தியைத் குறவன் தேடி வருதலும், இருவரும் கலந்து உரையாடி மகிழ்தலும் இதில் கூறப்படும் முக்கிய நிகழ்ச்சிகளாகும். நாடு, நகர், மலை, தலம் முதலியவற்றின் வருணைணைகள் இதில் இடம் பெறும், குறவஞ்சிகளுள் திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய திருக்குற்றாலக் குறவஞ்சி தலைசிறந்ததாகும்.

சைவ மடங்களின் தமிழ்த் தொண்டு

சைவ மடங்கள் தமிழுக்குச் செய்த தொண்டுகள் அளப்பரியன. இம் மடங்களால் பெரும்புலவர்கள் பலர் ஆதரிக்கப் பெற்றனர்.

தருமபுர மடத்தைச் சார்ந்த குமரகுருபரர் பல அரிய தமிழ் நூல்களை எழுதினார்: வடநாடு சென்று தமிழ் பரப்பினார். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், கயிலைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி மாலை, நான்மணி மாலை முதலியன இவர் பாடியனவாகும். இவர் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பிரபுலிங்க லீலை முதலாய பல நூல்களை எழுதியுள்ளார், பிரபுலிங்க லீலை சிவபெருமானைத் தலைவனாக்கித் தத்துவக் கொள்கைகளுக்கு உருவவடிவு கொடுத்துக் கற்பனை நயம் விளங்கப் பாடப்பட்டதாகும். இவர் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

 

திருவாடுதுறையைச் சார்ந்த ஈசான தேசிகர் இலக்கணக் கொத்து என்னும் நூலை இயற்றினார். அவர் மாணவர் சங்கர நமசிவாயர் நன்னூலுக்கு விருத்தியுரை ஒன்று எழுதினார். இவர் மாணவர் சிவஞான முனிவர் இவரது நன்னூலுரையை மேலும் விரிவுபடுத்தினார். இவர் காலம் 18ஆம் தூற்றாண்டு.

தாயுமானவர்

இவர் திருமறைக் காட்டில் சைவ வேளாளர் குலத்தில் தோன்றினார். தமிழ் வடமொழி. இரண்டையும் நன்கு. கற்றார். சமரச சன்மார்க்க நெறியைப் புகுத்தியவர் இவரே. இவர் பாடல்கள் தாயுமானவர் பாடல்கள் எனும் பெயரில் புத்தகமாகி வெளிவந்துள்ளன. அவை சைவசமய உண்மைகளையும், சித்தாந்தக் கொள்கைகளையும் விளக்கு கின்றன

“எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லால் வேறு ஒன்று அறியேன் பராபரமே”

எனும் தொடர். இவரது பரந்த மனப்பான்மையை விளக்குகின்றது. காலம் 18ஆம் நூற்றாண்டு.

முகம்மதியப் புலவர்கள்

இசுலாமியப் புலவர் பலர் அரபுமொழிப் பயிற்சியோடு: தமிழ்மொழிப் புலமையும் பெற்றுப் பல அரிய நூல்களைப் படைத்துள்ளனர். காப்பியம், புராணம், சிற்றிலக்கியம், நாடகம் முதலியவற்றை இயற்றியதோடு பல புதிய இலக்கிய வகைகளையும் அவர்கள் தமிழில் புகுத்தியுள்ளனர். கும்மி, ஒப்பாரி, தாலாட்டு, ஏசல், சிந்து முதலாய பாமரர் இலக்கிய வகைகளிலும் அவர்கள் நூல்கள் பல யாத்துள்ளனர்.

உமறுப்புலவர், பீர்முகமது, குணங்குடி மஸ்தான் வண்ணக் களஞ்சியப் புலவர், செய்குத்தம்பிப் பாவலர், அப்துல்காதர் புலவர் முதலியோர் இசுலாமியப் புலவர்களுள் குறிப்பிடத் தக்கவர்களாவர்.

 

  1. உமறுப் புலவர்

இவர் முகம்மது நபிகளின் வரலாற்றைச் “சீறாப் புராணம்” என்னும் காப்பியமாகத் தந்துள்ளார். இதில், 900 பாடல்கள் உள்ளன; இவர் இந்நூலைக் கம்பரைப் பின்பற்றிப் பாடியுள்ளார்.

2 பீர் முகமது

திருநெறிகீதம், ஞானக்குறம் ஞானப்பாட்டு முதலான பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். இவர் 1809 பாடல்களுக்குமேல் பாடியுள்ளார்.

3 குணங்குடி மஸ்தான்

ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். முகதீன் சதகம் முதலானவை இவர் பாடியனவாகும். இவர் பாடல்கள் மிகுதியாகத் தத்துவக் கருத்துகளைக் கொண்டவை.

4 வண்ணக் களஞ்சியப் புலவர்

இவர் ‘இராச நாயகம்’ எனும் பெருநூல் ஒன்றனையும், ‘அலிபாதுஷா நாடகம்’ எனும் நாடகம் ஒன்றனையும் இயற்றியுள்ளார்.

5 செய்குதம்பிப் பாவலர்

இவர் சதாவதானம் செய்வதில் வல்லவர்; கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், திருநாகூர் திரிபந்தாதி, நீதி வெண்பா, காரணமாலை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

6 அப்துல்காதிர் புலவர்

சந்தத் திருப்புகழ், திருமதீனத்து மாலை, நவமணி தீபம், மெய்ஞ்ஞானக் கோவை, கண்டிக் கலம்பகம் முதலாக முப்பதுக்கு மேற்பட்ட நூல்கள் இவர் இயற்றினவாகும்.

தனிப் புலவர் சிலர் [சோழர் காலம்]

ஒட்டக்கூத்தர்

இவர் கவிச்சக்கரவர்த்தி எனப் பாரரட்டப்படுகிறார். விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகியோர்மீது உலாக்கள் பாடியுள்ளார். இவற்றின் தொகுப்பு மூவருலா என வழங்குகிறது. தக்கயாகப் பரணி, குலோத்துங்க சோழன் உலா முதலியனவும் இவர் இயற்றியனவே. இராமாயண உத்தர காண்டத்தை இவர் பாடியதாய்க் கூறுவர். இவர் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு.

புகழேந்திப் புலவர்

“வெண்பாவிற் புகழேந்தி” எனும் தொடர் இவரது செய்யுளியற்றும் திறத்தை வெளிப்படுததும். இவர் பாடிய நளவெண்பா சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலி நீங்கு காண்டம் எனும் மூன்று பகுதிகளை உடையது இவர் காலம், கி பி. 13ஆம் நூற்றாண்டு.

 

நாயக்கர் காலம்

வில்லிபுத்தூரார்

இவர் வடமொழி வியாச பாரதத்தைத் தமிழில் சுருக்கமாகப் பாடினார் அது வில்லிபுத்தூரார் பாரதம் என வழங்குகிறது. இது 433 விருத்தப்பாக்களால் ஆனது. இவர் திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் பிறந்தார். வக்கைபாகை வரபதி ஆட்கொண்டானின் அவைக்களப் புலவராக விளங்கினார். இவர் காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு.

காளமேகப் புலவர்

கும்பகோணம் அருகிலுள்ள நந்திபுரத்தில் இவர் பிறந்தார். ஆசுகவி பாடுவதில் இவர் வல்லவர்; வசை பாடுவதிலும் இணையற்றவர். ‘வசை பாடக் காளமேகம்’ எனும் தொடர் இதனை விளக்கும். இவர் காலம் 15 ஆம் நூற்றாண்டு.

அருணகிரிநாதர்

இவர் திருவண்ணாமலையில் பிறந்தார்; தலங்கள் தோறும் சென்று இறைவன் புகழ்பாடி வழிபட்டார். இவர் முருகன் மீது பாடிய பாடல்களே திருப்புகழ் என வழங்குகிறது. திருவகுப்பு, கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல்விருத்தம், மயில் விருத்தம் முதலியன இவர் பாடிய பிற நூல்களாகும். இவர் பாடல்கள் சந்த இன்பம் மிக்கனவாகும். இவர் காலம் கி. பி. 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

பரஞ்சோதி முனிவர்

இவர் சோழ நாட்டுத் திருமறைக்காட்டில் பிறந்தார்; இவர் பாடிய நூல் திருவிளையாடற் புராணமாகும். இது மதுரை சொக்க நாதரின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் அழகுபெற எடுத்தியம்புகிறது. மதுரைக் காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க் காண்டம் எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதன் நடை எளிமையும். இனிமையும் பெற்று விளங்குகிறது. இவரது காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.

அருணாசலக் கவிராயர்

இவர் சோழ நாட்டில் தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தார்; இராம நாடகம், அசோமுகி நாடகம், சீர்காழித் தல புராணம், சீர்காழிக் கோவை, அனுமார் பிள்ளைத் தமிழ் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். இராம நாடகம் கம்பராமாயண்த்தைப் பின்பற்றியதாகும். எளிய சொற்களால் இயன்று பாமர மக்களையும் கவர்வதாக இதன் பாடல்கள் அமைந்துள்ளன. இவர் காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.

 

 

 

 

 

 

 

7. ஐரோப்பிய காலம் (17, 18,19 ஆம் நூற்றாண்டுகள்)

உரைநடை வளர்ச்சி

ஐரோப்பியர் வருகைக்குப் பின் இலக்கியங்கள் உரை நடையில் வெளிவரத் தொடங்கின, நாவல் சிறுகதை முதலாய புதிய இலக்கிய வகைகளைத் தமிழகத்திற்கு அவர்கள் அறிமுகப்படுத்தினர்; அகராதிகளைத் தொகுத்தனர். இதனையொட்டிப் பிறரும் உரைநடையில் எழுதத் தொடங்கினர், உரைநடை வளர்ச்சி பெற்றது.

கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு

கிறித்தவப் பெருமக்கள் சிறப்பாகப் பாதிரிமார்கள தமிழ் மொழியின் பெருமையினையும், இலக்கிய இலக்கணச் சிறப்புகளையும் உலகறியச் செய்தனர்.

தமிழில் இக்கால வளர்ச்சிக்குக் கடந்த முந்நூறு ஆண்டுகளாகக் கிறித்துவப் பெருமக்கள் ஆறறிய தொண்டே முக்கிய காரணமெனின் அது மிகையாகாது.

வீரமாமுனிவரும், ஜி. யூ. போப்பும், டாக்டர் கால்டு வெல்லும் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர்.

வீரமாமுனிவர்

இவர் இயற்பெயர் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்பது; இத்தாலி நாட்டிலிருந்து 18 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்தார், பல மேனாட்டு மொழிகளில் புலமை பெற்றார், சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றார்; பிற தென் மொழிகளையும் கற்றுணர்ந்தார். தொன்னூல் விளக்கம் என்னும் ஐந்திலக்கண நூலை இயற்றினார்; சதுரகராதியை உருவாக்கினர். இது பெயர், பொருள், தொகை, தொடை எனும் நான்கு பகுதிகளைக் கொண்டது. பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவைக் கதையை உரைநடையில் எழுதிக் கதையிலக்கியத்திற்கும் உரைநடை வளர்ச்சிக்கும் வழிகாட்டினார். வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம் முதலிய உரைநடை நூல்களையும் இயற்றினார்.

‘தேம்பாவணி’ இவர் இயற்றிய குறிப்பிடத்தக்க காப்பியமாகும். இது தூயவளனாரின் வரலாற்றைக் கூறுகிறது. இலக்கிய வளம் மிக்கது; காவிய மணம் கமழ்வது; ஏறத்தாழ 3600 பாடல்களைக் கொண்டது. திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை அடைக்கலமாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, அடைக்கல நாயகி வெண்கலிப்பா ஆகிய நூல்களும் இவர் இயற்றியனவே. குறில் எகர ஒகரங்கள் முற்காலத்தில் புள்ளியிட்டு எழுதப்பட்டன. வீரமாமுனிவரே புள்ளியை விலக்கி எ ஏ. ஒ ஒ எனும் வடிவைத் தந்தார்.

ஜி. யு போப்

1830 இல் இங்கிலாந்தில் பிறந்த போப் எனும் பாதிரியார் தம் பத்தொன்பதாம் வயதில் தமிழகம் வந்தார். நீண்டநாள் தமிழ்த் தொண்டாற்றினார்; திருக்குறள், நாலடியார், சிவஞான போதம். திருவாசகம் முதலியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்; தமிழ் இலக்கணத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் வெளியிட்டார். தம் கல்லறையில் ஒரு தமிழ் மாணவன், என்று பொறிக்க வேண்டும் என விரும்பினார். இஃது அவருக்குத் தமிழின் பாலிருந்த பற்றினை விளக்குகிறது. இவர் சமுதாயப் பணியும் ஆற்றினார்.

டாக்டர் கால்டுவெல்

1814 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்: சமயத் தொண்டாற்றத் தமிழகம் வந்தார்; திருநெல்வேலி மாவட்டக்தில் தங்கி, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகட்குமேல் தமிழ்ப்பணி ஆற்றினார். பல மேனாட்டு மொழிகளையும், தென்னக மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்து பெரும் புலமை பெற்றார். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் பெருநூலை இயற்றித் தமிழுக்குச் சிறந்த பெருமையைத் தேடித் தந்தார். ‘திராவிட மொழிகளின் தனித் தன்மைகளைச் சுட்டி, அவற்றின் பெருமையை உலகறியச் செய்தார்; உலக மொழிகள் பலவற்றிலும் தமிழிச் சொற்கள் சென்று கலந்ததை எடுத்துக் காட்டினார்; ‘திருநெல்வேலி சரித்திரம்’ என்னும் அரிய வரலாற்று நூலையும் எழுதினார். இவ்விரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் அமைந்தவை. தாமரைத் தடாகம், நற்கருணைத்தியான மாலை முதலிய பல நூல்களை உரைநடையில் எழுதித் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குத் துணை செய்தார். தமிழுக்காகவும், கிறித்தவ சமயத்துக்காகவும் உழைத்த இவ் அறிஞர் பெருந்தகை தம் இறுதிக் காலத்தில் தாயகம் செல்ல மறுத்துக் கோடைக்கானலிலேயே உயிரிழத்தமையை நினைக்குங்கால், நெஞ்சம் நெகிழாமல் இருக்க முடியவில்லை.

முக்கூடற்பள்ளு

நாயக்கர் காலத்து எழுந்த இலக்கிய வகைகளுள் பள்ளு என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஃது உழவர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்க வல்லது. பள்ளு இலக்கியங்களுள் முக்கூடற்பள்ளு தலைசிறந்ததாகும். இதன் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

கடவுள் வணக்கம், பள்ளன் பெருமை, அவள் மனைவியர் உறவுகள், நாட்டு வளம், மழைக்குறி, ஆற்று வெள்ளம் முதலிய செய்திகள் இடம் பெறுகின்றன. பண்ணையாரிடம் பள்ளன் பேசும் உரையாடல்களும், அவன் தன் மனைவியரிடையே நிகழ்த்தும் ஊடற்செய்திகளும் நகைச்சுவை நல்குவன. நெல் வகைகளும், எருது வகைகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

இவர் திருவாவடுதுறை ஆதீனப் புலவராய் விளங்கினார். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர், தியாகராச செட்டியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலியோர் இவர் மரணவர்களுள் குறிப்பிடத் தக்கவராவர்,

முருகன் பிள்ளைத் தமிழ், அகிலாண்ட நாயகி மாலை, அம்பல வாணதேசிகர் கலம்பகம், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் முதலியன இவர் நூல்களுள் குறிப்பிடத்தக்கன. இவர் பாடல்கள் கம்பர் பாடல்களைப் போலக் கருத்துச் செறிவும், சொல்லின்பமும் வாய்ந்தவை. அதனால் இவர் நவீன கம்பர் எனப் போற்றப்படுகிறார். சேக்கிழார் பிள்ளைத் தமிழில் பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று சேக்கிழாரை இவர் பாராட்டுகிறார். உலா, கோவை, தூது முதலாய சிற்றிலக்கியங்களையும் இவர் மிகுதியாகப் படைத்துள்ளார். இவர் 1815 முதல் 1867 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

இராமலிங்க அடிகள்

தாயுமானவருக்குப் பிறகு சமரச சன்மார்க்க நெறிக்குப் புத்துணர்வூட்டிய பெருந்தகை இவரே. இறைவனை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து இவர் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. அவை அனைத்தும் திருவருட்பா எனும் பெயரில் வெளிவந்துள்ளன. அப்பாடல்கள் கற்பார் நெஞ்சினை உருக்கவல்லன. திருவாசகத்தில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. குவலயமெல்லாம் கொல்லாமையைக் கடைப்பிடித்தொழுக வேண்டும் என்பது இவரது உள்ளக் கிடக்கையாகும்.

 

‘மனுமுறை கண்ட வாசகம்’ எனும் உரைநடை நூலையும், பல கட்டுரைகளையும் இவர் இயற்றியுள்ளார்.

‘வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் உலைந்தே
வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுஉளம் துடித்தேன்;
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

உலக உயிர்களின் துன்பத்தைக் கண்டு இவர் ஏங்கும் ஏக்கத்தை இப்பாடல் புலப்படுத்துகிறது.

இவர் 1823 முதல் 1874 வரை நிலவுலகின்கண் வாழ்ந்தார்.

ஆறுமுக நாவலர்

இவர் யாழ்பாணத்துத் தமிழ்ப் புலவராவார்; சைவத்தை நிலை நிறுத்தவும், தமிழை வளர்க்கவும் அரும் பணியாற்றினார்; பள்ளிப் பிள்ளைகளுக்காகப் பாட நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். சென்னையில் அச்சுக் கூடம் ஒன்றினை நிறுவிச் சைவ சமய நூல்களையும், இலக்கண நூல்களையும் பதிப்பித்தார்; ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதலிய சிறு நூல்களுக்கு உரை எழுதினார்: திரு விளையாடற் புராண வசனம், பெரிய புராண வசனம், இலக்கணச் சுருக்கம், இலக்கண வினா விடை, சைவ வினா விடை முதலியன இவர் இயற்றியனவே. இவர் இயற்றிய நூல்களுள் நன்னூல் காண்டிகை உரை போற்றத்தக்க தாகும். இவர் 1822 முதல் 1889 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

டாக்டர் உ. வே. சாமிநாதய்யர்

டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவராவார். இவர் பல்வேறு இடங்களுக்கெல்லாம் சென்று அலைந்து ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து அவற்றை அச்சுக்குக் கொண்டு வந்தார். இவர் அப்பணியை அன்று செய்து கொடுக்கவில்லை யென்றால் எத்துனையோ நூல்கள் செல்லுக்கும், பிற அழிவுக்கும் இரையாகி அழிந்திருக்கும். அதனால், இவர் தொண்டு அளப்பரிய தொன்றாகும். பதிப்புத் துறையில் இவருக்கிணையாவார் ஒருவரும் இலர். சிறந்த முன்னுரை, அரிய குறிப்புரை, சொற்பொருள், அகர வரிசை விளக்கம், நூலின்கண் இடம் பெற்ற அரசர், விலங்கு, புள், மரம் முதலியவற்றின் பெயர் முதலானவை இவர் பதிப்பின் முதற்கண் இடம் பெறும். பத்துப்பாட்டு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, பெருங்கதை முதலியன இவர் பதிப்பித்த நூல்களுள் குறிப்பிடத் தக்கனவாகும், பல சிற்றிலக்கிய நூல்களையும் இவர் பதிப்பித்துள்ளார். ‘என் வரலாறு’ எனும் தலைப்பில் தம் வரலாற்றை அழகாக வெளியிட்டுள்ளார்; நினைவு மஞ்சரி, புதியதும் பழையதும், சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும் முதலாய பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். இவர் 1885 முதல் 1942வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். வடமொழியிலும் தமிழிலும் புலமை மிக்கவர்; சுக்கிர நீதியும், மண்ணியல் சிறு தேரும் இவர் மொழி பெயர்த்த நூல்களாகும். உரை நடைக் கோவை, சுலோசனை, உதயணன் கதை முதலியவை இவர் இயற்றிய உரைநடை நூல்களாகும். மண்ணியல் சிறுதேர் என்பது கவிதைகள் இடையிட்ட உரைநடை நாடக நூலாகும். இஃது இவர் படைப்புகளுள் மிகச் சிறந்ததாகும். இவர் 1891 முதல் 1963 வரை வாழ்ந்தார்.

 

வையாபுரிப்பிள்ளை

இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்; தமிழ்ச் சுடர் மணிகள், சொற்கலை விருந்து முதலாய நூல்களை எழுதினார். பேரகராதியாகிய லெக்சிகனை உருவாக்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு சங்க இலக்கியம் முழுவதையும் இவர் தொகுப்பித்துள்ளார்; இலக்கிய விளக்கம் முதலிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதி வெளியிட்டார்; புதுமை இலக்கியத்தில் இவருக்கிருந்த ஆர்வம் காரணமாக ‘இராஜி’ எனும் நாவலையும் ‘சிறுகதை மஞ்சரி’ என்னும் கதைத் தொகுப்பு நூலையும் இயற்றினார்; 1891 முதல் வரை வாழ்ந்தார்.

தமிழறிஞர்கள் பிறர்

தமிழுக்குப் பணியாற்றிய அறிஞர்கள் பலர். நாவலர் சோமசுந்தர பாரதியார், ரா.பி. சேதுப்பிள்ளை, மு. வரதராசனார் முதலியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவார். இவர்கள் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஆக்கமளித்துள்ளனர்.

நாவலர் சோமசுந்தர பாரதியார்

நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்களுள் மாரிவாயில் என்னும் செய்யுள் இலக்கியமும் “தசரதன் குறையும் கைகேயியின் நிறையும்” எனும் உரைநடை நூலும் குறிப்பிடத்தக்கவை. இவர் 1880 முதல் 1959 வரை வாழ்ந்தார்.

ரா. பி. சேதுப்பிள்ளை

இவர் சொற்பொழிவு கேட்பாருள்ளத்தைக் கவரவல்லது. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், கந்த புராணம் முதலியன இவர் சொற்பொழிவுகளில் இடம்பெறும் நூல்களாகும். இவர் பேச்சும் எழுத்தும் எதுகை மோனைத் தொடை மிக்கன. இன்று பலர் இவரைப் பின்பற்றி வருகின்றனர். இவர் 1896 முதல் 1961வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

மறைமலையடிகள்

இவர் நாகப்பட்டினத்தையடுத்த சிற்றூரொன்றில் பிறந்தார்; இயற்பெயரான வேதாசலம் என்பதன் தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது. தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழியிலும் இவர் புலமை மிக்கவர். தமிழ் நடையில் ஒரு மறுமலர்ச்சியை இவர் உண்டாக்கினார். மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், முல்லைப் பாட்டாராய்ச்சி, படடினப்பாலை ஆராய்ச்சி எனும் ஆராய்ச்சி நூல்களையும், திருவொற்றியூர் மும்மணிக் கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் எனும் செய்யுள் நூல்களையும் குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள் எனும் நாவல்களையும், சைவ சமய தத்துவ விளக்க நூல்களையும், சிறுவருக்கான நூல்கள் சிலவற்றையும், அம்பிகாபதி, அமராவதி எனும் நாடக நூலையும், தொலைவில் உணர்தல், நூற்றாண்டு வாழ்வது எப்படி முதலிய அறிவியல் நூல்களையும் யாத்துள்ளார்; ஞான சாகரம் எனும் இதழ் ஒன்றனையும் வெளியிட்டு வந்தார். தமிழ் மொழிக்கு இவர் செய்த தொண்டு அளப்பரியது. 1876 முதல் 1950 வரை இவர் வாழ்ந்தார்.

திரு. வி. கல்யாணசுந்தரனார்

திருவாரூர் விருதாச்சலனார் மகன் கலியாணசுந்தர்ன் என்பது இவர் பெயரின் விளக்கமாகும். இன்று அப்பெயர் திரு. வி. க. என வழங்குகிறது. இவர் விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு நாடு சுதந்தரம் பெறப் பலவாறு முயன்றார்; தொழிலாளர் நலத்தில் பங்கு கொண்டு பல அரிய சாதனைகளைப் புரிந்தார்; எழுத்திலும், பேச்சிலும் புதுமையைப் புகுத்தி மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தார். இவர் பேச்சுக்கள் ‘தமிழ்த் தென்றல்’ எனும் நூலாக வெளிவந்துள்ளன.

பெண்ணின் பெருமை, காந்தியடிகளும் மனித வாழ்க்கையும், முருகன் அல்லது அழகு, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், இந்தியாவும் விடுதலையும் தமிழ்ச்சோலை, உள்ளொளி, சைவத் திறவு முதலிய நூல்களை எழுதி உரைநடை வளர்ச்சிக்கு இவர் புத்துயிருட்டினார்; முருகன் அருள் வேட்டல், இருளில் ஒளி, படுக்கைப் பிதற்றல் முதலிய பல செய்யுள் நூல்களையும் இயற்றினார்; தேசபக்தன், நவசக்தி எனும் இதழ்களையும் வெளியிட்டார்.

டாக்டர் மு. வரதராசனார்

டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் பணியாற்றியுள்ளார்; பழமையை விளக்கியும், புதுமையை வரவேற்றும் கற்றவரையும், மற்றவரையும் தம்பால் ஈர்த்தார். இவரெழுதிய திருக்குறள் தெளிவுரை மிக அதிக அளவில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மொழியியல், திறனாய்வு, நாவல், கட்டுரை முதலாகப் பல துறைகளிலும் நூல்களை எழுதித் தமிழ் இலக்கியத்தை இவர் வளமாக்கியுள்ளார். மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். இவர் தோற்றம் 25-4-1913; மறைவு 10-10-74.

டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்

தமிழ் ஆராய்ச்சித் துறைக்கு வழிகாட்டிய பேரறிரஞர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். மொழி வரலாறு பற்றிய கட்டுரைத் தொகுப்பு இவர் வெளியீடுகளுள் மிகச் சிறந்ததாகும். ‘கானல் வரி’ என்னும் ஆராய்ச்சி நூல் சிலப்பதிகாரத்தின் சீர்மையைக் காட்டும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறைப் பேராசிரியராகவும்: மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும், பணியாற்றித் தமிழுக்கும் கல்வித்துறைக்கும் பெருந் தொண்டாற்றியுள்ளார். இவரைப் பல்கலைச் செல்வர் எனப் பாராட்டுவர்.

டாக்டர் வ. சுப மாணிக்கம்

‘வள்ளுவம்’ என்னும் குறள் விளக்க நூலும் ‘தமிழ்க் காதல்’ என்னும் ஆராய்ச்சி நூலும் இவரது ஆராய்ச்சித் திறனைப் புலப்படுத்துவனவரகும். மேலும், நெல்லிக்கனி, மனைவியின் உரிமை, உப்பங்கழி முதலாய பல நாடக நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராய்ப் பணியாற்றிய இவர், மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராய் விளங்கினார். சங்க இலக்கிய ஆய்வுகளில் இவருக்குத் தனி இடம் உண்டு.

 

 

 

 

 

8. இருபதாம் நூற்றாண்டு

கவிதையியல்

  1. பாரதியார்

இருபதாம் நூற்றாண்டில் கவிதை இலக்கியம், மக்கள் வாழ்வோடு இணைந்து வளர்ந்தது. நாட்டைப் பற்றியும். மக்களைப் பற்றியும், மொழியைப் பற்றியும் கவிதைகள் எழுந்தன. இந்நிலைக்கு வித்திட்டுப் புதுயுகப் புரட்சிக் கவிஞராக விளங்கியவர் சுப்பிரமணிய பாரதியாராவார். இவர் உணர்ச்சிமிக்க கவிதைகளைப் பாடி, மக்களை எழுச்சி பெறச் செய்து, நாட்டு விடுதலைக்கு வழி கோலினார்.

இவர் 1882-ல் எட்டயபுரத்தில் பிறந்தார்; தந்தை சின்னசாமி ஐயரிடமே தமிழ் பயின்றார், வடமொழி, இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளையும் கற்றார். இவர் பாடல்கள் தேசியம், மொழிப்பற்று, இறை வழிபாடு, குழந்தைகள், பெண் விடுதலை, மாந்தர் உயர்வு முதலியவற்றை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன.

‘பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு’

‘செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’

‘தமிழ்மொழிபோல் இனிதாவது
எங்கும் காணோம்’

முதலிய அடிகள் இவருடைய நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் விளக்குவன.

‘ஓடி விளையாடு பாப்பா-நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா’

குழந்தைக்கு அவர் உண்ர்த்திய அறிவுரை இது.

‘கண்ணன் பாட்டு’ என்னும் தலைப்பில் காதலி, காதலன், குரு, சீடன், வேலையாள், தலைவன் முதலாய பல கோணத்தில் கண்ணனைக் கண்டு பாடுதல் புதுமை பயப்பதாகும்.

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’

என்றும்,

‘ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே’

 

என்றும் பெண்ணுரிமை பற்றி அவர் குரல் கொடுக்கிறார்.

‘பாஞ்சாலி சபதம்’ எனும் தலைப்பில் பாரதக் கதையினைப் புதுமை நோக்கோடு பாடியுள்ளார். இவர் பாடிய குயில் பாட்டு கற்பனை நயம்மிக்க காதற் காவியமாகும்.

பாரதியார் வாழ்வின் மலர்ச்சிக்கும் புதுயுகப் புரட்சிக்கும் வழிகோலினார்; மனிதன் சம உரிமை பெற்று வாழவேண்டும் எனக் கனவு கண்டார். 1921-ல் மறைந்தார்.

2 கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

இவர் குழந்தைகளுக்காக எளிய இனிய பாடல்கனைத் தந்து ‘குழந்தைக் கவிஞர்’ எனப் பாராட்டப்படுகிறார். உமர்கய்யாம் பாடல்களை மொழிபெயர்ப்பெனத் தோன்றா வகையில் தமிழாக்கம் செய்துள்ளார். எட்வின் ஆர்னால்டு எழுதிய ‘திலைட் ஆஃப் ஏசியா’ என்ற நூலை “ஆசிய ஜோதி” எனும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.

‘உள்ளத்துள்ளது கவிதை-இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்-உண்மை
தெரிந் துரைப்பது கவிதை’

இஃது அவர் கவிதைக்குத் தரும் இலக்கணமாகும். அவர் பாடலும் இவ்விதிக்கு விலக்கன்று. அவர் பாடிய தனிப்பாடல்களும் தொடர் பாடல்களும், ‘மலரும் மாலையும்’ எனும் பெயரில் வெளிவந்துள்ளன. ‘தேவியின் கீர்த்தனைகள்’ அவருடைய இசைப் பாடல்களின் தொகுப்பாகும். ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்’ எனும் நகைச்சுவை மிக்க கவிதை நூலொன்றையும் எழுதியுள்ளார்.

 

‘மங்கைய ராகப் பிறப்பதற்கே-நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா’

எனக் கவிமணி பெண்ணின் பெருமையைச் சிறப்பித்துப் பாடுகிறார்.

பாரதியார் பாடல்கள் வீறு கொண்டவை; கவிமணியின் பாடல்களோ, மென்மையும்; கனிவும், இனிமையும் கொண்டு நெஞ்சை உருக்குபவை; அமைதியாக இயங்கி உள்ளத்திற்கு ஊக்கம் தருபவை: அருளறத்தை வற்புறுத்துபவை. கவிமணி 1876 முதல் 1954 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

  1. பாரதிதாசன்

புதுவைக் குயில்; கவி மதுவை அள்ளி வீசிய புரட்சிக்கவி பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு புதுவையில் பிறந்தார். இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.

அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், குறிஞ்சித் திட்டு முதலிய கவிதை நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்; இரணியம், நல்ல தீர்ப்பு, கற்கண்டு, பிசிராந்தையார் முதலிய நாடகங்களையும் எழுதியுள்ளார். கைம்பெண்ணின் மறுமணம், குடும்பக் கட்டுப்பாடு, சாதிக்கொடுமை, பெண் கல்வி, உழைப்பின் பெருமை முதலியவற்றைத் தம் கவிதையில் வற்புறுத்தியுள்ளார்.

‘தமிழுக்கு அமுதென்று பேர்-இன்பத்
தமிழெங்கள் உயிருக்கு நேர்’

‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு’

முதலிய வரிகள் இவரது தமிழ்ப் பற்றைக் காட்டும் திறத்தன.

 

வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் மணத்தல் தீதோ
பாடாத தேனிக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்தது உண்டா’

இப்பாடல் கைம்மைத் துயரைக் காட்டுவதாகும்.

‘சித்திரச் சோலைகளே-உமைநன்கு
திருத்த இப் பாரினிலே-முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனர்
ஓ உங்கள் வேரினிலே’

இவ்வரிகள் உழைப்பாளர் உழைப்பைக் காட்டுகின்றன.

  1. நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை

பாரதி தேசியக் கவிஞர், கவிமணி குழந்தைக் கவிஞர்; பாரதிதாசன் புரட்சிக் கவிஞர்; நாமக்கல்லாரோ காந்தியக் கவிஞர்.

தமிழன் என்றோர் இனமுண்டு-தனியே
அவற்கொருகுணமுண்டு’

என இன உணர்வு ஊட்டும் கவிதை பல அவர் பாடியுள்ளார்.

‘தமிழன் இதயம்’ ‘சங்கொலி’ ‘தமிழ்த்தேர்’ முதலிய தொகுப்புகள் தமிழுணர்வை ஊட்டுவனவாகும்.

‘அவனும் அவளும்’ என்பது கவிதை வடிவில் அவர் தீட்டிய குறுங்காவியமாகும். ‘மலைக்கள்ளன்’ என்பது அவரெழுதிய நாவலாகும்.

‘காந்தி அஞ்சலி’ என்பதிலுள்ள பாடல்கள் அவர் கவிதைக் கோட்பாட்டை விளக்குவன.

கத்தி இன்றி ரத்தம் இன்றி
யுத்தம் ஒன்று வருகுது

 

சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்”

இவ்வரிகள் இவர் ஒரு காந்தியக் கவிஞர் என்பதைப் பறைசாற்றும். பாரதியைப்போல இவர் பாடல்கள் சுதந்திர இயக்கத்திற்கும் பயன்பட்டன. இவரை அராவைக் கவிஞராக உயர்த்திப் பாராட்டினர்.

இசைத்தமிழ்

முத்தமிழுள் நடுநாயகமாக விளங்குவது இசைத்தமிழ்: அது சங்க காலத்தில் சிறந்து விளங்கிற்று; பண்ணொடு கலந்து மண்ணோடியைந்து இயங்கிற்று; நிலத்துக்கேற்ற பண்ணும், பறையும் அமைந்தன. இயம், கிணை, குளிர் தடாரி, தண்ணுமை, துடி, முழவு, ஆகுளி, முரசு முதலியன பல வகைகளாகும் குழல், வயிர், நெடுவங்கியம் முதலியன ஊதுகருவிகளாகும். இளி, கொளை, பாலை, விளரி முதலியன இசை வகைகளாகும். இறையனார் களவியல் உரை கடல்கோளுக் கிரையாகிய இசைநூல்களைக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் பெருநாரை, பெருங்குருகு, பாரதீயம், பஞ்சமரபு, தாள சமுத்திரம், இந்திர காளியம், இசை நுணுக்கம், இசைத் தமிழ், தாளவகையோத்து முதலியன குறிப்பிடத்தக்கன.

சிலப்பதிகார அரங்கேற்று காதையும், வேனிற் காதையும் பண்களின் திறத்தைப் பாகுபடுத்திக் காட்டுகின்றன. ஆய்ச்சியர் குரவையும், வேட்டுவ வரியும் அவ்வந் நிலத்து மாந்தரின் இசைப்பாடல்களைக் குறிப்பிடுகின்றன. கானல் வரிப் பாடல் கற்பார் உள்ளத்தைக் கவர வல்லது.

சிந்தாமணியில் காந்தருவதத்தையின் கடிமணமே இசைப் போட்டியின் வாயிலாகத் திகழ்கிறது. பெருங்கதை மதங் கொண்ட யானையை யாழிசையால் மயக்கி அடக்கி உதயணன் வாசவத்தையை மணந்த வரலாற்றைக் கூறுகிறது.

 

ஞானசம்பந்தர் தமிழிசையால் தமிழ் பரப்பினார். தேவாரப் பாடல்கள் பண்ணோடு பாடப்பட்டன. அருகினாகிரி நாதரின் திருப்புகழ் சந்த இனிமை கொண்டது தாள அமைப்புக்குட்பட்டு அவை கோயில் தலங்களில் பாடப்படுகின்றன.

தமிழ்ப் பண் வகைகள் பிற்காலத்துக் ககுநாடக இசை எனும் மாற்றுப் பெயரைப் பெற்றது; இவ்வகையில் தெலுங்குப் பாடல்களும் இயற்றப்பட்டன. தியாகையர் கீர்த்தனைகள் இசைமின் உச்சநிலையை எட்டிப்பிடித்தன. அருணாசல கவிராயரின் இராம நாடகமும், முத்துத் தாண்டவர் பாடிய கீர்த்தனைகளும், கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிய நந்தனார் சரித்திரமும், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தும், இராமலிங்க அடிகளின் திருவருட்பாவும் இசைப் பாடல்களாகப் பாடப்படுகின்றன.

இருபதாம் நூற்றாண்டுகள்

பாரதியும், பாரதிதாசனும், கவிமணியும் பாடிய பாடல்களும் இசைப்பாடல்களாயின. பெரியசாமித் தூரன். உளுந்துார்ப்பேட்டை சண்முகம், மின்னூர் சீனுவாசன் முதலியோர் இசைத் தமிழுக்கு ஆக்கம் தேடினர். திரைப்படப் பாடல்கள் புதிய மெட்டுகளையும், ஒலியமைப்புகளையும், கருத்துப் புரட்சிகளையும் கொண்டு விளங்குகின்றன. கண்ணதாசன், பட்டுக்கோட்டைக் கலியாண சுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு, பாபநாசம் சிவன், குயிலன், வாலி, சுரதா, புலமைப்பித்தன், கங்கை அமரன், காமராசன், வைரமுத்து முதலியவர்களின் பாடல்கள் திரையரங்கில் ஒலித்து மக்கள் உள்ளத்தைக் கவர்கின்றன.

 

நாடக இலக்கியங்கள்

இயல், இசை, நாடகம் எனத் தமிழ் முத்தமிழாக இயங்குகிறது. இவற்றுள் நாடகம் பண்டைக் காலத்தில் இசைப் பாடலுக்கு இசைய ஆடிய ஆடலைக் குறித்தது.

தொடர் நிகழ்ச்சிகளைக் கொண்ட குழு நாடகமாக நடிக்கப்பட்டமைக்குச் சோழர் காலத்தில்தான் கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. இராசராசன்வரலாறு, அவன் கட்டிய இரசேச்சுவரம் எனும் கோயிலில் ஆண்டுதோறும் நாடகமாக நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நாயக்கர் காலத்தில் பள்ளு, குறவஞ்சி நாடகங்கள் நடிக்கப்பட்டன.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இசை நாடகங்கள் சில தோன்றின. அருணாசல கவிராயர் எழுதிய இராம நாடகமும், கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய நந்தனார் சரித்திரமும் அவற்றுள் குறிப்பிடத் தக்கனவாகும்.

19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தமிழ் நாடகம், முழு வளர்ச்சியை அடைந்ததெனக் கூறலாம். பரிதிமாற் கலைஞர், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் முதலியோர் மேலை நாட்டுப் பாணியில் தமிழ் நாடகங்களை எழுதி நடித்தனர்.

பரிதிமாற் கலைஞர் ‘நாடகவியல்’ எனும் நாடக இலக்கண நூல் ஒன்றையும், ருபாவதி, கலாவதி, மான விஜயம் எனும் மூன்று நாடகங்களையும் வெளியிட்டார். பம்மல் சம்பந்த முதலியார் தொண்ணுறு நாடகங்களை எழுதினார் ‘சுகுண விலாச சபா’ என்ற நாடகக் குழு ஒன்றினைத் தோற்றுவித்து, நடிப்புக் கலையை வளர்த்தார். அவர் எழுதிய நாடகங்களுள் ‘மனோகரா’ என்பது புகழ் வாய்ந்த நாடகமாகும்.

 

சங்கர தாசு சுவாமிகள் சுமார் 40 நாடகங்களை எழுதினார். பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, வள்ளித் திருமணம், சதி சுலோசனா முதலியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கன.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனோன்மணியம் என்னும் செய்யுள் நாடகத்தை இயற்றினார், மறைமலையடிகளார் காளிதாசன் சகுந்தலத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். நாடகக் கலைஞர் எஸ். டி. சுந்தரம் ‘கவியின் கனவு’ எனும் நாடகத்தை எழுதி அதனைப் பல முறை நடிக்கவைத்தார்.

அறிஞர் அண்ணா வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி முதலிய பல நாடகங்களை எழுதினார். கலைஞர் கருணாநிதி மந்திரிகுமாரி, தூக்குமேடை, காகிதப்பூ முதலிய பல நாடகங்களை இயற்றினார். கிருஷ்ணமாமிப் பாவலர் பதிபக்தி; தேசியக் கொடி முதலிய நாடகங்களை எழுதிச் சுதந்திரப் போராட்டத்திற்கு வழிகோலினார்.

தமிழில் அங்கத நாடகங்களும் தோன்றின. சோவின் நாடகங்கள் அங்கதச்சுவை மிக்கன; பிறர் குறையைச் சுட்டிக்காட்டி எள்ளி நகையாடும் உரையாடல்கள் மிக்கன.

நாடக நடிகர்களுள் குறிப்பிடத் தக்கவர் நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், அவ்வை டி. கே. சண்முகம், சகஸ்ரநாமம், மனோகர், சிவாஜிகணேர்ன், எம். ஆர். இராதா முதலியோராவர்.

 

சிறுகதை இலக்கியம்

நாவல் இலக்கியம் தோன்றி ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழகத்திற் சிறுகதை இலக்கியம் தோன்றியது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமா முனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை தமிழில் உரை நடையில் படைப்பு இலக்கியம் தோன்றக் காரணமாய் அமைந்தது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீராசாமி செட்டியாரின் விநோதரச மஞ்சரியும் தாண்டவராய முதலியார் மொழிபெயர்த்த பஞ்ச தந்திரக் கதையும் சிறுகதையின் தோற்றத்திற்கு வழிவகுத்தன எனலாம்.

தொடக்க காலம்

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பத்திரிகைகள் சிறு கதைகளை வெளியிட்டன. தாகூரின் சிறுகதைகளை மொழி பெயர்த்தும், புதுக்கதைகளை எழுதியும் பாரதியார் சிறுகதை இலக்கியத்திற்குத் தொண்டாற்றினார், பாரதியார் எழுதிய தாகூர் சிறுகதைகளும், பாரதியார் கதைகளும் இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

வ. வே. சு. ஐயர் (வாகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்) எழுதிய கதைகள் அடுத்து வெளிவந்தன. அவர் கதைகளுள் எட்டு கதைகள் ‘மங்கையர்க்கரசியின் காதல்’ எனும் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. அதிலுள்ள ‘கதைகளுள் குளத்தங்கரை அரசமரம்’ சிறப்பு வாய்ந்ததாகும். இவர் பாரதியார் காலத்தவர்.

கல்கி

சாரதையின் தந்திரம், வீணை பவானி, ஒற்றை ரோஜா, கணையாழியின் கனவு, அமர வாழ்வு முதலிய சிறுகதைகளைக் கல்கி எழுதியுள்ளார். இவை கல்கி பத்திரிகையில் வெளிவந்தன. இவர் 1899 முதல் 1964 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

புதுமைப்பித்தன்

வ. வே. சு. ஐயர் தொடங்கி வைத்த சிறுகதை மரபு புதுமைப் பித்தனால் வளர்ச்சியுற்றது. வாழ்வின் யதார்த்த நிலையை உணர்த்தவும், கலைப் பொருளைச் சுவைபடக் கூறவும் இவர் பேச்சுத் தமிழைக் கையாண்டார். இவர் கதைகளில் நாடகப் பண்பும், எள்ளல் சுவையும் மிகுதியாக உள்ளன. இவர் எழுதிய கதைகளுள் சாப விமோசனம், அகல்யை, கயிற்றரவு, காஞ்சனை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், மகாமசானம் முதலியன குறிப்பிடத்தக்கன. இவர் 1906இல் தோன்றி 1940இல் மறைந்தார்.

கு. ப. ராஜகோபாலன்

புனர்ஜன்மம், கனகாம்பரம், காஞ்சனமாலை எனும் தொகுதிகளில் இவர் கதைகள் வெளியாகியுள்ளன. அவை குடும்ப வாழ்வின் இன்ப துன்பங்களைச் சித்திரிக்கின்றன; உள்ளத்துணர்வுகளை அழகாகப் படப்பிடித்துக் காட்டுகின்றன. இவர் எழுதிய ‘விடியுமா’ என்ற கதை மறக்க முடியாத கதையாகும். மரணப் படுக்கையில் கிடக்கும் கணவனை மருத்துவமனையில் காணும் மனைவியின் துயரைச் சித்திரிக்கும் கதை இது. இவர் 1921இல் மறைந்தார்.

அழியாச் சுடர் என்னும் பெயரில் தம் கதைகளை மெளனி வெளியிட்டுள்ளார். இதழ்கள் என்ற தொகுப்பு நூலை லா. ச ராமாமிர்தம் வெளியிட்டுள்ளார். தி. ஜானகி ராமன் தஞ்சை மண்ணின் மணமுப் அம்மக்கள் பேச்சு ஓட்டமும் அமையக் கதை எழுதுகிறார். நகைச்சுவையும் வஞ்சப் புகழ்ச்சியும் இவரது எழுத்தில் களி நடம் புரியும். கழுகு, சந்துரின் முடிவு, சிவப்பு ரிக்ஷா, அதிர்வு முதலியன இவர் எழுதிய சிறு கதைகளாகும். சாகித்திய அகாதமி இவர் சிறுகதைகளைப் பாராட்டிப் பரிசு தந்துள்ளது. அகிலன், நா. பார்த்தசாரதி, விந்தன் முதலியவர்களும் அரிய பல சிறுகதைகளைப் படைத்துப் புகழ் பெற்றுள்ளனர். ஒரு பிடிச்சோறு, யாருக்காக அழுதான், இனிப்பும் கரிப்பும், அக்கினிப் பிரவேசம் முதலிய கதைகளைச் செயகாந்தன் எழுதியுள்ளார். இவரைச் சிறுகதை மன்னன்’ எனப் பலரும் பாராட்டுகின்றனர்.

இன்று புதிய எழுத்தாளர்கள் பலர் சிறந்த சிறுகதைகளைப் படைத்து வருகின்றனர். சு. சமுத்திரம், வண்ண நிலவன், வண்ணதாசன், செயந்தன், பொன்னிலவன் போன்றோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர்.

நாவல் இலக்கியம்

நாவல் (Novel) என்னும் சொல் ‘புதுமை’ என்னும் பொருளைத் தரும். இஃது உரைநடையில் அமைந்த நெடிய கதையைக் குறிக்கும். கதைப் பொருள். கதைப் பின்னல், பாத்திரங்கள், பின்னணி, காலம், இடம், உரையாடல், நடை முதலியவை நாவலின் இன்றியமையாக் கூறுகளாகும்.

முதல் தமிழ் நாவல்கள்

தமிழில் நாவல் இலக்கியம் தோன்றிச் சரியாக நூறாண்டுகள் ஆகின்றன. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1879இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தமிழில் தோன்றிய முதல் நாவலாகும். அவர் காலத்தில் வாழ்ந்த இராஜம் ஐயர் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் நாவலை 1893இல் வெளியிட்டார். மாதவய்யா அவர்கள் 1898இல் பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்து மீனாட்சி முதலிய நாவல்களை எழுதினார். பண்டித நடேச சாஸ்திரி 1900இல் தீனதயாளு என்னும் நாவலை வெளியிட்டார் இவை நீதி போதனைகளையும், பெண்களின் துயரையும் சித்திரிக்கின்றன.

தழுவல் நாவல்கள்

ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், கோதைநாயகி அம்மாள் ஆகிய மூவரும் ஆங்கில நாவல்களைத் தழுவிப் பரபரப்பும் மருமமும் நிறைந்த நாவல்களை எழுதினார்கள். ஆரணி குப்புசாமி முதலியார் 1911இல் ‘மதன காந்தி இரத்தினபுரி ரகசியம்’ முதலிய துப்பறியும் கதைகளையும், வடுவூர் துரைசாமி ஐயங்கார் ‘மேனகா’, ‘கும்பகோணம் வக்கீல்’ எனும் நாவல்களையும், மு. கோதைநாயகி அம்மாள் ‘சண்பக விஜயம்’ எனும் நாவலையும் எழுதினர். இம்மூவரும் சம காலத்தில் வாழ்ந்தனர்.

தேசியமும் சுதந்திரமும்

1927இல் கே. எஸ். வேங்கடாமணி ‘முருகன் ஓர் உழவன்’ என்னும் நாவலையும் எழுதினார். இது தேச பக்தியை ஊட்டுவது; காந்தியக் கோட்பாடுகள் நிறைந்தது.

கல்கி

நாவல் வளர்ச்சியில் கல்கியின் பணி மிகப் போற்றத்தக்கது. அவர் எழுதிய ‘கள்வனின் காதலி’ ஆனந்த விகடனில் வெளிவந்தது. இது சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டது. “அலையோசை” என்னும் நாவலே அவர் இறுதியில் எழுதியதாகும். சுதந்திரத்திற்குப் பிற்பட்ட நாட்டு நிலையை இது சித்திரிக்கிறது.

வரலாற்று நாவல்கள்

பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் முதலியன அவர் எழுதிய வரலாற்று நாவல்களாகும். அவரைப் பின்பற்றிச் சாண்டில்யன், ஜெகசிற்பியன், அகிலன், நா. பார்த்தசாரதி, விக்கிரமன் முதலியோர் வரலாற்று நாவல்களை எழுதினர். சாண்டில்யனின் கடற்புறா, ஜெகசிற்பியனின் நந்திவர்மன் காதலி. நா. பார்த்தசாரதியின் மணிபல்லவம், விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி முதலியன அவற்றுள் குறிப்பிடத்தக்கன.

டாக்டர் மு. வ. அவர்கள் பதின்மூன்று நாவல்களைப் படைத்தார். அவையனைத்தும் குடும்ப வாழ்வையும், சமுதாயச் சிக்கல்களையும் கருவாகக் கொண்டன. செந்தாமரை, கள்ளோ காவியமோ, அகல்விளக்கு, கரித்துண்டு, பெற்ற மனம், மண் குடிசை முதலியன அவர் எழுதிய நாவல்களுள் குறிப்பிடத்தக்கனவாகும்.

அகிலன் பெண், சிநேகிதி, நெஞ்சின் அலைகள், பாவை விளக்கு, சித்திரப்பாவை, பால்மரக் காட்டினிலே, எங்கே போகிறோம் முதலிய தலைசிறந்த நாவல்களைப் படைத்தார்; தாம் எழுதிய சித்திரப்பாவைக்காக ஞானபீடம் பரிசினைப் பெற்றார்.

ஜெயகாந்தன் தமிழ் நாவல்களுள் புதுமையும், இலக்கியத் தரமும், கருத்தோட்டமும் மிக்க நாவல்களை எழுதி வருபவர். சில நேரங்களிம் சில மனிதர்கள், பாரிசுக்குப் போ, சினிமாவுக்குப்போன சித்தாளு, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப்போல் ஒருவன், அட சும்மா கிட புள்ளே, ஊருக்கு நூறு பேர், ஜெய ஜெய சங்கரா முதலிய நாவல்களை இவர் எழுதியுள்ளார். மேலும் தொடர்ந்து எழுதும் தலைசிறந்த எழுத்தாளர் இவர்.

நா. பார்த்தசாரதி கல்கியின் பணியைப் பின்பற்றி எழுதினார்; சத்திய வெள்ளம், ஆத்மாவின் ராகங்கள், நெஞ்சக் கனல், நெற்றிக்கண் முதலிய சமுதாய விமரிசன நாவல்களை எழுதியுள்ளார். இலட்சிய மாந்தர்களைக் கதாநாயகர்களாகக் கொண்ட குறிஞ்சி மலரும், பொன் விலங்கும் இவருடைய அற்புதப் படைப்புகள்.

நீல. பத்மநாபனின் உறவுகள், தலைமுறைகள், பள்ளி கொண்டபுரம் ஆகியவை சிறந்த நாவல்களாம். இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன் படகர் வாழ்க்கையைச் சித்திரிப்பதாகும். இலட்சுமியின் பெண்மனம், ரகுநாதனின் பஞ்சும் பசியும், ராசியின் நனவோட்டங்கள், ஜானகி ராமனின் அம்மா வந்தாள் முதலியன குறிப்பிடத்தக்க சிறந்த நாவல்களாகும்.

 

 

 

இதழ்களின் வளர்ச்சி

இதழ்கள் தமிழ்மொழி வளர்ச்சியிலும் இலக்கிய வளர்ச்சியிலும் சிறப்பிடம் பெறுகின்றன. நாளிதழ், வார இதழ், திங்கள் இதழ் என இவை பலவகைப்படும், இவ்விதழ்கள் செய்திகளைத் தருவதோடு தலையங்கங்களும், சிறு கதைகளும். நாவல்களும் வார இதழ்களிலும் திங்கள் இதழ்களிலும் இடம்பெறுகின்றன. மற்றும் சிறுவர்களுக்கான தனி இதழ்களும், மகளிர்க்கு எனத் தனி இதழ்களும் வெளிவருகின்றன.

தமிழில் வெளிவந்த முதல் இதழ் சுதேசமித்திரனாகும். அது 1883ஆம் ஆண்டு ஜி. சுப்பிரமணிய ஐயர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வார இதழாக வெளிவந்தது; 1888ஆம் ஆண்டு முதல் நாளிதழாக மாறியது.

திரு. வி. கலியாணசுந்தரனார் தேசபக்தன், நவசக்தி எனும் இரண்டு நாளிதழ்களை நடத்தினார். அடுத்துக் குறிப்பிடத்தக்க நாளிதழ் தினமணியாகும். டி. ஏ. சொக்கலிங்கம் முதலில் இதன் ஆசிரியராக விளங்கினார். அடுத்து ஏ. என். சிவராமன் பணியாற்றிவந்தார்.

சி. பா, ஆதித்தனாரை ஆசிரியராகக் கொண்ட தினத்தந்தி 1942ஆம் ஆண்டு முதல் வெளிவருகிறது. எளிய தமிழில் உணர்ச்சிகளைத் துண்டும் வகையில் கவர்ச்சி மிக்கதாக விளங்குவதால் இஃது அதிக அளவில் விற்பனையாகிறது. நாட்டு நடப்புகளைத் தக்க படங்களாலும், தலைப்புகளாலும் விளக்குகிறது. இதே செய்திகளை மாலை முரசும் தருகிறது. முன்னது காலையிதழ்; பின்னது மாலையிதழ்.

மக்கள்குரல், மக்கள் செய்தி, தினகரன் முதலிய நாள் ஏடுகள் இப்பொழுது அரசியல் விமரிசனங்களைத் தாங்கி வெளிவருகின்றன. முதல் தமிழ் நாளிதழான சுதேசமித்திரன் இப்பொழுது வெளிவரவில்லை.

பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் குடியரசு, விடுதலை எனும் இரண்டு நாளிதழ்களை நடத்தினார். இன்று அரசியல் உணர்வுகள் பெருகிவிட்ட காரணத்தால் கட்சிக் கொள்கைகளைப் பரப்பும் நாளிதழ்களும் வார இதழ்களும் வெளிவருகின்றன. ஜனசக்தி பொதுவுடமைக் கட்சிப் பத்திரிகையாகும்; முரசொலி தி. மு. க.வின் பத்திரிகையாகும்; ‘அண்ணா’ அண்ணா தி.மு.க.வின் பத்திரிகையாகும்.

ஆனந்தவிகடன் 1928 முதல் வார இதழாக வெளிவருகிறது. ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) அவர்கள் 1941 ஆகஸ்டில் கல்கி எனும் வார இதழைத் தொடங்கினார். இன்று தமிழ் வார இதழ்களுள் மிகுதியாக விற்பனையாவது குமுதமாகும். தினமணிகதிர், தராசு, குங்குமம், இதயம் பேசுகிறது. நக்கீரன், ஜூனியர் விகடன் முதலான வார இதழ்கள் இப்பொழுது வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.

திங்கள் இதழ்களுள் இலக்கிய இதழாகச் செந்தமிழ்ச் செல்வி வெளிவருகிறது; தீபம் பார்த்தசாரதி வெளியிட்ட ‘தீபம்’ சிறந்த இலக்கிய விமரிசன இதழாகும்.

அழ. வள்ளியப்பாவின் பூஞ்சோலை, மற்றும் அம்புலி மாமா, கல்கண்டு, பொம்மை வீடு முதலான இதழ்கள் சிறுவர்களுக்காக வெளிவருகின்றன.

ஜீ. ஆர். தாமோதரன் அவர்கள் கலைக்கதிர் என்னும் விஞ்ஞான இதழ் ஒன்றனை வெளியிடுகிறார். பேசும் படம், பொம்மை முதலியன திரைப்பட விமரிசன இதழ்களாகும் துக்ளக் எனும் அரசியல் விமரிசன இதழைச் சோ வெளியிடுகிறார். அஃது எள்ளலும், நையாண்டியும் மிக்கது. மங்கை, மங்கை மலர் முதலான இதழ்கள் மகளிர்க்காக வெளிவருகின்றன.

 

 

தமிழ்நாட்டு வரலாறு

வடக்கே வேங்கடமும், தெற்கே குமரிமுனையும் தமிழகத்தின் சங்க கால எல்லைகளாகும். இதனைப் பண்டு மூவேந்தர் ஆண்டு வந்தனர். குறுநில மன்னர்களும் அக் காலத்தில் வாழ்ந்தனர். அடுத்துப் பல்லவரும் நாயக்கரும் தமிழகத்தை ஆண்டனர். தமிழக மன்னர்கள் தம் ஆட்சியில் கல்வெட்டுகளை வெட்டுவித்தனர். அக்கல்வெட்டுகளும். இலக்கியங்களும் பண்டைத் தமிழக வரலாற்றை அறியப் பெரிதும் துணை புரிகின்றன.

தொடக்கத்தில் தமிழ்நாட்டு வரலாற்றைச் சரித்திரப் பேராசிரியர்கள் சிலர் ஆங்கிலத்தில் வெளியிட்டனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கே.ஏ. நீலகண்ட சாத்திரியும், இராமச்சந்திர தீட்சதரும், மீனாட்சியுமாவர்.

அன்மைக் காலத்தில் வரலாற்று நூல்களுள் சில தமிழில் வெளிவந்துள்ளன. டாக்டர் கே. கே. பிள்ளை “தமிழக வரலாறும் பண்பாடும்” எனும் நூலை வெளியிட்டுள்ளார். சதாசித பண்டாரத்தார் எழுதிய பிற்காலச்சோழர் வரலாறும் பாண்டியர் வரலாறும், இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் பாண்டிய வரலாறுகளும் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் வரலாறுகளும், டாக்டர் நாகசாமி எழுதிய இராசராசன், மாமல்லவன் வரலாறுகளும், அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை எழுதிய பண்டை நாளைச் சேர மன்னர் வரலாறும்” குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

தமிழில் திறனாய்வு நூல்கள்

இஃது இப்போது வளர்ந்து வரும் புதிய துறையாகும். கிரேக்கரே முதன்முதலாக இத் துறையைத் தொடங்கினர். அரிஸ்டாட்டில் தொடங்கி வைத்த திறனாய்வுக் கலையை ஹட்சன், வின்செஸ்டா, ஆபர்கிராம்பி, பிராட்லி, பெளரா, ஜான்சன் முதலிய ஆங்கிலப் புலவர்கள் வளர்த்தனர்.

தொல்காப்பியத்தை முதல் தமிழ் இலக்கியத் திறனாய்வு நூலாகக் கூறலாம், எழுத்ததிகாரத்தாலும் சொல்லதிகாாத்தாலும் மொழி நிலையைப் பற்றியும் பொருளதிகாரத்தால் அகப்பொருள், புறப்பொருள் மரபுகளையும் உவமையணியையும் செய்யுள் இலக்கணத்தையும் அது விளக்குகிறது.

பேராசிரியர் ஆ. முத்துசிவன் எழுதிய அசலும் நகலும், என்பதை முதல் தமிழ் இலக்கியத் திறனாய்வு நூலாகக் கூறலாம். அ. சா. ஞானசம்பந்தன் அவர்களின் இலக்கியக் கலையும், டாக்டர் மு. வ. வின் ‘இலக்கிய ஆராய்ச்சி’, ‘இலக்கியத் திறன்’ ‘இலக்கிய மரபு’ எனும் நூல்களும்தமிழிலுள்ள காவியம், நாடகம், சிறுகதை, நாவல் ஆகியவற்றைத் திறனாய்வு நோக்கோடு விளக்குகின்றன.

டாக்டர் சு. பாலச்சந்திரனின் ‘இலக்கியத் திறனாய்வு’ என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட திறனாய்வு நூலாகும். அகிலனின் கதைக்கலை, மணவாளனின் அரிஸ்டாட்லின் கவிதையியல், டாக்டர் க. கைலாசபதியின் ‘இலக்கியமும் திறனாய்வும்’ இத் துறையில் எழுந்த பொதுத் திறனாய்வு நூல்களாகும்.

 

டாக்டர் மு. வ. வின் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை ‘ டாக்டர் வ. சுப. மாணிக்கத்தின் ‘தமிழ்க் காதல்’, டாக்டர் முத்துக் கண்ணப்பரின் “நெய்தல் நிலம்”, டாக்டர் ரா சீனிவாசனின் – ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ முதலியவை சங்க கால இலக்கியத்தின் திறனாய்வு நூல்களாகும்.

டாக்டர் கே. மீனாட்சிசுந்தரமும், மு. கோவிந்தசாமியும் பாரதி பா நலம் பற்றிய திறனாய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். சு. பாலச்சந்திரன் தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகளைத் திறனாய்வு செய்து வெளியிட்டுள்ளார்.

டாக்டர் மா. செல்வராசன், பாரதிதாசன் கவிதைகளைத் திறனால்வு செய்து வெளியிட்டுள்ளார்.

டாக்டர் தா. வே. வீராசாமி சமுதாய நாவல்கள், நாவல் வகைகள் எனும் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். டாக்டர் மா. இராமலிங்கம் ‘நாவல் இலக்கியம் ஓர் அறிமுகம்’ எனும் தலைப்பிலும், சிட்டி சிவபாத சுந்தரம் தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் எனும் தலைப்பிலும், ப, கோதண்டராமன் ‘சிறுகதை ஒரு கலை’ எனும் தலைப்பிலும், கா. சிவத்தம்பி தமிழில் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பிலும் நூல்களை வெளியிட்டுள்ளனர்.

டி.கே. சண்முகம் ‘ நாடகக் கலை’ என்னும் நூலை வெளியிட்டுள்ளார். டாக்டர் ஏ. ஏன். பெருமாளும் டாக்டர் இரா. குமரவேலனும் தமிழ் நாடகத்தைப் பற்றிய திறனாய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர்.

வல்லிக்கண்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஓர் ஆய்வு நூல் வெளியிட்டுள்ளார். இந் நூலுக்குச் சாகித்திய அகாதமி பரிசு கிடைத்துள்ளது.

 

உரைநடையாக்கம்

வட மொழி வான்மீகி இராமாயணத்தையும், வியாசர் பாரதத்தையும் மூதறிஞர் இராசாசி உரை நடையில் தந்துள்ளார். மூலக்கதைகளை அறிய இவ் உரைநடை நூல்கள் மிகவும் பயன்படுகின்றன. காவியங்கள் மக்கள் மன்றத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதனை அடுத்துக் கம்பராமாயணத்தையும், வில்லி பாரதத்தையும், சீவக சிந்தாமணியையும் அழகிய இனிய எளிய நடையில் டாக்டர் ரா, சீ. உரைநடை நூல்களாகத் தந்துள்ளார்.

திருக்குறளுக்குப் பழைய உரை பரிமேலழகர் உரை புலவர்க்கு மட்டும் விளங்குவதாக இருந்தது: திருக்குறள் தெளிவுரை ஒன்று தந்து யாவரும் திருக்குறளை அறிய உதவும் வகையில் டாக்டர் மு.வ. நூல் தந்தார்; அதனை அடுத்துப் பல தெளிவுரை நூல்கள் வெளி வந்துள்ளன. ‘திருக்குறள் செய்திகள்’ என்னும் உரைநடை நூல் புதுக்கவிதை நடையில் டாக்டர் ரா. சீ. தந்துள்ளார். மூல நூல் படிக்காமலேயே திருக்குறள் கருத்துகளை அறிய இது உதவுகிறது. இதுவரை யாரும் செய்யாத புது முயற்சி; ஆற்றொழுக்காகத் திருக்குறள் செய்திகளை அனைவரும் அறியும் வகையில் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.

காவியங்கள் உரை நடையாக்கம் பெறுவதால் அவை எளிதில் பரவுகின்றன. இது புது முயற்சியாக அமைத்துவருகிறது.

 

(முற்றும்)