“உறவுக்குக் கை கொடுப்போம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!!” – இது தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மிகவும் பிரபலமான மற்றும் ஆழமான அரசியல் முழக்கங்களில் ஒன்றாகும். இதை வலியுறுத்தும் நூல் இது.
இந்த முழக்கம் கலைஞரின் பொது வாழ்வு முழுவதும் அவர் கடைப்பிடித்த கொள்கைகளின் சுருக்கமாகவும், அவரது திராவிட இயக்கச் சித்தாந்தத்தின் சாரமாகவும் அமைந்தது.
உறவுக்குக் கை கொடுப்போம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்..!!
சட்டப் பேரவையில்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
இந்த மன்றத்தின் முன்னால் வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் மீது அனைத்துக் கட்சியினுடைய தலைவர்களும், மாண்புமிகு உறுப்பினர்களும் எடுத்து வைத்துள்ள மிகச்சிறந்த வாதங்களுக்கு நான் என்னுடைய மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விவாத்திலே கலந்துகொண்டு உரையாற்றிய பலரில் ஒரு சிலர் வரவு செலவுத் திட்டத்தின் புள்ளி விவரங்களில் அதிகமாகப் புகுந்து தங்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை விளக்க வேண்டுமென்றும், சில தவறுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன என்றும் கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள்.
விவாதத்தைத் தொடங்கி வைத்த நண்பர் ஹண்டே அவர்களும், எனக்கு முன்பு எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்திருக்கிற எட்மண்ட் அவர்களும் பேசியபோது, இது என்னுடைய இறுதி நிதிநிலை அறிக்கை என்று குறிப்பிட்டார்கள். அது எந்த வகையிலே இறுதியாக இருந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாத உள்ளத்தோடுதான் கழக அரசு தன்னுடைய கடமையைச் செய்து கொண்டிருக்கிறது.’ என்கிற உறுதியை மாத்திரம், இறுதி என்று கூறிய அந்த நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே. டி. கே. அவர்களும், ஹண்டே அவர்களும் சில ஐயப்பாடுகளை வரவு செலவுத் திட்டத்தில் எழுப்பினார்கள். அதாவது மூலதனச் செலவு முந்தைய ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட குறைந்துவிட்டது என்கிற ஒரு குற்றச்சாட்டும், இந்த ஆண்டு 41 கோடி ரூபாய் என்று இருப்பது மேலும் குறைவானது என்கிற ஒரு குற்றச்சாட்டும் சொல்லப்பட்டது. இது பற்றி ஹண்டே பேசும்போது,
“The budget bristles with a dangerous trend of systematic erosion into capital expenditure that may ultimately ruin the development of our State”.
என்று குறிப்பிட்டார்கள். தங்கமணி அவர்களும் இது தம்முடைய வளர்ச்சிகளைக் காட்டாது என்று சொன்னார்.
.
நம்முடைய நிதிநிலை அறிக்கை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. வருவாய்க் கணக்கு, மூலதனக் கணக்கு, கடன்கள் என்கிற பிரிவுகளாக நிதிநிலை அறிக்கை வகுக்கப்படுகிறது. பட்ஜெட் தயாரிக்கப்படுகிற முறையே இவ்வாறுதான்.
இப்படி தயாரிக்கப்படுகிற நேரத்தில் நம்முடைய 1975 – 76 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை எடுத்துக் கொண்டால், வருவாய்க் கணக்கைப் பொறுத்தவரை வருவாய் 501.37 கோடி ரூபாய். மொத்த செலவினங்கள் 537.50 கோடி ரூபாய்; பற்றுக்குறை 36.13 கோடி ரூபாய். வருவாய்க் கணக்கில் வரவுகள் தனியாகவும், செலவுகள் தனியாகவும் காட்டப்படுகின்றன. அந்த வகையில் இந்த மொத்தக் கணக்கை நான் குறிப்பிட்டேன். மூலதனக் கணக்கு என்பது அவ்வாறு அல்ல. மூலதனக் கணக்கைப் பொறுத்தவரையில் மொத்தச் செலவுகளையும். வரவுகளையும் எடுத்துக் கொண்டு நிகரச்செலவை மாத்திரம் எடுத்துக் கொண்டுதான் கணக்குக் காட்டப்படும். அப்படித்தான் நாம் கணக்கு பார்க்க வேண்டும். மூலதனக் கணக்கில் வருவாய்கள் தனியாகக் காட்டப்படுவதில்லை. நிகரச் செலவு மட்டுமே மூலதனக் கணக்கில் காட்டப்படுகிறது. இதுதான் பட்ஜெட் கணக்கு முறையாக பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது.
மூலதனச் செலவுகளைப் பொறுத்த வரை மொத்தச் செலவு எவ்வளவு? மூலதன வரவுகள் எவ்வளவு? என்பதைப் பார்த்த பின்னரே மூலதனம் உயர்ந்துள்ளதா இல்லையா என்பதை நாம் சரிவர கணக்கிட முடியும். மூலதனச் செலவுகள் என்றால், கட்டடம் கட்டுதல், அதாவது அலுவலகக் கட்டடங்கள், குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவைகள் கட்டுதல்; பாசனத் திட்டங்கள்; புதிய சாலை அமைப்பு; சாலை மேம்பாட்டுத் திட்டங்கள்: பல்வேறு அரசு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் பங்கு மூலதனங்கள்; அரசு போக்குவரத்துத் துறைக்கு புதிய பேருந்துகள் வாங்குதல்: உரம் போன்ற விவசாயப் பொருள்கள் மக்களுக்கு விநியோகிப்பதற்காக வாங்கி சேமித்து வைத்தல்; காடு வளர்ச்சி, போன்ற இப்படிப்பட்ட பல்வேறு இனங்கள் இந்த மூலதன நிகரச் செலவு என்பதில் அடங்கும். மூலதனச் செலவுகளுக்கு எதிராக ஆண்டுதோறும் சில வருவாய்கள் வந்து கொண்டிருக்கும். குறிப்பாக உரங்களை விற்கும்போது கிடைக்கின்ற வருவாய்; இந்த வரவுகளை மூலதனச் செலவுகளிலிருந்து கழித்து, பின்பு நிகரமாக இருப்பதைத்தான் நாம் மூலதனக் கணக்கில் காட்டுவது வழக்கம். ஹண்டே அவர்கள் நிதிநிலை அறிக்கையில் பிற்சேர்க்கையில் 29-வது பகுதியில் கடைசி கூடுதலைக் குறிப்பிட்டிருக்கிறர். 1974-75-ஆம் ஆண்டு நிதி நிலை மதிப்பீட்டில் மூலதனச் செலவு 56.36 கோடியாக இருந்தது. திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 32.64 கோடியாகக் குறைந்துவிட்டது என்பது அவருடைய கருத்து. இது தவறு என்பது தான் என்னுடைய வாதமாகும்.
1974- 75 நிதி நிலை மதிப்பீட்டின் மூலதனச் செலவு:
மூலதன மொத்தச் செலவு 86.83 கோடி ரூபாய்; இது எங்கே இருக்கிறது, இதில் குறிப்பிடப்படவில்லையே என்றால், தனியாகத் தந்திருக்கிற நிதி நிலைக் குறிப்பு என்ற புத்தகத்தில் அந்த விவரம் அடங்கியிருக்கிறது. திருத்திய மதிப்பீடு 99.71 கோடி ரூபாய். இதை துணை மானியத்தில் நான் காட்டியிருக்கிறேன். 86.83 என்று நிதி நிலை மதிப் பீட்டில் நம் மூலதனச் செலவு என்று காட்டியிருப்பதில், அந்த இனத்தின் கீழ் வரவாக வந்தது 30.47 கோடி ரூபாய். அதைக் கழித்துக் கொண்டால் நிகரச் செலவு 56.36 கோடியாகும். அதைப் போலவே தான் திருத்திய மதிப்பீட்டில் 99.71 கோடி என்பது, அந்த இனத்தின் கீழ் வரவு வந்த வகையில் 67.06 கோடி கழிக்கப்பட்டு, நிகரச் செலவு 32 கோடி என்று குறைந்ததே அல்லாமல் வேறல்ல. இந்த ஆண்டு 1975-76-இல் மூலதன மொத்தச் செலவு 103.80 கோடி என்ற அளவிற்கு நிர்ணயித்திருக்கிறோம். இந்த இனத்தின் கீழ் வரவு 62.04 கோடி என்ற அளவிற்கு வரவு வந்து, 41.76 என்ற அளவிற்கு மூலதன நிகரச் செலவு அமைகிறது. ஆகவே நம்முடைய மூலதன மொத்தச் செலவு 86லிருந்து 99 ஆக திருத்தப்பட்டு இப்போது 103ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது; வருகிற திருத்த மதிப்பீட்டில் இன்னும் அதிகமாகுமே தவிர, அது குறையவில்லை என்ற சந்தேகத்தை முதலில் போக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
மூலதனக் கணக்கில் மொத்தச் செலவு 1974-75 நிதியாண்டில் சுமார் 87 கோடி என்று என்று கணக்கிட்டபடி, அது திருத்தப்பட்ட மதிப்பீட்டில் சுமார் 100 கோடியாக வளர்ந்து, 1975-76-இல் 104 கோடியாக அதிகமாகியுள்ளது. ஆகவே மூலதனச் செலவுகள் உண்மையில் வளர்ந்துள்ளதே தவிர, மற்றவர்கள் இங்கே குறிப்பிட்டதைப்போல குறையவில்லை.
திரு. கே. டி. கே. அவர்கள் என். ஜி அவர்கள் என். ஜி. ஓக்களுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்வு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அதனால் 24 கோடி ரூபாய் என்று சொல்வது எப்படி என்று தெரியவில்லை; வறட்சிக்காக 30 கோடி செலவழிக்கப்படுகிற நேரத்தில் 24 கோடி ரூபாய் அரசாங்க ஊழியர்களுக்காக என்று அரசு அறிவிக்குமானால், அது பொதுமக்களுக்கு அரசாங்க ஊழியர்கள் மீது ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தாதா என்ற வருத்தத்தை அவர்கள் தெறிவித்துக் கொண்டார்கள். அதற்குச் சரியான கணக்கு வேண்டு மென்றும் கேட்டார்கள்.
நாம் தற்போது அறிவித்துள்ள அகவிலைப்படி விசிதங்கள் மூலம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். அதில் யார் யார் எவ்வளவு பயன் பெறுகிறார்கள் என்ற கணக்கைப் பார்க்க வேண்டும். ஜனவரி மாதத்தில் பொங்கல் அன்று அகவிலைப்படிகளை உயர்த்திச் சில மாற்றங்களைச் மாற்றங்களைச் செய்து அரசின் சார்பில் அறிவித்தோம். அரசு அலுவவர்களுக்கு மனநிறைவைத் தராததால், அது மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டதின் பேரில், ஜனவரியில் அறிவித்ததை ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே மாற்றி அமைத்திருக்கிறோம். எப்படி 24 கோடி ரூபாய் வரும் என்று கேட்டார்கள். அதில் ரூபாய் 100 முதல் 180 வரை சம்பளம் வாங்குகிறவர்கள் மாதம் ஒன்றுக்கு இருபது ரூபாய் இந்த அறிவிப்பின் மூலம் அதிகம் பெறுகிறார்கள். அப்படி பெறுகிறவர்களுடைய தொகை 1,07,000. அவர்களுக்கு மொத்தம் ஆகிற செலவு இரண்டு கோடியே 57 இலட்சம்.
ரூபாய் 185 முதல் 210 வரை சம்பளம் வாங்குகிறவர்கள் மாதம் ஒன்றுக்குக் கூடுதலாக 20 முதல் 30 வரை பெறுகிறார்கள். அப்படி பயன் பெறுகிறவர்களுடைய எண்ணிக்கை 1,43,000. இவர்களுக்கு மொத்தச் செலவு நான்கு கோடியே 29 இலட்சம் ரூபாயாகும்.
215 ரூபாய்க்கு மேலே சம்பளம் பெறுகிறவர்கள் மாதம் ஒன்றுக்குக் கூடுதலாக 30 ரூபாய் பெறுகிறவர்கள். அப்படி பெறுகிறவர்களுடைய மொத்தச் செலவு 12 கோடியே 17 இலட்சம் ரூபாயாகும்.
உள்ளாட்சி நிறுவன ஊழியர்களுக்கு ஆகும் செலவு மூன்று கோடியே 17 இலட்சம் ஆக மொத்தம் ரூபாய். 22 கோடியே 20 இலட்சம் ரூபாய்.
அது அன்னியில் முன்பிருந்த அகவிலைப்படி வீதங்களைப் பென்ஷன் தரும் பொருட்டும், பணிக்கொடை தரும் பொகுட்டும் சம்பளத்துடன் சேர்த்துக் கணக்கிடலாம் என்ற முடிவின்படி அரசுக்கு ஆகும் கூடுதல் செலவு ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய்,
54.000 கிராம அலுவலாளர்களுக்கு கூடுதல் சிறப்பூதியம் தருவதால் ஆண்டுக்கு ஆகும் கூடுதல் செலவு 46 இலட்சம் ரூபாய்.
ஓய்வூதியம் பெறும் 62,000 பேர்களுக்கு, பொங்கல் நேரத்தில் அறிவித்தபடி கூடுதலாக ஐந்து ரூபாய் அகவிலைப்படி தருவதால் அரசுக்கு ஆகும் கூடுதல் ஆண்டுச் செலவு 37 இலட்சம் ரூபாய். ஆக மொத்தம், 24 கோடியே 53 இலட்சம் ரூபாய் இந்தக் கணக்கின்படி ஆகிறது என்பதை. 30 கோடி ரூபாய் அரசு ஊழியர்களுக்காகச் செலவிடலாமா என்று மக்கள் அவர்கள் மீது வருத்தப்படுவார்கள் என்று தங்கமணி இங்கே எடுத்துச் சொன்னது சரியல்ல என்பதும், இருந்த போதிலும் மக்கள் வருத்தப்படமாட்டார்கள் வறட்சியின் காரணமாக கஷ்டப்படுகிறவர்களில் அரசு அலுவலாளர்களும் இருக்கின்ற காரணத்தால் இதிலே தவறில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. கே.டி.கே. அவர்கள் மேலும் விற்பனை வரியில் 138 கோடி கிடைக்கும் என்று சொன்னீர்கள், அது திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 174 கோடியாகி 36 கோடி உயர்ந்திருக்கிறது. அதே மாதிரி ஸ்டாம்ப் ரிஜிஸ்ட்ரேஷனில் 231 கோடிக்குப் பதிலாக 281 கோடி கிடைத்திருக்கிறது. வாகன வரியில் இருபத்திமூன்றே முக்கால் கோடி எதிர்பார்த்தோம் : கிடைத்தது 33 கோடி செலவினங்களை எடுத்துக் கொண்டாலும் கல்விக்கு 102 கோடி ரூபாய் என்பது 112 கோடியாகி யிருக்கிறது. இப்படிச் செலவினங்களை எடுத்துக் கொண்டாலும் சரி வரவினங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, அது சரியான வகையில் செய்யப்படவில்லை என்று கூறினார்.
விற்பனை வரி 1974-75-இல் மதிப்பீடு 139 கோடி என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். அது திருத்திய மதிப்பீட்டில் 175 கோடியாக மாறியது. எப்படி இந்த உயர்வு வந்தது என்றால். இந்த ஓராண்டுக் காலத்தில் ஏற்பட்டிருக்கிற விலைவாசி உயர்வு – விற்பனை வரி விலைவாசி உயருகின்ற நேரத்தில் அதிகமாகும் – பொருளாதார வளர்ச்சி, முனைப்பான விற்பனை வரி வசூல் -கெடுபிடியான அல்ல – பல முனை விற்பனை வரியை மூன்றரை சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக மாற்றியமைத்தது ஆகஸ்டில் இதைச் செய்தோம் -இவைகளின் காரணமாக விற்பனை வரி உயர்த்தது என்பதை கே.டி.கே. அவர்களுக்கு, அவர் இதைத் தவறாகச் சொன்னார் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை; அவர்களுக்கு விளக்கம் அளிப்பது நிதித்துறை பொறுப்பை ஏற்றிருக்கிற என்னுடைய சுடமை என்ற வகையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
முத்திரைத் தாளில் 23 கோடியே 50 இலட்சம் என்று சொன்னீர்கள். அது திருத்திய மதிப்பீட்டில் 28 கோடியே 50 இலட்சம் என்று உயர்நதிருக்கிறது என்றும் சொன்னார்கள். அதற்குக் காரணம் நகரங்களிலும். சுற்றுப்புறங்களிலும் வீட்டு மனையின் விலையேற்றம்: நில உச்சவரம்புச் சட்டத்தைப் படிப்படியாகச் செயல்படுத்திவருவதால் சொத்து மாற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவையாகும்.
வாகன வரியில் 23 கோடியாக இருந்தது 33 கோடியாக திருத்திய மதிப்பீட்டில் ஆகியிருக்கிறது என்று சொன்னார்கள். இந்த உயர்விற்குக் காரணம், வாகனங்கள் அதிக மானது என்பது ஒன்று. இன்னொன்று. 1974 அக்டோபர் முதல், சீட்டுக்கு நாம் கூடுதல் வரியை விதித்ததாகும்.
செலலினங்களிலும் இப்படிப்பட்ட வித்தியாசங்கள் இருக்கலாமா என்றும் கே. டி. கே. கேட்டார். கல்விக்கு 1974-75 நிதிநிலை மதிப்பீட்டில் 108.52 கோடியாக இருந்ந்து, திருத்திய மதிப்பீட்டில் 112.50 கோடியாக உயர்ந்திருக்கிதே என்று கேட்டார்கள். இதற்குக் காரணம் 1-10-74 ஆம் ஆண்டில் நாம் குடும்பப் பாதுகாப்புத் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் செலுத்தி வந்த தொகையை அரசே செலுத்த முன் வந்தது. இதில் ஆசிரியர்களும் உட்படுவார்கள்; அந்த வகையிலும், மதிய உணவுத் திட்டத்திற்கு அரசு தரும் பங்குத்தொகையை உயர்த்தியதன் காரணமாகவும் இரண்டு கோடி ரூபாய் அதிகச் செலவு நமக்கு ஏற்பட்டது. அதன்னியில் பல கல்லூரிகளுக்கு மானியத்தை உயர்த்தியிருக்கிறோம். இவ்வாறு நிதி நிலை வரவுசெலவுகளில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளுக்காக மதிப்பீடுகளின் வாயிலாக அவ்வப் போது சட்டமன்றத்தின் ஒப்புதல் பெற்றிருக்கிறோம்.
அனந்தநாயகி: நீங்கள் வரி போடும் போதே உத்தேசமாக அதிலிருந்து எவ்வளவு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியிருக்க இவ்வளவு வித்தியாசம் வரக் காரணம் என்ன?
அமைச்சர் இராமச்சந்திரன்: நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதற்குப் பிறகு நிதியாண்டில் வருகின்ற கூடுதல் தொகையை ரிவைஸ்டு எஸ்டிமேட்டில் தான் கொண்டு வரமுடியுமே தவிர ஒரிஜினல் பட்ஜெட்டில் கொண்டு வர முடியாது.
முதல்வர்: அதைத்தான் நானும் சொன்னேன். 23 கோடி ரூபாய் வாகன வரி மூலமாக வரும் என்று நிர்ணயித்து அதற்குப் பிறகுதான் 1974 அக்டோபர் மாதம் சீட்டுகளுக்கு வரியை உயர்த்தியிருக்கிறோம். இதன்மூலம் கிடைத்த தொகைதான் திருத்த மதிப்பீட்டில் உயர்த்திருக்கிறது.
கே.டி.கே. பேசுகையில் இந்த பட்ஜெட் முழுவதும் ஏதோ ‘வெல்ஃபோ ஆர்கனைசேஷன் என்கிற அளவிற்கு அமைந்திருக்கிறதே அல்லாமல், பெரிய சாதனைகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்கள். கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கூட ” மாநிலங்கள் ‘வெல்ஃபோ ஸ்டேட்’களாக இருக்க வேண்டும். ‘போலீஸ் ஸ்டேட்’களாக இருக்கக்கூடாது.” என்று தான் சொல்லியிருக்கிறது என்று கருதுகிறேன். ஒருவேளை நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாத காரணத்தால், நான் சொல்கிற, இந்த வாதம் தவறாக ஆகிவிடமுடியாது. கண்ணொளி. கை ரிக்ஷா, பிச்சைக்காரர் மறுவாழ்வு, ஊனமுற்றோருக்கான திட்டம், இவைகளை மாத்திரம் ‘ வைத்துக் கொண்டு அரசின் சாதனைகள் என்று முழங்கிக் கொண்டிருக்கிறீர்களே, வேறு என்ன சாதனைகளை`ச் செய்தீர்கள் என்று கேட்டார்.
அவர்களுடைய நினைவில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கரை 15 ஸ்டாண்டர்டு ஏக்கராக ஆக்கிய தீர்மானம் வரவில்லை என்று கருதுகிறேன். அதைப் போலவே. குடியிருப்புச் சட்டத்தின் மூலம் ஏறத்தாழ இரண்டு இலட்சம் விவசாயத் தொழிலாளர் களுக்கு குடியிருப்பு மனைகளைச் சொந்தமாக்கியது; பஸ்களைத் தேசிய மயமாக்கும் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 1967 -இல் 17 சதவிகிதம் பஸ்கள் தான் தேசிய மயமாக்கப்பட்டன. இன்றைக்கு 48 சதவிகித பஸ்கள் தேசியமயமாக்கப் பட்டிருக்கின்றன. மீதமுள்ள பஸ்களையும் தேசிய மயமாக்க நாம் முயற்சிகளை எடுத்தும், அவர்கள் நீதிமன்றத்திற்கு வழக்குகளைக் கொண்டு சென்றிருக்கிற காரணத்தால் அந்த முயற்சிகள் முற்றுப்பெறாமல் இருக்கிறதே அல்லாமல், இந்தத் தேசிய திட்டத்தை சாதனை இல்லை என்று கே.டி.கே கருதுகிறாரா? அதைப் போலவே குடிசை மாற்று வாரியம், குடிநீர் வாரியம். அரிசனங்களுக்கு இலவச வீடு கட்டித்தரும் திட்டம், புகுமுக வகுப்பு வரை இலவசக் கல்வி. மாநிலம் முழுவதும் எல்லா கிராமங்களுக்கும் மின் விளக்குகள், 1,500 மக்களுக்கும் குறைவாக வாழ்கிற கிராமங்களைக் கூட இணைக்க சாலைவசதிகள், இரண்டு இலட்சம் பம்ப்செட்டுகளாக இருந்தவைகளை ஏழு இலட்சம் பம்ப்செட்டுகளாக ஆக்கியிருக்கின்ற இந்தக் காரியங்கள் எல்லாம். கே.டி.கே. அவர்களுக்கு வெறும் ‘வெல்ஃபேர்’ நடவடிக்கைகளாகத் தெரிவதற்காக அல்லது இன்னொரு நண்பர் சொன்னதைப் போல ஒரு அறநிலையம் செய்கின்ற காரியங்களாக்கப்பட்டதற்காக நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன்.
ஆனால் அண்ணா வழி அறவழிதான்; அந்த அறவழி அரசுதான் நடைபெறுகிறது என்று கே.டி.கே. அவர்கள் சொல்வார்களேயானால், அப்படிப்பட்ட வயதான மூத்தவர்களிடமிருந்து அந்த வாழ்த்தைப் பெறுவதில், நான் உள்ள படியே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.
தங்கமணி : பெரிய மடங்களில் எல்லாம் இலட்சக்கணக்கான ஏக்கரா இருக்கிறது. அவைகள் குத்தகை விவசாயிகளுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுமா?
முதல்வர் : உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற மசோதா இந்த மன்றத்தில் விரைவில் விவாதிக்கப்படும் என்று கருதுகிறேன். அப்போது இது பற்றிய கருத்துக்களை நாம் விரிவாக ஆராயலாம்.
மாரிமுத்து அவர்கள் வருவாய்க் கணக்கில் பொருளதார வளர்ச்சிப் பணிகள் என்ற பெரும் தலைப்பின் கீழ் உள்ள மொத்த நிதி ஒதுக்கம் சென்ற ஆண்டு 147 கோடியாக இருந்தது; இந்த ஆண்டு 131 கோடியாக நாம் செலவழித்திருக்கிறோம். பொருளாதார வளர்ச்சிக்கு இது ஏற்றதல்ல என்று குறிப்பிட்டார். 147 கோடியாக இருந்தது. 131 கோடியாகக் குறைந்திருக்கிறது என்பது சரியான வாதம் ஆனால் ஒதுக்கீடுகள் குறைந்துள்ள இனங்களில் அரசு நேரடியாக செலவு செய்வதற்குப் பதிலாக அரசு சார்புடைய நிறுவனங்களின் சார்பாக, செலவை இந்த ஆண்டு மேற்கொண்டிருக்கிறோம். எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமேயானால், 1974-75 திருத்திய மதிப்பீட்டில் 147 கோடி ரூபாயில், போக்குவரத்துப் பணிகளுக்காக, 12.98 கோடி ரூபாய் நாம் ஒதுக்கியிருந்தோம். செலவு செய்தோம். 1975-76-இல் அந்த 12.98 கோடிக்குப் பதிலாக, 8.08 கோடி என்கிற அளவுதான் கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் குறைவாக நாம் செலவு செய்கிறோம். காரணம், அரசு போக்குவரத்துத்துறையிலே உள்ள, மாவட்ட வழித்போக்குவரத்துக் கழகங்களுக்கு மாற்றியிருப்பதே மதிப்பீட்டில் கணிசமான அளவுக்குக் குறைவு ஏற்பட்டிருப்பதற்குக் காரணமாகும்.
அதே போன்று மதுரை பால் பண்ணைத் திட்டத்தின் பணிகளைத் தமிழ்நாடு பால் வழங்கும் நிறுவனத்திற்கு மாற்றியதால் “பால் வழங்குத் திட்டம்” என்ற மானியக் கோரிக் கையில் 80 இலட்சம் ரூபாய் குறைந்திருக்கிறது. அது மாத்திரமல்ல: நடப்பு ஆண்டில் மின் வாரியத்திற்குப் பத்து கோடி ரூபாய் நாம் மானியமாக வழங்கியிருக்கிாறோம்.
மின்வாரியம் இன்றைக்கு இழப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்பதையும் அனைவரும் அறிவார்கள். காரணம், மின்சாரத்திற்கு அதிகமாக வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு எடுத்துச் சொல்கிற, மத்திய அரசின் அறிவுரைகளை எல்லாம் நாம் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். பிற மாநிலங்களில் விவசாயிகளுடைய பம்புசெட்டுகளுக்கு மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 26 பைசா, 20 பைசா என்றெல்லாம் இருக்கிற நேரத்தில் நாம் இன்றைக்கு 12 பைசாவிற்கு மேல் உயர்த்த முடியாத நிலைமையில் இருக்கிறோம். விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவை மேற்கொண்டிருக்கிறோம். அதற்காக அந்த 147 கோடி ரூபாயில் பத்து கோடி ரூபாயை மானியமாக வழங்கியிருக்கிறோம். இதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், அரசு சார்புடைய மற்ற நிறுவனங்களுக்குத் தொகையை மாற்றிக்கொடுப்பதின் மூலமாகப் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிடவில்லை ; அதிகமாயிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
நண்பர் ஜேம்ஸ்` அவர்கள் வரவு செலவுத் திட்டத்தில் 2 கோடியே 56 இலட்சம் துண்டு விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்றுகூறி, தற்போது 15 கோடி அளவிற்குத் துண்டு விழும் என்று கூறப்படுகிறது. இதற்கான காரணங்கள் சரியில்லை; விற்பனை வரியின் கீழ் 40 கோடி ரூபாய்க் கூடுதல் வருவாய் வந்திருக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள். அவர் சொன்னதில் சில புள்ளிகள் தவறாக இருந்தாலும் அதாவது 15 கோடி என்பதை 11 கோடி என்றும், 40 கோடி என்பதை 36 கோடி என்றும் மாற்றிக் கொள்ள வேண்டும்: அவருடைய வாதம் என்னவென்றால் இப்படி விற்பனை வரி 36 கோடி வந்திருக்கும்போது, இரண்டு கோடி ரூபாய் எப்படி 11 கோடியாக உயர்ந்தது என்று வாதிட்டார். அதற்கு நான் அளிக்கின்ற பதில், விற்பனை வரியில் 36 கோடி ரூபாய் நமக்கு உயர்வு ஏற்பட்டது; மற்ற துறைகளில் நமக்குக் கொஞ்சம் அதிகமாகவே வரவினங்கள் கிடைத்தது என்றாலும், வரவினங்களில் ஏற்பட்ட குறைவுகளை நாம் மறந்து விடக்கூடாது. மத்தியஅரசிடமிருந்து மத்தியஅரசு போடுகின்ற வரிகளிலேயிருந்து, நாம் எதிர்பார்த்த பங்கில் ஏறத்தாழ 12 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. வட்டி வரவுகளில் – அரசு தந்துள்ள கடன்களுக்கு வரக்கூடிய வட்டி வரவுகளில், ஏறத்தாழ 14 கோடி ரூபாய் அளவிற்குக் குறைந்திருக்கிறது. மத்திய அரசிடமிருந்து 150 கோடி ரூபாய்க்கு திட்டத்திற்காக நாம் வாதிட்டு, கிடைத்திருக்கிற தொகை போதாது, மேலும் தரவேண்டுமென்று 15 கோடி ரூபாய்க்கு அவர்களிடம் வாதிட்டுக் கொண்டிருக்கிறோம். 11 கோடியாவது வருமென்று எதிர்பார்த்தோம். வரவில்லை. இப்படி இந்த வரவினங்கள் குறைந்தது மாத்திரமல்ல; செலவினங்களும் உயர்ந்துவிட்டது. கல்வித் துறையில் நான்கு கோடி ரூபாய்; மருத்துவத் துறையில் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய்; வறட்சித் துயர்தணிப்புப் பணிகளுக்காக எட்டரைக் கோடி ரூபாய்க்கு மேல் அதிகச் செலவு, வேளாண்மைத் துறையில் ஏறத்தாழ 2 கோடி அதிகச் செலவு: பாசனத் துறையில் நான்கு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் உயர்ந்திருக்கிறது. சாலைகளில் 2 கோடியே 46 இலட்ச ரூபாய் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. அதைத் தவிர வறட்சிப் பணிகளுக்காக வரிச்சலுகையை நாம் அளித்தோம். அதிலும் நமக்கு வர வேண்டிய வரிவ வருவாய் குறைந்திருக்கிறது. ‘இந்தக் காரணங்களால்தான் இரண்டு கோடி ரூபாய் என்று எதிர்பார்க்கப்பட்ட துண்டு விழும் நிலைமை 11 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்தது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
சத்தியவாணிமுத்து அம்மையார் அவர்கள் பேசிய நேரத்தில், பின்தங்கிய வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட 3.97 கோடி ரூபாயும், மலை சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட 14 இலட்சம் ரூபாயும் மத்தியஅரசின் வற்புறுத்தலாலேயே ஒதுக்கப்பட்டது என்றும், மத்தியஅரசு இந்த அளவிற்காவது வலியுறுத்தாவிட்டால். நிதிஒதுக்கீடு மிகக் குறைந்திருக்கும் என்று குறிப்பிட்டார்கள். அந்த நேரத்தில்தான் திட்டச்செலவுகள் என்றால் என்ன, திட்டத்தில் சேராத செலவுகள் என்றால் என்ன என்ற பிரச்சினைகள் எல்லாம் எழுந்தது. திட்டச்செலவு என்பது நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ஆண்டுத் திட்டங்களை வரையறுத்து, மத்தியத் திட்டக்குழுவோடு பேசி, இன்னின்ன திட்டங்களுக்கு இன்னின்ன தலைப்புகளில் தொகை அளிக்க வேண்டுமென்று கேட்கிறோம். அந்த நான்காவது ஐந்தாண்டுத் திட்டம், ஐந்தாண்டுகள் முடிகிற வரையில், அதற்காக ஒதுக்கப்படுகிற தொகை எல்லாம் திட்டச் செலவாகும். நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு முடிந்து, ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கும்போது, முதலில் தொடங்கப்பட்ட திட்டங்களின் வேலை பாக்கியிருக்குமேயானால், அதற்கு ஒதுக்கப்படுகிற தொகை, திட்டம் சேராத செலவுகள் ஆகும். இதைத் தவிர மாநில அரசின் சார்பில் போடப்படுகிற திட்டம் சேரா செலவுகளும் உண்டு. இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்த விவகாரத்தை நாம் பார்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக 1975-76-இல் தாழ்த்தப்பட்டோர் நலன் என்னும் தலைப்பில் நாம் வைத்துள்ள அறிக்கையில் திட்டத்திற்கு அப்பாற்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக தாழ்த் தப்பட்டவர்களுக்குச் செலவு செய்யவிருப்பது ஆறு கோடியே 41 இலட்சம். திட்டத்தின் கீழ் செலவு செய்யவிருப்பது மூன்று கோடியே 97 இலட்சம். மத்திய அரசு முழுமையாகப் பொறுப்பு ஏற்று நமது அரசு மூலம் நடத்தும் திட்டங்களுக்கு செலவு செய்ய இருப்பது 50 இலட்சம். மொத்தம் பத்து கோடியே 88 இலட்சம் என்று நாம் குறிப்பிட்டிருக் கிறோம்.
மாநில ஆண்டுத் திட்டத்தை மத்திய திட்டக்குழுவோடு நாம் கலத்து பேசி அவ்வப்போது முடிவு செய்கிறோம். மத்தியத் திட்டக்குழு மாநிலத் திட்டத்தின் அளவு எந்த அளவில் இருக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் மத்திய அரசிடமிருந்து மொத்தமாகக் கிடைக்கும் உதவியின் அளவையும் குறிப்பிடுகிறது. “உங்களுடைய வருவாய் என்ன? வரிகளை அதிகமாக்குவதாலோ, அல்லது பல்வேறு வாருவாய் இனங்களைப் பெருக்குவதாலோ உங்களுடைய வருவாய் எவ்வளவு இருக்கும்?” என்று கேட்டு திட்டத்திற்கு அனுமதி கொடுக்கிறார்கள். நாம் 160 கோடி கூடப் போட்டுக் கொள்ளலாம். நாம் 140 கோடி என்ற அளவிற்கும் இணங்கலாம் ஆனால் அதிலே நாம் 143 கோடி என்று இந்த ஆண்டு இணங்கியிருக்கிறோம் என்றால், அதிலே மத்திய அரசு கடனாகவும், மானியமாகவும் வழங்குகின்ற தொகைதான் 41 கோடியே 15 இலட்ச ரூபாய்.
சத்தியவாணிமுத்து: எனக்குத் தெரிந்த வரையில் திட்டக் குழுவிடம் நீங்கள் கேட்டது 13 கோடி ரூபாய் ; அவர்கள் ஒத்துக் கொண்டது 19 கோடி ரூபாய் 41 கோடி மத்திய உதவியில் தாழ்த்தப்பட்டவர்சளுக்கு ஒதுக்குவதும் சேருகிறதென்றால், அதை ஏன் தனியாகப் பிரித்துக்காட்ட வேண்டும்?
முதல்வர் : மத்திய அரசுதான் எல்லாம் செய்கிறது. என்ற தவறான பிரச்சாரத்தை நாட்டில் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பேசுவதாகக் கூறிக் கொண்டு பேசிய காரணத்தால்தான் அவைகளை தனித்தனியாகப் போட வேண்டியிருக்கிறது.
13 கோடி ரூபாய் கேட்டோம், 19 கோடி தருவதாக அவர்கள் கொடுத்தார்கள் என்றெல்லாம் சொல்வது மிக மிகத் தவறு. முழுமையான தவறாகும். மத்திய சர்க்கார் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரிப்பதே கிடையாது; நம் மாநிலத்தில் ஒரு இலாகாவை தான் பிற்பட்டோருக்காக வைத்து அவர்களின் நலனைக் கவனித்துக் கொண்டு வருகிறார்கள் என்றாலே மத்திய சர்க் காரில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற அளவில்தான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘நாம் நிலைமைகளை எடுத்து அவர்களிடம் சொல்லி, அவர்களிடம் தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர் ஆகிய இரண்டிற்கும் நாம் கேட்டது நான்கு கோடியே 56 இலட்சம் ரூபாய். 143 கோடி ரூபாயில் கேட்ட தொகை மத்திய திட்டக் குழு செலவிட நமக்கு அறிவுரை கூறியிருப்பது மூன்று கோடி. ஆனால் திட்டத்தின் அடிப்படையில் நாம் ஒதுக்கியிருப்பது அந்த மொத்தம் மூன்று கோடி. மாறாக, தாழ்த்தப்பட்டவர்களுக்காக மூன்று கோடியே 97 இலட்சமும், பிற்படுத்தப்பட் டவர்களுக்காக 64 இலட்சமும், ஆகமொத்தம் நான்கு கோடியே 61 இலட்சம் ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம். ஏற்கனவே மொத்தமாக தாழ்த்தப்படாடிமக்களுக்கும் ஏறத்தாழ பின் தங்கிய மக்களுக்கு என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். இதைத் தவிர அரிசனங்களுக்கு வீட்டு வசதி தருவதற்காக, ஏறத்தாழ மூன்று கோடி ரூபாயில் 15,000 வீடுகள் கட்டி முடிக்கப் பட்டிருக்கின்றன. இந்த மாதத்தோடு அந்த வேலைகள் முடிவடைகின்றன. ஒரு இலட்சம் வீடுகள் முதற்கட்டமாகக் கட்டுவதற்கு நாம் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே ஏதோ மத்திய சர்க்கார் வலியுறுத்தி அதைப் பெற நாம் தவறிவிட்டோம் என்று சொல்வது தவறாகும்.
ஹண்டே இன்னொரு பெரிய குற்றச்சாட்டைச் சொல்லி, பத்திரிகைகளில் எல்லாம் அதை விரிவாகப் போட்டிருந்தார்கள். அவர் சொன்னார் :
“The total irregular financial dealings per year on an average is 42,416 cases involving a sum of over Rs. 25 crores. I say the exact sum. It is Rs. 25,02,75,000 for one year. What a fantastic record of our wonderful Chief Minister for himself.
என்று ஹண்டே சொல்லி 42,416 ஆடிட் அப்ஜெக்ஷன்ஸ்’ என்று எல்லா பத்திரிசைகளிலும் போட்டார்கள். அந்தப் பத்திரிகைகள் எல்லாம் இந்த விளக்கத்தையும் போட வேண்டும் ஹண்டே கூட வேண்டுமென்று சொல்லி இருக்கமாட்டார் என்று கருதுகிறேன். அவர் நம்முடைய பழைய பட்ஜெட் வரலாறுகளைப் பார்க்காமல் சொல்லியிருக்கக் கூடும். அவர்கள் சொன்னதின் அர்த்தம் மற்றவர்களுக்கு எப்படிப் புலப்படும் என்றால், ஏதோ இந்த ஆண்டு 1972-73 இல் 42,416 ஆடிட் அப்ஜெக்ஷன்ஸ் என்று எண்ணிடத் தோன்றும். நாம் 1962லிருந்து பார்த்தால் 1962-63-இல் மொத்தம் நம்முடைய மாநில பட்ஜெட் 163 கோடி. இன்றைக்கு 499.97 கோடி: 163 கோடி பட்ஜெட் இருந்தபோது, மொத்த ஆடிட் அப்ஜெக்ஷன்ஸ் 31.502: தொகை 15 கோடி என்ற அளவிற்கு இருந்தது. இப்போது 42,416 எண்ணிக்கை, அப்ஜெக்ஷன்ஸ், தொகை 25 கோடி. அதாவது 1962-63-இல் 9.67 சதவிகிதம்; இப்போது 1972-73-இல் 5 சதவிகிதம்; ஆகவே குறைந்திருக்கிறதே அல்லாமல் வேறு அல்ல.
ஆடிட் அப்ஜெக்ஷன்ஸ் என்றாலே. ஏதோ 15 கோடி ரூபாய், 25 கோடி ரூபாய்க்கு தவறு நடந்துவிட்டது என்று அர்த்தமல்ல; சிலவற்றுக்கு ரசீது கொடுக்காமல் இருக்கலாம். கையெழுத்துப் போடத் தவறியிருக்கலாம். அது மறுபடியும் அந்த அதிகாரிக்குச் சென்று கையெழுத்துப் போட்டவுடன், அந்த அப்ஜெக்ஷன்ஸ் தள்ளப்படும். இந்த 32,000 என்பது 1962-ஆம் ஆண்டுக்கு மட்டும் உரியதல்ல; பல ஆண்டுக் காலம் அது அப்படியே சேர்க்கப்பட்டு, சேர்க்கப்பட்டு அதிகமான தொகையாகும். இந்த ஆடிட் அப்ஜெக்ஷன்ஸ்களுக்கு அவ்வப்போது பதில்கள் தரப்பட்டு வருகின்றன என்றும், அதிலே வேறு ஒன்றும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹண்டே : நிதி கண்ட்ரோல் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சுட்டிக்காட்டினேன். இதை சொல்வதால் நிதி இலாகாவில் இன்னும் சரியாக இருப்பார்கள்; அதற்காகத்தான் சொன்னேன்.
முதல்வர் : இது ஒன்றும் தி.மு. கழக அரசில் மாத்திரம் புதிதல்ல. வெள்ளைக்காரன் காலத்திலே இருந்து காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே இருந்து ஆடிட் அப்ஜெக்ஷன் உண்டு. வொண்டர்ஃபுல்” முதலமைச்சர் என்று சொன்ன காரணத்தால்தான் நான் இதைச் சொன்னேனே தவிர வேறல்ல; 1962-இல் 163 கோடிக்கு 32,000; இப்போது 500 கோடிக்கு 42,000; இதில் குறைவாக இருப்பதைத்தான் “வொண்டர் ஃபுல் சீஃப் மினிஸ்டர்” என்று கூறி என்னை வாழ்த்தியிருப்பார் என்று கருதுகிறேன்.
நண்பர் மாரிமுத்து பேசுகையில் பரம்பிக்குளம், ஆளியாறு திட்டத்தின் வாய்க்கால்களில் தற்போது, தண்ணீர் ஓடுவதில்லை. இந்த ஆண்டு 89 ஆயிரம் ஏக்கர்களுக்குக் கூடுதலாக நீர்ப்பாசனம் அளிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்று வரவுசெலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது; இதில் வீணாக முதலீடு செய்ய வேண்டாம் என்ற கருத்தை இங்கே தெரிவித்தார்.
இந்தக் கருத்து உள்ளபடியே ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தல்ல; பயங்கரமான கருத்து என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், பரம்பிக்குளம், ஆளியாற்றில் தண்ணீரே இல்லாததைப் போலவும். ஆனால் நாம் 89.000 ஏக்கர்களுக்கு விரிவுபடுத்துவது ஆபத்தானகாரியம் என்பதைப் போலவும் குறிப்பிட்டார். உண்மை என்னவென்றால், ஆண்டு ஒன்றுக்கு 2.5 இலட்சம் ஏக்கருக்கு நீர் கொடுக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. பரம்பிக்குளம். ஆளியாறு ஒப்பந்தமாகி, இடையில் சில கசப்புணர்ச்சிகள் ஏற்பட்டு, அது முடிவு பெறாமல் இருந்த சூழ்நிலையில் – நம்முடைய ஆட்சி வந்தபிறகு ஈ. எம். எஸ். அங்கே முதலமைச்சராக இருந்த போதும். அதற்குப் பிறகு அச்சுதமேனன் அங்கே முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகும், நானும் நம்முடைய அமைச்சர் பெருமக்களும் அடிக்கடி அவர்களைச் சந்தித்து, பேச்சு வார்த்தை நடத்தியதன் விளைவாக, பரம்பிக்குளம் ஆளியாறு ஒப்பந்தத்தில் ஒரு நல்ல முடிவு ஏற்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் மூலம் நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் 30 டி. எம். சி.. அதாவது 30.000 மில்லியன் கனஅடி தண்ணீர் நமக்குக் கிடைக்க வேண்டும். இதில் தற்போது நமக்குக் கிடைப்பது 16.5 சி. பிறகு மேலும் 9 டி. எம். சி. வருவதற்கான வழி வகைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதிலே இப்போது ஏழு டி.எம்.சி. கிடைக்கும். இன்னும் போகப் போக மேலும் இரண்டு டி.எம்.சி. நமக்குக் கிடைக்கவிருக்கிறது. ஆகவே அந்த ஏழு டி.எம்.சி. நீரைக் கொண்டுதான் பொள்ளாச்சி, பல்லடம். உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய தாலுகாக்களில் உள்ள 89,000 ஏக்கர்களுக்கு நீர்ப்பாசனம் கொடுக்க நாம் திட்டமிட்டிருக்கிறோம். இதில் ஆண்டு ஒன்றுக்கு 45,000 ஏக்கரா வீதம் மாறி மாறி நீர் வழங்கப்படும். இப்படி மாறி மாறி நீர் வழங்கினால் நல்லது என்று கூடச் சொன்னார்கள். இல்லாவிட்டால் அந்த நிலங்கள் கூடப் பாழாகிவிடும் என்ற கருத்தும் இருக்கிறது. நமக்குக் கிடைக்கின்ற தண்ணீரை வைந்துக் கொண்டு இப்படி மாறி மாறி பாசன வசதிக்காகத் தண்ணீரை விடுவது சாலச்சிறந்தது என்ற முறையில்தான் செய்திருக்கிறோம். ஆகவே சரியான திட்டமில்லை என்று கூறுவது ஒத்துக் கொள்வதற்கில்லை.
திரு. மாரிமுத்து அவர்கள் பேசுகையில் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்படாமல் இருக்கிறது என்று சொன்னார். அவைகளைச் சாகுபடி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சொன்னார்கள்.
மாரிமுத்து : அது தவறாக ரிப்போர்டாகியிருக்கிறது. மொத்தம் சாகுபடி செய்யக்கூடிய நிலங்கள் ஒரு கோடியே நாற்பது இலட்சம் என்று தான் நான் சொன்னேன்.
முதல்வர் 1974-ஆம் ஆண்டு நம்முடைய விவசாயத்துறை தந்த புள்ளிவிவரங்களின்படி, பதினோரு இலட்சத்து, இருபத்தைந்தாயிரம் ஏக்கர் விவசாயம் செய்யப்படாமல் இருக்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதையும் படிப்படியாக விவசாயம் செய்ய வேண்டிய பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இதிலே அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை எல்லாம் அரசுப் பண்ணைகளின் மூலமாக எடுத்துக்கொண்டு, நாம் சாகுபடி செய்வது என்ற முடிவை மேற்கொண்டு, அதிலே முதற்கட்டமாக செங்கற்பட்டு மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் தெருவாய், கரடிபுத்தூர் என்ற இரண்டு கிராமங்களில், 1,522 ஏக்கர் நிலத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டிருத்கிறது.
மாவட்டங்களில் சாகுபடிக்குத் தகுந்த சாகுபடி செய்யாமல் இருக்கிற இத்தகைய நிலங்களை எல்லாம் எடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசுப் பண்ணைக் கழகங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு நில உபயோகச் சட்டம் என்று 1961-இல் ஒரு சட்டம் நிறைவேற்றியிருக்கிறோம். அதன்படி நிலத்தைப் பெற்றவர்கள், பலர் உபயோகப்படுத்தாமல் இருக்கிறார்கள். அப்படி இருந்தால், அப்படிப் பயன்படுத்தாமல் இருப்பவர்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலையிட்டு, அந்த நிலங்களையும் எடுத்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இன்றுள்ள உணவு நிலைமையை உத்தேசித்தும். மேலும் உற்பத்தியைப் பெருக்கவும். தமிழ் நாட்டின் எதிர்கால வளம் சிறக்கவும். இந்தப் பதினோரு இலட்சம் ஏக்கராவை நாம் விவசாயத்திற்கு ஈடுபடுத்த, முதற் கட்டமாக அரசுப் பண்ணை மூலமாக இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று முடிவிற்கு வந்திருக்கிறோம்.
வடிவேலு : ஒரு சிலர் தங்களுடைய பட்டா நிலங்களையே சாகுபடி செய்யாமல் வைத்திருக்கிறார்கள்; அந்த நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படுமா?
முதல்வர் : தனிப்பட்டவர்கள் பயிர்செய்யாமல் இருந்தால், அதை எடுத்துக்கொள்ள சட்டம் இடம்தருகிறதா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும்.
மாரிமுத்து: அரசு புதியதாக மசோதா கொண்டு வந்து அதை பாஸ் செய்யலாம்.
முதல்வர்: இந்த ஆண்டு வறட்சியின் காரணமாகக் கூட அப்படித் தரிசாகப் போட்டிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு, இந்த ஆண்டு சட்டம் போட்டு அவைகளை எடுத்துக் கொள்வது முறையாக இருக்க முடியாது. வேண்டுமென்றே அப்படிப் போட்டிருந்தால், அவைகளைப் பற்றி என்ன சட்டம் போடலாம் என்பதைப் பற்றி அரசு ஆலோசிக்கும்.
அ.தி.மு.க. சார்பில் பேசிய துரை. கோவிந்தராசன், கர்னாடக மாநிலத்திற்கு ஏற்புடைய ஒரு பயங்கரமான கருத்தைச் சொன்னார். தமிழகத்திலே நீர் வளங்களைப் பொறுத்தவரையில் காவிரியாறு, மற்ற ஆறுகள் மூலமாக 50 சதவிகிதத் தண்ணீர் வீணாகக் கடலில் போய்ச் சேருகிறது என்று குறிப்பிட்டார். இதைத்தான் கர்னாடக அரசும் தன்னுடைய வாதமாகச் சொல்கிறது. இதைச் சொல்லித் தான் நாம் பயன்படுத்துகின்ற தண்ணீரைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று அவர்கள் கூறி வருகிறார்கள். இது முற்றிலும் தவறான வாதமாகும். பயன்படுத்த முடியாத, ஆயக்கட்டுகள் இல்லாத பகுதி, காவிரிப்பூம்பட்டினத்தில் போய்க் கடலோடு காவிரி கலக்கிற அந்த பத்து மைல்களுக் குள்மழை பெய்தால் அந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ள யாரும் இருக்க முடியாது. அப்படி ஏதாவது தண்ணீர் வீணாகலாமே தவிர, 50 சதவிகிதத் தண்ணீர் வழக்கமாக வீளுகிறது என்று சொல்வது தவறான வாதமாகும். அவர் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பிரச்சாரத்தைத் தயவு செய்து வெளியேகூட செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வேன். நாம் எந்தத் தண்ணீரையும் வீணாக்கவில்லை; ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் வடிவேலு அவர்கள் உலகத்திலேயே இல்லாத அளவிற்குத் தமிழ் நாட்டில் மின்சார இழப்பு 20 சதவிகிதம் ஏன் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த 20 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும் என்பதில் நான் ஒத்தக் கருத்து உடையவன்; இன்னும் குறைக்க வேண்டும். ஆனால் உலகத்திலேயே எங்கும் இல்லாத அளவிற்கு என்று சொல்லிவிட முடியாது. உலகம் வரையில் போய்ப் பார்க்க நேரமில்லை என்றாலும், இந்திய அளவில் பார்த்தால் 1971-72 புள்ளி விவரப்படி, ஆந்திரத்தில் மின்னியல் நட்டம் எவ்வளவு என்று பார்த்தால், 26.84 சதவிகிதமாகும். அங்கே மின்சாரக் கம்பியின் மொத்த நீளம் 1,06,591 கி.மீ. அரியானாவில் மொத்தக் கம்பிகளின் நீளம் 66.695 கி.மீ., மின்னியல் நட்டம் 28.52 சதவிகிதம். பஞ்சாபில் 53,536 கி.மீ. நீளம், மின்னியல் நட்டம் 24.19 சதவிகிதம். ராஜஸ்தானில் கம்பியின் நீளம் 47,063 கி.மீ. மின்னியல் நட்டம் 23.62 சதவிகிதம். உ.பி.யில் சும்பியின் நீளம் 1,45,587 கி. மீ., மின்னியல் நட்டம் 26.14 சதவிகிதம். கேரளத்தில் கம்பியின் நீளம் 34,845 கி.மீ. மின்னியல் நட்டம் 17.29 சதவிகிதம். கர்னாடகத்தில் கம்பியின் நீளம் 1,47,266 கி.மீ. நட்டம் 15.86 சதவிகிதம். தமிழ் நாட்டில் கம்பியின் நீளம் 2,21,040 கி.மீ., மின்னியல் நட்டம் 18.80 சதவிகிதம். இதுவும் பல பகுதிகளுக்கு மின்சாரக் கம்பியை இழுக்க வேண்டியிருந்ததால் இந்த அளவிற்குக் கூட மின்னியல் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. இது குறைய வேண்டும் என்பதில் எனக்கு எந்தவிதமான கருத்து மாறுபாடும் கிடையாது. ஆனால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகிற நேரத்தில் நாம் அதிகமாக இல்லை என்பதைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வரவுசெலவுத் திட்டத்தைப் பொறுத்த வரையில் எதிர்க்கட்சியில் உள்ளவர்களால் போடப்பட்ட வரிகளுக்குப் பெரிய எதிர்ப்புக்களை எல்லாம் தெரிவிக்கப்பட்டது. பொன்னப்ப நாடார் அவர்கள் பழைய காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரிகளுக்கான எதிர்ப்பைத் தெரிவிப்பதில் தற்காலிகமான நியாயம் இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் ஆட்சியிலிருந்து வரிகளைப் போட்டவர்கள்: ஆகவேதான் தற்காலிகமான என்று சொன்னேன். பருவா அவர்களின் அறிக்கையைப் பார்க்கும்போது தற்காலிகமாக என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
பொன்னப்ப நாடார் : பரூவா அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்பதைத் தங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.”
முதல்வர் : நாடார் அவர்கள் இப்போது என்று சொன்னதைத்தான் நான் தற்காலிகமாக என்று சொன்னேன்.
பொன்னப்ப நாடார்: திரு. பருவா அவர்கள் ஏதோ பொது மக்களைக் குழப்ப வேண்டுமென்று இந்த அறிக்கையைக் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் இங்கு வந்த நேரத்தில் மறுமுறையும் அரசியலில் குழப்பம் ஏற்படுவ தற்காகக் கூறியிருக்கிறார். அதைப்பற்றி நோக்கம் கற்பிக்க வேண்டாம்.
அனந்தநாயகி : இந்த மாதிரி குழப்பம் அங்கேதான் இருக்கிறது. கோவையில் வந்தீர்கள், பிறகு போய்விட்டீர்கள்; பாண்டிச்சேரியில் வந்தீர்கள், பிறகு போய்விட்டீர்கள்.
பொன்னப்ப நாடார் : அம்மையார் அவர்கள் கூறுவது வேடிக்கையாக நாங்கள் எல்லாம் சிரிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது. எங்கள் கட்சியில் அவர் துணைத் தலைவராக இருந்தார். இப்போது வேறு சுட்சிக்குப் போய்விட்டார். அவர் இந்த வாதத்தைச் சொல்கிறபோது நாங்கள் வேதனைப்படுகிறோம். யார் யாரோடு போனார்கள் என்பதை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை.
அனந்தநாயகி : எங்கள் வாதத்தில் சத்து இருக்கிறது. நான் ஒரேயடியாக வந்து விட்டேன். நீங்கள் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள்.
பொன்னப்ப நாடார் : உங்கள் வாதத்தில் உப்பும். இல்லை; சப்பும் இல்லை.
முதல்வர் வரிகளைப் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டது. டெல்லியிலே இருக்கிற மத்திய அரசின் சார்பில் திட்டக்குழு கூடுகிற நேரத்திலும், நிதியமைச்சரை நாங்கள் சந்திக்கின்ற நேரத்திலும், முதலமைச்சர்களுடைய மாநாடு நடைபெறுகின்ற நேரத்திலும்,”நீங்கள் வரிகளின் மூலமாக மாநிலங்களின் வருவாயைப்யைப் பெருக்கவேண்டும். என்ற திட்டவட்ட அறிவிப்புகள் எங்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன.
முன்னாள் நிதியமைச்சர் திரு. சவான் எழுதிய கடிதத்திலும், திட்டக்குழுவின் சார்பில் உறுப்பினர்கள் எழுதிய கடிதத்திலும், ‘விவசாய முனையிலும் நீங்கள் வரி விதிக்க வேண்டும்’ என்று மாநில அரசுக்குத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து இந்த அவையில் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்த வரையில் நாம் விதித்திருக்கிற வரி மிக மிகக் குறைவானதுதான். ஆனால் இதை எதிர்க்காவிட்டால், எதிர்க்கட்சியாக இருக்க முடியாது என்பதை நானும் எதிர்க் கட்சியாக இருந்தவன் என்ற முறையில் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இது நாமெல்லாம் கூறுகின்ற அளவிற்கு. இவை ஏழை எளியவர்களைப் பாதிக்கக் கூடியவைகளா என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
சென்ற ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 59 பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பலமுனை விற்பனை வரியை ஒருமுனை வரியாக மாற்றி அமைத்தோம். அப்போது சதவிகிதத்தில் பருப்பு, எண்ணெய்வகைகள், இவற்றின் மீது பலமுனை வரி விதிக்கப்பட்டு வந்தது. அதன் மூலம், பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்கள் எல்லாம் ஏழு சதவிகிதம் அவர்கள் வரியாகக் கட்டவேண்டி இருந்தது. நாம் அதை மூன்றரை சதவிகிதமாக ஆக்கி, அந்த மூன்றரையை நான்கு சதவிகிதமாக ஆக்கியிருக்கிறோம். சென்ற ஆண்டு இருந்த ஏழு சதவிகிதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த நான்கு சதவிகிதம் குறைக்கப்பட்ட வரியே தவிர, இது அதிகமாக ஆக்கப்பட்ட வரியல்ல.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சிக்கரி காபி, பிரஞ்சு காபி போன்றவைகளுக்கு ஆந்திரத்தில் ஆறு சதவிகிதம்தான்; கேரளத்தில் ஆறு சதவிகிதம் கர்னாடகத்தில் பத்து சதவிகிதம்; மராட்டியத்தில் ஆறு சதவிகிதம்: நாம் விதித்திருப்பதும் ஆறு சதவிகிதம்.
தேயிலை -ஆத்திரத்தில் 6 சதவிகிதம்: கேரளத்தில் 5 சதவிகிதம்; கர்னாடகத்தில் 6 சதவிகிதம் மராட்டியத்தில் 6 சதவிகிதம்; நாம் தற்போது விதித்திருப்பது 6 சதவிகிதம்.
எண்ணெய் வகைகளை எடுத்துக் கொண்டால், ஆந்திரத்தில் 5 சதவிகிதம்: கேரளத்தில் 5 சதவிகிதம்; கர்னாடகத்தில் 4 சதவிகிதம்; நாம் விதித்திருப்பது 4 சதவிகிதம்.
இயந்திரத்தால் செய்யப்பட்ட தீக்குச்சிகளுக்கு கேரளத்தில் 3 சதவிகிதம், ஆந்திரத்திலிருந்தும், கர்னாடகத்திலிருந்தும் விவரம் கிடைக்கவில்லை. நாம் 4 சதவிகிதம்.
இப்படி அண்டை மாநிலங்களோடு அதிக வித்தியாசப்படுகின்ற அளவிற்கு இல்லாமல், நாம் இந்த வரிகளை இன்றைக்கு ஒரு அரை சதவிகிதத்திற்கு, சென்ற ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சென்ற ஆண்டிலிருந்து 3 சதவிகிதத்தைக் குறைத்து குறைவாக ஆக்கியிருக்கிறோம்.
அனந்தநாயகி அம்மையார், கால்நடை என்ன செய்தது. அதற்காவது வரியைக் குறைக்கக்கூடாதா என்றுகேட்டார்கள். அவர்களுடைய கோரிக்கையைத் தமிழ் நாட்டு விவசாயப் பெருங்குடி மக்களின் கோரிக்கையாக ஏற்று, பிண்ணாக்கு வரியை இந்த அரை சதவிகிதம் உயர்த்தியதை ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனந்தநாயகி: பிண்ணாக்கு வரியை நீக்கியமைக்காக மாடுகளின் சார்பில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன். முதலமைச்சர் ஏதோ மத்திய அரசு கட்டாயப்படுத்துவதின் காரணமாக வரி போடுவதைப் போலச்சொல்கிறார். ஆனால் மற்ற அண்டை மாநிலங்களில் எல்லாம் வரி போடாமல், கேரளாவிலும் ஆந்திராவிலும் நிதிநிலை அறிக்கை தயாரித்திருக்கிறார்களே முதல்வர் இங்கே மதுவிலக்கை நடைமுறை செய்கிறோம். வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதற்கான வரிவிலக்குகளைத் தருகிறோம். குதிரைப்பந்தயத்தை ஒழித்து அதிலே இரண்டு கோடியை இழக்கிறோம். இவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தக் கேள்வியைக் கேட்டால் அதற்கான பதில் தானே அவர்களுக்குக் கிடைக்கும்.
விலைவாசி உயர்வை இன்றைக்கு மாநில அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று மாநில அரசின் மீது ஆளும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சுட்சி நண்பர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. கே.டி.கே. தங்கமணி அவர்கள் விஜயவாடாவில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களை இங்கே படித்துக் காட்டினார். சாதியை ஒழிக்க, தீண்டாமையை அகற்ற நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எல்லாம் படித்தார். விஜயவாடா மாநாடு பத்தாண்டுக் காலத்திற்கு ஒருமுறை நடைபெறும் மாநாடாகும். அது சாதாரணமானதல்ல. 1975 ஜனவரி 27-ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. அங்கே போடப்பட்ட ஒரு முக்கிய மான தீர்மானத்தை இங்கே நான் படித்துக் காட்டுவது முறை என்று கருதுகிறேன்.
“The responsibility for this state of affairs must be placed squarely on the shoulders of the ruling congress Government, which has not only failed to protect the Indian economy from the ravages of the world-wide inflationary crisis of capitalism and the efforts of the big imperialist powers to transfer its burdens on to the countries of the third world but has itself contributed to the infla- tionary spiral by embarking upon a reckless course of deficit finan- cing, and mounting taxation of consumer articles, and intermediates and essential raw materials.
இந்தியாவிலேயே இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற விலைவாசி உயர்விற்கு பொருளாதார ஏற்றத்தாழ்வு, வீக்கம். இதற்கெல்லாம் யார் காரணம் என்பதை ஆணித்தரமாக மத்திய சர்க்காரை நோக்கி விரலைக் காட்டுகின்ற தீர்மானம்தான் இந்த விஜயவாடா தீர்மானம். இந்தத் தீர்மானத்தை நான் கம்யூனிஸ்ட் கட்சியோடு உறவு கொள்ளாவிட்டாலும் தி.மு. கழகத்தின் சார்பில், அவர்கள் நிறை வேற்றியதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விஜயவாடா தீர்மானத்தில், இன்னொரு இடத்தில்.
“Black money which has become a parallel economy is caus- ing havoc to the national economy apart from boosting the price- spiral. As this has created a most dangerous situation where even the previous limited planning has become impossible.”
இது கறுப்புப் பணத்தைப் பற்றியதாகும். கறுப்புப் பணத்தை அடியோடு ஒழிப்பதற்கு, மத்திய அரசு எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகளோடு, மாநில அரசு முயற்சிகளை எடுத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கும் அதிகாரம் வேண்டும் என்கிற தீர்மானத்தை இங்கே நாம் ஏகமனதாக நிறைவேற்றினோம். அப்படி ஒரு தீர்மானம் போடுவீர்களா என்று கே. டி. கே. கேட்டபோது, நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கேட்டு, ஆதரிக்கிறோம் என்று அவர் சொல்லி, இந்த மாமன்றத்தில் அப்படி ஒரு தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். இதுவரையில் அதற்கு மத்தியிலிருந்து எந்த விதமான பதிலும் கிடையாது. இதிலிருந்து மத்திய அரசுக்கு அதிகாரம் கூடாது என்பதல்ல, மத்திய அரசுக்கும் இருக்கட்டும், மாநில அரசுகளுக்கும் இருக்கட்டும் என்றுதான் நாம் கூறினோம்; அதற்கு எந்த விதமான பதிலும் கிடையாது.
நம்முடைய கோரிக்கைகள் சரியாக வலியுறுத்தப்படவில்லை. அது இன்னும் அதிகமாக வலியுறுத்தப்பட வேண்டும் என்பதை. பெரியவர் மணலி அவர்களும், ஹண்டே அவர்களும், தோழமைக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் லீச், ஃபார்வார்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தெரிவித்தார்கள்.
நாம் மத்தியத் திட்டக் குழுவிடம் வலியுறுத்தி வருகிறோம்.
1975- 76-ஆம் ஆண்டுத் திட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகளைத் திட்டக்குழுவோடு நடத்தியபோது நாம் வறட்சி நிவாரணத்துக்குத்துக்கு திட்டத்திற்கு அப்பாற்பட்ட தொகையாக 20 கோடிரூபாய் வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறோம். அது மாத்திரமல்ல. 1975-76-ல் நமக்கேற்படுகின்ற பற்றாக்குறையைச் சரிக்கட்ட நிலவரி ரத்து, கடன்கள் தள்ளிவைப்பு போன்றவைகளால் நமக்கேற்பட்ட வருமானச் குறைவைக் கருத்தில் கொண்டு. 15 கோடி ரூபாய் மத்திய அரசு அதிகமாக நிதியுதவி தரவேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றோம். மதுவிலக்கை மறுபடியும் அமல்படுத்தியதால் 5-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நான்கு ஆண்டுகளில் நமக்கு ஏற்படும் இழப்பு 234 கோடி ரூபாய். இதில் 50 சதவிகிதமான 117 கோடி ரூபாயை ஆண்டொன்றுக்கு 29 கோடி ரூபாய் வீதம் தமிழக அரசுக்குத் தரவேண்டுமென்று வலியுறுத்தியிருக்கின்றோம்.
சென்னை பெருநகர வளர்ச்சிக்கு பம்பாய் கல்கத்தா போன்ற நகரங்களோடு ஒப்பிட்டு திட்டத்துக்கு அப்பாற்பட்ட செலவாக ரூபாய் பத்து கோடி ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றோம். இவைகள் மாத்திரம் அல்லாமல் தொடர்ந்து வேறு பல திட்டங்களையும் கேட்டு வருகின்றோம்.
சுதந்திரா கட்சிச் சார்பில் பேசிய வெங்கடசாமி நெய்வேலி இரண்டாவது நிலக்கரிச் சுரங்க வேலை நடக்கவில்லை என்றெல்லாம் இங்கே குறைப்பட்டுக் கொண்டார்.
470 மெகாவாட் மின்விசை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்ட கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் முதல் 235 மெகாவாட் மின் விசை உற்பத்தி 77 78லேதான் தொடங்சுக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. அதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு வழி செய்கிற நெய்வேலி இரண்டாவது நிலக்கரிச் சுரங்க வேலைக்கு இன்னும் மத்திய திட்டக்குழு ஒப்புதலை அளிக்கவில்லை. இதுபற்றி பல முறை மத்திய அரசுக்கும் திட்டக்குழுவுக்கும் நாம் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். இந்த மாமன்றத்திலும் நெய்வேலி இரண்டாவது சுரங்க வேலை பற்றி நாம் பேசி வருகிறோம். எல்லாக் கட்சிக்காரர்களும் அதை வலி யுறுத்துகிறோம்.
அண்மையிலே டில்லிக்குப் போயிருந்த நேரத்தில் மத்திய நிதி அமைச்சரிடத்திவே அதுபற்றி பேசப்பட்டுள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமானால் 15-11-73-இல் பிரதமருக்குக் கடிதம். பிறகு 19-11-73-இல் பிரதமருக்கு மீண்டும் ஒரு கடிதம், பிறகு 9-2-74-இல் பிரதமருக்குக் கடிதம். 9-2-74-இல் திட்ட அமைச்சருக்குக் கடிதம். 16-8-74-இல் நிதிஅமைச்சருக்குக் அமைச்சருக்குக் கடிதம். நேரிலே பலமுறை வற்புறுத்தல். இப்படி நாம் அடிக்கடி எடுத்துச் சொல்லியும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்துக்கு ஏற்கனவே ஒதுக்கியதைவிட இந்த ஆண்டு குறைவாக ஒதுக்கிய ஒரு பாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை.
1974-75-இல் மத்திய நிதி ஒதுக்கீடு நெய்வேலிக்கு 33 கோடியாக இருந்தது. திருத்திய மதிப்பீடு 54 கோடி ரூபாயாக இருந்தது. நாம் இரண்டாவது சுரங்கம் கேட்கப் போன குற்றம் இந்த ஆண்டு 15 கோடியாக அது குறைந்திருக்கிறது. நெய்வேலிக்கு 54 கோடி ரூபாயாக சென்ற ஆண்டு இருந்தது. இந்த ஆண்டு 15 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. நிலக்கரி எடுப்பதிலும் தமக்குப் பாதகம் ஏற்படும். அதனால் கிடைக்கின்ற மின் உற்பத்தியிலும் நமக்குப் பாதகம் ஏற்படும். அதன் மூலம் கிடைக்கின்ற உர உற்பத்தியிலும் நமக்குப் பாதகம் ஏற்படும்.
பத்தாயிரம் கோடி ரூபாயில் திட்டம் போடுகிற நேரத்தில் 54 கோடி ரூபாய் நெய்வேலி நிலக்கரிக்கு இந்த ஆண்டு 15 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் எடுத்துக் காட்டாமல் இருக்க முடியாது.
இவைகளன்னியில் நாம் மத்திய அரசிடம் 68 முதல் 74 வரையுள்ள இந்த ஆண்டுகளில் சோழத்திபுழா, பாளையாறு, மேல்அமராவதி, சண்முகநதி, மேல் தாமிரபரணி, கீழ் மேட்டூர், மணிமுத்தாறு ஆகிய நீர்மின் திட்டங்களில் 535 மெகாவாட் மின்விசை கிடைக்கக்கூடிய திட்டங்களுக்கு நாம் கோரிக்கை வைத்துப் போராடி வருகிறோம். கிடைக்கவில்லை. மேட்டூர் அனல் மின் திட்டம் 330 மெகாவாட் கிடைக்கக் கூடிய திட்டம். அதற்கு 1972லேயிருந்து வலியுறுத்தி வருகிறோம். அதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
சேலம் உருக்காலை பற்றி நண்பர் வீரபாண்டி ஆறுமுகம் மிக உருக்கமாகப் பேசினார். பிரதமர் அவர்கள் நான்காண்டுகளுக்கு முன்பு அதற்கான அடிக்கல் நாட்டு விழாவினை மிக விமரிசையாக நடத்தி வைத்தார்கள். அந்த சேலம் உருக்காலைக்காக அண்ணா அவர்கள் காலத்திலேயே எல்லாக் கட்சிகளுமாகச் சேர்ந்து எழுச்சி நாளெல்லாம் கொண்டாடினோம். அதற்குப் பிறகு நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற நேரத்திலே டில்லியில் நான் இருந்தபோது சேலம் இரும்பாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
பிரதமரிடம் சென்று-பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சென்று பாராட்டினோம். இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது சில ஆண்டுகளில் முடிவடைந்துவிடும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. என்ன ஆயிற்று? இந்தத் திட்டத்தினுடைய மொத்தச் செலவு 518 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு முதல் கட்டமாக வேலையைத் தொடங்க 120 கோடி ரூபாய் தேவை என்று கணக்கிடப்பட்டது. 74-75-ஆம் ஆண்டு 15 கோடி ரூபாய் இதற்காக மத்திய அரசு ஒதுக்கியிருந்தும் கூட, சேலம் திட்டத்துக்காக வந்து சேர்ந்த தொகை 3 கோடி ரூபாய்தான். இந்த ஆண்டிலும் 3 கோடி ரூபாய்க்கு மேல் அளிக்கப்படவில்லை என்பதை எண்ணுகிற நேரத்தில் இது அங்கே நிர்வாகச் செலவுகளுக்குத்தான் போதுமானதாக இருக்குமேயல்லாமல், சேலம் இரும்பாலை வரும் நம்பிக்கையை நாம் இழந்துவிடக் கூடிய சூழ்நிலையில்தான் இருக்கிறது. ஹண்டே சொல்வதைப் போல அவர்கள் ஒதுக்கும் பணம் பெட்ரோல் செலவுக்குத்தான் போதும்போல் இருக்கிறது.
ஆகவே சேலத்தை ஏதோ ஒரு காரணத்துக்காக ஆரம்பித்துவிட்டு மெல்ல- மெல்ல இப்போது சேலம் உருக்காலை இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறார்களோ என்று தான் நாம் கவலைப்பட வேண்டியிருக்கின்றது.
தங்கமணி: பாராளுமன்றத்தில் பதில் சொல்லும்போது இது குறித்து கவனத்தில் வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக ஒதுக்க வேண்டுமென்று அங்கே ஏன் சண்டை போடவில்லை.
முதல்வர்: அவர்களும் கேட்பார்கள். நாமும் ஒன்றாகச் சேர்ந்து கேட்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. அனுமந்தையா ஒரு பெரிய குற்றச்சாட்டைச் சாட்டியிருக்கிறார். அது நம்முடைய தென் மாநிலங்களை எல்லாம் பாதிக்கின்ற அளவிற்கு ஏற்பட்டிருக்கிற சூழ்நிலையை அவர் அங்கே குறிப்பிட்டிருக்கிறார். தென் பிராந்தியங்களில் ரெயில்வேக்கு செய்யப்பட்ட மூலதன நிதியிலிருந்து 5.5 கோடி நபாய் பீகாருக்குத் திருப்பி விடப்பட்டிருக்கிறது. அவருடைய குற்றச்சாட்டு. 1971-ஆம் ஆண்டு திருநெல்வேலி- கன்யாகுமரி ரெயில் பாதைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போது 1976-இல் இந்த ரெயில் பாதை முடிந்துவிடும் என்று அறிவித்தார்கள். இப்போது 1975 நடக்கிறது. அடிக்கல் அப்படியே கிடக்கிறது. அந்த ரயில் பாதை அடிக்கல் நாட்டு விழா எவ்வளவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைத் தமிழ் நாட்டு மக்கள் நன்கறிவார்கள். ரெயிலில் போடப்பட்ட இரண்டு தண்டவாளங்களைப் போலவே, இரண்டு தண்டவாளங்களாகத்தான் இரண்டு கட்சிகளும் இருக்கின்றனவே அல்லாமல், இருப்புப் பாதை போடப்படவில்லை. கன்யாகுமரியில் நடைபெற்ற அந்த விழாவோடு முடிந்துவிட்டது. கன்யாகுமரி ரெயில் பாதை தேவை என்பதற்காகக் கட்சி சார்பற்ற முறையில் அனைவருமே வாதாடியிருக்கிறோம். அது போடப்படும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு தென் பிராந்தியங்களுக்கு ஒதுக் கப்பட்ட ஐந்தரை கோடி ரூபாயும் பீகாருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதென்றால் என்ன காரணம்? பீகாருக்கு என்ன அவ்வளவு அவசியம் வந்தது? வேறு அவசியங்கள் பல அங்கே இருக்கின்றன. அதற்காக நாம்தான் இளித்துவாயர்கள் கிடைத்தோமா? என்பதை யெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மத்திய அரசிடம் நம்முடைய முறையீடுகள் எவ்வளவு தேங்கிக் கிடைக்கின்றன? எந்த அளவிற்கு நாம் வலியுறுத்தினாலும் நமக்குக் கிடைக்காமல் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நிலச் சீர்திருத்தம் பற்றி எல்லோருமே. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அனைவருமே பேசுகிறோம். அதற்காக இந்த அவையில் நாம் எட்டுக்கு மேற்பட்ட சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தோம். குத்தகைதாரர்களுக்கு உச்ச வரம்புச் சட்டத்தை எட்டு வருட காலவரையிலிருந்து பத்தாக நீடிக்க வேண்டும் என்று ஒரு சீர்திருத்தம் 1970-இல் கொண்டுவரப்பட்டது. நிலச் சொந்தக்காரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நில உச்சவரம்பை முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கரிலிருந்து பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கராகக் குறைத்து ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இவைகளை சாதனைகளுக்காகச் சொல்லவில்லை. இதிலே வருகின்ற விளைவுகளுக்காகச் சொல்கிறேன். சர்க்கரை ஆலைகள் முன்பு உச்சவரம்பைக் காட்டிலும் அதிகமாக நிலத்தைக் கரும்பு வேளாண்மைக்கு வைத்துக் கொள்ளலாம் என்ற விதிவிலக்கை நீக்குவது: மேய்ச்சல் நிலங்களுக்கு இருந்த விதிவிலக்கை ரத்து செய்வதற்கு, 1971-ஆம் ஆண்டு ஒரு சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. குத்தகைதாரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த உச்சவரம்பிற்கான தற்காலிக ஷரத்துக்களை நிரந்தரமாக ஆக்கப்பட்டது : இது 1972-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி செய்யப்பட்டது. அதற்குப் பிறகு ஒரு குடும்பத்திற்கு நாற்பது ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தை முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று குறைத்து, 1972-இல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. நிலச் சொந்தக்காரர்கள் தங்கள் நிலத்தை மற்றவருக்கு எழுதி வைப்பது சட்டத்திற்கு முரண்பட்டதாக இருக்குமானால், அவ்வாறு மாற்றப்பட்ட நிலம் அவருடைய உச்சவரம்பு நிலத்தோடு சேர்த்துக் கணக்கிடப்படும் என்று 1972-இல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வளவு சட்டங்களையும் எதிர்த்து இன்றைக்கு பலர் நீதி மன்றங்களுக்குச் செல்ல முடிகிறது. நாம் கேட்பதெல்லாம் இதை 9-வது ஷெட்யூலில் சேர்த்துவிடுங்கள் என்று இரண்டு மூன்று ஆண்டுக் காலமாகக் கேட்டு வருகிறோம். அப்படி இதைச் சேர்த்துவிட்டால் யார் நீதி மன்றங்களுக்குச் சென்றாலும், இந்தச் சட்டங்களுக்கு எந்தப் பாதகமான தீர்ப்பளிக்கப்பட்டாலும், இந்தச் சட்டங்களை அது தொடமுடியாது; ஆகவே இந்தச் சட்டங்களை 9-வது பின் இணைப்பில் சேர்த்துவிட வேண்டும் என்று அரசியல் சட்டம் 31-பி பிரிவு கூறுவதற்கேற்ப, செய்யுங்கள் என்று நாம் 11-3-74 ல், 4-11-74ல் 16-11-74ல். அண்மையில் 23-11-74-இல் கேட்டுக் கொண்டோம். இப்படித் கேட்டுக் கேட்டு இன்னும் இந்தச் சமதர்மத் திட்டம்- இந்தச் சட்டம் பாதுகாக்கப்பட நாம் விடுத்த கோரிக்கை கூட, இன்றளவும் மத்திய அரசால் அரசியல் சட்டத்திலே இணைப்பதற்கேற்ற வகையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
மத்திய அரசிடம் நம்முடைய முறையீடுகள் எப்படித் தேங்கிக் கிடக்கின்றன என்பதற்காகத்தான், இதைக் குறிப்பிடுகிறேன்.
1973-74-இல் அரசுக்குச் சொந்தமாக போக்குவரத்துக் கழகங்களில் முதலீட்டில் தொழிலாளர்கள் பங்கு கொள்ளும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது.
இதிலே வந்த சங்கடம் என்னவென்றால், இலாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் நேரத்தில் வருமான வரியைச் செலுத்தி விட்டு, மீதியில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது உள்ள நிலைமை. வருமான வரியைச் செலுத்திவிட்டால் பிறகு இலாபத்தில் எவ்வளவு கிடைக்கும்? ஆகவேதான் தொழிலாளர்களின் நன்மைக்காக, வருமானவரிக்கு முன்பே, தொழிலாளர்களுடைய பங்கீட்டைக் கொடுத்துவிட்டு, மொத்த இலாபத்தில் அவர்களுக்குப் பங்கீடு தந்துவிட்டு, பிறகு வருமான வரி என்று கம்பெனி சட்டத்தை நீங்கள் மாற்றி அமைக்க வேண்டுமென்று கேட்டோம். பதில் ஜூலை 74-இல் வந்தது அதில், ‘மத்திய அரசு, இந்தத் திட்டத்தை மிகுந்த ஆர்வத்தோடு கவனித்து வருகிறகிறது; விரைவில் முடிவெடுக்கப்படும் என்று வந்ததே தவிர, இதுவரையில் இந்தச் திட்டத்திற்கு, தொழிலாளர்களுக்குச் செய்யப்படும் நல்ல காரியத்திற்கு நேரில் பல முறை எடுத்துச் சொல்லியும். இந்தச் சட்டத்தை எழுந்து நடமாடச் செய்யும் திருத்தத்தை அவர்கள் செய்வதற்கு இன்றைக்கும் தயங்கிக் கொண்டிருக் கிறார்கள்.
மால்கோ நிறுவனத்தைத் தேசியமயமாக்க வேண்டும் என்று 1973-74 வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தோம். அந்த நகல் மத்திய அரசுக்கு 27-2-1973-இல் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து உள்துறைக்கு 28-2-1973 இல் கடிதம் எழுதினோம். பிறகு 2-3-1973-இல் அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக பதில் வந்தது. அதற்குக் பிறகு மறைந்த திரு. மோகன் குமாரமங்கலம் அவர்களிடமும் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரதமருக்கு மறுபடியும் நினைவூட்டி, 30-7-73-இல் கடிதம் எழுதினோம். இதுவரையில் அந்த நிறுவனத்தை எடுத்துக் கொள்வதற்காக அனுப்பப்பட்ட ஈட்ட நகலுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு எந்தப் பதிலும் இல்லை.
தமிழ்நாடு இந்து மத அறசுகட்டளைகள் திருந்தச் சட்டம் – அதாவது அர்ச்சகர் சட்டம் – அதிலே ஒரு குறிப்பிட்ட சாதியார் தான் ஆண்டவனைப் பூஜிக்கத் தகுந்தவர்கள் என்று இல்லாமல், அர்ச்சிக்க தகுதியுடைய தேர்வு பெற்ற அனைவரும் எந்தச் சாதியாக இருந்தாலும் அவர்கள் ஆண்டவனை அர்ச்சிக்கலாம் என்கிற கருத்து அமைந்த அந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குச் சிலர் சென்றார்கள். அகிலே இந்தச் சட்டம் இன்றைக்கு முடங்கிக்கிடக்கிறது. அந்த முடக்கத்தை நீக்கி இந்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர ஏற்ற வகையில் அரிசனங்களிடம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிற மத்திய அரசு நாம் பல நேரங்களில் எழுதிக் கேட்டு இந்தச் சட்டம் என்ன என்பதையும் விளக்கமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லியும் சமுதாயத்திலே அரிசன மக்களுக்கு, உயர்ந்த மக்களால் கொடுமைப்படுத்தப்படுகிற மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற இந்த சமதர்மக் கொள்கைக்கும் இன்னும் அரசியல் சட்டம் திருத்தப்படவில்லை.
சத்தியவாணிமுத்து: அரிசன மக்கள் மாத்திரம்தான் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற நிலையா? அல்லது எல்லா மக்களும் என்று இருக்கிறதா?
தங்கமணி : நம்முடைய சபையிலேயே இது சம்பந்தமாக ஏகோபித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நாம் அனுப்பியிருக்கிறோம்.
முதல்வர் : கே. டி. கே. அவர்களுக்கு நன்றி.
இப்படிப்பட்ட பல்வேறு குறைபாடுகள் ஒரு மாதில அரசின் சார்பில் எடுத்துச் சொல்லப்படுகின்ற பல்வேறு முறையீடுகள், மத்திய அரசில் தேங்கிக் கிடக்கின்றன என்கிற மன வேக்காடு நமக்கு மாத்திரமல்ல, மராட்டியத்தின் முன்னாள் முதல்வர் திரு. நாயக் அவர்களுக்கே ஏற்பட்டது. அந்தக் காரணத்தால்தான் வி.பி. நாயக் அவர்களும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிப்ரவரித் திங்கள் 11-ஆம் நாள் 1975-ஆம் ஆண்டு, பம்பாயில் மராட்டிய முதல்வரின் இல்லமான ‘வார்ஷா’வில் கூடி. என்னென்ன காரியங்கள் மராட்டிய மாநிலம் கேட்டு, மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டோ, அல்லது புறக்கணிக்கப்பட்டோ, அல்லது அலட்சியப்படுத்தப்பட்டோ கிடக்கின்றன. எவ்வளவு கோரிக்கைகள் இன்றைக்கு முடங்கிக் கிடக்கின்றன என்கிற ஒரு புத்தகத்தையே தயார் செய்து, அதை டெல்லிக்கு அனுப்பிவைத்தார்கள். இது நடந்தது 1975. பிப்ரவரி 11-ஆம் நாள்! அனுப்பியவர் முதல்வர் வி.பி. நாயக்: அதே மாதம் 21-ஆம் தேதி அவருக்கு முதல்வர் பதவி போய்விட்டது. 11-ஆம் தேதி அவர் மாநிலத்திற்காக வாதாடினார், 21-ஆம் தேதி முதல்வர் பதவி போய்விட்டது.
நீ ‘வாதாடுகிறாய்; என்ன ஆவாய்?” என்று கேட்கலாம். ஒரே கட்சியினுடைய ஆட்சி மராட்டியத்திலும் மத்திய அரசிலும் இருந்த காரணத்தால் இந்த நிலைமை நாயக் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது என்பதைத் தவிர நான் வேறு எதுவும் இந்த அரசியலில் நுழைய விரும்பவில்லை. “நம்முடைய மாநில அரசு இந்த அதிகாரங்கள வைத்துக் கொண்டு என்ன செய்தது? இன்னும் இவைகளை எல்லாம் கேட்கிறீர்களே, சுயாட்சி, கூடுதல் அதிகாரம் என் றெல்லாம் சொல்கிறீர்களே.” என்றெல்லாம் வாதிக்கப் பட்டது. இந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு, இன்று ஏற்பட்ட வறட்சிக்கு நம்மால முடிந்ததைச் செய்திருக்கி றோம். ஆளுங் கட்சியின் சார்பிலும், தோழமைக் கட்சியின் சார்பிலும் தலைவர்களும். உறுப்பினர்களும் கடந்த எட்டு ஆண்டுக் காலத்தில் கழக அரசு செய்த சாதனைகளை எல்லாம் பட்டியல் போட்டு இந்த மன்றத்திலே எடுத்துக் கூறியிருக் கிறார்கள்.
வறட்சி நிவாரணத்தை யொட்டிக் கூட நாம் பல சலுகைகளை அளித்துள்ளதை இந்த மன்றம் நன்கறியும். தொடர்பாகச் சொல்ல வேண்டுமேயானால், நிலவரி வசூலுக்கு விலக்களித்தோம். விவசாயக் கடனை ஒத்திவைத்து கூட்டுறவு குறுகிய காலக்கடன் செலுத்துவதற்குச் சலுகை அளித்தோம். ஆயில் பம்ப் செட் வாங்க ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கினோம். பரவலாக மாநிலம் முழுவதும் பல்வேறு வறட்சித் துயர் துடைப்புப்பணிகளை மேற்கொண்டுள்ளோம். வறட்சியின் விளைவாக இப்போது சில புதிய அறிவிப்புக்களைச் செய்ய விரும்புகிறேன்.
வறட்சியின் விளைவாக கூட்டுறவுக் கடன்களை வாங்குவதில் உள்ள சங்கடங்களை உணர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிணறுகளை ஆழப்படுத்துவதற்காக ‘தக்காவி’ கடன்கள் தரவேண்டுமென்று என்னிடம் பல முறையீடுகள் வந்திருக்கின்றன. ஆளுங்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களும், தோழமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும், என்னிடம் சொன்னார்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயப் பெருங்குடி மக்கள் இந்தக் கோரிக்கையைத் தெரிவிக்கிறார்கள். இந்த கோரிக்கையின் இன்றியமையாமையை இந்த அரசு உணர்ந்து, கிணறுகளை ஆழப்படுத்த குறைந்தது ரூபாய் ஐநூறு முதல், இரண்டாயிரம் வரை ‘தக்காவி’ கடன் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக, முதற் கட்டமாக ரூபாய் ஐந்து கோடியை அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.
இரண்டாவது அறிவிப்பாக, அகவிலைப்படி குழு அளித்த பரிந்துரையில் இனிமேல் அகவிலைப்படி தரும்போது அரசு ஊழியர்களுக்கு அளிக்கும் அகவிலைப்படியில் 33.80 பங்கை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அளிக்க வேண்டு மென்று பரிந்துரை செய்துள்ளது. ளது. அரசு ஊழியர்களுக்கு நாம் தற்போது இருபது முதல் முப்பது ரூபாய் வரை அகவிலைப்படி உயர்வு வழங்கியிருப்பதை ஒட்டி ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு எட்டு ரூபாய் கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளோம். பொங்கலின்போது அறிவிக்கப்பட்ட ஐந்து ருபாய் அகவிலைப்படி உயர்வுக்குப் பதிலாக இந்த எட்டு ரூபாய் உயர்வு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிந்துக்கொள்கிறேன். ஏற்கனவே அவர்கள் பெற்று வந்த இருபது ரூபாயோடு, இந்த எட்டு ரூபாயும் சேர்த்து இருபத்தெட்டு ரூபாய் அகவிலைப்படியாக அவர்கள் ஓய்வூதியம் பெறுவார்கள் என்பதையும் இதனால் 62,000 பேர்கள் பயன் அடைவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்றாவதாக, 14-1-70-க்கு முன்பு ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர்கள் இருப்பத்தைந்து ரூபாய் அல்லது அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் கால் பகுதி. இவற்றில் எது அதிகமோ அதைத் தற்காலிக ஓய்வூதியமாக. அட் ஹாக் பென்ஷனாக, 141-70 முதல் பெற்று வந்தனர் 1-4-74 முதல் அவர்களுக்கு ரூபாய் பத்து ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் குறைந்த அளவு ஓய்வூதியம் ஐம்பது ரூபாய் என்று இருப்பதைப் போலவே ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர்களுக்கும் 1-4-75 முதல் குறைந்த அளவு ஓய்வூதியமாக ஐம்பது ரூபாய் அளிக்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்து நீலகிரி மாவட்டத்தில் உருளைக் கிழங்கு பயிர்கள் பூச்சியால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் இண்டோ – ஜெர்மன் நிலகிரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது ஆண்டு விவசாயத்திற்கு அவர்கள் ஒரு ஏக்கருக்குக் கட்ட வேண்டிய விண்ணப்பத் தொகை ரூபாய் நூறையும், ‘தசனிதி’என்ற பூச்சிக் கொல்லி மருந்துக் காக கட்ட வேண்டிய தொகையையும், வறட்சியின் காரணமாக செலுத்த முடியாத நிலைமை இருப்பதைத் தெரிவித்தார்கள். நான்காவது, ஐந்தாவது ஆண்டுகளில் உருளைக்கிழங்கு பயிர் செய்யப்பட்டுள்ள நிலத்தின் மொத்தப் பரப்பளவு 3,417 ஏக்கர். இதற்குக் கட்டவேண்டிய விண்ணப்பக் கட்டணத்தையும், பூச்சிக் கொல்லி மருந்துக் கட்டணத்தையும். ஆக பத்து இலட்சம் ரூபாய் ஓராண்டுக் காலத்திற்கு ஒத்திவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் இராணுவத்தினருக்கு வேலைவாய்ப்பு அளித்திடவும். உணவு வழங்கும் நிறுவனத்திற்குப் பயன்படும் வகையிலும், அரசின் பல்வேறு துறைகள் பொருள் போக்கு வரத்திற்குத் தனியார் துறையினை நம்பிடும் போக்கைப் படிப்படியாகக் குறைக்கவும் தமிழக அரசு “தமிழ்நாடு பொருள் போக்குவரத்துக் கழகம் (Tamil Nadu Goods Transport Corporation) ஒன்றை நிறுவத் தீர்மானித்துள்ளது. இதனுடைய முதலீடு 120 இலட்சம் ரூபாய் ஆகும். இதில் நாற்பது இலட்ச ரூபாய் ஆரம்ப முதலாகவும், ரூபாய் எண்பது இலட்சம் வங்கிகள் மூலம் பெறும் கடனாகவும் அமையும். இந்த நிறுவனம் 100 லாரிகளோடு ஆரம்பித்து, படிப்படியாக தன்னுடைய எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ளும். ஆரம் பத்தில் சுமார் 600 பேரும். இரண்டு, மூன்றாண்டுகளில் சுமார் இரண்டாயிரம் பேரும் முன்னாள் இராணுவத்தினர் இதன் மூலம் பயன் பெறுவார்கள். “முதலீட்டில் பங்கு, நிர்வாகத் தில் பொறுப்பு” என்ற இந்த அரசின் கொள்கைக்கு ஏற்ப. முதலீட்டில் இருபத்திநான்கு சதவிகிதம் தொழிலாளர்கள் பங்காக அமையும், நிர்வாகக் குழுவில் இரு தொழிலாளர்கள் இடம் பெறுவார்கள். இதன் தலைமையகம் சென்னையிலே அமையும். இத் திட்டம் மேலும் வளர இந்திய அரசின் முன்னாள் இராணுவ மறுவாழ்வுத்துறை நிதி உதவியை இதுவரையில் வழங்க முன்வரவில்லை என்றாலும், இனிமேலாவது முன்வந்து உதவி வழங்கிடுவார்கள் என்ற என் நம்பிக்கையைத் தெரிவித்து, இந்திட்டத்தை இங்கே மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
வடிவேலு: உத்தரப் பிரதேசத்தில் அரிசனங்களுக்குள்ள கடன்களை எல்லாம் அரசு ரத்துச் செய்திருப்பதைப் போல இங்கே செய்யப்படுமா?
முதல்வர்: அவைகளைப் பற்றி எல்லாம் நிதி ஆதாரத்திற் கேற்ப பரிசீலிக்க வேண்டும். சொல்லிக் கொண்டே வரும் போது அதைச் செய்வீர்களா. இதைச் செய்வீர்களா என்று கேட்டுக் கொண்டிருந்தால் பட்ஜெட் உரைக்குப் பதிலாக இது அமையாமல் போய் விடும்.
“அதிகாரங்களை வைத்துக் கொண்டு என்ன சாதித்து விட்டீர்கள்? பிறகேன் கூடுதல் அதிகாரம், மாநில சுயாட்சி கேட்கிறீர்கள்?'” என்றெல்லாம் இங்கே கேட்கப்பட்டது. எட்மண்ட் அவர்கள் இன்று மிகத் தெளிவாக மாநில சுயாட்சி என்றால் கூடுதல் அதிகாரம், கூடுதல் அதிகாரம் என்றால் மாநில சுயாட்சி’ என்று கூறி விட்டார்.
எட்மண்ட் : நான் அப்படிச் சொல்லவில்லை. உங்களுக்கு மாநில சுயாட்சி என்றால் தன்னாட்சி: அ.தி.மு.கவைப் பொறுத்த வரையில் மாநில சுயாட்சி என்றால் அது கூடுதல் அதிகாரம்.
முதல்வர் : அதை நான் ஒத்துக் கொள்கிறேன். நான் வேறு ஒன்றும் சொல்லவில்லை.
எட்மண்ட் : ஏற்கனவே என்னுடைய வாதத்தில் மாதில சுயாட்சி என்ற வார்த்தையை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறேன். கூடுதல் அதிகாரங்களைத் தான் நாங்கள் கேட்கிறோம்.
முதல்வர் : கே.டி.கே. அவர்கள் பாரம்பரியம் பற்றி எல்லாம் பேசி, சிங்காரவேலுவை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்று சொன்னார், “யார் யாரைப் பற்றியெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள்; சிங்காரவேலர், சக்கரைச் செட்டியார் இவர்களைப்பற்றி எல்லாம் பேசவில்லை” என்று குறிப்பிட்டு பெரியாரோடு நிறுத்தினார். அண்ணாவை அந்த நேரத்தில் அவர் மறந்த காரணத்தால் சொல்லாமல் இருக்கலாம். அதனால் அவர் மனதில் அண்ணா இல்லை என்று நான் கருதமாட்டேன். சிங்காரவேலுவை யாருக்குத் தெரியும், என்.வி.என்.க்குத் தான் தெரியும் என்றார். உடனே அரங்கண்ணல் எல்லோருக்கும் தெரியும் என்றார்.
ஒரு புத்தகம், “மனிதருள் மாமேரு” லெனினைப் பற்றி எல்.லி. மித்ரோகின் என்பவர் எழுதிய புத்தகம்; அதிலே அவர் குறிப்பிடுகிறார் : “மதம் பற்றி லெனின்” என்ற தலைப்பில் 1933-இல் அவரது மேற்பார்வையில் ஒரு நூல் வெளிவந்தது. அரியதொரு புத்தகமான இதனைக் கண்டுபிடிப்பது எளிதாயிருக்கவில்லை. ராமசாமி நாயக்கரிடமோ, முருகேசனிடமோ இந்த நூல் இல்லை “குத்தூசி” என்ற தமிழ் வாரப்பத்திரிகையின் ஆசிரியரும். ஒரு பெரும் புத்தக விரும்பியும் அரிய நூல்களைச் சேகரிப்பவருமான திரு.எஸ். குருசாமியை அணுகுமாறு அவர்கள் எனக்கு ஆலோசனை கூறினர். சென்னை நகருக்கு சற்று வெளியேயுள்ள ஒரு சிறிய வீட்டிற்கு நாங்கள் சென்றோம். நுழைவாயிலில்” குருசாமியும், குமாரி ருஷ்யாவும் இங்கே வசிக்கின்றனர்” என்ற அறிவிப்புப் பலகையை நாங்கள் கண்டோம். திரு. குருசாமி எங்களை அன்புடன் வரவேற்று அவரது குருசாமி ருஷ்யாவை எங்களுக்கு அறிமுகம் செய்தார். ”நானும் மறைந்த எனது மனைவியும் அவர் ஒரு கம்யூனிஸ்ட் – சேர்ந்து எங்கள் மகளுக்கு ‘ருஷ்யா’ என்று பெயரிட்டோம். இப்போது, அவள் பெரியவளாகி டாக்டராகியுள்ளாள். சுயமரியாதை இயக்கத்தில் பங்கு கொண்டவன். என்ற முறையில் நான் 200 குழந்தைகளுக்கு லெனின் என்று பெயர் குட்டியிருக்கிறேன். அவர்களில் பலரும் அதன் விளைவாகக் கஷ்டப்பட வேண்டியிருந்தது” என்று.
தங்கமணி : எங்களுடைய கம்யூனிஸ்ட் கட்சி முதல் மாநாடு கான்பூரில் 1925-இல் நடைபெற்றது. அதற்குத் தலைமை தாங்கியவர் சிங்காரவேலர் என்ற வகையில்தான் நான் அதைக் குறிப்பிட்டேன்.
முதல்வர் : உங்களுக்குத் தொடர்பு இல்லாமல் போய்விட்டது என்கிற கருத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். அந்தப் புத்தகத்தைத் தேடவே குருசாமி வீட்டிற்குத்தான் வந்தார்கள். அதற்குப் பிறகு, விடுதலை ஆசிரியர் வீரமணி தனது பத்திரிகையின் வாசகர்கள் யாரிடமேனும் அந்நூலின் பிரதி இருக்குமா எனக் கேட்டு பத்திரிகையில் ஒரு கோரிக்கை விடுத்ததின் மூலம், அந்த நூவை ஒருவர் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார் என்று அந்த ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
நான் இதைச் சொல்வதற்குக் காரணம் சிங்காரவேலருக்கும். எங்களுக்கும் உள்ள தொடர்பு இன்றளவும் நீடித்துக்கொண்டுதான் போகிறது என்பதற்காகத்தான். இந்த ஆசிரியரே, குருசாமி 200 பேருக்கு லெனின் என்று பெயரிட்டதைக் கூட குறிப்பிட்டிருக்கிறார்.
நண்பர் சுப்பு பேசும்போது கூட கம்யூனிசம் என்பதில் எப்போதும் மாஜியாக இருக்க முடியாது. எல்லோரும் கம்யூனிஸ்டுகள் தான், அந்தக் கொள்கையை ஒத்துக் கொண்டால் என்று சொன்னார். மணலியும் அதைத்தான் குறிப்பிட்டார். குருசாமி இருநூறு பேர்களுக்கு லெனின் என்று பெயரிட்டார். நான் என்னுடைய மகனுக்கு ஸ்டாலின் என்று பெயரிட்டேன். இப்போது கம்யூனிஸ்ட் கட்சி ஸ்டாலினை எந்த அளவிற்கு அணுகி வருகிறது என்பது எனக்குத் தெரியாது. ஸ்டாலின் இறந்த நேரத்தில் பிறந்த பிள்ளைக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தேன். ஒரு பிள்ளை முத்து. இன்னொருவன் அழகிரி, இன்னொருவன் ஸ்டாலின், இன்னொருவன் தமிழ்.
இந்த நால்வருக்கும் ஏன் இப்படிப் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கூட ஒருவர் எழுதிக் கேட்டார். அதற்குச் சொன்னேன். “முத்து என்பது வீட்டிற்காக, அழகிரி நாட்டிற்காக, தமிழ் என்பது மொழிக்காக, ஸ்டாலின் என்பது உலகத்திற்காக” என்று பெயர் வைத்திருக்கிறேன் என்று பதில் எழுதினேன்.
லெனின் என்று பெயர் வைத்துக்கொண்ட காரணத்தால் எப்படிச் சிலர் சங்கடப்பட்டார்களோ அதைப்போல. ஸ்டாலின் என்று பெயர் வைத்த காரணத்தால் என்னுடைய மகனுக்கு ஒரு கிறித்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். “பெயரை மாற்றிக்கொண்டு வா. சேர்ந்துக் கொள்கிறோம்’ என்றார்கள். கல்லூரி வேண்டாம். பெயர் நிலைக்கட்டும். என்று அதற்குச் சொல்லி விட்டேன். ஆகவே இந்தத் தத்துவங்களில் எங்களுக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு என்பதை எடுத்துச் சொல்வதற்காகவும், சிங்காரவேலர் போன்ற பகுத்தறிவுவாதிகளுடைய அந்தக் கோட்பாடுகளை இன்றளவும் கழகத்தில் இருக்கிற நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கவும்தான் இதைச் சொன்னேன்.
வரவு செலவுத் திட்டத்தின் இறுதிப் பகுதியில் மாநில சுயாட்சி பற்றிச் சில பக்கங்கள் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக் கொண்டு, பேசிய அனைவரும் பெரும்பகுதி மாநில சுயாட்சி பற்றிப் பேசினார்கள்.
“ஜெயப்பிரகாஷ் நாராயணனோடு உங்களுக்கு என்ன தொடர்பு”.அவரோடு நீங்கள் சேரலாமா” என்றெல்லாம் கூடக் கேட்கலாம். ஜெயப்பிரகாஷ் நாராயணனோடு இந்திரா காந்தி அம்மையாருக்குத் தகராறு வந்தது இப்போது, பீகார் மாநிலத்தில் ஜெயப்பிரகாஷ் போராட்டம் ஆரம்பித்தது இப்போது; ஆனால், 1972-ஆம் ஆண்டிலேயே ஜெயபிராகஷ் நாராயண் ”பீப்பிள்ஸ் ஆக்ஷன்” என்கிற ஒரு தலைசிறந்த பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலே வினோபா போன்றவர்கள் எல்லாம் கூட எழுதியிருக்கிறார்கள். 1972-லேயே ஜெயப்பிரகாஷ் மோதாதீர்கள்: அழைத்துப் பேசுங்கள் “ஷேக் அப்துல்லாவோடு என்றெல்லாம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் மேலும் குறிப்பிடுகிறார்:
“The only question that may still be considered to be relevant is that of the quantum of autonomy that Jammu and Kashmir should enjoy within the Union Of India, and Jammu and Ladakh regions, in their turn, should enjoy within the constitutional frame- work of that State. But this is not a question in any way peculiar to Jammu and Kashmir. There are several states in this country which have been demanding larger measure of autonomy. There is, for instance, the Rajamannar nnar Committee’s report in regard to Tamil Nadu. But at the same time it must be recalled with pride the ringing words of Chief Minister. Mr. Karunanidhi which he is recently reported to have spoken at a public meeting at Thanjavur: “The demand for greater autonomy to the states”, he declared, was never meant to divide the country but only to promote the welfare of the people. The Prime Minister, Mrs. Indira Gandhi, herself could examine the demand for more powers to the states for advancing the people’s interest without in any way affecting unity and integrity of the country. There is enough flexibility in our Constitution and our Central and State Leaders have been wise enough to appreciate the limits within which the demand for autonomy may be pressed. I myself have been a consistent advocate of a much larger measure of auto- nomy to the states in view of the vastness of our population and the diversity of our problems.
ஜெயப்பிரகாஷுக்கும் எங்களுக்கும் எப்படிப்பட்ட தொடர்பு ஏற்பட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன காரணம் உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமென்று கருதுகிறீர்கள்? இந்தியாவிலே இருக்கிற எல்லா மாநிலங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன; அவைகளைப் பேசித் தீர்க்கவேண்டும்; விவாத மேடைக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஜெயபிரகாஷ் 1972- ஆம் ஆண்டே திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்து வைத்த மாநில சுயாட்சிக் கோரிக்கையில் பிரிவினைவாதம் கிடையாது. இந்திய ஒற்றுமைக்கு எந்தவிதமான பங்கமும் கிடையாது; அதை அந்தக் கட்சியின் தலைவர் தஞ்சைப் பொதுக் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்” என்று குறிப்பிட்டு, “நீங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார் ஆகுங்கள்” என்று ஜெயபிரகாஷ் கேட்டிருக்கிறார். 1972-ல் அவர் சொன்னதில் ஒன்றை இப்போது கேட்டிருக்கிறார்கள். இதை பிறகு கேட்பார்கள் என்று நாம் எதிர்பார்ப்போம்: ஷேக்அப்துல்லாவோடு படைகொண்டு மோதாமல், செழியன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதைப் போல, பனிப் பாறைகளில் கொண்டு போய் அவரை சிறை வைக்காமல், 13 ஆண்டுக் காலம் சிறையில் பூட்டாமல், பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்த்துக் கொண்டிருந்தால் காஷ்மீர் பிரச்சினை எப்போதோ முடிவடைந்திருக்கும். அதைப் போலவேதான் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை பாரதத்தாய் என்று மகிழ்ச்சியோடு பேசுகிறோம். ஆனால் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை, சுயாட்சித் தன்மையை வழங்கவேண்டு மென்று கேட்டால், “காஷ்மீர் தனி” என்று சொல்லுகிறார்கள். கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை என்கிற அந்தத் தத்துவம் இதற்கு மட்டும் அடிபட்டுப் போவானேன்? என்று நாம் இன்றைக்குக் கேட்கிறோமே அல்லாமல், வேறல்ல.
பல அறிஞர்கள் மாநில சுயாட்சித் தத்துவத்தை தேவை என்று எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சுப்பாராவ் அவர்கள் சென்னையில் 20-6-74 அன்று பேசுகையில் ‘மாநிலத்தில் வாழும் மக்கள் நல்வாழ்விற்கு அத்தியாவசியமான எத்தகைய அதிகாரங்கள் மத்திய அரசைவிட மாநில அரசு செம்மையாக நிறைவேற்ற முடியுமோ, அத்தகைய அதிகாரங்களை மத்திய அரசின் தலையீடும், குறுக்கீடுமின்றி பிரயோகிக்கும் மாநில அரசுக்குள்ள அரசுரிமை “சவரைன் பவர்” (Soveriegn Power) என்பதற்குப் பெயர் தான் சுயாட்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜார்ஜ் அவர்கள் 10-5-74-இல் “பாதுகாப்பு, தகவல் ஒலிபரப்பு, வெளி நாட்டு விவகாரங்கள் ஆகிய அதிகாரங்களை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டு மீதமுள்ள எல்லா அதிகாரங்களையும் மாநில அரசுகளுக்கு வழங்க முன்வர வேண்டும் என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
பழைய காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் வீரேந்திர படீல் சென்னையில் 9-6-74-இல் கலைவாணர் அரங்கத்தில் பேசும்போது “மாநில சுயாட்சி என்னும் புனிதப் போரில் தமிழக முதல்வர் தமிழக முதல்வர் நிச்சயம் வெற்றி வாகை சூடுவார். மாநில சுயாட்சிக்காக திரு. கருணாநிதி புனித மிக்குப் போரைத் தொடர்ந்திருக்கிருர். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தேவை. பல்வேறு துறைகளில் அதிக சுயாட்சி தேவை. அப்போது தான் தவறுகள் இழைக்கும் மத்திய அரசின் பிடியில் சிக்காமல் மாநிலங்கள் பாதுகாப்போடு இருக்க முடியும். இந்த விஷயத்தில் திரு. கருணாநிதி அவர்களின் வாதத்தை முழுவதும் ஒப்புக் கொள்கிறேன். இந்தப் புனிதப் போரில் அவர் வெற்றி பெறுவாரென்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னும் பல பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சத்தியவாணிமுத்து அவர்கள் மன்னார்குடி மாநாட்டில் பேசும்போது “மாநில சுயாட்சிக் கோரிக்கையை மிகச் சாதாரணமாகக் கருதுகிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் இதற்காகப் போராடியதற்காக இந்தக் கோரிக்கையில்யில் வெற்றி பெற்றதற்காக நாடு நம்மைப் பாராட்டத்தான் போகிறது. நேரு அவர்களும், அம்பேத்கார் அவர்களும், “ஸ்டேட் அட்டானமி” என்பதை வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது மனப்பூர்வமாக அதை வரவேற்றவர்கள் இப்போது அதே மாநில சுயாட்சிக் கோரிக்கையை பிரிவினைவாதம் என்பது வேடிக்கையாக இருக்கிறது” என்று முழங்கியிருக்கிறார்கள்.
இப்போது மாநில சுயாட்சி பெற்றிருக்கிறதே. அந்த காஷ்மீருக்குச் சென்ற என்னுடைய நண்பர். எம்.ஜி.ஆர். அங்கே “திராவிட முன்னேற்றக் கழகம் கேட்கும் மாநில சுயாட்சிக் கோரிக்கை பிரிவினை உணர்ச்சியை அடிப்படை யாகக் கொண்டதல்ல” என்று – எட்மண்ட் அவர்களே அங்கே இவ்வாறு கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது தி.மு.கழகம் கோரி வரும் சுயாட்சிக் கோரிக்கை பிரிவினை உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதல்ல; மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்ற கோரிக்கைக்கு தி.மு.கழகம் பொதுமக்களின் ஆதரவைப் பெற்று இருக்கிறது. இந்தியாவிலிருந்து தமிழகம் பிரிந்துசெல்ல வேண்டும் என்று தி.மு.கழகம் கூறவிலை, மாநிலங்களின் கையில் கூடுதல் அதிகாரம் இருக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது. இது 18-5 -12-இல் எம். ஜி. ஆர். நிருபர்களுக்குத் தந்த பேட்டியாகும்.
“இன்றுள்ள அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க வேண்டும். மாநில சுயாட்சி பற்றிய கலைஞரின் கருத்தை ஏற்காவிட்டால் இதே கோரிக்கை எல்லா மாநிலங்களிலும் பரவி, இந்தியா சின்னாபின்னமாகும். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பெருந்துணையாக விளங்கும் மாநில சுயாட்சிக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் இது நீலகிரி தி.மு.க. மாநாட்டில் கோவை செழியனுடைய முழக்கம்.
1942-ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.
“A Resolution of the September Plenary Meeting of the Central Committee, based on a report by G. Adhikari, definitevely outlined the Party’s new orientation. Its critical passage was as follows:
Every section of the Indian people which has a contiguous territory as its homeland, common historical tradition, common language, culture, psychological make-up, and common economic life would be recognized as a distinct nationality with the right to exist as an autonomous state within the free Indian Union or federa- tion and will have the right to secede from it if it may so desire……. Thus free India of tomorrow would be a federation or union of autonomous states of the various nationalities such as the Pathans, Western Punjabis, Sikhs, Sindhis, Hindustanis, Rajasthanis, Guja- ratis, Bengalis, Assamese, Beharies, Oriyas, Andhras, Tamils. Karnatiks, Maharashtrians, Keralas, etc.”
இந்த அளவிற்கு 1942-ஆம் ஆண்டிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாட்டிற்குத் தேலையான இந்தத் தீர்மானத்தில், இந்தத் தேசிய இனங்கள் எல்லாம் தனித் தனிக் கலாச்சாரங்கள், வரலாற்றுத் தொடர்புகள், கொண்டவை: ஆகவே இவைகள் எல்லாம் இந்திய யூனியனில் சுயாட்சி பெற்ற தன்மையோடு விளங்கவேண்டும்” என்ற அடிப்படையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதே 1942-ஆம் ஆண்டு “வெள்ளையனே வெளியேறு” – என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட. ஏ.ஐ.சி.சி. மாநாட்டில் போடப்பட்ட ஒரு தீர்மானம் :-
“The Constitution according to the Congress view should be a federal one, with the largest measure of Autonomy for the federat- ing units with the residuary powers vesting, in these units”- A.I.C.C. 8th August Resolution 1942.
இது இந்திய நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி, வெள்ளையனே வெளியேறு என்று சொன்ன நேரத்தில் தந்த உறுதிமொழி. இதைத்தான் இன்றைக்கு தி.மு. கழகம் மாநில சுயாட்சி – கூடுதல் அதிகாரம் மத்தியிலே கூட்டாட்சி என்கிற வகையில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
”நாம் இதற்காகப் போராடத் தேவையா? அரசியல் சட்டம் திருத்தப்பட்டால் போதாதா?” என்ற வாதங்கள் வைக்கப்பட்டது. ஷேக் அப்துல்லா போல் சுருணநிதி சிறைக்குச் செல்வதாகச் சொன்னாரே, செல்ல வேண்டுமா? என்று ஆளுங் காங்கிரஸ் சுட்சியின் சார்பாக அனுதாபத்தோடு கேட்கப்பட்டது. சொல்லாமலேயே மாநில சுயாட்சி தருகிறோம் என்று ஒருவேளை அவர்கள் கூறுகிறார்கள் என்று நான் கருதுகிறேன். அதற்கு முன்கூட்டியே அச்சாரமாக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் மணலி அவர்கள் பேசுகையில், போராட்டம் இல்லாமல் இலட்சியங்களில் வெற்றி பெற முடியாது என்ற உணர்வை இங்கே எடுத்துக் காட்டினார்.
நான் ஷேக் அப்துல்லாவை என் இல்லத்தில் சந்தித்த நேரத்திலும், ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களை டெல்லியில் சந்தித்த நேரத்திலும் பெற்ற உணர்வுகள் அவைகள் தான். என்ன உரையாடினேன் என்பது எல்லாம் வேறு விவகாரம். ஆனால் தான் பெற்ற உணர்வுகள் “தியாகங்கள் செய்வதற்கு யார் தயாராக இருந்தாலும், அவர்கள் இலட்சியங்களில் நிச்சயமாக வெற்றிபெற முடியும் என்பதுதான்.
”அப்படியானால் பதவியை விட்டு வெளியே வாருங்களேன்” என்று அழைக்கிறார்கள். அழைப்பதற்கான அவசரம் என்ன வென்றால் யார் யார் என்னென்ன மந்திரிகள் என்று இப்போதே நிர்ணயித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்: ஆகவே உடனே வந்து உட்கார்ந்துவிடலாம் என்று பார்க்கிறார்கள். பதவியை விட்டு கருணாநிதியோ, நாவலரோ, பேராசிரியரோ, மற்றவர்களோ போய்விட்டால், மிச்சம் இருக்கிற 160 பேரும் இங்கே உட்கார்ந்திருப்பார்கள் : அவர்களை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தலாம் என்று யாராவது கருதினால். அது பகல் கனவு, பதவியை விட்டு போராட்டத்தில் தி.மு. கழகம் இறங்குகிறது என்றால் அத்தனை பேரும் இறங்குகிறார்கள் என்றுதான் அர்த்தம். அதற் குரியகாலம் வரத்தான் போகிறது. அந்த நேரத்தில், அந்தப் போராட்ட நினைவோடு, உணர்வோடு. மாநில சுயாட்சி பெறுவதற்கு, அண்ணா வழியில் நாங்கள் அயராது பாடுபடுவோம்; பாடுபடுவோம் என்று என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலவையில்
பேரவையிலும், மேலவையிலும் பல நாட்களாக நீண்ட விவாதத்திற்கு ஆளாகி வருகிற மாநில சுயாட்சி பற்றி சில கருத்துக்களை கூற வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். இப்போது இருக்கிற பிரச்சினையே, மாநில சுயாட்சியை யாரிடம் கொடுப்பது என்பதுதான்; இந்திராகாந்தி இதைச் சொன்னால் நான் ஏற்றுக் கொள்கிறேன். ”உன்னிடம் கொடுக்கமாட்டேன்; நாவலர் நெடுஞ்செழியனை அல்லது காமராசரை அல்லது ராசாராம் நாயுடுவை, அல்லது சிலம்பு செல்வர் மாபொ.சி. அவர்களை உட்காரவை; அவர்களிடம் தருகிறேன்” என்று இந்திராகாந்தி சொல்லி, அப்படி மாநிலசுயாட்சி வருவதாக இருந்தால், இந்த நொடியிலேயே நான் இந்தப் பதவியிலிருந்து போகத் தயாராக இருக்கிறேன். என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு நாம் இங்கேயிருப்பதால் மாநில சுயாட்சியைத் தர வேண்டாம் என்று இந்திரா காந்தி கருதி, இந்தக் கழக ஆட்சி போன பிறகு, நானோ, நாவலரோ. பேராசிரியரோ அகன்ற பிறகு, வருகிறவர்களிடம் கொடுப்போம் என்று வைத்துக் கொள்வோம். அப்படி 1976-ல் வராது என்றாலும், கற்பனை செய்து கொண்டு, அப்படி 1976-ல் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படிக் கொடுத்து, புதிதாக வருகிறவர்கள் மாநில சுயாட்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது-மறுபடியும் 1981-ல் ஒரு தேர்தல் வந்து, அந்தத் தேர்தலிலே நாங்கள் வெற்றி பெற்று வந்துவிட்டால், மறுபடியும் மாநில சுயாட்சியைத் திரும்பப் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்களா? எவ்வளவு வேடிகையான – கிண்டலான – கேலிக்குரிய வாதங்கள் எல்லாம் இன்றைக்கு நாட்டிலே நடத்தப்படுகின்றன என்பதை எண்ணிப் பார்க்கும்போது, எனக்கு உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது. ஒரு கொள்கையின் அடிப்படையில் நின்று நாம் இதைக் கேட்கிறோம்.
ஜெயப்பிரகாஷ் நாராயண் பற்றி எல்லாம் பேசப்பட்டது. அவரிடம் தி.மு. கழகத்திற்கு என்ன உறவு? எப்படி அந்தப் பிணைப்பு ஏற்பட்டது? ஜெயப்பிரகாஷ் நாராயண் வட பகுதியில் மிகச் சிறந்த தலைவர். இந்தியா முழுமைக்கும் புகழொளி படைத்தவர். அப்படிப்பட்ட பெரிய தலைவர்களிடத்தில் என்றைக்குமே மதிப்பும் மரியாதையும் வைக்கக் கற்றுக் கொண்டிருக்கிற இயக்கம்தான் தி.மு. கழகம். அதைத்தான் பெரியார் அவர்களிடமும், அண்ணா அவர்களிடமும் பாடமாகக் கற்றிருக்கிறோம். அந்தவகையில்தான் அவரை மதிக்கிறோம். உத்தரப்பிரதேசத்தில் பயங்கரக் கொள்ளைக்காரர்களை எல்லாம் துப்பாக்கிக்குப் பயப்படாமல், ராணுவத்திற்குப் பயப்படாமல் இருந்த அவர்களை, தன்னுடைய இதயத்தால் மாற்றி அமைத்த பெருங்குணசீலர் அவர்.
இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் சாதாரணமானதல்ல.
அவர் ஷேக் அப்துல்லாவிற்கும். இந்திராகாந்திக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்பட வேண்டுமென்று 1972 ஆம் ஆண்டே “பீப்பிள்ஸ் ஆக்ஷன்” என்ற புத்தகத்தில் சுட்டுரையாக எழுதியிருக்கிறார். அதே கட்டுரையில் நம்முடைய மாநில சுயாட்சி கோரிக்கை என்பது பிரிவினை அல்ல என்ற பொருளில் தொடர்ந்து எழுதியிருக்கிறார். ஜெயப் பிரகாஷ் சொன்ன பிறகு நம்முடைய எதிர்க்கட்சித் தலைவருக்குச் சந்தேகம் வரலாமா?
அந்தச் சந்தேகம் வரத் தேவையில்லை.
இந்திய நாட்டு விடுதலைக்குப் போராடிய சிலம்புச்செல்வர் மாநில சுயாட்சியின் பக்கம் இருக்கிறார் என்றால் இதிலே பிரிவினை எங்கேயிருந்து வந்துவிடும்?
அண்ணா அவர்கள் திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்து, பொதுக் குழுவும் முடிவெடுத்த பிறகு, இன்றைக்கு மாநிலசுயாட்சியை இந்தக் கட்சியிலே இருந்து வெளியேறியவர்களானாலும், எதிர்க்கட்சியில் இருப்பவர்களானாலும், இது ஒரு பிரிவினை வாதம் என்கிற ஒரேயொரு திரையைப் போட்டு மறுக்கிறார்கள் என்றால் அவர்கள் தி.மு. கழகம் சொல்லி நாம் ஏற்றுக் கொள்வதா என்கிற வகையில்தான் இதை எதிர்க்கிறார்களே அல்லாமல் வேறல்ல.
இதிலே அண்ணா சொன்னாரா, இல்லையா, அண்ணா என்ன சொன்னார்? என்கிற வாதங்கள் எல்லாம் எழுந்து, இப்போது அண்ணா சொல்லவில்லை என்று சொன்னவர்கள் எல்லாம் அண்ணா சொன்னார் என்கிற அளவிற்காவது ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா போன்ற ஒரு அறிஞர், ஒரு கருத்தை எடுத்துச் சொல்கிறார் என்றால், அதற்குப் பின்னால் அவரால் வளர்க்கப்பட்டவர்கள் அதற்கு வடிவம் கொடுப்பதுதான் அவரால் நாங்கள் வளர்க்கப்பட்டோம் என்பதற்குச் சரியான சான்றே தவிர, அண்ணா சொன்னதை எதற்கோ, எப்போதோ சொன்னார் என்று உதறி விடுவது, அவரால் வளர்க்கப் பட்டவர்கள் என்பதற்கு அடையாளமல்ல.
ஆகவே, அவர் அன்றைக்குத் தந்த சொற்களை எல்லாம் இன்று வடிவமாக ஆக்கி அந்தக் கொள்கையைத் திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் மத்தியில் எடுத்து வைத்திருக்கிறது. அதைத்தான் அரசின் சார்பிலே நாம் இந்த அவைகளின் சார்பிலே தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்.
அதுகூட இன்னும் தீவிரமாக இருக்கவேண்டும் என்ற கருத்தை சிலம்புச் செல்வர் இங்கே தெரிவித்தார்.
அண்ணா அவர்கள் திராவிட நாடு கொள்கையை விட்டபிறகு, முதலமைச்சராக இருக்கும்போது, ஒருமுறை பேரவையில் பேசும்போது 1967 ஜூன் 27-ம் நாள் ஒன்றைக் குறிப்பிட்டார்கள்.
“சிலர் ரொம்ப ஆராய்ந்து உண்மையைக் கண்டுவிட்டவர்கள் போல பேசுகிறார்கள். முன்னாலே நாங்கள் கேட்டுக்கொண்டு வந்த திராவிடநாட்டைத்தான் இன்றைக்கு மத்திய சர்க்காரோடு போராடி பெற்றுவிட சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அது தவறு.
அண்ணா யாருக்குச் சொல்கிறார் இதை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அண்ணா மேலும் சொல்கிறார்:
“நான் திராவிடநாடு கோரிக்கையை விட்டுவிட்டேன். ஆனால் திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதில் ஒளிவு மறைவு இல்லை அதைச் சொல்லிக்கொள்வதற்கு வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை. திராவிடநாடு என்று தனியாக இருந்தால் நாம் தொழில்வளர்ச்சி பெறமுடியும் என்று சொன்னேம்.
திராவிட நாடு வேண்டுமென்று கேட்டதற்குக் காரணமே இங்கே தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். அதை நாங்கள் விட்டுவிடவில்லை .
அடுத்து மொழி பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக திராவிடமொழி கேட்டோம். மொழி பாதுகாப்புக் கொள்கையை விட்டுவிடவில்லை.
மாநில சர்க்கார் பல அதிகாரங்களைப் பலதுறைகளிலும் பெறவேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை.
பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விடலில்லை. ஆகவே திராவிட நாடு நாங்கள் கேட்டதற்கான காரணங்களில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் அவை நியாயமான காரணங்கள், மனமார்ந்து ஏற்றுக்கொண்ட காரணங்கள். நாங்கள் திராவிட நாட்டை விட்டுவிட்டோம். திராவிடநாடு கிடைத்தால் என்னென்ன பெறுவோமோ. அவை ஒவ்வொன்றையும் இந்திய யூனியனின் உள்ளே இருந்தே பெறலாம். பெறவேண்டும். பெறமுடியும் என்ற நம்பிக்கையிலேதான் இருக்கிறோமே தவிர. திராவிட நாட்டுக்கான காரணங்கள் ஒன்றையும் நாங்கள் விட்டுவிடவில்லை. மாமியார் வீட்டை விட்டுவிட்டான் என்றால் மனைவியை உடன் அழைத்துச் சென்றுவிட்டான், அல்லது வியாழக் கிழமை வா என்று மனைவிக்குச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான் என்பதுதானே தவிர, மனைவியையே விட்டுவிட்டான் என்பது பொருள் அல்ல. நாடு பிளவுபடக்கூடாது என்றார்கள். ஒத்துக்கொண்டோம். தனித்திருந்தால் பெறுகின்ற காரணத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளை உள்ளே இருந்தே பெறலாம் என்றார்கள். அதை நம்புகிறோம். திராவிட நாட்டைக் கைவிட்ட நீங்கள் சேலம் என்றும், தூத்துக்குடி என்றும், பிரதேச மனப்பான்மை காட்டாதீர்கள் என்றால். நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். திராவிட நாட்டைக் கைவிட்ட நீங்கள் இந்தி படித்தால்தான் என்னவென்றால் அதை தாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்.
ஆந்திரப் பண்பாடு, கன்னடப் பண்பாடு, வடவர் பண்பாடு, தமிழர் பண்பாடு என்றெல்லாம் பிரித்துப் பிரித்துப் பேசலாமா என்றால் நாங்கள் அதை ஒத்துக்
கொள்ளமாட்டோம்.
திராவிடநாடு எதற்காக வேண்டுமென்றோமோ, அதற்கான காரணங்கள் ஒன்றையும் விட்டுவிடவில்லை. அப்படியே வைத்திருக்கிறோம். திராவிடநாடு பிரிந்துபோக வேண்டுமென்ற அளவில் நான் சொல்லவில்லை.
இந்த மன்றத்தின் மூலமாகப் பொதுமக்களுக்கும், மத்திய சர்க்காருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். திராவிட நாட்டை விட்டுவிட்டோம் என்றதாலே காரணங்களையும் விட்டோம் என்பது பொருள் அல்ல. விட்டுவிட்டோம் என்பது? அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. மத்திய சர்க்காரோடு போராடவில்லை. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பிரிவுகளிலேயே திருத்தங்கள் வேண்டுமென்பதற்காக வாதாடுகிறேன். அனுபவத்தின் காரணமாக எந்தெந்த வகையில் திருத்தப்பட வேண்டும். எந்தெந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க நாமனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இதைத்தான் அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபிறகு மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். இதற்காகப் போராட வேண்டுமா? போராட்டம் தேவைதானா என்று சக்திமோகன் கூடச்சொன்னார். இதை சாமிநாதன் போன்றவர்கள் சொன்னால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அவர் எதையும் கொஞ்சம் மிதமாகச் சொல்பவர், இதிலே வேடிக்கை என்னவென்றால், சாமிநாதன் ‘உடனே போராடு’ என்று சொல்லி, சக்திமோகன் “அவசரப் படாதே” என்று சொல்வதென்றால் ஆச்சரியமாகும்.
சக்திமோகன் முத்துராமலிங்கத் தேவரால் வளர்க்கப்பட்டவர்; சாமிநாதன் ராஜாஜி அவர்களால் ம.பொ.சி. அவர்களால் வளர்க்கப்பட்டவர்; இவர் திடீரென்று போராடவா என்று அழைந்து, அவர் கொஞ்சம் பொறு என்று சொல்வதுதான் வேடிக்கை.
ஆக, இதிலிருந்து நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன். அதாவது ‘பொறுமையாக இருப்பவர்கள் எல்லாம் போராட வேண்டிய கட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்’ என்பதை உணருகின்ற அளவிற்கு இன்றைக்கு மத்திய சர்க்கார் மாநில சர்க்கார்களை அவமானப்படுத்திக்கொண்டிருக்கிறது.
என்ன அவமானம்? எப்படி அவமானப்படுத்துகிறது? பேரவையில் கூட பேசும்போது என்னுடைய அண்ணன் திருப்பூர் மொய்தீன் “இங்கே கோட்டை வெளியில் முளைத்துக் கிடக்கிற புல்பூண்டுகளைச் செதுக்கக்கூட அனுமதி வாங்க வேண்டிய நிலைமை இருக்கிறது” என்று வேதனையோடு குறிப்பிட்டார். சிலர் “அந்தக் கோட்டை மத்திய சர்க்காருக்குச் சொந்தம். வாடகைக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே அனுமதிவாங்க வேண்டாமா?” என்று கேட்டபோது, நான் ‘வாடகை வீட்டில் வசிப்பதாக இருந்தால் கூட, வீட்டை இடித்துக்கட்டுவதாக இருந்தால்தான் அப்படிப்பட்ட பெரிய மாற்றங்களுக்கு அனுமதி வாங்க வேண்டும்; வீட்டு வாசலில் உள்ள அழுக்கைப் போக்கக்கூட, வீட்டின் உரிமையாளரிடம் கேட்க வேண்டுமா?” என்று கேட்டேன். அதைப்போல இங்கேயிருக்கிற புல் பூண்டுகளைச் செதுக்க அப்போது பாது காப்புத்துறையின் துணை அமைச்சராக இருந்த திரு. கிருஷ்ணா அவர்களை நேரடியாக அழைத்து வந்து, சுற்றிக்காட்டி, செதுக்கலாமா என்று கேட்டு, “கடிதம் எழுது. யோசிக் கிறேன்” என்று சொல்லி பிறகு எழுதி “சரி, செதுக்கு” என்று அனுமதி வந்து, இன்றைக்குத் தூய்மைப்படுத்தப்பட்ட கோட்டைவெளியை நாம் காண்கிறோம் என்றால், இதைவிட ஒரு அவமானம் – இதைவிட ஒரு அடிமைத்தனம் ஒரு மாநில அரசுக்கு இருக்க முடியுமா?
தஞ்சையில் உள்ள கோவிலில், அந்தக் கோவிலைக் கட்டிய ராசராச சோழனுடைய சிலையினை வைக்க வேண்டு மென்று கேட்டோம். தமிழ் உணர்ச்சி படைத்தவர்கள் அனைவரும் கேட்டோம். “உள்ளே வைக்கக்கூடாது. வெளியே வேண்டுமானால் வைத்துக்கொள் என்று கூறிவிட்டார்கள். “கோவிலுக்குள் நுழைகிற இடத்திலாவது வைக்கலாம்” என்று கேட்டோம். ‘முடியாது’ என்று மறுத்துவிட்டார்கள்’ என்ன காரணம்? மக்களை ஏமாற்றுவதற்காகச் சொன்னார்கள்? தொன்மையான இடங்களில் அதனுடைய பழமையைக் கெடுத்துவிடக்கூடாது. புதிய சிலைகளைக் கொண்டுபோய் வைத்தால், அதனுடைய வரலாற்றுத் தொன்மை ஊனமுற்று விடும். ஆகவே வைக்கக்கூடாது என்றார்கள். பிறகு நாம் இந்த விஷயத்திற்குப் போய் ஒரு பெரிய போராட்டத்தை நடத்த வேண்டுமா என்று பலபேரும் கருத்துக்களைத் தெரிவித்த பிறகு, ராசராசன் சிலையை உள்ளே கொண்டுபோய்தான் வைப்போம் என்கிற உறுதியிலே இருந்துகூட நாம் சற்று தளர்ந்து, அவர்கள் சொன்ன இடத்திற்கும் வெளியே ராசராசன் சிலையை வைத்தோம்.
அதற்குப்பிறகு என்ன நடந்திருக்கிறது. இன்றையத் தினம் அந்தக் கோவிலுக்குள் வாராஹி அம்மன் சிலையை வைப்பதற்கு ஒரு புதிய கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். நான் உடனே பத்திரிகையாளர்களிடம், “கட்டக்கூடாது என்றுகூடச் சொல்லவில்லை; இப்படி தொன்மை கெடக்கூடாது என்று சொன்னவர்கள், இன்றைக்கு உள்ளே ஒரு புதிய கோவிலைக் கட்டி அதனுடைய தொன்மையைக் கெடுத்திருக்கிறார்களே. சோழனுடைய சிலையை வைத்தால் என்ன கெட்டுவிடும்என்று கேட்டு, பத்திரிகைக்காரர்களிடம், படத்தையும் கொடுத்தேன்.
உடனே அவசரம் அவசரமாக மத்திய அரசின் தொல்பொருள் துறையைச் சேர்ந்தவர்கள் மறுப்பறிக்கை விட்டு, பெரிய விளம்பரங்கள் எல்லாம் செய்து “இது புதிதாகக் கட்டவில்லை, அது பழைய கோவில்தான்” என்று சொன்னார்கள். நான் உடனே நம்முடைய மாநிலத் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் நாகசாமி அவர்களை நேரில் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள் என்று அனுப்பினேன். 8-3-75-ல் அவர் எனக்கு அனுப்பிய தகவலைப் படிக்கின்றேன்.
“தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி 7.3.75 அன்று தஞ்சை சென்று பெரிய கோவிலில் உள்ள வாராஹி சிற்றாலயத்தைப் பார்வையிட்டேன். கோவில் நிழற் படம் எடுக்கப்பட்டது. பெரிய கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராசாராம் அவர்களையும் கோவில் நிர்வாக அதிகாரி அவர்களையும் கண்டு, வாராஹி ஆலயம் பற்றி செய்திகளைக் கேட்டறிந்தேன். சம்பந்தப்பட்ட கோர்வுகளையும் பார்வையிட்டேன். அதன்படி எனது கீழ்வரும் அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வைக்குச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.
இப்பொழுது புதிதாக எடுக்கப்பட்டுள்ள வாராஹி கோயில் இருக்கும் இடத்தில் முன்னர் ஒரு செங்கற்கவர் இருந்தது. இங்கு சுவாமி சன்னதித் தோப்பு இருந்தது. தோப்பின் கீழ்ப்புறத்தில் இச்சுவர் இருந்தது. இச்சுவரில் ஒரு பிறை போன்ற கோட்டத்தில் உடைந்த வாராஹி சிலை வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது இவ்வாராஹிக்குச் சிறப்பு வழிபாடுகள் ஏதும் இல்லை. பின்னர் தோப்பில் இருந்த மரங்கள் ஏலத்தில் விடப்பட்டு அகற்றப்பட்டன. செங்கற்சுவர் இடிந்திருந்ததால் சுவரும் அகற்றப்பட்டது. வாராஹிசிலை இருந்த இடத்திலேயே சிறியதாக தகரக்கொட்டகை போன்ற சதுரமான ஓர் அமைப்பும், சுற்றி வர ஒரு மேடும் அமைக்கப்பட்டன. அந்தக் கோயில்தான் இப்பொழுதுப் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலைப் புதிய கற்களைப் பயன்படுத்திக் கட்டியுள்ளார்கள். கோயில் அமைப்பிற்குத் தேவையான பகுதிகள் இதில் இடம்பெறவில்லை : 1. வாராஹி உடைந்த இடுப்புக்குக் கீழ்ப்பகுதி இல்லாத சிலை; இது முதலில் செங்கற் சுவரில் இருந்தது; இப்பொழுது கோவில் புதிதாக எடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் முதலில் எந்தக் கோவிலும் இல்லை.
இப்போது கட்டப்பட்டிருக்கும் கோவில் முற்றிலும் புதியது
நான் சொன்ன பிறகு மத்திய தொல்பொருள் கழகத் தின் அதிகாரி “இல்லை. அது பழைய கோவில்” என்று அறிக்கை விடுகிறார். நம்முடைய மாநில அதிகாரி நேரிலே சென்று பார்வையிட்டுவிட்டு, மேலேகண்ட அறிக்கையைத் தருகிறார். நானும் அந்தக் கோவிலுக்குப் பலமுறை போய்இருக்கிறேன். சாமிநாதன்கூட தஞ்சையைச் சேர்ந்தவர்தான். இந்தக் கோபுரத்திற்குப் பக்கத்தில் இப்படி ஒரு கோவில் என்றைக்காவது இருந்ததாக யாராவது பார்த்திருக்க முடியுமா? இல்லை, புதியதாகக் கட்டியிருக்கிறார்கள். 1973-74-ல் கட்டியிருக்கிறார்கள். அதிலே வைத்திருக்கிற சிலை இதுதான். ராசராச சோழன் சிலையை வைக்கக்கூடாதாம். பாராண்ட மன்னன் ராசராச சோழனுடைய சிலைக்கு அங்கே இடம் கிடையாது; ஆனால் ஒரு பன்றிமுக, உடைந்து போன சிலைக்கு அங்கே இடம் இருக்கிறது என்று சொன்னால் ஒரு மாநில அரசு எந்த அளவிற்குத் தாழ்வாக நினைக்கப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
எப்படிப் போராடுவீர்கள் என்று கேட்டால், தி.மு.கழகத்தின் போராட்டம். மாநில சுயாட்சிக்காக எந்த வகையில் இருக்கும் என்று கேட்டால், நாங்கள் பாராளுமன்ற முறைப்படி அமைதியான முறையில் அணுகுவோம். அது சரியான ஆயுதம் இல்லை என்கிற அளவிற்கு மத்திய சர்க்கார் எங்களைத் தள்ளி விடுமானால், அப்போது ராசராச சோழன் சிலையைத் தூக்கிக் கொண்டு தஞ்சாவூர் கோவிலுக்குள்ளே நுழைவோம். மாமல்லபுரத்திலே இருக்கிற மத்திய சர்க்காருடைய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தினர் அதைவிட்டு வெளியேற வேண்டுமென்று சொல்வோம். இன்றைக்கு இடிபாடுகளுக்கிடையே இருக்கிற கங்கை கொண்ட சோழபுரம் இன்னும் பத்தாண்டுக் காலத்திற்குப் பிறகு அது இருந்த இடமே தெரியாமல், வருங்கால சந்ததி நம்மை சபிக்கும்.
“அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்களா! என்று இகழும். ஆகவே கங்கை கொண்ட சோழபுரம், வேலூர்கோட்டை, தஞ்சை ஆலயம், மாமல்லபுரம் இப்படிப்பட்ட இடங்கள் எல்லாம்கூட இன்றைக்கு மத்திய அரசுதான் பரிபாலிக்கும்: சரித்திரச் சிறப்புகளைப் பற்றிக் கவலைப்படாது: மாநில சர்க்கார் எடுத்து நடத்த வேண்டுமென்று கேட்டால், மத்திய அரசு மறுப்பதைவிட இங்கேயிருக்கிற சுக்ராச்சாரியார்கள் (நான் வேறு யாரையும் சொல்வதாகக் கருதக்கூடாது; நல்லது செய்வதைத் தடுப்பவர்களுக்கு அப்படி பெயர்தான்) முன்னே வந்துவிடுகிறார்கள். மாமல்லபுரத்தை ஓராண்டுக் காலத்திற்கு எங்களிடம் கொடுத்துப் பாருங்கள். நாங்கள். அதிலே ஏதாவது தவறாகச் செய்தால், திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள் என்று நாம் மத்திய சர்க்காரைப் பார்த்துக் கேட்டால் இங்கேயிருக்கிற ஒரு பத்திரிகை படம் போடுகிறது. மாமல்லபுரத்திலே இருக்கிற யானை சிலையின் படத்தைப் போட்டு, அதிலே சுருணநிதியின் சிலையை உட்கரை வைத்து, இப்படி மாறிவிடும் மாமல்லபுரம் என்று அந்தப் பத்திரிகை சொல்கிறது.
பாஞ்சாலங்குறிச்சியிலே கட்டபொம்மன் கோட்டை கட்டியிருக்கிறோமோ அங்கே கருணாநிதியின்-நாவலரின் பேராசிரியன் – சிலம்புச் செல்வரின் சிலையா வைத்திருக்கிறோம். அல்லது பூம்புகாரில் யாருடைய சிலையை வைத்திருக்கிறோம்? மாமல்லபுரத்தை எங்களிடம் கொடுத்தால் அதை வைத்துக் காப்பாற்ற மாட்டோமா? அதை இன்னும் உலகப்புகழ் பெறுகின்ற அளவிற்கு ஆக்க மாட்டோமா?
ஆகவே மாநில சுயாட்சி என்றால், மாமல்லபுரம்தான். கங்கைகொண்ட சோழபுரம்தான், தஞ்சை கோவில்தான் என்று கிண்டலுக்கு வேண்டுமானால், யாராவது பயன்படுத்தலாம். இது தமிழர்களுடைய மானப் பிரச்சினை. ஆகவேதான் இதை நான் முதலிலே ஆரம்பிக்கிறேன். மற்ற அதிகாரங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தி.மு. கழகம் மாநில சுயாட்சிக் கொள்கையில் அழுத்தந் திருத்தமாக இருக்கிறது என்பதை எடுத்துக்கூறி, அதற்கு ஆதரவு தெரிவித்துப் பேசியவர்களையும், அந்தக் கருத்துக்கு மேலும் வலவூட்டுகின்ற வகையில் மேலும் பல கருத்துகளை வழங்கியவர்களையும் பாராட்டுகிறேன்.
இந்த நிதிநிலை குறித்து நேற்றைய தினம் உரையாற்றிய நண்பர் சாமினாதன், மாநில அரசின் நிதிநிலை அறிக்கை எந்த வகையிலே அமைகிறது என்பதைப் பற்றிக் குறிப்பிடும் போது ஒன்றைத் தெளிவாகச் சொன்னார். மத்திய அரசினுடைய நிதி உறவுகளைப் பற்றித் தொடாமல், மாநில நிதி உறவுகளைப் பற்றி சொல்ல இயலாது என்று குறிப்பிட்டார். அதற்கான காரணத்தையும் சுட்டிக் காட்டினார். மத்திய அரசின் நிதி. மாநில அரசின் நிதி இரண்டும் கிட்டத்தட்ட பிணைப்புடையது என்பதை நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.
இங்கு வைக்கப்பட்டுள்ள 7576-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வருவாய்க் கணக்கிலே எடுத்துக் கொண்டால் 537.5 கோடி ரூபாயும், மூலதனக் கணக்கு என்று எடுத்துக் கொண்டால் 41.8 கோடி ரூபாயும், நிகரச் செலவாகக் கடன் கணக்கு என்று எடுத்துக்கொண்டால் 42.3 கோடி என்றும் வகை செய்யப்பட்டு, அந்த வகையிலே மொத்தம் 521.6 கோடி ரூபாய் என்ற அளவில் நிற்கின்றது. பல்வேறு நிறுவனங்களின் வாயிலாகச் செலவு செய்யப்பட்டுள்ள வழி வகைகளில் 180 கோடி ரூபாய் சேர்த்து, மொத்தம் 701.6 கோடி ரூபாய் செலவிற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் வாயிலாக வகை செய்யப்படுகிறது. அதாவது 702 கோடி ரூபாய் என்று நாம் வைத்துக் கொள்ளலாம்.
இதில் திட்டச் செலவாக ரூபாய் 170 கோடி என்று நிதிநிலை அறிக்கையிலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். திட் டத்தில் சேராத செலவு 347 கோடி ரூபாய் தி திட்டத்தில் சேராத செலவு என்பதில் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் இணையும், வளர்ச்சிப் பணிகள் அல்லாத சில செலவுகள் — காவல்துறை, நிதி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் 16ம், சட்டப்பேரவை, மேலவை போன்றவைகளாகும். இவைகளுக்கு ஆகிற செலவு 185 கோடி ரூபாய். இதை ஒரு சதவிகிதமாக வைத்துப் பார்த்தால் திட்டச் செலவிற்காக 24 சதவிகிதமும், திட்டத்தில் சேராத வளர்ச்சிப் பணிச் செலவுகளுக்காக 49 சதவிகிதமும், வளர்ச்சிப் பணிகள் அல்லாத செயவுகளுக்காக 27 சதவிகிதமும் நம்முடைய வரவுசெலவுத் திட்டத்திலே அடங்குகின்றன .
இந்த 702 கோடி ரூபாயில் மத்திய அரசு ஏற்கின்ற பொறுப்பு என்ன? மத்திய அரசிடமிருந்து நிதி ஆணைக் குழுவின் பரிந்துரைகளை ஒட்டி, நமக்கு வருகின்ற வரவு இனம் என்று பார்த்தால், வருமான வரி, எக்ஸைஸ் வரி என்றெல்லாம் சொல்லப்படுகிற இந்த வரிகளின் வாயிலாக மாநிலங்களுடைய பங்கு 99 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து நமக்குக் கிடைக்கிறது. மத்திய அரசு வரி விதித்து அதன் காரணமாக எல்லா மாநிலங்களும் வரி திரட்டப்பட்டு, நம்முடைய மாநிலத்திற்குப் பங்காகக் கிடைக்கின்ற தொகைதான் இது.
மாநிலத் திட்டப் பணிகள், மத்திய அரசு ஊக்குவிக்கின்ற திட்டங்கள் என்கின்ற அளவில் மத்திய அரசு தருகின்ற மானியத் தொகை 22 கோடி ரூபாய்தான்.
கடன்களில் எவ்வளவு கிடைக்கிறது என்று பார்த்தால் அதுதான் வேடிக்கை; உதாரணமாக இந்த ஆண்டு நிகரமாக கடன்களின் மூலமாக நமக்குக் கிடைப்பது ஒரு கோடிதான்; மத்திய அரசு கடனாக 25 கோடி 300 கோடி கடனாகத் தருகின்றது என்பது போல கணக்கு வரும். அந்தக் கணக்கிலேயே சென்ற ஆண்டு நாம் தரவேண்டிய கடனைக் கழித்துக் கொண்டு, மிச்சமுள்ளது நிகரக் கடன் என்று வைக்கப்படும். உதாரணமாக இந்த ஆண்டிற்கு 45 கோடி ரூபாய் கடனாகத் தருகிறது என்று வைத்துக் கொண்டால், அதற்காக நாம். மகிழ்ச்சி அடைகின்ற அதே நேரத்தில், அதிலே சென்ற ஆண்டுக் கடனிலே இருந்து 44 கோடி ரூபாயைக் கழித்துக் கொண்டு, மீதமுள்ள ஒரு கோடி ரூபாய்தான் நிகரக் கடன் என்று தெரிகிறது.
மாநிலத்திற்குரிய வரிகளிலே வரவேண்டிய பங்கு 99 கோடி: மாநிலத் திட்டப் பணிகள், மத்திய அரசு ஊக்குவிக்கும் திட்டங்கள் என்கிற வகையில் மானியம் 22 கோடி: நிகரமாக வருகின்ற கடன் ஒரு கோடி – ஆக மொத்தம் 122 கோடி ரூபாய் மத்தியிலே இருந்து நமக்குக் கிடைக்கிறது. அப்படிக் கிடைப்பதிலும் நம்முடைய வரியிலே திரும்பக் கிடைப்பது 99 கோடி போக, மீதி 22 அல்லது 23 கோடி ரூபாய்தான் நமக்கு மத்திய அரசிலே இருந்து கிடைக்கிறது என்கின்ற கணக்கை எடுத்துக் கொள்ளவேண்டும். நான் குறிப்பிட்ட மொத்தச் செலவு 702 கோடி ரூபாயில் 17 சதவிகிதமாகத்தான் அமைகிறது என்பதை எண்ணிப் பார்த்தால் மத்திய அரசின் நிதி உறவுகளோடு மாநில அரசின் நிதி உறவுகள் எந்த அளவிற்குப் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன என்பதை மாத்திரமல்ல : பின்னிப் பிணைந்து கிடக்கின்றன என்று சொன்னால் கூட அதில் மகிழ்ச்சி அடையலாம். சிக்கிச் சீரழிந்து தவிக்கின்றன என்று வேறு வாசகத்தை அதற்கு அமைப்பதுதான் பொருத்தமுடையதாக இருக்கும்.
இதையெல்லாம் மனத்தில் கொண்டுதான்- ஏற்படுகின்ற சங்கடங்களை எல்லாம் நினைத்துத்தான் நிதிநிலை அறிக்கையின் தொடக்கத்தில் நான் மத்திய அரசினுடைய பொருளாதார ஏற்றத்தாழ்வு, பொருளாதாரப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு எடுத்துக் கொள்ளாத முயற்சிகள் – இந்த வேதனையின் நிழல் எல்லாம் நம்முடைய மாநில அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் படிந்திருக்கின்றன என்கிற எண்ணத்தோடு நிதிநிலை அறிக்கையை ஆராய்ந்திட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன்.
அந்தக் காரணத்தால்தான் நமக்கு ஏற்பட்ட பற்றாக்குறை, அந்தப் பற்றாக்குறையை எப்படி நிறைவு செய்வது என்கிறவகையில் எழுந்த பிரச்சினை, அதற்காக நாம் விதித்திருக்கிற வரிகள் என்பவைகளை எல்லாம் இங்கே எடுத்துக் காட்டினார்கள். எதிர்க் கட்சித் தலைவர் பேசுகின்ற நேரத்தில் வரி அதிகம் இல்லை என்கிற அளவிலே அதை அதிகமாகத் தாக்காவிட்டாலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் இந்த வரி விதிப்பு நியாயமற்றது என்கிற வகையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். இந்த வரி விதிப்புகள் சாமான்ய மக்களைத் தொடக்கூடியவை என்கிற சுருத்துக்களும் சொல்லப்பட்டன.
நண்பர் தாமோதரன் பேசுகையில், வாசனைத் திரவியங்களுக்கு வரி போட்டதற்காக பெண்கள் ஆண்டு கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் வாசனைத் திரவியங்களுக்கு மத்திய நிதி அமைச்சரும் மாநில நிதி அமைச்சரும் வரி போட்டுப் பெண்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டார்கள் என்று சொன்னார். இலக்கியப்படி சொல்ல வேண்டுமேயானால், பெண்களுக்கு இயல்பாகவே மணம் உண்டா, இல்லையா என்பதைப் பற்றிச் சிவபெருமானுக்கும் நக்கீரருக்கும் ஒரு சர்ச்சை ஏற்பட்டு, அது பெரிய இலக்கியமாகவே உருவெடுத்திருக்கிறது.
அந்த வகையில் நாம் செயற்கை வாசனையைத் தரவேண்டிய தில்லை என்ற வகையில் அப்படிச் செயற்கை வாசனை தேவைப் படுமேயானால், அதற்கு அதிக விலை கொடுத்து அதைப் பெறட்டும் என்ற வகையிலும்தான் அந்த வரி உயர்த்தப்பட்டிருக்கிறதே அல்லாமல் வேறல்ல.
திட்ட உதவிகள் எந்த அளவிற்கு வகுக்கப்பட்டிருக்கின்றன. இதிலே நம்முடைய மாநிலம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பதற்கான சில குறிப்புகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 1975-76-ஆம் ஆண்டுக்கான பல்வேறு மாநிலங்களுடைய, மத்திய அரசினுடைய திட்ட அளவு எப்படி அமைந்திருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி நான் குறிப்பிட்டதை உறுப்பினர்கள் எடுத்து காட்டினார்கள் சாமினாதன் பேசுகின்ற நேரத்தில் கூட “நான் சென்ற ஆண்டே, ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு அல்லது பொதுவாக திட்டத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்று சொன்னேன்; அதை முதலமைச்சர் பிற்போக்குவாதம் என்று குறிப்பிட்டார். ஆனால், இப்போது ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் எங்கேயிருக்கிறது என்று தெரியவில்லை என்று என்னைக் குத்திக் காட்டுவதைப் போல பேசினார்கள். அப்படிப் பேசுவார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துதான் நான் நிதிநிலை அறிக்கையில், திட்டத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்கிற வாதம் பிற்போக்கு வாதம் என்று கூறிக்கொண்டு, அப்படிப்பட்டவர்களுடைய அணியிலே சேர்ந்து விட்டதைப் போல் மத்தியஅரசு ஐத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, ஆண்டுத் திட்டமாவது ஒழுங்காக நடைபெறுமா என்கிற ஐயப்பாட்டிற்கு வந்திருக்கிறது.
ஆண்டுத் திட்டத்திலே நமக்கு எந்த அடிப்படையிலே திட்டத் தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். திட்டத் தொகை ஒதுக்கீடு, நகர்லாரி திட்ட அளவு என்கிற அளவில் எடுத்துக் கொண்டு, அதாவது ஆண்டுத் திட்டத்திற்கு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட தொகையை அந்தந்த மாநில மக்கள் தொகையால் வகுத்துப் பார்ப்போமேயானால்.
மாநிலம் ஆண்டுத் திட்டத் திற்கு ஒதுக்கீடு (கோடியில்) நபர்வாரி திட்ட அளவு
ஆந்திரம் 157.00 36.36
குஜராத் 172.65 64.66
அரியானா 92.25 98.52
கர்னாடகம் 139.00 47.44
கேரளம் 96.00 42.25
மராட்டியம் .. 350.00 69.58
மத்தியப் பிரதேசம் 215.36 51.77
பஞ்சாப் 169.30 120.96
ராஜஸ்தான் 105.50 41.05
உத்தரப் பிரதேசம் 388.00 43.89
மேற்கு வங்கம் 170.00 38.28
தமிழ் நாடு 142.59 34.69
என்ற அளவிலேதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நமக்கு எவ்வளவு குறைவாக நபர்வாரி திட்ட அளவு இருக்கிறது என்பதைத் திட்டக் குழுவிடம் நாம் பல நேரங்களில் எடுத்துச் சொல்லி வருகிறோம்.
மாநிலங்களுடைய குரலை மத்திய திட்டக்குழுவிலே இருப்பவர்கள் சரிவரப் புரிந்து கொள்கிறார்களா? அல்லது புரிந்து கொண்டும், சிலம்புச் செல்வர் குறிப்பிட்டதைப்போல ஒரு நிதி ஆதிக்கம் அங்கே இருந்து தீர வேண்டும் என்ற அளவில் நடந்து கொள்கிறார்களா-என்ற கேள்விக்குறி எழுகின்ற அளவில்தான் மாநிலங்களுடைய கோரிக்கைகள் எல்லாம் மத்திய திட்டக் குழுவில் ஆகட்டும்-அல்லது மத்திய அரசினுடைய நிர்வாக மண்டலங்களில் ஆகட்டும். கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
நண்பர் தாமோதரன் பேசுகையில், “நம்முடைய நிதியமைச்சர் ஒன்பதாவது வரவு செலவுத் திட்டத்தை, இந்த அவையிலே வைக்கிறார்கள். இந்தியாவிலே ஒரு எதிர்க்கட்சி தொடர்ந்து ஒன்பதாண்டுகள் பரிபாலனம் செய்து
தன்னுடைய நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கிறது. இந்தியாவிலேயே அப்படிப்பட்ட ஒரேயொரு மாநிலம் தமிழ்நாடு தான்” என்று மகிழ்ச்சி பொங்க இங்கே குறிப்பிட்டார். 1967 – இல் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சியினை வாக்காளப் பெருமக்கள் ஏற்படுத்தியபோதிலும் என்ன காரணத்தாலோ தாமோதரன் குறிப்பிட்டதைப் போல். மதிய அரசின் தாக்குதல் காரணமாகவோ. மாநில அளவிலே உள்ள கட்சிகளின் சூழ்ச்சிகளின் காரணமாகவோ பல மாநிலங்களின் எதிர்கட்சி ஓரிரு ஆண்டுகளில் கட்சி ஆட்சிகள் கவிழ்த்துவிட்டன என்றாலும், தமிழ் நாடு ஒன்றில் தொடர்ந்து இரண்டு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்று எட்டாண்டுகளைக் கடந்து ஒன்பதாவது ஆண்டிலே அடியெடுத்து வைத்து ஒரு மாநிலக் கட்சி, எதிர்க்கட்சி – தி.மு. கழகம் ஆண்டு கொண்டிருக்கிற பாங்கினைச் காண்கிறோம்.
இதை தி.மு. கழகத்திற்கு மாத்திரம் பெருமையாக எடுத்துக் கொள்கிறோம் என்று கருதவேண்டாம். தோழமைக் கட்சிகளுடைய நல்ல எண்ணம் பொதிந்த அந்த உறவோடுதான் கழக ஆட்சி நடைபெற்றுக் கொண்டுவருகிறது. இந்த ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நேரத்தில் இந்த அவையில் பேசிய தலைவர்கள் குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை; அதே நேரத்தில் நல்லவைகளைப் பாராட்டவும் தவறவில்லை என்பதை எண்ணுகிற நேரத்தில் நான் அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் இந்த வரவு செலவுத் திட்டத்தில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்ற ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார்.
சமுதாய நலதிட்டம் என்கிற தலைப்பின் கீழ் செலவிட இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 180 இலட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. திருத்த மதிப்பீட்டில் 148 இலட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது; வரும் ஆண்டில் 98 இலட்சம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் அவர் இங்கே சொன்னார். உள்ளூர் மேல் வரி மீது ஈட்டு மானியம் தர 1974 – 75 வரவு செலவுத் திட்டத்தில் ஏழு கோடி ஒதுக்கியதற்குப் பதிலாக 74 – 75 திருத்த மதிப்பீட்டில் 10.46 கோடியாக உயர்த்தியிருக்கிறோம் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு நாம் பணத்தைக் குறைத்துவிட்டோம் என்கிற குற்றச்சாட்டு வராது.
பொதுவாக, சில சில பகுதிகளில் நாம் சற்றுக் குறைவாக கிராமங்களுக்கு ஒதுக்கியிருக்கிறோம் என்றாலும், இந்த ஆண்டு சிறப்பாக வறட்சி நிவாரணப் பணிகள் அனைத்தும் கிராமங்களைச் சுற்றிச் சுற்றித்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நடப்பு நிதியாண்டில் 12 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு ஏறத்தாழ 20 கோடி ரூபாய்க்கு மேலேயும். நாம் வறட்சிப் பணிகளுக்காக கிராமங்களில்செலவிடவிருக்கிறோம். இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கிராமங்களைப் புறக்கணித்துவிட்டோம் என்று கூறுவதற்கு இயலாது.
இந்தக் கழக ஆட்சியைப் பொறுத்தவரையில் கிராமங்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பல காரியங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குடியிருப்பு மனைச்சட்டம் நகரத்திலே உள்ளவர்களுக்காகக் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டமல்ல ; இந்தக் குடியிருப்புச்சட்டத்தின் மூலம் மாத்திரம் 31-12-74 முடிய கொடுக்கப்பட்டிருக்கிற குடியிருப்புப் பட்டாக்களுடைய எண்ணிக்கை வருமாறு :
மாவட்டம் விவசாயத் தொழி லாளர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் 2.913
கோவை மாவட்டம் 1,311
மதுரை மாவட்டம் 155
இராமனாதபுரம் மாவட்டம் 99
தஞ்சை மாவட்டம் 1,61,909
நெல்லை மாவட்டம் 1,114
குமரி மாவட்டம் 244
சில மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை குறைவாகவும், சில மாவட்டங்களில் விவரம் இல்லாமலும் இருக்கக் காரணம் அங்கேயெல்லாம் குடியிருப்பு மனையைச் சொந்தமாக ஆக்கவேண்டும் என்கிற சூழ்நிலையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் கிடையாது. ஆகமொத்தம் 1,73,748 பேர் இந்தச் சட்டத்தின் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள்.
இவர்களில் 1,03,470 பேர் தாழ்த்தப்பட்டவர்கள் : பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50,561 பேர். இவர்கள் எல்லாம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்தான்.
இதைத் தவிர கடந்த 1967-ஆம் ஆண்டிலேயிருந்து இதுவரையில் நிலமற்ற விவசாயிகளுக்குப் பட்டா செய்து கொடுக்கப்பட்டு, ஒப்படை செய்யப்பட்ட நிலம், அதனால் பயனடைந்தவர்களுடைய எண்ணிக்கை கீழே வருமாறு
ஆண்டு ஏக்கர் பயனடைந்தோர்
1967-68 22,849 7,019
1968-69 51,852 24,604
1969-70 1,55,813 71,738
1970-71 1,73,358 99,138
1971-72 1,25,414 62,643
1972-73 85,103 47.923
1973-74 61,095 31,155
1974-75 (ஜனவரி முடிய) 28,815 16,891
ஆக, 1967- லிருந்து 1975 வரை ஜனவரி முடிய மொத்தம் 7,04,499 ஏக்கரா, 3,61, 121 பேர்களுக்குச் சாகுபடி செய்யப் பட்டாச்செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு பல ஆண்டுகால ஆட்சியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தான். பல்லாயிரக்கணக்கானவர்களுக்குத் தரப்பட்டிருக்கிறதே தவிர இலட்சக்கணக்கில் தரப்படவில்லை. இதுவும் கிராமப்புறங்களில் நடைபெற்றதுதான்.
அதைப் போலவே, ஒப்படை செய்யப்பட்டுள்ள குடி யிருப்பு மனைகளின் விவரம்
ஆண்டு பயனடைந்தோர்
1967-68 12,953
1968-69 19,913
1969-70 89,520
1970-71 1,43,511
1971-72 86,116
1972-73 62,982
1973-74 50,600
1974-75 (ஜனவரி முடிய) 29,097
ஆக மொத்தம், 4,94,692 பேர்களுக்குக் குடியிருப்பு மனைகள் பட்டாச்செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த எட்டாண்டுக் காலத்தில்தான் சீர்திருத்தப்பட்ட சிறுபாசன குளங்கள், ஏரிகளுடைய எண்ணிக்கை 6,600 என்பதை யாராவது கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதா என்று சந்தேகப்படுவார்களானால் அவர்களுக்கு விடையாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இதற்காக ஏறத்தாழ 30 கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டிருக்கிறது. இதனால் பயன்பெற்ற நிலங்கள் கிட்டத் தட்ட பத்து இலட்சம் ஏக்கராவாகும்.
கிராமங்களுக்குக் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக மாத்திரம், 1970-இல் ஆரம்பித்த குடிநீர் வாரியத்தின் சார்பில் கிட்டத்தட்ட 5,000-க்கு மேற்பட்ட ஊர்களுக்குக் குடி தண்ணீர் வசதியை நாம் அளித்திருக்கிறோம்.
1,500க்கு மேற்பட்டவர்கள் வாழ்கின்ற கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க வேண்டும் என்கின்ற ஒரு திட்டம் தீட்டப்பட்டு 72-73-ஆம் ஆண்டு அதற்காக மூன்று கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கப்பி போடப்பட்ட சாலைகளின் நீளம் 668 கி.மீ. தார் போடப் பட்ட சாலையின் நீளம் 159 கி.மீ. இதனால் பயனடைந்த ஊர்கள் 610. 1973-74-இல் மொத்தம் பயனடைந்த ஊர் 914. கப்பி போடப்பட்ட சாலை நீளம் 1. 131 கி. மீ. தார் போடப்பட்ட சாலை 974 கி.மீ. ஒதுக்கப்பட்ட தொகை மூன்று கோடி: 1974-75-இல் மூன்றரைக் கோடி ரூபாய்.
ஒதுக்கப்பட்டு, கப்பி போடப்பட்ட சாலை 535 .மீ. தார் போடப்பட்ட சாலை 645 கி.மீ. இதனால் பயனடைந்த ஊர்கள் 463.
1,500 பேர்களுக்கும் குறைவாக உள்ள கிராமங்களுக்குச் செம்மண் பரப்புகின்ற திட்டம், 1974-75-இல் 2063 வேலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த வேலைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஆகவே கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன என்று கூறுவது சரியல்ல.
இந்த அரசு வந்த பிறகுதான் எல்லாக் கிராமங்களுக்கும் மின்வசதி செய்து தர வேண்டுமென்று திட்டமிட்டு, இது வரையில் தமிழகத்தில் உள்ள குக்கிராமங்கள் உட்பட 61,204-க்கு நாம் மின் இணைப்புத் தந்திருக்கிறேம். இன்னும் கொடுக்க வேண்டிய கிராமங்களின் எண்ணிக்கை 1,283 தான். இதைத் தவிர 23,897 அரிசனக் காலனிகளுக்கு மின் இணைப்புத் தந்திருக்கிறோம். இன்னும் தர வேண்டியது 902 தான்.
சிலம்புச் செல்வர் பேசுகிற நேரத்தில், தமிழுக்குத் தனித்துறை என்கிற ஒரு தலைப்பு இருந்தாலும் அதற்காக ஒதுக்கப் பட்டிருக்கிற ஒரு கோடி ரூபாய் இதுவரையிலே செய்யப்பட்டு வருகிற செலவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. புதிதாக என்ன செய்யப்போகிறோம் என்பதற்குத் தனியாகவே தமிழ் வளர்ச்சிச் சிறப்புத் திட்டத் துறை என்கிற வகையிலே ஒன்றை அமைக்க வேண்டுமென்று சொன்னார்கள். இந்த அரசின் சார்பில் அவர் குறைபட்டுக் கொண்டதைப் போல தமிழைப் பயிற்று மொழியாக ஆக்கும் முயற்சியில் நாம் முழு வெற்றியைக் காணமுடியாவிட்டாலும், தமிழ் ஆட்சி மொழி ஆவதற்கு வேண்டிய பல்வேறு முயற்சிகள் நாம் மேற்கொண்டிருக்கிறோம். ஆகவே பல்வேறு துறைகளிலே – குறிப்பாக கல்வி போன்ற துறைகளில் நாம் செலவழிக்கின்ற பணம் தமிழுக்காகவும் சேர்ந்துதான் பயன்படுகிறது என்பதை மறத்திடலாகாது.
சிலம்புச் செல்வர் குறிப்பிடுவதாக நான் உணர்வதெல்லாம் சிறப்புத் திட்டமாகத் தமிழுக்கு-தமிழ் இலக்கியத்தை வளர்க்க, தமிழ் வரலாறுகளைப் புதுப்பிக்க ‘அகர முதலி’ போன்ற காரியங்கள் மேலும் மேலும் வளர்ச்சியடைய, திட்டங்களை சிறப்புத் திட்டங்களாக அமைக்க வேண்டும் என்ற பொருளிலேதான். அவர் தமிழ் வளர்ச்சிச் சிறப்புத் திட்டத் துறையே ஒன்று அமைக்க வேண்டுமென்று சொல்லியிருப்பார் என்று கருதுகிறேன்.
இந்த அரசு தமிழுக்காக வாழ்கிற அரசு, தமிழைப் பாதுகாப்பதற்காகப் போராடியவர்களால் நடத்தப்படுகிற அரசு என்பதைச் சிலம்புச் செல்லரே அறிவார். ஆகவே இன்னும் எந்தெந்த வகையில் இந்தச் சிறப்புத் திட்டத் துறையை வளர்க்கலாம் என்பவைகளுக்கான ஆலோசனைகளை அவர்களைப் போன்றவர்கள் வழங்க வேண்டும். அதற்கேற்ற வகையில், அந்தத் துறையை நான் சுல்வி அமைச்சரோடும். துறை அதிகாரிகளோடும் கலந்து பேசி, அதை உருவாக்க இந்த அரசு எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
தண்பர் ராசமாணிக்கம் பேசுகின்ற நேரத்திலும், சங்கர லிங்கம் பேசுகின்ற நேரத்திலும் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். கன்யாகுமரி முனையில் சிலைகள் அண்ணாவிற்கும். திருவள்ளுவருக்கும் வைக்கப்பட வேண்டுமென்று சொன்னார்கள். அவைகள் எல்லாம் படிப்படியாகச் செய்யப்பட வேண்டிய காரியங்கள்.
என்று பேசினார் முதல்வர் கலைஞர்.














