தாய்மொழி காப்போம்

கவியரசு முடியரசன் அவர்கள் தாய்மொழியான தமிழைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

DOWNLOAD :

(Available Formats)

கவியரசு முடியரசன் (இயற்பெயர்: துரைராசு, 1920-1998) அவர்கள் தாய்மொழிப் பற்றுக்கும், தமிழைப் போற்றுவதற்கும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒரு தலைசிறந்த கவிஞர். “தாய்மொழி காப்போம்” என்பது அவரது ஆழ்ந்த மொழிப் பற்றையும், தமிழின் மீதான அவரது அன்பையும் வெளிப்படுத்தும் ஒரு முழக்கம். கவிஞர் முடியரசன் ‘தாய்மொழி காப்போம்’ என்ற முழக்கத்தை வெறும் வார்த்தைகளாகப் பார்க்கவில்லை; அது தமிழ் மக்களின் அடையாளம், பண்பாடு, எதிர்காலம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு உயிர்நாடியாகக் கருதினார்.

தாய்மொழி காப்போம்

கவியரசு முடியரசன்

பதிப்புரை

“ஆங்கில மொழிப்பற்றால் நம் தாய்மொழியைக் கீழ்நிலைக்குக் கொண்டுவந்து விட்டோம். நம் மொழியை கேலிக்குள்ளாக்குவதன் மூலம் நம்மை நாமே கேலிக்குள்ளாக்கிக் கொள்கிறோம். மேலை நாடுகள் செல்லுகின்ற இந்தியர்கள் நம் மொழியை மறக்கின்ற பழியினைச் செய்ய வேண்டாம். இந்தியநாடு விடுதலை பெறுவதற்கான வழிகளில் ஒன்று ஆங்கிலத்தை ஒழிப்பதாகும்.” காந்தியடிகள் சொன்ன வரிகளை இந்த நேரத்தில் தமிழர்கள்முன் நினைவூட்டுகிறோம்.

உலக மக்கள் பலரும் தம் கையெழுத்தைத் தாய்மொழியில் போடுகின்றனர். அந்தோ! தமிழர்கள் தம் கையெழுத்தை ஆங்கிலத்தில் போடும் விந்தையை இங்கன்றி எங்கும் காணோம்.

மறஉணர்ச்சியும், உரைநயமும், சொற்செறிவும், சொல் இனிமையும்,சொல் வளமும், சொல் சுருக்கமும், சொல் தெளிவும் ஒருசேர அமைந்த சிறப்புமிக்க மொழி என்று உலக அறிஞர்களால் பாராட்டப்பட்ட மொழி நம் தாய்மொழியாம் தமிழ்மொழி. தமக்கெனத் தாமே எழுத்துகளை வகுத்துக்கொண்டமொழி தமிழ்மொழி.

வடமொழியும், இலத்தின் மொழியும், பாலி மொழியும், கிரேக்க மொழியும், அரபிக்மொழியும் (ஹீப்ரு மொழி) எனும் இப்பழம்பெரும் மொழிகள் அனைத்தும் சிதறிப்போன நிலையில், சிதையாசிரிளமைத்திறத்துடன் வாழும் நம் தாய்மொழி தமிழ்மொழி என்பதனை தமிழர்களே அறியாமல் வாழும் அவலத்தையாரிடம் சொல்லி அழுவது?

தன் மொழியையும், தன் இனத்தையும், தன் நாட்டையும், தன் பண்பாட்டையும், தன் நாகரிகத்தையும் உயர்வாகக் கருதிய எந்த இனமும் உலகில் உயர்ந்துநிற்கும் காக்கத்தவறிய எந்த இனமும் உயர்ந்ததாக வரலாறு இல்லை. சிறந்த மொழியை பெற்றவர்கள் தமிழர்கள். அத்தமிழர்கள் அம்மொழியில்பேசவும், கற்கவும், கையெழுத்திடவும் தயங்குவதுகண்டு உலகம் நம்மைப்பார்த்து சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நூலுக்கு அணிந்துரை நல்கி பெருமைப்படுத்திய திராவிட இயக்கக் கொள்கைகளில் ஆழமான பிடிப்புக் கொண்டவரான புலவர் இளஞ்செழியன் அவர்களுக்கு எம் நன்றி.

பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரையின் முன்னோடிப் பாவலரும், திராவிட இயக்கக் கொள்கைகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவரும் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் பெரியார் இவர்களின் கொள்கை வழிநின்று தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு மேன்மையுற வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் திராவிட இயக்க முதுபெரும்பாவலர் முடியரசன் ஆவார்.

“கெடல் எங்கே தமிழின் நலம்.
அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க”

எனும் பாவேந்தர் வரிகளை நினைவூட்டி மொழி அழிந்தால் இனம் அழியும் உணர்வினை முன்வைத்து ‘தாய்மொழி காப்போம்’ எனும் இந்நூலினை தமிழர்களின் கைகளில் தவழவிடுகிறோம்.

கோ. இளவழகன்

 

 

 

கொள்கை வாள்!

இனமானச்செம்மல் புலவர் இளஞ்செழியன் எம்.ஏ.,

“தாய்மொழி காப்போம்” என்ற
தண்டமிழ்க் கவிதைக் காட்டுள்,
தோய்ந்ததென் உள்ளம்! சங்கத்
தொகைநூலைப் படிப்பதைப்போல்
பாய்ந்ததென் விழிகள்! பாட்டின்
பகர்பொருள் யாவற் றையும்
ஆய்ந்ததென் அறிவு! ஆகா,
அற்புதம் கவிஒவ் வொன்றும்!

முடியா சாயி ருந்த
முத்தமிழ்க் கவிஞர், பாடி
முடிக்கா தெதுவும் இல்லை!
முழுவதும் தமிழைக் காக்கும்
அடிகளே யாகும்! கையால்
ஆகாத தமிழர்க்கெல்லாம்
தடியடி தருகின் றாரே,
தரும்ஒவ்வொர் கவிதை தோறும்!

செந்தமிழ்க் கவிஞர், செப்பும்
சேதிகள் சிலிர்க்க வைக்கும்!
இந்தியை எதிர்க்கும் பாடல்
இப்போதே கிளம்ப வைக்கும்!
வந்ததைக் கவிதை யாக்கும்
வரம்பிலார் நடுவில், யாப்புச்
சந்தனக் கவிஞர், அன்னார்
சங்கத்துப் புலவர் என்பேன்.

 

‘ஐக்கூ’என் றாடு வோரை
‘அடிமைகள்’ எனக்கு றித்தார்.
மைக்குழல் தமிழ்ப்பெண் ணாள்மேல்
மலையென மனம்கு வித்தார்!
தைக்கவே எழுது கின்ற
தனித்திறன் என்னே! என்னே!
வைக்கவே முடிய வில்லை
வாசித்தேன் சுவாசித் தேனே!

உணவினை ஊட்டு தல்போல்
உணர்வினை ஊட்டு கின்றார்!
பணம்பண்ணப் பாடி டாத
பண்பாட்டுக் கவிஞர், நாளும்
கணந்தோறும் சிந்த னையால்
கவிதையாய் வாழ்ந்திட் டாரே!
மணந்திட்ட மரபு முல்லை!
மறைந்தது இன்று இல்லை!

பலரையும் பாட்டுக் குள்ளே
பாவலர் போற்று கின்றார்!
இலரையும் உளராய், அன்னார்
எழுத்துரு வாக்கும்! இந்தப்
புலவரைப் பின்தொ டர்வேன்!
போர்க்குணம் பெறுவேன்! எந்தக்
களரையும் கழனி யாக்கும்
கவிதைகள் தருவேன் நானும்!

வார்த்தைகள் அல்ல, தெற்கு
வரலாறு, மானம், வீரம்,
வார்த்தெடுத் துள்ளார் பாட்டில்!
வழிவழித் தமிழர் வாழ்வைச்
சேர்த்துச்சேர்த் தெழுது கின்றார்
சிந்திக்க வைக்கின் றாரே!
நேர்த்திகொள் வீணை செய்தே
நீட்டினார் என்று சொல்வேன்!

 

கோஇள வழகன், தமிழ்மண்
கொண்டலாய்த் தோன்றி யிங்கே
பாமுடி யரசர் கீர்த்தி
பாரெலாம் பரவு தற்கே
தாவெனக் கூறா முன்னம்
தருகிறார் அவர்ப டைப்பை!
மாபெரும் பதிப்புத் தொண்டில்
மணிமுடி சூடு கின்றார்!

காரைக்கு டியார்ந மக்குக்
கவிதைகள் என்னும் பேரில்
கூரிய வாள்தந் துள்ளார்!
கொள்கைவாள் அதுதான்! அந்த
ஆரிய சூழ்ச்சி தன்னை
அடித்துமே நொறுக்கி யுள்ளார்!
நீர் இதைப் படித்துப் பாரீர்!
நிமிருவீர்! தமிழன் ஆவீர்!

 

முன்னுரை

என் தந்தையார் கவியரசர் முடியரசனாரின் படைப்புகள் பல நூல்வடிவில் வெளிவராமல் இருந்த நிலையில், அவற்றை வெளியிட விரும்பிப் பல தொகுதிகளாகப் பிரித்துத் தொகுத்து அவற்றில் ஒன்றாகிய ‘தாய்மொழி காப்போம்’ எனும் இத் தொகுப்பிற்கான தலைப்பையும் ‘போராட்ட உணர்வு வேண்டும்’ எனும் முன்னுரையையும் கவிஞரிடம், 1990ஆம் ஆண்டே பெற்றும், பல சூழல்களாலும், எந்தை நெடுங்காலமாக உடல் நலிவுற்றிருந்ததாலும், நூல் தொகுப்பிற்கான அறிவுரைகளை அவர் வழங்க இயலாததாலும், இத் தொகுப்பை வெளியிட இயலாமல் இருந்தது.

இந்நிலையில் 1998ஆம் ஆண்டு தந்தை மறைந்துவிட்டார். பின்னர் 2001ஆம் ஆண்டு சென்னை தமிழ் மண் பதிப்பகம் மூலம் இந்நூலை முதல் பதிப்பாக வெளிக் கொணர்ந்தேன்.

இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலங்களிலும், பிறமொழி ஆளுமையைக் கண்ட கொதிப்பிலும், தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி செலுத்த வேண்டும்  என்ற துடிப்பிலும் கவிஞரின் நெஞ்சக் குமுறலில் வெடித்துச் சிதறியவை. இவைகளில் கவியரங்கத் தலைமையேற்றவை ஒரு சில; மற்றவை பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை.

தாய்மொழி காப்பதற்குத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இந்நூலை வாளும் கேடயமுமாய்த் தம் கைகளில் ஏந்த வேண்டுகின்றேன்.

உலகின் முதன் மொழியும், தொன்மொழியுமாகிய நம் தென் மொழியைத் தமிழராகிய நாம் போற்றிப் பாதுகாக்கத் தவறி வருகின்றோம். செம்மொழியாம் நம் மொழியின் அருமை பெருமை களைப் பிறநாட்டார் அறிந்த அளவு கூட நம்மில் பலர் அறிய வில்லை. நாம் இப்படியே நம் தாய் மொழியைப் புறக்கணித்தோமானால் காலச்சுழற்சியில், தமிழ், தமிழன் என்ற அடையாளமே இல்லாத நிலை ஏற்படும். முன்னொரு காலத்தில் ‘தமிழ்’ என்று ஒரு மொழி இருந்தது எனவும், இம்மொழி பேசியவர்கள் ‘தமிழர்’ எனவும், எதிர்காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் கூடப் படிக்க இயலாது.

சாதிக்குச்சங்கம் வைத்துச் சண்மையிட்டு அழியும் தமிழர்கள், நம் மொழி, இனம் அழிந்தபின் அவர்கள் சாதியை எங்கே போய்த் தேடுவர்?

நாம் பிறமொழியை அழிக்க நினைக்கவில்லை. பிறமொழி எதையும் கற்கக் கூடாது என்றும் கூற வில்லை, பிறமொழி நம்மீது திணிக்கப்படு வதைத்தான் எதிர்க்கின்றோம். நம் மொழியைப் பிறர் மீது திணிக்கவில்லை; நம் மொழியைக் காக்கத்தான் துடிக்கின்றோம்.

தாய்மொழிப் புறக்கணிப்பு நம்மவர் செய்வது போல உலகின் எம்மொழியினரும் செய்வதில்லை. பிறமொழியினர், தம் தாய் மொழியைப் போற்றிப் பயிற்று மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் வளர்த்து முன்னேறுகின்றனர். உலகில் உள்ள பல நாடுகளிலே தாய்மொழியைத் தவிர்த்துப் பிறமொழியைப் பயன் படுத்துவதை அவமானமாகக் கருதுகின்றனர். ஆனால் அடிமை எண்ணம் கொண்ட தமிழ் நாட்டினர்தாம், அரைகுறை ஆங்கிலச் சொல் கலந்து பேசுவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். செருமனியில், செருமானிய மொழியை விடுத்து, ஆங்கிலத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தினால், நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை விதிக்கப்படுகிறது. சப்பானியர்கள் தங்கள் தாய் மொழியைப் போற்றியதன் விளைவாகவும், தாய்மொழியில் கல்வி கற்றதன் பயனாகவும்தான், உலகப் பெருவல்லரசான அமெரிக்காவையே அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும்,  பொருளாதாரத்திலும் இன்று வென்றுகொண்டிருக்கின்றனர். எந்த நிலையிலும் அவர்கள் பிறமொழிக்குப் பல்லக்குத் தூக்குவதில்லை. அவர்களை யெல்லாம் ‘மொழி வெறியர்’ என்றோ, ‘குறுகிய மனத்தினர்’ என்றோ யாரும் கூறுவதில்லை. இங்கோ தமிழர்களைத் “தமிழில் பேசுக, எழுதுக, கற்க” என்றால் அதனைக் கேலி செய்கின்றனர். என்னே கொடுமை? எங்ஙனம் தமிழன் உருப்படுவான்?

“என்று தணியும் இந்தப் பிறமொழி மோகம்?” என்று கதறிப் பாட இன்று பாரதியார் இல்லை, ஆனால்…. இதோ முடியரசனார் கவிதை இருக்கிறது. கதறி அழ அல்ல; குமுறி எழ; சிங்கமெனச் சீறி எழ.

கவிச்சிங்கம் முடியரசனார் அவர்கள் தமிழ்மேல் தீராத்தாகம் கொண்டவர். இத்தொகுப்பில் உள்ள கவிதை ஒவ்வொன்றும் அவரின் தாய்மொழிப் பற்றினைப் பறைசாற்றும். தாய்மொழி காப்பதில் கவிஞரின் புரட்சி உணர்வை, எழுச்சியை இக் கவிதைகளைப் படிப்போர் அறிவது மட்டுமல்லாது, அவர்தம் உள்ளமும் பாயும்; சிங்கமெனச் சீறி எழும்; எழுக, வெல்க!

தாய்மொழி காப்போம்! முத்தமிழுக்கு முடிசூட்டுவோம்!

19, 3ஆம் வீதி, காந்திபுரம்,
அன்பன், காரைக்குடி – 630 001

அன்பன்,
 மு.பாரிமுடியரசன்

 

போராட்டவுணர்வு வேண்டும்

செருமன் நாட்டுக் கிறித்துவ அடிகளார் ‘சீன்சிலோபாக்’ என்பவர், ஆசிய நாடுகளிற் சுற்றுப் பயணம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே அவர்க்கு வரவேற்பளித்த ‘கான்டர்பரியார்’ என்னும் அடிகளார், “இவ்வளவு சிறப்பு வாய்ந்த பேரறிஞரான அடிகளாரை ஓர் உயர்ந்த மொழியிலே நான் வரவேற்க விரும்புகிறேன். அப்படி வரவேற் பதற்கேற்ற உயர்ந்த மொழியான இலத்தீன் மொழியில் வரவேற் பிதழைப் படித்துத் தருகிறேன்” என்று கூறி வரவேற்பிதழைப் படித்துக் கொடுத்தார்.

வரவேற்பை ஏற்றுக் கொண்ட அடிகளார், ‘உள்ளன் போடு என்னை வரவேற்க வேண்டும் என்பதற்காக ஓர் உயர்ந்த மொழியில் வரவேற்பளித்தீர்கள். நானும் என் உள்ளன்பைக் காட்ட ஓர் உயர்ந்த மொழியிற்றான் நன்றி கூற வேண்டும், அப்படிப்பட்ட உயர்ந்த மொழியாகிய தமிழ் மொழியிலேதான் எனது நன்றியைச் சொல்ல வேண்டும்’ என்று கூறித் தமிழால் நன்றி கூறினார்.

இத்தாலி நாட்டறிஞர் ‘போப்பையர்’ தமிழின் பாற் கொண்ட பற்றினால் தம்மைத் தமிழ் மாணவன் என்று தமது கல்லறையிற் குறிப்பிடுமாறு சொன்னார். மதத்தைப் பரப்ப வந்த ‘கால்டுவெல்’ அடிகளாரின் மனத்தைக் கவர்ந்து கொண்டது தமிழ். இத்தாலி நாட்டுப் பேரறிஞர் ‘பேசுகி’யை வீரமா முனிவராக்கி வென்றாண்டது தமிழ். சோவியத்து நாட்டுத் தோழர் ‘ரூதின்’ செம்பியன் ஆனார். செந்தமிழ்ப் பற்றால் ‘இலக்கியச் செல்வப் பெருக்குடைய தமிழர்களாகிய நீங்கள் ஏன் இன்று வறியர் போலக் கிடக்கிறீர்கள்?” என ‘ஈரான்’ அடிகளார் ஏத்திப் புகழ்ந்தார்.

இவ்வாறு பிறநாட்டு நல்லறிஞரையெல்லாம் வாயாரப் புகழ வைத்த பெருமை வாய்ந்த தமிழ் மொழிக்கு முற்றுரிமை படைத்த இத்தமிழ் நாட்டிலேதான் “தமிழா இனவுணர்வு கொள், தமிழா மொழியுணர்வு கொள்”, என்ற முழக்கம் நாற்புறமும் பறைசாற்றப்படுகிறது.  ‘தமிழே வேண்டும்; எங்குந் தமிழ், எதிலுந்தமிழ், எல்லாந் தமிழ்’ என்ற உரிமை வேட்கை ஒருபால் ஒலிக்கிறது. அதே நேரத்தில் ‘யாதும் ஊரே யாவருங் கேளிர் என உலகப் பொதுமையும் மாந்தப் பொதுமையும் பேசிய தமிழ்மகன், இனமென்றும் மொழி யென்றும் பிரித்துப் பேசுவது குறுகிய மனப்பான்மையன்றோ? வெறுப் புணர்வை வெளிப்படுத்துவதன்றோ?’ என்ற ‘ஞானோபதேச’மும் பரப்பப்படுகிறது.

மொழிப்பற்றும் இனப்பற்றும் குறுகிய நோக்க மென்றோ பிறர்மேற் காட்டும் வெறுப்புணர்ச்சி யென்றோ விளம்புவது, தன்னலத்தை உள்ளடக்கிய தகவிலாக் கூற்றாகும். மற்றவர் விழித்துக் கொள்வரேல் தமது நலத்துக்குக் கேடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சவுணர்வே அவ்வாறு திரிபுரை கூற வைக்கிறது. இனவுணர்வும் மொழியுணர்வும் இல்லா மாந்தன் தமிழகத்தைக் தவிர வேறு எங்கே யிருக்கின்றான்? ஏனைய நாட்டினர் இனவுணர்வும் மொழியுணர்வும் இயல்பிலே உடையராய்ப் பரந்த மனப்பான்மை பேசுவர். தமிழன் ஒருவன்தான் தன்னையும் தாய் மொழியையும் மறந்துவிட்டுப் பரந்த மனப்பான்மை பேசிப் பாழாவான்.

தாய்மொழிப் பற்றுடைமை குறுகிய நோக்கமென்று கூறினால், காந்தியடிகள் தம் தாய் மொழியாகிய குசராத்தி மொழியிற்பற்று வைத்திருந்தது குறுகிய நோக்கமா? இரவீந்திரநாத் தாகூர் தம் அன்னை மொழியில் அன்பு வைத்திருந்தாரே, அது குறுகிய நோக்கமா? “தாய் மொழிப் பற்றுத்தான் தாய்நாட்டுப் பற்றுக்கு அடிப்படை” என்று தமிழ்ப் பெரியார் திரு.வி.க. தெளிந்துரைத்தது குறுகிய நோக்கமா? “மூச்சு இரைக்க அடி வயிற்றிலிருந்து கடுமையான ஒலிகளை எழுப்பிப் பொருள் விளங்காத ஒரு நிலையில் வடமொழியில் உன்னைப் பாடுகிற நிலைமையை எனக்கு ஏற்படுத்தாமல், நல்ல தமிழில் – இன்பத் தமிழில் உன்னைப் பாடுவதற்கு எனக்கு அருள் புரிந்த ஆண்டவனே உன்னை நான் போற்றுகிறேன்; நன்றி செலுத்துகிறேன” என எழுதியுள்ள இராமலிங்க அடிகளார் குறுகிய நோக்கினரா?

சூரியநாராயண சாத்திரியார் தமது பெயரைப் பரிதிமாற் கலைஞன் எனத் தமிழிற் பெயர்த்து வைத்துக் கொண்டாரே அது குறுகிய நோக்கமா? “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்குங்காணோம்” எனப் பாடிய பாரதியுமா குறுகிய நோக்கினர்?

“தமிழன் என்றோ ரினமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்”

என்று நாமக்கல் கவிஞர். வெ. இராமலிங்கனார் கூறவில்லையா?  தமிழ் மொழியிற் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுது வது பற்றியும் பேசுவது பற்றியும் கருத்து வேறுபாடு நம்மவரிடையே தலைதூக்கி நிற்கிறது. கலக்கலாம் என்று வாதிடுவோர், சோவியத்து ஒன்றியத்தை உருவாக்கிய சிற்பி வி.ஐ.இலெனின் சொற்களைக் கண்விழித்துப் பார்க்கட்டும்.

“நாம் உருசிய மொழியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவையின்றி அயன்மொழிச் சொற்களை எடுத்தாளும் போதும் தவறாகவே ஆண்டு வருகிறோம். உருசிய மொழியில், NEDOCHOTY, NEDOSTATKI, PROBELY என்றும் சொற்கள் இருக்கையில் அயன் மொழிச்சொற்களை நம்முடைய மொழியில் ஏன் எடுத்தாள வேண்டும்?……. தேவையின்றி அயன்மொழிச் சொற்களைப் பயன் படுத்துவதன் மீது ஒரு போரையே தொடுக்கவேண்டிய நேரம் இது வன்றோ?” உலகத் தொழிலாளரை ஒன்றுபடுத்தப் போராடிய இலெனின் சொற்கள்தாம் இவை. இனியேனும் மொழிக்கலப்பாளர் திருந்துவரா?

மொழியின் உரிமைக்கும் இனத்தின் விடுதலைக் கும் உரத்த குரல் எழுப்புவதுதான் இயற்கைக் கூறு. இனமும் மொழியும் அடிமைப்பட்டுக் கிடக்க அதனை மறந்தோ மறைத்தோ உலகப் பொதுமை பேசுவது இயற்கைக்கு முரண்பட்டதாகும். நடுவு நிலைமையுடன் எண்ணிப் பார்க்கும் எவரும் அம் முரண் பாட்டை ஏலார். இனமும் மொழியும் ஏற்றம் பெறுமிடத்தேதான், பொது மையோ புதுமையோ நிலைத்தவையாக உண்மையானவையாக மிளிர இயலும். இன்றேல் பொதுமையும் புதுமையும் வெறுமையாகும். ஆதலின் மொழியுணர்வு கொள்க, மொழித் தொண்டு புரிந்தோரைப் போற்றி இனவுணர்வு கொள்க.

இதனை யுணர்ந்து கொண்ட தமிழ்நாடு இந்த நல்வழியில் முனைந்து நிற்பது வரவேற்கத் தக்கதே. ஏய்ப்பும் எதிர்ப்பும், தடுப்பும் மறுப்பும் ஏற்படுங்கால் அஞ்சலும் துஞ்சலுங் கெடுத்து, மயக்கமும் தயக்கமும் விடுத்து, ஆண்மையும் வாய்மையுங் கொண்டு, அவற்றை எதிர்த்துத் தகர்த்தல் வேண்டும். தன்னிலை மறந்து தமிழ்மகன் மெய்ந்நிலை பெறுதல் வேண்டும். இத்தகு போராட்டவுணர்வு ஒன்றுதான் இன்று தேவை. இத்தேவையை உணர்ந்தே அதற்கேற்ற பாடல்கள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மேலும் தமிழுக்குத் தொண்டு செய்த பெரியார்கள் பற்றிய பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன, தமிழ் காக்க அவை உறுதுணையாகும் என்பதால். உணர்க! எழுக! வருக! தாய்மொழி காப்போம். காரைக்குடி

காரைக்குடி
1.11.1990

அன்பன்
 முடியரசன்

 

 

 

கவியரச முடியரசன்
 வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் : துரைராசு
பெற்றோர் : சுப்புராயலு – சீதாலெட்சுமி
பிறந்த ஊர் : பெரியகுளம்.
வாழ்ந்த ஊர் : காரைக்குடி
தோற்றம் : 7.10.1920 – இயற்கையடைவு : 3.12.1998
கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 – 39)
    வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43)
பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை , (1947 – 49).
    மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 – 78)
திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிச் சாதிமறுப்புத் திருமணம்)
துணைவியார் : கலைச்செல்வி

 

மக்கள்:   மருமக்கள்:   பேரப்பிள்ளைகள்:
குமுதம் +: பாண்டியன் = அருள்செல்வம்,திருப்பாவை
பாரி +: பூங்கோதை = ஓவியம்
அன்னம் +: சற்குணம் = செழியன், இனியன்
குமணன் +: தேன்மொழி = அமுதன், யாழிசை
செல்வம் +: சுசீலா = கலைக்கோ, வெண்ணிலா
அல்லி +: பாண்டியன் = முகிலன்

இயற்றிய நூல்கள்

  1. முடியரசன் கவிதைகள் (கவிதைக் தொகுதி) … 1954
  2. காவியப் பாவை … 1955
  3. கவியரங்கில் முடியரசன் …1960
  4. பாடுங்குயில் … 1983
  5. நெஞ்சு பொறுக்கவில்லையே … 1985
  6. மனிதனைத் தேடுகின்றேன் … 1986
  7. தமிழ் முழக்கம் … 1999
  8. நெஞ்சிற் பூத்தவை … 1999
  9. ஞாயிறும் திங்க ளும் … 1999
  10. வள்ளுவர் கோட்டம் … 1999
  11. புதியதொரு விதி செய்வோம்…. 1999
  12. தாய்மொழி காப்போம் … 2009
  13. மனிதரைக் கண்டு கொண்டேன் …. 2005
  14. பூங்கொடி (காப்பியம்) … 1964
  15. வீரகாவியம் (காப்பியம்)… 1970
  16. ஊன்றுகோல் (காப்பியம்)… 1983
  17. இளம்பெருவழுதி … 2008
  18. எக்கோலின் காதல் (சிறுகதைத் தொகுப்பு) … 1999
  19. அன்புள்ள பாண்டியனுக்கு (கடித இலக்கியம்) …1999
  20. இளவரசனுக்கு (கடித இலக்கியம்) … 1999
  21. எப்படி வளரும் தமிழ் (கட்டுரைத் தொகுப்பு) … 2001
  22. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்… (கட்டுரை) .. 1990
  23. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு)… 2008
  24. பாடுங்குயில்கள்(கவிதைக் தொகுதி) … 1975
  25. முடியரசன் தமிழ் இலக்கமன் … 1967

 

 

தேடிவந்த சிறப்புகள்

(விருது/பட்டம் பரிசு – வழங்கியவர், இடம், ஆண்டு)

‘அழகின் சிரிப்பு’ என்ற கவிதைக்கு முதல் பரிசு – பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை – 1950

‘திராவிட நாட்டின் வானம்பாடி’ பட்டம் – பேரறிஞர் அண்ணா 1957.

‘கவியரசு’ பட்டம், பொற்பதக்கம்’ – குன்றக்குடி அடிகளார், பாரி விழா, பறம்பு மலை – 1966

‘முடியரசன் கவிதைகள்’ நூலுக்குப் பரிசு – தமிழ்நாடு அரசு – 1966

‘வீர காவியம்’ நூலுக்குப் பரிசு – தமிழ்நாடு அரசு – 1973.

‘நல்லாசிரியர்’ விருது, வெள்ளிப் பதக்கம் – கே.கே.ஷா, ஆளுநர், தமிழ்நாடு அரசு – 1974.

‘சங்கப்புலவர்’ பட்டம் – குன்றக்குடி அடிகளார் – 1974

‘பாவரசர்’ பட்டம், பொற்பேழை – மொழி ஞாயிறு ஞா. தேவ நேயப்பாவாணர், பெங்களுர் – 1979

‘பொற்கிழி’ – பாவாணர் தமிழ்க் குடும்பம், நெய்வேலி – 1979.

‘பொற்குவை’ – ரூ.10,000/- மணிவிழா எடுப்பு – கவிஞரின் மாணாக்கர்கள், காரைக்குடி – 1979

‘பொற்கிழி’ – பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, சிவகங்கை

‘கவிப் பேரரசர்’ பட்டம், பொற்கிழி ரூ.10,000/- மணிவிழா எடுப்பு- கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க.மாநில இலக்கிய அணி, சென்னை – 1980

‘தமிழ்ச் சான்றோர்’ விருது, பதக்கம் – தமிழகப் புலவர் குழு, சேலம் – 1983.

‘கலைஞர் விருது’ – என்.டி. இராமராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர், கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க. முப்பெரும் விழா, சென்னை – 1988

‘பாவேந்தர் விருது’ (1987க்குரியது), பொற்பதக்கம், கலைஞர் மு கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை – 1989  ‘பொற்கிழி’ – விக்கிரமன் – அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் – 1993

‘பூங்கொடி’ நூலுக்கு இந்திராணி இலக்கியப் பரிசு ரூ.5,000/ இந்திராணி அறக்கட்டளை, கரூர் – 1993

‘சிறந்த தமிழ்த் தொண்டிற்கான’ அரசர் முத்தையவேள் நினைவுப்பரிசில் – வெள்ளிப்பேழை, பொற்குவை ரூ.50,000/அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை – 1993.

‘இராணா இலக்கிய விருது’ பொற்குவை ரூ.10,000, – தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு – 1994.

‘கல்வி உலகக் கவியரசு’ விருது – அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், (அழகப்பா பல்கலைக் கழகம்) காரைக்குடி – 1996

‘பொற்கிழி’ பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க்கல்லூரி, மேலைச்சிவபுரி – 1997

‘கலைமாமணி’ விருது, பொற்பதக்கம் – செல்வி பாத்திமா பீவி, ஆளுநர், கலைஞர் மு.கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை – 1998.

 

 

பெற்ற பாராட்டுகள்

பாவேந்தர் வழித்தோன்றல், புதுமைக்கவிஞர், கவிமாமன்னர், கவிச்சிங்கம், இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர், கவிதை இமயம், தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர், தமிழ்க் குடியரசின் பாட்டு முடியரசர், கவியுலக முடியரசர், சுயமரியாதைக் கவிஞர், தமிழிசைப் பாவலர், தமிழியக்கக் கவிஞர்.

வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர், சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர், வறுமையிலும் செம்மை போற்றியவர், திமிர்ந்த ஞானச் செருக்குடைய சங்கப் புலவரனையர், சங்கத் தமிழனைய தூயவர், பீடுநடையினர், பெருமித வாழ்வினர், நிமிர்ந்த நடையினர், நேர் கொண்ட பார்வையர், அண்டிப் பிழையார். ஆர்த்த வாழ்வினர், ஒட்டார் பின் செல்லாதவர், நல்லாசிரியர், ஆசிரியர் போற்றுபவர், நன்றி மறவாதவர், நட்புப் பெரிதென வாழ்ந்தவர், பகுத்தறிவாளர், மனிதநேயர், பழகுதற்கினிய பண்பாளர், பிறர்க்குதவும் ஏந்தல், சாதி தொலைத்தவர், கசயம் அறுத்தவர், பதவி வெறுத்தவர், சமத்துவம் விரும்பி, விளம்பரம் விரும்பார், எளிமை வாழ்வினர், புகழ் கண்டு கூசுவார், அன்பு நெஞ்சினர். குழந்தை உள்ளத்தினர், பூமனத்தினர், இனிமைப் பேச்சினர், இளமை விரும்பி, அமைதி விரும்பி, குறிக்கோள் வாழ்வினர்.

  1. இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல் தடம்புரளாத் தங்கமாக, தன் மானச் சிங்கமாக, தமிழ் வேழமாக கொள்கைக் குன்றமாக வாழ்ந்தவர். பணம், பதவி, பட்டம், பகட்டுக்குப் பணியாமலும் அரசவைப் பதவிகள் நாடிவந்த போதும், அவற்றைப் புறக்கணித்தும் ‘வளையா முடியரசர்’ என்றும் ‘வணங்கா முடியரசர்’ என்றும் புகழ்பெற்றவர், தன்மானக் கொள்கையால், மைய, மாநில அரசுகளின் பல அரிய விருதுகளை இழந்தவர். பல்லாயிரம் இளைஞர்களைத் தமிழ் உணர்வாளர்களாக்கியவர், கனவிலும் கவிதை பாடுபவர். பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனைத் தந்தையாகவும் கருதிக் “குலமுறை கிளத்தும்” கொள்கையுடையவர். ‘தன்னை மறந்த லயம் தன்னில்’ இருக்கும் இயல்பினார்.

தமிழுயர்ந்தால் தமிழ்நாடு
தானுயரும் அறிவுயரும்
அறமும் ஓங்கும்

இமயமலை போலுயர்ந்த
ஒருநாடும் தன்மொழியில்
தாழ்ந்தால் வீழும்.

– பாவேந்தர்

 

 

 

 

1. தமிழ் வணக்கம்

 

முத்தமி ழேஉனை எப்பகை யாகினும்
முற்றிட முன்வருமேல்
எத்தடை மோதினும் அப்படை யாவையும்
எற்றிமு ருக்கிடுவேன்
எத்துயர் நேரினும் அத்தொழில் ஆற்றிட
எப்பொழு தும்தவறேன்
மத்தக யானையைச் செற்றிடும் ஏற்றரி
வல்லமை தந்தருள்வாய்.

விரித்துவரும் வகையிலெலாம் தப்பி நின்று
வீழாமல் சிரிக்கின்ற தமிழ ணங்கே!
குறித்துவரும் பகையஞ்சிப் புறமிட் டோடக்
கூரறிவுப் படைதந்த எங்கள் தாயே
நெருப்புபுனல் செல்கறையான் வாய்கள் தப்பி
நின்றொளிரும் ஏடுடையாய் அம்மா நின்றன்
சிரித்தமுகங் காண்பதற்கே என்றும் வாழ்வேன்
சிறியன்எனைக் காப்பதுநின் கடமை யாகும்.

 

 

2. மூன்று தமிழ் தோன்றியது
 கலி வெண்பா

 

நீர்நிறைந்து யாண்டும் நிலமொன்றுங் காணாமல்
பார்மறைந்து வெள்ளம் பரவிநின்ற தோர்காலம்;
அந்தப் புனல்குறைய ஆங்கிருந்த ஓங்குமலை
வந்து தலைகாட்டி வானோக்கி நின்றதைத்தான்
கற்றோன்றி மண்தோன்றாக் காலமெனப் பூவியலைக்
கற்றோர்தம் நூலிற் கணித்தார்கள்; மண்டிணிந்த
ஞாலத்தின் முன்தோன்றும் நீலப் பெருங்கல்லைக்
கோலக் குறிஞ்சியெனக் கூறி மகிழ்ந்தனர்; அவ்
வெற்பிடத்துங் காட்டிடத்தும் வேட்டம் பலபுரிந்து
கற்களிலே தீயெழுப்பிக் காலங் கடத்தியவன்
ஆடை யறியாமல் ஆசை புரியாமல்
வீடுந் தெரியாமல் வீரமட்டுந் தானறிவான்;
ஆதி மனிதனவன் அன்னான் கருத்துரைக்க
ஏதும் அறியாதான் எண்ணம் எடுத்தியம்பப்
பேசும் மொழியறியான் பிள்ளைநிலை யுற்றிருந்தான்;
பேச விழியுண்டு பேணும் முகமுண்டு
நீண்ட இரு கையுண்டு நெஞ்சிற் படுங்கருத்தை
வேண்டும் படிஎடுத்து விண்டுரைத்தான் சைகையினால்;
எண்ணம் பலித்துவிடின், எக்களிப்பு மீதூரின்
நண்ணும் உணர்ச்சியினால் நாடித் துடிப்பேறித்
துள்ளிக் குதித்தெழுந்து தோழனுக்குத் தன்கருத்தை
உள்ளக் கிளர்ச்சிதனை ஓதினான் சைகையினால்;
அந்தக் குறிப்பும் அவன்காட்டுஞ் சைகைகளும்
முந்திக் கலந்து முகிழ்த்தனகாண் கூத்தாக;
மற்றொருநாள் மாந்தன் மகிழ்ந்து குதித்துவந்தான்
உற்ற பெருங்களிப்போ உள்ளத்துப் பூரிப்போ
பெற்ற பெரும்பொருளோ பெண்காதற் கூட்டுணர்வோ
எற்றுக்கே ஆடினனோ என்ன நடந்ததுவோ
எப்படியோ ஒருணர்ச்சி இன்னதெனாப் பேருணர்ச்சி
அப்படியே உள்ளோடி ஆவி கலந்தெழுந்து
நாடிநரம் பெல்லாம் நடமாடச் செய்தோடிக்
கூடி மனத்தகத்திற் கூத்தாட்டம் ஆடியது;
கூத்தாடும் அவ்வுணர்ச்சி கூடி நிலைநிற்க
ஆற்றாமல் வாய்திறந்தே ஆர்ப்பரித்துக் கூவிவிட்டான்;
கூவுங் குரல்கேட்டான் கொண்டான் பெருவியப்பு;

 

கூவினான் மீண்டுங் குரலெடுத்துக் கூவினான்;
கோட்டிற் குயிலொன்று குக்குக்கூ என்றொலிக்கக்
கேட்டான் கிளைக்குயில்போற் கூவினான் வாய்குவித்தே;
ஒட்டி இருகுரலும் ஓரொலியாய்த் தொட்டிசைக்க
விட்டுவிட்டுக் கூவி விளையாடிக் கொண்டிருந்தோன்
கிட்டும் பெருமகிழ்வால் கொட்டினான் கையிரண்டும்
கொட்டினான் கூவினான், கூவின கொட்டினான்
கூவுதலுங் கொட்டுதலுங் கூடி இசையென்றும்
மேவிவருந் தாளமென்றும் மேதினியில் பூத்தனகாண்;
எண்ணுங் கருத்தை எடுத்துரைக்க அம்மாந்தன்
கண்ணசைத்தான் கையசைத்தான் காலங் கடந்துவரப்
பைய அவன் நாவசைத்தான்; பாலோ தெளிதேனோ
செய்ய ஒரு நற்கரும்பின் தீஞ்சாறோ என்னஒரு
சொன்மொழிந்தான் மீண்டுமதைச் சொன்னான், எதனாலோ
பன்முறையும் பன்னிப் பழகினான் அச்சொல்லை;
சொல்லிப் பழகுமொழி மெல்லத் தமிழாகி
இல்லைநிகர் என்ன இயலாய்க் கனிந்ததுகாண்;
இவ்வண்ணம் முத்தமிழாய் ஏற்றம் பெறுமொழியை
எவ்வண்ணம் ஏத்திப் புகழ்வோம்நாம்? அம்மொழியில்
கூத்தும் இசையுங் குறிக்கின்ற நூலெங்கே?
ஏத்தும் இயல்நூலில் ஏனையவை தாமெங்கே?
பாழுங் கடல்கோளும் பாவிப் பகைக்குலமும்
சூழுங் கொடுவினையால் சொல்லரிய ஏடுகள்தாம்
காணா தொழிந்தனவே; கண்மூடிக் கொள்கையினால்
மாணாச் செயல்செய்தோம் மற்றும் பல இழந்தோம்;
ஆடிப் பெருக்கிலிட்டோம் அந்தோ நெருப்பிலிட்டோம்
வேடிக்கை மாந்தர் விளையாட்டை என்னென்போம்!
அஞ்சியஞ்சிச் சாகாமல் ஆளடிமை யாகாமல்
எஞ்சியவை காப்போம் இனி.

(விருது நகர், செந்தில்குமார நாடார் கல்லுரிக் கவியரங்கம்)

 

 

3. தமிழ் காப்போம்

எண்ணுடையாள், எழுத்துடையாள், காலங் காணா
எழிலுடையாள், இளைமையினாள், கோலங் கண்டு
கண்ணுடையார் எனவாழ்ந்தோம்; ஆனால் இன்று
கண்ணொன்றை இழந்து விட்டோம்; கீழ்வாய் என்னும்
எண்ணறிவார் எவருள்ளார்? தமிழர் கண்ட
எண்வடிவம் மறைந்துவரும் நிலைமை கண்டோம்
புண்ணுடைய நெஞ்சுடையோம்; மாற்றார் ஆட்சி
புகுந்தமையால் விளைந்தவொரு தீமை யன்றோ?

எஞ்சியுள் எழுத்தேனும் முன்னோர் கண்ட
இயல்புடனே நிலைத்திடுதற் குறுதி யில்லை;
வஞ்சமனம் படைத்தவர்தாம் வேற்று நாட்டு
வரிவடிவைப் புகுத்துதற்கு முயலு கின்றார்;
நெஞ்சமிதை நினைந்துவிடின் வெந்து போகும்;
நெறிகெட்ட இம்முறைதான் என்று சாகும்?
அஞ்சுவது கெஞ்சுவது மடமை யாகும்;
ஆர்ப்பரித்துக் கேட்பதுதான் கடமை யாகும்

இந்நாட்டிற் குரியனவென் றியம்பு கின்ற
ஈரேழு மொழிகளுக்கும் உரிமை வேண்டும்
வெந்காட்ட ஒருமொழியும் அதன்மே லேறி
வீற்றிருக்க ஒருமொழியும் வேண்டா! வேண்டா!!
என்னாட்டிற் கலைக்கூடம் ஆட்சி மன்றம்
எத்துறையும் தமிழ்மொழியின் ஆட்சிவேண்டும்;
இந்நாட்டம் நிறைவெய்த வில்லை என்றால்
இருந்தென்ன வாழ்ந்தென்ன சாவே மேலாம்.

இவ்வண்ணம் தமிழ்காக்க முனைவோர் தம்மை
இழிமொழிகள் சொலலன்றி ஆட்சி செய்வோர்
செய்வண்ணம் அறியாராய்ப் புலம்பு கின்றார்;
தேர்தலிலே நாற்காலி பற்று தற்கே
இவ்வண்ணம் தமிழ்தமிழென் றியம்பு கின்றார்
என்றுரைப்பர் நாற்காலிப் புத்தி கொண்டோர்;
உய்வண்ணம் அவர்க்குரைக்க வல்லார் யாரோ?
உரைத்தாலும் கேட்கின்ற நல்லார் யாரோ?

 

(வெந்-முதுகு)

எப்படியோ அரசிருக்கை கிடைத்து விட்டால்
எடுபிடிகள் ஆளம்பும் அமைந்துவிட்டால்
அப்படியே ஒட்டிக் கொண் டகல மாட்டார்,
அடுக்கடுக்காய்ப் பழிவரினும் இறங்க மாட்டார்,
எப்பொழுதோ ஒருநாளில் வெறுத்தாற் போல
இப்பதவி வேண்டேனென் றெழுந்து நிற்பர்,
அப்பொழுதே மீண்டுமதில் அமர்ந்து கொள்வர்,
அவர்நம்மை எள்ளிஉரை யாடு கின்றார்.

காலந்தான் இவர்தம்மைத் திருத்த வேண்டும்
கடுகிவரும் அணுகிவரும் தேர்தல் என்னுங்
காலந்தான் இவர்க்கறிவு புகட்ட வேண்டும்;
கண்திறந்து தமிழரென உணர்வர் அந்நாள்;
ஞாலந்தான் இவர்க்குரிமைச் சொத்தா என்ன?
நமக்குமதில் உரிமையிலை என்றா எண்ணம்?
கோலந்தான் கலையாதோ? இவர்கள் செய்யும்
கொட்டந்தான் அடங்காதோ? அடங்கும் நாளை!

ஈன்றெடுத்த தாய்மொழிக்கு வாழ்வு வேண்டி
எடுத்துரைக்க முனைந்ததுமோர் குற்றம் ஆமோ?
ஆன்றவிந்த கொள்கையினார் தமிழ்மொ ழிக்கே
அரசுரிமை வேண்டியதும் குற்றம் ஆமோ?
ஏன் புகுந்தார் சிறைக்கூடம்? ஆசா னாக
இருந்தசிலர் பதவியையும் ஏனி ழந்தார்?
நான்றுணிந்து கூறிடுவேன் பதவி என்ன
நற்றமிழின் உயர்ந்ததுவோ சீசீ தூசி

மாநிலத்து மொழிகாணாப் புதுமை கண்டு
வகைப்படுத்தி அகம்புறமாப் பொருளைச் சொல்லித்
தேனிகர்த்த சுவைப்பாவால் பத்துப் பாட்டும்
தித்திக்கும் தொகை எட்டும் பாடி வைத்த
பாநலத்தைப், பொருள்வளத்தை, நுகர்ந்த உள்ளம்
பணியாது; பெருமிதத்தால் நிமிர்ந்து நிற்கும்;
கானகத்துப் புலிப்போத்தாய் வீரங் காட்டும்;
கவிதைக்கு விளைநிலமாய்க் காட்சி நல்கும்.

 

கண்ணகிக்கு வரப்போகும் இடர்நி னைந்து
கண்ணீரை நிறைத்துடலம் தோன்றா வண்ணம்
வண்ணமலர் பலகொண்டு மறைத்துச் சென்றாள்
வையையெனும் குலக்கொடிஎன் றிளங்கோ சொல்வார்;
அண்ணலெனும் இலக்குவனார்க் குற்ற துன்ப
[1]அவலநிலை கண்டுள்ளம் நொந்து நொந்து
மண்மிசையே வரஅஞ்சி மணலுட் புக்கு
மறைந்துகொண்டாள் அவளென்று நான்பு கல்வேன்;

சிறைசெல்லப் புலவர்சிலர் வேண்டும் இன்று;
செந்தமிழின் உயர்வுதனை வேண்டி நின்று
முறைசெய்ய பதவிதனை இழப்ப தற்கும்
முனைந்துவரும் புலவர்சிலர் வேண்டு மின்று;
குறைசெய்யும் ஆள்வோரின் கொடுமைக் காளாய்க்
குருதியுடன் உயிரீயப் புலவர் வேண்டும்;
நிறைசெய்ய உயிரீயும் புலவர் தம்முள்
நிற்குமுதற் புலவன்நான் ஆக வேண்டும்;

பிறந்தநிலம் ஒன்றுண்டு வணங்கல் வேண்டும்
பேகமொழி ஒன்றுண்டு போற்றல் வேண்டும்
சிறந்தபொருள் இவற்றின்மேல் ஒன்றும் இல்லை
சிந்தித்தே இவைகாக்க முனைவோம் வாரீர்!
கரந்துவரும் பகையுண்டு நினைவிற் கொள்க!
காலமெலாம் அடிமைசெய விழைதல் வேண்டா!
இறந்தபினும் தலைமுறைகள் நம்மை வாழ்த்த
ஏற்றசெயல் ஈதொன்றே காப்போம் வாரீர்!

(மதுரை எழுத்தாளர் மன்றத்தில் நடை பெற்ற கவியரங்கில்)

 

  1. பேராசிரியர் இலக்குவனார் பதவிநீக்கம் செய்யப்பட்ட அவலம்

 

4. கனன்றெழுக!

இந்தியினால் விளைதீமை யாவை என்றே
இயன்மொழிகள் கற்றுணர்ந்த புலவர் சொன்னார்;
சிந்தனையாற் கல்வியினால் தந்நே ரில்லாச்
சீர்மைமிகு பேரறிஞர் விளக்கந் தந்தார்;
முந்தி எழும் உணர்ச்சியினாற் கவிதை வேந்தர்
முழுமூச்சில் எதிர்ப்புரைத்தார்; நேர்மை பேணும்
புந்தியினார் அரசியலில் வல்லார் யாரும்
புகன்றவெலாம் ஆள்வோர்க்குக் கேட்க வில்லை

செவியிருந்துங் கேளாராய் ஆகி விட்டார்;
செப்புகின்ற நல்லவரைப் புறக்க ணித்தார்;
புவிமுழுதும் நமக்குத்தான் உரிமை யென்ற
போக்கினிலே கோகின்றார்; நாளை யிங்குக்
குவிகின்ற உணர்ச்சிக்கு விடை என் சொல்வார்?
கூண்டோடு பலியாவர்; கொடிய ஆட்சி
தவிடுபொடி யாகிவிடும்; தமிழைக் காக்கத்
தமிழரெலாந் திரண்டெழுந்தால் பகைதூள் ஆகும்

நமக்குரிய தாய்மொழிக்கு வந்து விட்ட
நலிவகற்ற ஒருமுகமாய் எழுக! மற்றோர்
தமக்குரிய மொழிக்கெல்லாம் வரவு கூறித்
தலைவணங்கும் அருளினிமேற் போதும் போதும்!
சுமக்கின்ற பழிதவிர்க்கத் தொன்று தொட்டுத்
தொடர்ந்துவரும் தன்மானம் நிமிர வேண்டும்
நமக்கென்ன என்றிருக்கும் பொறாமை நீக்கி
நமக்குத்தான் பொறுப்பெனநாம் எழுதல் வேண்டும்.

பகைவருமேல் அதை எதிர்த்து வாகை சூடிப்
பரம்பரையின் பெருமிதத்தைக் காட்டல் வேண்டும்;
நகைமுகத்த தீநட்பு நெருங்கி நின்றால்
நம்மையது நெருங்காத விழிப்பு வேண்டும்;
அகப்பகையும் புறப்பகையும் நுழையா வண்ணம்
ஆய்ந்துணர்ந்தே அவைதவிர்க்கும் ஆற்றல் வேண்டும்;
தகுமுறையில் இவ்வண்ணம் நாமி ருப்பின்
தமிழ்வாழும் தழைத்தோங்கும் தலைமை தாங்கும்.

 

 

 

 

5. உயிர் கொடுப்போம்

“இந்திமொழி பொது மொழியா? தகுதி என்ன
இருக்கின்ற தம்மொழிக்கு? குயில்கள் கூவும்
கொந்தவிழும் மலர்ச்சோலை தமிழர் நாடு;
கோட்டானுக் கங்கென்ன வேலை?” என்று
செந்தமிழும் பிறமொழியும் நன்கு கற்றோர்
சீர்தூக்கி நன்குணர்ந்து மறுத்து ரைத்தார்;
எந்தவழி இந்திமொழி வந்த போதும்
ஏற்பதிலை என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்.

அரசியலில் மூதறிஞர் மறுத்துச் சொன்னார்
ஆய்வுரைகள் அறிவுரைகள் எழுதிப் பார்த்தார்;
முரசொலிக்கும் போர்க்களத்தில் நின்று நாளும்
முழக்கமிடும் பேரறிஞர் எதிர்த்து நின்றார்;
உரமிகுந்த அறப்போர்கள் பல நடாத்தி
உயிர்ப்பலிகள் பலகொடுத்தார்; எல்லாம் கண்டும்
இருள்மதியர் இந்திவெறி கொண்ட மாந்தர்
இன்றுவரை கேளாராய் உலவு கின்றார்.

விரலைந்தும் தனித்தனியே இயங்கி நிற்கும்
வேலேந்தும் பொழுதிலவை இணைந்து நிற்கும்;
தரமறந்த உரிமையுடன் மாநிலங்கள்
தனித்தனியே இயங்கிவரும்; பகைவ ருங்கால்
உறவுணர்ந்து தோள்தந்தே இணைந்து நிற்கும்;
ஒற்றுமை என் றிதனைத்தான் உரைப்பர் மேலோர்;
ஒருமைஎனும் பெயராலே விரல்கள் ஐந்தை
ஊசியினால் தைப்பதற்கு முனைவா ருண்டோ?

தத்தமது நாகரிகம் மொழிகள் பண்பு
தனித்தன்மை எள்ளளவும் கெடுத லின்றி
ஒத்துரிமை உணர்வுடனே மாநி லங்கள்
உளமொன்றி வாழ்வதுதான் நமது வேட்கை;
பித்தரென வெறியரென ஒருமை என்ற
பெயர்சொல்லி இந்தியினால் தைத்து விட்டால்
எத்தனைநாள் ஒட்டிருக்கும்? குனிந்த மாந்தர்
இருதோளும் விரித்தெழுந்தால் தெறித்துப் போகும்.

 

உறவுக்குக் கைகொடுப்போம் எனினும் எங்கள்
உரிமைக்கும் குரல்கொடுப்போம்; தென்பு லத்தின்
மறுதிக்கில் வாழ்வோர்கள் குரலைக் கேட்க
மறுத்துவிடின் உயிர்கொடுப்போம்; சிறையில் மாண்ட
திறமிக்க நடராசன் தாள முத்து
தென்னாட்டில் பலருள்ளார்; இன்று வாழ்வோர்
உரிமைக்கே உயிர்கொடுப்போம் என்பர் நாளை
உணர்வுடையார் என்சொல்வார்? யாரே கண்டார்.

 

 

 

 

6. சாவுக்கும் அஞ்சோம்

மணம்பரப்பும் பூங்காவுள் கள்ளிக் கூட்டம்
வளரவிடப் பார்த்ததுண்டோ? வாழைத் தோப்பில்
கணங்கணமாய் மந்திபடை எடுத்து வந்தால்
களிப்போடு வரவுரைக்கக் கண்ட துண்டோ?
உணவளிக்கும் நெல்வயலுள் உதவாக் காளான்
உறுகளைகள் படருவதை விடுவ துண்டோ?
இணையில்லாத் தமிழ்வழங்கும் தமிழர் நாட்டில்
இந்திமொழி புகவிடுதல் கண்டோம் கண்டோம்!

அரியேறு பலகுழுமி வாழுங் காட்டில்
அஞ்சிவரும் நரியாட்சி செலுத்தல் உண்டோ?
விரிகுரலின் கோட்டானை அழைத்து வந்து
விரும்புமிசைக் குயிலினத்தை ஆள்க என்று
சுரிகைமுடி சூட்டுவதைக் கண்ட துண்டோ?
தொன்னூல்கள் பலதொகுத்த பெட்ட கத்துள்
சிறியதொரு கறையான்தான் ஆள்வ துண்டோ?
செந்தமிழின் பேழைக்குள் இந்தி கண்டோம்!

தூங்குகிற தமிழ்ப்புலியை இடறி வீழ்ந்த
துணைவிழிகள் இல்லாதான் நிலைமை போல
ஏங்குகிற வடவர்தமக் கொன்று சொல்வேன்
என்னினத்தார் மொழிவெறியில் சளைத்தா ரல்லர்;
வீங்குகிற தோளுக்கு விருந்து வைக்க
விழைவீரேல் மொழிப்போரைத் தொடர்க; போரைத்
தாங்குகிற வலிமையுண்டு வீரம் உண்டு
சாவதற்கும் அஞ்சாத துணிவும் உண்டு

அறப்போரைத் தொடங்குதற்குக் காஞ்சிச் செம்மல்
அண்ணாதம் முரசொலியை முழக்கி விட்டார்
வரப்போகும் மொழிப்போரில் அணிவ குக்கும்
வயப்புலிகள் கூட்டமொரு கடலை விஞ்சும்
இறப்போர்கள் சிந்துகின்ற குருதி வெள்ளம்
எழுந்தெழுந்து தலைகளுடன் அலைகள் வீசும்
சிறப்போடு வருமிந்தி அதனுள் சிக்கிச்
சீரிழந்து நாணிழந்து சிதறி ஓடும்.

 

 

 

 

7. வாகை கொள்வோம்

மூன்றாம்நாள் முளைத்துவரும் இந்திப் பெண்ணே!
முனைகின்றார் உன்புகழைப் பரப்பிக் காக்க!
ஈன்றாளைக் காப்பதுமோர் கடமை யாகும்;
எங்களையும் ஈன்றெடுத்தாள் ஒருத்தி யுண்டே!
ஆன்றோரும் சொலற்கரிய காலங் கண்ட
அன்னையையும் காப்பதெங்கள் கடமை யன்றோ?
சான்றோர்கள் பழிக்கும்வினை செய்தல் வேண்டா
தடுமாறும் நின்புதல்வர்க் கிதனைக் கூறு!

புன்மக்கள் பெற்றெடுத்தாய் பழிசு மந்தாய்!
பொதுமகளா நினையாக்கத் துடித்தல் காணாய்!
நன்மைக்கே சொல்கின்றேன் கற்பைக் காக்க
நாடுவதே முறையாகும்; தீமை வந்த
பின்னுக்கு வருந்துவதிற் பயனே இல்லை;
பேசாதார் தலைவாயில் நுழைதல் நன்றோ?
நன்மக்கள் மனம்வருந்தப் புகுதல் வேண்டா
நாடுகிற கடைவாயில் நாடிச் செல்க!

முன்னமிரு முறைநீயே வந்த போது
முழுமூச்சோ டுனைத்தமிழர் எதிர்த்து நின்றார்;
என்னினத்தார் இருதோழர் உயிர்கள் தந்தார்.
ஏந்திழையார் துயருழந்தார் குருதி சிந்திப்
பன்னரிய கொடுஞ்சிறையுள் வீரர் புக்கார்,
பைந்தமிழைத் தாய்மொழியைக் காத்து நின்றார்;
இன்னுமிங்கு வன்முறையால் நுழைவா யென்றால்
எதற்கெடுத்தோம் இவ்வுடலம்? ஒருகை பார்ப்போம்.

வீடென்ன மனையென்ன மக்க ளென்ன
வீணுக்கு வாழ்வென்ன பதவி என்ன
நாடென்ன மொழியன்னை நலியும் போது?
நாமென்ன மரமென்று நினைந்தார் போலும்?
ஓடென்ன மெலிந்தென்ன? நரம்பி லெல்லாம்
ஓடுவது புண்ணீரா? செந்நீர் வெள்ளம்;
ஈடென்ன கண்டதுண்டு தமிழ்மொ ழிக்கே?
ஈந்திடுவோம் நம்முயிரை; வாகை கொள்வோம்.

(ஓடென்ன – ஓடுபோல)

 

 

 

 

8. இனி விடோம்
(18.11.1967)

உலகத்து முதன்மொழியாம் தமிழைத் தங்கள்
உயிர்மூச்சாக் கொண்டிலங்கும் தமிழர் நாட்டிற்
கலகத்தை உருவாக்கும் வெறியர் கூடிக்
கடுகளவுந் தகுதியிலா இந்தி தன்னைப்
பலகட்டுக் கதைகூறிப் புகுத லிட்டார்
படையெடுத்தார், தடியெடுத்தார், பயனே யில்லை
நிலை கெட்டோர் மூன்றுமுறை முயன்றுபார்த்தும்
நினைப்பொன்றும் பலிக்கவில்லை தோல்வி கண்டார்!

முதன்முறையா இந்திமொழி தமிழர் நாட்டுள்
முகங்காட்ட வன்முறையால் நுழைந்த போது
கதவடைத்துத் தடுத்துரைத்தோம்; ஆள வந்த
கடுங்கோலர் சிறைக்கதவைத் திறந்து வைத்தார்;
அதன்கொடுமைக் கஞ்சவிலை புகுந்து நின்றோம்;
அங்கேதான் ஈருயிரைப் பலியாத் தந்தோம்;
இதன்பிறகே அந்தமொழி அஞ்சி ஓடி
இடுப்பொடிந்து வடபுலத்தே கிடக்கக் கண்டோம்.

புறங்காட்டிச் சென்றமொழி மீண்டு மிங்குப்
புகுவதற்குத் துணிவோடு வருதல் கண்டோம்;
திறங்காட்டும் மறவர்குழாம் சாக வில்லை
சிங்கமென இருக்கின்றோம் என்றெ ழுந்தோம்;
அறங்காக்கும் மனமில்லா ஆட்சி யாளர்
அடித்தடித்துத் துரத்திடினும் துணிந்து நின்றோம்;
நிறங்காட்டுஞ் செங்குருதி சிந்தக் கண்டு
நிலைகுலைந்து மறைந்தோடிச் சென்ற திந்தி.

மதியாதார் தலைவாசல் மிதிப்ப தற்கு
மதிகெட்டு வந்தமொழி மானங் கெட்டுக்
கதியேதுங் காணாமல் ஓடித் தோல்வி
கண்டபினும் தன்னகத்தே வாழும் எண்ணம்
உதியாமல், பிறன்வீட்டிற் புகநினைந்தே
உணர்விழந்து மறுமுறையும் அறுபத் தைந்தில்
விதியோடு விளையாட உறவும் ஆட
வீறுநடை யோடிங்கு நுழையக் கண்டோம்.

 

இனிவிடுத்தால் தமிழ்மொழிக்கும் நமக்குந் தீங்காம்
எனக்கருதித் தமிழகமே கொதித்தெழுந்து
முனைமுகத்துத் தலைநிமிர்ந்து நிற்கக் கண்டோம்;
மூண்டுவரும் மொழிப்போரில் வாழ்வா சாவா
எனநினைத்துத் தமதுயிரைச் சிறிதென் றெண்ணி
இனியதமிழ் காப்பதென உறுதி பூண்டு
தினவெடுத்த போர்மறவர் திரண்டு நின்று
திரும்பிச்செல் திரும்பிச்செல் இந்திப் பெண்ணே

என்றுரைத்துக் கனன்றெழுந்து வீரம் மிக்க
எம்மினத்தார் அணிவகுத்தார்; இந்தி ஆட்சி
கொன்றழித்த பிணக்குவியல் கொஞ்சம் அல்ல;
கொடுங்கோன்மை கட்டவிழ்த்துக் கொண்டு சீறி
நின்றிழைத்த கொடுமைகளும் கொஞ்ச மல்ல;
நெடுந்தவத்தாற் பெற்றெடுத்த பிள்ளை மார்பில்
சென்றடித்த குண்டுகளும் கொஞ்ச மல்ல;
சிறையகத்துப் பட்டோரும் கொஞ்ச மல்லர்;

ஐயிரண்டு திங்களுடல் சுமந்து பெற்ற
அரும்புகளை இழந்தமையால் நொந்த தாயர்
கையிரண்டும் பிசைந்தழுத கண்ணீர் வெள்ளம்
கண்டவர்தம் கல்மனமுங் கரைந்து போகும்;
மையிருண்ட மேகமெனச் செந்நீர் சிந்த
மாணவர்தம் மார்பகத்தே குண்டு பாய்ந்து
மெய்யிருந்த உயிர்குடித்துச் சென்ற தந்தோ!
மேலவர்தம் ஆட்சியில் இம் மாட்சி கண்டோம்!

பன்முறையால் இந்தியினைப் புகுத்த எண்ணிப்
படுதோல்வி கண்டபினும், மக்கள் மன்றில்
புன்முறையால் இழிமொழிகள் பேசக் கேட்டுப்
பொன்றுயிராய்க் குற்றுயிராய்க் கிடந்த போதும்
வன்முறைதான் பேசுகின்றார்; பட்டா ளத்தை
வரவழைப்போம் இந்தியினைத் திணிப்போம் என்ற
பொன்மொழியே உதிர்க்கின்றார்; மக்களாட்சிப்
பூமாலை இவர்கையிற் படும்பா டென்னே!

 

எப்படியும் இந்தியினைத் திணிப்ப தென்றே
எண்ணிமுடிவெடுத்துள்ளார் வடக்கில் வாழ்வோர்
ஒப்புடைய செயல்செய்ய எண்ண வில்லை;
உயர்ந்தவர்சொல் அவர்செவியில் ஏற வில்லை;
அப்படியே விடுமெண்ணம் எமக்கும் இல்லை
அவரவர்க்குந் தாய்மொழியுண் டென்று ணர்த்தி
இப்படியில் தமிழ்மொழியின் உரிமை காக்க
எழுந்துவிட்டோம் இரண்டிலொன்று பார்த்தே நிற்போம்.

தொன்றுதொட்ட தமிழ்மொழியின் எழுத்துக் கெல்லாம்
தூயவரி வடிவுண்டு தெளிவும் உண்டு
கொன்றுவிட்டுத் தமிழெழுத்தை அவர்தம் தேவ
நாகரியாம் குறுக்கெழுத்தைக் கொணர்வ தற்கே
நின்றுவிட்டார் வடபுலத்தார்; ஒருமைப் பாட்டை #
நிலைநிறுத்தும் நோக்கமென உளறுகின்றார்
நன்றுகெட்ட அவர்நினைவை மாய்ப்ப தற்கு
நாமிங்கு மனத்துணிவு பூண்டு விட்டோம்.

 

 

 

 

9. மாவீரர் பலருண்டு

நிலைகெடுக்க வருமிந்தி மொழியெ திர்க்க
நேர்வருவோர் போர்தொடுப்போர் தம்மை எல்லாம்
தலைஎடுப்பேன் கையறுப்பேன், என்று வீரம்
சாற்றுகின்ற நாப்பறையா! ஆள்வோர் உன்னை
விலைகொடுத்து வாங்கியதால் உன்றன் தாயை
விற்றுவிடத் துணிந்தனையோ? வீசும் எச்சில்
இலைபொறுக்கும் நாய்க்குணத்தை விடடொ ழிப்பாய்
ஈங்குன்னை ஈன்றவள்யார்? தமிழ்த்தாய் அன்றோ?

மாற்றாரின் அடிக்டிமை யாகி நின்று
மதிகெட்டுத் தறிகெட்டு மானம் விட்டுத்
தூற்றாதே, கூலிக்கு வருமு னக்குத்
துணிவிருப்பின் தமிழ்காக்கும் எமக்கு மட்டும்
தோற்றாதோ அத்துணிவு? துணிந்து நிற்போம்
தொழுதடிமை செய்யகிலோம் சாவும் ஏற்போம்
கூற்றாக வருமொழியைத் துரத்தி நிற்போம்
கொடுமைக்கும் மிடிமைக்கும் அஞ்சோம் வெல்வோம்.

சாவதற்கும் துணிந்தெழுந்த மறவர் கூட்டம்
தமிழ்காக்க முன்னணியில் நிற்றல் காணீர்!
போவதற்குள் நுங்கொடுமை மாய்த்து விட்டுப்
புகழ்காப்போம் தமிழ்காப்போம் மானங்காப்போம்;
மேலவர்க்குத் தாள்பிடிப்பீர்! எம்மைக் கொன்று
மேலெழும்பும் குருதிக்குள் கொடுங்கோல் தோய்த்து
யாவருக்கும் செங்கோலாக் காட்டி நிற்க
ஆய்ந்தவழி செய்தீரோ? ஆளும் பார்ப்போம்;

பிறப்போர்தாம் இறப்பதுவே இயற்கை என்ற
பேருண்மை உணர்ந்தொருவன் எரியை யூட்டி
வரப்போகும் இந்திக்கோர் செல்வி ளக்காய்
மறக்கோலங் கொண்டுடலம் வெந்து நின்றான்
அறப்போரில் நிற்பவர்க்கோர் [1]சின்னம் ஆனான்
ஆண்மையுளோர் வணங்குகிற சாமி ஆனான்;
மறக்காதீர் மறைக்காதீர்! இவனைப் போன்றோர்
மாவீரர் பலருண்டு தமிழைக் காக்க!

 

தாய்மொழியைக் காக்கஎனில் உயிர்கள்
நல்கும் தாளமுத்து நடராசன் இன்னும் உண்டு;
காய்மொழியீர்! உயிரிய வல்லார் எல்லாம்
கனன்றெழுந்து நுமைநோக்கி விட்டால் நீங்கள்
போய்மடிய எந்நேரம் ஆகும்? உங்கள்
புல்லடிமை ஆட்சியெலாம் நின்றா வாழும்?
பேய்மனத்தீர் பழிகமக்க வேண்டா! நம்மைப்
பெற்றவட்குப் பிழைசெய்தா வாழ்தல் வேண்டும்?

 

  1. (இந்தி எதிர்ப்பில் எரியூட்டிக் கொண்ட சின்னசாமி)

 

 

 

 

10. தமிழோ டிணைந்தாய்!

விறலிமலை தருமகனே, வீரமிகு
சண்முகனே, ‘வெருட்டி வந்த
பிறமொழியை ஆளவிடேன் பெற்றெடுத்த
தாய்மொழியைப் பேணி நிற்பேன்
திறலுடைய தமிழகத்தில் தீமனத்தர்
இந்தியினைத் திணிக்க வந்தால்
மறலியுல கடைவதையும் மகிழ்வுடனே
வரவேற்பேன் மானங் கொள்வேன்’

எனவெகுண்டு சூளுரைத்தாய், இனமானப்
போர்தொடுத்தாய், எடுத்த நஞ்சை
‘எனதுயிரின் மேலான இனியதமிழ்
காத்திடநான் இதனை யுண்பேன்’
எனவெழுதி அவ்வாறே இனிதுண்டாய்,
எமைப்பிரிந்தாய் இறந்துவிட்டாய்
எனமொழிய மாட்டேன் நான் எனது தமிழ்
மொழியுடன்நீ இணைந்தாய் என்பேன்.

இனமானங் காத்திடுவோம் எரிநஞ்சும்
எடுத்துண்போம் என்று கூறிப்
புனலாடி எழுவதுபோல் அனலோடு
விளையாடிப் புகுந்த இந்திக்
கனலோடு சமராடிக் களங்கண்டு
புகழ்கொண்ட காளை நீவிர்
நனவோடு நனவாக எமதுயிர்ப்பு
மூச்சாக நாளும் வாழ்வீர்!

 

(இந்தி எதிர்ப்பின் போது நஞ்சுண்டு மாண்ட விறலிமலை சண்முகனைப் பாடியது)

 

 

 

 

11. தமிழே வெல்லும்

காலத்தைக் கடந்தமொழி கற்போர் நெஞ்சைக்
கவருமொழி தரைகடந்து கடல்க டந்து
ஞாலத்தை வென்றமொழி என்றுங் குன்றா
நாவன்மை படைத்தமொழி இலக்க ணத்தின்
கோலத்தை முழுமைபெற வடித்துக் காட்டும்
குறைவில்லா அறிவுமொழி இலக்கி யத்தின்
மூலத்தைக் கண்டமொழி சுவைகள் விஞ்சும்
மும்மைமொழி அன்புமொழி தமிழே யாகும்.

பெருமைஎலாம் பூண்டுலகை ஆண்டு வந்த
பேராற்றல் பெற்றமொழி வளமே யில்லா
[1]வறுமொழியால் சிறுமொழியால் அடிமையுற்று
வாழ்விழந்து போய்விடுமோ? படையெ டுத்த
பெருமொழிகள் பலபொருதும் வாகை சூடிப்
பீடுபெற்ற வீரமொழி கைகால் இல்லா
ஒருமொழிக்குத் தோற்றிடுமோ? தன்னை நோக்கி
ஊறுசெய எதுவரினும் வெல்லும் வெல்லும்,

 

 

  1. வறிய மொழியால்

 

 

12. செல்லடி செல்லடி இந்திப் பெண்ணே

நில்லடி நில்லடி இந்திப்பெண்ணெ-உன்
நெஞ்சினில் என்ன துணிச்சலடி!
சொல்லடி சொல்லடி இந்திப்பெண்ணே-உன்
சூடு சுரணைகள் அற்றனவோ!

மூன்று முறையிங்கு வந்தனையே-நீ
மூக்கறு பட்டுமே சென்றனையே!
ஏன்தமிழ் நாட்டினை நாடுகிறாய்?-பின்
ஏனடி பட்டதும் ஓடுகிறாய்?

சான்றவர் சொல்லையும் மீறுகிறாய்-படி
தாண்டிப் பிறர்மனை ஏறுகிறாய்
ஈன்றவர் கண்ணெதிர் நாறுகிறாய்-உனை
ஏற்பவர் யாரெனத் தேடுகிறாய்

ஏற்பவர் தோள்களைத் தொற்றிட்டி-மனம்
ஈபவர் கால்களைச் சுற்றிட்டி
மேற்படி வேலையைக் கற்றிட்டி-எம்
மீதினில் ஆசையை விட்டிட்டி

மாட்சிமை ஏதொன்றுங் கற்றிலைநீ-நல்
மானமும் தோற்றமும் உற்றிலைநீ
ஆட்சியில் நற்றிறம் கற்றிலை நீ-ஓர்
ஆணவம் மட்டுமே பெற்றனைநீ

நாட்டினில் ஒற்றுமை நாடுகிறோம்-அதை
நாளும் நினைந்திங்குப் பாடுகிறோம்
நாட்டைப் பிளந்திட நாடுகிறாய்-அது
நன்மை எனத்திட்டம் போடுகிறாய்!

போவென வாயிலை மூடுகிறோம்-வரப்
பொந்துள தோவென நாடுகிறாய்
சாவென்ற போதிலும் நாடவிடோம்-எம்
சந்ததி யின்மனம் வாடவிடோம்

நில்லடி நில்லடி இந்திப்பெண்ணே-உன்
நெஞ்சினில் என்ன துணிச்சலடி!
செல்லடி செல்லடி இந்திப்பெண்ணே-இதைச்
சிந்தையில் வைத்திரு சென்றபின்னே.

(20-12-1979)

 

 

 

 

 

13. ஒன்றே நினைப்பீர்!

பேசுங் கலையாவும் பேணிவந்த முன்னவன், தான்
பேசும் மொழிக்குப் பெருமை தரும்வகையில்
எண்ணும் எழுத்தும் இயற்றி நமக்களித்தான்
கண்ணென் றவைதம்மைக் காத்து வளர்த்தோமா?
கீழ்வா யிலக்கம் கிழடாகிப் போனதென்று
தாழ்வாக நாமதனைத் தள்ளிக் கிடத்திவிட்டோம்;
மிஞ்சும் எழுத்தேனும் விஞ்சுமா என்றாலோ
அஞ்சும் நிலைக்குத்தான் ஆளாகி நிற்கின்றோம்;

நாடாளும் நல்லோர் நடந்துவரும் போக்குத்தான்
கேடாகும் என்று கிறுகிறுத்து வாடுகின்றோம்;
நாட்டில் ஒருமைதனை நாட்ட நினைவோர்தாம்
கேட்டில்விளை யாடக் கிளர்ந்தெழுந்தால் என்செய்வோம்!
‘உங்கள் எழுத்தை ஒதுக்கிவிட்டு மேற்கோட்டில்
தொங்கும் எழுத்தைத் துணைக்கொள்க; ஒற்றுமையைக்
கண்டு விடலாம் எனத்தான் கதறுகின்றார்;
துண்டு படத்தான் துணைசெய்யும் இக்கதறல்;
ஆள்வோர் கருத்தும் அதுவாயின் ஆகட்டும்!
வீழ்வோர்தாம் வீழட்டும்! வாழ்வோர்தாம் வாழட்டும்!
தாய்மொழியின் ஆக்கந் தடையுறுதல் நாம்காணின்
காய்மொழிகள் வேண்டா கனிமொழிகள் சொல்லிடுவோம்

கேட்டால் நிலைவாழும் கேளாரேல்…? நான் சொன்னால்
பாட்டின் தரங்குறையும் பார்த்து முடிவுசெய்க!
கட்சி சமையம் கடந்துதமிழ்த் தொண்டுசெய
நச்சி எழுதல் நமதுகடன் என்றுணர்ந்து
காக்க முனைந்தெழுக! காவா தொழிவீரேல்
போக்க முடியாத புல்லடிமை நேரும்
எழுத்தை இழக்க இசைவீரேல் உங்கள்
கழுத்தைக் கொடுத்துக் கலங்கும் நிலைபெறுவீர்!
ஆண்டாண்டு காலம் அழியாத் தமிழ்மொழிக்கு
வேண்டாதார் இந்த வினையெல்லாம் செய்கின்றார்;

வீரத் தமிழினத்தின் வேரறுக்க மாற்றலர்தாம்
ஈரத் துணியிட்டு நும்கழுத்தை ஈர்கின்றார்;
காட்டிக் கொடுக்கும் கயமைக் குணமிங்கு

 

நீட்டித் தலைகாட்டி நேய மொழியுரைக்கும்,
வீழ்ந்து சிதையாதீர்! வீணாகிப் போகாதீர்!
தாழ்ந்து பணியாதீர்! தன்மானங் கொண்டெழுவீர்!
எவ்வழியால் உட்புகுவோம் என்றே இருக்கின்றார்
செவ்வியர்போல் பேசுகின்றார் செந்தமிழீர் நீரயர்ந்தால்
அன்றே நுழைவர்; அயரேல்! தமிழ்வாழ
ஒன்றே நினைப்பீர் உளத்து.

 

 

 

 

 

14. பிரிந்து போ

தேசிய மொழிக ளென்று
செப்பினை பத்தும் நான்கும்
பேசிய துண்மை யென்றால்
பேணுவை சமமாக் கொண்டே;
வீசிய சொன்ம றந்து
விரைந்துநீ இந்தி யென்னும்
ஊசியை நுழைக்க வந்தால்
அதன் நுனி ஒடிந்து போகும்.

உன்மொழி மட்டு மென்ன
உலகிலே உயர்ந்த ஒன்றா?
என்மொழி மட்டுமென்ன
இழிந்ததா? எண்ணம் என்ன?
பொன்னெலாங் கோடி கோடி
பொழிகிறாய் வளர்க்க வேண்டி!
என்வரிப் பங்கும் உண்டால்
எதிர்க்கவும் உரிமை யுண்டு.

உனக்கென்ன உரிமை யுண்டோ
எனக்குமவ் வுரிமை யுண்டாம்
எனக்குள வுரிமை கொல்ல
எண்ணினை யாகின் அன்றே
எனக்குனக் குரிய பங்கைப்
பிரித்திட எழுவேன் கண்டாய்
மனத்தினிற் பட்ட ஒன்றை
வாய்திறந் தெடுத்துச் சொன்னேன்.

உலகிலே நீயும் நானும்
உறவுடன் பிறந்தா வந்தோம்
தலைதடு மாறி என்னைத்
தாள்பணி யென்று சொன்னால்
நிலைதடு மாறிப் போகும்
நெஞ்சிலே பதித்துக் கொள்வாய்
சிலையென என்னை யெண்ணின்
சீரழிந் தொழிந்து போவாய்.

 

(சிலை – கல்)

வெள்ளையன் விடுத்துச் சென்றான்
விரகினில் எடுத்துக் கொண்டாய்
கொள்ளையும் அடித்து விட்டாய்
கொடுஞ்செயல் பலவுஞ் செய்தாய்
வெள்ளைநெஞ் சுடைய யானும்
விடுதலைப் பயனுங் காணேன்
தள்ளையைக் கொல்ல வந்தால்
தலைமகன் பார்த்தா நிற்பான்?

இந்தியைப் புகுத்தி என்றன்
இளந்தமிழ் நோகச் செய்ய
வந்திடின் நின்னை நானும்
வாழ்த்தவா செய்வேன்? நெஞ்சம்
நொந்துழன் றழுவேன் பின்னர்
நொடியினில் துடித்தெ ழுந்து
வெந்தழல் விழியிற் காட்டி
விரட்டுவேன் வெருண்டு போவாய்

என்னுடன் உன்னைக் கூட்டி
இணைத்தனன் எவனோ வந்து
பின்னுமென் னுடைமை யெல்லாம்
பிடுங்கினை! என்றன் தாய்க்கும்
இன்னலே செயநி னைந்தால்
இனியுமுன் தொடர்பெ தற்கு?
சொன்னதும் பிரிந்து போபோ
சுடுமொழி தோன்று முன்னே

என்சொலைக் கேட்டு நெஞ்சுட்
சீறினை! என்ன செய்வாய்?
வஞ்சனை பலவும் செய்வாய்
வழக்குகள் தொடுத்து நிற்பாய்
வெஞ்சிறைக் கூட மென்று
வெருட்டுவாய் அடபோ பேதாய்
அஞ்சினேன் என்றால் என்றன்
அன்னையைக் காப்பு தெங்கே?

– 10.3.1587

(விரகு – தந்திரம், தள்ளை – தாய்)

 

15. சட்டம் செய்க

இந்தியத்தில் ஒருமொழிக்கே ஏற்றமெனில்
இரண்டுபடும் இந்த நாடு
விந்தியத்தின் வடபுலமே விடுதலையின்
பயன்பெறுமேல் விரைந்து தெற்கு
முந்தியெழுந் தார்ப்பரிக்க முயலாதோ
உரிமைபெற? அடிமை யென்றால்
வந்தெதிர்த்து விடுதலைக்கு வழிவகுக்கும்
நாளைவரும் *வயவர் கூட்டம்

கடலுக்குள் கலம்விட்ட காரணத்தாற்
செக்கிழுத்த காளை யைப்போல்
மிடல்மிக்கோர் ஆயிரத்தின் மேலானோர்
மொழிகாக்க மிகுதல் வேண்டும்
அடல்மிக்க வாஞ்சியைப்போல் ஆயிரவர்
எழல்வேண்டும்; அற்றை ஞான்றே
இடம்விட்டு விலகாதோ? இந்திபுக
வெருவாதோ? இடிந்தே போகும்.

விடுதலைக்குப் போர்தொடுத்தோம் வெள்ளையரோ
புறங்கொடுத்தார் விடிவு பெற்றோம்
அடிமையினி எமக்கில்லை அரியணையில்
யாமென்றோம் ஆனால் எம்மை
அடிமைகொள நினைக்கின்றீர் அம்மொழியைத்
திணிக்கின்றீர். அடுத்தி ருந்தே
குடிகெடுக்க முயல்கின்றீர், குடிலர்சிலர்
துணைநிற்கக் கொடுங்கோல் கொண்டீர்

பிறப்புரிமை எமக்குண்டு பேசுமொழி
காத்திடுவோம், பிறந்த நாடும்
சிறப்புறவே செய்திடுவோம். திருநாடு
யார் சொத்து? தெளிந்து சொல்க
மறுப்புரைக்க வாயுண்டோ ? மனமறிந்த
பொய்யுண்டோ? வஞ்ச நெஞ்சைத்
திறக்கின்றீர் இந்தியினைத் திணிக்கின்றீர்
ஒற்றுமையைத் தீக்குள் விட்டீர்.

 

(வயவர் – வீரர்)

எம்மொழியும் சமமாக இனியதொரு
வழிசெய்க இணைந்து வாழ்வோம்
நும்மொழிதான் கோலோச்ச நுழைப்பீரேல்
தனிநாடு நொடியில் தோன்றும்;
நன்மையெனிற் கைகொடுப்போம் நலிவுதரிற்
போர்தொடுப்போம் நயச்சொல் பேகம்
எம்மொழியும் இனிவேண்டா எழுதுங்கள்
சட்டத்தில், இதுதான் நேர்மை.

 

(7-3-1987)

 

 

16. பொய்த்த வாய்மொழிபோதும்

[1]ஏழு மாநிலம் ஆளவோ? – பதி
னேழு மாநிலம் தாழவோ?
பாழும் அந்நிலை காணவோ? – யாம்
பாரி லேபழி பூணவோ?

உங்கள் தாய்மொழி இந்தியாம்-நீர்
ஒம்பிப் போற்றுதல் நன்றியாம்
எங்கள் தாய்மொழி செந்தமிழ் – அதை
எத்திக் காத்திடல் எம்கடன்.

கட்டில் ஏறிட இந்தியோ? -எமைக்
காக்குந் தாய்மொழி பிந்தியோ?
கட்டு வீழ்த்தினும் விட்டிடோம்-உயிர்
சோரு மாகினும் கட்டுனோம்

வஞ்ச வாய்மொழி நம்பினோம்-பயன்
வாய்த்த லின்றியே வெம்பினோம்
நெஞ்சில் உண்மையைக் காட்டுவீர் – அதை
நேரில் சட்டமென் றாக்குவீர்

பெற்ற விடுதலை பொய்க்கவோ? அப்
பேறு நீங்களே துய்க்கவோ?
மற்ற வர்க்கது கைக்குமோ? – இம்
மாநிலம் யாவும்நும் கைக்குளோ?

அவ்வம் மாநிலத் தாய்மொழி – சமம்
ஆக நினைப்பது நேர்வழி
தெவ்வர் போலெதிர் நிற்பிரேல்-இத்
தேயம் துண்டுற முற்படும்

கெஞ்சல் தானினித் தேவையோ? – எம்
கேளிர் நும்விரற் பாவையோ?
அஞ்ச லின்றியே ஆர்த்தனம்- இனி
அங்கங் கே எழும் போர்க்களம்.

(9-3-1987)

 

  1. (இந்தி பேசும் மாநிலங்கள்)

 

 

 

 

17. விடை கொடு தாயே

விடைகொடு விடைகொடு தாயே – சமரில்
வென்றிடுந் திறமருள் வாயே
உடைமைகள் உயிருடல் நீயே – எங்கள்
உணர்வினில் உறுந்தமிழ்த் தாயே.

படையுடன் இவண்வரும் இந்தி- பல
பாடை கொணர்ந்திடும் இந்தி
தடையுடன் புகவரும் இந்தி – பெருந்
தடிபல கொணர்ந்திடும் இந்தி

படைவரும் தடைவரும் அறிவோம் – அது
பாதியில் உடைபடும் தெரிவோம்
கொடுமைகள் கண்டுளந் திரியோம் – எமைக்
கொன்றிடி னுஞ்சமர் புரிவோம்.

அடிபட அடிபட எழுவோம் – எங்கள்
ஆவி பிரிந்திடின் விழுவோம்
சுடுபடக் கொள்கையில் நழுவோம்- நெஞ்சில்
துணிவொடு தமிழ்மொழி தொழுவோம்.

 

 

 

 

18. முழங்கட்டும் போர்ப்பறை

எடுப்பு
ஆர்த்து முழங்கட்டும் பொருநர்பறை – புகழ்
சேர்த்து விளங்கட்டும் தமிழர்படை                                     (ஆர்த்து)
தொடுப்பு
பார்த்துப் பகைவர்கள் வேர்த்துப் புறமிடப்
பாட்டுப் புறம்பெறக் காட்டும் திறல்வர                             (ஆர்த்து)
முடிப்பு

 

காட்டுப் புலியெனக் காட்டும் மறவர்கள்
காப்பர் தமிழினைச் சேர்ப்பர் புகழ்மொழி
நாட்டில் அரியணை ஏற்றி வணங்கிட
நாட்டம் மிகுந்ததைக் காட்டும் வகையினில்                     (ஆர்த்து)

வேற்றுப் புலமென வேட்டை யிடவட
நாட்டுப் புலத்தவர் வேட்டுப் புறப்படின்
தோற்றுப் பிறக்கிடத் தூக்கி எறிந்திடும்
தோளுண் டெமக்கெனத் தோம்தோம் எனுமொலி            (ஆர்த்து)

 

(9-3-1987)  பொருநர் – போர் செய்யும் மறவர்

19. வாளேந்தி வாமகனே

எடுப்பு

 

கொம்பூது கொம்பூது மறவா – வந்த
கூடலர் ஓடிடச் சாடுவோம் என்றுநீ                                       (கொம்பூது)
தொடுப்பு
தெம்பெங்கே படர்மார்பில் திறலெங்கே தடந்தோளில்
திறம்பாடி மறம்பாடி நெஞ்சுக்குள் உரமேறக்                    (கொம்பூது)
முடிப்பு
தமிழாலே ஒன்றானார் தமிழ்மாந்தர் என்றாலே
தலைதூக்க முடியாது தமிழ்நாட்டில் பகையாளர்
சுமையாக வாழாமல் சோற்றுக்கே சாகாமல்
சூடேற்றித் தோளேற்றித் தமிழா நீ வாவென்று                   (கொம்பூது)

வந்தமொழி நாடாள வாய்த்த தமிழ் பீடேக
வாழ்வதிலே யாதுபலன்? வாளேந்தி வாமகனே
எந்தமதம் எக்கட்சி என்றெதுவும் பாராமல்
எமதுதமிழ் எமதுதமிழ் என்றோடி வாவென்று                   (கொம்பூது

(25-2-1987)

20. போர் தொடுப்பாய்

எடுப்பு

தமிழா நீயொரு போர்தொடுப்பாய் – யாரும்
தமிழை இகழ்ந்தால் இடர்செய முனைந்தால்                               (தமிழா)

 

தொடுப்பு

அமிழ்தாம் எனுமொழி அதற்கொரு துயரா? போர்
ஆடவா பகை சாடவா மலர் சூடவா                                                (தமிழா)

 

முடிப்பு

தடையாபொரு படையா அஃதுடையும் என மொழிவாய்
தவிடாய்ச்சிறு பொடியாய் அது படநீஉடன் எழுவாய்
விடைபோல்நடை யுடையாய்எரி விழியால்கனல் சொரிவாய்
விடுவேல் எறி நெடுவாள்தொடு சுழல்வாய்சமர் புரிவாய்           (தமிழா)

கலையாமனம் பெறுவாய்பகை மலையாஎன [1]மலைவாய்
கடலாஅது படையாஎனில் படகாயதில் திரிவாய்
உலையாதெழு பொருவாய்சமர் உமியாய்விடும் பகையே
உயிரா இது மொழியாஇரு விழியாஎன நினைவாய்                   (தமிழா)

 

 

  1. (மலைவாய் – போர்புரிவாய்)

 

 

21. போருக்கு வா!

யாருக்கு நீயஞ்சிச் சாகிறாய்? – மொழிப்
போருக்கு வா! எங்குப் போகிறாய்?
பாருக்குள் நீ இன்று மூத்தவன் – தமிழ்
வேருக்கு நீபுனல் வார்த்தவன்.

வீட்டுக்குத் தூணென நின்றனை- களி
யாட்டுக்கு வாழ்வினைத் தந்தனை
நாட்டுக்கு யாரிங்குக் காவலோ? – வட
நாட்டுக்கு நீயென்ன ஏவலோ?

[1]ஓட்டுக்கு வந்தவன் ஆளவோ? – பட
கோட்டிக்கு நாடின்னும் தாழவோ?
ஆற்றுக்குள் காத்தனன் என்பதால்- தமிழ்
நாட்டுக்குங் காவலன் என்பதோ?

கோட்டைக்குள் ளேஒரு கும்பலோ?-ஒரு
[2]கோட்டுக்குள் ளேவிழும் வெம்பலோ?
தேட்டைக்குள் வாழ்வரை நம்பவோ? – இனும்
இகேட்டுக்குள் வீழ்ந்துளம் வெம்பவோ?

நேற்றைக்கு நீயிங்கே ஆண்டவன் – அரி
யேற்றையும் விஞ்சுரம் பூண்டவன்
கூற்றுக்கு நேர்நிற்க அஞ்சிடாய்-தமிழ்
நாற்றுக்கு நீர்விடக் கெஞ்சினாய்

நாளைக்கு நின்னினம் போற்றுமோ? – சிறு
கோழைக்குங் கீழெனத் தூற்றுமே?
காளைக்குச் சோற்றினில் ஏக்கமோ?- மொழி
வாழையைக் காப்பதில் தூக்கமோ?

தோளுக்குள் ளேஉரம் ஏற்றுவாய் – மனச்
சூளைக்குள் ளேஎரி மூட்டுவாய்
வாளுக்குள் ளேசுடர் ஏற்றுவாய்-ஒரு
நாளைக்குள் ளேபகை ஓட்டுவாய்

(9-3-1987)

 

  1. ஓட்டுக்கு – ஓடம் ஒட்டுவதற்கு
  2. கோட்டுக்குள் – கிளையில்

 

 

 

 

22. வாகை சூடு

பண்பட்ட மொழியொன்று கண்டாய்- அது
பழுதாகி எழில்போதல் பாராது நின்றாய்
கண்பெற்றுங் குருடாக நின்றால் – பாரில்
கைகொட்டிச் சிரி கானையுனைக் கண்டால்

மொழிகாக்க ஒருநோக்கு வேண்டும்-தமிழ்
முன்னேறும் முன்னேறும் முழுதாக யாண்டும்
பழியாக்கும் பலநோக்கங் கொண்டால் – கட்சி
பார்த்தாலுன் தமிழன்னை பாராளல் உண்டோ ?

ஒருகோட்டில் நீயிங்கு நின்றால் போரில்
உனைவெல்ல நினைவாரும் உலகெங்கும் இன்றாம்
வருவார்க்கு நீயொன்று சொல்வாய்- கையில்
வாளுண்டு தோளுண்டு வழிகாண என்பாய்

வெறிநோக்கம் குறுநோக்கம் என்பார் – அந்த
வீணான சொல்லாலே வீழாதே அன்பா
பெருநோக்கம் தமிழ்காத்தல் ஒன்றே- என்று
பீடாக நின்றோது பேடில்லை என்றே

மொழிகாக்க முனையாத நாடு – பாரில்
மூலைமுடுக் கெங்குமுண் டாவென்று தேடு
வழிகாட்டி நிற்றல்கண் கூடு – போரில்
வாளுக்குந் தோளுக்கும் வாகைதனைச் சூடு

அங்கங்கே மொழிகாத்தல் உண்மை – அஃ(து)
அவ்வவர்க் கியல்பாக வாய்த்ததோர் தன்மை
இங்குள்ள மாந்தர்க்கு மட்டும் – அதை
இடித்திடித் தெந்நாளும் சொன்னால்தான் எட்டும்.

(9-3-1987)

 

 

 

 

23. வெறி வேண்டும்

எடுப்பு

வெறி கொள்ள வேண்டும்நீ தோழா-நீ
விளையாட்டுப் பொம்மையா? விளங்காத பிள்ளையா?             (வெறி)
தொடுப்பு

நெறிகண்ட குறளொன்று கண்டாய்- அந்த
நீள்புகழ்த் தாய்த்தமிழ்க் கோரிடர் என்றால்                                 (வெறி)
முடிப்பு

நற்றமிழ்க் குற்றது கேடு – நீ
நானுளன் என்றதை வேரொடு சாடு
பற்றுளங் கொண்டுனை நாடு – வளர்
பைந்தமிழ் மைந்தனென் றுன்புகழ் பாடு                                     (வெறி)

ஒற்றுமை என்றுரை கூறும் – அவன்
ஓதுதல் நம்பிடின் உன்முது கேறும்
கற்சிறை காட்டினும் மீறு- பல
கற்றவர் சொன்மொழி கேட்டுளந் தேறு                                       (வெறி)

வந்த மொழிக்குயர் வாழ்வு – நின்
வண்டமிழ் வாழ்வுக்கு வந்தது தாழ்வு
வெந்தது சோறெனத்தின்று – பாரில்
வீழ்வதும் தாழ்வதும் நின்தொழி லன்று                                       (வெறி)

(வெறி)

24. அந்த நாள் வந்தே தீரும்

‘உறவுக்குக் கைகொடுப்போம் எங்கள் நாட்டின்
உரிமைக்குக் குரல்கொடுப்போம்’ என்று பல்கால்
குரல்கொடுத்தும் பயனொன்றும் விளைய வில்லை;
கொதித்தெழுந்தே உயிர்கொடுப்போம்’ என்று சொன்னோம்;
விரலெடுத்துச் செவிவழியை அடைத்துக் கொண்டார்;
‘விடுதலையாற் பெறும்பயனை நமக்கு மட்டும்
தரமறுத்தால் உயிரெடுப்போம்’, எனமு ழங்கும்
தமிழ்த்திருநாள் ஒன்றிங்கு வந்தே தீரும்!

ஆண்டமொழி அடிமையென ஆவ தென்றால்
ஆர்பொறுப்பர்? தன்மான உணர்வு நெஞ்சில்
பூண்டறுந்து போனதுவோ? , எனவெ தும்பிப்
பொறுமையுடன் இசையரங்கில் தமிழிற் பாட
வேண்டுமென ஆண்டுபல வேண்டி நின்றோம்
வீணரினும் பிறமொழியே பாடு கின்றார்;
ஈண்டினியும் பாடுவரேல் இசைய ரங்கை
இடித்தெறியும் நாளொன்று வந்தே தீரும்!

எவர்படைத்தார் கற்சிலையை? கோவில் தம்மை
எவரெடுத்தார்? தமிழ்புகுதத் தடையா? அந்தத்
தவறிழைத்தார் யாரிங்கே? ஆண்ட வர்க்குத்
தமிழென்றால் நச்சுமிழும் எட்டிக் காயா?
கவரெடுத்துத் தமிழுரிமை தடுப்ப தென்றால்
சுடுகாட்டுப் புதைகுழியின் பிணமா நாங்கள்?
உவர்நிலத்தில் இடும்வித்தா? அவற்றை யெல்லாம்
உடைத்தெறியும் நாளொன்று வந்தே தீரும்!

ஆகாச வாணிக்குக் கால்க ளான
அரியதமிழ் வானொலியைத் திருப்பி விட்டால்
வேகாத மொழிகளிலே எழுதி வைத்த
விளங்காத பாடல்களே செவியில் வீழும்;
சாகாமல் இருக்கிறதே எனும்நி னைப்பில்
தமிழிசைக்குச் சிறுபொழுதை ஒதுக்கி வைக்கும்;
நோகாமல் முறையிட்டோம் பயனே இல்லை;
நொறுக்குகிற நாளொன்று வந்தே தீரும்!

 

‘பொறுக்கும் வரை பொறுத்திருந்தோம் பொறுத்த நம்மைப்
புழுவென்று கருதுகின்றார்; குனிந்து கொண்டே
இருக்கும்வரை ஏறுபவர் ஏறிப் பார்ப்பர்;
இளைஞர்படை நிமிர்ந்தெழுந்து விறு கொண்டால்
தருக்குடையார் தலையுருளும் உடல்கள் சாயும்
தன்மானப் போர்முரசம் முழங்கும்’ என்று
வெறுப்படைந்தோர் எழுச்சிகொளா முன்னர் இங்கே
விடுதலையைத் தமிழ்நாட்டிற் பரவச் செய்வீர்.

 

(29.9.1979)

 

 

 

 

25. வாழ்வா? சாவா?

அறிவுபெறச் சிந்திக்க ஆய்வு செய்ய
அதற்குரிய நூல்கற்க மேன்மை காணக்
குறியுடையோன் பள்ளிக்குட் செல்லுங் காலை
குலவவரும் இந்தியுடன் ஆங்கிலந்தான்
தெரிவுசெயும் மொழியென்பார்க் கடிப ணிந்தால்
தென்னாட்டு மொழியெதற்கு? தமிழைப் பேசித்
திரிகின்ற இனமெதற்கு? மான மின்றித்
தின்றலையும் வாழ்வெதற்கு? சாவே மேலாம்.

நான்பிறந்த பொன்னாடு, தவழ்ந்து நின்று
நடந்தோடி விளையாடி மகிழ்ந்த நாடு,
தேன்சுமந்த மலர்வருடி மணந்து வந்து
தென்றனக் குளிர்விக்கக் களித்த நாடு,
வான்படர்ந்த புகழ்மிகுக்கும் எனது நாட்டை
வாழ்த்துதற்கு வங்கமொழி வேண்டுமென்றால்
ஏன்பிறந்தேன் தமிழ்நாட்டில்? பிறந்த பின்னும்
இருக்கின்றேன் இருக்கின்றேன் சோற்றுக் காக.

தோற்கருவி துளைக்கருவி நரம்பிற் கட்டும்
துணைக்கருவி வெண்கலத்துக் கருவி என்ற
நாற்கருவி முழங்குமிசை யரங்கில் ஏறி
நான்பாடத் தெலுங்குமொழி வேண்டு மென்றால்
வேற்கருவி எடுத்துவிளை யாடுந் தோள்கள்
வீறிழந்து சீரிழந்து தமிழன் என்ற
பேர்க்குரிமை பூண்டின்னும் வாழு கின்றேன்
பிறப்படிமை யானவற்கேன் பட்டுக் குஞ்சம்?

வானுயர்ந்த கோபுரங்கள், வளைந்து சுற்றும்
மதிற்சுவர்கள், கருவறைகள், வல்லார் செய்த
தேனினுயர் கவைப்பொங்கல், கல்லால் செம்பால்
செய்துவைத்த சிலைகள்பொலி கோவி லுக்குள்
நானுழைந்து நெக்குருகி வணங்கி நின்று
நாவசைக்க வடமொழிதான் வேண்டு மென்றால்
ஏனிருந்து வாழ்கின்றேன் தமிழர் நாட்டில்?
இருந்துபழி சுமப்பதிலே யாது கண்டேன்?

 

விழிநலிவு பெறுமானால் முகமெ தற்கு?
விளைபயிர்கள் கருகுமெனில் வயலெ தற்கு?
வழிபுனல்தான் அறுமெனிலோர் ஆறெ தற்கு?
வளர்ச்சியிலாப் பிண்டமெனில் கருவெ தற்கு?
மொழியடிமை யாவதெனில் நானெ தற்கு?
மூச்சில்லா உடலெதற்கு? மொழியைக் காத்துப்
பழிவிலக வாழ்வதுவே வாழ்க்கை ; இன்றேல்
பாருக்குச் சுமைகுறையச் சாதல் மேலாம்.

 

(8-3-1987)

 

 

 

26. தாய்மொழிப்பற்று

கன்னட மாநிலங் காணும் ஆவலால்
என்னொடு சிலர்வர ஏகினேன்; ஆங்குப்
பிருந்தா வனத்தின் பேரெழில் விழிக்கு
விருந்தா கியது வியந்து மகிழ்ந்தேன்;
கைத்திறம் வல்லார் கண்கவர் ஓவிய
மெய்த்திறம் காட்டி வைத்தநற் கூடம்,
வண்ணக் குலமலர் வகைவகை பூத்துத்
தண்ணென் றெழிலுடன் தலைநிமிர் பூங்கா,
மடங்கல் உலவும் மரஞ்செறி காவுடன்
நடங்கொள் மயில்திரி நலங்கெழு சோலை

அடங்கலும் நோக்கி அகமிக மலர்ந்தேன்;
இடம்படுந் தலைநகர் ஏற்றங் காண
நகர்வலம் வந்தேன் நாற்புறத் தெழிலும்
பகர்தல் அரிதே; பார்த்துக் களித்தேன்;
அருகில் ஒரிசை யரங்கு நிகழ்ந்தது;
உருகும் இசையால் உள்ளம் நெகிழ்ந்தது
பொருள்விளங் காமற் போனது பாட்டு;
மயங்குமவ் வேளை மற்றொரு பாடல்
வியந்திட இசைத்தது விளங்கியது பொருளும்
வெள்ளிப் பனிமலை மீதுலவு வோமெனும்

தெள்ளிய பாடல் தேனென இனித்தது;
கற்கள் விழுந்தன கலகம் விளைந்தது
பற்பல விளக்குகள் பரவிச் சிதறின;
இசையும் நின்றது; ஏனென வினவினேன்;
‘இசைவலார் பிறமொழிப் பாடல் இசைத்தலாற்
சினந்தெழு வோரிது செய்தனர்’ என்றனர்;
இனைந்துளம் வெதும்பி மொழிவெறி யென்றேன்;
தடித்த கையை மடக்கி என் முகத்திற்
கொடுத்தனர் குத்து, குருதி வழியச்
சிதறின பற்கள்; திடுக்கிட் டெழுந்தேன்

உதடுகள் பற்கள் உருக்கெடா திருந்தன;
தாய்மொழிப் பற்றின் தகைமை உணர்ந்து
வாயிதழ் அசைந்தன வாழிய எனவே.

 

(13-5-1987)

 

 

 

 

27. உறங்குந் தமிழ்மகன்

தமிழன் போலத் தன்னுயர் மானம்
உமிழ்ந்தான் ஒருவற் காண்கிலம் உலகில்;
தன்னினம் தன்மொழி தாழ்வுறல் கண்டும்
உன்னுதல் செய்யா துறங்குவன் நெடிதே!
தந்தை தொகுத்ததே தனக்குரி மைப்பொருள்
என்றதை ஓம்பிடல் ஒன்றே குறியுளன்;
முந்தையர் தொகுத்த முத்தமிழ்ச் செல்வம்
வெந்தழல் வீழினும் வெறுமனே இருப்பன்;
உரிமை தனக்கும் உண்டெனக் கருதாப்
பெருமை யுடையன் பெயரால் தமிழன்!

தன்மொழி தாழ்வுறின் தன்னுயர் மானம்
புன்மை யுற்றதென் றெண்ணுதல் செய்யான்;
கடவுள் வழிபடப் புகுவோன் கால்கழி
நடையன் மீதே நாட்டம் வைப்பன்
கடவுளின் மேம்படக் காலணி கருதுவோன்
இடமுடைக் கோவிலுள் ஈடிலாத் தாய்மொழி
இகழ்வுறல் கண்டும் கவலாதிருப்பன்;
உயர்தனிச் செம்மொழிஎன் றோதிடும் மொழியில்
அயன்மொழிச் சொல்லும் ஆங்கில எழுத்தும்
பெயவிழை வோரிவண் பேசினர் எழுதினர்

மயலுறு தமிழனும் மயங்கினன் ஒப்பினன்;
உறங்குந் தமிழ்மகன் உணர்ச்சிதான் என்னே!
அரங்கம் ஏறி ஆர்ப்பொலி எழுப்பிசைச்
கரங்கள் கேட்டவை தெரிந்தவன் போலக்
கையுங் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவையின் ஆட்டுவன் தலையை;
பொருளும் ஓரான் உணர்வுங் காணான்
மருளன் பிறமொழி இசையில் மயங்கினன்;
பழுத்த வளமைப் பைந்தமிழ் மொழியை
இழித்தும் பழித்தும் எள்ளி யுரைத்தும்

கையொலி பெறுதல் காணுதும் ஈங்கே
பொய்யிலை மேடையிற் புகுந்தவர் செயலிது;
எள்ளிய மடவனை ஈன்றதாய் யாவள்?

 

தமிழ்மகள் எனினும் தகவிலான் எள்ளினன்;
கயவன் மொழியால் கையொலி எழுப்பும்
பயனிலா மகனும் பைந்தமிழ் மகனே;
யாதுரை புகலினும் பேதைமை நீங்கிலன்
வேதனைக் கடலுள் வீழ்ந்ததெம் முளமே;
தன்மொழி தாழ்வுறல் கண்டும் தமிழ்மகன்
உன்னுதல் செய்யா துறங்குவன் நெடிதே.

 

23-9-1975

 

 

 

28. தமிழர் போக்கு

தமிழ்நாட்டின் சிறப்பனைத்தும் புகல்வ தென்றால்
தனிப்பிறவி எடுத்தவர்க்கும் இயலா தாகும்;
அமிழ்துாற்றும் தமிழ்க்குறளின் பெருமை சொல்ல
ஆயிரம்நா போதுவதோ? போதா வாகும்;
தமிழ்காட்டும் பண்பனைத்தும் நாமே சொல்லித்
தற்பெருமை கொள்ளவிலை; உலக மெல்லாம்
இமைகூட்ட மனமின்றி விழித்து நோக்கி
எண்ணரிய வியப்பெய்திப் போற்றக் கண்டோம்.

ஆனாலும் நாம்மட்டும் அறிந்தோ மல்லோம்
அறிந்தாலும் வாய்திறந்து புகழ்ந்தோ மல்லோம்
போனாலும் போகட்டும்; மற்றோர் யாரும்
புகழ்ந்தாலும் ஒருசிறிதும் பொறுப்ப தில்லை;
தானாகக் கதைதிரித்து மறுப்புக் கூறித்
தரியலர்போல் இகழ்ந்துரைத்து வாழ்ந்து செல்லும்
கூனான மனமுடையார் சிலரும் நம்மில்
[1]‘குடிலர்களாய் வாழ்கின்றார் உண்மை உண்மை.

நல்லுள்ளங் கொண்டவர்தாம் தமிழ்மொ ழிக்கு
நன்மைசெய முற்படுங்கால் வாழ்த்தல் வேண்டும்;
அல்லுள்ளங் கொண்டவரோ மாறாய்ப் பேசி
அவர்திறமைக் கேற்றபடி எள னங்கள்
சொல்லுவதிங் கியல்பாகக் கொண்டார்; அந்தத்
துயவருந் தமிழினமாம்; பழித்து ரைக்கும்
புல்லுள்ளங் கொண்டவர்க்கும் தமிழே தாயாம்;
புரியாராய் ஏசுகின்றார் அவர்தம் தாயை.

பேருந்து வண்டிகளிற் குறளைக் கண்டால்
பேருவகை தமிழ்நெஞ்சிற் பொங்க வேண்டும்;
யாரந்தக் குறளெழுத முனைந்தா ரோஇங்
கெவர்மனத்துத் தோன்றியதோ என வியந்து
பாரெங்கும் அவர்பெயரை வாழ்த்த வேண்டும்
பைந்தமிழ்க்கு நற்காலம் வந்த தென்று;
யாரிங்கு வாழ்த்துகின்றார்? பொல்லாங் கன்றோ
யார்யாரோ புகல்கின்றார் பித்தர் போல;

 

விரைந்து செலும் உந்துகளுக் காங்கி லத்தில்
வைத்திருந்த பெயர்மாற்றித் தமிழில் நன்கு
வரைந்ததிருக் கைகளைநான் வாழ்த்து கின்றேன்
வளர்தமிழின் வளர்ச்சியிலே விரைவு கண்டே;
விரிந்தமதி யான்உரைத்தான் விரைவு வண்டி
விறகுவண்டி எனச்செவியில் விழுந்த தென்றே;
திரிந்தவற்குச் செவிபழுதாய் விட்ட தென்றால்
செந்தமிழைப் பழிப்பதற்கா முயல வேண்டும்?

எங்கெங்குக் காணினுமே தமிழ்தான் என்ற
இயல்புநிலை இங்குவர வேண்டு மென்று
பொங்குகிறோம்; ஓரிரண்டு நிலையி லேனும்
பூத்துளதே தமிழென்று மகிழ்கின் றோம்நாம்;
மங்கியவர் எள்ளிநகை யாடு கின்றார்;
மல்லிகைப்பூ [2]வராகத்தால் நுகர்தல் உண்டோ?
இங்கிவர்தாம் திருந்திவரும் நாள்தான் என்றோ?
இனியதமிழ் இகழ்வதுவா கட்சி யாகும்?

தாய்மொழியை வளர்ப்பதிலே கட்சிப் பூசல்
தலைகாட்டல் கூடாது; தமிழர் யார்க்கும்
தாய்மொழியை வளர்ப்பதிலே உரிமை யுண்டு;
தந்தம்மால் இயலும்வரை முயல வேண்டும்;
தாய்மொழியை வளர்ப்பதிலே சாதி வேண்டா
சாதியினைப் புகுத்துவது சதியே யாகும்;
தாய்மொழியை வளர்ப்பதிலே சமயம் வேண்டா
சமயம்வரின் மொழியழியுஞ் சமயந் தோன்றும்.

(விரைவு வண்டி என்று மாற்றி அமைத்ததை விறகு வண்டி என முன்னாள் அமைச்சர் ஒருவர் எள்ளி நகையாடியதைக் கடிந்து பாடியது)

 

  1. (குடிலன் – அடுத்துக் கெடுக்கும் ஓர் அமைச்சன்)
  2. (முன்னாள் அமைச்சர் பெயர் மறைந்துள்ளது அறிக)

 

 

 

 

 

29. என்று தணியும்…..?

தனக்கினிய பாயலிலே பள்ளி கொள்ளத்
தார்புனைந்தான் மனைவிக்கே உரிமையுண்டு;
மனக்கினியாள் தவித்திருக்கப் பாயல் மீது
மற்றொருத்தி கிடந்திடுமேல் ஒழுக்கக் கேடு;
தனக்குரிய நிலவரைப்பில் இசைய ரங்கில்
தலைமைபெறத் தமிழுக்கே உரிமை யுண்டு;
நினைப்பினிலும் இனிக்குமொழி தவிக்க, ஏனை
நிலத்துமொழி தலைமைபெறின் மானக் கேடு.

மானமுளான் மறத்தமிழன் என்றி ருந்தோம்
மாறி அவன் மரத்தமிழன் ஆகிவிட்டான்
மீனவனால் வில்லவனால் புலியன் தன்னால்
மேம்பாடு கண்டமொழிப் பாடல் எல்லாம்
தேனமுதோ எனஇனித்தல் தெரிந்தி ருந்தும்
தெளிவிலனாய்ப் பிறமொழியில் மயங்கு கின்றான்;
ஏனவனால் தமிழ்கேட்க இயல வில்லை ?
எத்தனைநாள் உரைத்தாலும் உறைக்க வில்லை!

மொழிஎன்றும் இனமென்றும் வேறு பாடு
முழங்குமிசைத் துறைக்கில்லை என்று ரைத்துப்
பழிகொண்ட தமிழ்மகனே! ஒன்று சொல்வேன்
பகர்ந்தவிதி யாவருக்கும் பொதுதான் என்றால்
பொழிகின்ற இசையரங்கில் எந்த நாட்டான்
புகல்கின்றான் தமிழ்ப்பாட்டு? கேட்ட துண்டா?
அழிகின்ற வழிசொல்வோய்! நீதி என்றால்
அவர்க்கொன்று நமக்கொன்றா? உணர்ந்து சொல்வாய்!

சரியாத தமிழ்மறவன் எங்கள் பாட்டன்
தனிப்புலவன் பாரதிக்கு விழாவெ டுத்தாய்
புரியாத மொழிப்பாட்டைக் கேட்டுக் கேட்டுப்
பொங்கி அவன் நொந்துரைத்த மொழியை எல்லாம்
தெரியாது மறைத்துவிட்டாய்! தமிழை விட்டாய்!
தேயத்தைக் காப்பவன்போல் நடிக்கக் கற்றாய்!
நரியாக உலவுகின்றாய்! நீயா இந்த
நாட்டுக்கு நலந்தேட வல்லாய்? அந்தோ!

மடம்படுவாய்! பிறமொழிக்கே இசைய ரங்கில்
மதிப்பளிப்பாய்! இசைபாடி முடிக்கும் போதில்
இடந்தருவாய் தமிழுக்கும்; ஒன்றி ரண்டே
இசைத்திடுவாய் உதிரியெனப் பெயருஞ் சூட்டி;
நடந்துவரும் உண்மையிது; கேட்டுக் கேட்டு
நைந்தமனம் தமிழ்வேண்டும் என்று சொன்னால்
அடகெடுவாய்! ஏதேதோ அலறு கின்றாய்
அடிமைமனப் பித்தெல்லாம் தணிவ தென்றோ?

(பாரதி நினைவுநாள் கவியரங்கம் 11.09.1976)

 

 

 

 

30. எக் காலம்

காட்டுகிற ‘டீவி’ யைக் கண்டன்று நீகளித்தாய்
நாட்டமுடன் ‘தூரதர்சன்’ நாடியின்று பார்க்கின்றாய்
பூட்டுந் தமிழ்ப்புலியே போற்றும் உனதுமொழி
காட்டுந் தொலைக்காட்சி காண்பதுதான் எக்காலம்?

இசையெழுப்பும் ரேடியோ’ ஏற்றன்று கேட்டிருந்தாய்
வசையுடுத்த ‘ஆகாச வாணியின்று’ கேட்கின்றாய்
நசைவிடுத்த கோட்புலியே நம்நாட்டில் வானொலியைப்
பசியெடுத்துக் கேட்பதற்குப் பாய்வதுதான் எக்காலம்?

ஏறிப் பறந்துவரும் ‘ஏரோப்ளேன்’ அன்றிவர்ந்தாய்
மாறியது ‘வாயுதூத்’ மற்றதிலின் றேறுகின்றாய்
[1]தூறல் வரிப்புலியே தூக்கம் விடுத்தெழுந்து
வீறுடன்நீ வானூர்தி மேலூர்தல் எக்காலம்?

காணுங்கால் ‘குட்மார்னிங்’ என்றன்று கையெடுத்தாய்
நாணமிலா தின்று ‘நமஸ்தே’ மொழிகின்றாய்
[2]ஏணம் விடுபுலியே ஈன்றெடுத்த தாய்மொழியிற்
காணும் வணக்கமெனக் கைகுவிப்ப தெக்காலம்?

(8.3.1987)

  1. (தூறல் – பழிச்சொல்)
  2. (ஏணம் – வலிமை)

 

 

  1. தமிழனா நீ?

எடுப்பு

 

தமிழன் எனும்பெயர் தகுமா? – உனக்குச்
சான்றோர் மொழிசெவி புகுமோ?                                                  (தமிழன்)
தொடுப்பு

சமையம் பலபல சார்ந்தனை தாழ்ந்தனை
சாற்றிடும் சடங்கினில் வீழ்ந்தனை உனக்கினி                           (தமிழன்)

 

முடிப்பு

இந்துவென் றொருமதம் இனிதெனத் தோய்ந்தனை
ஏனோ தமிழ்மொழி உணர்வினில் தேய்ந்தனை?
வந்திடும் வடமொழிப் பேர்களுக் கேங்கினை
வையக அடிமையென் றொருபழி தாங்கினை                             (தமிழன்)

ஆங்கொரு சிலுவை அணிந்திட ஓடினை
அதனால் ஆங்கிலப் பெயர்களே நாடினை
ஈங்கொரு இகலாம் எனப்புகழ் பாடினை
ஏனோ அரபு மொழிப்பெயர் சூடினை?                                          (தமிழன்)

ஒருமதம் தழுவுதல் உரிமையென் றோதலாம்
உன்தமிழ் அன்னையை எப்படி மீறலாம்?
பெரும்புகழ்த் தமிழகம் பெற்றிடும் நீயெலாம்
பிறமொழிப் பெயர்களை எப்படிச் சூடலாம்?                     (தமிழன்)

 

7.3.1987

 

 

 

 

32. சமயத்தில் நட்டதமிழ்

அருளப்பன் என்னும் பேரான்
அப்துல்லா வானான் கண்டாய்!
கருப்பணன் என்பான் இங்கே
கபூரென ஆகி விட்டான்;
விருப்புள பொன்னன் கூட
விஜயனாய் மாறி விட்டான்;
வெறுப்புற ஜெகந்நாத் தானான்
வெள்ளையன் அந்தோ அந்தோ!

செல்லப்பன் இயல்பு மாறி
ஜீவபந்த் தாகி விட்டான்;
நல்லப்பன் கெட்டே போனான்
நண்ணினான் ஸ்ரீபா லாக;
சொல்லுக்கோர் அழகன் இங்கே
சொக்கினான் ஜோசப் பானான்;
அல்லலுக் காளாய் நின்றான்
அந்தோணி யானான் மெய்யர்.

தைத்திங்கள் பிறக்கும் நாளைத்
தமிழ்மகன் சங்கி ராந்தி
வைத்திங்குக் கூவி நின்றான்;
வளரிளஞ் சிறுவ ரெல்லாம்
மொய்த்திங்குக் கூடி ஆட
முயல்மகார்நோன்பை கூடக்
கைத்ததென் றொதுக்கி விட்டான்
கழறினான் தசரா என்றே.

திருமறைக் காடென் றோதும்
தீந்தமிழ்ப் பெயரும் செல்ல
வருமொழி வேதா ரண்யம்
வந்தது; வளங்கள் யாவும்
மருவிடும் தமிழின் அண்ணா
மலையெனும் பெயரும் மாறி
அருணமும் கிரியு மாகி
அய்யவோ ஓங்கிற் றம்மா!

 

தன்பெயர் மாற்றி வைத்தான்;
தனித்தமிழ் ஊரின் பேரை
என்பயன் கருதி னானோ
இயம்பினான் வேறு பேரால்;
முன்புள திருநாள் தன்னை
மொழிந்தனன் பெயரை மாற்றி;
புன்செயல் என்றே எண்ணான்
பொன்றினான் அடிமைப் பட்டே.

சமயத்தில் தமிழை நட்டான்
சாய்ந்துமே தளர்ந்த தம்மா!
இமயத்தில் கொடியை நட்டோம்
என்றெலாம் வீரம் பேசித்
தமிழைத்தான் கோட்டை விட்டான்
தமிழனென் றொருபேர் கொண்டான்
இமையைத்தான் விழிம றந்தால்
எப்படிப் புகல்வ தம்மா?

மதமெனும் பேய்பி டித்தே
மடமையுள் மூழ்கி நின்றான்;
கதவினைத் திறந்து வைத்தான்
கண்டவை புகுவ தற்கே;
எதனையும் தழுவிக் கொண்டான்
இவனைத்தான் மறந்தே போனான்;
பதரெனச் சொல்வ தல்லால்
பகர்ந்திட உவமை ஏது?

 

(27-9-1975)

 

 

 

 

33. கோவிலுக்குள் கொடுமை

தருக்கினால் அயலான் வந்து
தமிழனைப் பழித்துப் பேசும்
வெறுப்புறுங் குற்றஞ் செய்தால்
விரைந்தவன் முதுகெலும்பை
நொறுக்கடா என்ற பாடல்
நுவன்றவன் பிறந்த மண்ணிற்
செருப்பினால் தாக்கப் பட்டான்
செந்தமிழ் பழித்த வாயன்.

என்னுமோர் சொல்லைக் கேட்டேன்
இருசெவி குளிரப் பெற்றேன்
வன்முறை நோக்க மன்று
வழிவழி மரபு மன்று
சொன்முறை யெல்லாஞ் சொல்லித்
தொலைத்தும்நற் கோவி லுக்குள்
தென்மொழி வேண்டா வென்றால்
செய்வது வேறென்? சொல்லும்

தாய்மொழி பழித்துப் பேசுந்
தறுதலை எவனுந் தோன்றின்
பாய்புலி யாவர் எங்கள்
பைந்தமிழ் மறவர் என்று
கூய்வரும் மொழியைக் கேட்டுக்
குளிர்ந்ததென் னுள்ள மெல்லாம்;
நாய்களின் வாலைச் சற்று
நறுக்கித்தான் வைக்க வேண்டும்.

தன்னுடல் வளர்ப்ப தற்குத்
தமிழையே சொல்லிச் சொல்லிப்
பொன்பொருள் பெருக்கிக் கொண்டான்;
புல்லியன் நன்றி கொன்றே
தென்மொழி வெறுத்தல் கண்டும்
திருவிழா நடத்துங் கூத்தர்
பின்னுமேன் அழைக்க வேண்டும்?
பித்தர்கள் இவர்போ லுண்டோ?

 

வடமொழி ஒன்றே ஏற்பர்
வண்டமிழ் ஏலா ரென்றால்
கடவுளர் உருவக் கல்லைக்
கடலிடை வீச லன்றி
இடமுடைக் கோவி லுக்குள்
இன்னுமேன் வைத்தல் வேண்டும்?
மடமிகு மதிய ரானீர்
வந்தவர் ஏறிக் கொண்டார்.

கல்லினைக் கடவு ளாக்கிக்
கைத்திறன் காட்டுஞ் சிற்பி,
கல்லொடு கல்ல டுக்கிக்
கோவிலைக் கட்டுங் கொற்றன்,
கல்லினை மண்ணைச் சாந்தைக்
களத்தினிற் சுமக்குஞ் சிற்றாள்
செல்லவுந் தடையாம் செய்த
சிலைகளைத் தொட்டால் தீட்டாம்.

மாந்தரைத் தடுத்த போது
மடமையாற் பொறுத்துக் கொண்டீர்
தீந்தமிழ் மொழியை நம்மை
ஈன்றருள் தாயைத் தீயர்
போந்தவர் தடுக்கும் போதும்
பொறுமையா காட்டு கின்றீர்?
மாந்தரென் றும்மை யெண்ண
மனமிகக் கூசு கின்றேன்.

தன்மதிப் பிழந்தீர் வேதர்
தாளிணை வருடி நின்றீர்
நன்மதி திரிந்து கெட்டீர்
நால்வகை ‘வருண தர்மம்’
பன்னுதல் நம்பி ஏய்ப்போர்
பகட்டுரைக் கடிமை யானீர்
இந்நிலை தெளியா தின்னும்
இருட்டினில் உழலு கின்றீர்

கதிரவன் தோன்றக் கண்டும்
கண்களை மூடிக் கொண்டீர்
மதியொளி பரவல் கண்டும்
மயக்கினை விட்டீ ரல்லீர்
புதியதோ ருலக மிங்குப்
பூப்பது காணீ ராகி
முதுகினை வளைத்துக் கொண்டீர்
முப்புரி நிமிர விட்டீர்.

 

(28-3-1984)

 

 

 

 

34. திரும்பி விட்டேன்

‘ஆறணிந்த சடைமுடியான் கூடல் தன்னில்
ஆர்வமுடன் சுந்தரப்பேர் வழுதி யானான்;
கூறமர்ந்த பங்கினளும் மதுரை மன்னன்
குலக்கொடியாய்த் தடாதகையாய்த் தோன்றி வந்தாள்;
வீறமர்ந்த வேலவனும் உக்கி ரப்பேர்
மேவியங்கு வந்துதித்தான்; இவர்கள் ஈண்டுச்
சேரவந்து பிறப்பெடுக்கும் நோக்க மென்ன?
செந்தமிழின் சுவைமாந்தி மகிழ வன்றோ ?’

‘தேனிகர்க்குந் தமிழ்மொழியில் நெஞ்சி னிக்கத்
தேவாரம் பாடியருள் மூவ ருள்ளும்
வானிடிக்கும் பொழில்சூழும் ஆரூர் வாழும்
வடிவழகன் சுந்தரனோர் நள்ளி ருட்டில்
ஆனுயர்த்த கொடியானைத் தூத னுப்பி
ஆட்டாத ஆட்டமெலாம் ஆட்டி வைத்தான்
[1]சேனிகர்த்த விழிபங்கன் தமிழை வேட்டுச்
செய்யாத செயலெல்லாஞ் செய்து வந்தான்’.

‘நல்லறிஞர் உறைவிடமாம் தொண்டை நாட்டில்
நாடறிந்த காஞ்சிதனில் வாழ்ந்து வந்த
நல்லவனைக் கணிகண்ணன் என்பான் றன்னை
நாடுகடந் தேகுகென அரசன் கூறச்
செல்லுமவன் பின்தொடர்ந்தார் புலமை மிக்க
திருமழிசை யாழ்வாரும்; கார்மே கத்தை
வெல்லுகின்ற நிறத்தானும் அவர்பின் சென்றான்
வேட்டெழுந்த தமிழார்வ மதனால் அன்றோ!

‘தூண்டாமல் தோன்றுசுடர்க் காதல் கொண்டு
சூடிமலர் கொடுத்தாளைப் பாவால் நம்மை
ஆண்டாளை ஆண்டானை, நினைந்த ரற்றி
அருட்கடலில் ஆழ்வார்தம் ஆயி ரங்கள்
பூண்டானை, அவர்திருவாய் மொழியைக் கேட்டுப்
புவியிடத்து மாலாகி நின்றான் தன்னை,
வேண்டானெந் தமிழ்மொழியை என்று ரைத்தால்
வெறுமதியர் என்பதலால் வெறென் சொல்வோம்?’

 

‘கடவுளர்கள் உகந்தமொழி, என்புக் கூட்டைக்
காரிகையாக் கண்டமொழி, மறைக்காட் டூரில்
அடைகதவந் திறந்த மொழி, முதலை யுண்ட
ஆண்மகவை மீட்டமொழி, தெய்வப் பான்மை
படருமொழி, பத்திமொழி, தொடுக்குந் தெய்வப்
பழம்பாடல் நிறைந்தமொழி, உள்ள மெல்லாம்
மடைதிறந்த வெள்ளமென அருளைப் பாய்ச்சி
மகிழ்விக்கும் அன்புமொழி தமிழே யன்றோ!’

என்றுரைத்த சொன்மாரி செவியு ளோடி
என்மனத்தை நெக்குருக்க இளகி ஆண்டு
நின்றிருக்கும் நான் மகிழ்ந்தேன்; எதிரில் தோன்றும்
நெடுங்கோவி லுட்புகுந்தேன்; அருளால் நெஞ்சம்
ஒன்றிநிற்கும் பன்னிருவர் நால்வர் மற்றோர்
ஓதிவைத்த பாடலெலாம் உன்னி யுன்னிச்
சென்றிருந்தேன்; திடுக்கிட்டேன்; சிந்தை நொந்தேன்;
செந்தமிழைக் காணவிலை திரும்பி விட்டேன்.

 

  1. (சேல் – நிகர்ந்த)

 

 

 

 

35. எது கவிதை?

ஒருத்தியும் ஒருவனும் உள்ளத் தெழுந்த
பருவ உணர்ச்சி பக்குவம் பெற்றுக்
கருக்கொளும் பின்னர் உருக்கொளும்; எல்லா
உறுப்பும் அமைந்து வனப்புடன் ஒருமலர்
வந்து தோன்றும்; வாய்த்த அதைத்தான்
இந்த வுலகம் குழந்தையென் றியம்பும்;
கற்பனை வளமும் கவிஞன் உளமும்
பொற்புடன் மருவப் புதியதோர் உணர்ச்சி
கருக்கொளும் பின்னர் உருக்கொளும்; எல்லா
உறுப்புடன் அமைந்து வனப்புடன் நறுமலர்
வந்து தோன்றும்; வாய்த்த அதைத்தான்
இந்த வுலகம் கவிதையென் றியம்பும்;
உறுப்புகள் இல்லா உருவினை
வெறுக்கும் பிண்டமென் றிசைக்குமிவ் வுலகே.

 

(27-11-1980)

 

 

 

 

36. ஆணா? பெண்ணா?

உரைநடை என்பதோர் உரம்பெறும் ஆண்மகன்;
கவிநடை என்பது கண்கவர் பெண்மகள்;
கற்பனை என்னும் பொற்புறு சீலையால்
ஒப்பனை செயினும் உரைநடை என்னும்
ஆண்மகன் பெண்மகள் ஆதல் ஒல்லுமோ?
காண்பவர் அன்றோ கைகொட்டிச் சிரிப்பர்;
உடுத்திய சீலை ஒன்றால் மட்டும்
அடுத்தோர் பெண்ணென் றறைதல் செய்யார்;
பருவ மகளெனப் பாருக் குணர்த்த
உருவ அமைப்புடன் உறுப்பெழில் வனப்பும்
பெறுதல் வேண்டும்; பெண்மையும் வேண்டும்;
பேசுமிவ் வொன்றும் பெறாஅ திருந்தும்
ஆசைமீ தூர ஆணைப் பெண்ணெனப்
பேசுதல் ஒழிக; பித்தம் தவிர்க;
புதுமை எனவும் புரட்சி எனவும்
எதையுஞ் செய்தல் இழிவினும் இழிவே

 

(5-12-1980)

 

 

 

 

37. ஐக்கூ அடிமை

அரும்பிய கருத்தை அழகிய முறையிற்
சுருங்கிய அடிகளிற் சொல்லுதல் வேண்டின்
திருந்திய தமிழிற் சிலவகை யுண்டு,
முன்னிய கருத்தை மூன்றடிக் குள்ளே
பன்னும் பாவகை பைந்தமிழ் காட்டும்
முந்தை இலக்கணம் மொழிந்த சான்றோர்
சிந்தியல் வெண்பா என்றதைச் செப்புவர்;
ஈரடிப் பாடல் இயம்பலும் உண்டு
பேரது யாதெனிற் குறளெனப் பேசுவர்;
ஓரடி கூட உள்ளக் கருத்தை
நேடி யாக நிகழ்த்தலும் உண்டு
கொன்றை வேந்தன் என்றதைக் கூறுவர்;
அரையடிப் பாடலும் அருந்தமிழ் காட்டும்
ஆத்தி சூடியென் றதன்பேர் உரைப்பர்;
ஏத்தும் இவையெலாம் தமிழில் இருக்கச்
சீர்த்த தமிழைச் சிந்தையிற் கொளாது
எங்கோ அலைகிறாய் ஐக்கூ என்கிறாய்
இங்கே இருப்பதை எண்ணாது தாய்மொழிக்
கின்னல் விளைக்க எண்ணித் திரியும்
உன்னை அடிமையென் றுரைப்பதே சாலும்
கைப்பொருள் இருக்கக் கடன்பெற அலையும்
பைத்தியம் உலகிற் பார்த்ததும் இலையே!

 

(26.10.1990)

38. அதன் பெயர் என்ன?

பிறந்தவர் அனைவரும் மனிதர் – ஆனால்
பிரிவுகள் அவருளும் உண்டு
சிறந்தவர் எனச் சிலர் வாழ்வர் – சீர்
குறைந்தவர் எனச்சிலர் தாழ்வர்.

கனிபவை யாவுங் கனிகள் – ஆனால்
கழிப்பன அவற்றுளும் உண்டு
இனியன எனச் சில கொள்வார்- சுவை
இல்லன எனச்சில கொள்ளார்.

காய்ப்பன யாவுங் காய்கள் – ஆனால்
கறிக்குத வாதன வுண்டு
பேய்ச்சுரை கொள்பவர் உண்டோ – அந்தப்
பேதைமை எவரிடங் கண்டோம்?

பிறப்பன யாவுங் குழந்தை – என்று
பேசுவ தெப்படிப் பொருந்தும்?
உறுப்புகள் உடம்பினில் இன்றிப் – பிறந்தால்
உண்மையில் அதன் பெயர் என்ன?

எழுதிய வெல்லாங் கவிதை – என்றால்
எங்ஙனம் ஒப்புவ ததனை?
பழுதுகள் அடைந்தன உறுப்பு – பின்னும்
பாவெனச் சொல்வதா சிறப்பு?

39. கற்றோரை வேண்டுகிறேன்

அறிவியல் கற்று வந்தீர்
அளவிலா உவகை கொண்டேன்;
பொறியியல் தேர்ந்து வந்தீர்
பூரித்து மகிழ்வு பெற்றேன்;
பொருளியல் துறையில் தேர்ந்தீர்
புகழ்ந்தனர் அயல்நாட் டாரும்;
இருளினில் மூழ்கி நின்ற
இனத்திலோர் ஒளியைக் கண்டேன்.

மருத்துவத் துறையுங் கற்றீர்
மருந்தியல் நெறியும் பெற்றீர்
பெருத்தநும் அறிவால் நாட்டில்
பெரும்புகழ் குவித்தீர் மேலும்
[1]அருத்தியால் உம்மை வேண்டி
அழைத்தனர் வெளிநாட் டாரும்;
கருத்தினுள் எழுச்சி கொண்டேன்
காய்நிலஞ் செழித்த தென்றே!

உயிரியல் தோய்ந்து கற்றீர்
உடலியல் ஆய்ந்து கற்றீர்
பயிரியல் செழிக்கக் கற்றீர்
பலவகை நிலநூல் என்னும்
[2]அயிரியல் அதுவும் கற்றீர்
ஆதலின் உலகம் போற்றும்
பயன்பல விளையும் என்றே
பகலெலாம் கனவு கண்டேன்

வேதியல் என்று கூறும்
வியத்தகு நூலுங் கற்றீர்
ஓதிய பூதம் ஐந்தை
உணர்த்திடும் இயல்கள் கற்றீர்
மூதுணர் வுடையார் சொன்ன
மொழியியல் பலவுங் கற்றீர்
ஆதலின் நிமிர்ந்து நின்றேன்
அருந்தமிழ் தழைக்கு மென்றே.

 

கற்ற அத் துறைகள் யாவும்
கருத்தினில் தேக்கி வைத்துப்
பெற்றநம் தாய்மொ ழிக்குள்
பிறமொழிக் கலைக ளெல்லாம்
முற்றிய வளர்ச்சி காணும்
முயற்சியில் யாது செய்தீர்?
பற்றினை எங்கோ வைத்துப்
பதவிக்கே நெஞ்சை வைத்தீர்

இனத்திலே ஒளியைக் கண்டேன்
இருநிலஞ் செழிக்கக் காணேன்;
மனத்துளே கனவு கண்டேன்
வாழ்விலே பலிக்கக் காணேன்;
முனைப்புடன் நிமிர்ந்து நின்றேன்;
முகங்கவிழ் நிலையைத் தந்தீர்;
நினைத்துநீர் முனைந்தெ ழுந்தால்
நெடும்புகழ் வாகை கொள்வீர்.

இன்னுமோ அடிமை நீங்கள்?
இன்றுநீர் உரிமை மாந்தர்;
பன்னிலை அறிவா இல்லை?
பரிவுதான் நெஞ்சில் இல்லை;
பன்னருங் கலைகள் யாவும்
பைந்தமிழ் அடையச் செய்வீர்!
நன்னிலை தமிழுக் காக்க
நயந்துநான் வேண்டு கின்றேன்.

 

  1. அருத்தி – அன்பு
  2. அயிரியல் – நுண்ணியல்

 

 

 

 

40. பட்டஞ் சூட்டுக!

பல்கலைக் கழகம் பயிற்றிடும் மொழிகளுள்
தொல்தமிழ் ஒன்று; தூய்தமிழ் விழைந்தோர்
ஈரிரண் டாண்டுகள் இலக்கண இலக்கியப்
போரினுள் மூழ்கித் தேறினர் வென்றனர்;
வென்றவர் தம்மை வித்துவான் என்றனர்;
அன்றது சிறப்பென அயர்ந்தனர் நம்மவர்,
உரிமையின் பின்னர் அரியணை ஏறிய
பெரியவர் துணையால் பெயர்பிறி தாயது;
சொற்றமிழ் பயின்றோர் சூடிய பிறமொழிப்
பட்டயம் போயது பைந்தமிழ் ஆயது;
புலவர் எனும் பெயர் பூத்தது மலர்ந்தது
குலவிய மகிழ்வால்கூறினம் நன்றி;
பெயராற் புதுமை பெற்றதே ஆயினும்
உயர்வால் மதிப்பால் ஒன்றும் பயனிலை;
பட்டயம் எனவே பகர்ந்தனர் அதனைப்
பட்டம் எனச்சொலப் பதைத்தனர் தமிழர்;
ஆங்கிலம் பயின்றவர்க் கடிமைப் புத்தி
நீங்கிய பாடிலை நெடுநாட் பிணியது;
கழகம் அரியணை கண்ட பின்னரும்
இழிநிலை தமிழுக் கிருத்தலும் முறையோ?
தமிழால் வென்றது தமிழால் உயர்ந்தது
தமிழை வளர்ப்பது தமிழை மதிப்பது
கழகம் என்றெலாம் கழறுவர் அதனால்
தமிழுக் குயர்நிலை தரல் அதன் கடமை;
பட்டயம் எனுமொரு பழம்பெயர் மாற்றிப்
பட்டம் என்றொரு சட்டம் செய்தால்
உலகம் குப்புற உருண்டா வீழும்?
அலைகடல் பொங்கி ஆர்த்தா சீறும்?
பட்டமென் றாக்கிடின் பலப்பல சிக்கல்
பொட்டெனப் போகும்; போற்றிடுந் தமிழகம்;
அரசு கட்டில் அமர்ந்தினி தாளும்
[1]கலைஞர் நாவலர் கருதுவீ ராயின்
இலையொரு தடையும் எம்தமிழ் மொழிக்கே;

 

இன்றுள அரசு நன்றிது செயாவிடின்
என்றுதான் விடியும் எந்தமிழ் வாழ்வு?
தம்மை யின்ற தாய்த்திரு நாட்டைச்
செம்மைத் தமிழால் செப்பிட மறுத்தவர்
பழிக்கவும் இழிக்கவும் பட்டனர் அன்றோ?
மொழிக்குயர் ஆக்கம் முனைந்து தராவிடின்
நாளைய உலகம் நம்மையும் பழிக்கும்;
வேளை மிதுதான் விரைந்திது புரிக!
செய்யத் தகுவ செய்யா விடினும்
எய்துவ தியாதெனத் தெரிந்து செயல்செயும்
நுண்மாண் நுழைபுலம் உடையீர்
நண்பால் வேண்டுதும் நலம்தமிழ் பெறவே.

 

30-11-1974

 

  1. (கலைஞர், நாவலர் – கலைஞர் மு. கருணாநிதியும், நாவலர்.இரா. நெடுஞ்செழியனும்)

 

41. தமிழ்ச் சான்றோரைப் போற்றுக!

தாய்மொழியைப் பாராட்ட விழையும் மாந்தர்
தம்மொழியிற் சான்றோரைப் போற்றல் வேண்டும்
தாய்நாட்டு முதலமைச்சர் மாலை சூட்டத்
தகுகல்விப் பொறுப்பேற்ற அமைச்சர் நின்று
வாய்விட்டுப் பாராட்ட நிதிய மைச்சர்
வரையாது மனங்குளிர்ந்து பரிசில் நல்கச்
[1]சேய்நாட்டார் வியந்துரைக்க யானை மீது
செம்மாந்து செலல்வேண்டும் அந்தச் சான்றோர்.

செம்மாந்து செல்கின்ற காட்சி காணச்
சேர்ந்தோடி வருகின்ற மக்கள் கூட்டம்
அம்மாஎன் றதிசயிக்க வேண்டும் என்றன்
ஆவல்நிறை வேறுகின்ற நாள்தான் என்றோ?
இம்மாநி லத்திருக்கும் புலவர் என்போர்
எல்லாரும் ஒன்றாகி எழுந்தால் உண்டு;
சும்மாஇங் கிருந்ததெலாம் போதும் போதும்
சூளுரைத்து நாமெழுதல் வேண்டும் வேண்டும்.

 

  1. (சேய் நாட்டார் – தூர நாட்டவர்)

 

 

42. உளங்கவர் புலவர்

கண்ணுக்கு விருந்தாகும் இயற்கைக் காட்சி
காளையரும் கன்னியரும் விழைந்து தங்கள்
கண்ணுக்கு முதன்மைதரும் காதற் காட்சி
கருவிழியை விழித்திமையார் முகத்தும் மார்பும்
புண்ணுக்கு விழைந்திருக்கும் வீரக் காட்சி
புலவருக்குப் புரவலரும் பணிந்து நின்று
பண்ணுக்கு விழைந்திருக்கும் காட்சி எல்லாம்
பாடிவைத்த சங்கத்தார் கவர்ந்தார் நெஞ்சை

அகச்சமையம் புறச்சமையம் என்று கூறி.
அளப்பரிய சமையங்கள் படைத்து நின்று,
பகைக்குணமே கொண்டுழன்ற மாந்த ருக்குப்
பகவனென ஒருபொருளை உணர்த்திப் பாவில்
மிகச்சிறிய குறட்பாட்டால் அறத்துப் பாலும்
மேன்மைபெறும் பொருட்பாலும் இன்பப் பாலும்
தொகுத்தறங்கள் உரைத்தவன்யார்? அவனே யன்றோ
தொன்னாள்தொட் டுளங்கவர்ந்த கவிஞன் ஆவன்;

கற்புடைய மாதர்தமை உலகம் போற்றக்
கலைக்கோயில் எழுப்பியருள் சேரன் நல்ல
பொற்புடைய அறச்செல்வி பசிநோய் நீக்கப்
பூண்டிருந்த தொண்டுளத்தை விளக்கும் வண்ணம்
சொற்புதுமை காட்டியொரு நூல ளித்த
தொல்புதல்வன் மதுரைநகர் வாழும் சாத்தன்,
பற்பலவாம் மணம்புணர்ந்த சீவ கற்குப்
பாமாலை தொடுத்ததிருத் தக்க தேவன்.

தமிழ் மொழியின் சொற்களெலாம் முன்னே நின்று
தவம்புரிந்தே இடம்பெறுவான் முந்தி நிற்க
அமிழ்தனைய பாடலுக்குள் வரிசைநல்கி
அவைதமக்கு மாற்றுயர்ந்த அணிகள் நல்கித்
தமியனெனச் சொற்சிலம்பம் ஆடுங் கம்பன்,
தரணியிலோர் நிகரில்லாப் பரணி பாடி
நமையெல்லாம் மயக்குறுத்தும் வீர மூட்டி
நாப்பறையால் போர்ப்பறைகள் ஆர்த்த நல்லோன்.

 

பொன்விளைந்த களத்தூரன் வெண்பாப் பாடிப்
புகழேந்தும் ஒருகவிஞன் தமிழுக் காக்கம்
முன்விழைந்து நூல்செய்து காலங்கண்ட
முத்தமிழ்க்குத் தொண்டுசெயும் கவிஞ ரெல்லாம்
என்விழைவுக் கிலக்கானோர்; அவர்தம் பாட்டின்
இனிமைக்கும் தனிமைக்கும் அடிமை யானேன்;
இன்பளைந்த அவர்திறத்தை நுவலக் கேட்பின்
என்பெல்லாம் நெக்குருக மகிழும் உள்ளம்.

மாசகன்ற வீணையென வெம்மை நீக்க
மாலைவரும் மதியமென, உளஞ்சி லிர்க்க
வீசுகின்ற தென்றலென, உயிர்கள் வேட்கும்
வீங்கிளமை வேனிலென, மலரில் வண்டு
மூசுகின்ற பொய்கையென உவமை சொல்லி
முழுமுதலை விளக்கிநின்ற நாவின் வேந்தன்
பேசுகின்ற தமிழ்ப்பாட்டால் இறையைக் காட்டும்
பெரும்புலவன் கவராத உள்ளமுண்டோ?

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் நல்ல
குளிர்தருவாய். தருநிழலாய், நெஞ்ச மென்னும்
மேடையிலே வீசுகின்ற தென்றற் காற்றாய்,
மென்காற்றின் விளைசுகமாய் கருணை என்னும்
ஓடையிலே ஊறிவரும் தெண்ணீ ராகி
உகந்தமண மலராகி, சிறுவ னாக
ஆடையிலே எனைமணந்த இராம லிங்க
அடிகளவர் உளங்கவர்ந்த வள்ள லாவர்.

பாமரராய் விலங்குகளாய்ப் பான்மை கெட்டுப்
பகுத்தறிவும் அற்றவராய்ப் பிறந்த நாட்டைப்
பூமிதனில் அயலவர்க்கே அடிமை யாக்கிப்
புழுவினைப்போல் பூச்சியைப்போல் கிடந்த நாளில்
தேமதுரத் தமிழ்ப்பாட்டால் புரட்சித் தீயைத்
திசையெல்லாம் மூட்டியவன் உரிமை எல்லாம்
நாமடைய வேண்டுமென்ற உணர்வு தந்த
நற்கவிஞன் எனதுள்ளம் கொள்ளை கொண்டான்;

 

 

தென்னாட்டின் விடுதலைக்கே வாழ்வு தந்தோன்;
தீந்தமிழின் உரிமைக்கே பாடல் தந்தோன்;
இந்நாட்டில் பிறமொழிகள் படையெ டுத்தால்
எழுந்தார்க்கும் பாவேந்தன் எதிரி கோடிப்
பொன்காட்டி யழைத்தாலும் இகழ்ந்து தள்ளிப்
புகழ்மிக்க தமிழினத்தின் மேன்மை காக்கத்
தன்பாட்டைப் படைத்தளித்தோன் என்றும் மாறாத்
தன்மான இயக்கத்தான் உளங்க வர்ந்தான்;

எளிமைக்குப் பிறப்பிடமாய், இனிய சொல்லின்
இருப்பிடமாய் ஆசையிலா மனத்த னாகி,
ஒளிமிக்க புத்தனுக்கும் பார சீக
உமருக்கும் புகழோங்கும் வண்ணம் செய்த
களிமிகுத்த பாவலனாய்ச், சிறுவர் உள்ளம்
கனிவிக்கும் கவிமணியாய், உண்மை நேர்மை
தெளிவிக்கும் ஓருருவாய் வாழ்ந்த எங்கள்
தென்புலத்தான் திருவடியை நெஞ்சிற் கொள்வேன்.

எத்துணைதான் இடுக்கண்கள் நேர்ந்த போதும்
எதிர்த்தெழுந்து நகைத்துநின்று வெற்றி கண்ட
முத்தமிழ்க்குப் புகழ்படைத்த புலவர் பல்லோர்
முன்னாளில் வாழ்ந்திருந்தார்; என்றன் உள்ளம்
நத்துகின்ற புலவர்சிலர் பெயரை இன்று
நாம்நினைதல் நலம்பயக்கும்; நினைந்து வாழ்த்தும்
அத்திறத்தால் தமிழ்காக்கும் எண்ணம் நெஞ்சில்
அரும்புவிடும்; மலராகும்; மணம்ப ரப்பும்.

 

குன்றக்குடி கவியரங்கம் – 16.1.1965

 

43. இளங்கோவடிகள்

கோவேந்தர் பெருங்குடியிற் பிறந்தும் நாட்டுக்
குடிமக்கள் காப்பியத்தைப் படைத்துத் தந்தான்;
மூவேந்தர் ஒற்றுமைக்கு வழியுங் கண்டான்;
முதலினமாம் தமிழினத்தின் வரலாற் றுக்கு
நாவேந்தும் புகழ்சேர்த்தான் சேர நாட்டு
நற்றமிழன்; பெண்ணினத்தின் பெருமை சொன்ன
பாவேந்தன்; தேனூற்றி வைத்த தைப்போல்
பாநூற்றும் தான்நோற்றும் பெருமை கொண்டான்.

சேவடியின் சிலம்பணியால் விளைந்து வந்த
சிலம்படியால் கற்பணங்கின் வரலாற் றுக்கோர்
கோவிலினைக் கட்டியவன்; அரசு வேண்டாக்
கோவடிகள்; முத்தமிழின் காப்பி யத்தால்
மூவரசர் வரலாறும் மொழிந்த மேலோன்
மொய்த்தபுகழ் எம்மவர்க்குத் தந்த நல்லோன்;
நாவரிசை பாவரிசை காட்டி எங்கள்
நற்றமிழ்க்குச் சுவைமிகுத்தான் வாழ்க நன்றே.

 

 

 

 

44. புரட்சிப் பாவலன்

ஒப்பரிய யாப்பென்னும் அணையைக் கட்டி
உணர்ச்சியெனும் பெரும்புனலைத் தேக்கி வைத்தான்;
அப்புனலுள் மூழ்கியதன் ஆழங் காணல்
அரிதெனினும் கரையோரம் நின்று கொண்டு
செப்புகின்றேன் சிலமொழிகள்; புதிய பாங்கில்
செய்தமைத்த பாட்டுக்குள் வெறியை ஏற்றும்
அப்பனவன் பரம்பரையில் நானோர் பிள்ளை
ஆதலினால் அவன் பெருமை பாடு கின்றேன்.

பயில்கின்ற நெஞ்சமெலாம் வண்டாய் மொய்க்கப்
பைந்தமிழ்த்தேன் சுவைநல்கும் முல்லைக் காடு;
மயில்திரியும் தென்பொதிகைக் குற்றா லத்து
மலையிறங்கும் தேனருவி; துன்ப மென்னும்
[1]மயலிரிய நம்முளத்தை இளமை யாக்கி
மகிழ்வுதரும் இசையமுது; பாட்டின் வேந்தன்
இயல்பினிலே அமைதியினன்; எழுச்சி கொண்டால்
இரணியன்தான்; எதிர்நிற்க எவரு மில்லான்

குருட்டுலகில் இருட்டறையில் வாழ்வோர்க் கெல்லாம்
குடும்பவிளக் கேற்றியறி வொளியைத் தந்தான்;
திருட்டுமனப் போக்கர்தமைச் செருக்க டக்கித்
தீந்தமிழை வளர்ப்பதற்கு வழியைச் சொல்லித்
தெருட்டுகிற தமிழியக்கம் ஒன்று தந்தான்;
தெரிகின்ற கதிர்திங்கள் மலர்க ளுக்குள்
உருக்கொண்டு சிரிக்கின்ற அழக னைத்தும்
உருவாக்கி நமக்களித்தான் உலகம் போற்ற.

கூத்தடிக்க நாடகநூல் தந்தா னல்லன்
கொள்கைக்கே நாடகங்கள் எழுதித் தந்தான்
பூத்தொடுத்த குழல்மடவார் தம்மைத் தாழ்த்தும்
புன்மைகளை மாய்ப்பதற்கு வீரம் மிக்க
பாத்திறத்தான் தமிழச்சி ஏந்துங் கத்தி
படைத்தளித்தான்; நினைந்துநினைந் துள்ளம் பொங்க
ஏத்தெடுக்கும் முத்திரையாய் விளங்கும் வண்ணம்
எதிர்பாரா முத்தமொன்று தந்து வந்தான்.

 

காவியங்கள் எனும் பெயரில் நல்ல நல்ல
கருத்தெல்லாம் உள்ளடக்கி நிலைத்து நிற்கும்
ஓவியங்கள் பலதந்தான்! பரிசி லாக
உயர்பாண்டி யன்பரிசில் எனும் நூல் தந்தான்;
பூவிளங்கும் செழுந்தேனோ கரும்பின் சாறோ
புரட்சிக்கு நடும்வித்தோ என்று மக்கள் நாவியந்து
போற்றும்வணம் தொகுதி யாக
நல்லகவி மலர்தொடுத்து நமக்க ளித்தான்.

பாவேந்தன் தீப்பிழம்பின் வெம்மை சேர்த்துப்
படைத்தளித்த தீந்தமிழின் உணர்ச்சிப் பாட்டை
நாவேந்திப் பாடிவிடின் உடலி லுள்ள
நரம்பனைத்தும் முறுக்கேறும்; மொழிக ளெல்லாம்
[2]ஏவேந்திப் போர்தொடுக்கும்; விழிக ளெல்லாம்
எரிகக்கும்; தோள்விம்மும்; போரில் எந்தக்
கோவேந்தன் வந்தாலும் எதிர்த்து நிற்கக்
கொடுங்கோலைப் புறங்காண உணர்ச்சி நல்கும்

விழுதுவிட்ட ஆலமரம் சாதி என்றால்
வேர்பறியச் சாய்ந்துவிழச் செய்த பாட்டு;
பழுதுபட்ட கண்மூடிக் கொள்கை என்னும்
பழங்கோட்டை சரிந்துவிழச் செய்த பாட்டு;
தொழுதுகெட்ட தமிழினத்தார் நிமிர்ந்து நிற்கத்
துணிவுதனை உணர்ச்சிதனைத் தந்த பாட்டு;
பொழுதுபட்டுப் போனாலும் உணர்ச்சி பட்டுப்
போகாமல் நிலைத்திருக்கும் புலவன் பாட்டு.

தமிழ்மொழியைத் தமிழ்மகனைப் பழித்து ரைக்கும்
தருக்குடையார் முதுகெலும்மை நொறுக்கிக் காட்டும்
அமிழ்தனைய பாட்டுரைத்தான்; சினந்தெ ழுங்கால்
அன்னைவந்து தடுத்தாலும் விடவே மாட்டேன்
நிமிர்ந்தெழுந்து போர்தொடுப்பேன் எனவெ குண்டு
நினைத்தாலும் மெய்சிலிர்க்கும் பாட்டு ரைத்தான்;
இமைகுவியா வீரத்தை எடுத்துக் காட்டி
எக்களிக்கும் போர்ப்பாட்டை நமக்களித்தான்.

 

இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றான்;
இனியுலகம் விழித்தெழவே அவ்விருட்டை
வெருட்டுகின்ற வழிசொன்னான்; ஒளியுந் தந்தான்;
விளக்கெடுத்து வெளிச்சத்தால் உலகைக் காணத் தருட்கிற
தெருட்டுகின்ற பாட்டுரைத்தான்; அந்தப் பாட்டைத்
தெளிந்துணர மனமின்றிப் பாட்டிற் காணும்
கருத்தெடுத்துப் பரப்புதற்கு முயற்சி யின்றிக்
கண்மூடித் துயில்கின்றோம் உணர்வே இன்றி.

மழைபெய்தும் விளைவறியாக் களிமண் ணாக
வன்பாறை நிலமாகக் கிடக்கின் றோம்நாம்;
கழைபெய்த சாறிருந்தும் அதனை மாந்திக்
களிக்காமல் எதைஎதையோ பருகு கின்றோம்;
விழைவெல்லாம், பாவேந்தன் எண்ண மெல்லாம்
வெறுங்கனவாய்ப் பகற்கனவாய்ப் போவ தென்றால்
நுழைமதியன் பாவேந்தன் தனது நெஞ்சம்
நொந்தழிந்து போகானோ? நன்றே சொல்வீர்.

பாரதிக்குத் தாசன்தான் எனினும் அந்தப்
பாவலனை விஞ்சிநிற்கும் பாட்டு வேந்தன்
காருதிர்க்கும் மழைபோலப் பொழிந்த பாட்டுக்
கற்பனைக்கு நிகரேது? பாடல் தந்த
சாறெடுத்துக் குடித்தவர்தாம் உண்மை காண்பர்;
சாற்றிடுவர் அவனுலகப் புலவன் என்றே;
வேறெடுத்துக் குடித்தவரோ புழுதி வாரி
வீசிடுவர் மயங்கிமிகத் தூற்றி நிற்பர்.

வங்கத்திற் பிறந்திருப்பின், இலக்கி யத்தை
வளர்த்து வருங் கேரளத்திற் பிறந்திருப்பின்;
எங்கட்குத் தலைவனவன் மேலை நாட்டில்
எங்கேனும் பிறந்திருப்பின் அங்கு வாழ்வோர்
சிங்கத்தை நிகர்கவிஞன் புகழைப் போற்றிச்
சிறப்பனைத்தும் உலகெங்கும் செப்பிச் செப்பிப்
பொங்கித்தம் உளங்களிப்பர்; தன்னே ரில்லாப்
புலவனிவன் தமிழ்நாட்டிற் பிறந்து விட்டான்.

 

ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டின் வரிக ளெல்லாம்
அணிவகுத்து நிற்கின்ற படையின் கூட்டம்;
சீர்ப்பாட்டைத் தொட்டதொட்ட இடத்தி லெல்லாம்
சீறியெழும் உணர்ச்சியைத்தான் காணல் கூடும்;
வேர்ப்பாட்டாம் அவன்பாட்டு விளைத்தி ருக்கும்
வீரமிகும் உணர்ச்சிக்குக் குறைவே யில்லை;
சாப்பாட்டுக் கலைந்துவரும் நம்மி டந்தான்
சற்றேனும் உணர்ச்சியிலை மான மில்லை.

மானமெனும் ஒருணர்ச்சி இருந்தி ருப்பின்
மதிகெட்டுத் தமிழ்மொழியைத் தமிழர் நாட்டில்
ஈனமுற எதிர்ப்போமா? நமக்கு முன்னே
எதிர்ப்பிருக்க விடுவோமா? இசைய ரங்கில்
வானமுதத் தமிழிருக்க அதைவிடுத்து
வந்தமொழிப் பாடல்களைப் பாடு வோமா?
ஏனுயர்வு தமிழ்க்கில்லை தமிழர் நாட்டில்?
இனியேனும் மானத்தைக் காப்போம் வாரீர்.

 

பாவேந்தர் விழா, உலகத் தமிழ்க் கழகம், பெங்களூர் 25-8-1979

 

  1. மயல் இரிய – மயக்கம் விலக.
  2. ஏவேந்தி – அம்பேந்தி

 

 

45.ஞாயிறு போற்றதும்

தென்பால் உளது, தேன்வளர் சாரல்
[1]மென்கால் உலவும் திண்கால் [2]ஆரம்
குதிதரும் அருவி மருவிய மாமலை
மதியந் தவழும் பொதியம் ஒன்று;
வடபால் உளது, வானுயர் கொடுமுடி
தொடருங் கருமுகில் படருஞ் சாரல்
உறைதருந் தண்பனி நிறைதரும் மாமலை
பரிதியை மறைக்கும் பனிமலை ஒன்று;
பெருமலை இரண்டும் ஒருமலை யாக்கக்
கருதிய ஒருசிலர் உறைபனி கொணர்ந்து
தென்றல் தவழும் குன்றின் தலையில்
அன்றவர் வைத்தனர்; அடடா என்றனர்;
பனியால் நடுக்குறும் பயனே கண்டனம்;
இனிய தென்றலும் எழில்நலங் குறைந்தது;
விடுத்தஅப் பனிதான் விரைந்திவண் விலக
நடுக்கிய பனியின் நலிவும் அகல
ஒரு நூற்றாண்டின் முன்னர் ஒருநாள்
மறைமலை என்னும் மறுபெயர் பூண்டு
கடலலை மோதும் கரைபெறும் மூதூர்
இடமகல் நாகை எனும் பெயர்ப் பட்டினத்
தெழுந்ததோர் ஞாயிறு கரைந்தது வெண்பனி;
தொழுதனர் மாந்தர் தோன்றுசெங் கதிரை;
இரியா இருளை இரியச் செய்வான்
பெரியார் அண்ணா பெரும்பணி புரிநாள்
இடையறா அப்பணி இடையூ றின்றி
நடைபெறப் பேரொளி நல்கிய தக்கதிர்;
இருளால் மறைபடும் இனமொழி உணர்வுகள்
தெரிதர லாயின தெளிந்தனம் யாமே;
தெளிந்தனம் ஆதலின் குழைந்துள பனியில்
விழுந்தினி அழியோம் விழிப்புடன் நடப்போம்;

 

விழியொளி பெற்றும் வீழ்ந்ததில் மூழ்கின
பழிபெறும் எம்மினும் இழிந்தவர் இலையால்;
விழியுளார் படுகுழி வீழ்வதும் உண்டோ?
ஒருகால் உடையவன் ஊன்றுகோல் பெறலாம்
இருகால் உடையோன் எவனதை விழைவான்?
வளமிலாமொழிகள் வருமொழிச் சொற்களைக்
கொளலாம் அதனாற் குற்றமொன் றில்லை;
உயர்தனிச் செம்மொழி ஒப்பிலாத் தமிழ்மொழி
அயன்மொழிச் சொற்களை அணுகுதல் முறையோ?
முட்டிலாச் செல்வர் மற்றவர் பாற்கடன்
பெற்றிட முனைதல் பேதைமை யன்றோ?
அதனால்
சந்தனப் பொதியச் செந்தமிழ் மாமலை
தந்தருள் தென்றலில் தனிநடை பயில்வோம்;
தளர்நடை தவிர்த்துத் தனிநடை கொடுத்த
வளரிளங் கதிரை வாயுற வாழ்த்துவம்;
பலமொழி பயின்றும் பைந்தமிழ்ச் சோலையுள்
உலவிய தென்றலை உள்ளுறப் போற்றுவம்;
இசைத்தமிழ் கவைத்திட ஈகுவர் பெரும்பொருள்;
நாடகத் தமிழ்க்கும் நல்குவர் அவ்வணம்;
இயற்றமிழ் எனினோ ஈயார் ஒருபொருள்;
மயற்படும் மாந்தர்தம் மதிதான் என்னே!
இந்நிலை நிலவிய இம்மா நிலத்தில்
அந்நாள் வெண்பொன் முந்நூ றளித்திட
இயற்றமிழ் மதிப்பை ஏற்றிய புலவன்,
செயற்றிறம் புரிந்து செந்தமிழ் வளர்த்தவன்
கொள்கையிற் பிறழாக் குணக்குன் றவனைச்
கள்ளவிழ் மலர்கொடு கைகுவித் தேத்துவம்;
மறைமலை என்னும் மறையா மலையை
நிறைதர நெஞ்சினில் நிறுத்துவம் யாமே;
செறிபுகழ்ச் செந்தமிழ் செழித்திட அவன்றன்
நெறியறிந் தொழுகுவம் நிலைபெறும் பொருட்டே.

 

27.11.1976

 

  1. மென்கால் – தென்றல்
  2. ஆரம் – சந்தனமரம்

 

 

 

 

46. மீண்டது பொற்காலம்

பண்சுமந்த பாட்டொலிபோல், அருவி பாடப்
பனிமலரும் சந்தனமும் சூழ்ந்து நிற்க
விண்சுமந்த முகில்தவழ்ந்து துளிகள் தூவி
விளையாடும் தண்பொதியம் தந்த தாயைக்
கண்சுமந்த கருமணியைத் தமிழைத் தேனைக்
கனிசுமந்த சுவைச்சாற்றைத் தூய்ம னத்துக்
கண்சுமந்த பெரும்புலவீர்! நல்லீர்!
கைகுவித்து நல்வரவு கூறு கின்றோம்.

கண்ணுதலோன் தலைமைகொளப் புலவர் கூடிக்
கழகமென ஒருமூன்று நிறுவி ஆங்குப்
பண்ணுறவே பசுந்தமிழை வளர்த்து நிற்கப்
பாண்டியரின் துணையோடு வளர்ந்த சங்கம்
மண்ணிடையே இலக்கியங்கள் இலக்க ணங்கள்
வளமுறவே பெருகிவர ஆய்ந்த தென்பர்;
எண்ணரும்அப் பொற்காலம் மீண்டும் இங்கே
எழுந்ததெனப் புலவர்குழு தோன்றக் கண்டோம்.

அன்றிருந்த புலவரெலாம் ஒன்று கூடி
அன்னைமொழி வளர்வதற்கு வழிகள் கண்டார்;
ஒன்றுபடு கருத்தினையே மொழிந்து நின்றார்
உயர்வுற்றார் தமிழ்மொழியின் உயர்வுங் கண்டார்;
இன்றவர்போற் புலவர்பலர் இணைந்து நிற்கும்
ஏற்றத்தைக் காணுகின்றோம் மகிழ்வுங் கொண்டோம்;
என்றுமுள தென்றமிழ்க்கு மேன்மை ஒன்றே
இனிவருமென் றெண்ணிமனங் களித்து நின்றோம்.

கார்முகிலின் வருகையினால் மயில்கள் ஆடும்
கருவானில் மழைவரால் பயிர்கள் கூடும்
ஏர்முனையின் வருகையினால் நிலம்சி ரிக்கும்
எழில்வண்டின் வருகையினால் மலர் சிரிக்கும்
ஊர்மதியம் விண்வரலால் இன்பம் பொங்கும்
உயர்புலவீர் நும்வரவால் எங்கள் நெஞ்சம்
கூர்மகிழ்வு கொண்டின்பம் பெருக நின்றோம்
குழுமிவரும் தமிழ்ப்பெரியீர் வருக வாழ்க!

 

பாரெல்லாம் தமிழ்நெறியே செழிக்க வேண்டும்
பல்வகைய புதுநூல்கள் தோன்ற வேண்டும்
ஊரெல்லாம் புலவர்தமைப் போற்ற வேண்டும்
உயர்வதனால் தமிழ்மொழிக்குச் சேர்தல் வேண்டும்
சீரெல்லாம் மேவிவர வலிமை கொண்ட
செயற்குழுவாய்ப் புலவர்குழு வளர்தல் வேண்டும்
பேரெல்லாம் பெற்றபெரும் புலவீர் வாழ்க!
பேணுமுயர் நாடுமொழி வாழ்க! வாழ்க!

 

காரைக்குடிக்கு வருகை தந்த தமிழகப் புலவர் குழுவிற்கு வரவேற்பு – 18.10.1969

 

 

 

 

47. வாழ்க முச்சங்கம்

அப்பனைத் தாடி யென்றும்
அம்மையை மம்மி என்றும்
செப்பிடுந் தமிழர் நாட்டிற்
செந்தமிழ் உணர்ச்சி நெஞ்சில்
எப்படி வேர்விட் டூன்றும்?
எப்படித் தழைக்கும்? பூக்கும்?
இப்பழி சுமந்தா ராகி
இருக்கின்றார் தமிழ ரிங்கே.

எச்சங்கம் ஊதினாலும்
இருவிழி திறவா ராகிப்
பச்சிளம் பிள்ளை போலப்
பள்ளிகொண் டுள்ளா ரென்றே
இச்செயல் தீர்வான் வேண்டி
எழுச்சிகொள் புலிப்போத் தன்னார்
முச்சங்கம் ஒன்று கண்டார்
முந்துறும் ஆர்வத் தாலே.

தோன்றுமுச் சங்கம் வாழ்க
தொடங்கியோர் உள்ளம் வாழ்க
ஈன்றதாய் மொழியைக் காக்கும்
எழுச்சியை வளர்த்து வாழ்க
ஆன்றவர் போற்றும் வண்ணம்
அரியநற் பணிக ளாற்றி
மூன்றெனுந் தமிழைக் காத்து
மொய்ம்புடன் வாழ்க நன்றே.

(சென்னையிலமைந்த முச்சங்கத்திற்கு வாழ்த்து)

 

 

 

 

48. தமிழின் செம்மை

எண்ணி லடங்காத எத்தனையோ நன்மொழிகள்
மண்ணிற் பிறந்து வளமையுறாக் காலத்தே
தன்வளமை காட்டித் தனிப்பெருமை கொண்டிலங்கிச்
சொன்மரபு மாறாமல் தூய நிலைநாட்டி
வாழ்க்கைப் பெருநிலத்தை வளமாக்கிச் செம்மைதனைச்
சேர்க்கப் பொருள் நூலைச் செப்பிப் பெருமையொடு
செப்பமுறச் செய்தமையால் செந்தமிழென் றோதினரோ?
அப்பெருமை யாரே அறிந்துரைக்க வல்லார்கள்?
மெய்யுணர அன்புணர மேன்மைத் திறமுணர
உய்வகைகள் தேர்ந்தே உளந்தெளிய வையத்துள்
வாழ்வாங்கு வாழ வழிவகுத்துத் துன்பமெனும்
பேழ்வாய் எரிநரகில் பேதுற்று வீழாமல்
இம்மையினில் காக்கும் இணையில்லா ஓர்மறையால்
செம்பொருளைக் காட்டுவதால் செந்தமிழென் றோதினரோ?
நூல்மறைந்து போனாலும் நுண்மாண் நுழைபுலத்துக்
கால்மறைந்து போகாமல் காக்கும் அகத்தியனும்
பல்காப் பியந்தோன்றப் பாட்டு நெறியுரைக்குந்
தொல்காப்பி யனென்னுந் தூயோனுந் தோன்றியிங்கு
நம்மொழியைக் காப்பதற்கு நல்வரம்பு கட்டி அதைச்
செம்மையுறச் செய்தமையால் செந்தமிழாக் கண்டனரோ?
ஆரியம்போற் பேச்சற் றழிந்து சிதையாத
சீரிளமை கண்டவர்கள் செம்மைமொழி என்றனரோ?
நீரால் நெருப்பால் நிலைகுலைந்து போகாமல்
சீராய்த் திகழ்வதனால் செந்தமிழென் றோதினரோ?
முந்தைத் தமிழ்கெடுக்க மூண்டெழுந்த நோக்கமுடன்
எந்தத் துணைகொண்டிங் கெந்தமொழி வந்தாலும்
நோவுக்கும் அஞ்சோம் நொடிப்பொழுதில் வீழ்கின்ற
சாவுக்கும் அஞ்சோம் தமிழ்காப்போம் என்றெழுந்த
அஞ்சலிலாக் கூட்டத்தை ஆளவந்தோர் தாக்கியதால்
நெஞ்சிருந்து சிந்தி நெடிதோடுஞ் செங்குருதி
பாய்ந்து தமிழ்மொழியாம் பைங்கூழ் செழிப்பதனால்
ஆய்ந்தமொழி செந்தமிழென் றானதென நானுரைப்பேன்;
ஆரியத்தார் ஆட்சிமுதல் ஆங்கிலத்தா ராட்சிவரை

 

சீரழித்த ஆட்சிகளைச் செப்பத் தொலையாது;
தேன்மொழியாந் தென்மொழியின் சீர்மை பரவிவர
மீன்புலிவில் ஏந்திநல் மேலோர் துணைநின்று
காத்ததிரு நாட்டிற் கதவு திறந்திருக்கப்
பார்த்திங்கு வேற்றுப் பகைமொழிகள் உள்நுழைந்து
நீக்கமற எங்கும் நிறைந்தாலும் நம்மினத்தார்
தூக்கங் கலையாமல் சோர்ந்து கிடந்தாலும்
நான்வணங்குந் தெய்வ நலமிக்க செந்தமிழ்த்தாய்
தேன்வழங்கும் நாண்மலர்போல் என்முன் திகழ்கின்றாள்;
அண்ணன் திருமுகத்தில் அணுவளவும் சோர்வின்றி
என்னை வளர்க்கின்றாள் இவ்வுலகைக் காக்கின்றான்;
தெவ்வர் எவர்வரினுந் தென்மொழிக்குக் கேடில்லை;
எவ்வெவர் சூழினும் ஏதும் இடரில்லை;
ஆற்றல் குறையாமல் அம்மொழித்தாய் நின்றாலும்
ஏற்ற இடமின்றி ஏனோ தவிக்கின்றாள்?
சீர்மை குறையாமல் செம்மை சிதையாமல்
நேர்மை பிறழாமல் நின்றாலும் அம்மகளை
உற்றாரும் பெற்றாரும் உற்ற துணையாரும்
அற்றாரைப் போல அலையநாம் விட்டுவிட்டோம்;
கல்வி தருங்கோயிற் கட்டடத்துட் செல்வதற்குச்
செல்வி தயங்குகிறாள் செல்லும் உரிமையின்றி;
மூவேந்தர் ஆண்ட முறைதெரிந்தும் செங்கோலைத்
தாயேந்த இங்கே தடையுண்டாம்; அங்காடி
சென்றுலவ ஒட்டாமற் சேர்ந்து விரட்டுகிறோம்:
நின்றுமனம் ஏங்கி நிலைகலங்கச் செய்கின்றோம்;
பாட்டரங்கிற் சென்றிருந்தால் பைந்தமிழ் கேட்பதிலை
கூட்டுமொழிப் பாடல்களே கோலோச்சக் காண்கின்றோம்;
எங்கெங்கு நோக்கினும் இங்கே புகுந்தமொழி
அங்கங்கே ஆட்சிசெய் தார்ப்பரிக்கக் காண்கின்றோம்;
செம்மை யுறுமொழிக்குச் சீரில்லை பேரில்லை;
செம்மை யுறுமொழிக்குச் சீருண்டு பேருண்டு
பாலறியாப் பச்சைப் பகட்டு மொழிதனக்குக்
கோலுரிமை ஈயுங் கொடுமை நிலைகண்டோம்;
தாரமெனுஞ் சொல்லைத் தயங்காமல் ஆண்பாலாக்
கூறும் மொழியுண்டு; கொங்கை எனுமொழியை
ஆண்பா லெனவுரைக்க அஞ்சா மொழியுண்டிங்
காண்பா லிவனென் றறிய வுணர்த்துகிற
மீசை எனுஞ்சொல்லை மேதினியிற் பெண்பாலென்

 

றாசையுடன் பேசும் அழகு மொழியுண்டு;
செம்மை ஒருசிறிதுஞ் சேராச் சிறுமொழிக்கு
அம்ம எனவியக்க ஆக்கம் பலவுண்டு;
பண்டே திருந்தியநற் பண்புடனே சீர்த்தியையும்
கொண்டே இயங்கிவரும் குற்றமற நின்றொளிரும்
தூய்மொழியாம் தாய்மொழியைத் தொன்மைத் தனிமொழியைச்
சேய்மையில் தள்ளிவிட்ட சேயாகி நிற்கின்றோம்;
நற்றவத்தால் நம்நாடு நல்லோர்தம் கையகத்தே
உற்றமையால் அன்னை உறுதுயரம் நீங்குமினி;
எங்கெங்குந் தாய்மொழிக் கேற்றம் மிகக் காண்போம்
இங்கினிநம் செந்தமிழ்க்கோர் ஏறுமுகம் ஈதுறுதி
எங்குந் தமிழாகும் எல்லாந் தமிழாகும்
பொங்கும் இனிமேற் பொலிந்து.

 

கவியரங்கம் (தருமபுரம் திருமடம் 13.05.1968)

 

 

 

 

49. தமிழில் மறுமலர்ச்சி

பூக்குஞ் செடிகொடியில் போதாய் ஒருமுறைதான்
பூக்கள் மலரும்; புவியோர் மலர்ச்சியென்பர்;
காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமலர் வாடி முடிந்தவிடின்
மீண்டும் மலர்ச்சியிலை; மீண்டும் மலர்வதைத்தான்
யாண்டும் மறுமலர்ச்சி என்று புகன்றிடுவர்;
தெவ்வர் பலவகையாற் செய்துவிட்ட தீமைகளால்
செவ்வையுற வாழ்ந்ததொன்று சீர்கெட்டு வாடியபின்
மற்றுமொரு வாய்ப்பதனால் வாழ்வுயர்ந்து சீரடைந்தால்
கற்றவர்கள் அந்நிலையைக் காணின் மறுமலர்ச்சி
என்று மொழிவர் இதற்கொரு சான்றுரைப்பேன்;
சென்று முகில்புகுந்து செல்லும் முழுமதிதான்
தேய்ந்து குறைந்துவரும் தேய்ந்தாலும் மீண்டும்ஒளி
தோய்ந்து வளர்ந்துவரத் தோன்றும் மறுமலர்ச்சி;
காலத்தால் முந்துமொழி காப்பியங்கள் தந்தமொழி
ஞாலத்து மூத்தமொழி நல்லறங்கள் பூத்தமொழி
என்றெல்லாம் சான்றோர் இசைக்குமொழி செந்தமிழ்தான்
அன்றிந்தத் தென்னாட்டில் ஆட்சி செலுத்தியது;
எப்படியோ யார்யாரோ இந்நாட்டி னுட்புகுந்த
தப்பதனால் எல்லாத் தவறுகளும் நேர்ந்துவிடப்
புன்மைச் செயலுக்குப் புத்தியைநாம் ஒற்றிவைத்தோம்
நன்மலர்ச்சி குன்றி நலங்கெட்டு வாடியதே!
ஆனாலும் நல்லவர்தாம் நாட்டிற் பலர்தோன்றி
மேனாளில் ஊட்டும் உணர்வதனால் தாய்மொழிக்கு
நாட்டாட்சி வேண்டுமென நல்லுரிமைப் போர்புரிந்தோம்
கேட்டாட்சி செய்தோர்தாம் கேளாராய் வந்தெதிர்த்தார்;
தானே இயங்குந் தகுதிபெற்று வாழ்ந்தமொழி
தேனே எனத்தக்க தெள்ளத் தெளிந்தமொழி
வேற்று மொழிச்சொற்கள் வீணே கலந்தமையால்
நேற்றுவரை தாழ்ந்து நிலைகுலைந்து வீழ்ந்தமையால்
கண்ட மறைமலையும் கல்யாண சுந்தரரும்
தொண்டு மனங்கொண்டு தூற்றலுக்கும் அஞ்சாது
நாடோறும் பாடுபட்டு நல்ல தமிழ்வளர்த்தே

 

ஈடேறச் செய்தார்கள்; ஈடில்லாச் செந்தமிழே
மீண்டும் மலர்ச்சிபெற்று மேலும் உணர்ச்சியுற்று
யாண்டும் மணம்பரவ ஏற்றம் மிகக்கண்டோம்;
காஞ்சி புரத்தண்ணல் கற்ற அரசியலில்
நீஞ்சி வரும் அறிஞர் நெஞ்சார்ந்த பேருழைப்பால்
பாச்சுவையின் மேலாகப் பாரோர் கவைத்து வரும்
பேச்சால் எழுத்தால் பெறுமோர் மறுமலர்ச்சி
நாடறியும் ஏடறியும் நல்லவர்தம் நாவறியும்
கூடலர்தம் நெஞ்சறியும் கோல்கொண்டார் வீடறியும்
எங்கள் தமிழ்மொழிக் கீதோர் மறுமலர்ச்சி
எங்கும் பரவும் இனி.

 

கவியரங்கம் திருப்பத்துர் – 8.6-1965

 

 

 

  1. செந்தமிழ்ச்செல்வி

கேளார் தமிழ்மொழி கேடுறச் சூழ்ந்திடுங்                –          கீழ்மதியை

வாளால் அரிந்ததன் வேரைக் களைந்துநம்               –          வண்டமிழைத்

தாளால் வளர்த்தனை; தண்புனல் வார்த்தனை;        –          நின்குறிக்கோள்

சூளாக் குறித்தனை; தொண்டுசெய் கின்றனை        –          தூமொழியே
செல்வியுன் தாளிற் சிலம்பும் பரலும்                         –          செவிகுளிர

நல்கிடும் அவ்விசை நாள்முழு தும்பெற                    –          நாடுகின்றோம்;

மெல்விரல் நீவி மிழற்றிய யாழொலி                          –         போல இதழ்

சொல்லிய பாடலிற் சொக்கிநின் றேஉனைச்            –          சுற்றுதுமே.
நடைஎழில் காட்டுவை, நல்லறி வூட்டுவை,               –          நாண்மலரால்

தொடைஎழில் காட்டுவை, தோகையுன் சாயலில்     –         தோய்ந்துணரார்

உடை எழில் ஒன்றே உவந்தன ராகி                            –          உணர்விலராய்க்

கடைவழி ஏகுவர் காரிகை உள்ளெழில்                      –          காண்கிலரே.
புகழ்மலை உச்சியில் போற்றிட வாழ்ந்தவர்            –          பூவுலகில்

இகழ்நிலை எய்தினர் எம்மவர் என்றுளம்                  –          ஏங்குகையில்

தகவுடன் மீண்டுந் தலைநிமிர்ந் தோங்கிடத்             –          தாளெடுத்தே

அகவிடுந் தோகையென் றாடவந் தாயெங்கள்         –          ஆரணங்கே.

முந்தையர் தந்தநன் னூல்மலர் மொய்த்ததன்          –          தேனருந்திச்

சந்தனத் தென்மலைச் சாரலின் செந்தமிழ்               –          தந்தநலம்

சிந்தையுள் தேக்கிநற் செவ்வழிப் பண்தரும்             –          தும்பியென

வந்திடுஞ் செந்தமிழ்ச் செல்விபல் லாண்டுகள்         –          வாழியவே.

 

(21.12.1976)

  1. தாளால் – முயற்சியால்

 

51. காப்புப் பருவம்

பன்னிருசீர் விருத்தம்

கலவைகள் விலகிடத் தனிமொழி உலவிடக்
கருதிய முதல்மகனாம்
கலைபல தெரிவுறு மறைமலை யடிகளைக்
கருதிவ ணங்கிடுவாம்
குலமொழி அடிமுதல் தெளிவுறும் படிவளர்
கூர்மதிப் பாவாணர்
குளிர்மிகும் மலரடி வழிதரும் எனமனங்
கொண்டுபணிந்திடுவாம்.

உலகினில் முதன்முதல் நிலவிய மொழியெனும்
உரைபெறுந் திருமகளாம்
உயர்தனி மொழியென அயலவர் புகன்றிட
ஒளிதரு செம்மகளாம்
அலைபல எதிரினும் நிலைபெறும் கலைமகள்/
அமுதெனும் மொழியினளாம்
அழகிய கழகமொ டுலவிய தமிழ்மகள்
அணிநலம் புரந்திடவே.

கற்பார் மனத்துணர்வை நற்பா படைத்துவளர்
கவிவாணர் அடிப்பூவையும்
கனலால் எரிந்துசிறை புகலால் மடிந்துமொழி
கருகாது வளர்த்தோரையும்
விற்போர் தொடுத்ததெனச் சொற்போர் நடத்திஉரம் த
விளைவாக உழைப்போரையும்
விதிரா மனத்துணர்விற் புதிதாய்த் தழைத்துவரும்
விழைவோடு தொழுதேத்துவாம்

மற்போர் புரிந்துநம திப்பார் புரந்தவரின்
மடிமீது வளர்ந்தமகளை
மருவார் பகைத்தருகில் வருவார் பதைத்துவிழ
மலைபோல நின்றமகளை
முப்பா லருந்திநலம் தப்பா திருந்தவளை
முதலாக வந்தமகளை
முதிரா நலத்திளமை அதிரா தெடுத்துவரும்
மொழியாளைப் புரந்தருளவே.

 

‘தமிழன்னை பிள்ளைத் தமிழ்’ என்ற தலைப்பில் ‘தமிழகரசு’ ஏட்டில் வெளிவந்த பாடல்கள்)

 

52. பாடிக்கொண்டேயிருப்பேன்

 

பாடிக்கொண் டேயிருப்பேன் – என்
பைந்தமிழைச் செந்தமிழை நான்                              (பாடிக்)

ஒடிக்கொண் டேயிருக்கும் ஊறுஞ்செங் குருதி
ஓடா துறைந்தே ஓய்ந்திடும் நாள்வரை                      (பாடிக்)

கடும்பிணி கொடுஞ்சிறை கடுகி வந்தாலும்
கலக்கிடும் வறுமைகள் காய்ந்திடும்போதும்
இடும்பைகள் வந்தெனை எற்றிடு மேனும்
எதையும் அஞ்சிடேன் என்றுமே துஞ்சிடேன்              (பாடிக்)

பதவியும் பட்டமும் பணங்களுங் காட்டிப்
பகட்டினும் எதற்கும் பணியேன் கைநீட்டி
முதுமொழி என்மொழி முத்தமிழ் மொழியை
மொய்ம்புறக் காத்திட முனைந்திடும் வழியைப்    (பாடிக்)

 

(இக்கவிதையைப் படிக்கக் கேட்டவாறே கவியரசரின் உயிர் பிரிந்தது.)

 

(முற்றும்)