டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள், 1980 செப்டம்பர் 5 அன்று புதுச்சேரியில் புதுவை அரசு ஏற்பாடு செய்த முப்பெரும் விழாவிலும், ஈரோட்டில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் ஆற்றிய உரைகள், அவரது ஆழ்ந்த தமிழ் உணர்வையும், சமூக நீதிக் கொள்கைகளையும், இளைஞர்கள் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. இந்த உரைகளின் முழுமையான தொகுப்பு இந்நூல்.
தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு!
டாக்டர் கலைஞர்
தலைவர்களுக்கு விழா எடுக்கிறோம் என்றால் தலைவர்களைப் பாராட்ட – தலைவர்களுடைய புகழை வெளிப்படுத்த மட்டுமே விழா எடுக்கிறோம் என்று பொருள் அல்ல.
அவர்களுக்கு விழா எடுப்பது நம்முடைய சுயநலத்திற்காக. நம்முடைய சுயநலம் என்றால், அவர்கள் உருவாக்கிய கருத்துக்களை நாம் முழுமையோடு பின்பற்றி, தொடர்ந்து லட்சியப் பயணத்தை நடத்துவதற்கு நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள இந்த விழாக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியாருக்கு – பேரறிஞர் அண்ணாவுக்கு – மற்றும் பெரும் தலைவர்களுக்கெல்லாம் நாம் விழா எடுக்கின்றோம்.
தத்துவத்திற்கு
விழா எடுக்கின்ற நேரத்தில், தந்தை பெரியார் என்கின்ற தனிப்பட்ட ஒரு மனிதரையோ, பேரறிஞர் அண்ணா என்கின்ற தனிப்பட்ட ஒரு மனிதரையோ எண்ணிடாமல் இங்கே நண்பர்கள் எடுத்துக்காட்டியதைப் போல் – குறிப்பாக நம்முடைய உள்ளாட்சித் துறை அமைச்சர் தன்னுடைய சொல்லாட்சித் திறனால் எடுத்துக்காட்டியதைப் போல் – தத்துவத்திற்கு – விளக்கத்திற்கு – விழா எடுத்துக்கொண்டிருக்கின்றோம்; லட்சியங்களுக்கு விழா எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் அருமை நண்பர் சண்முகம் அவர்கள் சொன்னார்கள் – பெரியார் அவர்களுடைய வழியில், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பாதையில், அவர்கள் யாத்துத் தந்த கொள்கைகளை இந்த அரசு உருவாக்குகின்ற வண்ணம் அய்ந்தாண்டுக் காலத்திலே பல திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இந்தக் கூட்டணி ஆட்சி முன்நிற்கும் என்ற உறுதியினை அவர்களும் எடுத்துச் சொன்னார்கள். முதல்வர் அவர்களும் எடுத்துச் சொன்னார்கள் – மற்ற அமைச்சர் பெருமக்களும் எடுத்துச் சொன்னார்கள். அதை ஒரு வேண்டுகோளாக நண்பர் வீரமணி அவர்களும் இங்கே எடுத்து வைத்தார்கள்.
எதிர்ப்புகள்
பெரியார் அவர்கள் தன்னுடைய கொள்கைகளை மக்கள் மத்தியிலே வைக்கும்போது அதை மக்கள் வெறுத்தது உண்டு. அதை எடுத்து சொல்கின்ற பெரியாரை துரத்தி அடித்ததும் உண்டு. பெரியார் பேசக் கூடாதென்று கல்லெறிந்தோ, சொல்லெறிந்தோ சோடாபுட்டிகளை வீசியோ. செருப்பு மாலைகளை அணிவித்தோ – இப்படி ஏராளமான நிகழ்ச்சிகள் பெரியாருடைய வாழ்க்கையிலே நடைபெற்றது உண்டு.
அதைப்போலவே பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச்சொன்ன எண்ணங்களை ஏற்றுக்கொள்ளாமல், லட்சியங்களை கடைப்பிடிக்க முடியாது என்று அறவே மறுத்து அண்ணா அவர்களுடைய கூட்டங்களைக் கலைத்த நிகழ்ச்சிகள் ஒரு காலத்திலே இருந்தன.
அதுவும் பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும், அவர்கள் இருவரும் சேர்ந்து நடத்திய சுயமரியாதை இயக்கமும், தன்மான இயக்கத்தினுடைய கொள்கையும் பட்டிதொட்டியெல்லாம் பரவுவதற்கு அவர்கள் பாடுபட்ட போது எவ்வளவு பெரிய ஜாதி வெறியர்களுடைய – வைதீகச் சின்னங்களுடைய – சனாதானிகளுடைய – மதவாதிகளுடைய எதிர்ப்புக்களைத் தாங்கவேண்டியிருந்தது என்பதை தமிழகத்தினுடைய சரித்திரம் – தென்ன கக்தினுடைய சரித்திரம் என்றைக்குமே மறைத்து விடாது.
கசப்பு மருந்து
பெரியார் கசப்பான மருந்தை தந்தார். அண்ணா அந்த கசப்பான மருந்தை அப்படியே தந்தால் அதை உட்கொள்ள மறுத்து நோயிலிருந்து விடுபடாமல் ஆகிவிடுவார்கள் மக்கள் என்பதற்காக அதை தேனிலே குழைத்துத் தந்தார்.
பெரியார் பூமியைத் தோண்டி பொன் எடுத்து தந்தார். அண்ணா அதைப் பூட்டிக் கொள்ளக்கூடிய அணிமணிகளாகச் செய்து தந்தார்
பொன் கட்டியை அணிமணியாகச் செய்யும்பொழுது கொஞ்சம் சேதாரம் ஏற்படுவது உண்டு கொஞ்சம் பொன் கீழே சிந்துவதும் உண்டு. அந்தச் சேதாரத்தைப் பற்றி அண்ணா கவலைப்படவில்லை. பெரியாரும் கவலைப்படவில்லை.
பெரியார் வைரக்கட்டிகளை எடுத்துத் தந்தார்; அண்ணா அந்த வைரக்கட்டிகளுக்குப் பட்டை தீட்டி ஒளியுமிழச் செய்தார்.
தீர்ப்புகள்
பட்டை தீட்டுகிற நேரத்திலே வைரம் கொஞ்சம் பாதிக்கப்படும். ஆனால் ஒளிமிகும்.
பெரியார் தமிழ்ச் சமுதாயத்திற்கு – திராவிட சமுதாயத்திற்கு – தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தேவையான கொள்கைகளை எடுத்துச் சொன்னபோது அவர் மதவாதிகளை எதிர்க்க நேரிட்டது. இதிகாசங்களை எதிர்க்க நேரிட்டது; புராணங்களைப்பற்றி விமர்சிக்க நேரிட்டது. அவைகளையெல்லாம் செய்யாமல் இந்தச் சமுதாயத்தை விழிப்படையச் செய்ய மார்க்கம் கிடையாது என்ற காரணத்தினாலேதான் தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய கொள்கைகளை – லட்சியங்களை கொஞ்சம் முரட்டுத்தனமாக எடுத்து வைத்தார்.
பக்குவம் வருமா?
ஆரம்ப காலத்திலேயே அவ்வாறு முரட்டுத்தனமாக அந்தக் கொள்கைகளை எடுத்து வைக்கப்படாமல் இருந்திருக்குமேயானால் இன்றைக்கு அதை மென்மையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் தமிழர்களுக்கு ஏற்படாமல் போயிருக்கக்கூடும்.
எனவேதான் எடுத்த அடி கொடுக்கின்ற அடி – பலமான அடியாக இருக்கவேண்டும் என்று தந்தை பெரியார் தன்னுடைய கொள்கையை – அவை கசப்பான வையாக இருந்தாலும் தின்றுதான் தீரவேண்டும் இல்லாவிட்டால் நோய் தீராது என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துவைத்தார்.
அறிஞர் அண்ணா அவர்கள் அதைப் பக்குவமாக மக்களுடைய உள்ளத்திலே பதியவைக்கின்ற பணியினைச் செய்தார்.
இருவரும் ஒரே குறிக்கோளை நோக்கித்தான் நடந்தார்கள். ஒருவர், கரடுமுரடான பாதையானாலும் என்னுடைய காலிலே படுகின்ற காயங்கள் உன்னுடைய காலிலும் படட்டும்’ என்று, மூட நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்த சமுதாயத்து மக்களை பயமின்றி ஏறச் சொன்னார். குறிக்கோள் என்ற குன்றின் முடிவுக்குத் தொடர்ந்து வா என்றார். அதுதான் பெரியார் !
இரு பாதைகள்
இன்னொருவர் பேரறிஞர் அண்ணா – நான் உன்னை கரடுமுரடான பாதையிலே அழைத்துச் சென்றால் வரமாட்டாய். எனக்குக் கரடுமுரடான பாதை பழக்கம்தான் என்றாலும்கூட, என்னுடைய காலிலும், கையிலும் பட்டிருக்கின்ற தழும்புகள் எல்லாம். பெரியார் என்னை இழுத்துச் சென்றபோது ஏற்பட்ட காயங்களால் உருவான தழும்புகள் என்றாலும்கூட, நீ அந்தப் பாதையைத் தாங்க மாட்டாய்; ஆகவே. இதோ இருக்கிறது. தார் போட்ட சாலை – வா; என்று தன்னுடைய தமிழ் நடை போட்ட சாலையில் அழைத்து வந்தார் – தமிழ்ச் சமுதாயத்து மக்களை.
ஒரே குறிக்கோளை நோக்கி இரண்டு பாதைகள். ஒன்று கரடுமுரடான பாதை. மற்றொன்று பளபளப்பான பாதை இரண்டு பாதைகளும் ஒரே லட்சியத்திற்காகத் தந்தை பெரியார் அவர்களாலும் பேரறிஞர் அண்ணா அவர்களாலும் முறையே வகுக்கப்பட்ட பாதைகள்
அந்நாள் முதல்
இன்றைக்கு உங்கள் முன்னால் நின்றுகொண்டு நான் பேசுகிறேன் என்றால், என்னுடைய நண்பர் வீரமணி பேசினார் என்றால், தந்தை பெரியார் அவர்களும் – பேரறிஞர் அண்ணா அவர்களும் பாதையை அமைக்கத் தொடங்கிய காலகட்டத்தில் அவர்களோடு இருந்தவர்கள்.
இதே புதுவை மாநகரத்தில் – வீரமணி குறிப்பிட்டதைப் போல் – முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அன்றைக்கு கயவர்களால் – திராவிட இயக்கத்தின் எதிரிகளால் – நான் தாக்கப்பட்டு “முடிந்துவிட்டது என்னுடைய கதை” என்று எறிந்துவிட்டுப்போன நிலையில் என்னைத் தேடிக் கண்டுபிடித்து, பட்ட காயங்களுக்கு மருந்து தடவிய கைதான் தந்தை பெரியார் அவர்களுடைய கையாகும்.
அண்ணா சூளுரை
அந்தப் பெரியார் – எங்களை ஆளாக்கிய பெரியார் – எங்களை உருவாக்கிய பெரியார் – எங்களைச் சுயமரியாதைச் சுடர்களாக வடித்தெடுத்த பெரியார் – அந்தப் பெரியாரிடம் இருந்து பிரிந்து 1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் ரீதியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பாடுபடும் என்று கொடி உயர்த்தினார். அப்படிக் கொடி உயர்த்திய போது அறிஞர் அண்ணா சொன்னார்-
சமுதாயப் பிரச்சினைகளில் – மூடநம்பிக்கையை ஒழிக்கின்ற பிரச்சினைகளில் திராவிடர் கழகமும். திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்து செயல்படும் என்று அழுத்தந் திருத்தமாக அண்ணா சொன்னார்.
தாய்க்கழகத்தை ஒழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்போம் என்று பேரறிஞர் அண்ணா அன்றைக்கு கையை உயர்த்தி முடிவு செய்து புறப்படவில்லை.
ஆலுக்கு வேர்
பெரியார், அவருடைய கொள்கைகள் – அவருடைய சமுதாயப் புரட்சி எண்ணங்கள் இவைகளைக் காப்பது தன்னுடைய கடமை அதற்காகப் போராடுவது தன்னுடைய தொண்டு என்று அன்றைக்குச் சூளுரைத்துத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினாரே தவிர, வாழைக்குக் கன்றாக அல்ல – ஆலுக்கு – வேராக இந்தக் கழகத்தை நான் தொடங்குகிறேன் – என்று அண்ணா குறிப்பிட்டார்.
அண்ணா, தந்தை பெரியார் அவர்களுடைய எண்ணங்களைப் பிரதிபலித்தார் என்னுடைய அருமை நண்பர் லத்தீப் இங்கே எடுத்துக் காட்டியதைப்போல் பெரியார் தத்துவமானார். நான் ஏதோ விரிவுரை என்றெல்லாம் சொன்னார்கள் – என்னை வைத்துக்கொண்டு ஏதாவது சொல்ல அல்லாமல் வேண்டுமென்பதற்காகச் சொன்னார்களே அந்த தத்துவத்துக்குள்ளே அடங்கியவன் நான் : அந்த விளக்கத்துக்குள்ளே கட்டுப்பட்டு கிடப்பவன் நான் என்பது தவிர, அதைவிட்டுத் தனியாக இயங்கக்கூடிய ஆற்றல் பெற்றவன் அல்ல நான்.
காலுக்கும் – தாளுக்கும்
அவர்கள் இங்கே எனக்குச் சூட்டிய புகழாரங்கள் எல்லாம், சிறப்பு விருந்தினன் என்பதற்காக; அவர்கள் எனக்கு இங்கே வழங்கிய வாழ்த்துக்கள் எல்லாம். என்னைப் பற்றி அவர்கள் இங்கே அளந்து கொட்டிய வர்ணனைகள் எல்லாம். அழைத்து விட்டோம் – சரியான ஆளைத்தான் அழைத்தோம் என்று மக்களுக்கு நிரூபிக்க வேண்டாமா? என்பதற்காக என்னைப் பற்றி அலங்கார வார்த்தைகளைச் சொன்னார்களே அல்லாமல், நண்பர்களே, அமைச்சர் பெருமக்களே. என்னுடைய ஆருயிர் தோழர்களே. உடன் பிறப்புக்களே நீங்கள் எல்லாம். இங்கே கொட்டிய புகழாரங்கள் அத்தனையும் பெரியாரின் காலுக்கும், அண்ணாவின் தாளுக்கும் சொந்தம் எனக்குச் சொந்தமல்ல.
நல்லதல்ல
நான் அவர்களால் வளர்க்கப்பட்டவன் : அவர்களால் ஆளாக்கப்பட்டவன். இந்தச் சமுதாயத்திற்குப் பாடுபடுகின்ற லட்சக்கணக்கான சிப்பாய்களிலே – வீரர்களிலே ஒருவன்தான் கருணாநிதியே தவிர, கருணாநிதியை விட்டால் வேறு ஆளே இல்லை என்ற நிலைமை ஏற்படுமேயானால் அது ஒரு இயக்கத்திற்கும் நல்லதல்ல; ஒரு சமுதாயத்திற்கும் நல்லதல்ல.
பெரியார் பல்லாயிரக்கணக்கான கருணாநிதிகளை உருவாக்கினார் என்று சொன்னால்தான் பெரியாருக்குப் பெருமை.
அண்ணா பல்லாயிரக்கணக்கான கருணாநிதிகளை உருவாக்கினார் என்று சொன்னால்தான் அண்ணாவுக்குப் பெருமை.
பெரியாருக்குப் பிறகு – அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதிதான் என்றால் கருணாநிதிக்குப் பிறகு யார்? யாரும் இல்லையா? என்ற கேள்விக் குறியை நான் விட்டு விட்டுச் சென்றால் என்னைவிட இந்தச் சமுதாயத்திற்குத் துரோகம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
யோசனைகள்
தம்பி சிவகுமார். இங்கே ‘காரவன்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் எழுதப்பட்டிருப்பதைப் படித்துக் காட்டினார்.
அந்தப் பத்திரிகையினுடைய முடிவுரையில் கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கின்றார். ‘சூத்திரர்’ சமுதாயத்தை வழி நடத்திச் செல்லக்கூடிய அந்தப் பணியை கருணாநிதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ‘காரவன்’ பத்திரிகையிலே எழுதியுள்ளதைக் குறிப்பிட்டுவிட்டு, அவர் “அந்தப் பணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர் தன்னுடைய இறுதிக் காலத்தில் சிங்கம்போல் கர்ஜித்தார் என்ற நிலைமை இல்லாமல் ஒரு புழுப்போல் செத்தார் என்ற நிலைமைதான் ஏற்படும்” என்று ‘காரவன்’ பத்திரிகையிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார்.
அதே நேரத்தில் அவர்கள் வேறு சில யோசனைகளையும் எனக்கு வழங்கி இருக்கிறார்கள்.
இந்த அரசியலையே விட்டுவிட்டு சமுதாயப் பணிக்குப் பாடுபடவேண்டும்; ‘சூத்திரர்’களுக்காகப் பாடுபடவேண்டும் என்று ‘காரவன்’ பத்திரிக்கையிலே எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.
புரியாதவர்கள்
சூத்திர மக்களுக்காகப் பாடுபடத் தயார். அந்த நேரத்தில் அரசியல் சூத்திரதாரிகளையும் சந்திக்க வேண்டிய நிலைமை எனக்கு இருக்கிறது என்பதை ‘காரவன்’ பத்திரிகைக்காரர்கள் தொலைவிலே இருக்கிற காரணத்தால் புரிந்திருக்கமாட்டார்கள்.
இங்கே சமுதாயப் பிரச்சனை என்பது தனியாக அப்பட்டமாக தனித்தன்மை வாய்ந்த பிரச்சனையாக இல்லை.
இங்கே சமுதாயப் பிரச்சினை என்பது அரசியலோடு கலந்து இருக்கிற பிரச்சினை.
இங்கே சமுதாயப் பிரச்சினை என்பது பொருளாதாரத்தோடு இன்றைக்குக் கலந்திருக்கிற ஒரு பிரச்சினை.
தந்தை பெரியார் ஏன் காமராசரை ஆதரிக்கவேண்டி இருந்தது?
சமுதாயப் பிரச்சினையும் அரசியலும் கலந்து இருந்த காரணத்தால்!
இல்லாவிட்டால், பெரியார் தேர்தலிலே அவர் நிற்காவிட்டாலும் – இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் தந்தை பெரியாருக்கு ஏன் ஏற்பட்டது? என்ன காரணம்?
சமுதாயப் பிரச்சினையும் அரசியல் பிரச்சினையும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கிடக்கின்ற காரணத்தாலேதான் பச்சைத்தமிழர் காமராசர் – அவருக்கு வாக்களியுங்கள் என்று அதற்குரிய காரணங்களை அன்றைக்குத் தந்தை பெரியார் சொன்னார்.
எதனால்?
திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையிலே ஆட்சியை உருவாக்கிய பிறகு, அண்ணா அவர்களுடைய ஆட்சி தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதற்காகவும் 1971ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகமும் இந்திரா காங்கிரசும் சேர்ந்து இணைந்து தேர்தலிலே போட்டியிட்ட நேரத்தில் பெரியார் அவர்களுடைய ஆதரவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இந்திரா காங்கிரசுக்கும், அன்றைக்குத் தமிழகத்திலே கிடைத்ததென்றால் எதனால்?
அரசியலும், சமுதாயமும், நம்முடைய பகுதுயைப் பொறுத்தவரையில் தனித்தனியாகப் பிரிந்து கிடக்க வில்லை, பின்னிக்கிடக்கிறது.
எனவேதான் தொலைவிலே இருக்கின்ற ‘காரவன்’ பத்திரிகை கட்டுரையாளருக்கு அது தெரிய நியாயம் இல்லை.
இங்கே அரசியலும் சமுதாயமும் பின்னிக்கிடக்கிற காரணத்தினாலேயேதான் ஒன்றைவிட்டு ஒன்று தனியாக வந்து விடமுடியாது.
சில வேளைகளில்
வீரமணி அவர்கள், வெறும் சமுதாயப் . பிரச்சினையைப் பற்றி மாத்திரம்தான் பேசவேண்டும் என்று சொன்னாலும்கூட, அவரும் சில நிலைமைகளில் அரசியல் பிரச்சினைகளைப் பேசத்தான் வேண்டியிருக்கிறது.
தமிழகத்தைப் பற்றிப் பேசவேண்டுமேயானால் அங்கே சமுதாயப் பிரச்சினையும், அரசியல் பிரச்சினையும் பின்னிக் கிடக்கின்ற காரணத்தினால் அரசியலையும் தான் பேசவேண்டியிருக்கிறது.
எனவே, நான் அரசியலைவிட்டு அறவே வந்துவிட வேண்டும் என்பது அவருடைய அன்பான அழைப்பு: காரணம்; நாலாந்தர மக்களாக – ஏழை எளிய மக்களாக இருக்கின்ற ‘சூத்திர’ மக்களுக்கு நான் தலைமை ஏற்க வேண்டும் என்பதற்காக அந்தக் கட்டுரை ஆசிரியர் விடுத்திருக்கின்ற அழைப்பு.
சிலபேர் இருக்கிறார்கள் – அரசியலைவிட்டு எப்போது தொலைவான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் நான் அப்படிப்பட்டவர்களைப் பற்றி அப்படிப்பட்ட கருத்தைப்பற்றி இங்கே எதையும் சொல்ல விரும்பவில்லை.
எவ்வளவோ
தமிழ் நாட்டிலேயே இன்னும் ஆற்றவேண்டிய பணி எவ்வளவோ இருக்கிறது.
முடிந்துவிட்டதா? பெரியாரோடு தீர்ந்துவிட்டதா? அண்ணாவோடு முடிந்துவிட்டதா?
நான் கேட்கிறேன், பெரியார் அன்றைக்கு எடுத்துவைத்த – புராணங்களைக் கேலி செய்து பேசிய – பிரசங்கங்கள் இன்றைக்கு எதிரே உட்கார்ந்து இருக்கின்ற இளைய தலைமுறை எத்தனைப் பேருக்கு நினைவிலே இருக்கிறது?
காலையிலே பெரியார் சிலை திறப்பு விழாவிலேகூட நான் சொன்னேன்.
பிள்ளையார் கதை தெரியுமா உங்களுக்கு என்று நான் கேட்டேன். அந்தக் கதையைச் சொன்ன பிறகு அத்தனைப் பேரும் வியந்தார்கள். அப்படியும் ஒரு கதையா என்று தங்கள் விழிகளை அகல அகலத் திறந்தார்கள்.
எதற்குத்தான் கதை இல்லை இந்த நாட்டிலே? ஆடவர்களாகிய நம்முடைய தொண்டையிலே இருக்கின்ற முடிச்சு எலும்பு இருக்கிறதே. இதற்குக்கூட கதை உண்டே!
இணைப்புகள்
அதுகூட இயற்கை என்றா விட்டார்கள் – புராணீகர்கள்? இல்லையே! அதையும் சுடவுளோடு இணைத்தார்களே! புராணத்தோடு இணைத்தார்களே! இல்லையென்று சொல்லிவிட முடியுமா?
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து “திருப்பாற் கடலைக் கடைகிறார்கள்! வேலையைப் பாருங்கள்! கடலைக் கடைகிறார்கள்! யார் யார்? தேவர்களும். அசுரர்களும்! எதைக் கட்டித் தெரியுமா? மேருமலையை மத்தாகக் கட்டி! திருப்பாற் கடலைக் கடைகிறார்கள்! எதற்காகத் தெரியுமா? தேவாமிர்தம் எடுக்க!
தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதைப்போல் திருப்பாற் கடலைக் கடைந்து தேவாமிர்தம் எடுக்கலாம் என்று மேருமலையை மத்தாக ஆக்கி வாசுகி என்கின்ற ஒரு பாம்பை அதற்குக் கயிறாகப் போட்டு – ‘கோழை’களான ‘அசுரர்’கள் பாம்பின் தலைப் பக்கத்தையும் ‘வீரர்’களான ‘தேவர்’கள் பாம்பின் வால் பக்கத்தையும் பிடித்துக் கொண்டு திருப்பாற் கடலைக் கடைந்து ஒரு பக்கத்திலே அமிர்தம் பொங்குகிறது; அதே நேரத்திலே ஆலகால விஷமும் வருகிறது!
அமிர்தத்தை தேவர்கள் எடுத்துக் கொண்டார்கள் – கஷ்டப்பட்டு கடைந்தவர்கள் அல்லவா. வாலைப்பிடித்து! எனவே அமிர்தத்தை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
பொங்கிய ஆலகாலம் அதல, சுதல, பாதாள லோகங்களையும் அழிக்கிறது. உடனடியாக ஓடுகிறார்கள் அனைவரும். சிவனிடத்திலே
”அண்டபிண்ட சராசரங்கள் எல்லாம் ஆலகாலத்தால் அழிந்துவிடும் போல் இருக்கிறது. அய்யனே, மெய்லனே! எங்களைக் காப்பாற்றும்” என்று கேட்கிறார்கள்.
விழுங்கினானாம்
சிவன் என்ன செய்கிறார் தெரியுமா? அந்த ஆலகாலத்தை அப்படியே கையில் எடுத்து உருட்டி வாயிலே போட்டுக்கொள்கிறார். அதை விழுங்கி விட்டால் உலகத்தை காப்பாற்றலாம் என்று.
முழுவதும் உள்ளே போய்விட்டால் சிவன் இறந்துபோய்விடுவார் என்று! பக்கத்திலே இருந்த பார்வதிக்குப் பயம்!
எனவே, கெட்டியாக சிவனின் கழுத்தைப் பிடித்துக்கொள்கிறார். விஷம் உள்ளே இறங்கக்கூடாது என்று!
அப்பொழுது பரமசிவன் கழுத்திலே நின்ற அந்த விஷம்தான் அந்த உருண்டைதான் இன்றைக்கு – உலகத்திலே பிறக்கின்ற அத்தனை ஆண்களுக்கும் கழுத்துக்குக் கீழே இருக்கிற உருண்டையாம். உருண்டையைத் தடவிப் பார்த்துக்கொள்ளுங்கள் இருக்கிறதா? இல்லையா? என்று.
மறு உதயம்
இப்படிப்பட்ட கதைகளை நம்பிக்கிடந்த இளைஞர் சமுதாயத்திற்கு முன்னால், அந்தக் கிழச்சிங்கம், இந்தப் புராணங்களை நம்புகிறாயா ? என்று கேட்டு. அதைக் கிழித்தெறிந்த காட்சியைக் கண்டு, அவர்களுடைய பட்டாளத்திலே சேர்ந்தவன், சின்னப் பையனாக இருந்தபோது இந்தக் கருணாநிதி!
அந்த இளைய தலைமுறை- மீண்டும் உதயமாக வேண்டும். அந்த இளைய தலைமுறை இன்றைக்கு வயதானவர்களாக பெரியவர்களாக மாறிப்போய் விட்டார்கள்.
துணிவு
ஈரோட்டு மண்ணில் நான் பல ஆண்டுக்காலம் உலவி இருக்கின்றேன் என்றாலும், தந்தை பெரியார் அவர்களுடைய பயிற்சிப் பள்ளியில் – அவருடைய அலுவலகத்திலே பணியாற்றுகின்ற வாய்ப்பைப் பெற்று ஏறத்தாழ இரண்டாண்டுக் காலம் அவரோடு குடியரசு அலுவலகத்தில் அவருடைய மாளிகையில், அவருக்கு அருகில் அமர்ந்து உண்ணுகின்ற வாய்ப்பைப் பெற்று – அவர் தருகின்ற ஊதியத்தைப் பெற்று – அவர் நடத்திய குடிஅரசுப் பத்திரிகையின் துணையாசிரியன் என்கின்ற பொறுப்பைப் பெற்று- பயின்றவன் – பகுத்தறிவு பெற்றவன் – என்னுடைய நண்பர்கள் எல்லாம் அடிக்கடி சொல்லுவது போல துணிவை அவரிடத்திலே இருந்து பெற்றவன். கனிவை காஞ்சிபுரத்திலே இருந்து பெற்றவன்.
உண்மைப் புரட்சி
அந்த வகையிலே பெரியார் பிறந்த இந்த மண்ணில் அமைந்திருக்கின்ற இந்தக் கல்லூரியினுடைய குழுவிலே ஒரு காலத்திலே தந்தை பெரியார் அவர்களே கூட உறுப்பினராக இருந்து இந்தக் கல்லூரியினுடைய உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டு இருக்கின்றார்.
அப்படிப்பட்ட பெரும் தலைவர் – உண்மையிலேயே புரட்சி செய்த தலைவர் – சமுதாயத்திலே அரசியலிலே பெரும் புரட்சியை உருவாக்கிய தலைவர் – அந்தத் தலைவருடைய காலடிபட்டமண்; அந்தத் தலைவருடைய குரல் ஒலித்த மண்; அந்தத் தலைவர் பிறந்த மண் – அந்த மண்ணிலே நின்று கொண்டு நான் உங்களுக்குச் சொல்லுகின்ற செய்தி, சமுதாயத்திலே நாம் எந்த அளவுக்குத் தாழ்ந்து கிடக்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இதுதான், இந்த மாணவர் பேரவையினுடைய திறப்புவிழாவில் உங்களுக்கு நான் தருகின்ற மிக முக்கியமான செய்தியாக இருக்க முடியும்.
அடித்தளம் சீர்திருத்தம்
தாழ்ந்து, தாழ்ந்து, தாழ்ந்து போய்விட்ட ஒரு சமுதாயத்தை தலைநிமிர்த்துகின்ற பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் தான் தந்தை பெரியார் ஆவார்கள். அவர்கள்
பொருளாதாரம் என்பது மாளிகையாகக்கூட இருக்கலாம். யொன்மயமான ஒரு
அரசியல் என்பது. அந்த பொன் மாளிகையின் மீது அமைக்கப்பட்ட வைரம் பதித்த கலசங்களாகக் கூட இருக்கலாம்.
ஆனால், பொருளாதாரம் என்கின்ற பொன் மாளிகைக்கு- அதன் மீது அழகு ஒளியைச் சிந்திக் கொண்டிருக்கின்ற வைரக் கலசங்களுக்குப் பாதுகாப்பும் வலிவும் அளிக்கவேண்டுமேயானால், சமுதாய சீர்திருத்தம் என்கின்ற அடித்தளம் இருந்தால்தான் பொருளாதாரம் – அரசியல் என்கின்ற இரண்டும் நிலைக்க முடியும். இதைத்தான் பெரியார் அவர்கள் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொன்னார்கள்.
நேரு
அந்தச் சமுதாயச் சீர்திருத்தத்தை இன்றைக்கு நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் உள்ளத்திலே பதியவைத்துக்கொண்டு தங்களுடைய அரசியல் இயக்கங்களை நடத்துகிறார்களா என்றால், இல்லை.
எனவே, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நேரங்களில், ஜாதி ஒழிப்பைப் பற்றிப் பேசுகிறோம்; மதப் பூசல்களைப் பற்றிப் பேசுகிறோம். அத்தோடு விட்டுவிடுகிறோம்.
பண்டித ஜவகர்லால் நேரு திட்டவட்டமாக ஒன்றைச் சொன்னார். அவர் தன்னை ஒரு நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளக்கூட அஞ்சியது இல்லை. அவர் ஆளுகின்ற பொறுப்பில் வீற்றிருந்த காரணத்தினால் – இந்தியாவினுடைய தலைமை அமைச்சராக ஏறத்தாழ பதினேழு ஆண்டுக்காலம், அவர் கொலு வீற்றிருந்த காரணத்தினால் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லவேண்டிய பெரும் பொறுப்பும், மற்றவர்களுடைய உரிமையும் பறிபோய்விடக்கூடாது என்கின்ற சூழ்நிலையும் இருந்த காரணத்தினால் அவர் தாம் நாத்திகர் என்பதை – மதங்களிலே தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டவில்லை, என்றாலும், அவர் மறைந்த நேரத்தில்தான், தான் யார் என்பதை உலகத்திற்கு எடுத்துச் சொல்லி விட்டுத்தான் மறைந்தார்.
அவரது உயில்
அவர் மறைந்த பிறகு, அவர் எழுதி வைத்துச் சென்ற உயிலை எடுத்துப் படித்தபோது அதிலே காணப்பட்ட வாசகங்கள் எவை?
“நான் மறைந்துவிட்டால் எனக்கு வைதீக முறைப்படி எந்தச் சடங்குகளும் செய்யக்கூடாது!”
இது உயிலில் காணப்பட்ட நேருவினுடைய வாசகங்கள்.
அதுமாத்திரம் அல்ல; தம்முடைய உடல் எரிக்கப் பட்ட சாம்பலை இந்திய நாட்டு மண் முழுவதும் பரப்பு கின்ற அளவுக்கு விமானத்தில் எடுத்துச்சென்று ஆங்காங்கு தெளித்து விடுங்கள் ; நான் ஓடி ஆடி மகிழ்ந்த கங்கை நதிக்கரையிலும், யமுனை நதிக்கரையிலும் சாம்பலைத் தெளித்து விடுங்கள் – எந்த வைதீகச் சடங்குகளும் நான் மறைந்த பிறகு எனக்காக நடத்தப்படக் கூடாது என்று தெள்ளத் தெளிவாக எழுதி வைத்துவிட்டுத்தான் பண்டித நேரு அவர்கள் மறைந்தார்கள்.
விடுபடுவீர்
அவர் எழுதிய ‘உலக சரித்திரம்’ என்ற புத்தகத்திலே கூட அழகாகக் குறிப்பிடுகிறார்கள்.
‘மதம்’ என்பது மனிதனை ஒரு நிலையோடு கட்டுப்படுத்தி வைத்து விடுகின்றது; விஞ்ஞானம் அப்படி அல்ல; இதோடு எதுவும் முடிந்துவிடவில்லை. தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று முடிவற்றதாக விளங்குகிறது விஞ்ஞானம். முடிவுற்றதாக ஆகி. இதற்கும் மேலே அங்கும் போகாதே இங்கும் போகாதே என்று கட்டுப்படுத்தி வைப்பதுதான் மதம். எனவே என்னைப் பொறுத்தவரையில் நான் மதத்தை விட விஞ்ஞானத்தை தான் அதிகமாக நேசிக்கிறேன் என்று, நான் அல்ல, தந்தை பெரியார் அல்ல – இந்தியத் தரணியை பதினேழு ஆண்டு காலம் ஆண்ட ஆசியாவின் ஜோதி, மனிதர் குல மாணிக்கம் பன்டித நேரு அவர்கள் எழுதி வைத்திருக்கிறார் என்பதை மாணவர்களே உங்களுடைய இதயத்திலே நான் பதிய வைப்பது என்னுடைய கடமை என கருதுகிறேன்.
இதைச் சொல்லுவதால் மதப் பூசல்கள் விளைய வேண்டும் என்றோ, அனைவரும் நாத்திகர்களாக மாறிவிட வேண்டும் என்றோ உங்களுக்கு அழைப்பு விடுவதாக அர்த்தம் இல்லை.
குறைந்தபட்சம் மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபடுகின்ற ஒரு சமுதாயத்தையாவது தோற்றுவிக்க நாமெல்லாம் முனைந்து முயல வேண்டாமா என்றுதான் உங்களையெல்லாம் கேட்க விரும்புகிறேன்.
தீபாவளி
இந்தச் சமுதாயம் இன்றைக்கு இந்த அளவிற்குக் கெட்டிருப்பதற்கு என்ன காரணம்? நாம் நம்புகின்ற கதைகள் கொஞ்ச நஞ்சமா?
நாளை மறுநாள் தீபாவளி கொண்டாடப் போகிறோம் என்று என்னையும் சேர்த்துச் சொல்வதாக யாராவது பத்திரிகையிலே போட்டுவிடுவார்களேயானால் அது அவர்களுடைய தவறு.
தீபாவளிக்காக எழுதி வைக்கப்பட்டிருக்கின்ற புராணங்களை – கதைகளை அவைகளையெல்லாம் நம்பித்தானே தீபாவளி கொண்டாடப்படுகிறது!
தீபாவளி ஒரு உற்சாகமான விழா! அழகான விழா! தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கின்ற விழா! ஆங்காங்கு வைக்கின்ற விழா! மங்கல விளக்குகளை ஏற்றி
இன இழிவு
தீபாவளியை முன்னிட்டாவது போனஸ் கிடைக்கிறது- வேட்டி கிடைக்கிறது – நல்ல புடவை கிடைக்கிறது!
அதையும் கெடுக்கிறாயே என்று யாராவது கேட்பீர்களே யானால் தீபாவளி பண்டிகை என்கின்ற அந்தச் சொல்லின் மீதல்ல எனக்கு வருத்தம்; அதிலே எனக்கு மறுப்பு இல்லை. சுயமரியாதை இயக்கமோ, தன்மான இயக்கமோ அந்தச் சொல்லை மறுத்திடவில்லை. அதற்காகச் சொல்லப்படுகின்ற கதை ஒரு இனத்தையே இழிவுபடுத்துவதாக இருக்கிறதா? இல்லையா?
ஒரு பத்திரிகை
ஒரு வாரப்பத்திரிகையின் ஆசிரியர். ஒரு நிருபரை நான்கு நாளைக்கு முன்பு என்னிடத்திலே அனுப்பி வைத்திருந்தார்கள். ‘என்ன?’ என்று கேட்டேன். ‘தீபாவளிக்கு செய்தி வேண்டும்’ என்று கேட்டார். ‘என்ன செய்தி வேண்டும் ? என்ன தலைப்பிலே வேண்டும்?’ என்று கேட்டேன். அந்த நிருபர் சொன்னார்: ‘நரகாசூரன் என்ற தீயசக்தி ஒழிக்கப்பட்ட நாள், அந்த நாள். எனவே, அந்த நாளிலே இன்னும் என்னென்ன தீயசக்தியை ஒழிக்கபட வேண்டும் என்பதை சொல்லுங்கள்’ என்று சொன்னார். “நான் தீபாவளியும் கொண்டாடுவது இல்லை; நரகாசூரனையும் தீயசக்தி என்று என்னுவதில்லை. எனவே, நான் எப்படிச் செய்தி தரமுடியும்?” என்று கேட்டேன்.
“சரி, பொதுவாக தீயசக்திகளைப்பற்றி எழுதிக் கொடுங்களேன்’ என்று கேட்டார்.
எனவே, பொதுவாக தீயச்சக்திகளைப்பற்றி எழுதி, வன்முறை வெறியாட்டங்களும், சாதிப் பூசல்களும், மதச் சண்டைகளும், அநாகரிக முறைகளும் ஆகிய தீய சக்திகள் ஒழிந்தபாடில்லை என்கின்ற கருத்தை எழுதி அனுப்பினேன்.
கதையென்ன?
அதை அவர்கள் அவர்களுக்கும் மேலே உள்ள எஜமானர்களிடத்திலே காட்ட, அது அவருக்கு மேலே உள்ள எஜமானர்களிடத்திலே காட்டப்பட, இது வாரப் பத்திரிகையிலே இடம் பெறலாமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழ, பிறகு அவர்கள் என்னோடு தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு. ‘இதிலே சில வரிகளை நீங்கள் நீக்கித் தரமுடியுமா?’ என்று கேட்க. நான் சொன்னேன், ‘லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து எடுக்கப் படுகின்ற படங்களிலே கூட, நான் எழுதிய கருத்துக்கு விரோதமாக வசனத்தை வெட்டவேண்டும் என்று யாராவது ஒரு நடிகரோ, நடிகையோ சொன்னால், அவர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்களே அல்லாமல் நான் எழுதிய கருத்தை இதுவரையில் திரும்பப் பெற்றது கிடையாது ஆகவே, நீங்கள் கட்டுரையைத் திரும்ப அனுப்பி விடுங்கள்’ என்று கட்டுரையைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன்!
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், தீபாவளிக்காகச் சொல்லப்படுகின்ற கதை என்ன?
அவள் ஆசையாம்
திடீரென்று ஒரு நாள் ஒரு அரக்கன், பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள்ளேயே போய் ஒளிந்துகொண்டான்.
உடனே விஷ்ணுவராக அவதாரம் எடுத்து, கடலுக்குள்ளே நுழைந்து பூமியைத் திரும்பப் பெற்று, அந்த அரக்கனையும் கொன்றுவிட்டு, வெளியே வந்தார்.
உடனே பூமாதேவிக்கு வராக அவதாரமாக இருந்த விஷ்ணுவின்மீது காதல் பிறந்தது. இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் நரகாசுரன். அவன் பல அக்கிரமங்களைச் செய்தான். எனவே, பூமாதேவி அந்த நரகாசுரனைக் கொன்றுவிட்டாள்.
அப்படிக் கொல்லப்பட்டபோது நரகாசுரன். ‘நான் இறந்த நாளை எல்லா மக்களும் எண்ணெய் தேய்த்து முழுகி, புத்தாடை உடுத்தி கொண்டாட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான்.
தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்றி வைப்பதாக பூமாதேவியும் சொன்னாள். அதற்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
கேள்விகள்
இந்தக் கதையிலே வரிக்குவரி கேள்வி எழுகிறதா? இல்லையா? இந்தக் கேள்விகள் எல்லாம் இடைக்காலத்திலே எழாமல் போன காரணத்தினாலேதான் நம் தமிழகத்தினுடைய இளைஞர்கள், பெரியார் என்றால் யார் ? அவர் என்ன கொள்கைகளைச் சொன்னார் அண்ணா என்றால் யார் ? அவர் என்ன கொள்கைகளை சொன்னார்? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்றால் யார்? அவர் என்ன கவிதைகளை – எந்தக் கருத்தின் அடிப்படையிலே எழுதினார் ? என்பவைகளையெல்லாம் மறந்துவிட்ட ஒரு துயரமான நிலை இன்றைக்கு ஏற்பட் டிருக்கின்றது.
துயர நிலை
முதலிலேயே கதை அடிபடுகிறதா? இல்லையா? ஒரு அரக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள்ளே போய் ஒளிந்துகொண்டான் என்றால், மாணவர்களைக் கேட்கிறேன்; பூமி என்ன பாய் போலவா இருக்கிறது, சுருட்ட ? பூமி உருண்டையானது அல்லவா? அது உருண்டை என்று கண்டுபிடிப்பதற்கு முன்பு எழுதிய புராணம் அதில் பூமி பாயாகச் சுருட்டப்படுகிறது. பூமியில்தானே அந்தக் கடலும் இருக்கிறது? பிறகு எப்படி கடலுக்குள்ளே பூமியை எடுத்துக்கொண்டு போய் ஒளிந்துகொண்டான்?
கடலுக்குள்ளே போய் ஒளிந்துகொண்ட அந்த அரக்கனை வெல்ல மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார். வராக அவதாரத்தைப் பார்த்து பூமாதேவி காதல் கொண்டாள்.
வராக அவதாரம் என்றால், பன்றி முகம் உடைய ஒரு மனிதன். அதைப் பார்த்து பூமாதேவி காதல் கொண்டாள்.
இப்படிப்பட்ட கதைகளின் அடிப்படையில் வருகின்ற பண்டிகைகள் ஒரு சமுதாயத்தினுடைய எதிர்காலத்தை ஏற்றத்தை – முன்னேற்றத்தை – முகிழ்க்க விடாமல் பட்டுப்போகச் செய்கின்ற நிலைமையிலே இருக்கின்ற காரணத்தினாலேதான் அவைகள் மீதெல்லாம் நாம் மறுப்பு கணைகளைத் தொடுக்க வேண்டியவர்களாக ஆனோம்.
எத்தனையோ கதைகள், அவைகளைப் பற்றித்தான் இன்றைக்குப் பேச வேண்டுமென்று விரும்புகின்றேன்.
கழுத்துக் கதை
நீங்கள் எல்லாம் ஒருமுறை உங்கள் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கழுத்திலே ஒரு முடிச்சு இருக்கும். ஒரு எலும்பு மூடிச்சு. ஏனென் றால், அந்த எலும்பு முடிச்சுக்கு விஞ்ஞான ரீதியாகக் காணப்படுகின்ற -ஆராய்ச்சியின் மூலம் நமக்கு கிடைக்கின்ற தகவல் – உன்மை, கழுத்தை வளைக்க, நிமிர்த்த, இப்பக்கம் அப்பக்கம் ஆட்ட உதவி புரிகின்ற சக்தியைத் தருகின்ற ஒரு எலும்பு முடிச்சு அங்கே இருக்கிறது.
இந்த எலும்பு முடிச்சுக்குச் சொல்லப்பட்ட புராணக் கதையைத்தான் நான் முன்பு கூறினேன்.
நம்முடைய கழுத்திலே இருக்கின்ற கட்டிக்கே ஒரு கதை. அது மாத்திரம் அல்ல. தாய்மார்கள் மன்னிக்க வேண்டும். இன்னொரு கதையையும் சொல்லுகிறேன்.
மகளிருக்கு மீசை
பெண்களுடையமுகத்திலே ஆண்களைப்போல தாடி மீசை ஏன் கிடையாது ? அதற்கும்கூட கதை உண்டு.
ஏன் மீசையும் தாடியும் பெண்களுக்கு இல்லை? ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு பதிலையும் விப்பிர புராணத்திலே எழுதினார் – புராணத்தின் பெயர் விப்பிர புராணம்.
ஒரு ரிஷி இருந்தார், தேவலோகத்திலே அந்த ரிஷிக்கு பூலோகத்தைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்கின்ற ஆசை . தனியாகச் சென்றால் உல்லாசமாக இருக்காது என்று தன்னுடைய துணைவியையும் அழைத்தார்.
துணைவியார் ‘ பருவம் அடைந்த மங்கை நமக்கு இருக்கிறாள்; அவளை தேவலோகத்தில் தனியாக விட்டுவிட்டுப்போனால் என்ன ஆவது. எனவே, நான் வர வில்லை” என்று சொன்னார்.
“இல்லை இல்லை; நீயும் வரவேண்டும். நாம் பருவம் அடைந்த பெண்ணை பத்திரமான இடத்திலே விட்டுவிட்டுப் போகலாம்” என்று சொன்னார்.
யாரிடத்திலே விட்டுவிட்டுப் போகலாம் ? என்று யோசித்தார்கள்.
சிவனிடத்திலே விட்டுச் செல்லலாமா? உடனே அவர்களுக்குரிய ஆராய்ச்சி, அவர் பக்கத்திலே பார்வதியும் தலையிலே கங்கையும் வைத்திருப்பவர் ஆயிற்றே! இந்த இருவரும் போதாமல் தாருகாவனத்து ரிஷிப்பத்தினிகளையெல்லாம் கற்பழித்ததாகக் கதை இருக்கிறதே! அவரை நம்பி நம்முடைய பருவச்சிட்டை எப்படி விட்டுச்செல்வது?
இந்தக் கேள்வி எழுந்த காரணத்தால் சிவனைக் கை கழுவினார்கள்.
விஷ்ணு
விஷ்ணுவிடம் விட்டுச் செல்லலாமா? என்று எண்ணி னார்கள்.
அவன் பாமா. ருக்மணி போதாமல் ஆயிரக்கணக்கான கோபிகாஸ்திரிகளோடு விளையாடி அடுத்த வீட்டுக்காரன் மனைவியான ராதையிடமும் விளையாடியவன் ஆயிற்றே!எனவே, அவனிடத்திலே எப்படி விட்டுச் செல்வது? என்ற அய்யப்பாடு ஏற்பட்டது. அவரையும் கை கழுவினார்கள்.
சரி, இந்திரனிடம் விட்டுச்செல்லலாமா? என்றவுடன்” சரிதான் போங்கள் அவரிடத்திலா? அவர் ரிஷிபத்தினி அகலிகையையே கற்பழித்து அவருடைய உடலெல்லாம் ஆயிரம் கண்கள் – புண்கள் என்கின்ற அளவுக்கு கடும் கோபத்திற்கு ஆளானவர் ஆயிற்றே, அவரிடமா?” என்று பத்தினி கேட்டாள்.
தர்மராஜன்
கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். எமனிடத்திலே விட்டுச்செல்லலாம் என்று அவன்தான் தர்மராஜன். நல்லவன்; அவனிடத்திலே விட்டுச்செல்லலாம் என்று முடிவுக்கு வந்து எமனிடத்திலே அந்தப் பெண்ணை ஒப்படைத்துவிட்டு, ரிஷியும் ரிஷிபத்தினியும் பூலோகத் திற்குப் புறப்பட்டார்கள்.
எமன் ஒருதரம் தன்னுடைய அரண்மனையிலிருக்கும் அந்தப்பெண்ணைப் பார்த்தான். தர்மராஜன் அல்லவா? அவனுக்கே சபலம் தட்டியது.
எனவே. அந்தப் பெண்ணிடத்தில் தன்னுடைய ஆசையை வெளியிட்டான் எமன். அவளும் ஆசையை வெளியிடுபவன் எமன் ஆயிற்றே என்ற காரணத்தால் சம்மதித்தாள்!
அக்கினி
இருவருக்குமிடையே நட்பு உதயமாயிற்று இந்த நட்புக்கிடையே எமனுக்கு ஒரு சந்தேகம். நாம் செய்கிற காரியம் யாருக்காவது தெரிந்துவிட்டால் என்ன ஆவது என்பதற்காக எமன், பகல் நேரத்திலே எல்லாம் அந்தப் பெண்ணை தன்னுடைய வயிற்றிலே போட்டு விழுங்கி விடுவது. இரவு நேரத்திலே மாத்திரம் தன்னுடைய பள்ளியறைக்குச் சென்று வெளியே துப்புவது. பிறகு இருவரும் பள்ளியறையிலே இன்பமாக இருப்பது. இது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடை பெற்று வருகின்ற எமலோகத்து காதல் காட்சி !
ஒரு நாள் குளிப்பதற்காக நீரோடைக்குச் செல்லுகிறான் எமன். குளிக்கிற நேரத்திலே வயிற்றுக்குள்ளே மப்புமந்தாரம் இருக்கக் கூடாதல்லவா ? எனவே, பக்கத்திலே இருந்த பளிங்கு மண்டபத்திலே அந்தப் பெண்ணைத் துப்பி உட்கார வைத்துவிட்டு, ‘இங்கேயே இரு, குளித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய் குளித்தான்.
அந்த நேரத்திலே அந்தப் பக்கமாக அக்கினி பகவான் வருகிறான். வந்தவன், பளிங்குமண்டபத்திலே இருக்கிற பாவையைப் பார்த்துவிடுகிறான். உடனடியாக அவனுக்குக் காதல் ஏற்படுகிறது. அவளும் சம்மதித்து விடுகிறாள்.
இருவரும் அந்தப் பளிங்குமண்டபத்திலே இன்பமாக இருக்கிற நேரத்தில் எமன் குளித்துவிட்டு அந்த வழியாக வருகிறான். அவன் பார்த்து விட்டால் ஆபத்து ஆயிற்றே என்று பயந்த அந்தப் பருவமங்கை. எமனை ஏமாற்றுவதற்காக அக்கினி பகவானைத் தூக்கி தன்னுடைய வயிற்றிலே போட்டு விழுங்கி விடுகிறாள்.
எமன், இவை எதுவும் தெரியாதவன் – பாவம். அவளை வழக்கம்போல் தன்னுடைய வயிற்றிலே தூக்கிப் போட்டு விழுங்கி விடுகிறான்.
அக்கினி பகவானைத் தேடிக்கொண்டு வந்த வாயு பகவான். எங்கே நண்பனைக் காணவில்லையென்று உலகமெல்லாம் தேடத் தொடங்கி விட்டான்.
இப்பொழுது ஞாபகத்திலே வைத்துக்கொள்ளுங்கள்.
பள்ளியறை
எமன் வயிற்றிலே அந்தப் பருவப் பெண், பருவப் பெண்ணின் வயிற்றிலே அக்கினி பகவான்!
பகல் நேரம் வந்தால் சும்மா இருக்கக் கூடாதே என்று, அந்தப் பருவப்பெண். எமன் வயிற்றுக்குள்ளேயே தன் வயிற்றிலிருக்கிற அக்கினி பகவானை உமிழ்ந்து, எமனுடைய வயிற்றையே பள்ளியறையாக பகல் நேரமெல்லாம் ஆக்கிக் கொண்டாள்.
பிறகு இரவு நேரத்தில் வழக்கம்போல் எமன் அவளை உமிழ்வதும், அவளோடு இன்பமாக இருப்பதும் வாடிக்கையாக இருந்தது.
இதற்கிடையே வாயுபகவான் உலகமெல்லாம் தேடுகிறான் ; அக்கினியைக் காணவில்லை. அக்கினி இல்லாவிட்டால் உலகம் இயங்குமா ? சிகரெட் பிடிக்க நெருப்பு எழுமா? அடுப்பெறிக்க விறகுக் கட்டையில் தீ வருமா?
எனவே, அக்கினியைக் காணாமல் உலகமெல்லாம் அலறுகிறது.
அந்த நேரத்திலே உலகைச் சுற்றிப் பார்க்கச்சென்ற ரிஷியும் ரிஷிபத்தினியும் தேவலோகம் திரும்புகிறார்கள். பெண்ணைக் காணவில்லை, ஒன்றும் புரியவில்லை. முறையிடுகிறார்கள்.
அந்த நேரத்திலே வாயு பகவான் – இந்த விஷயங் களையெல்லாம் இரகசியமாகத் தெரிந்து வைத்துக் கொண்டு ஒற்றனாக இருக்கிற வாயு பகவான் – இதை வெளிப்படுத்த வேண்டும் என்று தேவர்களுக்கு விருந்து வைத்து, சிறப்பு விருந்தினர்களாக சிவன், விஷ்ணு, பிரம்மா. எமன் அனைவரையும் அழைக்கிறான். தேவேந்திரன் உட்பட.
அனைவரும் வருகிறார்கள். பெற்றோர்களும் வந்திருக்கிறார்கள்.
மூன்று இலை
எமனிடத்திலே மாத்திரம் மூன்று இலைகள் போடச் சொல்கிறான் வாயு பகவான்.
சிவன், ‘என்ன அவனுக்கு மாத்திரம் மூன்று இலைகள் ? எங்களையெல்லாம் அவமதிக்கிறாயா?’ என்று கேட்கிறார்.
‘இல்லை இல்லை ; கொஞ்சம் பொறுங்கள்’ என்று சொல்லிவிட்டு, எமனைப் பார்த்து, ‘எமனே, உன்னுடைய வயிற்றிலே இருக்கின்ற அந்தப் பெண்ணை வெளியே உமிழ்வாயாக!’ என்றதும், எமன் எதுவும் சொல்ல முடியாமல் அந்தப் பெண்ணை வெளியே உமிழ்கிறான்.
அந்தப் பெண் வெளியே வந்து இன்னொரு இலையிலே உட்காருகிறாள்.
இரண்டு இலை – இரட்டை இலை – ஆயிற்று! ஆனவுடன் அவர் கேட்கிறார் ; ‘சரி மூன்றாவது இலை எதற்காக?’ என்று எமன் ஆத்திரத்தோடு கேட்கும் பொழுது, வாயுபகவான், அந்தப் பெண்ணைப் பார்த்து ‘பத்தினித் தங்கமே! உன் வயிற்றுக்குள் இருக்கின்ற என் ஆருயிர் நண்பன் அக்கினி பகவானை தயவுசெய்து வெளியே அனுப்பு’ என்று சொல்லுகிறான்.
உடனே அவள் நடுங்கி வயிற்றுக்குள் இருந்த பகவானை வெளியே உமிழ, அக்கினி பகவான் வெளியே வருகிறான். அவன் வெளியே வருகிற அந்த நடுக்கத்தில் அந்தப் பெண்ணுடைய முகத்திலே இருக்கின்ற தாடி, மீசையெல்லாம் பொசுங்கிவிடுகிறது.
பொசுங்கல்
அதுவரையிலே உலகத்தில இருந்த பெண்களுக்கு ஆண்களைப் போல முகத்திலே தாடி, மீசை இருந்தது. கதைப்படி !
அக்கினி வெளியே வந்த நடுக்கத்திலே தாடி, மீசை யெல்லாம் பொசுங்கிற்றல்லவா! அதுமுதல் உலகத்திலே பிறந்த எல்லா பெண்களும் தாடி மீசை இல்லாமலே பிறக்கிறார்கள். இது ஒரு கதை!
இப்படிப்பட்ட கதைகளையெல்லாம் இன்னமும் நம்பிக்கொண்டு உலகத்திலே நடைபெறுகின்ற எல்லா விதமான நடவடிக்கைகளுக்கும் புராணப்படி- வைதீகப்படி சனாதன கருத்துப்படி கதைகளைக் கட்டிவைத்துக் கொண்டு எவ்வளவு நாளைக்கு இந்தச் சமுதாயம் ஏமாறுவது? என்ற கேள்வியின் அடிப்படையில் எழுந்த பதில்தான் தன்மான உணர்வு! பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம் இவைகள் எல்லாம் இந்த நாட்டில் தோன்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மேல்நாட்டில்
இங்கே இருப்பதைப் போல மேல் நாடுகளிலும் கடவுள்கள் இல்லாமல் இல்லை. அந்தக் கடவுள்கள் எல்லாம் இன்றைய தினம் மாஜிகடவுள்களாக ஆகி விட்டார்கள்.
அந்தக் கடவுள் சிலைகள் எல்லாம் அங்குள்ள பொருட்காட்சிகளில் கண்காட்சிகளாக வைக்கப்பட்டு, உலகத்திலே இருக்கின்ற சுற்றுப்பயணிகள் பார்த்துக் களிக்கக் கூடிய நிலைமையில் அந்தக் கடவுள்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆனால், இங்கே நாம் ஆயிரக்கணக்கான கடவுள்களை வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
அய்யா சொன்னால் கோபம் வரலாம். அண்ணா சொன்னாரே என்று ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். கருணாநிதி சொல்வதற்குக் கடும் ஆத்திரம் கிளம்பலாம்; வீரமணி சொல்கிறாரே என்பதற்காக வெறுக்கலாம்.
‘தேசிய கவி’
தேசியகவி சுப்பிரமணியபாரதி என்ன சொன்னார்!
”ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்!’
இந்த வார்த்தையைப் பெரியார்கூட இவ்வளவு தாராளமாகப் பயன்படுத்தவில்லை. அண்ணாகூட பயன் படுத்தவில்லை – இவ்வளவு தாராளமாக !
”ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்!”
என்று தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பாடவில்லையா!
எனவேதான் நாம் ஆயிரக்கணக்கான தெய்வங் களுக்கு – நூற்றுக்கணக்கான ஜாதிகளுக்கு மத வேறுபாடு களுக்கு – நம்மைப் பலி கொடுத்து விட்ட காரணத்தால் நம்மை உட்படுத்திக் கொண்டு, ஆட்படுத்திக் கொண்டு விட்ட காரணத்தால் இந்தச் சமுதாயத்தினுடைய முன்னேற்றமே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலம் பின்னோக்கிக் கிடக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
வளரும் நாடுகள்
உலகத்திலே வளர்ந்து வரும் நாடுகளையெல்லாம் பார்க்கிறோம். சீரிழந்த ஜப்பான் இன்றைக்கு சிங்கார புரியாக வளர்கிறது.
உடைந்து நொறுங்கிப் போய்விட்ட ஜெர்மானிய நாடு இன்றைக்கு உல்லாச பயணிகளையெல்லாம் வரவேற்கின்ற உற்சாகப் பூமியாக விளங்குகின்ற காட்சியைக் காணுகிறோம்.
லண்டன் மாநகரம் குண்டுகளால் பாழடிக்கப்பட்டதுண்டு . ஆனால் இன்றைக்கு லண்டன் மாநகரமானாலும் இங்கிலாந்து தேசமானாலும் அங்கே வளமான வாழ்வு, விஞ்ஞான யுகத்தை நோக்கிச் செல்லுகின்ற வாழ்வு. இருப்பதைப் பார்க்கிறோம்.
காணப்படாத கண்டமாக இருந்து ஆங்கிலேயர்கள் முதலிலே குடியேறி, பிறகு அவர்களே தங்களுடைய நாடு என்று உரிமையாக்கிக் கொண்டு வளர்ந்து வந்திருக்கின்ற அமெரிக்கத் திருநாடு – நாம் இங்கே நின்று குழந்தைகளுக்கு கண்ணாடியிலே காட்டிக் கொண்டிருக்கின்றோமே, ‘அம்புலி பார் அம்புலி பார்!’ என்று. அந்த அம்புலியினுடைய உலகத்திலேயே, தன்னுடைய காலடியை எடுத்து வைத்துவிட்டுத் திரும்பி இருக்கிறது என்றால் இவைகள் எல்லாம் விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சி இல்லையா?
இளைஞர்கள்
அந்த விஞ்ஞானத்தைப் போற்றி வளர்க்க – அதிலே நாம் வலிவு பெற்ற நிலையை உண்டாக்க – விஞ்ஞான ரீதியாக ஒரு சமுதாயத்திலே ஏற்பட்டிருக்கின்ற மூடநம்பிக்கைகளை யெல்லாம் தகர்த்தெறிய இளைஞர்களால் தான் முடியும்.
எனவே, அந்த இளைஞர்களை நம்பித்தான் எதிர் காலம் இருக்கிறது; தமிழகம் இருக்கிறது; இந்தியா இருக்கிறது ; இந்த உலகம் இருக்கிறது. எனவே, அந்தத் தமிழ் இளைஞர்களையெல்லாம் நான் அழைக்கிறேன். அத்தகைய முன்னேற்றம் காணவாருங்கள். வாருங்கள் என்று அழைக்கிறேன்.
மாணவர் தலைவர் இங்கே பேசும்போது – கருணாநிதி வாலிபனாக இருந்தபோது பாடிய பாட்டு என்று சொன்னபோது எனக்கே கூட சங்கடமாகத்தான் இருந்தது.
நினைவுகள்
வாலிபனாக இருந்தபோது இப்படி வழுக்கைத் தலையோட இருந்தேன்? இல்லை இதே ஈரோட்டில் நான் காளை போல் நடமாடிய காலம் உண்டு. என்னுடைய இளவல் கி. வீரமணி அவர்கள் சின்னஞ் சிறுவனாக மேடையில் ஏறிப் பேசிய அந்தக் காலத்தில் நான் இளைஞனாக இருந்து எழுதிய பாடல்களில் சிலவரிகளை இங்கே மாணவர் தலைவர் முகமது அலி பாடிக் காட்டினார்கள்.
“பாராட்டி போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்” என்று எழுதியதைப் பாடிக் காட்டினார்கள். எனக்கு எத்தனையோ பசுமையான நினைவுகள்.
1944-45-ம் ஆண்டுகளில் பெரியாரோடு இந் நகரில் வாழ்ந்த அந்தக் காலத்தை எல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்.
புதுவை மாநிலத்தில் கயவர்களால் தாக்கப்பட்டு செத்து விட்டான் என்று சாக்கடையில் வீசி எறியப்பட்ட என்னைத் தூக்கியெடுத்து எந்தக்கரம் என்னுடைய நெற்றியில் காயங்களுக்கு மருந்திட்டதோ அந்தக்கரம் இன்றைக்கு இல்லையே என்கிற கவலையோடுதான் ஈரோட்டு நகரில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
புதுவையில்
ஈரோட்டுப் பாசறையில் இருந்து நான் பல கவிதைகளை எழுதியிருக்கிறேன். தமிழர்களுடைய புறநானூற்றுப் பெருமைகளை விளக்குகின்ற கவிதைகளும் எழுதியிருக்கிறேன். அதிலே ஒரு கவிதையைச் சொல்ல விரும்புகிறேன்.
(கலைஞர் கவிதையை உணர்ச்சியுடன் கூறி முடிக்கிறார்)
(பலத்த கைதட்டல்)
இந்த புறநானூறு பற்றிய விளக்கக் கவிதையை எழுதிய கரம்தான் இந்தக் கரம்! இந்தக் கரத்திற்கு எழுச்சியை ஊட்டியது தந்தை பெரியாரின் கரம்! இதற்கு எழில் சேர்த்தது அண்ணாவின் கரம்! எழுதுவதுதான் என் கரம் என்றுகூறி, இத்தகைய கரங்களை வலுப்படுத்த வாரீர்! வாரீர் என்று அழைத்து விடைபெறுகிறேன்!”
[5-9-80 அன்று புதுவையில் புதுவை அரசு எடுத்த முப்பெரும் விழாவிலும், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு]
(முற்றும்)